Sunday, February 24, 2008

அதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)

அதை அதுவாக(3)


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
(பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37


சிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம்.

00


டாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார்.
அறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம் செய்யாததனாலாகும் தீங்கை அதைச் சுமந்து செல்பவனைக்கொண்டும் அறியலாம் என்பார் நாமக்கல் கவிஞர்.
இவற்றைக்கொண்டு அளவிட்டுவிடக்கூடாது என்பார் தமிழண்ணல்.

பசியோடு இருக்கும் ஒருவனிடத்தில் உபதேசம் செய்யாதே என்றார் சுவாமி விவேகானந்தர்.
பசித்தவனுக்குத் தேவை உணவு.
அதனால் சிவிகை சுமக்கும் அந்த வறியவனுக்குப் போதனை செய்யாதே என்று வள்ளுவன் சொன்னதாகக் கொள்ளலாம்.

சிவிகையிலூர்பவனும் உபதேசத்தைக் கேட்கமாட்டான். ஏனெனில் அவன் மமதையிலிருப்பான்.

பல்லக்கூர்தல் எவராலும் செய்யப்பட்டுவிடக் கூடியதல்ல.
அரசர், அரச சுற்றம், மந்திரி, பிரதானிகள், வணிகர், அறிவோர் என்று சமூக அந்தஸ்துள்ளவர்கள் மட்டுமே பல்லக்குப் பாவிக்கும் தத்துவம் பெற்றிருந்தார்கள் அக்காலத்தில்.
சிவிகையூர்வோர் எல்லோருக்குமேகூட ஆலவட்டம் பிடித்தும், முரசொலித்தும் செல்லும் அதிகாரம் வாய்த்திருக்கவில்லை.
பதவி, அறிவு, பொருள் தகுதிகளின் அடிப்படையில் அவை பாவனையாகின.
இதைச் சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துரைக்கும்.

மிக்க உச்சாணியில் இருப்பவர்களிடமும், மிக்க அடிநிலையிலுள்ளவர்களிடமும் எந்த நியாயத்தைச் சொல்லியும் அறனை வலியுறுத்த முடியாது.

அவர்களுக்குத் தள நியாயங்களுண்டு.
அதை மீறி அவர்கள் சிந்திப்பதில்லை.

அதனால் இருவகையார்க்கும் உபதேசம் செய்யவேண்டாம்.
ஆழமான சிந்திப்புக்குரியது இக் குறள்.


000


(4)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சோற்காத்துச் சோர்விலாள் பெண்
(அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம் 6) குறள் 56


0


தன்னையும், தன் கணவனையும், தன் மனத்தையும் காத்துக்கொள்வதில் பெண் தளர்வில்லாதவளாக இருக்கவேண்டும்.

00

நியாயங்கள் புதைக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது இது.
வரலாற்றுக் காலம் முதலாகத்தான்.
பால், இனம், மொழி, மதம், நிறம், சாதிகளை மூலங்களாய்க் கொண்டு நடந்த கொடுமைகள் கணக்கிட முடியாதன.
பெண்ணின் குணவிN~சங்களைத் திருக்குறள் நிறையவே பேசுகிறது.
அவற்றுள் சில ஒப்புக்கொள்ளப்படக் கூடியவையாயும், சில ஒப்புக்கொள்ளப்பட முடியாதவையாயும்.
‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என அவ்வை சொன்னதில் எத்தனை நியாயங்கள் இருக்கின்றன!
அவளே ‘தையல் சொல் கேளேல்’ என்றிருப்பாளா.
‘பெண் புத்தி பின்புத்தி’ என்று தனக்கென்றொரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கக் கூடிய ஒரு சமுதாயமே ‘தையல் சொல் கேளீர்’ என்ற வாசகத்தை அவ்வாறு சிதைத்திருப்பதாகக் கொள்ள முடியும்.
கற்பு என்பது மனவொழுக்கம்.
உடலொழுக்கம் பற்றிய பேச்சே இங்கு இல்லை.
கற்பு என்பதனையே இன்றைய பெண்ணியம் மனித வாழ்வுக்குகக்காததாய்
தூக்கியெறிந்துவிட்டிருக்கிறது.
ஆக, ‘சொற் காத்தல்’ என்பது இவ் 56ஆம் திருக்குறளில் மனவொழுக்கத்தைக் குறித்த பின்னர், தற்காத்தல் என்பதும் அது சம்பந்தமாய் வந்திருக்க முடியுமா.
அக் காலத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட மிகச் சின்ன வயதை நோக்குகிறபோது, கணவன் வீடு செல்லும் அல்லது உடன்போக்கில் தனிக்குடித்தனம் போகும் அவள், விழுந்துவிடக் கூடிய இருளை வள்ளுவன் யோசித்திருத்தல் சாத்தியமெனவே படுகிறது.
தற்காத்தல் என்பது தன்னைத் தகவமைத்துக்கொள்ளல்.
தகவமைத்தலாவது தனக்கான கலா ஞானங்களும், கல்வி கேள்விகளும் பெறுதல்.
அன்றைய சமுதாயத்தில் இது வள்ளுவனின் கலகக் குரலேயாகும்.

000(5)

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

(அறம், இல்லறம், மக்கட்பேறு 7) குறள் 67


தம்மைவிட தம் மக்கள் அறிவுடையவராய் இருப்பதென்பது எல்லா மனிதருக்குமே இனிமையான விஷயம்.

00

மேலெழுந்தவாரியில் இக் குறள் சின்ன விஷயத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.
ஆழ நோக்குகிறபோதுதான் மனோவியல் சார்ந்த கூறுகளின் கீறுகளை இதில் புரியமுடியும்.
மக்களேயானாலும் தம்மைவிட அறிவுடையவராயிருப்பது பெற்றவர்களுக்கு, குறிப்பாக தந்தைக்கு, விருப்பமானதாகப் பெரும்பாலும் இருப்பதில்லையென்பது உளவியல் சம்பந்தமானது.
ஒரு தந்தைக்கு தன் மகனைச் சான்றோனாக்குவதும், கற்றறிந்தார் அவையினிலே முந்தியிருப்பச் செய்வதுவும் கடமைகள்.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற சங்கப் பாடலடி இதை உறுதிப்படுத்தும்.
அவ்வாறான தன் கடமையை, மனத்திலெழக்கூடிய தாழ்வு மனப்பான்மை மூலமான காழ்ப்பில் புறந்தள்ளிவிடக்கூடாதென்பதை வற்புறுத்தும் குறளாக இதைக் கொள்ளவேண்டும்.
மகனை அவையிலே முதன்மையிடம் பெற்றிருக்கச் செய்வதனைத் தந்தையின் நன்றியென்றும் (குறள் 67), இப் பிள்ளையைப் பெற இவன் என்ன தவம் செய்தானோ என்னும்படியான புகழைத் தந்தை எடுக்க வைத்தலை பிள்ளையின் உதவியென்றும் (குறள் 70) வள்ளுவன் குறிப்பிட்டுள்ளமை இங்கே யோசிக்கத் தக்கது.
உதவிக்குத்தான் நன்றி அல்லது கைம்மாறு நம் காலத்தில்.
வள்ளுவன் மாற்றிப் போட்டிருப்பது அச் சொற்கள் அக்காலத்தில் பெற்றிருந்த அர்த்த பரிமாணத்தின் வெளிப்பாடு.
அக் காலத்தில் நன்றியென்பது இக்காலத்தில் உதவி,
உதவியென்பது அதுபோல் நன்றி.

000

சிதைவும் கட்டமைப்பும்: 2

-தேவகாந்தன்-தமிழகத்தின் விரிவும், சென்னையின் செறிவும் ஏற்கனவே கண்டிருந்தவையாயினும் என்னைத் திகைப்பிலாழ்த்திவிட்டமை அதிசயமானதில்லை. முன்னைய போதுகளிலெல்லாம் ஒரு பார்வையாளனாக அல்லது விருந்தினனாக இருந்தே அவற்றை நான் கண்டிருந்தேன். இப்போதோ தமிழ்நாடு எனக்குப் புகலிடம். புகலிட பூமி என்ற பிரக்ஞையில் நான் ஒருபோது பிரமிப்படையக் காரணமாயிருந்த அம்சங்கள் திகைப்பையும் ஒருவித திகிலையுமடையும்படி என்னை ஆக்கியிருந்தன.

சிங்கள பவுத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்புப் பற்றிய தமிழக அரசியல்வாதிகளின் அலட்டல் ஆவேசங்கள் எனக்குப் பிடிக்காதவை. பலர் தமிழினத்தின் அழிவில் தமது கட்சி அரசியல் ஆதாயத்துக்கான பேரங்களில்கூட ஈடுபட்டிருந்தனர். ஆனால் மக்களின் அனுதாபம் அத் திகைப்பிலிருந்து நான் மெல்லமெல்ல மீளப் பெரிய உதவியாயிருந்தது.

கொண்டுசென்றிருந்த பணம் சிலநாளில் கரைந்து போனதும் நாளாந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பது பெரும்பாடாய் ஆனது. குடும்பத்தின் பிரிவுவேறு ஒரு வதையாய் வளர்ந்துகொண்டிருந்தது ஒருபுறத்தில். சிறீலங்கா ராணுவக் கொடுமைகளுக்கு அஞ்சி வள்ளங்களில் இராமேஸ்வரத்திலும் வேதாரணியத்திலும் வந்து குவிந்துகொண்டிருந்த இலங்கை அகதிகள் பற்றிய செய்திகள் தினம்தினம் பத்திரிகைகளில் வெளியாகிக்கொண்டிருந்தன. அவர்கள் பட்ட அவதி அவலங்களினதும், அதில் பலர் அடைந்த மரணங்களினதும் தகவல்கள் மனத்தை உலுப்பின. தமிழக அகதி முகாங்களின் தரிசனம் இன்னும் பெரிய சோகம். ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக நான் அங்கீகரித்தேன். ஆயினும் இயங்குவதற்கான பாதை எனக்குத் தெரியவில்லை.

நிறைய ஈழ விடுதலை இயக்கங்கள் அப்போது தமிழகத்தில் முகாம் போட்டிருந்தன. துக்ளக் சோவின் ஒரு கட்டுரைக் குறிப்பின்படி முப்பத்தாறு இயக்கங்கள் அப்போது தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன எனத் தெரிந்தது. போராளிகளெனச் சொல்லிக்கொண்டவர்களில் பலரின் நடைமுறைகள் சொல்லுந்தரமாக இருக்கவில்லை. போராளிகளையும் கடத்தல்காரர்களையும் இனம்காண்பது முடியாதிருந்தது. இயக்கங்கள் வெளியிட்ட விடுதலைப் போராட்டக் கருத்துக்களில் முரண்கள் தெரிந்தன. இதனால் ஓன்றிரண்டு இயக்கங்கள் தவிர மற்றவை நம்பிக்கை தருவனவாயிருக்கவில்லை. மனத்தில் குழப்பம் உருவெடுத்தது. இந்த நிலையில் நான் தனி இயக்கமாகவே மனத்துள் இயங்கிக்கொண்டிருந்தேன்.

மார்க்ஸீயம் ஒரு பாதிப்பாய் என்னுள் ஏற்கனவே இறங்கியிருந்தது. இப்போது விடுதலைப் போராட்டம். மார்க்ஸீயவாதியாய் நான் எடுத்த ஆயுதம் பேனை. விடுதலைப் போராட்டக்காரனாய் எடுக்கவேண்டிய ஆயுதத்தை நான் இப்போது தீர்மானிக்கவேண்டியவனாயிருந்தேன். இக் குழம்புதல் நிலையில் காலம் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தவேளையில் அது தீர ஒருநாள் வந்தது. அந்த நாள், கார்க்கி இதழ் நடத்திய ஒரு விழா.

கார்க்கி இதழ் மார்க்சீய சார்பாளர்களால் இளவேனிலை ஆசிரியராகக்கொண்டு நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதப் பத்திரிகை. அரசியல், இலக்கியம் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது அதில். அந்தப் பத்திரிகையின் இறுதி இதழ் வெளியீட்டு விழாதான் அன்று நடந்தது. இளவேனில், பிரபஞ்சன், செ.யோகநாதன், தி.க.சி. போன்றோர் கலந்துகொண்டார்கள். ஒரு பத்திரிகையின் முதலிதழ் வெளியீட்டினை நான் கேள்விப்பட்டிருந்தேன். இறுதி இதழின் வெளியீடு என்பது புதுமை.

இலங்கைச் சூழலில் சிறுபத்திரிகைச் சமாச்சாரம் தமிழகத்தைவிட வித்தியாசமானது. பெரும் பத்திரிகைகளே பெருமளவில் விலைபோகாதவளவில் அங்கு எல்லாப் பத்திரிகைகளுமே ஓரளவு நடுத்தரப் பத்திரரிகைகள்தான். அவையும் வரும் போகும் என்ற கணக்கில்தான் இயங்கின. இது இறுதி இதழ் என்ற அறிவித்தலுடன் எந்தப் பத்திரிகையும் வந்து நான் அறிந்தில்லை. கார்க்கியின் இறுதி இதழ் விழா விபரம் என்னில் சிறுபத்திரிகைகள் குறித்த பெரும் பாதிப்பை, பெரும் மரியாதையைச் சேர்ப்பித்தது. அதனால்தான் வெகு காலத்தின் பின்னால் கி.கஸ்தூரிரங்கன் பொறுப்பிலிருந்த கணையாழி இதழை தமன் பிரகா~; சொந்தமாக்கிப் பொறுப்பேற்க முன்னர் அவர் சார்பில் அப்படிச் செய்வதில் உள்ள அனுகூல பிரதிகூலங்கள் என்ன? என்று ஒரு நண்பரால் கேட்கப்பட்டபோது, ஏன் கணையாழியே? நீங்கள் புதிதாக ஒன்று தொடங்கினாலென்ன? என்று என்னால் கேட்க முடிந்தது. ஒரு சிறுபத்திரிகையானது வெறுமனே எழுதுதற்கான தளமாக மாறுகிற தருணத்தில் தன்னை அது மாய்த்துக்கொள்வது தார்மீகமான ஒரு கடப்பாட்டுச் செயலென இப்போதும் நான் கருதுகின்றேன். கோவை ஞானியின் நிகழ் சஞ்சிகையின் 25ஆம் இதழ் அத்துடன் தன்னை நிறுத்திக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டுதான் வெளிவந்திருந்தது. தன் கருத்து மேலும் அச் சமுதாயத்துக்குத் தேவையில்லையென அல்லது ஒரு இலக்கியக் கருத்தின் வெளிப்பாடு மேலும் அவசியமில்லையென எப்போது ஒரு சிறுபத்திரிகை கருதுகிறதோ அப்போது அது நின்றுவிடுவதே உத்தமம். இதைச் செய்ய சிறுபத்திரிகையால் தவிர வேறினால் முடியவும் முடியாது. சிறுபத்திரிகையாளரிலும் சிலரால் தவிர இது சாத்தியப்படவேபடாது.

கூட்ட முடிவின் பின்னான உரையாடலின்போது, இங்கே தமிழ்நாட்டில் எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகம், எழுதுங்கள்! என்று என்னை உற்சாகப்படுத்திய இருவர் பற்றி நான் சற்று விரிவாக எழுதுவது அவசியமெனக் கருதுகிறேன். அவர்கள் வ.க. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வல்லிக்கண்ணன், தி.க.சி. என அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன் ஆகியோரே.

வல்லிக்கண்ணனுக்கு சொந்த இடம் ராஜவல்லிபுரம். செய்துகொண்டிருந்த அரசாங்க வேலையை உதறிவிட்டு இலக்கியவாதியாய் மாறிச் சென்னை வந்து சேர்ந்திருந்தவர். சிறிய உருவம். இளகிய மனசு. மென்மையான சுபாவம். தி.க.சி; அப்படியில்லை. வலிந்த தேகம். வலிந்த குரல். அரசியல் இறுக்கம். சோவியத் நாடு இதழில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இலக்கிய ரசிகர். நல்ல விமர்சகரும். இவர் விமர்சகராய்ப் பெரிதும் இனங்காணப்பட்டது பின்னாலேதான். முன்பே நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள் நிறைய எழுதியிருப்பினும் இவரது அரசியல் வேகம் குறைந்த பிறகே விமர்சகராகக் கண்டுகொள்ளப்பட்டார். தி.க.சி.க்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது அவரது விமர்சனத்துக்காகத்தான்.

தி.க.சி. பற்றி இங்கே சிறிது விரிவாய்ப் பார்க்கலாமென்று நினைக்கிறேன். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் நேரடி உறுப்பினர். கைலாசபதியிலும், நா.வானமாமலையிலும் மதிப்புள்ளவர். சிதம்பர ரகுநாதன் இவரது ஊரான திருநெல்வேலியில் அயல் நண்பர். உழைப்போர் இலக்கியத்தில் அக்கறை உள்ளவர். சோவியத் இலக்கியங்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப் பெரிதும் உழைத்தவர். இருந்தும்தான் மொத்தமாகத் தமிழிலக்கியம் என்று பார்க்கும்போது கு.அழகிரிசாமியையும், தி.ஜானகிராமனையும், சி.சு.செல்லப்பாவையும், சா.கந்தசாமியையும் இலக்கிய காரணங்களுக்காக இவர் ஒதுக்கியதில்லை. ஏன் இலங்கையில் இவர்போல் மார்க்ஸீயர்கள் இருக்கவில்லையென்பது என்னுள் இன்னமும்தான் சினத்தை எழுப்பிக்கொண்டிருக்கிற கேள்வி. சிலர், குறிப்பாக எம்.ஏ.நுஹ்மான் போன்றோர், புறநடையாக இயங்கினர் என்பது மெய்யே. ஆயினும் ஒட்டுமொத்தத்தில் கட்சி விமர்சனகாரர் வறண்டுபோயிருந்தனர் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

வ.க.,தி.க.சி. ஆகிய இருவர்களையும் இன்றும் இலக்கிய இரட்டையர்களென்றே தமிழ்நாட்டு இலக்கிய உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிக்கான இலக்கிய ஒற்றுமை இவர்களிடம் உண்டு. கூட நட்பும். இருவருமே சாகித்திய மண்டலப் பரிசாளர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை. போஸ்ற் கார்ட் இலக்கியவாதிகளென்று இன்றும் இவர்களை ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகள் தாக்குதல் செய்வர். எழுதுபவர்களை உற்சாகப்படுத்துவது ஒரு பணியென செயற்படுபவர்கள் இவர்கள். எந்தத் தாக்குதலையும் இவர்கள் பொருள்செய்ததில்லையென்றே சொல்லவேண்டும். நான் தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் தி.க.சி. எனக்கு எழுதிய சுமார் நூறு போஸ்ற் கார்ட்கள் இன்றும் என் கைவசம் உண்டு. வ.க. எழுதிய சுமார் ஐம்பது போஸ்ற் கார்ட்கள் உள்@ர் அஞ்சலுறைகள் உள்ளன. தி.க.சி. தாமரை இதழின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தில் நிறையப் பேரை பத்திரிகையில் எழுதவைத்து ஊக்கப்படுத்தியுள்ளார். மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் போன்றோர் தாமரையில் வளர்ந்தவர்கள் என்றே தெரிகிறது. இவையெல்லாம் அன்று தெரிந்தபோது என்னை எழுத உற்சாகப்படுத்திய இவர்களது செயல் எனக்கு ஆச்சரியமாகப்படவில்லை.

எழுதுதல் என்பது உறுதியாக என் மனத்தில் விழுந்தாகிவிட்டது. இப்போது எந்த ஆயுதத்தை நான் கைக்கொள்ளவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் இலகுவில் முடிந்தது. நான் பேனா ஆயுததாரியானேன். என் எழுத்துக்கும் வாசிப்புக்கும் சிறிய முடக்கமொன்று அவசியமாயிருந்தது. வெளிக் களேபரங்களை அறிந்துகொண்டு இலக்கியவாதியாய் நான் அடைகாக்க ஆரம்பித்தேன். அந்த அடைகாத்தலில் பிறந்ததுதான் எனது முதலாவது நாவலான உயிர்ப் பயணம். என் முதல் புத்தக வடிவ நூலும் அதுதான்.

இலக்கியத்துக்கான இந்த ஒதுங்குகை அரசியலிலிருந்து நான் ஒதுங்கியதன் அர்த்தமல்லவெனினும் ஈடுபாடு கொண்டதுமாகாதுதான். ஆயினும் அதையேதான் என்னால் செய்ய முடிந்திருந்தது. 1983இன் இனக் கலவர நெருப்பும், தொடர்ந்துகொண்டிருந்த இனச் சூறையும் என்னுள் இன்னுமின்னுமாய் அக்னியை வளர்த்துக்கொண்டிருந்தன. நாவல் அவ் அக்னியை எழுத்தில் கொண்டிருந்தது. இலங்கை எழுத்தாளர் என்ற பெயர் நாவலை வெற்றிகரமாக விலைபோக வைத்தது. பரவலாகப் பேசவும்பட்டது. இன்று அந் நாவல் குறித்து எனக்குப் பெரிய திருப்தியில்லையெனினும், முதல் நூலும் முதல் நாவலும் என்ற வகையில் அதை எப்போதும் நான் நினைத்துக்கொள்வேன். நாவல் வெறுமனே ஒரு கதையை மட்டுமே கொண்டிருந்தது. சொல்லுதல் முறையிலும் பெரும் சோதனையை அது நிகழ்த்தவில்லை. நாவலாக விரிவு பெறாத ஒரு கதையென்பதே இன்று அது பற்றிய என் அபிப்பிராயம்.

அது மாதிரியே எழுதத்தான் நான் இலங்கையில் பயின்றுமிருந்தேன். ஈழநாட்டிலும், செய்தியிலும், மல்லிகையிலும், சிந்தாமணியிலும் வெளிவந்த என் கதைகள் அவ்வாறே இருந்தன. அதுவே இலங்கையில் அப்போது பெரிதாகப் போற்றப்பட்ட முறையாகவும் நடையாகவுமிருந்தது. பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோர் மிகச் சிலாகித்து இந் நடையையே பேசியும் எழுதியும்கொண்டிருந்தனர். மட்டுமில்லை. சரளமான இலக்கிய நடையெனினும் கட்சிக் கருத்து, மார்க்சீயக் கருத்துச் சொல்லாத எந்த எழுத்தையும் இவர்கள் இலக்கியமாகப் பார்ப்பதினின்றும்கூட தம்மைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்கள். எஸ்.பொ.வின் குற்றச்சாட்டில் அர்த்தமேயில்லாமலில்லை. ஆனால் ஈழ இலக்கியத்துக்கான இவர்களது பங்களிப்பை இதுவெல்லாம் ஓரங்கட்டிவிட முடியாது என்பதே என் நிலைப்பாடு. கைலாசபதி வாழ்ந்தபோது தினகரனில் அவர் கடமையாற்றிய காலத்தைச் சேர்த்து முன் பின்னாக ஒரு பத்தாண்டுகள் , அவர்கள் மொழியில் ஒரு தசாப்த காலம், ஈழ இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமானதென்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. இக் காலகட்டத்தையே ஏழாண்டுகளாய்க் காண்பார் மு.தளையசிங்கம். அது எஸ்.பொ.வின் முற்றும் நிராகரித்தல் கொள்கைக்கு மாறானது. சில அம்சங்களில் எஸ்.பொ.வையே மறுத்து, அவரது இலக்கிய முக்கியத்துவத்தைச் சரியாக மதிப்பிட்டிருப்பார் அதில் மு.த. அது ஒரு சரியான பார்வை. இலக்கியவாதியின் பார்வை. கைலாசபதிபற்றி பின்னால் நான் எழுதவேண்டியிருப்பதால் இங்கே அவரைப் பற்றி இவ்வளவு போதும்.

இப் பேராசிரியர்களே கல்கி, நா.பா.,அகிலன் போன்றோரது நடையைப் புறக்கணித்தனர். அது கருத்துநிலை நின்றுமட்டுமல்ல. ஒரு மயக்கத்துக்கான வெகுஜன எழுத்து என்பதே அந்த நிராகரிப்பின் காரணம். அதையேதான் தமிழகத்தில் சிதம்பர ரகுநாதன், வானமாமலை போன்றோர் செய்துகொண்டிருந்தார்கள். தீவிர இலக்கிய விமர்சகர்களான க.நா.சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றோருக்கும் இவர்கள் எழுத்து ஒவ்வாது. மார்க்ஸீய அ-மார்க்சீயர்களான இவர்களது கருத்துநிலை நின்றில்லாவிடினும் இறுகிய இலக்கியத் தளத்தில் நின்று எழுதியோர் அப்போது தமிழகத்திலும் பலர் இருந்தனர். சுப்பிரமணிய ராஜு, நாகராஜன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், சா.கந்தசாமி போன்றோர் இவர்களில் சிலர். ஈழத்திலும் இறுகிய இலக்கிய தளத்தில் வைத்து எழுதப்பட்டவற்றையே சீரிய எழுத்து என்று போற்றினார்கள் என்பதைச் சொல்லவேண்டும். ஆனாலும் இலக்கியம் இதற்கும்மேலே என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது வற்புறுத்தப்படவேண்டியது. எனினும் இலக்கிய இசங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வேர்கொள்ளவில்லை என்ற கவனம் பிரதானம். தமிழ்நாட்டில்கூட கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரது கருத்துநிலையான விமர்சனங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவர்களை மதிக்கும் படைப்பாளிகள் விமர்சகர்களுடனேயே என் சங்காத்தம் இந்தளவுவரை சாத்தியமாகிக்கொண்டிருந்தது. இந் நிலையில் எனது இலக்கியச் சிந்தனையின் சிதைவு இன்னும் எட்டாத் தொலைவிலேயே இருந்தது எனல் வேண்டும்.

உயிர்ப் பயணம் சாதாரணமான ஒரு நூல். அப்போது அது வெகுவாகப் பாராட்டப்பட்டது என்பது வேறு வி~யம். இந் நிலையில்தான் என் விடுதலைப் போராடட்டத்துக்கான பங்களிப்பு போதுமானதல்ல என்ற எண்ணம் என்னுள் கிளர்ந்து எழுந்தது. நான் எழுத்துத் தீவிரம் கொண்டன். பிறந்தது நிலாவரை இதழ். ஆப்போது இயக்க சார்பில் வெளிவந்துகொண்டிருந்த இதழ்களில் முக்கியமானவை புளொட் வெளியிட்ட 'பொங்கும் தமிழமுது'வும், புலிகள் வெளியிட்ட 'விடுதலைப் புலிகள்' பத்திரிகையுமே. அவை அரசியலை மையப்படுத்தியிருந்தன. அதனால் தமிழீழத்தின் கலை இலக்கியக் குரல் என்ற அடையாளத்துடன் நிலாவரை மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. அது அரசியலைப் பேசினும் கலை இலக்கியத்தையே முதன்மையாகக் கருதியது. இன்குலாப், காசி ஆனந்தன், அரசு மணிமேகலை போன்றோர் அதில் எழுதினார்கள். அதன் இரண்டாம் இதழில் வெளியான யார் தூண்டி? என்ற இன்குலாப்பின் புதுக் கவிதை அற்புதமானது. சில காலம் கழித்து அவரது தொகுப்பில் அக் கவிதையைக் காணாத நான் அவரிடம் அது குறித்து விசாரித்தேன். அது கிடைக்கவில்லையென்றபோது அக் கவிதையைத் தேடிக் கொடுத்தேன் அவருக்கு. பின்னால் அது தொகுப்பில் இடம்பெற்றதாகக் கேள்வி.

நிலாவரையை விற்பனை செய்து உதவ தமிழக இளைஞர்களும் மாணவர்கள் சிலரும் முன்வந்தனர். ஆயினும் பொருளாதாரக் காரணங்களால் நான்கு இதழ்களோடு அதை நிறுத்தும்படியாயிற்று. மூச்சுப் பேச்சில்லாமல் நின்றது என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம். என்னிலும் எவரிலும் எந்தப் பாதிப்பையும் செய்யாமலே அவ்விதழ் நின்றுபோனதில் இன்று எனக்கு எந்தத் துக்கங்கூட இல்லை. ஒரு சிறுபத்திரிகையை எப்படி நடத்துவது அல்லது எப்படி நடத்தக்கூடாது என்பதைத் தவிர நான் கற்றுக்கொண்டது ஏதுமில்லை அதில்.

என் சிந்தனைக் கட்டமைப்பு இருந்தபடியே இருந்துகொண்டிருந்தது. (தொடர்வேன்)

Saturday, February 23, 2008

ஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..


ஷோபாசக்தியின் கதைப் புத்தகம்
 ‘ம்’ குறித்து..


ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த கொரில்லா நாவலுக்கும், சென்ற ஆண்டு வெளிவந்த ‘தேசத்துரோகி’ சிறுகதைத் தொகுப்புக்கும் பின்னால் வெளிவந்திருக்கிற கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் ம். பெரிய எதிர்பார்ப்புக்களை விளைவித்ததோடு அடங்கிப் போய்விட்ட ஒரு நூலாகவே இது எனக்குத் தெரிகிறது. ஒரு  ஏமாற்றத்தையே நான் உணர்ந்தேன் என்பது மிகையான பேச்சில்லை. கொரில்லா பாதித்ததில் பாதியளவுகூட ம் செய்யவில்லையென்பதைச் சொல்லித்தானாக வேண்டியிருக்கிறது. மொழியும், மரபும் மீறியெழும் இவ்வகையான நவீன பிரதிகளையும் ஒழுங்கான ஆய்வுக்குட்படுத்த முடியும்.

ஆசிரியன் இறந்துவிட்டானென்பது ஆசிரியனின் பிரதிகுறித்த தலையீடு .இருக்கக்கூடாது என்பதுமாகும். ஆனால் அவனின் ஏனைய பிரதிகள் உடன்மறையாகவும் எதிர்மறையாகவும் இங்கே விவாதத்துக்கு வருவதும் அவற்றின் அடிப்படையில் விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் விமர்சன உரிமைகளாகும் என்பது அதனடியாய்க் கொள்ளக்கூடிய இன்னொரு கருதுகோள்தான். சமகால வேறு நூல்களையும் விமர்சகன் அலசிக்கொண்டு போவதுகூட இங்கே தவிர்க்க முடியாதபடி நிகழவும் முடியும். இவற்றின் அடிப்படையில் ம் கதைப்புத்தகத்தை இங்கே இனி விசாரணைப்படுத்தலாம்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியமானது ஈழ இலக்கியத்தின் ஒரு பகுதியேயென்பதை எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். அந்த முடிவில் மாற்றமெதுவும் வராதென்பதே என் நம்பிக்கை. அதனால் அது குறித்த விஷயங்களில் கொஞ்சம் கூடுதலான அக்கறை எனக்குண்டு. அந்த வகையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஷோபாசக்திக்கான இடம் முதன்மையானது. ஆனால் படைப்பாளியின் அரசியலை முதன்மைப்படுத்தும் முனைப்பு ம் பிரதியை, அது அடையவேண்டிய அல்லது அடைந்திருக்கவேண்டிய இடத்தை தடைக்கல்லாய் நின்று தடுத்திருக்கிறது என்பது நிஜத்திலும் நிஜம். பிரதியாக்கத்தில் எந்த அரசியல், எவ்வளவு அரசியல் இடம்பெற வேண்டும் என்பதைப் படைப்பாளியேதான் தீர்மானிக்கிறான். 'நான் தமிழனில்லை, இலங்கையனில்லை, பிரான்ஸியனில்லை' என்று சொல்லிக்கொண்டிருப்பினும் இவையொன்றுள்தான் ஷோபாசக்தி இருக்கமுடியும். அந்தளவுக்கு அவருக்கு அரசியலும் இருக்கும். இருக்கலாம் என்பதே என் வாதமும்.

ஆனால் படைப்பை அது எந்தளவுக்கு வலிவுபடுத்துகிறது அல்லது நலிவுறச் செய்கிறதென்பதே என் கரிசனை. ஒரு  அரசியலைப் பேச வந்ததின் மூலம் படைப்பு எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதை இங்கே கவனிக்கவேண்டும். இங்கே அரசியல் ஒருகாலகட்டத்தினது இடதுசாரி இயக்க எழுத்தாளர்களது எழுத்துக்களிலிருந்த கருத்துக்கள்போல் துருத்திக்கொண்டு நிற்கவில்லையென்பது மெய்யிலும் மெய்யே. ஆனாலும் நோக்கம் அதுவாகவே இருந்ததென்பது எவர் கண்ணுக்கும் புலனாகாது போகமுடியாது.

கொரில்லா தீவான மொழியின் அத்தனை அழகையும் வீறையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வந்திருக்க, ம் ஒரு செயற்கை மொழியில் உருவாகியிருக்கின்றதெனவே எனக்குப் படுகிறது. குறிப்பாக நூலின் முதற் பாதியில் இந்தப் பலஹீனம் அதிகம். ஷோபாசக்தியின் எழுத்தில் இந்த அம்சம் மகாபிரதானமானது. எழுத்தை அத்தனை வீச்சோடு பிரயோகித்தவர்களுள் முந்திய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் எஸ்.பொ.வைச் சொல்ல முடியும். இளைய தலைமுறையில் ஷோபாசக்திதான். இந்த நிர்மாணம் இந்தப் பிரதியில் மறுவாக்கம் காணாது போனதேன்? இவை வருத்தப்படக்கூடிய கேள்விகள். எவருக்கும்.

நாவலென்பது தன்னுள் ஒரு விகாசத்தைக் கொண்டிருக்கவேண்டும். நாவல் பல் பரிமாணமெடுப்பதென்பதின் அர்த்தம் இதுதான். அது யதார்த்தவகையான நாவலென்றாலும் சரி, பின்நவீனத்துவ வகை நாவலென்றாலும்தான் சரி இந்த வரையறையைப் பெரும்பாலும் நீங்கி வந்துவிட முடியாது. நூறோ ஆயிரமோ பக்கங்கள் எத்தனையானாலும் ஒரு நூல் நாவலாவதென்பது அது தன்னுள் விகாசமெடுக்கும் இந்த அம்சத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. ம் விகாசமெடுக்க முடியாமல் தனக்குள் முனகுவது வாசகனுக்குத் தெளிவாகவே கேட்கிறது.  ஒரு  நாவலின் கட்டுக்கோப்போடு ம் வரமுடியாதுபோயிருக்கிறது. அது வெறும் சம்பவங்களாய்க் குறுகிப்போனது என்பதே இறுதியான முடிவாகிறது.

சொல்ல எடுக்கப்பட்ட விஷயம் சாதாரணமானது. நேசகுமாரன், பிறேமினி, நிறமி ஆகியோரின் கதைபோலத்தான் இது தோற்றம் காட்டுகிறது. ஆனாலும் இயக்க அரசியலில் இருந்த மோசமான அம்சங்களையே இது பகிரங்கப்படுத்த எழுந்தது என்பது இரகசியமான விஷயமில்லை..இது தவிர்க்கவியலாதவாறு அரசியலைச் சாரச் செய்திருக்கிறது. கலாபூர்வமான அம்சங்கள் தவிர்ந்து வரும் நோக்கமெதுவும் பிரசாரம் தவிர வேறில்லை. பிரசாரமென்பதென்ன? அதுதான் அரசியல். ஒரு அனுபவத்தின் பகிர்வுகூட நாவலாக வரமுடியும். பல அனுபவங்கள் அவ்வாறு நாவல்களாக வந்திருக்கின்றன. கொரில்லா வந்திருக்கிறது. இது ஏன் வரவில்லை? ஆசிரியனின் சொந்த அனுபவமாக அது இல்லாதிருந்ததினாலா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் புனைவுக்கான ஒரு மொழிநடை இந்தக் கதைப் புத்தகத்தில் இல்லையென்பது எவருக்குமேதான் தெரிகிறது. வெலிக்கட சிறைச்சாலையின் விவரணையும் அங்கு நிகழும் சம்பவங்களின் விபரிப்பும் அனாவசியமானவை. மட்டக்கிளப்புச் சிறையுடைப்பைச் சொல்ல மிக நீண்ட இடம் தேவைப்பட்டிருக்கிறது.அவை பாத்திர வளர்ச்சிக்கான எந்த உந்துவிசையையும் செய்வதில்லை. அவை எந்த நோக்கத்தையுமே ஆசிரியனுக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்க முடியாது. புனைவின்றி எழுதப்பட்ட சி.புஷ்பராசாவின் 'ஈழ விடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில்கூட வெலிக்கட சிறைச்சாலையின் விவரணையும், நடைபெறும் சம்பவங்களின் விஸ்தரிப்புகள் சிலவும் வருகின்றன. அதை என்ன சொல்ல? ஏன், அடேல் பாலசிங்கம் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமான 'சுதந்திர வேட்கை' சமகால அரசியல் நிகழ்வுகளின் ஓரு விவரிப்புதானே? அதைப் புனைவு இலக்கியத்தோடு சேர்த்தெண்ணிவிட முடியுமா? விவரிப்பு புனைவற்ற நிலையில் புனைகதை இலக்கியப் படைப்பானது தன்னில் குறையாகிப்போய் நிற்பதை எதனாலும் ஈடுகட்டிவிட முடியாது. ம் தன் குறைகளோடேயே நிற்கிறது.

பிரதியைப் பிரதியாகாமலும், நாவலாகாமலும் தடுத்த இக் குறைகளை நீக்கிப் பார்த்தால் இது தனியே கதைப் புத்தகமாக மட்டும் நிற்கவில்லை என்பது தெரியும். யதார்த்த நிகழ்வொன்றின் அலுக்காத கதையாக இது பிரமாதமாய் வார்க்கப்பட்டிருப்பதைச் சொல்லவேண்டும். ஷோபாசக்தியின் எழுத்து நடை கதையை கதையளவாக நிற்காமல் மேலெத்துச் சென்றிருக்கிறது. கொரில்லா சுட்டெண்கள் ஊடாகவும் கதை சொல்ல முயன்றது. இது வேறொருவகையான தொழில் நுட்பத்தைப் பிரயோகித்திருக்கிறது. மேலை நாடுகளில் பாடநூல்கள் இவ்வாறு பத்திகளும் சிறுசிறு தலைப்புகளோடு வரும். அந்த தொழில் நுட்பத்தை ஷோபாசக்தி பொருத்தமாக இந் நூலிலே கையாண்டிருக்கிறார். நாவலும் தன்னை ஒரு நவீன ஆக்கமாய்த்; தெளிவாகவே பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

குதிரை வண்டிக்காரன் ஒருவனின் கதையோடு கதைப்
புத்தகம் முடிவுபெறுகிறது. இக் கதை, ம் மேலே சொன்ன அத்தனை கதைகளையும்விட அழகானது. இதுபோல் ஷோபாசக்தியால் மட்டுமே முடியும். அப்படியான இந் நூல் பிரதியாகாமலும் நாவலாகாமலும் போனது எனக்குள் உள்ள மிகப்பெரிய சோகம். ஷோபாசக்தியின் முதல் நாவல் கொரில்லாவின் வெளியீடு சென்னையில் நடைபெற்ற வேளையிலே அதுபற்றிய சிறப்பான ஒரு விமர்சனத்தை நான் செய்திருந்தேன். பிரதியொன்று கொண்டிருக்கக் கூடிய அத்தனை அதிர்வுகளையும் பாதிப்புக்களையும் அது தன்னுள் கொண்டிருந்தது. அது ஈழத் தமிழிலக்கியத்தில் மெச்சப்படவேண்டிய படைப்பு. இது அதுவாகாமற்போன காரணத்தின் அலசல் சுகமானதாகவிருக்காது. வாசகனுக்குப் போலவே படைப்பாளிக்கும். விமர்சன முடிவுகளை படைப்பாளி தூக்கியெறிந்துவிட்டுப் போகலாம். ஆனால் விமர்சன தர்மம் அதைச் செய்யவே செய்துகொண்டிருக்கத்தான் செய்யும். கதைகள் புனையப்படுவனவுமாகும். ஆனால் இது நடந்ததும் புனையப்பட்டதும். புனைவு எங்கே தோற்கிறதெனில் அது அடையவேண்டிய எல்லையை அடையாமற்போகிற இடத்திலிருந்து தொடங்குகிறதெனலாம். ம்முக்கு நேர்ந்த சோகம் இவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கொரில்லாபோல் ஒரு உயர்ந்த படைப்பை ஷோபாசக்தியால் தர முடியும்.


00000


காலம் காலாண்டிதழ்


Thanks: KAALAM (LIT.MAG)

மு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'

'மீண்டும் வரும் நாட்கள்'
கவிதை நூல் குறித்தும் விமர்சன அரங்கு குறித்தும்

'மீண்டும் வரும் நாட்க'ளின் மீதான விமர்சன அரங்கு 05-06-2005 இல் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. அன்றைய மாலையில் அதைத் தொடர்ந்து சுமதி ரூபனின் யாதுமாகி நின்றாள் கதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் இடம்பெற்றது. விமர்சன அடிப்படையில் அச்சொட்டாக மட்டுமே கருத்துக்களை என்னால் அங்கு முன்வைக்கக்கூடியவளவான கால அவகாசமே தரப்பட்டிருந்தேன். அந் நூல் குறித்து மேற்கொண்டும் விவாதிக்க நிறைய விஷயங்கள் இருந்தபோதும், உடன் மறையாகத்தான், காலம் கருதியே அதை நான் தவிர்க்க நேர்ந்தது. அவைபற்றியெல்லாம் கட்டுரையாக எழுத எண்ணம் கொண்டிருந்தேன். காலம் இழுபட்டுப் போனது. அதற்கிடையில் மு.புஷ்பராஜனின் எதிர்வினை பதிவுகளில் வந்திருக்கிறது. நல்லது. புதிவுகளில் வரும் தேவகாந்தன் பக்கத்துக்கு நீண்ட நாட்களாக எழுதவில்லை என்ற என் மன உறுத்தல் இத்தோடு தீர்ந்ததாக ஆகட்டும்.

இந் நூல் குறித்து அன்று நான் வெளியிட்டதில் இரண்டாம் அபிப்பிராயம் என்னிடத்தில் இல்லை. ஆனாலும் சிலவற்றுக்கான விரிவுகள் அவசியமென்றே இப்போது படுகிறது. குறிப்பாக புஷ்பராஜனின் எதிர்வினை வந்தபிறகு படுகிறது.

எவரிடத்திலும் சரி, எழுச்சி மிகும் ஒரு கணத்திலேயே கவிதை பிறக்கிறது.
ஒரு காட்சி பற்றி, ஒரு கருத்துப்பற்றி, ஓர் உணர்வுபற்றியெல்லாம்கூட அது இருக்கலாம். கவிஞனுக்கு அதற்கான வரையறுப்பு இல்லை. அப்படி இருக்கக்கூடாது. ஆனால் அது எழுச்சிக் கணத்திலானதாய் மட்டும் இருக்கவேண்டுமென்பது வரையறை. என்னால் எதையும் கவிதையில்தான் சொல்ல வரும் என்பதுமாதிரியெல்லாம் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. இன்றும்கூட சங்கப் பாடல்களுக்கிருக்கும் மதிப்பு அவை வீரமும் காதலும் பேசின என்பதினாலில்லை. எழுச்சிக் கணங்களில் அவை கவிஞனின் மனசாட்சியாய் வெளிவந்தன என்பதினாலேயே ஆகும். அதையே தன்னுணர்ச்சிப் பாடல்களென இலக்கியம் சொல்லிநிற்கிறது. அவற்றிலும் அவசியங்களுக்காய்ப் பாடப்பட்டுச் சோடைபோனவை உண்டு அல்லவா?

செய்யுளின் தளையுடைத்து மொழியடைந்த சுதந்திரமே உரைநடையென்று சொன்னாலும் தப்பில்லை. அது ஒரு மேலாதிக்கக் குடியின் மொழியதிகாரத் தடையுடைப்பும். நாவலரிடம் எனக்குள்ள கவுரவத்தின் ஒரே காரணம் அவர் 'வன்ன நடை வழங்குநடை வசனநடை' கைவந்த வல்லாளராகத் திகழ்ந்தார் என்பதில்தான். அதை எந்தக் காரணம் சுட்டி அவர் செய்திருந்தாலும், அந்தப் பெருமையிலிருந்து அவரை இறக்கிவிட நான் உடன்படமாட்டேன்.

தமிழின் இன்றைய மேன்நிலைக்கு உரைநடையே முழுக் காரணமாக இல்லாவிடினும், மக்களுக்கான மொழியாக அது மாறியது அந்தக் கணத்திலிருந்துதான். இன்று இன்னும் தளையறுத்து அது புதுமொழியாக வலம் வருகிறதெனில் அது ஏதோ நினையாப்பிரகாரம் நிகழ்ந்ததொன்றல்ல. யாப்பின் கட்டுடைப்பை, உரைநடையின் அவசியத்தை பாரதி எவ்வளவு அவசியமென்றான் என்பது எமக்குத் தெரியாததல்ல. அதுவும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாதனமே. உரைநடையினதும் கவிதையினதும் மொழிக்கிடங்குகூட ஒன்றுதான். எந்த ஒரு கருத்தைச் சொல்வதற்கும் வல்லபம் வாய்ந்துதான் தமிழுரைநடை இன்று இருக்கிறது. இல்லாவிட்டால் இதுவரை காலமான தமிழின் புனைகதை முயற்சிகளுக்கெல்லாம் என்ன பொருள் இருக்கமுடியும்?

உரைநடை இலக்கியத்தின் பங்குதாரியாகிய பிறகு சாமான்யமான விஷயங்களை அதில் சொல்வதில்தான் அர்த்தமிருக்க முடியும். கவிஞர்களானாலும் உரைநடையில்தானே கடிதமெழுதிக் கொள்கிறார்கள்? புஷ்பராஜன் புதுக்கவிதையில்தான் நான் கடிதமெழுதுவேன் என்று அடம்பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்? முடிந்தது, இவ்வாறான விஷயங்களைப் பேச புதுக்கவிதையை எடுக்காதீர்கள் என்று சொல்வது மட்டும்தானே? பாலஸ்தீனத்துக்கான வாழ்த்தை கவிதையில் சொல்ல புஷ்பராஜனுக்கு என்ன அவசியம் இருந்தது? அதுவும் இரண்டு பாகங்களில். அது கவிதையாக வரவில்லையே. இல்லை, கவிதையாகத்தான் வந்திருக்கிறதென்று கவிஞனேதான் வந்து சண்டை பிடித்துக்கொண்டு நிற்பானா? கவிதை|கவிதையில்லை என்று சொல்கிற தகுதி வாசகனுக்குத் தானுண்டு. சிறிது விமர்சகனுக்கும். வேறு யாருக்கும்-யாருக்குமே - இல்லை.

கவிதையில் ஒரு பூடகமும் உள்ளோடியிருப்பது நல்லது. நான் புரியாத் தன்மையைக் குறிக்கவில்லை. மர்மம் அல்லது மாந்திரீகப் பயன்படுத்துதல்கள் பற்றிக் கூறவில்லை. இந்தப் பூடகம் ஒரு இடைவெளியாகவுமிருக்கலாம். வாசகனின் தன் அனுபவப் பொருத்தலுக்கானது இந்த வெளி. அதுதானே முக்கியம். கவிஞன் தன் அனுபவத்தை வாசகனுடன் பகிர்கிறானென்றில்லை. கவிதையே அனுபவமாகவேண்டும் என்பதுதான் என் கட்சி. அதற்கானவைதான் கவிதையின் இடைவெளிகள். இது தெரியாததால்தான் எல்லாவற்றையும் சொல்லப்போய் அழகிய கவிதையொன்று கெட்டது. 'புரிதல்' இன்னுமே ஒரு நல்ல கவிதை. அது மிகமிக நல்லவொரு கவிதையாக வந்திருக்கவேண்டியது. இப்படி எல்லாவற்றையும் சொல்லப்போய்த்தான் கெட்டது.

இயற்கையின் உள்ளுணர்வுகளுக்காய்
இதயத்தைத் திறந்துவிடு
மௌனமான அதன் மொழிகள்
உன்னில் புரிகையில்…

என்றுமட்டும் அக் கவிதை முடிந்திருந்தால், அது உச்சமேறுவதை எதனாலுமே தடுத்திருக்க முடியாது. புரிதல் கவிதை பரவாயில்லை. நல்லதாகத் தப்பிப்பிழைத்திருக்கிறது. இக் கணத்தில் 'வாழ்ந்துவிடு' வுக்கு நேர்ந்தது பெரும் சோகம். வேண்டியவரிகளாய் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் மட்டும் நான் சொல்லவில்லை. இடையிலுள்ள வரிகள் சிலவற்றையம் சேர்த்தே சொன்னேன். அவ்வாறாயின் கவிதை இவ்வண்ணம் அமைந்திருக்கும்:

யசோதரா
இக் கணத்தில் வாழ்ந்துவிடு

முற்றத்தில்
விரித்த பாயில் மனைவி அருகிருக்க
மல்லாந்து படுத்தபடி
என்ன நினைக்கிறாய்?

விண்ணில் வெள்ளிகள் மினுங்க
கள்ளப் பார்வையும் செல்லச் சிரிப்பும்
அருகில் ஒலிக்க
ஆயிரம் எண்ணங்கள்
வீதி மருங்கில் பூத்துப் பொலிகிறதா?

வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு
கற்பனையிலாவது வாழ்ந்துவிடு.

மரணம்
கள்வனைப் போல் வரும்
அதுவும் உங்களுக்குத் துப்பாக்கியாலும்
சித்திரவதையாலும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கவனம்
நள்ளிரவில்
சப்பாத்தின் ஒலிகளினால்
உனது வீட்டின்
விளக்கின் ஒளி நடுங்கும்

இழுத்துச் செல்லப்படுவாய்
பிள்ளைகள் கதற
மனைவி திகிலில் உறைய.
அக் கணத்தில்
துப்பாக்கி ஏந்திய ஒருவன் தீர்மானித்தால்
உனது மனைவியும்.

இப்படித்தான்
ஒரு பகற் பொழுதில்
உனது நண்பனும் மனைவியும்
இழுத்துச் செல்லப்பட்டார்கள்

எனவே யசோதரா
நீ
இக் கணத்தில் வாழ்ந்துவிடு.புதுக் கவிதை ஓரளவு வடிவத்தாலும் வாழ்வது என்பார்கள். அதாவது புதுக்கவிதையின் வடிவம் கட்புலன் சார்ந்தது. செய்யுள், பாட்டு என்றெல்லாக் கவிதையினமும் செவிப்புலன் சார்ந்திருக்க, புதுக்கவிதை மட்டும் கட்புலன் சார்ந்திருப்பது, அது அச்சியந்திரச் சூழலில் உருவான குழந்தை என்பதனாலேயாகும். புதுக் கவிதையின் மிடுக்கு அதன் வரிகளில். இங்கே வரிதான் ஓசையைத் தருகிறது. அதில் ஏற்படக்கூடிய பின்னம், கவிதைத் தன்மையைப் பாதிக்கிறது. இம் மாதிரி வரிகளின் இடர்ப்பாட்டோடுள்ள சில கவிதைகளும் இத் தொகுப்பில் உள.

மொத்தப் படைப்பையும் தொகுப்பாக்குற தேவையொன்றிருக்கிறபோது இம்மாதிரிச் சில கவிதையல்லாதனவும் சேர்ந்துவிடுகின்றனதான். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் ஆதங்தகமெல்லாம் இக் குறைபாடுகள் நீங்கிய கவிதைகள் தொகுபட்டிருப்பின் சிறந்த ஒரு கவிதைத் தொகுப்பாக இது வந்திருக்குமே என்பதிலிருந்து பிறந்ததுவே.

அதிர்ச்சி விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கையிருப்பதில்லை. என் விமர்சனத்தின் தாத்பர்யமே படைப்பை அது அதுவாக இனங்காட்டுவதே. 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுப்பில் குற்றங்கள் குறைகள் உள்ளவை மட்டுமல்ல, நிறைவான .. உன்னதமானவையும் உண்டு. அவற்றுளொன்று 'தனிமை' கவிதை. தனிமையைப் பற்றியது. தனிமைதான் யாருக்கு யாரால்? என்று அக் கவிதை முடிகிற இடம் அற்புதமானது. அக் கவிதையில் இகழ்வின் நகைப்பிருக்கும். 'ஐயோ, இவன் அழகென்பதோர் அறியா அழகுடையான்' என்பதுமாதிரியான முடிவு கூறமுடியாக் கம்ப கையறுநிலை அதில் இருக்கிறது. பிரிவின் கொடுமையை இவ்வளவு பாதிப்புடன் சொன்ன வேறு கவிதை புலம்பெயர் சூழலில் நான் அறியாதது. இன்னும் தமிழ்ச் சூழலில் என்றும் சொல்வேன். 'அகலிப்பு' இன்னொரு நல்ல கவிதை. பிறந்த ஆண்டு போடப்படவில்லை. மொழி தன் பன்முகமெடுத்து விசாலம் காட்டும் விந்தை சத்தியமாக இங்கே நடந்திருக்கிறது. கட்டிறுக்கமும் படிமமும் உணர்வடக்கமுமாய் அது. கவிதைகளின் தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சூழலில் குறிப்பீட்டுக்கானவையே. தலைப்பை ஒரு புள்ளியாக்கி அதிலிருந்து விரிந்தெழுந்து மேலே மேலேயாய்ச் செல்லும் கவிதைகள் தமிழில் இல்லாமலில்லை. தலைப்புகளில் பெருங் கவனம் செலுத்தப்படுவதில்லையென்பதே நான் சொல்ல வருவது. 'மீறல்' கவிதை குறுகியது. ஐக்கூக் கவிதையல்ல அது. ஆனாலும் சிறந்த ஒரு ஐக்கூ கவிதையைவிடவுமே உச்சமடையும் கவிதை . அதை இங்கே பார்ப்பதும் நல்லதுதான்:


மீறல்


வீதிக்காய்
விரித்து நெரித்த கற்களிடையே
சிறு
புல்லொன்று பூத்திருக்கு.

சில நல்ல கவிதைகள் கூட ஒருபோது ரசனை தந்து, இன்னொருபோது சாதாரணமாகிப் போகின்றன. எப்போதும் ரசனை தரக்கூடிய கவிதையை மிக நல்ல கவிதையென்று சொல்லலாம். அதுமாதிரியான கவிதை 'ஓயாத அலை' என்கிற கவிதை. அனைவரினதும் பார்வைக்குமாக அதை முழுமையாக இங்கே:

ஓயாத அலை

இடி மின்னலோடு
காற்றுச் சினம் கொள்ள
அலையின் தினவி;ல்
அணை உடைந்தது

ஓ…வென்ற இரைச்சலுடன்
பொங்கிய பெருவெள்ளம்
ஊற்றை நோக்கி
வேகம்கொண்டு விரைந்து
ஓரமாய் நின்ற
தடைகள் அனைத்தையும்…

சூரிய வெம்மையில்
வெடித்த பாளங்களிடையே
நீர் புக
நிலம் குளிர்ந்தன
நிலமூறிய வெம்மை
ஆவியாய் அகன்றன

காற்றின் அனலும்
அகன்று குளிர
வீட்டு முற்றத்தில் தென்னோலைகள் நிழல் விழுத்தி
நிலவெறிக்கும் காலத்தில் நாட்டார் பாட்டொலிக்க

செட்டை அடித்த
வெள்ளடிச் சேவலின் கூவலோடு
காலடியில் கேட்கிறது ஓயாத அலை.


படிமங்களில் தன் அர்த்தங்களைப் பொதிந்து, அதற்கான சொல் தெரிந்து உருவான கவிதையென்று இதைச் சொல்ல முடியும். இது மாதிரி இன்னும் சில கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் நான் விமர்சன அரங்கிலேயே சொல்லியுமிருக்கிறேன்.கவிதையை இம் மாதிரி அறுவைச் சிகிச்சை செய்வது மகா கொடூரம். விமர்சகன் எவனும் சரி , வாசகன் கூடத்தான், இம்மாதிரிச் செய்யவே செய்யக்கூடாது. ஆனாலும் ஒரு அவசியம் கருதி இவ்வளவு தூரம் வர வேண்டியதாயிற்று. மிகுந்த சாத்தியப்பாடுகளை நோக்கி மொழியை முன்னகர்த்ததிச் செல்லக்கூடிய தராதரம் வாய்ந்தது கவிதை மட்டும்தான். அதன் சாத்தியப்பாடுகளை புரிந்தும், உள்வாங்கியும் கொண்டிருக்கவேண்டியது கவிஞன் கடமையென்றே எனக்குச் சொல்லத்தெரிகிறது.

தமிழ்ப் பரப்பில் நீண்ட கவிதைகள் பெருமளவில் இல்லை. கவிஞர்கள் சிற்பி, நகுலன் போன்றோரைத் தமிழகத்திலும், மு.பொ., மஹாகவி, இ.முருகையன் போன்றோரை ஈழத்திலும் இலகுவாய் இனங்காண முடியும். மு.பொ.வினது 'விலங்கிடப்பட்ட தேசம்', 11|9 சம்பவத்தின் மூலம்தேடிக் கண்டடைந்து அதை சரித்திர , தொன்ம கதையுருவங்களைக் கொண்ட அடைதற் சாத்தியத்துடன் கூடிய கவிதையாகவே இன்னும் பார்க்கிறேன். அது கவிதை அனுபவத்தைத் தந்தது என்பதைவிடவும், உரைநடையில் சாத்தியமற்ற கவிக் கூறுகளைக் கொண்டிருந்தது என்பதே நிஜம். வடிவம் நேர்த்தியாகிற, உள்ளடக்கம் நேர்த்தியாகிற, அனுபவத்தை நேர்த்தியாய்த் தருகிற என்று கவிதைகள் தரம் தரமாகவே அமைகின்றன. இவற்றில் பல கூறுகளின் இயைவு ஒரு நல்ல கவிதையைத்தருகிறது. இக் கூறுகளின் கூடுதலான இயைவு உன்னதமான கவிதையைத் தருகிறது. இதில் நானெங்கே தெளிவில்லாமல் இருக்க நேர்ந்தது? இந்த விதிகளின் படியேதான் சகல கவிதைகளையும் நான் தரம் பார்க்கிறேன்.

நான் அதிகம் சொல்லாதது மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' என்ற நீண்ட கவிதை பற்றியே. அது கவிதைபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருப்பினும் கவிதையாக மாற இழுவாணிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அனுபவத்தை வாசகன் அடையவே முடிவதில்லை. ஆயினும் அது கவனத்துக்குரியதே. ஈழ நெடுங்கவிதைப் பரப்பு குறுகியதாய் இருக்கிற அளவில் அது நெடுநாளைக்கு நினைக்கப்படும். வளர்ச்சியில் அக் கவிதை ஒரு கட்டம். அதற்காகவேனும். கட்டுமானம் நன்றாயும் வாசல் பிழைத்ததாயும் சில வீடுகள் அமைந்திருப்பதில்லையா, அதுபோல் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

மீண்டும் வரும்தான் நமக்கு அந்த நாட்கள். மீண்டும் வரும் நாட்கள் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்வுக்கான நம்பிக்கை. அதை இந் நூல் கவிதையில் தந்துகொண்டிருக்கிறது என்பது நிஜமே. இதுவே அதன் ஒட்டுமொத்தமான பெறுமானம் , மதிப்பீடு எல்லாம். இந்த நம்பிக்கை தமிழினத்துக்கு என்றைக்கும்விட இன்றைய காலகட்டத்தில் அதிக தேவையாயுமிருக்கிறது. ஆனால் அதைப் மு.புஷ்பராஜனிடமிருந்து அடைந்துகொள்ளாமலே போதுமான நம்பிக்கையோடிருக்கிறோம்.

00000

பதிவுகள்.காம் 2007


அதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)

திருக்குறளைச் சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதைச் சங்க காலத்தது என எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப் பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப் பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும் மகிழமுடிந்திருந்தது.
அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர், இளம்பூரணர் உரைகள் தொடங்கி, நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, பின்னால் டாக்டர் மு.வரதராசன், சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா உரைகள்வரை தேடிப் படிக்கும் பழக்கம் எனக்கு வசமாகிப்போனது.

இலக்கிய உலகில் திருக்குறள் இலக்கியமா, நீதி நூலா என்ற வாதப் பிரதிவாதங்கள் தீர்க்கப்படாதிருந்தபோதும், அதை இலக்கியமாக நான் நம்ப ஆரம்பித்தது அதன் விளைவானதுதான்.
பின்னால் எனக்குள்ளாகவே கேள்வி: உரைகாரர் சொல்லிய பொருளையே வள்ளுவனும் கருதியிருப்பானா? உரைகாரர் தெளிவுரைகாரர் இன்றி திருக்குறளைப் புரிய முடிந்த கணத்திலிருந்து இத் தாக்கம் ஏற்பட்டதாய்ச் சொல்ல முடியும். இவர்களின் பாதிப்பின்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட காலம், மறைப் புனித மரபுகள் போன்றனவற்றின் செல்வாக்கினுக்கு ஆட்படாதிருந்து அதனை அதுவாகவே பார்க்க முற்பட்ட முயற்சியின் விளைவே ‘உள்ளது உணர்ந்தபடி’ என்ற இக் குறள்த் தேர்வுத் தொகுப்பு.

என் மொழியில், என் பார்வையில் உரைகாரர், பண்டிதர்களை மறுத்தும் திருத்தியுமாய் திருக்குறளில் நான் விரும்பும் சில குறள்களுக்கு இங்கே நான் சொல்லப்போகும் விளக்கம் ஒருவகையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கான என் சமர்ப்பணமே. இருபது வயதில் ‘கலித்தொகைக் காட்சிகள்’ என்ற தொடர் கட்டுரையை நான் ஈழநாடு தமிழ்த் தேசிய இதழ் வாரமலரில் எழுதியதற்குப் பிறகு என் செவ்விலக்கியம் சார்ந்த எழுத்துப் பிரவேசம் மறுபடி இப்போதுதான் நிகழ்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே இம் முயற்சியை நான் தொடங்கியிருந்தாலும், இப்போதுதான் தீவிரமாய் இறங்க முடிந்திருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட முயற்சியின் சில குறள்கள் சென்னை.கொம் என்ற இணைய தளத்திலும், ‘வள்ளுவம்’ இதழிலும் வெளிவந்திருந்தன என்பதை இங்கே நான் குறிப்பிடுவது அவசியம். முன்னதற்காக நண்பர் திரு. சூரியசந்திரனுக்கும், பின்னதுக்காக திரு.பல்லடம் மாணிக்கத்துக்கும் என் நன்றி உரித்து.

நான் கனடா வந்தபிறகு வைகறையில், சிதைவும் கட்டமைப்பும்’ என்ற கட்டுரை முடிவுற்ற பின்னர் இருபத்திரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். ஏறக்குறைய அறுபது அல்லது எழுபது குறள்கள் வரலாம். மீதியான குறள்களுக்கு என் உணர்வை எழுதிய பக்கங்கள் இன்னும் என் கைவசம் உண்டு. முடிந்தால் அவற்றையும் இதில் சேர்ப்பேன்.(1)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

(பாயிரம், வான்சிறப்பு-7) குறள் 7
0

வானம் பெய்யாதுவிட்டால் பெருஞ்சமுத்திரமும் வற்றிப்போகும்.
00
கடல் குன்றுவதுமில்லை, மிகுவதுமில்லையென்பது அக்கால நம்பிக்கை.
‘கடல் கொளக் குறையாது, புனல் புக மிகாது இரங்கு முந்நீர்’ என்னும் சங்கப் பாடலொன்று.
மேகம் நீரை ஆவியாய்க் கொண்டாலும், மழையாய்க் கொட்டினாலும் கடலில் மாறுதல் நிகழ்வதில்லையென்பது இந்த அடிகளின் அர்த்தம்.
அப்படியிருந்தும் கடல்கூட அல்ல, பெருஞ்சமுத்திரமே தன் தன்மையை இழக்கும் என்கிறான் வள்ளுவன்.

நீர்மையென்பது இயல்பு.
கடலின் இயல்பாவது யாது? அழகும், அகற்சியும்.
பனிக்குக் குளிர், நெருப்புக்கு வெப்பம்…. இவைதான் நீர்மை.
அந்த நீர்மையே குன்றுமென்பது ஒருவகையில் ஒரு காலகட்டத்தில் விளங்கிய நம்பிக்கையது உடைப்பு.

கலைஞன் சமூகத்தோடு ஒட்டியுமிருப்பான், சமயங்களில் அறுத்துக்கொண்டு தனியாகவுமிருப்பான்.
தனியாக இருப்பதே படைப்புக் கணம்.
வுள்ளுவனின் படைப்புக் கதி இந்தப் பாடலில் இப்படி ஒரு உடைப்பைச் செய்கிறது.

கடல் நகர்கிறது முன்னோக்கியோ பின்னோக்கியோவாக.
நவீன விஞ்ஞானம் இதை எண்பிக்கிறது அளவைகளினூடாக.
இதையே வேறொரு புரிதலில் சொன்னால் கடல் பரக்கும் அல்லது சுருங்கும் என்றாகும்.
அது, கடல் குறைவுபடுமென்பதின் இன்னொரு மொழியே.
ஆழம் மாறாமல் அகலிக்கவோ சுருங்கவோ முடியாது.
அதுவே இந்த நம்பிக்கையுடைப்பின் ஆதாரம்.
000
(2)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

(பாயிரம், நீத்தார் பெருமை – 9) குறள் 29
0

நல்ல பண்புகளாகிய மலையிலே ஏறிநிற்கும் குணவான்கள் ஒரு கணமே வெகுட்சியடைந்தாலும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் கடினமானது.
00சினத்தை ‘சேர்ந்தாரைக் கொல்லி’ (குறள் 306) என்பான் வள்ளுவன்.
திருக்குறளில் சினம் எங்கெங்கும் கடிந்துரைக்கவே பட்டிருக்கிறது.
‘ஆறுவது சின’மென்று சொன்னது அவ்வை.
பாரதியோ ‘ரௌத்திரம் பழகு’ என்றான்.
இந்த பழமையினதும், நவீனத்துவத்தினதும் முரண்களால் சினமென்பது உண்மையில் நல்லதா கெட்டதா என்ற அய்யம் எவருக்கும் எழுதல் இயல்பு.

சினம் நல்லதல்லத்தான். அதேவேளை ரௌத்திரமும் பயில்வுக்குரியதே. அதெப்படி?

ஒருகாலகட்டத்தில் விளங்கும் ஒரு சொல் , இன்னொரு காலகட்டத்தில் பொருள் வேறுபட்டும் திரிந்தும் வழங்குதல் மொழியியல்பு.
காதலென்ற உணர்வைக் குறிக்க சங்க காலத்தில் வழக்கத்திலிருந்த காமம் என்ற சொல், இன்றைய காலத்தில் பொருள் இழிந்து விளங்குதல் இப் பொருள் வேறுபாட்டுக்கு நல்லதொரு உதாரணம்.

வள்ளுவன் சினமென்றும், வெகுளியென்றும் பலவிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறான்.
சினம் கெட்டதாகவும், வெகுளி பெரும்பாலும் ஏற்கக்கூடியதாகவுமே அர்த்தம் பெற்றிருக்கிறது குறள்களில்.
எண்வகை மெய்ப்பாடுகளில் வெகுளி ஒன்று என்கும் தொல்காப்பியம்.
சினம் மெய்ப்பாடாய் எண்ணப்படுவதில்லை.
சினத்தை இப்போதைய பொருளில் கோபம் என்றும், வெகுளியை ரௌத்திரம் என்றும் நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால் முரண் தோன்றாது.

000

(அடுத்த வாரம் தொடர்வேன்)

சிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)

தேவகாந்தன்(1)

இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எனது ‘கதா காலம்’ என்னும் மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளிவந்ததிலிருந்து, அதை வாசித்த என் நண்பர்களும் வாசகர்களும், ‘கதா காலம்’ இதுவரை வெளிவந்த, குறிப்பாக கதாகாலத்துக்கு முன் வெளிவந்த ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தைவிடவும்கூட, தன் நடை போக்குகள் போன்றனவற்றிலிருந்து வெகுவான மாற்றம் கொண்டிருப்பதாகச் சுட்டிக் கூறிவருகின்றனர்.

அது மெய்யெனவே இப்போது நினைக்க எனக்கும் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் காலஞ்சென்ற செம்பியன்செல்வன் தலைமையில் காலஞ்சென்ற நந்தி உட்பட அ.யேசுராசா, சட்டநாதன் போன்றோர் கலந்துகொண்ட எனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் விமர்சனக் கூட்டத்தில், அந் நாவல் ஈழத் தமிழ் நாவல் வரலாற்றில் கொண்டிருக்கும் அதிகாரம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஆளப்பட்டிருந்த சொல்லின் செறிவுபற்றியும், நடையின் வீச்சுப் பற்றியும், அதன் மய்யமழிந்த கதைகூறும்; பண்பு பற்றியும் யாழ். கூட்டத்தில் சட்டநாதன் உட்பட, கொழும்பு ராமகிரு~;ண மண்டபத்தில் அதன் வெளியீட்டாளர்கள் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தார் ஏற்பாடு செய்திருந்த வெளியீடு கருத்தாடல் நிகழ்வில் பங்குகொண்ட மு.பொ., வீரகேசரி விஜயன் ஆகியோரும் குறிப்பிட்டிருந்ததையும் இன்று ஒருசேர நினைத்துப்பார்க்க முடிகிறது.

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது ஒரு சுவையான விசாரிப்பாக இருக்க முடியும். ஒரு நாளில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் இது நிகழ்ந்திருக்க முடியாதென்பது நிச்சயம். ஏன் தீவிர வாசிப்பும், புதிய ஆக்கங்கள் பற்றிய கருத்தாடலும் விவாதங்களும்கூட இதற்கான முதன்மைச் சாத்தியங்களாக இருக்க முடியாது. அப்படியெனில் இந்த மாற்றத்துக்கான உந்துவிசையாக எது செயற்பட்டிருக்கவேண்டும்? இந்தக் கேள்வியின் இடையறா உளைவினது எழுத்துப் பதிவே இந்த என் உரைக் கட்டு.

ஒரு நீண்ட கால தமிழகத்து இருப்பு, அங்கு நான் இயல்பாகவே பெறமுடிந்திருந்த இலக்கிய வாழ்வனுபவங்கள் இதன் காரண சாத்தியங்களாக முடியுமோ? இவ்வாறு எண்ணுகிறபோது என்னிடத்தில் பதில்கள் பிறந்தன. தமிழகத்தின் பரவலான இயங்கு தளத்தில் சுமார் இரண்டு தசாப்தங்களென்பது பெரிய காலம். அங்கு நான் தெரிந்துகொள்ளாத, உறவாடாத இலக்கியவாதிகள் இல்லையென்றே சொல்லவேண்டும். இது ஒரு பாதிப்பாக என்னுள் சிறுகச் சிறுக இறங்கியிருக்கிறது. இது சாதகமான அம்சமாகத் தொழிற்பட்ட அதேவேளை பாதகமாவும் தொழிற்பட்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமான அம்சம்.

அந்தப் பெரிய தளத்திலும், கால வெளியிலும் நான் வளர்ந்துகொண்டிருந்தபோதே என்னுள் ஒரு பகுதி தேய்ந்துகொண்டுமிருந்திருக்கிறது. ஓரளவினதேனும் என் இலக்கியார்த்தமான ஈழப் பண்பின் நசிப்பு இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. நான் ஈழ இலக்கியத்தைப் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கும்போதே அது ஒருபுறத்தில் அழுகிக்கொண்டுமிருக்க விட்டிருந்திருக்கிறேன். அது இப்போது யோசிக்கச் சுகமான விடயமில்லை. ஆனாலும் உண்மை அதுதான்.

கொண்ட இலக்கிய உறவுகளால் என் பார்வையும், எழுத்தும் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் குடும்ப சமூக உறவுகள் ஈழத்தவரோடாகவும், இலக்கிய ஊடாட்டங்கள் தமிழகத்தவரோடாகவும் இருந்ததில் இந்த நசிப்பை உணரவும் எனக்கு முடியாததாக அப்போது இருந்துவிட்டிருக்கிறது. இது சுகமான அறிதலில்லை. ஆனாலும் இந்த உண்மையை மறுப்பதற்கும் இல்லை. இது நிகழ்தல் தவிர்க்கப்பட முடியாதவொன்று. இந்த ஆசுவாசத்தோடு இவ் விசாரிப்பை தமிழகத்து இலக்கிய வாதிகள், இலக்கிய நண்பர்கள், அவர்களோடான என் ஊடாட்டம், அவர்களது தள இயங்குதல் முறை, இலக்கியக் கள உறவுகள், பிரதிகள், பிரதிவெளியீடுகள், சிற்றிதழ்கள் முக்கிய நிகழ்வுகள் என்று ஒரு தொகுப்பும் பகுப்புமாய் இவ் உரைக் கட்டை எனக்கே எனக்காகவே பிரதிபண்ணினும், இது என் இலக்கிய நண்பர்களுக்கானதும்தான்: என் வாசகர்களுக்கானதும்தான். ஏன்னை எப்படி நான் அறிந்துகொள்ள விழைகிறேனோ, அதுபோல் அவர்களும் படைப்பாளியாகிய என்னைப் புரிந்துகொள்ளல் நிகழவேண்டுமென்பது என் விருப்பம். இது அவசியமும்கூட. படைப்பாளி – வாசக உறவில் இது அவசியமேதான். ஒரு முள் குத்திய அனுபவம் ஒரு காடளவுக்குச் சமமாவது இவ்வண்ணமே நிகழ்கிறது. ஈழத்தில் எதார்த்தப் போக்கின் சிறு படைப்பாளியும், ஒரு பத்திரிகையாளனுமாகிய நான் , ஒரு நவீன யதார்த்தப்போக்கின் பங்காளியாக எப்படிப் பரிணமிக்க முடிந்தது என்பதை இந்த விசாரிப்புத் தெரிவுபடுத்தும். நவீன யதார்த்தம் குறித்தும், அதன் தத்துவார்த்த அமைவுகள் குறித்தும்கூட நாம் இங்கே பார்த்துக்கொள்ளவேண்டி நேரலாம். தற்கால ஈழ விமர்சனப் போக்கும் தவிர்க்கமுடியாதபடிக்கு இங்கு விசாரணையாகும்.

எனினும் இது இலக்கிய வம்பளப்புக்கானதல்ல என்பதை முதலிலேயே இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது என் சுயம் குறித்த மீள் பார்வை. என் கருத்தியலின் சிதைவும் புதிய கருத்தியலின் கட்டமைப்பும் பற்றியது.

எங்கேயிருந்து தொடங்கலாம்? 1984ஐ ஒரு புள்ளியாக்க விரும்புகிறேன். ஈழநாடு தேசிய தினசரியில் வேலை செய்த காலம் எனக்கு முக்கியமானது. அது இரண்டு காலகட்டங்களாய் அமைந்தது. இடையீடுகள் உற்றது. அது காரணமாக அங்கு நான் கற்றது மிகப் பெரிது இல்லையெனினும், என் பார்வை அகலிப்பும், அது காரணமாய் என் கனவுகளும் எழ அதுவே நிலைக்களனாய் இருந்திருக்கிறது. ஒரு சில இலக்கியக் கட்டுரைகள் என்றும், ஒரு பதினைந்து இருபது சிறுகதைகளென்றும் அக் காலத்தில்தான் நான் எழுதினேன். செய்தி, சிந்தாமணி, மல்லிகைகளிலும் ஈழநாட்டிலுமாய் அவை. என் மார்க்ஸீய வாசிப்பும் அப்போதுதான் ஆரம்பித்தது. இதனால் ரஷ்ய இலக்கியங்களின் மிகுந்த பரிச்சயக்காரனாக நான் இருந்தேன். புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் வாசித்திருப்பினும் ஒரு விமர்சனப் போக்கின்றி வெறும் யதார்த்தவகைப் படைப்பாளியாகவே என்னால் உருவாக முடிந்திருந்தது இதனால் விந்தையான விடயமல்லவென்றே தோன்றுகிறது. ஊரளப்பு என்றும், இலக்கிய வாசிப்பு என்றும், மார்க்ஸீய அரசியல் ஈடுபாடென்றும், வேலையென்றும் காலம் நகர்ந்துகொண்டிருந்த ஒரு பகுதியிலேதான் அந்த 1984 வந்தது.

நாடு விட்டோடியோரில் எவருக்குத்தான் காரணங்கள் இல்லை? உயிரச்சம் மிகப் பெரும்பான்மையானவரின் காரணமாக இருந்திருக்கிறது. தவிர்ந்தோரில் சிறிதாகவோ பெரிதாகவோ அரசியற் காரணங்கொண்டோர் இருக்கிறார்கள். அவர்களிலும் பலர் ஐரோப்பாவுக்கல்ல, பக்கத்து நாடான இந்தியாவுக்கே ஓடினார்கள். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின் ஏற்பட்ட ஒரு நிர்ப்பந்தத்தில் நானும் ஓடினேன். அதுவும் இந்தியாவுக்கே.

அந்த ஓட்டம் காலப்போக்கில் எப்படி ஒரு பெயர்ச்சியானதென்பது இப்போது நினைக்கவே மலைப்பாகவும், திகைப்பாகவம் இருக்கிறது.

புலப்பெயர்ச்சியென்பதென்ன? வெறுமனே ஒரு நாட்டில் சென்று வாழ்தல் புலப்பெயர்ச்சியாகிவிடுமா? தற்காலிகமாகச் சென்றவர் நிரந்தரமாக வாழ நேரிடினும் அந் நிலையர் ஆவரா? ஓரிடம் விட்டு ஓரிடம் புற்றரைகளின் தேடல் நிழித்தம் நதிக்கரைகளில் பெயர்ந்து திரிந்த நம் மூதாதையர் புலம்பெயர்ந்தவரா? புhரதி குறிப்பிட்ட கண்ணற்ற தீவுகளுக்குத் தொழில் நிமித்தம் சென்ற இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்தோரா? தமிழகத்திலிருந்து இலங்கை வந்து வெறும் மலைக் காட்டைத் தேயிலைக் காடாக்கிய இன்றைய மலைநாட்டுத் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களா?

தனிப்பட்ட அரசியல் காரணங்களாலான நாடு நீங்குதல்கள் புராதனமானவை. இவ்வாறான நாடு அகல்தல் பைபிளில் நடந்திருக்கிறது. இனம் மதம் மொழி சார்ந்து சிறுபான்மை பெரும்பான்மை என்ற பகுப்பு, நாடாளுமன்றங்களின் தோற்றத்துடனேயே உலக அரங்கில் சம்பவிக்கிறது. இவ்வாறாகவமைந்த ஒரு சிறுபான்மையினம் பேரினவாதத்தின் நெருக்குதல், அச்சம் காரணமாய் நாடு கடத்தலையே இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் புலப்பெயர்ச்சி என்றது. அரசியல் வன்முறையின் முழுத் தாக்கமும் அதிர்வும் இந்தப் புலப்பெயர்வு என்ற சொல்லில் இருக்கிறது. புலப்பெயர்ச்சியென்பதை வேரோடு பிடுங்கி வேறிடத்தில் எறியப்படுதலென மிக அழகாகச் சொல்வான் எமது ஈழத்துக் கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன். சென்று வாழும் நாட்டின் கலை கலாச்சாரங்களுக்கு முகங்கொடுத்து வாழத் தலைப்படும், தம் கலை கலாச்சாரங்களைப் பேணத் தலைப்படும் அனைவரும் இந்தப் பகுப்புக்குள் வருவர். இது மனநிலை சார்ந்தது எனறு புலம்பெயர்ந்தோருக்கு வரைவிலக்கணம் சொன்னார்கள் சில என் நண்பர்கள். அரசியல் தஞ்சம் என்பது ஒரு அரசியலறமான காலத்திலிருந்தே புலம்பெயர்வு என்ற பதத்தைத் தமிழ் பதிவுசெய்கிறதென்பது முக்கியமான விஷயம். குடவோலை உருட்டுதல் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. சோழர் காலத்தில் வளர்ந்திருந்தது. ஆனால் வாக்குரிமை முறை இருபதாம் நூற்றாண்டுக்கானது. இரண்டும் ஏறக்குறைய அர்த்தத்தில் ஒன்றேயெனினும் விதிகளால் வேறுபட்டது. அதுபோலவே நாடு கடத்தல்கள் பல்வேறு காலங்களிலும் இருந்தன. ஆனால் புலப்பெயர்வு இருபதாம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதர்மம் புலப்பெயர்வு.

ஆயிற்று. நான் புலம்பெயர்ந்தாயிற்று. இலக்கியத்தில் எனது இரண்டாம் கட்ட வாழ்வு தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது.


நன்றி: வைகறை, 2005

Thursday, February 21, 2008

ஒரு நாடகத்தின் உயிர்ப்பு


 பா.அ.ஜயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடக அளிக்கை குறித்து

-தேவகாந்தன்-


ஆனி மாதத்தின் 3ஆம் 4ஆம் தேதிகளில் யோர்க் வுட் நூலக தியேட்டரில் காட்சியாக்கப்பட்டது நாளை நாடக அரங்கப் பட்டறையின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’. சுமதி ரூபனின் உயிர்ப்பு நாடகப் பட்டறையினதும், மனவெளி நாடக அரங்கத்தினரதும் அளிக்கைகளில் குறிப்பிடக்கூடிய ஓரிரு நாடகங்களுக்குப் பிறகு மேடையேறியுள்ள ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ முக்கியமான நிகழ்வெனவே தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த பிரக்ஞையும், அதன் காரணமாய் மேடை அளிக்கைகளைத் தவற விட்டுவிடாத அனுபவங்களின் பின்னணியிலும்கூட இந் நாடகம் குறித்துச் சொல்ல நிறையவே உண்டு.

ஒரு நாடகத்தின் ஆதார சுருதியாயிருந்து அதன் வலிமை, வலிமையின்மைகளைத் தீர்மானிப்பது அதன் பிரதியாக்கமாகும். ப.அ.ஜயகரனின் முதல் வலிமை அதன் பிரதியாக்கத்தினூடாக வந்து சேர்கிறது. நாடகத்தைப் பார்த்த பிறகு அதன் பிரதியையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததன் மூலம் இந்த முடிவுக்கு என்னால் சுலபமாக வர முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் சிக்கனமாகப் பிரயோகிக்கப்பட்டு இப் பிரதி ஆக்கம் கண்டிருக்கிறது. சொல்களுக்கிடையிலான வெளி சிலசமயங்களில் அவற்றின் வீச்சுக் குறைந்த தருணங்களில் பார்வையாளனை அலுப்பேற்படுத்திவிடுகிற அபாயத்தை உண்டுபண்ணக் கூடிய சாத்தியமுண்டு. அந்த அபாயத்தை வலுவான சொற்கள், அதே நேரத்தில் எளிமையாய் வெளிவந்து கடந்துவிட்டிருக்கின்றன. பிரதியில் சொல்லாடலின் வலு அற்புதம். சுமார் ஒன்றரை மணி நேர நாடகம் அரை மணி நேரமான பிரக்ஞையைக்கூடக் கொண்டிருக்கவில்லையென்பது தரத்தின் அடையாளம்.

இயற்கையின் அழகை இவ்வளவு நெஞ்சுகொள்ளும் விதமாகப் பிரதியாக்கம் பெற்ற நாடகம் தமிழில் இல்லை. வசந்த காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில் நீர் வீழ்ச்சியின் ஒலி லயமும், பறவைகளின் கீதமும், இலை தளிர்களின் வர்ணங்களும் ஒளி ஒலியமைப்புகளாலன்றி வார்த்தைகளில் காட்சியாக்கப்பட்டிருப்பது இங்கே கவனிக்கப்படவேண்டியது. இயற்கை குறித்த லயம் பார்வையாளன் மனத்துள் இறங்கியது நிஜமாயே நடந்தது.

களத்தின் தேர்வுபோல் பாத்திரங்களின் தேர்வும் அளவாகவும், பொருத்தமாகவும் இருந்தன.

இளைஞனின் உரையாடலில் வரும் பதப் பிரயோகமும், பிரயோக விதமும் பார்வையாளரிடையே அதிருப்தியாயிருந்தன என்பதை நானறிவேன். அதைப் பின்னால் வரும் நிகழ்வுகளில் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்துவதின்மூலம் நாடகன் ஈடுகட்டிவிட்டதாகச் சொல்லமுடியும். ஆனாலும் நிகழ்த்துகையில் விழுந்துள்ள இந்த வலிமையீனத்தின் மூலங்களை ஓர் ஆழ்ந்த பரிசீலிப்பின்றி விட்டுவிடக்கூடாது. நெறியாளுநராகவும், பிரதியாக்ககாரராகவுமுள்ள ப.அ.ஜயகரனுக்கு இந்தப் பொறுப்பு மிகவும் அதிகமுண்டு.

மரணத்தை நாடி மலையுச்சி வரும் இளைஞன் அங்கே தான் எதிர்பார்த்த தனிமை அற்றுப்போயிருப்பதில் அதன் காரணமான முதியவர் மீது மிகுந்த கோபமுள்ளவனாகிறான். அறிமுகமற்ற ஒருவர்மீது, அவர் நேரடியாகப் பொறுப்பாக முடியாத ஒரு காரணத்தின்மீது அக் கோபம் அவ்வளவு வலிமையாகக் காட்டப்படவேண்டுமா என்பது கேள்விக்குரியது. நாடகனின் உணர்ச்சி வெளிப்பாட்டுத் தோல்வியாகக் கூடியது இந்த இடம். இந்த முரணை நாடகப் பனுவலிலுள்ள இப் பாத்திர பலஹீனத்தின் சிறு அடையாளமாக நான் காண்கிறேன். ஆனாலும் அது மிகுந்த பாதிப்பின்றி பின் பகுதிகள்மூலம் ஈடுகட்டப்பட்டதென்றே சொல்லவேண்டும்.

ஆய்வுக்காக மலையுச்சி வரும் இளமங்கைக்கு உணர்ச்சி வெளிப்படுத்தலுக்கான வெளி மிகமிகக் குறைவே. ஆயினும் அப் பாத்திரம் நிறைவளிப்பதாகவே அளிக்கை இருந்தது. நிகழ்த்துகையின் முடிவில் மனத்தில் சுமந்துகொண்டு பார்வையாளன் திரும்பும்படியிருந்த பாத்திரம் வனவிலாகா பாதுகாவலனாக ஒரு காலத்தில் இருந்த முதியவர்தான். இப் பாத்திரத்தில் நடித்த பி.ஜே.டிலிப்குமாரின் வெளிப்பாட்டுத் திறன் நாடகத்தில் உச்சமடைந்ததென்றாலும் மிகையான மதிப்பீடாக இருக்க முடியாது. நாடகன் பாத்திரமாக மாறிவிட்டிருந்த நிஜமே அங்கு நிகழ்ந்துவிட்டிருந்தது.

எவ்வளவு திருப்தியிருந்தபோதும், நாடகப் பனுவல் குறித்து அய்யங்களும் சுயவிளக்கங்களும் எழுந்துகொண்டேயிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. முதியவனின் சீன வயோதிபத் தோற்றம் எதையாவது முன்மொழிகிறதா? சீன உருவக் கட்டமைப்பு வெறும் காட்சி ரசனைக்கானது என்றால் சரியானதோ, ஏற்புடைத்தானதோ விளக்கமாகாது.

எனக்கு ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ என்ற சீனப் பழங்கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இது மா சே துங்கினால் பல தடவைகள் எடுத்துச் சொல்லப்பட்ட கதையுமாகும். மூடக் கிழவனென வந்திருந்தாலும், கிழவனது தன் வம்சத்தின்மீதும், மனித குலத்தின்மீதும் இருக்கும் நம்பிக்கை அழகாக விளக்கப்படும் கதை அது. தன் சமூகத்தின் சிரமத்தை துடைத்தெறிகிற மூர்க்கம் கிழவனது அந்த நம்பிக்கையில் மிளிரும். ‘ஒரு காலத்தின் உயிர்ப்’பிலும் ஒரு வகையான நம்பிக்கையே தொனிக்கிறது. வாழ்தலிலான நம்பிக்கை அது. சீனக் கிழவன் மாதிரியிலான இவ் வார்ப்பில் பிரதியாக்ககாரருக்கு இந்த எண்ணம் திட்டமிட்டதாய் இருந்ததா எனச் சொல்ல முடியாதெனினும், என் மனத்தில் கிளரும் உணர்வு இது சார்ந்ததுதான்.

மேலும், வெளி கடக்கும் நவீன பிரதியாக்கமாகவும் இதை ஒருவகையில் இனங்காண முடியும். வெவ்வேறிடங்களின் , நாடுகளின், பிரபஞ்சங்களின் பாத்திரங்களை ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து கதையை நிகழ்த்திக் காட்டும் உத்தி இது. கனடாவைக் களனாகக் கொண்டு, பல்லின கலாச்சாரத்தை மய்யப்படுத்துவதாகவும்கூட இதை அர்த்தம் படுத்திக்கொள்ளமுடியும். இது பார்வையாளனின் சிந்தனைக்கு விடப்பட்டுள்ள இடைவெளி.

இவ் வெளி சமீப கால பிரதியாக்கங்களில் காணக் கிடைக்காதது.

லூன் பறவை குறித்த விபரம் பனுவலில் மிக வன்மையானது. லூன் பறவை ஒரு நீர்த் தளத்தையே தனதாக்கிக்கொள்கிறது. மனிதனுக்கு அதுதான் வீடு. நாடெனவும் படிமப்படுத்த முடியும். தனக்கான இடத்தைச் சுவீகரித்துக்கொண்ட பின்னர், தன் வாழ்வின் துணையைத் தேடுகிறது அப் பறவை. துணையென்பது தனிமனித வாழ்வுக்கு எப்படியாயினும், மனித குலத்துக்கு ஆதாரமானது.

வாழ்விலிருந்தும், வாழ்தலிலிருந்தும் கிளர்பவையென நெருக்குதல்களை இரு கூறுகளாக வகுக்க இயலுமாயிருக்கிறது. இரண்டாவது வகையான நெருக்குதலை சமூகம், நாடு என்றும், உலகப் பொருளாதார மயப் படுத்தும் முயல்வுகள் காரணமாய் சர்வதேசம் சார்ந்து என்றும் எழுவதாகக் கொள்ளமுடியும். இந் நாடகப் பனுவல் வாழ்வு தழுவியெழும் நெருக்குலை முன்வைத்து தன் மரபான விழுமியத்தைச் சொல்லிச்செல்கிறது. வாழ்வின் நெருக்குதல்களுக்கு மரணம் வழியல்ல என்பதை, வயோதிபப் பாத்திரம் உணர்ந்திருக்கிறது. தற்கொலை செய்ய வரும் இளைஞனின் மனத்தை மாற்ற ஒத்திசைவு உத்தியையே பாத்திரம் பிரயோகிக்கிறது. மனம் மாறும் இளைஞன், இளம் யுவதி பிரசன்னமாகாவிடினும், வாழ்தலில் பற்றுறுதிகொள்ளல் நிச்சயம் நிகழ்ந்தேயிருக்கும்.

பெண் பாத்திரம் கொண்டுவரும் கடிதத்தின்மூலம் தெரியவரும் முதியவரின் காதல் வாழ்தலின் அறைகூவல்தான். அவர் வயதுக்கு அக் காதல் உடல் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அது அவ்வாறே சார்ந்திருப்பினும் அதிலொன்றுமில்லை. ஆனால் தன் காதலை நாடிச் செல்லப் புறப்படும் அந்த இறுதிநேரத்தில், லூன் பறவையின் கூவல் கிளர்கிறது, பறவைகள் கீதமிசைக்கின்றன, முதியவன் செலவழிந்து சிலையாகி கைக்கோலோடு நின்றுகொண்டிருக்கிறான். தன் ‘இடம்’ என்பது வாழ்தலின் அறுதியாகி நின்றதிர்கிறது. வார்த்தைகளற்று வெறும் ஒலியிலும், நெறியாள்கையிலும் இத்தனை அர்த்தங்களும் மௌனமாய் வெளிப்படுத்தப்படும்போது பார்வையாளன் பிரமித்துப்போகிறான். நாடகம் முடிவுறும்போது உறைவு கலைந்து அதிர்வு தொடங்குகிறது. நீண்டநேரத்துக்கு அது பார்வையாளனைவிட்டு விலகுவதில்லை.

கனடாத் தமிழ் நாடகப் போக்கின் உயிர்ப்பை இப்போது துல்லியமாய்த் தெரிகிறது இந்த நல்ல நாடகத்தின் மூலம்.

சரி, இது குறிப்பிடும்படியான நல்ல நாடகம் என்பதில் அபிப்பிராய பேதமில்லை. ஆனால் இது மிகச் சிறந்த நாடகமா? இல்லையெனில், சிறந்த பனுவல் கைவசப்பட்டிருந்தும், இதை ஒரு மிகச் சிறந்த நாடகமாகாமல் செய்ததெது?

ஒரு நவீன நாடகப் பனுவலானது, அதன் நிகழ்த்து முறைமையிலேயே ஆதாரம் கொண்டிருக்கிறது. ஒளி ஒலி அமைப்புகள், அரங்க நிர்மாணம் யாவும் ஒரு நவீன நாடக அளிக்கையில் பிரதானமானவை. ஒரு நவீன நாடகப் பிரதியை வெறும் நாடகமாக நீர்த்துப்போகச் செய்ய இவற்றால் முடியும். தொழில்நுட்பத்தின் சகல அனுகூலங்களும்தான் ஒரு நாடகத்தை நவீன நாடகமாக்குகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

முப்பக்க அரங்காக நடைபெறும் தெருக்கூத்தில்தான் நவீன தொழில் நுட்ப வசதிகள் உதாசீனிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் இவை தெருக்கூத்து வகையான நாடகங்களில் திட்டமிட்டே ஒதுக்கப்படுவதாகவும் சொல்லலாம். ஆனால் நவீன நாடகம் தனக்கான உத்திகள் பலவற்றையும் தொழில்நுட்பத்திலிருந்து பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். நீர்வீழ்ச்சியின் அவ்வப்போதான ஒலியிலிருந்தும், சொல்லாடலின் ஊடுகளிலிருந்தும்தான் அரங்கம் ஒரு மலையுச்சியென்பது பார்வையாளனுக்குக் காட்டப்படுகிறது. பிரத்தியட்சங்களில் இது வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அது விளைத்திருக்கக்கூடிய பாதிப்பு அளப்பரியதாயிருந்திருக்கும்.

ஒலி, ஒளி, அரங்க நிர்மாணம், ஒப்பனை ஆகிய முக்கிய விஷயங்களில் ஒப்பனை மட்டும் நன்றாகவிருந்தது என மட்டும்தான் சொல்லக்கூடியதாயிருந்தது. ஒளியமைப்பென்பது அரங்கின் நிகழ்வுகளைப் பார்வையாளன் பார்ப்பதற்காக ஒளியூட்டல் என்ற எண்ணம் முற்றாக மாற்றப்படவேண்டும். ஒளி காலங்களைக் காட்டக்கூடியது, இன்ப துன்பங்களையென்றும், இன்னும் பல்வேறினையும் உணர்வுகளிலேற்றக் கூடியது. மட்டுமில்லை. அது காலங்களை நகர்த்திக் காட்டக்கூடியதுமாகும். நம் தொழில்நுட்பக் கலைஞர்கள் இவை குறித்து நிறையவே இன்னும் அறியவேண்டியதிருக்கிறதுதான்.

நவீன உத்திகள் யாழ்ப்பாணம், கொழும்பு, தமிழ்நாட்டில்கூட அரங்கில் சம பங்கேற்கும் பல அரங்காடல்களை நான் கண்டிருக்கிறேன். ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடகத்தில் இவை உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன. திட்டமிடாமலேயாகக்கூட இருக்கலாம். இதைப் பாரிய குறையாக நான் காண்கிறேன். வுசதிகளில்லையென்று சமாதானம் சொல்லவேண்டாம். நிவர்த்திகள் செய்யப்பட்ட ஒரு நாடகத்துக்காக நாம் காத்திருப்போம். ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடகமும் பல்வேறு இடங்களில், பல்வேறு மேடைகளில் அரங்காடற் தகுதி வாய்ந்தது.

000
Thanks: WWW.PATHIVUKAL.COM, 2006

Monday, February 18, 2008

மரபு கலைத்தெழுந்து.....

மரபு கலைத்தெழுந்து
கவனமற்றுப்போன பிரதி

நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீடு
புலம்பெயர் புலத்தில் கவிதை பேசப்பட்ட அளவு சிறுகதையோ, நாவலோ பேசப்படவில்லையென்பது மிகவும் சரியான வார்த்தையென நினைக்கிறேன். கவிதை தனக்காக எடுத்துக்கொண்ட தீவிரத் தளம் அந்த நிலைமைக்கான காரணமாகவும் இருக்கலாம்.

‘கொரில்லா’வும் ‘வெள்ளாவி’யும் ஓரளவு நன்கு பேசப்பட்ட  நாவல்களேயெனினும், அத்துறையில் போதுமான ஆக்கங்கள் வெளிவந்தனவெனக் கூறமுடியாதே உள்ளது. புலம்பெயர் வாழ்வின் இயங்குநிலை சார்ந்த விஷயமாக இதைக் கொள்ள முடியும். இத்தகு இயங்குதளத்தில் உரைநடை சார்ந்து கருத்து வெளிப்பாட்டுக்கான வடிவமாக இருப்பது சிறுகதை. இருந்தும் வேற்றுப் புல வாழ்வின் அவதி, பிற பண்பாட்டுக் கலப்பின் முறைமைகள், ஏகாதிபத்தியப் பெருவெடுப்பில் இனங்கள், தொழிலாளர், பெண்கள், பாலியல் தொழிலாளர், ஒருபாலின கலவியாளர், குழந்தைகள் ஆகியோரின் நிலைமைகள் பேணப்படாமை, சுற்றுச் சூழல் மாசுப்பாடு, வனவழிப்பு என பெருகும் ஆகக்கூடிய கவலைகள்கூட எடுபொருளாகாதிருக்கின்றன.

மனிதன் பிறரைத் தின்று கொழுப்பதான வாழ்வியல் நிலை மாறி, தன்னையே மெல்லமெல்லத் தின்றுகொண்டிருப்பதான மிகவும் மோசமான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. எப்படி இவையெல்லாம் மறக்கப்பட முடிந்தன? ஒரு மாயையில்போல் மேற்கின் வாழ்வியலில் விழுந்துகிடக்கும் மக்கள்பற்றி ஒரு கவனமும் எழவில்லையா? இவையெல்லாம் படைப்பாக்கமாகாமல் போனமைக்கான காரணம் என்னவென்பது விசாரிக்கப்பட வேண்டிய கேள்வியேயெனினும், இங்கே அதை நான் செய்யப்போவதில்லை. இத்தகு சூழ்நிலைமையிலும் வெளிவரும் படைப்பொன்று கவனமற்றுப் போவது எதைக் காட்டுகிறது என்பதே எனது ஆதங்கம்.

மொழியின் மிக்க வீரியத்தோடும், பாசாங்குத் தனமற்ற வெளிப்பாட்டுத் திறனோடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் வெளிவந்திருக்கிற நூல்களில் முக்கியமானது நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு. இதன் வெளியீடும் கருத்தாடலும் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் அப்போதே நடந்திருந்தன. நூல் கிடைத்த உடனடியாகவே அதை நான் வாசித்திருந்தேன். அந்த மொழிநடையில் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டிருந்தது. அதுபற்றி எழுதவேண்டுமென்றிருந்தும், பல்வேறு காரணங்களால் அப்போது அது முடியாது போனது.

இப்போது மீண்டும் அந்நூலை வாசிக்க நேர்ந்தது. முன்னரைவிட அதிகமாக அது என்னை ஆகர்ஷித்திருக்கிறது. அதன் விளைவே எனது இந்த எழுத்து.

1) ஒரு பழம் தப்பிச்சிண்ணு 2) போட்டுவாறன் 3) சுணைக்கிது 4)பயந்தாங்கொள்ளி 5) கடுதாசிப்பூ 6) காதல் 7) அடி அடியாய் 8) கூட்டுக்கொலை 9) முதல்நாள் 10) மழை ஏன் வந்தது? 11) மாயமனிதன் 12) யாருடைய பிள்ளை? என பன்னிரண்டு சிறுகதைகள் இத் தொகுப்பில்.

பன்னிரண்டாவதை விட்டுவிடலாம். மீதி பதினொன்றிலும் முதல்கதை தன்னிலைக் கதையாய்த் துவங்க, மீதி சிலவற்றில் வெவ்வேறு
பாத்திரங்களும், சிலவற்றில் ஒரே பாத்திரமே திரும்பத் திரும்ப வருவதுமாய்க் கதைகள்.

இவை தனிக்கதைகளாய் இருக்கும் அதேவேளையில் ஒரு நாவலின் வடிவத்தை ஏறக்குறைய அடைவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கும். இதுதான் வடிவரீதியாக இதன் விசேஷம்.

இதிலுள்ள எந்தக் கதையாவது சிறுகதை வடிவத்தை அடைந்திருக்கிறதா என்றால் சிறப்பான பதிலொன்று வர நியாயமில்லை. ஆனால் அண்மைக்காலமாய் நம் தமிழ்ப் பரப்பில் விளங்கும் குதர்க்கமான கேள்விபோல் இங்கேயும் கேட்கப்பட முடியும்.

ஏன், இது சிறுகதையில்லையா? சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிப்பது யார்? விமர்சகனா, வாசகனா, படைப்பாளியா? மூன்று பக்க சின்னக் கதையை எழுதிவிட்டு சிறுகதையென்பாரும் நம்மிடையே இருக்கிறார்கள். முன்னூறு பக்கச் சிறுகதையையே தாகூர் எழுதவில்லையா என்று முப்பது பக்கச் சிறுகதையை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய கதையே சிறுகதை என எட்கார் ஆலன் போ கூறியதைச் சொல்லி சிறுகதை வடிவத்தை வரையறுப்பாரும் உண்டு.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மதிக்கப்படவேண்டும்தான். இலக்கணங்கள் இன்றி இலக்கிய வடிவங்கள் கணக்கிலெடுக்கப்படுதல் தவிர்க்கப்படவேண்டும்தான். ஆனாலும் மீறல்களுக்கும் இடமுண்டு என்பது நோக்கப்பட வேண்டும்.

இங்கே எப்போது இலக்கணம் மீறப்படலாமென்ற கேள்வி எழும்.

படைப்பின் வெளிப்பாட்டுக்கு வடிவ வெளி போதாமையாயிருக்கிறபோது மீறல் நியாயமானது என்பதுதான் அதன் பதில்.

நிரூபாவின் பல கதைகள் வடிவம் மீறியவை. அவற்றில் பல செழுமையற்றவையாயும் தோன்றும். ஆனால் அவற்றின் உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் பாத்திரத்தின் தன்மை போன்ற காரணங்களை வைத்துப் பார்க்கிறபோது அதுவே அதன் சரியான வெளிப்பாட்டு வழியாய் இருப்பதையும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு காட்டும்.

நம் வாசிப்பின் போதாமைகளை பிரதியின்மேலேற்றி கவனமழியவிடல் இலக்கிய நேர்மையாகாது. 2005 இல் வெளிவந்த இந்நூல் இதுவரையில் மிக்க கவனம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இது வந்த சுவடேயின்றி அடங்கிக் கிடக்கிறது.

ஒரு குழந்தையின் பார்வையில் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல்பு பார்க்கப்படுகிறது. இது எதனையும் விசாரணை செய்யவில்லை. ஒரு சமூக அமைப்பு இவ்வாறு இருக்கிறதென்று ஆதங்கப்படவுமில்லை. ஆனால் தான் தேர்ந்துகொண்ட களத்தை மிகத் துல்லியமான வார்த்தைகளால் பதிவாக்கியிருக்கிறது. இது நாவலின் வடிவத்தையும் ஒருவகையில் எடுத்திருக்கிறது என்றிருந்தேன் முன்பு. அப்போதும் அதன் மய்ய பாத்திரம் சமூகமாகவே இருக்கிறது. தன் புலமிழந்து வந்த ஒரு பறவையின் இறக்ககையடிப்பே இக்கதைகள் எனினும், இவை கலைத்துவமானவையாய் இருப்பதுதான் இவற்றின் சிறப்பு.

இவற்றின் வடிவம் சிறிது செழுமைப்படுத்தப்பட்டிருக்கலாமோ என ஒருபோது நான் எண்ணினேன்தான். ஆனால் பின்னர் யோசிக்கத்தான் தெரிந்தது, இதுவே இதன் சரியான வடிவம் என்பது. இதன் சில பகுதிகளின் விளக்கக் குறை அச்சாக்க முறைமைப் பிழையினால் நேர்ந்திருப்பதைச் சொல்லவேண்டும்.

எழுத்து, படைப்பு ஆகியவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள்போல்தான், நூல், பிரதி என்பனவற்றுக்கிடையேயும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. எழுதப்படுவனவெல்லாம் பிரதியாகிவிடுவதில்லை. பிரதி மொழியால் தாங்கப்படுவது என்பான் ரோலன் பார்த். ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு மொழியால் தாங்கப்பட்டிருக்கிறது. பேச்சு மொழியின் வலு அது. ஆனால் அது செம்மொழியின் வீறார்ந்தும் அவ்வப்போது வெளிப்பாடடையும்.

'மழை ஏன் வந்தது?' என்ற கதையில் ஒரு நாகம் வருகிறது. உருவமாக அல்ல, அருவமாக.

‘தீபாவிற்கு தலை சுற்றியது. நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தாள். அப்படியே விழுந்துவிடவேண்டும்போலிருந்தது. விழுந்தால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடுமென்றில்லை. சாகிற மாதிரி விழவேணும்.

‘ஆனால் கிணத்துக்குள்ள விழுந்தவுடன செத்துப்போவினம் எண்டில்லைத்தானே. ஆராவது காப்பாற்றீட்டா, கோதையக்காவ காப்பாத்தினமாதிரி? பழுத்து விழுந்த சில இலைகள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. எத்தனை நாட்களாய் மிதக்கின்றனவோ தெரியாது. பார்க்கப் பரிதாபமாகவே இருந்தன.

‘அவைகளைப் பார்க்கும்போது தானே மிதப்பதாக உணர்ந்தாள். இன்று வரப்போகும் இரவுபற்றியே சிந்தித்தாள். நாகம் இப்போது தலைக்குள் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது.’

மழை ஏன் வந்தது, சுணைக்கிது இரண்டு கதைகளும் சிறுபெண்களின்மீதான பாலியல் தாக்கங்களைக் காட்டும் கதைகள். ஆண்களின் வக்கிரம் பிடித்த பாலியல் எழுச்சிகள் எந்தமாதிரியெல்லாம் குழந்தைப் பெண்களில் பாய்கிறதென்பது இக்கதைகளில் அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

‘அந்த உருவம் இவ்வளவு விரைவாக ஓடி அப்பாவாகவோ, அண்ணாவாகவோ, மாமாவாகவோ மாறிவிட்டதே. அதுதான் எப்படியென்று அதிசயமாக இருந்தது தீபாவிற்கு.’

மழை ஏன் வந்தது கதையில் தீபா பிரலாபிப்பது கிராமம்தோறும் நகரம்தோறும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சுணைக்கிது கதை வேறொரு காட்சியைக் காட்டுகிறது.

‘கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்கு முன்…

“விடுங்கோ நித்தியண்ணை..விடுங்கோ…”

‘இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ! இது மோட்டுப் பிடி. இம்மியளவும் அசைய முடியவில்லை ஜீவியால்.

‘புன்னை மரத்திற்கு இடித்துப் பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை.

“விடடா. விடு. என்னை இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்னை விடு. நாயே.”

‘அவள் அழ அழ பூப்பூ யங்கியை கீழே விழுத்திவிட்டு றொக்கற் வேகத்தில் மசுக்குட்டி…’

என்று முடிகிறபோது எந்த மனதுதான்  பதறாமல் இருக்கும்?

‘சுணைக்கிது’ நூலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வாசிப்புப் பயிற்சி அவசியம். கடிதம் படிக்கத் தெரிந்த, கனடா வாரப் பத்திரிகளைப் படித்துப் பழக்கமான சுளுவோடு இதை வாசித்துப் புரிந்துவிட முடியாது. அல்லது ரமணிசந்திரன் மாதிரியான வாசிப்புப் பழக்கமும் உதவிசெய்யாது. இலக்கியம் தனி வாசிப்புக்கானது. அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியமான கூறுகள்.

நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் ஒரு நல்ல பிரதியை நாம் ஒதுக்கத்தில் போட்டுவிடக்கூடாதல்லவா?

‘சுணைக்கிது’ அண்மையில் தமிழில் வெளிவந்த முக்கியமான வாசிப்புக்குரிய நூல். புலம்பெயர் சூழலிலும், ஈழத் தமிழிலக்கியமாயும் இது கவனம்பெற வேண்டியதாகும்.

00000

தாய்வீடு. 2007

Sunday, February 10, 2008

பின்னல் பையன் 2

தேவகாந்தன்


முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சூழலில் கவிந்துவந்த குளிருக்கு அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை.

கண்களை மூடி,  உடம்பை உளைவெடுத்து முறுகிக்கொண்டு கிடக்க விழித்த அவன்,  'இன்னும் விடியவில்லையா ? ' என்று கேட்டான் கோணல்மாணல் குரலில்.

அவள் இல்லையென்றாள் .

அவன் அவளின் நெஞ்சுகள் உறுத்தும்படி இறுக அணைத்து காற்று ஊடறுக்கா நெருக்கமடைந்தான்.

ஆசைகளும் துடித்தெழாமல், தூக்கமும் வராமல் ஒரு புதிய சூழ்நிலைமையை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க, வெளியில் கிளரும் மெல்லிய பேச்சரவங்கள், நடையொலிகள் செவியில் விழுந்தன. குழந்தையொன்று பசித்தழுதது. பசுக் கன்றுகள் ஆட்டுக் குட்டிகள் கட்டில் நின்று தாய் முலை தேடித் தவித்துக் கத்தின. கோழிகள் கூவாமலே கூரையில் குதித்திறங்கி கொக்...கொக்...கொக்கென்று புறுபுறுத்தபடி இரை தேடின.

அவன் குழம்பியவனாய் எழுந்து வெளியே வந்தான். கூட அவளும்.

அப்படி ஓர் அப்பிய இருட்டை தம் வாழ்நாளில் பார்த்திராத அவர்கள், பக்கத்தில் எதிரில் உள்ள வீடுகளில் மனிதர்கள் எழுந்துவிட்டிருந்தும் இன்னும் விடிவிளக்குகள் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் மேவிப்போனார்கள்.

நடு நிசியின் மேல் காலம் நகரவில்லையா ?

எல்லோருக்கும் அதிசயம்.

எவரும் நித்திரையில்லை. இருந்தும் கிழக்கில் ஒரு கீற்று  வெளிச்சமுமில்லை.

ஒரு பயம் கவிந்துவந்து பின் ஆச்சரியமாய் மாறியது. நேரமாக ஆக குதூகலமாய் ஆயிற்று.

சூரியன் தோன்றாத விந்தையில் சிறுவர்களின் இயல்பான கலகலப்பு பன்மடங்கு பெருகிப்போனது.

வெளியே வந்து முற்றத்தில் நின்றவன் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்கள் செத்த மயான பூமியாகக்கிடந்தது அது .

அவன் வீதிக்கு வந்தான்.

மனிதர்கள் போயும் வந்தும், நின்று பேசியும் கொண்டிருந்தார்கள். காலம் மண்ணுள் புதைந்த கர்ண ரதம்போல் எதிலோ கொளுவிக்கொண்டு நகராதுவிட்டிருப்பதுபற்றி எங்கும் பேச்சாயிற்று.

காலத்தைச் சில்லெடுப்பது எப்படியென்று ஆங்காங்கே ஆலோசனைகள்.

அவன் அவளை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு வீதியில் நடந்து வெகு தூரம் போய்வந்தான்.

எங்கும் இருள். ஆனாலும் ஒரு விழாக் காலக் கொண்டாட்டம் எங்கும் பிரவாகித்துக்கொண்டிருப்பதையே கண்டான்.

அவன் அவளைக் கட்டிக்கொண்டு கடகடவெனச் சிரித்தான். 'காலம் நின்றுவிட்டதடி. இனி பகலில்லை. எப்போதும் இரவுதான். எமக்கு ஜீவபரியந்தம் காமோத்சவம் 'என்று கிசுகிசுத்தான்.

அவள் நாணினாள்.

அவன் 'வா 'வென்று உள்ளே நகர்ந்தான். அவள் , 'பொறுங்கள் ' என்று ஒரு நெடிய சிந்தனையில் நின்றுவிட்டு பின் கேட்டாள்: 'ஒளி , இருள் என்பது எதிரிணை எனப்படுகிறது. ஒளியின் இன்மை இருளா ? இருளென்பது ஒளிபோல் ஒன்றா ? இதற்குத் தனி இயக்கம் உண்டா ? இல்லையாயின் இவற்றை எதிரிணை எனல் எங்ஙனம் சரியாகும் ? '

'உன் தத்துவ விசாரிப்பை எங்கேயாவது கொண்டுபோய்க் கொட்டு. இது தத்துவ விசாரத்துக்கான காலமில்லை. காலமே இல்லாத காலம். காலமில்லையேல் நாளையில்லை. வளர்ச்சியில்லை. மூப்பில்லை. மரணமில்லை. எதுவுமில்லை. '

அவனது களிப் பேச்சு அர்த்தமில்லாதது என்பதை அவள் புரிந்தாள்.அதை அவனுக்கு  புரியவைக்க அவளுக்கு சில ஆதாரங்கள் தேவைப்பட்டன. காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவன், ' பசிக்கிறது. ஏதாவது உணவு தயார்செய்யேன் 'என்றான்.

'பசியின்மையிலிருந்து பசியாவது காலத்தின் நகர்ச்சியல்லவா ? '

அவளது ஞானத்தில் அவன் அதிர்ச்சியடைந்தாலும் அதை விளங்கிக்கொண்டும் ஒப்புக்கொண்டும் சொன்னான்: 'மெய்தான். பசி வருமெனில் மூப்பு வரும், மரணம் வரும். அதுபோல் ஜனனமும் . '

'மட்டுமில்லை. எதனொன்றின் இயக்கமிருந்தாலும் காலம் நின்றிருக்கவில்லையென்று தெரியமுடியும். காலம் நின்றால் என்னால் கதைக்க முடியாது. நான் கதைத்தால் காலத்தால் நிற்கமுடியாது. எல்லாவற்றின் தப்பிதங்களுமே காலம் நின்றதன் அடியாளமாகும் ' என்றாள்.
பின் சென்று உணவு தயாரித்தாள்.

எங்கும் அதுபோலவே அவசியங்களின் நிறைவேற்றுகை. மக்கள் குளித்தார்கள், சாப்பிட்டார்கள், உரையாடினார்கள். அன்றைக்கு எப்போது தூங்கச் செல்லலாமென்று தெரியாதிருந்தது. ஆனால் ஒரு பொழுதில் மினுக்கிக்கொண்டு நட்சத்திரங்கள் சுடர்விடலாயின. அப்போது அந்தப் பிரச்னை தானாக நீங்கிப் போயிற்று.

மிக உச்சகட்ட இன்பங்கள் அன்று அடையப்பட்டன.

000

காலம் இரவாய் நகர்ச்சிபெற மிருக பராமரிப்பு,  விவசாயம், உழைப்பு யாவும்
சிரமமான காரியங்களென்று மெல்லத் தெரியலாயிற்று. நிலவும் சில நாட்களில் வரலாம். அதனாலும் பெரிய மாற்றமெதுவும் நிகழ்ந்துவிடாதென்று தெரிந்தது.

அவர்களை ஒரு பயம் மெல்லக் கெளவலாயிற்று. சூரியனின்றி வாழ்ந்துவிட முடியாதென்று சர்வ நிச்சயம்  அடைந்தவர்களால் ஆகக்கூடிச் செய்யக்கூடியதாய் இருந்தது சர்வ வல்லமையுள்ள ஒரு மூலப் பொருளை வேண்டுவதொன்றாகவே இருந்தது.

ஆயினும் இன்னும் இருள் விலகினபாடாயில்லை.

நாட்டில் வறுமை மெல்லத் தலைகாட்டத் துவங்கிற்று. பசியின் குரல்கள் எழுந்தன. இருள்களில் நோய்களும் பெருகின. மரணங்கள் மிக மோசமான தருணங்களில் எவராலும் கவனிக்கப்படாதிருந்தன . நாடு பிணக் காடாவதின் துவக்கச் சுவடுகளைத் தாங்கலாயிற்று.

அப்போது மரணங்கள் குளிரின் அவத்தையினாலும்.

வீதியில் மனித நடமாட்டங்கள் அருகி வந்தன.

நட்சத்திரங்கள் தோன்ற தூங்கி, அது மறைய எழும் ஒவ்வொரு வேளையிலும் விடியலை, சூரியனைத் தேடி அனைவர் கண்களும் கீழ்த் திசையை நோக்கிப் பரம்புவது இயல்பாயிற்று. இருளின் நீக்கமற்ற தரிசனம் அவர்களை மேலும் மேலுமான துக்கத்தில் ஆழ்த்தியது.

கலகலப்பு , ஆரவாரம் அனைத்தும் மறைந்தும் மறந்தும் போயின.

அப்படியான ஒருவேளையில் திடீரென மின்னல்போல் ஒரு வெளிச்சம்.

மின்னல்  அடித்து மறையும். இதுவோ வளர்ந்துகொண்டு வந்தது.

எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடினார்கள்.

தொலைவில், முடுக்குகளுக்கு அப்பாலிருந்து, சூரியன் விடியலில் கதிர் விரிக்கிற மாதிரியில் ஒரு வெளிச்சப் பரவலைக் கண்டார்கள். அது மெல்ல மெல்ல ஒரு நிதானமான நடையின் வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருந்தது.

அனைவரது ஆவலும் அதிகரித்தது.

வெளிச்சம் கிட்டவரக் கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள்.

யெளவனத்தின் முதற் படியில் நிற்கிற பிராயத்தினனான ஒரு பையன் கதிர் ஆடையொன்றைத் தோளில் போட்டபடி நடந்து வந்துகொண்டிருந்தான்.

முதிசுகளெல்லாம் பரவசப்பட்டனபோல் நின்றுகொண்டிருந்தன. அவர்கள் நிறைய நிறைய தேவதைக் கதைகள் அறிந்தவர்கள். பறக்கும் குதிரையில் விண்வழி வந்த ராஜன், சந்திரிகாபுர இளவரசியைக் கண்டு காதல்கொண்டு அவள் பெற்றோருக்குத் தெரியாமல் அவளை ஒரு பூவாக்கி எடுத்துக்கொண்டு பறந்துபோன கதையெல்லாம் தெரிந்தவர்கள். அதுபோன்ற ஒன்றின் நிஜம் அவர்களது பேச்சையே கட்டிப்போட்டுவிட்டிருந்தது.

அவன் அவர்களைக் கடந்துசென்ற பின்தான் பிரமை கலைந்தார்கள்.அவன் அப்படியே சென்று மறைந்துவிடுவதன் முன்னம் பின்னால் விரைந்தனர். 'தம்பி....ஏய் தம்பி...! ' என்று கூவினார்கள்.

அவன் அவர்களுக்காய்த் தாமதிக்காமல் நடக்க, பின்னரும் அழைத்தனர்.

அவன் நின்றான்.

திரும்பினான்.

சிரிப்பு மறந்த முகம். ஆனாலும் கவிந்திருந்தது சோகமுமில்லை. நெடு வழி நடந்த களைப்பு இருந்தது. கூட லேசான ஒரு எரிச்சல். அவன் , 'என்ன ? 'என்றான்.

'யார் நீ ? '

'பின்னல் பையன். '

'இந்த உலகம் வாழ வெப்பம் வேண்டும்; ஒளி வேண்டும். சூரியன் மரணித்துப் போனான்போலும். சிறிது வெப்பமும், சிறிது வெளிச்சமும் தர ஒரு சின்னச் சூரியனாவது வேண்டும். அந்தப் போர்வையை எங்களுக்குத் தருவாயா ? '

அவன் அசட்டையாகச் சிரித்துவிட்டு சோம்பலுடன் அப்பால் நடந்தான்.

அவர்கள் பின்னால் நடந்தனர். நெருங்க முடிந்த ஓர் எல்லையை நெருங்கிப் போய்க்கொண்டு, ' தயவுசெய்து அந்தப் போர்வையைக் கொடுத்துவிட்டுப் போ.  நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் ' என்று மன்றாடினார்கள்.

'பயித்தியக்காரர்களே, இதை நான் கொடுத்தாலும் எரிந்து அப்படியே சாம்பராகித்தான் போவீர்கள். மந்திரிக்கு நேர்ந்த கதை அறியீரோ ? 'என்று சொல்லிக்கொண்டே அப்பால் நடந்து போனான்.

அவர்கள் சட்டென நின்றார்கள். எரிந்து போக யார் பிரியப்படக் கூடும் ? அவர்கள் பார்த்துக்கொண்டே இருக்க அவன் அப்படியே நடந்து முடுக்கில் திரும்பி மறைந்தான்.

நேரே நடந்துகொண்டிருந்தவன் , பரந்த ஆல் ஒன்று எதிர்ப்பட அதன் கீழ்ச் சென்று அமர்ந்தான்.

மரத்துக் குருவிகளெல்லாம் கிளுகிளுத்தும் கீச்சிட்டும் கிரீச்சிட்டும் பறந்தடித்தன.

000

மிக்க அமானுஷ்யமான திறமையொன்று அவன் தாயின் மூலமாக அவனுக்குக் கிடைத்திருந்தது. அவளும் இறந்து அவன் அனாதையான பின் வேலைசெய்து ஜீவிக்க நேரிட்ட தருணத்தில் , தாய் அவனுக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பின்னற் கலை அவனுக்குக் கை கொடுத்தது. இளவரசிக்கு கூந்தல் பின்னிவிடும் வேலையாளாக அவன் அமர்த்தப்பட்டான். அந்தளவு வறுமையில் வாடியவன் அரண்மனை வந்ததில் நியாயமாகப் பார்த்தால் மிகப் பெரிய சந்தோசத்தை அடைந்திருக்க வேண்டும். அவனோ சிரிக்க மறந்தவன் போல், முகவிலாசத்தைப் பறிகொடுத்தவன்போல்  வழமைபோலவே இருந்துகொண்டிருந்தான். ஒருவேளை அந்த முசுட்டுத் தனமேகூட அந்த வேலை அவனுக்குக் கிடைக்க காரணமாய் அமைந்திருக்கலாம்.

அரசன் நகரிலில்லாத சமயம்.பின்னல் பையனின் திறமையில் மனதைப் பறிகொடுத்திருந்த இளவரசி , தன் மீஅன்பை வெளிப்படுத்திய சமயத்தில், அதையும் ஒரு கடமைபோல் மெளனமாய் அவன் ஏற்றுக்கொள்ளவே  நேர்கிறது.

இது மந்திரிக்குத் தெரிய வர அவனை உடனடியாக இருட் சிறைக்குள் போட்டுவைக்க  உத்தரவிடுகிறான்.

இருட்சிறைக்குள் இரவு பகல் அறியாது தடுமாறிய பின்னல் பையன், சிறைக் கூரையிலுள்ள துவாரத்தின் வழி சூரியக் கதிர்கள் புகுவதைக் காண்கிறான். அற்புத கைவண்ணம் கொண்ட அவன், கதிரினை நூலாய் எடுத்து பின்னத் துவங்குகிறான். பெரும் போர்வையொன்று விரிகிறது நாளடைவில்.

போர்வை முடிய அங்கே வரும் மந்திரிமேல் கொத கொதவென இருந்த போர்வையைத் தூக்கி வீசுகிறான் பின்னல் பையன். மந்திரி எரிந்து சாம்பலாகிறான். இது கண்டவர்கள் வெருண்டோட, சூரியக் கதிர்ப் போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நோக்கமெதுவுமின்றி விழி பட்ட பாதையில் அவன் நடக்க ஆரம்பிக்கிறான்.

000

ஒருசில நாட்கள் அவனுமே பகல் இரவு அறியா இருட்சிறையில் வாடியவன். மனித குலத்தின் அந்த இருட்புவி வாழ்வினது அவலத்தை அவனால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மன்றாட்டம் மீண்டும் மீண்டும் காதில் வந்து ஒலித்தது. அவன் மந்திரியைக் கொல்லலாம்; இளவரசியைக்கூடக் கொல்லலாம்; ஆனால் அவர்களை சிறிதளவுகூட வதைத்துவிடக் கூடாது.

யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னல் பையன் போர்வையைத் தோளிலிருந்து எடுத்து இழை இழையாய்க் குலைக்க ஆரம்பித்தான்.

போர்வை முடிந்து அவன் எழும்பினான்.

வானத்தில் சூரியன் ஒரு சிறு வட்டமாய் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.

பிரபஞ்சம் வெளிச்சக் காடாய்க் கிடந்தது.

(முற்றும்)


திண்ணையில் தேவகாந்தன்
Saturday December 7, 2002

சமூகமும் கலையும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரைக்கான எதிர்வினை

-தேவகாந்தன்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரையானபடியாலேயே சிவாஜி படம் குறித்த வைகறையில்  வெளிவந்த  மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு இந்த எதிர்வினையை எழுதவேண்டி நேர்ந்தது. நான் சிவாஜி படம் இதுவரை பாரக்கவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து வெகுகாலம். பார்த்த சிலவும் புலம்பெயர்ந்தவர் படங்களே. சிவாஜி படத்தைப் பார்க்காமலேகூட பாண்டியனின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினையை எவராலும் ஆற்றிவிட முடியும். ஏனெனில் அது சமூகமும் சினிமாவும் என்ற தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கட்டுரை.

சிவாஜி படம் பார்த்ததில் மிகவும் பரவசப்பட்டுப்போய் பாண்டியன் எழுதியிருக்கிற கட்டுரை அது. ஏதோ, ரஜினி கோயில் வீதியில் அல்லது தெருவில் கூத்தோ தெருநாடகமோ போட்டமாதிரியும், அதை மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரசித்த மாதிரியும் அளந்துகொட்டியிருக்கிறார். சொல்லப்போனால் அதை ஷங்கர் படம் என்றுகூடச் சொல்லலாம். இன்னும் ஏவிஎம்’மின் படம் என்று சொன்னாலும் தகும்.

இதற்கெல்லாம் ஒரு எதிர்வினையை ஆற்றவேண்டியது துரதிர்ஷ்டமேயானாலும், இதுமாதிரிக் கட்டுரைகளும், இதுமாதிரி மொழிபெயர்ப்பு முயற்சிகளும், இதுமாதிரிப் பிரசுரமேடைகளும் அமைந்துவிடாதிருக்கும் ஒரு மேல்நடவடிக்கை முயற்சியாக இதைச் செய்யவேண்டி நேர்ந்துள்ளது. தோமஸ் அல்வா எடிசன்கூட மக்களை யதேச்சாரப் போக்கிலிருந்து காப்பாற்றவே அல்லது திசைதிருப்பவே திரைப்படக் கமராவைக் கண்டுபிடித்தார் என்று பாண்டியன் சொல்லாத வகையில், இதைச் செய்யமுடிவது பெரிய ஆறுதல்தான்.

சந்திரபாபு, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் , கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று எல்லோரும் தமாஸ் பண்ணிவிட்டுப்போக, ரஜினி வந்துதான் மக்களை சிரிப்பில் ஆழ்த்தி அவர்களுடைய ரென்ஷனைக் குறைத்துப்போகிறார். ஒரு படத்தின் சினிமாத் தனங்களை எடுத்து விமர்சித்திருந்தால் அக் கட்டுரை அதனளவிலாவது மதிப்புப்பெற்றிருக்கும். அதைவிட்டுவிட்டு ஏதோவெல்லாம் எழுதி… ரஜினியின் அரசியல் சக்திபற்றிய கதைவேறு.

ஒரு சினிமாவின் வெற்றியின் பின்னால் தொழிற்படும் வியாபார உத்திகள், ஒரு நடிகன் தன்னை தன் சமூகத்தில் ரசிகர்மன்றங்கள் மூலம் கட்டமைத்து தக்கவைத்திருக்கும் வித்தைகள் எவரும் அறிந்ததுதான். சிவாஜி படத்துக்கு ஒரு ரிக்கற் மிகக்கூடுதலான பட்சமாக 500 ரூபா விலைபோயிருக்கிறது என அறியமுடிகிறது. குறிப்பிட்ட அல்லது எதிர்பார்த்த தினத்துக்கு மேலாக வாரங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்டும் ஒரு தருணம் பார்த்து வந்திருக்கிறது, இதோ வருகிறார், இதோ வருகிறார் பராக்! பராக்! என்கிற பாணியில். இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா. வியாபாரத்தனத்தின் மேலான கோடுகளை அதன் தயாரிப்பான ஜெமினியில் முன்பு பார்க்க முடிந்தது. இப்போது சிவாஜியில். இது உச்சம். பல கோடிகளுக்கான உச்சம்.

ஏவிஎம்’மின் மகத்தான திட்டமிடல் திறமை, வியாபார தந்திரங்களைக் கணக்கிலெடுக்காமல் அதை மொண்ணைத்தனமாய் ரஜினி படமென்றும் வெற்றிமேல் வெற்றியென்றும் பரணிபாடி வந்திருக்கிறது பாண்டியனின் எழுத்து.

ஒரு சமூகத்தின் கலை ஆர்வம் அவசியமானது என்பதில் எனக்கு மறுதலிப்பான கருத்தில்லை. காலகாலமாக, கலை மனித சமுதாயத்தின் மீது செலுத்திவரும் செல்வாக்கு நயமாக அறியப்பட்டேயிருக்கிறது. கோயில்களில் இசை, நடனம் என்பவை வளர்ந்த வரலாறெல்லாம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. அங்கேயுள்ள காமம் ததும்பும் சிலைகளின் நிர்மாணம்கூட ஒரு வடிகாலின் அக்கறைக் கண்கொண்டே பார்க்கப்பட்டிருக்கின்றன.

நசிவுச் சினிமாக் கலாசாரம் தமிழகத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது குறித்து சமூக அக்கறையுள்ளோர் எல்லாரும் விசனப்பட்டிருக்கையில், ரஜினி படத்துக்கு கூடிய இளைஞர் தொகையை, பாலாபிஷேகம் செய்தவர் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணிப் பிரமிக்கிறார் பாண்டியன். ஒரு சினிமாவை ஒரு நடிகருடையதாக்கியிடும் தமிழகக் கலா சீரழிவை பாண்டியன் பிரதிபலிப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஒரு
வெய்யிலும் , ஒரு பருத்திவீரனும் சமீபத்திய சினிமா உலகில் கண்ட வெற்றிகள் குறித்து ஒரு நம்பிக்கை ஏற்படுகிற சமயத்தில், பாண்டியன் எழுதுகிறார் ‘பலே ரஜினி’ என்று. இதை எங்கே போய்ச் சொல்லி தலையை முட்டிக்கொள்ள? வெய்யிலும், பருத்திவீரனும்கூட அவையவைக்கான குறைபாடுகளைக் கொண்டிருப்பவைதான். பருத்திவீரனில் இன்னும் கூடுதலான கருத்தியல் அம்சங்களின் குறைபாடு இருக்கிறதுதான். ஆனாலும் அவை சினிமா என்கிற கண்ணோட்டத்தில் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியவையே.

சிவாஜி படம் நல்லதாய்க்கூட இருக்கலாம். அது இங்கு பிரச்சினையே இல்லை. ஒரு படத்தின் அறுதியான வெற்றியாக பாண்டியன் எதைக் கொள்கிறார் என்பதுதான் கேள்விக்குரியதாகிறது. குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த நாடு அது. ரஜினிக்கு பாலாபிஷேகம்… சுண்டைக்காய். தளபதி படம் வெளிவந்தபோது படம் துவங்க திரை மேடையிலேறி கற்பூர ஆராதனை காட்டியவர்கள் அந்த ரசிகர்கள். பாண்டியன் அதை மறந்தது விந்தை.

ஆண்டுக்கு சுமார் ஐந்நூறு படங்கள் வெளிவரும் ஒரு நாட்டில்தான் எழுபதுகளில் எமேர்ஜென்சி வந்து நாட்டின் சுதந்திரத் தன்மைகளை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சென்றது. இந்திரா காந்தி படம் பார்ப்பதில்லையென்று சொல்வீர்களா, அல்லது ரஜினி அப்போது படங்களில் நடிக்கவில்லையென்று சொல்வீர்களா? எல்லாம் எப்படி சார் மறந்தீங்க?

ஒருவர் சறுக்கிவிடலாம். பாதகமில்லை. இப்படியொரு சறுக்கல் … கூடவே கூடாது.

(2006 ‘வைகறை’யில் வெளிவந்தது)

Saturday, February 09, 2008

படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்


படைப்பினூடாக படைப்பாளியை  அறிதல் :
மு.த.வின்  படைப்புக்கள்   குறித்து 


ஈழத் தமிழிலக்கியத்தில் மு.த. என அழைக்கப்படும் மு.தளையசிங்கத்தின் இடம் நாற்பதாண்டுகளின் முன்னாலேயே வாசகப் பரப்பில் நிர்மாணம் பெற்றுவிட்டது. ஆனாலும் அது ஈழத்து இலக்கிய வரலாற்றில் போதுமான அளவு பதிவாகவில்லையென்பது தீவிர இலக்கிய வாசகர்களிடையே கடந்த சில பத்தாண்டுகளாக நிலவி வரும் மனக்குறையாகும். ஒருவகையில் மு.த.வின் பெயர் ஓர் இருட்டடிப்புக்கு உள்ளாகும் நிலைமையையும் அடைந்து கொண்டிருப்பதாய் அவர்கள் கருதினார்கள். இதற்கெதிரான முன்முயற்சிகள் சிறுபத்திரிகைகள் அளவிலேயே முதன்முதலில்  மேற்கொள்ளப்பட்டன.

‘அலை’ பத்திரிகை இதை பலதடவைகளில் முன்மொழிந்திருக்கிறது. அதன் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவரான அ.யேசுராசா காட்டிய அக்கறை இவ்விஷயத்தில் முக்கியமானது. இவரே மு.த.வின் எழுத்துக்களை முதன்முதலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். அதன் உடனடியாக சுந்தர ராமசாமியும் மு.த.வின் எழுத்தாளுமை குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அது அவர் ஆசிரியராக இருந்த காலாண்டிதழ்க் ‘காலச் சுவடு’ இதழில் வந்தது என ஞாபகம். அது ஒரு தனி பிரசுரமாக  பின்னால் வெளியிடப்பட்டது.

ஒரு வரலாற்றுத்  திசை மாறற் காலகட்டத்தில் அதற்கு உந்துவிசை தரக்கூடிய எழுத்துக்கள் போற்றப்படுவதும், வளர்க்கப்படுவதும் அவசியமான காரியங்களே. இடதுசாரி அரசியல் இயக்கத்தின் ஒரு முன்னணிப் போராளியாக முற்போக்கு இலக்கியம் வளர்ந்ததின் தாற்பரியம் இதுதான். பேராசிரியர்கள் கா.சிவத்தம்பியும், க.கைலாசபதியும் அதன் விமர்சனப் பிதாமகர்களாய் இருந்தார்கள் என்பதுதான் இக் காலகட்டத்திய விஷேசம். அவர்கள் முற்போக்குச் சார்ந்த எழுத்தாளர்களைத் தூக்கலாகப் பேசினார்களே தவிர, அத் தளத்திலிருந்து விடுபட்டிருந்த அல்லது மாறான படைப்பாளிகளை முற்றுமுழுதாய்ப் புறக்கணித்தார்கள் என்பது விசாரணைக்குரிய விவகாரம்.

இன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி மீது எஸ்.பொன்னுத்துரை சாட்டும் தன்னை முற்றுமுழுதாக அவர் புறக்கணித்தார் என்ற அபவாதம் உண்மையற்றது என்பதே எனது கருத்து. எஸ்.பொ. இக் குற்றச்சாட்டினைத் தெரிவித்த அக் குறிப்பிட்ட நேர்காணல் ஒரு சஞ்சிகையில் வெளிவந்ததன் பின்னர், உடனடியாகவே ஒரு தேடலில் இறங்கியபோது, அவர் மீதான மதிப்புவாய்ந்த என் மதிப்பீட்டளவுக்கு கா.சிவத்தம்பியும் கூறிவிட்டிருந்ததை அறிய முடிந்தது. மு.த. விஷயத்திலும் இது உண்மையே. ஆனாலும் மு.த.வின் படைப்பாளுமைக்கு மேலான விஷயங்களிலும் அவரது மேன்மையை நிலைநாட்ட வருமிடங்களில் முரண்களே எஞ்சும்.

மு.த.வின் படைப்பாளுமை தமிழ்நாட்டில் தெரிய வந்த எண்பதுகளின் ஆரம்பத்தில், அது இன்னொரு படைப்பாளியான சுந்தர ராமசாமி மூலமாகவே வெளிவர முடிந்திருந்தது. அது ஒரு சரியான அணுகுமுறையும்தான். ஆனால் இரண்டாமாயிரத்தின் முதல் தசாப்தத்தின் முற்பகுதியில் ஊட்டியில் மு.த.வின் படைப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றபோது அதில் வெளியிடப்பெற்ற கருத்துக்கள், சுந்தர ராமசாமி வெளியிட்ட கருத்துக்களின் அணுகுமுறை சார்ந்ததாய் இருக்கவில்லை.

2002இல் இக் கருத்தரங்கு நடைபெற்றபோதுதான் ராஜநாயஹத்துக்கும் கருத்தரங்கு அமைப்பாளர்களுக்கும் இடையே நடைமுறை குறித்தான பிரச்சினை தோன்றியது. இணைய தளங்களில் அது குறித்த விவாதங்கள் நடந்தன. ஒருவகையில் நான் எழுதிய கட்டுரையொன்று அவ்விவாதங்களின் முடிவுப் புள்ளியானதெனினும், சில நண்பர்களை நான் இழக்க நேர்ந்ததின் காரணமாயும்  அது  அமைந்தது. கருத்தரங்கின் நடைமுறை ஒழுங்கு குறித்தே ராஜநாயஹத்துக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே முரண் தோன்றியிருப்பினும், விவாதம் வேறு தளத்துக்கு நகர்ந்தது துர்ப்பாக்கியம். அதை அப்போது காலச்சுவட்டோடு- சு.ரா.வோடும்தான்- பேதப்பட்டிருந்தவர்களும் விரும்பவில்லை என்பதே நிஜம். ஆனால் பிரச்சினை அதுவல்ல, என்னளவில்.

மார்க்ஸீயம் ஒரு நவீன சிந்தனையாக அரசியல் சமூக தளத்தில் உலவ ஆரம்பித்த கணத்தில் ஒப்பதும் மிக்கதும் இல்லாததாகத்தான் இருந்தது. அது உடனடியாக அனைத்துச் சிந்தனையாளர் படைப்பாளிகளினதும் ஆதர்ஷத்தைப் பெற்றது. முதல் சோஷலிச குடியரசான சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் கருத்தியல் யுத்தத்தின் வயது சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள். அது ஜெயம் கொண்டதா இப்போதும் என்பது விவாத தளத்தில் நிச்சயப்படுத்தப் படுவதற்குரியதல்ல. ஆனால் இந்த அலையோடு தமிழ்நாட்டில் ஒரு மாயைக் கருத்துலகு விரிந்தது. அந்த வலையின் ஒரு கயிறாகத்தான் இலக்கியத் துறை கருதப்பட்டது. அதற்காதரவானவர்கள் நிச்சயமாக நன்றாகவே உழைத்தனர். இந்த உழைப்பின் அடையாளம்தான் மு.த. ஊட்டி கருத்தரங்கு. இது கைலாசபதியை அவர் தளத்திலிருந்து இறக்குவதற்கான முயற்சியுமாகும்.

கைலாசபதி-சிவத்தம்பி காலம்வரையில் பல்கலைக்கழக மட்டத்தில் மார்க்ஸீய விமர்சன முறைமை ஓர் அங்கீகரிக்கப்பட்ட விமர்சன முறையாக ஆகவில்லை. தமிழ்நாட்டில்கூட. நா.வானமாமலை, சிதம்பர ரகுநாதன் போன்றோர் ஏற்கனவே இவ் விமர்சனத் துறையில் ஈடுபட்டிருந்தாலும், பல்கலைக்கழக மட்டத்துக்கு மார்க்ஸீய விமர்சனத்தை இவர்களாலும் முன்னெடுக்க முடியவில்லை. சமூக நிலைப்படும் அந்த விமர்சன முறை பெருவழக்காய் ஆனதின் பின்னரே சிதம்பர ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, பொன்னீலனின் ‘கானல்’ போன்றன தகுந்த இடம் பெற்றன எனச் சொல்லல்வேண்டும். இதற்காக தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ளை அவர்கள் புறக்கணித்தார்கள் என்றில்லை. அவர்கள் கல்கியையும், நா.பார்த்தசாரதியையும், சாண்டில்யனையுமே ஒதுக்கினர். இந்த அளவுவரை தீவிர இலக்கியவாதிகளுக்கும் உடன்பாடாகவே இருந்தமை நிஜமா, இல்லையா? ஆனாலும் இந்த விமர்சன ஆளுமைகள் நுண்ணரசியல் சார்ந்த இலக்கிய உலகில் பிரியப்படத் தக்கதாய் இருக்கவில்லை. எனவே மு.த., எஸ்.பொ. பிரச்சினை கிளப்பப்பட்டது.

மு.த.வின் முறை முடிய, எஸ்.பொ.வை அவர் தளத்துக்கு மேலாகத் தூக்குவதற்கும் ஒரு முயற்சி நடந்தது. ஆனால் அது செயங்கொள்ளவில்லை. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மு.த.வும், எஸ்.பொ.வும் ஒதுக்கப்பட்டதாய்க் குரல் கொடுத்தவர்கள், ஒட்டுமொத்த தமிழிலக்கிய வரலாறு இப் படைப்பாளிகளை ஒதுக்கி தமிழகத்தில் எழுதப்பட்டிருப்பதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

என்னுடைய விவாதமெல்லாம் இந்த வலைகளின் பின்னணி இல்லாமலே மு.த.வும், எஸ்.பொ.வும் சிறந்த ஆளுமைபெற்ற படைப்பாளிகள் என்பதுதான். அவ்வகையில் சிறுகதைத் துறையில் மு.த.வின் பங்கை விசாரிப்பதே என் முயற்சி. ஆனாலும் அதற்கான விரிந்த தளம் இதுவல்ல என்பதையும் நானறிவேன். ஒரு மேலோட்டமான பருவரைக் காட்சியை முன்வைப்பதே இங்கு எனக்கு முடியும்.

ஒவ்வொரு படைப்பிலும் ஒரு நுண்ணரசியல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நூறு வீதமான உண்மை. தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என படைப்பாளி எவ்வளவுதான் அறுதியிட்டுரைத்தாலும் இந்நுண்ணரசியல் அப்படைப்பில் இருக்கவே செய்யும். ஒரு படைப்பைக் கட்டவிழ்த்தல் மூலமாகவே இது கண்டுணரப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைத் தொகுப்பில் தொழுகை, கோட்டை, புதுயுகம் பிறக்கிறது, இரத்தம் போன்றவை என் விருப்பத்துக்கு இசைந்த வரிசையில் நல்ல கதைகளாக இருந்தன. இன்று இக் கட்டுரைக்காகவே ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இரத்தம், தொழுகை, புதுயுகம் பிறக்கிறது, கோட்டை என்று அதன் வரிசைக் கிரமம் மாறிவந்தது. அது இயல்பானதுதான். என் வளர்ச்சியில் இந்த வாசிப்பும், அதன் வரிசைக் கிரமும் மாறுவது தவிர்க்கவியலாத அம்சம்.

‘தொழுகை’ சமூக அசைவியக்கதின் மீது விழுகிற அடியாகக் கருதப்பட முடிந்தால், ‘இரத்தம்’ அதன் அசைவிறுக்கத்தில் விழுகிற அடிதான்.

தொழுகை அதன் ஆரம்பத்தில் அரசு வெளியீடாக வந்தபோது கொண்டிருந்த பிரதிக்கும், அது க்ரியா பதிப்பாக வந்தபோதிருந்த பிரதிக்கும் வித்தியாசமிருப்பது தெரிகிறது. அவ்விரண்டினையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குள்ள வசதியீனம் கவலைதான். ஆனாலும் இந்த ஞாபகத்தை ஒரு பதிவுக்காகச் சொல்லிவைக்கிறேன்.

'இரத்தம்' சிறுகதை மிகச் சாதாரணமானதாகத்தான் இருந்தது சமீபத்திய காலம் வரைக்கும். ஆனால் திடீரென விஸ்வரூபம் எடுத்ததுபோல் அது உயர்ந்து நிற்கிறது. கார்க்கி ஒருமுறை சொன்னாராம், ‘சுவரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகச் சிறுகதை தொடங்கினால் கதை முடிவதன் முன்னர் அது வெடித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் துப்பாக்கியைப் பற்றிப் பேசிவிடாதே’ என்று. அது ஒருவகையில் சரியாகத்தான் இருக்கிறது. இரத்தம் சிறுகதையிலும் கமலத்தின் வசையாக சிலவார்த்தைகள் வரும். அந்த வசைவை முன்வைத்தே முழுக் கதையும் நகர்ந்திருக்கும். இது ஒரு சிறந்த சிறுகதையாக ஆகியிருந்த வேளையில் அதன் அரசியல் கட்டுடைக்கப்படாமலே இருந்திருக்கிறது இதுநாள் வரையில்.

இனக்கலவர காலத்தில் நிகழ்ந்த வன்கொடுமைகளின் சாட்சியம் கமலம். இரத்தினபுரியில், சோமு வேலைபார்க்கும் அதே இடத்தில்தான் கமலத்தின் கணவன் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், அவளே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும். ஆனால் இன்னும் ஒரு போலித் தனத்தில் அதையே உழைப்பதற்கான இடமாகக்கொண்டு சோமு திரும்புவது பற்றிய வசையே சிறுகதையின் ஆரம்பத்தில் கமலத்தின் வாயிலிருந்து வருவது. ‘இன்னும் இந்தப் பு…. அவங்கட… ஊ… போறாங்கள்’ என்ற வசைவின் வார்த்தைகள், கதை முடிவில் சோமுவின் எண்ணமாக, கருத்தியலாக மாறுகிறது.

‘தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல்லாம் அவன் பேசியிருக்கிறான். அதுவும் பிரச்சினையைக் கடத்தித் தள்ளிப்போட்டுத் தப்பப் பார்க்கும் அதே மனப்பான்மைதானா?’ என அவனது சிந்தனைத் தொடர் துவங்கி, ‘கச்சேரியடியில் உட்கார்ந்துவிட்டு, இரண்டு கிழமை தாடிவளர்த்து வழித்துவிட்டு அவன் திருப்திப்பட்டிருக்கிறான். அதே தப்பும் மனப்பான்மைதானா?’ என்று அச் சிந்தனைத் தொடர் முடிவடைகிறது. ஆக இலங்கைத் தேசியம் கேள்வியாகிய அதேபோதில், தமிழ்த் தேசியத்தின் சாத்வீகமும் மு.த.வுக்கு உடன்பாடற்றதாகத் தோன்றியிருக்கிறது என நாம் சுலபமாக ஒரு முடிவுக்கு வரலாம்.

சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும், இச் சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக் கொண்டு.

அப்படியில்லையென்று வாதாடுவதெல்லாம் வீண்.

ஆச்சியின் அறிவுரையின்படி ஒரு சாதுவாக வளர்ந்திருக்கும் சோமு, இந்த நடுத்தர வர்க்த்து அடங்குதலை பின்னால் மிகக் காட்டமாக விமர்சிப்பான். ‘சோமுவை ஏதோ குத்திற்று. திடீரென்று ஆச்சி காட்டிய வாழ்க்கையில், கலாச்சாரத்தில், ஏதோ குறையொன்று இருப்பதுபோல் முதன் முதலாக அவனுக்கு ஏதோ ஒன்று உணர்த்திற்று.’ இது அச் சமூகத்தின் அடங்கு, பணிவாயிரு, அதுதான் வாழ்க்கைக்கு நல்லது என்ற மந்திர வாசகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வரிகள். இதுவே என்றோ ஒரு தலைமுறையின் சிந்தனையில் நெருப்பு விழுந்துவிட்டதைத் தெரிவிக்கிற வரிகளுமாகும்.

மு.த.வின் ஒட்டுமொத்தப் படைப்பும் இக்கருத்தை உறுதிப்படுத்தாதுதான். ஆனால் அதுவா முக்கியம்? அக் கருத்து ஒரு காலகட்டத்ததாய் இருந்தது கண்டடையப்பட்டாலும்தான் போதுமானது. நான் முன்னே சொன்னதுபோல மு.த.வின் இலக்கியத் தகைமை நாற்பது ஆண்டுகளின் முன்னமேயே ஸ்தாபிதமாகிவிட்டது. இன்று கட்டவிழ்ப்பின் மூலம் காணக்கூடிய அம்சங்கள்தான் கவனம்பெற வேண்டியவை.

00000

தாய்வீடு, 2008

Sunday, February 03, 2008

நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்


கனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம்
-----------------------------------------------------------------------------------------------------------------
-தேவகாந்தன்-


மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் கடந்த ஜூலை
2007 இல் நடந்து முடிந்திருக்கிறது. இவ்வாண்டு மார்ச் 24இல் நடைபெற்ற உயிர்ப்பு, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கருமையம் ஆகியவற்றின் நிகழ்வுகளையும் ஒரு பார்வையில் அலசுவதின் மூலம் தற்போதைய கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த என் அபிப்பிராயங்களை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இது கசப்பாக, உவப்பாக எப்படியிருப்பினும், உண்மையின் வீச்சுடன் அபிப்பிராயங்களைச் சொல்லவேண்டிய தருணமிது. அதுவே கனடாத் தமிழ் நாடக அரங்கின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சீரியதாக அமைய வாய்ப்பாகும் என்பது என் நம்பிக்கை.

(1) தோற்ற மயக்கம், அடையாளம்1, அணங்கு, அடையாளம்2 ஆகிய நான்கு அளிக்கைகளிலும் அணங்கு தவிர்த்து பேசப்படுவதற்கான எதனையும் உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறை சமர்ப்பித்துவிடவில்லை. அடையாளம்2 ஒரு கட்டுரையை நடித்தல்போல் அவ்வளவு உணர்ச்சியின்றி இருந்தமை கவனிக்கப்பட வேண்டும். அடையாளம்1, தோற்ற மயக்கம் இரண்டும் சுமாரானவையே என்பதைமட்டும் சுருக்கமாகச் சொலிக்கொண்டு, அணங்குபற்றி சிறிது பார்க்கலாம். அது முக்கியமான அளிக்கை.

அணங்கின் பிரதியாக்கத்துக்கு மணிமேகலை, சிலப்பதிகாரம்போன்ற உசாத்துணை நூல்களின் உதவியின்றியே அர்த்தத்தைக் கண்டடைந்திருக்க முடியும். எனினும் பிரதி சொன்ன கருத்துக்கள் கனடாத் தமிழ் நாடக மேடைக்குப் புதிது. பனுவலாய் மற்றைய மூன்றினைவிடவும் வலுவாயிருந்ததும் ‘அணங்கு’தான். அதன் நெறியாள்கையும் பார்வையாளனின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருந்தது. அளிக்கையின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற நடன எடுப்பு பார்வையாளனை மெய்மறக்க வைத்தது என்பது மிகையான கூற்றில்லை. இதை உடல்மொழி சார்ந்த நடனவகையாகக் கொள்ளமுடியும். இந் நவீன நாடகம்பற்றிய ஒரு விரிவான அலசல் அவசியமெனினும், அது இடம்பெறும் மற்றைய அரங்க நிகழ்வுகளையும் நோக்கியபின் கவனத்தில்கொள்வதே தக்கது.

(2) கருமையத்தின் அளிக்கைகள் அதன் முதல் இரண்டு ஆண்டினதுகளையும்விட முக்கியமானவை. பெண்கள் பட்டறையின் நிகழ்வுகள் பெரிதான மாற்றங்களின்றி, கருத்துக்களின் வெளிப்பாட்டினை படைப்பாற்றலின்றி வெளிப்படுத்தியிருக்கும்வேளையில், மற்றைய மூன்று அளிக்கைகளும் கருமையத்தின் வளர்ச்சியைக் காட்டும்விதத்தில் அமைந்திருந்ததைப் பாராட்டவேண்டும்.

‘மொழிப்பாடு’, ‘பனியில் ஒரு நடை’ இரண்டிலும் வன்மையான கருத்துக்கள் உருவாக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது. மொழிப்பாடு தன்னைக் கனதியாக நிறுத்த எடுத்த முயற்சி தனித்துவமற்றதாய், உடல்மொழி சார்ந்த கூறு தனிப்பட நின்றிருப்பினும், பிரதியாக்கத்தாலும் நெறியாள்கையாலும் குறிப்பிடக்கூடியவொன்றாக விளங்கியது. பனியில் ஒரு நடை சாதாரண பார்வையாளர்களுக்கான சாதாரண அளிக்கையென ஒட்டுமொத்தமாய்க் கூறமுடியும். ஆனாலும் அது கொண்டிருந்த காலம் பற்றிய கருதுகோள் அண்மைக்கால தமிழ் நாடகப் பிரதிகள் காணாதது.

மெய்யிழந்த போது … உடல்மொழி சார்ந்து எழுந்த அளிக்கை. பார்வையாளனின் புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற விதத்தில் அதன் மெய்ப்பொருள் விளப்பம் பலதரத்ததாயிருந்தது. உடல்மொழி சார்ந்து முழு அளிக்கையும் அமைந்திருந்தது அதன் விசே~மும் வித்தியாசமுமாகும். இதன் ஆக்கம், நெறியாள்கை இரண்டும் சுதர்ஸன் துரையப்பாவினது. கனடாத் தமிழ் நாடகப் பரப்பில் இவரது காலடி முக்கியமானது. அத்துடன் உடல்மொழி சார்ந்து நாம் கவனப்படவேண்டிய பல கூறுகளுக்கு அவசியமாவது.

(3) மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்க அளிக்கை முக்கியமானது. ஏனெனில் அதன் 13 ஆண்டின் வெற்றிகள், தோல்விகள் யாவும் அனுபவமாகிய ஒரு கூட்டிசைவில் இம்முறை அளிக்கைகள் வெளிவந்திருந்தன என்று கொள்ளமுடியும்.

மனவெளியின் 13வது அரங்காடலில் ‘ மீண்டும் தொடங்கும் மிடுக்கு ’ நாடகத்தை மிக்க கட்டிறுக்கமானதாக, நேர்த்தியானதாக, ரசிக, கலா அம்சங்கள் நிறைந்ததாகத் தந்திருந்த துஷி  ஞானப்பிரகாசத்தின் ‘இப்பொழுதும் எப்பொழுதும்’ அளிக்கை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையென்பது பரவலான அபிப்பிராயமாக இருந்தது. நான் அவ்வபிப்பிராயத்தினுடன் மாறுபடக் காரணமில்லை.

படிமமாய்க் காட்சிகளையும் பாத்திரங்களையும் அமைத்து, தனித்துவமான முறையில் அதை நெறிப்படுத்தியிருந்தாலும், அம் மொழிபெயர்ப்பாக்கம் வலுவின்றியிருந்தது. பார்வையாளன் மனத்தில் ஒரு பாதிப்பினை ஓரளவேனும் கூடத் தந்துவிடவில்லை அது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியல் பூடகத்துள் நாடகப் பிரதி இயங்கியிருப்பினும் அது வெளிப்பாட்டு முறைமையில் முழுமையற்றுப்போனமை துர்ப்பாக்கியமே. ஹரோல்ட் பின்ரர் இங்கிலாந்தின் நவீன நாடகத்தின் தந்தையெனப் போற்றப்படுபவர். அவரது நவீன நாடகப் பிரதிகள் உலகமெங்கணும் மெச்சி வாசிக்கப்படுபவை. நடிக்கப்படுபவை. மொழியாக்கத்தில் அல்லது தழுவலில் அவ்வரசியலின் அதிகாரத்தை, அதிகாரத்தின் வன்முறையை அளிக்கையாக்கக்கூடிய சொல்லாடல் பலஹீனமாக இருந்தது.

‘ சாகாத சரித்திரங்கள் ’ சி.சிவசேகரத்தின் கவிதைகள் மூன்றினைக் காட்சியாக்கும் முயற்சியாகவிருந்தது. முதலிரு கவிதைகளின் காட்சியளிக்கைகளும் குறிப்பிடக்கூடியளவு இருந்தவேளையில், மூன்றாம் கவிதையின் காட்சியளிக்கை அருமையாகவிருந்தது. மேடையை நோக்கி நிற்றல் என்கிற மரபார்ந்த நாடக மரபினைத் தூக்கியெறிந்துவிட்டு மிக அற்புதமாகக் காட்சியமைப்பைச் செய்திருந்த நெறியாளுகைக்காக வி.கந்தவனத்தையும், அதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்திய கணபதி ரவீந்திரனையும் இந்த இடத்தில் பாராட்டவே வேண்டும். தமிழ் நாடக மேடைகளில் கவிதையினைக் காட்சிப்படுத்தும் முயற்சிகள் குறைவு. மிகமிகக் குறைவு. அதை துணிச்சலாக முயற்சியாக்கம் செய்தமையை மனவெளியின் முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.

புராந்தகனின் ‘ அரி ஓம் நம! ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் ? பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? அப்படியென்றுதான் தோன்றுகிறது. ஒரு தனி அரங்க நிகழ்ச்சியாக இதை நன்கு ரசிக்க முடிந்திருக்குமென்பது என் நிலைப்பாடு.

இடம், காலம் போன்றவைகூட பல்நாடக அளிக்கை அரங்கில் முக்கியமானவை என்பது ஞாபகம் கொள்ளப்படவேண்டும்.

‘இரண்டுக்கும் நடுவே’ என்ற இளையபாரதியின் நாடகம் சாதாரண பார்வையாளனுக்கானது. ஆனாலும் அது நடிப்பினாலும், எடுத்துக்கொண்டிருந்த கருப்பொருளினாலும் கனடாத் தமிழ்ச் சமூகத்திடையே நிலவும் குடும்ப உறவுகளுக்கிடையேயான அவலங்களை, அழுத்தங்களை வலுவாகச் சொல்லியிருந்தது. இதில் பெண்ணின் நிலைநின்ற நியாயம் - அவள் தனியே வாழவேண்டி நேர்ந்தமைக்கான காரணத்தையும் அதற்கான உரிமையையும் வெளிப்படுத்தும் அக்கறை காட்டப்படவில்லையெனினும், பெண்ணாக அல்லாமல், பெண்ணை பெற்றாரில் ஒருவராகக் கொண்டு, பிள்ளைகளின் நலன்கள் பேணப்படவேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண்டிருந்தவகையில், பார்வையாளன் சாந்தமாகிப்போக முடிந்திருந்தது.

இறுதியாகச் சொல்ல விரும்புவது ‘ நிறங்களின் நிஜங்கள் ’ பற்றி.

நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் பாரிய தொடர்புகள் இருக்கின்றன. கீழ்த் திசை மரபிலேயே மதம், கலை சார்ந்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்களை மீறிய விஞ்ஞான ரீதியான தொடர்பாடல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு சினிமாப் படத்தின் தலைப்பு சொல்கிறது. சிகப்பு விளக்குப் பகுதி என்பது மும்பையில் பாலியல் தொழிலாளர் தொழில் நடத்தும் அனுமதிப் பத்திரம்பெற்ற ஸ்தலம்.  இதையே தென்கொரியாவில் மஞ்சள் வீட்டுப் பகுதி என்பர்.  சாலைகளில் வாகன
நிறுத்தத்திற்கான அடையாள விளக்கும் சிகப்புதான். சிவப்பு எதற்காக அவ்வாறு வைக்கப்பட்டதென்பதற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. அந்த நிறம்தான் தொலைதூரத்திலும் தெரியக்கூடிய நிறமென்பது
நிறுவப்பட்ட உண்மை. அதுபோல் சிவப்பு, நீலம் என்பன மின்சார நேர்த் திசை, மாறுதிசை மின் வலுக்களின் நிறமாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. பச்சை ‘ஏர்த்’ எனப்படும் நிலக்கடத்தல் பகுதியாக நிற்கும். நாடுகளிடையே நிறம் சார்ந்து வித்தியாசமான விளக்கமுண்டு. ஆனாலும் அவை நிறம்பற்றி ஏதோ ஒருவகையில் அர்த்த அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சூழலில் மஞ்சள் அதுபோல் மரபார்ந்து மங்களகரத்துக்கானதென்றும், கறுப்பு அமங்கலத்துக்கும், வெள்ளை வெறுமைக்கும் அடையாளங்களென்றும் நாம் சொல்லித்தரப்பட்டிருக்கிறோம். இந்த நிறங்கள் மனித உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடையன. பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என்பன அதுபோல் ஒவ்வொரு மனித உணர்வுகளைக் குறிக்க சினிமாக்களில் மட்டுமில்லை, சினிமாக் காலத்துக்கு முன்பிருந்தே கூத்துகளிலும் தெருநாடகங்களிலும் பாவனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வர்ணங்களே. இதை ஆடல் கலையில் உணர்வுகள் பீறிட அரங்காக்கப்பட்ட நிகழ்வுதான் ‘ நிஜங்களின் நிறங்கள்’.

இப்போது உடல்மொழி வகையான இந்த நவீன நடனத்தைப் பற்றி நான் சொல்லலாமென நினைக்கிறேன். தமிழில் சதிர் புராதனமானது. இதை ஒருவகையில் தமிழ் நடனவகையாகக் கொள்ளலாம்தான். பரதம் அதிலிருந்து செழுமைப்படுத்தப்பட்ட நடன வகையென்பது ஆய்வாளர்களால் இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற முடிவு. இந்த பரதத்தை தமிழ்ப் பரப்பில் நவீன வடிவமாக்க முயன்று வெற்றிபெற்றவராக மறைந்த சந்திரலேகாவைச் சொல்லவேண்டும். பரதத்துடன் பல்வேறு நடன வகைகளைக் கலந்து இந்த நவீன நடன வகையை தமிழுலகுக்கு அறியத் தந்தவர் அவர்தான் எனவே நினைக்கிறேன். இதில் பரதம் மட்டுமல்லாது, யோகாசன முறைமை, பாலே நடனம் போன்றவற்றின் கூறுகளும் கலந்துள்ளன. மட்டுமில்லை. தப்பாட்டம்போன்ற இசைகளையும், களரிக்காரர்களின் ஆட்டவகைகளையும்கூட இது கொண்டிருக்கும். வெறும் அசைவுகள் மூலம் மனித மன உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியுமென நிறுவியதோடு மட்டுமல்லாது, அதை நிகழ்விலும் நிகழ்த்திக் காட்டியவர் சந்திரலேகா. அவருக்கு உடலென்பது ஒருவகை மொழி. ஓவ்வொரு அசைவிலும் சொல் பிறக்கிறது. இந்த உடம்பு கொண்டிருக்கும் ரகசியங்கள்போல், அதன் மொழியும் ரகசியமானது. அந்த மொழிமூலம் நவீனம் புனையும் முயற்சியே உடல்மொழி நடனவகையான இதன் முக்கியமான அம்சம்.

இது இந்தியாவில் எண்பதுகளில் வீச்சுப்பெற்று வளர ஆரம்பித்த ஒரு நடனவகை என்றால் தப்பில்லை. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த நவீன நடன வகை கனடாவில் பயில்வுபெற ஆரம்பித்திருக்கிறது. இது சந்திரலேகாவின் மாணவர்களுள் ஒருவரான சுதர்சன் துரையப்பாவின் கனடா வருகையுடன் ஆரம்பித்ததெனக் கூற முடியாவிட்டாலும், இக்காலகட்டத்துக்கு முன்பின்னாக மிகுந்த கவனம்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

உடல்மொழி வகையான இந் நவீன நடன வகைக்கு அசைவுகளே போதுமானவைதாம். இசை அதற்கும் கூடுதலான ஒரு அம்சம். ‘நிறங்களின் நிஜங்கள்’ அளிக்கையில் இசையின் வலுவைவிட அசைவுகள் காத்திரமானவையாக இருந்தன என்பது என் எண்ணம். நடனத்துக்கு இசையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சிறந்த நடன ஆசிரியை திருமதி வசந்தா டானியலின் கருத்தாகும். உடல்மொழி வகை நடனத்திலும் இசை முக்கியமானதே. ஆனாலும் வேறெந்த நடனவகையைவிடவும் இவ்வகை நடன முறைமைக்கு பாடல் மட்டுமன்றி, இசையும் தீவிரத் தேவையை இழந்தே நிற்கிறதென பல நவீன நடனகாரர் வாயிலாக அறிய முடிகிறது. இதை ஒரு நவீன நடனம் என்பதற்காக மட்டுமின்றி, அதன் அறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனுக்காகவும் நமது நடனகாரர் இதை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எனது ஆவல்.

இவ்வாண்டு நாடக அளிக்கைகளில் இன்னுமொன்றை அவதானிக்க முடிந்தது. முந்திய ஆண்டுகளைவிட இம்முறை ஒளியமைப்பில் வெகுவான கவனம் செலுத்தப்பட்டிருந்ததைச் சொல்லவேண்டும். ஓலியமைப்பும் கூடுதலான கவனத்தைப் பெற்றிருந்ததையிட்டு என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒளி, ஒலி அமைப்புக்கள் அண்மைக்காலம்வரை நமது நாடக மேடைகளில் கவனிப்பற்றிருந்ததைப்பற்றி, அவ்வப்போது நாடக அளிக்கைகள் குறித்த என் கருத்துரைகளின்போது நான் குறிப்பிட்டே வந்திருக்கிறேன்.

இன்னொன்று குறிப்பிடப்படவேண்டியது. அதுதான் பிரதியாக்கம். இந்தத் தடவை அதிகமான மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேறியிருந்தன. ஓவ்வொரு ஆண்டுகளிலும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது என்பது ஞாபகம்கொள்ளப்படவேண்டியது. தமிழில் நாடகப் பிரதியாக்கங்கள் குறைவு. குறிப்பாக கனடாத் தமிழ்ப் புலத்தில் மிகக் குறைவு. இதை ஈடுசெய்ய பிறமொழியாக்கங்களைநோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கியம் நமது நாடக நெறியாளுநர்களுக்கு ஏற்பட்டதாயிருக்கலாம். ப.அ.ஜயகரன், புராந்தகன், சகாப்தன், செழியன் போன்றோரின் ஈடுபாட்டினால் கனடா மண்ணில் தமிழ் அரங்கு எதிர்கொண்டிருக்கும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.

வருங்காலங்களில் தமிழ் நாடக அரங்கில் இன்னும் வலுவான அளிக்கைகள் பார்வையாளனை அடைய முடியுமென்ற நம்பிக்கை எவருக்கும் ஏற்பட இவ்வாண்டு அளிக்கைகள் போதுமானவையே.

0000

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...