Posts

Showing posts from 2012

சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்

சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும் சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.  நித்திரையில் இருந்திருப்பான், நான்கு ஐந்து முறை கதவைத் தட்டிய பிறகு கதவைத் திறந்து, “உள்ளே வா” என்றான். மேலே மாமரக் கிளைகள் கவிந்து நின்றிருந்தன. பக்கத்தேயும் பின்னேயும் ஈரப்பலா மரங்கள். கிணற்றடியில் கமுகுகளும் செவ்விளநீர்க் கன்றுகளும் வாழைகளும். பராமரிப்புக் குறைந்திருந்தாலும் செழிப்பாகவே நின்றிருந்தன. முற்றத்தில் கொழுத்த ஓர் அரசமரம். அந்தமாதிரிக் காட்சிகள் நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிடைத்துவிடாது. அதனால், ‘நான் வெளியிலயே இருக்கிறன்’ எனச் சொல்ல,  குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு விரைந்தான்.  நான் அவனது அறைக்கு முன்னால் முற்றத்தில் நின்ற அசோகமரத்தைச் சுற்றிப் போட்டிருந்த  கொங்கிறீற் கட்டில் அமர்ந்தேன். பெரிய வீட்டின் கதவு சாத்தியேயிருந்தது. மிஸிஸ் பெர்னாண்டோ எங்கோ வெளியே போயிருக்;கிறாள் என்று தெரிந்ததில் மனத்தில் ஓர் ஆசுவாசம். இல்லாவிட்டால் உள்ளே வந்திரு என்று வற்புறுத்தி

முகங்களும் மூடிகளும்

முகங்களும் மூடிகளும் சில நல்ல கதைகளையும், சில சுமாரான கதைகளையும் கொண்டு மொத்தமாய்ப் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’. முகங்களும் மூடிகளும் என்ற முதல் கதையே தலைப்பாக வந்திருப்பதாலேயே அக்கதை விசேட தன்மையெதையும் கொண்டிருப்பதாகக் கருதத் தேவையில்லை. அதைப் படைப்பாளி, பதிப்பாளர் விருப்பத்தின்படியான ஒரு தேர்வென்றே கொள்ளவேண்டும். தலைப்புகள் நூல்களில் முக்கியமான பங்கு வகிப்பவை. இந்நூலில் அப்படியில்லை. தலைப்பு ஒரு அடையாளம்- அடையாளம் மட்டுமே- என்று கொண்டு இந்த விடயத்தை அப்படியே விட்டவிடலாம். அண்மையில் பிற தமிழ்ப்புலங்கள் உட்பட வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்புகளில் ‘முகங்களும் மூடிகளும்’ குறிப்பிடக்கூடிய ஒன்று என்பதை முதலில் தெரிவித்துக்கொள்வது வசதியானது. அதன்மேலேயே அதன் தரம் குறித்த விசாரணையை நாம் செய்தாக வேண்டியுள்ளது. எடுப்பிலேயே ஈழத்து தமிழ்ச் சூழலில் படைப்பாளி, தீவிர வாசக மட்டங்கள், சிலவேளைகளில் வசதிக்காக விமர்சன மட்டமும், சிறுகதை , சின்னக் கதை இரண்டுக்குமான பிரிகோட்டைக் கண்டுகொள்ளாமலேயே ஒரு நீண்ட காலத்துக்க

சயந்தனின் ‘ஆறாவடு’

சயந்தனின் ‘ஆறாவடு’ மீதான  ஓர் அரசியல், இலக்கியக் கண்ணோட்டம்    ‘ஆறாவடு' நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்துகொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசிக்க முடிந்திருந்தது. நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது.  நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந

மு.த.வும் ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகளும்

படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த.வும்  ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகளும் ஈழத் தமிழிலக்கியத்தில் மு.த. என அழைக்கப்படும் மு.தளையசிங்கத்தின் இடம் நாற்பதாண்டுகளின் முன்னாலேயே வாசகப் பரப்பில் நிர்மாணம் பெற்றுவிட்டது. ஆனாலும் அது ஈழத்து இலக்கிய வரலாற்றில் போதுமான அளவு பதிவாகவில்லையென்பது தீவிர வாசகர்களிடையே கடந்த சில பத்தாண்டுகளாக நிலவி வரும் மனக் குறையாகும். ஒருவகையில் மு.த.வின் பெயர் ஓர் இருட்டடிப்புக்கு உள்ளாகும் நிலைமையையும் அடைந்துகொண்டிருப்பதாய் அவர்கள் கருதினார்கள். இதற்கெதிரான முன்முயற்சிகள் சிறுபத்திரிகைகள் அளவிலேயே முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டன. ‘அலை’ சஞ்சிகை இதை பல தடவைகளில் முன்மொழிந்திருக்கிறது. அதன் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவரான அ.யேசுராசா காட்டிய அக்கறை இவ்விஷயத்தில் முக்கியமானது. இவரே மு.த.வின் எழுத்துக்களை முதன்முதலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுபோய்ச் சேரத்;தவர். இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். உடனடியாக சுந்தர ராமசாமியும் மு.த.வின் எழுத்தாளுமை குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அது அவர் ஆசிரியராக இருந்த காலாண்டிதழ்க் ‘காலச் சுவடு’ இதழில் வந்தது. அது ஒரு தனி

படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்

படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும் சமகால ஈழத்து இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் அல்லது தாக்கமின்மையும்: மொழிவெளியினூடான ஓர் அலசல் ஒரு படைப்பு முயற்சியில் வாசகப் பரப்பு கவனத்திலெடுக்கப்பட வேண்டியதில்லையென்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சரிதான். தீவிர படைப்பாளி ஒருவருக்கு அந்தக் கரிசனம் பெரும்பாலும் எழுவதில்லையென்பது பல்வேறு படைப்பாளிகளின் நேர்காணல்களில், நேர்ப் பேச்சுக்களில் வெளிப்பட்டிருக்கிற உண்மையும். நமது நவீன இலக்கிய வடிவங்கள் நம் தேயங்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியென்ற மெய்ம்மையிலிருந்து கவனமாகிறபோது, சமகால அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கிய உலகினைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியம் குறித்த விஷயத்தை நாம் அலசிவிட முடியாதென்பது வெளிப்படை. படைப்பு வாசிப்பு என்ற இந்த இரண்டு இயங்கு தளங்களுக்குமிடையே, பதிப்பு என்பது இக் கண்டங்களில் மிக்க வல்லபமான நிஜமாக இருந்துகொண்டிருக்கிறதைப் பார்க்க முடிகிறது. இதைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்ப்பதற்கு இன்றைக்கு வலுவான தேவையிருக்கிறது. நம் இலக்கிய முயற்சிகளை இதனோடு இனங்கண்டு நம்மைப் புரிவதன் அவசியத்தை அவசரமாக்குவதே என் முதன்முதலான பிரயாசை.

நேர்காணல்: தேவகாந்தன் 2

நேர்காணல்: தேவகாந்தன் சந்திப்பு: கற்சுறா உங்களது எழுத்தியக்கம் ஆரம்பமான காலங்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன். சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் நான் அட்வான்ஸ்ட் லெவல் பாஸ் பண்ணின வருசம், அப்பதான் நான் நினைக்கிறன் பல்கலைக்கழகங்களில விகிதாசார அடிப்படையிலதான் பிரவேசிக்கேலும் எண்ட சட்டச் செயற்பாடு உறுதியாய் நடைமுறைக்கு வாற நேரமெண்டு, அதாலை கூடுதலான தமிழ் மாணவருக்கு கூடுதலான புள்ளிகள் தேவைப்பட்டுது. அதால அந்த வருஷம் பல்கலைக்கழகத்துக்குப் போற வாய்ப்பு எனக்குக் கிடைக்கேல்லை. திரும்ப சோதினை எடுத்து பாஸ்பண்ணி அடுத்த வருசம் போயிருக்கலாம்தான். அப்பிடித்தான் செய்யச்சொல்லி தெரிஞ்சாக்களும் சொந்தக்காறரும் சிநேகிதர்மாரும் சொல்லிச்சினம். ஆனா அப்பிடிச் செய்யிறதுக்கான மனநிலை வரேல்லை. அது ஒரு வீழ்ச்சியாய்ப் போச்சு. மனமொடிஞ்சு போச்சு. படிக்கிற காலத்திலையும் சோதினைக்காய்ப் படிக்கிற குணம் என்னிட்டை இருக்கேல்லை. அரசாங்க வேலையைவிடவும் வேற கூடுதலான கனவுகளோட படிப்பும், அதில்லாத வாசிப்புகளோடையும்தான் நான் அப்பவும் இருந்திருக்கிறன். கனவு எண்டுறது எதிர்காலத்தில எப்படி இருக்கவேணும், நிறைய சங்க, நவீன தம