Tuesday, September 09, 2014

மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு

மலேசியச் சிறுகதைகளின்
வளர்ச்சிப்போக்கு - தேக்கம் - நிவாரணம்


‘தமிழில் சிறுகதை வரலாற்றையும் வளர்;ச்சியையும்பற்றி ஆராயும்போது தமிழ்மொழி பயிலும் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்வது தவறு என்பதும், மொழி உணர்ச்சியும் இலக்கிய ரசனையும் தீவிரமாக வளர்ந்துள்ள மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் சேர்த்து ஆராயவேண்டியது இப்போது அவசியமென்பதும் தெளிவாகத் தெரிகிறது.’

இது சிட்டியும், சிவபாதசுந்தரமும் எழுதிய ‘தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் உள்ள வரிகள். நூல் 1989ல் வெளிவந்தது. இது சுட்டும் குறிப்பின் விவரத்தை உன்னித்தால் ஏறக்குறைய அதுகாலம் வரைக்கும் மலேசியத் தமிழிலக்கியம் கவனிக்கப்படவில்லையென்பது தெரியவரும்.

இதன் முதற் காரணியாக இலக்கியப் பரிமாற்றம் போதியளவு இன்மையைச் சொல்லமுடியும்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் சுமார் நூறினை அண்மையில் வாசிக்க நேர்ந்தபோது வெகு பிரமிப்பு ஏற்பட்டது. அதன் வித்தியாசமான களத்தில், வித்தியாசமான கரு விவரிப்புகள் சூழமைவுகளில் அற்புதமான சில சிறுகதைகளைக் கண்டேன். இவ்வளவு காலம் அவை மறைந்து கிடந்தமை ஆச்சரியமாகவும்கூட இருந்தது. தமிழுலகுக்கு அது நட்டம்.
மலேசிய தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் வளர்ச்சிகளை புள்ளி விபரங்களுடன் இங்கே தரவுகளாய்த் தருவது எனது நோக்கமல்ல. இங்கே அந்தளவான ஆய்வு வளர்ச்சியும் போதுமான அளவுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும்.

1964ல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அங்கு நடந்தவேளையில், படைப்பிலக்கியம் அங்கே தீவிரம் பெற்றிருந்தது எனச் சொல்ல முடியும். எனினும் மாநாடு, இனக் கிளர்ச்சி போன்றவற்றின் பின்னாலுள்ள பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் யதார்த்தவகை எழுத்தின் உச்சமான சில சிறுகதைகள் படைக்கப்பட்டன.

அக்கதைகள் அதுவரை தமிழ்ச் சூழல் காணாத களத்தினையும் கருவினையும் கொண்டிருந்தன. அக்கதைகளில் பெரும்பாலானவற்றை எழுதியவர்கள் மாணவர் மணிமன்றத்தில் உருவானவர்கள். புதிய தாயகத்தின்மீதான கவுரவமும், தமிழ் அபிமானமும் சுரக்கச் சுரக்க தேசியத்; தன்மை அவர் கதைகளில் ஏறலாயிற்று. அது, அதுவரை தொடர்ந்த இலக்கியப் போக்கினில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திராவிட இயக்க பாணிக் கதையாக்கத்தின், மொழி நடையின் வீழ்ச்சியையும் அது குறித்தது.

‘முத்துசாமிக் கிழவன்’ என்கிற சி.வடிவேலின் சிறுகதை, தேசிய இலக்கியப் பின்னணியில் மிகுந்த துலக்கமாய்த் தெரிவதன் காரணம் இதுதான். மரண பாலம் என்று மலேசிய சரித்திரம் சொல்லும் சியாம் ரயில் பால கட்டுமானத்திற்காக ஆயிரமாயிரம் தமிழர்கள் மலேசியாவிலிருந்து கூலிகளாக ஏற்றிச் செல்லப்பட்டனர். இக்கொடுமை இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நிகழ்ந்தது. மரணபாலப் பின்னணியில் மிக்க கலா நேர்த்தியுடன் புனைவு செய்யப்பெற்ற கதை இது. மண்ணினதும் வாழ்வினதும்மீதான இதன் கண்ணோட்டம் ஐயமில்லாமல் மலேசிய தேசியம் சார்ந்தது.

எம்.குமரனின் ‘சஞ்சிக் கூலி’ இவ்வகையில் குறிப்பிடத் தக்க இன்னொரு கதை. வறுமை காரணமாய்; மகளை ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு விற்றுவிடுகிறான் சீனக் கிழவனான லிம். நாளடைவில் மனைவியும் ஓடிப்போய்விட தனியனாகிவிடும் லிம், தன் விற்ற மகளைத் தேடுவதும், கண்டடைதலும், சேரமுடியாமலும் பேசமுடியாமலும் தவித்து அவளைப் பார்ப்பதில்மட்டும் திருப்திப்பட்டுக்கொண்டு வாழ்வதும், கடைசியில் அநாதையாய் செத்து வீழ்வதும்தான் கதை. லிம் சீனக் கிழவனின் மகள் தமிழர் வீட்டில் லட்சுமியாய் வளர்ந்து நொண்டியான கணபதியைத் திருமணம்செய்துகொண்டு நடப்பியல்பில்சுழன்று வாழ்வதும் கதையில் வியத்தகுவகையில் கலாபூர்வம் பெற்றிருக்கிறது.

பால்மரக் காடுகளிடையே தமிழ்ச் சகோதரிகளும் தாய்மாரும் பட்ட உடல் உளத் துயரங்கள் சொல்லிமாளாது. பாரதி சொன்ன ‘கண்ணற்ற தீவுக’ளாகவே அவை இருந்தன. அதைச் சிறப்புறச் சொல்லுகிறது சா.ஆ. அன்பானந்தனின் ‘ஏணிக் கோடு’ கதை. தொழிலாளர் நிலை மட்டுமின்றி பெண்களின் சமூக நிலைமையையும் தெளிவாகக் காட்டுகின்றது இந்தக் கதை. கதை கட்டுதலுக்கு ஆளாகி, மணமுடிக்கச் சம்மதித்திருந்தவன் மறுத்துவிடும் சோகத்தில் வீழும் ஒரு முடப்பெண் பற்றிய கதை இது. கதை இவ்வாறு முடிகின்றது: ‘சில நாட்கள் கழிந்தன. பதினோராம் நம்பர் வெட்டுக் கிழ மரங்களை அழிக்கப் பாசாணம் தெளிக்கப்பட்டது. அவற்றோடு வெட்டப்படாத அந்தத் தனி மரமும் பாசாணத்தை ஏற்றுக்கொண்டது.’

இவ்வாறு ஒன்றைச் சொல்லி சொல்லாத ஒன்றை விவரிக்கும் போக்கு ‘ஏணிக் கோ’ட்டில் மட்டுமில்லை, மலேசிய தமிழிலக்கித்தில் அக்காலகட்டத்தின் ஒரு ஒருமித்த போக்காக இருந்ததென்று கூறினாலும் தப்பில்லை.
அருகம்மாளுக்கும், மண்ணாங்கட்டிக்கும்இடையே உள்ள உறவின் உன்னதத்தை அற்புதமாய் விளக்குகிற கதை ‘செஞ்சேற்றில் ஒரு ஞானப்பூ’. தலைப்புப்போல் சினிமாத் தன்மை வாய்ந்ததாய் இல்லை கதை. அருகம்மாளுக்குக்கூட தன்மேலுள்ள ஆசையினால்தான் தான் ஏவும் வேலைகளையெல்லாம் மண்ணாங்கட்டி செய்வதாக எண்ணம். ஆனால் சப்பாணியான மண்ணாங்கட்டியோ,‘நான் உன்னைத் தூக்கி வளர்த்தேன், உனக்கு விளையாட்டுக் காட்டினேன், நீ எனக்கு மகள்மாதிரி’ என்று கூறிவிடுகிறான். பொறிகலங்கிப் போகிறாள் அருகம்மாள்.
மைதீ சுல்தானின் ‘நூறு மீட்டரி9ல்…’ சிறுகதை உருவநேர்த்திக்கும், சொற் சிக்கனத்துக்கும் சொல்லக்கூடிய சிறந்த சிறுகதையாகும். மலேசிய ஓட்டப் பந்தய வீரரையல்ல, மலேசிய தமிழிலக்கியத்தையே அந்த இடத்தில் பொருத்த முடியும்.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயம். கனேடிய பென் ஜான்சன், இங்கிலாந்தின் கார்ல் லூயிஸ் ஆகியோர் உட்பட சர்வதேச புகழ் வீரர்கள் பங்குபெறுகிறார்கள். மலேசிய வீரர் மூன்றாவதாய்… இரண்டாவதாய்…முதலாவதாய் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பத்து மீட்டரிலும் உணர்வு ஏறிக்கொண்டிருக்கிறது. உலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அங்கே மர்மமாய் ஒலிக்கிறது மலேசிய வீரருக்கான குரல்: ‘எஸ்…யு கேன் மேக் இட்!’ ஓட்ட முடிவிடத்துக்கு இன்னும் ஒரு பத்து மீட்டரே இருக்கிறது. கதை முடிகிறது, ஓட்டம் முடியாமலேயே. வார்த்தை ஜாலங்களின்றி ஒரு கதையை இவ்வளவு உணர்ச்சி உச்சத்துக்கு எடுத்துச் செல்ல முடியுமென்பதை இக்கதையைப் படித்திராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன்.
வே.இராஜேஸ்வரியின் ‘ஆறாவது காப்பியம்’ தாய்-மகள் உறவுபற்றிய கதை. அவ்வுறவை முரண்களுடனும் ஒருவகை கொடூர நடைமுறைகளுடனும் கூடியதாய்ச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். எவ்வளவுதான் வெறுத்திருந்தாலும் தாய் சிறை செல்ல தன் தாயின் கரிசனையையும், காபாந்தினையும், அன்பினையும் நினைந்து வருந்துகிறாள் மகள். ஒரு உயர்ந்த கட்டிடத்தின் கட்டுமானத்திலுள்ள அத்தனை அவதானத்தையும் அத்தனை சிரத்தைதையையும் போல் இக் கதையிலும் கட்டுமானச் சிறப்பு பெருவெற்றியுடன் விளங்குகிறது.

சை.பீர் முகம்மதுவின் ‘சிவப்பு விளக்கு’ என்கிற சிறுகதை குறியீட்டுப் படிமங்கள் மூலமாய் சிறுகதைக்கு வலுவூட்டுவது. மலேசியாவின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுள் ஒன்றாக அதைக்கொள்ள முடியும். மா.சண்முகசிவாவின் ‘வீடும் விழுதுக’ளும் பிரச்சாரக் கருத்தொன்றினை அதன் நெடிகூட இல்லாமல் கதையாக்குவதில் பெற்ற காலவெற்றியைப் பிரசித்தம் செய்கிறது. செல்லம்மாளுக்கு வீடு இல்லாதுபோகும் அவலம், தமிழருக்கு வீடற்ற மண்ணற்ற நிலையை உள்ளோட்டமாய்க் கொண்டிருக்கிறது. ராமையா, ரெ.கார்த்திகேசு போன்றோரின் கதைகளும் மலேசியத் தமிழிலக்கியத்துக்கு உரம் சேர்ப்பவை. மட்டுமில்;லை. அதன் தனித் தன்மையையும் போக்கினையும் சுட்டிநிற்பவைகூட.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் யதார்த்த தளத்தில் அமைந்தவை. தக்க முறையில் ஒரு தொகுப்பைத் தயாரித்தால் அது தமிழுலகில் நிச்சயம் பேசப்படும் ஒன்றாக அமையும். எந்தத் தொகுப்புக்கும் சளைக்காத சங்கையோடு அது விளங்கும். இத்தனை இருந்தும் கடந்த இருபது ஆண்டுகளில் மலேசிய தமிழிலக்கியம்- குறிப்பாக, சிறுகதைகள்- ஏன் மேற்கொண்டு வளர்ச்சி காணவில்லை என்பது முக்கியமானதொரு கேள்வி. அதற்கு பதிலளிப்பதற்குள் ‘பாக்கி’ சிறுகதைபற்றி பார்க்கவேண்டும். எம்.ஏ.இளஞ்செழியனின் இச்சிறுகதை மலேசியாவின் மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுள் ஒன்று என்று சொல்லவும் தயங்கமாட்டேன்.

முதலில் மிகச் சுருக்கமாக அதன் கதையைப் பார்க்கலாம்.

கோய்ந்தனுக்கும் (கோவிந்தன்) அவன் மனைவி தேவானயுக்கும் ரப்பர்த் தோட்டத்திலே வேலை. அவர்கள் இரண்டு பேரின் சம்பாத்தியத்தில்தான் நான்கு பேர் கொண்ட அவர்கள் குடும்பம் வாழ்கிறது. காலையிலெழுந்து கோய்ந்தனோடு செக்ரோல்போட்டு வேலைசெய்து, மாலை வீடு வந்து சமைத்து வீட்டு வேலைகளெல்லாம் செய்வாள் தேவான. கோய்ந்தனின் வேலைக்கு எந்தவகையிலும் குறைந்ததில்லை அவள் தோட்டத்தில் செய்யும் வேலை. இத்தனைக்கும்மேலே வீட்டுவேலைகள் அவள்தலைமேல்தான். பிள்ளைகள் பராமரிப்பும் அக்கறையும்கூட அவளுக்கே. வளர்ந்த பெண்ணான பெரிய பாப்பா மீது தேவான காட்டும் அக்கறை மிக்க இயல்பானது. சிறிய குழந்தையை குளிக்கவைப்பது, உடைமாற்றுவது,தூங்க வைப்பது எல்லாமும்கூட தேவானதான்.

ஒருநாள்-

நேரத்தோடு எழுப்பிவிடவில்லையே என்று தேவானமீதான ஒரு சிடுசிடுப்போடு அதிகாலை எழுந்து கொத்தாலியைத் தூக்கிக்கொண்டு செக்ரோல் போட விரைகிறான் கோய்ந்தன். பின்னால் தேவான. வேலை முடிய வீட்டுக்கு வந்து சமையல் தொடங்குகிறாள் அவள். அவளே நிரப்பியிருந்த பெரிய அண்டாவிலிருந்து ‘தண்ணிய வாரி வாரித் தலையில ஊத்திக்கிட்டித் தொவுட்டிக்கிட்டிருக்கான்’ கோய்ந்தன். பிறகு சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே போகிறான். விறகு பிளந்து போட்டுவிட்டும்படியாக கேட்கிறாள் தேவான. உதாசீனத்தோடு பதில் சொல்லிவிட்டு நடக்கிறான் அவன். அவன் போகிற இடம் அவளுக்குத் தெரியும். சாராயம் குடிப்பான் அல்லது சம்சு குடிப்பான். நண்பர்களோடு பேசிப் பொழுதைப் போக்குவான்.

அவளே விறகு பிளந்து, அண்டாவில் தண்ணீர் இறைத்துவைத்து, அவளே சமைத்து, அவளே பிள்ளைகளைக் கவனித்து…
‘தண்ணி’ போட்டுவிட்டு கோய்ந்தன் வருகிறான். சாப்பாடு பரிமாறுகிறாள். சுhப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுகிறான்.

அவள் வேலைகளையெல்லாம் ஒழித்துக்கொண்டு, பிள்ளைகளைப்; படுக்கவைத்து. சாப்பிட்டு முடிக்கிறாள். ‘அப்பாடா…ஒரு அஞ்சாறு மணிநேரம் நிம்மதியாய்த் தூங்கலாம்னு நெனைச்சிக்கிட்டு களைப்போட சாய்ஞ்சா தேவான’.

எல்லா வேலையும்- ஆம், எல்லா வேலையும் முடிந்தது என்ற நினைப்பில் விளைகிற ஆயாசம் அது. ஆனால் அந்த நேரமும் இல்லையென்கின்றான் அவன்.

பக்கத்தில் அசைப்புத் தெரிகிறது. கோய்ந்தன் மெல்ல அணுக்கமாய் வந்து கையைத் தூக்கி அவள் நெஞ்சுமேல் போடுகிறான்.

அவளுக்குப் பட்டெனப் புரிகிறது.

‘ம்…இன்னும் இது பாக்கி இருக்குதுல்ல!’

கதை முடிகிறது.

இது அலுப்பா? ஒப்புக்கொடுக்கப்பட்ட பொறுதியா? என்ன இது?
தமிழில் இதற்கிணையான சிறுகதையாக கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை’யை மட்டுமே சொல்லமுடியும்.

உணர்வுகளை படிப்படியாகக்கூட இது உயர்த்திச் செல்லாது. ஒருநாளின் சில நிகழ்வுகளின் காட்சிகளை மட்டுமே இச் சிறுகதை படம் பிடித்துக்காட்டும். பேச்சு மொழியில் கதை நடந்து, அது முடிகிற இடத்தில் வந்துவிழும் மொழியின் வீர்யம்…அட, அற்புதமான வார்ப்பு. உணர்வின் உச்சப் புள்ளியில் அடிவிழுகிறது வாசகனுக்கு.

யதார்த்த வகைக்கான சிறந்த கதையாக மட்டுமின்றி, பெண்ணிலைவாதக் கதையாகவும் இதைக் கொள்ளமுடியும். விசேடமென்னவெனில் கோசமற்று, குரலை மட்டும்; மென்மையாய் இழையவிடுவது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை அவலத்தை வெளிப்படுத்துகிற கதைதான் இது, மேலெழுந்தவாரியான பார்வைக்கு. ஆனால், கோய்ந்தனின் முன்னுரிமைகளை,ஆண் அதிகாரத்தின் அம்சங்களை ஏனென்று கேள்வி கேட்கவைக்கிறது கதை. இந்த பல்பரிமாணம் ‘கன்னிமை’யில்கூட இல்லை. மலேசியத் தமிழிலக்கியத்தில் எழுபதுகளிலேயே இந்த உச்சம் சாத்தியமாகியிருக்கிறது. கதை 1977-78ஆம் ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் அகலிப்பு வெகுவாய் இல்லைத்தான். அவர்கள் மத்தியில் 1980-1999தை பெரிய சாதனைகளைச் செய்த அல்லது போதுமான நல்ல கதைகளை அல்லது படைப்பாளிகளைத் தந்த காலப் பகுதியாகவும் சொல்லமுடிவதில்லை. இது அவர்களின் கல்வி மொழியிலிருந்து தொழில் முறைக்கான பயிற்சியும் வாழ்முறையும் என்ற மாற்றத்தினூடாக புதிய தலைமுறையொன்றின் தோற்றத்தோடு பின்னிப்பிணைந்த காரணிகளின் சேர்க்கையது ஒட்டுமொத்தமான விளைவு எனக் கொள்ளமுடியும். அவர்களது அரசியல் சமூக அமைப்பின் பக்கப் பாதிப்புகளையும் இது கொண்டிருக்கிறதுகூட. ஆனாலும் இதுவே போதுமான பதிலல்ல என்றும் தோன்றுகிறது.

வாழ்க்கையின் நிகழ்வுக் களங்களின் வார்ப்புக்கு யதார்த்த வகையானது போதுமானதாய் இல்லாதிருக்கிறது என்கிற ஒரு பதிலை நாம் சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.

மேற்கிலிருந்து மேலெழும் இலக்கிய இயக்கங்களின் கருத்தாக்கங்களது பாதிப்பின் விளைவாய்ப் பிறக்கும் இலக்கியத்தின் மூலம் மட்டுமேமலேசிய தமிழிலக்கியம் பிரக்ஞை அடைகிற சூழ்நிலைமைதான் சரித்திர காலம் முதல் தொடர்வதாய்ச் சொல்வதில் தப்பில்லை. மலேசிய தமிழிலக்கியம் தன்; பலத்தில் உந்தியெழும்பவேண்டும். யதார்த்தவகையில் அது தன்னியல்புக்கேற்ற நவீனத்துவப் பண்புகளை ஏற்கவேண்டும். பின்அமைப்பியல், பின்நவீனத்துவ தளங்களில் பயிலவேண்டும். தமிழகத்திலோ அல்லது பிற இடங்களிலோ கிளரும் விவாதங்களினால் மருட்சியடைந்து நின்றுவிடக்கூடாது.

யதார்த்தத்தில் நவீனத்துவத்தை– அதாவது நவீன யதார்த்தத்தை-ஏற்பதின்மூலமே புதிய சொல்லாடல்களை உருவாக்க முடியும். அவை புதிய புதியதானவும், பல்பரிமாணம் உடையனவுமான அடைவுகளைச் சாத்தியமாக்குமென்ற என் நம்பிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
வாழ்முறையிலும் சிந்தனைத் தளத்திலும் ஆதார சுருதியான மாற்றங்களின்றி வலிந்து புகுத்தப்படும் மாற்றங்களினால் பெரும்தாக்கத்தை உருவாக்கிவிட முடியாதுதான். ஓன்று சொல்ல முடியும். தகவல் தொழில்நுட்ப புரட்சி நம் வாழ்வை நாம் அறியாமலே கீழ்மேலாகப் புரட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறது. புறவெளி மாற்றங்களில் அதிகப் பிரக்ஞை அடையாமலே நம் அகம் பலத்த மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கிறது. நாம் அவற்றை உள்வாங்குவதற்கே புதிய மொழி தேவைப்படுகிறது. இந்நிலையில் மண்ணின்- கலாச்சாரத்தின்- இயல்புக்கேற்றதாய் நாம் இலக்கியப் புதுமைகளை மேற்கொண்டேயாகவேண்டும்.

ரெ.கார்த்திகேசுவின் 1995இல் வெளிவந்த ‘மனசுக்குள்’ சிறுகதைத் தொகுப்பு, இத்திசையில் தக்கவொரு வெளியீடு எனக் கருதுகிறேன். இந்நூல் பரவலாய் அறியப்படவும் இல்லை. தக்க விமர்சனத்தை எதிர்nhள்ளவுமில்லை. நமது இலக்கியப் பரிமாற்றத்தின் ஒருவழிப் பாதையை இது மறுபடி சுட்டுவதாகக் கொள்ளலாம். அதிலுள்ள ‘அம்மாவும் சாமியாரும்’ போன்ற சில நல்ல கதைகள், பரீட்சார்த்தத்தின் முதல் கண்ணியில் வெடித்துப் பிறந்தவை என்று கொள்ளலாம். இதுபோல் இன்னும் நம் பார்வைக்குப்படாத பல நல்ல படைப்புகள், தொகுப்புகள், முயற்சிகள் இருக்கவும் கூடும். இதற்காக நாம் யாரை. எதை நோக? இக்கோணல்கள் எவ்வாறு நிமிர்வு செய்யப்படப்போகின்றன? 2000 புதிய கதவுகளைத் திறக்கவேண்டும்.

000
(இவ்வுரைக்கட்டு பிப்ரவரி 20000 கணையாழி இதழில் வெளிவந்தது.)

Friday, September 05, 2014

எனது முதல் கவிதை

மனித அடையாளம்
-தேவகாந்தன்

புல்லின் தலைகளைத்
தடவிய பனிக்காற்று
பூவிதழ் மலர்த்திய
இரவின் வருடல்
0
மனிதக் கூடொன்று
தசையில் தீப்பிடிக்க
உழன்று
எழுந்து
மெதுமெதுவாகக்
கையைநீட்டி
துணைவிதிகளினாலே
தீயை மூட்டிற்று
இன்னொருதசையிலும்
0
பகலின் வாழ்வில்
அர்த்தமாய் இன்றியாய்
அடைந்தபேதங்கள்
வெறுப்புகள் வெக்கைகள்
யாவும்; நெகிழ்ந்து
ஊடலாகின
பின்
அதுவுமேஅற்றது
0
சத்தம் வெறுத்த
நிசப்தத்துள்ளே
இருட்டினுள்ளே
சேர்ந்து
பிணைந்து
முயங்கி
முள்ளைமுள்ளால்
முள்ளைமுள்ளால்;;…
0
மனிதன்-
யந்திரம்-
யந்திரமனிதன்-
பேதமறும் பிரபஞ்சத்தில்
யுகப் பழமையான
இதுதான்
உச்சவெற்றியான
மனிதஅடையாளம்
000
(இலாலாப்பேட்டையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’என்ற சிற்றிதழ் ஆத்மாநாம் நினைவுநாளான ஜூலை 6இல் ஒருகவிதைச் சிறப்பிதழை வெளியிட்டது 1996ஆம் ஆண்டு. அதில் வெளியான கவிதை இது. அச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அழகியபெரியவன் மற்றும் நேசன் ஆகியோர் அங்கம் வகித்தனர்)

சமகாலதமிழ்க் கவிதை

சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து…இரா.காமராசுவின் ‘கணவனானபோதும்’ தொடங்கி அண்மையில் வெளியீட்டுவிழா நடத்தப்பெற்ற ‘சந்திப்பின் கடைசிநொடியில்’ வரை சிறிதும் பெரிதுமாக சுமார் முப்பது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளதை மேலோட்டமான ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

 வெகுவான நூல்கள் கவிதைத் தினவோடு மட்டுமன்றி,
தரம் குறித்த பிரக்ஞையோடும் வெளிவந்திருக்கின்றன. வடிவ நேர்த்தி மிகுவல்லபம் பெற்றிருக்கிறது. இவை ஆரோக்கியத்தின் அடையாளங்கள். எனினும் செல்நெறி குறித்த தெளிவு இல்லாதவரை கடந்தகாலங்களைப்போல் மீண்டும் மீண்டும் குறுக்கிடும் கவிதைத் தேக்கநிலைமைகளை நாம் தவிர்க்கவியலாது போதல் கூடும்.

இப் புதிய கவிதைச் சூழலை ஈழக் கவிதைகளை மையப்படுத்தியும், பா.செயப்பிரகாசம், முத்துக்குமார் ,மா.காளிதாஸ் ,யுகபாரதி, கிருஷாங்கிணி, கல்லயாணராமன் போன்றோரின் கவிதைகளைப் பொதுமையாகவும் ஒரு வாசிப்புக்குட்படுத்தியபோது சில கருத்துக்கள் தவிர்க்க முடியாதபடி மனத்தே மீண்டும் மீண்டும் முந்திக்கொண்டு வந்துநின்றன. அவை குறித்து என் பகிர்வே இக் கட்டுரை
.
இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிகவிஸ்தீரணமானது. அது மனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்னைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை , மனித மதிப்பீடுகளின் புனர் நிர்மாணத்துக்கா அவசியங்களை, நம்பிக்கைகளை, பெண்ணியஎழுச்சிகளை, ஜனநாயக அறைகூவல்களைப் பேசுகின்றது. சிலகவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சிலகவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில பொருளாரத் தளத்தில் மூன்றாம் உலகநாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமைபற்றியும், சில உலகப் பொதுப் பிரச்னைகளான விபசாரம்,எயிட்ஸ் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்துஒருபொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களும் உண்டு. இத் தனிப் பண்புகள் கவிதைத் தரத்தை நிர்ணயிக்க,பொதுப் பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன.

மூன்றாம் உலகநாடுகளின் கவிதைப் போக்கினைஉற்றுநோக்கினால் அது வாய்மொழிமரபு (Oral Tradition) சார்ந்தது என்பது தெரியவரும். அதனால் அக் கவிதைகள் வாய்மொழி இலக்கியத்துக்குப் பொதுவான செவிப்புலன் சார்ந்து உணர்ச்சிவசப்பட்டு, சுட்டிப்பு கூடப்பெற்று, நெகிழ்ச்சிமிகுந்து,  இன்னும் உயர்வுநவிற்சிப் பண்புகளைக்கொண்டு விளங்குகின்றன. இவை தேவை கருதிய வளர்நிலைப் படிகளென்றும், இவையே கவிதை உன்னதத்துக்கு வாய்ப்பானவையென்றும் நுகூகிபோன்றவர்கள் சிலாகித்துப் பேசுகிறவேளையில்,அசெபேபோன்ற கவிதை விமர்சகர்கள் பரந்துபடுதலையும், சர்வதேசத் தன்மை பெறுதலையும் சுட்டி இக் கவிதை மரபினை மறுப்பர்.

சங்க இலக்கியங்கள் பெருமளவுக்குவாய்மொழிப் பண்புசார்ந்தவைஎன்பார் கலாநிதிகைலாசபதி. ஆனால் பிற்காலத்தே பலநிலைத் திரிபுகளை அடைந்தும்,மாற்றங்களைச் செரித்தும் தமிழகக் கவிதைஎழுத்தறிவுமரபு (Literate Tradition) சார்ந்ததாயிற்று. அதுஎழுத்தறிவுமரபின் கட்புலம் சார்ந்த, கட்டிறுக்கமான, உயர்நவிற்சியற்ற பண்புகளைப்பெற்றுக்கொண்டது. இது நவீனத்துவத்தின் பண்புகளை உள்வாங்கிக் கொள்ளலும் ஆயிற்று. பின்நவீனத்துவத்தின் மேற்குலகத் தோற்றத்தின் பாதிப்பில் கவிதைமீது புகுத்தப்பெற்ற சிலபண்புகள் செரிமானமாகாதுபோகவே, நாம் கண் முன்னால் கண்டதேக்கநிலைக் காலம் அப்போதுதான் உருவானது.

அத் தேக்கநிலைஉடைவின் துல்லியமானஅடையாளங்களேநான் முன்னர் குறிப்பிட்டமுப்பதுவரையானகவிதை நூல்களின் தோற்றங்கள். இவைதம்முள் முரண்பாடுடையவை.

தமிழகத்தைப்போலன்றிஈழத்தில் நிலைமைவேறாகவிருந்தது. பாரதிபரம்பரையாய்அவர் கவிதாநெறியின் விழுமியங்களைப் பற்றிவந்தவர் மகாகவிஎனலாம். இதைபின்னால் நுஃமான்,சி.சிவசேகரம், இ.முருகையன்,புரட்சிக் கமால் போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் தம்முள் முரண்படக்கூடுமாயினும் செல்திசைஒன்றாகவே இருந்ததது. வாய்மொழி இலக்கியமரபு சார்ந்திருந்தமையே ஒத்திசைவின் காரணமாக இருந்தது.

இதன் எதிர்முனைத் தளத்தில் அ.யேசுராசா இயங்கியபொழுது, வாய்மொழிமரபுக்கும் எழுத்தறிவமரபுக்கும் இடையேயான ஒரு செல்நெறியை எடுத்தவராக சேரனைச் சொல்லமுடியும். அவரது கவிதைகளைவிடவும் அவரின் ‘மரணத்துள் வாழ்வோம்’கவிதை நூற் தொகுப்பு இதை உரத்துச் சொல்லும். அடுத்த தலைமுறைக் கவிஞர்களான நட்சத்திரன் செவ்விந்தியன், சோலைக்கிளி, சு.வில்வரத்தினம் போன்றோர் இச் செல்நெறிபற்றிநிற்பவர்களெனவே கருதமுடிகிறது. ஈழத்தின் யுத்தநிலைக் காலதேவை ஒருபிரச்சார்தனத்தை மையநிலைப்பாடாகக் கொண்டிருத்தலை தவிர்க்கமுடியாது. இருந்தும் அதையும் மீறிய தளங்கள் அங்கே அடையப்பட்டிருக்கின்றன.  இவற்றின் மூலவராக மு.பொன்னம்பலத்தை அடையாளங்காணல் சிரமமானதில்லை.

வாய்மொழிமரபுசார்ந்ததாகவே மு.பொ.வின் கவிதைகளைக் கூறமுடியினும், அவைஎழுத்தறிவுப் பண்பும் பெற்றவை. இதைஅவர் கவிதையிலுள்ள இருகிளைப்பாட்டுத் தன்மையென்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

மு.பொ. சொற்களை Metaphors  ஆகவும்,அதற்கும் மேலேஒருபடிபோய் Mystic Power உடையதாகவும் பயன்படுத்துகிறார் என்பது அவரது வாதம். எப்படியாயினும் இவரது கவிதைகளில் காணப்படும் கவிதைக் கருத்தும் கவித்துவமும் இணைந்துசெல்லும் முறைமையின் மூலமே இவரது பெரும்பாலான வெளிப்படுத்தல்கள் நிகழ்கின்றன. இது இவ்வகையான கவிதைகளின் வளர்ச்சிநிலையே ஆகும். இந்த இருகிளைப்பாட்டு நிலையே சேரனிடமும் விளங்குவதாக நான் சொன்னது. ஆனால் இது சந்தேகத்தைக் கிளப்புவதில்லை. மு.பொ.வின் கவிதைத் தளம் சமூக அக்கறையுள்ளவர்க்கு பலபடைச் சந்தேகங்களைக் கிளப்பும்.

ஈழத்து சமகாலக் கவிதைப் பரப்பில் பெயர் குறிப்பிடப்படவேண்டியவர்கள் நிறையப் பேர் உளர். எனினும் மாதிரிக்கு அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ நூலை இங்குஎடுத்துக்கொள்ளலாம்.

 வரலாற்று முள்ளில்
செருகப்பட்ட சிறுமொட்டே
நீயெண்ணாக் காலத்திற்கும்
உன்ஆன்மா துடிக்கப் போகிறது

என்றுகவிதை ஆக்ரோசமானயுத்த எதிர்ப்புக் கோசம் கொடுக்கிறது. இதுகோசம்தான். ஆனாலும் கவிதையின் மூலமான
கோசம்.சமூக அக்கறைபெற்ற கவிஞர்களின் கோசம் வேறுமாதிரியும் இருக்கமுடியாதுதான்.

தன்னுள் ஆழ்தல் என்பதைவிடவும் சமூகஅக்கறை உன்னதமானது. இரண்டிலுமே கவிதைவேண்டும். எனினும் சமூக அக்கறை வாய்மொழிமரபை மீறாது. நாம் நம் மரபுகளில் தங்கியிருக்கிறோம்.

அண்மையில் குறிஞ்சிக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலான‘நிழலாட்டம்’வாசித்தேன். அதில் ‘எங்கள் மழை’என்றுஒருகவிதை. மிக இயல்பாகத் தொடங்கிய இக் கவிதை கடைசியில் இப்படிமுடிகிறது:

எங்களுக்குவீடு இருக்கிறது
ஆடைகள் இருக்கின்றன
பசிதீர்ந்தவயிறும் இருக்கிறது
நாங்கள் மழையைரசிக்கின்றோம்.

இதுசொல்கிற சேதியைப் புரிய பெரியவித்தகம் தேவையினக் ல்லை. இச் சமூக அக்கறையுள்ள கவிதைகளை நாம் வரவேற்கலாம். எழுச்சியின்
காரணமும், செல்நெறியும் இப்போது தெரிகின்றன. கவிதை யாவும் தனக்கெனக் கேட்கிறது சமூக அக்கறை.

0000
(இது கணையாழிஅக்டோபர் 1998 இதழில் வெளிவந்தது)

Thursday, September 04, 2014

நூல் விமர்சனம் 8 நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை


நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை


‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் 2005இல் வெளிவந்த நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பினை மீளவாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்கு வாய்த்தது. முதல் தடவையில் அத் தலைப்புச் செய்த இடையூறுபோல் இரண்டாவது தடவையில் நான் பட்டுக்கொள்ளவில்லை.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டிலேயே என்னிடம் வந்துவிட்ட இந்தப் புத்தகம், தொடர்ந்த ஓரிரண்டு ஆண்டுகளாக  என் நூல்நிலையத்தில் இருந்திருந்தும், அதை வாசிக்கத் தடையாக இருந்தது அதன் தலைப்புத்தான். இது சூழலியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்புப்போன்ற ஒரு மயக்கமாகும் அர்த்தத்தைக் கொண்டிருந்தது. நதிகளில் நீரற்றுப் போயிருக்கும் வரட்சி வனவழிப்பு, காற்றின் மாசு இவற்றினாலான இயற்கைவளங்கள் அழிவதினால் ஏற்பட்டிருக்கிறதென்றும், அதற்கான காரணங்களை மனிதர்களே பொறுப்பேற்கவேண்டுமென்றும் குற்றம் சாட்டுகிற தொனி அந்தத் தலைப்பில் இருந்ததாக எனக்கு முதன்முதலில் தோன்றியிருந்தது. ஓரளவு இந்த அர்த்தம் செறிந்த இதே தலைப்பிலான கட்டுரையொன்று இதில் இருக்கிறது. எனினும் சுற்றுச் சூழல்பற்றி இலேசாகக் குறிப்பிட்டுச் செல்லும் இக்கட்டுரை, அதிகமாகவும் புகைந்துகொள்வது செல்போன்களின் மீதுதான்.

 ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற இந்த அடியிலிருந்து கம்பராமாயணத்தின் அந்த முழுச் செய்யுளையும் ஞாபகம் கொள்கிறபோது, விதியை வலியுறுத்தும் ஒற்றையடியாகக்கூட இதற்குப் பொருள்கொண்டிருக்கமுடியும். அதனால்தான் நான் குழம்பியது.

ஆனால் சங்க இலக்கியத்தைத் தெரிந்தும்,  பிற்கால இலக்கியங்களில் ஆழ்ந்தும், மரபான  வாழ்நிலைகளின் பிடிப்பை  அழுத்தமாக்கொண்டும் இருந்திருந்தாலும், தேவையற்ற  மரபுகளைமீறும் நாஞ்சிலின் எழுத்தின் பரிச்சயம் நினைவுவர, தாமதமாகவேதான் அந்த  முதல் தடவையில் நான் அவரது நூலை வாசிக்க  எடுத்தது.

இலக்கியம் சாராத  கட்டுரைகள்கூட இலக்கியமாக முடியுமென்பதற்கான நிச்சயம் எனக்கு அப்போதுதான் ஏற்பட்டது. அத்தனை செழுமையும், சுவையும்,ஆய்வுப் போக்கிலான நேர்த்தியும் கொண்டவை பெரும்பாலான அக் கட்டுரைகள்.

பல்லாண்டுகளுக்குப் பிறகான இப்போதைய வாசிப்பு முந்திய அபிப்பிராயங்களை  மேலும் உயர்த்திவிடவே செய்திருக்கின்றது.
கடந்தசில ஆண்டுகளாக பல்வேறு தருணங்களிலும் கட்டுரையென்கிற பதத்துக்குப் பதிலாக, உரைக்கட்டு என்ற சொல்லையே நான் பாவித்து வந்திருக்கிறேன். கட்டுரையென்கிற பதத்திலிருக்கும் ஒரு பழகிய, இறுகிய அர்த்தம், உரைக்கட்டு என்ற பதத்தில் இருக்கவில்லைப்போல எனக்குத் தோன்றியது. கட்டப்பட்ட உரை என்பதிலிருந்து, உரையால் கட்டப்பட்டது என்ற பதத்தில் ஒருகலாபூர்வமான செழுமையின் இருப்புக்கு இடமிருப்பதால் இயல்பாகவே அத் தோற்றம் எனக்குள் விளைந்தது.

இவ்வுரைக் கட்டுஎன்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவை இந்நூலிலுள்ள பலவும். ‘கட்டுரை வடிவமென்பது எழுத்தாளர்களுக்கு எளிதில் கைகூடும் வித்தையாக மாறிப்போய் நூற்றாண்டுகள் பலகடந்துவிட்டன’ என்ற ஓவியர் வே.ஜீவானந்தனின் முன்னுரையின் முதலடியை மறுப்பதினூடாகவே நாஞ்சில் நாடனின் உரைக்கட்டு வன்மையை என்னால் மதிக்கமுடியும். நாஞ்சில் நாடன் மட்டுமேயல்லதான், ஆனாலும் எல்லா எழுத்தாளருக்குமே கட்டுரை கைகூடும் வித்தையாக  மாறிப்போய்விடவில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.

ஆறு வகையான பகுதிகளில் ஐம்பத்தைந்து   தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியே கட்டுரைகளைக் கொண்டிருப்பது.
அதிக உரைக்கட்டினைக் கொண்டிருக்கும் பகுதியும் இதுதான் .முன்னுரைகள் பிறர்க்கு,முன்னுரைகள் தனக்கு என்பவை பகுதிகள் இரண்டாவதும் மூன்றாவதுமாய் வருபவை.  நான்காம் பகுதி மதிப்புரைகளைக் கொண்டது. ஆ.மாதவன், செம்பூரான், பா.விசாலம், பாவைசந்திரன், திலீப்குமார், நீலபத்மநாபன் மற்றும் ஆ.இரா.வெங்கடாசலபதி ஆகியோரின் ‘அரேபியக் குதிரை’,‘இது எங்கள் பம்பாய்’, ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’, ‘நல்லநிலம்’, ‘கடவு’, ‘நீலபத்மநாபன் இலக்கியத்தடம்’, ‘முச்சந்தி இலக்கியம்’ஆகிய நூல்களுக்கான மதிப்புரைகள் இவை. பிறகுறிப்புகள், அஞ்சலி ஆகியனவை அடுத்தடுத்து  வருபவை.

இவற்றுள்;  முதலாவது பகுதியையே முதன்மையான விமர்சனத்துக்காக நான் எடுத்திருக்கிறேன்.

முதலாவது தலைப்பு, ‘தமிழில் சிறுபத்திரிகைகள்-காலச்சுவடு’ என்பது. சுந்தரராமசாமியின் ஆசிரியத்துவத்தில் 1988 ஜனவரியிலிருந்து 1989 அக்டோபர்வரை வெளிவந்த எட்டு இதழ்களையும், பின்னர் கண்ணன், லட்சுமிமணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்டு 1994 அக்டோபர் முதல் 1997 ஜனவரிவரை வெளிவந்த எட்டு இதழ்களில் ஏழு இதழ்களையும் தன் விசாரிப்புக்கு எடுத்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.

பதினாறாம் இதழ் ஏன் விசாரிப்புக்கு  எடுக்கப்படவில்லையென்பதற்கு காரணம் எதுவும் கூறப்படவில்லை. நூலில் இந்த விசாரிப்பை அறிமுகமென்கிறார் நாஞ்சில். ஒரு சிற்றிதழ்க் கருத்தரங்கில் இந்த அறிமுகம் ஏன் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

மற்றும்படி எடுத்துக்கொண்ட பொறுப்பை அதில் அவர் மிகஆழமாகச் செய்திருக்கிறார்  என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிதைகள், சிறுகதைகள், மதிப்புரைகள், நேர்காணல்கள் என்ற பகுப்புகளில் அவர் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயம் ஆழமானது. அது ‘எம்.ஏ.நுஃமானின் நேர்காணல் மிக ஆழமான விஷயங்களை விவாதித்தது என்றுசொல்லமுடியாது’ என்கிற அளவுக்கு ஆழமானது.

பதினெட்டுப் பக்கங்களில் பதினைந்து இதழ்களை விசாரிப்புச் செய்ததென்பதில் கட்டுரை தன் பணியினைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறதென்று தயங்காமல் சொல்லமுடியும்.

இலக்கியச் சமூகத்தில் நடந்த சில விவாதங்களைப்பற்றி விவாதிக்கத் தகுந்த கருத்துக்களோடு முன்வைப்பது அடுத்ததான ‘தன்படைவெட்டிச் சாதல்’என்ற தலைப்பிலான உரைக்கட்டு.  நாஞ்சிலின் கருத்தை மறுக்கமுடியுமெனினும், நாஞ்சில் கருத்துக் கூறுவதையே மறுத்துவிடமுடியாது.  ‘தன் படைசார்ந்து பேசுதல்’ வெளிப்படையாகவே இதில் தெரிந்தபோதும் எடுத்துரைப்பு சிறப்பாக இருக்கிறது.

‘நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது’என்பது இலக்கியவாதிகளும் சில படைப்புகளும்பற்றிய விசாரம். இது தன் மனது திறந்துபேசும் படைப்பாளியின் வெளிப்படையினாலும், அதற்கான மொழியினாலும் சிறப்புடையது.

எனக்கு இத் தொகுப்பில் மிகப் பிடித்தமான விசாரிப்பு ‘மங்கலம், குழூஉக் குறி, இடக்கரடக்கல்’என்ற உரைக்கட்டில் உண்டு. 'வாசச் சமையலும் ஊசக் கறியும்’கூடப் பிடிக்கும்தான். மிகச் சிறப்பாக வந்திருப்பது‘கோணல் பக்கங்கள்3’ என்பது. சாருநிவேதிதாவையும், அவரது எழுத்துக்களை, குறிப்பாக ‘கோணல் பக்கங்க’ளையும் பற்றிய சரியான பார்வையை முன்வைக்கிற கட்டுரை.

நாஞ்சில் நாடனின் நடைமட்டுமில்லை,  அவரது தார்மீகக் கோபங்களும்கூட இத் தொகுப்பில் நியாயமான பல்வேறு இடங்களில் வெளிப்படுகின்றன. மட்டுமில்லை. ஆங்காங்கே செறிவாய் விழுந்திருக்கும் நகைச்சுவை இதன் இன்னொரு சிறப்பு. இந்த  நகைச் சுவையில் சிரிப்பு வராமல் சிந்திப்புவருவது மேலும் அதன் சிறப்பு.

இந்தத் தொகுப்பிற்கு இலக்கியத் தோட்டத்தின் அ-புனைவு நூலுக்கான பரிசுகிடைத்ததாக ஞாபகம். ஆயின்,  தகுதியான நூல்தான். கருத்து நீர் நிறைந்த இந்த நூல்நதியில் நிறையப் பேர் குதித்து நீராடியிருப்பர் என்பது சந்தேகமானது.


00000


தாய்வீடு, செப். 2014சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து

சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள்
-தேவகாந்தன்-

இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தின் இறுதிக் கண்ணியில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் இலக்கியவிவகாரங்கள் குறித்துதெளிந்தசிந்தனையோடு இருபத்தோராம் நூற்றாண்டில் பிரவேசிப்பதுஅவசியமாகும்.

அக்டோபர் கணையாழி இதழில் நான் எழுதிய‘சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து…’என்றகட்டுரையில் எழுத்துமரபு,
வாய்மொழிமரபுபற்றி விசாரித்திருந்தேன். அக் கட்டுரையின் நீட்சியாகத் தொடரும் இக் கட்டுரையில் ஈழத்துப் பெண் கவிஞர்கள்பற்றி ஆழமாக கவனிக்கலாமென்றிருக்கிறேன். இது ஒட்டுமொத்தமானஈழத்துக் கவிதைகளின் போக்குக் குறித்தும் புரியவைக்கும்.

நாவல்,சிறுகதை,நாடகங்களைவிடவும் கவிதையேஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் வலுவீச்சுக்காட்டிவளர்ந்திருக்கிற இலக்கியவடிவம். இதில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு அதிகமானது என்று சொன்னாலும் பொருந்தும். ஒளவை,ஊர்வசி,சிவரமணி,சன்மார்க்கா,மைத்ரேயிமல்லிகா,கோசல்யா,கல்யாணி,கருணா,உமையாள்,ரஞ்சனி,சுல்பிகா,பாமினி,செல்வி,நிருபமா,பிரியதர்சினியென்று இப் பட்டியல் விரிகிறது. சமூகத்தின் சமகாலநிகழ்வுகள் குறித்து பேரக்கறைகொண்டுள்ள இக் கவிஞர்கள் தன்னெஞ்சறிவது பொய்க்காத நேர்மையுடன் இருந்தார்களென்பதை கவிதைகளை வாசிக்கையில் ஒருவரால் சுலபமாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.

யுத்தபூமியாகிவிட்டிருக்கிறது இலங்கை. எங்கும் வாழ்வுப் பிரச்னைகள்,கொடுமைகள் மலிந்துகிடக்கின்றன. இவற்றினால் கொதித்தெழுந்துஉணர்ச்சிகள் கவிதைகளாய் வெடித்திருக்கின்றன. விடுதலைப் போராளிகள், அரசு என்ற எதுவித பேதமுமின்றி அக்கிரமங்களுக்கும், அடக்குதல்களுக்கும் எதிராக மானுட இருத்தல்பற்றிய, சுதந்திரம்பற்றிய தளத்தில் நின்று இவர்கள் கொடுக்கும் குரல் வீறாண்மைவாய்ந்தது. இதுமானுடத்தின் அடங்கமறுக்கும் கோ~மாய் பூமியைஅதிரவைக்கிறது. மட்டுமில்லை. பெண் விடுதலைசார்ந்து பழையனகழிக்கும் வேட்கையும், சிறைகளைத் தகர்க்கும் உக்கிரமும் வாய்ந்தும் ஈழக் கவிதை வேள்வி பெருக்குகிறது.

குழம்பியஒருசமுதாயத்தில், இருப்பின் நிச்சயமற்றுப் போனதால் தாங்களும் மிகக் குழம்பி தொடர்ந்து எழுதாமல் போய்விட்டகவிஞர்களும் இருக்கிறார்கள். இந் நிலைமைகளைத் தாளாமல் தற்கொலைசெய்துகொண்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். தம் எழுத்தினதும் கருத்தினதும் வீர்யம் காரணமாய் கடத்தப்பட்டு பின் காணாமலேபோய்விட்ட (இவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது) கவிஞர்கள்கூட இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் மனஅழுத்தங்கள் காரணமாய் தற்கொலைசெய்துகொண்டார்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவேர்ஜினியா வுல்ஃப் என்ற எழுத்தாளரும், சில்வியாபிளாத் என்ற கவிஞரும் என்று அறிகிறோம். ஈழ யுத்தநிலைமை காரணமாய் சிவரமணி என்ற பெண் கவிஞர் தற்கொலைசெய்துகொண்டார் என்பது பெரிதாக வெளியே தெரியவரவில்லை. செல்வி என்ற பெண் கவிஞர் தம் எழுத்துநேர்மையும், அச்சமின்மையும் காரணமாய்க் காணாமல் போனவர். தற்கொலைசெய்தலைவிடவும் காணாதுபோதல் என்பதே கவிதைநெறியைத் துல்லியப்படுத்திக் காட்டுவதாக இருக்கிறது.

சமகாலஈழக் கவிதைகளின் செல்நெறி சமூகம் சார்ந்ததாயிருக்கிறது. அது யுத்தம் புரிவதாய் இருக்கிறது. அவற்றின் தன்மைகள் நயங்கள்பற்றி கீழே சிறிது காண்போம்.

‘உங்கள் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது’ என்று உரத்துக் குரல் கொடுத்தவர் சிவரமணி.

‘இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும் 
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?’என்றும் ஓங்கிக் கேட்டவர் இவர்.

பின்னால் இந்தஉள்ளுரம் தேய்ந்து,
‘கதவின் வழியாய்ப் புகுந்த
மேற்கின் சூரியக் கதிர் விரட்ட
நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல
மீண்டுமொரு இரவு நோக்கி’என்று எழுதும்படிஏன் ஒரு நம்பிக்கைவரட்சி? ‘நான்,எனதுநம்பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டிருக்கிறேன்’என்று கூற என்னகாரணம்? இதுவே இவரைத் தற்கொலைக்கு இழுத்ததா?

செல்வி சோகத்தைப் பாடினார். ஆவரின் கவித்துவ வீச்சு அச்சோகத்தை அச்சொட்டாய்ச் சிறைப்பிடித்தது. ‘தாய்மையின் அழுகையும், தங்கையின் விம்மலும்,பொழுது புலர்தலின் அவலமாய்க் கேட்டன’ என்று செல்வி எழுதுகையில் அவர் சோகத்தை மட்டுமே பேசவில்லை. தன் கோபத்தைக் காட்டியிருப்பதையும் வாசகனால் புரியமுடியும். இது சமூக அநீதிக்கான, அரசியல் கொடுமைக்கான கோபம். ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்ன ரகசியத்தை நம்மால் உணரமுடிகிறது.

இன்னொருபெண் கவிஞர் சுல்பிகா.‘விலங்கிடப்பட்டமானுடம்’என்றஅவரதுகவிதைத் தொகுப்பிலிருந்துஒருகவிதை.

‘அந்த
இரவின் தொடக்கம்
போர் யுகத்தின் ஆரம்பம்

இரும்புப் பறவைகள் வானில் பறக்க
பதுங்குகுழிகளில்
மனிதர்கள் தவிக்க
தொடர்கிறதுஅந்த இரவு

மானிடத்தின் மரணத்திற்கு
இரத்தம் தோய்ந்த இரவுகள் சாட்சி
தெருச் சடலங்கள்
கற்பிழந்தபெண்கள்
கருகிக் காய்ந்தகுழந்தைச்
சடலங்கள்
இடிந்தகட்டிடங்கள்

கழிவெடித்து
காய்ந்துகிடக்கும் வயல்வெளிகள்
புத்தகச் சாம்பல்கள்
வாயுநிரம்பும்
வயிற்றுமனிதர்கள்

இன்னும் இன்னும் எத்தனை…
இந்தப் பட்டியல்
இன்னும் நீளும்
இரவின் சாட்சிகள்.’

இக்கவிதைநிகழ்வுகளைச் சொல்லியிருப்பது மட்டுமின்றி ஒரு சமூகத்தின் ஏக்கம் எழுச்சிகளின் பதிவாகவும் ஆகிவிடுகிறது. நிலா, மேகம், நட்சத்திரங்கள், காதல், தவிப்பு, விந்துச் சுகங்கள், கலவிக் களிகள்பற்றிப் பாடியகாலம் முடிந்துபோனது. எங்கோ இவைபற்றியும் ஒருகவிதை வெடித்துவிழலாம். ஆனால் கவிதைப் பொருள் ஏற்கனவே சமூகமாகிவிட்டது.

கவிதையாவும் தனக்கெனக் கேட்கிறதுசமூகஅக்கறை. இதன் அடிபற்றிநிற்கிறதுஈழத்துக் கவிதைச் செல்நெறி.
000

(‘அமிழ்தம்’என்ற பெயரில் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழின் பொங்கல் மலரில் (1999)பிரசுரமான உரைக்கட்டு இது.)

Wednesday, September 03, 2014

மகாகவியின் 3 நாடகங்கள்

மகாகவியின் 3 நாடகங்கள்
தொகுப்பாசிரியர்: எம்.ஏ.நுஃமான்


இன்றையகாலத் திருக்கும் மனிதர்கள்
இன்றையகாலத் தியங்கும் நோக்குகள்
இன்றையகாலத் திருப்புகள் எதிர்;ப்புகள்
இன்றையகாலத் திக்கட்டுகள் …….’ (மகாகவி)
இவையே அறுபதுகளிலிருந்து எண்பதுகள்வரை ஈழத்தில் கவிதை, நாடக ஆளுமையாகவிருந்த மகாகவி என்ற உருத்திரமூர்த்தியின் இலக்கியக் கருதுகோள்களாக இருந்திருக்கின்றன என்பதை அவரின் படைப்புகளின் மூலமும் நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது. ‘புதிய களங்கள் புதிய போர்கள் ,புதிய வெற்றிகள் இவைகளைப் புனையும் ,நாடகம் வேண்டி நம் மொழி கிடந்தது’ என்று அவரே கூறுவது போன்றிருந்த நிலைமையிலேதான் ‘கோடை’ நாடகத்தினூடாக மகாகவியின் நாடகப் பிரவேசம் நிகழ்கிறது.

இவையெல்லாம் வெறும் பிரகடனங்கள் மட்டுமில்லை,
செயற்பாட்டு வெற்றியையும் அடைந்திருக்கின்றன. அதை இப் பாநாடக நூல் தொகுப்பு பிசகில்லாமல் காட்டுகிறது.

‘எல்லாவிதமான கலை இலக்கிய வடிவங்களையும்விட ஈழத்தில் இன்றைக்கு உன்னதமான வளர்ச்சிபெற்றிருப்பது நாடகத் துறையே’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒருமுறை என்னிடம் கூறினார். ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்திலும் மேடைநாடகவாக்கமும், பிரதியாக்கமும் மிகவும் வீச்சாகவே வளர்ந்துகொண்டிருக்கின்றன. ‘குறத்தி முடுக்கு’, ‘ராமானுஜர்’, ‘ஒளவை’, ‘உபகதை’ போன்றவை இதை ஊர்ஜிதம் செய்கின்றன.
இத்தகைய  காலகட்டத்தில்  பாநாடகவகையைச் சார்ந்த மூன்று
நாடகங்கள் அடங்கிய இந்நூலின் வரவு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
மகாகவிக்குச் சமகாலத்தில் எழுதியவர் கவிஞர் முருகையன். நீலாவணன்,சொக்கன், ஜீவா ஜீவரத்தினம் போன்றோரும் இக் காலகட்டத்தில் வானொலி நாடகத்திலிருந்து பாநாடகம்வரையான பல் துறைகளிலும் எழுதியுள்ளனர்.

ஆயினும், மகாகவியளவு சமூக எதார்த்தத்தை, யாழ்ப்பாணமண்ணின் மணத்தை பதிவுசெய்தவர் வேறுபேர் இல்லை. வெவ்வேறு தளங்களெனினும் நாவலில் டானியல் போல்,கவிதையிலும் நாடகத்திலும் மகாகவிதான்.

பாநாடகவகை ஈழத்திலே பிரபலம். அதுபோலஅதன் வளர்ச்சி வியாப்திகள் ஈழத்திலேதான் ஆழ நிலைகொண்டிருக்கின்றன. ஈழத்தில் முதல் பதிப்புப்பெற்ற நூல் சோமசுந்தரப் புலவரின் ‘உயிரிளங் குமரன்’. மீனாட்சிசுந்தரனாரின்  ‘மனோன்மணீயம்’ தமிழகத்தில் உருவான குறிப்பிடத் தகுந்த நூல் எனினும், அது நாடகப் பிரதிமட்டுமே. வாசிப்பு மட்டும் அதில் சாத்தியமாகியிருந்தது. காவியமளவு அது விரிந்ததால் நாடகக் கூறுகள் அதில் அடிபட்டுப் போயிருந்தன. அதற்கான அரங்காட்டப் பிரதி எப்போதும் எழுதப்பட்டதில்லையென்றே தெரிகிறது.

பாநாடகமென்பது செய்யுள் நாடகமல்ல. பாநாடகத்தைத் தீர்மானிக்கும் விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. செய்யுளுக்கும் கவிதைக்குமிடையே இருக்கிற வித்தியாசம் மிகநுட்பமானது. இந்தப் பிரச்னைக்குள் சென்றுவிடாதஅவதானத்தினாலேயே பாநாடக வகையென இதற்குப் பெயர் வைக்கப்பட்டதாம். கவிதையென்பது செய்யுளிலும் வசனத்திலும் அமையும் என்பார் எம்.ஏ.நுஃமான். செய்யுள் நடையிலமைந்த பாரதியின் ‘காணிநிலம் வேண்டும்’ ஒருகவிதையாகுமென்றும், அதுபோல் வசனநடையிலமைந்த ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டுவாத்து’ம் கவிதையேயாகுமென்றும் அவர் மேலும் விரித்துரைப்பார். இதைப்பற்றியெல்லாம் ‘புதிசு’விலும், ‘மல்லிகை’யிலும் வந்த இரண்டு கட்டுரைகள் நூலின் பின்னிணைப்பாக உள்ளன . இங்கேநாம் கவனிக்கவேண்டிய  அம்சம், பாநாடகவகையானது செய்யுள், வசனம் என்பவற்றைவிட உணர்வு வெளிப்பாட்டுக்கு நன்கமையப்பெற்று விளங்கியது என்பதே. ‘உச்சநிலையில் மனித ஆன்மா தன்னைச் செய்யுளிலேயே வெளிப்படுத்துகிறது’ என்றார் எலியட். அதனால்தான் பாநாடகவகையானது இங்கே நாடகவாசிரியர்களால் கையாளப்பட்டது. இதிலீடுபட்டவர்களும் கவிஞர்களாகவே இருந்தார்கள் என்பது முக்கியம்.

ஏறக்குறைய இரண்டுஆண்டுகளுக்கு முன்பு  மேடையாக்கம் பெற்று பல வெற்றிகளைச் சந்தித்த ‘ஒளவை’ நாடகத்தையும் இ;ந்தப் பின்னணியிலேயே வைத்துப் பார்க்கவேண்டும். ‘ஒளவை’யின் வெற்றிக்கு நவீன நாடக உத்திகளோடிணைந்த அ.மங்கையின் நெறியாள்கை ஒரு காரணமெனில், கவிஞர் இன்குலாப்பின் கவிதைச் செறிவுள்ள வசனங்களையும், உன்னதமான புனைவையும் இன்னொரு காரணமாகச் சொல்லவேண்டும்.
ஏறக்குறைய இவ்வகை வெற்றிகளைச் சிறிய அளவில் மகாகவியின் பாநாடகங்கள் ஏற்கனவே அடைந்திருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

இனி நாடகங்களைப் பார்க்கலாம்.

1.கோடை
1969ல் முதன் முதலாய் மேடையேறிய ‘கோடை’, 1970லேயே பதிப்புப் பெற்றுவிடுகிறது. பின்னால் இது தமிழகத்தில் எம்.ஏ. வகுப்புக்கு தமிழ் பாட நூலாகவும் வைக்கப்பட்டது.

‘கோடை’ ஒரு வகையில் குறியீட்டுப் பெயர்தான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலமே கோடைகாலமாய்க் குறிக்கப்பட்டிருக்கிறதென்பது முதல் வாசிப்பிலேயே வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. இந் நாடகத்தின் சிறப்பு, மேளகாரக் குடும்பமொன்றின் நாளாந்த இயங்குதளத்திலிருந்து சமூக நிலைமையைக் காட்டியமையேயாகும். ஒரு சமூகத்தின் வாழ்க்கைநிலை, அந்தஸ்துபற்றிய விபரங்கள் யாவும் அதில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. அதேவேளை அது காட்டும் கலைப் புறம் அற்புதமானது. நாடக முடிவின் முன்பாக ஒருகாட்சியில் சில சிறு நிகழ்வுகளினிடையே பின்னணியாய் ஒரு குரல் இவ்வாறு ஒலிக்கும்:  

 ‘நின்றிந்தக் கோயில் நிமிர்ந்துநெடுந்தூரம்,
பார்த்துப் பயன்கள் விளைக்கின்றகோபுரமும்,
வேர்த்துக் கலைஞர் விளைத்தமணிமண்டபமும்,
வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின்,
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம்,
ஆடும் அரங்கும் அறிந்துகலைஞர்கள்,
நாடிப் புகுந்துநயந்திடநீசோமனுடன்,
ஊதும் குழலில் உயிர் பெற்றுடல் புளகித்து,
ஆதிஅறையில் அமரும் கடவுளுமாய்,
என்றோஒருநாள் எழும்.’

இதுபோல் கவிதையின் வீறுடனானஅடிகள் பல்வேறிடங்களிலும் படிமங்களாய் விழுந்திருக்கின்றன. கோடை  பாநாடகத்தின் வெற்றிக்கு இதையும் ஒருகாரணமாகச் சொல்லவேண்டும்.

2. புதியதொரு வீடு

1971ல் முதல் மேடையேற்றம் கண்டு, 1981இல் முதல் பதிப்புப்பெற்ற நாடகம் இது. ஏனைய இரண்டு நாடகங்களையும்விட கவிதை வளம் மிக்க நாடகமாக இதைக் கூறமுடியும். சந்தங்கள் பல்வேறுவகையானவையும் சேர்ந்து ஓர் இசையரங்கையே ஏற்படுத்திவிடக் கூடியதாய் இது அமைவுபெற்றிருக்கிறது.
நாடகவாரம்பத்தில் ஒருபாடல் ஒலிக்கும். அந்தஅடிகள் இவை:

‘சிறுவண்டுமணல்மீதுபடம்ஒன்றுகீறும்
சிலவேளை இதைவந்துகடல்கொண்டுபோகும்.’

ஈழத் தமிழரின் வாழ்நிலைமைகள் அக்கால இனவாத அரசியல் பெருநெருப்பில் வெந்துபோனவிதத்தை இவை பூடகமாய்ச் சொல்வதாகக் கூறுவார் பல்வேறு நாடக நூல்களின் ஆசிரியரான இளையபத்மநாதன்.

நாடகத்தின் கருப்பொருளும் முற்போக்கானதுதான்.
பெருந்தூண்டில் போட  கடல்மேல் சென்ற  மாயன், ஊர் துடைத்துக் கடலடித்த அந்த இரவிலே காணாதுபோய்விடுகிறான். அவன் இறந்துவிட்டதாக எல்லோரும் கொண்டுவிடுகிறார்கள். தனியனாய்த் தவித்துப்போனஅவனது மனைவியையும் குழந்தையையும் வாஞ்சையோடு காப்பாற்ற முன்வருகிறான் மாயனின் தம்பியான  மாசிலன்.

வருடங்கள் கடக்கின்றன. ஊர் அவர்களது உறவை ஐயுறுகிறது. இந்தநேரத்தில் மறைக்காடர், மையுண்டநெடுங்கண்ணாத்தைபோன்ற சில நல்லவர்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். பலகாரணங்கள் சொல்லி மறுத்தும் பயனற்றுப்போக, கடைசியில் மயிலி இரண்டாம் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.

மயிலியும்,மாசிலனும் சேர்ந்துவாழ்கிறார்கள்.

மாசிலன் தொழில் நிமித்தமாய்க் கடலில் செல்லும்போதெல்லாம் மயிலி  கொள்ளும் அச்சம் அற்புதமான மொழியிலே நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ‘கறியோடு பொதிசோறு தருகின்றபோதும், கடல்மீதில் இவள்கொண்ட பயமொன்று காணும்’ என்று அந்த அடிகள்  வரும்.

அவர்களுக்குக் குழந்தையொன்றும் பிறந்துவிட்டிருக்கிற
நிலையில் ஒருநாள் மாயன் திரும்பிவருகிறான். மனைவிக்குக்  குழந்தை
பிறந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். பின் விபரமெல்லாம் தெரிந்து விதியை நொந்து மனம் சோருகிறான்.

மனவுளைச்சலோடு என்றாலும், அவர்களின் உறவை  அங்கீகரித்து மாயன் விலகுவதுதான் நாடகத்தின் உயிரோட்டமான பகுதி.

3. முற்றிற்று

இதுவரை அச்சேறாதிருந்து இந் நூலில் முதல் பதிப்புக் காணும் நாடகம் இது. மனித மரணத்தை இப் பாநாடகம் பேசுவதாகச் சொல்லலாம். பிறப்பிலிருந்து பல்வேறு நிலைகளிலும் பருவங்களிலும் சுழலாய்த் தொடரும் இயற்கையின் விந்தையொன்று தத்துவத் தளத்தில் இதில் விசாரணையாகிறது.  ‘உயிர் ஓய்வதற்று உயர்வொன்றினை நாடலே உண்மை’ என இச் சுழல் தத்துவம் காலனின் வாயால் வெளிவருகிறது.

காலனுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புற்றுநோயாளி நல்லையாவுக்குமிடையே நிகழும் சம்வாதம் அத்தனை நெளிவு சுழிவுகளுடன் நாடகத்தில் இடம்பெற்றிருக்கிறது. காலனுக்கும் கிழவிக்கும் நடக்கும் புதுமைப்பித்தன் காட்டிய சம்வாதம், நிச்சயமாக எவருக்கும் இச் சந்தர்ப்பத்திலே நினைவு வராமல் போகாது. ‘இன்று இச்சிறிய உடலை வதைத்துவிட்டு, வெற்றி என ஓர் விசர்ப் பேச்சு பேசுவாய், கொன்றுதிரிவாய் புறஉடலைஆதலினால், அன்றோ தொழிலும் அவதியின்று நீள்கிறது, சென்றுவாஅப்பா சிறிது’ என்று யமனையே திருப்பிஅனுப்புகிறார் நல்லையா ஒரு சந்தர்ப்பத்திலே. கடைசியில் வெல்வதென்னவோ யமன்தான். ஆயினும், ஒருவரையொருவர் சொல் சாதுர்யம் காட்டி வெல்லத் துடிப்பதை நாடகவாசிரியர் காட்டும் விதம் ரஸமாயிருக்கும்.

தின் என்றுசொல்லும் திகட்டாச் சிவலை நிறம், அல்ல உன்னைப்போல் எனினும் அதுநடக்கக், கொல்லும்படிஓர் அழகு கொழிக்கிறதே, இந்த வயதில் எவளும் அழகுதான்’ என்று அழகின் ஆராதனையோடு தொடங்குகிறது இப் பாநாடகம்.  ‘தின் என்று சொல்லும் திகட்டாச் சிவலை நிறம்’என்ற அடி, பாரதியை நினைவுபடுத்துகிறது. ‘தின்பதற்குமட்டுமல்ல, தின்னப்படுவதற்கும் உரிய பற்கள்’ என்று வசனகவிதையிலே ஓரிடத்தில் அவன் கூறுவான்.

இவ்வாறு ஒருகலகலப்போடு தொடங்கும் நாடகம் நல்லையாவின் மரணத்தின் சோகத்தோடு முடிவடைகிறது. இடைப்பட ஒரு  ஜனனமும் காட்டப்படும். ஜனன மரணமாக அன்றி, மரணத்தின் தொடர்ச்சியான ஜனனமாய் அதுகாட்சியாக்கப்படுகிறது. சிறிய நாடகமாதலால் ஏனைய இரு நாடகங்களையும்விட வேறான தளத்தில் கதைக் கருவை அமைத்து ஆசிரியர் ஒரு பயில்வினை மேற்கொண்டு பார்த்திருக்கிறாரோ என்றுதான் இந் நாடகத்தை  வாசிக்கும்போது நினைக்கத் தோன்றுகிறது. ஒரு புதுக் களத்தின் பயில்வுக்கான மொழிப் பாவனை இருந்தும், நாடகம் உணர்வுரீதியாக வெறுமை  தட்டுகிறது.  நல்லையா மரணம் அதிர்ச்சிதான். ஆயினும் நாடகத்தின் காட்சிப் பரிமாணமெங்கும் அது விகசிப்பாய்த் தோன்றுவதில்லை. இயக்க வழியில் வெளிப்படவேண்டிய பாத்திர நலன்கள் அவ்வப் பாத்திரங்களின் உரையாடலாலும்,தன்னிலை விளக்கம் செய்யும் அம்சங்களினாலும் வெளிப்பட்டு நாடகச் சுவையைப் பெருமளவு குன்றச்செய்து விடுகின்றன.

மகாகவியின் ஆக்கங்களைத் தொகுப்புகளாகக் கொண்டுவரும் முயற்சியில் முதல் தொகுதியாக இந்நூல் வெளிவருவதை
பதிப்பாசிரியரின் முன்னுரை தெரிவிக்கின்றது. ஏனைய தொகுப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கவைக்கிற தொகுப்பாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தயங்காது சொல்லலாம்.


00000


கண்ணகி.காம், 2001

Tuesday, September 02, 2014

தீனிப் போர் (நாடகப்பிரதி)

 தீனிப் போர் (நாடகப்பிரதி)
 இளையபத்மநாதன்


ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இப்பொழுது அக்கறையாகப் பேசப்படும் துறைகள் இரண்டு. ஒன்று ,நவீன நாடகங்கள். இரண்டு, புலம்பெயர் சினிமா. சமகால கலைச் சினிமா வரலாற்றில் பாரிய தாக்கங்களை புலம்பெயர் சினிமா ஏற்படுத்துமென்று பலமாக நம்பக்கூடியவகையில் புதிதுபுதிதாக ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். காட்சி, மொழி, இசையென்று இரண்டுக்குமே பொதுமையான அம்சங்கள் உள்ளபோதும், இவை வேறுவேறான கலைக் கட்டுமானமுடையவை. அரங்கில் நாடகத்தை முழுக் காட்சிப் படிமமாகத்தான் பார்வையாளனுக்குத் தரமுடியும். சினிமாவிலோ குளோஸ்-அப் முறையில் கவனத்தைக் குவிப்பிக்க வழி இருக்கிறது. ஆனாலும் வேறு உத்திகளில் கவனம் குவிக்கப்படவேண்டிய பகுதிகளில் கவனத்தைக் குவிக்கச் செய்ய நாடகத்தினாலும் முடியும். பொதுஅம்சங்களோடு இவை நவீனத்தை நோக்கி நகர்கின்றன. அது மகிழ்சியாகவிருக்கிறது.

இவ்வாறான தமிழ்க் கலைகளின் வளர்நிலைக் காலகட்டத்தில் நம் மரபு சார்ந்த கலைக்கூறுகள் மகாகவனிப்புப் பெற்றுவருகின்றன. அவை வீர்யமுடன் காப்பாற்றப்படவேண்டியவை ஆகும். இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியே ஒரு புத்தக மதிப்புரையில் இது குறித்து சற்று எல்லை விரிந்து பேசநேர்ந்திருக்கிறது.

‘ஏகலைவன்’ நாடகப் பிரதி மதிப்புரையில் நாடகப் பாடமொழி, நாடக அரங்கமொழி என்ற இரண்டுவகைகளைப்பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த இரண்டு வகைகளையும் தன்னகத்துக்கொண்டு வெளிவந்திருக்கிறது ‘தீனிப் போர்’ என்கிற இப்பிரதி. 37 பக்க நாடக பாடத்துக்கு ஆட்டப் பிரகாரம் எழுத 94 பக்கங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அரங்கமொழிப் பிரதியானது முற்றுமுழுதாகவும் மேடைக்கு உரியதுதான். இதிலுள்ள ஒரு விசேடம் என்னவெனில், அரங்கமொழியை ஒரு நாடக பாடத்துக்கு எத்தனை ஆசிரியர்களும் எழுதலாம் என்பதுதான். அது அத்தனைபேரின் பார்வைகளின் வேறுபாட்டோடும் தனித்தனியாய் நிற்கக்கூடியது.

‘தீனிப் போர்’ ஒரு குறியீட்டு நாடகம். மிருகங்களின் உரையாடலுக்கும் பிரலாபத்துக்கும்  நடப்புக்குமூடாக நாடகத்தின் அர்த்தங்கள் விரிந்து செல்கின்றன. 1991இல் அரங்காக்கம் பெற்ற  இந்நாடகம், நவம்பர் 2000இல் நூலாக்கம் பெற்றிருக்கிறது. பிரதியின் செழுமைக்கு இந்த நீண்ட இடைவெளி ஒரு காரணமென்று நம்புகிறேன்.

காட்டிலிருந்து வந்து நாட்டின் எல்லையில் இரைதேடிப் போன நரியை, அதே தீனி தேடிவந்த நாய் தடுக்கிறது. அதனால் சிங்கத்தின் தலைமையிலான காட்டுமிருகங்களுக்கும், மாட்டின் தலைமையிலான நாட்டுமிருகங்களுக்குமிடையே பிர ச்னை தோன்றுகிறது. அடங்கிப் போகலாமென்கிறது பூனை. ஏன் அடங்கிப் போகவேண்டும், நமக்கு கொம்புகள் எதற்கிருக்கின்றன என வீரம் பேசுகிறது ஆடு. யுத்தம் தீர்மானமாகிறது. யுத்தகளத்தில் தன் பிரிய பெண்குதிரையைக் கண்டு மனம் தளர்ந்து அர்ச்சுனவாதம் பேசுகிறது ஆண் குதிரை. அதற்கு சிங்கம், ‘பெண்டு பிள்ளையென்று ஏன் பார்க்கிறாய்? எமக்கு எதிரே நிற்பவர் எவரும் எதிரியே. யுத்தாய க்ருத சிஸ்சய உத்திஷ்ட’என்று உபதேசம் செய்து மனம் திருப்புகிறது.

யுத்தம் நடந்து இரண்டுபக்கமுமே களைத்துப் போன நிலையில் உணவுக்காக இடைவேளை விடப்படுகிறது. யுத்த நிறுத்தம்.
!
தீனி காரணமாக காட்டுமிருகம் - நாட்டுமிருகம் என இரண்டு பக்கங்களாய்ப் பிரிந்து போர் செய்த மிருகங்களுக்குள் பிரச்னை தோன்றுகிறது. சாப்பிடுகிறவேளையில் சைவ-அசைவமாகப் பிரிந்தும், போர் தொடங்கியதும் காட்டுமிருகம் - நாட்டுமிருகம் என்ற பிரிவுக்குள் அடங்கியும் போர்செய்வதென்று அப்பிரச்னை தீர்க்கப்படுகிறது.
மொத்தத்தில் தீனிப் போர் என்றும் ஓய்வதில்லை என்பதை உள்ளீடாகக்கொண்ட அர்த்தத்தோடு நாடகம் முடிகிறது.

காட்டிலே வேட்டை யாடக்
கரடி புலி சிங்கம்  யாவும்
போட்டிக்கு வருகுதை யோ
பொருத முடிய வில்லை.

‘தெய்வமே என்ன செய்வேனோ?

‘எத்தனை நாட்களாய்த் தான்
அவை தின்ற எச்சம் மிச்சம்
செத்த மிருகத் தோலில்
சீவியம் நான் தள்ளுவது’ 
என்ற நியாயத்தோடேயே நரி காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. நரி நாட்டுக்கு வருவது வன்முறையாய், அத்துமீறலாய்த் தெரியலாம். ஆனாலும் அதற்கான ஜீவிய நியாயமுண்டு.

நாக்கு மரத்துப் போய்விட்டதென்றும், ஆக்கினது அலுத்துப் போச்சு என்றும் சொல்லிக்கொண்டு நாய் வருகிறது நாட்டிலிருந்து. நாய்க்கு தீனி வேட்கை இருக்கிறதே தவிர பசியில்லை. காட்டின் எல்லையில் காணும் முயற் கூட்டத்துக்காக நாயும் நரியும் ஒன்றையொன்று எதிர்க்கின்றன. இவையிரண்டும் செய்யும் வாதம் மிக்க ரசமாக இருக்கும் பிரதியில்.

நாயும் நரியும் வேட்டை செய்யவிருப்பதைக் கண்டுகொண்டாலும் அதை முயல்களுக்கு உணர்த்திக் காப்பாற்றமுடியாத தன் பாத்திர நியாயத்தோடு கட்டியங்காரன் தவிப்பது நல்ல கற்பனை. ஜனநாயக தர்மம் என்ற பெயரில் சில அக்கிரமங்களைத் தடுக்கவியலாது பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே சிலநாடுகளால் முடிந்துவிடுவதை பாத்திரம் குறிப்பதாகக் கொள்ளலாம். பல கருதுகோள்கள் கட்டியெழுப்பப்பட நிறைந்த இடைவெளிகள் உள்ளன பிரதியில். அது முக்கியம்.

மரபுகள் தெரிந்துகொண்டே முன்னேற்றமும் தேவையான மீறலும் என்ற சரியான கோட்பாடு, நாடகவாக்கத்தில் முன்னெடுக்கப்பட இவ்வாறான பிரதிகளின் வரவு முக்கியமானதென்பதையும், ‘தீனிப் போர்’ இவ்வாறான பிரதிகளில் முதன்மையானதாய்த் திகழ்கிறதென்பதையும் சுட்டிக் கூற விரும்புகிறேன்.

000


வெகுமதி, 2001

ஏகலைவன் (நாடகப் பிரதி)

 ஏகலைவன் (நாடகப் பிரதி)
இளையபத்மநாதன்

இளையபத்மநாதனின் நான்கு நூல்களைப்பற்றியகலந்துரையாடல் அண்மையில் சென்னையில் நடந்தது. இவற்றில் மூன்று  தமிழில் எழுதப்பெற்ற  நாடகப் பிரதிகள். இன்னொன்று, ‘ஒருபயணத்தின் கதை’ என்கிற  பெர்தோல் பிரெக்டின் ஆட்டப் பிரகார  மொழிபெயர்ப்பு. இதை, ‘அடியொற்றிய  தழுவல்’ என்கிறார் ஆசிரியர்.

பொதுவில் நாடக நூல்களின் வரவு அருகியிருக்கிற தமிழ்ச் சூழலில், இந் நூல்களின் வரவு துல்லியமாய்க் கண்ணில்பட்டது. ‘கிப்டு’ வாசகர்களுக்காக வேண்டி ‘ஏகலைவனை’ப்பற்றிய  சுருக்கமான  மதிப்புரையை இக் கட்டுரைத் தொடர் அடக்குகிறது.

முதலில் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற நூல் ‘ஏகலைவன்’. அதன் அரங்காக்க வரலாறு இது: 1972ல் பிரதியாக்கம்பெற்ற புகழ்பெற்ற நாடகமான ‘கந்தன் கருணை’க்குப் பிறகு, மூலத்தில் எழுதப்பட்டு பிரதியாக்கம் பெறுகிற முதலாவது இளைய பத்மநாதனின் நூல் இது. 1978ல் இலங்கையில் அம்பலத்தாடிகள் குழு மூலமாய் முதன்முதலில் அரங்கேறிற்று. இரண்டாம் ஏற்றம் 1982லும், மூன்றாவது 1993லும் நிகழ்ந்தன. திறந்தவெளி நாடகக் கூத்தாகவே இது அப்போது  அரங்கேறியது. இதன் மிதிகளும் நடைகளும்கூட முந்திய பல கூத்தாட்டங்களிலிருந்தும் பெறப்பட்டவையே. இது 1993இல் அரங்காக்கம் பெற்றபோது நாடகக் கூத்து  படிநிலையிலிருந்து, கூத்துநாடகமாகப் பரிமாணம் பெற்றிருந்தது என்று சொல்லப்பட்டது. இது பிரதியில் நாடகவாசிரியர் காட்டிய மகாகவனத்தை எடுத்துக் காட்டுகிறது.
மூன்று அங்கங்களையுடைய இந்த நாடகம் இப்போது பிரதியாக வெளிவந்திருக்கிறது.

எந்தவொரு நாடகமும் நாடகப் பாடமொழி, நாடக அரங்கமொழி என்ற இரு கூறுகளுள் அடங்கும். நாடகப் பாடமொழி பெரும்பாலும் வாசிப்புப் பிரதிக்குரியது. நாடக அரங்கமொழிதான் அரங்காட்டத்தில் முதன்மை பெறுவது. இதன்படி பார்த்தால் ‘ஏகலைவன்’ வாசிப்புக்கான பிரதியே. ஒருநாடகப் பிரதி தன் வாசல்களைத் திறந்து பல ஆட்டப் பிரகாரங்களுக்கும் இடம்கொடுக்கும். அவ்வாறு அது கொடுக்கவேண்டும். அதனாலேயே ஆட்டப் பிரகாரமும் இணைந்த நாடகப் பிரதிகள் உருவாவதில்லை.

அது தொழில்துறை சார்ந்தவோ, ஆய்வுநெறி சார்ந்தவோவான தேவைக்குமட்டுமே உரியது எனச் சொல்லப்படுகிறது. அதனாலேயே அவ்வகைப் பிரதியாக்கமும்,  அப்பிரதிகளின் அச்சாக்கமும் நாடக உலகில்போல் தமிழ் நாடக உலகிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. ஒரு நாடகப் பாடமொழிப் பிரதிதான் வாசிப்புச் சாத்தியத்தை அதிகப்படுத்தும். இசை செறிந்த இதன் மொழிநடையும் சேர வாசிப்போன் அபார ஈடுபாடும், இன்பமும் பெறுகிறான் இதில்.

ஏகலைவன் கதை அண்மைக் காலமாய் மிகுந்த வாசிப்புக்குள்ளாகியிருக்கிறது. பல்வேறு விதமாக இது பதிவும் பெற்றிருக்கிறது. பிரளயனின் ‘உபகதை’ சென்ற மாசி மாதத்தில் சென்னையில் மேடையேறியது. 42 பேரின் அரிய உழைப்பில் அற்புதமாய் வந்திருந்தது நாடகம். அதன் முதல் கதை ஏகலைவனதுதான். ஏகலைவனின் அபார திறமையை அறிந்து கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்கிறார் துரோணர். ஏகலைவன் மறுக்கிறான். ‘நான் ஏன் துரோணரிடம் வில்வித்தை கற்கப் போகிறேன்? வில்லும் அம்பும் எங்களின் விரல்களின் நீட்சி’ என்கிறான். யுத்தத்தில் வெற்றிகொள்ளப்பட்டு அவன் கட்டைவிரல் கட்டாயமாகவே வெட்டப்படுகிறது நாடகத்தில்.

 ‘உபபாண்டவ’த்தில் இறுதிநேரத்தில் விருப்பமற்றுப் போகிறதானாலும் ஏகலைவன் தானாகவேதான் கட்டைவிரலைத் துண்டித்துக் காணிக்கையாகத் தருகிறான். கட்டைவிரல் பறக்கிறது. அதைஅம்புவிட்டு அடிக்கிறான் அர்ச்சுனன் மகிழ்ச்சியில். கட்டைவிரல் காணாமல் போகிறது. பாழில் மறைகிறது.

‘இரண்டாம் இடம்’என்ற எம்.டி.வாசுதேவன் நாயரின் உன்னதமான நாவலில் காட்டில் சம்பவிக்கும் ஒரு கலவரத்தில் ஏகலைவனின் கட்டைவிரல் சேதமாகிப் போகிறது. இப்படிகட்டைவிரல்பற்றி நவீன கதை பலவிதமாய்ப் பேசும்.

இந்தநாடகப் பிரதியில் ஏகலைவன் துரோணரின் காலடியில் தன் வலதுகையை வைத்து கோடரியால் கட்டைவிரலை தானே வெட்டுவதாக வரும். காணிக்கையாகவே கட்டைவிரல் போகிறது. புலம்புவது ஏகலைவனின் தந்தையாக இருக்கிறது. அவனது நண்பர்களும் துடிக்கின்றனர். ஆனால் ஏகலைவன்,  ஏற்கனவே கண்டமுரண்பாடுபோல் எதையும் காட்டுவதில்லை. இழந்ததுகூட எவ்வளவு அவசியமான அங்கம் என்பதே தெரியாதிருக்கிறான். அம்பெய்ய முயல்கிறபோது அவனால் முடியாதுபோகிறது. அப்போதுதான் ஓர் அதிர்ச்சியோடு அவன் துரோணரைப் பார்க்கிறான். அவர் தலை கவிழ்கிறார்.

‘தந்தையும் நண்பர்களும் ஆத்திரத்தோடு  எழுகிறார்கள். அரசர்கள் அனைவரும் பின்வாங்குகிறார்கள்.’ அப்படியே முடிகிறது பிரதி.

நாடகப் பிரதிமுழுக்க செறிந்திருக்கும் சமூகப் பிரக்ஞை பிரச்சாரமளவு விரியாமல், கலாநேர்த்தியைக் குலைக்காமல் வந்திருப்பது நாடகாசிரியரின் வெற்றியென்று சொல்லலாம். நாடகத்தில் வரும் உரைஞர்பற்றியும் குறிப்பிடவேண்டும். முன்பின்னாய் நிகழும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு உரைஞர்மூலம் நிறைவேற்றப்படுகிறது. மனத்து அகத் தோற்றங்களை விளக்கவரும் இடங்களின் மொழியாளுமை சிறப்பு.

‘ஏகலைவன் ’நாடகப் பிரதி தமிழ் நாடகவுலகுக்கு ஒரு நல்வரவு. இதன் அரங்காக்கம் நிச்சயம் அம்பலத்தாடிகளின் விசேட அம்சமாய் வீதி நாடகப் பாணியில் அமைந்து அதன் வகை நாடகங்களின் வளர்ச்சிக்கு பெறுமானமான பங்களிப்பைச் செய்திருக்கிறதென்று துணிந்து கூறலாம்.

000

வெகுமதி (பிரான்ஸ் ), ஆடி-ஆவணி 2001

எதிர்க் குரல்கள்

எதிர்க் குரல்கள்
-தேவகாந்தன்-

காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன். சாசுவத உண்மைகள்மீது தீவிரமாகஎழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்குத் தக தம் இருப்பை நெகிழ்வித்துக்கொண்டன என்பதுதான் அது.

அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவேசாத்;தியமாக இருந்திருக்கின்றன.
கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா.அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்டசமூக காலத்திலும் அவைவௌ;வேறு தளங்ளிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரேமாதிரியே இருந்திருக்கின்றன.அவ்வக்காலசமூகம் வேறுஎந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்காது. ஒருகாலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அதுதன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தைமட்டுமே சொல்லும். பின்நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப்படவேண்டும்.

மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள்  நகர்ந்திருக்கின்றன. சாசுவதஉண்மைகள் காலத்துக்குத் தகவாய் மாறிவந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள்,உயிர்த் தியாகங்கள்,ரத்தச் சொரிவுகள்,வாழ்வுஅர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதைசரித்திரம் சொல்லிநிற்கிறது.

இலக்கிய உலகின் கலகக் குரல்கள் எல்லாமேகூட இந்தநியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலேமுதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய் காலம் பதிவுசெய்துவைத்திருக்கிறது. மேலைநாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன.குறிப்பாகபிரான்சில் avant -guard களும், surrialistகளும் மலசலகூடங்களுக்குஅண்மையில் தம் படைப்பு,கருத்துமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மகாராட்டிரத்தில் 1969இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனைபெற முன்பு,பொதுமலசல கூடங்களுக்கு அருகே எதிர்ப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கிறேன்.

டந்த 04.12.2002இல் ஒருகாலைநேரசென்னைக் கடற்கரை -மயிலாப்பூர் பறக்கும் தடத்தில் இயங்கியரயிலில் ‘மூன்றாவதுஅறைநண்பனின் காதல் கதை’என்ற அஜயன் பாலாவின் சிறியசிறுகதைத் தொகுப்பொன்றுவெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும்,ஒரேதாளகதியில் இயங்கும் அதன் இயக்கத்தை அடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் அதன் லயபேதமும் ஒருசுவையைஏற்படுத்தியிருக்கலாமோ?

சிலமாதங்களுக்குமுன் ஓடும் ரயிலில் பயணிகளுக்குமத்தியில் ஒருகவிஞர் கூட்டம் கவியரங்கொன்றைநடத்தியிருக்கிறது. அதற்குமுன்னால் கோணங்கிபோன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களைரயில்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இதுபெரியஅதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடுசெய்யப்பட்டவிதம்தான் புதுமையானது. புத்தகவெளியீடு,ஓடும் ரயிலிலிருந்துவெளியிடுபவரால் வெளியேவீசியெறிவதன்;மூலம் அதுநடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக‘புதுப் புனல்’ஆசிரியர் சி.மோகன்,‘வெளி’ரங்கராஜன் போன்றோர்.

இன்னொருநிகழ்வு,பிரமிளின் கவிதைகள்பற்றியகருத்தரங்கு. இது மதுக்கடைஒன்றின் குடிக்குமிடத்தில்நடந்திருக்கிறது. குடிப்பதற்குவந்தபலரில் ஆச்சரியங்களைவிளைவித்துக்கொண்டு இந்தஅரங்குநடந்துமுடிந்தபின்னால் சண்டையும் பிடித்திருக்கிறார்கள். ‘பல்லோடுஉதடுபறந்துசிதறுண்டு,சில்லென்றுசெந்நீர் தெறித்து,நிலம் சிவந்து,மல்லொன்றுநேர்ந்து…’எனநம்மூர் மகாகவிபாடியதுஅப்போதுஎனக்குஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாருநிவேதிதா,விக்கிரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.

இவையெல்லாம் உள்கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒருசமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.

‘தலித் அழகியல் என்ற சொற்றொடரும்,தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரேஅர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது’ என்று வேறுஒரு கருத்தரங்குபற்றி எஸ்.சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப். 2003) கணையாழி இதழில் எழுதியிருக்கிறார்.

இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபுபோன்றவற்றுக்கு எதிரானகுரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாய்த்தான் இருக்கும்.

சுகனும், சோபாசக்தியும் தொகுத்த‘கறுப்பு’ நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30.01.2003இல் நடந்தது. தொகுப்புபற்றி ராசேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடைவந்து பேசினார். இந்த நண்பர் போனஆண்டு நிறப்பிரிகை நடத்திய சோபாசக்தியின் ‘கொரில்லா’நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரைநிகழ்ததியிருந்தார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே  இருப்பது?

இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள். சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.

(இது நான் சென்னையிலிருந்தபோதுபதிவுகள்.காம் இணையத்துக்காக 2003இல் எழுதியது.)

இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும்

இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும்


ஒருகனவுஎனஅதுசொல்லப்பட்டது. ஒன்பதுமாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறவேளையில் சொல்லப்படுகிறது,அதன் பெயர் யுத்தநிறுத்தமென்று.

யுத்தநிறுத்தம் நீடிப்பது,சமாதனப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதுயாவும் சம்பந்தப்பட்ட இரண்டுதனப்பினரதும் பொறுமை,சகிப்புத் தன்மை,நல்லெண்ணங்களின் நிலைப்பாடுபோன்றவற்றிலேயேதங்கியிருக்கின்றது. ஒருதரப்போ, இரு தரப்புகளுமோ இதில் ஒன்றையோ பலவற்றையோ
கைவிடுகிற நிலைமையில்தான் பிரச்னை மறுஉருவெடுக்கிறது. நம் நம்பிக்கையின் மூலம் சிதறுகிறவிதம் இதுதான். இலங்கையில் பலகாலங்களிலும் ஏற்பட்டயுத்தநிறுத்தங்கள்,சமரசமுயற்சிகள் யாவும் இவ்வளவுநிதானமாகவும் நீண்டகாலமாகவும் முன்னெடுக்கப்பட்டதில்லைஎன்பதைவரலாறுஅழுத்தமாகச் சொல்லிநிற்கிறது.

இந்தயுத்தநிறுத்தம் குலைவுறுவதற்கான சாத்தியங்கள் அரிது. சமாதானமுயற்சிகள் மிகவலுவான தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அதற்கான ஒருகாரணமாகச் சொல்லலாம். புலிகள் அரசியல்ரீதியாக இனப் பிரச்னைக்கான தீர்வைமுன்னெடுக்க இசைந்திருப்பது இன்னொருகாரணம். நோர்வேயின் சமரசமுயற்சிகளில் அமெரிக்காவினதுபோன்ற சட்டம்பித்தனம் இல்லாமல் ஒருதேவதூதத் தனம் இருந்ததை மூன்றாவதுகாரணமாகக் கொள்ளலாம். நான்காவதாயும்ஒன்றுண்டு. இரு இன மக்களதும் களைப்பு.உயிராய்,உடைமையாய்,வாழவேண்டியகாலங்களாய் அவர்கள் இழந்து இழந்துகளைத்துப்போனார்கள். ஐந்துலட்சம் தமிழர் புலம்பெயர்ந்தனர்,தம் மண்ணைவிட்டும் தம் பிரதேசங்களைவிட்டும். தம் பாரம்பரியபிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தசோகம் எதற்கும் குறையாதது.

இரண்டொருமாதங்களின் முன் கிழக்கிலங்கையில் நடைபெற்றசிலஅசம்பாவிதமானசம்பவங்கள் சமாதானம் விரும்பிகளின் மனத்தில் ஓர் அச்சத்தைவிளைவித்தன. விவேகமானநடவடிக்கைகளால் அவ்வச்சம் விலகியதோடு, இனிமேலும் இவ்வண்ணம் நிகழாதபடிஎடுக்கப்பட்டதீர்க்கமானநடவடிக்கைகள் இனிநடப்பதுநல்லதாகவேநடக்குமென்றநம்பிக்கையை ஸ்தாபிதமாக்கியுள்ளன.

மிகத் தெளிவானதும் சீரானதுமானநிலைமைகள் இலங்கைஅரசியற் களத்தில் அமைந்துவிட்டனஎனநான் சொல்லமாட்டேன். இன்னும் நிர்வாகஅதிகாரமுள்ளவரான ஜனாதிபதி,பல்வேறுவி~யங்களில் பிரதமமந்திரியுடன் முரணிக்கொள்வதெல்;லாம் நல் அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் அவர் சிறீலங்காசுதந்திரக் கட்சியினராய் இருப்பதுதமிழ் மக்கள் மனத்;;தில் கலக்கத்தையேஉருவாக்கியிருக்கிறதென்பதுநிஜம். அவர் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவெகுகாலமாகிவிட்டது.
தனிச் சிங்களசட்டநிறைவேற்றத்திலிருந்து, இலங்கையை சோசலிசகுடியரசாக்கபுதியஅரசியல் யாப்பைக் கொண்டுவந்து,ஏற்கனவேசிறுபான்மைமக்களின் மொழிமதமற்றும் உரிமைகளுக்குதக்கஅரணாய் இருந்த 29வது பிரிவின் 2ஆம் சரத்தைநீக்கியும்,அதற்கிணையானஎந்தசரத்தைபுதியயாப்பில் சேர்க்காமலும்விட்டதுஈறாகதமிழ் மக்கள்மீதுபாரிய இன்னல்களைச் சுமத்தியகட்சிஅது. குடும்பபரியந்தமாய் முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிறகுஅவரதுமனைவிசிறிமாவோ பண்டாரநாயக்க என்று இக் கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறபோது, அவர்களின் மகளானசந்திரிகாகுமாரணதுங்கமீது சந்தேகப்படாமல் இருந்துவிடமுடியாது. உண்மையில் இது ஒருபாமரத்தனமானதொடர்புபடுத்துகையே. ஆனாலும் சந்திரிகாகுமாரணதுங்கவின் நடத்தைகளும் கருத்துப் பிரயோகங்களும் அதைப் பொய்ப்பிப்பனவாக இல்லை. தானும் தனதுபங்குக்கு எந்தத் தீமையையாவது செய்தேஆகவேண்டுமென்று கங்கணங் கட்டியிருப்பதாகவேதோன்றுகிறது.

அதேவேளை,ஐக்கியதேசியக் கட்சியும் தமிழரின் பாரம்பரியபிரதேசங்களையும்,தமிழ் மக்களதுமற்றும் உரிமைகளையும் கௌரவப்படுத்தியகட்சியல்ல. பண்டா-செல்வாஒப்பந்தத்தைக் கிழித்தெறியவைத்தகட்சிஅது. அதுபோல  இடதுசாரிக்கட்சிகளும் தமிழ் மக்களின் நம்பகத் தன்மையை இழந்துபோய் வெகுகாலம். 1966ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியவேலைநிறுத்தத்தைவெற்றியடையவைத்ததின்மூலம் டட்லி-செல்வாஒப்பந்தத்தைநிறைவேறாதுதடுத்து இச் சாதனையைஅவர்கள் அடைந்தார்கள். வலதுசாரிகளின் பேரினவாத, பெருமதவாதகொள்கைகளுக்காய் நியாயங்களை எரித்தவர்கள் அவர்கள்.
நான் பலசமயங்களிலும் நினைத்திருக்கிறேன்,

1) பண்டா-செல்வாஒப்பந்தம் கிழித்தெறியப்படாமல் இருந்திருந்தால்..
2) டட்லி-செல்வாஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால்…
3) தமிழரின் சுயநிர்ணயஉரிமையைஅங்கீகரித்து,தனித்துவமானஒரு கூட்டரசுஎன்றகொள்கையிலிருந்து இடதுசாரிகள் பின்னடையாதிருந்தால்…

எல்லாம் நல்லதாகநடந்திருக்கலாமோவென்று.

அவ்வாறு நடக்கவில்லையென்பது எவ்வளவு பெரிய சோகம்!
திடீரென எல்லாம் ஓர் ஒழுங்கில்போல் இப்போது வந்தமைந்திருக்கின்றன. உண்மையில் அது திடீரென்று இல்லைத்தான். எத்தனையோ சக்திகள் எவ்வளவோ காலமாய் இதற்காக கடுமையாய் உழைத்தன என்பது நாம் அறியாததல்ல. ஆனாலும் வேறுவிதமாகவே இது சொல்லப்பட்டது.

2001 செப். 11 அகிலஉலகமும் பயங்கரவாதத்துக்கெதிராகக் குரல்கொடுத்த காலப் புள்ளி. பயங்கரவாதம் தன் அழிச்சாட்டியத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதையே உலக வர்த்தகமையக் கட்டிடங்களின் தகர்ப்பு தெரிவித்தது. ஆப்பானித்தான் மீதான ஐக்கியஅமெரிக்காவின் போரும் இந்தபயங்கரவாதச் செயலுக்கும் ஏறக்குறையச் சமமானதுதான். இவ்வாறான சர்வதேசநிலைமைகளே தமிழீழவிடுதலைப் புலிகளை ஒரு சமாதானப் பேச்சுவார்தைக்கான நிலைப்பாட்டை எடுக்கவைத்ததென்று ஒருபேச்சு இருந்தது. அதுஅப்படியல்ல என்றே இப்போதுஎனக்குத் தோன்றுகிறது. ஆனையிறவுமுகாம் வீழ்ச்சியும்,அதனால் ராணுவம் வடபகுதியில் அடைந்த இக்கட்டானநிலைமைகளுமே இதைச் சாதித்தன என்பது ஒரு சரியான கணிப்பென்றே தோன்றுகிறது.

பேச்சுவார்த்தையின் முதற்கட்டம் துவங்கும் முன்னரே, புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற குரல்கள் உயர்மட்டங்களிலிருந்து எழுந்தமையை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும். அப்போது சமாதான முயற்சியின் பின்னணி புரியும்.

இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியா வரும் இலங்கைத் தமிழ் மக்களுடன் ஓடியோடிப் போய்க் கதைத்து, இலங்கைஅரசியல் நிலைமையைத் துல்லியமாய்த் தெரிந்துவிட முடியாது. ஐபிசி’யும்,பிபிசி’யும் தரும் தகவல்கள்,பேட்டிகள்,அரசியல் விமர்சனங்கள் மூலமும்கூட அது சரிவரத் தெரியாமல்போகலாம். அவர்களுக்கென்றும்  ஒரு நோக்கு உண்டு. அவர்களது நோக்கில் பார்த்து,அவர்களது மொழியில் சொல்பவை எப்படியும் தரையில் விழுந்த மழைநீரின் தன்மை மாறுவதுபோலத்தான் ஆக முடியும். ஆனாலும் ஜனநாயக, பத்திரிகா தர்மங்களில் அவை பெருமளவு மாறுபட்டதாய்ப்  புகார்கள் இல்லை.

இவ்வளவற்றையும்கொண்டு நாட்டு நிலைமையைப்பற்றிச் சொல்லப் புகுகையில், சுயவிருப்பத்தின்; கருத்து தானாகவே செறிந்துவிடும் அபாயமும் நேரலாம். இச் சிரமங்களோடேயே இக் கட்டுரைஉருவாகிறது என்பதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். இன்னுமொன்று: இவை என் நோக்கிலும்,என் மொழியிலும் வருபவைகூட.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குமக்கள் கருத்தறியும் ஒருவாக்கெடுப்பை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை நீதித்துறை தடுத்த கணத்தில் ஒருபெரிய சோகம் அனைவர் மனத்திலும் வந்து கவிந்தது. அரசாங்கத்தைக் கலைக்கக்கூடிய தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்தஅரசாங்கம் சட்டப்படி தேவையான முதிர்நிலையை அடைந்துவிட்டதென காலம் கணித்துச் சொல்லப்பட்டபோது, இன்னொரு சோகம் கவிந்தது. நம்பிக்கைகளின் மரணம் வெகுதூரத்தில் இல்லையோ என மனம் கூவியது. இவற்றைமீறியும் இரண்டாவது கட்டபேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடந்துமுடிந்திருக்கிறது. இயங்குவிதிகள்  குறித்து புலிகள்-அரசாங்கம்-கண்காணிப்புக் குழு போன்றவை அண்மையில் முகமாலையில் சந்தித்து நடத்தியபேச்சுவார்த்தைகள் யாவும் சமாதானத்தில் மேலும் நம்;பிக்கையடையச் செய்திருக்கின்றன.

இத்தனைக்கும் மேலாய் இறைமையுள்ள ஒரு இலங்கையை ஒப்புக்கொண்டதின்மூலம் புலிகள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடச் சம்மதித்திருப்பதும் நடந்திருக்கிறது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையில் அது சகல நம்பிக்கைகளினதும் சிகரம்.

17டிசம்பர்2002 ‘தினத்தந்தி’ நாளிதழில் ஒருபுகைப்படம் பிரசுரமாகியிருந்தது. ஒருபெண் போராளி கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தன் குடும்பத்தினரைச் சந்திக்கும் அழகிய காட்சியது. பெண் போராளி, வேறொரு பெண், ஒரு ழந்தை ஆகிய மூவருமே அப் புகைப்படத்தில் இருந்தனர். அம் மூவரின் கண்களில் விரிந்திருந்த நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக சுவாசிப்பதையே இயல்பிலும் இலகுவிலும் செய்வதுபோன்ற எதுவித அழுத்தமும் அற்ற ஸ்திதி யாவும் என் கண்களைக் கலங்கச் செய்துவிட்டன. நினைக்கும்தோறும் இன்னும் இதயம் கலங்கிக்கொண்டிருக்கிறது. இது இந்த மூவரின் கனவுமட்டுமில்லை, நம் கனவும். ஓன்றேகால் கோடியின் கனவு. இந்த மகிழ்ச்சி ,நிம்மதி ,நம்பிக்கை எதுவுமே எக் காரணம்கொண்டும் அழிந்துவிடக் கூடாது.

இறை தூதர்களிலேயே நம்பிக்கை வைக்கவேண்டியவர்களாயுள்ளோம் நாம்.
கீதை சொன்னது சிறிது மாறி இங்கே:

‘நடந்தது நல்லதாக நடந்திருக்கலாம்
நடக்கிறது நல்லதாகவே நடக்கிறது
நடப்பதும் நல்;லதாகவே நடக்கும்.’
000

(2002ஆம் ஆண்டளவில் பதிவுகள்.காம்’இல் இது வெளிவந்தது.)

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...