Saturday, August 30, 2014

தமிழ் நாவல் இலக்கியம்

தமிழ் நாவல் இலக்கியம்தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது.

இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை  அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும்.

அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது.

பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை. அவற்றின் பிரமிக்கவைக்கும் தோற்றங்களுக்கு அப்பால் மேற்கு நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில், அவற்றினிடையே 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் உருவான புதிய புதிய சிந்தனைப் போக்குகளால் எனக்கு மரியாதைகூட உண்டு.  ரோலன் பார்த் மற்றும் ஜூலியா கிறித்தோவா இருவரும் இலக்கியத்துறையையும், ழாக் தெரிதாவும், மிஷேல் பூக்கோவும் தத்துவத்துறையையும், ழாக் லக்கான் உளவியல் துறையையும்  சார்ந்தவர்கள். அவர்களது துறைகள் அவர்களது அமைப்பியல், பின்அமைப்பியல் சார்ந்த சிந்தனை வெளிப்பாட்டினால் மரியாதை பெற்றன.

கீழ்த் திசையின் பல்கலைக்கழக நிறுவனங்களில் இதுபோன்ற பெரும் சாதனைகள் நிகழ்ந்ததாகச் சொல்லமுடியாது. அதனளவில் மார்க்சீயம் சார்ந்த விமர்சனப் போக்குகள் மூலம் கலாநிதிகள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி போன்றோர் வெளிப்படுத்திய ஆய்வு முறைகள் தமிழ்நாட்டுக்கே முன்னோடியாய்த் திகழ்ந்தன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் இவ்வாறு ஏற்பட்ட அந்த பிரமிப்பும், மரியாதையும் பின்னாளில் தக்கவைக்கப்படவில்லை என்ற செய்தி இங்கே முக்கியமானது. பாடப்புத்தக ஒப்புவிப்பாக மட்டும் அவை இலங்கையிலும் இந்தியாவிலும் ஆகிவிட்டிருக்கின்றன. புறநடைகள் உண்டு. தமிழுலகில் சிந்தனை விரிவாக்கம் பல்கலைக்கழகங்களுக்கு அப்பாலேதான் உருவாகிக்கொண்டிருக்கிறது. இவ்விஷயம் குறித்து இவ்வுரைக்கட்டில் ஆங்காங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

1.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தோன்றிய தமிழ் நாவல்களின் தோற்றத்தை ஏனைய இந்திய மொழிகளின் நாவல்களது தோற்ற நியாயங்களோடு நாம் ஒப்பாக வைத்துப் பேச முடியும். இந்திய நாவல்களின் தோற்றத்துக்கு அவற்றின் ஏனைய ஐரோப்பிய மொழிகளுடனான ஊடாட்டத்தை முதன்மைக் காரணமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இந்தியக் கலாச்சாரத்தில் ஒவ்வொரு புதுப்பண்பாட்டுத் தாக்கம் ஏற்படும்போதும் அது மொழி மூலமாகவே ஏற்பட்டிருப்பது இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது தெரியவரும். இது முக்கியமான வி~யம். மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் வந்தபோது இந்தியாவில் அதுவரையில் இல்லாத சரித்திரம் எழுதும் கலையையும் கொண்டுவந்தார்கள். இக் கலாச்சாரப் பரிவர்;த்தனை இந்தியக் கலைகளின் உருமாற்ற வளர்ச்சியை விரைவுபடுத்தியது. முக்கியமாக இலக்கியம் இதன் மூலம் வளம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த ஆங்கிலக் கல்வி வளர்ச்சியும் பலவாறான சமூக, அரசியல், சிந்தனை வளர்ச்சிகளில் மாற்றங்களில் விரைவினை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சியை ஒருபுள்ளியில் வைத்துக் காணமுடியும். 1798 முதல் 1832வரை ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் கொடுத்துவிட்டு பெயரளவில் மன்னராகவிருந்த சரபோஜி மகாராஜாவின் காலம்தான் இது. மன்னர் தன் காதலியின் நினைவாய் உருவாக்கிய பள்ளிதான் அப்போது ஆசியாவிலேயே பிரபலமாக இருந்த ஒரத்தநாடு அல்லது முக்தாம்பாள்புரம் பள்ளி. இங்கே  ஆங்கிலம், பர்சி, உருது, தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இவரது மறக்கமுடியாத இன்னொரு பணி சரஸ்வதி மஹால்.

இங்கே ஓலைச் சுவடிகள் மட்டுமின்றி, புதிதாக வெளியாகும் ஆங்கில நூல்களும், பிரெஞ்சு, இத்தாலிய, ஜேர்மன் மொழி நூல்களும் அந்தந்த நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டன. இவையெல்லாம் தஞ்சை என்கிற ஒரு சிறிய ஊரில் நடந்திருப்பினும், ஏறக்குறைய இதேயளவான மாற்றம் தமிழ்நாடு பூராவும், இந்;தியா பூராவும், நடைபெற்றதாகக் கொள்ள முடியும். பின்னால் ஏற்பட்ட இலக்கிய, கலாச்சாரப் புரட்சிக்கு இவை  மறுக்கமுடியாத பங்களிப்பை வழங்கின. பத்;தொன்பதாம் நூற்றாண்டை தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றத்துக்குத் தயாராக்கியதில் இந்த மாற்றமும் ஒன்று.

ஆங்கில மொழிக் கல்வி நிறைய ஆங்கில நூல்களின் இறக்குமதியை ஊக்குவித்தது. ஹென்றி பீல்டிங்கின் ‘ரொம் ஜோன்ஸ்’, ஒலிவர் கோல்ட் ஸ்மித்தின் ‘விக்கர் ஒப் தி வேக்பீல்ட்’ போன்றவையும், சர் வால்டர் ஸ்கொட்டின் சரித்திரப் புதினங்களும் நிறைய வாசிக்கப்பட்டன. சற்றுப் பின்னால் ஜேன் ஆஸ்டின், ஜோர்ஜ் எலியட் போன்றோரின் நாவல்கள் கவனம் பெறுகின்றன. இன்னும் சற்றுப் பின்னால் சார்ள்ஸ் டிக்கன்ஸ_ம், வில்லியம் தாக்கரேயும் இந்தியா வருகிறார்கள். இவற்றையெல்லாம் ஒட்டி எழுதுகிற வேகம் இந்திய மொழிகளில் நாவல்கள் எழுதும் முயற்சியை வெகுவாக உந்திவிடுகின்றது.

கவிதையில் எளிமை…எளிமையென்று பொதுமக்களுக்கான இலக்கியத்தை முன்னெடுத்த பாரதியும், வசனத்தில் எளிமையையும், விளக்கத்தையும் முன்னெடுத்த வீரமாமுனிவரும், ஆறுமுக நாவலரும் இக்காலகட்டத்தவர்களே. இவர்களால் முனையப்பட்ட துறைகளின் வளர்ச்சி, தமிழ் உரைநடையை நவீன இலக்கியத்துக்காகப் பதப்படுத்தி வைத்திருந்தது என்பது மிகையான கூற்றல்ல. பாரதியின் சிறுகதை முயற்சிகளை வைத்துப் பார்க்கிறபோது,‘சந்திரிகையின் கதை’யை அவனது நாவல் முயற்சியாகவே கொள்ள முடிகிறது. வ.வே.சு.ஐயரின் ‘ஒரு குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதைக்கும், சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலுக்கும்கூட உந்துவிசையாய் இது இருந்ததாய்க் கொள்ள முடியும். அத்தனைக்கு அந்த முற்றுப்பெறாத நவீனம் இருந்திருக்கிறது.

இந்திய மொழிகளைப் பொறுத்தவரையில் பங்கிம் சந்திரரின் ‘துர்கேச நந்தினி’ எனும் 1864இல் வெளிவந்த நாவலைத்தான் இந்தியாவின் முதல் நாவலாகக் குறிப்பிடுவர். தமிழின் முதல் நாவலின் தோற்றத்துக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது.  துர்க்கேச நந்தினி மட்டுமல்ல, பங்கிம் சந்திரரின் ஏனைய நாவல்களான ‘கபால குண்டலா’,‘வி~விருட்சம்’,‘ஆனந்த மடம்’ போன்றவையும் சர் வால்டர் ஸ்காட்டின் கதை கூறல் முறையை, கட்டுமான முறையைக் கொண்டிருந்திருக்கின்றன.

இத்தாலிய மான்சோனி பின்னாளில் சர் வால்டர் ஸ்காட்டைப் படித்து எப்படி எழுதக்கூடாதென்பதைக் கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அதுபோலவன்றி இந்திய நாவலாசிரியர்கள் சர் வால்டர் ஸ்காட்டை முழுமையாகச் சரணடைந்தனர். இந்தியத் தன்மைகளுடனான நாவல்கள் தோன்ற மேலும் சுமார் அரை நூற்றாண்டாக இந்தியா காத்திருக்கவேண்டிய அவலம் இங்கிருந்தே தோன்றியது என்பார் இலக்கிய விமர்சகர் க.நா.சு.
தமிழிலுள்ள நிலையைப் பார்க்கையிலும் இந்த உண்மையைப் புரியமுடியும்.


2..
அதற்கு முன்னராக, நாவல் என்கிற இலக்கிய வடிவம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கான விடையைக் கண்டடைந்திருந்தாலும், ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு நாம் விடை கண்டாகவேண்டி இருக்கிறது. ஓர் இலக்கிய வடிவத்தை அதன் விசே~ம் கருதி ஒருவரால் அல்லது ஒரு குழுவினரால் உருவாக்கிவிட முடியாது. ஒரு சமூகத்தின் தேவை ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தைக் கையாள்வதற்கு, புழங்குவதற்குத் தயாராக இல்லையேல் அது எத்தனை சிறந்த வடிவமாக இருப்பினும் காலத்தில் நிலைத்து நின்றுவிடாதென்பது சமுதாய விதியாகும்.  ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரான சோழராட்சிக் காலத்தை காவிய காலம் என்று வரையறை செய்யும் தமிழிலக்கிய வரலாறு. காவிய காலம் மறைய உருவாகிய காலத்தை அது பிரபந்த காலமென்று சொல்லும். இந்த இலக்கிய வடிவ மாற்றத்தினை உருவாக்கிய சக்தி சமூக மாற்றமே என நிச்சய விடை தருகிறது மார்க்சீயப் பார்வை.

பெரு வலிது பெற்றிருந்த நிலமான்ய சமுதாயத்தின் வன்மை இழப்பும், மத்தியதர வர்க்கமொன்றின் தோற்றமுமே இலக்கிய வடிவ மாற்றத்தை உருவாக்கியதென்பார் கலாநிதி க.கைலாசபதி.

மாறாக,‘தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டதன் விளைவாக காவியங்கள் உருவாயின. அவை அனுபவங்களைத் தொகுத்து தருக்க அடிப்படையில் நெறிகளை முன்வைத்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெறிகளை மறுபரிசீலனை செய்யவும், நெறிகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் சாத்தியங்களையும் தேவைகளையும்பற்றி யோசிக்கவும் தத்துவம் முன்கைகொடுத்தது. தத்துவத்தின் பணி மேலும் சிக்கலும் விரிவும் கொண்டதாக ஆயிற்று. இந்தக் காலகட்டம் இலக்கியத்தில் பிரதிபலித்ததின் விளைவாக மேலும் மேலும் பன்;முகத் தன்மையும் நெகிழ்த் தன்மையும்கொண்ட இலக்கிய வடிவம் ஒன்றின் அவசியம் எழுந்தது’ என்கிறார் திரு. ஜெயமோகன் தனது நாவல் என்கிற நூலில் (நாவல், பக்: 13).
தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டதன் விளைவாகக் காவியங்கள் உருவாகின என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. தத்துவத்தின் பணி மேலும் சிக்கலும், விரிவும் கொண்டதாக ஆனதிலும், அதனால் மேலும் மேலும் பன்முகத் தன்மையும் நெகிழ்த் தன்மையும்கொண்ட இலக்கிய வடிவம் ஒன்றின் அவசியம் எழுந்தது என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடே. ஆனால் தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டது எவ்வாறு என்ற கேள்விக்கு விடை அந்த வரிகளில் இல்லை.

அதனால் தத்துவத்தை வெற்றிகொள்ள வைத்த காரணத்தை அறிய நாம் கலாநிதி கைலாசபதியிடம்தான் வரவேண்டியிருக்கிறது.
அதன்படி நாம் அடைகிற பதில், கருத்து முதல் வாதத்துக்கு எதிரான பொருள்முதல்வாத அடிப்படையே காரணம் என்பதாக அமைகிறது. சிந்தனை முந்தியதென்றும் செயல் பிந்தியதென்றும் கூறும் கருத்துமுதல்வாதம். பொருள்முதல்வாதமோ செயல் முந்தியதென்றும் சிந்தனை பிந்தியதென்றும் வாதிக்கும். அப்பிள் பழம் நிலத்தில் விழுந்த செயல்பாடுதான் அதன் காரணத்தைச் சிந்தித்த ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பை அறிய வைக்கிறது. அதன்படி சமுதாய மாற்றம் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியில் விளைய, அதன் மூலம் ஏற்படும் சமூக மாற்றம் இலக்கிய வடிவங்களிலும் மாற்றத்தை  விளைக்கிறது என்ற முடிவு விஞ்ஞானபூர்வமானதுதான்.

3..
மேலே நாவல்கள்பற்றிய ஆய்வுப் போக்குகள், விமர்சனங்கள்  குறித்த வி~யத்தில் சிறிது கவனம் செலுத்திவிட்டு தொடர்ந்து நகர்வது நல்லது என நினைக்கிறேன்.

க.கைலாசபதி, ஜெயமோகன், க.நா.சு., கோவை ஞானி ஆகிய இந் நால்வரும் இத் துறையில் கவனம் குவிக்கப்படவேண்டியவர்கள் ஆகிறார்கள். முன்னவர்கள் ஆய்வு அல்லது விமர்சனப் போக்குகளின் விதிமுறைகளை வகுத்தவர்கள் எனக் கொண்டால், அந்த விதிமுறைகளின்படி தமது ரசனையின் வழி நின்று நல்ல நாவல்களை இனங்கண்டு சொல்லியவர்களாக க.நா.சு.வையும், கோவை ஞானியையும் சொல்லமுடியும்.

தெளிவான இரண்டு போக்குகளின் பிரதிநிதிகள் இவர்கள். நிறுவன மயமாய் வளர்ந்து வந்த மார்க்சீய சிந்தனையின் வழி க.கைலாசபதி தனது விமர்சன முறையை முன்வைத்தவரென்றால், இந்த வழியின் இயங்கியல் தன்மையை மறுதலித்தும், மார்க்சீய விமர்சன முறையை மறுத்தும் ஜெயமோகன் தனது கருத்துக்களினை முன்வைத்ததாகக் கொள்ள முடியும். அதுபோல புதிய மார்க்சீயத்தைக் கட்டுருவாக்ககுவதில் பங்காற்றிய அந்தோனியோ கிராம்சியின் வழி  நாவல்களை கோவை ஞானி இனங்கண்டாரென்றால், இதை மறுதலித்த முறையில் தன் முடிவுகளை முன்வைத்தார் க.நா.சு. இருந்தாலும் முற்றுமுழுதாக இடதுசாரிகளின் படைப்புகளை அவர் நிராகரித்தார் என்றும் சொல்லிவிட முடியாது. கலாநிதிகள் கைலாசபதியும் சிவத்தம்பியும் முன்னிலைப்படுத்திய படைப்புகளையே அவர் பிரதானமாகவும் மறுதலித்தார் என்பதுதான் சரியான வரையறையாக இருக்க முடியும். கலை மக்களுக்கானது என்றதும், கலை கலைக்கானது என்றதுமான இரண்டு சிந்தனைப் பள்ளிகளின் பிரதிநிதிகள் இந்த நால்வரும் என்றாலும் பொருந்தும்.

க.கைலாசபதியும், கோவை ஞானியும் முதலாவது போக்கினது பிரதிநிதிகளென்றால், க.நா.சு.வும், ஜெயமோகனும் இரண்டாவது போக்கினுக்கு உரிய பிரதிநிதிகள் எனக் கொள்ளமுடியும்.
விமர்சனத் துறையில் இருந்த இந்த இரண்டு போக்குகள் போலவே, படைப்புத் துறையிலும் இரண்டு போக்குகள் தெளிவாக இருக்கவே செய்தன. படைப்புகள் குறித்து வருமிடத்தில் இதுபற்றி சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். மார்க்சீய விமர்சன முறை ஒன்று உண்டென்பதில் எனக்குள்ள உடன்பாடு, இந்த முறையின் மூலம் முன்னிலை படுத்தப்பட்ட படைப்புகள்மீது இல்லை. அதனால் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் மேற்கொண்ட முறைகளில் எனக்கிருக்கும் அபிமானம், அவர்கள் முன்னிலை படுத்திய படைப்புகள்மீது நிச்சயமாக இல்லையென்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்தாக வேண்டும். ஒரு படைப்பு என்பது தன்னளவில் கலாபூர்வமான கட்டுமானங்களால் நிலைநிற்கிறது என்பதே  எனது நிலைப்பாடு.

4..
தமிழின் முதல் நாவலாக 1879இல் வெளிவந்த மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் சொல்லப்படுகிறது. ( இந்நூல் எழுதப்பட்ட காலமாக 1876ம், வெளியிடப்பெற்ற காலமாக 1879ம் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’, நா.சுப்பிரமணியனின் ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ ஆகிய பல்வேறு நூல்ககளில் குறிப்பிடப்பட்டுள்ளன.) பொதுமக்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தில் அந்த நாவலைத் தான் படைத்ததாக ஆசிரியரே தன் ஆங்கில முன்னுரையில் குறிப்பிடுவார்.

மட்டுமல்ல,‘இந்தச் சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமி~ம்வரையில் ஒரு குறையும் இல்லாமல் சுகஜீவிகளாய் இருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லோரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்’ என்ற ஆசீர்வாதமும் இடம்பெற்றிருக்கும். ‘நாமும் கதையை முடித்தோம்ஷ இந்த நானில முற்றுநல் இன்பத்தில் வாழ்க’ என்று பாரதியும் தன் பாஞ்சாலி சபதத்தை இவ்வாறுதான் முடித்திருப்பான்.

இது தன் படைப்பின் முற்றுமுழுதான நோக்கத்தை படைப்பாளி வெளிப்படுத்தும் விதமாகக் கொள்ளலாம். மயூரம் வேதநாயகம்பிள்ளை பொதுமக்களைக் குறியாகக் கொண்டு நூல் யாத்த வேளையில், கல்வியறிவுபெற்ற கனவான்களைக் குறியாகக்கொண்டு ‘மனோன்மணியம்’ ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நூல் யாத்தார்.

உணர்ச்சிகளை படிப்படியாக ஏற்றி வெறும் கதைகூறலாய் தமிழ் நாவல் இலக்கியம் இந்த ரொமான்ரிய முறையிலேயே நீண்டகாலம் பயணித்தது. அப்போது அது வசன காவியம் என்றழைக்கப்பட்டது. கலாநிதி கைலாசபதிகூட,‘பிரதாபமுதலியார் சரித்திரம் தமிழ் உரைநடையில் தோன்றிய முதலாவது புதுமை நூல் ஆகவும் அமைந்துவிட்டது. எனவே வசன காவியம் என்று அதனை அழைத்தல் பொருந்தும்’ என்று கூறுவதைக் கவனிக்கவேண்டும். இந்த இடத்தில் அந்நூலை நாவலெனக் குறிப்பிடாமல், புதுமை நூலெனக் குறிப்பிடுகிறார் அவர். பிரதாப முதலியார் சரித்திரத்தின் பின்னால் வெளிவந்த ‘கமலாம்பாள் சரித்திரம்’,‘பத்மாவதி சரித்திரம்’ உட்பட பல்வேறு நாவல்களும் இந்தத் திசையிலேயே சென்றிருந்தன. அதற்கான வாசகத் தளத்தையே அதுவரையான ஆங்கிலக் கல்விமுறையும் உருவாக்கியிருந்தது.

5..
தமிழ்நாட்டில் நிலைமை இவ்வாறு இருந்தால்,ஈழ நாட்டில் அதன் முதலாவது தமிழ் நாவல்  ‘ஊசோன் பாலந்தை கதை’, பிரதாபமுதலியார் சரித்திரம் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின் வெளிவந்தது எனத் தெரிகிறது.  இதை திருகோணமலை இன்னாசித்தம்பி 1891இல் எழுதினார். கலாநிதி க. கைலாசபதியின் இந்த முடிவுக்கு மாறாக கலாநிதி நா.சுப்பிரமணியன் 1885இல் சித்திலெவ்வை மரக்காரினால் எழுதி வெளியிடப்பட்ட ‘அசன்பேயுடைய கதை’யை ஈழத்து முதலாவது தமிழ் நாவலாகக் கொள்வார். இவை இரண்டையும் விடுத்து ஈழ மொழி வழக்குப் பிரஸ்தாபமும், எடுத்துக்கொண்ட நிலக்களனும் காரணமாக ‘வீரசிங்கள் அல்லது சன்மார்க்க ஜெயம்’ என்ற சி.வை.சின்னப்பபிள்ளையின் 1905இல் வெளிவந்த நூலைக்கூட முதலாவது என்று சொல்லலும் பொருத்தமானது. இவையெல்லாவற்றுக்கும் மாறாக 1856ஆம் ஆண்டில் வெளிவந்த ‘காவலப்பன் கதை’யே முதலாவது ஈழத்துத் தமிழ் நாவல் என்பாரும் உளர். இதுபற்றிய முடிவை ஆய்வுலகத்துக்கு விட்டுவிடுகிறேன்.

பிற்காலத்தில் முகிழ்த்த முற்போக்குக் காலகட்டத்தில் எழுந்த புனைகதைகளின் வீச்சுக் குறித்து சிறுகதையிலும், நாவலிலும் கவனம் குவிக்கவேண்டிய அவசியமொன்று ஈழம்வரையில் உண்டு. மற்றும்படி தமிழ் நாவலிலக்கியத்தில் மிக்க பாதிப்பை ஏற்படுத்திய நாவலாகச் சொல்வதற்கு நாம் தடுமாற்றம் கொள்ளவேண்டிய நிலைமையே எஞ்சிநிற்கிறது. கே.டானியலின் ‘கானல்’, மு.தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’, அருள் சுப்பிரமணியத்தின் ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது’, பாலமனோகரனின் ‘நிலக்கிளி’, வ.அ.ராஜரத்தினததின் ‘துறைக்காரன்’ போன்றனவற்றை, விமல் குழந்தைவேல், தேவகாந்தன், சோபாசக்தி முதலானவர்கள் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளாகக் கணிக்கப்படுகிறவரையில்,ஈழத்தின் சிறந்த நாவல்களாகக் கூறமுடியும்.

சிறுகதையில் இருந்த வளர்ச்சி இலங்கைத் தமிழ் நாவல்களைப் பொறுத்தவரையில் இருக்கவில்லையென்று குறிப்பாகச் சொல்லலாம்.
நந்தியின் ‘மலைக்கொழுந்து’, ஸி.வி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் படமாட்டேன்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’ போன்றனவும் அதேயளவு முக்கியத்துவம் வாய்ந்தனவே. எஸ்.பொ.வின் ‘தீ’ நாவல் தனக்கென ஓரிடத்தை நாவலிலக்கிய வரலாற்றில் கொண்டிருக்காவிடினும் அது வெளிவந்த காலத்திலிருந்த பாதிப்பு முக்கியமானது. அது குறித்து எழுந்த விமர்சனங்கள் முக்கியமானவை. அதில் க.நா.சு., மு.த., பிரமிள் போன்ற பலர் கலந்துகொண்டிருந்தனர். எழுத்து சஞ்சிகையில் இவ்விவாதங்கள் இடம்பெற்றன. ஈழத்து ஆரம்ப நாவல்களைப் பொறுத்தவரை மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இதயம்’ நாவலுக்கு தனது ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் நூலிலே ஒரு முக்கியமான இடம் அளித்திருப்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன்.

இலங்கையின் வடபகுதியில் முற்போக்கிலக்கியம் சாதி முறைக்கெதிரான போராட்டத்தின் வெளிப்பாட்டினைக் கொண்டிருந்ததெனில், மலையகத்தில் அது தொழிற்சங்க உரிமையினதும், பாலியல் சுரண்டலினதும், வாழிடப் பிரச்சினையினதும் வெளிப்பாட்டைக் கொண்டிருந்ததாய் பொத்தம் பொதுவாகக் கூறமுடியும். இந்த வகையில் அங்கே தோன்றிய நாவல்கள் இச் சோகங்களின் வெளிப்பாட்டினை அதிகமும் கொண்டிருந்தன. ஆயினும் கனதியான நாவல் என்றவகைமையுள் அவை அடங்காது போய்விடுகின்றமை துர்ப்பாக்கியம்.

வெறும் யதார்த்தத்தின் பிரத்தியட்சம் மட்டும் கொண்ட நீண்ட கதை, நாவலாக ஆகிவிடுவதில்லை. நாவலின் பாத்திர வார்;ப்பும், அது விரிக்கும் சமூகக் களமும், தனிமனித மனநிலைகளின் விவரிப்பும், கதைகூறலின் புனைவும், அதற்கான மொழிநடையுமே ஒரு நூலை அது நாவலா இல்லையா எனத் தீர்மானிக்கிறது என்ற விமர்சன அடிப்படையில் இந்த முடிவையே நாம் வந்தடையவேண்டி உள்ளது.

இலங்கை தவிர்த்து, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இலக்கிய முயற்சிகள் உள்ளன. சிறுகதையில் ஓரளவு அவற்றுக்கான பங்களிப்பு உளவெனினும், நாவலில் சொல்லும்படிக்கு மிக அதிகமில்லை. ரெ.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயிலில்’, அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’, ரெ.கார்த்திகேசுவின் ‘அந்திம காலம்’ போன்ற நாவல்கள்

6..
இலக்கிய வரலாற்றெழுத்தியல் பகுத்துள்ளபடி இந்திய அல்லது ஈழ நாவல்களின் தோற்ற காலத்தை ஐரோப்பியர் காலமெனக் கொள்ளலாம். ஐரோப்பிய காலம், நாவல்களின் தோற்றத்துக்கான களப் பணியைக் கச்சிதமாக முடித்திருப்பினும், சிந்தனை விரிவாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெறும்வரையில் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி அதற்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ் நாவலின் வளர்ச்சி பெரும்பாலும் மேற்கு நாடுகளைச் சார்ந்தல்ல, இந்திய மொழிகளைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. குறிப்பாக வங்கத்திலிருந்தும், மராத்தி, உருது, இந்தி மொழிகளிலிருந்தும் பெருவாரியான மொழியாக்கங்கள் தமிழில் இடம் பெற்றன.

 வ.வே.சு.ஐயர்,கு.ப.ராஜகோபாலன், ஆர்.~ண்முகசுந்தரம் போன்றோர் வங்க மொழியிலிருந்து நிறையப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தனர்.
ஆர்.~ண்முகசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த விபூதிபூ~ன் பந்யோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யும், த.நா.குமாரசாமியின் மொழிபெயர்ப்பிலான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்ய நிகேதன’மும் தமிழிலக்கிய உலகினை வலுவாகப் பாதித்தவை.

இந்த ஆரம்பம் பதிப்புத் துறையினதும், வாசகப் பரப்பினதும் அனுசரணையினால் வீச்சுப் பெற்றது.  மணிக்கொடிக் காத்துக்குப் பின்னால் இந்தத் துறை மகத்தான வளர்ச்சிபெற்றது. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யினால் மராத்திய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரின் சிறுகதைகளும் நாவல்களும் பெருவாரியாக மொழிபெயர்க்கப்பட்டன. த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, மற்றும் அ.கி.ஜெயராமன் போன்றோரால் வங்கப் படைப்புகள் மொழிமாற்றமாயின. இது தமிழ் நாவலின் வளர்ச்சிப் போக்கைத் திட்டமாக மாற்ற உதவியது. அதுபோல சோவியத்திலிருந்து மார்க்சீம் கார்க்கியும், பு~;கினும், டால்ஸ்டாயும், கோகலும், அன்ரன்; செகாவும்  மொழிபெயர்ப்பாகி வந்ததிலான தாக்கமும் தமிழில் நிறைய நிகழ்ந்திருக்கிறது. சிதம்பர ரகுநாதன் மொழிபெயர்த்த மார்க்சீம் கார்க்கியின் ‘தாய்’ நிறைந்த பாதிப்பைச் செய்ததாய்ச் சொல்லப்படுகிறது. தமிழுக்கு நிகழ்ந்த பிரேம் சந்த்தின் படைப்புகளது அறிமுகமும் முக்கியமானது. ஹிந்தியிலும் உருதுவிலும் முதல் நாவலாசிரியராகக் கணிக்கப்படும் பிரேம் சந்த், இடதுசாரிச் சிந்தனையாளர். இவரது படைப்புக்களில்,‘பிரச்சார நோக்கம் இருந்தாலும்கூட, அவர் கதைகளும், நாவல்களும் இலக்கியத் தரம் அமைந்து விளங்கியது ஒரு சிறப்பு’ என்கிறார் இலக்;கிய விமர்சகர் க.நா.சு.

இந்த இடத்தில் ஈழத்தில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புகளையும் நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏறக்குறைய இருபது மொழிபெயர்ப்பாக்கங்கள் இக் காலப்பகுதியில் வெளிவந்ததாகத் தெரிவிக்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன் தனது ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலிலே. இவான் துர்க்கனேவ்’வின் நாவலென்று இலங்கையர்கோனால் மொழிபெயர்க்கப்பட்டு ‘முதற்காதல்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவானின் இன்னொரு நாவல் ‘மாலைவேளையில்’ என்ற தலைப்பில் சி.வைத்தியலிங்கத்தினால் மொழிபெயர்ப்பானது. ரொபேர்ட் லூயி ஸ்ரீவன்ஸனின் ஒரு நாவல் ‘மணிபல்லவம்’ என்னும் தலைப்பில் யாழழ்ப்பாணம் தேவனினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எமிலி ஜோலாவின் நாநா நாவல் அ.ந.கந்தசாமியினால் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றை முக்கியமாகக் கருதுகிறேன்.

தமிழில் முற்போக்கு இலக்கியத்தை, இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் யதார்த்தவாத எழுத்துமுறையை, வளர்த்தெடுத்ததில் இத்தகைய மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும்பங்குண்டு.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்தே கம்யூனிச சிந்தனையும், இயக்கச் செயற்பாடும் இந்தியாவில் ஏற்பட்டிருப்பினும் இந்திய சுதந்திரத்தின் பின்னரே முற்போக்கு வாத சிந்தனை இலக்கியத்தில் வீச்சுப் பெற்றது எனல் வேண்டும்.


7..
இது முதல்கொண்டு தமிழ் நாவல் இலக்கியத்தின் போக்கினை மூன்றாக என்னால் வகுக்க முடிகிறது. முதலாவது, பொதுமக்கள் இலக்கியம். இது வணிகத்தனமாக விரிகிறது. இரண்டாவது, சிற்றிதழ்களின் தோற்றமும் தீவிர இலக்கிய முயற்சிகளும். குறிப்பாக,‘எழுத்’தின் வருகை. இது விமர்சன முறையை முன்னெடுத்ததோடு புதுக்கவிதைக்கான வாசலைத் திறந்தும் விட்டது. மூன்றாவது, முற்போக்கு இலக்கியம். இதை இடதுசாரி இலக்கியம் எனலும் பொருந்தும். இதன் பெருவழக்கிழப்பு பின்னால் தலித் இலக்கியம் பெருக வாய்ப்பானது.

இந்த மூன்று வகையான இலக்கியப் பிரிவுகளும் அண்ணளவாக 1975வரை எதுவித தடுமாற்றமுமின்றி வளர்ந்தன. அதனதன் சிந்தனையைத் திசைமாற்றும் எதுவிதமான பாரிய சமூக மாற்றமும் இக்காலம் வரையில் நிகழவில்லை என்கிறது இலக்கிய விமர்சன உலகம்.
முதலாவது வகையினரில் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கோவி மணிசேகரன், ஜெகசிற்பியன் போன்றோரின் எழுத்துக்கள் தொடர்கதைகளாக சஞ்சிகைகளில் வெளிவந்த காலம் இதுதான். கல்கி, சாண்டில்யனின் சரித்திரக் கதைகள் அசாதாரண இயற்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் hளைவழசiஉயட சழஅயnஉந என்கிற வகைப்பாட்டுக்குள் அடங்குவன. இவற்றை சாதாரண இயற்கை நிகழ்ச்சிகளோடு பொருந்தியதான hளைவழசiஉயட ழெஎநட என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியாது. தமிழில் இதற்கு முன்னுதாரணம் ஆகக்கூடிய நாவல் அரு.ராமநாதன் எழுதிய ‘பாண்டியன் மனைவி’ மட்டுமே. ஆயினும் இவ்வகை எழுத்து லட்சக்கணக்கான வாசகப் பெரும்பரப்பைக் கொண்டிருந்தது. கல்கி, கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய சஞ்சிகைகள் இவற்றின் வெளியீட்டுக் களங்களாயிருந்தன. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களில் நா.பா.வின் மணிபல்லவமும், பாண்டிமாதேவியும் சற்று வித்தியாசப்பட்ட அமைப்பும், நடையும் கொண்டன. இவற்றினுள்ளும் மணிபல்லவம்மீது எனக்கு பற்றும் உண்டு. என் ஆரம்பகால வாசிப்புகளில் என்னை ஒரு திசைமாற்றும் கருவியாக அது செயற்பட்டது என்பது அதன் முதன்மைக் காரணம்.

ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் தொடர்ச்சியாக இவர்களதைக் கொள்ளலாம்.

அடுத்த இலக்கிய வகைமையும் சஞ்சிகை சார்ந்தே தொடங்குகிறது. தீவிர இதழ்கள் அல்லது சிற்றிதழ்கள் என இவற்றைக் கூறலாம். எழுத்து, சூறாவளி, சந்திரோதயம் போன்றவை இக்காலகட்டத்தின. இவற்றின் பாதிப்பு பல எழுத்தாளர்களிடமும் இருந்தது. ‘நாகம்மாள்’ தந்த ஆர்.~ண்முகசுந்தரம்,
‘நித்திய கன்னி’,‘காதுகள்’ ஆகிய நாவல்களைத் தந்த எம்.வி.வெங்கட்ராம்,‘வாடிவாசல்’ எழுதிய சி.சு.செல்லப்பா,‘ஒருநாள்’,‘பொய்த் தேவு’ ஆகிய நாவல்களைப் படைத்த க.நா.சு. போன்றோரையும் ‘புயலிலே ஒரு தோணி’,‘கடலுக்கு அப்பால்’ ஆகிய நாவல்களின் படைப்பாளி ப.சிங்காரம்,‘மோகமுள்’,‘மரப்பசு’,‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களைத் தந்த தி.ஜானகிராமன்,‘பதினெட்டாம் அட்சக்கோடு’, மற்றும் ‘தண்ணீர்’ ஆகிய நாவல்களைத் தந்த அசோகமித்திரன்,‘குறத்தி முடுக்கு’,‘நாளை மற்றுமொரு நாளே’ தந்த ஜி.நாகராஜன்,‘மாயமான் வேட்டை’ மற்றும் ‘குருதிப்புனல்’ தந்த இந்திரா பார்த்தசாரதி,‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘பாதையில் பதிந்த அடிகள்’ படைத்த ராஜம் கிரு~;ணன்,‘கடல்புரத்தில்’ தந்த வண்ணநிலவன்,‘பள்ளிகொண்டபுரம்’ படைத்த நீலபத்மநாதன் போன்றோர் இவ்வகையினருள் முக்கியமானவர்கள்.

மூன்றாம் வகைமைக்குள் தமிழ் நாவல் உலகின் மிக முக்கியமான படைப்பாளிகள் அடங்குவர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்றோர் ஆரம்பத்தில் முற்போக்கு அணி எழுத்தாளர்களாகவே இனங்காணப்பட்டார்கள். இவர்களது அணிமாற்றம் பின்னாலேதான் நிகழ்ந்தது.

சு.சமுத்திரம், டி.செல்வராஜ், கந்தர்வன், பொன்னீலன், சிதம்பர ரகுநாதன் ஆகியோர் முக்கியமானவர்கள். சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’யும், சிதம்பர ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ முக்கியமான நாவல்கள். ‘வாடா மல்லி’ பாலினப் பிரச்சினைபற்றிப் பேசும் முக்கியமான தமிழ் நாவல். அதேபோல் ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி நாவலாகக் கூடியது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியின் முன்னால் இன்னும் சிலரின் விகசிப்பு உண்டு. இதை நாம் விளங்கிக்கொள்ள அமைப்பியலிலிருந்து பின்நவீனத்துவம் வரையில் அலசியாக வேண்டும். இந்தியப் பொருளியல் மாற்றமும்  வேறுவிதத்தில் தன்னை வடிவமைத்தமை இந்த மாற்றங்களைத் துரிதப்படுத்தியது.

உற்பத்தி முறையும், சமூக நிலைமையும் இன்னும் நிலப்பிரபுத்துவப் பிடி முற்றாக நீங்கிவிடாத நாடாகவே இந்தியா இருந்துவந்திருக்கிறது. தொழிற்சாலைகளும் முதலாளிகளும் தோன்றியிருப்பினும் அரசின் இறுக்கம் வலுவாக இருந்து முதலாளித்துவ முறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. என்றைக்கு இந்திய பொருளாதார அமைப்பு தனது மடியில் சர்வதேச முதலீட்டுக்கான வாசலைத் திறந்துவிட்டதோ, அன்றைக்கு அது பிரமிக்கத் தக்க மாற்றங்களைக் காணத் தொடங்கிவிட்டது. சோவியத்தின் உடைவு இந்தியாவின் தங்குதடையற்ற முதலாளித்துவப் போக்கினுக்கு உதவுமுகமாகவே இருந்தது. இத்தகைய பொருளியல் மாற்றத்தினூடாக தொலைக்காட்சியும், கணினியும் உள்நுழைகின்றன. திறந்தவெளிப் பொருளாதாரமாக ஆரம்பித்தது, திறந்தவெளிச் சிந்தனையைத் தருகிறது. பதிப்பகங்கள் பெருமாற்றம் காண்கின்றன. மேற்குலகச் சிந்தனையின் உள்நுழைவு சிற்றிதழ்களின் வடிவில் வாசகப் பரப்பை அடைந்தன. அமைப்புமையவாதமும், பின்;அமைப்பியலும், பின்நவீனத்துவமும் வாசகப் பரப்பைப்போலவே படைப்புலகையும் அணுகுகிறது. இவ்வாறு மேற்குலகச் சிந்தனை பரவியிருப்பினும், உள்ளுலகச் சிந்தனையான தலித்தியம் மகரா~;டிரத்திலிருந்து தெலுங்குக்கும், பின்னால் தமிழுக்கும் பரவுகிறது. அம்பேத்கரின் நூற்றாண்டு விழா தலித்தியத்தை பேரெழுச்சியோடு தமிழில் நிலைநாட்டுகிறது.

8..
இதிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை தசாப்தங்களாகப் பிரித்துக் காணவேண்டிய தேவை இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இந்த இரண்டு இறுதிச் சகாப்தங்களும் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. எட்டாம் தசாப்தம்தான் இன்றைய தமிழ் நாவல் இலக்கியத்தின் பாதையைச் செப்பனிட்டுத் தந்தது என்பது மிகையான கூற்றல்ல.

இந்த மாற்றத்துக்கான சமூக விதி, முதலாளித்துவம் மேலும் மேலும் இறுக்கமாக வளர்ந்துவரும் நிலையை செம்மையாகச் சொல்லிநிற்கிறது. கணினியின் வளர்ச்சி அறிவியக்கத்தின் ஊற்றாக இன்று மாறி வளர்ந்து நிற்கிறது.

குறியியலினதும், அமைப்புமையவாதத்தினதும், பின்அமைப்பியலினதும், பின்நவீனத்துவத்தினதும் வளர்ச்சி இந்த வளர்ந்துவரும் முதலாளித்துவத்திற்கான போர்க்கொடி என்பது நம்ப மறுக்கிற சேதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. பதிப்பகங்களதும், முறைசார் கல்வி நெறியினதும் அமைப்புக்கு எதிரான கலகக்குரலாகவே பின்நவீனத்துவம் எழுச்சி பெற்றதென்பது மேற்குலக வரலாறு. நிறுவனமயப்பட்ட அமைப்புகளை திரஸ்கரிக்கும் முயற்சியே பின்நவீனத்துவத்தின் ஆரம்பமாகச் சொல்லப்படுகிறது.

கார்ல் ஆந்த்ரேவின் ‘சமனி 8’ என்ற செவ்வகமான செங்கல் அடுக்கு ஒன்று லண்டனில் உள்ள டேட் கலைக்கூடத்தில் 1976ஆம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டதிலிருந்து இந்தப் புள்ளியை நாம் இட்டுக்கொள்ளலாம். இது உணர்ச்சி பாவம் எதுமற்ற வெறும் கற்குவியல் என்பாரும், இது கொண்டிருக்கக்கூடிய அர்த்தங்களை மதிப்பீடு செய்வோருமாக இது சர்ச்சையை மட்டுமல்ல, சிந்தனையையும் கிளர்த்தியது.
இதில் நாம் கண்டடையவேண்டிய உண்மை எதுவெனில் கலைக்கூடத்தின் தன்மை மாற்றப்படுகிறது என்பதுதான். ‘ஒரு படைப்பை மெய்யான கலைப்படைப்பு என்று ஆக்குவது எல்லாவற்றையும் விட கலைக்கூடம் என்ற நிறுவனம்தான்’ என்று பின்நவீனத்துவம் சொல்கிறது. மட்டுமன்;றி,கார்ல் ஆந்த்ரேவின் செங்கல் அடுக்கு, ரொட்டினுடைய முத்தம் சிலைபோல உணர்ச்சியைத் தருவதாக இல்லையெனின், முன்னர் கலையின்பம் என நாம் கொண்டிருந்ததின் அளவுகோல்கள் தவறானவையெனவும் அது சொல்கிறது. சிந்தனையுலகம் சார்ந்த ஒரு குழுவாக பின்நவீனத்துவம் செயல்பட்டிருப்பினும், அது வலதுசாரித் தன்மையைவிட இடதுசாரித் தன்மை கொண்டதுதான் என்கிறார் கிறிஸ்தோபர் பட்லர் பின்நவீனத்துவம் குறித்துக் கூறுகையில்.

இவ்வாறான சிந்தனைமுறை தமிழுக்கு அறிமுகமானது சிறுபத்திரிகைகள் மூலமாகத்தான்.

இவ்வாறு பெருங்கதையாடல்களின் முடிவை முன்மொழிந்த பின்நவீனத்துவத்தின் தமிழுலக அறிதலுக்குப் பின்னர் எண்பதுகளில் தமிழிலக்கிய உலகில் நிகழ்ந்திருந்த மாற்றத்தை நாம் இவ்வாறு காணலாம். வணிக எழுத்துக்கும் யதார்த்தவகை எழுத்துக்கும் விலகி, கதையையும், கதை சொல்லும் முறையையும், அதற்கான புது மொழியையும் கண்டடைதல் நிகழ்ந்திருந்தது. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’, சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்சி பெனியனும்’ போன்ற நாவல்களின் வருகை இதையே அறிவிக்கிறது. தொண்ணூறுகள் இன்னும் முக்கியமானவை. ‘அத்திலாந்திக் மனிதனும் ஒரு கோப்பை தேநீரும்’ தந்த எம்.ஜி.சுரேஸ்,‘பாழி’ நாவல் தந்த கோணங்கி ஆகியோரின் வருகை இன்னும் தமிழ் நாவலிலக்கியத்தின் பாதையைச் செப்பனிடுகிறது. சிறுகதைகள் மூலம் இதற்கான பங்களிப்பைச் செய்தவர்களாக பிரேம்-ரமே~; ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புதிய பார்வையில், பின்நவீனத்துவத்தினை ஒத்துக்கொள்ளாதவர்களாக இருந்தாலும், தமிழில் முக்கியமான நாவல்களைத் தந்தவர்களில் ஜெயமோகன், எஸ்.ராமகிரு~;ணன் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களோடு சாரு நிவேதிதாவையும் சேர்த்துக்கொள்ள முடியும். யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ முக்கியமான வருகை.
இக் காலகட்டத்தில் தமிழ் நாவல் இலக்கியத்தில் நிகழ்ந்த இன்னுமொரு அம்சம் பெருநாவல்களின் தோற்றம்.

ஜெயமோகனின் ‘வி~;ணுபுரம்’, மற்றும் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ போன்றவையும், மூன்று பாகங்களாய் வெளிவந்த ஜோதிர்லதா கிரிஜாவின் ‘மணிக்கொடி’யும், இரண்டு பாகங்களாய் வெளிவந்த சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாக’மும், தேவகாந்தனின் ஐந்து பாகங்களாய் சுமார் 1400 பக்கங்களில் வெளிவந்த ‘கனவுச் சிறை’யும் குறிப்பிடப்படவேண்டியவை. பெரும் வாசகத் தளத்தின் ஆதர்~ம் இருந்ததே இவற்றின் தோற்றப்பாட்டைச் சாத்தியமாக்கியதெனினும் தமிழ் நாவலிலக்கியம் இன்னொரு மகா பாய்ச்சலை நடத்திக்காட்ட இந்தக் கட்டத்தில் முயற்சி செய்தது என்ற உண்மையையும் நாம் உணரவெண்டும்.

வணிக எழுத்து இக்காலகட்டத்தில் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. இதற்கான இருபெரு அடையாளங்கள் சுஜாதாவும், பாலகுமாரனும். இவர்கள் காலத்தைச் சேர்ந்த இந்துமதியும், வாஸந்தியும், சிவசங்கரியும்கூட இந்த பகுப்பினுள் வரக்கூடியவர்களே. சுஜாதா ஓரளவேனும் சிறுகதை மூலமாக தன் இலக்கியப் பங்களிப்பைச் செய்தார் என்கிறார்கள் சில விமசகர்கள்.
பெண்ணிய எழுத்தும், தலித் இலக்கியமும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களுக்கு உரியவையே.

வை.மு.கோதைநாயகி அம்மாளிலிருந்து லட்சுமி ஊடாக இந்துமதி ஆதியாய பெண் படைப்பாளிகள்வரை தமிழ் நாவல் வரலாற்றில் பெண் எழுத்து தொடர்ந்திருந்தாலும், பெண்ணிய எழுத்தாக நிமிர்ந்து வெளிவந்த எழுத்தென பாமாவினது ‘கருக்கு’ மற்றும் ‘சங்கதி’ ஆகியனவும், சிவகாமியின் ‘ஆனந்தாயி’யும்  கருதத் தக்கன.

ராஜம் கிரு~;ணன் பெண் படைப்பாளியாக இருந்தபோதிலும், அவரது எழுத்துக்கள் பொது இலக்கிய வகைமையுள் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவையே. ‘பாதையில் பதிந்த சுவடுகள்’ அவரது முக்கியமான படைப்பு.

பிற மொழிகளிலிருந்தான மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கியம் அடைந்த நன்மைகள் தனியாகப் பார்க்கப்பட வேண்டியவை. தமிழ் நாவலுக்கான அவற்றின் பங்களிப்பு இங்கே தனியாகப் பார்க்கப்பட இருக்கிறது. ஆயினும் தலித் இலக்கியம் என வருகையில் அவற்றினை மேம்போக்காகவேனும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

முக்கியமான படைப்புக்கள் மராத்தியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டன. லட்சுமண் மானேவின் ‘உபாரா’, லட்சுமண் கெய்க்வாட்டின் ‘உச்சாலியா’, கிN~hர் சாந்தாபாயின் ‘குலாத்தி’ ஆகியன மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. சித்தலிங்கையாவின் ‘ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’ ஆகியன கன்னடத்திலிருந்து மொழிபெயர்ப்பாகின. இவை தமிழ் தலித் இலக்கியத்துக்கான உந்துவிசையை அளித்தன. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, தேவபாரதியின் ‘பலி’ ஆகியன தலித் இலக்கியமாகக் கருதப்பட்டபோதும், தலித்தியக்கத்திற்கு அனுசரணை செய்யாதவை என்ற குறை இருக்கிறது. மற்றும்படி குணசேகரனின் ‘வடு’, ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ போன்றவை தலித்திய நாவல்களாக நின்று நிலைத்திருக்கின்றன.

9..
இருபத்தோராம் நூற்றாண்டு மிக்க பிரகாசத்தோடு பிறந்தது எனல்வேண்டும். தனிமனித முயற்சிகளாக இலக்கியம் இக்காலகட்டத்தில் பரிணமித்தது என்றாலும் மிகையில்லை. தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, பிரேம்-ரமே~;, அ.மார்க்ஸ், அறுபதுகளிலிருந்து இலக்கியக் களத்தில் நிற்கும் வெங்கட் சாமிநாதன் ஆகியோர் விமர்சன ரீதியாக தமிழ் நாவல் இலக்கியம் வளர தம் பங்களிப்பினைச் செய்தார்கள். இன்னும் அவர்களது பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் இருந்த பொதுப்படையான இரண்டு போக்குகள் இன்று பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன என்றே சொல்லக்கிடக்கிறது. தலித்திலக்கியம், பெண்ணிய எழுத்து என்பனவெல்லாம்கூட ஒரு வசதிக்கான பகுப்பாகவே இருக்கின்றன தவிர, அவற்றின் தீவிரம் தனியே இலக்கியத் தீவிரமாக மாற்றமடைந்திருப்பதை நான் கவனித்து வருகிறேன்.
இந்த மாற்றங்களுக்கான விசேட சமூகக் காரணங்களென்று எதுவும் இல்லாவிட்டாலும், தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணங்கள் முண்டுகொடுத்துக்கொண்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக் காலகட்டத்தில் பத்திரிகைத்துறையின் வலுவான பிடி இருந்தமைபோல், இன்று பதிப்பகத்தின் ஆதிக்கம் அதன்மீது பதிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அது ஒருவகையில் வளர்ச்சிக்கான ஒரு பங்களிப்பையும் செய்கிறது என்பதும் உண்மையே. ஒரு படைப்பை நாவலா, குறுநாவலா எனத் தீர்மானிக்கிற அளவுக்கான அவற்றின் ஆதிபத்தியம் தீமையானது எனக் கொண்டாலும், நன்மையான பங்களிப்பைக் கருத்தில்கொண்டு அவற்றின் இருப்பை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டியிருக்கிறது. தமிழினியும், உயிர்மையும், காலச்சுவடும் தரமான பல நாவல்களை வெளியிட்டிருப்பதை மறுக்க முடியாது.

இ-புத்தக வெளியீடுகள் மெதுமெதுவாக வெகுத்து வருகின்றன. எழுத்துக்களைக் கோர்த்து அச்சடித்த ஆரம்ப கால முறையிலிருந்து இது அசாதாரணமான வளர்ச்சிதான். இதுவே பதிப்பகத்தின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான கருவியாகத் தொழிற்படவும் முடியும். எல்லாவற்றிற்கும் காலத்தின் பதில் முக்கியமானது. அதைக் காத்திருப்போம்.
இக்காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களில் குறிப்பாக எஸ்.ராமகிரு~;ணனின் ‘உபபாண்டவம்’, மற்றும் ‘யாமம்’, பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ ஆதியன முக்கியமான படைப்புக்கள்.

சென்ற தசாப்பதத்தில் வெளிவந்த நாவல்களைக் குறிப்பிட முடிவதுபோல், இந்த தசாப்பதத்தில் வெளிவரும் நாவல்கள் பற்றி இனிமேலேதான் பகுத்துணர முடியும்.

இந்தத் தலைப்பிலான வி~யத்தை நிறைவு செய்வதன் முன்னால் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

வாழ்க்கை ஒவ்வொருவரின் நேரத்தையும் தயவுதாட்சண்யமின்றி விழுங்கிக்கொண்டிருக்கிறது. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம் என்ற அம்சம் அறவே இல்லாது போய்விட்டது. இன்று ஒரு தொழிற்சாலைக் கூலியே தன்னை ஒரு தொழிலாளியாக மேற்குலகில் நினைத்துக்கொள்வதில்லை. அத்தனைக்கு வாழ்முறை மாற்றம் பெருமளவு நிகழ்ந்துள்ளது. நாடுகள் இதை நினைக்கவும் அனுமதியாதிருக்கின்றன. கனடாவில் மே தினம் முதலாம் தேதியில் கொண்டாடப்படுவதே இல்லை. தொழிலாளர் தினமாக அது இன்னொரு நாளில் நினைவுகூரப் படுகிறது. தொழிற்சங்க அமைப்புகளும் இங்கே அபூர்வம். இவ்வாறாக முதலாளித்துவம் சுரண்டலின் முழு எல்லைவரை செல்வதற்கான சகலமும் பூரணப் படுத்தப்பட்டுள்ளன. எனது கவனம் குறிப்பாக இவை மனித ஓய்வுநேரத்தினை விழுங்கிவிடுவதில்தான் குவிகிறது. மேற்குலகில் இந்நிலை அதீதமான வளர்ச்சி பெற்றிருப்பினும், உலகின் எல்லாப் பாகங்களிலும் பெரிதாகவோ சிறிதாகவே இந்நிலையே நிலவுகின்றது. இது வாசகப் பரப்பின் அளவினை மெதுமெதுவாக சீணப்படுத்தி வருவது கண்கூடான நிகழ்வு.

புதினத்தில் நாவலே சிறுகதையின் முன்பு தோன்றியது. பத்திரிகைத் துறையின் தேவையை நிறைவேற்றப் பிறந்த பிறவியென வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இல்லாமலில்லை. சென்ற நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் தோன்றிய மகாநாவல்கள் இன்று வழக்கிறந்துவிட்டன. இன்றைய மலையாள இலக்கியத்தில் ‘மைக்ரோ நாவல்கள்ஷதான் பிரபலம். இரண்டு பாரங்களில், சுமார் 32 பக்கங்களில் அமைந்துவிடுகிறது இந்த நாவல். இதையும் நேரமின்மையின் உண்மையின் பின்னாலுள்ள வாசிப்புச் சாத்தியத்தை ஊடாடி நிற்கிறது என்பதே என் அனுமானம்.

எது எப்படியிருப்பினும், தமிழ் நாவல் இலக்கியம் தரமான படைப்புக்களைக் கொண்டிருப்பதோடு இனி வரும் காலம் உலகத் தரத்துக்கான ஆக்கங்களை உருவாக்கும் என உளமார நம்புகின்றேன்.


0000

(இக் கட்டுரை வைகாசி 2014இல் ஸ்கார்பரோ, கனடா, மெய்யகத்தில் நடைபெற்ற மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.)


ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...


ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...


ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என்றோ, உலகத்தரம் வாய்ந்தது என்றோ சொல்லும்படிக்கு நாவலேதும் ஈழத்தில் தோன்றியதுமில்லை. இப்படிச் சொல்லுகிறபோது வாசகர்களும், நண்பர்களும் முணுமுணப்புக் காட்டுகிறார்கள். நாவலிலக்கியத்தின் வளமான வளர்ச்சிக்கான சூழ்நிலைமைகள் ஈழத்தில் நன்கமைந்திராததைக்கொண்டு இந்த முடிவுக்குத்தான் ஓர் அவதானியால் வந்துசேர முடியும்.

நாவல் இலக்கியத்துக்கான சூழ்நிலைமைகள் குறித்து இலக்கியவரலாறு தெளிவாகவே பேசுகிறது. அச்சு யந்திர வசதி, வாசகர்களாய் அமையக்கூடிய பரந்துபட்ட மத்தியதர வர்க்கம் போன்றவை, நாவலிலக்கியத்தின் தோற்றத்துக்குப்போலவே வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை தமிழகத்தில்போல் ஈழத்தில் வாய்க்கவில்லையென்பது பெரிய நிஜம். அதனால் சில நல்ல நாவல்கள், சுமாரான நாவல்கள், குறிப்பிடத் தகுந்த நாவல்கள் என்கிற அளவில் குறுகியதுதான் ஈழத்தின் நாவலிலக்கியப் பரப்பு. அதன் வீச்சான காலம் இனிமேல்தான் தோன்றவேண்டும். அதற்கான அறிகுறியை இவ்வியாசத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றை தோற்ற காலம், மறுமலர்ச்சிக் காலம், தேசியவாதக் காலம், 1975ம் ஆண்டளவில் தொடங்கும் பத்தாண்டுகள் வரையான தேக்க காலம், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னான வியாப்திக் காலம் என்று பிரித்து நோக்கவிருக்கின்றேன். பத்து பத்து ஆண்டுகளாய் பிரித்தாயும் மரபை மீறியுள்ளது இது. ஆனால் இதுதான் கொள்கைப் போக்குகளை ஒப்பிடவும், தரப்படுத்தவும் வாய்ப்பானது. இக் காலக் களங்கள் ஒவ்வொன்றுமே அரசியல் பொருளாதாரக் காரணிகளின் ஊடாட்டம் மிகுந்தவையென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவசியமான விளக்கங்களை இதில் நான் சேர்த்திருக்கிறேன், இந்த நியாயம் கருதி.
ஈழத்து நாவலிலக்கியம்பற்றி புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டி மிக்க கனதியாக இல்லாமலும்,அதேவேளை புதிய போக்குகளின் தரவுகள்பற்றிய துல்லியக் கணிப்புடனும் இந்த வியாசம் விரிந்து செல்லும். நூல்கள்பற்றிய விவரிப்புகளும், அவைபற்றிய மதிப்பீடுகளும் இலக்கியப்போக்குகளை விளங்கப்படுத்தவேண்டி அவசியமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.


தோற்ற காலம் (1891 முதல் அண்ணளவாக 1930வரை)

நாவல் அதிசயப்பட வைக்கிற உருவத்தோடுதான் ஐரோப்பாவில் வெளிவரத் தொடங்கியது. புதினம் என்ற அர்;த்தத்தில் அதற்குப்;; பெயர் வைத்ததும் நினையாப்பிரகார நிகழ்வல்ல. காரணத்ததோடு சூட்டப்பட்டதுதான். தமிழ் உரைநடையின் முகிழ்ப்போடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலில் தோற்றம் பெறுகிறது இந்தியத் தமிழ் நாவல் இலக்கியம். அதன் முதல் நாவலை‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்றும், அந்த ஆண்டை 1879 என்றும் தெளிவாக அறியக்கிடக்கிறது.

எந்தவொரு அரசியல் பொருளாதார நிகழ்வும், இந்திய உபகண்டத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சி தேய்வுகளை அடியொட்டியே ஈழத்தில் நிகழ்ந்து வந்தன என்கிற நிஜத்தைப் பார்க்கிறபோது, தமிழகத்தில் தோன்றிய நாவலிலக்கிய அலை உடனடியாகவே ஈழத்தில் அடிக்க ஆ;ரம்பித்துவிடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஈழத்தின் முதலாவது நாவல் 1885இல் தோன்றிய ‘அசன்பேயுடைய கதை’ என்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன். இந்நூல் சித்திலெவ்வை மரைக்கார் என்பவரால் எழுதி வெளியிடப்பெற்றது.

நிலமான்ய சமுதாயத்தின் இலக்கிய உற்பத்தியான காவியங்களின் மரபுச் செல்வாக்கிலிருந்து முழுவதும் விடுபடாத ஒரு நிலைமாறுங் கால கலப்பினப் படைப்பாக இது இருப்பதாலும்,ஈழத்தைக் களமாகவோ,ஈழத்து மாந்தர்களைப் பாத்திரமாகவோ கொண்டிராததாலும் இதை நாவலென்றோ,ஈழத்து நாவலென்றோ கொள்ளமுடியாது என்பாரும் உளர். அதற்கும் ஆறு ஆண்டுகள் கழித்து 1891ஆம் ஆண்டு திருகோணமலையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி என்பவரால் எழுதப்பெற்ற ‘ஊசோன் பாலந்தை கதை’யையே ஈழத்தின் முதல் நாவலென்பது வழக்கம். இதையும் மறுப்போர் உள்ளனர். அவர்கள் 1895ஆம் ஆண்டு திருகோணமலை தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘மோகனாங்கி’யே ஈழத்தின் முதல் நாவல் எனக் கூறுகிறபோது, அது ஈழத்தவரால் எழுதப்பட்ட நாவலே தவிர ஈழத்து நாவல் தன்மைகளைக் கொண்டதல்ல என்பார் இலக்கிய விமர்சகர் சோ.சிவபாதசுந்தரம்.

இவையெல்;லாம் இலக்கிய வாசகனுக்கு ஒரு விசயத்தைத் தெளிவாகச் சுட்டுகின்றன. ஆரம்ப கால நாவல்கள் யாவும் எழுத்தார்வத்தில் பிறந்து, தென்னிந்திய நூல்களைப் பிரதிபலித்து எழுதப்பட்டவை என்பதே அது. இந்தியத் தமிழ் நாவல் உருவெடுத்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின் 1891இல் எழுந்த ‘ஊசோன் பாலந்தை கதை’யே ஈழத்து முதல் நாவலென்று விமர்சகர்கள் சில்லையூர் செல்வராஜன், கலாநிதி க.கைலாசபதி ஆகியோர் நிறுவுவதை ஒப்புக்கொண்டு 1891 தொடங்கி 1930 வரை விரிந்த பெரும்காலப் பரப்பில் தோன்றிய முக்கிய நாவல்களை இனி கவனிக்கவேண்டும்.
இவை யாவுமே இந்திய தமிழ் நாவல் மரபினை ஒட்டிப் பிறந்த படைப்புக்களென தயங்காது சொல்லலாம்.  இவற்றின் தத்துவப் பரப்பு சமய எல்லைக்குள்ளேயே அடங்கிவிட்டிருந்தது.

சமுதாயத்தை நன்னெறிப்படுத்தும் தூய எண்ணங்களே படைப்பாளிகளின் கருப்பொருளாய் இருந்தன. முக்கியமாக, இவை கிறித்தவ சமயப் போதனைகளை வெளியிட தோற்றம்பெற்ற நாவல்கள். தமிழகத்தின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தை எழுதிய வேதநாயகம்பிள்ளை ஒரு கிறித்தவர். ஈழத்தின் முதல் நாவலான ‘ஊசோன் பாலந்தை கதை’யை எழுதிய இன்னாசித்தம்பி ஒரு கிறித்தவர். சுவாமி ஞானப்பிரகாசர், இவ்விரு நாடுகளிலும் தோன்றிய முதல் நாவல்களின் கர்த்தாக்கள் கிறித்தவர்களாய் அமைந்துபோன விந்தையைச் சொல்வார். அது யோசிப்புக்குரியதும்கூட. தமிழும் சைவமும் வளர்ந்து, நாவலர் அவர்களால் உரைநடையும் சீர்பெற்று விளங்கிய யாழ்ப்பாணத்திலே நவீன இலக்கிய வகையான நாவலினம் தோன்றாமல், அவ்வளவு தூரம் கடந்துபோய் திருகோணமலையில் தோன்றியதற்கான காரணமும் ஆராயப்படவேண்டும். மூடுண்டிருந்த ஒரு சமூகம் நாவலிலக்கியத்தை உடனடியாக உள்வாங்கத் தயாராக இருக்கவில்லையென்றே இது குறித்துத் தீர்மானிக்கமுடிகிறது. இது எப்படியிருப்பினும்,ஈழத்தின் தோற்ற கால நாவல்கள் தமிழகத்து நாவல்களின் போக்கு, பண்பு முதலியவைகளைப் பிரதிபலிப்பனவாய் இருந்தன என சுருக்கமாகக் கொள்ளலாம்.

அஸன்பேயுடைய கதை: எகிப்தின் காயீர் நகரத்து யூசுப் பாட்சா என்கிற ராஜ குலத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பிறந்த மகன் சிறுவயதிலேயே கடத்தப்படுகிறான். பம்பாய் கொண்டுவரப்பட்டு அங்கே சிறிதுகாலம் வளர்க்கப்படுகிறான். அங்கும் சூழ்ச்சிக்காளாகும் அஸன் என்று பெயர் சூடட்டப்பட்டுள்ள இச்  சிறுவன், தன் பதினான்காவது வயதில் அதிலிருந்தும் தப்பி கல்கத்தாவுக்கு ஓடுகிறான். அங்கு ஆங்கிலத் தேசாதிபதியின் அணுக்கத்தையும் அபிமானத்தையும் பெற்று கல்வி கேள்விகளில் சிறப்புடையவனாகிறான். அணித்தாயுள்ள ஒரு பிரபுவின் மகளது காதலுக்குரியவனாகிறான். பின் தன் பெற்றோரைக் காணவேண்டி எகிப்து தேசம் செல்கிற அஸன், தேசத்துக்கெதிரானவர்களை அழிக்க பல வீரசாகசச் செயல்களில் ஈடுபடுகிறான். இதற்காக இவனுக்கு பே (டீயல) என்னும் கௌரவ விருது வழங்கப்படுகிறது.

காவியப் பண்பு சார்ந்து எழுதப்பட்ட நூல் இது. சித்திலெவ்வை என்கிற இதன் ஆசிரியர் ஈழத்தவரானாலும், நூல் முழுக்க முழுக்க அந்நிய தேசங்களையே களனாகக்கொண்டிருக்கிறது. பாத்திரங்களும் ஈழத்தவர் அல்லர். கூடதலான நாடகப் பண்பு அமைந்ததாய்க் காணப்படும் இந் நாவல், கலாம்ச வியாப்தி குறைந்தே இருக்கிறது. பின் வந்த ஈழத்து நாவல்களின் உரைநடைச் செழுமைக்கும், பாத்திர வார்ப்பின் சீர்மைக்கும், கதையாடலின் நேர்த்திக்குமான உரமாக அமைந்த்ததை இந் நாவலின் பயனாகக் கொள்ளல் தகும்.

இந் நாவலை இஸ்லாமிய பண்பாட்டுத் தாக்கத்தால் பிறந்த நூலாகக் கருதவேண்டும். இஸ்லாமிய நாடுகளின் இலக்கியத் தாக்கம் இவ்வண்ணமாகவே ஈழத் தமிழிலக்கியத்தில் செறிந்தது. 1974இல் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் திருச்சியில் இந் நூலை மீள் பதிப்புச் செய்தது.


ஊசோன் பாலந்தை கதை: இந் நூல்மீது ஆக்க இலக்கியம் சார்ந்த எத்தகைய குறைகள் சொல்லப்பட்டிருப்பினும், நாவலின் கதையாடல் அற்புத மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதுமட்டும் நிஜம். தமிழ்க் கதையென்றே கருதும்படி பாத்திரங்களின் வார்ப்பு அமைந்திருக்கிறது. இன்னுமொன்று. காவியச் செல்வாக்கினின்றும் விடுபடாதிருப்பினும் ஈழப் பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்றி பதிவுசெய்வதை முதன்மையாய்ச் சுட்டவேண்டும்.

அலுவான்யா என்கிற கற்பனை தேசத்தைக் களமாக வைத்து ஆரம்பிக்கிறது கதை. சக்கரவர்த்தி அலெக்சாந்தருக்கும், அரசி தொன் வெலிசாந்த்துக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை என்னும் இரு சிறுவர்களின் கதையே இது. காலத்தின் கோலத்தால் பெற்றோரைப் பிரியும் இவ்விரு குழந்தைகளும் தனித்தனி இடங்களைச் சென்று சேர்கின்றன. காடு சேர்கிற ஊசோன் என்கிற சிறுவன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு பயங்கரமான காட்டு மனிதனாகிறான். இன்னொரு சிறுவனான பாலந்தை அதிர்~;டவசம் பட்டவனாய் ஒரு அரண்மனையை அடைகிறான். அங்கு வளர்ந்து  அந்நாட்டின் படைத் தலைவனாகி ஒரு போரில் தன் சகோதரனை வென்று அடக்குகிறான். இன்னொரு போரில் தந்தையென்று தெரியாமலே தந்தையை வென்று அழிக்கிறான். பின் இந்த விடயம் தெரியவருகிறபோது தவமிருந்து உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

‘ஊசோன் பாலந்தை கதை’ இப்போது பதிப்பில் கிடைப்பதில்லையென்று சொல்லப்படுகிறது. இது ழுசளழn யனெ ஏயடநவெiநெ என்கிற போர்த்துக்கீசிய நெடுங்கதையொன்றின் தழுவலாய்க் கொள்ள இடமிருக்கிறது என்ற அபிப்பிராயமும் உண்டு.

‘ஊசோன் பாலந்தை கதை’ முழுக்க முழுக்க கிறித்தவ பின்னணியில், தொண்ணூற்றாறு பக்கங்களுள் அடங்கிய சிறிய கதை. 1891லேயே இது 1500 பிரதிகள் அச்சிடப்பட்டடதாய்த் தெரிகிறது. 2001இல் இன்னமும் நாம் 1200 பிரதிகளே அச்சாக்கிக்கொண்டிருக்கிறோமென்று நினைக்கையில் அதிசயம் தெரிகிறது.


மோகனாங்கி: திருகோணமலை தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் நூல். 1895இல் வெளியாகியது. சென்னையில் இந்து யூனியன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பிரசுரிக்கபட்ட இந்நூல் சரித்திர சம்பந்தமான கதையைக் கொண்டது. நிகழ்வும், புனைவுமாக நாவல் அமைந்தது. 17ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பிரதேசங்களை நாயக்க மன்ன்ர்கள் ஆட்சி புரிந்த காலத்தைக் களனாகக் கொண்டது. இரு நகரங்களுக்கிடையிலான போட்டி, பொறாமை, சூழ்ச்சிகளுக்கிடையே கதை வளர்த்துச் செல்லப்படுகிறது. கiதையின் நாயகனான சொக்கநாத நாயக்கனுக்கும் மோகனாங்கி என்பாளுக்குமிடையிலான காதலே நாவலின் மையம்.
ஈழத்து நாவல்களுக்குள்ளே மிகுந்த செல்வாக்குப்பெபற்று இந்நூல் திகழ்ந்ததாய்த் தெரிகிறது. பள்ளிகளில் பாடநூலாக ஏற்கப்பட்டு 1919இல் இது சுருக்க நூலாக வெளிவந்தமை இது காரணமாயே இருக்கலாம். அப்போது இதன் தலைப்பு ‘சொக்கநாதன்’. ‘மோகனாங்கி’ தமிழின் முதல் சரித்திர நாவலென்று சொல்லப்படலாம். நாவலின் புனைவு பெருமைப்படத் தக்கவிதமாகவே அமைந்துள்ளது. நவீன இலக்கிய வகையான நாவலொன்று 1919 காலப் பகுதியிலேயே பள்ளிகளில் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தமையை ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

ஏறக்குறைய நாற்பது ஆண்டு நீண்ட காலப் பரப்பைக்கொண்ட இப் பகுதியின் பிற்பகுதியில் அதிகமாகவும் தோன்றியவை தொடர்கதைகளே. இவற்றில் சிலவே குறிப்பிடத் தகுந்தன. ‘வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம்’ இவற்றிலொன்று. இரசிகமணி கனக-செந்திநாதன் இதையே ஈழத்தின் முதலாவது சரித்திர நாவலென்பார். இது 1905இல் வெளிவந்தது. தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் ‘அழகவல்லி’ இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நூல். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மழவர் குடும்பங்களுக்கிடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப் பின்னணியில்கொண்டு நகர்கிறது இந் நாவல். கிராமிய பேச்சு வழக்கின் பயில்வையும், சமூக பழக்க வழக்கங்களின் பதிவையும் இதில் மிகுதியாகக் காணக்கிடக்கிறது.

மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இதயம்’ என்ற நூலையும் இக் காலப் பகுதியின் முக்கிய நூலாகக் கருதவேண்டும். இது 1914இல் வெளிவந்தது. ‘நொறுங்குண்ட இதயம்-கதையும் கதைப் பண்பும்’ என்ற தலைப்பில் இந்நாவல்பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார் கலாநிதி ஆ.சிவநேசச்செல்வன். ‘சமகால சமூகத்திற் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுப்பதாக அமையும் இந்த நாவலிலேதான் முதன்முதலில் ஈழத்து நடுத்தர வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள கதைமாந்தரைப் பார்க்கிறோம்…நடப்பியல்பு நாவலுக்கான இன்றியமையாத பண்பு இது’ என்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன். அற போதனை என்கிற நோக்கம் அழுத்தம் பெறாததாய் இந் நாவல் அமைந்திருப்பின் மிகச் சிறந்த நாவலொன்றின் கூர்த்த பண்புகள் அமைந்ததாய் இந்நாவல் இன்று பேசப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

1925இல் வெளிவந்த ‘நீலகண்டன் ஓர் சாதி வேளான்’ என்ற இடைக்காடரின் நாவலை, அதுவரை காலம் நிலவிவந்த மரபான கதை சொல்லல் முறையினை முடிவுக்குக் கொண்டுவந்த நூலாகக் கொள்ளலாம். ‘புனித சீலி’ யோன் மேரி என்பாரால் பல பாகங்களாய் எழுதப் பெற்றது. கல்கியின் நீண்ட நாவல்களையும்விட நீளமானது.


மறுமலர்ச்சிக்; காலம் (1931-1956)

‘மறுமலர்ச்சி’இதழ், மறுமலர்ச்சிக் காலகட்டமான இக் காலப் பகுதியின் படைப்பிலக்கிய விமர்சன பிரசுரக் களனாயிருந்தது. பின்னால் ஈழகேசரி,வீரகேசரி, சுதந்திரன், தினகரன் போன்ற பத்திரிகைகளும் தோன்றி ஈழத்துப் பிரசுர களத்தை விரிவாக்கின. ‘கல்கி’ கிரு~;ணமூர்த்தி போலவும், அகிலன்போலவும் எழுதுபவர்களே உற்பத்தியாகிக்கொண்டிருந்தாலும், இலக்கிய வீச்சோடு எழுதியவர்களும் இக் காலப்பகுதியில் தோன்றவே செய்தார்கள்.

தமிழகத்தைப்போலவேதான் இங்கும் அது நிகழ்ந்தது. கனதியான இலக்கியத்தை மணிக்கொடி தோன்றி வளர்த்ததுபோல்,ஈழத்தின் இலக்கியக் கனதிக்கு இடம்கொடுத்து வளர்த்தது மறுமலர்ச்சி இதழ்.
பத்திரிகைகள் வெகுத்த காலமாக இது இருந்தாலும், நாவல்கள் சிறந்தன தோன்றியதாய்ச் சொல்ல முடியவில்லை. தோன்றிய பலவும் தொடர்கதைகளாகவே இருந்தன. மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப்படுவோர்கூட தொடர்கதைகளோடு திருப்திகொண்டு இருந்துவிட்டனர்.

அ.செ.முருகானந்தனின் ‘யாத்திரை’, வ.அ.இராசரத்தினத்தின் ‘கொழுகொம்பு’, கனக. செந்திநாதனின் ‘வெறும்பானை’, க.தி.சம்பந்தனின் ‘பாரம்’ போன்றவை நாவலாகவளராத தொடர்கதைகளாகவே கொள்ளப்பட முடியும்.

இக்காலத்தின் முக்கியமான போக்கு ஈழத்து இலக்கியம் என்கிற பிரக்ஞை பெறாததாகவே இருந்தது. இப் பொதுப் போக்கை மீறி ஆக்க இலக்கியத்தில் சாதனைக்கான எதுவும் படைக்கப்படவில்லையென்பது வருத்தமான விசயமே. இக் காலப் பகுதியில் ஈழத்தில் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் முகிழ்த்தன. இது, அடுத்த கட்ட இலக்கியத்தின் செறிவை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது.


தேசியவாத காலம் (1955இன் மேல் தொடங்கி 1972வரை)

1956ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக வல்லபத்தோடிருந்த ஒரே அணி இடதுசாரிக் கட்சிகளினதே ஆகும். ஐ.தே.க.விலிருந்து பிரிந்து எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாபித்துக்கொண்டாலும், அது ஒரு மூன்றாம் வலுவாகவே இருந்தது. இடதுசாரிகளின் வலு எதிர்க்கட்சி அளவில் மேலோங்கியே இருந்தது.

1952இல் டி.எஸ்.சேனநாயக்க இறக்க, அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சேனநாயக்கவின் அனுதாப அலையில் மீண்டும் ஐ.தே.க.வே டட்லி சேனநாயக்க தலைமையில் அரசபீடத்தில் அமர்கிறது. விதேச முதலாளித்துவப் போக்குடைய ஐ.தே.க. ஆட்சிபீடமேறிய சொற்ப காலத்திலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்ந்துவிடுகிறது. பஸ், ரயில் கட்டணங்களும் உயர்ந்துவிடுகின்றன. முக்கியமாக அதுவரை இருபத்தைந்து சதமாக இருந்த கூப்பன் அரிசி, அளவும் குறைக்கப்பட்டு விலையும் எழுபது சதமாக ஏற்றப்படுகிறது.

இந்நிலையில்தான் 1953 ஆகஸ்டு 12இல் வேலைநிறுத்தத்துக்கு, நாடு தழுவிய அழைப்பு விடுகின்றன இடதுசாரிக் கட்சிகள். அரசாங்கத்தின் சகல அச்சுறுத்தல்களையும் மீறி வேலைநிறுத்தம் அமோக வெற்றிபெறுகிறது. இக் கொந்தளிப்புபற்றி விரிவாகவே பார்க்கவேண்டும்.

ஒரு பொதுப் பிரச்னையில் நாடு தழுவி பொதுமக்கள் எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இக் காலகட்டத்தில் வடக்கிலும் இடதுசாரிகளின் வலுவே அதிகம். கொழும்பு மாநகர் ஸ்தம்பித்துப்போகிறது. துறைமுகம், போக்குவரத்து, தொழிற்சாலைகள் யாவிலும் வேலைநிறுத்தம். கொழும்புத் துறைமுகத்தில் ஒரு நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஐ.தே.க.வின் மந்திரிசபை கூடி அவசர ஆலோசனை நடத்துகிறது, மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி.
தென்பகுதிகள் இன்னும் கூடுதலான பாதிப்புக்களை அடைகின்றன. மரங்களை வெட்டிச் சாய்த்தும், தந்திக் கம்பங்களைச் சரித்தும் போக்குவரத்து முடக்கப்படுகிறது. தொலைபேசிச் சேவை தடுக்கப்படுகிறது. தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இன்னொரு கட்டத்தில் இவற்றின் உச்சபட்சமாக தென்பகுதி நோக்கிச் சென்ற ஒரு ரயிலைத்தடுத்து நிறுத்தி கையகப்படுத்தியது மக்கள் கூட்டம். அரசியல் வரலாற்றில் இது ‘மகா ஹர்த்தால்’ என்று அழைக்கப்படுகிறது.

இது இலங்கையின் இலக்கிய, சமூகத் தளங்களில் மிக முக்கியமமான பாதிப்புக்களை விளைக்கிறது. இந்தியாவில் காந்திஜியின் தலைமையில் நடந்த 1930இன் உப்புச் சத்தியாக்கிரகம், எவ்வாறு அதன் இலக்கிய, சமூக நிலைமைகளைக் கட்டுடைத்துவிட்டதோ, அதற்கு நிகரான ஒரு அலையைக் கிளர்த்தியிருந்தது 1953இன் வேலைநிறுத்தம்.
இந் நிலைமையில் 1956இல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முதலாளிகளின் அபிலாசைகளைப் பிரதிபலித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கிறது. தேசிய முதலாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் கிடைக்கவே, எங்கும் எதிலும் தேசிய கோசம் எழலாயிற்று. தனிச் சிங்கள சட்டம் இந்நிலையில் கொண்டுவரப்பட தமிழ்த் தேசியம் விழித்தெழுகிறது. பிரிட்டி~; கடற்படை வசமிருந்த திருகோணமலையைச் சுவீகரிக்கும் பொருட்டு இலங்கையரசு நிறைவேற்றிய சட்டமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அது தேசிய உணர்வை இன்னுமின்னும் பெருகிவிளைய வைத்தது. இடதுசாரிகளின் மூலம் இந்தக் கோ~ம் தமிழர் மத்தியில் குறைவாக இருந்தாலும் வலுவாகப் பரவியது.

ஏறக்குறைய 1950வரையும் தமிழகம் தாய்நாடு,ஈழம் சேய்நாடு எனவிருந்த மாயத்திரை 1956க்குப் பின்னால் முற்றாக விலகி இரு நாடுகளின் இறைமைகளும் இலக்கியார்த்தமாகவும் நிலைநிறுத்தப்பட்டன. இங்கிருந்துதான் ஈழத்து மண்வாசைன இலக்கியமென்ற குரல் ஓங்கியொலிக்கக் கேட்கின்றது. மண்வாசைன செறிந்த பல இலக்கியங்கள் இக் காலப் பகுதியில் முகிழ்த்தன. ஈழம் தனக்கான இலக்கியச் செல்நெறியை வகுத்துக்கொண்டாயிற்று.

இக் காலத்திலெழுந்த தேசிய இலக்கிய கோ~த்தை ‘தேசிய இலக்கியம் என்கிற யுத்தக் குரல்’ என்பார் ஏ.ஜே.கனகரட்ன. தேசிய இலக்கியமென்பது ஒரு மனோபாவம் மட்டுமில்லை, ஒரு நாட்டின் தனித்தன்மையையும், பாணியையும், பிரகரணங்கள் முதலியவற்றையும் குறிக்குமென்பார் அவர். அது ஒரு தேசிய தனித்துவத்தை, தேசிய சுபாவத்தை, தேசிய வல்லபத்தைப் பிரதிபலிக்கத்தான் செய்யும் என்று அவரே மேலும் கூறுவார்.

அமெரிக்கரும் ஆங்கிலேயரும் ஒரே மொழியைப் பேசுபவர்கள். 1818இல் சிட்னி ஸ்மித் எழுதுகிறார் எடின்பரோ மதிப்புரையில்,‘ஆறு வாரப் பயணத்தில் நமது மொழி, நமது உணவு, நமது விஞ்ஞானம், நமது வல்;லபம் முதலியவற்றைச் சிப்பங்களிலும் பீப்பாய்களிலும் அவர்களுக்கு நாம் அனுப்பிவைக்கும்போது ஏன் அமெரிக்கர்கள் புத்தகம் எழுதவேண்டும்?’ என்று. இருந்தும், சுதந்திரத்தின் பின் அமெரிக்க இலக்கியம் படைக்கப்பட்டது. ஒரு நாட்டுக்கு அதற்கென்று பிரத்தியேகமான உணர்வுண்டு. அதனால் அது தன் உணர்வின் வெளிப்பாட்டுக்கான இலக்கியத்தைப் படைத்தே தீரும். இதுவேஈழத்திலும் நிகழ்ந்தது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டது. தேசிய இலக்கிய கோ~த்தின் முன்வைப்புடன் பல்வேறு நவீனங்கள் வெளியாகின. அவை கற்பனா யதார்த்தவாதம், யதார்த்தவாதமென்றும், சோசலிச யதார்த்தவாதமென்றும் பல்வேறு முகங்கள்கொண்டு உருவாகின. முற்போக்கு, மெய்யுள், நற்போக்கு என அது எப்பெயர் பெற்றிருப்பினும், பொதுவில் அது தேசிய இலக்கியம்-ஈழத் தேசிய இலக்கியம்.

தேசிய இலக்கிய காலப்பிரிவில் 1956-62ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத் தகுந்தது. மண்வாசனை தோய்ந்து புதிய அனுபவங்கள் படைப்புகளாயின. இக் காலகட்ட இலக்கியம்பற்றி சில்லையூர் செல்வராசன் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘இந்தக் காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பூரண உருவமும், தாக்கமும்,ஈழத்து நாவலென்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறதென்பது மிகையல்ல.’

இந்த ஆறாண்டுக் காலத்தினை இளங்கீரன் சகாப்தமென்றும் சொல்லலாம். 1951இல் எழுதத் தொடங்கிய சுபைர் இளங்கீரன் சுமார் பதினைந்தாண்டுக் காலத்தில் 23 நாவல்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் ‘நீதியே நீ கேள்’,‘இங்கிருந்து எங்கே?’ போன்றவை ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழுத்தமான முத்திரைகளைப் பதித்துள்ளன. இலங்கைச் சமூகத்தில், தொழிலாளர்களேயென்றாலும் கடைச் சிப்பந்திகள் என்றொரு பெரிய சமூகம் தனியாக உண்டு. இது இஸ்லாமிய சமூகத்திலே அதிகம். இந்த சிப்பந்திகள் சமூகத்தை தன் நாவல்களில் பிரதிநிதித்துவப் படுத்தியவர் இளங்கீரன். மேலே குறிப்பிட்ட இரு நாவல்களினதும் சமூக அக்கறை அல்ல, அவற்றின் கலாநேர்த்தியே அவற்றின் சிறப்புக்குப் காரணமென்பதுதான் பலரின் அபிப்பிராயமும். கதையை நடத்திச் செல்லும் லாவகம், பாத்திர வார்ப்பு, உரையாடல் என்று அத்தனையிலும் ஆசிரியரின் வெற்றி தெரிகிறது. ‘நீதியே நீ கேள்’ முதலில் தினகரன் வாரமலரில் தொடர்கதையாக வந்து பின்னரே நூல் வடிவு பெற்றது. நூலாக்கத்தின் முன், தொடர்கதையில் இயல்பாகக் கையாளப்பட்டிருக்கக்கூடிய இலக்கிய மலினங்கள் சரிசெய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வாய்ப்பு மிக அருகியே இருக்கிறது. இவ்விரு நாவல்களும் உலகத் தரத்தன என்கிறார் சில்லையூர் செல்வராசன். கலாநிதி கைலாசபதியும் ‘நீதியே நீ கேள்’ நாவலை மிகவும் பாராட்டியிருக்கிறார். ‘ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம்;’ தந்த கலாநிதி நா. சுப்பிரமணியன் இந்நாவலின் செய்நேர்த்திக் குறையை முக்கியமாய் எடுத்துரைப்பார். ஒரு காலகட்டத்தின் முக்கியமான நாவல் என்பதைத்தவிர இக்கட்டுரையாளனுக்கு வேறு அபிப்பிராயம் கிடையாது.

1962க்கு மேலே பெரும்பாலான நாவல்கள் முற்போக்கு இலக்கிய முத்திரை குத்திகொண்டன. சமூகத்தில் ஜாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஒரு பகுதி மனித குலத்தை நசுக்கிக் கிடக்கிறபோது அவற்றுக்கெதிரான குரலும் இலக்கியத்திலேறுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் அதுவே இலக்கியத் தகைமையாகிவிடாது. இதை உறுதிபடுத்துவதுபோல், இக் காலகட்டத்தில் தோன்றிய பல நாவல்களும் அட்டவணைகளில் மட்டுமே அடங்கிக் கிடக்கின்றன. இவ்வகைப் பிரசார நெடில் கூடிய எழுத்துக்கள் விரையில் கலா ஈரமற்று வறட்சியடைந்து போயின. 1970க்குப் பின்னால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட இடதுசாரிகளின் தோல்வி, 1972க்குப் பின்னான பத்து வரு~ காலத்தை நாவல் வரட்சிக்காலமாக்கியது என்றாலும் இக் காலகட்டத்தில் நல்ல சில நாவல்கள் தோன்றாமலும் இல்லை.

இக் காலகட்டத்தில் எழுந்த பல நாவல்களும் ஈழத்தின் மண்வாசனைக்கே முதலிடம் கொடுத்தன. அவற்றுள் முக்கியமானவையாய் பின்வருவனவற்றைக் கூறமுடியும். செ.கணேசலிங்களின் ‘நீண்ட பயணம்’, கே.டானியலின் ‘பஞ்சமர்’, நந்தியின் ‘மலைக்கொழுந்து’, தி.ஞானசேகரனின் ‘குருதிப் புனல்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, யோ.பெனடிக்ற் பாலனின் ‘சொந்தக்காரன்’, செங்கைஆழியானின் ‘காட்டாறு’ம் ‘வாடைக்காற்று’ம், கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை’, அ.பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ போன்றவை அவை.

‘நிலக்கிளி’ நாவல் இக் காலப்பகுதியில் தோன்றிய முக்கியமான நூல். மட்டுமில்லை. இதுவரையான இலக்கியக் காலபட்டங்களுக்குள்ளேயே முக்கியமான நாவல் என்றும் கூறமுடியும். 1972இல் நிறுவப்பட்ட வீரகேசரியின் மலிவு விலை நூல் வெளியீட்டுத் திட்டத்தில் வெளிவந்த விலைமதிப்பில்லாத நூல் இது.

வட்டார வழக்கைப் பேசுகிற நாவல் இது. கதை நிகழ் களமாக அமைவது, இன்று அகதிகளால் நிறைந்துள்ள வன்னிப் பிரதேசமாகும். நாவலின் கள விஸ்தரிப்பு அபாரம். கதிர்காமன், அவனது மனைவி பதஞ்சலி, வஞ்சக எண்ணத்தோடு அவளுடன் பழகும் ஆசிரியன் சுந்தரலிங்கம் என பாத்திரங்கள் உயிர்கொண்டு உலவுகின்றன நாவலில். நிலக்கிளி ஒரு குறியீடு – பதஞ்சலிக்கான குறியீடு. அது ஒரு பறவை. மரப் பொந்துகளில் வாழும் இப் பறவையினால் உயரத்தில் எழும்பிப் பறந்துவிட முடியாது. மண் நோக்கியே இதன் சரிவு இருக்கும். இதனால் இது மக்களால் எழுதில் கையகப்படுத்திவிட முடிகிற பறவை. இதுபோலவே பதஞ்சலி இருக்கிறாள். நாவல் நிகழ்வுகள் மனவோட்டங்களைச் சொல்லியும் சொல்லாமலும் நகர்ந்து அற்புத வாசக அனுபவத்தை அளிக்கிறது.

இக்காலகட்டத்தில் தோன்றிவை அதிகமாகவும் குறுநாவல்களே. ஷஇருளினுள்ளே’ (எஸ்.அகஸ்தியர்),‘காவியத்தின் மறுபக்கம்’,‘தோழமை என்றொரு சொல்’ (செ.யோகநான்),‘புகையில் தெரிந்த முகம்’ (அ.செ.முருகானந்தன்),‘குட்டி’ (யோ.பெனடிக்ற் பாலன்) என முக்கியமான பல குறுநாவல்கள் அவற்றில் உள்ளன. ஆயினும் இவற்றை நாவல் வரிசையில் சேர்த்து தராதரம் பார்க்க நான் முயலவில்லை. அதுபோல் பரீட்சார்த்த நாவல்களான எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’, எழுத்தாளர் எண்மர் எழுதிய ‘வண்ணமலர்’,  ஐவரால் எழுதப்பெற்ற ‘மத்தாப்பு’ ஆகியவற்றையும் இங்கு நான் விசாரணைக்குட்படுத்தவில்லை. இவை ஒருவகையில் புதிய வி~யங்களையோ,வி~யங்களைப் புதிய முறையிலோ சொல்லிப்பார்க்க வந்தவை மட்டுமே. அவற்றின் பிரஸ்தாபம் இவ்வளவு போதுமானது.

இலங்கையில் அரசியல் பொருளாதாரச் செழிபின்மையினதும், இலக்கியச் செழிப்பின்மையினதும் பத்தாண்டுகள் உளவெனில் அவை 1972க்கும் 1983க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளேயாகும். இதையே இலக்கிய வரலாற்றில் தேக்க காலம் என்று குறிப்பிட்டேன். முற்போக்கு இலக்கிய நெறி தன் முன்னால் எழுப்பப்பட்டிருந்த கேள்விச் சுவர்களைப் பார்த்து திகைத்து நின்றது. இடதுசாரிச் சிந்தனைகளின் சரிவு தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்திருந்தது. எங்கும் ஒரே குழப்பம். சிந்தனைக் குழப்பம், வாழ்வுக் குழப்பம்…இப்படி பல குழப்பங்கள். இக் குழப்ப காலம் நாவலுக்குரிய காலமல்ல என்று கூறுவார்கள். இது சிறுகதைக்கும், கவிதைக்குமான காலம். ஓர் உணர்வுத் துண்டை கதையாக அல்லது கவிதையாக மாற்றிவிடுவது சுலபம்தான். நாவலோ பூரணத்துவத்தை அவாவி விரிவது. ஒன்றிலிருந்து கிளைத்துப் படர்வது. அது தெளிவு பெற்ற ஒரு காலப் பகுதியிலேயே தன் தர்க்கங்களின்மூலம் சித்தாந்தங்களை நிறுவிக்கொண்டு போகும்.


வியாப்திக் காலம்(1983-2000)

அவசியங்கள் மூலம் மாற்றம் பெறாதவரையில் இக்காலகட்டத்தின் நீட்சி சென்றுகொண்டேதான் இருக்கும். ஈழத் தமிழர் தாயகம்விட்டு புவிப் பரப்பெங்கும் தஞ்சம் கேட்டு ஓடினார்கள். லட்சக்கணக்கில் இந்த ஓட்டம் நிகழ்ந்தது. வௌ;வேறு காலநிலை, கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளிலே தமிழர் வாழ்வு தொடங்கிற்று. வாழத் துவங்கிய மண்ணோடு பொருந்திப்போக முடியாத நிலைமையும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் இலக்க்கியமே பலரதும் உணர்ச்சிக்கு வடிகாலாக ஆயிற்று. அப்போதும் சிறுகதை, கவிதை ஆகிய வடிவங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவலிலக்கிய சிரு~;டிக்கு காலம் மிகவும் பிரதானமானது. புகலிட நாடுகளில் இடையறாத உழைப்பை மேற்கொண்டுள்ள தமிழர் நாவலைப் பொறுத்தவரை வாசகர்களாகவே ஆகியிருக்கிறார்கள். பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்த இலக்கிய வகைமைகளில் படைப்பு இங்குள்ளவர்களிடத்திலேயே முதன்மையாக முடியக்கூடியது. ஆனாலும் வாசகர்களாக மட்டுமே அவர்கள் தங்கிக்கொண்டது ஒருவகையான இழப்பாகவே எனக்குத் தெரிகிறது.

புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்துகொண்டும் முல்லைஅமுதன், மாத்தளை சோமு, தியாகலிங்கம் போன்றோர் நாவலுருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இக் காலகட்டத்தில் மாத்தளை சோமு வெளியிட்ட ‘மூலஸ்தானம்’ விமரசன ரீதியாக பலத்த கவனத்தைப் பெற்ற நாவலாகும். யதார்த்தப் பாணியில் ஆற்றொழுக்காய்ச் செல்லும் இந்த நாவல்.

இந்திய மண்ணில் அகதிகளாய் வந்து சேர்ந்தவர்தான் அதிக நாவல்களை படைத்திருக்கிறார்கள். இவற்றுள் சிலவேனும் குறிப்பிடத் தகுந்த நாவல்களாகலாம். ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ (செ.யோகநாதன்),‘அயலவர்கள்’ (செ.கணேசலிங்கன்),‘விதி’ மற்றும் ‘நிலாச் சமுத்திரம்’ (இக்கட்டுரையாளனது) போன்றவை தக்க விமர்சனங்களை இந்திய மண்ணிலே எதிர்கொண்டவை.

200க்கு சற்று முன்னாலிருந்து நாவலிலக்கியத்தின் போக்கு, அதன் பேசுபொருளெல்லாம் அதற்கு முன்னர் நிலவிய எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றமடையத் துவங்கியுள்ளன. அது குறித்த வாசக பரப்பு குறுகிக் குறுகிச் சென்றுகொண்டிருப்பதை கவனத்திலெடுக்கவேண்டும். ஜனரஞ்சகமான எழுத்தும் இலக்கிய மொழியும் ஒன்றல்ல. ஆனாலும் நாயக்கர் காலத்தில் தோன்றிய செய்யுளினங்களான யமகம், மடக்கு, திரிபு, சித்திரக்கவி போன்றதாக வசனமும் ஆகிவிடக்கூடாதென்ற கரிசனம் தேவை. அந்தப் பேரழிவை நிவர்த்தி பண்ண பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதி தோன்றும்வரை தமிழ் காத்திருக்கவேண்டியதாயிற்று. பாரதி கவிதையிலே காட்டியதை அவன் காலத்துக்கு முன்பே வசனத்தில் காட்டியவர் ஆறுமுக நாவலர். அன்னநடை, பிடியினடை அழகுநடை அல்ல’வென அன்றே தெரிந்திருந்தவர் அவர். அதனால்தான்,‘தமிழ்ப் பாவையாட்கு வன்னநடை, வழங்குநடை வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசான்’ ஆனார். நவீன இலக்கியத்தில் புனைகதை வாகனம் வசனமாகவே இருக்கமுடியும்.நாவலை வசனநடையின் குழந்தையென்றும் கூறலாம். அதுபோல் நாவலும் வசனநடையைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. இலக்கிய மொழி இறுக்கிய மொழியாகாது பார்த்துக்கொள்வது அவசியம்.

நவீன யதார்த்தம் என்றொரு இலக்கிய வகையினம் இப்போது பேசப்படுகிறது. மொழிப் பிரக்ஞை, கட்டிறுக்கம் என்று வாசிப்பு, சிந்தனைக் களங்களில் செல்வாக்குச்; செலுத்தத் தொடங்கியுள்ளது இது. இதுவே வருங்காலத்தின் இலக்கிப் பிரக்ஞையை நிர்ணயிக்கிற வகையினமாகவும் ஆகக்கூடும். இதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டில் வெளிவந்திருக்கிற ஈழத்து நாவலான மு.பொன்னம்பலத்தின் ‘நோயிலிருத்தல்’ நாவலைச் சொல்லலாம். வருங்காலம்தான் இப்போது தோன்றுகிற நாவல்களின் தாரதம்மியத்தைச் செய்யும்.அதுவே சரியாகவும் இருக்கும்.

000

(குமுதம்.காம்’மில் யாழ்மணம் பகுதியில் ஆடி 2001இல் பகுதிபகுதியாக வெளிவந்த கட்டுரை இது.)

Thursday, August 28, 2014

நூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்


யோ.கர்ணனின்
‘கொலம்பசின் வரைபடங்கள்’
(குறுநாவல்)

ஆயிரம் நாட்களின் ஈழ வரலாறு சென்றிருந்த சுவடுகள் பதிவாகியுள்ள இந்தப் பிரதி புனைவிலக்கிய வகைமையுள் எது சார்ந்தது என்ற வினா, இதன் கலாநேர்த்தியின் அளவைக் கணிக்க மிகமுக்கியமானது.


‘இப்போதுயுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் அதன் வலியும் வேதனையும் முடியவில்லை. அது ஏற்படுத்திய துயரம் தீரவில்லை. கர்ணனுடைய மனதில் இவற்றின் தீயும் நிழலும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

'முடிவற்றஆவேசத்துடன், சகிக்கமுடியாதவெம்மையோடு இந்தத் தீநடனம் அவருடைய  மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த  நடனத்தைக் கர்ணன் விரும்பவில்லை. ஆனாலும் அது  அவரிடமிருந்து  விலகுவதாகவும் இல்லை’ என  யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’சிறுகதைத் தொகுப்புக்குமுன்னுரை எழுதிய  கருணாகரனின் வார்த்தைகள் மெய்யாக இருக்கக்கூடும்.

அடங்காத் தீயின் கருக்கும் வெம்மை ‘கொலம்பசின் வரைபடங்கள்’ முழுக்கக் காணக்கிடைக்கும். வரலாற்றினால் நிகழ்வுகளைப் பதிவுதான் செய்யமுடியும். இலக்கியம் மட்டுமே நிகழ்வுகள் சிந்திய உணர்வுகளை சிதறாமல் சேகரமாக்குகிறது. உலகமகாயுத்தங்களின் கொடுமைகளை
வரலாற்றினால் அறிந்துள்ளவேளையில்,
அதன் கொடூரங்களையும் இழப்பின், உயிர்ப் பயத்தின் வலியையும் இலக்கியம், கலைசார்ந்த வடிவங்கள் மூலமே நம்மால் உணரமுடிந்தது. இழந்துபோன ஒரு கனவுதேசத்தையும், அக் கனவுதேசத்துக்காக இழந்துபோன உயிர்கள், உடைமைகள், இன்னும் அடைந்த உடல்சார் அதீத வலிகளையும் வரலாறு கண்டுவிட்டது. செம்பாகத்துக்கு மேல் அவை பதிவுமாகிவிட்டன. அவற்றினால் சொல்லமுடியாத வேதனைகளைப் பதிவாக்குகிறது ‘கொலம்பசின் வரைபடம்’.

யுத்தத்தின் கொடுமுனைகளை, மக்களின் அவலங்களை செவிவழிச் செய்திகளாகவும், காணூடக வழியாகவுமன்றி அறிந்திராத எவரையும், அந்தமண்ணின் வழியெங்கும், நீர் நின்ற வழியெங்கும் இழுத்துச் சென்று வலிகளையும், அவதிகளையும், அந்தரங்களையும்  உணரவைத்திருக்கிறது இந்தப் பிரதி.  தரப்பாள், குடிசை, இடிந்த கல்வீடுகளில் கொப்பளிக்கும் சோகத்துக்குச் சாட்சியாக்கியிருக்கிறது.

மட்டுமில்லை, நிகழ்வுகளுக்குச் சாட்சியமாவதில் பெரிய காரியமெதுவுமில்லை. அதன் வலிகளுக்குச் சாட்சியமாகும் கொடூர வேதனை எதனிலும் இல்லை. அந்தக் கொடூர வேதனையில் துவண்டுவிடாமல் அவற்றினைப் பதிவாக்க முயலும் யோ.கர்ணனுக்கு  முதலில் என் நன்றிகள்.

இலக்கிய உலகத்தில் தலையிட்ட அரசியலின் விளைவாக எழுந்த ஒரு சர்ச்சையில்தான் யோ.கர்ணனின் பெயர் எனக்குக் கவனமாகியது. அதனால்தான் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’யை நான் வாசிக்க நேர்ந்ததும். அப்போது சர்ச்சையை உண்டாக்கும் திடமுள்ளவராகமட்டுமே அவரை என்னால் இனங்காண முடிந்திருந்தது. அவரது துணிவு பாராட்டப்படக் கூடியதாகவும் இருந்தது. கருணாகரன் கூறியபடியான தீநடனம் சகிக்கமுடியாத வெம்மையோடு நிகழ்ந்துகொண்டிருப்பதை, ‘கொலம்பசின் வரைபடங்க’ளில்தான் அர்த்தங்களின் ஊடாகவன்றி, அதை உருவாக்கும் சொல்களின் பிரயோகத்திலிருந்தும், பிரயோகங்களினால் உண்டாக்கக்கூடிய ஊடுகளினூடான அவரவர்க்குமான அர்த்தவெளிப்பாடுகளிலிருந்தும் என்னால் காணமுடிந்திருந்தது.

ஒரு  போராட்டத்தில் இழப்புகளும்,  வலிகளும் ஏற்படாமல் விட்டுவிடுவதில்லை. ஆனால் அதன் தார்மீக நியாயங்களோடு அதன் வழிமுறை இணைகோடாகச் சென்றிருக்கவேண்டும். தோல்வியின் வடுக்கள் மட்டுமே எஞ்சிய போராட்டத்தில்,  அதன் வழிமுறைமீதான சந்தேகத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது ‘கொலம்பசின் வரைபடம்’. இத்தனைக்கும் இதன் குரல் அநியாயங்களுக்கான எதிர்மையாக ஓங்கி ஒலிக்கவில்லையென்பது இப்பிரதியின் விசேடம். விடயங்களைச் சொல்ல கட்டியமைக்கப்பட்ட வடிவம், உத்திகள் இதனினும் விசேடம்.

சொல்லமுடியாத சேதிகளென்று எதுவுமில்லை. சொல்லாத சேதிகளே வரலாற்றில் பரக்கக்கிடக்கின்றன. அரசியல், பொருளாதாரம், சமயம் என்ற எந்தப் பகுப்பினது உரைப்பிலும், கலாபூர்வமான நேர்த்தி அமைந்துவிட்டால் அதுமேலே இலக்கியமாகமட்டுமே எஞ்சுகிறது. அது அனுபவிப்பதற்குரியது. தம்தம் அரசியல்களை மீறியும். ‘கொலம்பசின் வரைபடங்கள்’  நியாயமான அந்த வாய்ப்பினைப் பெருமளவு பெற்றிருக்கவில்லையென்றே தோன்றுகிறது. தமிழ்ப் பிரக்ஞையுலகத்தில் இது துர்ப்பாக்கியம்.

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ச் சிறுகதைகள் கொண்டிருக்காத வடிவமுள்ளது ‘கொலம்பசின் வரைபடங்கள்’. பெருவாரியான கருத்துக்களும், சம்பவங்களும் இதில் இடம்பெற்றிருப்பினும் இது கட்டுரை அல்லது அனுபவப் பகிர்வு அல்லது காட்சிச் சித்திரம் என்ற அனைத்து வகைமையையும் தன் சொல்களினூடாகவே மறுதலித்து நிற்கிறது.

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ தொகுப்பிலுள்ள றூட் என்ற சிறுகதைகூட இப்பிரதியின் வேறுவடிவமென்று சொல்லுந் தரத்ததாகவே இருக்கிறது. ஆனாலும் இப்பிரதிபாய்ந்திருக்கிற வெளி, மூன்று பகுதிகளாகியிருப்பினும்கூட அதன் கலாபூர்வத்துக்கான  அத்தாட்சியையும் வரைந்து விடுகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுத் தாலமியின் தவறான வரைபடத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டு கொலம்பசின் செல்வமும் புதிய நாடுகளும் தேடிப் புறப்பட்ட  கடற்பயணம், ஆரம்பத்திலேயே அதன் தோல்விகளின் படிகளை உள்ளடக்கியிருந்தது. நூற்று நான்கு பேர்களைமட்டுமே கொண்ட பினோ, நினா, சந்தாமரியா ஆகிய அவனது பழைய கப்பல்கள் பெருங்கடலின் சீற்றங்களை எதிர்கொள்ள  முடியாதவைகளாக கிரீச்…கிரீச்…எனக் கடலில் கிரீச்சிட்டு தோல்விப் படிகளின் இறங்குவிசைகளாகவே இருந்தன. அவன் அப்பயணத்தில் அடைந்தது இரண்டாம் கடற்பயணத்துக்கான நம்பிக்கை மட்டுமானதாகவே  இருந்தது.

பிரதியின் ‘நான்’ யோ.கர்ணனாக இருக்கவேண்டியதில்லை. இருந்தாலும் அக்கறையில்லை. தாலமி தன் வரைபடங்களுக்கு கடல் வியாபாரிகளின் அனுபவங்களினூடாகக் கொண்ட முடிவுகள்  எவ்வாறு தவறினை ஏற்படுத்தக் காரணமாயின எனக் கூறப்படுகிறதோ, அதுபோல ‘நா’னின்  பயணங்களும் முகவர்கள் கண்ட தவறான வழிகளினூடாக தன் தோல்வியின் முடிவுகளைக் கொண்டிருந்துவிடுகிறது. ‘நா’னிடமிருந்தது கொலம்பசிடம் இருந்த மூர்க்கம் போன்றதல்ல. அது தன்னுயிரைக் காத்துக்கொள்ளக் கொண்ட ஒரு யுத்தம். தன்னுயிரையே பணயம்வைத்துச் செய்யப்பட்டது அது. கத்தியும், ரத்தமும் கண்டு அது நடந்தது. வழிகளின் கண்டடைவும் ,  தப்புகைக்கான முறைகளும் புதிது புதிதாக எழுந்தன ,  உயிரவலங்கள்  தொடர்ந்ததின் காரணமாக.

அவஸ்தையென்பதுதான் என்ன? அதை விளக்குவதற்கான உவமானங்களில் எது மிகப் பொருத்தமானதாக இருக்கமுடியும்? இருதலைக் கொள்ளியெறும்பு என்பது  சரியானதா? வாணலியிலிருந்து தப்பி நெருப்புக்குள் விழுந்தமையென்பது பொருத்தமானதா? இவையெல்லாமே பொருந்துகின்றன சமயங்களில். ‘நான்’  காணும் சமயங்களும் இவையெல்லாவற்றையுமே உட்கொள்ளக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன. ஆயினும் இந்த ‘நான்’ கொள்ளும் ஆயாசமும், களைப்பும்,  இயலாமையும், ஒருவகை ஞானமும் ‘நா’னின் இரண்டாம் பயண முயற்சியைத் தடுக்கின்றன. வாழ்க்கையின் முறைமைகள் இப்படித்தான் அமையமுடியுமென்று எல்லாமே கதியழிந்துகிடக்கிற தேசத்தில் யார்தான் சொல்லிவிடமுடியும்? அதுஅதன் வழியே  நடந்திருக்கிறது.

எழுபத்திரண்டு பக்கங்களைமட்டுமே கொண்டுள்ள இந்தக் குறுநாவல், தனக்காக எடுத்துக்கொண்டுள்ள பக்கங்கள் அறுபத்தாறுதான். அவையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது பயண முயற்சி முதலாம் பகுதியிலும், இரண்டாம் பயண முயற்சி மூன்றாம் பகுதியிலும் விவரணமாகின்றன. இரண்டாம் பகுதி இறுதி ஈழ யுத்தத்தின் சிலநாள்கள் முன்னரையும், சிலநாள்கள் பின்னரையும் கொண்டிருக்கிறது. ஓர் உரைக்கட்டாகமட்டும் அமைந்து மற்ற இரண்டுபகுதிகளோடும் ஒட்டாமலிருந்திருக்கவேண்டிய பகுதிகூட. இதை ஓர் உரைக்கட்டாக இல்லாமல் ஆக்கிய முக்கியமான அம்சம், அது  புனைவின் வீறுக்கான மொழியின் வலிமையைக் கொண்டிருப்பது. மற்றது, அது விரிக்கும் களம், அக்காலகட்டத்திய வாழ்க்கைக் களமாக இருந்தமை. இந்த இரண்டாம் பகுதியின் தன்மை எட்டுணையளவு மாறியிருந்தாலும், இரண்டு பயண முயற்சிகளைமட்டுமே கொண்டிருந்து ஒரு குறுநாவல் வடிவத்துள் அமையமுடியாத தன்மை கொண்டிருந்துவிடும்.

‘மனிதர்களினால் பிறந்தவர்கள், மனிதர்களினாலேயே வீழ்த்தப்பட்டார்கள். நடக்கக் காலுடனும் ,பற்றிக்கொள்ளவும் பகிரவும் கைகளுடனும் பிறந்தவர்களையெல்லாம் யுத்தம் முறித்து வீழ்த்தியிருந்தது. விசித்திரப் பிராணிகளைப்போல வீதியோரமாக ஊர்ந்து ஊர்ந்து திரிந்தார்கள்’என்பது ஒரு விபரிப்புமட்டுமில்லை, இறந்தவர்களுக்குப்  பின்னால் ஞாபகமாக்கப்படும் எஞ்சியுள்ள துயரங்கள்.

‘நந்திக்கடலில் கலந்த இன்னோராறாக இரத்தஆறுமிருந்தது. ஆகாயம் உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது. நிலம் பிளந்து சிதறிக் கொண்டிருந்தது. திசையறியாத பறவைகளாக சனங்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓடிய பறவையில் ஒரு பறவையாக நானுமோடிக்கொண்டிருந்தேன்’ என ‘நான்’ விரிக்கும்  களநிலைமையின் விவரிப்பு நான் மேலே குறிப்பிட்ட விவரணத்தின் கலாபூர்வத்தைக் காட்டும்.

‘நீரேரி மையமாயிருந்தது. அப்பால் இராணுவம். இந்தக் கரையிலும் இராணுவம் புகுந்துவிட்டதுதான். ஆனால் , சில மணிநேரங்கள் முன்னர்வரை நமது இராச்சியமாயிருந்தது. ஒரு  புள்ளியளவிலேனும் இப்பொழுது கருகிச் சிதறிவிட்டது. அதனை நம்பமுடியாதிருந்தது. இந்தத் தோல்வி சில மணிநேரங்களிலேயோ, சிலமாதங்களிலேயோ கிடைத்த ஒன்றல்ல. மிகப் பல மாதங்களின் முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் வார்த்தைகளும், தருணங்களும்  ஒரேமாதிரியானவையல்ல. மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டேனும்  வார்த்தைகளை உச்சரிக்க முடிகிறது. தருணங்கள் அவகாசம் தருவதேயில்லை. மறைந்திருந்து தாக்கும் எதிரியைப்போல முகத்தில் தாக்கிவிடுகிறது. அப்பொழுது நம்புவதற்குச் சிரமமானதாக இருந்துவிடுகிறது. இப்பொழுதும் அப்படித்தான். இராச்சியமிழந்தவர்கள் ஆனோமென நம்பவே முடியவில்லை’ என பக்கம் ஐம்பத்தொன்பதில் வரும் வரிகள் நிகழ்வுக்கும் புனைவுக்குமான உச்சம்.

இராச்சியம், மன்னர், செங்கோல், மதில், கோட்டை எல்லாம் அழிந்தாயிற்று. அவை பெருமையாக நினைக்கப்பட்ட (ஒருசிலராலேனும்) காலம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. இப்போது இக் குறியீடுகள் ஏளனத்தின் அடையாளங்கள். இது இவ்வாறு வர்ணனையாகிறது யோ.கர்ணனிடத்தில் பக்கம் நாற்பதில்:

‘மன்னாரில் தொடங்கி கிளிநொச்சிவரையிருந்த
நகரங்களும், பட்டணங்களும், சிற்றாறுகளும், பெருங்காடுகளும் எதிரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வெகுதொலைவிலிருந்து எங்களிற்கு எதிராக வரத் தொடங்கியவர்கள், கழுகைப்போல மிகவேகமாக வந்தார்கள். அந்த இனத்தின் மொழி எங்களுக்குப் புரியாதது. அவர்கள் கடுமையான முகத்தைக் கொண்டிருந்தார்கள். முதியவர்களை மதிக்கவில்லை. இளைஞர்களிற்கு  இரக்கம்  காட்டவில்லை. நாங்கள் அழிந்துபோகும்வரை அந்த இனம் எங்கள்  கால்நடைகளின் ஈற்றுக்களையும், எங்கள்  நிலத்தின் பயனையும்  உண்டார்கள். எங்களை அழிக்கும் வரை எங்கள் தானியத்தையும், இரசத்தையும், எண்ணையையும், எங்களின் மாடுகளின் கன்றுகளையும், எங்களின் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம் விட்டுவைக்கவில்லை. எங்கள் நாடெங்கும் நாங்கள் நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள்  விழும்வரையும் அந்த இனம் எங்கள் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிட்டது.’

சிறுகதை, குறுநாவல், நாவலென பதிப்பகப் பக்கத்தில் எதுவித பிரஸ்தாபமும் இல்லை இதன் வடிவம்பற்றி. வடிவ தர்க்கம் குறிசுடலை இயலாததாக்கியதோ? அதனாலென்ன? இரண்டு சிறுககைகளும் ஓர் அனுபவப் பகிர்வுமென்றிருந்தாலோ, நாவலென்றிருந்தாலோ ஏற்றுக்கொண்டு பேசாமலிருந்துவிடமுடியுமா? இது ஒரு குறுநாவலெனச் சொல்லித்தானேயாகவேண்டும்!

00000

தாய்வீடு, 2014

விருந்தனர் பக்கம்: இலக்கியமும் அதன் பயனும்இலக்கியமும் அதன் பயனும்


ஒரு சமூகத்தினது நாகரிகத்தின் அடையாளம்தான் அந்த மொழியிலுள்ள இலக்கியம். கல்வெட்டுக்கள், பாண்டங்கள், ஆயுதங்கள்போன்ற அகச் சான்றுகளால் நிரப்பப்பட முடியாதுபோகிற சரித்திரத்தின் இடைவெளிகளை இலக்கியமே நிரப்புகிறது.

ஆயினும் இலக்கியத்தின் பயன் இதுமட்டுமேயில்லை. உணர்வுகளுக்கான பயிற்சி அளிப்பதும் அதன் நோக்கம்தான். தீட்டித் தீட்டி தன் மொழியின் தத்துவம், விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய துறைகளுக்குச் சொற்களைப் பாவனைக்காய் வழங்குவதும் இலக்கியத்தின் பயனே. எனினும் அதன் உணர்வுப் பயிற்சியையே முதன்மையானதாகக் கூறமுடியும். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக இந்த நம்பிக்கையே என் எழுத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது.

அக் கருத்து என் மனத்தில் முளைவிட்ட தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

1965ஆம் ஆண்டு அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் இலக்கிய யாத்திரையாக இலங்கை வந்திருந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், பின் எனது ஊரான சாவகச்சேரிக்கும்கூட அந்த யாத்திரை நீண்டது. சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் கம்பராமாயணம் குறித்து ஏதோ ஒரு தலைப்பில் அன்று அவர் உரை நிகழ்த்தினார்.

அப் பேச்சில் அவர் சொன்னது இது: ‘இலக்கியம் மனித உணர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. ஒரு முதியவள் வீதியில் நடந்து வந்துகொடிருக்கிறபொழுது தடுக்கி விழுந்துவிடுகிறாளென்று வைத்துக்கொள்ளுங்கள். யாராவது ஓடிப்போய்த் தூக்கிவிட்டு உதவுகிறார்கள். அதுதான் மனித மனத்தின் இயல்பாகும். ஆனால் எத்தனை பேருக்கு ஓடிப்போய் உதவ மனம் உந்துகிறது? வெகுபேருக்கு இல்லை. ஆனாலும் அந்த இரக்க உணர்வு கூடியோ குறைந்தோ எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த இரக்க உணர்வைப் பயிற்சியால் சிறிது சிறிதாக அதிகரிக்க முடியும்.

‘அப்படியானால் அதற்குப் பயிற்சி கொடுப்பது எப்படி? எப்போதும் கிழமாகிப்போனவர்கள் வந்து நமது உணர்வின் பயிற்சிக்காக வீதியிலே தடுக்கி விழுந்துகொண்டிருக்க முடியுமா?

‘முடியாது. அதனைத்தான் இலக்கியம் செய்கிறது.’

அன்று இதயத்தில் விழுந்த இந்தக் கருத்தை அடைகாத்தபடிதான் என் எழுத்துலகப் பிரவேசம் பின்னால் நிகழ்ந்தது.

இலக்கியம் இரக்கத்தை மட்டுடமல்ல, ஒவ்வொரு மனித உணர்வுகளையுமே பதப்படுத்துகிறது. சாந்தம் கொள்ளவும், அவசியங்களில் ரௌத்திரம் கொள்ளவும்கூட அது பயிற்றுகிறது.

கடந்த நூற்றாண்;டின் ஒரு கட்டம்வரை நம் வாசிப்பும் ரசனைத் திறனும் அகலம் சார்ந்தவையாகவே இருந்து வந்தன. இப்போது வாசக ரசனை ஆழம்…ஆழமென்று உணர்வுச் சுழியாட்டத்துக்கு அதிக கொள்ளளவு கேட்கிறது.
இலக்கியத்தில் இந்தச் சுழியோட்டம் முக்கியம். அதுதான் ஒருவகை அதிர்வுகளோடு வந்து மனித மனத்தில் பாதிப்பைச் செய்கிறது. பாதிப்பு இல்லாமல் பதிவு இல்லை. இதைச் செய்யும் எழுத்தெல்லாம் நல்லன.

என் எழுத்துக்கள் இந்த ஆதாரத் தளத்திலேயே எப்போதும் கட்டியெழுப்பப்பட்டு வந்துகொண்டிருப்பதாய் இப்போதும் நான் நம்புகிறேன். இலக்கிய மேன்மைக்காக, உணர்வின் உச்சத்துக்காக கருத்தின் விசாலத்தை நான் சில படைப்புக்களில் காவு கொடுத்தது இதற்காகத்தான்.

இலக்கிய வாசிப்பை நான் சற்று அதிகமாக அழுத்துவது அது கரும் உணர்வுப் பயிற்சி காரணமாகவே. அது மனிதனை மனிதனாக வாழவைக்கிறது, மனிதத்துவத்துக்காகப் போராடச் செய்கிறது.

என் குழந்கைகளுக்குப்போலவே சகல இளைஞர்களுக்கும்…அதனால்… நான் கூறுவது… இலக்கியம் பயில்க … என்பதே.

00000

(விருந்தினர் பக்கமென்று ஏதோ பத்திரிகையோ, சஞ்சிகையோ, இணையமோ வெளியிட்ட பகுதியில் இந்த ‘இலக்கியமும் அதன் பயனும்’ என்பது வெளியாகியிருக்கிறது சுமார் 1998அளவில். ஒரு பதிவுக்காக இதன் பதிவேற்றம் இங்கே.)

Wednesday, August 27, 2014

தேவகாந்தன் நேர்காணல் 4(என் குறிப்பு: இது எனது மொழியில்லை. அம்பலம் இணைய தளத்துக்காக என்னை நேர்கண்ட நிருபரின் மொழி. எமக்கிடையிலான உரையாடலிலிருந்து இந்த நேர்காணலை அவர் வடிவமைத்திருக்கிறார். கடந்த எனது தமிழகத்து பயணத்தின்போது (ஆனி 2014) களஞ்சியம்.காம் பகுதியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதி  என் பார்வையில் தட்டுப்பட்டது. இதைப் பதிவாக்கவேண்டுமா என்று முதலில் யோசித்தேனாயினும், இதிலுள்ள இலக்கியம், அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றின் முக்கியத்துவம்; கருதி பதிவேற்ற முடிவு செய்தேன். இது ஒரு நேர்த்தி குறைந்த நேர்காணல் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை. இது வெளிவந்த காலமும் படியிலிருந்து கண்டுபிடிக்க முடியாதிருந்தது. சுமாராக 1999 அல்லது 2000 ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.   -தேவகாந்தன்)

‘புலம்பெயர்ந்த இலக்கியத்தில் பெரிதான வித்தியாசமில்லை’
தேவகாந்தன் நேர்காணல்
நேர்கண்டவர்: ஆர்.டி. பாஸ்கர்

(இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் வெகுவாக மாறுபட்டது. இலங்கையில் இனப் பிரச்னை கிளம்பியதில், அங்கிருந்து பெரும்பாலோர் புலம்பெயர்வதற்கு முன்பு தமிழக இலக்கியச் சூழல் வேறுமாதிரி இருந்தது.இன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் படைப்புகளையும் சேர்த்துக்கொண்டு இது பலவகையில் வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நம்பப்படுகிறது. அவ்வகையில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கி தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்து வரும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் தேவகாந்தனும் ஒருவர்.

இலங்கையின் நயினாதீவு என்ற ஊரில் பிறந்து சாவகச்சேரியில் பெற்றோருடன் வாழ்ந்;த இவர், பல துறைகளிலும் பயிற்சி பெற்றவர். ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இலங்கைப் பிரச்னை தொடங்கிய காலம் முதல் இன்றுவரையிலான இலங்கைத் தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்விதமாக அதைப் பின்னணியாகக்கொண்டு நாவல் எழுதி வருகிறார். இந்த நாவல் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகிறது என்றாலும், ஒவ்வொன்றும் தனித் தனியாகவும் படிக்க உகந்ததாக உள்ளன. ‘கனவுச் சிறை’,‘வினாக் காலம்’,‘அக்னி திரவம்’ என்ற மூன்று பகுதிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுமட்டுமின்றி ‘விதி’ என்றொரு நாவலையும், அண்மையில் ‘நிலாச் சமுத்திரம்’ என்ற பெயரில் பெண்களது பிரச்னைகளை மையமாக வைத்து ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.

‘இலக்கு’ என்ற இலக்கியப் பத்திரிகை ஒன்றை இவர் நடத்திவந்தார். இதுமட்டுமின்றி பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். அம்பலம் வார இதழிலும் இவரது சில கதைகள் இடம்பெற்றள்ளன.
அம்பலத்தின் களஞ்சியம் பகுதி வாசகர்களுக்காக அண்மையில் இவரைச் சந்தித்தபோது,ஈழ இலக்கியம் முதல், தமிழ் தேசியம் வரையென பல வி~யங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து…)இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி?

எனது பன்னிரண்டு வயதிலிருந்தே, கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தேன். அப்போது புத்தகங்கள் கிடைப்பது என்பது கடினமான வி~யம். நண்பர்களின் சகோதரர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று படிப்பதும் உண்டு. நண்பர்களுடன் நாவல் தொடர்பான உரையாடல் நடந்துகொண்டேயிருக்கும். அதுவே என்னை படைக்கச் சொன்னது. ‘குருடர்கள்’ என்ற முதல் கதை கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது நான் ஈழநாடு பத்திரிகையில் வேலைசெய்து கொண்டிருந்தேன்.


ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த பத்திரிகை. அதில் உங்கள் பங்கு என்ன?

ஈழநாடு பத்திரிகையில் 1968ல் சேர்ந்தேன். உலக அனுபவங்கள் கிடைத்தது. நகரத்திற்கு போய் வருவது புதிய அனுபவமாக இருந்தது. எடிட்டோரியல் பகுதியில் வேலைசெய்தேன். அப்போது சசிபாரதி ஈழநாடு வாரமலரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் எழுதுவதை பத்திரிகைக்கு அனுப்பச் சொல்லி ஊக்கப்படுத்திய நண்பர் பாமா ராஜாகோபால். இன்றுவரை அவரை மறக்க முடியவில்லை.


அதன்பிறகு உங்கள் இலக்கியத் தொடர்பு…? கலித்தொகைக் காட்சிகள் தொடராக வந்ததுபற்றி…?  

சங்க இலக்கியத்தை முழுமையாக கற்பதற்காக பாலபண்டிதருக்கு படித்தேன். ஆனால் அதை முடிக்கவில்லை. என் அம்மா சொல்வார்- இலக்கியம் எங்கள் பரம்பரை ஜீனில் இருப்பதாக. இது என்னையும் இலக்கியவாதியாக வடிவமைத்தது. ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பு அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்தது. அதில் தமிழ் இலக்கணம் மற்றும் சமஸ்கிருதம் இரண்டையும் படித்தேன். பின்னர் நான் சுயமாக இலக்கியம் படிப்பதற்கு யாழ்ப்பாணம் நூல் நிலையம் பெரிதும் உதவியாக இருந்தது. இதை வைத்துக்கொண்டுதான் கலித்தொகை காட்சிகளை பதினைந்து வாரம் தொடராக எழுதினேன்.


யாழ்ப்பாண நூல்நிலையம் எரிக்கப்பட்டபோது அங்குதான் இருந்தீர்களா?

ஆம். ஏன்னுடைய அறிவை வார்த்ததில் பெரும் பங்கு அந்த நூல்நிலையத்திற்கு உண்டு. ஆபீஸ் முடிந்து லைப்ரரிக்குத்தான் செல்வோம். புதுமைப்பித்தன் கதைகளை அங்குதான் படித்தேன். யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்தது. அது இருந்த சூழல் மிகவும் வித்தியாசமானது. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை, குளம், கோயில், பக்கத்தில் ரீகல் தியேட்டர் இவையெல்;லாம் வாழ்வின் மறக்க முடியாத பல பக்கங்களைச் சொல்கின்றன. யாழ் நூல் நிலையத்தை சிங்கள ராணுவம் எரிக்காமல் இருந்திருந்தால் இளைஞர்களுக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது. சண்டையின் பரிமாணம் குறைந்து இருக்கலாம். நூல் நிலையத்தின் அழிவை தமிழ் மக்களின் கலாசார, அறிவு அழிக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டார்கள்.


‘ஈழநாடு’ பத்திரிகையில் வேலைசெய்த காலத்தை நினைவுபடுத்த முடியுமா?

ஈழநாடு பத்திரிகை நடத்தியவரின் கருத்தை அது பிரதிபலித்தது. அவர் கொழும்புத் தமிழர். தேசிய விழிப்புணர்வை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது. அதற்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவும் இருந்தது. இலாபம் சம்பாதிப்பது மாத்திரமே நோக்கமாக இருக்கவில்லை. தமிழர்களின் கருத்தை பிரதிபலித்த ஒரே காரணத்தினால் அரசுப் படைகளால் மூன்று முறை எரிக்கப்பட்டது. இன்று நின்றே போனது.


ஈழத்துப் படைப்புகளுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருக்கிறதா?

பொதுவாக தமிழகத்து எழுத்தாளர்களோ, இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத்தவிர இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் தமிழ்ப் படைப்புகளை படிப்பதில்லை.உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஈழத் தமிழர் இலக்கியத்துடன் பரிச்சயமுள்ளவர்களில்கூட ஈடுபாடு அதிகமில்லை. அதாவது பத்து வீதம்கூட கிடையாது. ‘ஈழத் தமிழ் புரியவில்லை’ என்கிறார்கள். அதற்காக மொழியைக் கற்றுக்கொண்டா வரமுடியும்? தமிழ்நாட்டின் வட்டார மொழி எங்களுக்குப் புரியும்போது ஈழத் தமிழை இவர்கள் புரிந்துகொள்வதற்கு என்ன சிக்கல் என்று எனககுப் புரியவில்லை. மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு ‘காதலினால் அல்ல’ என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். பல்கலைக்கழகத்தைப்பற்றிய களத்துடன் வந்திருக்கிறது. அதை இங்கு படித்தார்களா? ஏன்… விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டதாகக்கூடத் தெரியவில்லை.


இலங்கையின் வரலாற்றைக் கதையாகக் கூறும் ‘கனவுச் சிறை’ நாவல் நயினாதீவு என்ற ஊரிலிருந்து ஆரம்பிக்கிறது. ஏன்?

நயினாதீவு என் பூர்வீகம். ஆனால் இலங்கையிலேயே இடம்பெயர்ந்திருந்தேன். நானாகவே நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுடத்திக்கொண்டு ஊர் சுற்றுவேன். அங்கிருக்கும் நயினாதீவு நாகபூ~ணி அம்மன், நாகவிகாரை இவையெல்லாம் தமிழர், சிங்களரின் கலாச்சாரக் கலப்பாக இருந்ததை என்னால் காணமுடிந்தது. அங்கு இருந்த புத்தபிக்கு கொள்கைப்படியே வாழ்ந்தவர். இலங்கையின் சின்ன மாடல்மாதிரி இருந்தது நயினாதீவு.  அந்த நிகழ்வுகளை நாவலுக்கேற்ற விதத்தில்
பதிவுசெய்துள்ளேன்.


‘திருப்படைஆட்சி’,‘வினாக் காலம்’,‘அக்னி திரவம்’ தொடர்பில் இன்னும் எத்தனை பாகங்கள் வெளிவர இருக்கின்றன?

இன்னும் இரண்டு பாகங்கள் வர இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து வரும் பதிப்புகள் முதலே வந்திருந்தால் நான் நாவலில் எழுதியதுபோல நடந்திருக்கும். ஆனால் இப்போது வரும்போது…?
நினைத்தபடி ஐந்து பாகங்களையும் அடுத்தடுத்து கொண்டுவர முடியவில்லை. ஐந்தாம் பாகத்தில் நயினாதீவில் கதை முடியும். குடும்பம் சிதறுவது… சேர்வது… நயினாதீவுக் குடும்பமொன்றின் செயல்பாடு மூலம்; அரசியலில் ஏற்பட்ட பின்புலங்கள் சொல்லப்படுகின்றன.


இலங்கை எழுத்தாளர்களின் கதைகளில் புத்த மத குருமார்கள் பங்கு அதிகமாக உள்ளதே?

இலங்கை அரசியலில் புத்தபிக்குகளின் பங்கு அதிகமானது. இருபது நூற்றாண்டுகளின் வரலாற்றுப் பின்புலத்தை இருபத்தொரு ஆண்டுகளில் வைத்து எழுதுவதால் முக்கியமான பகுதிகளில் பிக்குகளைக்கொண்டே ‘கனவுச் சிறை’யில் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இரண்டு பிக்குகளுக்குள் நடக்கும் சம்வாதம், தீய பிக்குகளின் நண்பர்களுடனான உரையாடல், இந்த நாவலுக்காகவே புனையப்பட்ட வளவை கங்கைத் துறவியின் வார்த்தைகளின் மூலம் புனர் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.
இலங்கையின் உன்னதங்களும் வளங்களும் இந்த நாவலில் கண்டு சொல்லப்படுகிறது.


சரித்திரத்தை மறுஆய்வு செய்வதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் உங்கள் நாவல் எந்த வகையைச் சார்ந்தது?

என் எழுத்து எதார்த்தமான எழுத்துவகையைச் சார்ந்ததுதான். எதார்த்த வகை எழுத்திலும் அதி உயர்ந்தபட்ச சாத்தியத்தை அடைவதற்கான முயற்சி இதில் கையாளப்பட்டுள்ளது. கோவை ஞானி மற்றும் சில மார்க்சிய இலக்கிய அறிஞர்கள் சொல்கிற நவீன எதார்த்தப் போக்கை நான் அடைய முயற்சி செய்ததாகவே நினைக்கிறேன்.


தமிழ் தேசிய போராட்டச் சூழலில் இலக்கியத்தின் பங்கு என்ன?

தமிழ்த் தேசியம் என்பது எது? இலங்கைத் தேசியம் ஊடாக தமிழ்த் தேசியம், இன அரசியல் ரீதியாக வற்புறுத்தப்படுவது தமிழ்த் தேசியம் அல்லது சிங்களத் தேசியம். தமிழ்த் தேசியம் வற்புறுத்தப்படும்போது சிங்களத் தேசியமும் வற்புறுத்தப்படும். தமிழ்த் தேசியம் என்பது பண்பாட்டு ரீதியாக வார்த்தெடுக்கப்படவேண்டும். அது அரசியலாக்கப்படும்போதுதான் அதற்கான எதிர்வினைகளும், வன்முறைகளும் உருவாகின்றன.


இலங்;கையில் ஏற்பட்ட நற்போக்கு இலக்கியவாதிகள் கைலாசபதியின் பெயரைக் குறிவைத்து தாக்குகிறார்களே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நற்போக்கு இலக்கியவாதம் என்பது எந்தக் காலத்திலும் இயக்கமாக இருந்ததில்லை. அமைப்பாக தொழிற்படவில்லை. முற்போக்கு வாதத்திற்கு எதிரான கோசமாக ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டதே நற்போக்கு இலக்கியவாதம். இந்தக் காலகட்டத்தில்தான் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் இலக்கிய வகை முன்வைக்கப்பட்டது. இன்று பின்நவீனத்துவம் கூறுகிற இலக்கியம் தன் உருவத்தை உடைத்து எழுகின்ற புதிய கட்டமைப்பைப்பற்றி தமிழில் முதலில் சொன்னவர் மு.தளையசிங்கம்தான். இந்த இலக்கிய வகைகூட பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. இந்த இரண்டுக்கும் எதிரான இயக்கமாக இது வைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

தேசிய இலக்கிய விழிப்புணர்ச்சி 56ல் ஏற்பட்டதிலிருந்து அழுத்தம் பெற்ற ஒரு சொல்தான் மண்வாசைன இலக்கியம் என்பது. அதுவரை பல தமிழ் எழுத்தாளர்களாலும் தமிழ்நாடு தாய்நாடென்றும், யாழ்ப்பாணம் சேய் நாடென்றும் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த உண்மையையும் இந்த இடத்தில் நினைவுகூறவேண்டும்.

கல்கி, அகிலன் ஆகியோரது எழுத்து மாதிரிகளைக் கொண்டு சிறுகதை படைத்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். இந்த நிலையில்தான் மண்வாசைன – தேசிய வாதம் என்ற இலக்கிய கோசம் முன்வைக்கப்பட்டது.

அக் காலகட்டத்தில் மண்வாசைன அதீதமான அளவுக்கு அழுத்தம் பெற்றது என்பதும் உண்மைதான்.

ஆனால் அதுவேதான் ஈழத்திற்கான தனித்த இலக்கிய நெறியை வகுத்தது என்று சொல்லலாம். சுமார் இருபது வருடங்களாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவ்வகையில் ஆற்றியது பெரும்தொண்டு என்றே நான் கருதுகிறேன்.

முற்போக்கு ஆதரவாளர்களாக இருந்த கா.சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோர் எதிரணியினரால் குறிவைத்து தாக்கப்படுவது அவர்கள் ஈழத் தமிழ் இலக்கியக் கொள்கையை முற்போக்கான வழியில் வகுத்தவர்கள் என்பதாலேயாகும்.


புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்ச்சி அடைந்துள்ளதா?

மகாநாவல் எழுத முடியாது. காலம், பணம் இரண்டுக்குமே நேரம் சரியாக இருக்கும். புலம் பெயர்ந்தவர்களின் களமாக இருப்பது கவிதை, சிறுகதை இரண்டும்தான். அவைகூட தமிழகத்தில் இருந்து வெளிவருவதுபோல்தான் உள்ளது. அவர்கள் எழுதி வரும் கட்டுரைகளில்கூட வித்தியாசம் காட்ட முடியாதவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பின்நவீனத்துவத்தை புரிந்துகொண்டு படைப்பைக் கொடுப்பதில்லை. காலப்போக்கில் ஈழத்து சிறுகதையும், தமிழகத்து சிறுகதையும் இனம்கண்டு கொள்ள முடியாமல் போய்விடும்போல் இருக்கிறது. படைப்பாளிகள் கலாமோகன், கி.பி.அரவிந்தன், N~hபாசக்தி,சக்கரவர்த்தி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றவர்கள் இந்த விபத்தைத் தடுக்கின்ற பிரக்ஞையோடு செயலாற்றவேண்டும்.


1956க்குப் பிறகு கைலாசபதியால் தூக்கிவிடப்பட்ட முற்போக்குக் கூட்டு 60-61இல் ஏறக்குறைய ஒரு இலக்கியச் சர்வாதிகாரமாகவே வளர்ந்தது என்கிறார்கள். சர்வாதிகாரம் என்ற சொல் உங்களுக்கு ஏற்புடையதுதானா?

இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருப்பவர்கள் கருத்துரீதியாக சங்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அவர்கள் அந்தக் கொள்கைக்கு இயைந்து நடப்பதுதான் சரியானது.அதனை சர்வாதிகாரம் என்று சொல்லமுடியாது. ஒரு அமைப்பு நிறுவன விதிகள் இல்லாமல் சீராக இயங்க முடியாது. தன்னுடைய தோற்ற நியாயத்திற்கு ஏற்ப கொள்கை வகுத்து இருக்கிறபோது அதை மீற நினைப்பவர்கள் அவர்களாக வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார்கள்.


இலங்கையின் தற்போதைய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும்போது இடையில் ‘நிலாச் சமுத்திரம்’ என்ற வெண்ணிலைக்கு ஆதரவாக வாதிடும் நாவல் எழுதக் காரணம்?

‘நிலாச் சமுத்திரம்’ பதின்னான்கு வருடங்களாக என் மனதில் இருந்தது. முதலில் இதை சிறுகதையாகத்தான் எழுதவிருந்தேன். எழுதிக்;கொண்டு போகும்போது குறுநாவலாக வந்துவிட்டது.


உங்கள் நாவலில் அகதி வெளிநாடு செல்வது உடன்பாடில்லா விசயமாக எழுதப்பட்டுள்ளதே, ஏன்?

நாவல் விசாரணைக்குட்படுத்துவது பல விசயங்களை. அதிலொன்று அகதிப் பிரச்னை. யுத்தத்தின்; ஆரம்ப காலத்தில் வெளிநாடு செல்வது யுத்தத்திற்கு உதவுவதற்காகவே என்ற ஒரு அபிப்பிராயம் பகிரங்கமாகச் சொல்லப்பட்டது. ஆனால் இன, மொழி ரீதியான மோதல்கள் நடைபெறும் எந்த நாட்டிலிருந்தும் இவ்வளவு விகிதாசாரமான புலப்பெயர்வு நடந்தது இல்லை. இநதப் புலப்பெயர்வு அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

72ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன அரசியல் புரட்சி காரணமாகவும், பின்னால் பிரேமதாச ஆட்சிக்; காலத்தில் 87-89 காலகட்டத்தில் அதே காரணத்துக்காக மிகப் பெருமளவு சிங்கள இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள இந்துக்களுக்கும் அநீதி நடந்துள்ளது. பர்மாவிலும் ஜனநாயக விரோத ஆட்சியே நடைபெறுகிறது. ஏந்த நாட்டிலிருந்தும் மேற்குலகை நோக்கிய நகர்ச்சி இந்தளவு விகிதத்தில் நடைபெறவேயில்லை. ஈழத் தமிழர்களிடையே மட்டும்தான் பாரிய புலப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இப் புலப்பெயர்வுக்குப் பின்னணியாக ஒரு தொடர்ச்சியான செயற்பாடு இருந்து வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.


‘இலக்குஷ பத்திரிகை நின்றுபோனதற்குக் காரணம் என்ன?

இந்தியா வந்ததுமே சொந்தப் பிரச்னையில் ஈடுபட்டிருந்ததால் வாசிப்பு மட்டுமே சாத்தியமாகவிருந்தது. 90க்கு மேலேதான் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது. என்னுடை எழுத்தைப் பிரசுரிக்க அப்போதே பல களங்கள் இரந்தன. ஆனால் ஒரு தீவிரமான இலக்கிய சஞ்சிகையின் வெறுமையை அப்போதுதான் உணர்ந்தேன். பரவலாகி வரும் ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்த இந்தப் பத்திரிகை உதவும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. நிறைய நண்பர்கள் என் செயற்பாட்டை ஆதரித்தார்கள். அதன் காரணமாகத் தோன்றியதுதான் ‘இலக்கு’.

இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். என் படைப்பை இன்னும் இறுக்கமான மொழியில் எழுதவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் நான் அடைந்த பொருளாதார நட்டம் பெரிதாகத் தெரியவில்லை.

பொருளாதார நிலை காரணமாகவே ‘இலக்கு’ நின்றது.

000
-ஆர்.டி.பாஸ்கர்
Monday, August 25, 2014

சிலுவையில் தொங்கும் சாத்தான் -- மதிப்புரை

 சிலுவையில் தொங்கும் சாத்தான் (ஆப்பிரிக்கநாவல்,மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்ப்பு: அமரந்தா,சிங்கராயர்கடந்த ஒரு தசாப்த காலமாகத்தான் மூன்றாம்  உலக இலக்கியங்களின், குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியத்தின், வருகை தமிழில் தீவிரமாகியிருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியம் இருண்டகண்ட இலக்கியமாக இருந்த நிலைமை இனியில்லை. அதன் அறிமுக ஆரம்ப முயற்சிகளைச் செய்துவைத்தோரில் முதல் நினைப்புக்கு வருபவர் இந்திரன். அவரது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ (1982) அதன் உள்ளோடியிருந்த சில குறைபாடுகளோடும்கூட முக்கியமான மொழியாக்கமாய் இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் மூன்று ஆப்பிரிக்க நாவல்களின் மொழியாக்கங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முதலாவதாக என்.கே.மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பிலான சின்னுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள்’(1998), இரண்டாவது எஸ்.பொ. மொழிபெயர்த்து வந்துள்ள செம்பென் ஒஸ்மானின் ‘ஹால’ (1999),  மூன்றாவதாக அமரந்தா-சிங்கராயர் மொழிபெயர்த்த கூகிவாதியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’(2000).

மூன்று நாவல்களுமே வேறுவேறு ஆப்பிரிக் மொழிகளை மூலமொழிகாய்க் கொண்டவை. சிதைவுகள்  நைஜீரிய மொழியிலும்,  ஹால செனகல் மொழியிலும், சிலுவையில் தொங்கும் சாத்தான் கிக்கூயூ மொழியிலும் படைப்பாக்கம் பெற்றன.  இம் மூன்றும் அந்தந்த மொழிகளில் சமமான முக்கியத்துவம்  பெற்ற நாவல்களே. எனினும், ‘சிலுவையில் தொங்கும் சாத்தா’னில் விரியும் சமூக அரசியல் பின்புலமும், மொழிபெயர்ப்பில் காட்டப்பட்ட அக்கறையும்  இந் நாவலின் முக்கியத்துவத்தைக் கோரி நிற்கின்றன.

இதை ஒரு தீவிரவாசிக்குட்படுத்தியதோடு, நூலின் மொழிபெயர்ப்பு சார்ந்த கூறுகளைத் தனியாகவும், கலாநேர்த்தி கருத்தியல் சார்ந்த கூறுகளைத் தனியாகவும் நோக்கினேன். இந்த மதிப்புரை நாவலின் மொழிபெயர்ப்பு சார்ந்த அம்சங்களிலேயே கவனம் கொள்கிறது.

ஆப்பிரிக்க மொழியான கிக்கூயூ (Gikuyu) வில் வெளிவந்து, இதன் மூலநூல் ஆசிரியராலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கமாகி, அதிலிருந்து தமிழாக்கம் பெற்று வந்திருக்கிறது இந்த நாவல்.

ஒருமொழி இலக்கியத்தை அதன் இயல்பான தன்மைகள் தொனிக்க இன்னொரு மொழியில் பெயர்த்துவிட முடியாதென்பார்கள். ஒரு மொழியின் இலக்கணக் கூறுகளைவிடவும் அம்மொழிபேசும் மக்களின் பண்பாட்டுக் கூறுகள் படைப்பில் உள்ளோடி ஒரு மொழிபெயர்ப்பாளனைச் சிரமப்படுத்திக் கொண்டிருக்கும். அம்மொழிபேசும் மக்களின் மனிதவியல் கூறுகள்வேறு பெயர்ப்புமொழியில் கொண்டுவரப்பட வேண்டிய நுண்ணியஅம்சங்களை நழுவச் செய்துகொண்டிருக்கும். மூல மொழியிலிருந்து ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது மட்டுமில்லை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போதும்  இவ் இடர்ப்பாடுகளை ஒரு மொழிபெயர்ப்பாளன் அடைகிறான்.

தழுவி எழுதுவதா, மொழிபெயர்த்து எழுதுவதா என்ற பிரச்னை தவிர்க்க முடியாதபடிக்கு இங்கே உருவாகிறது. அதற்குள் புகவேண்டிய அவசியமில்லை இப்போது.  அதை மொழிபெயர்ப்பவன் தன் உரிமையாகக்கொண்டு தீர்மானித்துக்கொள்ள விட்டுவிடலாம்.

ஆப்பிரிக்க மொழிகள் அனைத்தும் அதிர்பு மொழிகள் என்று சொல்லப்படுகின்றன. வடஆப்பிரிக்காவின் செமிற்றிக் கூட்ட மொழிகளுக்குக்கூட இந்தத் தன்மை ஓரளவு இருக்கிறது. அவற்றில் தொனி நளினம் குறைவு. அவை உரத்துப் பேசப்படும் மொழிகளாகும். அதற்கான கூறுகளை அம்மொழிகள் கொண்டிருக்கும். மொழிபெயர்ப்பில் அந்த அதிர்வுகளை உணரக் கூடியதாய்  இருக்கவேண்டும் உரையாடல். அதுமுக்கியமானது.

இன்னொரு ஆப்பிரிக்க மொழியான ‘புதர்’ மொழிபற்றிய தகவலொன்று ஆப்பிரிக்க மொழிகள்பற்றிய ஆழ்ந்த கவனத்தை நம்மிடம் கோருவதாய் இருக்கிறது. இம்மொழிபேசும் மக்கள் இரவிலே பேசும்போது நெருப்பு மூட்டி அதன்  வெளிச்சத்தில் நின்றுதான் பேசுவார்களாம்.  ஏனெனில் சைககள் தெரியாவிட்டால் அவர்களின் பேச்சு விளங்காது என்கிறார்கள் (Elimentary chapters in Comparative Philology by G.W.Wade).

ஆப்பிரிக்க மொழிகளின் இத்தகு குணநலன்களின் ஊடாகவே இந் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிய தரநிரணயத்தை நாம் மேற்கொள்ளப் போகிறோம்.

கிக்கூயூ மொழிபற்றி நமக்கு நேரடியாகத் தெரியாது. ஆனாலும் ஆப்பிரிக்க மொழிகளின் பொதுத் தன்மைபற்றி நமக்கு ஓர் அபிப்பிராயமுண்டு. அதை நாவலில் கொண்டுவருகிறவிதமான ஒரு மொழிபெயர்ப்பை நல்ல மொழிபெயர்ப்பென்று கொள்ளலாம். ஒருமொழி தன்னுள் மரபுகளாய் பழமொழிகளாய் நாட்டார் பாடல்களாய்ச் செழித்து நிற்பது. இச் செழிப்பை மூல நூல்போல் மொழியாக்கத்தில் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளன் தன் சவாலில் வெற்றிபெற்றவனாகிறான் என்று துணிந்து சொல்லமுடியும்.

‘சிலுவையில் தொங்கும் சாத்தா’னில் இந்தத் தன்மைகள் எவ்வளவு தூரத்துக்குச் சாத்தியமாகியுள்ளன?

ஒரு வீட்டின் விறாந்தையில் கிடந்த குழந்தையை பசியை அடக்கமுடியாமல் ஊருக்குள் புகுந்துவிட்ட நரியொன்று கவ்விக்கொண்டு ஓடிவிடுகிறது. இந்நிகழ்வினைப் புரிவது எப்படி? குழந்தையினது தாயின் அல்லது மனித இனத்தின் பார்வையிலும், நரியின் மிருக வர்க்கப் பார்வையிலும் என இரண்டு விதமாக நவீன தர்க்கவியல் இதைப் பார்க்குமென்பார்கள். மிருக வர்க்கத்தின் பார்வையில் அச்செயல் நியாயப்படுத்தப்படுவதுதான்  நவீன சிந்தனையின் புதுமையான அம்சம். இதற்கு ஏறக்குறையச் சமமான சொல்லாடலொன்று கிக்கூயூ மொழியில் இருக்கிறது.  ‘சிறுத்தைக்கு சொந்தமாகப் பிறாண்டத் தெரியாது. அது அதற்குச் சொல்லித் தரப்பட்டது’ என்று நாவலில் கிக்கூயூ மொழிச் சிந்தனையாக ஒரு தொடர் வருகிறது.  இந்த இடத்தில் மொழிபெயர்ப்பு தளர்ச்சியடைந்திருந்தால், ஜென் கதைபோல் அச்சொட்டாய் இருக்கும் அந்தச் சொல்லாடல் அவ்வாறு அமையாது போகவே வாய்ப்புண்டு.

நாவலின் பத்தாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் கதைசொல்லியின் வார்த்தைகளில் இவ்வாறு வரும்: ‘முன்புபோலஅதேவேகத்தில் என்னால் தொடர முடியாது. குடுவைகளிலுள்ள விதைகளெல்லாம் ஒரேமாதிரியானவை அல்ல. எனவே கதையின் வேகத்தையும் தன்மையையும்  நான் மாற்றப்போகிறேன்.’

அதன்படி பத்தாம் அத்தியாயத்திலிருந்து நாவலின் வேகமும் தன்மையும் மாறவே செய்கின்றன. மூல ஆசிரியனின் இந்தப் பிரகடனத்தில் மொழிபெயர்ப்பாளன் தீர்க்கமாய்க் கவனம் செலுத்தாவிட்டால் பெயர்ப்புமொழியிலே இந்த வேகமும் தன்மையும் மாற்றமடைந்துவிடாது. சொல்லுக்குச் சொல்லான வெறும் மொழிபெயர்ப்பில் இவ்வகைத் தளம் அடைந்துவிடமுடியாதது. படைப்பு நிலைக்கு மொழிபெயர்ப்பாளன் உயரும் அவசியம் இந்த இடத்தில் உண்டு.

நாவலின் வீச்சுமிக்க மொழிபெயர்ப்புக்கு உதாரணமாய் ஒரு சிறுபத்தியைப் பார்கலாம்: ‘சாத்தான் உண்டா  இல்லையா?  நான் குறிப்பிட்ட அந்த முடிச்சின் சூட்சுமமே அதில்தான் இருக்கிறது. அங்கே போய் என் எல்லாவித சந்தேகங்களுக்கும் முடிவுகட்ட விரும்புகிறேன். பிறகுதான் என் இசையமைப்பு வேலையைத் தொடரமுடியும். ஏனெனில் முடிவில்லாத சந்தேகங்கள் வாட்டும் மனதுடன் என்னால் செயல்பட முடிவதில்லை. அமைதி! ஒரு இசையமைப்பாளனுக்கு மனதில் அமைதி தேவைப்படுகிறது’ (பக்கம் 140).

ஒரு மொழிபெயர்ப்பு நூலின் ஆக்கத் திறனை மூல மொழியினை வாசிப்பதின் மூலமாகத்தான் துல்லியமாக அறியமுடியும். ஆனாலும் வாசிப்பின் வேகத்தைத் தடுக்காத மொழியாட்சியும், கருத்து இடறுதல் வராத நடைநேர்த்தியும் ஒரு தேர்ந்தவாசகனை நூல்பற்றி அறியவைத்துவிடும். ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ வாசக சுகத்தை எங்கேயும் தடுப்பதில்லை. மொழி அவ்வளவு சுளுவாக ஓடுவதை மொழிபெயர்ப்பின் விசேடமென்றே கூறவேண்டும். இலக்கியச் சுவைஞன் இந்நாவல் மொழிபெயர்ப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அம்பலம்.காம், 02 ஆடி 2000

Sunday, August 24, 2014

இசையில்லாத இலையில்லை -- மதிப்புரை

இசையில்லாத இலையில்லை
(கவிதைத் தொகுப்பு)
தேன்மொழிஐந்து சஞ்சிகைகளில் வெளியான ஏழே கவிதைகளையும், பிற எழுபது கவிதைகளையும் உள்ளடக்கிக்கொண்டு எழுபத்தேழு கவிதைகளுடனான ஒரு தொகுப்பாய் வெளிவந்திருக்கிறது ‘இசையில்லாத இலையில்லை’ என்கிற இக் கவிதை நூல். இதன் உள்ளடக்கத்தை ஒரு பிரதேசத்தின் பதிவு என்று பொதுவில் கொள்ளலாம். அவரவர் மண்ணை, அவரவர் பயிரை, அவரவர் மனிதரைப் பதிவுசெய்கிற விசயம் நல்லது. ஆனால் பதிவுசெய்வதற்குக் கையாளப்படும் ஊடக விசயத்திலிருந்துதான் பிரச்னை துவங்குகிறது. இந் நூலும் பிரச்னையைத் சந்திக்கிற இடம் இதுதான்.

 ஊடக விசயத்தை இந்நூல் அலட்சியப்படுத்திவிட்டமை துலக்கமாயே தெரிகிறது. அதேவேளை ஒரேயடியாய் அப்படிக் கூளிவிடவும் முடியாதுதான். பாதிக்குப் பாதிஅளவில் கவிதையாய்த் தேறுவனவும், நல்ல கவிதைகள் ஆவன சிலவும், சிறந்த கவிதைகளாவன ஓரிரண்டும்கூட இதில் உண்டு. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவுதான், தன் முதல் நூலைஅவசர அவசரமாக வெளியிட்டிருக்கிற ஒரு கவிஞருக்கு.

கவிதைபற்றிச் சொல்ல, வரையறைகள் செய்ய நிறைய விசயங்களுண்டு. அவை விவகாரத்துக்கும் உரியன. அவற்றைவிட்டு ஒட்டுமொத்தமாய் ஒரு விசயத்தைத் தெளிவாக இங்கே சொல்லிக்கொண்டு நூல் மதிப்பீட்டைக் கவனிக்கலாம்.

உரைநடையில் எதைச் சொல்ல
முடியாதோ அதை கவிதை தன் பொருளாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் முதல் விதி. கவிஞர்கள் இன்னும் கடிதங்கள உரைநடையில்தானே  எழுதுகிறார்கள்? அது இதுமாதிரியான  ஒரு  விசயம்தான்.

அவதியும் அவசரமும் மிகுந்த இந்த உலகத்தில் உழலும் மனசுக்கு தேன்மொழியின் கவிதைகள் பலவும் அர்த்தமாயும் சொல்லாயும் கவிதைச் சாமரம் வீசுகின்றன. ஆனாலும் எவ்வளவு தூரத்துக்குத்தான், ‘என் அப்பாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது, அதற்கு இரு சில்லுகள் இருந்தன, அதனிடையே நிறைய கம்பிகள் போட்டிருக்கும்’ என்பது மாதிரியானதும், ‘எங்கள் பனிக் காடுகளிலே மழை சளசளவெனப் பொழியும், இலைகள் சரசரவெனப் பாடும், மேகம் நீலமாய்ச் சிரிக்கும்’ என்பது மாதிரயானதுமான கவிதைகளை அனுபவிக்க முடியும்? எவ்வளவு பெரிய வனம்! எவ்வளவு வளர்ந்துயர்ந்த நீலமலைகள்! எங்கும் பூஞ்சிட்டும் பசுமையும் வர்ணமுமாயே இருந்துவிடுவது எங்ஙனம் சாத்தியப்பட்டது? ஒரு கூராங் கல், ஒரு முள் கூடவா பாதத்தில் தைத்திருக்கவில்லை? அப்படியொருஉலகம் எங்கே இருக்கிறது? எங்கேயும்கூட அப்படியொரு உலகம் நிஜத்தில் இருக்கமுடியாது. நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறீர்கள். ‘இக் கவிதை நூலில் மிகக் குறைந்த சமூக அக்கறைதானுமில்லை’ என்று பாலுமகேந்திராபோலும் சொல்லிவிடமாட்டேன். ‘எதைக் கவிதையாக்குவது என்பது கவிஞனின் இஷ்டம்., கவிதை மனதுள்ளிருந்து பீரிட்டெழுவது, அதை வற்புறுத்தி வரவழைத்துவிட முடியாது’ என பாரதிராஜாபோலும் சொல்லிவிடக் கூடாது. வனத்தின் பெருவனப்புக்குள்ளே மிகுஅபாயங்கள் இருக்கின்றன. இந்தப் புவிப் பரப்பில் இன்பங்கள் மட்டுமில்லை, துன்பங்களும் இருக்கின்றன. அதைப் பார்ப்பதற்கான கண்ணை மூடிக்கொண்டு உலகமே இன்பமயமென்று லாகிரி வயப்பட்டதனமாய்ப்  பேசிவிடக்கூடாது என்பதே என் தரப்பு.

இந்திரன் இந்நூலில் சொல்லியுள்ளதுபோல் கவிதைப் பாலை சுண்டக் காய்ச்சியிருக்கலாம். அதுகூடப் போதுமானதில்லை. பலவற்றை நீக்கியுமிருக்கவேண்டும். சுமார் நாற்பது கவிதைகளைத் தேர்ந்து நல்ல ஒரு கவிதை நூலைத் தந்திருக்கமுடியும். சில கவிதைகள் நேராய் எழுதக்கூடிய வசனத்தை துண்டுதுண்டாய்ப் போட்டு கவிதைமாதிரியாய்ச் செய்யப்பட்டவையே.

சில கவிதைகளின் குறையீனங்களுக்கு பதிப்புவாரியான கணினித் தட்டெழுத்துக் குறைபாட்டைஒருகாரணமாய்ச் சொல்லாதிருக்க முடியாது. ‘திரி நடனம்’ (க 40),‘தார் ஊற்றி நெய்தது’ (41) போன்றனவற்றில் பக்கத்தை அடைக்கப்போலும் எழுந்தமானத்துக்கு செய்யப்பட்டுள்ள பத்தி பிரிப்பு கவிதையைக் கொன்றே விட்டிருக்கிறது. புதுக் கவிதையானது கட்புலவாசிப்புக்கான ஒரு வடிவம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்தவிடயத்தை அணுகினால், பத்தி பிரிப்பும் சொற்களுக்கிடையிலான இடைவெளிகளும்  சேர்ப்புகளும்கூட எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும்.

‘அருகம்புல் ஆடைவுடுத்தி’ (க 54) என்ற ஒரு கவிதைத் தலைப்பில் அந்தச் சொற்புணர்ப்பின் விதி என்ன? ஆடையுடுத்தி என்பதுதானே சரி? ஒருவேளை அச்சுப் பிழையா? அப்படியானால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மீறல், அவசியமில்லாத தருணங்களில் அபத்தமாகிவிடும் அபாயமிருக்கிறது என்ற ஞாபகம் படைப்பாளிகளுக்கு மிகஅவசியம்.

நூல், ‘வாவிக் கரையோரம்’ (க 6) என்ற கவிதையின் ஓரடியைத் தன் தலைப்பாய்க் கொண்டிருக்கிறது. தனது வாவிக் கரையோரத்தின் அழகை தேன்மொழி நன்றாகவே கவிதையாக்கியிருக்கிறார். ‘கொய்னா பூமரத்தடியில்  பூவைவிடவும்  நிழல் மெதுவாய்ச் சரிந்தது’ என்று புதிய விவரணங்களுடன் கவிதைதொடங்கும். அங்கேதான் இலைகளின் அழகு தேன்மொழியைச் சிறைப்பிடிக்கிறது. பௌர்ணமிகளாய்த் தோன்றுகின்றன இலைகளெல்லாம். மட்டுமில்லை. அவை இசைக்கவும் செய்கின்றன. அப்போதுதான் ஓங்கி முழங்குகிறார்,‘இசையில்லா இலையில்லை’யென்று. இந்தக் கவிதை இப்படியே வளர்ந்து வளர்ந்துசென்று, ‘மருந்தடித்தபடி தேயிலை கிள்ளியபடி விறகுகள் சுமந்தபடி மணலாற்று வாவிக்கரையோரம்   பேசிப் போனார்கள்  மனசு வலிக்க’ என்று தொடர்ந்து, ‘மல்லாந்து கிடக்கிற மண்தான் வாழ்க்கை’ என்று பேசுவதில் கவிதைஉச்சமடையும். தொடர்ந்து மூன்று பகுதிகளாய் அது அங்கேயே தங்கியும்விடும். பிறகு ‘வாவிக் கரையோரம் திரும்பினேன்  அவர்கள் பேசிப்போன வார்த்தைகள்   துளிர்விட்டிருந்தன சின்னதாய்’ என்று மனத்தை அதிரவைத்துக்கொண்டு அது முடியும். சொல் துளிர்த்திருக்கும் விந்தைக் காட்சி கவிதையின் அற்புதம்.

இதுபோன்ற இன்னொருகவிதைதான் தலைப்பற்றிருக்கும் 42ஆம் கவிதை. அது உயர்ந்த விடயமெதனையும் பேசுவதில்லை. ஒரு பறவை பறத்தலின் சின்ன நிகழ்வை மனத்தில் நிகழ்த்திக் காட்டுவதைமட்டுமே செய்வது. ஆனாலும் அது கவிதையாகிவிடுகிறது. அதன் பாதிப்பு வெகுநேரத்துக்கு நெஞ்சைவிட்டு அகலாது.

அந்தக் கவிதை இது:

‘பறவைஒன்று
பறந்து பறந்து
தொலைந்து போனது

மிச்சமிருக்கிறது
காதுவழி புகுந்து
நெஞ்சுக்குள்
இறங்கிவிட்ட
இறகுகளின்
ஓசை’.

சொற் பிரயோகத்திலேதான்,அதை வைக்கும் ஒழுங்கின் முறைமையிலேதான் கவிதைக்கு ஜீவன் கிடைக்கிறது. இம்மாதிரி ஜீவன் பெறும் கவிதைகள்போல் சில இத் தொகுப்பிலும் உள. அதேவேளை…அர்த்தத்தையே கவிதையாக்கும் அற்புதங்களும் கவிதையுலகில் சிலபோது நடத்திக் காட்டப்படுகிறது. அதுபோன்ற ஒரு கவிதைதான் இத் தொகுப்பிலுள்ள ‘அடையாளம்’ (க 30)  என்கிற கவிதை.

‘வாழ்வென்பது
ஒன்றுமில்லையென யோசித்தபடி
நடக்கையில்தான்
வாங்கினேன்
மயிற் பீலி

இறந்திருக்கிறதே
ஒரு மயில்
வாழ்ந்ததற்குச் சாட்சியாய்
இறகுகளை
விட்டுவிட்டு’

என்பது அர்த்தத்தையே கவிதையாய்க் கட்டியெழுப்பிய அற்புதம்.

இதேயளவு அர்த்தபரிமாணமும், சொற் பரப்பும் கொண்ட இன்னொரு கவிதை, ‘கனிவின் கசிவு’(க 75).  ‘குஞ்சுகளைத் தூக்க வழியின்றித் தவித்த அணில்  என்னைத் தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்தேன்  அதன் கண்களில்’ என்ற அடிகளில் ஒருமனப் பாதிப்பையே ஏற்படுத்திவிடுகிறது கவிதை. அணிலின் கண்களால் தூக்கிச் செல்லப்படும் அனுபவத்தை வாசகன் அவனவனும் அனுபவிக்கிறமாதிரிச் செய்கிற கவிதை இது. ‘காட்டுப்  பாடம்’ (க 50), ‘கரையாத நீலம்’(51), ‘மிச்சம்’(க  54)போன்ற கவிதைகள் கவிஞரின் கூர்த்த கவனிப்புக்கான அத்தாட்சிகள்.

இந்த அவதானிப்புகளும் அனுபவங்களும் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. அதற்கு கவி மனசு வேண்டும். தேன்மொழியிடம் அது இருக்கிறது. நிறையவே. வாசிப்பு, கல்வி என்பனவெல்லாம் தன்தன் அனுபவங்களை உரைத்துப் பார்க்கும் உரைகல்கள் மட்டுமே எனப்படுகிறது. ஆனால், ‘கவிதைப் புத்தகங்களோ, கதைப் புத்தகங்களோ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை என் விரல்களில் பட்டதில்லை’ என்பது தேன்மொழியின் ஒப்புமூலம். அது அவரது படைப்பாளுமைக்கு அவசியமான பின்புலமின்மையது அடையாளமுமாகும்.  ஒருவேளை இப் பின்புலப் பலகீனங்கள் இல்லாதிருப்பின் இன்னும் சிறந்த பல கவிதைகளை நாம் பெற்றிருக்கமுடியுமோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வாசிப்பு, படிப்பு, அனுபவப் பலங்கள் அவரிடத்தில் சேருகிறபோது தமிழ் ஒரு வளமான கவிஞரைக் காணுமென்று நம்ப போதுமான ஆதாரங்கள் இந்தத் தொகுப்பல் உள்ளன.கணையாழி,  ஏப். 2002

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...