Posts

Showing posts from September, 2009

கலாபன் கதை 3

கடலில் தொலைந்த ஒருநாள் அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை. காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான்.

கலாபன் கதை 2

நிறுதிட்டம் : இரண்டு ஆண்டுகளாகியிருந்தன அந்த முதல் கப்பலிலிருந்து கலாபன் திரும்பிவருவதற்கு. ஊரே அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவன் வாங்கிவந்திருந்த சான்யோ திறீ இன் வண் செற்றைப் பார்க்க இளமட்டமெல்லாம் வீட்டைச் சுற்றி அலைந்தது. அவனது நீண்ட தலைமுடியும், டெனிம் ட்ரவுசரில் அவனது கம்பீரமான கப்பல் நடையும், அவ்வப்போது கிரேக்க ஆங்கில சொற்கள் கலந்த உரையாடலும் பலரை வசீகரித்தேவிட்டிருந்தன. இரண்டு கிழமைகளாக வீடு ஒரு சொர்க்கத்தில்போல் திளைத்துக்கொண்டிருந்தது. மூன்றாவது கிழமை அவனது மனைவி மனோவின் தங்கை ரூபிணி இரண்டு நாட்கள் வந்து வீட்டிலே தங்கிவிட்டுப் போனாள். இரண்டு வருடக் காத்திருப்பு ஒட்டுமொத்தமும் ஏமாற்றமாகிவிட்டதைப்போல ஆகிப்போனாள் மனோ. அவன் கப்பலிலிருந்து கொண்டுவந்த வீடு ஏதோ விமானநிலையத்தில் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டுவர கலாபன்தான் தாமதிப்பதுபோலவும் அந்தரப்பட்டுக்கொண்டு திரிந்தவளின் முகம் பின்னால் கறுத்துச் சிதைந்தே போனது. கலாபன்கூட மாறித்தான் போனான். குழந்தையைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி எழவில்;;;;;;;லை அந்த வீட்டிலே. ரூபிணி காரணமாயிருக்கலாம் என்பதுதான் பேச்சாய