Monday, January 19, 2015

கலாபன் கதை (2ம் பாகம்) 1
‘நாற்பது டொலரும்  மார்க்வெய்ஸ் கதையும் ’சமுத்திரம் எழுப்பிய நெடுந் திரைகளில் எழுந்து விழுந்தும், பிளந்து திணறியும் சரக்கேற்றியிராத எம்.வி. சீ பேர்ட் கப்பல், ஆகக் கூடுதலான அலைகழிப்புடன் புயல் வியாபித்திருந்த கடல்பரப்பைக் கடந்து பசுபிக்கின் கீழக்கரையை ஒரு மாலை இருள் கவிகிற நேரத்தில் சென்று சேர்ந்தது.

கலாபன் வேலைசெய்யும் நான்காவது கப்பல் அது. கப்பலின் தலைமையலுவலகம் இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் இருந்தாலும், கப்பல் பதிவாகியிருந்த இடம் பனாமா தேசம். ரோஸ{ம் நீலமும் வெள்ளையுமான நிறங்கள் கொண்ட அதன் கொடி, நைந்துபோய் பின் அணியத்தில் படபடத்தபடி வெறுமனே பனாமா தேசத்தில் பதிவுசெய்யப்பட்ட கப்பலாய் இருக்கலாம் என்ற ஊகத்துக்கு மட்டும் இடம்கொடுத்து பறந்து கொண்டிருந்தது.

ஆறு மணியளவில் நங்கூரமிடப்பட்டு குiniளா என்ற அறிவிப்பு சுக்கான் அறையிலிருந்து கிடைத்ததும், இரண்டாவது என்ஜினியருடன் மேலே வந்த கலாபன், மெஸ்ஸில் காபி ஒன்றினை அருந்திவிட்டு டெக்கின் பின் பகுதிக்கு வந்தான்.

காற்று பலமாகவே வீசிக்கொண்டு இருந்திருப்பினும் அது கடந்து வந்த பாதையிலிருந்த கடூரத்தில் பத்து வீதமாய்க்கூட அப்போது இருக்கவில்லை.
கலாபன் சிகரெட் புகைத்தான். கப்பலின் பின் அணியம் காற்று வளத்தில் தூரவிருந்த கொலம்பியா நாட்டின் புவனவெந்துரா துறைமுக நகரைநோக்கி நின்றுகொண்டிருந்தது.

கரையெங்கும் வெள்ளை வெளிச்சப் புள்ளிகள். சில சிவப்பு வெளிச்சங்களும் அவ்வப்போது தெரிந்தன. அவை நீண்ட நாள் கடல் பயணத்திலிருந்துவிட்டு நகரைச் சமீபிக்கும் ஒரு கடலோடிக்கு மிகுந்த கிளுகிளுப்பை ஊட்டக்கூடியவை. ஆயினும் அதை விஞ்சிய உணர்வின் தெறிப்புகளில் அவனது நினைப்பு வேறு திசைக்கு நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. 
அந்த நிலைமை நிஜமென்று நினைக்கவே ஒரு அமானு~;யத்தின் தரிசன பரவசம் மனத்தில் திகைந்தெழுந்தது கலாபனுக்கு.

ஏறக்குறைய மூன்று மூன்றரை வரு~ங்களாக கப்பலில் வேலை செய்கிறான் அவன். அவனே கதறி தூக்கத்திலிருந்து எழும்பும்படிக்கு முதல்நாள் காலையில் அலையொன்றில் ஏறி விழுந்த கப்பல், நிமிர முடியாமல் முன்னணியத்தில் நீர் கோலிக்கொண்டு இருந்துவிட்டது. பொருட்கள் விழுந்து உருண்டும், நொருங்கியுமான சத்தங்கள் இன்னும் அச்சத்தை அதிகரிப்பித்தன. ‘முருகா…கடவுளே…’ என ஏதோவொன்;று அவன் கதறலில் வெளிவந்திருந்ததாய்ப் பட்டது.

காலைச் சூரியன் உறைக்கத்தான் எறித்துக்கொண்டிருந்தது. கதிர்கள் உறைக்குமாப்போல்தான் வீசிக்கொண்டிருந்தன. இருந்தும் ஒரு முழு நிமிடத்துக்கு கப்பல் மொத்தமுமாய் சமுத்திரத்துள் ஆழும் ஸ்திதியில் நின்றதில், அவனுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. பின்னே ப்ரொபெலர் எனப்படுகிற மூன்று தகடுகள்கொண்ட கப்பலின் முன்உந்தி நீர் மட்டத்துக்கு மேலே நின்று தண்ணீரைத் தீற்றியபடி உதறியதில் கப்பலேகூட நடுங்கியது.

தீ பிடித்தால்கூட அது எரிந்து அபாய நிலையை எட்ட சிலவேளைகளில் மணத்தியால அவகாசம் ஏற்படும் தப்பித்துக்கொள்ள. ஆனால் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க இயற்கைதான் உதவுகரம் நீட்டியாகவேண்டும் என்றான நிலைமைதான் அப்போது. ஒரு அலைப் பாளம் அமிழ்ந்து வந்து உயர்ந்த அலைகளில் மோதி மிதக்காவிட்டால் கப்பல் அப்படியே இருபத்தாறு பேர்களுடனும் மூழ்கிச் சமாதியாகுவதைத் தடுத்திருக்கவே முடியாது. ஆனால் அந்த அபூர்வமான சம்பவம் நிஜத்தில் நடந்தது.

ஒரு அலை அமுங்கிய வீறுடன் வந்து அந்த இடத்து அலைகளில் மோதி மிதக்க, கப்பலின் முன்னணியம் மேழுந்தது. அதேவேளை கீழே பின்னணியம் பதிந்து கப்பலின் ப்ரொபெலர் நீரை உந்தியதும் கப்பல்; நகர்ந்து அந்த நீர்த் திரள் சுழலிலிருந்து விடுபட்டது.

துறைமுகம் சமீபித்து ‘ஸ்ராண்ட் பை’ அறிவிப்பு வந்ததும் கீழே வந்த இரண்டாவது என்ஜினியர் சொன்னபிறகுதான், அது வெறும் கப்பலாக வந்து சமுத்திரத்தில் சதுராட்டம் ஆடி தின்ன, குடிக்க, தூங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தமையை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்த கலாபன் உண்மை அறிந்தான். வெறும் கப்பலாக வந்திருந்ததே அந்த சுழலில் அது ஆழ்ந்துபோகாது தப்பித்ததற்கான சாத்தியத்தை உருவாக்கியிருந்ததாம். முதல்நாளைய சம்பவம்பற்றி கப்ரின் தெரிவித்ததை இரண்டாவது என்ஜினியர் சொன்ன பிறகு, ஒரு மாத வசதியீனங்கள் மேலே பொருளாய்ப்படவில்லை அவனுக்கு.

மறுநாள் காலை அல்லது மதியமளவில் கப்பல் துறைமுகத்துள் செல்லும் என்ற தகவல் மேல் தளத்திலுள்ள தன் கபினுக்குச் செல்லும் வழியில் கலாபனுக்கு றேடியோ அலுவலரிடமிருந்து கிடைத்தது. அன்றைய இரவை நன்கு உறங்கி அவன் கழிக்கவேண்டும். நாளைய  இரவு முழுதுமாய் அவனுக்குத் தேவை.

மறுநாள் எதிர்பார்த்திருந்தபடி காலையிலோ மதியத்திலோகூட அல்ல, மாலையில்தான் கப்பல் துறைமுகத்துள் பிரவேசித்தது. மேடையில் கப்பல் கட்டிமுடிக்க ஐந்து மணியாகிவிட்டது.

எந்திர தளத்திலிருந்து கலாபன் மேலே வந்து குளித்துவிட்டு வர, சிவநேசன் வெளியே செல்லத் தயாராக நின்றிருந்தான். ‘நீ போறதெண்டால் போ, நான் வர கொஞ்ச நேரஞ்செல்லும்’ என்றுவிட்டு கலாபன் கடிதங்களை எதிர்பார்த்து கப்பலின் மேலதிகாரியின் அறைக்குச் சென்றான்.

பணமும் தேவையாகவிருந்தது. அதே நேரத்தில் ஒரு மாத இடைவெளியில் வரும் கடிதங்களும் அவனுக்கு முக்கியம்.

கடிதமெதுவும் சஞ்சலம்கொண்ட செய்திகளைத் தாங்கி வந்திருக்கவில்லை. அவனது நண்பன் சிவபாலன்மட்டும் நீண்டநாட்களாக அவன் கடிதமெழுதவில்லையெனக் குறைப்பட்டிருந்தான்.

மூன்று நாட்கள் கப்பல் துறைமுகத்தில் நிற்கவிருந்தது. எப்படியும் வீட்டுக்கு எழுதுகிறபோதே சிவபாலனுக்கும் எழுதிவிடவேண்டுமென நிச்சயித்துக்கொண்டான் கலாபன்.

கொலம்பியா வருவதற்கு முன்னர் கப்பல் சிங்கப்பூரில் நின்றிருந்தது. அங்கேயெல்லாம் இரவுச் சந்தோ~ங்களை அனுபவிக்க வெளிக்கிட்டால், மாதத்தின் பாதிச் சம்பளத்தை, சிலவேளை அதைவிட அதிகமாகவேகூட,  செலவழிக்க நேரலாம் என்பது கலாபனுக்கு அனுபவத்ததில் தெரிந்த சங்கதி. அவன் அந்த ஆண்டிலாவது கட்டத் தொடங்கியிருக்கும் தன் வீட்டை முடித்தாகவேண்டும்.

நீண்ட காலமாய் உள்ளிருந்து கொழுத்த தசையுணர்வு உடனேயே புறப்பட்டு ஓடத்தான் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனாலும் கொலம்பியாவுக்கு அவனது வருகை முதல்முறையானதால் அந்த நாட்டுக்காரர் யாரையாவது சந்தித்து புதிய நகரின் ‘இடம்வலம்’களை விசாரித்து மட்டிடாமல் செல்ல கலாபன் விரும்பவில்லை.

வெள்ளையர் நாடுகளில், அந்தந்த இடங்களுக்கேற்ற பொய்யும், திருட்டும், ஏமாற்றும் இருப்பினும், சட்ட ஒழுங்கு இறுக்கமாக இருக்கிறவகையில் அங்கெல்லாம் பெரிதாக ஒரு இரவு விடுதிபற்றி பயங்கொள்ள வேண்டியதில்லை. தென்னமெரிக்க நாடுகளின் சட்டவொழுங்கின் இறுக்கம் அவன் சந்தேகத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதனால் நம்பிக்கையான தகவல்கள் எடுக்க பொருத்தமான யாரையாவது சந்திக்கும்வரை அவன் பொறுத்திருக்கத் தீர்மானித்தான்.

கடைசியில் ஒரு துறைமுக ஊழியரிடமே போக்குவரத்து, கடைத் தெரு, பார் வசதிகள்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்துகொண்டு செல்ல ஏழு மணியாகிவிட்டது.

பஸ்ஸிலேகூட செல்லமுடியுமென்று சொல்லியிருந்தார் அந்த ஊழியர். ஆனாலும்; ராக்ஸியிலேயே நகர மத்தி சென்றான் அவன்.
பெரிய கடைவீதியல்ல அது. இரண்டு வீதிகள் குறுக்காய் வெட்டிய சந்தியில் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கைந்து கடைகள், இரண்டு மூன்று றெஸ்ரோறன்ற்கள், இரண்டொரு பார்கள். வீதியே ஒருவகை மந்தத்தனத்துடன்தான் இருந்தது.

‘வந்தன மேரா’ என்றொரு ஸ்பானிய நடனப் பாடல் பலமாக இசைத்துக்கொண்டிருந்த ஒரு பாருக்குள் சென்றான். வெளியிலிருந்த பச்சை, நீலம், சிவப்பு நிறச் சிமிட்டு விளக்குகளுக்கும், ஒலித்துக்கொண்டிருந்த பலமான இசைக்கும் பொருத்தமற்றதாய் வெறிச்சோடிக் கிடந்தது அது. சிவநேசனும் அங்கேதான் இருந்து சலித்துக்கொண்டிருந்தான். சென்று அவனெதிரில் அமர்ந்தான்.

சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மேலும் அங்கேயிருப்பதில் பிரயோசனமில்லையென, இருவரும் வேறு வீதிகளில் இருக்;கக்கூடிய ‘நல்ல’ பார் எதையாவது தேடிச் செல்லத் தீர்மானித்தனர்.

யாரையேனும் கேட்டு அறியலாமேயென சிவநேசன் அபிப்பிராயம் சொன்னான். பார் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராக்ஸி ட்ரைவரிடம் சென்று விசாரித்தான், அதற்கு ராக்ஸி டரைவர், “மாலை இன்னும் இளமையாகவே இருக்கிறது. பெரும்பாலும் வாழைத் தோட்டக் கூலிகள் குடியிருக்கிற பகுதி இது. இன்று வெள்ளிக்கிழமையானதால் பத்து மணியளவில்தான் இங்கே கூட்டம் சேரும். கேளிக்கைகளைப் பொறுத்தவரை பார்த்தால் இந்த ரவுணிலேயே சிறந்த இடம் எந்த நாளிலும் இதுதான்” என்றான்.
சரி, வீதிகளில் சுற்றி சிறிதுநேரத்தைப் போக்காட்டிவிட்டு திரும்பி வரலாமென இருவரும் புறப்பட்டார்கள்.

அவர்களையே கவனித்தபடி வீதியில் வந்துகொண்டிருந்த ஒரு முதியவர் ஒரு கடைக்குள்; செல்ல அவர்கள் நின்றபோது அவர்களை நெருங்கிவந்து பேச்சுக் கொடுத்தார்.

மிகவும் இனிய சுபாவமுடையவராய்த் தோன்றியதால் மட்டுமன்றி, அவர்களுக்கும் நேரத்தைக் கடத்துவதே முதன்மையான நோக்கமாக இருந்ததில் அவர் பேச்சை நின்று சுவாரஸ்யமாகவே கேட்டார்கள். மிகவும் பவ்யமாக ஒரு சிகரெட்டை அவர்களிடம் கேட்டுவாங்கி புகைத்துக்கொண்டு கொலம்பியாவின் வரலாறு, பூகோளம் எல்லாவற்றையுமே சொல்லத் தொடங்கிவிட்டார் அவர்.

அவற்றுள் கலாபனுக்கு முக்கியமாகப் பட்டது, அவர் அந்த புவனவெந்துரா நகரைப்பற்றிச் சொல்லியவைதான்.

முதியவர் சிறிதுநேரத்தில் விடைபெற்றுச் சென்றார்.

அவர் விட்டுச்சென்ற சரித்திரம் மனத்துள்ளிருந்து ஒரு பரவசத்தைச் செய்துகொண்டிருந்தது கலாபனுக்கு. சிவநேசனும் வீதியில் நடந்துகொண்டிருந்த பொழுதில் பெரிதாக வேறு வி~யங்களைப் பேசாததில் அவனும் தன்போலவே அச் சரித்திரத்தின் பரவசத்தில் அமிழ்ந்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டான் அவன்.

காடுகளும் மலைகளும் கொண்ட பெருநாடு கொலம்பியா. வடகிழக்கே வெனிசுவேலாவையும், தென்மேற்கே எக்குவாடோரையும் கொலம்;பியாவினூடாக இணைத்துக்கொண்டு கிடந்தது அமெரிக்க கண்டத்திலேயே மிகப் பெரியதான அன்டீஸ் மலைத்தொடர்.

 கொலம்பியாவின் பசுபிக் சமுத்திரப் பகுதியில் புவனவெந்துரா பெரிய துறைமுகமேயெனினும், அதன் நகர் ஜனப்பெருக்கமற்று இருப்பதற்கு அம்மலைத்தொடரே காரணமாய் ஒரு மதில்போல் உயர்ந்தெழுந்து நின்றிருந்தது. புவனவெந்துராவும் சதுப்பு நிலங்களும், காடுகளும் கொண்டுதான் கிடந்தது. அதன் மக்களின் வாழ்நிலை விவசாயத்திலும், வாழைத் தோட்ட உழைப்பிலுமாய் ஏழ்மையிலுள்ளதுதான்.

ஆறு ஏழு மணியாகிறது வாழைத் தோட்டங்களில் உள்ளவர்களின் வேலை முடிய. எட்டு மணியாவது ஆகிறது அவர்கள் வீடு சென்றுசேர. ஒன்பது மணிக்குத்தான் இரவுணவு தயாரிக்கிறார்கள். பத்து மணியாகிறது அவர்கள் வாரத்தில் ஓரிரு நாள்களை சல்லாபமாகக் கழிக்கவென பார் ஏதாவதற்கு வருகிறபோது.

கொலம்பியாவின் கலாச்சாரம் அமெரிக்காவினது போன்றதல்ல. அது இசையை வெகுவாக உள்வாங்கிய கலாச்சாரமுடையது. இசையும் நடனமும் தவிர்க்கமுடியா அம்சங்கள் கொலம்பியா தேசத்து மக்களின் வாழ்வியலில். அது நிறைந்த கதைசொல்லிகளையும், இசை நடனக் கலைஞர்களையும் கொண்டதுகூட.

பெண்களும் தொழிலாளராகவும், விவசாயக் கூலிகளாகவும் இருக்கிறவகையில் ஒருவகையான சுயாதீனம் அவர்களுக்கிருந்தது. இந்தவகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சமூக நிலையை ஓரளவு ஒத்திருப்பினும், காமம் இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் இல்லை. அது விற்பனைக்காயும் இருக்கவில்லை. இங்கே கதையும், கவிதையும், காதலும், காமமும் எங்கத்தையைவிடவும் வித்தியாசமானவை.

பார்களில் ஒரு பெண் பெரும்பாலும் காசினாலன்றி காதலினாலேயே கவரப்படுகிறாள். அந்தக் காதல் எவ்வளவு சொற்ப நேரத்துக்கானதெனினும் அதுதான் உண்மை. பெண்கள் இங்கே வெண்ணிறம், பொதுநிறம், கருமைநிறம் ஆகிய மூன்று நிறங்களிலும் அழகாகவே இருக்கிறார்கள். அவர்கள் மொழியும்விதமும் அம்மொழிபோலவே அற்புதமாயிருக்கும்.
இவ்வாறெல்லாம் கூறிய அம் முதியவர் கடைசியில், ‘உங்களுக்கு அதிர்ஷ் டமுண்டாகட்டும்! உங்கள் கப்பல் புறப்படும்வரையாவது இந்த மண்ணை, இந்த மண்ணின் ஜீவனை ரசிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கட்டும்!’ என்று வாழ்த்தியிருந்தார்.

தொடர் தொடராக கலாபனின் மனத்திரையில் ஓடியது அன்டீஸ் மலை. தூரத்தில் தெரிந்த கருமையே அன்டீஸாகும் பிரமை. அத்துடன் வெண்ணிறத்திலும், பொதுநிறத்திலும், கருநிறத்திலுமான பெண்களின் நளினமான களி நடனங்களும் சுழித்தெழுந்தன.

பத்து மணி வாக்கில் அவர்கள் பாரை அடைந்தபோது, பார் நிரம்பியிருந்தது. கப்பலிலிருந்து மேலும் பலர் வந்திருந்தார்கள். சிகரெட் புகை ஒரு நீல மென்திரையாய் விரிந்து கிடந்தது. மேசைகளில் பெண்களும் ஆண்களும் குடியும், சிரிப்பும், பேச்சும், சேஷ்டைகளும், நடனமுமாய்.
கலாபனும், சிவநேசனும் ஒரு மேசையில் சென்று அமர்ந்தனர். சிவநேசன் ஒரு பியரும், கலாபன் இரண்டு பெக் விஸ்கியும் சொன்னார்கள். கொஞ்சம்; வெறிக்காவிட்டால் காரியமாகாது என்று கலாபனுக்குத் தெரிந்திருந்தது.

சிவநேசன் நடனமாடினான். இரண்டாவது தடவையாக அவன் நடனமாடிவிட்டு வந்தபோது கூடவே ஒரு வெள்;ளைப்பெண்ணையும் மேசைக்கு அழைத்துவர முடிந்திருந்தான். கலாபனுக்கும் அந்தளவில் பக்கத்து மேசையில் தன் நண்பர்களோடிருந்த ஒரு பெண் பியர் பரிமாறிக்கொள்ளுமளவு ராசியாகிவிட்டிருந்தாள்.
நால்வரும் அந்த பெருஞ்சத்தம் கிளர்ந்துகொண்டிருந்த பாரிலிருந்து ரகசியங்களாகவும் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டனர். கலாபனுடன் அமர்ந்திருந்த பெண் நேரடியாகவே கேட்டுவிட்டாள் தனக்கு நாற்பது அமெரிக்க டொலர் தரமுடியுமாவென. ஒரு டொலர்கூட அவன் நட்டமடையமாட்டானென்று உத்தரவாதம்வேறு கொடுத்தாள். சிவநேசனது நிலையை விசாரிக்க, அவன் சொன்னான், நாற்பது கேட்டதாகவும், முப்பது டொலருக்கு சம்மதித்துள்ளதாகவும். கலாபன் பேரத்தில் இறங்கவில்லை. அவளது உத்தரவாதத்தில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மாலையில் சந்தித்த அந்த முதியவரை ஒருமுறை நினைத்து மனத்துக்குள்ளாய்ச் சிரிக்க அப்போது அவன் செய்தான். ‘பார்களில் ஒரு பெண் பெரும்பாலும் காசினாலன்றி காதலினாலேயே கவரப்படுகிறாள்’ என அவர் சொல்லியிருந்த வாசகம் மனத்தில் அழிந்தது.

அப்போது ஒரு வயதானவர் வந்து ‘மரியா…மரியா’வென அவளை அழைத்தார். மரியா கலாபனிடம் நாற்பது டொலரையும் வாங்கிப்போய், எவ்வளவு கொடுத்தாளோ, அவருக்குப் பணம் கொடுத்தாள். பின் அவரை அனுப்பிவிட்டு வந்து கலாபனருகே அமர்ந்துகொண்டு, வந்தது தனது தந்தை என்றாள். ‘அவரும் உல்லாசிதான்.’

கலாபனுக்கு நடனத்தில் விருப்பமிருக்கவில்லை. ஆனால் மரியா விடவில்லை. வற்புறுத்தி அவனை இழுத்துச்சென்று ஆடினாள்.
இசைக்கு இசைவாய் இழைந்த அவளது அற்புதமான உடலழகை கலாபன் ஆசையோடு கண்டு ரசித்தான். கட்டான உடலின் உரசல்கள் ஏக்கம் பிடிக்கவைத்தன. ஸ்பானிய இசை மிக்க இனிமையானதாய் தோன்றியது அன்று கலாபனுக்கு.

ஒரு மணியளவில் கலாபனும் மரியாவும் புறப்பட்டனர்.
ராக்ஸியில் அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது அதிகாலை ஒன்றரை மணி. 
உயரமான நெடுந்தெருவிலிருந்து சரிவாய் இறங்கிய ஒரு கிரவல் தெருவில் சென்று அடர்ந்த ஒரு மரக்கூடலுள் இருந்த ஒரு வீட்டின் முன்னால் நின்றாள் மரியா.

அந்த வீட்டுக்கு மின்சாரமிருந்தது. ஒரு குமிழ் விளக்கு வாசல் மேல் எரிந்துகொண்டிருந்தது. ஆனாலும் ஒரு இருண்மையையே கலாபனால் உணரமுடிந்தது சூழலில்.

விறாந்தையும், தூண்களும் சீமெந்தினாலும், கூரை தகரத்திலும், பக்கச் சுவர்கள் பலகைகளினாலும் அமைந்திருந்ததை முதல் பார்வையிலேயே கண்டுகொண்டான் அவன்.

மரியா கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

வெளியில் தெரிந்த இருண்மையும் வளமின்மையுமான தோற்றம், உள்ளே இருக்கவில்லையென்பதை அவன் அதிசயத்தோடு காணலுற்றான். இரண்டு சோபாக்களும், படிக்கும் மேசையும், அதன்மேல் அழகான ஒரு மேசைவிளக்கும் மட்டுமே அவர்கள் கொண்டிருக்கக்கூடிய ஆகக்கூடிய வசதிகளாயிருந்தன. இரண்டு சின்னச் சின்ன அறைகள். அதிலொன்றில் யாரோவோ யாரோகளோவோ தூங்கிக்கொண்டிருந்தமை, மின் விசிறியால் அலைந்த நிலைத் திரைச் சேலை விலகியபோது தெரிந்தது.
மரியாவின் குழந்தைகளாய் இருக்கலாமென எண்ணிக்கொண்டான் கலாபன்.

ஒரு பக்க சுவரோரத்தில் பெரிய அலுமாரி. தட்டுகளில் அடுக்கப்பட்டிருந்த நிறையவான நூல்கள். ஒரு பக்கமாயிருந்த ஜன்னலின் இருபுறங்களிலும் இரண்டு சட்டங்களில் நிறைய போட்டோக்கள் இருந்தன. குடும்பப் படங்களாயிருக்கவேண்டுமென கலாபன் கணித்தான். ஜன்னலின் மேலே சே குவாராவின் அழகிய ஒரு பெரிய படம். மொத்த வீட்டுக்குமே ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது அந்தப் படம்தான் என்று தோன்றியது கலாபனுக்கு.

புத்தக அலுமாரியை அணுகியவன் ஒரு நூலை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். ஸ்பானிய மொழியிலிருந்தது அது. பின்புறத்தில் ஆசிரியரின் படமிருந்தது. அந்தப் படத்தை அவன் முன்பும் பல தடவைகள் கண்டிருக்கிறான். சிறந்த ஸ்பானிய மொழி எழுத்தாளர் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் பெயர் மட்டும் ஞாபகம் வரவில்லை.

“இவை யார் படிக்கிற புத்தகங்கள்?” என்று ஒரு பேச்சுக்காகக் கேட்டுவைத்தான் கலாபன்.

“நாங்கள் எல்லோரும்தான். நான், அப்பா, அம்மா எல்லோரும் படிப்போம். நீ கையிலே வைத்திருக்கிற புத்தகம் இருக்கிறதே அது யார் எழுதியது தெரியுமா?”

அவன் தயக்கத்தோடு தெரியாதென்று தலையசைக்க, “மிகப் பிரபலமான ஒரு கொலம்பிய படைப்பாளியினுடையது. நீ கேள்விப்பட்டிருக்கிறாயா மார்க்வெய்ஸ்,… கப்ரியேல் கார்ஸியா மார்க்வெய்ஸ் என்று? உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளன். கொலம்பியாவுக்கே, ஏன் ஸ்பானிய மொழிக்கே, அவனால் பெருமை. என்னமாதிரி வசீகரமானதொரு எழுத்து அவனது. ராபெல் பொம்ப், ராபெல் எஸ்கலோனா, ஜெர்மென் எஸ்பினோசா போன்ற சிறந்த கவிஞர்களும் கொலம்பியர்தான். ஆனாலும் மார்க்வெய்ஸின் எழுத்துக்கள்போல் இல்லை. ஒரு நூற்றாண்டுத் தனிமையென்பது மார்க்வெய்ஸின் நாவல். உலகப் பிரசித்தமானது. உலகின் இருபத்தைந்து முப்பது மொழிகளில் இதை மொழிபெயர்த்திருக்;கிறார்களென்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால், மார்க்வெய்ஸின் நூல்களையோ கதைகளையோ வேறு மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடாது என்றே சொல்வேன். மார்க்வெய்ஸின் எழுத்துக்களை வாசிக்கவாவது அவர்கள் ஸ்பானிய மொழியை அப்போது படிப்பார்களல்லவா?” என்று சொல்லிவிட்டு அந்த அகாலத்திலும் கடகடவெனச் சிரித்தாள்.

பின், “பிள்ளைகளும் அம்மாவும் எழுந்துவிடப் போகிறார்கள்” என நாக்கைக் கடித்தவள், “இரு வருகிறேன்” என்றுவிட்டு இரண்டாவது அறைக்குள் சென்றாள். திரும்பிவந்தபோது அவளது கையிலே ஒரு கொலம்பியன் விஸ்கி போத்தல் இருந்தது. குறையாகத்தான். “அப்பாவினுடையது. நாளைக்கு வாங்கி வைத்துவிடலாம்.”

சோபாவில் அமர்ந்திருந்தவன் போத்தலை வாங்கி தனக்கும் அவளுக்குமாக, அவள் கண்ணாடிப் பெட்டியொன்றிலிருந்து எடுத்துக்கொடுத்த கிளாஸ்களில் ஊற்றினான்.

அவள் குனிந்து கிளாஸை எடுத்தபோதே அவனை அணுகி அவனது கன்னத்தில் குவிந்த இதழ்களால் நிறை முத்தமொன்று இட்டாள்.
குளிர்ந்து போனவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் பெரிய எதிர்பார்ப்புடன்.
அவளோ புத்தக அலுமாரியில் கண் பதித்திருந்தாள்.
திடீரென ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள்.

“இதுவும் மார்க்வெய்ஸின் நூல்தான். ஒரு நூற்றாண்டுத் தனிமைக்கு அடுத்ததாக முக்கியமான நூலென்று நான் நினைப்பது இந்த சிறுகதைத் தொகுப்பைத்தான். இதிலேதான் ஈவா அவளுடைய பூனையின் உள்ளே இருக்கிறாள், கண்ணாடியுடனான உரையாடல், மரணத்தின் மறுபக்கம், மாபெரும் இறக்கைகளையுடைய மிகவும் வயதானவன் ஆகிய கதைகள் இருக்கின்றன.”

அவள் ஒரு பரவசத்தில் இருந்திருந்தாள். அவள் போதையும் ஏறிக்கொண்டிருந்ததில் அந்தப் பரவசம் ஒரு மூர்க்கத்தில் வெளிப்படுவதுபோல் தோன்றிக்கொண்டிருந்தது.

அவையெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளனவே,  அந்தக் கதையைப் படித்திருக்கிறாயா… இந்தக் கதையைப் படித்திருக்கிறாயா என்று கேட்டுக் கேட்டு பெரும்பாலும் அத்தனை கதைகளையும் அவள் சொல்லியே விட்டாள்.
விஸ்கி கிளாஸை எடுக்கும்போது அவ்வப்போது அவனை முத்தமிட்டதுகூட, உடல் கிளர்ச்சியினாலன்றி அவனும் அக் கதைகளை ரசித்துக் கேட்கிறானே என்ற உவப்பிலானதாய் இருந்ததாகவே அவனுக்குத் தென்பட்டது.

அவனுக்குள்ளும் அந்தப் பொருந்தா மனநிலையிலும் கதைகேட்கும் ஆர்வம் வந்தது அதிசயமாகவே தோன்றியது. அவளே திறம் வாய்ந்த ஒரு கதைசொல்லியாக இருந்தாள். அவன் அப்போது சோபாவில் படுத்திருந்தான். அவள் நிலத்தில் கால்நீட்டி உட்காhர்ந்து எதிர்த்த சோபாவில் முதுகைச் சாய்த்தபடி எட்டி அவனைத் தட்டித்தட்டி கதைசொன்னாள்.

ஒரு தருணத்தில் அவனே ஒரு பரவசத்தில் ஆழ்ந்துபோனான்.  மாபெரும் இறக்கைகளையுடைய மிகவும் வயதானவன் என்ற கதை அவனையே மாயவுலகுக்கு அழைத்துச் சென்றிருந்தது. அந்த இறக்கைகளின் படபடப்பைக்கூட அவன் கேட்பதாகத் தோன்றியது. ஊர் கூடிவந்து அந்த மாயமனிதனைப் பார்த்தபோது, ஊரின் சலனத்தை அவன் உணர்ந்தான். அதன் குசுகுசுப்பை அவன் கேட்டான்.

மார்க்வெய்ஸைப்பற்றி பேச நீண்டகாலம் யாரும் அகப்படாத தவனத்தில் இருந்திருப்பாளோ? அல்லது கதை சொல்;லலே அவளது பொழுதுபோக்கும் ரசனையுமோ?

கதை சொல்லி முடித்து ஒரு சமயம் அவனைநோக்கித் திரும்பியபோதில்தான் மரியா கண்டாள் அவன் தூங்கிக்கொண்டிருப்பது. “நிரம்பவும் குடித்துவிட்டாயோ? சரிசரி, படு” என்றுவிட்டு அவளும் மற்ற சோபாவில் ஏறிப் படுத்துக்கொண்டாள்.

தூக்க மயக்கத்தில் அழுந்திக்கொண்டிருந்த வேளையில் மெல்லவாய் அவளின் அந்த முனக்கம் அவனுக்கும் கேட்டது. இல்லை, விழிப்பாகவே இருப்பதாகச் சொல்லும் தேவை அசந்திருந்தது.
தொடர்ந்து ஐந்து மணி அடித்தது.

ஏழு மணியளவில் அவன் எழும்பியபோது ஏற்கனவே மரியா எழுந்துவிட்டிருந்தாள். பாத்ரூம் போய் முகம்கழுவி அவன் அவசரமாக வந்தபோது மரியாவின் அம்மா காபி கொடுத்தாள். வேண்டாவெறுப்பாக நின்ற நிலையிலேயே குடித்துக்கொண்டிருந்தபோது, மரியாவை தன் சிவந்த கண்களால் அவன் சலனமற்றுப் பார்த்தான். அந்த இரவின்  சுக இழப்புக்கு தானே வருந்துவதுபோல் அவனை ஏறிட்டு நோக்கிக்கொண்டிருந்தாள் அவள். ஏதோ சொல்ல முயல்வதுபோலும் தோன்றியது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.

அவளது அந்த நிலைமை அவனுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனாலும் அவனது ஏமாற்றம் கனதியாக இருந்தது. சுகத்தின் ஏமாற்றம் ஒரு பங்கு எனின், ஏமாறிவிட்டோமே என்பதே தனியொரு உணர்வாய்க் கொதித்துக்கொண்டிருந்தது அவனுள்.

அவன் சொல்லிக்கொண்டு வெளியே வந்தான். வாசல் வரையில் சென்றவேளை மரியா பின்னால் ஓடிவந்தாள். அவன் அந்த நெடுந்தெருவில் நின்றே ராக்ஸி எடுக்கமுடியுமென்றாள்.

அவன் நடக்கத் தொடங்க அவளும் கூடவந்தாள்.

நேர்தெருவில் ஒரு ராக்ஸி வந்துகொண்டிருந்தது. அவன் நிறுத்தி ஏறுகிறபோது அவள் குனிந்து அவனது செவியில் கிசுகிசுத்தாள்: “உன்போல் எனக்கும் ஏமாற்றமே. நான் நினைத்தே செய்யவில்லை. ஆயினும் என்னை மன்னித்துக்கொள்.”

அவளது கண்கள் கலங்கியிருந்தன.

கலாபன் திகைத்தான். அப்படி உருகக்கூடியவள், திட்டமிட்டே அவனை ஏமாற்றியிருப்பாளா?

கள்ளுடன் சேர்ந்த கதைசொல்லியின் வேட்கைதான் அவளைத் திசைமாற்றியிருக்கிறது.

அதுபோதும் அவனுக்கு. அவன் மெல்ல சிரித்தான்.
காமத்தின் ருசியைவிட அந்த குற்ற உணர்கையில் பிறந்த அவளின் கண்ணீரின் ருசியை அவனால் வெகுவாக விரும்பமுடியும்.
கலாபன் கப்பலுக்கு வந்துவிட்டான்.

‘கொலம்பியாவின் அந்தத் துறைமுகத்துக்கு இப்போதுதான் முதன்முறையாக வந்திருந்தேன். வேட்கை உடலுள் தகித்துக்கொண்டிருந்தது. அதுவும் மரணதேவனையே நேரில் கண்டு தப்பித்த  பிறகு வரும் அந்த வேட்கை மிக்க தகிப்பினை உடையது. ஆனாலும், கூடிச்சென்ற பெண் சொன்ன கதைகளைக் கேட்டபடி தூங்கிவிட்டு காலையிலெழுந்து கப்பலுக்கு வந்து சேர்ந்தேன். எங்கேயாவது, எப்போதாவது நாற்பது டொலருக்கு மார்க்வெய்ஸின் கதைகளை விடியவிடியக் கேட்டுக்கொண்டிருந்த கடலோடிபற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா, நண்பா.’

அன்றிரவு மனைவிக்கு எழுதவேண்டிய கடிதத்தை முடித்துவிட்டு, தன் நண்பன் சிவபாலனுக்குத் தொடங்கிய கடிதத்தில் இந்த வரிகளை எழுதியபோது, கலாபனின் முகம் வெகுவாகப் பொலிந்துபோய்க் கிடந்தது.
000தாய்வீடு ஜன. 2015


No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...