Sunday, June 22, 2008

என் நினைவில் சுஜாதா

என் நினைவில் சுஜாதா

ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை.

சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது.

சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவே செய்திருக்கும்.
என் கதையும் அதுதான்.

சுஜாதா தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய ஆளுமை. திரைப்படத் துறையிலும் அவருக்கு அதேயளவான மதிப்பும் மரியாதையும் இருந்தது. தினமணி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற நிறுவனங்களின் கதவுகள்போலவே, சுஜாதாவுக்கு ஏவிஎம்’மினதும், ஜெமினியினதும் கதவுகளும்கூட திறக்கும்.

மறக்கமுடியாத சில உன்னதமான சிறுகதைகளின் கர்த்தாவாய் இருந்ததோடு, சங்க இலக்கிய ஆர்வமும் அதுபற்றிய அறிவும் கொண்டவராய் அவர் விளங்கினார். நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றிற்கான அறிமுகமாய் அவர் இலகு தமிழில் செய்த இனிய எழுத்துக்கள் இன்றைக்கு தமிழிலக்கியப் பயிற்சி அற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினர்க்கும் நிறையவே உதவக்கூடியவை.

எழுத்துலகிலும் திரையுலகிலும் நிகரான செல்வாக்குப் பெற்றிருந்த திரு.சுஜாதாவின், எழுத்துக்களை, திரையாக்கங்களை மதிப்பிடாமல் ஒரு சக மனிதனாய், ஒரு இலக்கியவாதியை மதிக்கும் பண்புடையவராய் எப்படி அவர் இருந்தார் என்பதை என் அனுபவங்களினூடாகத் தொட்டுக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்த காலத்தில் கணையாழி கவிதை அரங்குகளில்தான் சுஜாதாவை நான் முதன் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் ஓரிரு வார்த்தைகள் பேசியது தவிர, வேறு பெரிதான பழக்கமேதும் எமக்கிடையே ஏற்பட்டுவிடவில்லை.

அம்பலம் மிஞ்சிகை(அம்பலம்.கொம்) வெளியாகி இரண்டாவது ஆண்டிலென்று நினைக்கிறேன். இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்த நண்பரொருவர், ‘சுஜாதா உங்களைச் சந்திக்கவேண்டுமென்று நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கிறார், அண்மையில் என்னைச் சந்தித்தபோதுகூட முகவரி அல்லது தொலைபேசி எண் கேட்டார், நான் இரண்டுமே அவருக்கில்லை, ஆனால் இம்மாத இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியும், அப்போது உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறிவந்தேன்’ என்றார். சுஜாதா என்ன விஷயமாக என்னைச் சந்திக்க விரும்பினார் என்று நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டில் தொலைபேசி இல்லாததோடு, அடிக்கடி வீடு மாறும் அவஸ்தையிலும் இருந்த நான் இப்படித்தான் சிலபோது முகவரி இல்லாதவனாக ஆகியிருப்பேன். அப்படியான தருணங்களில் என்னைச் சந்திக்கக்கூடிய ஒரே இடம் இலக்கியக் கூட்டங்களாகவே இருக்கும். என்னை நண்பர் சந்தித்து விபரம் தெரிவித்தபோது மிகவும் காலதாமதமாகியிருந்தது. இருந்தாலும் மவுண்ட் ரோடு செல்ல நேர்ந்த ஒருநாள் அம்பலம் இணைய தள அலுவலகம் சென்று சுஜாதாவைச் சந்தித்தேன்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படப் பிரதியாக்கத்தில் நான் இலங்கைத் தமிழ் சார்ந்த பகுதியில் சுஜாதாவோடு வேலை செய்யும் சந்தர்ப்பம் அவ்வாறுதான் நேர்ந்தது.

இது நிகழ்ந்து சில மாதங்களின் பின் மீண்டுமொரு முறை சுஜாதாவிடமிருந்து அழைப்பு. நேரில் பார்த்தபோது, ‘இப்போது அங்கு டயலக் கோச்சாக இருப்பவரை வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ரி-ரிக்கார்டிங்கை முடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களால் அந்த வேலையைச் செய்துகொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்.

நான் கண்டிப்பாக முடியாது என்று மறுத்தேன். திரையுலகின் போக்கு எனக்குத் தெரியும், அங்கு பணத்துக்கும் பகட்டுக்கும் இருக்கும் மதிப்புப்போல் மனிதருக்கு இருப்பதில்லை, ஒரு இலக்கியவாதியாய் என் கவுரவம் எனக்கு முக்கியமென்பதுவே நான் மறுப்பிற்குச் சொன்ன காரணம்.

அப்படியெதுவும் நேராமல் தான் பார்த்துக்கொள்வதாய் எனக்கு உத்தரவாதம் தந்தார் சுஜாதா. நானும் ரி-ரிகார்டிங் நடைபெற்ற ஸ்ரூடியோவுக்கு மறுநாள் சென்றேன். சென்றேன் என்றால் போதுமானதில்லை. ஸ்ரூடியோவிலிருந்து கார் வந்து அழைத்துச் சென்றது. அன்று பத்து மணியளவிலேயே தயாரிப்பாளர்களில் ஒருவராகிய திருமதி. சுஹாசினி வந்து என்னைப் பார்த்ததோடு, என் கவுரவம் குறையாமல் நடத்தப்படுவதற்கான அறிவுறுத்தல்களையும் உதவி இயக்குநர்களிடம் கூறிச் சென்றார்.

சுஜாதா சொன்னதையெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்கப்போகிறார், ஏதாவது கவுரவப் பிரச்சினையெழுந்தால் பேசாமல் நடையைக் கட்டவேண்டியதுதான் என்பதே என் எண்ணமாக அதுவரை இருந்தது. ஆனால் சொன்னதை மறக்காமல், ஒரு இலக்கியவாதி மனம் வெந்துவிடக்கூடாதென்பதை மிக ஞாபகமாக வைத்திருந்து அவர் செய்த ஏற்பாடு என்னை சிலிர்க்கவைத்துவிட்டது.

இன்னொரு சந்தர்ப்பம்.

இன்னும் சுஜாதாவின் அந்த முகமும், பார்வையும் நினைவழியாமல் என்னுள்.
மோப்பக் குழையும் அனிச்சம்போல் மிக மென்மையும் நளினமும் கொண்ட மனங்களும் இருக்கின்றன. அனிச்ச மலரை நான் பார்த்ததுமில்லை, உணர்ந்ததுமில்லை. ஆனால் சில அற்புதமான மனங்களைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுளொன்று சுஜாதாவினது.
ஒருமுறை சுஜாதாவை வீட்டிலே சந்தித்து அவரோடு கூடிக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தைச் சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஒரு காலை வேளை பத்து மணியளவில் சுஜாதா வீடு சென்றேன்.

சுஜாதா அவசரமாக அப்போதுதான் வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார். நான் சென்றதும் உள்ளே வந்தமரும்படி கூறிவிட்டு எடுத்துச் செல்லவேண்டிய சில கோப்புக்களைச் சரிபார்த்தும், சில தாள்களை தேடியும் கண்டுபிடித்து உள்ளே வைத்துக்கொண்டும் சுஜாதாவிருக்க, அவரது மனைவி அப்போது சோபாவிலேதான் உட்கார்ந்திருந்தவர், என்னைப் பார்த்து, ‘பாருங்கள், தேவகாந்தன்! எப்போதும் இப்படித்தான். ஓய்வென்பதே இல்லை. மூன்று நான்கு மணிநேரம்கூடத் தூங்குவது கிடையாது. சாப்பாடுகூட அப்படித்தான். இப்போது உங்களோடு வருவதற்கு நேரமாகிவிட்டதென்று காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் வரப்போகிறார். நீங்கள் சாப்பிட்டு வந்தீர்களா?’ என்று கேட்டார். நான் சாப்பிட்டு வந்ததாகத்தான் சொன்னேன். ‘பரவாயில்லை. கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிட்டால், அவரும் ஒரு இட்லியாவது சாப்பிட்டுவிட்டு வருவார்’ என்றார் அவர்.

எனக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இதய சத்திர சிகிச்சை முடிந்து தேறிக்கொண்டிருப்பவர் சுஜாதா. அவருக்காகவேனும் சாப்பிடலாம்தான். ஆனால் ஒரு வீட்டில் அந்தமாதிரி ஏதுகாரணத்தால் செய்வதும் ஒரு கவுரவக் குறைவு. சாப்பிட்டுச் சென்றிருந்த வேளையிலும், சாப்பிடும்படியும், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள் என்றும் உபசாரம் பண்ணியிருந்தால், நான் சிலவேளை மனம்நோகாமல் சாப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் இன்னொருவர் சாப்பிடுவதற்காக தான் அங்கே சாப்பிட நேர்வதை தன்மானமுள்ள மனது பொறுக்காது. இருந்தாலும் சுஜாதாவின் உடல்நிலையைக் கருதி சாப்பிடவே முடிவுசெய்தேன். பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைகிறதை நயத்தக்க நாகரீகமாக நம்புகிறவன் நான்.

அப்போது என் முகத்தில் ஏதோ பட்டுப்பூச்சி மொய்ப்பதுபோல் உணர்விலாகி நிமிர, சுஜாதாவின் கண்கள் என்மீது படிந்தும் மிதந்தும் விலகியுமாய் சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தக் கண்களில் இருந்த உணர்வு என்னவென்பதை இப்போதும் என்னால் அறுதியிட்டு உரைக்க முடியவில்லைத்தான். என் மீதிலான இரக்கம், சுயஇரக்கம் என்பதில் எது அது? வகையுரைக்க முடியாவிட்டாலும் அது அபூர்வமானவோர் உணர்வு.

நான் ஒன்றோ இரண்டோ இட்லி சாப்பிட்டேன். சுஜாதா ஒரு இட்லி சாப்பிட்டார் என்று ஞாபகம். அதுவும் நின்ற நிலையில் தாள்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டே.

கோப்பி குடிக்கிறபோதுதான் சுஜாதாவின் மனைவி சொன்னார், ‘தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், தேவகாந்தன். சுஜாதா சாப்பிடவேண்டுமென்பதற்காக அல்ல, நீங்கள் சாப்பிடவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்’ என்றார்.

நான் அதிர்ந்துபோனேன்.

அப்போது சுஜாதாவின் முகத்தைப் பார்த்தேன். விகசித்துப்போய்க் கிடந்தது.
மனிதனாக வாழ்வது சுலபம். மனிதனாக ஒழுகுவது சிலபேரால்தான் முடிகிறது. அதுவும் சிலநேரங்களில்.

000

தாய்வீடு, கனடா 

இயல் விருது

இயல் விருது1.

எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது.

புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய ஆக்கத்துக்காக வழங்கும். கில்லர் அமைப்பின் பரிசளிப்புகள்கூட இந்த நுண்ணரசியலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டதாகச் சொல்லமுடியாதேயுள்ளது.

இலங்கை சாகித்திய மண்டல அமைப்பானாலும் சரி, இந்திய சாகித்திய நிறுவனமானாலும் சரி, வேண்டப்பட்டவர்களுக்கான அரசியல்வாதிகளின் பரிந்துரைப்பிலேயே பல காலமும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருப்பதை நாம் நிதர்சனத்தில் கண்டிருக்கிறோம். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம் போன்ற சிறந்த படைப்பாளிகள் இலங்கையில் பரிசு பெறாது போனதற்கும், அதுபோல் இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி போன்ற பலர் தாம் வாழும்காலத்திலேயே பரிசுபெறாது போனதற்கும் வேறு காரணங்களை நாம் கண்டுவிடமுடியாது. ஐந்து முறை மகாத்மா காந்தியின் பெயர் சமாதான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தும் அவரது பெயர் தெரிவாகாமலே போனமை, நோபல் பரிசுத் தேர்வாளர்களின் மேற்கத்தியச் சிந்தனைக் குறைபாடு காரணமான பெரும் அவமானமாய் இன்றும் அதன்மேல் படிந்தேயிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜராஜன் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசுகளிலும் இந்தப் பின்னணியின் குறைந்த நிலைச் செயற்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

ஒரு படைப்பு எந்தச் சமூகத்துக்குத் தரப்படுகிறதோ அந்தச் சமூகத்திலிருந்து அந்தப் படைப்பிற்கான அங்கீகாரத்தை ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது இயல்பானது. படைப்பு எந்தச் சமூகத்தில் முகிழ்க்கிறதோ, அந்தச் சமூகம் பரிசு கொடுக்கும் தகுதியோடும் இருக்கவேண்டும். பரிசின் பின்னால் நுண்ணரசியல் இயங்குகிறது என்பது பரிசே தேவையில்லையென்பதாக ஆகிவிடக்கூடாது. பரிசு ஒரு சிறந்த படைப்புக்கான கவுரவம்.

2.

கனடா இலக்கியத் தோட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு நிறைவை நோக்கிய பாதையில் தன்னைச் செலுத்தி வந்திருக்கிறது என்பது ஓரளவேனும் அந்த அமைப்பின் இயங்குமுறையைத் தெரிந்திருப்பவர்களுக்கு புரியப்கூடிய சங்கதி. இதையே விருதுபெற்றோரின் பட்டியலும் சுட்டிநிற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியப் பரிசுகளையும், மற்றும் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பரிசினையும் இலக்கியத் தோட்டம் அறிவித்து வரினும், அதன் முதன்மையான பணி இயல் விருது வழங்கலாகவே எனக்குப் படுகிறது. அது தமிழ்மொழி சார்ந்த ஒருவரின் வாழ்நாள் சாதனைக்கானது. இயல்விருது என்ற பதச்சேர்க்கையே ஒரு ஸ்தூலக் கனதியடைந்து தன் உன்னதத்தின் அவாவுகையை வெளிப்படுத்தி நிற்பதும் கவனிக்கப்படவேண்டும்.

2001 ஆம் ஆண்டில் அமைப்பாகிச் செயற்பட ஆரம்பித்த இலக்கியத் தோட்டம், தன் முதல் இயல் விருதை திரு. சுந்தர ராமசாமிக்கு அறிவிக்கிறது. பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியின் படைப்பிலக்கிய ஆற்றல் சந்தேகத்துக்கு இடமற்றது. அவரது சிறுகதைகளையும், பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளையும் நீக்கிவைத்துப் பார்த்தால், அவரது நாவல்கள் ஒரு காலகட்டத்தின் சிறந்த படைப்பாளியாக அவரை நிறுத்திவைக்கப் போதுமானவை. ஜே.ஜே. சில குறிப்புக்கள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஒரு புளியமரத்தின் கதை ஆகிய மூன்றும் இந்த வரிசைத் தரத்திலேயே தமிழின் சிறந்த படைப்புக்கள்தான். அவரது கட்டுரைகளும் நாவல்கள் அளவுக்கு முக்கியமானவை. காற்றில் கலந்த பேரோசையிலுள்ள கட்டுரைகள், கட்டுரைத்தனத்தை மீறி கலைத்துவம் மிக்க படைப்புக்களாகவே இருக்கும். இந்த வகையில் இயல்விருதுக்கான இலக்கியத் தோட்டத்தின் தேர்வு மிகச் சரியானதாகவே இருந்தது.

அடுத்த இயல்விருது பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த திரு. கே.கணேஷ். திரு.கே.கணேஷ்  பிரச்சினைக்குரிய மனிதரல்ல என்றபடியாலும், அவர் மலையகத்தைச் சேர்ந்தவரானபடியாலும் ஒரு இடஒதுக்கீட்டில்போல அவருக்கான பரிசு கேள்விகளைக் கிளர்த்தவில்லை. இதையடுத்து பரிசு பெறுகிறவர் வெங்கட் சாமிநாதன். தமிழகத்திலிருந்து தெரிவாகும் அடுத்தவரும் பிராமணர் என்றமாதிரியான ஒரு சலசலப்பு வெ.சா. விஷயத்தில் எழுந்தது. அதுவல்லாமல் அவருக்கான பரிசை அப்போது கேள்விப் படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர் கலாநிதி எம்.ஏ. நுஃமான். படைப்பிலக்கியத்துறை சாராதவராயினும், அவரது கடும் விமர்சனம் புதுக்கவிதையின் வளர்ச்சிக் காலத்தில் முக்கியமாகவே கருதப்பட்டது. அக்கிரகாரத்தில் கழுதைபோன்ற அற்புதமான திரைப்படப் பிரதியாக்ககாரரும் அவர்தான். இந்தவகையிலும் அந்தப் பரிசு தகுதியானவருக்கே போய்ச் சேர்ந்தது என எடுக்கலாம்.

அடுத்து திரு.இ.பத்மநாபஐயர். ஐயர் என்று பெயரிலேயே அடையாளம் வைத்துக்கொண்டுள்ளது தவிர இவர் என்ன செய்தார் பரிசுக்கு? என்று அப்போதும் பரவலான கேள்விகள் பிறந்தன. இதற்கெதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மற்றது சிற்றிதழ் வெளிப்படையாகவே தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஆனால் பத்மநாபஐயர் இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இலக்கியம் குறித்துச் செய்த சேவை ஒப்புமிக்கு இல்லாதது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அவர் ஒருவகையில் தமிழ்க் கொண்டோடியாகவே இருந்தார்.

அடுத்து ஜோர்ஜ் எல். ஹார்ட். ஏறக்குறைய சங்கத் தமிழை ஆங்கில மாணவர்களுக்கும், ஆங்கிலத்தில் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியவாதிகளுக்கும் முன்னால் எடுத்துவைத்த பெரும்பணியினைச் செய்தவர் திரு.ஹார்ட். இது ஏறக்குறைய ‘மால்குடி’ திரு. ராமானுஜத்தின் பணிக்கிணையானது.

ஈழ அரங்காடலில் தனித்துவமும் புதுமையும் புகுத்திய திரு.தாசீஸியஸுக்கு அடுத்த இயல்விருது வழங்கப்பட்டது. இப்போது 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருது திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் நவீன இலக்கியத்தை அவர் ஆங்கில இலக்கிய உலகத்துக்கு அளித்திருப்பதின் வாழ்நாள் சாதனைக்காக இத் தேர்வு நடந்ததாய் அறிவிப்புத் தெரிவிக்கிறது.

3.

ஆங்கிலத்தில் புதுமைப்பித்தனையும், மௌனியையும், சுந்தர ராமசாமியையும், அம்பையையும், அசோகமித்திரனையும், பாமாவையும் இன்று தமிழ் அறியாத உலகம் அவரது மொழிபெயர்ப்புக்களின் ஊடாகவே அறிந்துகொள்கிறது என்பது முக்கியமானது. தமிழ்ச் சிறுகதையின் மகாஉச்சம் தொட்டவன் புதுமைப்பித்தன். தமிழில் பெண்ணிய எழுத்தின் வகைமாதிரிக்கு முன்னெடுக்கக்கூடியது அம்பையின் எழுத்து. தலித்திய இலக்கியத்தில் பேசப்படும் படைப்பு பாமாவினது. நவீன தமிழின் பல்வகை இலக்கியங்களின் வகைமாதிரியை திருமதி. லட்சுமியின் மொழியாக்கத்தின் மூலம் ஒருவர் அடையமுடியும்.

தமிழும் செம்மொழியாகிவிட்டது. அதன் இலக்கியவளத்தை பிறமொழி பேசுவோர் எவ்விதம் கண்டுகொள்வது? உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், செவ்வியல் இலக்கியங்கள் நிறைந்ததுமான தமிழ் மொழியை அவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது? சீகன் பால்குஐயர் போலவும், வின்ஸ்லோ போலவும், போப்ஐயர் போலவும் தமிழ் மக்கள் மத்தியில் வந்திருந்து தமிழ்மொழியைக் கற்று அறிந்துகொள்ளச் சொல்லலாமா? மொழிபெயர்ப்புக்கள் காலத்தின் அவசியம். நம் மெய்யான அக்கறைகள் இங்கிருந்தே தொடங்கப்படவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

மெய்யான தமிழ்ப் புலமையை வெளிநாட்டார் வணக்கஞ் செய்யச் செய்வதற்கான வழியும் இதுவாகவே இருக்கிறது. மட்டுமில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய வழித்தோன்றல்கள் தம் மொழி இலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாகவேதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள். திரு.ஜோர்ஜ் எல்.ஹார்ட்டும், திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமும் இலக்கியத் தோட்டத்தினரின் மிகச் சிறந்த தேர்வுகள் என்பதில் எனக்கு உடன்பாடு.

ஜெயமோகன் பதிவுகள்.கொம் கட்டுரையில் தெரிவித்ததுபோல் திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமைவிட இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அமைப்பாளர்களுக்குச் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு தேர்வு நடந்திருக்கிற பட்சத்தில் அமைப்பினரையும் குறைசொல்ல முடியாதேயிருக்கிறது. அமைப்பினரில் சிலரோடு உரையாட நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் இதுபற்றி விசாரித்தபொழுது, அவர்களில் ஒருவர் இதுவரை காலத்தில் தகுதியான ஒருவரை நான் பரிந்துரை செய்திருக்கிறேனா? என்று கேட்டார்.

பங்காளியாக இருக்க முடியாதபொழுதில், அம்மாதிரியான பார்வையாள தளத்தில் நின்றான குற்றஞ் சுமத்தல்கள் மட்டும் சரியான அணுகுமுறையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. சர்வதேசம் அளாவி இடம்பெறும் ஒரு விருது வழங்கலில் பல்வேறு குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக் குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை அவர்கள் கூடிய அக்கறையெடுத்து நிவர்த்திசெய்ய முயலவேண்டும்.

இயல்விருதுக்கான தேர்வுகளின் நியாயங்கள் விருது வழங்கலின்பொழுதோ அல்லது முன்னதாகவோ அறிவிக்கப்படுகிறதுதான். ஆனால் கடந்த இரண்டு தடவைகளிலும் இடம்பெற்ற படைப்பிலக்கியப் பரிசுகள் அளிக்கப்பட்டமைக்கான தராதர விளக்கங்கள் தெரிவிக்கப்படவேயில்லை.

எந்தச் சமூகத்தில் ஒரு நிறுவனம் இயங்குகிறதோ, அந்தச் சமூகத்துக்கு அது வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதின் அகல்விரிவான விளக்கம் இதுதான். இனிவரும் காலங்களில் போட்டிக்கு எடுக்கப்பட்ட நூல்கள், தகுதியானவற்றின் தேர்வுத் தொகை, தேர்வுக்குப் பொறுக்கப்பட்டவை, பரிசீலனையில் நின்ற இறுதி நூல்களின் விபரம், தேர்வின் காரணம் என யாவற்றையும் அந்தச் சமூகத்தின் முன்னால் விரித்துவைக்கும் கடமையை இலக்கியத் தோட்டம் மறவாதிருக்கவேண்டும.;

ஓர் இலக்கியவாதியாக இம் முன்மொழிதலை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

00000

பதிவுகள்.காம், 2007

Saturday, June 07, 2008

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்
கொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன்.

புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று.

உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் புதுவை இரத்தினதுரை ஆற்றிய பதிலுரையிலுள்ள ஒரு விஷயம் குறித்து உடனடியான விமர்சனம் தேவையென்றவகையில் இக் கருத்துகள்: 'கவிதைக்கு ஒரு வரைவிலக்கணம் இட்டதாக நான் அறியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மீறியதுதான். உண்மையில் மரபுக் கவிதைகளெல்லாம் சம காலத்தில் எழுந்தவையல்ல. வெண்பாவுக்கு எப்படி விருத்தம் புதுக் கவிதையாயிற்றோ , எப்படி கட்டளைக் கலித்துறைக்கு அகவல் புதுக் கவிதையாயிற்றோ அவ்வாறு புதுக் கவிதைகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவைதான்.'(வீரகேசரி 17.08.2003)இது புதுவை இரத்தினதுரையின் கருத்து.

கவிதைக்கு வரைவிலக்கணம் இல்லையென்பது சரிதான். காலந்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறதென்பதும் சரிதான். ஆனாலும் அது புதிதான கவிதையே தவிர , புதுக்கவிதையல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரதியின் எளிமைப் படுத்தப்பட்ட கவி வடிவங்களிலிருந்து புதுக்கவிதை தோன்றியதென தப்பிதமாகக்கொண்டுவிட நேரிட்டுவிடும்.

புதிதடைந்து வந்த கவிதை புதுக்கவிதையென்பது புதுக்கவிதையையே பிழைபட உணரவைத்துவிடும். உண்மையில் புதுக்கவிதையென்பது ஒரு பாய்ச்சல். எல்லாம் கட்டறுத்து எங்கோ வந்து விழுந்து தன்னை உருவமைத்த கவிவடிவம் அது. இதை மய்யப்படுத்தி நாம் பல தளங்களில் உரையாட, விவாதிக்கவுண்டு. செய்வோம்.

யாழிலிருந்து திரும்பி சில காலங்களை வன்னியில் கழித்தேன். புதிய அனுபவங்களின் திரட்சியோடு இப்போது கொழும்பு மீண்டிருக்கிறேன். இவ்வனுபவங்களின் மீள்வுக்காகவே மீண்டும்- மீண்டும் மீண்டும்- நான் வன்னி போவேன்.

கொழும்பு திரும்பிய பின் நான் ஏற்கனவே பூர்த்தியாக்கியிருந்த நாவலின் அச்சாக்கப் பணிகளைக் கவனித்தேன். நாவல் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாய் புரட்டாதி மாதம் நடுப் பகுதியில் வரவிருக்கிறது. புதிய களத்தில் , புதிய உத்திகளில் ஈழத்தின் வளரும் நாவலிலக்கியத் துறையின் வீச்சு வெளிப்படும்படியாய் அது வாசக மனங்களைப் பிணிக்குமென நம்புகிறேன்.

நாம் கடந்த ஒரு கால் நூற்றாண்டாயும் , நிறைந்த யுத்த சூழலிலும் இலக்கியத்தின் போக்கினை மாற்றாமலே தொடர்ந்து வந்துவிட்டோமோவென்று ஓர் உள்ளோடிய எண்ணம் கடந்த சில காலமாயே என்னுள் இருந்துவந்தது. யதார்த்த தளத்தின் ஒரு பகுதியிலேனும் இடித்தலைச் செய்து புதிய இலக்கியப் போக்குகளின் செல்வாக்கை அங்கீகரிக்காத வரையில் , வெறும் பதிவு என்கிற தளத்திலிருந்து நாம் இலக்கியத் தரத்தை எட்டவே முடியாதென்பதை இப்போது இறுக்கமாக உணருகிறேன்.

சென்ற ஆண்டுவரை புலம்பெயர் எழுத்தாய் என் எழுத்தைக் கருதியிருந்த நான் இப்போது ஈழ நேரடி இலக்கியமாய் இதைக் காண்கிறேன். இதுவரை வெளிவந்த 'கனவுச் சிறை' மஹாநாவல் உட்பட்ட எனது பத்து நூல்களும் இந்தியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்தவை. இலங்கையில் வெளிவரும் எனது முதலாவது நூலும், மொத்தமாய் வெளிவரும் எனது பதினோராவது நூலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' என்கிற இந்த நாவலாகும்.

நிச்சயமாகவே அப் புதுச் செல்நெறியைப் புலப்படுத்தி இது நிற்கிறது. அதை விமர்சகர்களே - வாசகர்களும்தான் - சொல்லவேண்டும் . ஆழமான விமர்சனங்களுக்காய்க் காத்திருக்கிறேன்

000

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......


இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள்  கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள்.

முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற  ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று.

மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்டு சகல நிகழ்வுகளும் நேற்று ஓய்ந்தன. இப்போது மாநாட்டு நோக்கத்தினது வெற்றி தோல்விகளை , உப விளைவுகளை பார்க்கத்தான் வேண்டும். அவசியம்கூட.

இந்தியாவில் இத்தகையதொரு மாநாடு பலத்த சர்ச்சைகளைக் கிளர்த்தியிருக்கும். மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சியானது இந்துத்துவ முன்னெடுப்பு, மதம்சாரா மற்றைய கட்சிகளை ஓரணியில் திரளவைத்திருக்கின்றது. இந்தியாவில் தற்போதைய பிரச்னை பொருளாதாரம், கல்வி, பெருகிவரும் தேய்வுநோய் கூட அல்ல; இந்துத்துவம்தான். பாகிஸ்தானுடனான பிரச்சனைகளின் தொடர்ச்சியும் இதே பின்னணியிலேயே பார்க்கப்படவேண்டும். காஷ்மீர் பிரச்னை அணுகப்படவேண்டிய வழியும்கூட இதுதான்.  இத்தகைய நிலையில் ஓர் உலக இந்து மாநாடு அங்கு பல நாச காரியங்களை மிக்க சலனமின்றி ஆற்றியிருக்கமுடியும்.

இலங்கையில் இத்தகைய விளைவுகளுக்கு அதன் சமூக அமமைப்பு இணக்கமாக இல்லை. இங்கே இந்து மதம்- குறிப்பாக சைவ மதம்- உண்டே தவிர இந்துத்துவம் இல்லை. எனினும் திக்கம், அகண்ட இந்து ராஜ்யக் கனவுகள் இல்லாவிடினும், அர்த்தமளாவி அது அனர்த்தங்கள் சிலவற்றையேனும் இங்கு விளைக்காமல் விட்டுவிடவில்லை. இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடு மதம் சார்ந்து விளைந்து வளர்ந்ததுதான்.

இப்போது நாம் ஒரு கேள்வி கேட்கலாம்."இலங்கையில் நடைபெற்ற 2ம் உலக இந்து மாநாட்டின் மூலம் உண்மையில் ஏதாவது நன்மை அடையப்பட்டிருக்கிறதா?"

ஓம், இலங்கைத் தலைநகரில் தமிழர்களால் இப்படி ஒரு விழாவினை நடத்த முடிந்திருக்கிறதென்பதே நன்மையான விஷயம்தானே என்று யாரேனும் பதில்சொல்லக் கூடும்.

உண்மையில் மிகவும் ஆழமாக நிலைமைகளை ஆய்ந்து பார்த்துக் கூறுவதானால், ஓரளவு மட்டுமே இது நன்மை கண்டிருப்பதாக என்னால் கூறமுடிகிறது.

இந்து சமயம் இலங்கைத் தமிளர்களது மதம் மட்டுமில்லை, அது இந்தியாவில் ....பூட்டானில்...நேப்பாளத்தில்....மோரிஷியஸ்ஸில் எல்லாம்கூட இருக்கிறது. அப்படியான நிலையில் ஓர் இந்து மாநாட்டை இங்கே கூட்டுவதில் என்ன கஷ்ரம், யாருக்கு எற்பட்டுவிடப்போகிறது? அதுவும் அரசாங்கம் எடுத்த விழாவுக்கு? தனிநபர்கள் சிலர் பெரும் பங்காற்றினார்கள் என்பது மெய்யே. ஆக, இன நல்லிணக்கத்தைக் காண வேண்டின் தமிழ் விழா, குறைந்த பட்சம் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கைத் தலைநகரில் நடக்க வேண்டும். சிங்கள உறுமய கட்சியும் , ஜே.வி.பி.யும் அதற்கு இசைந்து கொடுத்துவிடும் என்கிறீர்கள்? எதார்த்தத்தில் வாழப் பழகுவோம். அப்படியெல்லாம் நடப்பது சிரமமே. ஆனால் ஒன்று: அவற்றுக்கான ஓர் அடித்தளத்தை - ஆரம்பத்தை - இருபத்தோராண்டுகளின் பின் நடைபெற்ற இந்த இரண்டாம் உலக இந்து மாநாடு போட்டுவைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

'இந்து தர்மத்தின் மூலம் சமாதானம்' என்பது மாதிரியான வெற்று வரிவடிவங்களெல்லாம் எழுப்பப்பட்டிருந்தன. அதெல்லாம் சுத்த ஹம்பக்! ஆனாலும் அதன் மூலம் சமாதானமெனின் வந்துவிட்டுப் போகட்டும். 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்பதே தமிழனின் ஒற்றுமை மந்திரம்.

அதை முன்னெடுக்கும் உரம் இப்போதைக்கு யாருக்குமில்லைத்தான்.

000

(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)


இரண்டாம் புலப் பெயர்ச்சி
மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது.

யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான்.

இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன? ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும்.

எவ்வளவு இலக்கிய நண்பர்கள்! எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள்! எவ்வளவு வாசகர்கள்! தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை.

பின்னர் மெல்ல வலி செய்த கணங்கள் ஏற்பட்டன.

ஆனாலும் சாதனைகளின் வீறுகளில் அவற்றை அடக்கி வைக்க முடிந்திருந்தது.

அங்கிருந்து தாயகம் திரும்ப தயாரானபோது......?  ஒரு பக்கம் தாயகம் திரும்புகையின் மகிழ்ச்சி ரேகைகள் எறிபட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மண்ணை நீங்க மனம் ஏன் அத்தனை அவலம் பட்டது?

அது என்னளவில் ஓர் இரண்டாம் புலப்பெயர்ச்சி.

முந்திய புலப்பெயர்வினைவிட வலிகூடிய பெயர்வாயிற்று.

மீண்டும் என் மண் மிதிதேன் கண் கலங்க ..... மெய் விதிர்க்க.

மீண்டும் என் மண் மிதித்தேன்....வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையாய் உருவாகி நின்றேன்.

000

(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)


நிமிர்ந்தே திரிந்தவர்

சென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஓர் இழப்பின் பாரிய தாக்கம்.

'கடிதோச்சி மெல்ல எறி'கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது.

எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர்.

சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர்.

'தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது' என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார்.

உயர்ந்த, சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை.

ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன்.

கொடிது கொடிது , மரணம் கொடிது.

000

எதிர்க் குரல்கள்

எதிர்க் குரல்கள்


காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன.

கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை.

ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக் கால சமூகம் வேறு எந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது.

கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கின்றன. சாசுவத உண்மைகள் காலத்துகுத் தகவாய் மாறி வந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள், ரத்தச் சொரிவுகள், வாழ்வு அர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதை சரித்திரம் சொல்லி நிற்கிறது.

இலக்கிய உலகின் கலகக் குரல்களெல்லாமேகூட இந்த நியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலே முதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய்க் காலம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மேலை நாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸில் avant-guarde களும் surrialist களும் மலசலகூடங்களுக்கு அண்மையில் தம் படைப்பு , கருத்து பரிமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தில் 1969 இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனை பெறமுன்பு, பொது மலசல கூடங்களுக்கு அருகே எதிப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கின்றேன்.

கடந்த 04. 12. 2002இல் ஒரு காலை நேர சென்னை கடற்கரை-மயிலை பறக்கும் ரயில் தடத்தில் இயங்கிய ரயிலில் 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை' என்ற அஜயன் பாலாவின் சிறிய சிறுகதைத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும், ஒரே தாள கதியில் இயங்கும் அதன் இயக்கத்தை இடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் லய பேதமும் ஒரு சுவையை எற்படுத்தியிருக்கலமோ? சில மாதங்களின் முன் ஓடும் ரயிலில் பயணிகளூக்கு மத்தியில் ஒரு கவிஞர் கூட்டம் கவியரங்கொன்றை நடத்தியிருக்கிறது. அதற்கு முன்னால் கோணங்கி போன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இது பெரிய அதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடு செய்யப்பட்ட விதம்தான் புதுமையானது-அதீதமானது. புத்தக வெளியீடு, ஓடும் ரயிலில் இருந்து வெளியிடுபவரால் வெளியே வீசி எறிவதன் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக 'புதுப் புனல்' ஆசிரியர் சி.மோகன், 'வெளி' ரங்கரஜன் போன்றோர்.

இன்னொரு நிகழ்வு , பிரமிளின் கவிதைகள்பற்றிய கருத்தரங்கு. இது மதுக் கடை ஒன்றின் bar இல் நடந்திருக்கிறது. குடிப்பதற்கு வந்த பலரில் ஆச்சரியங்களை விளைவித்துக்கொண்டு இந்த அரங்கு நடந்து முடிந்த பின்னால் சண்டையும் நடந்திருக்கிறது. 'பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு/ சில்லென்று செந்நீர் தெறித்து/ நிலம் சிவந்து / மல்லொன்று நேர்ந்து...'என்று நம்மூர் மஹாகவி பாடியது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாரு நிவேதிதா, விக்ரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.

இவையெல்லாம் உள் கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒரு சமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.

'தலித் அழகியல் என்ற சொற்றொடரும், தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரே அர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது' என்று வேறு ஒரு கருத்தரங்கு பற்றி எஸ். சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப்.2003) கணையாழியில் எழுதியிருக்கிறார்.

இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபு போன்றவற்றுக்கு எதிரான குரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாகத்தான் இருக்கும். சுகனும், ஷோபாசக்தியும் தொகுத்த 'கறுப்பு' நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30. 01. 2003 இல் நடந்தது. தொகுப்புப்பற்றி ராஜேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடை வந்து பேசினார். இந்த நண்பர் போன ஆண்டு நிறப்பிரிகை நடத்திய ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரை நிகழ்த்தினார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பது? இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள்.சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.

000
(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில்
எழுதப்பட்ட கட்டுரை இது.)


ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்
இது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது.
ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முடிகிறவரையில் பிடித்துப் போகிறது; பாத்திரத்துக்கு இயைந்த பேச்சு முறையென்பதை மனம் அங்கீகரிக்கிறது.
சிம்ரனுக்கு இதுவரை ஏற்றிராத தாய் பாத்திரம். பாசத்தைப் பொழியும் பாத்திரமாக அது இல்லை. ஒரு ஆளுமைமிக்க கலைஞரின் தனித்துவம், வெறித்தனம், அன்பு, அது பறிபோய்விடுமோ என்ற பயம், பாசம் .... என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம். அதனை அநாயாசமாக நடித்துக் காட்டுகிறார் சிம்ரன். அவர் நெற்றியின் அந்தவளவான பொட்டும் , புகழ் பெற்ற ஒரு இந்திய நடன கலைஞரை நினைவூட்டி சில படிமங்களைச் சிறப்பாகவும், சரியாகவும் உருவாகவே வைத்திருக்கிறது எனல் வேண்டும். இவ்வாறான கலைத்துவம் மிக்க இரு பாத்திரங்கள் எப்படிப் பேச முடியுமோ அப்படிப் பேச வைத்து, வசனத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாசரும், எஸ்.ராமகிருஷ்ணனும். சில இடங்களில் உணர்வின் வலு, சொல்லாளுமைகளாலும் நேர்ந்ததை சுட்டிக்காட்டவே வேண்டும். 'ஸ்பரிசம்' சமஸ்கிருதச் சொல். மலையாளத்தில் மிகு புழக்கத்திலுண்டு. அதை 'முதல் ஸ்பரிசம்' என்று குறிப்பதன் மூலம் 'முதல் உறவு' குறிக்கப்படுகிறது இங்கே. முதல் உறவென்பதில் வரும் கொச்சைத்தனம் , முதல் ஸ்பரிசத்தில் இருக்கவே இருக்காது.
மோகன் லாலை விக்ரமாவாய் , சிம்ரனை யமுனாவாய் அழிய வைத்திருப்பதின்மூலம் நாசரின் வெற்றி அடையப்பட்டிருக்கிறது. மகளாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நடிப்பும் தம் மூத்த கலைஞர்களுக்கு குறைந்ததில்லை.நாசரின் வெற்றியது சூட்சுமத்தின் ஒரு கதவு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர் தேர்வு. சுமார் இரண்டு மணிநேரப் படம். ஒரு இலக்கியப் பிரதியை வாசித்த மனப் பதிவையும் பாதிப்பையும் இது ஏற்படுத்தியது எனக்குள். முதல் வரும் பத்து நிமிடங்கள் , படத்தின் வலு குறைந்த பகுதி. விக்ரமாவின் தங்கை பாத்திரம் பலஹீனம். அதன் உரையாடலும் நடவடிக்கைகளும் தமிழ்ச் சினிமாவின் மரபார்ந்த உறைவுகள்.
இன்னுமொன்று சொல்ல மறந்தது. யுவன்சங்கர் ராஜாவின் இசை. வார்த்தைகளாலின்றி , இசையாலுமின்றி , உணர்வு அடையும் பரவசத்தால் மட்டும் நெஞ்சி¢ல் இருக்க வைத்த இசை அது. கடைசிக் கட்டத்தில் கலைஞர்களோடு சேர்ந்து இசையும் நடிக்கிறது. சினிமாவின் தரத்தைஉயர்த்தியதில் அதற்கும் பெரும் பங்கு. முதல் பத்து நிமிஷங்களில் அதுவும்தான் தோல்வி. தொழில் நுட்பக் குறைபாடுகளும் அந்த பத்து நிமிடங்களில் கவனத்தை இடிக்கின்றன. மீதி நிமிடங்களின் அனுபவம் நெஞ்சை நிறைக்கிறது.

ஒரு நாடக விமர்சனம்23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள விழா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான 'பனித் தீ' நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் 'பனித் தீ'யாய் உணரவைக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி ஆகியன ஒரு பெண்ணுள்ளிருந்து கிளர்தலே இங்கு குவிமையப்படுத்தப்படுகிறது.

பின்னால் ஆணுடை களைந்து பெண்ணான தோற்றம் அம்பாவின் பெயரில் தொடரும். பிறகுதான் தன் சகோதரர்களுக்காக அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று ராஜகுமாரிகளை பீஷ்மர் வில்முனையில் கடத்திச் செல்லப்படும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. அஸ்தினாபுரம் கொண்டு செல்லப்பட்ட அம்பா , தான் சால்வன் என்ற அரசனைக் காதலிப்பதாக சொல்ல பீஷ்மர் பின் அவளைப் போக விடுகிறார். ஆனால் சால்வனும் அவளை ஏற்க மறுத்து விடுகிற கொடுமையைச் சுமத்தவே திரும்ப அஸ்தினாபுரம் போகிறாள். அங்கே சத்யவதியைக் கண்டு தான் தன்னைக் கவர்ந்து வந்த பீஷ்மரையே திருமணம் செய்யப்போவதாகச் சொல்ல , அவரது பிரமச்சாரிய விரதம் அவளுக்குச் சொல்லப்படுகிறது. மறுபடி அங்கிருந்து எங்கே செல்வதெனத் தெரியாமல் அம்பா வெளியேறி நதியாகிறாள்.

ஓரங்க ஒரு நபர்க் காட்சிக்கான உத்திகள் மூலம் எழுப்பப்படும் அரங்க அமைப்பு முறைமை வெகுவாய்ச் சிலாகிக்க வைக்கின்றன. ஆண் அணிகலன்களைக் களைந்து பெண் நகைகளை அணிவதன் சம நேரத்தில் கதை விவரிப்பும் சேர்ந்து மொழித் தேவைகளைச் சுருக்குதலென்று மேடையுத்திகளின் சாத்தியமான அளவு பயன் பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய விடயம் ஆளப்பட்ட மொழி. அது சிருஷ்டிகர தன்மையுடன் நாடகத்தில் தொழிலாற்றியதைச் சொல்லவே வேண்டும். நாடகக் கலைஞர் எஸ்.உஷாராணியின் நடிப்பு அற்புதமானது. ஒரு மணி நேரம் க்ரமித்திருந்தார் மேடையை. அவ்வப் பாத்திரங்களாய் மாறியதாகவே நான் உண்ர்ந்தேன். அஸ்தினாபுரம் விட்டு இறுதியில் வெளியேறும் அம்பா, நதியாய் மாறி நிற்கையில் நாடகம் நிறைகிறது.

இதன் பாதிப்பு பெரிது. புனைவின் அதிகபட்ச சாத்தியம் அடையப்பட்ட அண்மைக்காலத்தின் சிறந்த நாடகப் பிரதியாக இதனைக் கொள்ள முடியும்.

இது பதிவு அல்ல, பாதிப்பின் விவரிப்பு.

000

துக்கத்தின் வடிவம்

இதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே - இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு, எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மனிதாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.

முன்பெல்லாம் , 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை - அதாவது பெரும்பான்மையின் சரிகளை - ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. 'தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்' என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும், இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட,  ஆட்சியாளர்கள் 'தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ' என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இது இன்றைய கால கொயபல்ஸ் பிரச்சாரமுறை . இது தான் சொல்வதே சரியென்ற , சரியென்பதால் பெரும்பான்மையாகி அதுவே நியாயம் என்கிற விவாதம்.

இந்த வார 'இந்தியா டுடே' (12.03.03 ) யில் விருந்தினர் பக்கத்துக்கு ரவிக்குமார் எழுதிய ' தமிழ் பிராண்டு மதவாதம் ' என்கிற கட்டுரை முக்கியமானது. இது ஏற்கனவே வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு பேரால் சொல்லப்பட்டதுதான் என்றாலும், நிறுதிட்டமாய் அதைத் திரட்டி பின்விளைவுகள் குறித்த அதிக எச்சரிக்கை செய்து காட்டியிருப்பது விஷேசம். ஆனாலும் , 'தமிழ் சினிமா ஏற்படுத்தியுள்ள மந்தை மனோபாவம் ' என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மந்தை மனோபாவத்தை தமிழ்ச் சினிமா பாவித்துக்கொள்கிறது என்பதுதான் சரி. சங்க காலம் தவிர்ந்து பிற காலங்களினூடாகப் பார்த்தாலே, தமிழன் மனத்தில் வளரத்தொடங்கிய வழிபாட்டு மனப்பான்மையை சுலபமாக ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சோழர் காலத்தில் இருந்த அதே ராஜபக்தி , பல்லவர் காலத்திலும் இருந்தது. பக்தி இலக்கிய காலமொன்று உருவாக்கம்பெற்றதை அங்கிருந்துதான் காணவேண்டும். பின்னால் விஜய நகர மன்னரின் அரசாட்சிக் காலத்திலும் நிகழ்ந்தது அதுவே. தனக்கு எஜமானன் இல்லாமல், இந்த சாடிஸ்ட் மனோபாவமின்றி , தமிழனால் வாழ முடியாதென்கிற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இக் கருத்து சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தமிழனின் அரிப்புக்கு தமிழ் சினிமா தீனி போடுகிறது; அவ்வளவுதான். இது ரவிக்குமார் எழுதியுள்ளதுபோல் 'தமிழ் பிராண்டு' தான். அதுவே இன்றைய சூழலில் 'தமிழ் பிராண்டு மதவாத' மாகிறது. இது உள்ளிருந்து எழும் எரிசக்தியில் எரியப்போகிறது. அதனால் பாதிப்புக்களும் பயங்கரமாகவே இருக்கும். அணைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கப்போகிறது.

இப்போது வலு வீச்சாகியிருக்கும் அயோத்திப் பிரச்னை அடங்க , மறுபடி ஈழப் பிரச்னை இங்கே கவனமாகலாம். ஆனால் நாம் கவனியாது விட்டுவிட முடியாதல்லவா? தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம். அது சரிதான். அவரவருக்கும் அவரவர் துக்கத்தின் வடிவம்தானே பெரிதாயிருக்கும்? அங்கே கட்சி அரசியலினதும், தலைமையின் கர்வங்களினதும் ஒரு பாரிய பாதிப்பை இப்போது ஈழ சமாதான முயற்சிகள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஜனதா விமுக்தி பெரமுனவின் அண்மைய கூட்டெதிர்ப்பு முடிவு அபாயத்தின் அறிகுறி. ஆனாலும் செய்ய எதுவுமில்லை. மக்களை நம்புவதுதான் ஒரே வழி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டை இன்னுமின்னும் யுத்த அழிவுக்குட்படுத்துவதில்லையெனவும், அதற்கான எந்த நடவடிக்கையையும் எதிர்ப்போமெனவும் உறுதி பூணாதவரை , அழிவை எப்படித் தடுக்க முடியும்?

நல்ல சூழ்நிலை வருவதாய்க் கருதி பல்வேறிடங்களில் புலம்பெயர்ந்திருந்த என் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் வடபகுதியிலுள்ள தத்தம் வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கடிதமெழுதினார்கள். பதிலெழுதினேன். இரண்டு மாதங்களுக்கு மேலே ஆயிற்று. பதிலுக்குப் பதில் வரவேயில்லை. மறுபடி எழுதிய கடிதத்துக்கும் பதிலில்லை. அங்கிருந்து பல்வேறு முகாந்திரங்களில் போய் வருகிறவர்களிடம்தான் ஓடியோடிப்போய் விசாரித்தேன். ' யுத்த நிறுத்தம் தொடர்கிறதுதான். ஆனாலும் மனதில் ஒரு நிம்மதியின்மை. சமாதான வழிக்கான எதிர்ப்புகளின் குரல் வலுப்படும்போதெல்லாம் பயம் எழவே செய்கிறது. அதுவும் யுத்த காலத்தைவிட அதிகமாயும், ஒரு பூடகத்திலாயும் எழுவதுதான் பெரிய துக்கம்' என்று சலித்தார் ஒரு நண்பர்.

நான் மனிதனாய் இருக்கிறபடியால் தமிழனாகவும், அதனூடாய் இலங்கையனாகவும் உணர்ந்து கொள்கிறேன். இது இருக்கும்வரை என் நண்பர்களின், உறவினர்களின், என் மக்களின் அவலத்தை என்னால் உணரமுடியும்தான். இவை எனக்கு மிக்க கரிசனமானவை.

உறக்கம் வராது இந் நினைவுகள் எழுந்து அலைக்கழித்த ஒரு இரவில் என் துக்கம் இப்படி வடிந்தது:


எனினும்
இருந்துகொண்டுதான் இருக்கிறது
இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்வு குறித்து.

கொஞ்சம் அமைதிக்கும்
கொஞ்சம் நிம்மதிக்கும்
கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும்
ஆசைகளின் பெருந்தவிப்பு.

ஆனாலும்
மீறி எழுகிறது
மனவெளியில் பய நிழல்களின்
கருமூட்டம்.

முந்திய காலங்களில்
மரணம் புதைந்திருந்த குழிகள்
எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது.
ஆனால் இப்போது...?
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
எங்கே வெடித்துச் சிதறும்
எங்கே அவலம் குலைந்தெழும் என்று
தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது.

மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல்
மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது.

இப்போதெல்லாம்
தூக்கம் அறுந்த இரவுகளும்
ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே
காலத்தின் நகர்ச்சி இருக்கிறது.
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.

00000

(பதிவுகள் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும் பின்  கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இது.)

சம்பூர்ண நிராகரணம்: 2

விசாரணை 2.இறுதிப் பகுதி


இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த.

(7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கியமென்று இகழ்ந்தது. இந்தப் பிற்போக்குப் புலத்தின் பலத்தை உடைக்க தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

(8) மார்கஸிய விமர்சகளுடைய பணி அப்போதுதான் ஈழத்தமிழ்த் தேசிய இலக்கியத்துக்குக் கிடைக்கிறது. பேராசிரிய எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பழந்தமிழிலக்கியங்களின் காலக் கணிப்பு, உணர்வுனிலை ஆய்வாளர் படிப்பாளிகளிடத்திலேற்படுத்திய அத்தனை பாதிப்பு கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் கூட்டு தினகரனில் கைலாசபதியின் பிரவேசம் ஆதியாம் காரணங்களினால் தொடர்ந்தது. ஈழத் தமிழ் இலக்கியத்தின் செல்னெறி கண்டடையப் பட்டாயிற்று. ஈழத் தமிழிலக்கியம் தன் தொப்புள்க் கொடித் தொடர்பை முடிவாக அறுத்துக் கொண்டு தனிப்பிறவியாயிற்று. அதைச் சவலைப் பிள்ளையாகிவிடாமல் வலுவூட்டி வளர்த்தவர்கள் மார்க்ஸிய விமர்சகர்களே என்ற மகா உண்மையை எவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மார்க்ஸிய விமர்சகர்களின் பங்களிப்பு இதுதான். இவ்வளவுதான்.இதற்கு மேலே-கீழே இல்லை.

பகுதி 3

(9) மார்க்ஸியர்களின் இலக்கிய விமர்சனம் சரியான ஈழ இலக்கியத்தைத் தெரிந்து தமிழ்ப் பரப்புக்கு அறிமுகமாக்கிற்று. எனக்கும் சந்தேகம்தான். இன்மையை ஒரு காரணமாகச் சொல்லலாம். ராஜம் ஐயர் அளவு எழுதியவர்கள்கூட தோன்றவில்லை இக்காலகட்டம் வரையிலும் என்பார் மு.தளையசிங்கம். இந்த நிலையில் தேசிய இலக்கியத்தின் அடையாளமாய் அல்லது மண்வாசனை இலக்கியத்தின் எடுத்துக் காட்டாய் எதைச் சொல்வது? தேசிய நீரோட்டத்தை அதிகரிப்பித்தல் என்ற தளத்தில் சிலரின் சில எழுத்துக்கள் முன்னிலைப் படுத்தப் படுதல் இக்கட்டத்தில் நிகழ்வது தவிர்க்க முடியாதது. முகத்துக்காகச் சில தேர்வுகள் நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் இதுதான், இழிசனர் இலக்கியமென்ற வாய்ப்பாட்டைச் சுக்கு நூறாய்க் கிழித்தெறிந்தது. ஆனாலும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. சிவத்தம்பி அவர்களால் இது குறித்து ஒப்புமூலம் ஒரு நேர்காணலில் சில காலத்துக்கு முன் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை கைலாசபதி ஜீவியவந்தராய் இருந்திருப்பின் அவருமே இன்று இதை கொண்டிருக்கக் கூடும். அத்தகைய நிகழ்வுண்மைகளை வைத்துக் கொண்டுதான் தமது படைப்புக்கள் கண்டு கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டன என்ற கூச்சல் சிலரால் எழுப்பட்டது. தகுதியில்லாதவர்கள் உயர்த்தப் பட்ட நேரத்தில் தகுதியானவர்கள் அவர்களைவிடவும் தாழ நின்றார்கள் என்பது சரிதான்.
ஆனால் எதோ தம்மையும் தாழ்த்தியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அதுவும் சமூக நிலை காரணமாக என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவர்கள் தாம் இருட்டடிப்புச் செய்யப் பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர்கள், அவர்களது தகுதி அளவுக்கு விமர்சனங்கள் செய்யப் பட்டும், ஈழத் தமிழ் வரலாறுகளில் குறிக்கப் பட்டும் இருக்கிறார்கள். அவர்கல் தரமும அதுதான். அதற்கு மேலே - கீழே இல்லை.

(10) ஈழ இலக்கியத்தை உலக இலக்கிய தரத்துக்கு உயர்த்தும் ஒரு மகா படைப்பாளிக்கென்று எம் இலக்கிய மேடையிலே ஒரு விலைமதிப்பற்ற முடி இருக்கிறதுதான். அதைக் குறிவைத்துக்கொண்டு 'அது எனக்குத்தான்' என்றும், 'அதை எனக்குத் தரவில்லை' என்றும் போடும் சன்னதங்களை நாம் பொருள் செய்ய வேண்டியதில்லை. முன்னே பின்னே எழுதியிருந்தாலும் ஐம்பதுகளின் கடைசியிலும் அறுபதுகளிலும் தான் ஸ்தாபனமாகிறார்கள் மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, கே.டானியல், நீர்வை பொன்னையன் போன்றோர். மு.த. அற்புதமான படைப்பாளி. ஆழமான சிந்தனாவாதி. அம்பது ஆண்டுகளுக்குப் பின் வரக்கூடிய ஈழத்து இலக்கியச் செல்னெறியை அன்றே கோடி காட்டியவர். அவரது இள வயது மரணம் ஈழத் தமிழுக்கு, ஏன் மொத்த தமிழுலகுக்குமே பேரிழப்பு எனலாம். மெய்யுள், மரபில் காலுன்றி உயர்ந்து உயர்ந்து உச்சத்தில் வடிவங்களையே விழுங்கி விட்டு நின்று நவீனத்துவம் பேசுவது. மெய்மை சார்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியலெல்லாம் இணைந்து வரும் ஓர் அற்புத சிந்தனைப் பிறவி மெய்யுள். அதன் ஆன்மீக வியாதியே அதன் எமன். ஆன்மீகமென்பது தன்னுணர்ச்சி சார்ந்த ஒரு அகவயம் மட்டுமே. அது எழுதப்படலாம். ஆனால் வாதுக்கும், அமைப்புக்கும் அப்பாற்பட்டது. மெய்யுள் நெறி, மு.த.வின் பின்னால் ஒரு மார்க்கமாகப் படர்ந்ததாய்ச் சொல்ல முடியாது.
எஸ்.பொன்னுத்துரையைப் பொறுத்த வரை அவரது வீச்சான படைப்புக் காலகட்டத்தில் ஈழத் தமிழிலக்கியத்தை ஒரு இஞ்சியாவது உயர்த்திய சில சிறுகதைகளின் படைப்பாளி மட்டுமே. அதற்கும் மேலே-கீழே அவரும் இல்லை. நற்போக்கு இலக்கியம் ஒரு இலக்கிய விதண்டாவாதம். தம் காலத்தில், தம் சமூகம் சார்ந்த பிரச்னை குறித்து ஒரு இம்மியளவும் கூட இவர்கள் எழுதவில்லையென்பது எத்தனை பெரிய புதுமை. தம் சமூக நிலப்பாட்டில் நின்று நீர்வை பொன்னையனும், டொமினி ஜீவாவும், டானியலும் எழுதினார்கள். இன்று தலித் இலக்கிய முன்னோடி நாவல்களாக டானியலில் எழுத்துக்கள் கணிக்கப் படுகின்றன. சிறந்தபடி சமூக ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்தியவையாக நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் எடுக்கப் படுகின்றன. இவர்கள் முற்போக்கு அணிக்குள் இருந்து வளர்ந்தவர்கள். தம் சமூகத்துக்கும் ஈழத் தமிழிலக்கியத்தை உரிமையாக்கி வைத்தவர்கள். இவர்கள் கைலாசபதி மரபினைச் சார்ந்தவர்களில்லை. அப்படி ஒரு மரபும் வேதசகாயகுமார் சொல்வது போல் இல்லை. மரபுகள், அபூர்வமான சமூக நிலைமைகளில் தவிர தனி மனிதர்களால் ஆவதில்லை. அது சமூகத்தால் கட்டப் படுவது. அதுபோல் தளையசிங்கம் மரபென்றும் இல்லை. தன் படைப்புத் திறனால் தமிழிலக்கிய உலகில் நிமிர்ந்து நின்றார் என்பதுதான் தளையசிங்கம் குறித்த நிஜம். இதுக்கு மேலே போய் என்ன சொல்ல? பொன்னுத்துரை தன் தளத்தில் தலித் இலக்கியம் படைத்திருக்க முடியும். ஆனால் அவரோ ஒரு மாய்மாலத்துட் போய் சொற்காமத்தில் விழுந்து கிடந்தார். ஈழத் தமிழிலக்கியத்தின் அடையாளமாக அதீத பாவனைச் சொற்பிரயோகம் இருக்கவே முடியாது. ஆனாலும் இவையெல்லாமே படைப்புக் கதி குறித்த விஷயங்களில்லை என்பதை மானசீகமாக இங்கே முதலில் ஒப்புக் கொள்கிறேன். இவையெல்லாம் ஒரு கேள்வி மட்டும்தான். வெறும் பேச்சு என்று உண்டா எங்கேயும்? அது கூட ஒரு அர்த்தம் குறித்ததுதான். இலக்கியம் உடலும் உயிரும் சார்ந்த கூறு. ஒரு தலைமுறை இளையவனான நானும் சில நண்பர்களும் இந்த மாய்மாலத்துள் சிலகாலம் கட்டுண்டு கிடந்தோம். சொற்காமம். ஒரு காலத்துக்கு மேல் அந்த மாயத்திலிருந்து நாம் விடுபட்டோம்.

(12) 'டானியல் கதைகள்' என்கிற கே.டானியலின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும், 'மேடும் பள்ளமும்' என்கிற நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் பல உன்னதமான ஈழத்துச் சிறுகதைகளை ஒருவரால் தேரமுடியும். நாவலாசிரியராவதன் முன் டானியல் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. சிறுகதைகளே இலக்கியப் போக்குகளின் சிறந்த வெளிப்பாட்டு வடிவமென்று சொல்லப் படுகிற படிக்கு அவை தரமும், பதிவு, விகாஸமும் கொண்டவை. இவர்களை விடவும் அ.செ.முருகானந்தம், தெணியான்,ரகுநாதன்,வ.அ.இராசரத்தினம் என்ற பரந்துபட்ட எழுத்தாளர்களிடமிருந்து ஒரு பெரும் தொகையைச் சிறந்த சிறுகதைகளாக எடுக்க இடமிருக்கிறது. ஆனாலும் இது நிராகணமானவர்கள் குறித்த விவகாரம். அதனால் அவை இப்போது கரிசனமில்லை.

(13) ஒரு தசாப்த காலத்துக்குச் சற்று மேலாக முற்போக்கு இலக்கியக் கொள்கைகள் ஈழத் தமிழிலக்கியத்தின் முதுகெழும்ப்பாய் இருந்தன என்பது குறைந்த கணிப்பீடு இல்லை. அவற்றுக்கு ஆதாரமாய் இருந்தன மார்க்ஸியப் பார்வையுள்ள எழுத்தாளரின் படைப்புக்கள். இவை, மார்க்ஸியத்தை சமூக அரசியல் இலக்கியச் சிந்தனைக்கான சித்தாந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களின் படைப்புக் கதி மிகுந்த கணங்களில் பிரசவமானவை என்பதே சரி. அவற்றுக்கு மார்க்ஸிய எழுத்துக்கள் என்று பட்டயம் எழுதித் தொங்கவிடுவதும், பொது இலக்கிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்குவதும் இலக்கியத்துக்கு செய்யும் அநீதிகள். அபத்தங்கள்.

(14) நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா? 'குண்டிக் குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான். அங்குள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை அற்புதமாய் விளக்குகிற கதைதான் நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ''மேடும் பள்ளமும்' கதை. அடையமுடியாத ஆழத்தில் நீருற்றுக்கள் உள்ள மேட்டு நிலங்களில் தாழ்த்தப்பட்டோரின் காணிகள். கிணறு வெட்டி நீரைக் காணலாமென்பது அங்கே கனவு. ஆயினும் அந்தக் கனவுதான் அங்கே வாழ்க்கை. கனவுக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அபார முயற்சியைப் பிறப்பிக்கும். அப்படி நீரூற்றுக் காணமுயலும் மலையும் பிளக்கும் ஒரு தாழ்த்தப் பட்ட குடும்பம் தன் நம்பிக்கை சரிவதை அக்கதை எடுத்துக் காட்டும். உணர்வால் மட்டுமன்றி, உருவ நேர்த்தியாலும் சிறந்து நிற்கிற கதை இது. இது போல் டானியல் கதைகளிலும் சில உண்டு. டொமினிக் ஜீவாவிடமும் சில நல்ல கதைகளை நாம் எடுக்க முடியும். இவர்கள் ஓர் அலையின் பிரதிநிதிகள். அந்த அலையைக் கடந்துதான் அடுத்த கட்டத்துள் ஈழ இலக்கியம் பிரவேசித்தது. அந்தக் காலகட்டம் அடுத்த காலகட்டத்தின் உரம். அவர்களை ஒட்டு மொத்தமாய் வரட்சியாய் எழுதிய எழுத்தாளர்கள் என்ரு சம்பூர்ண நிராகரணம் பண்ண வேதசகாயகுமாரினால் எப்படி முடிந்தது? இந்த அணுகுமுறை நாளை தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அயோத்தியிலே ஒரு காலத்தில் ராமர் கோவில்தான் இருந்தது. சுமார் 500 வருஷங்களின் பின் பாபர் காலத்தில் அதை இடித்து விட்டுததான் பாபர் மசூதி கட்டினார்கள். பின் ஒரு 500 ஆண்டுகள் கழித்து மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவது சரியென்று சொல்வது மாதிரியான விவாதம் தானே இங்கு வேதசகாயகுமாரினால் முன் வைக்கபட்டிருப்பது? இப்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் இல்லை. தேவையுமில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்ததும், அது சார்ந்த இலக்கியங்களெழுந்ததும், அவற்றிலும் உன்னதங்கள் உள்ளன எனபதும் நிஜங்களல்லவா? எப்படி ஒதுக்க முடியும்? இந்த நிராகரணத்தின் நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

(15) இந்தப் பகுதி முரண்பாடற்றவிதமாக சில விடுபடுதல்களையும் , தவறான பகுப்புக்களையும் சுட்டிக் காட்டுவதோடு அமையும். இந்தக் காகட்டத்தை 1980க்கு மேலானது என்று கொண்டு துவங்குவதும் புரிதலைச் சுலபமாக்கும். இனப் படுகொலைகளும், பரிகாரமான யுத்தமும், புலப்பெயர்வுகளுமென்று அரசியல், சமூகக் களமாய் விரிகிறது இக்காலம்.
உணர்வின் பிரதிபலிப்பாக இலக்கியம் என்ற பொதுத் தன்மையை இலக்கியம் பெற்றது இந்த இரு தசாப்தங்களிலும்தான். இவற்றையும் 1981-90 என்றும் 1991-2000 என்றும் பிரித்துப பார்ப்பது நல்லது. முதலாம் பத்தில் இனக் கொடுமைகளும், வெளிநாடுகளுக்கான புலப் பெயர்வும் இலக்கியத்துக்கான உள்ளடக்கமாய் இருந்தன. சமூகம் குலைய, சிதறிய உதிரி மனிதர்களின் தொகை அதிகமாகி, அதுவே ஒரு சமூகப் பிரச்னையாக இக்கால கட்டத்தில் உருவானதாகக் கொள்ளலாம். புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றப்பாட்டை இக காலகட்டத்துக்கு உரியதாக்குவதுதான் சரி. அது இலக்கிய நயமற்று வெறும் ஒப்பாரிகளாகவும், புலம்பல்களாகவுமே இருந்தன. அவற்றில் நல்ல சில ஆக்கங்கள் இல்லாமலில்லை. இக்காலகட்டம் ஒருவகையில் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கானதாய் இருந்ததென்றும் கொள்ளப்பட முடியும். இரண்டாம் பத்தின் விஷேச அமசம் யுத்த மறுப்பும், தனி மனித சுதந்திரமென்ற கோஷமுமாகும். வெளி நாடுகளில் விளைந்த கலாச்சாரச் சிக்கல் மெல்ல அமைந்து அடங்கி வந்ததாய்த்தான் கொள்ள வேண்டும்.

(16) இந்த முதலாம் பத்துக்குரியவர்களே றஞ்சகுமார்,உமா வரதராசன்,எஸ்.எல்.எம்.ஹனி•பா, சட்டனாதன் போன்றோர். இவர்களில் றஞ்சகுமார், உமா வரதராசன், சட்டனாதன் ஆகியோர் குறித்து வேதசகாயகுமாரின் கட்டுரை சரியானதாகவேதான் சொல்கிறது. ஹனி•பா விடுபடல். இக்காலகட்டத்துப் படைப்பாக்கங்களின் மூலமாய் ஒருவரைத் தேர அல்லது நிராகரிக்க ஒரு ஆய்வாளருக்குள்ள உரிமையை நாம் மதிக்கிறோம். எமக்கு வேறு அபிப்பிராயங்களிருப்பினும், அதை மதிப்பது கருத்துத் தர்மம். எஸ்.எல்.எம்.ஹனி•பாவின் 'மக்கத்துச் சால்வை' கிழக்கிழங்கையில் தோன்றிய சிறந்த் ஒரு படைப்பு. இதில் வேதசகாயகுமாரோடு முரண் வேறு வகையானது. கருணகரமூர்த்தியை தளையசிங்கம் மரபில் வந்தவராக அவர் கொள்வார். அதுபோல் கலாமோகனைப் பற்றிக் கூறுகையில் கைலாசபதி மரபென்பார். இந்தப் பகுப்பு பொருத்தமற்றதும், அனாவசியமானதுமாகும். கைலாசபதியின் விமர்சன நோக்கு போக்குகளைவிட்டு ஈழத் தமிழிலக்கியம் வெகுதூரம் வந்து விட்டது. எம்.ஏ.நு•குமான்,, கே.எஸ்.சிவகுமாரன், சி.சிவசேகரம்,ந.ரவீந்திரன் என்று மாறுபட்ட விமர்சன் உலகுள் அது புகுந்து விட்டது. தளையசிங்கத்தின் தொடர்ச்சியிலும் யாரும் இன்று இல்லை. இன்றைய இலக்கியப் போக்கு மேலைனாட்டு இலக்கியப் போக்குகளை அடியொற்றியே செல்வதாகக் கொள்ளவேண்டும். கலாமோகனையும், மு.பொ.வையும் அவ்வாறு கொள்வது பொருந்தும். பொ.கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் இன்னும் யதார்த்த உலகை விட்டு பெருமளவு மாறவில்லை. அவர்களின் நவீனத்துவம் கட்டமைப்பை விடவும் மொழி சார்ந்த கூறுகளிலேயே தங்கியிருக்கிறது. றஷ்மி போன்றவர்கள் இரண்டாம் பத்துக்குரியவர்கள். சில சிறந்த சிறுகதைகளை எழுதிய பலபேர் இக்காலகட்டத்துக்குரியவர்களே. காலகட்டத்துக்கான தொகுப்புக்கள் வெளிவரும்வரை, மேற்தட்டு ஆய்வு மட்டத்தில் உள்ளோரால் இக்காலகட்டங்களைச் சரியாகவே மதிப்பிட்டு விடமுடியாது. தொகுப்புக்கள் வெளிவருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. முன்புதான் மனித சக்தி அச்சாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. இந்தியா நூல் வெளியாக்கத்தில் முன்னின்றது. இன்று கணினித் தட்டச்சு முறையும், தொழில்நுட்ப அச்சாக்க வளர்ச்சியும் பதிப்பு நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. புதிய பார்வைகளும், விமர்சனமுறையும் கொண்ட படைப்புக்களும், தொகுப்புக்களும் வெளிவரத் தொடங்கி விட்டன. அண்மையில் ஈழகேசரி கதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது நல்ல ஓர் உதாரணம். முனியப்பதாசன் போன்றோரின் தொகுப்புக்களும் வெளிவரும்போது ஈழத் தமிழிலக்கியத்தின் தரத்தை வெளியுலகம் அறியும்.
எம்.வேதசகாயகுமாரின் முக்கியமான ஒரு கட்டுரை இது. ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து ஈழத்தவராலே கூட இவ்வளவு விரிவாயும், ஆழமாயும் எழுதப்படவில்லையென்பதை நோக்குகின்றபோது இதன் அருமையை ஒருவரால் தெரியமுடியும். ஒரு குறிப்பிட்ட சிந்தனா வட்டத்துள் ஈழத் தமிழ் சிறுகதைகளை அடைத்து ஒரு மதிப்பீட்டை முன்வைத்ததே இதிலுள்ள முரண். மற்றும்படி செய்யப் பட்ட முயற்சி, காட்டப்பட்ட அக்கரைகள் யாவும் பாராட்டப்பட வேண்டியன. ஈழத்தவருக்கே முன்மாதிரியான முயற்சி என்றே இதைச் சொல்லலாம்.


(thanks: pathivukal.com)2000

சம்பூர்ண நிராகரணம்: 1

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை.

விசாரணை 1


பகுதி 1:

1) காலம் இதழ் 15இல் வெளியான எம்.வேதசகாயகுமாரின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை' பற்றிய கட்டுரை எனக்கு 2001 மார்கழியிலேயே வாசிக்கக் கிடைத்து விட்டது. அதன் மறு வாசிப்பு சிந்தனைகளுக்கும், அவசியமான தொகுப்புகளினதும், விமர்சனக் கட்டுரைகளின் மீள் வாசிப்பு யோசனைகளுக்குமாக இத்தனை கால விரயம் அவசியமாயிற்று. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிறபோது ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. கிடைத்த தொகுப்புகளையும், சொல்லப்பட்ட தகவல்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த்மான ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதே அது. அது ஈழத் தமிழ்ப் பரப்புக்குச் செய்யும் சகாயமாக நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. முன் முடிவுகளை நோக்கிய வாசிப்பு, ய்வுமுறைச் செலுத்துகைகள் அறிவுலகத் துரோகமாகவே கணிக்கப் படும். தான் பயிலாத கவசதாரியான துரியோதனன் யுத்த களத்தில் பட்ட அவஸ்தையும், அவமானமும் பற்றி வியாசர் அழகாக எழுதியிருப்பார்.கருத்தளவிலும் கவசதாரிகள் இருக்கிறார்கள். உண்மையான ஈழ நிலமைகளை தெரியாமலும் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் முடிவுகளைச் சென்றடைவது ஈழ இலக்கியத்துக்கு அபகாரமே செய்யும். உண்மையில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய இது மாதிரியான ஒரு நீண்ட கட்டுரை, பெரிய உபகாரமாக இருந்திருக்க வேண்டும். னால் எம்.வேதசகாயகுமாரின் கட்டுரை அவ்வாறு அமையவில்லையென்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது. ஓர் இந்தியத் தமிழ் வாசகனின் பார்வையூடாகக் கூடவா ய்வு முடிவுகளை வெளியிடக்கூடாதாவென்றால் அப்போதும் ஆம் தான் பதில். அது வாசகன் வேலையல்ல.ஆய்வாளன் வேலை. தகவல்களையெல்லாம் எடுக்கக் கூடிய தளத்திலிருந்துகொண்டு செய்யப் பட வேண்டியது. ஒரு பேச்சுக்காக வாசகனுக்கு அந்த உரிமையை ஒப்புக் கொண்டாலும், அப்போதும் அந்த வாசகனுக்கு ஈழத்து வரலாற்று, சமூக, அரசியல், மரபுப் பின்புலங்களில் போதுமான அறிவை அவசியமாக்குகிற விதி இருக்க வெண்டும்.

2) மார்க்ஸியத்தின் காலம் முடிந்து விட்டது, அதன் சித்தாந்த பலத்தில் வியாப்தி பெற்ற விமர்சன முறைமைகளும் காலாவதியாகிவிட்டன. திருவாளர்கள் கைலாசபதியும் வானமாமலையும் சிதம்பர ரகுநாதனும் கேசவனும் என்று அந்த வட்டத்தைச் சார்ந்த விமர்சகர்களும் ஆய்வாளர்களும் காமாகியும் விட்டார்கள். இனி மார்க்ஸிய இலகியமாவது விமர்சனமுறையாவது என்று வரிந்து கட்டிக் கொண்டு சிலர் வெளிக்கிட்டிருக்கிறார்கள். அவர்களோடு பத்தோடு பதினொன்றாக வேதசகாயகுமாரும் இப்போது. இவர்கள் சொல்வது போலவே கூட இருக்கட்டும். எனக்கொன்றுமில்லை. ஆனால் இந்தத் தளத்தில் வைத்து சில படைப்பாளிகளை ஓரங்கட்டியதைக் கூட இல்லை நிராகரண்யமே செய்து விட்டிருப்பதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருக்கிறது. என் அக்கறையுள்ள களம் இது. இது குறித்ததான தம் அதிருபதிகளை கட்டுரை, கடிதம் மூலம் யாரும் இதுவரை பதிவு செய்ததாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் இங்கே நான் பேசவே வேண்டும்.

3) ஈழத் தமிழ்ச் சிறுகதை மரபு குறித்திந்தியத் தமிழ் வாசகனின் புரிதல் போதாமைகளையும் இடைவெளிகளையும் கொண்டது என்ற ஒப்புமூலத்துடனேயே தன் ஆய்வை வேதசகாயகுமார் தொடக்கியிருந்தாலும் இப்படியான ஆய்வுடான அடைதல்கள் இயல்பிலும் இலகுவிலும் சந்தேகப்படும்படி ஆகி விடுகின்றன. சந்தேகத்தின் பலன் மாற்றணியினருக்கே சாதகமாவதுதான் நியதி. இன்னுமொன்று. வேதசகாயகுமாரின் இந்த நீண்ட கட்டுரை கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி கியோரின் விமர்சனமுறைமையிலுள்ள நேரிமைகளைச் சொல்வதை விடவும், ஏதோ சிலருக்குச் சில அநியாயங்கள் விளைந்து விட்டது போன்ற புலம்பலாக வந்திருப்பதுதான் ச்சர்யமாக இருக்கின்றது.

இம்மாதிரியான விளக்கப் போதாமைகளோடு முன்வைக்கப்படும் முடிவுகள் பர்ந்து பட்ட தமிழ் வாசகனிடத்தில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி, பொதுவாக ஈழத் தமிழிலக்கியம்பற்றி, தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி விடக் கூடாது என்பதற்காக சில விடயங்களை இங்கே விபரிப்பதே எனது நோக்கம். இதன் மூலம் சிலர் சம்பூர்ண நிராகரனம் செய்யப் பட்டிருப்பதையும் நான் மறுக்கிறேன். வரலாறு, சமூகம், அரசியல் பின்புலங்களில் இந்த விசாரிப்பைத் தொடங்கலாமென்பது என் எண்ணம். இது தேசிய இலக்கியம் மண்வாசனை போன்ற பிற கோஷங்களுக்கான பதிலாகவும் அமையும்.

பகுதி 2
4) 1931-40ல் காலகட்டத்திலேயே தேசிய இலக்கியம் அரும்பிவிட்டதென்பார் கனக்.செந்திநாதன் தனது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்கிற நூலில். இப்படி தசாப்தங்களாகப் பிரித்துப் பார்ப்பது ஒரு வசதிக்கான முறைமைதானே தவிர வேறில்லை. அதன்படி இந்த நாலாம் தசாப்தத்தில்தான் இலங்கையின் தேசிய இலக்கியம் அரும்பவே தொடங்குகிறது என்றாகிறது. தேசிய அரசியலின் விழிப்புணர்வுடனேயே தேசிய இலக்கிய விழிப்புனர்வும் சாத்தியம். இலங்கை சுதந்திரம் அடைந்திராத அக்காலத்தில் சுதந்திரத்துக்கான ஏக்கமோ போராட்டமோ இல்லாதிருந்த வேளையில் தமிழகம் தாய் நாடாகவும் இலங்கை சேய் நாடாகவுமான பாவனையொன்று படித்தோர் இலக்கியவாதிகள் மத்தியில் கூட ஆழமாக வேரூன்றியிருந்த நிலபரத்தில் தேசிய இலக்கியமென்ற கருத்துருவாக்கம் அரசியற்பாங்கானதுதான் முதலில். படைப்பு நிலை எவ்வளவுதான் விடுதலைத் தளத்தில் நிக்ழ்வதாய் இருந்தாலும் தேசிய இலக்கியமென்ற கோஷத்தில் முதலில் இலக்கியம் தானுண்டு. தேசிய ஈழத் தமிழ் இலக்கியமாகவும் அது தமிழிலக்கியமாகவும் பின் அதுவே உலக இலக்கியமாகவும் பரிணாமம் அடைய முடியும்.ஆனாலும்..தேசிய இலக்கியமென்று வந்து விட்டால் அதன் நோக்கே முதலில் அரசியல்தான். இதை விளக்கமாகச் சொன்னால் தேசிய இலக்கியமென்ற அடையாளமுள்ள ஈழத் தமிழிலக்கியம் உருவாவதன் முன்னர் அதற்கும் மூலமான இது ஈழத் தமிழிலக்கியம், இது இந்தியத் தமிழிலக்கியம் என்ற பிரிகோடற்று ஏகத் தமிழ்ப் பரப்பாய் இருந்த சூழ்நிலைமையில் தனித்தனி இலகியத்தின் மீது வெளிச்சமே அப்போதுதான் அடிக்க ரம்பிக்கின்றது. இந்தச் சூழ்நிலைமையை மிக அழகாகவே சொல்வார் ஏ.ஜே.கனகரட்னா. இங்கிலாந்து இலக்கியத்தையும் அமெரிக்க இலக்கியத்தையும் குறித்து பிலிப் ரார் எழுதிய 'அமெரிக்க இலக்கியம்' என்ற நூல் பற்றிப் பேசும்போது 'அமெரிக்க இலக்கியத்துக்குத் தனித் தன்மைகள் இருப்பது போன்று ஈழத் தமிழ் இலக்கியத்துக்குத் தனித் தன்மைகள் இல்லையென்பதே உண்மை. வருங்காலத்திலே ஈழத் தமிழ் இலக்கியம் தனித் தன்மைகள் வாய்ந்ததாக அமையுமென்பதும் ஐயம்' என்கிறார். ஈழத் தம் இலக்கியம் அப்போதிருந்த நிலைமையை அனுமானிக்க இது போதும். இருந்தாலும் இன்னொரு உதாரணம். ஈழத்திலே தேசிய இலக்கியப் பிரச்னை தோன்றிய போது தேசிய இலக்கியமென்ற ஒன்றே இருக்கவில்லையென சிலர் சொன்ன அபிப்பிராயத்தை அப்படியே ஏற்றுப் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறார் ஏ.ஜே.க். இவ்வாறிருந்தது அன்றைய ஈழத் தமிழிலக்கியத்தின் நிலைமை.

இந்த நிலை¨மாயைத் தாண்டித்தான் ஈழத் தேசிய இலக்கிய உணர்வு அரும்புகிறது. கன செந்தி நாதன் குறிப்பிட்டபடி தேசிய இலக்கியத்தின் அரும்பல் 31-40க் காலகட்டம் கடந்து ஏற்பட்டிருக்குமோ என்ற் கூட ஐயுற வேண்டியுள்ளது. அந்த அரும்பல் காலந்தாழ்த்தி ஏற்பட்டிருப்பதும் சாத்தியம்தான்.

அடுத்த காலகட்டம் 41-50. இதை மறுமலர்ச்சிக் காலமென்பார் செந்திநாதன். இதையும் சமூக நிலை சார்ந்த கணிப்பாகவே கொள்ளவேண்டும். இம்மறுமலர்ச்சி கூட தமிழக நிலைமைகளின் பிரதிபலிப்பேயாகும். இக்காலத்தில் இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம், சோ.சிவபாதசுந்தரம், சம்பந்தன் போன்றோரின் எழுத்துக்கள் தோன்றுகின்றன. எழுத்திலும் நடையிலும் சில மாற்றங்களை இக்காலகட்டத்திலே அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. எனினும் ஈழத் தமிழிலக்கியம் இன்னும் தமிழகப் பட்டதாய், பண்டிதர்களின் திக்கம் சார்ந்ததாயே இருக்கிறதென்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆயினும் எழுத்தாண்மை மிக்க புதுமைப்பித்தனது படைப்புகள் போலுமோ, அதற்கு முந்திய பாரதியின் ஆக்கங்கள் போலுமோ தோன்றவில்லையென்பது முக்கியமாய் கவனிக்கப் படவேண்டியது. கல்கி, குமுதம் வகை எழுத்தினை மோசமாகப் பின்பற்றியவர்களே உருவாகினார்கள்.

உருப்படியான மாற்றமெதுவும் நிகழ்ந்ததெனில் அது அடுத்த பத்தில் தான் நிகழ்ந்தது. அந்தப் பத்தில் புள்ளியாய் விழுந்த வருஷம் 1956. இதுவரை காலத்தில் அரசியல் சமூகத் தளங்களில் மார்க்ஸிய சித்தாந்தத்தின் தாக்கம் பலமாகவே இருந்தது. தென்னிலங்கையில் மற்றுமில்லை.

வடவிலங்கையிலும் அது அளப்பரிய வளர்ச்சி அடைந்திருந்தது. இதுகூட தமிழக அல்லது இந்திய சமூக அரசியலின் பாதிப்பில் அதே மாதிரியில் நிகழ்ந்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும். சுபாஷ் சந்திரபோசும், காந்தியும், நேருவுமே ஈழத் தமிழரின் அரசியற் தலைவர்களாக இருந்த விசித்திரத்தை இது புரிவிக்கும். இந்த நிலைமையில்தான் 1956 வந்தது. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப் படுகிறது. வெளி நாட்டு எண்ணெய்க் கொம்பனிகள் , பிரிட்டிஷார் வசமிருந்த திருகோணமலைத் துறைமுகம் யாவும் தேசிய மயமாக்கப் படுகின்றன. அரசியல் சமூகம் யாவும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஒரு பக்கத்தில் ஜன நாயகத்துக்குப் புறம்பாய் தமிழ்ச் தேசிய இனத்தை நசுக்கும் சட்டவாக்கம். மறுபக்கத்தில் ஆதிபத்தியமுள்ள ஒரு சுதந்திர நாடாய் இலங்¨காயைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழினம் நடுங்கிப் போயிற்று. அதன் அடியந்தமான நிலைபேற்றுணர்வு அப்போது கேள்விக்குள்ளானது. தமிழினத்தின் நீடுபெருந்துயில் கலைந்தது. அதை மெளனப்புரட்சியென்பார் செந்தி.


(thanks: pathivukal.com)2000

மு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும்...

ஏறக்குறைய மூன்றரை மாதங்களாகிவிட்டன மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு ஊட்டியில் நடைபெற்று. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு கட்டுரை அவசியமா என்றுகூட ஒரு யோசனை என்னிடத்தில் தோன்றியதுதான். ஆனால் காலச்சுவடு- 43 இல் வெளியான நாஞ்சில்நாடனின் கட்டுரைக்கான ஆசிரியர் குறிப்பும், வாலாக நீண்ட செய்திகளும் இன்னும் விவாதத்துக்கும் ஆய்வுக்கும் இவ் விஷயம் இடமளிப்பதைத் தெரிவிப்பதால் இக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

முதலிலேயே நான் எழுதியிருக்கவேண்டும். தவறிப்போய்விட்டது. கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்தான் அங்கு நடைபெற்ற விசயங்கள் குறித்தான கட்டுரைகளும் கடிதங்களும் வெளிவரத் தொடங்கின என்பது ஒன்று. எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்ததே தவிர அதுபற்றி எழுத எனக்கு அவகாசமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இனொன்றாக என் கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த அவகாசத்தை நான் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவசியமானது. இது ஒருவகையில் ராஜநாயகத்துக்கானதுதான்.சும்மா கிடந்த சங்கை....என்று ஏதோ சொல்வார்களே, அதைச் செய்ததே ராஜநாயகம்தானே?

ராஜநாயகத்தை முதன்முதலாக ஊட்டியிலேயே அறிமுகமானபோதும் நிறைய தமாஷாகப் பேசக் கூடிய, அவ்வப்போது இலக்கியவாதிகளைப் பற்றியும் இலக்கிய விவரங்களைப் பற்றியும் சொல்லக்கூடிய அவரின் குணவியல்பால் அவருடன் எனக்கு ஒரு அணுக்கமே ஏற்பட்டிருந்தது.அவரது கட்டுரை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அமர்விலிருந்த அத்தனைபேரிலும் ஒன்றில் அது சாட்டியது குற்றம்; இல்லையேல் அறிவு ஓர்மம் அற்றவர்களாய் செய்தது கேலி.

அபாண்டங்களை வீசுவதற்காகவே அக் கட்டுரை பிரயத்தனத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிந்தும்கூட, எனக்கு
அவர் மீது பெரிதான கோபமேதும் அந்தக் கணத்தில் தோன்றிவிடவில்லை.அவர் சரியான காரணத்துக்காகவேனும் அடிபட்டிருந்தார் என்பது வெளிப்படை. அதனால் அத்தனை அபாண்டங்களையும் ,குற்றச்சாட்டுக்களையும் ,உண்மையைத் திரிபு படுத்திய தவறுகளையும் அக் கட்டுரையையே உதாசீனப்படுத்திவிடுவதன் மூலம் மறந்துவிடலாமென்பதே என் கருத்தாகவிருந்தது. நண்பர்கள் தவறுசெய்கிறபோதும் இப்படித்தான் நான் செய்வதுண்டு. ஆனால் காலச்சுவடு-42இலும் அக் கட்டுரை வெளியாகியிருப்பதை ஒரு நண்பர் காட்டியபோது, ஊட்டி கருத்தரங்கில் தனக்கு நிகழ்ந்ததாக அவர் கருதிய அநியாயத்தை இலக்கிய உலகுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்ததாய்க்கொள்ள என்னால் தொடர்ந்தும் முடியாது போயிற்று. மேலும் அந்த விவகாரமே வேறொரு பரிமாணம் எடுத்திருந்ததும் தெரிய எனக்கு விசனமாகிப் போயிற்று.

ஊட்டியில் நிகழ்ந்தவற்றினது சரவணனது விளக்கம் , அக் கட்டுரையிலிருந்த 'அவதூறு' என்ற சொல் குறித்த மாலனது வியாகூலம், அதற்கு திண்ணை ஆசிரியர் குழுவிலுள்ள கோபால் ராஜாராமின் விளக்கத்தையும் பார்த்தபின் ,செங்கள்ளுச் சித்தர் , டி.ஜே.தமிழன், வ.ந.கிரிதரன் ஆகியோர் எழுதியபின் ,மேலே 'கல்வெட்டுப் பேசுகிறது' இதழில் தமிழ்மணவாளன் , திண்ணை . கொம்'மில் நாஞ்சில் நாடன், க.மோகனரங்கன் ஆகியோர் தலையிட்டபின்னர் அக் கருத்தரங்கில் மூன்று நாட்களும் முழுமையாகக் கலந்துகொண்டவன் என்கிற அடிப்படையில் அங்கு உண்மையில் நடைபெற்ற சம்பவங்களை இறுதியாக ஒரு முறை வெளிப்படுத்துவது என் கடமையென்பதை உணரலானேன்.இது எதையாவது சாதித்துவிடும் என்கிறமாதிரியான எண்ணமேதும் எனக்கில்லை. இது இந்தமாதிரியான உடும்புபிடி விமர்சனங்களுக்காவது முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்று பெரிதான விருப்பப்பட எனக்கு உரிமை இருக்கிறது.

கருத்தரங்க முதல் நாளான மே 4ம் தேதி காலை அமர்வில் மு.த.வின் சிறுகதைகள் குறித்தான 'சொல் புதிது'   ஆசிரியர் சரவணன் 1978இன் கட்டுரை வாசிப்பும், அதனைத் தொடர்ந்து விவாதமும் நடைபெற்றன. தொழுகை, கோட்டை  ஆகிய கதைகள் பலராலும் உயர்வாகச் சொல்லப்பட்டன. ஆனாலும் மு.த.வின் படைப்பிலக்கிய நூல்கள் கிடைப்பதிலுள்ள அரிது காரணமாய் பலரும் பல காலத்துக்கும் முன் தாம் வாசித்திருந்த நினைவுக் குறிப்புகளிலிருந்தே கருத்துக் கூறினார்களென்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வெங்கட் சாமிநாதனும் நானும்கூட அப்படியே செய்தோம். எப்படியோ ராஜநாயகத்தின் பிரச்னை துவங்கிய இரண்டாம் நாட் காலை அமர்வளவில் அங்கு , வேதசகாயகுமாரிடமிருந்து என நினைக்கிறேன் , கிடைக்கப்பெற்ற 'புது யுகம் பிறக்கிறது'என்கிற மு.த.வின் சிறு கதைத் தொகுப்பு பலராலும் வாசிக்கப் பெற்றிருந்தது. மு.த.வின் இலக்கிய ஆளுமை குறித்தான 'மு.தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை' என்கிற கட்டுரை வாசிக்கப்பட்டபோது அவர் படைப்பாற்றல்பற்றிய ஒரு தெளிவில் சபை இருந்ததை நான் கவனித்தேன்.

மிக ஆழமாக இருந்தது வேதசகாயகுமாரின் கட்டுரை. அத்துடன் நீளமானதாகவும். அது முன் முடிவுகளை  நோக்கிக்கூட நகர்த்தவில்லை. விவாதத்துக்கான , ஆய்வுக்கான வெளியையே உருவாக்கியிருந்தது. நேரத்தை மீதப்படுத்தி விவாதத்துக்கு இடம் விடுகிறவகையில் கட்டுரையை ஆங்காங்கே வாசித்தும், ஆங்காங்கே கருத்துக்களை சுருக்கமாக எடுத்துரைத்தும் தம் பங்கைச் சீராக நிறைவேற்றினார் அவர். 'தொழுகை' சிறுகதைபற்றி விளக்கி, அதன் அடிநிலைச் செய்தியாகக் கொள்ளக்கூடிய பாலுறவுப் பிரச்னையை தமிழ்ச் சமூகமும் இலக்கியமும் எதிர்கொண்டமைபற்றிய பிரஸ்தாபம் வந்தபோதுதான் ராஜநாயகத்தின் தலையீடு அங்கே நிகழ்ந்தது.

அம்மா வந்தாள், மரப்பசு,இதயநாதம் நாவல்களின் சமூக பெண்ணிய நிலைப்பாடுகள்கூட ஒப்புமைக்காக சீர்தூக்கப்பட்டுக்கொண்டிருந்தன அந் நேரமளவில்.

ராஜநாயகத்தின் தலையீட்டை ஒரு விவாதத்துக்குரியதாகவே எண்ணினேன். ஆனால் அவரின் கருத்து வெளிப்பாடுகள் 'தொழுகை' சம்பந்தப்படாத வெறும் பாலுறவு சம்பந்தமாகிப்போனது. முட்டள் தாசுவும், குருவி மண்டையனும்,வாட்ச் மென் பேபியும், அவன் மனைவி வெரோணிக்காவும்பற்றி முதல் நாட் காலையில் நாங்கள் அமர்வுக்குத் தயாராகிக்கொண்டு இருந்தபோதுகூட ஒருமுறை ராஜநாயகம் விளக்கமாகச் சொல்லியிருந்தார். ஒரு ப்ளே போய் ஜோக் மாதிரியில் சிலர் அதைச் சிரித்து ரசித்தது உண்மை. அதிலொன்றும் பெரிதான தப்பில்லைத்தான். ஆனால் அமர்வில் அவரது பேச்சு அசிங்கமாக உணரப்பட்டது. அது நாகரீகத்தின் எல்லையைக் கடந்திருந்தது. கழுதையை தாசு புணர முனைந்திருக்கிறபோது , அவ்வாண்கழுதையின் குறி ஒன்று / ஒன்றரை அடி நீளத்துக்கு நீட்டி நின்றிருந்ததைப் பார்த்துவிட்டு , 'இது கல்யாணி இல்லையடா, தாசு; கல்யாணசுந்தரம்டா' என்று மண்டையன் கூறியதையெல்லாம் அங்க அசைவுகளுடன் அவர் சொன்னபோது சபையே உறைந்துபோனது. வேதசகாயகுமாரும் இன்னும் சிலரும் அவரதுபேச்சை திசைதிருப்ப முயற்சியெடுத்தபோதும் ராஜநாயகம் முட்டாள் தாசுவின் வேசத்தை விவரிப்பதிலேயே முனைப்பாயிருந்தார். அதற்குமேலே அமர்வை நடத்திக்கொண்டிருந்த ஜெயமோகனுக்கு அவரை வெளியேறச் சொல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ராஜநாயகம் எழுதியிருக்கிறார், அது
கவுரவர் சபையாக இருந்ததென்று. சபை வாய் இழந்து மவுனம் பூண்டிருந்த்தென்ற புறணி வேறு. அப்படிச் செய்திருந்தால் முட்டாள் தாசுவுக்கு வக்காலத்து வாங்கியதுமாதிரி ஆகியிருக்காதா, ராஜநாயகம்?

மட்டுமில்லை. சபை , அவரை ஜெயமோகன் வெளியேறச் சொன்ன பின்னரும் உறைந்திருந்ததின் காரணம், அவரது முட்டாள் தாசு பற்றிய விளக்கமும், கணவனோடு புணரும்போதுகூட உணர்ச்சிகளின் உச்சவேளையில் , 'யேசுவே, என்னை ரட்சியும்....யேசுவே என்னை ரட்சியும்' என்று பரவசப்பட்டுக்கொண்டிருந்த வெரோணிக்காவின் நிலைமையையும் ஒரு அரங்கத்திலே சொல்லக் கேட்ட அதிர்ச்சியில்தான் என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும்.

அவரது பரவசத்தை நிறுத்துமளவுக்கே ஜெயமோகனின் தலையீட்டை சபை விரும்பியிருந்தது. அதனால்தான் அவர் வெளியேறாது தொடர்ந்தும் சபையில் இருந்தபோதும் யாரும் எதுவும் சொல்லாதிருந்தனர். ஜெயமோகன்கூட பிறகு அவரை வெளியேறச்சொல்லி வற்புறுத்தவில்லையே. சபை திருப்திகொண்டது.

விவாதம் / விளக்கம் வேறு திசையில் மேலே விரிந்தது. அதற்கு மேலேயும் வெகுநேரம் கழித்தே அவர் வெளியே சென்றார். யுவன் சந்திரசேகர் போல் , நிர்மால்யாபோல் ஏதோ ஒரு காரணம்பற்றி அவர் வெளியே செல்வதாகவே நான் நினைத்தேன். பின்னர் உணவு வேளையில் பயணப் பை சகிதம் அவர் வந்தபோதுதான் , ஊருக்குப் புறப்பட தயாராகிவிட்டார் என்பது தெரிந்தது. ராஜநாயகம் நம்பமாட்டார், அக் காட்சி எனக்கு மிகவும் மனவருத்தமாக இருந்தது. அவர்மீது எனக்கு கோபமோ மனஸ்தாபமோ இல்லை. நடந்தது ஒரு தவறு என்பதைத் தவிர பிரமாண்டமான வேறு எதை நான் நினைக்கவேண்டும்? அவர் சபையைவிட்டு வெளிவந்த பிறகு , ஜெயமோகன் அவரை வேண்டுமானால் பேசவிடாது தடுத்திருக்கலாமே தவிர வெளியேற்றியிருக்க வேண்டியதில்லையென நாங்கள் சொன்னதைத் தெரிய அவருக்கு வாய்ப்பே இருக்கவில்லை.

கட்டுரையைப் பார்த்தபோது அவர் நொந்திருந்தது தெரிந்தது. சரி. அதற்காக அவர் ஏன் அபாண்டங்களைச் சுமத்தவேண்டும்? ஜெயமோகன் மட்டுமே, கூட வேதசகாயகுமாரும், அமர்விலே பேசிக்கொண்டிருந்ததாகவெல்லாம் எழுதியிருக்கிறார். பாதி கருத்தரங்கைப் பார்த்துவிட்டு இப்படியெல்லாம் எழுத்லாமா, ராஜநாயகம்? இறுதி அமர்வில் மு.த.வினிலக்கியக் கோட்பாடான மெய்யுளை சமகால இலக்கிய உலகுக்குப் பொருத்தக் கூடிய சாத்தியங்களை /அசாத்தியங்களையெல்லாம் ஈழம் / தமிழ் நாடு / புகலிடத் தளங்களில் முன் வைத்து நான் பேசியது அவருக்குத் தெரியுமா? வெ.சா., அந்த இறுதி அமர்வு சீரான சீதோஷ்ண நிலையில் குருகுலத்தின் திறந்த வெளியில் நடைபெற்றபோதுதான் மு.த.வுக்கும் தனக்கும் இடையிலிருந்த கடிதம், இலக்கிய வெளியீடுகள் குறித்த தொடர்புகள்பற்றி விரிவாகப் பேசினார்.

ஜெயமோகன் நெடுகவும் பேசிக்கொண்டிருக்கிறார் , அவர் மனனிலைப் பிளவு பட்டிருந்தவர் என்கிறார். உண்மையில் தான் வெளியேற்றப்பட்டதை - அதற்கான எதிர்ப்பை - பகிரங்கப்படுத்துவது ஒன்றே அவரது நோக்கமாக இருந்ததா? அப்படியானால் இதெல்லாம் என்ன அவசியங்கருதி எழுதப்பட்டன? ஜெயமோகன் அவரைப்பற்றிப் பேசினார், இவரைப்பற்றிப் பேசினார் என்பது குறித்த அவரது பதிவு மகாமோசமானது. மட்டுமில்லை. பொய்யானதும். நீங்கள் குறிப்பிட்ட சில விசயங்களை அவர் பேசினார்தான். அதுவும் அமர்வுக்கு வெளியே. நண்பர்களுக்கிடையில். ராஜநாயகமும் நண்பராக இருந்து கேட்டுவிட்டுத்தான் இப்படி எழுதியிருக்கிறார். அதுபற்றி இங்கே பிரச்னை இல்லை. ஆனால் 'ராமசாமியின் பொயிஷன்'என்று எப்போதும் அவர் சொல்லியதில்லையே. ராமசாமியென்றே சு.ரா.வை சில இடங்களிலே குறிப்பிட்டிருந்தாலும் மு.த. விஷயத்தில் சு.ரா.வின் அணுகல் பல நிலைகளிலும் பூர்வாங்க முயற்சியாகவும், வழிகாட்டு நிலைகளையுடையதாகவும் உயர்வாகவும்தானே பேசினார்?

ராஜநாயகத்தின் முப்பது வருஷ இலக்கியப் பரிச்சயம் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட்டுவிட்டமை கொடுமை.

 என் சுயத்தை வெளியிடும் 'சுய'மான கட்டுரை இது.

திண்ணை.காம்

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...