Sunday, February 24, 2008

சிதைவும் கட்டமைப்பும்: 2

-தேவகாந்தன்-தமிழகத்தின் விரிவும், சென்னையின் செறிவும் ஏற்கனவே கண்டிருந்தவையாயினும் என்னைத் திகைப்பிலாழ்த்திவிட்டமை அதிசயமானதில்லை. முன்னைய போதுகளிலெல்லாம் ஒரு பார்வையாளனாக அல்லது விருந்தினனாக இருந்தே அவற்றை நான் கண்டிருந்தேன். இப்போதோ தமிழ்நாடு எனக்குப் புகலிடம். புகலிட பூமி என்ற பிரக்ஞையில் நான் ஒருபோது பிரமிப்படையக் காரணமாயிருந்த அம்சங்கள் திகைப்பையும் ஒருவித திகிலையுமடையும்படி என்னை ஆக்கியிருந்தன.

சிங்கள பவுத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்புப் பற்றிய தமிழக அரசியல்வாதிகளின் அலட்டல் ஆவேசங்கள் எனக்குப் பிடிக்காதவை. பலர் தமிழினத்தின் அழிவில் தமது கட்சி அரசியல் ஆதாயத்துக்கான பேரங்களில்கூட ஈடுபட்டிருந்தனர். ஆனால் மக்களின் அனுதாபம் அத் திகைப்பிலிருந்து நான் மெல்லமெல்ல மீளப் பெரிய உதவியாயிருந்தது.

கொண்டுசென்றிருந்த பணம் சிலநாளில் கரைந்து போனதும் நாளாந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பது பெரும்பாடாய் ஆனது. குடும்பத்தின் பிரிவுவேறு ஒரு வதையாய் வளர்ந்துகொண்டிருந்தது ஒருபுறத்தில். சிறீலங்கா ராணுவக் கொடுமைகளுக்கு அஞ்சி வள்ளங்களில் இராமேஸ்வரத்திலும் வேதாரணியத்திலும் வந்து குவிந்துகொண்டிருந்த இலங்கை அகதிகள் பற்றிய செய்திகள் தினம்தினம் பத்திரிகைகளில் வெளியாகிக்கொண்டிருந்தன. அவர்கள் பட்ட அவதி அவலங்களினதும், அதில் பலர் அடைந்த மரணங்களினதும் தகவல்கள் மனத்தை உலுப்பின. தமிழக அகதி முகாங்களின் தரிசனம் இன்னும் பெரிய சோகம். ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக நான் அங்கீகரித்தேன். ஆயினும் இயங்குவதற்கான பாதை எனக்குத் தெரியவில்லை.

நிறைய ஈழ விடுதலை இயக்கங்கள் அப்போது தமிழகத்தில் முகாம் போட்டிருந்தன. துக்ளக் சோவின் ஒரு கட்டுரைக் குறிப்பின்படி முப்பத்தாறு இயக்கங்கள் அப்போது தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன எனத் தெரிந்தது. போராளிகளெனச் சொல்லிக்கொண்டவர்களில் பலரின் நடைமுறைகள் சொல்லுந்தரமாக இருக்கவில்லை. போராளிகளையும் கடத்தல்காரர்களையும் இனம்காண்பது முடியாதிருந்தது. இயக்கங்கள் வெளியிட்ட விடுதலைப் போராட்டக் கருத்துக்களில் முரண்கள் தெரிந்தன. இதனால் ஓன்றிரண்டு இயக்கங்கள் தவிர மற்றவை நம்பிக்கை தருவனவாயிருக்கவில்லை. மனத்தில் குழப்பம் உருவெடுத்தது. இந்த நிலையில் நான் தனி இயக்கமாகவே மனத்துள் இயங்கிக்கொண்டிருந்தேன்.

மார்க்ஸீயம் ஒரு பாதிப்பாய் என்னுள் ஏற்கனவே இறங்கியிருந்தது. இப்போது விடுதலைப் போராட்டம். மார்க்ஸீயவாதியாய் நான் எடுத்த ஆயுதம் பேனை. விடுதலைப் போராட்டக்காரனாய் எடுக்கவேண்டிய ஆயுதத்தை நான் இப்போது தீர்மானிக்கவேண்டியவனாயிருந்தேன். இக் குழம்புதல் நிலையில் காலம் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தவேளையில் அது தீர ஒருநாள் வந்தது. அந்த நாள், கார்க்கி இதழ் நடத்திய ஒரு விழா.

கார்க்கி இதழ் மார்க்சீய சார்பாளர்களால் இளவேனிலை ஆசிரியராகக்கொண்டு நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதப் பத்திரிகை. அரசியல், இலக்கியம் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது அதில். அந்தப் பத்திரிகையின் இறுதி இதழ் வெளியீட்டு விழாதான் அன்று நடந்தது. இளவேனில், பிரபஞ்சன், செ.யோகநாதன், தி.க.சி. போன்றோர் கலந்துகொண்டார்கள். ஒரு பத்திரிகையின் முதலிதழ் வெளியீட்டினை நான் கேள்விப்பட்டிருந்தேன். இறுதி இதழின் வெளியீடு என்பது புதுமை.

இலங்கைச் சூழலில் சிறுபத்திரிகைச் சமாச்சாரம் தமிழகத்தைவிட வித்தியாசமானது. பெரும் பத்திரிகைகளே பெருமளவில் விலைபோகாதவளவில் அங்கு எல்லாப் பத்திரிகைகளுமே ஓரளவு நடுத்தரப் பத்திரரிகைகள்தான். அவையும் வரும் போகும் என்ற கணக்கில்தான் இயங்கின. இது இறுதி இதழ் என்ற அறிவித்தலுடன் எந்தப் பத்திரிகையும் வந்து நான் அறிந்தில்லை. கார்க்கியின் இறுதி இதழ் விழா விபரம் என்னில் சிறுபத்திரிகைகள் குறித்த பெரும் பாதிப்பை, பெரும் மரியாதையைச் சேர்ப்பித்தது. அதனால்தான் வெகு காலத்தின் பின்னால் கி.கஸ்தூரிரங்கன் பொறுப்பிலிருந்த கணையாழி இதழை தமன் பிரகா~; சொந்தமாக்கிப் பொறுப்பேற்க முன்னர் அவர் சார்பில் அப்படிச் செய்வதில் உள்ள அனுகூல பிரதிகூலங்கள் என்ன? என்று ஒரு நண்பரால் கேட்கப்பட்டபோது, ஏன் கணையாழியே? நீங்கள் புதிதாக ஒன்று தொடங்கினாலென்ன? என்று என்னால் கேட்க முடிந்தது. ஒரு சிறுபத்திரிகையானது வெறுமனே எழுதுதற்கான தளமாக மாறுகிற தருணத்தில் தன்னை அது மாய்த்துக்கொள்வது தார்மீகமான ஒரு கடப்பாட்டுச் செயலென இப்போதும் நான் கருதுகின்றேன். கோவை ஞானியின் நிகழ் சஞ்சிகையின் 25ஆம் இதழ் அத்துடன் தன்னை நிறுத்திக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டுதான் வெளிவந்திருந்தது. தன் கருத்து மேலும் அச் சமுதாயத்துக்குத் தேவையில்லையென அல்லது ஒரு இலக்கியக் கருத்தின் வெளிப்பாடு மேலும் அவசியமில்லையென எப்போது ஒரு சிறுபத்திரிகை கருதுகிறதோ அப்போது அது நின்றுவிடுவதே உத்தமம். இதைச் செய்ய சிறுபத்திரிகையால் தவிர வேறினால் முடியவும் முடியாது. சிறுபத்திரிகையாளரிலும் சிலரால் தவிர இது சாத்தியப்படவேபடாது.

கூட்ட முடிவின் பின்னான உரையாடலின்போது, இங்கே தமிழ்நாட்டில் எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகம், எழுதுங்கள்! என்று என்னை உற்சாகப்படுத்திய இருவர் பற்றி நான் சற்று விரிவாக எழுதுவது அவசியமெனக் கருதுகிறேன். அவர்கள் வ.க. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வல்லிக்கண்ணன், தி.க.சி. என அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன் ஆகியோரே.

வல்லிக்கண்ணனுக்கு சொந்த இடம் ராஜவல்லிபுரம். செய்துகொண்டிருந்த அரசாங்க வேலையை உதறிவிட்டு இலக்கியவாதியாய் மாறிச் சென்னை வந்து சேர்ந்திருந்தவர். சிறிய உருவம். இளகிய மனசு. மென்மையான சுபாவம். தி.க.சி; அப்படியில்லை. வலிந்த தேகம். வலிந்த குரல். அரசியல் இறுக்கம். சோவியத் நாடு இதழில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இலக்கிய ரசிகர். நல்ல விமர்சகரும். இவர் விமர்சகராய்ப் பெரிதும் இனங்காணப்பட்டது பின்னாலேதான். முன்பே நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள் நிறைய எழுதியிருப்பினும் இவரது அரசியல் வேகம் குறைந்த பிறகே விமர்சகராகக் கண்டுகொள்ளப்பட்டார். தி.க.சி.க்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது அவரது விமர்சனத்துக்காகத்தான்.

தி.க.சி. பற்றி இங்கே சிறிது விரிவாய்ப் பார்க்கலாமென்று நினைக்கிறேன். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் நேரடி உறுப்பினர். கைலாசபதியிலும், நா.வானமாமலையிலும் மதிப்புள்ளவர். சிதம்பர ரகுநாதன் இவரது ஊரான திருநெல்வேலியில் அயல் நண்பர். உழைப்போர் இலக்கியத்தில் அக்கறை உள்ளவர். சோவியத் இலக்கியங்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப் பெரிதும் உழைத்தவர். இருந்தும்தான் மொத்தமாகத் தமிழிலக்கியம் என்று பார்க்கும்போது கு.அழகிரிசாமியையும், தி.ஜானகிராமனையும், சி.சு.செல்லப்பாவையும், சா.கந்தசாமியையும் இலக்கிய காரணங்களுக்காக இவர் ஒதுக்கியதில்லை. ஏன் இலங்கையில் இவர்போல் மார்க்ஸீயர்கள் இருக்கவில்லையென்பது என்னுள் இன்னமும்தான் சினத்தை எழுப்பிக்கொண்டிருக்கிற கேள்வி. சிலர், குறிப்பாக எம்.ஏ.நுஹ்மான் போன்றோர், புறநடையாக இயங்கினர் என்பது மெய்யே. ஆயினும் ஒட்டுமொத்தத்தில் கட்சி விமர்சனகாரர் வறண்டுபோயிருந்தனர் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

வ.க.,தி.க.சி. ஆகிய இருவர்களையும் இன்றும் இலக்கிய இரட்டையர்களென்றே தமிழ்நாட்டு இலக்கிய உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிக்கான இலக்கிய ஒற்றுமை இவர்களிடம் உண்டு. கூட நட்பும். இருவருமே சாகித்திய மண்டலப் பரிசாளர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை. போஸ்ற் கார்ட் இலக்கியவாதிகளென்று இன்றும் இவர்களை ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகள் தாக்குதல் செய்வர். எழுதுபவர்களை உற்சாகப்படுத்துவது ஒரு பணியென செயற்படுபவர்கள் இவர்கள். எந்தத் தாக்குதலையும் இவர்கள் பொருள்செய்ததில்லையென்றே சொல்லவேண்டும். நான் தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் தி.க.சி. எனக்கு எழுதிய சுமார் நூறு போஸ்ற் கார்ட்கள் இன்றும் என் கைவசம் உண்டு. வ.க. எழுதிய சுமார் ஐம்பது போஸ்ற் கார்ட்கள் உள்@ர் அஞ்சலுறைகள் உள்ளன. தி.க.சி. தாமரை இதழின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தில் நிறையப் பேரை பத்திரிகையில் எழுதவைத்து ஊக்கப்படுத்தியுள்ளார். மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் போன்றோர் தாமரையில் வளர்ந்தவர்கள் என்றே தெரிகிறது. இவையெல்லாம் அன்று தெரிந்தபோது என்னை எழுத உற்சாகப்படுத்திய இவர்களது செயல் எனக்கு ஆச்சரியமாகப்படவில்லை.

எழுதுதல் என்பது உறுதியாக என் மனத்தில் விழுந்தாகிவிட்டது. இப்போது எந்த ஆயுதத்தை நான் கைக்கொள்ளவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் இலகுவில் முடிந்தது. நான் பேனா ஆயுததாரியானேன். என் எழுத்துக்கும் வாசிப்புக்கும் சிறிய முடக்கமொன்று அவசியமாயிருந்தது. வெளிக் களேபரங்களை அறிந்துகொண்டு இலக்கியவாதியாய் நான் அடைகாக்க ஆரம்பித்தேன். அந்த அடைகாத்தலில் பிறந்ததுதான் எனது முதலாவது நாவலான உயிர்ப் பயணம். என் முதல் புத்தக வடிவ நூலும் அதுதான்.

இலக்கியத்துக்கான இந்த ஒதுங்குகை அரசியலிலிருந்து நான் ஒதுங்கியதன் அர்த்தமல்லவெனினும் ஈடுபாடு கொண்டதுமாகாதுதான். ஆயினும் அதையேதான் என்னால் செய்ய முடிந்திருந்தது. 1983இன் இனக் கலவர நெருப்பும், தொடர்ந்துகொண்டிருந்த இனச் சூறையும் என்னுள் இன்னுமின்னுமாய் அக்னியை வளர்த்துக்கொண்டிருந்தன. நாவல் அவ் அக்னியை எழுத்தில் கொண்டிருந்தது. இலங்கை எழுத்தாளர் என்ற பெயர் நாவலை வெற்றிகரமாக விலைபோக வைத்தது. பரவலாகப் பேசவும்பட்டது. இன்று அந் நாவல் குறித்து எனக்குப் பெரிய திருப்தியில்லையெனினும், முதல் நூலும் முதல் நாவலும் என்ற வகையில் அதை எப்போதும் நான் நினைத்துக்கொள்வேன். நாவல் வெறுமனே ஒரு கதையை மட்டுமே கொண்டிருந்தது. சொல்லுதல் முறையிலும் பெரும் சோதனையை அது நிகழ்த்தவில்லை. நாவலாக விரிவு பெறாத ஒரு கதையென்பதே இன்று அது பற்றிய என் அபிப்பிராயம்.

அது மாதிரியே எழுதத்தான் நான் இலங்கையில் பயின்றுமிருந்தேன். ஈழநாட்டிலும், செய்தியிலும், மல்லிகையிலும், சிந்தாமணியிலும் வெளிவந்த என் கதைகள் அவ்வாறே இருந்தன. அதுவே இலங்கையில் அப்போது பெரிதாகப் போற்றப்பட்ட முறையாகவும் நடையாகவுமிருந்தது. பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோர் மிகச் சிலாகித்து இந் நடையையே பேசியும் எழுதியும்கொண்டிருந்தனர். மட்டுமில்லை. சரளமான இலக்கிய நடையெனினும் கட்சிக் கருத்து, மார்க்சீயக் கருத்துச் சொல்லாத எந்த எழுத்தையும் இவர்கள் இலக்கியமாகப் பார்ப்பதினின்றும்கூட தம்மைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்கள். எஸ்.பொ.வின் குற்றச்சாட்டில் அர்த்தமேயில்லாமலில்லை. ஆனால் ஈழ இலக்கியத்துக்கான இவர்களது பங்களிப்பை இதுவெல்லாம் ஓரங்கட்டிவிட முடியாது என்பதே என் நிலைப்பாடு. கைலாசபதி வாழ்ந்தபோது தினகரனில் அவர் கடமையாற்றிய காலத்தைச் சேர்த்து முன் பின்னாக ஒரு பத்தாண்டுகள் , அவர்கள் மொழியில் ஒரு தசாப்த காலம், ஈழ இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமானதென்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. இக் காலகட்டத்தையே ஏழாண்டுகளாய்க் காண்பார் மு.தளையசிங்கம். அது எஸ்.பொ.வின் முற்றும் நிராகரித்தல் கொள்கைக்கு மாறானது. சில அம்சங்களில் எஸ்.பொ.வையே மறுத்து, அவரது இலக்கிய முக்கியத்துவத்தைச் சரியாக மதிப்பிட்டிருப்பார் அதில் மு.த. அது ஒரு சரியான பார்வை. இலக்கியவாதியின் பார்வை. கைலாசபதிபற்றி பின்னால் நான் எழுதவேண்டியிருப்பதால் இங்கே அவரைப் பற்றி இவ்வளவு போதும்.

இப் பேராசிரியர்களே கல்கி, நா.பா.,அகிலன் போன்றோரது நடையைப் புறக்கணித்தனர். அது கருத்துநிலை நின்றுமட்டுமல்ல. ஒரு மயக்கத்துக்கான வெகுஜன எழுத்து என்பதே அந்த நிராகரிப்பின் காரணம். அதையேதான் தமிழகத்தில் சிதம்பர ரகுநாதன், வானமாமலை போன்றோர் செய்துகொண்டிருந்தார்கள். தீவிர இலக்கிய விமர்சகர்களான க.நா.சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றோருக்கும் இவர்கள் எழுத்து ஒவ்வாது. மார்க்ஸீய அ-மார்க்சீயர்களான இவர்களது கருத்துநிலை நின்றில்லாவிடினும் இறுகிய இலக்கியத் தளத்தில் நின்று எழுதியோர் அப்போது தமிழகத்திலும் பலர் இருந்தனர். சுப்பிரமணிய ராஜு, நாகராஜன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், சா.கந்தசாமி போன்றோர் இவர்களில் சிலர். ஈழத்திலும் இறுகிய இலக்கிய தளத்தில் வைத்து எழுதப்பட்டவற்றையே சீரிய எழுத்து என்று போற்றினார்கள் என்பதைச் சொல்லவேண்டும். ஆனாலும் இலக்கியம் இதற்கும்மேலே என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது வற்புறுத்தப்படவேண்டியது. எனினும் இலக்கிய இசங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வேர்கொள்ளவில்லை என்ற கவனம் பிரதானம். தமிழ்நாட்டில்கூட கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரது கருத்துநிலையான விமர்சனங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவர்களை மதிக்கும் படைப்பாளிகள் விமர்சகர்களுடனேயே என் சங்காத்தம் இந்தளவுவரை சாத்தியமாகிக்கொண்டிருந்தது. இந் நிலையில் எனது இலக்கியச் சிந்தனையின் சிதைவு இன்னும் எட்டாத் தொலைவிலேயே இருந்தது எனல் வேண்டும்.

உயிர்ப் பயணம் சாதாரணமான ஒரு நூல். அப்போது அது வெகுவாகப் பாராட்டப்பட்டது என்பது வேறு வி~யம். இந் நிலையில்தான் என் விடுதலைப் போராடட்டத்துக்கான பங்களிப்பு போதுமானதல்ல என்ற எண்ணம் என்னுள் கிளர்ந்து எழுந்தது. நான் எழுத்துத் தீவிரம் கொண்டன். பிறந்தது நிலாவரை இதழ். ஆப்போது இயக்க சார்பில் வெளிவந்துகொண்டிருந்த இதழ்களில் முக்கியமானவை புளொட் வெளியிட்ட 'பொங்கும் தமிழமுது'வும், புலிகள் வெளியிட்ட 'விடுதலைப் புலிகள்' பத்திரிகையுமே. அவை அரசியலை மையப்படுத்தியிருந்தன. அதனால் தமிழீழத்தின் கலை இலக்கியக் குரல் என்ற அடையாளத்துடன் நிலாவரை மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. அது அரசியலைப் பேசினும் கலை இலக்கியத்தையே முதன்மையாகக் கருதியது. இன்குலாப், காசி ஆனந்தன், அரசு மணிமேகலை போன்றோர் அதில் எழுதினார்கள். அதன் இரண்டாம் இதழில் வெளியான யார் தூண்டி? என்ற இன்குலாப்பின் புதுக் கவிதை அற்புதமானது. சில காலம் கழித்து அவரது தொகுப்பில் அக் கவிதையைக் காணாத நான் அவரிடம் அது குறித்து விசாரித்தேன். அது கிடைக்கவில்லையென்றபோது அக் கவிதையைத் தேடிக் கொடுத்தேன் அவருக்கு. பின்னால் அது தொகுப்பில் இடம்பெற்றதாகக் கேள்வி.

நிலாவரையை விற்பனை செய்து உதவ தமிழக இளைஞர்களும் மாணவர்கள் சிலரும் முன்வந்தனர். ஆயினும் பொருளாதாரக் காரணங்களால் நான்கு இதழ்களோடு அதை நிறுத்தும்படியாயிற்று. மூச்சுப் பேச்சில்லாமல் நின்றது என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம். என்னிலும் எவரிலும் எந்தப் பாதிப்பையும் செய்யாமலே அவ்விதழ் நின்றுபோனதில் இன்று எனக்கு எந்தத் துக்கங்கூட இல்லை. ஒரு சிறுபத்திரிகையை எப்படி நடத்துவது அல்லது எப்படி நடத்தக்கூடாது என்பதைத் தவிர நான் கற்றுக்கொண்டது ஏதுமில்லை அதில்.

என் சிந்தனைக் கட்டமைப்பு இருந்தபடியே இருந்துகொண்டிருந்தது. (தொடர்வேன்)

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...