Monday, December 27, 2010

காவல் கோட்டம்:

காவல் கோட்டம்:
மறைக்கப்பட்ட வரலாற்றை
கண்டடைய முனைந்த நாவல்1

‘காவல் கோட்ட’த்தின் மீதான சார்பு, எதிர் விமர்சனங்கள் வீச்சாக எழுந்துகொண்டிருந்த காலத்தில் நூல் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் வாசிப்பை அவ் விமர்சன வீச்சுக்கள் தள்ளிப்போட வைத்துவிட, மனம் தடுதாளியில்லாத ஒரு சமநிலைக்கு வர நான் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வந்தும், 2008 டிசம்பரில் வெளிவந்த சு.வெங்கடேசனின் 1048 பக்க இந் நாவலை வாசிக்க ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன.

வாசிப்பு மிக மெதுவாகவே சாத்தியமாகியிருந்தது. ஆயினும் வாசிப்பைக் கைவிடுகிற அளவுக்கும் அது சுவாரஸ்யமற்று இருக்கவில்லை. மேலே செல்லச் செல்ல நாவல் அதன் கட்டுமானத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் ஏறிய உச்சம் ஒரு பரவச நிலைக்கே என்னை நகர்த்தியது என்று சொல்லவேண்டும்.

என் நண்பர்களிடம் நாவல்பற்றி நான் நிறையக் கூறியிருந்தேன். ஆனால் நாவல்பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத்தாக்க எண்ணியவேளை, அதுபற்றிய குறிப்புக்களை வாசிப்பின்போது நான் எடுக்கத் தவறி விட்டிருந்தமை தடையாகப் போயிற்று. அவ்வாறு எழுதுவதற்காக நாவலின் வாசிப்பை மீண்டுமொரு முறை செய்யவேண்டி நேர்ந்தபோதும் அது எனக்கு அலுப்பைத் தரவில்லை.

2008இலும் அதற்கு முந்திய ஆண்டிலும்கூட வெளிவந்த நாவல்களுள் ‘காவல் கோட்டம்’ மிகமுக்கியமானதொன்று என்பதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் இல்லை. இதனால் மட்டுமில்லை, இந் நாவல்பற்றி விரிவாகப் பார்ப்பது தமிழ் நாவலின் புதிய போக்குகளை அறிவதற்கான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும்தான் இதுபற்றி எழுதுவது தவிர்க்க முடியாததானது.

2

வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடாத பண்பு பொதுவாக வெகுஜனரீதியான எழுத்துக்களிலேயே அதிகமும் காணப்படுவது. வாசிப்பின் இன்பம் பிரதியின் கதைப்போக்கிலோ, அதன் நடையிலோ இல்லாமல் தன் கட்டுமானத்திலும், அது தனக்குள் வைத்திருக்கும் மாற்றுப் பிரதியின் அமைவிலும் உள்ளதாக பின்னைய இலக்கியப் போக்குகள் நமக்குத் தெளிவாகச் சுட்டிநிற்கின்றன.

ஒரு கதையின் கட்டமைப்பை வரலாற்றுப் புலத்தில் பதிக்கையில் உருவாகும் பிரதி வரலாற்றுப் புதினமாவதில்லை. மாறாக அது வரலாற்றுக் கால நாவல்வகையினமாகவே ஆகிறது. வரலாற்றுப் புனைவு நாவல் என இதை ஓரளவு சொல்லமுடியும். ஒரு வரலாற்றுக் கதையைப் புனைவின்மூலம் விஸ்தாரப்படுத்தி உருவாகும் நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். பௌராணிகக் கதையொன்றை ஒரு படைப்பாளி தன் புனைவின் ஆற்றலினால் சுவாரஸ்யத்திற்கான அல்லது அதனினும் மேலான தன் நோக்கத்துக்கான திசையில் கால தேச வர்த்தமானங்களுக்குட்பட்ட திரையில் விரிப்பதும் இவ்வகைப்பட்டதாகவே கருதப்படுகிறது. ஆங்கில, தமிழ் நாவல்பற்றிய விவரணங்களிலிருந்து இவ் வகையினப்பாட்டை நாம் சுலபமாகவே வந்தடைய முடியும்.

எட்டாம் ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் மத அதிகாரத்தை இங்கிலாந்தில் ஒழித்து இங்கிலாந்துத் திருச்சபையின் ஆதிக்கத்தை நிறுவ நிகழ்ந்த போராட்டத்தின் பின்னணியில் புனையப்பட்ட Hilary Mantelஇன் ‘Wolf Hall’ நாவலை மிக அண்மைக்கால சரித்திர நாவலுக்கு உதாரணமாகக் கொண்டால், சேர் வால்டர் ஸ்கொட்டின் ‘Ivanhoe’ மற்றும் ‘Waverley’ நாவல்களை சரித்திர நாவல்களின் தோற்றுவாய்க் கால நாவல்களாகச் சொல்ல முடியும். டானியல் டீபோவின் ‘றொபின்சன் குரூசோ’ நாவலும் தோற்றுவாய்க் கால நாவல்களில் முக்கியமானதே. இந்தியப் புலத்தில் எழுந்த அண்மைக்கால நாவல்களுக்கு 2007இல் வெளிவந்த தீபக் சோப்ராவின் ‘Bhudda’ என்ற நாவலையும், 2010இல் வெளிவந்த ஒமெய்ர் அகமத்தின் ‘The Story Teller's Tale’ ஐயும்கூட நாம் உதாரணத்துக்குக் கொள்ளமுடியும்.

கனடிய மண்ணில் ஆங்கிலத்தில் வெளிவந்த இரண்டு நாவல்கள் இது குறித்த நம் விசாரணைக்கு உதவக்கூடியவை. சந்ரா கலான்ட் உடைய ‘The many lives &  Secret sorrows of Josdphine B’ , ‘Tales of Passion, Tales of Woe’ ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்றுப் புனைவு எழுத்துவகையான நாவல்களுக்கு மிக்க உதாரணமாகக் கூடியவை. ஜோசபின் உடைய இளமையும், முதல் திருமணமும், முதல் கணவனின் மரணத்தின் பின் ஆரம்பிக்கும் நெப்போலியன் போனபார்ட்டுடனான திருமணமுமாக தொடர்வன நாவல்கள். பிரெஞ்சுப் புரட்சியையும், அதன் பின்னான குடியரசு ஆட்சியையும், நெப்போலியனது எழுச்சியையும் ஐரோப்பிய சரித்திரத்தில் விரிவாக அறிந்திருக்கும் ஒருவர் இந் நாவல்களில் அதன் வரலாற்றுப் புலம் அச்சொட்டாகப் பதிவாகியிருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். முதலாவது நாவல்பற்றி தி குளோப் அன்ட் மெயில் பத்திரிகையில் வெளிவந்த விமர்சனத்தின் பின்வரும் அடி அதன் தரத்தை உள்ளுணர வைக்கிறது: ‘…accomplishes what the best of historical novel does’.

ஆங்கிலமொழி வரலாற்று நாவலையும், வரலாற்றுப் புனைவு நாவலையும் மிகத் துல்லியமாக historical novel எனவும் historical fiction எனவும் வரையறைசெய்து வைத்துள்ளது. தமிழிலும் இந்த வரையறுப்பு உண்டெனினும் அச்சொட்டான வாசகப் புரிதலாவது குறைவாகவே இருக்கிறது.

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ ஒரு பௌராணிகப் புலத்தை ஓரளவு கண்டடையப்பட்ட வரலாற்றுத் தகவல்களின்மீது தன் புனைவின் வன்மையால் உரைநடையில் நிர்மாணித்த மிகப்பெரும் பிரதியெனக் கொண்டால், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’ பஞ்சபாண்டவர் தவிர்ந்த உபபாண்டவர்களின் மூலமாக ஒரு பௌராணிக காலத்தை நிதர்சனத்துக்கு உருவாக்கிய சாதனையெனக் கொள்ள முடியும். இவைபோல் ‘காவல் கோட்ட’த்தையும் தன்னளவில் உச்சமடைந்த நாவலாகவே கொள்கிறேன். எப்படி?

3

தாதனூரினதும் அதன் மக்களினதும் கதையென்று மொத்தமாகச் சொல்லிவிட முடியாவிட்டாலும், ஓரளவில் அது அப்படித்தான். மதுரையின் ஆதாரமாக இருந்து காலங்காலமாக தாதனூர் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் மக்கள் எப்படியானவர்களாக இருந்தனர்? நாவலின் கடைசிப் பகுதியில் இவ்வாறு வருகிறது: ‘சோகம் சொல்லிமுடியாதபடி அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைத் தந்தது இரவும் பகலும் மாற்றிப் போடப்பட்டதுதான். மூதாதையரின் காலங்களிலிருந்து இருள் எனும் பெரும்பரப்பில் ஓடியபடி இருந்த கால்கள்! இருளைக் குடித்து, இருளைத் தின்று, இருளால் வளர்ந்த உடல்கள்!’

தாதனூர் காவலும் களவும் கலந்த ஊராக இருந்தது. அதுபோல் தாதனூரும் மதுரையும் பிரிக்கமுடியாதவாறு ஒன்றின் ஆதாரத்தில் ஒன்றுபோல் இணைந்தே கிடந்தன.

மாலிக் கபூரின் படையெடுப்புக் காலத்தில் காவலாளி கருப்பணனின் கொலைப்பாட்டோடு தொடங்கும் நாவல், கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் தாதனூர் பெரியாம்பள மகள் அங்கம்மாக் கிழவி பொலிஸினால் அடித்துக் கொல்லப்படுவதோடு முடிவெய்துகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் இடையிலும் மதுரையையும், தாதனூரையும் கவிந்தெழுந்த காலத்தின் கதைதான் ‘காவல் கோட்டம்’. இதற்கு மேலே கீழே இல்லை.

காலம் எப்படி இருக்கிறது? அதன் வடிவம் என்ன? கழிந்த காலம் வரலாறாக இருக்கிறது. அது கதைகளின் வடிவத்தில் நிற்கிறது. காலம் ஒரு வட்டத்தில்போல் நடந்துகொண்டே இருக்கிறது எனலாம். அதனால்தான் வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கின்றன. கதைகளும் வெவ்வேறு வடிவங்களில் கிளைத்துக் கிளைத்து எழுந்துகொண்டிருப்பதும் அதனால்தான்.

ஊரைக் கொள்ளையடித்து, அகப்பட்ட பெண்களையெல்லாம் கவர்ந்து சென்றுகொண்டிருந்த மாலிக் கபூரின் படைகளின்மேல் சடைச்சி கொடுத்த வேலோடு பாய்ந்து சில குதிரைப் படையினரைக் கொன்றுவிட்டு தானும் மடிந்து போகும் காவலாளி கருப்பணனின் கதை, எப்போதுமே வேறுவடிவில் நாவலில் வந்துகொண்டேதான் இருக்கிறது. கருப்பணனின் மரணத்தின் பின் தன் தாயாதிக்காரரின் ஊர் நோக்கிச் செல்லும் சடைச்சி இடையில் நோக்காடு கண்டு அமணமலைப் பக்கமாயுள்ள ஒரு குகைக்குள்ளே நுழைகிறாள். சடைச்சியின் வம்சத்திலிருந்து பெருக்கெடுக்கிறது களவினதும், காவலினதும் சமூகம். சடைச்சிகளும், கருப்பணன்களும் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள் அதில்.

முகம்மதியர் மதுரையைக் கைப்பற்றியிருந்த காலத்தில் அப் பழம்பெரு நகர் எப்படியிருந்தது? குமார கம்பணனின் விஜயநகரப் படைகள் வந்து மதுரையை முற்றுகையிட்டிருக்கின்றன. வைகைபற்றியும் மதுரைநகர்பற்றியும் கேள்வியில் பட்டிருந்த வடுகத் தளபதிகள் திகைத்துப்போகிறார்கள். ‘வைகை கம்பிளி நாட்டுக் காட்டோடைகளைவிடவும் ஒடுங்கி மணலாய்க் கிடந்தது. சின்னஞ்சிறு நகரான மதுரையை ஐந்தே நாழிகையில் குதிரையில் சுற்றிவிடலாம். அதன் குட்டையான கோட்டை மதில்கள் காலத்தில் முதுமை பூண்டு அரித்துக் கிடந்தன. சுட்ட செங்கல்கள் செதில் செதிலாய் வங்குபற்றி நின்றன. பனையை வெட்டிக் கிடத்தினால் மதிலை எட்டிவிடும் அகலம்தான் அகழி கிடந்தது. அரவ நாட்டில் கல்கோட்டைகளே இல்லையென்ற தகவல் ஆச்சரியமளித்தது’ என நாவல் கூறுகின்ற நிலைமையைக் கற்பனைசெய்து பார்க்க முடியும். இந்த நிலைமையிலிருந்துதான் மதுரை வளர்ந்தது. படிப்படியாக வளர்ந்தது. ஒருவகையில் மதுரைக் கோட்டையின் வளர்ச்சியும், அதன் அழிப்பும்தான் நாவலின் பெரும்பகுதியை நகர்துகின்றன.

வரலாறாக அன்றி, கதைகதையாக நாவல் நகர்வதிலேதான் அதன் கட்டுமானச் சிறப்பு அடங்கியிருப்பதாகப் படுகிறது. இன்னொருவகையில் சொல்லப்போனால் பல சிறுகதைகளும், பல குறுநாவல்களும்கொண்டு நாவல் நடந்திருக்கிறது என்றாலும் சரிதான். கருப்பணன் கதை, தொடர்ந்து குமார கம்பணன் - கங்கா கதை, ராணி மங்கம்மா கதையெல்லாம் சிறுகதைக் கட்டமைப்போடு விளங்கிக்கொண்டிருக்கின்றன. விசுவநாத நாயக்கன் கதை, தொடர்ந்து நல்லதங்காள் குஞ்சரத்தம்மாள் கதைகளெல்லாம் குறுநாவலின் குதிப்புகளோடு இருக்கின்றன. ‘இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அவை வெறும் கதைகள் அல்ல, கதையும் வரலாறும் கிளைபிரியா முதுமொழியில் சொல்லப்பட்டவை. அம் மொழியில் முளைத்து என் போக்கில் வளர முயன்ற ஆசைதான் இது (நாவல்)’ என படைப்பாளியே குறிப்பிடுவதுபோல் கதைகதைகளாகவேதான் நாவல் வளர்ந்திருக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் அடங்க மறுத்த மதுரையின் வலிமையெல்லாம் அறுக்கும்வகையில், நகர விஸ்தரிப்பு மற்றும் வர்த்தகத்துக்கான பாதைகளின் அமைப்புக்கென்று  பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு கோட்டையிடிப்புக்கு திட்டமிடப்படுகிறது. அதற்கு முன்னதாக கோட்டைச் சுவர்களில் காவலுக்கு வாலாயம் பண்ணி வரவேற்கப்பட்டிருந்த ஏழு கருப்பன்களும், ஏழு மாடன்களும், ராக்காயி, பேச்சி, இருளாயி ஆகிய மூன்று சக்திகளும், மதுரைவீரன், லாடசன்னியாசி, சப்பாணி, சோணை ஆகியவர்களுமான இருபத்தொரு சிறுதெய்வங்களும் கோட்டை வாசஸ்தலத்திலிருந்து குடிகிளப்பப்பட்டாக  வேண்டுமென்று ஊர்ப் பெரியோர் அபிப்பிராயப்படுகிறார்கள். ராமச்சந்திர ஐயர் என்பவர் அவ்வாறு தெய்வங்களை வேறு இடங்களில் குடியேற வைத்துவிட முடியுமென்று பரிகார பூஜை முறை கூறுகிறார்.

ஒரு நிறை அமாவாசை இரவில் அதற்கான பூஜை தொடங்குகிறது. செல்லத்தம்மன் கோயிலில் இருபத்தொரு எருமைக் கடாக்களை வெட்டிப் பலியிட்டு, அத் தெய்வங்களை அக் கோயிலில் குடியேற வைப்பதுதான் திட்டம். ‘கோட்டைச் சுவரில் இருக்கும் தெய்வங்களை பலியேற்றுக்கொள்ள வெளியேறி வருமாறு மூலைக்கு மூலை கோடாங்கிகளும், சாமிகளும், பூசாரிகளும் நின்று நரம்பு புடைக்கக் கத்தி ஆடிக்கொடிருந்தனர். உடுக்குச் சத்தமும், கொட்டுச் சத்தமும், மேளச் சத்தமும் இரவின் செவிப்பறையை அதிரச் செய்தது.’ ஆயினும் தெய்வங்கள் தம்மிருப்பிடத்தை விட்டு விலகிச் சென்று பலியேற்க மறுத்துநின்றன. எப்படியோ முதலில் நல்லமாடன் கோட்டைச் சுவரைவிட்டு இறங்கிவரச் சம்மதித்தான். தொடர்ந்து மற்றைய தெய்வங்களும் இறங்கிவந்தன. நேரமாக ஆக சங்கிலிக்கருப்பனும் இறங்குகிறான். ‘எட்டுப் பேர் இழுத்துப் பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கியபொழுது, கோட்டையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு, இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.’ அழுகையும் ஆவேசமும் கத்தலும் கதறுலுமாக விடிகிறவரையில் இருபத்தொரு சிறுதெய்வங்களும் செல்லதம்மன் கோயிலில் சென்று குடியேறிக்கொள்கின்றன. அன்றைய மதுரை மட்டுமல்ல, வாசிக்கும் மனங்களும் நடுங்கி அலறுகின்றன. இவ்விடத்தில் படைப்பாளியின் மொழியாளுமை உச்சம். வாசக மனத்தை அது பதறவைக்கும். கோட்டை மதிலோர மரங்களிலிருந்த மாடப்புறாக்கள் ஒரு மாலையில் திரும்பிவந்து தமது கூடுகளைக் காணாது பதறியடித்து அலமருவதுபோல் மனம் பறந்தடிக்கும்.

‘விஷ்ணுபுரம்’ நாவலில் ஒரு மதம் பிடித்த யானை வரும். அதை அடக்க போர் யானையொன்றைக் கொண்டுவருவார்கள். அப்போதைய வழக்கம் அதுதான். போர் யானைக்குத் தெரிந்தது யுத்தம்மட்டுமே. யுத்தத்தில் கொலை. போர் யானை வருவதும், மதம் பிடித்த யானையை ஒரு மூலைப்படுத்தி தன் கூர்த்த தந்தங்களால் குத்திக் கொல்வதும் வாசிக்கையில் வாசக மனம் பதறிச் சிலிர்க்கும். ஏறக்குறைய அதற்குச் சமமான பதற்றத்தை வாசக மனத்தில் ஏற்படுத்துபவை சு.வெங்கடேசனது இப்பக்கங்களும். அதுபோலவே கொள்ளைநோய்க் காலத்தில் மனிதர் கூட்டம் கூட்டமாய் இறப்பதும், தாது வருஷ பஞ்ச காலத்தில் ஜனங்கள் அடையும் வறுமை வாட்டம் அலைந்துலைவுகளும், பின்னால் வெள்ள காலத்தில் அடையும் இன்னல்களும் நாவலில் துயரம் தோய்ந்த கவி மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன.4

கோட்டை இடிக்கப்பட்டதோடு மதுரையின் உச்சம் முடிவடைகிறது. ஆக முன்பகுதியின் கதை மதுரைக் கோட்டையின் வரலாறாக இருப்பது தவிர்க்க முடியாதவாறு அமைந்துவிடுகிறது. கண்ணகியின் திருகி எறியப்பட்ட முலையிலிருந்து எழுந்த கனலில் எரிந்த மதுரை, ஒருவகையில் கனல் ஆறாததாகவே என்றும் இருந்திருப்பதாகப் படுகிறது. அதன் வசந்தங்களைவிட கோடைகளே அதிகமென்பதுதான் வரலாற்று உண்மையும். முகமதிய ஆட்சியும், பின்னர் விஜயநகர ஆட்சியும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியும், பிறகு ஆங்கிகலேய ஆட்சியுமாக அது கண்ட கோடைகள் கணக்கிலடங்காதவைதான். ‘மதுரையில் பிறந்த என்னாலேயே மதுரையை நாவலில் காணமுடியவில்லை’யென்று பிரலாபித்தார் ஒரு வாசகர். அன்பரே ‘காவல்கோட்டம்’ மதுரையின் கதையே எனினும் அதன் உடலின் கதையல்ல அது, மாறாக அதன் ஜீவனின் கதையேயாகும் என்பதே அதற்கான சரியான பதிலாகும்.

எனின் இது மதுரையின் கதை மட்டும்தானா? இது தாதனூரின் கதையும் ஆகும்தான். மதுரையும் தாதனூரும் பிரிக்கக்கூடியவையல்ல. ஒன்றின்மேலொன்று ஆதாரங்கொண்டிருப்பவை. மதுரையின் காவலுக்கும் சட்டம் நீதி ஒழுங்குகளுக்குமாக பொலிஸ்படை நிறுவப்படுவதிலிருந்து அதுவரை மதுரையின் காவல் ஆதாரமாகவிருந்த கள்ளர் சமூகம் முக்கியத்துவம் இழக்கிறது. அவர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்மூலம் ஒடுக்கப்படுகிறார்கள். மதுரை வரலாறு நெடுக நடந்த போர்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கள்ளர்கள் அடைந்த இன்னலும், உயிரிழப்பும்போல் எப்போதும் ஓர் இன்னலோ உயிரிழப்போ நடைபெறவில்லை என்று கூறுமளவிற்கு அவை இருந்திருக்கின்றன.

இவ்வாறு பார்க்கையில் மதுரைக் கோட்டையின் அழிப்பு முடிய தொடங்குவது தாதனூர் அழிப்பு என்றாலும் பொருந்தும்.

புனைவும் வரலாறுமாக ‘காவல் கோட்டம்’ எதை ஸ்தாபிக்க முயல்கிறது? வெறும் நாவல் என்ற இலக்கிய வகைமையினை மட்டும்தானா?5


நாவலின் ஏறக்குறைய ஒரு முந்நூறு ஆண்டுக்கால வரலாற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் நமக்கு ஓர் உண்மை தெரியவரும். வரலாற்று நாவலின் வரவு ஆரம்ப காலங்களில் ரொமான்ரிஸ தன்மை வாய்ந்ததாகவே இருந்திருக்கிறது. அது பல்வேறு கிளைகளை எடுத்தது பின்னாளில். மிகப் பிந்திய காலத்தில் அதன் வகையிமொன்றின் வருகைதான் மாற்று வரலாற்றுப் புதினம் என்பது. Alternate historical novel என்று அதை ஆங்கில நாவல் வகைப்பாடு செய்துநிற்கிறது. அந்த வகையான நாவலுக்கு தமிழில் உடனடியாகச் சொல்லக்கூடிய ஆதாரமெதுவும் நம்மிடம் இல்லை. அந்தவகையில் தமிழ்ப் பரப்பு பெருமைகொள்ளக்கூடிய ஒரே நாவல் ‘காவல்கோட்டம்’தான்.

வரலாறு என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறோம்? சொல்லப்பட்டிருப்பது வரலாறு என்பதாக மட்டும்தானே? அது யாரினது வரலாறாக இருக்கிறது என்பதை யோசிக்க நம்மில் பலபேருக்கு வாய்த்ததில்லை. உண்மையில் அது அதை எழுதியவன் பார்வையிலுள்ள வரலாறாக இருக்கிறது. அவனது பார்வையை அவன் வாழ்ந்த சமூகமும், அந்தச் சமூகம் அறிவாய்ச் சேகரித்து வைத்திருக்கும் கல்வியும் உருவாக்கியதாகத்தானே கொள்ளமுடியும்? ஆக, அதை உண்மை வரலாறு என எப்படிக் கூறிவிட முடியும்?

கதைகளில், அனுபவங்கள் உறைந்துள்ள கிராமியப் பாடல்களில் விடுபட்டதும், மறைக்கப்பட்டதுமான வரலாறு மறைந்திருக்கிறது. அதை வெளிச்சமிட்டுக் காட்டுவது மாற்று வரலாறு. அதை நாவலில் சொல்லிவிட்டால் அதுவே மாற்று வரலாற்று நாவல். ‘காவல்கோட்டம்’ மறைக்கப்பட்டதும், திரிக்கப்பட்டதுமான வரலாற்றை கண்டடைய முனைந்திருக்கிறது. அதுவே அதன் தனித்தன்மை. அதில் அது தனி முத்திரை பொறித்திருக்கிறது. அதுவே முதன் முத்திரையாகவும் இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு.

00000


காலம் -36, Dec.2010

Saturday, December 11, 2010

தேவகாந்தன் பக்கம் 2

தேவகாந்தன் பக்கம்
இரண்டு கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், தன்பால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது.

சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், தன்பால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே.
கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது.

நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவிடுமோ என ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தயக்கம். இது கருத்து மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கான கருத்துப் பலஹீனத்தின்பாற்பட்டதல்ல. மாறாக, கருத்தை வெளிப்படுத்துவதிலான சுயகட்டுப்பாடு, தார்மீகக் கடமைகளின்பாற்பட்டது மட்டுமே. ஆனால், கூட்டங்களுக்கே நான் செல்லாதிருந்ததால், அந்தத் தயக்கம் வெகுநேரம் நீடிக்கவில்லை. ஒன்றின் எதிர்வினையாக இது இல்லை. என் கருத்து சுயமானது. தற்செயலாக அங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிரானதாக இருப்பின் அது எதிர்பாராதவிதமானது.

இதுபற்றி, நான் எதையாவது எழுத ஆரம்பிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். வாலைவிட்டு தும்பைப் பிடிக்கிற கதையாக எதுவும் வெடித்தெழுந்துவிடக்கூடாது என்பதால் நான் கொஞ்சம் இயல்பாகவே முன்யோசனைக்காரன். விளிம்புநிலை மக்களான இவர்கள்மீது என் சார்பும் அக்கறையும் நிச்சயமானது. தீவிரமானது. இவற்றை மீறி இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்நிலைமையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கிறது.

இந்த அதிர்வு என் இளமைக் காலம் முதல் என்னைத் தொடர்ந்து வந்திருப்பதாக வேறு எண்ணமெழுந்திருக்கிறது. ஜோன் லெனான் என்ற எனக்குப் பிடித்தமான ஒரு பொப் பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த கணத்தில் ஏற்பட்டதைவிட, அவர் ஓர் இருபாற் புணர்ச்சியாளர் என்பதை அறிந்தபோது நான் அதிகமாக அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் அவரது பாடல்கள்மீதான பிடித்தம் நாளடைவில் திரும்பவே என்னை வந்தடைந்திருக்கின்றன.
எனக்குப் பிடித்தமான பழைய ஆங்கிலப் பாடல்களில் ‘I love you more than Ican say’ என்ற லியோ சேயரின் பாடலும் ஒன்று. லியோ சேயர், காதலின் நுண்மையின் ரகசியக் கூறுகளை அந்த ஒரு பாடலிலேயே வெளிப்படுத்திவிட்டதாக நான் பரவசம் கொண்டிருந்தேன். அதனாலேயே லியோ சேயர் ஒரு கதாநாயகப் பாடகன் நிலைக்கும் உயர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு தற்பாற் புணர்ச்சியாளர் என அறிந்த கணமே நான் அளித்திருந்த அந்த உயர்ந்தபீடம் அரை நொடியில் சிதறிப்போனது.

ஆனால் இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஆங்கிலப் பாடல்களில் வெளிப்படுத்த முடியாத காதலின் வலியைச் சொல்லும் பாடலாக அதுவே நின்றுகொண்டிருக்கிறது. கெனி றோஜர்ஸ{க்கு ஈடாக லியோ சேயரும் என் மனத் தவிசில் இருந்துகொண்டிருக்கிறார்தான்.
இந்த அனுதாபங்களும் பிடித்தங்களும் என் கருத்துநிலை சார்ந்தவை என்றபோதிலும், இது தனிமனிதப் பிரச்சினை மட்டுமில்லை, சமூகப் பிரச்சினையும்தான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள்போல தற்பாற் புணர்ச்சியாளர்களை எளிதில் என்னால் வரவேற்றுவிட முடியாதிருக்கிறது. அது ஒரு தனி மனித பிரச்சினையே எனினும், அதையும் மீறி அது ஒரு தனிமனித வக்கிர நிலையை அடைந்து வருவதால், இது சமூகப் பிரச்சினையும்தான்; ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.

தனிமனிதனா, சமூகமா என்ற ஒரு கேள்வி வருகிறபோது என்னால் சமூகத்தின் சார்பாகவே பேச முடியும்.

ஒவ்வொரு சமூக மாற்றமும் அதன் முந்திய சமூக அமைப்பைவிட முற்போக்கானதுதான். நிலப்பிரபுத்துவ சமூகத்தைவிட முதலாளித்துவ சமூகம் முற்போக்கானதென்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. ஆனாலும் முதலாளிய சமூகம் அதனளவில் தன் குறைகளையும் கொண்டேதான் இருக்கிறது. அதனுடைய மூச்சு தனிமனிதத்துவமாகும். அதிலிருந்தே தன் பிராணவாயுவை அது பெற்றுக்கொண்டிருக்கிறது. ரத்தம் சுத்திகரிப்பாகிறது. தீங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் அம்சமாக இருந்த கூட்டுக் குடும்ப வாழ்முறை முதலாளியத்தின் வருகையோடுதான் சிதறியது. அது நல்லது. முன்னேற்றமானதும்கூட. ஆனாலும் தனிக் குடும்ப வாழ்முறைக்கான அதி உச்சபட்ச விதிகளை வகுத்தது மேலைத் தேசம். இன்று தற்பாற் புணர்ச்சியையும் அது தனிமனித சுதந்திரமென்கிற திரையின் பின்னணியாகவே முன்மொழிகிறது.

தற்பாற் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவதானது கனடா. அது நல்லது. அந்தளவுதான் அந்த விவகாரத்தில். சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்லவேண்டியதில்லை. அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம்மட்டுமாக எடுத்துக்கொண்டு ஒதுக்கிவைப்பதுதான் விவேகம்.
ஆனால் அதை ஒரு வாழ்முறையின் அம்சமாகப் பிரச்சாரப்படுத்துவதுபோன்ற எந்த முயற்சியையும் எதிர்ப்பதைவிட இதில் ஒரு ஜனநாயக முற்போக்குவாதிக்கு வேறு வழியில்லை.

அது விபச்சாரம்போல் மிகப் புராதனமானது. சுயவின்பத் திருப்திப்படுதல்போல் உயிரின இயல்பானது. ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக அநீதியின் கூறு ஒட்டிக்கொண்டிருக்கும். சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும். தன்பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின் கூறுமட்டுமே காணக்கிடக்கும்.
வெற்றிலை, புகையிலை, கள்ளு வரைக்கும் விகல்பம். கஞ்சாவும் அபினும் இடைநிலை. மறுப்பதற்கும் ஒத்துக்கொள்வதற்குமான நிலை. அதுபோல் கொக்ஹெயினும், ஹெராயினும் கருதப்படுவதில்லை.

அடைக்கப்பட்ட, அடக்கப்பட்ட மனித இச்சையின் எறியத்தில் வளர்ந்து படர்வது சுயஇன்பமும், தன்பாற் புணர்ச்சியும். எனினும்தான் அதை அந்தளவில் வைத்து புரிதலை வளர்க்க மட்டுமே ஒரு சமூகவியலாளன் செய்ய முடியும். இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொதுஜனத்துக்கு எப்போதும் உரிமை உண்டு.
000

Thursday, December 02, 2010

தேவகாந்தன் பக்கம் 1

தேவகாந்தன் பக்கம்
ஒன்று


‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’ வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன.

சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன.

தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு.

ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன.

இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன்.

விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவர்கள் குறித்து நான் கௌரவமாக எழுதவில்லையென்று குறைப்பட்டார். விலைமாதர், குற்றவாளிகள், மனநிலை பிறழ்ந்தோர் ஆகியோர் மீதெல்லாம் எனக்கு மிகுந்த கரிசனம் உண்டு என்றும், அவர்களை அவ்வாறு ஆக்கிய சமூகத்தின் மீதுதான் என் கோபமென்றும் அவருக்கு விளக்க நான் அதிகமாகவே பிரயாசையெடுக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்ச்சியான தருணம். இதேபோல் பல்வேறு நேரடி, தொலைபேசிப் பாராட்டுதல்களுக்கும் காரணமாயமைந்த ‘தாய்வீடு’ பத்திரிகைக்கு என் நன்றிகளை இவ்வேளை நான் தெரிவித்தே ஆகவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், வெகுஜனப் பரப்பை நோக்கி என் எழுத்துக்கள் நகர்கின்றனவா என்றொரு கேள்வியும் என்னுள் எழவே செய்தது. சுவாரஸ்யத்துக்காக எழுத்தை மலினப்படுத்தும் வகையில் என்றும் என் பேனா (இப்பொழுது கணினி) எழுதியதில்லை. அதற்கெதிரான சிறுபத்திரிகை இயக்கத்துள்ளிருந்து வளர்ந்தவன் நான். இன்றும் கூடுதலான தொடர்புகளோடு இருப்பவன். ஆயினும் வெகுவான ஜனப் பரப்பை ஈர்க்கின்ற படைப்பு மலினமானதாக இருக்கவேண்டியதில்லை, அது படைப்பின் வலிமையால் நேர்ந்ததாகக்கூட இருக்கலாம் என பின்னர் நான் தெளிவுகொண்டேன்.

ஆரம்பத்தில் ‘கலாபன் கதை’போன்ற ஒரு முழுக் கதையளவாகும் படைப்பைத் தருவதே என் எண்ணமாகவிருந்தது. ஆனால் மனத்தில் முட்டிமோதும் கருத்துக்கள் உங்களை வந்தடைந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான பக்க எழுத்தை ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவு மாதங்கள் செல்லக்கூடுமோ? ஆனாலும் தகுந்த ஒரு சமயத்தில் தொடர் நாவலோடு உங்களைச் சந்திப்பேன்.

இதில் எடுத்துரைக்கப்பட இருப்பவை காரசாரமானவையாக இல்லாவிட்டாலும், சாரமான விஷயங்களாக இருக்குமென்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். நம் உயிர் பிடித்து உலுப்பும் எத்தனையோ பிரச்சினைகள் கண்ணெதிரில் உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் உண்மை முகம் தெரிந்தாகவேண்டும் எமக்கு.

000

அடுத்த ஆண்டு தை மாதத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கிறது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. ஒரு அலையாக எழுந்த அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஓரளவு இப்பொழுது அடங்கியிருப்பதாகச் சொல்லலாம். இதுபற்றிய எனது கருத்தினை வேறுநாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாள நண்பர் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். நானும் மறைக்காமல் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அதை அவர்கள் விரும்பவில்லையெனத் தெரிகிறது. அதற்கு நானென்ன செய்யட்டும்?

ஓரளவு அடங்கியுள்ள இப் பிரச்சினை மார்கழி அல்லது தை மாதமளவில், அதாவது மாநாடு தொடங்குகிற காலமளவில், இன்னும் கூடுதலான உக்கிரம் பெறவே வாய்ப்பிருக்கிறது. லும்பினி இணைய தளத்தில் ஷோபா சக்தியினால் செய்யப்பட்ட லெ.முருகபூபதியின் நேர்காணல், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதை எதிர்ப்போரின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்வளவு தெளிவுபூர்வமான நேர்காணல் அது. ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்களின் குணவியல்புகளை வைத்துப் பார்க்கையில், அவ்வாறு நம்ப ஏது எதுவுமில்லை.

ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா, போரினால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் பகுதிக்குச் சென்று பார்வையிட முடியுமா என்று உப்புச் சப்பற்ற கேள்விகள் மாநாட்டை எதிர்ப்போரினால் கேட்கப்பட்டிருந்தன. இனவெறி பிடித்த ராஜபக்ஷ அரசாங்கம், அதைத் தன் கடந்த கால போர்க் குற்றச் செயல்களினை மறக்கடித்து, விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் வெகுஜனங்களின்மீது தனக்கு எந்தவிதமான மாறுபாடுமில்லையென்பதை சர்வதேச சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடுமைகள் தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட பின்னரும் அதைத் தடுக்க ஒரு புல்லைக்கூடக் கிள்ளிப்போடாத தமிழக முதல்வர் கருணாநிதியை உலகத் தலைவர், செம்மொழியாம் தமிழை வளர்க்க அவதாரமெடுத்தவர் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டியதுபோன்று துதிபாட யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. செம்மொழி மாநாட்டில் புகழ்பாட முந்தி நின்றவர்களே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒதுங்கிக்கொண்டது துர்ப்பாக்கியமானது.

உலகத் தமிழர் மாநாடு முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்கான கண்டன மாநாடாகக் கூட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல விஷயங்கள் தாமாகப் புரிந்து போய்விடக் கூடியவை.
செல்பவர்கள் எழுத்தாளர்கள். தமது படைப்பையோ, கருத்துச் சார்ந்த படைப்பையோ, அது குறித்த வளர்ச்சி மாற்றம் பற்றிய கருத்துக்களையோ மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் ராஜபக்ஷ அரசுக்கெதிராக இதுவரை முன்மொழியாத எந்தக் கருத்தை மாநாட்டில் முன்வைத்துவிடப் போகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் என் சரீரமும், மனமும் சேர்ந்து பதறிய கொடுமையானது. எனினும் சரியாக முன்னெடுக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் ஒரு யுத்தத்தை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஆனாலும் இலங்கைத் தேசம் இன்னமும் எனது மண் என்ற மனோவுணர்வே இன்றும் என்னுள்ளிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்ற ஆரம்ப வகுப்புகளின் பாடம் என் மனத்தில் இன்னுமிருந்து அசைவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த யுத்த முடிவுக்குப் பின் இன்றுவரை இரண்டு லட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. அந்த இரண்டு லட்சம் பேரும், யுத்தம் நடந்த பூமி எவ்வாறு இருக்கிறது என்று விடுப்புப் பார்க்கப் போனார்களென யாராவது சொல்ல முடியுமா?

சொந்த மண்ணின் ஈர்ப்பு அது. மண்ணோடு மனிதர்களுக்கு உண்டாகும் பந்தத்தின் விசை. இதை விளங்கிக் கொண்டால் கொழும்பில் மாநாடு நடைபெறுவதையும் இந்தத் தளத்தில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு சர்வ தேச மாநாட்டினை கொழும்பில் நடத்துவதென்பது அந்த மண்ணில் எதை நடாத்துவதுக்கும் எமக்குள்ள உரிமையின் வெளிப்பாடு. இந்த உரிமையை எந்தச் சிங்கள பேரினவாத அரசுக்காகவும் எம்மால் விட்டுக்கொடுத்துவிட முடியாது.

எவ்வளவு கொடுமையான, சர்வாதிகாரமான ஆட்சி அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அது எனது மண். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண். நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடித் திரிந்த பூமி. எண்ணும் எழுத்தும் கற்றுணர்ந்த நிலம்.

‘எங்கும் ஒலிக்கிறது காற்று ….எனது நிலம்….எனது நிலம்!’ இவை கவிஞர் சேரனின் கவிதை வரிகள். இந்த ஒலிப்பின் ஆவேசத்திலிருந்து பெரும்பாலும் எவரும்தான் தப்பிவிட முடியாது. என்னால் தப்ப முடியவில்லை. அப்படிப் பார்க்கையில், எனது கருத்துக்களும் அதற்கு இயையவே இருக்கமுடியும். மாநாடு குறித்தாயினும் சரி, எமது இருத்தல் சார்ந்த வேறு எந்த விஷயமானாலும் சரி.

00000

தாய்வீடு, நவ .2010


Sunday, October 10, 2010

கலாபன் கதை: 14


காணாமல் போன கடலோடி


கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் இல்லாததுபோல கலாபன் வேலையற்றிருந்த காலம் அந்தமுறைதான் அதிகமாகவிருந்தது. கடைசிக் கப்பலை விட்டுவந்து ஏழெட்டு மாதங்களாகியிருந்தன. அந்தக் கால இடையில் கொழும்புசெல்லும் வழியில் இரண்டு தடவைகள் திருமலை வந்து ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கிச் சென்றிருந்தான்.

அவனது தங்குகைகள் முன்னர்போல் அட்டகாசமாக இருக்கவில்லையென்பதில் அதிசயப்பட ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் மனச்சோர்வுகளும், மன வேக்காடுகளும் அற்று தன்னிலைமையை உள்வாங்கிக்கொண்ட நிறைவோடுதான் அவன் இருந்திருந்தான். வெளித்தோற்றம் இன்னும் போன கிழமை கப்பலைவிட்டு வந்தவன்போல்தான் இருந்தது. அதேயளவு நீளமாக இல்லையெனினும் தலைமயிரை நீளமாகவே விட்டிருந்தான். உடை வி~யங்களிலும் குறைசொல்ல முடியாதேயிருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்பானால் ஒரு கடலோடியைப் பார்வையிலேயே இனங்கண்டுகொண்டுவிட முடியும். நீளமான தலைமயிர், வெளிநாட்டு உடை, குறிப்பாக லிவைஸ் அல்லது றாங்க்ளர் பான்ட், அடிடாஸ் சப்பாத்துக்களிலிருந்து அதைச் சுலபமாகக் காணமுடிந்தது. ஆனால் நிலைமை பின்னர் அந்தமாதிரி இல்லை. இலங்கையே சுதந்திர வர்த்தக வலயமாகியிருந்தமையும், மக்களின் அயல்நாட்டு பயணங்களும் நிறைய வெளிநாட்டு உடைகளையும், வாசனைத் திரவியங்ளையும் உள்நாட்டில் தாராளமாகவே உள்ளோட விட்டிருந்தன. குடிப்பது கூழ், கொப்புளிப்பது பன்னீர் என்ற கணக்கில்தான் கலாபனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.

பதின்னான்கு ஆண்டுகள் என்பது இதிகாசரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. இராமாயண காவியத்தில் இராமன் பதின்னான்கு ஆண்டுகள் காடு செல்லவேண்டும் என்றுதான் கைகேயி தசரதனிடம் வரம் கேட்கிறாள். அது ஏன் பத்தாண்டுகளாக இல்லை, ஏன் பதினைந்து ஆண்டுகளாக இல்லையென அது பதின்னான்காக இருந்தது குறித்து எனக்குள் கேள்வியிருந்தது. அதற்கான விடையை ஓர் இலக்கியக் கூட்டத்தில்தான் நான் அடைந்திருந்தேன்.

ஏழாண்டுகள் என்பது ஒரு வட்டம். கால எல்லை. இரண்டு வட்டங்கள் ராமன் காடேகுதல் வேண்டும் என்னும்போது, அந்த இரண்டு வட்ட காலமான பதின்னான்கு ஆண்டுகளில் தனது மூலம், தன் பழைய வாழ்க்கை ஞாபகங்களையெல்லாம் இழந்து, ஒருவன் தன் புதிய சூழ்நிலைமைக்குள் அடங்கிவிடக்கூடியதாக இருக்கும் மனித மனப்பாடு காரணமாக ராமன் பதின்னான்காண்டுகள் வனவாசம் செய்யவேண்டுமென கைகேயி வரம் கேட்டாள் என அந்த இலக்கிய உரைகாரர் சொன்னது இன்றும் எனக்கு ஞாபகத்தில் உண்டு.

எனது அப்பப்பா தன் இளமைக் காலத்தில் மேற்குக் கரைவழிப் பாதை வழியே சிலாபம்வரை நடந்து சென்றுதான் தொழில் புரிந்திருக்கிறார். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முத்துக் குளிப்பு அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாய் இருந்தது. மிகுந்த உழைப்புத் திறனைக் காட்டினாரெனவும், தொழிலின் நுட்பம் தெரிந்திருந்தாரெனவும் அவருக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது முத்துச் சலாபங்களில். முத்து களவெடுத்து முதன்முறை பிரம்படி தண்டனையாகப் பெற்ற ஒரு வேலையாள், மறுமுறை முத்து களவெடுத்ததுமல்லாமல், அதைத் தடுக்கச்சென்ற காவலாளியையும் தாக்கிக் காயப்படுத்தினானென அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததாம் அரசு. தண்டனை விதிக்கப்பட்டவுடன், ‘பூ இவ்வளவுதானா, இந்தா பதின்னாலு வருசத்தில திரும்பி வருவன், வந்து உன்னை ஒருகை பாக்காமல் விடமாட்டன்’ என்று தன் மீசையில் கைபோட்டு தன்னைக் காட்டிக்கொடுத்தவனைப் பார்த்து வெஞ்சினம் கூறியதை, நிலா விழும் மணல் முற்றத்தில் கள் போதையேறி பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்கையில் அப்பப்பா அபிநயித்ததுகூட இன்னும் எனக்கு மறக்காமலே இருக்கிறது.

ஆயுள் தண்டனைக் காலம் அப்போதும் இருபது ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. அதில் கழிவுகள் போக அனுபவிக்கவேண்டிய தண்டனைக் காலம் பதின்னான்காக இருந்தது. இந்தக் கணக்கான பதின்னான்கா, அல்லது இலக்கியவுரைகாரர் சொன்ன இரண்டு வட்டக் கணக்கான பதின்னான்கா என எனக்குள் அப்போதும் ஓடியதுதான் ஓர் ஐயம்.

எப்படியோ பதின்னான்கு வருடங்கள் என்பது இயல்புநிலை திரிபடைவதற்கான அல்லது மாறுவதற்கான ஓர் ஆகக்குறைந்த எல்லையென்பது ஏற்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்தப் பதின்னான்குதான் கலாபனுக்கும் வந்தது. 1974 தொடங்கி அன்றைய 1988வரையில் அவனது கப்பல்தொழில் காலம் பதின்னான்கு ஆண்டுகளைப் பூர்த்தியாக்கியிருந்தது. இருந்தும் கலாபனது வாழ்நிலையில் ஓர் இம்மியளவு மாற்றத்தை அம் மாபெரும் காலம் ஏற்படுத்தவேயில்லை. ஒரு பெரிய வீட்டைக் கட்டி வைத்துக்கொண்டும், ஓர் ஆணும் இரண்டு பெண்களுமாக மூன்று குழந்தைகளுடன், அவ்வப்போது எது காரணத்தாலோ மனைவியுடனான சண்டையில் அவளாக ஓடிப்போகவுமோ அல்லது அடித்துக் துரத்தவுமோ செய்துகொண்டும், இருந்தால் கூத்து, இல்லாவிட்டால் முடக்கமெனக் காலத்தைக் கடத்திக்கொண்டும் இருந்தான்.

கப்பல் வழக்கு கைவிடப்பட்டமை பெரிய பாதிப்பை அவனில் செய்திருக்கவேண்டுமென்றே கருதவேண்டியிருந்தது. என்னுடன் தங்கிய நாட்களில் அதுபற்றி அவன் அதிகமாகவும் கதைத்திருந்தான். ‘விடு, உழைத்த காசே மிஞ்சேல்லை, இனி உதே வந்து நான் நல்லாயிருக்கப் போறன்’ என்று அந்தப் பேச்சினை முடிக்கும் ஒவ்வொரு தடவையும் அவன் சொல்லியிருந்தபோதும், அப்படியேதாவது நடந்து கையிலே கொஞ்சம் பணம் வந்துவிடக்கூடாதா என அவன் நப்பாசைப் பட்டிருப்பான்தான். எப்போதும் இருந்திருக்காவிட்டாலும், போதையற்ற தருணங்களிலாவது அவ்வாறு அவன் இருந்திருக்க முடியும்.

நண்பனானதாலேயே அவனது வாழ்வில் நேர்ந்த பரிதாபங்கள் எனது சொந்த வாழ்க்கைக்கு நேர்ந்தவையான வருத்தத்தை நான் அடைவது தவிர்க்க முடியாததாகப் போனது. இருவரும் உள்ளுள்ளாயே வேகிக்கொண்டிருந்தோம். காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

000

கலாபன் எம்.வி.கதரினா என்ற அந்தக் கப்பலின் எந்திர அறைக்குள் பாய்ச்சப்பட்ட மின்கல விளக்கின் ஒளியில் தன் முதல் பார்வையை வீசிய தருணத்திலேயே கப்பல் இனி கடலோட்டத்துக்கு தகுதியற்றது என்பதை உணர்ந்துகொண்டான். மின்சார விநியோகத்துக்கான இயந்திரங்கள்கூட நிறுத்தப்பட்டு இருள்வெள்ளத்தில் மூழ்கியிருந்தது கப்பல். நிறைந்து விழுந்துகிடந்த நிசப்தத்துள் நீரொழுக்குகளின் சட்…சள…ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. பராமரிப்பற்றிருந்ததின், அல்லது திட்டமான செயல்கள் மூலம் அது சீரழிக்கட்டிருந்ததின் அடையாளம் அது.

ஆனாலும் அவனது வேலை கப்பலை ஓடவைப்பது இல்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கப்பலில் லண்டன் கொம்பனிக்கான சரக்குகளை வேறொரு கப்பலுக்கு மாற்றி ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதே. சரக்கை எடுத்து மற்றைய கப்பலில் ஏற்றுவதற்கு பாரந் தூக்கிகளும், அவைக்கான மின்சாரத்துக்காக மின்விநியோக இயந்திரங்களும் சில வாரங்களுக்கு செயல்படக்கூடிய நிலைமையிலிருந்தால் அவனுக்குப் போதுமானது. அதையே அவன் கவனிக்கவேண்டியவனாயிருந்தான்.

கொழும்பு சிலிங்கோ கோபுரத்திலுள்ள ஞானக்கோன் சிப்பிங் ஏஜன்சியில் அன்று காலை நேர்முகப் பரீட்சைக்காக அமர்ந்திருந்தபோதிலேயே எம்.வி.கதரினாவின் முழுக் கதையும் கலாபனுக்குத் தெரிந்துவிட்டது. அந்த ஏஜன்சியில் கப்பல் பொறியாளனாக வேலைசெய்த ஒரு நண்பனின் அழைப்பிலேயே அன்றைய காலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்தான் அவன். அது இரண்டு மூன்று மாதங்களுக்கு நாளாந்த சம்பளத்தில் கப்பலிலேயே இருந்து செய்கிறவேலைதானென்று அவனது நண்பன் சொல்லியே அவனை அவசரமாக அழைத்திருந்தான். ஆனாலும் கப்பல் எதற்காக கட்டப்பட்டிருக்கிறது, கப்பலில் அவனுக்கான வேலை என்ன என்பனவொன்றும் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
கப்பலின் கடலோட்டத் தகுதிச் சான்றிதழின் காலாவதி, சில இயந்திரப் பழுதுகள் காரணங்களாக சில கப்பல்கள் துறைமுகங்களில் தடுத்துவைக்கப்படுவதை அறிந்திருந்த வகையில் அவன் அதிகமாக அதுபற்றி சிந்திக்காமலேதான் வந்திருந்தான். எப்படியும் இருபத்தையாயிரம் ரூபாவாவது கிடைக்கும். அது அப்போதைக்கு அவனுக்குப் போதும். துறைமுகத்தில் நிற்கையிலேயே வேறு சந்தர்ப்பங்களுக்காகவும் முயன்று கொள்ளலாம்.
ஏஜன்சி அலுவலகம் வந்த பின்னர்தான் அக் கப்பலில் வேறுவேறு வேலைகளுக்காகவும் நேர்காணலுக்கு வந்திருந்த மற்றக் கடலோடிகள் மூலமாக அவனுக்கு முழு விபரமும் தெரியவந்தது.

கப்பல் மாலைதீவிலிருந்து இந்தோனிசியாவுக்குச் செல்கையிலேயே கடலோடிகளிடையே அதிருப்தி நிலவியிருந்திருக்கிறது. உணவு சரியில்லை, கட்டுப்பாடான நீர்விநியோகம், மற்றும் சம்பள நிலுவையென்று மாலுமிகள் ஒரு பொங்குநிலையில் இருந்திருக்கிறார்கள். அவனறிந்தவரையில் மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படாமலிருந்திருக்கிறது. அவர்களின் முறைப்பாடு இந்தோனிசிய துறைமுக அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்தோனிசியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் கராச்சிக்குச் செல்லும் வழியில் கொழும்பு வந்திருக்கிறது. கடலோடிகளின் முறையீடு கப்பலை உள்துறைமுகத்துள் கட்டும்படி ஆக்கியிருக்கிறது. கடலோடிகளுக்கும் கப்பல் கொம்பனிக்குமிடையிலான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடப்பிலிருந்தது. அதனால் சாமானேற்றி அனுப்பிய லண்டன் கொம்பனி தனது சாமான்களை விடுவிக்க நீதிமன்ற ஆணை பெற்று அதற்கான வேலைகளுக்காக ஞானக்கோன் ஏஜன்சியை அணுகியிருக்கிறது. அந்தத் திகதியிலிருந்து லண்டன் கொம்பனி ஏற்பாடுசெய்யும் கப்பல் கொழும்பு வந்து அதில் எம்.வி.கதரினாவிலுள்ள சாமான்கள் மாற்றி ஏற்றப்படும்வரையான பொறுப்பு ஞானக்கோன் ஏஜன்சிக்கானது.

ஏஜன்சியில் அவனது வேலைத் திறமைக்கு உத்தரவாதம் வேண்டியிருக்கவில்லை. ஆனால் நேர்காணலை நடத்தியவர் அவனிடம் எதிர்பார்த்தது, அந்த வேலை முடியும்வரை அவன் வேறு வேலைகளை ஏற்கக்கூடாதென்பதைத்தான். அதிலுள்ள நியாயத்திலேயே தன் வாக்குறுதியை தயக்கமின்றி அளித்தான் கலாபன்.

அந்தக் கப்பலின் மேல்தள வேலைகளுக்காக நான்கு பேரும், இயந்திர அறை
வேலைகளுக்காக நான்கு பேரும் கலாபனின் பொறுப்பில் அன்றைக்கு வேலைக்கு வந்திருந்தனர். கூட ஏஜன்சியிலிருந்து நான்கு பேர். அதில் அவனது கப்பற் பொறியாள நண்பனும் ஒருவன்.

கலாபன் முதலில் மின்விநியோக இயந்திரத்தினை பரீட்சித்த பின்னர் காற்றழுத்த தாங்கியைச் சென்று பார்த்தான். அதன் ஆகக்கூடிய அழுத்தம் அடி சதுரத்துக்கு முப்பது றாத்தலாக இருந்தும், அப்போது பதினைந்து பதினாறாகவே இருந்துகொண்டிருந்தது. அது அந்த சிறிய மின்னுற்பத்தி இயந்திரத்தை இயங்கவைக்க போதுமானதுதான்.
மின்னொளி பரவவைக்கப்பட்டது. அதன் பின் பாரந் தூக்கிகளையும் சென்று பார்த்து வந்தான். அந்த நிலபரமே தொடருமானால் சாமான்களை இறக்கிக்கொடுத்துவிட சுலபமாக அவனால் முடிந்துவிடும்.

ஒரு மாத முடிவில்தான் எம்.வி.கதரினாவிலிருந்து சாமான்களை எடுக்கவிருந்த கப்பல் கொழும்பு வந்து சேர்ந்தது. அதன் பின்னரும் வேலை தொடங்க மூன்று கிழமைகளுக்கு மேலாயிற்று. அப்போது துறைமுகத் தொழிலாளரின் உற்சாகமற்ற வேலையில் மெதுமெதுவாக வேலை தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு கிழமையும் திங்களில் சென்று ஏஜன்சியின் அலுவலகத்தில் தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டான் கலாபன். நாளொன்றுக்கு சம்பளமாக முந்நூறு ரூபாவும், சாப்பாட்டுக்காக நூறு ரூபாவும் கிடைத்தது. கப்பலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கப்பலுக்கும் எந்நேரத்திலும் சென்றுவருவதற்கான கூலியை ஏஜன்சியே செலுத்தியது.
அந்த நேரத்தில்தான் கப்ரன் என்ற சாராயம் அறிமுகத்துக்கு வந்திருந்தது. எண்பது ரூபா ஒரு போத்தல். றொக்லாண்ட், மென்டிஸ் ஸ்பெ~ல் சாராயங்களைவிட அது அவனுக்குப் பிடித்திருந்தது. கப்பலுக்கே பொறுப்பாக இருந்ததனால் மிதமாகவே குடித்துக்கொண்டான். வேலைக்குச் சேர்ந்த மறு மாதத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து மனைவி பிள்ளைகளை அழைப்பித்து கப்பலுக்கு கூட்டிச்சென்று காட்டினான். அவர்களும் நியூ கொலனியல் ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கிநின்று சந்தோ~மாகத் திரும்பினர்.
சாமான்களை இறக்கும் வேலை இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது. எம்.வி.கதரினாவுக்கு பக்கத்தில் அடிக்கப்பெற்றிருந்த கப்பலின் மூன்றாம் நிலைப்பொறியாளன் நன்கு பழக்கமாகியிருந்தான் கலாபனுக்கு. ஒரு மாலையில் இயந்திர அறையில் வேலையாயிருந்த கடலோடியிடம் தான் அடுத்த கப்பலின் மூன்றாம் நிலைப் பொறியாளனது அறைக்குச் செல்வதாகவும், ஏதேனும் பிரச்சினையெனில் யாரையாவது அனுப்பி தன்னை அழைப்பிக்குமாறும் சொல்லிவிட்டு அடுத்த கப்பலுக்குப் போய்விட்டான் கலாபன்.
சிறிய ஒரு நட்பார்ந்த அளவளாவுகையை எண்ணியே கலாபன் சென்றிருந்தும் அறையில் சிறிய கொண்டாட்டமே தொடங்கிவிட்டது. நாலாம் நிலை, ஐந்தாம் நிலைப் பொறியாளர்களும் நேரமாக ஆக வந்து சேர்ந்துகொண்டனர். கொண்டாட்டம் அவர்களை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது.

கலாபன் தனது கப்பலுக்குத் திரும்பியபோது பத்து மணியிருக்கும்.
அறைக்குச் சென்றவனுக்கு, இரவுணவாக கொத்து ரொட்டி கட்டிவைக்கப்பட்டிருந்தும், வெளியே சென்று சாப்பிட்டு வந்தாலென்ன எனத் தோன்ற, கரையைநோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓர் இழுவைப் படகைக் கூவியழைத்து ஏறிச்சென்றான். கொலனியல் ஹோட்டல் பூட்ட இன்னும் நேரமிருந்தது. அதுவரை கொலனியல் பாரிலே குடிக்கவும் முடியும்.

மணி பன்னிரண்டானது. மனத்தில் என்ன தோன்றியதோ, அப்போதுதான் கொழும்பில் புழக்கத்துக்கு வந்திருந்த ஒரு ஆட்டோவில் ஏறி மருதானை, கொச்சிக்கடை, வெள்ளவத்தையென அலைந்தான். மறுபடி அவன் கோட்டை புகையிரத நிலையத்தடிக்கு வந்தபோது ஒன்றரை மணி.

அந்தளவில் நியூ கொலனியல் பாரும், றெஸ்ரோறன்ரும் பூட்டப்பட்டிருந்தன. புகையிரத நிலையத்துக்கு எதிர்த் தெருவில் இரண்டு ராக்சிகள் நின்றிருந்தன. என்ன கேட்டானோ, ‘இப்ப மிச்சம் நேரமாயிட்டுது, மாத்தையா’ என்ற பதில் வந்தது ராக்சி ட்ரைவரிடமிருந்து.
இன்னும் சிறிதுநேரத்தில் அடக்கத்தில் கிடக்கும் பெருநகர் அசைவுறத் தொடங்கிவிடும். துறைமுகத்துக்கு முன்னாலிருந்த கோபுர மணிக்கூடு இரண்டைக் காட்டிக்கொண்டிருந்தது. கலாபனோ உடம்பே சன்னதம் கண்டதுபோல் கோப வெறியும், சாராய வெறியுமாக நடுங்கியபடி நின்று, “ போன எந்த நாட்டிலையும், எந்த நேரத்திலையும் தேவையெண்டு நினைச்சா எடுத்துத்தான் இருக்கிறன். இது என்ரை நாடு. இஞ்சை நேரம்போட்டுது, எடுக்கேலாது எண்டு போய்ப் படுக்கிறதோ? கொழும்பிலை வேசையளுக்கும் பஞ்சம் வந்திட்டுதோ?” என்று உறுமினான்.

அவனை ஒரு கடலோடியாக இனங்காணக்கூடியதாய் இருந்தவகையில் எதுவித பிரச்சினையுமின்றி படகுத் துறையை அடைந்துவிட்டான் கலாபன். ஆனாலும் அதிகாலையில் முதல் படகிலேயே அவனால் கப்பலுக்குச் செல்ல முடிந்திருந்தது.

படுக்கையில் விழுந்தவன் மதியச் சாப்பாட்டு நேரத்துக்குத்தான் மறுபடி விழித்தான்.
அன்றிரவு போதையற்ற நிலையிலிருந்து தன் நண்பனுக்கு கடிதமெழுதினான் கலாபன். விரைவில் சரக்குகளை மாற்றி ஏற்றுகிற வேலை முடிந்துவிடுமென்றும், அப்படியே யாழ்ப்பாணம் போவதுதான் எண்ணமெனவும், அவன் ஊருக்கு வரும்போதோ அல்லது தான் திருமலை வரும்போதோ அவனிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தைத் தந்துவிடுவதாகவும் தெரிவித்தான். முதல்நாள் ஓர் இரவில்மட்டுமே தான் ஆயிரம் ரூபா செலவழித்ததை எழுதி மேலே பல்வேறு அனுபவங்களின் மொழியைச் சொல்லி முடித்தான்.

மறுநாள் கரைக்குச் சென்ற தெரிந்த ஒருவர் மூலம் தபாலையும் கட்டில் சேர்ப்பிக்க கொடுத்துவிடவும் அவன் மறக்கவில்லை.

000

கலாபன் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற கப்பலில் வேலையிலிருந்தபோது எழுதிய கடிதம் வருவதற்கு முந்திய கிழமை, கலாபனின் மனைவி மனோகரியிடமிருந்து எனக்கொரு தபால் வந்தது. ஊரிலே பரவலாக அதுமாதிரியான செய்திகள் அறியப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. எனக்கு அதிர்ச்சி இல்லையெனினும் அச்சமேற்பட்டது.

செய்தி உண்மையாக இருக்கிறபட்சத்தில் கலாபன் நிறைய இன்னல்களை எதிர்பார்க்க சாத்தியங்கள் இருந்ததாய்ப் பட்டது. இயக்கம் எதுவுமோ, அல்லது இயக்கமெதுவும் சாராத ஆயுதக் குழு ஒன்றோ ஒருநாள் மாலை அவர்கள் வீடுசென்று, கலாபன் கப்பலில் என்ஜினியராக வேலைசெய்கிறார்தானே, மாதம் மாதம் அவளுக்கு பணம் அனுப்புகிறார்தானே, ஏன் அவள் தங்கள் போராட்டத்துக்கு உதவியாக பண உதவி செய்யக்கூடாதாவெனக் கேட்டிருக்கிறது. அவளிடம் ஐம்பதாயிரம் ரூபா அடுத்த முறை வரும்போது தருவதற்குத் தயாராக இருக்கவேண்டுமெனவும், இல்லையேல் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருக்குமென எச்சரித்துச் சென்றதாகவும் வேறு எழுதியிருந்தாள்.

கமலி என்கூடவே திருமலையில் இருந்தபடியால் நேரே சென்று ஆறுதல் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்திருந்த சமயம் அது. அதனால் கடிதம் எழுதவே முடிவுசெய்தேன். தாங்கள் போராட்டத்துக்கு எதிரானவர்கள் இல்லையெனவும், கலாபன் நிறைகுடிகாரனாய்த் திரிவதால் தங்களிடம் சேமிப்பு எதுவும் இல்லையென்றும், எதற்கும் கப்பலிலிருந்து அவன் வரும்வரை அவர்களைப் பொறுத்துக்கொள்ளும்படியும் கேட்கச்சொல்லித்தான் எழுதினேன். அதைத்தவிர வேறு எதுவும் எனக்கும் அந்த நேரத்தில் மனதுக்கு வரவில்லை.

கலாபன் கப்பலிலிருந்து வீடு சென்ற பிறகு, என் அம்மாவிடமிருந்து வந்த கடிதத்தில் அவன் முன்னரைப்போலத்தான் குடியும் புறாசலுமாக அலைவதாக எழுதியிருந்தா.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. திடீரென கலாபன் அங்கே வந்தானா என மனோ விசாரிக்கச் சொன்னதாய் அம்மாவின் தொலைபேசி அலுவலகம் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். ஒருநாள் மாலை யாழ்ப்பாணம் போய் வருவதாகச் சொல்லிக்கொண்டு போன கலாபன் கடந்த நான்கைந்து நாட்களிலும்கூட வீடு திரும்பவில்லையென அம்மாவின் செய்தி தெரிவித்தது.
நானும் தெரிந்தவரையெல்லாம் விசாரிக்கத்தான் செய்தேன். ஊரிலுள்ள நண்பர்களும் எங்கெங்கோ சென்று தேடியிருக்கிறார்கள். கலாபன் அகப்படவில்லை. அவனைக் கண்டதாகக்கூட தகவல் கிடைக்கவில்லை.

அதற்கடுத்த மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சென்றேன். மனோ வீடு சென்றபோது குழந்தைகள் மூன்றும் வாடிப்போய்த் திரிந்துகொண்டிருந்தன. மனோ வாடி மெலிந்து உருக்குலைந்துபோய் நின்றிருந்தாள்.

சுடப்பட்டோ வெட்டப்பட்டோ இறந்து போன பின் சடலம் கிடைத்து அதை அடக்கம் செய்யும் வாய்ப்பிருந்தால்கூட இறப்பின் சோகம் அவ்வளவு ஆழமாய் எவரையும் வருத்தியிருக்காதென்று நினைக்கிறேன். சடலத்தைக்கூட தொலைத்துவிடுதல்தான் சோகங்களிலெல்லாம் பெரிய சோகமாய் ஆகிவிடுகிறது.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெட்டில் காணாமல் போனவன் கலாபன். தொண்ணூற்றெட்டிலும் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இரண்டாயிரத்தெட்டிலும் உறவுக் கண்கள் அவனைத் தேடவே செய்தன.

ஏதோவொரு கூட்டத்தில் ஆறடி உயரமும் அதேயளவு பருமனுமான ஓர் உருவத்தை மனோவின் கண்கள் கலாபனா அதுவென வெடித்து நோக்காமலா இருக்கும்? அது அவனில்லையெனத் திண்ணமாகிறபோது அவள் கொள்ளும் வலியை வார்த்தைகளால் விளக்கிவிட முடியுமா? பச்சை உடம்போடு அவன் பரலோகம் போய்விட்டிருந்தால்கூட கொண்டவளால் அதுமாதிரியான இழப்பை சகித்துக்கொண்டுவிட முடிவதில்லை.

கலாபன் காணாமல்போய் இன்றோடு இருபத்தோராண்டுகள் முடிவடைந்துவிட்டன. இன்றும் என் கண்களே சில கடித உறையின் எழுத்துக்களை கலாபனதாய் இனங்கண்டு ஏமாறிக்கொண்டிருக்கின்றன.

மனோ தேடிக்கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களோடு நானும். நம்பிக்கை இழந்த பின்னரும்கூட தொடர்ந்தும் தேடிக்கொண்டிருப்பதுதான் மெய்யன்பின் விதிப்பாடா?

(முற்றும்)

Saturday, July 10, 2010

‘மூன்றாம் சிலுவை’

ஒரு பாவி அறையப்படுவதிலிருந்து
விலகி ஓடிவிட்ட சிலுவை
‘மூன்றாம் சிலுவை’ நூல் குறித்து சில
விமர்சனக் குறிப்புகள்


நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித வகைமைப்பாடுகளுக்குள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகின்ற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பின் விஷயங்களே முக்கியமானவை.

இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன.

பாலியல் சார்ந்த விஷயங்களையும், பாலியல் நிகழ்வுகளையும் எழுதக்கூடாதென்பதில்லை. தமிழிலக்கியத்தின் இறுகிப்போயுள்ள மரபார்ந்த ஒவ்வொரு முறிப்பையும் கரகோஷத்தோடு வரவேற்க தீவிர வாசக உலகம் தயாராகவே இருக்கின்றது. எஸ்.பொ.வின் ‘தீ’ அப்படித்தான் வரவேற்புப் பெற்றது. ஆனால், அது ஒரு தேவையின் அளவுக்கே தொடர்ச்சியைக் கொண்டிருக்கும் என்பதிலும் அதற்கு நிறைந்த நம்பிக்கையுண்டு.

ஆனால், ‘மூன்றாம் சிலுவை’ ஒரு முறிப்பின் திட்டமிட்ட முனைப்பாகச் செயல்வடிவம் பெற்றிருப்பது தெளிவாகவே தெரிகின்றது. பெருந்திணை வகையான பொருந்தாக் காமமாக பிரபஞ்சன் தன் முன்னுரையில், இந்த மாதிரியான வயது இடைவெளி அதீதமாகவுள்ளவர்களிடையே தோன்றும் பாலியல் உறவுகளை அடையாளம் காண்பினும், இது பெருந்திணையை மீறிய வெறும் உடலுறவாகிவிடும் பெருங்காமம் வகைப்பட்டதுதான்.

வயது இடைவெளி அதிகமான உறவுகள் தமிழிலக்கியத்தில் பேசப்பட்டது இதுவே முதல் முறையும் அல்ல. ஜெயகாந்தனின் ‘கருணையினால் அல்ல’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ போன்ற குறுநாவல்கள் தொட்ட தூரத்தை இதுவரை தமிழில் வேறு எந்த இலக்கியவடிவத்திலும் இவ்விஷயம் தொட்டிருப்பதாக என் வாசிப்பு அனுபவம் எனக்குக் காட்டவில்லை. மார்க்வெய்ஸின்Memories of my Melancholy Whores ம், ஜே.எம்.கோட்ஸீயின் Disgrace ம் நாவல்களில் காட்டிநின்ற உடலுறவின்பாற்படும் காதலுறவின் விவகாரங்களை நாம் ரசித்து ரசித்து வாசிக்க முடியும். அத்தனைக்கு அவை இலக்கியமாக்கப்பட்ட அற்புதங்கள் அந்த நாவல்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் ‘மூன்றாம் சிலுவை’ உள்ளடக்கக் கனதியற்ற வெறும் உடலுறவின் அதிதீவிர உணர்ச்சி விழைச்சலை மட்டுமே காட்டிநிற்கிறது.

ஐம்பத்திரண்டு வயதில் விஜயராகவனுக்கு, அவரைவிட இருபது வயது குறைவான மகளளவு வயதாகும் ஜுலிமேல் ஈடுபாடு வருகிறது. வாராவாரம் காமத்தை அவர்கள் மிக அழகாகவே அனுபவித்து எட்டாண்டுகளைக் கழிக்கிறார்கள். தன்னுடைய நிலைமையின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ஜுலியின் மனத்தில் விழுகிற முதற்கணத்தில், அவர்கள் தொடர்ந்தும் சந்தித்து உடல்ரீதியான வேட்கைகளைத் தீர்த்துவருகிறபோதிலும், ஓர் இடைவெளி விழுந்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

தனது பணத்துக்காகவா தன்னுடனான அவளது உறவு என்று விஜயராகவன் கேட்கிறபோது, அது அப்படியல்ல என்ற பதிலையே ஜுலி சொல்கிறாள். அதை எதுவிதமான மறுசிந்தனையுமின்றி தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைகிறார் விஜயராகவன். அதுமட்டுமல்ல, தனது முந்திய இரு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததான புலம்பல் வேறு. தானும் தன் மூன்று பிள்ளைகளோடு ஒட்டில்லை, பிள்ளைகளும் தன்னோடு ஒட்டில்லையென்ற ஒப்புமூலத்தையும் அவர் தருகிறார். ஆனால் அவை அப்படித்தானா என்று ஒரு வாசகனைச் சந்தேகப்பட வைத்துவிடுகிறது ஒரு நிகழ்வு.

ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலியில் வைத்து விஜயராகவன் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுகையில், ‘என்னுடைய மனைவி யசோதாவும், உறவுகாரப் பையன்கள் இருவரும் சக்கர நாற்காலியை ஒட்டியபடி வந்துகொண்டிருந்தார்கள். பயத்தையும் துயரத்தையும் மறைக்க யசோதா எவ்வளவுதான் முயற்சியெடுத்தபோதும் கண்கள் அவற்றை சாத்தியமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தன’ என்ற வரிகளில் யசோதாவின் அன்பின் நிஜத்தை யாரும் சந்தேகிக்க முடியாதிருக்கும்.

விஜயராகவனின் காமவெறிக்கு சரியான இணையாகக் கிடைத்தவள்தான் ஜுலி. அவள் தன் வெறியைத் தீர்க்க விஜயராகவனைப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதுதான் கதையிலுள்ள உண்மை. விஜயராகவனின் தன்னிலை வாயிலான கதைகூறலில் படைப்பு நகர்ந்திருப்பதால், ஜுலியின் எண்ணங்களையும் நியாயங்களையும் வாசகன் தானாகவேதான் ஊகம்கொள்ளவேண்டியதிருக்கிறது. விஜயராகவனின் கூற்றை வைத்துக்கொண்டு ஜுலியின் நியாயங்களை அவன் தூக்கியெறிந்துவிட முடியாது. ஜுலியின் நியாயங்கள் ஒரு பெண்ணாக வேறாகவே இருக்கமுடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தான் மூன்றாவது சிலுவையொன்றில் அறையப்படுவதாக விஜயராகவன் நினைப்பதிருக்கட்டும், முந்திய இரண்டு சிலுவைகளிலிருந்தும் அவர் எவ்வாறு தப்பினார் என்பது தெரிவிக்கப்படவே இல்லை நூலில்.

கதை முழுவதும் ஜுலி ஒருவகையான Sadistic காமவுணர்ச்சி கொண்டிருப்பதை மெல்லியதான அவளது சில விருப்பங்களின்மூலம் அறியமுடியும். இருவரும் நிர்வாணமாகிய நிலையில், ‘அவனைக் கட்டிலிலிருந்து இழுத்து கீழே இறக்குகிறாள் (ஜுலி). முதுகில் வைத்து என்னைச் சுமவுங்கள் என்கிறாள். அவன் இடுப்பைக் கால்களால் வளைத்து அவனுடைய முதுகுப்புறமாக நெஞ்சை அழுத்தியபடி ஏறி உட்கார்ந்துகொள்கிறாள். பித்தக் கொம்புகள் தலையில் முளைத்த இரண்டு கோமாளிக் குரங்குகளைப்போல அவர்கள் அறையைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் கெக்கலித்துச் சிரிக்கின்றாள்’ என வரும் இடம் (நூல் பக்: 32) அவர்களது காமத்தின் வகைப்பாட்டினைச் சொல்லிவிடுகிறது.

இது தவிர வேறு சந்தர்ப்பங்களிலும் அவளை உப்புமூட்டைபோல் சுமந்துகொண்டே விஜயராகவன் படுக்கையறைக்குச் செல்வதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். விஜயராகவனிடமே ஒருவகைக் குரூர காம விழைச்சல் இருப்பதின் வெளிப்பாடுதான் இது. ஒருபோது அவளது விருப்பமில்லாமலே ஒருவகை வல்லுறவுப்பாணியில் அவளை அனுபவிக்கிறார் அவர். இத்தனைக்குப் பிறகும் காதலென்ற முகமூடியை விஜயராகவன் கழற்ற மறுப்பது ஏன்? ஜுலியின் துரோகமான புலம்பல் ஏன்?

தனது வயது ஒரு பிரக்ஞையில் அவரிடம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. ஜுலியின் இளமை அதை அவ்வப்போது தூண்டிக்கொண்டே அல்லது சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறது. அதனால்தான் எப்போதும் தனக்கு ஐம்பத்திரண்டு வயது, ஐம்பத்திரண்டு வயது என்று அவர் குழறிக்கொண்டிருக்கிறார். ‘எனக்கு ஐம்பத்திரண்டு வயது. போதுமாடா சாமி’ என்றே ஒரு தருணத்தில் கத்துகிறார். விஜயராகவன் நினைத்ததுபோல வயது காமத்துக்குச் சரி, காதலுக்குச் சரி ஒரு பொருட்டே இல்லை. ஐம்பத்திரண்டிலல்ல, அறுபத்திரண்டில்கூட இந்தமாதிரியாக இன்றும் நடந்துகொண்டு இருக்கின்றது.

இந்தமுறையான உடலுறவு விழைச்சல் தொடர்பில் ஒரு புள்ளி என்றோ விழத்தான் செய்யும். சேடிஸ்டிக் மனநிலையோடு குடும்பமான உறவை அனுபவித்துவிட முடியாது. இதிலிருந்து திரும்புதல் என்பது ஒரு நோயிலிருந்து குணமாதல் போல்தான். இந்த மனநிலையிலிருந்து ஜுலி விடுபட்டுவிட்டாள் எனக் கொண்டால், விஜயராகவன் விடுபடவில்லை என அர்த்தமாகிறது. தானுமே ஒருகாலம் படைப்பாளியாக, இன்னும் பல எழுத்தாளர்கள் கவிஞர்களை சமகாலத்தில் நண்பராகவும் பெற்றிருக்கும் விஜயராகவன், இந்த வகைப்பாடான உடலுறவு விவகாரத்தில் எப்படி புரிதலற்றும், இதையே காதலென்னும் மயக்கமும் கொண்டிருந்தார் என்பது அதிசயமானது. ஜுலி இதைப் புரிந்துகொண்டாளோ இல்லையோ, விடுபட்டுக்கொண்டாள் என்றுதான் வாசகனொருவனால் கொள்ளமுடியும்.

பாவிகளே சிலுவையில் அறையப்படுவார்கள். அதை விரும்பாத ஒரு சிலுவை என்றோ ஒருநாள் அதிலிருந்து தப்பி ஓடிவிடலாம். அதை அது தன் புனிதத்தைக் காப்பதற்காக எடுத்த செயற்பாடாகவே கொள்ளவேண்டும். ஜுலி விஷயத்தில் புனிதமென்று எதுவுமில்லை, ஆனால் தான் வாழவேண்டிய முறையைத் தீர்மானிப்பதற்கும், தன்னை வைப்பாட்டியாகவே காலம் முழுக்க வைத்திருக்கும் நினைப்பை நிராகரிப்பதற்குமான அவளது உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை.


00000


தூறல் இதழ்  &
காற்றுவெளி.காம்,

கலாபன் கதை:13


கைவிடப்பட்ட கப்பல் வழக்கு


காலம் எதனையும், எவரையும் மாற்றுகின்றது. கலாபனும் மாறியிருந்தான் என்பதை அவன் போனதடவை வந்திருந்தபோது நான் கண்டிருந்தேன். வீட்டு நிலைமை குறித்த அவனது கவனம் அதிகமும் என்னைக் காண திருமலை வந்திருந்த அவனது பேச்சில் இழையோடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், தான் கூடவிருந்தால்தான் கல்விச் சிரத்தையும், ஒழுக்க மேம்பாடும் ஏற்படுமென்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அதிசயமாகவிருந்தது. ஆனாலும் ஆச்சரியப்படவில்லை. காலம் எவரையும் மாற்றுகின்றதுதான்.

‘கொழும்பு செல்கிறேன், கப்பல் வேலையெடுப்பதொன்றும் முன்புபோல் சுலபமானதாக இல்லை, கடலிலே மிகப் பெரும் நவீன கப்பல்களின் வருகை, ஓடிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சிறிய சிறிய பழைய கப்பல்களை இரும்பு விலைக்கு விற்கும்படியாக ஆக்கிவிட்டது, கன காலமில்லை, கொழும்பில் ஒரு மாதம்வரை தங்கி முயற்சித்துப் பார்ப்பேன், முடியாவிட்டால் பம்பாய் போய்விடுவேன், அங்கேயும் என்ஜினியர் வேலைதான் வேண்டுமென்று காத்திருக்க மாட்டேன், என்ஜின் றூம் வேலை எதுவானாலும் சேர்ந்துவிடுவதே எனது எண்ணம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன், ஒரு மாதத்திலேயே பம்பாய் சென்றுவிட்டதாக, அவன் எழுதிய கடிதத்தின்மூலம் தெரியவந்தது.

முன்பெல்லாம் தசைச் சுகத்தின் அதீத விழைச்சல்கள்பற்றிய வெறிகொண்ட எழுத்துக்கள் அதிகமும் அவனது கடிதங்களில் காணக்கிடக்கும். இந்தமுறை அவன் மாதுங்காவிலுள்ள அ~;டலட்சுமி கோவில்பற்றியும், புகழ்பெற்ற செம்பூர் முருகன் கோவில்பற்றியும் எழுதியிருந்தான்.

காலம் எதனையும், எவரையும் மாற்றியே விடுகின்றது.

000

கலாபன் பம்பாயில் அதிக நாட்கள் காத்திருந்தானென்று சொல்லமுடியாது. பம்பாயை அடைந்த மூன்றாவது கிழமையிலேயே அவனுக்காகவேபோல் எம்.வி.சென்.கப்ரியேல் என்ற கப்பல் தன் புகைபோக்கியிலிருந்து கரும்புகையினைக் கக்கியபடியே துறைமுகம் வந்துசேர்ந்தது.

திலீப்சிங் என்று அவனுக்கு அண்மையில் அறிமுகமாகியிருந்த ஒரு குஜராத்திக்காரன் துறைமுகத்திலே பைலட்டுகளுக்கான படகோட்டியாய் இருந்தான். ஆறு மணியளவில் கப்பல் துறை சேர்ந்த செய்தியை கலாபனுக்குச் சொன்னது அவன்தான். எட்டு மணிக்கு உள்நுழைய சிரமமிருக்கும் துறைமுக வாசல் வழியே அறிமுகங்களின் துணையோடு உள்ளே சென்ற கலாபன், கப்பலுக்குள் ஏறி நேரே கப்ரினுடைய அறையை அடைந்தபோது, கப்பல் கொம்பனி, சாமான் ஏற்றவிருந்த கொம்பனியின் முகவர்கள் என கப்பலின் உச்சத் தளம் தடல்புடலாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு தாமதத்தை அவன் செய்வதை அவனிடமிருந்த ஏதோவொரு நம்பிக்கை அல்லது ஏதோவொரு விரக்தி தூக்கியெறிந்துகொண்டிருந்தது.

சீருடையில் நின்றிருந்த கப்ரின் அறை வாசலில் நின்றிருந்தான். கிரேக்கனாய் இருக்கவேண்டுமென கலாபன் அனுமானித்துக்கொண்டான். ஆனால் அவன் முன்னால் நின்று கிரேக்கமும் ஆங்கிலமுமாகப் பொழிந்து தள்ளிக்கொண்டிருந்த நெடிதுயர்ந்த அந்த மாவண்ண நிற மனிதன் எங்கத்தையவன் என்பதை அவனால் அனுமானம்செய்ய முடியவில்லை. நிச்சயமாக ஆசியன், குறைந்தபட்சம் இங்கிலாந்தில் குடியுரிமைபெற்று வாழும் ஆசியனாக இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.

அவன் சிறிது தாமதிக்க எண்ணிய வேளையில், ‘பொருத்தமான ஆள் அகப்படவில்லையென்றால் அவன் இல்லாமல்கூட அடுத்த துறைமுகம் சேரும்வரை என்ஜினை ஓட்ட என்னால் முடியும். இங்கேயே அவனைத் தூக்கு அல்லது நான் இறங்குகிறேன்’ எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென கப்பல் பிரதம பொறியாளன் என ஆங்கிலத்திலே நிலையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிருந்த அறைக்குள் நுழைந்தான் அந்த மனிதன்.

பொருத்தமற்ற வேளையில் வந்துவிட்டதால் திரும்பிப் போய்விட்டு சிறிதுநேரத்தில் வரலாமோ என எண்ணிய கலாபன் அதைச் செயலாக்க முனைகையில், கப்ரினின் முகத்தை ஒருமுறை பார்த்தான். அதில் கோபமே இல்லை. தன் பிரதம பொறியாளனின் கோபத்தைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற விபரத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த ஒருவகையான இளஞ்சிரிப்புத்தான் தவழ்ந்துகொண்டிருந்தது.
கலாபன் சிறிது தயங்கினான். அது அவன் திரும்பி ஓடவேண்டிய வேளையில்லை.

கலாபனைக் கண்ட கப்ரின் என்ன என தலையசைப்பில் வினவினான். விரைந்து கப்பரினை அணுகிய கலாபன், தான் வேலை தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைக் கூறி தனது கப்பல் அனுபவங்களையும் விறுவிறுவென கிரேக்கத்திலேயே சொல்லி முடித்தான். அவன் காட்டிய கப்பலோட்டியின் அடையாளப் புத்தகம் மற்றும் தகுதிச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, ‘இவையெல்லாம் மெய்யானவைதானே?’ என பதிலை எதிர்பார்க்காத ஒரு வினாவை உதிர்த்துவிட்டு, ‘நான் அனுப்பியதாக முதன்மைக் கப்பல் பொறியாளரைச் சென்று பார்’ எனக் கூறி அனுப்பினான்.

மிகுந்த நம்பிக்கையோடு முதன்மைப் பொறியாளரின் அறையை அணுகினான் கலாபன். கதவு திறந்திருந்தது. உள்ளே நின்றிருந்த முதன்மைப் பொறியாளர் திரும்பி அவனைப் பார்த்தார். ‘யார்?’ என்றார். கப்ரின் அனுப்பியதாகக் கூறி தனது சான்றிதழ்களைக் கொடுத்தான் அவன். மேசையில் அவற்றை வைத்து ஒரு கையில் மதுக் கிளாஸ் இருந்தவகையில் மறு கையினாலேயே அசிரத்தையாக அவற்றைப் புரட்ட ஆரம்பித்த முதன்மைப் பொறியாளர், பின்னர் மதுக் கிளாஸை மேசையில் வைத்துவிட்டு சிரத்தையுடன் கவனித்தார். ‘மூன்றாம் நிலை என்ஜினியராக ஆறு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறீரா?’ என்றார். அவரது தமிழ் அவனுக்கு அடுத்த ஆச்சரியமானது. சர்வதேச கடலில் ஓடும் சில கப்பல்களில் சில இலங்கையர் முதன்மைப் பொறியாளர்களாக வேலைசெய்வதை அவன் கேள்விப்பட்டிருந்தான்தான். ஆனாலும் இப்போதுதான் சந்திக்கிறான். ஆச்சரியத்தின் விகாசம் தெரியும்படி புன்னகைத்தவாறே ‘யெஸ், சீஃப்’ என்றான்.

தொடர்ந்து, அது பழைய கப்பலானதால் வேலை அதிகமென்றும், அந்தச் சிறிய கப்பல் கொம்பனியில் மூன்றாம் நிலைப் பொறியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவானதுதானென்றும் பல வி~யங்களை முதன்மைப் பொறியாளர் அவனுக்கு எடுத்துரைத்தார். ஆனாலும் அதைத் தீர்மானிப்பது கப்ரினின் கையில்தான் இருக்கிறது என்பதையும் சொல்ல அவர் மறக்கவில்லை. கப்பலில் ஏறிவரும்பொழுதே அவற்றைத் தான் உணர்ந்துகொண்டதாக கலாபன் கூறினான்.

அப்பொழுது உள்ளே வந்த கப்ரின் தனியாக முதன்மைப் பொறியாளருடன் கதைத்துவிட்டு கலாபனிடம் கூறினான்: ‘உனக்கு வேலை தருகிறேன். ஆனாலும் உனக்கான இடத்தை நான் இனிமேல்தான் ஏற்பாடு செய்யவேண்டும். நாளைக்கு மாலையில் வா. நமது முகவருடன் பேசி மற்றவைகளை ஏற்பாடு செய்யலாம்.’

பதினாறு நாட்களின் பின் எம்.வி.கப்ரியேல் பம்பாய்த் துறைமுகத்தைவிட்டுக் கிளம்பியபோது, மூன்றாம் நிலைப் பொறியாளனாக கலாபன் அதில் வேலைசெய்துகொண்டிருந்தான்.

அந்தக் கப்பலில் அவனது முதல் பயணம் சிங்கப்பூருக்கானதாய் இருந்தது.
அந்தப் பதினாறு நாட்களில் கலாபன் செய்த வேலை மற்றைய கப்பல்களில் ஒரு வருடத்தில் செய்யும் பாதி வேலையளவாக இருந்தது. அவன் களைத்துப் போனான். அவன் மட்டுமில்லை, எந்திர அறையில் வேலைசெய்த அனைவருமே ஒரு களைப்போடுதான் பம்பாயைவிட்டு நீங்கியிருந்தனர்.

தரையிலோடும் வாகனங்களுக்குப் போலவே ஆகாயத்திலும், கடலிலும் ஓடும் விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் விதிகள் உண்டு. இச் சர்வதேச விதிகள் அனுசரிக்கப்பட்டாக வேண்டும். உதாரணமாக கப்பலின் காப்புறுதி, அதன் கடலோடக்கூடிய தகுதிச் சான்றிதழ், அதிகாரிகளின் தகைமை போன்ற வி~யங்கள் முக்கியமானவை. அவைபோல் அது வெளியிடும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத அளவுக்கும், டீடைபந எனப்படும் கப்பலின் எந்திரப் பகுதிக் கிடங்குகளிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்படவேண்டிய கழிவுநீர், எண்ணெய் மாசற்றதாய் இயற்கை வளங்களை அழித்துவிடாதபடியும் இருக்கவேண்டும் என்பன முக்கியமானவை. பம்பாய்த் துறைமுகத்துள் அந்தளவு புகையை வெளியேற்றியபடி நுழைய முடிந்த கப்பலினால், சிங்கப்பூர்த் துறைமுகத்துள் நுழைந்துவிட முடியாது. அதனால் அவற்றை நிவர்த்திப்பதற்கான வேலைகளைச் செய்துவிட்டே கப்பல் புறப்படவேண்டி இருந்தது. அவற்றையும் சாமான்கள் ஏற்றி முடிப்பதற்கான கால எல்லையில் அவர்களுக்குச் செய்யவேண்டியிருந்தது.
சிங்கப்பூர் கேளிக்கைகளுக்கு ஏற்ற நாடல்ல. ஆனாலும் அங்கேயும் குடி, நடனம், அனுமதிபெற்ற விபச்சார நிலையமென்று இடங்கள் இருக்கவே செய்தன.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பாங்கொக்கிலிருந்து சொரியல் தானியமாக நெல்லை ஏற்றிவந்தபோது, குரஅபையவழைn என ஆங்கிலத்தில் சொல்லப்படும் தானியப் பூச்சிகளின் நீக்கத்துக்கான மருந்துப் புகை அடிப்பதற்காக கப்பல் சிங்கப்பூரில் ஒரு தனித்த துறைப் பகுதியில் நிறுத்தப்பட்டது. கப்பலில் வேலை செய்த அனைவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டார்கள். நித்திரை வரும்வரை வெளியே உலவிவிட்டு வரலாம் என வெளியே சென்ற கலாபன் திரும்பி வந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது. அனுமதியின்றியோ அனுமதியுடனோ இயங்கும் சில விபச்சார வீடுகள் சிங்கப்பூரின் புறநகர்களில் இயங்கின. அங்கெல்லாம் விலைமாது இருந்துவிடமாட்டாள். சென்ற வாடிக்கையாளருக்கு ஒரு புகைப்பட அல்பம் காட்டப்படும். அதிலுள்ள பெண்களின் படங்களைப் பார்த்து ஒருவர் தனது தேர்வைச் செய்துகொள்ளவேண்டும். அந்தப் பெண்ணை அந்த வீட்டு நிர்வாகி தொலைபேசி செய்து அழைப்பார். அன்றைக்கு அந்தச் சுகமும் அனுபவமும் நூற்றைம்பது சிங்கப்பூர் வெள்ளி செலவில் அவனுக்குக் கிடைத்திருந்தது.

சிங்கப்பூரைச் சேரும்வரை அதுமாதிரி எந்தவகையான சபலமும் கலாபன் மனத்தில் எழவில்லை. ஆனாலும் சிங்கப்பூரை ஓரிரவு அடைந்த கப்பலில் இருந்தபடி அதன் கரையின் நிறம்நிறமான மின்விளக்குகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தவனது மனத்தில் அவை சொல்லமுடியாத தாபத்தைக் கிளர்த்திவிட்டன. அன்று அவன் நூறு அமெரிக்க டொலர்கள் முன்பணம் எடுத்திருந்தான். அது ஏறக்குறைய இருநூறு சிங்கப்பூர் வெள்ளிக்குச் சமானம். அவன் வெளியே சென்று கப்பலுக்கு மீண்டபோது அவனிடம் சில சிங்கப்பூர் வெள்ளிகளே மீதமாக இருந்தன.

மூன்று நாட்கள் சிங்கப்பூரில் தங்கிய கப்பல் ஐக்கிய அரபுக் குடியரசின் ~hர்ஜாவைநோக்கிப் புறப்பட்டது.

ஐக்கிய அரபுக் குடியரசிலுள்ள இன்னொரு அங்கத்துவ நாடான துபாய்போலத்தான் ~hர்ஜாவும். ஆனாலும் துறைமுகம்மட்டும் துபாய்போன்று பெரிதானதில்லை. எம்.வி.கப்ரியேல் ~hர்ஜாவைச் சென்ற சமயம் வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் கடலைப் புரட்டிக்கொண்டிருந்தது. கடலிருந்து துறைமுகத்தை அரண்செய்த தடுப்பணையில் அலைகள் மோதியதில் நீர் இருபது இருபத்தைந்து அடி உயரத்துக்கு எழுந்து விழுந்துகொண்டிருந்தது. துறைமுகத்திலும் ஏற்றுமதி இறக்குமதி தாமதம். அதனால் வந்த கப்பல்கள் தமது முறைக்காக துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுக் காத்திருந்தன.

சிறிதுநேரம் முதன்மைப் பொறியாளரின் அறையிலிருந்து உரையாடியும் மதுபானம் அருந்தியும் பொழுதைக் கழித்த கலாபன், தனது அறைக்குத் திரும்பியபோது, பதினொரு மணி. தொலைக்காட்சியில் ஒரு அராபிய மாதுவின் கிறங்கவைக்கும் காதல் சோககீதமொன்றைக் கண்டும்கேட்டும் கொண்டே மேலும் போதையேறிக்கொண்டிருந்தான் கலாபன் தனது அறையில்.

வெளியே ஆக்ரோ~மான அலைகள் கப்பலை மோதிக்கொண்டிருந்தன. அவ்வப்போது அறையின் கண்ணாடி ஜன்னல்வரை வந்து, அறைவெளிச்சத்தில் வெள்ளியலையாகி மீண்டுகொண்டிருந்தன கருநீர்ப் பாளங்கள். கப்பல் சரிவதும் நிமிர்வதுமாயிருந்தது. இருபத்தேழாயிரம் தொன் மொத்த எடையுள்ள கப்பலிலும் வேலைசெய்திருக்கிறான் கலாபன். அந்தக் கப்பலையே அல்லாட வைத்திருக்கிறது சினம்கொள்ளும் கடல். இதன் மொத்த நிறையே மூவாயிரம் தொன். நடுக்கடலானால் அலை தூக்கி எறிந்துவிடும். கரையானதால் சரித்துச் சரித்துவிட்டு திரும்பிப் போய்க்கொண்டிருந்தது.

அப்போது வெளியே முதன்மைப் பொறியாளர் வந்துநின்றார். ‘கலாபன், காலநிலை சரியில்லை. இந்தப் புயற் காற்றில் நங்கூரத்தையும் இழுத்துக்கொண்டு கப்பல் சென்று எந்தக் கப்பலிலாவது அல்லது பாறையிலாவது மோதிவிடக்கூடுமென்று கப்ரின் பயப்படுகிறான். அதனால் புயல் ஓயும்வரை என்ஜினை உடனடியாக இயக்கக்கூடிய விதமாக (ளுவயனெ-டீல) தயார்நிலையில் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறான். பன்னிரண்டு மணியாகிறதுதானே, உனது கடமை நேரம் தொடங்குகிறது, அதனால் கீழே சென்று எந்திரத்தைத் தயார்நிலையில் வைத்துவிட்டு வா. இது தூக்கமற்ற இரவாகப் போகிறது. தூக்கமில்லாமல் போனால் பரவாயில்லை, கெட்ட இரவாக இல்லாமலிருந்தால் சரிதான்’ என்றுவிட்டுச் சென்றார்.
கீழே இறங்கி என்ஜினைத் தயார்நிலையில் வைத்துவிட்டுத் திரும்பிய கலாபன் உண்டிச்சாலையில் தொலைக்காட்சியை பார்த்தபடி பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தான். நான்கு மணியானது. எதுவித அசம்பாவிதமும் சம்பவிக்கவில்லை. கலாபன் படுக்கை சென்றான்.

ஐந்து மணியளவில் மீண்டும் கதவு தட்டப்பட்டுக் கேட்டது. கலாபன் எழுந்து வந்து கதவைத் திறந்தான். முதன்மைப் பொறியாளர். ‘ஏதேனும் ஆபத்தா?’ என்று அவசரமாய்க் கேட்டான் கலாபன். ‘ஆபத்துத்தான். எங்களுக்கில்லை. எங்களுடைய கொம்பனியின் மற்றக் கப்பலுக்கு. அதுவும் ~hர்ஜா வந்திருக்கிறது நேற்று. ஆனால் எப்படியோ ஒதுங்கிப்போய் கரையில் ஏறிவிட்டது. வெளிக்கிட்டு எனது அறைக்கு வா, எல்லாம் சொல்கிறேன்’ என்றுவிட்டுச் சென்றார்.

முதன்மைப் பொறியாளரின் முகத்திலிருந்த யோசனை, கொம்பனியின் கப்பல்களில் ஒன்று கரையிலேறிவிட்டதால் ஏற்பட்டதாய்த் தோன்றவில்லை கலாபனுக்கு. அவன் விரைந்து வெளிக்கிட்டுக்கொண்டு முதன்மைப் பொறியாளரின் அறைக்குச் சென்றான்.
கப்ரினின் அறை திறந்திருந்தது. கப்ரினைக் காணவில்லை. மேலே சுக்கான் தளத்தில் நின்றிருக்கக்கூடுமென கலாபன் எண்ணினான்.

அவன் முதன்மைப் பொறியாளரின் அறைக்கு வந்தான். ‘இரு’ என்றார். அவன் எதிரே அமர்ந்ததும் சொன்னார்: ‘அரை மைல் தூரத்துக்கு கப்பலை இழுத்துப் போயிருக்கிறது புயல். யாரும் கவனிக்கவில்லை. இப்போது கப்பல் பின்புறமாக கரையிலேறி நிற்கிறதாம்.’

‘என்ன செய்யப்போகிறார்கள்? இழுவைப் படகின்மூலம் இழுத்தெடுக்க முடியாதா?’

‘முடியும். ஆனால் கொம்பனி அதை விரும்பவில்லை. ஏனென்றால் அது மிகவும் சிக்கலான நிலைமையை உருவாக்கக்கூடியது. அதனால் எங்களை இழுத்துவிடக் கேட்டிருக்கிறார்கள்.’

‘முடியுமா? நாங்களே சாமான்களோடு நிற்கிறோம். அந்தக் கப்பலும் சாமானோடுதான் நிற்கும்.’

‘கடினம்தான். ஆனாலும் முடியும். இருந்தாலும் அதை நாங்கள் செய்யப்போவதில்லை. அது எங்களுக்கு ஆபத்தானது. கப்பலை இழுப்பதற்கான முயற்சியில் இந்தக் கப்பல் அதனோடு மோதி ஏதாவதொன்று அல்லது இரண்டுமே சேதமடையும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இதுவே கரைதட்டிவிடும் அபாயமும் நேரலாம்.’

‘கப்ரின் என்ன சொல்கிறார்?’

‘கப்ரினுக்கும் விருப்பமில்லை. ஆனாலும் செய்யச்சொல்லி மிகுந்த அழுத்தம் கொம்பனியிலிருந்து வந்துகொண்டிருக்கிறதாம். மேலும் துபாயில் கொம்பனியின் அதிகாரமுள்ள போர்ட் கப்ரினாக ஒரு அமெரிக்கன் இருக்கிறான். அவன் வருவதாக இருக்கிறது. அவன் கப்பலுக்கு வந்து கப்பலின் பயண விபரங்கள் பதியப்படும் லொக்புக்கில் கப்பலுக்கு எதுவும் ஆபத்து நேர்கிற சமயத்தில் தனக்கு அதில் எவ்வித பொறுப்புமில்லை, தான் கம்பெனியின் நிர்ப்பந்தத்திலேயே அவ்வாறு கருமமாற்றியதாக எழுதி கையெழுத்திட்டுத் தரவேண்டும் எனக் கேட்கும்படி கப்ரினிடம் சொல்லியிருக்கிறேன்.’

புயல் தணிந்திருந்தது. ஆனாலும் சிறிய ஒரு கப்பலுக்கு அது இடைஞ்சல் செய்யப் போதுமானதுதான். இருந்தும் ஒரு இழுவைப் படகில் போர்ட் கப்ரின் பத்து மணியளவில் வந்துசேர்ந்தான்.

அவனது எந்தக் கோரிக்கையும் கப்ரினிடமோ, முதன்மைப் பொறியாளரிடமோ பலிதமாகவில்லை. கடைசியில் கப்பலை இழுக்கும் அனுமதியையும், அதனால் இடரேதும் ஏற்படின் அதில் கப்ரினுக்கோ பொறுப்பான மற்றவர்களுக்கோ பங்கில்லையென்றும் லொக்புக்கில் எழுதி கையெழுத்திட்டான் ஜோன் பலற்ரோனி என்ற அந்த போர்ட் கப்ரின்.
கப்பல் தன் சகோதரக் கப்பலை கடலில் இழுத்துவிட பதினொரு மணியளவில் புறப்பட்டது. கலாபன் தன் கடமையைப் பொறுப்பெடுத்து ஒரு மணத்தியாலத்துக்கிடையிலேயே எல்லாம் முடிவடைந்துவிட்டன.

எதிர்பார்த்ததுபோல் பெரிய சிரமங்கள் ஏதுமின்றி எம்.வி.ஸ்மூத்வேவ் என்ற கொம்பனியின் மற்றக் கப்பல் கடலுள் இழுத்துவிடப்பட்டுவிட்டது. எம்.வி.கப்ரியேல் அதற்கு அடுத்தநாள் துறைமுகத்துக்குள் புகுந்தது. அதற்கு முன்னதாகவே எம்.வி.ஸ்மூத்வேவ்.

இரண்டு நாட்களாக கப்ரினுக்கும், முதன்மைப் பொறியாளருக்குமிடையே மிகுந்த தணிந்த குரலிலான பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தன. கலாபன் சென்ற வேளைகளிலெல்லாம் அறை, ஒன்றில் வெறுமையாக இருந்தது, இல்லையேல் முதன்மைப் பொறியாளரையும் கப்ரினையும் ஒன்றாகக் கொண்டிருந்தது.

~hர்ஜாவைவிட்டுப் புறப்பட்ட கப்பல் பாஹ்ரினை அடைந்தது. கப்பல் துறைமுகத்தை அடைந்த மறுநாள் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்கவேண்டியிருப்பதாகக் கூறிக்கொண்டு முதன்மைப் பொறியாளர் ஒருமுறை வெளியே சென்றுவந்தார்.
எல்லாம் சுமுகமான நிலையில் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

முதலில் முதன்மைப் பொறியாளர் தனது ஒப்பந்த காலம் முடிந்து விலகிச்சென்றார். கொழும்பு வோட் பிளேஸில் உள்ள தனது வீட்டு முகவரி கொடுத்து அடுத்த மாதமளவில் ஒப்பந்தம் முடியவிருந்த அவனை இலங்கை வந்ததும் சந்திக்கக் கேட்டிருந்தார்.
நிறைய பங்களாதே~pகள், பாகிஸ்தானியர், இந்தோனி~pயராக மாலுமிகள் இருந்த அந்தக் கப்பலில் ஏதோவொரு காரணத்தைச் சுட்டி எப்போதும் சண்டைகள் நடந்துகொண்டிருந்தன. கலாபனுக்கு முன்னர் மூன்றாவது பொறியாளனாக இருந்த பாகிஸ்தான்காரனின் முதன்மைப் பொறியாளருடனான வாக்குவாதமும் சரீரத் தாக்குதல் அளவுக்கான முனைப்புமே அவனை பம்பாயில் இறக்கிவிட வைத்தது. இவ்வாறு ஒரு சுமுகமான நிலை அற்றதாகவே கப்பல் தொடர்ந்து இருந்துவந்தது. கலாபனே முந்திய மூன்றாம் பொறியாளனான தனது நண்பன் வேலையிழக்கக் காரணம் என்பதுபோல் இன்னொரு பாகிஸ்தானி கொஞ்சக் காலம் அவனோடு முறுகல் காட்டிக்கொண்டு திரிந்தான். இவை காரணங்களாய் நீண்டகாலம் அந்தக் கப்பலில் வேலைசெய்ய கலாபனும் பிரியமிழந்திருந்தான். ஒரு சித்திரைப் புத்தாண்டில் வீடு செல்லக்கூடியமாதிரி தனது விடுப்பைக் கோரி ஒரு மாதத்தின் முன்பாக கொம்பனிக்கு அறிவிப்புச் செய்தான் கலாபன்.

எண்பத்தொன்பதாம் ஆண்டு சித்திரையில் அவன் தன் வீட்டிலிருந்தான்.
பின்னர்தான் தனது பழைய முதன்மைப் பொறியாளரைச் சந்திக்க அவன் கொழும்பு பயணமானது.

பழைய கப்பல் முதன்மைப் பொறியாளர் சொன்ன தகவல்கள் அவனை தூக்கியெறிந்துவிட்டன. ஒரு கப்பலை இன்னொரு கப்பலோ இழுவைப்படகோ இழுத்துக் கரைசேர்க்கிற பட்சத்தில், அந்த ஆபத்துக்குள்ளான கப்பலின் பெறுமதியினதும் அதிலுள்ள சாமான்களின் பெறுமதியினதும் பாதியை கோரிக்கொள்ள உதவிசெய்த கப்பலுக்கு உரிமையுண்டு என்பது அவன் இதுவரை கேள்விப்படாதது. தனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க வேண்டியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பாஹ்ரினை கப்பல் அடைந்ததும் தான் வெளியே சென்றது கப்பல் லொக்புக்கை பிரிட்டி~; தூதுவராலயத்தில் சமர்ப்பித்து அதை அவர்களிடம் உறுதிசெய்து பெற்றுக்கொள்வதற்காகவே என்றும் அவர் சொன்னார்.

எல்லாம் ஒரு குழப்ப நிலையில் கலாபனைத் தள்ளிவிட்டன. அவன் பதில் சொல்லவே முடியாது திண்டாடிக்கொண்டிருந்தான். கப்பல் கரைதட்டிய கப்பலைக் கடலில் இழுத்துவிட்ட சமயத்தில் இருந்த அத்தனை பேருக்குமே அந்தத் தொகையில் பங்கு உண்டென்றும், அவனது பதவியைப் பொறுத்து அவனுக்கும் இருபத்தைந்து லட்சங்கள்வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டென்றும் அவர் சொன்னபோது அவன் திகைத்துப்போனான்.

எத்தனை நாட்கள் அவன் கொழும்பில் நிற்பான் என அவர் கேட்டதற்கு அவன், ‘இரண்டு மூன்று நாட்களில் திரும்புவதாக எண்ணிக்கொண்டுதான் வந்திருந்தேன். தேவையானால் சில நாட்கள் கூடுதலாக நிற்கலாம்’ என்றான்.

‘அது போதும். முந்திய கப்ரினிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த ஈட்டுக் கோரலை அவர்தான் முன்னெடுக்கவேண்டும். எவ்வளவோ ஆர்வமாக இருந்த அவரிடமிருந்து ஒரு சேதியும் இல்லாத நிலையில், நானே இந்த முயற்சியைத் தொடரவிருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. லொக்புக்கின் ஒரு பிரதியெடுத்து அதிலும் பிரிட்டி~; தூதுவராலயத்தில் கொடுத்து உறுதிசெய்து வைத்திருக்கிறேன். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததில் இது போதுமென்றே கூறினார்கள். விரைவில் வழக்கைத் தொடுக்கவுள்ளேன். நீ ஒரு சாட்சியாக எனக்குத் தேவை. அதனால் வழக்கு விபரம் தெரியும்வரை நீ எந்த கப்பலேறும் முயற்சியையும் மேற்கொள்ளாமலிருக்க வேண்டும். சுமார் கால் கோடி ரூபா வரவிருக்கிற நிலையில் சில ஆயிரங்களுக்காக நீ அவசரப்படத் தேவையில்லையல்லவா?’ என்றார் அவர்.

அவன் சம்மதித்தான்.

வழக்கு தொடுத்துவிட்டதாக அவன் யாழ்ப்பாணம் திரும்பிய ஒரு வாரத்தில் கடிதம் வந்தது அவரிடமிருந்து. பின்னர் ஒரு மாதத்தில் கொழும்பு போன கலாபன் அவரையும் சென்று சந்தித்தான். வெகுநம்பிக்;கையோடு அவனுடன் பேசி அனுப்பினார்.

முந்தியமுறை கொழும்பிலிருந்து யாழ் திரும்பியபோது சிறிது அவநம்பிக்கையும், சிறிது கலக்கமும் அவனிடத்தில் இருந்திருந்தன. அந்த முறை அவன் அவரை முழுதாகவும் நம்பிவிட்டிருந்தான். ஒருவகையில் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்ட மனநிலையே அவனிடம் ஏற்பட்டுவிட்டது.

வீட்டில் சிறிது உல்லாசமாகவே இருந்தான் கலாபன். உல்லாசம் அவனது சிறிய சேமிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக்கொண்டிருந்தது. பிள்ளைகளுடன் இருப்பதான மனநிறைவைத் தவிர வேறை அவன் அந்த நாட்களில் அறிந்ததில்லை. ஆறு மாதங்களாயின. ஒன்பது மாதங்களாயின. பழைய முதன்மைப் பொறியாளர் வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு முறை கொழும்பு சென்றான்.

அவரது பதில் அவனது கனவுகளைச் சுக்குநூறாக நொருக்கியது.

ஒரு கப்பல் கொம்பனியென்பது அதன் சொந்த தேசத்தில் அத்திபாரம் கொண்டதுதான், ஆனாலும் அதன் வியாபார வலைப் பின்னல் உலகமளாவியது, தனக்கெதிரான எந்த எதிர்ப்பையும் அது அந்த வலைப் பின்னல் மூலமாகவே நிர்மூலமாக்கிவிடுகிறது எனவுரைத்தவர், ‘இது எனது நாடு, இருந்தும் என்னையும் என் குடும்பத்தையும் இங்கேயே அழித்தொழித்துவிடுவதாக இங்குள்ள ரௌடிகள் மூலமாகவே எச்சரிக்கைவிடுக்க அதனால் முடிகிறது. என் இரண்டு பெண்பிள்ளைகளையும் விபச்சாரிகளாக்கி தெருவில் அலைய வைத்துவிடுவதாகச் சொன்ன எச்சரிக்கையோடு நான் கலங்கிப்போனேன், கலாபன். வழக்கைத் திரும்பப் பெறுவதைத் தவிர எனக்கு வேறுவழியே இருக்கவில்லை’ எனத் தொடர்ந்து கூறி அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளியிட்டார்.

கலாபன் மெல்லிய சிரிப்பையாவது காட்டி தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான்.

வழக்கு தொடரப்பட்டதோ, பின்னர் அது கைவிடப்பட்டதோ பத்திரிகையுலகத்துக்குத் தெரியவேயில்லை. அத்தனைக்கு சர்வதேச ரௌடிசம் வலுவானதாயே இருந்தது.

இந்தக் கைவிடப்பட்ட கப்பல் வழக்கில் வழக்காளியோ குற்றஞ்சாட்டப்பட்டவரோ யாருமே பாதிக்கப்படவில்லை. சாட்சியே பாதிக்கப்பட்டிருந்தான்.

கலாபனது மனத்தில் அந்த ஏமாற்றம் நீண்டகாலமாக இருந்தது.

அதையும் காலம் மாற்றுமா?

000

Sunday, June 13, 2010

ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’

‘ஆயிரம் முலைகளோடு வந்த  ஆதித் தாய்’தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள்.

பிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும்.

மதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூடிவிடும். பக்கத்து தோட்ட நிலங்களைக் கடந்து அவை பறந்துவரும் அழகு கண்ணுக்குச் சுகமானது. தம்மினத்தைக் கரைந்தழைக்கும் அவற்றின் குரலெடுப்பு செவிக்கு இனிதானது. ‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்ற குறளை, பின்னால் வெகுகாலத்தின் பின் உயிரோட்டத்தோடு நான் உணர்ந்துகொண்டமை இந்த அனுபவத்திலிருந்தே பிறந்திருக்க முடியும்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு கா…கா…என்ற கரைதலொலி ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும். அவற்றின் சிறகடிப்பு ஊரை அதிரவைப்பதாயிருக்கும். மாணவர்கள் சாப்பிட்டு மீதியாகவும், உட்புறம் வேகாது ‘பச்சை’யாக இருக்கிறதென்றும் வீசும் பணிஸ_க்காகத்தான் இந்த ஆரவாரம் கிளர்ந்தெழுவது. பள்ளியையேகூட அது இடைஞ்சல் செய்வதாயிருக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள விசே~ம். ஊரின் மதியத்து இருப்பு அதுவாயே இருந்ததாய் இப்போது உணர முடிகிறது.

மக்கள் பெரும்பாலும் தோட்டக்காரராகவும், கூலி வேலைத் தொழிலாளராகவும் இருந்த அந்த ஊரில் பலபேருக்கு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை எழுதப் பழக்கியது அந்தப் பள்ளிதான். அந்தவகையில் எனக்கு எழுத்தறிவித்த பள்ளி அது. கடவுட் பள்ளி! அதுபற்றிய எந்தவொரு நினைப்பும், ஒரு சுழற்சியில்போல் பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்துவிடுகிறது. ஆயினும், ஒரு கடலைக்காரி போதி மரத்தடி ஞானோபதேசியாகவும், ஒரு சாதாரண பால்காரி அன்பு செலுத்துவதன் மகத்துவத்தைப் போதிக்கும் ஆதித் தாயாகவும் பரிணமிப்பது இன்றைய அனுபவ முதிர்ச்சியில்தான் வந்து கூடமுடியும்.

பல்வேறு வசதிகளையுடைய குடும்பங்கள் ஊரில். அதனால் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு நேரங்களிலேயே பள்ளி போக முடிந்திருந்தது. நான்காம் ஐந்தாம் வகுப்புவரை ஐயாவின் சைக்கிளில் பள்ளி சென்றுவந்த நான் பின்னால் நடந்துதான் போய்வந்துகொண்டிருந்தேன்.

எனது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கந்தசாமி, பள்ளி முடிந்து என்னோடுதான் ஒன்றாக வீடு வந்துகொண்டிருந்தான். என்றைக்காவது கந்தசாமி நேரத்துக்கு பள்ளி வந்ததாக எனக்கு நினைவில்லை. பாலும் பணிஸ_ம் கொடுத்திருக்காவிட்டால், கந்தசாமி பள்ளிக்கே வந்திருக்க மாட்டானென்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அரை மணி, முக்கால் மணி தாமதமாகக்கூட அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறான். அந்த நாட்களில் அவன் வாசல்புறமாக வகுப்புக்கு வரமாட்டான். ஒரு பகுதி மறைப்பாக அடைக்கப்பட்ட வேலிகளில் நாய்கள் இட்ட பொட்டுக்களில் நுழைந்து அல்லது மறுபுறத்திலிருக்கும் கம்பி வேலிக்கு மேலால் ஏறி வருவான். எது வசதியோ அதன்படி செய்வான்.

எப்போதும் கையில் பிரம்புடன் நடமாடும் தலைமையாசிரியரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதுதான் அவனது ஒரே எண்ணம். மற்றப்படி ஆசிரியர்கள்பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டதில்லை. பல ஆசிரியர்களும் அவனது வீடு தாண்டியே தமது வீடு செல்லவேண்டியவர்களாயிருந்தனர். மற்ற ஆசிரியர்களும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான். எவரும் அவனை உதாசீனம் செய்துவிட முடியாது. பட்ட தென்னம் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் கிளியை, மாமரக் கொம்பர்களில் ஓடித் திரியும் அணிலை அவன் பொத்துப்பொத்தென ஒரே கல் வீச்சில் விழுத்துவதை அவர்கள் கண்டிருக்காதவர்களா என்ன! எவ்வளவுதான் நேரமாகி பள்ளி வருபவனானாலும் கந்தசாமி சின்ன இடைவேளை மணி அடிப்பதற்கு முன்னர் வந்துவிடுவான் என்பதில்தான் அவனது திறமை இருந்தது.

காலை 10.15க்கு இடைவேளை மணி அடிப்பதன் முன்னர் ஐந்து நிமிடத்துக்கு முன்னரே வகுப்பில் சுறுசுறுப்பாகிவிடுவான் கந்தசாமி. மணிக்கூடு பார்க்காமலே சரியாக நேரத்தைக் கணித்துவிடும் நேரப் பிரக்ஞை அவனிடமிருந்திருக்கிறது. மணி அடித்ததும் எல்லா மாணவர்களும் விழுந்தடித்துக்கொண்டு பால் வார்க்கும் இடத்துக்குப் பறந்து போவார்கள். சிறிய வகுப்பு மாணவர்கள் முதலில் செல்லக்கூடிய வாய்ப்பாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படும் இடங்கள் இருந்தன. ஆயினும் எங்கள் வகுப்பிலிருந்து முதலில் செல்லக்கூடியவனாக அவனே இருந்தான்.

பால் காய்ச்சுவதற்கும், அதை இறக்கி சீனி போட்டு கலக்கி மாணவர்களுக்கு அளவாக ஊற்றுவதற்கும், பின்னர் காய்ச்சிய, குடித்த பாத்திரங்களைக் கழுவி வைப்பதற்கும் பள்ளிக்குக் கிட்ட வீடுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தது பள்ளி நிர்வாகம்.

அவளுக்கு அன்னபூரணியென்று பெயர். நல்ல சிவந்த மனிதி. வாளிப்பான உடம்பு. கருகருவென்ற கூந்தல் அவளுக்கு. எண்ணெய் வைத்து நன்றாக வாரி முடிந்திருப்பாள். நீலம், சிவப்பு, பச்சைகளில் நூல் சேலை கட்டுவாள். பப்ளின் துணியில் சட்டை அணிவாள். கடலைக்காரி போல அல்ல, பால்காரி ஐயர்ப் பெண்களைப்போல துப்புரவாக இருப்பாள். காலையில் பளிச்சென்று அவளது கோலம் இருக்கும். பெரிய தனங்கள் அவளுக்கு. குறுகிய நேரத்தில் அத்தனை மாணவர்களுக்கும் பாலைக் கொடுத்துவிட பம்பரமாய்ச் சுழல்வாள். மாணவர்கள் குடிக்கும் மூக்குப் பேணிகளை உடனுக்குடன் கழுவி மற்றைய மாணவர்களுக்கு கொடுக்கும் அவசரத்தில் அவள் தன்னையே மறந்திருப்பாளென்று நினைக்கிறேன். அவளது தனங்கள் அதிகமும் தம்மை வெளிக்காட்டும் தருணங்கள் அவைதான். என் அவள்மீதான கவனக் குவிப்புகள் அதனால்தான் இருந்தனவோ?

எங்கள் வகுப்பிலிருந்து முதலில் வந்துவிடும் கந்தசாமி பாலைக் குடித்தவுடனேயே வகுப்புக்கு வந்துவிடமாட்டான். சிலவேளைகளில் முட்டியடித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் மறுபக்கத்தில் நின்று இன்னொரு முறை பால் வாங்கிக் குடிப்பதை சிலவேளைகளில் நான் கண்டிருக்கிறேன்.

‘ரண்;டாந்தரம் ஒருதரும் பால் வாங்கக்குடாது. மற்றப் பிள்ளையளுக்குக் குடுக்க காணாமல் போயிடும்’ என்று அவ்வப்போது பால்காரி சொல்லுவாள்தான். கந்தசாமிக்கு அவை கேட்பதில்லைப் போலும்! அவ்வாறு இரண்டாந்தரம் பால் வாங்கிக் குடித்த பின்னர் நான் கவனித்திருக்கிறேன். அப்போதுதான் அவனது முகம் களை தீர்ந்து பொலிவு கொண்டிருந்திருக்கிறது.

அதிகமும் முண்டியடித்துக்கொண்டு எதையும் வாங்கும் சுபாவமில்லாத நான் இடைவேளை முடிந்த மணி அடிக்கிற வேளையில்தான் பால் வாங்கிக் குடிக்க முடிந்திருக்கிறேன். அது எனக்குச் சிரமமாகவும் இருக்கவில்லை. பார்வை விருந்து எனக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது. நான் மட்டுமேதான் அப்படியா? வேறு சிலரும் அப்படி இருந்திருக்க முடியுமா? சொல்ல எனக்குத் தெரியவில்லை. என் அழுகல்கள் தொடங்கியது அந்தப் புள்ளியிலிருந்தாயும் இருக்கலாம்தான்.

பால் தட்டுப்பாடாக இருந்தது ஒரு கிழமையில். வரவேண்டிய பால்மா ரின்கள் பள்ளியை வந்துசேரத் தாமதம். ஒருநாள் வழக்கம்போல் பிரம்பும் கையுமாக மாணவர்கள் பால் குடிக்குமிடத்தில் நின்று ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் தலைமையாசிரியர். வரிசைமுறை இல்லாவிட்டாலும் சத்தம் சந்தடிகளற்று மாணவர்கள் பாலை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அவசரமாக ஓடிவந்தும் அன்றைக்கு தலைமையாசிரியர் வந்துநின்று தனது இரண்டாவது பேணிப் பாலைக் கெடுத்துவிட்ட சோகத்தில் நின்று பாலை வாங்கிக் குடிக்கிறான் கந்தசாமி. அவன் குடித்து முடிகிறவரையில் அவனது கையைப் பிடித்திழுத்து மேலும் பேணி நிறைய வார்த்துவிடுகிறாள் பால்காரி. கந்தசாமி குடித்துவிட்டு முகம் மலர திரும்பிச் செல்கிறான்.

நான் பால் வாங்கிக் குடிக்கும் நேரத்தில் சற்று முன்னே வந்து பால்காரியிடம் கேட்கிறார் தலைமையாசிரியர், ‘என்ன பால்காரம்மா, நீங்களே ரண்டாம்தரம் பால் வார்த்து விடுகிறியளே?’ என.

அவள் சொல்கிறாள்: ‘பாவம், அவன் பசியோடு இருப்பான்.’

‘மற்றப் பிள்ளையளுக்குக் காணாமல் போயிடுமெல்லோ?’

‘அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன், சேர். எந்தப் பிள்ளை எவ்வளவு குடிக்குமெண்டெல்லாம் எனக்குத் தெரியும். குறையக் குடிக்கிற பிள்ளையின்ரை பால் கூடக் குடிக்கிற பிள்ளைக்கு.’

தலைமையாசிரியர் மேற்கொண்டு பேசவில்லை. அப்படியே அப்பால் நகர்ந்து மெல்லப் போய்விடுகிறார். இனிமேல் அந்த இடத்தில் அவரது கண்காணிப்புக்கு அவசியமில்லை.

இப்போது நினைக்கிறபோது உள்ளம் சிலிர்த்துப் போகிறது. ஒரு தாயேபோல் என்ன கரிசனை! கந்தசாமியின் ஊத்தை உடுப்புக்குள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு வயிற்றை அவனது சொந்தத் தாயேபோல் உணர்ந்திருக்க யாரால் முடிந்திருக்கும்! அவளுக்கு விம்மிய இரண்டு முலைகள் இருந்ததைத்தான் நான் கண்டிருந்தேன். ஆனால் இப்போது தெரிகிறது, அவளுக்கு ஆயிரம் முலைகள் இருந்தனவென்று. ஆயிரம் குழந்தைகளுக்கானவை அந்த ஆயிரம் முலைகளும்.

ஆயிரம் முலைகள்கொண்டு இந்த உலகு புரந்ததாய்ச் சொல்லப்படும் ஆதித் தாயாக உண்மையில் அந்தப் பால்காரி இப்போது எனக்குத் தரிசனமாகத் தொடங்கினாள்.

000

நாளை, 01 ஆனி 2010

கலாபன் கதை: 12


கூட்டிலிருந்து விடுதலையாக்குதல்


எனக்குத் திருமணமான பின்னர் தன் சரீர இச்சைகள் புரியப்பட்ட பெண்கள்பற்றி கலாபன் எனக்கு மிதமாகவேதான் எழுதினான் என்று சொல்லவேண்டும். தான் கொண்டிருந்த உணர்வுகள் என்னையும் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவன் கவனம்கொண்டிருந்தான் என்பதை அந்தத் தவிர்த்தலிலிருந்து நான் புரிந்துகொண்டேன். அவனது கடிதங்களால் எழுச்சியடைந்து கப்பலேற சிறிதுகாலம் முயன்றுகொண்டிருந்தவன்தானே நானும்! அதிகமாகவும் அவன் எழுதியவை உடல் மன இச்சைகளுக்கு இயைந்துவிடும்படியான சூழ்நிலைகளை விளக்குவனவாக மட்டுமே இருந்தன.

தாய்லாந்திலிருந்து அவன் எழுதிய கடிதம், அவன் எழுதிய கடிதங்களுள் முக்கியமானது. சரீரார்த்தமான ஆசைகளும், மனோவுணர்வு சார்ந்த காதல் கருணை போன்றனவும் வௌ;வேறு திசைகளில் பயணம் செய்யும்பொழுது வாழ்க்கை தளும்பிவிடுகிறது என அதில் அவன் எழுதியிருந்தான். அவற்றின் ஒரே திசைப் பயணமே ஒருவனை ஏகபத்தினி விரதனாகவும், ஒருத்தியை ஏகபுரு~ விரதையாகவும் ஆக்குவதாக அவன் சொல்லியிருந்தான்.
‘ஒரு குடும்பஸ்தனுடைய மன உடல் உணர்வுகளினது வௌ;வேறு திசைகளினூடான வழிப்பயணங்கள் என்னைப்போன்ற ஊதாரிகளினைத்தான் உருவாக்குகின்றது.

நீண்டகாலத்துக்குப் பிறகு இந்த ஊதாரித்தனத்தை இறுக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவனோ ஒருத்தியோ இந்த உடலார்த்தமான இச்சைகளைத் தீர்க்க ஓடுமட்டும் ஓடிச் சென்றாலும், ஒரு புள்ளிக்குமேல் செல்லாமல், மனஉணர்வுகளை மீட்டுக்கொண்டு வாழ பலபேர் வந்துவிடுகிறார்கள். பிற ஆணொருவனோடு பாலியல் தொடர்பு வைத்திருந்த பெண்ணொருத்தி தன்னோடு குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்துவிடும்படியான அவனது பல ஆசைவார்த்தைகளையும் உதறித் தள்ளிக்கொண்டு தன் புரு~ன், தன் குழந்தையென்று திரும்பிவந்திருக்கிற பல சம்பவங்களை நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறு போய்ப் போய்த் திரும்பிவந்துகொண்டிருக்கிற பெண்களும் அதிகம்தான். தனிமனிதர்களின் ஒழுக்கவீனமாக இதைப் பார்க்காமல் சமூகம் விட்டிருக்கும் இடைவெளியானது இதற்கான விதையை இட்டு, உரமிட்டு வளர்த்துவிடுகிறது என்பதே எனது கருத்து. கிராமங்களில் இந்த பாலியல் மீறல்கள் உண்டெனினும், அவை நகரங்களில்போல் இல்லை. நகரங்கள் சாபங்களின் கொள்கலன்களாகவே எப்போதும் இருக்கின்றன.’

மெய்யெனவே தோன்றியது. கலாபன் கப்பலேறிச் சென்றிருக்காவிட்டால் ஒருவேளை அவனும் நல்ல ஒரு கணவனாக, நல்ல ஒரு தந்தையாக வாழ்க்கையின் அழைப்புகளில் மிக இயல்பாகச் சென்று வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும்தான்.

கலாபன் திருந்தவில்லைத்தான், ஆனாலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான், இப்போதைக்கு அது போதும் என நான் நினைத்துக்கொண்டேன். அவன் மனைவியும் இப்போது வாழ்க்கையைச் சுமப்பதுபோல எப்போதும் ஒரு நெருக்கத்தில் முக இறுக்கத்தோடு இல்லாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் செழுமையோடும் இருப்பதை ஊர் சென்றிருந்தபோது கண்டிருந்தேன். அவனது யோசனை குடும்பம் சார்ந்த அக்கறைகளுக்கான செயலூக்கம்கொள்ள ஆரம்பித்திருந்ததின் பிரதிபலிப்பாக அதை நான் கருதினேன்.
கடிதத்தில் இருந்த இன்னொரு நிகழ்ச்சிபற்றிய குறிப்பும் நெடுநாளாக என் மனத்தில் இருந்துகொண்டிருந்தது. தாய்லாந்தில் இருந்தபோது ஒருமுறை கலாபன் கடிதங்கள் அனுப்ப தபால்நிலையம் சென்றிருக்கிறான். தபால்தலைகளை வாங்கி ஒட்ட ஆரம்பிக்கையில் அருகே நின்றிருந்த ஒரு பெண் சொன்னாளாம், ‘உனது கடிதங்கள் ஒழுங்காக விலாசதாரரைப் போய்ச் சேரா’தென்று. கலாபன் திகைத்து ஏனென்று கேட்க அந்தப் பெண் சொன்னாளாம்: ‘தபால் தலையில் இருக்கும் படம் இந்த நாட்டு அரசனதும், அரசியினதுமாகும். நீ அவற்றைத் தலைகீழாகவும், பக்கப்பாடாகவும் ஒட்டியிருக்கிறாய். பக்கப்பாடாக தபால்தலை ஒட்டப்பட்டவை சென்றுசேர வாய்ப்பிருக்கிறது, ஆனால் தலைகீழாக ஒட்டப்பட்டவை செல்லவே செல்லாது.’

அதை ஒரு முடியரசு நாட்டின் மக்களது மனநிலை சார்ந்த முக்கியமான நிகழ்வாகக் கூறி, மிகுந்த சிரமத்தின் பேரில் முத்திரைகளை உரித்தெடுத்து மறுபடி பசை தடவி நேராக ஒட்டி அனுப்பினானாம் கலாபன்.

அந்தக் கடிதத்துக்கான பதிலை அந்த நிகழ்வினை வைத்தே நான் ஆரம்பித்திருந்தேன். ‘செல்லிடம் சேராது எனத் தெரிந்ததும், ஒட்டிய முத்திரைகளை உரித்து நேராக ஒட்டி அனுப்பியிருக்கிறாய். உனக்கே தெரிகிறது உன் செயற்பாடுகள் என்னமாதிரி ஊதாரியாக உன்னை ஆக்குகின்றனவென. உன்னை அந்த வழியிலிருந்து மாற்றி எப்போது திசைதிருப்பப் போகிறாய்?’

000

திருகோணமலையிலிருந்து நண்பன் எழுதிய கடிதம் கலாபனைச் சென்று சேர்ந்தபோது அவனது கப்பல் பம்பாய் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. பம்பாய்த் துறைமுகத்தை அடைவதற்கு கப்பலுக்கு நீண்டநேரம் எடுத்ததாகக் கலாபன் கருதினான். உண்மையும் அதுதான். மஹாரா~;டிரா தீவுகள் நிறைந்த மாநிலம். பம்பாயே பிரதான பூமியோடு பாலத்தால் இணைக்கப்பட்ட தீவுதான். அத் தீவுகளைத் தாண்டி துறைமுகத்தை அடையவேண்டி இருந்ததாலேயே நிறைய நேரம் பிடித்திருந்தது.

தேவையெனக் கேட்டிருந்ததில் பாதிக்கும் குறைவாகத்தான் துறைமுகம் சேர்ந்ததும் எல்லேருக்கும் பணம் கிடைத்தது. கப்பல்காரர் முணுமுணுப்போடு என்றாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு காலை பத்து மணியளவில் பணம் கிடைத்ததென்றால், மாலை ஆறு மணிக்கு மேல் வேலையில் இருக்கவேண்டியவர்கள் தவிர மீதிப்பேர் கப்பலில் இல்லை.
மதியச் சாப்பாட்டுக்கு மேல் எந்திர அறை சென்ற கலாபன் ஐந்து மணிவரை அங்கே வேலைசெய்தான். மேலே வந்து குளித்து வெளிக்கிட்டுத் தயாரானபோதும் இறங்க உற்சாகமின்றி அங்குமிங்குமாய் அலைந்தபடி கப்பலிலேயே இருந்துகொண்டிருந்தான். பிறகு தனது அறைக்கு வந்து பியர் அருந்திக்கொண்டிருந்தான். எட்டு மணிக்கு மேலேதான், முதல் தடவையாக வந்துள்ளபடியால் பம்பாயைப் பார்த்துவிட்டு வரலாம் என வெளியே சென்றான். கூடவர ஒருவன் ஓடிவந்தான். தான் ‘அங்’கெல்லாம் செல்லப்போவதில்லையெனக் கூறிவிட்டு பாதை மாறினான் கலாபன்.

பம்பாயில் அழகான பகுதிகள் இருக்கலாம். ஆனால் பம்பாய்த் துறைமுகப் பகுதி அசிங்கமானது. ஒரு பெரும் அளவுக்கு விரிந்துகிடந்த துறைமுகத்துக்கு பல வழிகள் இருந்தன. ஒவ்வொரு வழியிலும் லொறிகள் அடைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தன. துறைமுகத் தொழிலாளரின் போக்கும் வரத்தும் வேறு. உள்ளே நிலைமை இப்படியென்றால், வெளியே நிலைமை படுமோசமாக இருந்தது.
பசிய இலைகளையுடைய அரசு, வேம்பு, வாகை போன்ற மரங்கள் தூசியினால் மூடப்பட்டு கருமையடைந்து கிடந்தன. அவை உதிர்த்த இலைச் சருகுகள் தெருவின் இரண்டு கான்களிலும் நிறைந்து கிடந்தன. மரங்களின் அடிகள் வெற்றிலைத் துப்பல்களால் செம்மை பரவியிருந்தன. அங்கே ஒருவர் இயங்குவதற்கு செலூக்கத்துக்கான ஒரு போதை தேவைப்பட்டதுபோலும். அதை பான் பராக் என்ற பாக்குத் தூள் கொடுத்தது. பான் பராக் வியாபாரம் அபரிமிதமாக இருந்தது பம்பாயில். தொழிலாளர், அலுவலக ஊழியர் மட்டுமல்லாது, அதிகாரிகள்கூட அதன் சிற்றடிமைகளாக இருந்தமை இது காரணத்தால்தான்.

ஆவணி மாதமாக இருந்தது அக் காலம். பம்பாயில் அதிக மழை பெய்யும் காலமும் அதுதான். அன்று மழை பெய்ததா தெரியவில்லை, ஆனால் ஒரு மழைக் காலத்தின் அத்தனை அழுக்குகளும் துறைமுகத்தின் வெளித் தெருக்களில் ஒதுங்கியிருந்தன. பாதை ஒரு சீர்கேடு எனில், பாதையின் இரு பக்கங்களிலும் நிறைந்திருந்த சாக்கு, தார்ப்போலின், பொலித்தீன் தாள் குடிசைகள் இன்னொரு சீர்கேடு. வறுமை விலக்கப்பட வேண்டியதே தவிர, வெறுக்கப்பட வேண்டியதில்லையெனத் தெளிவிருந்தது கலாபனுக்கு. அதுவும் அக் குடிசைகளின் வாசல்களில் கேட்ட தமிழ்ப் பேச்சுக்களும், உள்ளே ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பாடல்களும் அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி பம்பாய் வந்து வதங்கும் தமிழ்க் குடும்பங்கள் எனத் தெரிந்தபோது அவனால் அனுதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

பம்பாய் பகலில்தான் நெரிசலும், இரைச்சலும். இரவில் பகலில்போல் அது இல்லை. ஆனாலும் இரைந்துகொண்டும் பறந்துகொண்டுமே இருந்தது. அந்த இரைச்சல் உழைத்துப் பிழைப்பதற்கான நெரிசலும் இரைச்சலுமாக நிச்சயமாக இல்லையென்பதை கலாபனுக்கு அதன் இயங்கு முறை சொல்லிக்கொண்டிருந்தது.

கலாபன் நடைபாதைக் குடியிருப்புத் தெருக்களைத் தாண்டி பம்பாய் விக்டோரியா டெர்மினல் புகையிரத நிலையத்தடிக்கு வந்தான். அதுதான் பிரபலமான வி.ரி.ஸ்ரே~ன்.
பயணச் சுறுசுறுப்புகள் பகலில்போலவே இரவிலும் அங்கே பறந்துகொண்டிருந்தன. கலாபன் அதையும் கடந்து ஒரு தெருவில் நடந்தான். அழகிய கடைத்தெருவாக இருந்தது அது. அழகழகான ஆண்களும் பெண்களும் அதிகமாகவும் ஆங்கில உரையாடல்களுடன் நடந்துதிரிந்தனர்.

பம்பாய் மஹாரா~;டிர மாநிலத்தின் தலைநகர். இந்தித் திரைப்பட உலகத்தின் தலைமையகமும் அதுதான். அதனால்போலும் துறைமுகம் சார்ந்த பகுதியைத் தவிர அது ஒரு தேடலோடு அலைந்துகொண்டிருந்ததாய்ப் பட்டது அவனுக்கு.

பாலியல் தொழிலுக்கு கொடி கட்டியிருந்த இடமும்தான் பம்பாய். வயதுவாரியாக மட்டுமில்லை, மாநிலவாரியாகவும் அங்கே விலைமாதர் கிடைத்தனராம். கலாபன் அறிந்திருந்தான். ஆனாலும் அதைச் சென்று சேர்கிற வழி தெரியாதிருந்ததோடு, அதற்கான மனநிலையும் அவன் அற்றிருந்தான் அந்தப் பொழுதில். மனநிலை அற்றிருந்ததற்கு இரண்டு காரணங்கள் அவனளவில் இருக்க முடியும். ஒன்று, அங்கே எல்லா மாநிலங்களிலும்போல டாக்ஸி ட்ரைவர்கள் நம்பப்பட முடியாதவர்களாயிருந்தனர். மற்றது, றெட் லைட் எனப்படும் அங்கீகாரமுள்ள விலைமாதர் பகுதியானது மிக மலிவான பாலியல் தொழில் பெண்களின் இடமாக பால்வினை நோய்களின் மய்யமாக இருந்தது.

தற்செயலாக சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகளில் மின்னிக்கொண்டிருந்த றெஸ்ற்றோறன்ற் ஒன்று கலாபனது கண்களில் பட்டது. கொஞ்சம் குடிக்கவும், கப்பலிலேயே எப்போதும் சாப்பிடுவதால் கொஞ்சம் மாற்றான ஓர் இரவுச் சாப்பாட்டுக்காகவும் அதற்குள் நுழைந்தான்.
நவீன ரகமாக இருந்தது அது. ஒருபால் நேர் இன்னிசை வழங்குநர்கள். மறுபால் அதனை ரசிக்க குடிவகையுடன் முன்னிருந்துகொண்டிருந்தோர். தனிமையை விரும்பியோர் ஒரு பகுதியாக. இப்படி விசாலமான றெஸ்ரோறன்ற் அது. பில் அதிகமாகவே வரக்கூடும் என்று கலாபன் நினைத்தான். ஆனாலும் ஒரு கப்பல்காரனை முழுங்குகிற அளவாக அது இருக்காதென்று நினைத்து, முதலிலேயே இரண்டு றாம் விஸ்கிக்கு தனக்கு பரிசாரகியாக வந்த ஒரு மெலிந்த பஞ்சாபிப் பெண்ணிடம் சொன்னான்.

ஒரு நடிகையைப்போன்ற எழிலோடு இருந்தாள் அந்தப் பரிசாரகி. மெலிந்து உயர்ந்து கண்களில் ஒரு குறும்பின் துடிப்புடன் துடியோடு இருந்தாள். இடையும் துடிதான். ஆனாலும் மேலேயிருந்த வலுத்த தனங்களைத் தாங்கும் சக்தியோடுதான் அது இருந்தது.
நேரம் பன்னிரண்டுக்கு மேலானது. கலாபன் ஆங்கில, இந்தி பாடல்களின் அந்த சத்தக் களேபரத்திலிருந்து வெளியே வந்தான்.

மெல்லிய மழை தூறிக்கொண்டிருந்தது. போதையில் அந்த இரவும், மழைத் தூறலும், அதன் காரணமாய் விரவிநின்ற குளிரும் மேனியில் தகிப்புண்டாக்கத் தொடங்கியிருந்தன. அவன் வந்தபோது வீதியிலிருந்த மக்கள் நடமாட்டத்தில் பாதிக்குப் பாதி அப்போது இல்லை. அந்தச் சூழ்நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. உடனடியாக கப்பலுக்குத் திரும்புவதென்ற எண்ணத்தோடுதான் வெளியே வந்திருந்தான். அந்த விருப்பத்தை சூழ்நிலை மாற்றிக்கொண்டிருந்தது. அவனிடத்தில் இப்போது இருந்தது வேறு விருப்பம்.
அவன் சிகரெட் எடுத்துப் பற்றவைத்தான்.

அப்போது திடீரென பாதையோரத்தில் ஓர் இருட்டான இடத்திலிருந்த ஒரு மனிதன் வந்து, கடையெல்லாம் பூட்டிவிட்டது, ஒரு சிகரெட் தர முடியுமாவெனக் கேட்டான். தமிழிலேதான். கலாபன் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான். அவனுக்காக லைட்டரைத் தட்டி சிகரெட்டைப் பற்றவைத்த பொழுதில்தான் அந்த எண்ணம் கலாபனுக்குத் தோன்றியது. இவன் தமிழனாகவும் இருக்கிறான், இவனிடம் பேச்சுக்கொடுத்து பம்பாயின் இரவு உல்லாச இடங்கள்பற்றி விசாரித்தாலென்ன?

பேச்சுக்கிடையில் தனது பெயர் ராஜு எனச் சொன்ன அந்த மனிதன், தான் ஓவியராக மாதுங்காவிலிருக்கும் லட்சுமியென்ற தமிழ்ப் பட தியேட்டரில் வேலைசெய்வதாகவும், இரண்டு நாட்களாக அங்கேயே இருந்து மறுநாள் வெளிவரப்போகும் புதிய தமிழ்ப் படம் ஒன்றுக்கான பெரிய தட்டிச் சித்திரங்களை வரைந்துவிட்டு மாலையிலேதான் வந்ததாகவும், சிறிய ஒரு தாக சாந்தி அதுபோல குறைந்த ஊதியக் கலைஞர்களுக்கும் இருந்துவிடுகிறதே என்ற தன் சலிப்பை ஒரு நகைச்சுவையோடும் கூறினான் ராஜு.

பேச்சுச் சுவாரஸ்யத்தில் அவர்கள் வி.ரி.ஸ்ரே~னடிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை உரசுமாப்போல இரு பெண்கள் கடந்துசென்றனர். கலாபன் நின்றான். சரக்குகள்போல இருக்கே? என்றான். ‘இதென்ன சார், சரக்கு? உங்களுக்கு வேணும்னா வாங்க, சூப்பர் சரக்கே எடுத்துத் தர்றேன்’ என்றான் ராஜு. ‘இந்த நேரத்திலா?’ ‘இதற்கு விடியும்வரை நேரம்தான், சார்.’

அவ்வாறு அவர்கள் வந்துசேர்ந்த இடம்தான் கோழிவாடா என்ற பகுதி.

தெருவின் இரண்டு பக்கங்களிலும் முந்நூறு நானூறு என குடிசைகள். குடிசைகளின் பின்னால் சிறுசிறு மலைகள் தெரிந்தன. துறைமுகத்தைக் கப்பலில் அடைந்தபோது கலாபன் சில குறுமலைகளைக் கண்டிருந்தான். அந்த மலைகளாகக்கூட அவை இருக்கலாம். தெருவெங்கும் உடைத்த மலைக்கற்கள் சிதறிக் கிடந்தன. கல் குவாரியோ? என அதிசயித்தான் கலாபன். அங்கே வேலைசெய்யும் தொழிலாளரின் தற்காலிகக் குடியிருப்புக்களா அவை?

அந்தக் குடிசைகளுள் ஒன்றின் வாசலில் நின்று யாரையோ அழைத்தான் ராஜு. கதவு திறந்தது. உள்ளே சென்றனர் இருவரும். போதுமான வெளிச்சம் செய்யாத சிறிய மின்குமிழ் விளக்கொன்று எரிந்துகொண்டிருந்தது. புதிய ஆண்கள் வந்திருப்பதறிந்து அங்கேயிருந்த இரண்டு மூன்று பெண்கள் உதட்டின் சிவப்புச் சாயம் பளீரிட முன்னால் வந்து நின்றனர். தனக்கு அவர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றுவிட்டான் கலாபன். அப்போது, அம்மா என்ற அந்த திருநங்கை, ‘புதுப்பொண்ணு என்ன செய்யிறா? அவளை வரச்சொல்லுடீ’ என்று இரைந்தாள்.

புதுப்பெண் என்றபடியாலே சற்றுச் சார்பாகச் சிந்திக்கவே இருந்த போதை கலாபனைச் செய்துகொண்டிருந்தது.

கலாபன் சம்மதித்தான்.

ஒரு இரவுக்கு இருபத்தைந்து ரூபா. இரண்டு பேருக்கு ஐம்பது. ராஜுவையும் வலிந்து தங்கவைத்தான் கலாபன்.

அவனுக்கு மேலே இருவர் படுப்பதற்கான அளவுமட்டுமுடைய ஓர் அறை. கீழே ராஜுவுக்கு.
ஒரு கட்டத்தில் அதனுள் எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்தாள் அந்தப் பெண். உடைகளைக்கூட கழற்றாமல் படுத்தாள். கலாபன் அதிசயித்தான். புதுபெண் என்றால் அப்படித்தானோ? அவன் வற்புறுத்தியே பாவாடை சட்டையைக் கழற்றவைக்க வேண்டியிருந்தது.

அவள் வெறுமேலானதும் அவளது மார்பில் கைவைத்தான் கலாபன்.
அவள் சரீரம் ஒருமுறை பதறியது.

சட்டெனக் கையை எடுத்துக்கொண்டான் அவன்.

அந்தப் பதற்றம்பற்றி அவன் அறிந்திருக்கிறான். பிறபுரு~னொருவனது தொடுகையில் ஒழுக்கமான பெண்களிடத்தில்மட்டும் தோன்றுகிற எதிர்ப்புணர்வு அது. அதை ‘பயிர்ப்பு’ என்கிறது இலக்கணம். பெண்களுக்கு இருக்கவேண்டியவையென வகுக்கப்பட்ட நான்கு குணங்களான அச்சம், மடம், நாணம் என்ற குண வரிசையில் நான்காவது அந்தப் பயிர்ப்பு.
அது ஒரு பெண்ணுக்கு இருக்கவேண்டுமா என்ற விசாரணை அவனிடமும் உண்டு. ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று பாரதிகூடப் பாடிவைத்திருக்கிறான். ஆனால் அதுவல்ல அப்போது அவனது பிரச்சினை. அந்தப் பயிர்ப்பு அவளிடம் இருக்கிறது. அவள் சறுக்கி விழுந்த இடமாகக்கூட அந்த விபசாரக் கூடம் இருக்கலாம். ஒரு பலாத்காரத்தில் அவள் அங்கே கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கவும் கூடும்.
கலாபன் அவளுக்கு அது விருப்பமில்லையா என்று கேட்டான்.

அவள் சிறிதுநேரம் குலுங்கினாள். அழுகைச் சத்தம் வெளியே கேட்டுவிடக்கூடாது என்ற பயத்தில்போல் அடக்கிய அழுகையின் அதிர்வு அது. பிறகு தெளிந்துகொண்டு தன் கதையைச் சொன்னாள்.

அவளது சொந்த இடம் தமிழ்நாட்;டில் மதுராந்தகம். வீரசாமி செட்டியாரின் பேர்த்தி.
அவள் தன் கதையைச் சிறிது விஸ்தாரமாகத்தான் சொன்னாள். மீதி இரவை முடித்துவிடுகின்ற எண்ணத்தோடு இல்லை, அவனே தன் கதையைக் கேட்கும் இதயத்தோடு அவளிடம் வந்திருக்கிற முதல் ஆள்.

பம்பாய் சென்று குடித்தனம் நடத்த விமானப் படையில் வேலைசெய்த தன் காதலனோடு வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்ணாகத்தான் போன மாதத்தில் அவள் இருந்தாள். ஐந்து நாட்களில் தான் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்துவிட்டு அவளைத் தங்கியிருந்த லொட்ஜிலேயே தன்னந்தனியனாக விட்டுவிட்டு காதலன் ஓடிவிட, கையில் காசுமில்லாது லொட்ஜ் மனேஜருக்கு உடலை சாப்பாட்டுக்காகவும் அறை வாடைகைக்காவும் கொடுத்துக்கொண்டு ஒரு கிழமையைக் கடத்தியிருக்கிறாள் மங்கையர்க்கரசி என்ற இயற்பெயருடைய அந்தப் பெண். கடைசியில் ஒரு தரகனுக்கு விலைபேசப்பட்டு அந்த இடத்தை மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வந்தடைந்திருந்தாள் அவள். வந்தபோது மிகவும் சுகவீனமாக இருந்தாள். மருந்தெடுத்துக் கொடுத்தாளாம் அந்தக் கூட்டின் பாதுகாவலி. அன்றுதான் தன்னால் நடமாட முடிந்திருந்ததாம். கூட இருந்த மற்றைய பெண்களின் கதையும் ஏறக்குறைய அதேதானாம். ஆனால் விதி எழுதியாகிவிட்டது, இனி அங்கிருந்து மீட்சியில்லை, அங்கேயுள்ள அரவாணிகளின் காவலிலிருந்து அதுவரை யாரும் தப்பியதில்லையென சொல்லி முடித்தாள் அங்கே லட்சுமி என நாமம் சூட்டப்பட்டிருந்த அந்தப் பெண்.

‘வீட்டுக்குப் போகிறாயா, நான் அனுப்பிவைக்கிறேன்?’

‘நான் என்ன பிழை செய்திருந்தாலும் தாத்தா ஏற்றுக்கொள்வார். என்னில் கொள்ளை பிரியம் அவருக்கு. ஆனால் இங்கிருந்து தப்பிப்போக முடியாது.’

‘அதை நான் பார்க்கிறேன்.’

இரவு முழுக்க யோசித்துக்கொண்டே கிடந்தான் கலாபன்.

மறுநாள் ராஜுவிடம் வி~யத்தைச் சொல்லி, அவளை அங்கிருந்து தப்புவிக்க உபாயம் கேட்டான். ராஜு முடியவே முடியாது என்றுவிட்டான். அது உயிருக்காபத்தானது என்றான்.
கடைசியில் கலாபன் வற்புறுத்தியதின் பேரில் ஒரு யோசனை சொன்னான் ராஜு. அதற்கு பணம் நிறையத் தேவைப்படும் என்றான். கலாபன் திட்டத்தைமட்டும் சொல்லச் சொன்னான்.
அடுத்த நாளும் கலாபன் அங்கே சென்றான். அதே பெண்ணுடனே அறையில் தங்கினான். இரண்டாம் நாள் நள்ளிரவுக்கு மேல் பொலிஸ் வான் ஒன்று அந்தப் பகுதியை அடைந்தது. சில குடிசைகள் சோதனையிடப்பட்டன. கலாபன் இருந்த மாடிஅறைக் குடிசையும்தான். குடிசைப் பாதுகாவலியான அம்மாவின் எத்தனை கெஞ்சுதலும், இருநூறு…முந்நூறு…தருகிறேன் என்ற எந்தப் பேரம் பேசுகையும் அதிசயமாக அன்றைக்கு பொலிஸிடம் எடுபடவில்லை. அங்கிருந்த பெண்களும் ஆண்களும் வானில் ஏற்றப்பட்டனர்.

வெகுதூரம் சென்றதும் வான் நின்றது. கலாபனும், மங்கையர்க்கரசியும் இறக்கிவிடப்பட்டதும் வான் மறுபடி புறப்பட்டது. முன்னிருக்கையில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் சலுட் அடித்து விடைபெற்றார். கலாபனும் கையசைத்தான்.

பத்து நிமிட நடையில் இருவரும் வி.ரி.ஸ்ரே~னை அடைந்தனர். பம்பாய்-மெட்ராஸ் புகைவண்டி மேடைக்கு வரும் நேரமாகவிருந்தது அது. கலாபன் இரட்டிப்பு விலைக்கு மேடையிலேயே அந்தப் பெண்ணுக்காக ஒரு ரிக்கற் வாங்கினான். ரிக்கற்றையும் சிறிது பணத்தையும் அவளிடம் கொடுத்துபோது அதை வாங்கிக்கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் நன்றி ததும்ப கண்ணீர் துளிர்த்திருந்தது.

ஸ்ரே~னைவிட்டு கலாபன் வெளியே வந்தான். காற்று குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. புகை, தூசியற்ற தெளிந்த காற்று. மனம் லேசாகவிருந்தது. வி~க் கூடொன்றிலிருந்து ஒரு பெண்ணை விடுதலையாக்கியதில் அந்த லேசு. அது அவளிடம் அடைந்திருக்கக்கூடிய காம சுகத்தைவிட மேலானதாக அக் கணத்தில் தோன்றியது கலாபனுக்கு.

000

தாய்வீடு, ஆனி 2010

Sunday, May 23, 2010

ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்

ஒரு முதுபெண் உரைத்த  வாழ்வுபற்றிய பாடம்வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது.
இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ? இருக்கலாம்.

சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்டே கிடக்கின்றன. அவை உயிர்த்துக்கொண்டிருக்கின்றன. உயிர்ப்போடிருப்பது மட்டுமில்லை, அவை அசையவும் செய்கின்றன. தம் அடிப் படுகையிலிருந்து நுளுந்தி நுளுந்தி தம் வலுவுக்குத் தக அவை மேலே மேலேயாய் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றவராக இருக்க முடியும். தான் பிறந்த நாட்டின் குடியுரிமையை நீங்கி வேறொரு நாட்டின் குடியுரிமையைப் புதிதாய் அடைந்திருக்க முடியும். ஆனாலும் அவரே தான் பிறந்து, வளர்ந்து, கணிசமான ஒரு காலம்வரை வாழ்ந்த மண்ணின் தொடர்பை அத்தனை சுலபத்தில் மாற்றிக்கொண்டுவிட முடியாது. அவரது வாழ்வு அந்த மண்ணிலிருந்தே நினைவுச் சுழிப்புகள்மூலம் தன் ஆதாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.

எத்தனை அடுக்குகள் தன் மேல் அடுக்குப்பட்டுக்கொண்டு போனாலும், நினைவுப் படுகையில் கிடக்கும் ஒரு சம்பவம் வாழ்வுக்கு ஆதாரமாகும் அர்த்தத்தை என்றும் இழந்து போவதில்லை. என்றோ ஒரு தருணத்தில் நிலம் கிழித்துக் கிளரும் புல்போல் தன்னின் இருப்புக்காட்டி மேலெழும்பவே செய்கின்றது.

கழிந்தன எத்தனை ஆண்டுகள்! படர்ந்தவை எத்தனை நாடுகள்! இருந்தும் ஏன் இன்னும்தான் இந்த அமைதியின்மை? ஏன் இந்த வாழ்வில் இத்தனை அவசரம்? இன்னும்தான் ஏன் வாழ்க்கையின் இத்தனை நோவு நொம்பலங்கள்? வாழ்க்கையை விற்று சுகங்கள் வாங்கியதின் அபலங்கள்தானா இவை?

கேள்விகள் என்னுள்ளாய்க் கிளரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வப்போது வந்து யோசனைகளில் குறுக்கிடுகின்றன. விடை இலகுவில் கிடைத்துவிடக்கூடிய கேள்விகள் இல்லையெனினும் மனம் ஓர் அசுர முயற்சியில் இவற்றுக்கான விடைக்காய் உந்திக்கொண்டே இருக்கிறது.

அப்படியான ஒரு நாளில் என் ஞாபக அடுக்குகளிலிருந்;து மேலே நுளுந்தி வந்த சம்பவமொன்று முக்கியமானது. என் உந்துதலின் விசை சட்டென அறுந்தது. தொடர்ந்து பத்தாய், நூறாய் ஞாபக அலைகள். அத் திரை விரிப்பில் தன் சிரித்த முகம் காட்டி வெளிவந்தாள் கடலையாச்சி.

திடுக்காட்டத்தோடுதான் அந்த நினைவை என்னால் அசைபோட முடிந்தது. என் ஆறு அல்லது ஏழு வயதிலிருந்து தொடர்ந்தேர்ச்சியாக ஓரிரு வரு~ங்களில் மட்டுமே நான் கண்டிருந்த அந்த முதுபெண், இத்தனை காலம் என் நினைவடுக்கில் இருந்ததையே நான் தெரிந்திருக்கவில்லை. அவள் என் நினைவடுக்கில் போக எந்த முகாந்திரமும்தான் இல்லை. ஒரு கடலைக்காரியின் நடையும், இருப்பும், அசைவும், சிரிப்பும் ஒரு தேச சஞ்சாரியின் நினைவடுக்கில் இத்தனை காலமாய் இருந்திருப்பது சாத்தியமா என்ற கேள்விகூட என்னுள் விடைத்தெழுந்து நின்றது.
அவள் பெயர் அரசம்மா என்பதாக ஒரு ஞாபகம். எங்கள் பள்ளிக்கூட வாசலிலிருந்து கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு கடலைக்காரியாகத்தான் அவளை நான் முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகும் அதற்குமேல் அவள் இல்லைத்தான்.

எங்கள் பள்ளிக்கூட வளவு ஒரு தலைகீழ் முக்கோண வடிவில் இருந்திருந்தது. அதன் முன்முனையில் ஒரு நெடுந்தெரு. மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும், எப்போதாவது இருந்துவிட்டு ஓரிரு லொறிகளும் ஓடும் அதில். கடசார்க் கற்கள் பாவியிருந்தன. முன்முனையிலிருந்து வலதுகைக் கோணத்தை ஒட்டியதாக ஒரு வாய்க்கால். அதில் மாரி வெள்ளம் அடித்தோடும் வேளை, அதைத்தான் நான் ஆறு என நினைத்திருந்தேன் அந்தக் காலத்தில். இடதுகைக் கோணமாக ஒரு மண் தெரு. மண்தெருப் பக்கமாக பள்ளிக்கூட வாசல்.

வாசலில் ஒரு பாலைமரம் இருந்தது. தினமும் அந்த இடத்தில்தான் எனது தந்தை என்னை சைக்கிளில் ஏற்றி வந்து இறக்கிவிடுவதும், மறுபடி ஏற்றிச் செல்வதும்.
பாலை மரம் பெரிதாக என்ன நிழலைச் செய்துவிடும்? அந்த நிழல் தரா உயர் பாலை மரத்தின் கீழ் கடலை விற்றுக்கொண்டிருப்பாள் அரசம்மா. கொளுத்தும் வெய்யிலுக்கு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு விரித்த சாக்கில் கால்நீட்டி அமர்ந்தபடி ஒரு வட்டச் சுளகு, சிறிய ஓலைக் கடகம், சில கடதாசிகள் மட்டுமுடனாக வியாபாரத்தை நடத்திக்கொண்டிருப்பாள்.

சின்ன லீசர் எனப்படும் பத்தரை மணி இடைவேளையிலிருந்து அவளை அந்த இடத்தில் பார்க்கமுடியும். மத்தியான இடைவேளைக்கு தும்பு முட்டாசுக்;காரன், பம்பாய் மிட்டாய் விற்பவன், கொய்யாப்பழம் பச்சை மாங்காய்க் கீறுகள் விற்பவள் என்று வேறுசிலரையும் பார்க்கமுடியும்தான். ஆனாலும், யார் வந்தாலும் வராவிட்டாலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை பத்தரை மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை அரசம்மாவை அந்த இடத்தில் பார்க்கத் தவறமுடியாது.

மேசன் வேலையில் நிறைந்த சுயாதீனம் இருந்தது. அதனால் காலையில் வேலைக்குச் செல்லுகையில் கொண்டுவந்து விட்டுச் செல்லும் தந்தைக்கு, பள்ளி முடிந்ததும் வந்து என்னைக் கூட்டிப்போய் மறுபடி வீட்டில்விட வசதியிருந்தது. நான் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் அரிவரி வகுப்புக்கு பன்னிரண்டு மணியோடு பள்ளி முடியும். முதலாம் வகுப்பிலிருந்து அய்ந்தாம் வகுப்புவரை அது ஒன்றரை மணியாகவிருந்தது. எட்டாம் வகுப்புவரை மட்டுமேயிருந்த எமது பள்ளிக்கூடம் மாலை மூன்றே முக்காலுக்கு முடிந்தது.

ஒன்றரை மணிக்கு எனக்கு பள்ளி முடிகிறபோது அதிகமாக எனது தந்தை சைக்கிளோடு பள்ளி வாசலில் நின்றுகொண்டிருப்பார். சிலவேளைகளில் பள்ளி முடிந்து நான் வெளியே வருகிறவேளை வேகமாக சைக்கிளை உழக்கிக்கொண்டு வந்து சேர்வார். சிலவேளைகளில்தான் தாமதமாவது. நான் அந்த நேரங்களில் அவதிப்பட்டுப்போவேன். பிள்ளை பிடிக்கிற காப்பிலிகள் ஊரிலே அங்கங்கு அலைவதாகப் பேச்சிருந்த அந்தநாளில், ஒரு காப்பிலியைக் கண்ணாலே கண்டிராதபோதும்தான், காப்பிலியை எண்ணி நான் அதீத பயங்கொண்டிருந்தேன். பேயையே கண்டிராதபோதும் பேய்ப் பயம் கொண்டிருப்பதுபோல அது.
அந்த சிலவேளைகளின் தாமதத்தில் எழும் எனது அச்சங்களைத் தவிர்ப்பதற்காகவே, கடலையாச்சியிடம் என்னைப் பார்த்துக்கொள்ள தந்தை சொல்லிவைத்திருந்தார். தினமும் அதிலே இருக்கிற ஒரு பெண் என்றில்லாமல், அவர்களுக்கு குடும்பரீதியாகவே அறிமுகமிருந்ததை அவர்களது பேச்சில் நான் அறியமுடிந்திருந்தது. அதனால் தந்தை என்னைக் கூட்டிச்செல்லத் தாமதமாகும் நாட்களில் கடலையாச்சி என்னை அழைத்து பக்கத்தில் இருக்க வைத்துக்கொள்வாள்.

அவளிடம் ஒரு அடுக்குப் பெட்டியிருந்தது. அதன் மேல் தட்டில் பிஞ்சுப் பாக்கு, நாறல் பாக்கு, பச்சையம் இன்னும் அழியாத சில வெற்றிலைக் கீறுகள், சிறிய சுண்ணாம்புப் போத்தலொன்று இத்தியாதிகள். கீழ் அடுக்குகளில்தான் அவள் காசு போட்டு வைப்பாள். ஒரு அடுக்கில் அரைச் சதம், இன்னொன்றில் ஒரு சதம், மற்ற அடுக்கில் இரண்டு சதம், கடைசியாக ஐந்து சதம். ஐந்து சத கையாளலுக்குமேல் அவளது வியாபரம் இருப்பதில்லை. பத்துச் சதம் பெரிய காசு. எந்தப் பள்ளிக்கூடப் பிள்ளையும் பத்துச் சதத்தைக் கொண்டு கடலை வாங்க வந்துவிட முடியாது.

அருகிலிருக்கும்போது அவள் வியாபாரம் செய்யும் முறையையும், அவளது ஆகிருதியையும் நான் ஆவலாதியோடு கண்டுகளித்திருக்கிறேன்.

அவள் ஒரு சின்ன மனிதி. இன்று நினைத்துப் பார்க்கிறபோது அவள் நாலடிக்கு மேல் இருந்திருக்க முடியாதென்றே தெரிகிறது. உருவமும் சிறிய வார்ப்புத்தான். அவள் குறுக்குக் கட்டு கட்டியிருப்பாள், ஊரிலுள்ள அநேகமான ஆச்சிகளையும்போலவே. அவளது தோல் மெல்லிய சுருக்கங்கள் கண்டிருந்தது. தலைமயிர் நரையிழைகள் பறந்துகொண்டிருந்தாலும், கருமையாகத்தான் இருந்ததாகவே இப்போது நினைவில் படர்கிறது. அவள் கால்நீட்டி சிறிது முன்வளைந்து இருப்பது பார்க்க நன்றாக இருக்கும். எவரையும் அணுகத் தயாராய் இருப்பதான ஸ்திதி அது.

சொல்லப்போனால் அந்த உருவத்தில் நான் அருவருப்பே அடைந்திருக்கவேண்டும். ‘எல்லாத்திலையும் நுணுக்கம் பார்த்துக்கொண்டிரு’ என்று அம்மாவிடம் திட்டுவாங்குகிற எனக்கு, அந்த உணர்வுதான் இயல்பானது. ஆனாலும் அதை நான் அடைந்துவிடாதபடி அவளிடமிருந்த ஏதோவொன்று செய்துகொண்டிருந்தது. அவளது எந்தநேரமும் சிரிப்பதுபோல் தோன்றிக்கொண்டிருக்கும் முகமா, அல்லது அரைச் சதமும் இல்லாமல் வந்து சுளகில் கொட்டிவைத்திருக்கும் கச்சான், சோழம், கொண்டல் இவைகளின் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறக் கும்பங்களைப் பார்த்து ஏங்கிநிற்கும் சிறுவர்களைக் கண்டு அவ்வப்போது கொஞ்ச சோழன் பொரிகளை எடுத்துக் கொடுக்கும் அந்தக் கருணையா, அல்லது ‘நாளைக்குத் தாறன், ஆச்சி. ஒருசாத்துக்கு கடலை தா’ என்று வரும் சிறுவர்களைக்கூட நோகாமல் ‘போ, நாளைக்கு ஒருசாத்தைக் கொண்டுவா, தாறன்’ என்கையில் கோபம் வெறுப்பு அலுப்பு என எதுவுமே தோன்றாதிருக்கும் குரலிலா என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. இவை எல்லாமேதான் அதற்குக் காரணமாக இருந்திருக்குமென்று இப்போது தோன்றுகிறது.

ஒருநாளில் சராசரியாக அவளுக்கு இருபத்தைந்து சதத்துக்கு வியாபாரம் நடக்கக்கூடும். மிக அதிகமாக ஏதாவது விசே~மான நாளில் அரை ரூபாவுக்கு நடக்கலாம். இருந்தும் அவ்வளவு நிறைவோடு தன் அந்திமகாலத்தை அப்படிச் சிரித்துக்கொண்டே கழிக்க அவளால் எப்படி முடிந்தது? நோயென்று ஒருநாள் அவள் பாயிலே படுத்திருப்பாளாவென்று எனக்குச் சந்தேகம். இயங்குகையிலும் தண்டுதரமாய்த்தான் நடந்து திரிந்திருக்கிறாள். இவையெல்லாம் எந்த மூலத்திலிருந்து சுழிப்பெடுத்தன?

அவள் அறிந்த உலகம் கிழமைக்கு ஒருமுறை சந்தையென்றும், எப்போதாவது கோயிலென்றும், திங்கள் முதல் வெள்ளிவரை பள்ளிக்ககூட வாசலென்றும் மட்டுமே இருந்திருக்க முடியும். நாடுகள் கண்டு, நாட்டுக் குடியுரிமைகள் மாறி நவீன தொழில் நுட்பம் தந்திருக்கும் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும் எனக்கு அவளது சிரிப்பு, கருணை, நிறைவுகள் ஏன் எட்டாது போயின? எண்பது வயதில் அரசம்மா செத்துப்போனதாக அம்மா அப்போது பேசிக்கொண்டாள். அந்த வயதுவரை அவள் கொண்டிருந்த தண்டுதரம் என்ன, அவள் வயதினை எட்ட இன்னும் சில சகாப்தங்களைக் கடக்க வேண்டியிருக்கும் நான் ரத்தக் கொதிப்பு என்றும், சர்க்கரை வியாதியென்றும் அலைந்துகொண்டிருக்கும் மர்மம் என்ன?
அவள் சோர்ந்திருந்து நான் கண்டதில்லை. சிரிப்பற்ற அவள் முகத்தை நான் கற்பனைகூடச் செய்ய முடியாது. அவள் தன் காதின் பொன்னிலோ வெள்ளியிலோ பொதிந்த சிவப்புக் கல்லுத் தோட்டினை எந்த நாளும் விளக்கித்தான் அணிவாளோ? எந்நேரமும் ஜொலித்துக்கொண்டேயிருக்கும் கல்லுகள் அவை. அவைபோலவேதான் எந்நாளும் சிரிக்கும் முகமுடையவளாய் இருந்தாள் அவள். அந்தச் சிரிப்பை நான் இன்று ஏக்கத்தோடு நினைத்துக்கொண்டிருக்கிறேன். நான் காணமட்டும் செய்து, அனுபவித்திராத சிரிப்பாக இருந்தது அது.

பள்ளி வாசலின் பாலை மரத்தையே ஒரு போதி மரமாகக்கொண்டு, புத்தனாயோ சித்தனாயோ இல்லாமல் சம்சாரியாக இருந்துகொண்டே எனக்கு ஞானபோதம் செய்துவிட்டுப் போயிருக்கிறாள் அரசம்மா. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றிருக்கிறான் புத்தன். ‘ஒருவன் எந்த ஆசையிலிருந்து விடுபடுகிறானோ அவன் அதிலிருந்து அடையக்கூடிய துன்பங்களிலிருந்தும் நீங்குகிறான்’ என்கிறது திருக்குறள்.
எல்லாம் படித்ததுதான். என்ன பிரயோசனம்? யோசிக்க வைக்கவில்லையே. ஆனால் கடலையாச்சி தன் நிறைவினதும் சிரிப்பினதும் அர்த்தத்தை நினைவிலிருந்து கிளம்பியெழுந்து வந்து சொன்ன பிறகுதான் உணர முடிந்திருக்கிறது என்னால்.

அவசரமான இந்த உலகத்தில் நாம் அவதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவைகளுடனன்றி ஆசைகளுடன் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். நாம் மயங்கத் தயாரென்று பச்சைக்கொடி காட்டியாகி விட்டது. இந்த மயக்கத்தின் பலஹீனத்திலிருந்தே அரசியல், பொருளாதார, சமூக, இலக்கியக் கொள்கை சித்தாந்தங்கள் எல்லாம் பிறப்பெடுத்திருக்கின்றன.

நம் வாழ்வின் அழுத்தங்கள் மையங்கொண்டிருக்கின்ற இடம் இதுதான்.

( நாளை – மே )

000

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...