Friday, December 25, 2009

இனியும், தமிழர் அரசியலும்

இனியும், தமிழர் அரசியலும்


வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும்.

சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை.

ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதையே சுட்டிநிற்கிறது. எமக்கு அரசியல் தீர்க்கதரிசனம் வேண்டாம், ஆனால் அரசியலில் கடந்த காலங்களில் நடந்தவற்றை ஒரு மறுஆலோசனைக்கு உட்படுத்தி புதிய ஒரு மார்க்கத்தைக் கண்டடையும் சாதாரணமான புத்திசாலித்தனமாவது இருந்திருக்கவேண்டும். தமிழர், தமிழ்மொழி, தமிழ்மண் என்று சிந்திப்பதற்கான உணர்ச்சித் தடம், அந்த மிகச் சிறிய புத்திசாலித்தனத்தை அடையத் தடையாக இருந்திருக்கிறதோ என நினைத்தால் அதில் தப்பில்லை.

ஒரு பெரும் அழிச்சாட்டியத்தின் பின் முடிவடைந்திருக்கிற இலங்கைத் தமிழரின் அரசியற் போராட்டம் சொல்லிக்கொண்டிருக்கிற பாடம், அது தன் அழிவுக்கான ஒரு கூறினை மூலத்திலேயே கொண்டிருந்தது என்பதுதான். அதை இனங்காணுவதன் மூலமாகவே ‘இனி’ என்ற காலத்தில் தமிழரின் வாழ்வு தக்கவைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

வரலாற்றை மாமனிதர்கள் உருவாக்குகிறார்கள் என்ற கருதுகோள் நவீன காலத்துக்கு முற்பட்டுக் கிடந்த மனித சிந்தனையில் இருந்தது. அப்போதும் வரலாறு தனிமனிதர்களாலல்ல, சில சமகால உந்துசக்திகளின் விசையைப் புரிந்துகொள்ளக்கூடிய தனிமனிதர்களாலேயே மாறுதடத்தில் செல்லவைக்கப்படுகிறது என்ற மாற்றுக் கருத்துக்கள் இருந்தே வந்தன. சமூக அமைப்பே அரசியலைத் தீர்மானிக்கிறது என்ற முடிவை கார்ல் மார்க்ஸ் முடிவை விஞ்ஞான ரீதியாக முன்வைப்பதன் முன், இந்தக் கருத்தை மேலோட்டமாகவேனும் கூறியவர்கள் இருந்திருக்கிறார்கள். ஹெகல் சொன்னவற்றிலிருந்தான ஆதாரத்திலிருந்து கண்டடையப்பட்டதே மார்க்சியம் என்பது இதற்குச் சரியான உதாரணமாக அமையும்.

மார்க்ஸ் ஒருமுறை சொன்னார்: ‘மனிதர்கள் தமது வரலாற்றை தாமே உருவாக்குகிறார்கள் என்பது சரிதான். ஆனால் தமது விருப்பத்திற்கேற்றபடி அது அமையக் காண்பதில்லை. அது அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட சூழலிலேயே அமைகிறது. கடந்த காலத்திலிருந்து வந்துசேர்ந்ததும், கொடுக்கப்பட்டதும், கடத்தப்பட்டதுமான சூழல் அதை அமைக்கிறது.’

ஒரு வரலாற்று மாற்றத்திற்கான போராட்டத்தில் சூழல் பெறும் முக்கியத்துவத்தை இது ஆணித்தரமாகக் கூறுகிறது. தமிழருக்கு ஒரு கட்டத்தின்மேல் கொடுக்கப்பட்டிருந்தது ஆயுதப் போராட்டத்துக்கான சூழலல்ல. ஆனால் அந்தச் சூழலிலேதான் விடுதலைப் புலிகளால் விமானப்படைப் பிரிவு உருவாக்கப்படுகிறது என்பது மிகமோசமான அரசியல் சூழலை சாதகமானதென்று பிழையாகப் புரிந்துகொண்டதன் செயற்பாடாகக் காணக்கிடக்கிறது.

இலங்கையில் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேசமும் மௌனியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது என்ற பிரலாபம் எம்மவரில் பலபேரிடத்தில் உண்டு. ஆனால் இது தவிர்த்திருக்கப்பட முடியாதது என்பதுதான் கொஞ்சம் வரலாற்றை உற்றுநோக்குகிறபோது தெரியவருகிற உண்மை.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதுதான் மனித இனம் இறுதியாக அடைந்திருக்கிற அரசியல் கட்டமைப்பு. இது யாருக்குச் சேவகம் செய்கிறது என்பது வேறு விஷயம். அது சமூகத்தின் ஒரு பகுதியாரிடம், மூலதனம் கையிலிருக்கிற ஒரு வர்க்கத்திடமே சென்று சேர்ந்து அடிமையாயிருக்கிறது என்பது மெய். ஆனாலும் அது முந்திய பிரபுக்கள் வமிச, அரச வமிச ஆட்சிகளைவிட உன்னதமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கு மாறான எந்த அரசியல் அமைவையும் சர்வதேசம் தீர்க்கமாக எதிர்க்கிறது. நாடாளுமன்றங்களின் தாய் என விதந்துரைக்கப்படும் பிரித்தானியாவில் இந்த ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் ஒரு நூற்றாண்டாக நடந்ததாய்க் கொள்ள முடியும். மிகப்பெரும் பலிகளற்று நடந்த இந்தப் போராட்டத்தின் பின் அடையப்பட்ட நாடாளுமன்ற அரசியல் முறையை அது இலேசுவில் மாற அனுமதித்துவிடாது என்பதுதான் இலங்கை விவகாரத்தில் நடந்திருப்பது. அதற்கு மாற்றான எதுவும் தன் மூலதனப் பலத்தை அசைக்கும் அரசியலாகும் வாய்ப்பிருப்பதை அது சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் மௌனத்தை நான் இந்த வகையிலேதான் விளங்கிக்கொள்கிறேன்.

இலங்கை அரசின் ஒப்பறேசன் லிபரேசன் ராணுவ முன்னெடுப்பில் யாழ்ப்பாணத்தை இழந்து வன்னி மண்ணை அடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, அந்த மண்ணகப் பகுதியைத் தமிழீழம் என்றும், தமது அரசியற் செயற்பாட்டுக்கான உள்ளக கட்டமைப்பை உருவாக்கி, தமிழீழ நீதிமன்றம், தமிழீழ வங்கி, தமிழீழ காவற்படையென இயங்கியும் கொண்டிருந்ததொன்றும் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததல்ல என்பது எல்லோருக்குமே ஒப்பக்கூடியது. கடற்படை, வான்படையெல்லாம் மிகமிகவதிகமான ஜனநாயக மீறல்கள். உண்மையாகவே சுதந்திரம், உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு மக்களினத்தின் மீது அதன் போராட்டக் காலகட்டத்தில் சர்வதேசத்தினால் காட்டப்பட்டிருக்க்கக் கூடிய அனுதாபம், ஆதரவுகளை தமிழ்மக்கள் இழந்து நின்றதற்கு வேறு காரணமில்லை. அது சிங்களத்தின் ராஜதந்திரத்தில் கதிர்காமர்மூலமோ, அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் மிகஅதிகாரம் வாய்ந்த பதவிகளில் அமரக்கூடிய செல்வாக்குடையோரின் உறவுக்காரர்களான ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள்மூலமோ அடையப்பட்ட நிலைமையில்லை. மாறாக, தமிழினம் ஜனநாயக கட்டுமானத்தை சர்வதேசமளாவிய ரீதியில் உடைத்துநின்றதே காரணமாகின்றது.

தமிழினத்தின் உரிமைக்கான ஒரு போராட்டம் அவசியமாக இருந்தது என்பதில் எனக்கு அபிப்பிராயபேதமில்லை. ஆனால் அதைக்கூட சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை, அக்கிரமங்களின் காரணமானதாயே எனக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடிந்திருக்கிறது.

போராட்டம்பற்றிய எனது கருத்து, அதுவே சிங்கள பேரினவாதத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவைப்பதற்கான உபாயமென்றே நான் கருதியிருந்தேன். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கான பல்வேறு வலுவான காரணங்கள் இருந்தபோதும், போராட்டத்தை உளவளவிலேனும் நான் அங்கீகரித்ததின் உண்மையான காரணம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், எனது போராட்டத்தை அல்லது எனது போராட்டத்தின் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள் செய்துகொண்டிருந்தார்கள் என்றே நான் கருதியிருந்தேன் என்றுகூடக் கூறலாம். இதுவே பலரது நிலைப்பாடாக இருந்தது என்பதையும் நான் அறிவேன்.

மக்கள் புலிகளின் பலத்தை பூதாகாரமாக நம்பவைக்கப்பட்டிருந்தார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்த தமிழ் மக்களிடம் வந்தடைந்த ஒலிஒளிப் பேழைகள் அதையே சூட்சுமத்தில் செய்துகொண்டிருந்தன. ஆனையிறவு, முல்லைத்தீவுக் களங்களில் புலிகள் அடைந்த வெற்றி அவர்களது வீரதீரங்களை தமிழ் மக்களுக்குக் காட்டிநின்ற அதேவேளையில், எதிரிகளுக்கு அவர்களது யுத்த முறைகளைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்ததை யாருமே உள்வாங்கிக்கொள்ளவில்லை.

மட்டுமில்லை. வன்னி உண்மையில் அவர்களது பதுங்குகுழியாகவே இருந்தது. அதை உணர முடியாததே விளைவுகளை இன அழிவுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சொந்த அழிவுக்குமே இட்டுச்சென்றிருக்கிறது. இந்தத் தோல்வியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆயும் தேவை இன்று இலங்கைத் தமிழருக்கு உண்டு. தமிழர்தம் தோல்விகளை சிங்களப் பேரினவாதத்தின் மூர்க்கத்தின் விளைவாகக் காணாமல், சூழலுக்கான, அதாவது சர்வதேச அரசியல் போக்கின் சூழலுக்கான, விசைகளுடன் பொருந்திப் போகாததின் விளைவாகப் பார்ப்பதே சரியான மார்க்கமாக எனக்குத் தெரிகிறது.

இலங்கைத் தமிழர் என்கிறபோது, இலங்கையிலுள்ள தமிழர்களே முதன்மையாகக் கருதப்படவேண்டுமென்கிற விதி முதன்மையானது. அவர்களது அபிலாசைகள், தேவைகள், பலங்கள், சாத்தியங்கள் என்பவற்றிலிருந்து மார்க்கம் கண்டடையப்பட வேண்டும்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவில் நேசதேசப் படைகள், குறிப்பாக ரஷ்ய படைகள், ஜேர்மனிக்குள் நுழைந்தபோது அங்கே ஸ்வஸ்திகா கொடி பறந்துகொண்டிருந்த பல வீடுகளிலும் அவை அப்புறப்படுத்தப்பட்டிருந்ததோடு சிலவீடுகளில் நேசதேசக் கொடிகளே  பறக்க விடப்பட்டிருந்தனவாம். இன்னும் சில நாஜி ஆதரவாளர்களது வீடுகளில் நேசதேசப்படைகளை வரவேற்கும் வாசகங்களைத் தாங்கிய பதாகைகள் பறக்கவிடப்பட்டிருந்தனவாம். அதேபோல இன்று எழும் புலிகளுடனான மாறுபாட்டுக் கருத்துக்கள் புலத்திலும் சரி, புலம்பெயரந்த இடத்திலும் சரி பொய்மையின் பிரதிமைகளாக உதாசீனப்படுத்தப்பட வேண்டுமென்பதை மிக வற்புறுத்தலாக இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்னுமொன்று. புலிகள் பலஹீனமடையவேண்டுமே தவிர அவர்கள் தோற்கடிக்கப்படக் கூடாது, அது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக ஆகக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று மெய்யாலுமே வருந்தியவர்கள் சிலரை எனக்குத் தெரியும். புலிகளை முற்றுமுழுதாக எதிர்த்த ஷோபா சக்தி போன்றவர்களோடுகூட எனக்கு பல விஷயங்களில் மாறுபாடில்லை. அவர்களது எதிர்ப்பும் நிலைப்பாடும் சத்தியமானது. ஆனால் இன்று அரசாங்க ஆதரவு என்கிற கோஷத்தை முன்னெடுக்கும் மோகவிலை போனவர்களிடம் எனக்கு நிறைய வழக்குகள் உண்டு.

இலங்கையை தன் சொந்த நாடாக அதன் தேசிய கீதத்தை இசைக்க சுகனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதை உணர ஒரு பக்குவம் வேண்டும். நான் உணர்கிறேன். என் போராட்டம் விடுதலைப் புலிகளின் அழிப்போடு முடிந்துவிடவில்லையாயினும் அத்தகு மனநிலை எனக்கு உடன்பாடானதுதான். ஆனால் தம் நெற்றிகளில் தமது எதிர்ப்பின் அளவுக்கான அல்லது அதற்கும் அப்பாலான ஒரு தொகையை மர்மமாய் எழுதிவைத்துக்கொண்டு அரசாங்கத்துடனான இணைவுக் கோஷம் போடுகிற பேர்வழிகளோடு எனக்குப் பொருதுகிற மனநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதை வெளிவெளியாக நான் செய்யப்போவதில்லையாயினும் அந்த மனநிலை என்னிடத்தில் இலகுவில் மாறிவிடாது. அவர்கள் கருத்துத் தளமற்றவர்கள். அவர்களோடு கருத்துத் தளத்தில் மோதுவதென்பது அர்த்தமற்றது. அவர்களின் பலம் தம் தொண்டைகளில்  மட்டுமே.

நாம் உண்மையைக் கண்டடையவேண்டுமென்பது முக்கியமானது. எந்த விலையிலும். பலபேரின் முகச்சுழிப்பை எதிர்கொண்டாலும் இலங்கைத்; தமிழினத்தின் எதிர்காலத்துக்கான ஒரு மார்க்கம், அல்லது புலிகளின் இயங்குமுறைச் செயற்பாட்டின் குறைகளை ஆராய்தல் என்பது செய்யப்பட்டே ஆகவேண்டும்.

இனி என்பது ஆயுதப் போராட்டத்திலல்ல, புலம்பெயர் தேசத்தில் தமிழீழத்தை உருவாக்குவற்கான முயற்சிகளிலுமல்ல என்பது என் நிலைப்பாடு. என் உத்தேசத்தை, கருத்தை நான் எதற்காகவும் மூடிவைக்கவேண்டியதில்லை. நேரடி அரசியலுக்குள் இல்லாத, மார்க்சிய சித்தாந்தத்தை அதன் அரசியல் கட்டமைப்புத் தோல்விகளுக்குப் பின்னரும் நம்புகிற அளவுக்கு லோகாயத லாபம் கருதாத, ஓர் இலங்கைத் தமிழன் என்றகிற வகையில் எனக்கு இலங்கை அரசியலின் எதிர்காலத்துக்கான கருத்தை வெளியிடுகிற தார்மீக உரிமை உண்டு. அப்போதும் எனது பிரக்ஞை இலங்கை அரசியலில் தமிழ்மக்களின் நிலை குறித்த, அவர்களது எதிர்காலம் குறித்த விவரணங்களில் முடிவெடுப்பதற்கான உரிமை இலங்கையில் தங்கியுள்ள தமிழ்மக்களுக்கே முற்றுமுழுதாக உண்டு என்ற தளத்திலிருந்தே ஆரம்பமாகிறது.

‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உடையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி
ஓப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ’

என்பது புரட்சிக் கவி என்ற அடைநாமம் பெற்ற பாரதிதாசன் என்று புனைபெயர் கொண்ட கனக.சுப்புரத்தினத்தின் பாடலின் சில வரிகள். அந்த மாதிரியெல்லாம் இனி சாத்தியமில்லை. விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சி, அதாவது தொழிற்நுட்ப விவகாரங்கள் வியாபாரார்த்தமான கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதாவது ஒரு தொழில்நுட்பம் என்பது எப்போதும் விலைபோய்க்கொண்டிருக்கிறது என்பது இதன் அர்த்தம். இதை லாபகரமாக்குவதற்கான முயற்சியே இன்றைய வர்த்தகம். இதுவே இன்றைய மனித சமூகத்தின் தேவையாக இருக்கிறது. இதற்கு மாற்றான ஒரு சமுதாய அமைப்பு ஜனநாயக முறைமைகளின் மீதாகவே இனி சாத்தியம்.

இந்த யதார்த்த நிலைமையிலிருந்து நிஜமாகிலுமே ஒரு சரியான அரசியல் நிலைமைக்கு இலங்கைத் தமிழினம் திரும்புமா? அப்படியானால் நடைமுறையிலிருக்கும் ஒரு யதார்த்த நிலைமையை அது உள்வாங்கியே ஆகவேண்டும். அதுதான் சர்வதேச ரீதியிலான அமைவுகளுக்கு அமைவாக தனது திட்டங்களை அது அமைத்துக்கொள்வது.

அதாவது, இலங்கை எப்போதுமே பலகட்சி முறையான அரசியலாகவே இருந்துவந்திருப்பினும், இரண்டு கட்சிகளே ஆட்சியதிகாரம் பெறும் வலு கொண்டிருக்கின்றன. ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி, அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. இன்றைய நிலைமையில் இந்த இரு கட்சிகளில் எதை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதென்னும் அதிகாரம் மூன்றாவது சக்தியான ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சிக்கே இருக்கின்றது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் இருந்தது அதுதான். ஒட்டுமொத்தமான இலங்கைத் தமிழரும் ஓர் அணியில் ஓர் அரசியல் வலுவாக ஒன்றிணைவதன் மூலம் இலங்கைத் தமிழினம் மூன்றாவது அரசியல் வலுவாக ஆகமுடியும். அதன்மூலமே சிறுகச் சிறுக தமிழினத்தின் நியாயமான உரிமையை வென்றெடுக்க முடியும்.

இதைத் தவிர மேலே, கீழே இல்லை. மொத்த இலங்கைத் தமிழரும் ஒன்றிணைவதன் மூலம் ஒரு மூன்றாவது வலுவாகும் நிலை நிச்சயமானதும், சாத்தியமானதும்தான். இதை நாம் கவனத்திலெடுத்து சிந்தித்தே ஆகவேண்டும்.

இது சாத்தியமானது ஒன்றே தவிர, சுலபமானதொன்றில்லை என்பதை யாவரும் உணரவேண்டும். மூட்டையாக இருக்கும் தனித்தனியான காய்களின் பாதுகாப்பு, தனித்தனியாக இல்லை. ஒரு விறகை உடைக்கின்ற சுலபம், ஒரு கட்டு விறகை முறிப்பதில் இல்லை என்ற பாலர்பாடக் கதை இன்றைக்கு இந்தமாதிரி உதவ முடியும். பாலர் பாடத்திலிருந்து நாம் திரும்பவும் ஆரம்பிப்போம். ஒன்றுபட்ட தமிழினத்தின் ஏகக் குரல் அந்த இனத்தின் சுதந்திரத்தினை, சுயஉரிமையினை, இருத்தலின் சாத்தியத்தைப் பெற்றுத்தரும். இதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.

000

வைகறை, டிச. 2009

கலாபன் கதை 6

என்னைக் கடிப்பாயா?நள்ளிரவிலும் சூரியன் எறித்திருக்கும் நாடு என்று அறியப்பட்டிருந்த சுவீடன்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்கவில்லை கலாபன்.

அது ஒரு வட அய்ரோப்பிய நாடு, குளிர் கூடிய தேசம், மிக்க பரப்பளவில் அதிகுறைந்த ஜனத் தொகையைக் கொண்டிருந்த பூமி என்பதும், அதன் அரசியலானது முடியின் அதிகாரம் கூடியதாகவும், அவ்வப்போது அதிகாரம்பெற்ற நாடாளுமன்றம் சில ஜனநாயக உரிமைகளை மக்களுக்காகப் பெற்றுக்கொடுத்தது என்பதும், இன்றும் வடஅய்ரோப்பாபோல் மானுட ஜனநாயக உரிமைகளை நிகராகப் பெற்றில்லாதது என்பதும், இதுவும் டென்மார்க், நோர்வே போன்ற முக்கியமான வடஅய்ரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஸ்கந்திநேவியா என அழைக்கப்பட்டன என்பதும் மட்டுமானவை அவன் கல்லூரியிலும் நூலகத்திலும் படித்தும் வாசித்தும் அறிந்திருந்தான். ஸ்கந்திநேவியாவின் பத்தாம் நூற்றாண்டளவிலான வைக்கிங் எனப்பட்ட கடல் மறவக் கொள்ளையர்பற்றி அண்மைய சினிமாக்களில்தான் அறிந்தான்.

இவையெதுவும் அவனது மனத்துக்குள் கிடந்து துடித்துக்கொண்டிருந்த ஆசையின் தவிப்பில், பெரிதாகக் கிளர்ந்தெழாத அம்சங்களாகவே இருந்தன. மேலும் தெரிந்துகொள்வதற்கிருந்த சூழ்நிலைமைகளையும் அந்த ஆசையானது அடித்து அடித்து விலகியோட வைத்துக்கொண்டிருந்தது.

கப்பல் துறைமுக மேடையில் கட்டி ஒரு மணிநேரத்துள் கபாலியுடன் வெளியே புறப்பட்டான் கலாபன்.

அன்று ஒரு வெள்ளிக் கிழமையாகவிருந்தது.

துறைமுக மேடையில் நான்கைந்து வேலையாட்களோ அலுவலர்களோ நடந்து திரிந்துகொண்டிருந்தனர். நாலைந்து கார்கள் வந்து மெதுவாகத் திரும்பிக்கொண்டிருந்தன. அவன் கண்டிருந்த எந்தத் துறைமுகமும் போலன்றி வெறித்துக்கிடந்தது சுவீடனின் அந்தத் துறைமுகம்.

துறைமுகத்திலிருந்து நடந்துசெல்லும் தூரத்திலேயே டவுன் ரவுண் இருந்ததை கப்பலுக்கு வந்த கொம்பனி முகவரிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான் கபாலி.

வீதியோர நடைபாதைகள் கல் பாவியதாக இருந்தன. வீதிகள் குண்டு குழிகளற்று விசாலமாயும் நீட்பமாயும் கிடந்தன. இருமருங்கும் அதிக உயரமற்ற கட்டிடத் தொகுதிகள். சில சில தனி வீடுகள். நகரம் நெருங்க நெருங்க வெளிச்சத் தெருக்களாக மாறிக்கொண்டிருந்தது. SEX SHOP என்ற வெளிச்ச எழுத்துக்கள் அதிகமாகவும் தெரிந்தன. ஓரிருவர் அவைகளினுள்ளே போவதும் திரும்புவதுமாயிருந்தனர்.

கலாபன் சோர்வாகிப்போனான். அது நகரமாக அல்ல, ஒரு கிராமமாகக்கூட இருக்கவில்லைப்போல இருந்தது. ஸ்ரொக்கோமுக்கு வடக்கே ஏறக்குறைய மூன்று மணிநேர கப்பல் பயணம். அந்த துறைமுகத்தின் பெயர்கூட வாயில் நுழையவில்லை அவனுக்கு. வடக்கே இன்னும் அய்தான மக்கட் செறிவு இருக்கக்கூடும். அது பகலென நினைத்த ஒரு பதினெட்டு மணிநேரத்துள் வேலைசெய்து அல்லது அலைந்து வம்பளந்துவிட்டு, இரவென நினைத்த ஒரு ஆறு மணத்தியாலத்தில் படுக்கச்சென்றுவிட்டதா? அங்கே இருக்கக்கூடிய ஜனத்தொகை எங்கே போய்த் தொலைந்தது?

அகன்ற வீதிகளும், வெளிச்சங்கள் நிறைந்த பூட்டிய கடைகளும், நான்கைந்து மனித நடமாட்டமுமா ஒரு நகரம்? அந்த இடத்திலா அவன் இச்சையைத் தணிக்கும்வகையான பெண் வந்து வலிய மாட்டப்போகிறாள்? அதுவும் வார இறுதிநாளில், அந்த நேரத்தில் அப்படியான அடக்கத்தில் கிடக்கும் ஒரு நகரிலா?

குளிராகவே இருந்தது. ஆனாலும் அது குயடடள என ஏனைய அய்ரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளில் அழைக்கப்படும் இலையுதிர் காலம்தான். அங்கே கீழ்த் திசையில் மாரி, கோடையென்ற இரு பெரும் பருவங்களைப்போல பனிகாலம், கோடை காலம் என்ற இரண்டு மட்டுமே பெருவாதிக்கம் பெற்றவை என்பதை கலாபன் அங்கே வந்தவுடனேயே அறிந்துகொண்டிருந்தான். அப்படியானால் அந்த இலையுதிர் காலம் சுவீடனைப் பொறுத்தவரை குளிர்காலத்தின் ஆரம்பம்.

ஒரு நகரமென்பது உண்மையிலென்ன? அவன் எங்கோ, எப்போதோ வாசித்த யாரினதோ ஒரு மொழிபெயர்ப்புக் கதை அப்போது ஞாபகமாயிற்று.

அய்ரோப்பிய நகரசபையொன்று அங்கே விலைமாதர் அதிகமாகிவிட்டார்களென அவர்களை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கிருந்து நீங்கிவிட வேண்டுமென்று சட்டமியற்றுகிறது. விலைமாதர்களும் வேறு வழியின்றி அங்கிருந்து நீங்கிச் சென்று தொலைவிலுள்ள ஓரிடத்தில் தங்கள் குடியிருப்புக்களை மிகுந்த சிரமத்தின் பேரில் அமைத்துத் தங்குகிறார்கள். ஒரு சமூகமாக அது மாறுகிறது. அங்கே இரண்டொரு கடைகள் தோன்றுகின்றன. அவர்களைத் தேடி ஆண்கள் வரத் தொடங்குகிறார்கள். போக்குவரத்துக்கள் அதிகரிக்கின்றன. இன்னும் சில கடைகளும், மதுபானச் சாலைகளும், நடனசாலைகளும் தோன்றுகின்றன. ஒரு சிறிய நகராகிறது அது. காலப்போக்கில் வர்த்தக நிலையங்கள், கல்லூரிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று அந்தச் சிறிய நகரே ஒரு பெருநகராகிறது. சில தலைமுறைகளின் பின் ஜனநெரிசல் அதிகமாகிய ஒரு நாளில், அந்த நகரத்துச் சபை ஒரு சட்டமியற்றுகிறது, அங்குள்ள விலைமாதர்கள் அந்த நகரத்தைவிட்டு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கிவிடவேண்டுமென.

ஒரு நகரின் மய்யம் எங்கே தங்கியிருக்கிறதென்று இந்தக் கதை கலாபனுக்கு ஒரு மேலோட்டமான அபிப்பிராயத்தைக் கொடுத்திருந்தது. இரவுக் கேளிக்கைகளின்றி உறங்கும் ஒரு நகரம் அவனளவில் செத்த நகரமாகவே இருந்தது. அது உணர்வுகள் செத்த நகர்!

அவனது மனநிலையைத் தெரிந்துகொண்ட கபாலி, தனக்குள் சிரித்துக்கொண்டே, அவன் அந்தமாதிரி நகரத்தை அறியமாட்டானென்றும், ஒரு பியர் அருந்திவிட்டு வீதியில் நடந்துதிரிந்தால் ஆண்களைத் தேடும் எந்த ஒரு பெண்ணாவது அகப்படுவாள் என்றும் அவனைச் சிறிது நம்பிக்கைப்பட வைத்து கூடவரச் செய்தான்.

போகும்போது கபாலியின் கப்பல் அனுபவம் கலாபனுக்கு நம்பிக்கையேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தது. ‘கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள், அல்லது திருமணமே ஆகாத பெண்கள்கூட, அதுபோன்ற நாடுகளில் உடலுறவுக்கு கப்பல்காரரையே விரும்புவார்கள். ஏனெனில் கப்பல்காரர் கடலிலுள்ள காலத்தில் தன் உணர்ச்சியைத் தணிக்க வகையற்றிருப்பவர்கள். அவர்களோடு திருவிழாபோல ஒரு முழு இரவுக்குமே சுகத்தை அனுபவிக்க முடியும். இன்னுமொன்று, கப்பல்காரனின் தொடர்பு கப்பல் அந்நாட்டுத் துறைமுகத்தில் நிற்கிற காலமளவுக்கானது மட்டுமே. அயலவன், அதே ஊர்க்காரனெனில் அவன் விரும்புகிற பொழுதுக்கும் அவனைச் சேரவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு உண்டாக வாய்ப்பிருக்கிறது. எந்த ஒரு பெண்ணின் இரகசியமான உறவுக்கும் கப்பல்காரன் நல்ல தெரிவாயிருக்கும், இல்லையா?’

ஒரு நான்கைந்து பேர் கொண்ட மதுபானக் கடையில் ஒரு மணிநேரமாக காம பட்சணிகளுக்காகக் காத்திருந்துவிட்டு கபாலியின் யோசனைப்படி வெளியே இறங்கி குறிப்பற்று நடக்கத் தொடங்கினார்கள் இருவரும்.

ஓர் அதிர்~;டம் எதிர்ப்படுவதுபோல எதிரே வந்த கார் ஒன்று அவர்களருகில் மெல்லென ஊர்ந்து கறுத்திருந்த கண்ணாடியூடாக விரிந்த விழிகளைமட்டும் காட்டிவிட்டு அடுத்த கணத்தில் பிய்த்துக்கொண்டு பறந்துபோய் மறைந்துவிட்டது.

‘நேரமாகிறது, வா, கப்பலுக்குப் போகலாம்’ என கலாபன் அழைத்தபோது, ‘The night is still young’ என்றுவிட்டு கபாலி தொடர்ந்து நடந்தான். கபாலிக்கு கொஞ்சம் வெறி.

மறுபடி கலாபனும், கபாலியும் கப்பலுக்குத் திரும்பியபோது விடிகாலை இரண்டு மணி.
ஏமாற்றம், களைப்பு, தான் மடத்தனமாக கபாலியின் கூற்றின்மேல் கொண்ட நம்பிக்கைகள் காரணமாய் கலாபன் கொதிநீர்போல் இருந்தான். கபினுக்குச் சென்றவன் ஜொனிவோக்கர் போத்தலை எடுத்து வைத்தான். விறுவிறுவென கிளாஸ் எடுத்து ஊற்றி ஒரே மிடறில் குடித்தான். சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். ஜன்னலூடு வெளியே பார்த்தபோது அவனை ஒரு பெரும் ஏமாற்றத்திலும், அவமானத்திலும் வீழ்த்திய அந்த நகரின் துறைமுகம் சத்தமின்றி இருளில் தோய்ந்து கிடந்திருந்தது. துறைமுக மேடையின் முன்னால் மேல்தள சாமான்களாக கப்பலில் ஏற்றப்படவிருந்த பலகைகள், தீராந்திகள் கட்டுக்கட்டாக அந்த இருளுள் அடுக்கில் கிடந்தன.

மன, உடல் வேகங்கள் மெல்லத் தணியலாயின. குடியும், புகைத்தலும் தொடர இனி அடுத்த துறைமுகம் எதுவாயிருக்கும், எத்தனை நாள் பயணமாயிருக்கும் என எண்ணமிட்டபடி அமர்ந்திருந்தான் அவன். அவனது உறக்கத்தை நினைவுகள் விழுங்கியிருந்தன. அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது. உடனடியாகத் திறக்கவும் பட்டது. யாரென ஒருவகை எரிச்சலோடு சட்டெனத் திரும்பினான் கலாபன்.

பாலி சிரித்தபடி உள்ளே வந்துகொண்டிருந்தான். பின்னால் வாசலில் நின்றிருந்தார்கள் இரண்டு வெள்ளைப் பெண்கள்.

அவர்கள் உள்ளே வந்தார்கள். மெதுமெதுவாக அறிமுகங்கள் ஆரம்பமாகின. குடியோடு அவர்கள் உரையாடல் ஆரம்பித்தபோதும், கதை அவர்களது நாடுபற்றியதாகவே திரும்பியது. கபாலிதான் கேள்விகளை அவ்வப்போது கேட்டு விளக்கங்கள் பெற்றுக்கொண்டிருந்தது.
தன்னை அலேன் என்று அறிமுகப்படுத்தியிருந்த பெண்தான் அதிகமாகவும், உற்சாகமாகவும் கதைத்துக்கொண்டிருந்தாள். அவள் இருந்த அணுக்கம் அவள் கபாலியை விரும்புவதாகக் காட்டிற்று. மற்றவள் அவ்வப்போது சிரித்தாள். ஓரொரு பொழுதில் ஒன்றிரண்டு வார்த்தை பேசினாள். மற்றப்பொழுதில் மெல்லவாக ஜொனிவோக்கரை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

கலாபன் தன் நண்பியைக் கவனிப்பதைக் கண்ட அலேன், தன் நண்பிக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாதென்றும், தான் சிறிதுகாலம் அமெரிக்காவில் தங்கியிருந்ததாலும், இப்போதும் அங்கே அடிக்கடி போய்வருவதாலும் ஆங்கில மொழி மிகுந்த பரிச்சயமாகியிருப்பதாகக் கூறினாள்.
அங்கே எதற்காக அவள் அடிக்கடி போய்வருகிறாள் என கலாபன் கேட்டதற்கு, தன் கண்வனிடம் என்றாள் அலேன்.

‘கல்யாணமாகி விட்டதா உனக்கு?’ என்று திடுக்கிட்டுக் கேட்டான் கலாபன். ‘இது உன் கணவனுக்குச் செய்யும் துரோகமல்லவா?’

‘இது எப்படித் துரோகமாகும்? ஒருவரால் தீர்க்கப்படக்கூடிய தவனத்தை அவர் இல்லாதபோது வேறொருவர்மூலம் தீர்த்துக்கொள்வதில் என்ன பிழை இருக்கிறது?’ என வெடுக்கெனக் கேட்டாள் அலேன். அப்போது தன் நண்பி சுவீடன்மொழியில் சொன்னதையும் மொழிபெயர்த்துக் கேட்டாள்: ‘நீ திருமணம் செய்துவிட்டாயா?”

‘செய்துவிட்டேன்.’

‘அப்படியானால் நீ உன் மனைவிக்குத் துரோகம் செய்கிறாயா?’

‘துரோகம்தான். ஆனாலும் தவிர்க்கமுடியாதது. நான் உயிரைப் பயணம்வைத்த கப்பல் தொழிலில் இருக்கிறேன். அடுத்த நிலம் எனக்கு நிச்சயமானதில்லை. அதனால் எந்த நிலத்தை நான் அடைகிறேனோ அந்த நிலத்தில் என் மனித தவனங்களைத்; தணித்துக்கொள்வது என்னளவில் தர்மமானது.’

‘நீ பேசுவது எந்த விதத்திலும் பொருந்திப்போகவில்லை. ஒன்று நீ ஒரு தொழிலை மரண பயத்தோடு நடத்துவது என்பது எந்தத் தொழிலுக்கும் ஒவ்வாத கருத்துநிலை. மரணத்தை எண்ணிக்கொண்டு சென்றால் தாழ்கின்ற கப்பலிலிருந்து தப்புவதற்கும் உனக்கு உறுதி இருக்காது. கப்பல் தொழிலில் மரணம் சகஜம் என்று நீ மரணத்துக்கு உன்னையே பணயம் கொடுத்துவிடக்கூடியவன். எந்தத் தொழிலில் மரணம் சம்பவிக்க முடியாது? விமானத்தொழிலில்..? கார், பஸ், ரயில், பார வண்டித் தொழிலில்… ? மரணம் எங்கேயும் வரும். அடுத்தது, கற்பு என்ற வியம். அது மேற்கில் மறைந்து அதிக காலம். ஆனாலும் தன் கணவன்தவிர மாற்றானுடன் புணரமுடியாத பெண்கள் இங்கேயும் இருக்கிறார்கள். அது அவரவர் மனநிலை சார்ந்தது. அறம் சார்ந்ததல்ல.’

அந்த வெள்ளைக்காரி தன்னை மடக்கிவிட்டதான உறுத்தல் பிறந்தது கலாபனிடம். ஆனாலும் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது.

வெறுங்கிளாஸில் மறுபடி விஸ்கியை ஊற்றிக்கொண்டு அலேன் தொடர்ந்து சொன்னாள்: ‘நான் ஒரு அழகிய தேசத்தின் பிரஜை. அய்ரோப்பாவில் பெரும்பாலும் ஜனத்தொகை பெருத்துவிட்டது. ஆசியாவைப்போல இல்லாவிடினும், பெருத்துவிட்டதுதான். ஆனால் சுவீடனில் அளவுக்கும் குறைவாகவேதான் அது. அது இந்த நாட்டின் அழகை, அதன் வளத்தினை மேலும் மேலும் தக்கவைப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது எனக்கு.

‘ஆயிரம் நதிகள், லட்சம் தீவுகள், வடக்கே நாட்டின் சுமார் பாதிப் பரப்பில் பரந்து கிடக்கும் மலைகளும், வனங்களும். இந்த வனங்களில் பாதிக்குமேல் கன்னித் தன்மையே அழியாதவை. அவற்றின் வசீகரம் அல்லது பயங்கரம் யாராலும்தான் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. இந்த நாட்டை ‘கண்ணாடிகளின் நாடு’ என்பார்கள். ‘ Kingdom of crystal’. நான் இங்கே வாழ்கிறேன் என் உடல் மன சுதந்திரங்களுடன். நீ கீழ்த் திசையான். ஆசியாக்காரன். உனக்கு உன் கீழ்த்திசையின் கலாச்சார அழுத்தம் இருக்கிறது. அதனால்தான் நீ காதலையும் காமத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிவிட்டாய்.’

சிறிதுநேரம் வெள்ளைக்காரிகள் இரண்டுபேருக்குமே தமது மொழியில் உரையாடல் நடந்தது. கபாலி இரவு முடியப்போகிறது என ஞாபகமாக்கினான். ‘அதனாலென்ன? என்னால் நாளைக்கும், நாளை மறுநாளுக்கும்கூட உன்னோடு நிற்கமுடியும்’ என்றாள் அலேன்.

‘நாளை மறுநாள் காலை கப்பல் புறப்படுகிறது’ என்றான் கலாபன்.

கபாலி தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தன் கபின் செல்ல, மற்றப் பெண்ணுடன் விடப்பட்டான் கலாபன்.

இன்னும் ஒரு கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்க ஒரு கையால் மேசையிலிருந்த விஸ்கிக் கிளாஸைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் அவள்.

கலாபனுக்கு இன்னும்தான் தன் தோல்வியின் வலி நீங்காதிருந்தது. அதனாலேயே அவன் குடித்ததும் அதிகமாயிருந்தது. போதை மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டுகொண்டிருந்தது. மேலும் மௌனமாயிருக்க முடியாமல், ஏதாவது சாப்பிட விரும்புகிறாளா என்று கேட்டான். அவள் வேண்டாமென, படுப்பதற்குத் தயாராக கட்டிலில் எழுந்து வந்து அமர்ந்தான்.

வெள்ளைக்காரி இன்னும் அந்தப்படியே இருந்தாள். இன்னும் குடிக்கப்போகிறாளோ என நினைத்தான் கலாபன். அவனுக்கு தலை மெல்ல தொங்க ஆரம்பித்திருந்தது. சுதாரித்து அமர்ந்திருந்தான்.

அவள் என்ன செய்யப்போகிறாள்? படுக்க வருவாளா? விடியும்வரை அந்தப்படியே அமர்ந்திருப்பாளா? கலாபன் யோசித்து முடிப்பதற்குள் அவள், ‘என்னை நீ கடிப்பாயா? (லுழர டிவைந அந?)’ என்று நிமிர்ந்து அவனை கண்களுக்குள் ஊடுருவியபடி கேட்டாள்.
கலாபன் திடுக்கிட்டான். ‘என்னை என்ன நரமாமிச பட்சணியென்று நினைத்தாளா? ஏன், ஒரு ஆசியாக்காரன் இவளுக்கு நரமாமிச பட்சணியாகவா தெரிவான்? என் நிறம் இவளை இந்த மாதிரியாகவா எண்ணவைக்கிறது?’ என்று ஒரு சினமெழுந்து சீறப்பார்த்தது. இருந்தும் காரியம் ஆகட்டும் என்று வலிந்து ஒரு சிரிப்பை வரவழைத்தபடி, ‘இல்லையில்லை’யென்று தலையசைத்தான்.

‘கடிக்கவே மாட்டாயா?’ என்றாள் அவள் மீண்டும்.

‘நிச்சயமாகக் கடிக்கமாட்டேன்.’

அவள் கிளாஸிலிருந்த விஸ்கியை மடக்கென்று குடித்து முடித்தாள். சிகரெட்டை ஒரு இழுவை இழுத்து சாம்பல் கிண்ணத்தில் நசுக்கினாள். ‘ஓகே. உன்னுடைய உபசாரத்துக்கு நன்றி. நான் வருகிறேன்’ என்றுவிட்டு எழுந்து கதவைத் திறந்து விறுவிறுவென வெளியேறினாள்.

சிறிதுநேரத்தில் கதவு சத்தமின்றிச் சாத்தியது.

அந்த அதிர்வு தீர கலாபனுக்கு வெகுநேரமாயிற்று.

நிலைகுத்தியிருந்தவன் நான்கு மணியாக வேலைக்கு இறங்கினான். வேலை பளுவில்லை. ஒரேயொரு ஜெனரேட்டர் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. கதிரையில் அமர்ந்து தூங்கினான்.

பின் எழுந்து அதன் அமுக்க, வெப்ப நிலைகளைக் கவனித்துவிட்டு வந்து மறுபடி தூங்கினான். ஒரு தோல்வி அடைந்ததான, ஓர் ஏமாற்றம் அடைந்ததான உணர்வு கொந்தளித்துக்கொண்டிருந்தும் அவனால் போதை காரணமாக யோசனையின்றி, உறங்கத்தான் முடிந்தது.

வேலை முடிந்து அறையினுள் படுக்கையில் கிடந்திருந்தபோதுதான் ஏன் அந்த வெள்ளைக்காரி அவ்வாறு நடந்துகொண்டாள் என அவனால் யோசிக்க இயன்றது. ஆனாலும் எந்தவகையில் யோசித்தும் ஒரு பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை.

காலையில் கபாலியும், அலேனும் வந்து கதவைத் தட்டியபோதுதான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. மேசை மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். பன்னிரண்டு.
கபாலி உள்ளே வந்து, ‘எங்கே அந்தப் பெண்?;’ என்று கேட்டான்.

‘போய்விட்டாள்’ என்றான் கலாபன்.

‘எப்போது?’

‘நீங்கள் சென்ற பின்னாடியே.’

கபாலி திரும்பி அலேனிடம் வி~யத்தைச் சொன்னான்.

அலேன் உள்ளே வந்தாள். என்ன நடந்ததென கலாபனிடம் விசாரித்தாள். எதுவும் வித்தியாசமாக இல்லையென்றுவிட்டு நடந்ததைச் சொன்னான்.

அலேனுக்கும் காரணம் புரியாமலே இருந்தது. பின் சிறிதுநேரத்தில் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தாள். ‘என்ன, என்ன, ஏன் சிரிக்கிறாய்? சொல்லிவிட்டுச் சிரி’யென இருவரும் வற்புறுத்த சிரிப்புக்கிடையிலேயே பதிலைச் சொன்னாள் அலேன்: ‘உன் கலாச்சாரப் பின்னணிபற்றி அவள் சந்தேகித்ததுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் அதைக் கேட்க அவள் பாவித்த மொழிதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. Bite என்ற சொல்லுக்குப் பதிலாக kiss என்ற வார்த்தையை அல்லது oral sex என்ற பதத்தை அவள் பாவித்திருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காது.’

அலேனும், அலேனை விட்டுவருவதாக கபாலியும் சொல்லிச் சென்றனர். கலாபனால் சிரிக்க முடியவில்லை. ஆனாலும் மேலே அவனுக்கு எரிச்சலோ கோபமோ வரவில்லை. ‘வாத்ஸாயனன் நூற்றாண்டுகளுக்கு முன்னரே காமக் கலையின் நுட்பங்கள் சார்ந்த சாத்திரத்தை எழுதிவிட்டான். அது ஒரு திசையின் மக்கள் கூட்டத்தினது இன்ப நுகர்ச்சியின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். அந்தத் திசையையா காமத்தில் அந்த வெள்ளைக்காரி சந்தேகித்தாள்?’

கலாபன் யோசித்துக்கொண்டே இருந்தான்.

வெகுநேரத்தின் பின் எழுந்துசென்று மெஸ்ஸிலே சாப்பிட்டுவிட்டு வந்தான். வேலைக்குச் செல்ல இன்னும் நேரமிருந்தது. நண்பனுக்குக் கடிதமெழுதினால் கப்பல் கொம்பனி முகவர் வரும்போது கட்டில் சேர்க்க கொடுத்தனுப்பலாம். கலாபன் கடிதமெழுதத் தொடங்கினான்.

kiss or oral sex = bite

எழுதுகிறபோதுதான் அவனுக்கும் சிரிப்பு வந்தது.

00000

Saturday, November 21, 2009

கலாபன் கதை 5


இருள் அசைந்து உள்ளே நகர்ந்தது


கலாபன் தன் விடுப்பு முடிந்து மறுபடி கப்பலுக்கு வந்தாகிவிட்டது. அது அவன் முன்பு வேலைசெய்த அதே கப்பல் அல்லவெனினும், எழுபதுகளில் ஜேர்மனியில் கட்டப்பெற்ற ஓரளவு நல்ல நிலையிலிருந்த கப்பல். அவன் ஏற்கனவே கப்பல் அனுபவம் வாய்த்திருப்பதறிந்த இரண்டாம் நிலைக் கப்பல் என்ஜினியர் காலை நான்கு-எட்டு மணிவரையான வேலைநேரத்துக்கு அவனை எடுத்துக்கொண்டான். என்ஜின் அறையிலுள்ள எந்திரங்களின் செயற்பாடுபற்றிய தொழில்நுட்ப அறிவினை ஓரளவு பெற்றிருந்த கலாபனுக்கு, புதிய கப்பலில் வேலைசெய்வது அப்படியொன்றும் கடினமானதாகத் தெரியவில்லை.

அவன் கப்பலில் சேர்ந்த மூன்றாவது நாள் கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தைநோக்கி தன் பயணத்தைத் தொடக்கியது.

எல்லோரும் நட்பாளர்களாக, பழக்கத்துக்கு இனியவர்களாக இருந்தாலும் கப்பலில் அவரவரும் பெரும்பாலும் தனித்தனி உலகம்தான். ஒரு மகிழ்ச்சி, ஒரு துக்கம் என்று எதுவிதமான குடும்பம் சார்ந்த காரியமும் உடனுக்குடன் அறிய வாய்ப்பில்லாத தொழில் அது. வெளிநாட்டு மண்ணில் வேலை செய்கிற ஒருவன், தன் தாய் அல்லது தந்தை அல்லது மனைவியரின் மரணத்துக்கு ஒருவேளை ஊர்வந்து கொள்ளி வைக்கமுடியாவிட்டாலும், ‘காடாத்’திலாவது சமுகமாகிப் போகமுடியும். ஆனால் கப்பலில் வேலை செய்கிறவர்களுக்கு, அதுமாதிரிக்கூட வாய்ப்பில்லை.

வீட்டிலிருந்து அனுப்பும் கடிதம் கொம்பனி முகவரிக்குச்சென்று, அந்தப் பெயருள்ளவர் வேலைபார்க்கும் கப்பல் அடுத்துச் செல்லவிருக்கும் துறைமுகம் அறிந்து அங்கேயுள்ள ஏஜன்ஸிக்கு அனுப்பப்படுகிறது. ஒன்று ஒன்றரை மாதத்துக்குள் ஒருவருக்கு ஒரு கடிதம் கிடைத்தால் அது அவரின் அதிர்~;டம். அதனால் குடும்பம், உறவுகளின் துக்க நிலைமைகள்

மாறியிருக்கக்கூடுமாயினும், ஒருவர் மனம் அதையே எண்ணி அவத்தைப்பட்டுக்கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கலாபனது உலகமும் கப்பலில் தனியானதுதான், அங்கேயுள்ள எவரினதும்போல.

வீட்டைவிட்டுப் புறப்பட்டபோதிருந்த இறுக்கமான மனநிலை கலாபனுக்கு கப்பலில் சேர்ந்த பின்னரும் மாறவேயில்லை.

இரண்டு நாட்கள் புதிய சூழலிலும் மிதமான குடியிலும் மனஅவசம் ஓரளவு அடங்கியிருந்ததாயினும், கப்பல் பயணத்தைத் தொடக்கிய பின் அதிகரிக்கவே செய்திருந்தது அவனிடத்தில். அதனால் முந்திய கப்பல்களில்போல் மிக உற்சாகமாக வேலைசெய்யும் மனநிலை அற்றுப்போயிருந்தான் கலாபன்.

ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் ஊரிலே தங்கியிருந்தான் அவன். காலம் றப்பர்போல இழுபட்டபடி நகர்ந்துகொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்திருந்ததுபோல அவனது கப்பல் கொம்பனி ஒரு மாதத்தில் அவனது பயணத்துக்கான விமானச் சீட்டை அனுப்பாதது மட்டுமல்ல, இரண்டு மாதங்களாகியும் அவனது இரண்டு தொலைதூர தந்திகளுக்குக்கூட பதிலனுப்பாமல் இருந்துவிட்டது. கொம்பனி தன்னை வேலைக்கு மறுபடி கூப்பிடுமா என்ற சந்தேகமே தலையெடுக்க ஆரம்பித்து, அது வீட்டின் முறுகல் நிலையாக முதிர்கிறவேளையில், ஒரு மாலைநேரத்தில் அவனது பயணத்துக்கான விமானச் சீட்டை கொம்பனியின் மக்லறென்ஸ் ஏஜன்ஸியில் பெறுமாறும், கப்பல் அடுத்த மூன்று நான்கு நாட்களில் சிங்கப்பூர் வருவதாகவும் தெரிவித்த தந்தி வந்தது.
இதோ ரிக்கற் வந்துவிட்டது என்றும், பின் எப்படியும் வந்துவிடும் என்றும் எதிர்பார்த்திருந்தானானாலும், பயணத்தை உறுதிசெய்த தந்தி வந்தபோது, கலாபன் அவகாசம் அற்றவன்போல் தடுமாறவே நேர்ந்திருந்தான்.

மனோவுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சி. வீட்டுக்கு நிலையம் எடுத்து, நல்ல நாள் பார்த்து மூலைக்கல் வைத்து, விறுவிறுவென மாளிகைக் கணக்கான ஒரு வீட்டுக்கு அத்திபாரம்மட்டும் போட்டுள்ள நிலையில், கலாபன் கப்பலுக்குப் போகாது இருப்பானானால், வீட்டுவேலையை எப்படி முடிப்பது என்ற பெருங்கவலையில் இருந்தவள் அவள். ‘இந்தமாதிரி வளவு முழுக்க அத்திவாரம் வாற அளவுக்கு வீட்டுப் பிளானைப் போட்டு வைச்சிருக்கிறியே, எப்பிடி முடிக்கப் போறாய்?’ என்று அவள் சந்திக்கிற உறவினர்கள் கேட்காத வேளையில்லை. அதனால் கப்பல்வேலை மீண்டும் கலாபனுக்குச் சாத்தியமான மகிழ்ச்சியிலேயே அவன் தேடும் உடுப்புகளை எடுத்துக்கொடுத்து மனோ மிகஉற்சாகமான மனநிலையில் இருந்தாள்.

தன்னை அனுப்புவதில் அவள்பட்ட அந்தப் பரபரப்பு கொஞ்சம் அசூயையாகவே இருந்தது கலாபனுக்கு. ‘என்னைக் கப்பலுக்கு அனுப்புகிறதில் உனக்குள்ள ஆர்வத்தைப் பார்க்கிறபோது எனக்கு எதையெதையோ எண்ணவேண்டும்போல் இருக்கிறதடி.’

ஆனாலும் எதையும் சொல்லாமல் மனத்துள் அடக்கிக்கொண்டான்.

சூட்கேஸ் அதிகாலையில் எழுந்து எடுத்துச் செல்லத் தயாரானதும் கலாபன் கிணற்றடி போய்வந்தான். போத்தலில் மீதமாயிருந்த சாராயத்தை கிளாஸில் ஊற்றி மெதுமெதுவாகக் குடித்துக்கொண்டிருந்தான். நாளைக்குக் குடிக்க அங்கே யாரிருக்கப் போகிறார்கள்? போத்தல் முடிந்துகொண்டிருந்தது.

மனோ ஏதோ பொரித்தது போலிருந்தது. முட்டையாக இருக்கும். நேரமாக ஆக அவளிலான அவனது எதிர்பார்ப்பு ஏறுமுகத்தை அடைந்தது.

அவள் சாப்பாட்டினை எடுத்துவைத்து குசினியை ஒழுங்குபண்ணும் முயற்சியில் இருந்தாள்.
இலங்கை வானொலி அடங்கி இரவு பத்தரை மணியென்பதை அறிவித்தது. ஏற்கனவே குழந்தை தூக்கம். இந்தத் தனிமைதானே அவர்களது இறுதி! இறுதி என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓர் இறுதி அதற்குண்டு. அந்த இரவை மனோ குசினிச் சாமான்களை ஒதுங்கவைப்பதில் செலவழித்துக்கொண்டிருப்பது கண்ட கலாபன் மனத்தில் மெல்லிய எரிவு.

சிறிதுநேரத்தில் மனோவின் குரல் எழுந்தது. ‘சாப்பிட வாறியளா?’

சாப்பாடா? என்ன சாப்பாடு இதுக்குள்ளை? அவன் தன் கோபம் தணித்து, ‘பிறகு சாப்பிடுறன். நீ முதல்ல கிணத்தடிக்குப் போட்டுவாவன்’ என்றான்.

அவளிடமிருந்து பதிலில்லை. அவனது வார்த்தைகளின் பூடகத்தை உணர்வதற்கான கணங்களாயிருந்திருக்கலாம் அவை. ஓர் ஏணாப்பான கிணுகிணுப்பைச் செய்தாள். பின் சொன்னாள்: ‘அதெல்லாம் இண்டைக்கு வேண்டாம். காலமை நாலு மணிக்கு எழும்பவேணுமெல்லே, பேசாமல் வந்து சாப்பிட்டுட்டுப் போய்ப் படுங்கோ.’

அதெல்லாம் வேண்டாமா? அது இறுதி இரவு என்பதற்கு எந்தப் பெறுமானமும் இல்லையா அவளிடத்தில்?

அவன் எரிந்தான். சாராயமும் சேர்த்து எரித்தது.

ஒவ்வொரு நினைப்பிலும் அவன் எரிந்தான். தன் தேவையொன்று உதாசீனப்படுத்தப்பட்டது என்பதல்ல அங்கே இருந்தது. அவளிடத்தில் இருந்த அவன்மீதான காதலின் அளவு தெரியவந்திருந்ததுதான் முக்கியம். அவள் தன்போல என்றுமே, என்றுமேதான், தன்னைக் காதலித்திருக்கவில்லை.

இந்த நினைப்பு எந்தவொரு கடலோடிக்கும்தான் இனிய நிலைமைகளை அனுபவிக்க வைத்துவிடாது. கப்பல் இன்னும் நான்கு நாட்களில் கராச்சியை அடையப்போகிறது என்பதோ, முதல்நாள் நள்ளிரவில்தான் கப்பல் தென்னிலங்கையின் காலி வெளிச்சவீட்டைத் தாண்டியது என்ற தகவலோ அவனுள் ஓரசைவையும் ஏற்படுத்தவில்லை. நீலச் சேலை விரித்துவிட்டதுபோல் அசைவற்றுக் கிடந்த கடலின் அழகோ அல்லது இரவின் மெல்லிய உப்புக் காற்றின் இனிய உலவுகையோ அல்லது வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திர அழகோ அல்லது கூடவரத் தயாராகப்போல் மிகச் சமீபமாக இரவில் விகசித்த பெருநிலவோ காணாதவனாகிப்போனான் கலாபன்.
அவன் தன் துக்கத்தின் பிம்பமாக ஒரு சோகமாய் ஆகிக்கொண்டிருக்கவில்லை. குரோதமாய் ஆகிக்கொண்டிருந்தான்.

ஒரு மாலைப் போதில் கராச்சி சேர்ந்தது கப்பல்.

அழகாக இருந்தது துறைமுகம். கூட இருந்த வெளி இன்னும் மன உவகை செய்தது.

மறுநாள் ஏஜன்ற் வந்தபோது கடிதமெதுவும் வந்திருக்கவில்லை கலாபனுக்கு. வெளியே செல்லும் மனநிலையும் இருக்கவில்லை. மனைவியை வெறுக்கலாம். குழந்தையை…? அதனால் மனோவுக்குக் கடிதமொன்று எழுதினான். காதல், அன்பு, பிரியம் என்ற வார்த்தைகளை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்த கடிதமாயிருந்தது அது.

கப்பல் மறுபடி புறப்பட்டது. அதன் அடுத்த இலக்கு ஐரோப்பா என்பது தெரிந்திருந்ததாயினும், அச் சில நாடுகளுள்ளும் முதல் இலக்கு சுவீடன் என்று தெரியவந்தது. சுவீடன் துறைமுகத்துக்கு முன்னரே சென்றிருந்த கபாலி சொன்னான், ‘அதிர்~;டமிருந்தால் அங்கே உச்ச இன்பம்’ என்று. கோபாலரத்தினம் கோபாலியாகி, கப்பலில் கபாலியாகியிருந்த செய்தியை கலாபன் அறிந்தது அன்றுதான்.

உச்ச இன்பங்களின் கனவுகளோடு கலாபனின் ஓய்வுப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. தன்னை இழத்தலில் ஒரு வஞ்சத்தை அவள்மீது நிறைவேற்றுவதாக அவன் தன்னுள்ளேயே ஒரு மெல்லிய திருப்தியை அடைந்துகொண்டிருந்தான். ஐக்கிய அமெரிக்கா சென்றிருந்தபோது கண்டும் அடையாது விட்டுவிட்ட இன்பங்களின் ஞாபகங்கள் அவனில் நாள்தோறும் கிளர்ந்துகொண்டிருந்தன.
மறுபடியும் கப்பல் தென்னாபிரிக்காவைச் சுற்றியே அத்திலாந்திக் சமுத்;திரத்தை அடையப்போகிறது என்ற தகவல் காலதாமதமாகும் மனவுளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் சுவீடனை கப்பல் அடைவது நிச்சயம்தானே என வேலையும், அதிகமான மெஸ் உரையாடலும் என நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான் கலாபன்.

ஒருநாள் தூங்கச் செல்ல வெகுநேரமாகியிருந்ததால், எழும்பத் தாமதமாகி நாலு மணி பத்து நிமிடமளவில் அவசர அவசரமாக என்ஜின் அறைக்குள் நுழைந்தவன், வழக்கம்போல செல்லும்பொழுதிலேயே எந்திரங்களின் பாகங்களது வெப்பம், எண்ணெயின் அமுக்கம், நீராவிக் கொதிகலனின் நிலைகளைப் பார்க்கத் தவறியிருந்ததால், கீழே சென்ற சிறிதுநேரத்தில் என்ஜின் அறையில் கப்பலை உந்திச் செலுத்தும் பிரதான எந்திரத்தினைச் சுற்றியுள்ள நான்கு தளங்களிலும் மெதுவாக நடந்தபடி எல்லாவற்றையும் கவனித்துவரத் தொடங்கினான். என்ஜின் அறையின் கட்டுப்பாட்டு மேடையின் முன்னால் அமர்ந்து கோப்பி அருந்திக்கொண்டிருந்தான் இரண்டாவது என்ஜினியர். கப்பல் பயணம் வெகு சீராக இருக்கும் சமயங்களில் அதுதான் நிலைமை. இன்னும் சிறிதுநேரத்தில் அவன் தூங்கக்கூடச் செய்யலாம். கலாபனுக்கு அது ஏதுமில்லை.
கலாபன் மெதுமெதுவாக என்ஜின் அறையின் மூன்றாம் தளத்துக்கு வந்தான். அது அநேகமாக மெயின் என்ஜினின் சிலிண்டர் ஹெட் எனப்படும் பகுதிகளுக்குச் சமாந்;திரமான தளமாகும். அங்கிருந்துதான் கப்பல் எந்திரத்துக்குத் தேவையான காற்றை உள்ளே அனுப்புவதற்கான காற்று எந்திரமும், எண்ணெயைச் சக்தியாக எரித்து எச்சமாகும் காரிய வெப்ப வாயுவை வெளியேற்றும் எந்திரமும் இருக்கின்றன. அவற்றிலிருந்தான குழாய்கள் சென்று முடிவடையவும், தொடங்கவுமான ஸ்தானம் அதன் உச்சியில் இருக்கிறது. அதற்குள் ஏறிச்செல்வதற்கான கம்பி ஏணி இருக்கிறது. அதன் ஓரமாக மசகு எண்ணெயைச் சூடாக்கவும், கடலோடிகளுக்கு அன்றாடத் தேவைகளுக்கான தண்ணீரைச் சூடாக்கவும், குளிர்வலய நாடுகளின் பிரவேசத்தின்போது கபின்களுக்குத் தேவையான வெப்பமளிப்பதற்கான காற்றலைகளுக்கு சூடேற்றவும் அக் கப்பலில் நீராவியே பயன்படுத்தப்படுகிறது. அதற்கான கொதிகலன் இருக்கிற இடமும் அதுதான்.

பொதுவாகவும் அடிக்கடியும் கொதிகலனின் சமாந்திரத்துக்கு ஏறி யாரும் அதன் சூட்டுநிலை, அமுக்க நிலைகளைக் கண்டறிவதில்லை. நின்ற இடத்திலிருந்து மின்கல விளக்கின் சுடரின்மூலமே அவற்றினைக் கண்டுகொள்ள முடியும். அன்றைக்கு ஏனோ கலாபன் அதன் படிகளில் ஏறி கொதிகலனின் கிட்ட வந்தான். நீராவியின் அமுக்கம் சரியாக இருந்தது. அதனுள்ளிருக்கும் தீயுலையை மூட்டவேண்டிய தேவையிருக்கவில்லை. நீரின் அளவும் சரியாக இருந்தது. அவற்றையெல்லாம் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு கீழே இறங்கத் தயாரான கலாபன் கொதியுலையின் பின்புறம் எதேச்சையாகப் பார்வையை ஓட்டினான்.

எவ்வளவு மின்குமிழ்களைப் பொருத்தி வெளிச்சம் ஏற்றினாலும் எந்திர அறையில் எப்போதும் பிரகாசம் குறைவாக இருப்பதுபோல்படும். குறிப்பாக அந்த கொதியுலையின் பின்னால் இருள் உறைந்ததுபோல் அடைந்திருக்கும். கலாபன் பார்வையை வீசிய தருணத்திலும் அந்த வழமையான இருள் அங்கே இருக்கவே செய்தது. என்ஜின் அறையில் நடுப்பகுதியிலும், மின்சார சக்தியை உருவாக்கும் எந்திரங்களின் பகுதியிலும்தான் சத்தம் அதிகமாக இருக்கும். மேலே மிகக்குறைந்த அளவு சத்தத்தைப் பிறப்பிக்கும் எந்திரங்களே இருக்கின்றன. ஆனால் ஓர் ஊமை இரைச்சல் அந்த இடத்தில் கிளர்ந்துகொண்டிருக்கும். அந்த இருளையும், மிதமான ம்ம் என்ற இரைச்சலையும்விட இன்னொரு அம்சமும் அந்த இடத்திலுண்டு.

நாய்க்கு எங்கே அடித்தாலும் காலிலேதான் முடம் என்பார்கள். அதுபோல கப்பலிலே எந்திரத்தின் அசைவு அல்லது கப்பலின் அசைவுதானும் மாறுபடுகிற நேரத்தில் அதிர்வெழுகிற இடமும் அதுதான். ஊசவைiஉயட ளிநநன என்று ஒரு வேகநிலையைக் குறித்திருப்பார்கள் கப்பலில். மேலே, கீழே எந்த வேகத்திலும் செல்லலாம், ஆனால் இந்த குறிப்பிட்டளவு வேகத்தில் சென்றால் கப்பல் நடுங்கும். பழைய கட்டுமானக் கப்பலானால் குலுங்கும். கப்பலே நொருங்கிப்போகுமோவென மனம் துண்ணுறும்.
இருளை சும்மா ஊடறுத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த கலாபன் திரும்ப முனைந்த வேளையில் அந்த இருளிலிருந்து ஓர் அசைவு தெரிந்தது. தெரிந்ததல்ல, தெரிந்தது போலிருந்தது. இருளாவது அசைவதாவது! ஆனாலும் ஏனோ அந்த அசைவுபோன்ற மயக்கம் அதுவரை ஏற்படாதினால் கலாபனும் உடனடியாகத் திரும்பாமல் ஒரு மெல்லிய குழப்பமான நிலையில் அந்த இடத்திலேயே நின்றிருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கவே ஓர் இருள் உள்நகர்வது தெரிந்தது. கலாபன் அப்படியே உறைந்துபோனான். திறந்த வாயிலிருந்து சத்தம்தான் வரவில்லையே தவிர, பெரும்பாலும் அவன் கத்திவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

கையில் மின்கல விளக்கிருந்தது. ஒளியைப் பாய்ச்சிப் பார்க்கலாமே என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. அப்படியானாலும் இருளில் எதைப் பார்ப்பது? இருளில் ஒரு பொருளிருக்குமானால் விளக்கின் ஒளிகொண்டு அதைப் பார்க்கலாம்தான். ஆனால் இருளையே பார்க்கமுடியுமா?
சிறிதுநேரத்தில் அந்த இருட்டு பரிச்சயமாகியதில் உள்ளே ஒரு இருள் தெரிந்தது. அந்த இருளுருவத்தின் முகமாகக்கூடிய இடத்தில் இரண்டு வெண்மைகள் தெரிந்தன.

இப்போது நிலைமை நன்கு விளங்கிவிட்டது கலாபனுக்கு. யாரோ ஓர் ஆபிரிக்கன் பாகிஸ்தானில் கப்பல் நின்றிருந்த வேளையில் கப்பலில் களவாகச் சென்று வேறு ஒரு நாட்டில் களவாக இறங்குவதற்காக ஏறிக்கொண்டிருக்கிறான்.

அது கப்பல் போக்குவரத்தினதும், அந்தந்த நாடுகளினதும் சட்டவிதிகளுக்குப் புறம்பானது. அதை ஒரு கடலோடி உடனடியாக கப்ரினுக்கு அறிவிக்கவேண்டும். கப்ரின் அவனைக் கைதுசெய்து கரையொதுங்கும் நாட்டில் காவலதிகாரிகளிடம்; ஒப்படைக்கவேண்டும்.
கலாபன் கீழே இறங்கத் தயாரானான்.

இருளின் ஏதோ அவயவங்கள் அசைந்தனபோல் தெரிந்தன. கைகளாயிருக்கும். நெஞ்சில் கூம்பிக் கிடந்தன.

கீழே வந்த கலாபன் இரண்டாவது என்ஜினியரிடம் சொல்ல பலமுறையும்தான் முயன்றான். வாய் வரவில்லை. இருளின் கூம்பிய கரங்களா, அதன் வெண்ணிறக் கோளங்களில் கிடந்த பரிதாபமா எது அதைச் செய்தது?

மறுநாள் கொதிகலனின் பின்னால் அவன் கூர்ந்து பார்க்க முயலவேயில்லை. மூன்றாம் நாள் அவன் என்ன சாப்பிடுவான், எதையாவது கொண்டுவந்திருந்து வைத்துச் சாப்பிடுவானா, தண்ணீராவது குடித்திருப்பானோ, அந்தக் கொதிகலனின் பின்னால் குளிர்காலத்திலும் நா வரண்டுபோகுமே என நினைத்து இரண்டு பாண் துண்டுகளும், ஒரு விஸ்கி போத்தலில் நீரும் கொண்டுபோய் மறைப்பாக வைத்துவிட்டு கொதிகலனைப் பார்க்கச் சென்றவேளையில் எடுத்துக்கொண்டு சென்றான்.
இருள் அசைவு தெரியவில்லை. மேலே ஏறி பின்புறம் எட்டி நோக்கினான். இருள் உள்ளே சரிந்து கிடந்துகொண்டிருந்தது. கொண்டுசென்றிருந்த தண்ணீர்ப் போத்தலைக் கீழே வைத்துவிட்டு பாண் துண்டுகளைத் திரும்ப கொண்டுவந்துவிட்டான். பாண்துண்டுகள் ளுவழற-யறயல செய்யக்கூடிய ஒரு மனிதனைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடியவை.

மறுநாள் பலபலவென்று வெய்யில் எறித்துக்கொண்டிருந்த இரவு பதினொரு மணியளவில் சுவீடனின் துறைமுகத்தை நெருங்கியது கலாபன் வேலை செய்துகொண்டிருந்த எம்.வி.கிற்சாயி கப்பல். உடனடியாக துறைமுக மேடையிலும் கொண்டுசென்று கட்டப்பட்டது.

மறுநாள் காலைவேலை முடிந்து எட்டு மணிபோல் மேலே சென்ற கலாபன் நேரே பிரதம என்ஜினியர் அறைசென்று கொதிகலனின் பின்னால் மலவாடை வீசுவதாகப் புகார் செய்தான்.
கலாபனின் கடிதத்தை வாசித்த வேளையில் எனக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனால் அது குறுணியளவான விதையிலிருந்து முளைத்த ஆலமரமாக என்னுள் படர்ந்து வளரத் தொடங்கியது. திருமலைத் துறைமுகத்துக்கும் இல்மனைட் மண் ஏற்றுவதற்காக ஜேர்மானியக் கப்பல்கள் வந்துபோகின்றன. நான் கனவு காணத் தொடங்கினேன்.

000

கலாபன் கதை 4


இந்தியாவே கடலால் விழுங்கப்பட்டதுபோல்..

கஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது.

க~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது.

கலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவுக்குமேல் மனோவுக்கு அனுப்பிவிட்டிருந்தான். அந்த முறை விடுப்பிலே ஊர் செல்லும்போது வீட்டுக் கட்டுமானப் பணியைத் தொடக்கிவிட்டு வருவது என்று அவளோடு கடிதத்தில் கலந்துபேசி முடிவாகியும்விட்டது.

ஊரிலே நல்ல ஒரு காணி விலைக்கு வந்திருக்கிறது, மலிவாக வாங்கிக்கொள்ளலாம் என தாயார் எழுதியதற்கும், தனக்கு அப்போதைக்கு இருக்கிற காணி போதுமென்றும், வீடு கட்டுவதே முக்கியமானதென்றும் அவள் மனம் நோகாதவாறு கடிதமெழுதிவிட்டான். அவனது ஒவ்வொரு மூச்சும் வீடுகட்டும் தீர்மானத்தின் நிறைவேற்றத்துக்காகவே விடப்பட்டுக்கொண்டிருந்தது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

அதற்காக அவன் வெல்லவேண்டியிருந்தவை தன்னையும், தனது ஆசைகளையும் மட்டுமாயிருக்கவில்லை, தனது பயத்தையும்கூடவாகவே இருந்தது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு பயணம் தொடங்குவதுபோல, மரணத்தை அருகிலே வைத்துக்கொண்டுதான் வாழ்க்கைக்கான ஆதாரங்களைத் தேடவேண்டியிருந்த தொழிலாக இருந்தது அது.
அது ஒரு தொழில்தானா என்று அவனுக்குள்ளேயே கேள்வி உண்டு. அது ஒரு பொருள் தேடலின் யாத்திரை என்றுதான் அவனது நண்பன் சாந்தன் ஒருமுறை சொன்னான். ஓப்புக்கொண்டு இருக்கிற போதில், டீ.ழு.வு லண்டன் பரீட்சை எடுத்து அங்கு வேலைபார்க்கும் தனது பிரதம கப்பல் என்ஜினியருக்கும் அது யாத்திரைதானா என்ற வினாவெழுந்தது. கப்பலின் கப்ரின் தனது நாடாகிய கிரேக்கத்தில் ஆ.ழு.வு பட்டம் பெற்றவன். ரேடியோ ஒஃபீசர் ரொலாண்டோ, சர்வதேச அங்கீகாரமுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ரேடியோ ஒஃபீசர் தகுதி பெற்றிருந்தவன். ஒரு நாட்டின் துறைமுகத்துக்குள் ஒரு கப்பல் நுழையவேண்டுமெனின், கப்பல் ஏதாவது ஒரு நாட்டில் அதன் பயணத் தகுதிகுறித்த சான்றிதழ் பெற்றிருக்கவேண்டியது மட்டுமல்ல, கப்பல் அதிகாரிகள் தமது தகுதியை நிரூபிக்கும் சான்றிதழ்கள் பெற்றவராய் இருப்பதும் அவசியமாகும். இத்தகு எண்ணங்கள் சாந்தனின் கருத்தைத் தகர்த்து விட்டுவிடும். பின்னர் தன் போன்ற உடலுழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டோருக்கு அது யாத்திரையாக இருந்தாலும், அதைக் கல்வி வழியில் பட்டங்கள் பெற்று அடைந்தவர்களுக்கு தொழில்தான் என்று அவன் தீர்மானம் எடுத்திருந்தான். அதன் மேல் தன்போன்றவர்களது உழைப்புச் செலுத்துதலையும் அவன் யாத்திரையென்ற ஒற்றைப் பரிணாமத்தில் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அவனுக்கு அப்போது அதிகாலை நான்கிலிருந்து எட்டு மணிவரையான வேலையாகியிருந்தது. இரண்டாவது என்ஜினியரோடு வேலைசெய்தான். எட்டு மணிக்கு என்ஜின் கண்காணிப்பு வேலை முடிய எட்டு மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை மேலதிகமாக நான்கு மணிநேர பகல் வேலையும் செய்தான். கை நிறையத்தான் உழைத்தான். மனம்வைத்து உழைத்தான். உழைத்ததை ஊதாரித்தனமாக வேசைகளிடத்திலும், குடியிலும், டிஸ்கோகளிலும் என்று செலவழிக்காமல் ஒறுப்பாய்ச் செலவழித்து காசை மிச்சம் பிடித்தான். மிச்சம் பிடித்ததை மனைவியை வங்கிக் கணக்கு எடுக்கவைத்து வங்கிக்கே நேரடியாக அனுப்பினான். வீட்டுக்குச் செலவுக்குத் தேவையான பணத்தைமட்டும் எடு, மீதியை வங்கிக் கணக்கிலேயே வைத்திரு என்று எப்போதும்போல் ஒவ்வொரு தடவை பணம் அனுப்புகிறபோதும் அவன் தவறாது கடிதத்தில் எழுதிக்கொண்டேயிருந்தான்.
இரண்டாவது என்ஜினியரோடு பழக்கம் அதிகமாகியிருந்ததில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒரு மாத விடுப்பில் வீடு போய்விட்டு அதே கப்பலுக்குத் திரும்பிவருகிற வாய்ப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு ஒரு துறவிபோல் அவன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான்.

சமுத்திரங்கள் தம்முள்ளே தமக்குள் எது பெரியது, எது பயங்கரமானது என்பதை அறிய தமக்குள்ளேயே முட்டிமோதிக்கொள்ளும் என்று எப்போதாவது அவன் கற்பனையில்கூட யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால் அந்தமுறை தூரகிழக்கிலிருந்து கப்பலின் தென்னாபிரிக்காவைநோக்கிய பயணத்தில் இந்துசமுத்திரமும் அத்திலாந்திக் சமுத்திரமும் சேரும் தென்னாபிரிக்காவின் கீழ் முனையில் வானை முட்டுமளவுக்கு அலைகள் எழுந்து விழுந்துகொண்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆபிரிக்க முனையைச் சுற்றி இந்தியாவை, பொதுவாக ஆசியாவை, அடைய எடுத்த அத்தனை கடற் பயண முயற்சிகளும் இடைமுறிந்து போக, 1492இல் வாஸ்கோ டி காமா என்றவனின் முயற்சிதான் வெற்றிபெறுகிறது. கடந்து செல்ல முடியாது என்றிருந்த பயங்கரத் தென்னாபிரிக்க முனையைக் கடந்து அவன்தான் நன்னம்பிக்கை முனையென அம்முனைக்குப் பெயரிட்டான். ஆயினும் நன்னம்பிக்கை முனை நம்பிக்கைகளைச் சிதறவைக்கும் முனையாகவே அன்றுவரை இருந்துகொண்டிருந்தது.

அவை எச் சமுத்திரத்தின் அலைகள்? நிலக்கூறுகள்போல சமுத்திரத்தைக் கூறுபோட்டுவிட முடியுமா? பூகோளம் சொல்லிற்று அது இந்துசமுத்திரத்தின் ஆகக்கூடிய தென்பிராந்தியமென்று. ஆனால் அத்திலாந்திக் சமுத்திரம் அதனை ஓடஓட விரட்டிவிட்டு அந்த இடத்தில் தான் அமர்ந்துவிடுவதற்குப்போன்ற அத்தனை மூர்க்கத்தில் இரைந்து பாய்ந்துகொண்டிருந்தது. விலகியோடிய இந்து சமுத்திரமும் சளைத்திருக்கவில்லை. ஓடி ஒதுங்குவதாய்ப் போக்குக் காட்டிவிட்டுப்போல் விலகி, மறுபடி பத்து மடங்கு மூர்க்கத்தோடு திரும்பப் பாய்ந்துகொண்டிருந்தது. நேர்நேர் மின்காந்த அணுக்களின் மோதுகையில் மின்னல் பிறப்பதுபோல், இரு சமுத்திரங்களின் நேர்நேர் மோதுகையில் பிரளயம் பிறந்தது. அந்தப் பிரளயத்தில் கப்பலும் கப்பலும் மோதும் கடல் விபத்துக்கள் நடந்தன. கப்பல்கள் சில நொருங்கி மூழ்கின. கடற் பயணத்தில் சாத்தியமாகக்கூடிய அத்தனை அழிவுகளும் அந்தத் தென்னாபிரிக்க முனையில் நிகழ்ந்தன.
டர்பன் துறைமுகத்தில் வைத்துத்தான் அந்தக் கடற் சூறாவளியின் அச்ச வாடை மறைவதின் முன்னர் அடுத்தமுறை கப்பல் திரும்ப ஆசிய வருகிறபோதில் தான் வீடு வரவிருப்பதாக மனோவுக்கு கடிதம் எழுதினான் கலாபன்.

அங்கேதான் தமிழ் கொஞ்சம் பேசத் தெரிந்த, தமிழ்ச் சினிமாப் பாட்டுக்களையே வானொலியிலும், ரேப் ரிக்கோடரிலும் எந்நேரமும் கேட்கிற ஒரு தமிழ் ராக்சி ட்ரைவரை அவன் சந்தித்தது. அந்நாளில்தான் காந்தி நடந்த தெருக்கள் என்றும், காந்தி வசித்த வீடென்றும் சில இடங்களையேனும் அந்த டாக்சி ட்ரைவர் அவனுக்குக் காட்டினான்.
சில தினங்கள் டர்பனில் தங்கிய பின் கப்பல் மறுபடி அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கிழித்துச் செல்லும் தென்னமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டது. அம்முறை அவர்களின் பயண இடம் கொலம்பியாவாக இருந்தது.

மழையையும் வாழைத் தோட்டங்களையும் தவிர கொலம்பியாவில் பார்த்ததாய் எதுவுமே கலாபனின் ஞாபகத்தில் இல்லை.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு கிழமையில் கப்பல் பயணம் தொடங்கியது. முதலில் வடஅமெரிக்காவென்றும், பிறகு அங்கிருந்து ஜப்பானென்றும் அறியவந்தது.
கப்பலில் ஒஃபீசர் மெஸ், குறூ மெஸ் என்று இரண்டு சாப்பாட்டு இடங்கள் உண்டு. கலாபன், சாந்தன், லால் பெரேரா போன்றோர் குறூ மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ரேடியோ ஒஃபீசர், இரண்டாம் மூன்றாம் நிலை என்ஜினியர்கள், சீஃப் ஒஃபீசர் மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலை அயவநகள் ஒஃபீசர் மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ஆயினும், மார்க்கோனி சாப்பாடு முடிய குறூ மெஸ்ஸ{க்கு வந்துவிடுவான். கலாபன் ஆதியோருடன் நல்ல ஒட்டுதல் இருந்தது அவனுக்கு. கப்பல் பயண புதினங்கள் பரிமாறப்படுகிற இடமும் வேளையும் அதுதான். அவன்மூலமாகவே பயண விபரங்கள் கலாபன் ஆதியோருக்குத் தெரியவந்துகொண்டிருந்தன.

பெரும்பாலும் அதிவிசே~ங்களின்றியே அமெரிக்கத் துறைமுகமான சியாட்டிலின் கடற்பயணம் இருந்தது. சியாட்டில் பசுபிக் சமுத்திரத்தின் வாடைகூட எட்டாத இடத்தில் இருந்தது. ஆனாலும் ஜூவான் டி புகா என்ற தொடுவாயின் ஊடான தொடுப்பினால் பயங்கரத்தின் தாக்கம் சிறிதாகவேனும் இருக்கவே செய்தது. கடலற்ற சியாட்டில் துறைமுகத்தின் கடற்பாதை ஜூவான் டி புவாதான்.
துறைமுகத்துள் புகுந்த எம்.வி. எலியாஸ் அன்ஜிலாகோஸ் என்ற கப்பல் அதேயளவு பிரமாண்டம்கொண்ட எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பலின் பின்னால் கட்டப்பட்டது. இரண்டொரு நாட்களுக்குள்ளேயே அங்கு வேலைசெய்த ஒரு தமிழ் கப்பலோட்டியோடு பழக்கமேற்பட்டு, கலாபனும் மற்றுமிரு இலங்கையரும் அந்தக் கப்பலுக்கு ஒருமுறை சென்று வந்தனர்.

கலாபன் வேலைசெய்த எம்.வி.எலியாஸ் அன்ஜிலாகோஸின் வசதிகள் எம்.வி.சந்திரகுப்தவில் இல்லாவிட்டாலும், அது கலாபனுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. இந்தியாவே அந்தக் கப்பலுக்குள் வாழ்வதுபோன்ற பிரமையிலிருந்தான் அவன். பல்வேறு தேசிய இனங்கள் வேலைசெய்த ஒரு நாட்டின் கப்பலாக அது இருந்தது. பஞ்சாபிகள், மலையாளிகள், தமிழர், வங்காளி, குஜராத்திகள் என அத் தேசிய இனக் கலப்பு மிகுந்த சந்தோ~த்தைக் கொடுத்தது. மேல்நாட்டு நங்கையரையே பார்த்தலுத்த கண்களுக்கு சேலையுடன் நடமாடிய இந்திய கப்பல் ஊழியரின் மனைவியர் விரகமற்ற குளிர்ச்சியை மனத்துக்கு அளித்தனர். அவர்களது குழந்தைகள்வேறு காண்போரின் குடும்ப தவனங்களை அடக்குவனவாய். அங்கே ஒரு திரைப்படக் கூடமொன்றும் இருந்தது. கலாபனாதியோர் சென்ற பொழுதில், மிதுன் சக்கரவர்த்தி நடித்த ஒரு இந்தித் திரைப்படம் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழ்ப் படமும் சிலவேளை காண்பிப்பார்கள் என்று சொன்னான் தமிழ்க் கடலோடி. கலாபனின் கப்பலில் உள்ள மொத்தத் தொகையே இருபதுக்குள்தான். ஆனால் இந்தியக் கப்பலில் எழுபத்தாறு பேர்கள் இருந்தார்களாம். போதையாயிருந்த ஒரு பொழுதில் லால் சொன்னான், எம்.வி.சந்திரகுப்தவுள் ஒரு ‘சிமோல் இந்தியா’வே இருப்பதாக.
மனம் கழித்துக்கொண்டிருந்தபோதில் காலநிலை சீரகேடடைந்துகொண்டிருந்தது. ஜூவான் டி புவாவை ஊடறுத்து கடலின் கொந்தளிப்பு சியாட்டில் துறைமுகத்தை அடைந்துகொண்டிருந்தது. அந்தமுறை கடற்பயணம் மீண்டும் ஓர் உயிரச்சத்தை ஏற்படுத்தும் பயணமாக இருக்கப்போவதாக எதுவுமேயில்லை, அவர்களது மனங்களே சூசகம் சொல்லிக்கொண்டிருந்தன.

ஆனாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளிலும் நேரத்திலும் கப்பல் புறப்பட்டது. கலாபனாதியோருக்கு ஏனோ மனத்தில் ஒரு தெம்பு. இந்தியக் கப்பல் அவர்களது கண்களுக்கு எட்டும் தூரத்திலேயே பயணத்தைத் தொடங்கிச் சென்றுகொண்டிருந்தது.
ஏறக்குறைய பசுபிக்கை இரண்டாக வெட்டியோடும் பயணம் அது. இந்தியக் கப்பலின் பயணமும் ஜப்பான்தான் என்றறிந்ததால், முன்னே கடல்வெளியில் பார்வை படும்படியாக அது சென்றுகொண்டிருந்தமை ஒரு மனத்தைரியத்தை எலியாஸ் அன்ஜிலாகோஸ் பயணிகளுக்கு அளித்திருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமிருக்கவில்லை.

இரண்டு நாட்களாயின, மூன்று நாட்களாயின… கடல் தன் போக்கு மாறவேயில்லை. கூடிய இராப்பொழுதுப் பருவமான அது, மேலும் திணிந்து திணிந்து பகலையும் கவிய ஆரம்பித்துவிட்டது. பகல் பதினொன்றுக்கும் மதியத்தின்மேல் இரண்டு மணிக்குமிடையில் சிறிது சூரியக் கதிர் தெரிந்தது. பின்னால் இருட்டும், குளிரும், காற்றும்தான். இந்த நிலையில் தூரத்தே சென்றுகொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்தவின் மங்கிய தோற்றமும் காணப்பட முடியாததாயிற்று.
கப்பல் ஊழியர்கள் கலகப்பட ஆரம்பித்தார்கள். அதே பாகையில் தொடர்ந்தும் பயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் வசதியீனங்களையும் எண்ணாமல், எண்ணெய்ச் செலவை மீதமாக்கவும் குறிப்பிட்ட தேதியில் ஜப்பான் துறைமுகமான ஒசாகாவை அடையவும் கப்பரின் கொண்டிருந்த தீர்மானம்பற்றி எல்லார் வாயிலும் புகார். அதிகாரிகள் நிலையிலுள்ளோர் அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர எண்ணாமலும் இருந்திருப்பார்களா என்பதை அறுதியிட முடியாது. கப்பல் சென்றுகொண்டிருந்த திசைப்பாகை மாறாமலேதான் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்த சாதாரண கப்பல் ஊழியர்கள் வெளிப்படப் பேசினார்கள். தங்கள் கோபத்தை வெளிப்படக் காட்டினார்கள். கப்ரினுக்கு ஏவல்வேலை செய்ய இருந்த கப்ரின் போய் (ஊயிவயin டிழல) கப்ரினுக்குப் பணிவிடை செய்யாமல் கபினுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். காலநிலையை, இன்னும் எத்தனை நாள் பயணம் தொடரவேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லக்கூடிய மார்க்கோனியும் கீழே வருவதை நிறுத்திவிட்டதில், கலாபன் போன்றோரால் சேதி எதையும் அறியமுடியாது போய்விட்டது. தகவலெதுவும் அறிய முடியாத நிலையில் பயம் மேலும் பயமாக, அது இன்னுமின்னுமான உயிரச்சமாக வளர ஆரம்பித்துவிட்டது. மேலும் ஒரு கிழமை ஆகியது. கப்பல் பயணத்தின் திசைப் பாகை மாறவில்லை. கடலோ தன் கடூரம் கொஞ்சமும் குறையாமலே இருந்துகொண்டிருந்தது.

ஒரு மதியத்தில் குறூ மெஸ் பக்கமாக கப்ரின் வந்தபோது, வழக்கம்போல் யாரும் வந்தனம் சொல்லவில்லை. நிமிர்ந்து பார்கவுமில்லை. அவன் வந்ததான பாவனையே காட்டவில்லை.
சிறிதுநேரம் நிலைகுத்தி நின்றிருந்த கப்ரின் எதிரே அமர்ந்திருந்த கலாபனைநோக்கி வந்தான். ‘ஏன் எவரும் என்னோடு பேசுகிறீர்கள் இல்லை. என்ன நடந்தது உங்களுக்கு’ என்று அழாக்குறையாகக் கேட்டான்.

பேச மனதில்லாதிருந்தது யாருக்கும். ஆனாலும் கலாபன் மனத்தைத் திடமாக்கிக்கொண்டு, ‘நீ கம்பெனி நன்மைக்காக போக்குத் திசையை மாற்றாமலே கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கிறாய். ஏங்களுடைய கப்ரின் என்றுதான் இவ்வளவு காலமும் எண்ணி உனக்கு வந்தனம் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நீ கம்பெனியின் கப்ரின். அப்படியான ஒரு கப்ரினுக்கு எங்களிடத்தில் மரியாதை இல்லை’ என்றான் கலாபன்.

‘முட்டாள்ப் பயல்களே, இன்றைக்கு இவ்வளவு க~;ரத்தோடாயினும் நாம் பயணம் செய்துகொண்டிருக்கிறோமே, ஏன் தெரியுமா? பயணத் திசைப் பாகையை மாற்றாதபடியால்தான். அவ்வாறு பயணத் திசைப் பாகையை மாற்றிய வேறுவேறு கப்பல்களுக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்களுக்கு என்ன தெரியப் போகிறது? வேண்டுமானால் மார்க்கோனி வரும்போது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் இப்போது பயணிப்பதே ஆகக் கூடுதலான ஆபத்தற்ற வழி..’
கப்ரின் மேலே அவ்விடத்தில் தங்கவில்லை.

மறுநாள் அவர்கள் மெஸ்ஸ_க்கு சாப்பிட வந்தபோது சிறிது கடலோய்ந்திருந்தது கண்டார்கள்.
மதியவேளையில் அதுவரை தென்படாதிருந்த மார்க்கோனி வந்தான். தன்னை கப்ரின்தான் கீழே செல்லவேண்டாமெனத் தடுத்ததாகச் சொன்னான். தொடர்ந்த அவனது பேச்சிலேதான் தெரிந்தது, கப்;ரின் சொன்னதிலுள்ள உண்மை. இரண்டு கப்பல்கள் கடலுள் மூழ்கியிருக்கின்றன. அதிலொன்று எழுபத்தாறு பேர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பல். யாருக்கும் மேலே பேசவே வரவில்லை.

கண்கலங்கி அழுகிற நிலையில் நின்றுகொண்டிருந்தான் கலாபன்.

அந்தமுறை அவனெழுதிய கடிதத்தை நான் இரண்டு தடவைகள் வாசித்தேன்.

மரணத்தை, அதன் உக்கிரத்தை ஒரு நெருக்கத்திலிருந்து விளக்கியிருந்தது கடிதம். அதை இவ்வாறு முடித்திருந்தான் கலாபன்: ‘எம்.வி.சந்திரகுப்த கடலிலே தாண்டுவிட்டது என்ற செய்தி இந்தியப் பெருநாடே கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோன்ற அதிர்வைத் தந்தது. அத்தனைக்கு அது பல்லினத் தன்மையோடும், அவற்றின் கலாச்சாரத் தொனிப்போடும் என் பார்வைக்குப் பட்டிருந்தது. எழுபத்தாறு உயிர்கள், எழுபத்தாறு கோடி மக்களின் நாட்டில் பெரிய இழப்பில்லைத்தான். ஆனால் அந்த எழுபத்தாறு உயிர்கள் அமைத்திருந்த சூழலின் அழிவு எனக்கு ஒரு நாட்டையே இழந்திருப்பதான துக்கத்தையே செய்கிறது.’

000

Saturday, September 19, 2009

கலாபன் கதை 3கடலில் தொலைந்த ஒருநாள்அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை.

காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான்.

ஒரு முன்னிராப்போதில் கப்பல் அமெரிக்காவின் கல்வெஸ்ரன் துறைமுகத்தை அணுகி நங்கூரமிட்டது. எட்டு-பன்னிரண்டு மணிநேர என்ஜின் றூம் கடமையிலிருந்த கலாபன், கப்பல் நங்கூரமிட்டு அது நிறுத்தப்படுவதற்கான ஆரவாரங்களெல்லாம் முடிய பத்து மணிபோல் மேலே வந்தான். சியாட்டில், லொஸ் ஏஞ்சலெஸ், சான்பிரான்சிஸ்கோ, நியூவார்க் என்று பிரபலமான அமெரிக்கத் துறைமுகங்கள்பற்றிக் கேள்விப்பட்டிருந்தவன், கல்வெஸ்ரன் என்ற ஓர் அநாமதேயத் துறைமுகத்தை அடைவதில் பெரிய பரபரப்பைக் கொண்டிருக்கவில்லையென்றாலும், அதுவே அவனது முதல் அமெரிக்கத் தரிசனம் என்ற வகையில் இயல்பான ஓர் ஆர்வம் அவனை அவ்வாறு மேலேவரச் செய்திருந்தது. மெயின் என்ஜின் நிறுத்தப்பட்டுவிட்டதால் இனி மின்சாரம் வழங்குவதற்கான ஜெனரேட்டர்கள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். கலாபனுக்கு பெரிய வேலை அந்த நேரத்தில் இல்லை. இனி பதினொன்றரை போல இறங்கி, எண்ணெய் விட்டு, நீர் மற்றும் எண்ணெய் ஆகியனவற்றின் வெப்பம், அழுத்தம் முதலியவற்றை அறிக்கையேட்டில் பதிந்துவிட்டு வந்தால் போதும்.

பின்புறத் தளத்துக்கு வந்தவன் வீசிய குளிர்காற்றில் உடல் சில்லிட சுத்தமான காற்றின் சுவாசிப்பில் சுகித்து சிறிதுநேரம் நின்றுவிட்டு கரைநோக்கிய திசையில் பார்வையை எறிந்தான். துறைமுகம் இன்னும் தூரத்திலேயே இருந்தது. வரிசையான விளக்கு வெளிச்சங்கள். அதன் சமாந்திரத்தில் இன்னுமொரு வெளிச்சப் புள்ளி வரிசை. அது அசைந்துகொண்டிருந்தது. பெருவீதியொன்றின் வாகனப் போக்குவரத்துத்தான் அது என்பதை அனுமானிக்க கலாபனுக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. அவ்வெளிச்ச வரிசைகளிடையில் தெரிந்த சிகப்பு நீல மஞ்சள் நிற ஒளிப்புள்ளிகள் மனத்தை கிளுகிளுப்படையச் செய்தன. அவை மது, மாது, நடனங்களின் குறியீடுகள். கடலோடிகளுக்கு மட்டுமாவது. ஆயினும் இனி மனக்கட்டுப்பாட்டோடு இருக்க அவன் ஏற்கனவே முடிவுசெய்திருந்ததில் பெரிதாகக் கிளர்ந்து அது எம்.வி.ஜோய்18 கப்பலில் வேலைசெய்த காலத்தில்போல் அட்டகாசம் செய்யவில்லை.

சிறிதுநேரம் அவ்வாறே நின்றிருந்திருந்தவனின் பார்வை ஒரு விசித்திரத்தை அப்போதுதான் இனங்கண்டது. கரை உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிக்கொண்டிருந்தது. கப்பல் வாழ்வின் அனுபவம் அவனுக்கு வெகுவாக இல்லையெனினும், அந்த இரண்டு மூன்று வரு~ங்கள் கப்பலின் மேல்கீழானதும், பக்கப்பாடுகளிலானதுமான அசைவுகளுக்கு அவனைப் பழக்கப் படுத்தியிருந்தன. அதனால் கப்பலின் அசைவுகளை உணர்தல் அரிதாகி, பார்க்கும் வெளியே அசைவதுபோன்ற பிரமையுறுதல் இயல்பில் வாய்த்திருந்தது. அசையும் பொருளை அசைவற்றதாய் நினைத்து அசையாப் பொருளின் அசைவை அனுபவிக்கும் அந்த மாயத்தின் கணங்கள் அவனுக்குப் பிடித்தமானவை.

பயண காலத்தில், அதாவது மெயின் என்ஜின் வேலைசெய்யும் பொழுதுகளில், ஓர் என்ஜினியரோடு அவன் வேலைசெய்யவேண்டி இருக்கும். நான்கு மணிநேர வேலைக்குப் பிறகு எட்டு மணிநேர ஓய்வு என இரவும் பகலுமாக இருந்த அந்த வேலைநேரப் பகுப்பு, நாள் முழுவதும் வேலைசெய்வதுபோன்ற அலுப்பைச் செய்ததெனினும், அது ஒரு நேரத்தின் விரைவுக்கூற்றினைக் கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருக்கிறான். அதுவே அவ்வேலைப் பகுப்பின் முக்கியமான அலகு அல்ல. என்ஜின் அறை, செல்லவேண்டிய இடத்தைத் துல்லியமாக பாகைவாரியாகக் கண்டு செலுத்துவதற்கான பிறிஜ் எனப்படும் உச்ச தளம் ஆகியனவற்றில் உள்ள வேலைகள் கூடுதலான கவனத்தைக் கோருபவை. அதிகூடுதலான வெப்பசக்தியை கொதிநிலை எண்ணெய்க் கசிவுகளின் மத்தியில் பிறப்பிக்கும் கீழேயுள்ள என்ஜின் அறை வெகுவான தருணங்களில் தன் தீ நாக்குகளை சட்டெனப் பரப்பி கப்பலையே எரிபொருளாக்கிவிடும் அபாயம் இருந்தது. அதுபோல் மேலே சுக்;கான் அறையில் இருக்கக்கூடிய கவனப்பிசகில் தரைவழியின் வாகன விபத்துக்கள்போல் கடலிலும் கப்பல்களின் மோதுகைகள் நிகழக்கூடும். மேலும் கடலில் தலைதூக்கி நின்றிருக்கும் குன்றுகள் கப்பலின் அடித்தளத்தையே கீறிச் சிதைத்து அதனை கடலுள் அமிழ்த்திவிடும் அபாயமும் இருந்தது. இரவில் சுக்கான் தளம் வெளியின் இருளையெல்லாம் தன்னுள் வாரியபடி இருண்டுபோயிருக்கும். இருளினுள்ளிருந்து எதிரே வெளிச்சப் புள்ளி ஏதாவது தெரிகின்றதா என்ற கப்பல் அதிகாரியினதும் கூடப் பணிசெய்பவரினதும் அவதானிப்பின் மும்முரமே மறுநாள் கப்பலின் இருத்தலையே உறுதிசெய்யும். அது பிழைக்கிறபோது விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியாதவை. அவ்வாறு பல விபத்துக்களைக் கடல்வர்த்தக வரலாறு தன்னுள் கொண்டிருப்பதை தான் புரட்டும் அயல்மொழிச் சஞ்சிகைகளிலிருந்து கலாபன் நிறையவே அறிந்திருக்கிறான். அதனால் பகலில் நான்கு, இரவில் நான்கு மணியான வேலைப் பகுப்பு அவனுக்கு உடன்பாடாகியிருந்தது.

மறுநாள் அதிகாலையிலேயே என்ஜின் தயாராக்கப்பட்டது. துறைமுக பைலட் வந்ததும் கப்பல் துறைமுகத்துள் நுழைந்தது. சிறிதுநேரத்தில் கப்பலும் பெருவடங்களில் பிணைக்கப்பட்டாயிற்று. வெளியே காத்திருந்த ஏஜன்ற் உள்ளே வந்ததும் கடிதங்களும் பணமும் பெறும் ஆரவாரம் மாலுமிகளிடையே வெகுத்து, கடிதத் தகவல்களின் துக்கமோ மகிழ்ச்சியோ விளைத்த உணர்வுக் கோலங்களுக்கான போதைகொள் சடங்குகள் ஆரம்பமாகி மதியத்தின் மேல் அவையும் அடங்கின.

கலாபன் தன் மனைவியின் கடிதத்தோடு வந்திருந்த மகளின் பிறந்தநாள் படங்கள் விளைத்த மனக்கிளர்ச்சியோடு பிற்பகலைக் கடத்தினான். ஆறு மணியளவில் நகரைப் பார்த்துவர, எடுத்திருந்த சிறிய தொகையோடு சென்றான். கப்பல்காரர்களைத் தேடி விரிந்த சில வெண்நங்கையரின் பார்வைகளை அநாயாசமாக விலகிக்கொண்டு ஒரு சிவப்பு விளக்குகள் சிறப்புற விரிந்துகொண்டிருந்த எக்சலென்ற் என்று எதிரே தென்பட்ட ஒரு பாருக்குச் சென்றான் கலாபன்.

வாசலில் நின்றிருந்த ஒரு பணிப்பெண் உள்ளே குடிவகைகளின் விலைப்பட்டியலைக் காட்டிக்கொண்டிருந்தாள். ஒரு பியர் மூன்று டொலர்களா என அதிர்ச்சி விளைந்தாலும், அமெரிக்காவிலும் ஒரு பாரில் குடித்ததாக ஒன்றிரண்டு பியர்களோடு திரும்ப எண்ணிக்கொண்டு, புகையும் இசையும் சத்தமும் உரசல்களும் நிறைந்திருந்த அந்த பாரினுள் நுழைந்தான்.

ஒரு பியர் போத்தலை வாங்கிக்கொண்டு தூர ஓரிடமாய்ச் சென்றமர்ந்தான். ஒரு பக்கத்தில் தலையுயரத்துக்கு மேலேயுள்ள ஒரு திரையில் 8எம்.எம். புரஜெக்டர் ஒன்று புணர்ச்சியின் உச்சகட்ட இயக்கத்தை விரகம் மேவும் சத்தத்துடன் விரிய விட்டுக்கொண்டிருந்தது.
அங்கிருந்து வெளியேற கலாபன் தன்னுடன் ஒரு யுத்தத்தையே நடத்தவேண்டியிருந்தது. மூன்று பியர்கள் முடிகிறவரையில் அந்த யுத்தத்தில் அவன் வென்றான். வெளியே வந்தவன் மகளுக்காக விலைகூடியதானாலும் ஒரு சட்டை வாங்கிக்கொண்டு வேலைநேரத்துக்கு முன் கப்பலுக்குத் திரும்பினான்.

மறுநாள் மாலையில் கப்பல் பயணப்படுவதாக இருந்தது. பயணம் மீண்டும் தூரகிழக்கு.
மதியத்தில் கலாபன் வேலை முடிந்து மேலே வந்தபோது சாப்பாட்டு அறையில் ஒரு துறைமுகத் தொழிலாளி செக்ஸ் படப் புத்தகங்கள், போட்டோக்கள் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஈரடிநிலை நங்கையரின் போட்டோக்களில் இரண்டை நண்பர்களுக்கு அனுப்பும் எண்ணத்தோடு அவன் வாங்கிக்கொண்டான். அவசரமாக தபால்நிலையம் போகவிருந்த ஒரு நண்பன் மூலம் மனோவுக்;கான கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. காமவிழைச்சலிலிருந்து அந்தமுறை தன்னைக் காத்துக்கொண்டது கலாபனுக்குச் சந்தோ~மாக இருந்தது.

கப்பல் மாலையில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மீண்டும் மலே~pயா என்று பேச்சாக இருந்தது.

கப்பல் பயணத்தைத் தொடக்கி ஒரு கிழமையாயிற்று. தன் மனைவியின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருப்பது அவனுக்கு ஒரு திடுக்காட்டத்தோடு ஞாபகமானது. அதை அமெரிக்காவில் நின்றபோது நினைவுகொண்டு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல் அனுப்பாது போனமைக்காக கலாபன் தன்னையே நொந்துகொண்டான்.
கப்பல் மாறிமாறி ஏற்பட்ட அலைவீச்சுகளிலும் அமைதிச் சூழ்நிலைகளிலும் பயணித்துக்கொண்டிருந்தது.

மனோகரி ஒரு தை இருபத்தாறில் பிறந்திருந்தாள். தை இருபத்தாறுக்கு இன்னும் இரண்டே தினங்கள் இருந்தன. அன்று சனிக்கிழமை. அவளது பிறந்தநாள் ஞாயிறில் வருகிறது. கடலில் தன் மனைவியின் பிறந்தநாளை நினைவுகொள்ளப் போகிற அந்த முதல் தருணத்தைக் குறித்த பரபரப்போடு அவனது நேரங்கள் கடந்துகொண்டிருந்தன. அந்த மாதிரி முந்திய கடல்பயண காலங்களில் தான் அவளது பிறந்தநாளை நினைத்திருக்கவில்லை, நினைப்பே வந்திருக்கவில்லையென்கிற யதார்த்தம் ஒருவகையில் அவனை உலுப்பச் செய்தது. மனோவின் காட்டமான நடத்தைகள் ஒருவகையில் நியாயமானவையோ என தன்னுள் கேள்வியெழுப்பி அது அவ்வாறுதான் என்று நம்புகிற நிலையிலிருந்தான் கலாபன்.
பசுபிக் சமுத்திரம் அமைதி தோய்ந்து கிடந்தது. கிழக்கை நோக்கிய பயணத்தின் சில இரவுகளின் வேலைநேரங்கள் ஒரு மணிநேரம் அதிகமானதாக முடிந்துகொண்டிருந்தன. அதாவது அவ்வேலைநேரங்களின் ஐந்து மணிநேர வேலை நான்கு மணிநேரமாகக் கணிக்கப்படும்.

செவ்வாய் இரவு எட்டு மணிக்கு வேலை தொடங்கி தன் ஐந்து மணிநேர வேலை முடிந்து கலாபன் மேலே வந்தபோது பன்னிரண்டு மணி. பின்புற மேற்தளத்தில் அந்தக் குளிர்கால இரவிலும் பல்வேறு நிகழ்வுகளையும் உறவுகளையும் நண்பர்களையும் நினைத்தபடியே நின்று சிகரெட் புகைத்தான் அவன். மேலே அதிவடிவில் நிலா தொங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரமேதுமற்ற நீலமாய் வானம். மேகம்கூட திரண்டிருக்கவில்லை. அந்தளவு நிர்மலம்! நிர்மலம் என்பதன் அர்த்த பரிமாணக் காட்சியும் காலமும்.

விடிந்தால் மனோவின் பிறந்தநாள். குதூகலத்தோடேயே படுக்கப்போனான் அவன்.
வழக்கம்போல் காலையில் ஏழரை மணிக்கு தன்னை எழுப்ப தட்டப்படும் கதவுச் சத்தத்தின் முன்னரே எழுந்துவிட்ட கலாபன், மேலே மாலுமிகள் சாப்பாட்டறைக்கு வந்தான்.

ஞாயிறுகளில் பகல்வேலைகாரருக்கு வேலையில்லாததால் நிறைந்துபோயிருக்க வேண்டிய அந்த இடம் வெறித்துப்போயிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மெஸ்போய் அக்பரைக் கேட்டான். அவர்தான் சொன்னார், இன்றைக்கு ஞாயிறு இல்லையே என.
ஞாயிறு இல்லையா? என அவன் குழம்ப, அக்பர் விளங்கப்படுத்தினார்: ‘மேற்குப் பயணத்தில் வேலைநேரம் கூடிக்கொண்டு போகும். கிழக்குத் திசைப் பயணத்தில் அது குறையும். இதனால் மேற்குத் திசைப் பயணத்தில் ஒரு நாள் அதிகமாகும். நீதான் பார்த்திருப்பாயே, போனமுறை மலே~pயாவிலிருந்து நாங்கள் அமெரிக்கா போனபோது ஒரு செவ்வாய் அதிகமானது. அந்த வாரத்தில் நீ ஆறு நாட்கள் வேலைசெய்திருப்பாய். இரண்டு செவ்வாய்கள் வந்தன. அது ஞாபகமா?’

கலாபன் ஆமென்று தலையசைத்தான். இப்போது நிலைமை அவனுக்கு ஓரளவு புரிந்திருந்தது. ஆனாலும் அக்பர் தொடர்ந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். அக்பர் ஒரு முது கடலோடி. நாற்பதாண்டுக் கால கடற்பயண அனுபவம் கொண்டவர்.
‘பசுபிக்கில் அலையும் அமைதியும் பயங்கரமும் அழகும் மட்டுமில்லை கலா, அதிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சர்வதேச நாட்கோடும் வரையப்பட்டிருக்கிறது. கப்பல் பயணங்களின்போதுதான் பெரும்பாலும் நாள்களின் இந்தச் சடுதி மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. விமானப் பயணத்திலும் ஏற்படும்தான், ஆனால் உணரப்படாமலிருக்கும். இந்த இன்ரர்நே~னல் டேற் லைனை மேற்கிலிருந்து கடந்தால் ஒரு நாளை நீ இழப்பாய். கிழக்கிலிருந்து கடந்தால் அதிகமாய்ப் பெறுவாய். இழப்பதும் ஒரு தோற்றமாகவே இருக்குமே தவிர உண்மையில் அவ்வாறு நடப்பதில்லை. எல்லாம் ஒரு ஏற்பாடுதான்’ என்ற அக்பர் வேலை இருப்பதாகக் கூறி அப்பால் நகர்ந்தான்.

விறைத்துப்போய் நின்றிருந்தான் கலாபன். அக்பர் ஒருநாளை இழப்பதாகத்தான் கூறினான். ஆனால் அவனோ ஒரு நாளைத் தொலைத்திருக்கிறான். அவனது மனைவியின் பிறந்தநாள் தொலைந்திருக்கிறது கடலில். வாழ்வின் நேரம் இழக்கப்படாமல் நாள் தொலையும் அந்த அதிசயத்துடன் சாப்பிடாமலே என்ஜின்அறை சென்ற கலாபனை, ‘என்ன கலா, சோகமாக இருக்கிறாய்?’ என்று கேட்டான் என்ஜினியர். கலாபன் சிரித்து மழுப்பினான். அவனுக்குத்தான் அந்த இழப்பு புதுமையும் துக்கமும். அவனது என்ஜினியரான அந்தக் கிரேக்கனுக்கு அது ஏதுமற்றதாகக்கூட இருக்கலாம்.

கடிதத்தில் கலாபனின் இழப்பை வாசித்தறிந்த எனக்கும் அது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் கூட அவன் இணைத்திருந்த படம் என் எல்லா உணர்வுகளையும் அமுக்கிக்கொண்டு என் கவனமெல்லாத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருந்தது.

நான் கடிதத்தை வைத்துவிட்டு படத்தைப் பார்த்தேன். ஒரு மனிதனின் பல்நிலைப்படும் மனம்போல அது தன் பல்நிலைகளைக் அடக்கிக்கொண்டிருந்தது. நேரில் பிடித்துப் பார்க்கும்போது ஆடையோடு அழகு கொட்டக்கொட்ட நின்றிருந்த தங்கநிற முடிகொண்ட அந்த கட்டுமஸ்தான பெண் ஒரு சாய்வில் பார்க்கும்போது தன் ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு பிறந்தமேனியளாய் நின்றுகொண்டிருந்தாள். இன்னும் மெல்லிய அசைப்பில் அவளது தனங்கள் இரண்டும்கூட குலுங்குவனபோல் காட்சியாகிக்கொண்டிருந்தது.
வயதில் முளைத்து அடங்கிக் கிடந்த உடலுணர்ச்சி தன் தளையுடைத்து வரத் திமிறியது. எவளோ ஒரு ஈழத் தமிழிச்சி, என்றோ ஒருநாள் மனைவியாகி வரும்வரை அந்த உணர்ச்சிகளை அடக்கிவைத்திருக்க முடியுமென அதுவரையிருந்த என் நம்பிக்கை என்னிடத்தில் அப்போது சரியத் துவங்கியிருந்தது.

000


கலாபன் கதை 2

நிறுதிட்டம் :

இரண்டு ஆண்டுகளாகியிருந்தன அந்த முதல் கப்பலிலிருந்து கலாபன் திரும்பிவருவதற்கு. ஊரே அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவன் வாங்கிவந்திருந்த சான்யோ திறீ இன் வண் செற்றைப் பார்க்க இளமட்டமெல்லாம் வீட்டைச் சுற்றி அலைந்தது. அவனது நீண்ட தலைமுடியும், டெனிம் ட்ரவுசரில் அவனது கம்பீரமான கப்பல் நடையும், அவ்வப்போது கிரேக்க ஆங்கில சொற்கள் கலந்த உரையாடலும் பலரை வசீகரித்தேவிட்டிருந்தன. இரண்டு கிழமைகளாக வீடு ஒரு சொர்க்கத்தில்போல் திளைத்துக்கொண்டிருந்தது.

மூன்றாவது கிழமை அவனது மனைவி மனோவின் தங்கை ரூபிணி இரண்டு நாட்கள் வந்து வீட்டிலே தங்கிவிட்டுப் போனாள்.

இரண்டு வருடக் காத்திருப்பு ஒட்டுமொத்தமும் ஏமாற்றமாகிவிட்டதைப்போல ஆகிப்போனாள் மனோ. அவன் கப்பலிலிருந்து கொண்டுவந்த வீடு ஏதோ விமானநிலையத்தில் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டுவர கலாபன்தான் தாமதிப்பதுபோலவும் அந்தரப்பட்டுக்கொண்டு திரிந்தவளின் முகம் பின்னால் கறுத்துச் சிதைந்தே போனது. கலாபன்கூட மாறித்தான் போனான். குழந்தையைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி எழவில்;;;;;;;லை அந்த வீட்டிலே. ரூபிணி காரணமாயிருக்கலாம் என்பதுதான் பேச்சாயிருந்தது அக்கம்பக்கத்தில். அதை ஊர்ஜிதப்படுத்தியது பக்கத்துவீட்டு பு~;பத்தின் சாட்சியம்.

பு~;பம் அருகிலிருக்கவே ஒருமுறை ரூபிணி கேட்டிருக்கிறாள் கலாபனிடம், ‘இந்த சான்யோ செற்றை ஏன் வாங்கிக்கொண்டு வந்தீங்கள், கலாபன்?’ என்று. ‘சான்யோவில சத்தம் நல்லாய் வரும்’ என்றிருக்கிறான் கலாபன். ‘மற்றதுகளிலை வராதோ?’ ‘வரும். ஆனா இதைப்போல வராது. கேட்டிட்டுத்தானே ஆசைப்பட்டு வாங்கினனான்.’ ‘நல்ல சத்தம்தான். இதை அவசரத்துக்கு விக்கக்கூட ஏலாது. நா~னல் பனசோனிக் இல்லாட்டி சோனி வாங்கியிருக்கலாம். ஆத்திரம் அந்தரத்துக்கு உதவும்’ என்று விட்டுவிட்டாள் ரூபிணி.

இன்னொரு முறை, ‘அத்திவாரம் எப்ப வெட்டப்போறியள், கலாபன்? அக்கா சொல்லிக்கொண்டிருந்துது நீங்கள் வந்தவுடனை வீட்டுவேலை துவங்கிறதாய்’ என்றிருக்கிறாள். கலாபன் அதற்கு ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு அங்கால போய்விட்டான். இன்னும் எதையெதை தமக்கையிடம் ‘ஓதி’வைத்துவிட்டுப் போனாளோ ரூபிணி, கலாபனின் முகம் அடுத்தடுத்த நாட்களில் களையிழந்துவிட்டது.
‘சுதுமலையிலை எனக்குத் தெரிஞ்ச ஒரு பெடியன் கப்பலுக்குப் போய் ஒரு வருசம் நிண்டிட்டு வந்து வீடே கட்டிச்சுது, அந்த வீட்டை கப்பல் வீடெண்டுதான் இப்பவும் அங்கை ஆக்கள் சொல்லுகினம், ரண்டு வருசம் கப்பலிலை நிண்டிட்டு வந்த உங்களாலை ஏன் முடியாமப் போச்சு எண்டு மதி கேக்கிறாள். ஜீவன் ஏறின கப்பல் போன வரு~ம் கடலிலை தாண்டுபோச்சு. தேப்பனும் தாயும் தலைதலையாய் அடிச்சு அழுதுகொண்டு திரிஞ்சுதுகள். இவள் ஏன் அதை நினைக்கிறாளில்லை. ஜீவன் செத்துப்போனான், நீயேன் உயிரோடை வந்தாயெண்டும் இவள் கேப்பாளோ?’ எண்டு ஒரு போதையேறிய தருணத்தில் தெரிந்தவர்கள் யாருக்கோ சொல்லிப் பிரலாபித்திருக்கிறான் கலாபன். பிறகு அவர்களுக்கே தான் இனிமேல் கப்பலுக்குப் போகப்போவதில்லையென்றும், விசுவமடுவிலேயுள்ள தம்பியாரின் காணியிலே போய்நின்று மிளகாய் செய்யப்போவதாகவும் வேறு சொல்லியிருக்கிறான்.

பிரத்தியட்சத்தில் ஒன்று, மறைமுகத்தில் ஒன்றாய் மனோவுக்கு இரண்டு இழப்புக்கள் நிச்சயமாகியிருக்கின்றன. இல்லாவிட்டால் அவள் அத்தனைக்குச் சாம்பிப்போய்த் திரியவும் முடிந்திராது. மாதம் மாதம் பணத்தை அனுப்பிக்கொண்டிருக்கும்படியும், தான் வீட்டுவேலையைத் தொடங்குவதாகவும் மனோ எழுதத்தான் செய்தாள். ஆனால் அதையும் செய்யாமல், வெறுங்கையோடும் வந்துசேரவேண்டிய நிலை எப்படியோ கலாபனுக்கு நேர்ந்திருக்கிறது. பணம் அவளின் பிரத்தியட்சமான இழப்பு. இரண்டு நீண்ட வரு~ங்களின் க~;டங்களும், தனிமையும், தாபங்களும் எந்த முகாந்திரத்தில் சாந்திப்படுத்தக் கூடியன? என்றாலும் அவற்றை அவளால் தாங்கியிருக்க முடியும். ஆனால் கப்பலில் செல்வோரின் ‘விளையாட்டுக்க’ளைப்பற்றி தங்கை ரூபிணி சொன்னவற்றையும் அவளால் தாங்கிக்கொண்டு இருந்திருக்க முடியுமா? அவளது அந்த இரண்டு வார இரவுகளும் முன்புபோல் காதலோடு இருக்கவில்லையே! அவன் வாத்ஸாயனக் கலையை பக்கம்பக்கமாய் அவளில் புரிந்துகொண்டிருந்தான். அந்தளவு காமாந்தகமும் தகும், அது காதலோடு இருந்திருந்தால். இல்லாதபோதில் அவளின் மறைமுகமான இழப்பை அது ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிக்கொண்டுதானே இருக்கச்செய்யும்! வெளிவெளியாகச் சொல்லாவிட்டாலும், இதில் உள்ளேயாவது மனோ குமுறாமல் இருந்திருக்க முடியுமா? முகம் கறுக்காமல் திரிந்திருப்பதுதான் எவ்வாறு?

எப்படியோ இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒரு ஞாயிறு மாலை ஏழு மணி ரயிலெடுத்து கொழும்புக்குப் போய்விட்டான் கலாபன். மறுநாள் வெறும் கையும் வெறும் கழுத்துமாய் மனோ இருப்பதைப் பார்த்து பு~;பம் நடந்திருக்கக் கூடியவற்றை எண்ணி ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். மதி இயல்பிலாகி இயங்கிக் கொண்டிருந்தாள். காலகாலமாகவும் இப்படித்தானே நடந்துகொண்டிருக்கிறது.

கலாபன் கப்பலால் வந்திருந்தபோது நான் திருகோணமலையிலே அரசாங்க வேலையில் சேர்ந்து அரச அச்சுக்கூடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு விடுமுறையில் ஊர் வந்தபோதுதான் கலாபன் வந்திருந்ததே தெரிந்தது எனக்கு. நான்கூட வேலைப் பிராக்கில் அவனை மறந்துதானே இருந்துவிட்டேன் பலகாலமாயும் என எண்ணி என்னில் ஏற்பட்டிருந்த வேதனையையும் சிறுகோபத்தையும் நான் அடக்கிக்கொண்டேன்.

மறுபடி நான் வேலைக்குத் திரும்பி இரண்டு மூன்று மாதங்களில் லண்டன் கப்பல் கொம்பனியின் முகவரியிட்ட கலாபனின் கடிதம் வந்தது எனக்கு. அது கட்டில் சேர்க்கப்பட்ட இடம் அமெரிக்கா என்பது அதன் அஞ்சல்தலையில் தெரிந்தது.

கடல்கொண்ட மல்லை என்கிறபோது, மாமல்லபுரத்தின் இழப்பின் வலிதுதான் பெரும்பாலும் தெரியும். கடலின் பிரமாண்டம் தெரியவராது. சமுத்திரம் நிலங்களை விழுங்கும் பிரமாண்டம் கொண்டது. மலைகளைத் தாழ்த்தி சமநிலங்களாகவும், சமநிலங்களை உயர்த்தி மலைகளாக்கவும் அதனால் முடிந்திருக்கிறது. அது கப்பல்களைக் கவிழ்க்கிறது, திமிங்கிலங்கள் சுறாக்களின் வாழிடமாய் நாவாய்ப் போக்குவரத்துக்களையே சீர்குலைக்கிறது என்றெல்லாம் கேள்வியிலுண்டு. ஆனாலும் இவைகூட கடலினை அறியப் போதுமானவையில்லை. சிறந்த கடல் சார்ந்த சினிமாக்களாலும்தான் இந்த அனுபவத்தைப் பூரணமாக ஏற்படுத்திவிட முடியாது.

கடலென்ற சொல்லே அதன் அம்சத்தைப் புரியவைக்கிறமாதிரியான சொல்லாக இல்லை. மாக்கடல் என்பதுகூட போதுமானதில்லை. ஓரளவேனும் செறிவான சொல் உண்டெனில் அது சமுத்திரம் என்பதுதான். இந்துமாக்கடல் அதன் விசாலத்தைக் காட்டக்கூடியதுதான். ஆனால் இந்துசமுத்திரம் என்பதே அதன் விசாலம், ஆழம், பயங்கரம், இரகசியங்களின் கொள்கலனாகக் கூடியது.

நிலமொன்றும் நீர் மூன்றுமான விகிதாரத்தில் இந்த உலகம் இயைந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். நிலம் ஐந்தாகக் கண்டப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் நீர் ஐந்து சமுத்திரங்களென. இவற்றில் இந்துசமுத்திரமே பெரிது. ஆனாலும் பசுபிக்கும், அத்திலாந்திக்கும் மூர்க்கத்திலும், பயங்கரத்திலும் சற்றும் குறைந்தவையல்ல இதற்கு. இவற்றின் தன்மைகள் வேறுவேறாக இருக்கும். ஆனாலும் உக்கிரங்கள் சமமானவை. இந்தவகையில் வட,தென் சமுத்திரங்களும் இவற்றிலிருந்து பெரிதாக வேறுபட்டவையல்ல. வடசமுத்திரம் மலைநிகர்த்த அலைகள் கொள்ளும், மறுபடி பள்ளத்தாக்காய் உட்சுருங்கும் தன்மைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் பயங்கரத்தில் எவற்றினுக்கும் குறைந்ததில்லை. ஒரு கப்பலை அப்படியே சப்பித் தின்னக்கூடியது அது. ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதில் ஒருமுறை ஒரு கப்பலை அப்படியே உறையவைத்து நொருக்கி தின்றுதீர்த்துவிட்டது வடசமுத்திரம். அது கப்பலை நொருக்கித் தின்ன ஆரம்பித்ததும் கப்பலிலிருந்த கப்ரின், மற்றும் கடலோடிகள் தம் உயிரபய நிலையை அறிவிப்புச் செய்துவிட்டு பனிப்பாளத்தில் இறங்கி உதவி வரும்வரை தங்க தோதான இடம் தேடி நடக்கத் தொடங்கிவிட்டார்களாம். சஞ்சிகையொன்றில் படத்தோடு செய்தி வந்திருந்தது.

சமுத்திரத்தின் உக்கிரத்தை அதன் மத்தியிலில்லாமல் அறியவே முடியாது என்றிருந்தான் கலாபன். கடலம்மா என்று அதனை அழைப்பது அதனைச் சாந்திப்படுத்தும் மீனவர்களின் உபாயம் மட்டுமே என வாதித்திருந்தான்.

கலாபன் ஏறி வேலைசெய்துகொண்டிருந்த கப்பல் சிங்கப்பூர் சென்று சாமான்கள் ஏற்றியபின் திரும்ப மலாக்கா கடல்வழியாக மலே~pயாவின் கிள்ளான் துறைமுகம் சென்றது. அங்கே டெக் கார்க்கோ என்ற மேற்தளத்தில் வைக்கக்கூடிய சாமான்களை ஏற்றியது. பெருமரங்களில் அறுத்தெடுத்த தூண்போன்ற மரங்களாகவும், தடித்த பலகைகளாகவும் அவை இருந்தன. அவை பெரிய கம்பிக் கயிறுகளால் நகரமுடியாது இறுக்கிப் பிணைக்கப்பட்ட பின் கப்பல் அமெரிக்காநோக்கிப் புறப்பட்டது. தென்சீனக் கடலுள் கப்பல் பிரவேசித்தபோதே காலநிலை நன்றாக இருக்கவில்லை.

ஒரு திடப்பொருள் அதனால் வெளியேற்றப்படும் கனவளவு நீரின் நிறைக்குச் சமமானது என எண்பித்திருக்கிறது விஞ்ஞானம். ஆந்த அளவையின்படி ஒரு கப்பல் சாமான்கள் எதுவுமின்றி கடலில் அதன் அதிகூடிய உயரத்தில் நின்றுகொண்டிருக்கும். சாமான்கள் ஏற்றிவிட்டால் அதன் ஆகக்கூடிய பாதுகாப்பான ஆழத்தில் போய்விட்டிருக்கும். மேற்தள சாமான்கள் கப்பல் ஏற்றக்கூடிய, இன்னொருவிதமாகச்; சொன்னால் அந்த பாதுகாப்பான அளவைத் தாண்டிவிடாத, அளவுக்கே ஏற்றப்படவேண்டும். சீரான காலநிலைக் காலங்களில் அந்த அளவைத் தாண்டிய பாரங்கள் ஏற்றப்பட்டு கப்பல்கள் செல்லிடத்தை ஆபத்தேதுமின்றி அடைந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சாமான்கள் ஏற்றப்பட்ட பின் சிகரெட் புகைக்க மேற்தளத்துக்கு வந்தபோது கலாபன் கீழே பார்த்திருக்கிறான். கப்பலின் வெளிப்பக்கத்தில் தெளிவாக அளவுக் கோடுகள் இடப்பட்டிருந்த பாதுகாப்புச் சிவப்புக் கோட்டு எல்லை மறைந்தே இருந்தமை அவனுள் திடுக்காட்டத்தை ஏற்படுத்தியது. என்றாலும் கலாபன் பெரிதாக அதைத் தொடர்ந்தும் யோசனையிலெடுத்து கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. கப்பலில் முப்பத்தேழு பேர் கூடவிருக்கிறார்கள் என்பது எவருக்கும் அச்சத்தைத் தணிவிக்கிற அம்சம்தான்.

தென்சீனக் கடலைத் தாண்டியதும் கடல் சமுத்திரமாகிவிட்டது. பசுபிக்காய் வெளித்துக் கிடந்தது. தன் குமுறலை அது வெளிப்படுத்திய முறையானது, கப்பலைப் பந்தாடியமாதிரி இருந்தது. சாமான்களோடு சேர்த்து ஏறக்குறைய முப்பத்துமூவாயிரம் தொன் நிறையிருந்த கப்பலை அது பூப்பந்துபோல எறிந்து விளையாடியது. கப்பல் குமுறும் கடலின் வீச்சையெதிர்த்து ஐம்பதடி நகர்ந்ததெனில், ஓர் அலைவந்து அதனைத் தூக்கி முப்பதடிகள் பின்னால் வைத்துவிடும். கப்பல் இயந்திரம் மூசிமூசி வேலைசெய்தது. இவையெல்லாம் அச்சத் துளிகளைத் தெளிக்க ஆரம்பித்திருந்தது. மூன்றாம் நாளில் மாலை மெல்ல மறைந்து, கறுப்புக்கானதாய் எழுதப்பட்ட அந்தக் கரியஇரவு வந்தது. பசுபிக் சமுத்திரம் பயங்கர வடிவமெடுத்திருந்தது அந்த இரவில். கப்பலையே விழுங்கி ஏப்பமிட்டுவிட அப்படியொரு விறுமாண்டித்தனத்தில் சுழன்றடித்தது. கப்பலில் எங்கெங்கோ என்னென்னவோ பொருட்கள் விழுந்து உருண்டன. சில சிதறின. கலாபனால் தூங்கவே முடியவில்லை. சரியும் கப்பலில் ஒரு பக்கமாக ஏறும் நீர் மறுபக்கம் சரியும்வரை மேற்தளத்தில் உருண்டோடி விளையாடியமை சளசளவெனக் கேட்டது. மறுபடி அது மறுபக்கம் சாய்ந்து வழியும்வரை அந்த மரண இருப்பின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

கலாபன் தேவைகள் துரத்த கப்பல் வேலைக்கு வந்தவன். ஆசை ஒரு காரணமாயிற்று பின்னால். ஆனால் அதற்காக அவன் செத்துவிட முடியாது. செத்துவிடுவதை லேசாக நினைத்துவிடவும் முடியாது. கப்பல் அந்தமாதிரி நிலைகெட்டு ஆடிய பொழுதுகளெல்லாம், மரணத்தின் கூத்தாய் இருந்துகொண்டிருந்தது. அது எப்போது நிற்கும்? எப்போது தூக்கம் கொள்வது? எப்போது அந்த இறுகிய பொழுதுகள் கரைந்து மனச்சுமையற்ற நிம்மதி மூச்சு விடுவது? பசுபிக் சமுத்திரத்துள்ளிருந்து மரணம் தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாய் எண்ணியெண்ணி கலாபன் கலங்கியிருந்த நாள்கள் அவை.

பசுபிக் சமுத்திரத்தினுள் பிரவேசித்த ஐந்தாம் நாள் ஓரளவு சமுத்திரத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கியது. மறுநாள் அந்த தை மாதக் காலையில் நெடுநாட்களின் பின்னான சூரியன் காணப்பட்டது. காற்று மெல்ல ஆடியபடி இருந்தது.

ஆனாலும் இன்னும் ஏதோ அசௌகரிகம் இருந்துகொண்டேயிருக்கிறதே, ஏன்?
வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது காரணம். கப்பல் ஏறக்குறைய இருபது பாகை சரிந்து போய்க்கொண்டிருந்தது. கப்பல் மேற்தளத்தில் ஏற்றிக் கட்டப்பட்டிருந்த போர்ட் பக்க மரங்கள் கட்டறுத்து வந்து ஒருபக்கமாய்ச் சிதறி ஒதுங்கியிருந்தன. மேலே வீல் கவுஸிலிருந்து கப்ரினும் பார்த்தான். அது பயப்படவேண்டிய அளவுக்கில்லையென்று சொன்னதோடு கலாபன் உட்பட எல்லோருமே நிம்மதியடைந்தார்கள்.

ஆனால் பிரச்சினை போகப்போகத்தான் வலுத்தது. கப்பல் சிறிதுசிறிதாக ஸ்ராபோர்ட் பக்கமாய் மேலும் சரிய ஆரம்பித்து விட்டது. கப்பல் பசுபிக் சமுத்திரத்தில் இன்னும் பாதித் தூரத்தைத் தாண்டவில்லை. ஹவாய்த் தீவுகள் கண்ணிலும் காணப்படவில்லை. ஓரளவு காலநிலையின் சீர்ப்பாடு இருந்தாலும், அதுவொன்றும் மன நிம்மதியைத் தரக்கூடிய அளவுக்காயில்லை. இரண்டு மூன்று நாட்களில் கப்பல் முப்பது பாகை சரிந்து போனது. கடலின் சாதாரண அலையே கப்பலுக்குள் ஏறி இறங்கவாரம்பித்துவிட்டது. சரிந்த பக்கத்தின் வட்டக் கண்ணாடி ஜன்னல் நீருள் தாழ்ந்தே இருந்தது. சில கபின்களுக்குள் இறுக்கிய ஜன்னல்க@டேயும் கடல்நீர் கசிந்தது.

ஒரு கப்பல் அவ்வாறான சமயங்களில் தன்னை நிறுதிட்டப் படுத்தப்படுவதற்கான உபாயங்களை இயல்பிலேயே கொண்டிருக்கும். உயர்ந்த பக்கத்தின் கீழேயுள்ள நீர்த்; தாங்கிகளில் கடல்நீரை நிறைப்பதன்மூலம் அதைச் செய்ய முடியும். அவ்வாறு அமைக்கப்பட்டவற்றை பாலஸ்ற் ராங்க் என்பார்கள். அவை இன்னொரு வகையாகவும் தொழிற்படும். அந்த ராங்குகளில் நிறைக்கப்படும் நீர் கப்பலொன்று காற்றின் பலத்தால் சரிக்கப்படும்போது, அப்படியே கவிழ்ந்து கடலுக்குள் அமிழ்ந்துவிடாமல், விழுந்தஒருவரை கையைப் பிடித்துத் தூக்கிவிடுவதுபோல் நிமிர்த்தி விட்டுவிடும். அந்த முறையின் மூலம்கூட கப்பலை நிமிர்ந்து செல்லவைக்க முடியவில்லை.

எண்ணெய்ப் பசை அதிகமான இடமாதலால் கீழே இயந்திரப் பகுதியில் வேலைசெய்த கலாபனுக்கு இன்னும் சிரமமாக இருந்தது. வேறுபேர் அடி பெரிதாக இல்லையென்றாலும் கீழே விழுந்தெழுந்தார்கள்.

மேலே சுக்கான் அறையில் வேலைசெய்த சாந்தன் கப்பல் சரியாக முப்பத்தைந்து பாகை சரிந்துவிட்டதாகச் ஒருநாள் சொன்னான். அப்போதுதான் ஒரு மதிய சாப்பாட்டு நேரத்தில் மெஸ்ஸில் வைத்து ஸ்பானியன் ஒருவன் சொன்னான், அப்படியான நேரத்தில் மேற்தள சாமான்களை கடலில் எறிந்துவிடுவதுதான் வழக்கமென்று. கப்ரின் ஏன் அவ்வாறு செய்யவில்லை? கப்பலினதும் சாமான்களினதும் காப்புறுதிப் பணத்தை மோசடிசெய்ய இப்படி ஓர் ஏற்பாடோ? எல்லோர் மனத்திலும் ஒரு பயம் உறைய ஆரம்பித்தது.

மறுநாளிலிருந்து அதுவே எவரினதும் பேச்சாகிப் போனது. கடலோடிகள் அவ்வாறு பேசுவது கப்ரின் காதுகளிலும் விழுந்திருக்கிறது. அல்லாமல் அவனாகவுமே இனி அதுதான் வழியென்று நினைத்துமிருக்கலாம். ஆனாலும் எழுந்தபாட்டுக்கு தன் முடிவுப்படியே அம்மாதிரிக் காலநிலையுள்ள காலங்களில் அவனால் நடந்துவிட முடியாது. கப்ரின் தலைமையகத்துக்கு உடனே வானொலிச் செய்தி அனுப்பினான் நிலைமையை விளக்கி. அவனை எதுவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாமெனச் சொன்ன தலைமையகம், உடனடியாக கப்பலைக் கட்டிய கம்பெனியுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியது.

சில மணிநேரங்களின் பின் தலைமையகத்தின் முடிவையறியக் காத்திருந்த கப்பல் கப்ரினுக்கு பதில் வந்தது. அந்தக் கப்பல் நாற்பத்தைந்து பாகைகள் சரிந்தும் பயணக்கூடிய ஸ்திதி கொண்டது என்றும், மேற்தள சாமான்களை கடலுள் வீசவேண்டியதில்லையென்றும் வந்த பதிலைத் தெரிந்தபோதுதான் கலாபன் நிம்மதி மூச்சுவிட்டான்.

எந்தவொரு பொருளுமே தன்னைத் தக்கவைக்க ஒரு புள்ளியில் நிலைகொள்ளும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். கப்பல் ஒரு மனிதன்போல. அதற்கும் முதுகுத் தண்டு உண்டு. விலா எலும்புகள் உள. மனிதனது நிலைப்பின் தளம் எது? பாதங்கள் என்று சொல்லலாமா? ஆம், பாதங்கள்தான். அதன்மீது நிற்பது நடப்பது மட்டுமில்லை, அக்கம்பக்கம் சரியவும் செய்கிறான். அதுபோலத்தான் கப்பலும். அது நீரில் பயணப்படக் கட்டப்பட்டது. சொல்லப்போனால் கடலின் தன்மை தெரிந்து அதன் விசித்;திரங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் நிலைமை அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்களின் வாழ்க்கை ஏறக்குறைய இதுபோலத்தான். எதுவும் சாய்ந்துவிடலாம், ஆனாலும் கவிழ்ந்துவிடாது. மனித மனத்தின் அழுகையை, அவலத்தைத் தாங்கி நிலைபேறடைய உலகில் ஏதோ ஒன்று இருக்கவே செய்யும். அதற்கான தேடல்தான் அவசியம்.
நேற்று மரணம் நிகழாத மண்ணில்லை நான் இன்று வாழ்வது. நேற்று மரணம் நிகழாத வீடில்லை என்னதாய் இன்று இருப்பது. ஆனாலும் நாம் வாழ மட்டும் செய்யவில்லை, நாளையைப்பற்றிக் கனவுகூட காண்கிறோம், கப்பல்போலவே மனிதவாழ்வும். அது சரியும்தான் ஆனாலும் கவிழ்ந்துபோகாது, ஏதோ ஒரு புள்ளியில் வாழ்வின் மீட்டெடுப்பு நிச்சயமானது மச்சான்! என்று முடிந்திருந்தது கடிதம்.

கலாபனின் கடிதம் ஏற்படுத்திய மகிழ்ச்சியைவிட, அது ஏற்படுத்திய ஆச்சரியம்தான் அதிகம் என்னில். கலாபன் இப்படியெல்லாம்கூட எழுதுவானா என்பதை எனக்கு நம்பவே சிரமமாக இருந்தது. அவனும் என்போல எஸ்.எஸ்.சி. தான் படித்தான். என்ன எழுத்து! தன் அனுபவத்தை எவ்வளவு அற்புதமாகக் கடிதமாக்கியிருக்கிறான்! அந்த மொழியும் நடையும் அவ்வப்போது கவிதையெழுதும் எனக்கே சாத்தியமா என்று மனம் திகைத்தது.

எல்லாவற்றுக்கும் அவன் தண்ணி அடித்துவிட்டு எழுதியிருப்பான் என்று என்னுள் ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டேன். மனக் கருத்தொன்று விண்டுகொண்டு எழுத்துருவம் கேட்டு என்னை நச்சரிக்கும் நாளில் நானும் அவ்வாறே செய்துபார்க்கலாம் என்று அடிமனத்துள் ஒரு முகையெழுந்து திண்ணப்பட்டது. அப்படியான நாள் ஒரு சனிக்கிழமையாக இருந்தது. வழக்கத்தைவிட சற்று கள்ளைக் கூடுதலாகக் குடித்துவிட்டு எழுத வந்து உட்கார்ந்தேன்.

சிறிதுநேரத்தில் சத்திதான் வந்தது.

000
Sunday, June 28, 2009

கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் :


அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது.

படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின் பிரிவுத் துயரும் அதற்குச் சற்றும் குறைவில்லாததாய்.

இனி அவன் அவளைக் காண மிகக் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலேயாவது ஆகும். அவள், காணும்போதெல்லாம் மனக்கிளர்ச்சி தரும் அழகியாகத்தான் இருந்துகொண்டிருந்தாள் அவனுக்கு. குழந்தையும் அவளே போல. அவளை இனிச் சேர எத்தனை காலமாகுமோ? அவன் இரண்டு கிழமைக்கு முன்னர் கொழும்பு புறப்பட்ட நாளின் முந்திய இரவில், வாத்சாயனக் கதைகள் சொல்லும் எத்தனை தரிசனங்களை அடைந்திருந்தது அவர்களது தும்புமெத்தைக் கட்டில். சிங்களத் தொழிலாளி வன்னியில் செய்து, தோளில் சுமந்துவந்து விற்ற கனதியற்ற கட்டிலே நிலமதிரக் கிளர்ந்த கலைநிகழ்வுகளால் களைத்ததே.
மனோ ஒரு பிரிவை ஆழமாக உணர்ந்துதான் அந்த இரவை அர்த்தமுள்ளதாக்கியிருந்தாள் அவனுக்கு. இன்னும் ஒரு வரு~த்துக்கு உடல் தவனம் தணிக்க வழியே இல்லையென்ற ஆவலாதியில் அடைந்த, அடையவைத்த இன்பங்கள் அவை.

மறுநாள் காலை தூக்கமற்றதால் சிவந்த விழிகளுடனும் அவள் குளித்துவந்து சந்தோ~மாகத்தான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள், பிறகு சமைத்தாள். ஆனால் மாலையாக ஆக அவள் முகம் இருளத் தொடங்கிவிட்டது. வானம் இருள முன்னம் இருண்ட அவளது முகம் கண்டு அவனுக்கும் கவலையின் அதிகரிப்பு. அவன் கொழும்புக்கு புகையிரதமேறச் செல்வதற்கான கார் வீட்டு வாசலில் வந்துநின்ற சத்தம் கேட்ட கணத்திலிருந்து அவள் அவளாக இல்லையென்பதை அவன் கண்டான். உற்றார் உறவினர் ஊராட்கள் சிலர் கூடியிருந்த நிலையில், எல்லாப் பிரிவாற்றுகையும் நேற்றைய இரவில் முடிந்ததுதானே என்று அவன் பார்வையால் விடைபெற்று வர, அவள் தாங்காமல் அழுததாய் ஓர விழிகளில் பட்டது அவனுக்கு.

அத்தனை காலத்துக்கு ஒரு பிரிவை விரும்பித்தான் ஏற்று அங்கே அவன் வந்திருக்கிறான். அந்தப் பிரிவை அவளைவிட தாங்க தான் தயார் என்பதுபோலவே வீட்டிலே அந்த முன்னாளிரவில் அவன் நடந்திருந்தான். ஆனால் இங்கேதான் தெரிந்தது, அவளாவது குழந்தையின் அருகிருப்பால் உடலையும் மனத்தையும் ஆற்றிக்கொள்வாளென்றும், தானே அவர்களிருவரில் ஒருவர்கூட அருகிருக்காத காரணத்தால் அவதியுறப்போவதென்றும்.
அந்த அழகின் தரிசனம், அந்த உடலின் சுகம் யாவற்றையும் ஓராண்டுக்கு மேலாகத் துறந்துவிடும் மனவலிமையை எது அவனுக்குத் தந்தது? அவனது வாழ்க்கையா? அந்த வாழ்க்கையையே சுழல் காற்றில் சருகாகப் பறக்கவிடும் விதியா? அவனுக்கு மட்டுமா அவ்வாறான விதி? விதியே அலைத்தும் உலைத்தும் வீழ்த்தியும் எழுப்பியும் வளமளித்தும் ஒருவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதெனில், அந்தப் பிரிவும் துயரும் அவனுக்குமட்டுமானதாக ஆனதெங்ஙனம்? அவன் எல்லாவற்றையும் யோசிக்க முனைந்தான்.
ஒவ்வொருக்கும் குடியிருக்க ஒரு துண்டு நிலம் வேண்டும். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னைமரங்கள் இல்லாமல்கூட இருக்கலாம். ஏதாவது ஒரு நிலம் வேண்டும். அதிலே ஒரு வீடு வேண்டும். அது மாளிகைக் கணக்காய் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் இல்லாவிட்டாலும் பனிக்கும், மழைக்கும், வெய்யிலுக்கும், காற்றுக்கும் அடைக்கலமாவதற்கும், காதலிருவரின் கூடலுக்குமாய் ஒரு குடிசையாவது வேண்டும். கைப்பொருள் இல்லாவிட்டாலும் உழைத்துப் பிழைத்துவிடலாம். ஆனால் ‘காணக் கண் கூசுதே, கையெடுக்க நாணுதே, மாணிக்க வாய் திறக்க மாட்டாதே’ என்று கடன்காரனைக் கண்டு தவிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. கலாபனுக்கு முன்னவை இரண்டும் இல்லாதிருந்தன. பின்னது இருந்தது. அதனால்தான் மிகுந்த பிரயாசையில் நீண்ட பிரிவைச் செய்யும் அந்த வேலைக்காக அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.

கூடு இல்லாவிட்டால் வாழ்ந்துவிடலாம். கூடலில்லாமல் வாழ்வது எப்படி? அவன் நினைக்கத்தான் செய்தான். குருவிக்குக் கூடு ஒன்று வேண்டும் என்ற ஓர் உண்மை இருக்கிறதுதான். அதேவேளை வளர்ந்த குருவியொன்று கூட்டைவிட்டு தானே பறந்துபோய்விடுகிறது என்ற நிஜமும் இருக்கிறதல்லவா? பறத்தலின் சுதந்திரத்தை வீட்டினுள் பயில்வுசெய்தல் எப்படி? இவ்வாறு அவன் சொன்னபோது, மனோ, அவனது மனைவி சொன்ன பதில், ‘பறந்து சென்ற குருவிக்கும் உடனடியாக இல்லாவிட்;டாலும் பின்னராவது ஒரு வீடு வேண்டியிருக்கும்’ என்பதுதான். அந்தக் கோணத்தில் அவன் விழுந்தான். ஆம், வாழ்வதற்கு ஒரு கூடு தேவைதான்.

திடீரென ஓர் உலுப்பல். கலாபனின் சிந்தனை கலைந்தது. அப்போதைக்கு மட்டுமாகத்தான். அதுவொன்றும் மேலெழுந்தவாரியானதல்ல. உயிரில் வலியெழுப்பக்கூடியதாய் மனத்தின் ஆழத்தில் பதிந்திருப்பது. பிறகு, நாளை, அடுத்த கிழமை, அடுத்த மாதம், அடுத்த வரு~ம் என்று அவளையும் குழந்தையையும் மீண்டும் காணும்வரை தொடரப்போகின்ற சிந்தனையே அது.

கடந்த ஒரு கிழமையாக கபாலன் அங்கேதான் வேலைசெய்கிறான், கொடுக்கப்பட்டிருந்த அறையிலே, அதைக் கபின் என்கிறார்கள், படுக்கிறான். ஆனால் அப்படி உலுப்பி அதிர்வெழும்படியாய் என்றும் இருந்ததில்லை. அன்றைக்குமட்டும் ஏன் அப்படி?
பின்னர் அவனுக்குப் புரிந்தது. முதல் நாள் வரை கப்பல் திருத்த வேலைகளுக்காக ட்றை டொக்கில் நின்றிருந்தது. அதன் திருத்த வேலைகளெல்லாம் முடிந்து அன்றுதான் துறைமுகக் கரையில் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். கப்பல் மறுநாள் காலை அங்கிருந்து புறப்படவிருந்தது.

அந்தப் புறப்படுகை சுகமான நினைவுகளையும் கிளர்த்தாமலில்லை கலாபனிடத்தில். ஆயிரமாயிரமான உழைப்பு. அவர்களுக்கான ஒரு காணி, ஒரு வீடு. அவனது மனைவி குழந்தைக்கு அழகழகான உடுப்புக்கள். அவன் மனைவி குழந்தைக்கு நகைநட்டுக்களும், ஊரில் வசதியானவர்கள் குடும்பத்து பெண்கள் குழந்தைகளுக்குப்போல. எல்லாம் சுகமான நினைவுகளையே செய்துகொண்டிருந்தன அன்றுவரை. ஆனால் திடீரென அப்படி ஒரு விசாரம் அவன் மனத்தில். ஒருவேளை கப்பல் மறுநாள் புறப்படப்போகின்றது என்ற காரணத்தால் ஏற்பட்டதாய் இருக்கலாம் அது. ஆனாலும் அந்தச் சிந்தனை இடையறுகிறது, கப்பலின் உலுப்பலில்.

துறைமுகத்தில் கட்டப்படும் கப்பல் கரைச் சுவரோடு வந்து மோதிவிடாது சங்கிலியில் பிணைத்த பெரும்பெரும் ரயர்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். கடலின் பாரிய அலைகள் வந்து மோதும்போது கப்பல் சிமெந்துக் கட்டினோடு மோதிச் சேதமாகாமல் இந்த ஏற்பாடு. அதேவேளை அலைகள் உள்ளே வேகவேகமாய் நுழையாதபடியும் பிறேக் வாட்டர் எனப்படும் கடலணைகள் எழுப்பப்பட்டிருக்கும். இவ்வளவற்றையும் மீறி ஒரு கப்பலையே உலுப்பிவிடுமளவுக்கு அலை பாய்ந்து வருகிறதெனில், அதன் வேகம் எப்படியானதாய் இருக்கும் என நினைக்க ஒரு மலைப்பு வந்தது கலாபன் மனத்தில். ஆனாலும் அதுபற்றிய எண்ணம் அவனது மனத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. உழைத்துக் களைத்திருந்த உடலானதால், வெகுநேரம் சென்றேனும் உறக்கம் வந்தது.

பெரும்பாலும் கவிழ்ந்த ஸ்திதியில் படுத்திருந்த கபிலனுக்கு, அலைகளின் உலுப்பலில் கப்பலின் அசைவு புணர்ச்சிச் சுகத்தைக் கொடுத்தது. றெஜிபோம் மெத்தை அவன் மனைவி மனோவாக உருவெடுத்தது. அவன் சிறிதுநேரத்தில் ஸ்கலிதமானான்.
மறுநாள் அதிகாலையிலேயே கப்பலின் அசைவைக் கூடுதலாக உணர்ந்ததில்தான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. கப்பல்; புறப்படுகிறது என்பதை அனுமானிக்க வெகுநேரம் ஆகவில்லை அவனுக்கு. அவசர அவசரமாக முகம் கழுவி, உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் மேற்தளத்துக்கு வந்தபோது எம்.வி.ஜோய்18 என்ற பெயருடைய அந்தக் கப்பல் துறைமுகத்தைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வந்திருந்தது. கல்லணைக்கு வெளியில் கப்பல் சென்றுகொண்டிருக்க அதன் சமாந்தரத்தில் ஓர் இழுவைப் படகு வந்துகொண்டிருந்தது. கப்பலை வெளியே செல்லவைத்துக்கொண்டிருக்கும் பைலட், இறங்கிச் செல்வதற்கான படகு அது.

கலாபன் கரைப் பக்கமாய் பார்வையை எறிந்தான். துறைமுகம் விலகிக்கொண்டிருந்தது. வினாடி வினாடியான நேர நகர்வில், அந்த இடைத்தூரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. மண்ணைவிட்டு விலகிய தூரமும் அதுதான். உறவுகளைவிட்டு விலகிய தூரம்கூட.


கப்பல் பயணம் அவனுக்குப் புதிது. அந்தப் புதிது மனத்தில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தக் கிளர்ச்சிகளுக்கூடாகவும் ஓர் இடைஞ்சல். தலை லேசாகக் கிறுகிறுத்தது. மேல்ல மெல்லவாய் அதிகரித்தது அந்த சுகமின்மை. சிறிதுநேரத்தில் கலாபன் ஓக்…கென்று வாந்தியெடுத்தான்.

பதின்நான்கு நாட்கள் வாந்தி. சாப்பாடில்லாமல், வேலையில்லாமல், தூக்கமில்லாமல் ஒரே வாந்தி. எப்போதும் படுத்தே கிடந்தான் போறபோற இடங்களில். படுத்திருக்காதே…படுத்திருக்காதே…ஏதாவது வேலைசெய்துகொண்டிரு என்று கப்பல் தளவேலைக்குப் பொறுப்பான போசன் மாஹ்மத் அடிக்கடி வந்து சொல்லியும் அவன் எழும்ப மறுத்துக்கிடந்தான். ‘கப்பல் ஈரானில் பந்தர்அபாஸ் என்ற துறைமுகத்துக்குப் போகிறது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கே நாங்கள் போய்ச் சேர்ந்துவிடுவோம், கப்பலில் அனுபவமில்லாவிட்டால் எல்லோருக்கும் இப்படித்தான், அதற்காக இப்படியே படுத்துக்கிடந்தாயானால் பந்தர்அபாஸ் போனதும் உன்னை திரும்ப இலங்கைக்கு அனுப்பிவிடுவார்கள், கவனம்’ என்று பார்வையில் அறிமுகமாகியிருந்த ஒரு சிங்கள கப்பல்கார இளைஞன் வந்து சொல்லிப்போனான். கலாபன் அப்போதும் எழும்பவோ, வேலைசெய்யவோ முயலவில்லை. முடியாது கிடந்திருந்தான்.

அவனுக்குள் ஒரு கூடும், வீடும் என்ற கனவு தகர்ந்துகொண்டிருந்தது. இருபது நாட்களுக்கு மேலே கப்பலில் இருந்திருக்கிறான். குறைந்தபட்சம் அரை மாதச் சம்பளமாவது கிடைக்கும். அப்போதைய ஓர் அமெரிக்க டொலரின் இலங்கை ரூபா மதிப்பு ஏழு ரூபா இருபத்தைந்து சதம். எப்படியும் கொழும்பில் குழந்தைக்கு ஒன்றிரண்டு சட்டையும், மனைவிக்கு ‘றேசிங்கவு’ணும் வாங்கிக்கொண்டு வீடு செல்லவும், அந்தப் பிரிவின் வதையோடு உழைத்த உழைப்பென்று இரண்டாயிரம் ரூபாவையாவது மனோவின் கையில் கொடுக்கவும் போதுமானதாயிருக்கும் என தன்னைச் சாந்தி செய்துகொண்டிருந்தான் அவன்.
மூவாயிரம் தொன் நிறையுள்ள பாரமேற்றக்கூடிய கப்பல் அது. கொழும்பிலிருந்து வெறுமையாகச் சென்றுகொண்டிருந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலமாதலால் காற்று உக்கிரம்கொண்டு வீசியது. தரையிலேயே அதன் தாக்கம் பயங்கரமாய் இருக்கும். மரங்களை முறித்து, தோட்டங்களை நாசமாக்கி அந்த ஆடி, ஆவணி மாத காலங்களில் அது செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்லை. தடுப்புகளற்ற கடல்வெளியிலோ பெரும் அட்டகாசம் போட்டது. கப்பல் முன்னே பத்தடி நகர்ந்தால், ஒரு வலிய அலை வந்து அதை ஐந்து அடி பின்னகர்த்தி வைத்துவிடும். முன்னேறுவதும், பின்னேறுவதும். கப்பல் கடலின் அலைகளுடன் போராடிக்கொண்டிருந்தது. கடலும் மலையென உயர்ந்து, பாதாளமெனத் தாழ்ந்து கப்பலை ஒரு பந்துபோல் விளையாடியது. எந்த விநாடியிலும் அந்தப் பந்தை கடல் தன் வயிற்றினுள் வாயைக் கிழித்துக்கொண்டு விழுங்கிவிடும்போல தோன்றிக்கொண்டிருந்தது கலாபனுக்கு.

ஒருபோது தன் ஒரேயொரு கப்பல் சிநேகிதனான அந்தச் சிங்கள வாலிபன் கிட்ட வந்தபோது, ‘நாங்கள் கரை போய்ச் சேருவோமா?’ என்றுகூடக் கேட்டுவிட்டான். அதற்கு அந்த வாலிபன் சொன்னான்: ‘பயப்படாதே. கப்பல் இரும்பினாலெனினும் மிதப்பதற்காகவே கட்டப்பட்டது. அது தாழுவது அபூர்வம். ஒரு பக்கத்துக்குச் சாய்ந்தால், மற்றப் பக்கம் தானாகவே நிமிரும்படியான அமைப்பு இதற்கு உண்டு. முன்னே சாய்ந்தால், அது பின்னே சாய்ந்து மறுபடி சமநிலையெடுக்கும்.’ பிள்ளையாரே கப்பலை எப்படியாவது காப்பாற்றிக் கரைசேர்த்துவிடு என்று கலாபனின் உள்ளம் மானசீகக் குரலெடுத்தது. அந்த உயிர்ப் பயத்தில் கப்பலேறி வந்து பாதி மாதத்தில் திரும்பப்போகிறோமே என்ற வெட்கம், இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனது.

பிறகொருமுறை அந்த இளைஞன் வந்து, ‘சரி, மிகவும் முடியாதென்றால் கடல் தண்ணீர் அள்ளிக் குடித்துப் பார், அது மருந்தாக இல்லாவிட்டாலும் நாணமாகச் செயல்பட்டு கடல்நோய் எனப்படும் உன் தலைச்சுற்று நிற்கக்கூடும்’ என்று கூறிப்போனான். சரி, செய்துதான் பார்க்கலாமே என்று கடல் தண்ணீரை கயிற்றில் பேணிகட்டி இறக்கி அள்ளியெடுத்துக் குடித்தான். மீண்டுமொரு முறை வாந்திதான் வந்தது. வெறுவயிற்றை விறாண்டிக்கொண்டு குடலோடு வந்ததுபோலிருந்தது. சிங்கள இளைஞனை மனத்துக்குள்ளாய் ‘பேய்ப்பூனாமோன்…’ என்று வைதுவிட்டு கலாபன் படுத்துவிட்டான்.
அன்று காலை கண்விழித்தவன் கண்டது ஒரு புதிய உலகத்தை. தலைச் சுற்று போன இடம் தெரியாமலிருந்தது. பக்கக் கம்பிகளில் பிடிக்காமல் நடக்க முடியாதிருந்தவன் கம்பிகளைப் பிடிக்காமல் கப்பலின் நடைபாதையில் மிக இலகுவாக நடந்தான். அவன் அன்று மெஸ்ஸில் மிக நிதானமாக இருந்து காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்குத் தயாராக மேற்றளத்துக்கு வந்தபோது யாருமே அங்கில்லாதிருந்தது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல அது திகைப்பாக மாறியது. உள்ளே சென்று விசாரிக்கத்தான் தெரிந்தது, அன்று ஞாயிற்றுக்கிழமையென்பது. ஞாயிறுகளில் அத்தியாவசிய வேலைகள்தவிர எதுவுமே கப்பலில் நடைபெறுவதில்லை.

அன்று சுகமான நாளாகக் கழிந்தது கலாபனுக்கு. இப்போது வேலைசெய்ய முடிந்திருந்தாலும், அத்தனை நாட்கள் வேலைசெய்யாது இருந்ததற்காக வேலையைவிட்டு நிறுத்தி நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயமும் உள்ளே இருந்துகொண்டிருந்தது. அது கரைநெருங்குகிறது என்ற அறிகையால் இன்னுமின்னும் வளர்வதாயிருந்தது.

மறுநாள் கப்பல் ஈரானை அடைகிறது என்று அறிந்தான் அவன். இப்போது கடல் கொஞ்சம் மூர்க்கம் அடங்கியிருந்தது. கண்ணில் பந்தர்அபாஸ் துறைமுகத்துக்கோ வேறு அண்மையில் இருக்கக் கூடிய துறைமுகத்துக்கோ செல்லக்கூடிய கப்பல்களின் தூரத்திலான தோற்றங்கள்வேறு சற்று மனத்தைத் தேறப் பண்ணின.

அன்று இருளத் துவங்க தூரத்திலாய் ஒளிப்புள்ளிகள் சில தெரிந்தன. பத்து மணிவரையில் ஒளிப்புள்ளிக் கோடு ஒன்று தூரத்தே உருவாகியிருந்தது. மேலும் ஓரிரு மணத்தியாலங்களில் நிலைத்த புள்ளிகளிடையே ஓடும் புள்ளிகள் தோன்றி வாகன அசைவுகளைத் தெரிவித்தன. ஆடும் கடலில் ஆடாத நிலத்தின் காட்சி அற்புதமாக இருந்தது அவனுக்கு. அந்த அழகையெல்லாம் அனுபவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திய கடல்தண்ணீரையும், உபாயம் சொன்ன அத்தவையும் நன்றியோடு நினைத்தான். ஏனோ, அப்போது பிள்ளையாரின் நினைவு அவனுக்கு வரவில்லை.

விடிந்த சிறிதுநேரத்தில் பைலட் வந்ததும் அதுவரை நங்கூரம் பாய்ச்சி துறைமுகத்துக்கு வெளியில் நின்றிருந்த கப்பல் உள்ளே சென்றது. கப்பல்காரர் எல்லோரும் ஏஜன்ற் வந்துவிட்டதை அறியக் காட்டிய ஆவலாதி கலாபனுக்கு ஆச்சரியமாகப் பட்டது. கப்பல் கரையை அடைந்ததும் அவர்கள் எதிர்பார்க்கிற முதல்வேலை அதுதான் என்பதை அவனது சிங்கள நண்பன் சொன்னான். மெய்தான். ஒரு உயிர்ப் பயமிக்க பயணத்தின் பின் அவர்கள் முதலில் அடைய நினைப்பது ஊரிலுள்ள சொந்தங்களின் சேமநலம்கூறும் கடிதங்களை. அடுத்து அவர்களின் உடல் தவனத்தைத் தீர்ப்பதற்கான பணத்தைத்தானாம்.
பத்து மணியளவில் தேநீரின் பின் வெளியே வந்து சிகரெட் புகைத்துக்கொண்டு விரக்தியாய் கப்பலில் சாமான்கள் ஏற்ற படும் ஆயத்தங்களைப் பார்த்தபடி வெளி மேல்தளத்தின் கப்பல் கட்டும் இரும்புக் குற்றியில் அமர்ந்திருந்தான் கலாபன்.

அந்தக் கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பெற்றது. நீல, வெள்ளை, சிவப்பு நிற பனாமாக் கொடி கப்பலின் பின் அணியத்தில் கட்டப்பட்டிருக்கும். அவன் முதல்முறை கப்பல் புறப்பட்டபோது பார்த்தவேளையில் அது புத்தம் புதிதாக படபடத்துக்கொண்டிருந்தது அங்கே. அப்போது பார்த்தபோது தும்புபட்டுக் கிடந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கப்பலைச் சின்னாபின்னப் படுத்த முடியாத காரணத்தால் கொடியை நார் நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. தன் மனம்போல அதுவும் சிதைவுபட்டிருப்பதாய் எண்ணினான் கலாபன்.
மதியமளவில் ஏஜன்ற் வந்து எல்லோரும் சென்று கடிதமும் பணமும் பெற்றார்கள். நண்பன் அத்த, அவனுக்கு கடிதம் வந்திருக்காவிட்டால் என்ன, பணம் எடுக்கலாம்தானே என வற்புறுத்தி அழைக்க, வீடுபோவதானாலும் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களையேனும் ஒரு ஞாபத்துக்காக அங்கே வாங்கிச் செல்லலாமேயெனச் சென்றான்.

சீஃப் ஒஃபீசர் அறையில் போசன் மாஹ்மத் நின்றிருந்தான். முப்பது டொலர் பணமெடுத்தான் அவன். மாஹ்மத் சிரித்தபடி இப்போது எல்லாம் சரிதானே என்றான். ஊருக்குத் திருப்பி அனுப்பப்படப்போகிற பிரச்சினை இனி இல்லை. ஓர் அழுத்தத்துள்ளிலிருந்து விடுபட்டதாய் உணர்ந்தான் கலாபன். அந்த விடுதலைதான் அவனை சாக்கோவுக்கு அத்தவுடன் செல்லவைத்தது.

சாக்கோ, ஈரான் விலைமாதரின் குடியிருப்பு. நகருக்கு சுமார் இருபத்தைந்து மைல் தூரத்தில் தனிக் கிராமம்போல் அமைக்கப்பெற்றிருந்தது. ஈரானிய, பாகிஸ்தானிய, சில ஈரானிய அமெரிக்க கலப்பின விலைமாதர்கள் வெள்ளை வெள்ளையாக. இன்னும் கறுப்பான ஆபிரிக்க முஸ்லீம் பெண்கள். தவிட்டு நிற இந்தியப் பெண்களும். இலங்கைப் பெண்களும்கூட அங்கே இருந்திருக்கலாம். அந்தப் பல வர்ணப் பெண்களுக்கிடையே பல வர்ண ஆண்கள். கப்பலில் வந்த உயர்பதவி வெள்ளைக்காரர் முதல், கடின வேலை செய்யும் ஆசிய, ஆபிரிக்க ஆண்கள்வரை. இடம் ஒரு களியாட்ட விழாத் திடலாகத் தென்பட்டது. வெள்ளைக் கூடாரங்களுள் போகம். விரிந்த வெள்ளை மணல்வெளியில் பேரம். அந்த மண்வெளியில் பறந்துகொண்டிருந்த கிளினெக்ஸ் துண்டுகள் அங்கு நிகழ்ந்த உடலுறவுகளின் எண்ணிக்கைக்காதாரமாக விளங்கின. ஓர் அருவருப்பை அது விளைத்திருந்தாலும், அலைந்துகொண்டிருந்த வெண்தோல் மாதர் கலாபனில் கிளர்ச்சியைக் கிளர்த்தினர். அவன் ஒரு வெண்தோலும், கனத்த முலைகளுமுடைய ஓர் எகிப்துக்காரியை நாடினான்.
~h மன்னர் காலத்து புரட்சிக்கு முற்பட்ட ஈரான் அது. அச்சொட்டாக அமெரிக்க நிர்வாகமும், நடைமுறைகளும். நகரத்திலிருந்து அந்த இடத்துக்குச் செல்ல தனியாக ராக்ஸிகள் இருந்தன. அவை நகருக்குள்ளோ, பிற இடங்களுக்கோ செல்லா. பிற ராக்ஸிகள் அந்த இடத்துக்குச் செல்லா. நான்கு பேர் ஒரே முறையில் செல்ல முடியும். செல்லவேண்டிய இடம் எதுவும் சொல்லத் தேவையில்லை, ராக்ஸிக்குள் ஏறியிருக்க வேண்டியதுதான், நான்காவது நபர் ஏறியதும் ராக்ஸி நேரே சாக்கோவில் போய் நிற்கும். அத்தவோடு சென்றிருந்ததனால் இடங்கள் குறித்துக் க~;டப்படவேண்டியிருக்கவில்லை கலாபனுக்கு.

மாலையில் கப்பலுக்கு வந்தபோது கலாபனின் மனத்தில் ஒரேயொரு கேள்விதான் விடைத்துநின்றது. கூடு என்பதென்ன, இணை என்பது என்ன, குடும்பம் என்பது என்ன என்ற அத்தனை கேள்விகளுக்கும் அடிப்படையான ஒற்றைக் கேள்வி அது.
வாழ்க்கையின் மய்யம் எது?

காமம் என்ற மய்யத்தைச் சுற்றி எழும் நீரோட்டமே வாழ்வு என்றுதான் கலாபனுக்குப் பட்டது. வாழ்வின், உலகத்தின் இயக்கம் காமத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. அதை இழுத்துக்கொண்டில்லாமல் பிரபஞ்ச இயக்கம் இல்லை.

இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஜோசப் கொன்ராட் போன்றவர்களைப்போல் தன் கடல் அனுபவங்களையெல்லாம் எழுத கலாபன் ஆசைப்பட்டிருந்தான். அவனால் முடியாது போய்விட்டது. அவனும் இல்லையாகிப் போனான். அவன் இல்லையென்று ஆகிப்போனான் என்பதைவிட, என்னுள் சமாதியாகிப்போனான் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. கச்சாய் மணல்வெளிகளில் நிலவும், மதுவும் உடனிருக்க அவன் சொன்ன கதைகள் எவ்வளவோ. இன்றுவரை எனக்குள்ளிருந்து தம் விடுதலைக்காய் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கும் அந்தக் கதைகளை, அவனின் ஆன்ம சாந்தி வேண்டியேனும் வெளிப்படுத்த என்னுள் இருக்கிறது ஓர் உத்தேசம். அதன் முதல் கட்டமாக இந்தப் பகுதியை எழுதியிருக்கிறேன்.

000

(ThaiVeedu, June 2009 )

Thursday, June 18, 2009

அம்பை

அம்பை :
 நவீன தமிழிலக்கியத்தில் 
மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல்

-தேவகாந்தன்-

ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்’ என்பது அக் கட்டுரையின் தலைப்பு. ‘மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப்போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள்படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப்பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்படட்ட பாதை’ என்று தொடங்கியிருக்கும் அந்தக் கட்டுரை.

கணையாழியில் ரசித்து வாசித்த அம்பையின் சிறுகதைகள், எழுத்தின் பொருள் குறித்த தன்மையாலும் மற்றும் நடையாலும் ஓர் அவதானிப்பையும் ஆதர்ஷத்தையும் ஏற்கனவே நான் ஈழத்தில் இருந்தபோதே ஏற்படுத்தியிருப்பினும், இவரது ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கி 1976இல் வெளிவந்த ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பினை 1984இன் பின் தமிழகத்தில் இருந்தபோது வாசித்த பின்னால் என்னளவில் இவரை முக்கியமான எழுத்தாளராக ஆக்கியது.

பெண்ணியம் சார்ந்த கருதுகோள்களை கட்டுரைகள் மூலமாகவன்றி, அம்பையதும் அம்பை போன்றோரதும் படைப்பிலக்கியமூடாகவே ஆரம்பகாலத்தில் அறிய முடிந்திருந்தது என் போன்ற பலருக்கும். அதனால் தி.ஜா.நினைவு மலருக்கான அம்பையின் கட்டுரை மரப்பசு நாவலை அலசியவிதம், ஒரு நாவலாக அது என்னை வசீகரித்திருந்தபோதிலும் அது கருத்தாடலில் முரண்கொண்டிருந்ததை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டது. ஒரு நாவலை வாசக ரசனைக்கப்பால் சென்றும் அதன் உள்ளார்ந்திருக்கும் அர்த்தத்தை, அரசியலை அறியவேண்டிய அவசியத்தை, தெரிதாவின் கட்டவிழ்ப்பு வாதம்பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே செய்தது அம்பையின் மரப்பசு நாவல்பற்றிய கட்டுரை என்பதாய் இப்போது நினைவுகொள்ள முடிகிறது.

இந்தக் கட்டுரை முக்கியமானது. பெண்ணியல் குறித்த சொல்லாடலை தமிழ்மரபில் நிலைநிறுத்தி வைத்த முக்கியமான பெண் படைப்பாளின் கட்டுரைகளில் ஒன்று. சோரன் கீர்க்கேகார்ட் (Soren Kierkegaard 1813 – 1855) என்ற ஆரம்ப பெண்ணிலைவாதத்தின் தத்துவவாதி காலத்திலிருந்து, பெண்ணிய தத்துவங்கள் பரந்துபட்டனவாய், பலதரப்பட்டனவாயே இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு தத்துவத்தின் பின்னாலும் தனிப்பட்ட அனுபவங்களினதும், அறிகைகளினதும் தாக்கம் இருந்துகொண்டிருந்தது. அறுதியான ஒரு முடிவை அடைய இவை தடைக்கல்லாக இருந்தன என்ற வேளையில், தவிர்க்கப்பட முடியாதனவாய் விரிந்த சிந்தனைக் களத்தை உருவாக்கின என்பதும் நடந்தது.

இந்தத் தளத்திலிருந்து செயற்பாட்டுக்கான தத்துவங்கள் வகிர்ந்தெடுக்கப்பட்டன. இன்றைய பின்நவீனத்துவ, ஜனநாயக, இடது சிந்தனை மரபுகளிலிருந்து ஒரு பொதுத்தள அமைப்பு காணப்பெற்று அந்த அமைப்பிலிருந்தான ஒரு செயற்பாட்டுத் தளம் இயக்கம் பெற்றிருக்கிறது. இச் செயற்பாட்டுத்தள இயக்கத்திலிருந்து அம்பையின் கருதுகோள்கள் உருவாகியுள்ளன என்பது ஒரு சரியான முடிவாக இருக்க முடியும்.

காமம் என்ற முழுநிலையில் பெண்ணுடல் கொண்டிருக்கும் பங்கு ஒருபக்கச் சார்பாகவே அர்த்த பாவனையாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்ணுடலின் விடுதலையை முதன்மையாக்கி, அதனைப் புரிந்துகொள்வதின்மூலம் தொடரும் விடுதலைகளின் நிர்மாணத்தைச் சாத்தியமென்று அக் கட்டுரை தெளிவாகவே பேசுகிறது. அம்பை சொல்கிறார்: ‘உடலிலிருந்தும், அதன்மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதிபோல் பாவித்து மறுவாசிப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.’

தி.ஜா.வின் சிறந்த நாவல் ‘மோகமுள்’ என்பாருளர். எம்.ஏ.நுஃமான் தனக்குப் பிடித்தமான தி.ஜா.வின் நாவலாக மோகமுள்ளை எடுத்துக்கொண்டு அதை விமர்சன ரீதியில் அணுகிய கட்டுரை அவரது ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலே உண்டு. எனக்கு ‘மோகமுள்’ளும் பிடிக்கும், ‘செம்பருத்தி’யும் பிடிக்கும். ஆனால் ‘மரப்பசு’ மிகவும் பிடிக்கும். நான் பல தடவைகள் வாசித்த பிரதி அது. தி.ஜா.வின் ‘அம்மா வந்தா’ளை விடவும். கட்டிறுக்கம், பாத்திர வார்ப்பு, அது வட்ட அலைகளில் விரிந்துசென்று பல களங்களையும், பல அர்த்தங்களையும் பல அடுக்குகளையும்கொண்டு வாசகனை ஒரு மவுனத்தில் உறையவைத்து முடிந்திருக்கும். இப்போதும் தி.ஜா.வின் நாவல்களுள் எனக்குப் பிடித்ததாக ‘மரப்பசு’வைச் சொல்ல எனக்குத் தடையில்லை. ஆனால் அதன்மீதான கவுரவம் அன்றிருந்ததுபோல் இன்றில்லை என்பதையும் சேர்த்தே நான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அம்பையின் கட்டுரை அதனை ஒரு முழுக்கட்டவிழ்ப்புக்குள் உள்ளாக்கியிருந்தது. அம்பையேகூட அது தன் வாசிப்பின் வெளிப்பாடு, மற்றும்படி அதில் கட்டவிழ்ப்பு என்று எதுவுமில்லையென்றாலும், அது கட்டவிழ்ப்புத்தான். விமர்சக கட்டவிழ்ப்பு இல்லையெனினும், வாசக கட்டவிழ்ப்பு.

அம்பை கட்டுரையின் ஓரிடத்திலே கூறுவார், ‘(நாவலின்) இரண்டாவது சறுக்கல் மீறல்,சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணரவேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல்பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ‘ஆயிரம் யோனிகள் உடையவள் நான்’ என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு, உருவகரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளைய வந்தவள் அக்கமகாதேவி எனும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்கவேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலைகொள்ள அவகாசம் எடுப்பதுபோல, உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்ப கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல் இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும். உலகையும், விண்ணையும், வானையும் புரிந்துகொள்ளும் ஒரு கட்டம். இப்படியெல்லாம் இதைப் பார்க்க தி.ஜா.வுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கனவே உள்ள கச்சிதமான அடைப்புகளுக்குள் போட விரும்புகிறார்.’

இந்த விமர்சனரீதியிலான முடிவைச் சுலபமாக ஒரு கட்டவிழ்ப்பில் கண்டடைந்துவிட முடிகிறதுதான். அல்லது புணர்ச்சி விடுதலையோடு பெண்ணின் மொத்த மன, உடல் விடுதலைகளினைக் கண்டடையும் சாத்தியத்தின் நம்பிக்கை பெறப்பட்டு விடுகிறதுதான். ஒரு சுளுவான வழியாகக்கூட இது முதற் பார்வைக்குத் தோன்றக்கூடும். ஆனால் படைப்பில் இதற்கான மொழியைக் கண்டடைவது சாதாரணமான காரியமாகி விடுவதில்லை. பெண்மொழியென்பது பெண்ணின் அனுவங்களினூடாகக் கண்டடையப்படும் பெறுமானங்களை வெளிப்படுத்துவதற்கான ஊடகம் மட்டுமல்ல. அனுபவங்களையே மொழியாக்கிப் பகிர்வது. அது தமிழல்லாத அல்லது தமிழில்லாத வார்த்தைகளின் அடைதல் அல்ல என்பது மிகச் சரியான வரையறையே. ஒரு மீறலைச் செய்யாமல் அதன் எல்லைகள் அடைதற்கூடியனவல்ல என்பதே பெண்மொழி அடைதலின் சூக்குமம். அதை படைப்பாக்க முயற்சியொன்றின்போதே சிரம சாத்தியங்களில் தரிசிக்க முடிகிறது படைப்பாளியினால்.

தமிழில் கவிதைச் சாத்தியங்கள், பல பெண் கவிஞர்களுக்கும் ஓரோர் எல்லைவரையில் கைகூடியுள்ளமை தம் அனுபவ வெளிப்பாட்டுக்கான ஒரு மொழியின் கண்டடைதலின் விளைவே என்பது நூற்றுக்கு நூறு சதவீதமும் உண்மை. அதை வெகு சில குரல்களே திசைகாட்டும் கருவியாய் நின்று வழிகாட்டியிருக்கின்றன. அவற்றினுள் ஒன்று அம்பையினது என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

‘சிறகுகள் முறியும்’ தொகுப்புக்குப் பிறகு அம்பையின் மேலும் இரு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. 1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) 2. காட்டில் ஒரு மான் (2000). இவை ஒற்றைத் தொகுப்பாக்கப்பட்ட ஒரு வெளியீடும் ‘அம்பை சிறுகதைகள்’ என்ற பெயரில் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தனை கதைகளையும் வைத்துப் பார்த்தால் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு சிறுகதையையே அம்பை படைத்திருப்பது தெரியும். தன் ஆளுமைக்கான இவரின் வேறு துறை ஈடுபாடுகள் இதற்குக் காரணமாக இருக்கமுடியுமெனினும், ஏறக்குறைய ஐம்பது சிறுகதைகளில் தன் நோக்கில் வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துநிலைகளை இவர் வெளிப்படுத்திவிட்டதாகக் கொள்ளமுடியும். எனினும் தான் வற்புறுத்திய பெண்மொழியில் படைப்பாக்க முயற்சியின் உதாரணத்துக்கு இவர் எழுதியுள்ள ‘கைலாசம்’ சிறுகதையை எடுத்துக்காட்டலாம்.

மீறல் செயற்பாட்டினை மீறல் இல்லாத மொழியின் மூலம் வெளிப்படுத்திவிட முடியாது. முலைகளும், யோனியும், புணர்ச்சியும், விந்துவும், ஸ்கலிதமும், கொட்டைகளும் ஆண்களினதில் மட்டுமில்லை, பெண்களது படைப்புக்களிலும் இன்று நிறையவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குட்டி ரேவதியின் ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர் ‘முலைகள்’. பெருமாள் முருகன் எழுதிய ‘பீக்கதைகள்’ போல இது மீறலின் ஓர் அடையாளம்தான். நாம் ஒரு மொழியைக் கண்டடையாமல் ஒரு புதிய உபாயத்தைப் பேசிவிடவே முடியாதென்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். தலித்துக்களுக்கான ஒரு மொழி இருப்பதுபோல, பெண்களுக்கான ஒரு மொழி இருக்கிறது. தத்தம் உணர்வுகளை அந்தந்த மொழியில் வெளிப்படுத்துகைக்கான பிரக்ஞை அந்தந்தப் படைப்பாளிகளுக்கு இருக்கவேண்டியது நியதியாகும். 2006 ஒக்-டிச. ‘உயிர்நிழல்’ இதழில் வெளிவந்த அம்பையின் ‘கைலாசம்’ சிறுகதை இந்தப் பிரக்ஞை தவறாத, அதேவேளை கலாநேர்த்தி குறையாத, படைப்பின் சிறந்த உதாரணம்.

‘கட்டிலில் சிகந்தர் நிர்வாணமாகக் கிடந்தான். போர்வை காலடியில் கிடந்தது. அவன் நீண்ட குறி ஒரு பக்கம் மடங்கி விழுந்திருந்தது. அவள் பார்க்கும் முதல் ஆண்குறி. சுன்னத்து செய்த குறி. சுதாவுக்கும் அது முதல் முறையாம். சுதா ஓடிப்போய் தன் பைனாகுலரை எடுத்துவந்தாள். இருவரும் வெகு அக்கறையுடன் அந்தக் குறியைப் பார்த்தனர். அதை மட்டும் பெரிதாக்கிப் பார்த்தபோது, அவன் உடலிலிருந்து விலகிய ஒன்றாய், ஒரு குட்டிப் பாம்பாய் அது பட்டது. சாதுப் பாம்பு. அவன் உடல் அசைவுகளுக்கு ஏற்ப அங்கும் இங்கும் மடங்கி விழுந்த பாம்பு’ என்று எழுதுவதற்கு முன்னர் ஒரு மரபை அம்பைக்கு முறிக்க வேண்டியதிருக்கிறது. இடக்கரடக்கலை ஓர் இலக்கணமாகச் சொல்லியிருக்கும் மொழியில், குறிகளுக்கான குறிப்பான்களை எளிதில் பிரத்தியட்சப்படுத்திவிட முடிவதில்லை. அது ஒரு தொடர்ந்தேர்ச்சியான முயற்சியிலேயே சாத்தியத்தை அடைகிறது. சிலவேளை யுத்தங்களில்.

தனக்கான ஒரு மொழியைக் கண்டடைய அம்பைக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்? அதற்கான முன்மாதிரி எழுத்துக்களுக்கு எவ்வளவு முயற்சி செலவாகியிருக்கும்?

‘மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண்-ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதூரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விஷம்வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும்போது அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை, கைலாசம். அது மாறியபடி இருக்கிறது. அதன் தோற்றமும் அர்த்தங்களும் மாறியபடி உள்ளன. என் முலைகள் தளர்ந்து, சற்றே கீழிறங்கி உள்ளன. என் தொடைகளில் பச்சை நரம்போடுகிறது. கால்களிலும் கைகளிலும்கூட. என் அல்குல் ஒரு பழுத்த இலைபோல் இப்போது இருக்கிறது. என் ஐது மயிர் முன்போல் அடர்த்தியாக இல்லை. கருமையாகவும் இல்லை. நரைத்து இருக்கிறது. ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கிறது’ என்று நடுத்தர வயதைக் கடந்த கமலம் நினைக்கிறாள் கதையிலே.

அது காதலையும் காமத்தையும், ஒருவகையில் தன் உடலையும்தான், கண்டடைய ஒரு பெண் எடுத்த தீரா முயற்சிகளின் அனுபவ வெளிப்படுத்துகை. கற்பு, பரத்தமை என்பன இல்லாத ஒருவெளி தேடிய நன்கு படித்த, வேலை பார்க்கின்ற ஒரு பெண்ணின் கண்டடைவு. அதிலே இரக்கம் இருக்கிறது. அறம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. கூடிவாழ்தலின் சமூகப் பிரக்ஞை இருக்கிறது. இந்த உணர்வின் வகைப்பாட்டைக் கண்டடைதலிலேயே என்றென்றைக்குமான பெண்மொழியின் முயற்சிகள் உற்சாகத்தோடு ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருபோது நதிநீராக, ஒருபோது காட்டாறாக. இன்னொருபோது மெல்லென உதிரும் மழைத் தாரைகளாக உதிர்வின் பரவசம் கிளர்த்தியபடியும்.

பெண் எழுத்துக்களில் ஒரு கோபம் எப்போதும் முகங்காட்டிக் கொண்டிருக்கின்றது என்ற ஆணுலகக் கூற்று உண்மையானதுதான். அதை அவசியமானது என்றே நான் நினைக்கிறேன். அது அவ்வாறுதான் தன் ஆரம்பதசையில் இருக்கவும் முடியும். அம்பையின் சுகந்தி சுப்பிரமணியனின் மறைவுக்கான மார்ச் 2009 ‘காலச்சுவ’ட்டில் வெளிவந்த இரங்கற் கடிதம் முக்கியமானவொன்று. அது தன் முழுக் கோபத்தையும் அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருந்தது. யாரையென்று குறிப்பாய்க் குறைசொல்ல முடியாது, சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் அது வெய்து தீர்த்ததாயிருந்தது. அது குறித்து சிறிய சர்ச்சையொன்றும் யமுனா ராஜேந்திரனுக்கும் அம்பைக்குமிடையே ஏற்பட்டிருந்தது. அது மறக்கப்பட்டுப்போன சர்ச்சையாக ஆகிவிட்டிருந்தாலும், அம்பையின் கடிதம் கொண்டிருந்த சமூகத்தில் பெண்கள் அடக்கவும் ஒடுக்கவும் படுவதான நிலைமையின்மீதான கோபம் மனத்தில் சாசுவதமாகியிருக்கின்றது. அக் கடிதத்தின் தலைப்பே ‘புதையுண்ட சுகந்தி’ என்று ஒரு அநீதியின் கதையாக விரிந்துகொண்டிருக்கும்.

கடிதத்தில் அம்பை மேலும் இவ்வாறு எழுதுவார்: ‘தன் வாழ்க்கைபற்றி பெரும் அதிர்ச்சிதரும் தகவல்களை அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். அவை உண்மை என்று நிரூபிக்கத் தன்னிடம் சாட்சிகள் உண்டு என்பாள். அவள் கூறிய அத்தனை திடுக்கிடும் தகவல்களும், மனப்பிறழ்வால் ஏற்பட்ட அதீத கற்பனைகள் என்று அவள் கணவர் கூறுகிறார். இருக்கலாம். அவள் அன்னை கணவனைவிட்டு இன்னொருவருடன் வாழ்ந்தவர். இதனாலேயே பாட்டியால் மிகவும் வன்முறை கலந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவள். அதன் பிறகு வன்முறை அவள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிப்போயிற்று….அவள் ஒரு நல்ல மனைவியாகவோ, ஒரு நல்ல தாயாகவோ இருந்தாளா என்று எனக்குத் தெரியாது. அவள் வதைபட்ட பெண்.’

இந்த ஆக்ரோஷம் முக்கியமானதல்லவா? இதுவில்லாமல் பெண்நிலை வாதத்தை வெறுமனே பேசுவதாலும் எழுதுவதாலும் என்ன ஆகிவிடப்போகிறது? மேலும் படைப்புக்கே இதுதானே மூலக்கனலும்!

தலித்தியம், பெண்ணியம் என்பன தமிழின் இன்றைய வளங்கெழு புதிய கிளைகள். நவீனத்துவச் சொல்லாடலுக்கான பாரிய களங்களைக் கொண்டவை இவை. ஒருவகையில் மரபுரீதியிலான காலகால இலக்கிய வகைமைகளுட்படாமல் தனித்து நிற்பவைகூட. இந்தவகையில் செம்மைசார்ந்த இலக்கிய முயற்சிகளுக்கு இதுவரை முன்னுரிமை அளித்துவந்த இலக்கியத் தோட்டம், இவ்வாண்டு அம்பையை இயல் விருதுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதன்மூலம், தன் பரப்பினை விசாலப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது. அம்பைக்கான விருது அவரது இலக்கிய முயற்சிகளுக்கானது மட்டுமில்லை. அவரது இசை நடன ஆர்வங்களுக்கும், அதனாலான இசை நடன பெண் கலைஞர்களின் அனுபவப் பதிவுகளுக்கும், ஸ்பாரோ அமைப்பின் தோற்ற வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அவரது விவரணப் பட ஈடுபாட்டினுக்குமானதுதான். எனினும் ஓர் இலக்கியவாதியாய் அதை இலக்கியம் சார்ந்த விருதாகப் பாவிப்பதே எனக்கு உவப்பாக இருக்கமுடியும்.
0000

பதிவுகள்.காம், ஜூன் 2009


'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...