Wednesday, February 11, 2015

மதிப்புரை:விமர்சனத் தமிழ்


விமர்சனத் தமிழ்
தி.க.சி.


1959-92 காலப் பகுதியில் தி.க.சி. அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய முப்பாத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு  இது. மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்து பத்திரிகைகளிலும், நூல்களிலும் இடம்பெற்ற ஆய்வுரைகளும் இதில் அடங்கும்.

நூல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. அப்படி அது பேசவேண்டும். சுமார் கால் நூற்றாண்டுக் காலத்திய பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், வேறுவேறு இலக்கியப் போக்குகள், இலக்கியவாதிகளின் மறைவுகள் யாவும் சமகால விமர்சகனின் பார்வையில் பட்டு தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்கக்கூடியதல்ல.

செஸ்டார்டன் குறிப்பிட்ட ‘Good bad literature’ என்ற எழுத்துவகைகளையும், இன்னும் கீழ்த்தர எழுத்துக்களையும் நோக்கி தீவிரமான எதிர்ப்புக் கணைகளைச் செலுத்தும் தி.க.சி.யை நூலின் முற்பகுதிக் கட்டுரைகளில் காணமுடிகிறது.

தி.மு.க.வின் பிரிவினை வாதம், அதன் இலக்கியப் போக்குகளுக்கு எதிராக காரமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘அறிஞர்-கலைஞர் கூட்டம் சிருஷ்டித்த இலக்கியங்கள் அனைத்தும் நச்சு இலக்கியங்களே’(பக்:35). ‘வேலைக்காரி’ சினிமாவுக்காக அண்ணா கல்கியில் பாராட்டப் பெற்றதைக்கூட கண்டிக்கிறார். ஒரு கோபங்கொண்ட தி.க.சி.யை இந்தப் பகுதியிலே காணமுடிகிறது. அதனால், சில இடங்களில் சமச்சீர்
மீறியும் கருத்து தெரிவித்துவிடுகிறார்.

விமர்சகனுக்கு மாறுபாடான கருத்து இருக்கலாம். கோபம் கூடாது. கல்கி, குமுதம், விகடன் பத்திரிகை எழுத்துக்களின்மேல் தி.க.சி. தொடுத்த இந்த சொல்யுத்தம், மணிக்கொடிக் காலம் தொட்டது. இன்றுவரை தொடர்வது. வரலாறு அதைச் செம்மையாகப் பதிவு  செய்திருக்கிறது. ஆனால், இங்கே தி.க.சி.யின் தீவிரம் நம்மைத் திகைக்கவைக்கிறது.

விந்தனும், ஜெயகாந்தனும் தி.க.சி. போர் தொடுத்த இந்த வியாபாரப் பத்திரிகைகள் வாயிலாகத்தான் தமது சிறந்த படைப்புக்களைப் படைத்தார்கள் என்பதை இலகுவில் ஒதுக்கிவிட்டு, ஜனரஞ்சக எழுத்தின் மேல் அத்தனை காட்டமான ஒரு அபிப்பிராயத்தைச் சொல்லிவிட முடியாது.
திராவிட இயக்கம் சார்ந்த கலை இயக்கங்கள் பற்றியும் தி.க.சி.யிடமிருந்து சரியான விமர்சனம் கிடைக்கவில்லை.

திராவிட இயக்கம் அன்றைக்கு ஒரு கால தேவை. அது மதிப்பிறக்கம் பெற்று வெறும் வார்தைகளளவில் மட்டுமே வாழவேண்டிய இன்றைய நிலையும் அதே காலதேவை விதிப்பட்டதுதான். ஆனால், சமூகத்தின் ஒரு சாரார் சொத்துப்போல் இருந்த கலை இலக்கியங்களை, அதன் இறுகிய கூண்டை உடைத்து வெளிக்கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. நாடகத்திலும், சினிமாவிலும் அதன் பாதிப்பு மிப் பாரியது. அவர்கள் கலை இலக்கியச் சிருஷ்டிகளில் பெரிதாக எதையும் செய்துவிடவில்லைதான். ஆனால் பின்வந்த சாதனையாளர்களுக்கான தளத்தை அமைத்து வைத்திருந்ததே அவர்களின் மகத்தான சாதனையாகக் கருதப்பட முடியும். திராவிட இயக்கம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

இதில் பொன்னீலன் ஒப்புக்கொள்கிற அளவுகூட (ஆதார நூல்: தற்காலத் தமிழ் இலக்கியமும் திராவிட இயக்க சித்தாந்தங்களும்) தி.க.சி. ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும், தற்பொழுது அவரது அணுகுமுறை சிறிதே மாறியிருக்கிறது என்பதை, அண்மையில் ‘புதிய பார்வை’ (16.08.1993) நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன.

‘பதினேழு ஆண்டில் இலக்கியம்’, ‘1971ஆம் ஆண்டில் கசடதபற’, ‘வாசக நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்’, ‘தமிழ்ச் சிறுகதைகள்- ஓர் உரத்த சிந்தனை’, ‘பன்னிரண்டு கதைகள்- ஒரு மதிப்பீடு’ ஆகிய கட்டுரைகள் செய்திறன் நேர்த்தி மிக்கவை. ஆய்வு நெறிமுறைப்பட்ட போக்கினை இவற்றில் காணமுடிகிறது.
‘தமிழ்ப் பத்திரிகைத்துறையில் சித்தாந்தப் போராட்டம்’, ‘படைப்புலகில் சித்தாந்தப் போராட்டம்’, ‘இலக்கிய விமர்சனத்துறையில் தற்காலப் படைப்புகளும் போக்குகளும்’ போன்ற கட்டுரைகள் மார்க்சிய சித்தாந்தம்பற்றி, விமர்சனமுறைபற்றி, புதுமை இலக்கியம் படைப்பதுபற்றிப் பேசுகின்றன. 
‘கண்ணில் தெரியுது வானம்’, ‘நாகம்மாள்’, ‘வெளிச்சத்தை நோக்கி…’ ஆகிய நாவல்களின் மதிப்புரைகள் இந்நூலுக்கு இன்னும் ‘அழகு’ சேர்க்கின்றன. தி.க.சி.யின் முழு ஆளுமையும் இதுமாதிரியான ரசனைமுறைத் திறனாய்விலேயே தென்படுகின்றன என்பது நிஜமான வார்த்தைகள்.

‘புதுமையிலும், தனித் தன்மையிலும், சோதனையிலும் ஈடுபாடுகொண்ட சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி வருகிறது. இவர்களின் சாதனைகளில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இவர்களது தத்துவக் கண்ணோட்டத்திலும் மாறுபாடுகள் உள்ளன. எனினும் இவர்களும், இவர்களைப் போன்ற இளம் படைப்பாளிகளும் என்னைக் கவர்கிறார்கள்’ (பக்: 129).

இதுதான் தி.க.சி.

பாரம் இருக்கிற இடத்தில் பட்சம் வைக்கிற க.நா.சு.வின் பண்பும் இதுதான்.
வெங்கட் சாமிநாதனைவிட க.நா.சு.வை அணித்தான சக விமர்சகராக தி.க.சி. கொள்வதற்கும் இந்தப் பண்பின் அடிப்படையிலான ஆய்வு ஒற்றுமையே காரணமாகி நிற்கிறதோ என்றும் யோசிக்க இடமுண்டு.

தனது விமர்சன முறைமைக்கு மார்க்சீய சித்தாந்தமே அடிப்படை என்று தி.க.சி. பிரகடனப் படுத்துகிறார் (‘நான் விஞ்ஞான சோசலிசத்தில் அசைக்க முடியா நம்பிக்கையுள்ளவன்’, பக்: 103). ஆயினும் அவரது விமர்சன அழகு அவர் தனது சுயரசனையில் தன் சித்தாந்தத்தை வைத்துப்  பார்ப்பதும், சித்தாந்தத்தை ஒரு எல்லையோடு நிறுத்திக்கொண்டு படைப்பை மட்டும் எடைபோடுவதும்தான். இதை நூலின் பிற்பகுதி முழுக்க பரக்கக் காணலாம். இந்த அம்சம் பிற மார்க்சிய விமர்சகர்களான க.கைலாசபதியிடமோ, கா.சிவத்தம்பியிடமோ, நா.வானமாமலையிடமோ காண முடியாதது. அதனால்தான் சிறுகதைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய புதுமைப்பித்தனைவிட கு.ப.ரா.வை தி.க.சி.க்குப் பிடித்துப்போகிறது (ஆதார நூல்: தி.க.சி.யின் திறனாய்வுகள்).

விமர்சன ஆழமும், ஆரவாரமின்மையும், நிதானமும், சகிப்புத் தன்மையும் பிற்காலத்திய கட்டுரைகளின் பொதுப்பண்பு. இவர் உபயோகித்த நடை, மொழி, இன்னொரு சிறப்பம்சம். விமர்சனத் தமிழுக்கான ஒரு சிறந்த நடை தி.க.சி.யினுடையது. மொழிகூட அப்படித்தான். இவரின் நடையையும், விமர்சன முறையையும் கொண்டே, தலைப்பும் ஆசிரியர் பெயருமற்ற சில நூல்களிலிருந்து தி.க.சி.யின் நூலை ஒருவரால் சுலபமாக தெரிந்தெடுத்துவிட முடியும். அத்தனைக்கு தி.க.சி.யினுடைய நடையில் ஒரு முத்திரை இருக்கிறது. இது இலகுவானது, தெளிவானது.

கட்டுரைகள் பல தரத்தன. ஆயினும், அவற்றுள் சிறந்த, மிகச் சிறந்த கட்டுரைகளின் தன்மை இதுதான்.

மேலும் சில கட்டுரைகள் விமர்சனத் துறையில் ஒரு தனிப்போக்கையே கைக்கொள்கின்றன என்றும் துணிந்து சொல்லலாம். இது க.நா.சு.விடம் இல்லாதது. கைலாசபதியிடமும்தான். புனைகதையின் கதையை மிகச் சுருக்கமாகச் சொல்லல், இயல்பில் அதன் நெறியை ஆராய்தல், கட்டுக்கோப்பைக் கவனித்தல், பின் நடையை விமர்சித்தல் என தி.க.சி. பாணி விமர்சனம் செல்லும். கடைசியில் முத்தாய்பாய் புனைகதையின் மொத்தப் பெறுமதி கூறப்படும். ‘இந்த அற்புதமான தமிழ் நாவல்’ (நாகம்மாள், பக்:96) என்றோ, ‘காந்தி யுகத்தைப் பிரதிபலிக்கும் தலைசிறந்த நாவல் இனிமேல்தான் தமிழில் எழுதப்படவேண்டும்’ (மண்ணில் தெரியுது வானம், பக்: 104) என்றோ தன் கருத்தை முன்வைப்பார் தி.க.சி.

இது ஒரு வெற்றிகரமான விமர்சன முறையா என்பது எனக்குச் சந்தேகம். ஏனெனில், சற்றே சமன் தவறினாலும் இந்த விமர்சன முறை விமர்சகனைப் பக்கம் சார்வதாய் சந்தேகப்பட வைத்துவிடக்கூடியது. ஆயினும், தி.க.சி.யின் பலம் இந்த விமர்சன முறையில்தான் இருக்கிறது.

இவ்வாண்டில் வெளிவந்திருக்கிற தி.க.சி.யின் இரண்டாவது விமர்சன நூல் இது. அன்னம் வெளியிட்டிருக்கிறது. நூலின் பன்முகப் பார்வை, விவரணம், முடிவுக்குக் காரணம் சொல்லும் நேர்த்தி, விஷயத்தை நழுவவிடாது பற்றி ஆழ்ந்துசெல்லும் சிறப்பு என்பவற்றால் தமிழ் விமர்சனத்துறைக்கு மேலும் மெருகுசேர்க்கிறது இந்நூல்.

00000

 புதிய நம்பிக்கை, 55வது இதழ், அக்டோபர் 1993

Tuesday, February 10, 2015

முதல் பிரசவம்:

 இன்னும் என்னுள் பசுமை

-தேவகாந்தன்


1968ம் ஆண்டு ‘செய்தி’ வார இதழில் வெளிவந்த ‘குருடர்கள்’தான் எனது முதல் சிறுகதை. அப்போது எனக்கு வயது 21. வாழையடி வாழையாகத் தொடர்ந்த ஒரு பண்டித மரபில் வந்திருந்ததனால்போலும் பதினைந்து வயதுக்குள்ளாகவே சங்க இலக்கியங்களுடனான பரிச்சயமும், ஈழத்து செய்யுள் இலக்கியங்களின் வாசிப்பும் எனக்குச் சித்தித்துவிட்டன. பாலைக்கலி முழுவதையும் அந்த வயதிலேயே படித்திருந்தேன். நன்னூல் பெரும்பகுதியும் மனப்பாடமாயிருந்தது. தக்க ஓர் ஆசானுக்காக நான் காத்திருந்த காலமாக அதைச் சொல்லலாம்.

புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் கல்லூரிப் பாடத் திட்டத்துக்கான தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமே அறிந்திருந்த எனக்குப் புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’, ‘ஆண்மை’ போன்றனவற்றின் வாசிப்பு எதிர்பாராதவிதமாத்தான் ஏற்பட்டது. நான் அதுவரை அறியாத யதார்த்த உலகத்தின் திறவாக இருந்தது. பழந்தமிழ் இலக்கியத்தின் சுவடு கண்டு, சத்தியம், அன்பு, அகிம்சைபற்றிப்  பேசிய நாவல்களின்  ஒருவகைக் கற்பனோலயத்திலிருந்த என்னை அது முற்றிலுமாய் இழுத்தெடுத்தது. நவீன வாசிப்பு என்னில் இப்படித்தான் நிகழ்ந்தது.

1967-ல் இலங்கை தேசிய நாளிதழான ‘ஈழநாடு’ ஆசிரியர் குழுவில் இணைந்ததோடு என் தாகம் தீர்ப்பதற்கான  வாசிப்புக் கதவுகள் அகலத் திறந்தன. ‘ஈழநா’ட்டில் சேர்ந்த சிறிது காலத்தில் அப்போது ஞாயிறு வார மலருக்குப் பொறுப்பாசிரியராக இருந்த சசிபாரதியின் ஊக்குவிப்பினால் ‘கலித்தொகைக் காட்சிகள்’ என்ற தொடர் இலக்கியக் கட்டுரையை எழுதினேன். உண்மையில் அது ‘பாலைக்கலிக் காட்சிகள்’தான். காதலின் மிக உன்னதமான கணங்கள் பாலையின் திணையொழுக்கமான பிரிவின்கண் உளதாக அப்போது போலவே இப்போதும் நம்புகிறேன்.

அக்காலகட்டத்தில் எழுதிய கதைதான் ‘குருடர்கள்’.

நான் ‘ஈழநாடு’ அலுவலகத்துக்குப் போகும் வரும் வேளைகளில் அடிக்கடி எதிர்ப்பட்ட இசைக்கலைஞன் அவன். அந்தகன்.  அவன் வயலின் வாசிப்பில் காட்டியது பெரும் ஞானத்தை. வேலை முடிந்து முற்றவெளி, நூல்நிலையம், முனியப்பர் கோவில் புல்வெளி, திறந்தவெளி அரங்கு என அலையும் போக்குடைய என்னைத் தன்னை நோக்கி இழுத்துப் பிணித்துவிடுகிற இசை அவனுடையது.

திடீரென்று சில நாள்களாக அவனைக் காணவில்லை. விசாரித்தபோது விபரமறிந்தேன். அவன் இறந்துபோனான். வயலின் வாசித்துக்கொண்டிருக்கையிலேயே  செத்து வீழ்ந்துவிட்டான். ஒரு கையில் வயலின் வாசிக்கும் தண்டோடு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு மேலாக யாழ் மணிக்கூண்டுக் கோபுரச் சங்கிலி வளைய சிறு பூந்தோட்ட எல்லைக்குள் அவன் உடல் கிடந்திருக்கிறது. மறுநாள் காலையில் மாநகர சபை பிணத்தை அப்புறப்படுத்திற்றாம். அவன் உயிரோடிருந்து வாசித்த வேளையில் நின்று கேட்டு ரசித்த மனிதர்கள் அதைப் பார்த்துக்கொண்டு போய் வந்துகொண்டிருந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மாநகர சபையின் உயர்ந்த கட்டட நெற்றியில் பொறிக்கப்பட்டிருப்பது யாழ்ச் சின்ன விளக்கு. மட்டுமில்லை. சரித்திர காலத்தில் அந்தகக் கவி அதிவீரராகவன் என்கிற இசைக் கலைஞனுக்குப் பரிசிலாகக் கிடைத்த பூமி அது. பெயரே அதற்கு யாழ்ப்பாணம்!
பதறிப்போனேன். அவனா குருடன்? இல்லை. அந்த நகர்தான். அந்த மக்கள்தான் குருடர்களென்று என்னுள் ஓங்கிக் குமுறினேன். பின்னொரு போதில் என் இதயத்துள் கிடந்து கனன்றுகொண்டிருந்த கோபத்தையெல்லாம் குவியமாக்கி அந்த நிகழ்ச்சியைக் கதையாக எழுதினேன். ஏனக்குக் கோபம் என்பதற்காகத் துண்டுப் பிரசுரம் அச்சடித்து வீசவா முடியும்? அப்படித்தான் செய்ய முடியும்.

கதையை என்னோடு ஆசிரியர் குழுவில் வேலைசெய்த பாமா ராஜகோபாலிடம் காட்டினேன். கதை நன்றாக வந்திருப்பதாகக் கூறியதோடு, அப்போது அலுவலம் வந்த கவிஞர் இ.நாகராஜனிடமும் காட்டினார். வாசித்துவிட்டு கதையைப் பாராட்டியதோடு ‘அடுத்த வார மலரிலேயே போடுவதற்குப் பாருங்கள்’ என்று வேறு பாமாவிடம் கூறிச் சென்றார் கவிஞர்.
‘ஈழநாடு’ வாரமலரில் வெளியிட எனக்குச் சம்மதமில்லாதிருந்தது. எனது முதல் கதை நான் வேலை செய்யும் பத்திரிகையில் வருவது அனுசரணை காரணமாக வெளியிடப்பட்டதெனக் கொள்ள ஏதுவாகலாமே என அஞ்சினேன். அதைப் பாமாவிடம் தெரிவித்தேன். ஒப்புக்கொண்ட நண்பர் அப்போது கண்டியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த வாரப் பத்திரிகையான ‘செய்தி’க்கு அனுப்பலாமென்ன்று கூறி முகவரி தந்தார். அனுப்பிய மூன்று வாரங்களிலேயே கதை பிரசுரமாயிற்று. இது ஒரு முக்கிய நிகழ்வாகும். என் பழந்தமிழிலக்கிய ஆர்வத்;தை மேவி நான் சிந்தனைத் தள மாற்றமும் சமூக நோக்கும் படைப்பூக்கமும் பெற்ற புள்ளி அது. அந்தப் புள்ளிக்குப் பின்னால் ‘செய்தி’ இதழும் பாமாவும்.

சுமார் நூறு கதைகளுக்கு மேல் ‘ஈழநாடு’, ‘செய்தி’, ‘சிந்தாமணி’, ‘வீரகேசரி’ , ‘மல்லிகை’ ஆகியவற்றில் எழுதியிருப்பேன். அக் கதைகளில் ஒன்றுகூட இன்று என் கைவசமில்லை. எடுக்க முயன்று முடியாமலே போனது.  இனி அந்த நம்பிக்கை இல்லை. அவற்றில் பலவற்றின் தலைப்பே மறந்துவிட்டேன். பலவற்றின் கதையே ஞாபகமில்லை. ஆனால் அந்த முதல் கதை இன்னும் என்னுள் பசுமை. ஏறக்குறைய அது வெளிவந்த  மாதிரியிலேயே இன்றுகூட என்னால் அந்தக் கதையை எழுதிவிட முடியுமென்று தோன்றுகிறது. ஏனெனில்… அது என் முதல் பிரசவம்.

00000

(‘முதல் பிரசவம்’ என்ற தலைப்பில் தினமணிக் கதிரில் எழுத்தாளர்களின் முதல் படைப்பு பற்றிய ஞாபக மீட்பு ஒருபோது தொடர்ந்து வெளிவந்தது. அதில் எனது பங்குக்கானது ‘இன்னும் என்னுள் பசுமை’ என்ற தலைப்பில் 02.07.2000இல் வெளியானது.)

மதிப்புரை:: ‘மக்கத்துச் சால்வை’


 

 எஸ்.எல்.எம்.ஹனீபாவின் 

‘மக்கத்துச் சால்வை’


1967 தொடங்கி 1991வரை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பதினைந்து சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா. 1992இல் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்றென துணிந்து கூறலாம்.

‘மக்கத்துச் சால்வை’ என்பது ஈழத்து வட்டாரச் சொல். மட்டக்கிளப்பில் முஸ்லீம் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இந்த தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பையே நூலின் தலைப்பாக இட்டிருக்கிறார் ஆசிரியர். ‘இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும்’ என்பதால் ஆசிரியர் நூற்பெயருக்கான சிறுகதையைத் தெரிந்திருப்பாரானால், அதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ‘மக்கத்துச் சால்வை’யை விட ‘வேலி’, ‘சலனம்’, ‘மருமக்கள்’, ‘நாயம்’, ‘மருத்துவம்’ போன்ற கதைகள் கலைநேர்த்தியும், சமுதாயப் பார்வைத் தீட்சண்யமும்  கூடியவை என்பதும், தலைப்புக்கதையாகச் சிறக்கக்கூடியவை என்பதுமே என்னளவிலான முடிவு.

தமிழகத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி. பாணியில் கதைகளைத் தனித்தனியாக சுருங்கக் கூறி விமர்சனம் செய்வது இந்நூலைப் பொறுத்தவரை அவசியமில்லை. ஆயினும் மக்கத்துச் சால்வைபற்றி சில வார்த்தைகள்.

 மிக மரபு சார்ந்த, மண் வாசைன கூடிய கதை இது. பழைய ‘மத்திச் செம்’ போய், புதிய தலைமுறையின் மத்தியஸ்துவத்தில் ஜும்மா தொழுகை நாளில் ஒரு சிலம்பப் போட்டி நடக்கிறது. முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு சூழ்ச்சியின் மூலம் வெற்றிபெற்ற அகமது லெவ்வை அண்ணாவியாருக்குக்கும், அப்போட்டியில் தோற்றதாக முடிவு செய்யப்பட்ட நூகுத்தம்பி மஸ்தானுக்கும் இடையிலான போட்டி அது. அதில் அண்ணாவியார் வெல்லப்படவிருக்கிற அந்தக் கடைசித் தருணத்தில், தன் மனிதத் தன்மையைக் காட்டி, அவரைக் கட்டித் தழுவுகிறார் நூகுத்தம்பி. முப்பது வருஷங்களாக தன் வெற்றியின் அடையாளமாக தரித்திருந்த மக்கத்துச் சால்வையை - பொன்னாடையை, அண்ணாவியார் நூகுத்தம்பிக்கு அணிவிக்கிறார். இதுதான் கதை. மக்கத்துச் சால்வை என்பதன் அர்த்தமும் இதுதான்.

அதிகமான கதைகளில் மனிதநேயம்-மானுஷிகம், அதிகம். மக்கத்துச் சால்வை என்ற கதையில் இவ்வுணர்வு சற்றே தூக்கல்தான். ஆயினும், மனிதநேயம் பேசும் கதைகளே நல்ல சிறுகதைகளாகும் தகுதியுடையன என்பதில் எனக்கு அபிப்பிராய பேதம்  உண்டு.

தோசை என்பது வட்டமாகவும் இருக்கவேண்டும். அதுவே இயல்பும், இலகுவும் ஆகும். அதுபோல் சிறுகதையென்பது அதன் லட்சணத்தோடும் விளங்கவேண்டும்.

அவ்வாறு சிறுகதை லட்சணத்தோடுள்ள கதைகள் தொகுப்பிற்குப் பெருமையளிக்கின்றன.

சொல் உபாசனை நடையில் தெரிகிறது. ‘லா.ச.ரா.வை துரோணாச்சாரியராய்ச் சம்பாவனை செய்யும் ஒருவனுக்கு’ என்கிறார் எஸ்.பொ. அப்படியாயின் சொல் உபாசனை-வார்த்தை வளக் கணக்கெடுப்பு- தவிர்த்தல் எங்ஙனம்? இருந்தும் கருத்தைக் கொல்லாத, பாத்திரங்களின் கழுத்தை நெரிக்காத அவதானம் ஆசிரியரிடத்தில் இருந்துள்ளது என்பதும் உண்மையே.

‘வேலி’யின் ராஹிலா, ‘சன்மார்கம்’ கதையில் பேசுகிற நான், ‘மக்கத்துச் சால்வை’யில் வரும் நூகுத்தம்பி மஸ்தான், ‘கடுகு’ கதையில் வரும் மன்சூர், ‘வேட்டை’யின் பரிதாப நாயகன் காதன் யாவருமே நூலை வாசித்த பின்னால் நெஞ்சத் தவிசில் இடம்பெற்றுவிடுகிறார்கள். இது ஆசிரியரின் கதா வெற்றி.

எஸ்.பொ.வின் முன்னுரை கண்டதும் நெய்த நூலினும் தைத்த நூல் வலிதாகிவிடுமோ? காகத்தின்  தலையில் பனம்பழத்தை வைத்ததுபோல் பாரமாகிவிடுமோ?  என்று நினைத்தேன். ஆயினும், எஸ்.பொ.வின்; முன்னீட்டைத் தாங்கக்கூடிய அளவுக்கு தொகுப்பு பலமாகவே உள்ளது.
முன்னீட்டில் எஸ்.பொ.வின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உரியவை. ஆனால் ஒன்றைமட்டும் தன் பதினாறு பக்க நீண்ட முன்னீட்டில் விவாதமற்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சொல்லியிருக்கிறார் அவர். ‘மட்டக்கிளப்பு மாநிலத்தின் வாழ்க்கையை முழுமையாக அல்லாவிட்டாலும் வலு நேர்மையாக தரிசிக்க விழையும் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுதான்’ என்ற எஸ்.பொ.வின் கூற்று மிகையல்ல.

உருவம், உத்தி, நடை, கருத்து என்ற பல அம்சங்களிலும் சிறந்த சில கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. நிகழ்கால அரசியல் பின்னணியில் சில அவலங்களை சில கதைகளில் மிக அழகாக விழுத்தியிருக்கிறார் ஹனீபா.
இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரசம்’, டானியலின் ‘டானியல் சிறுகதைகள்’, நீர்வை பொன்னையனின் ‘மேடும் பள்ளமும்’, டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ எப்படி வடபகுதிச் சமூக வாழ்வை சிறப்பாக சித்தரித்துக் காட்டுகின்றனவோ, எஸ்.பொ.வின் ‘வீ’ எப்படி கிழக்கும் வடக்கும்பற்றி சிறப்பாகப் பேசுகின்றதோ, அதுபோல் ஹனீபாவின் இந்த ‘மக்கத்துச் சால்வை’ கிழக்கிலங்கை முஸ்லீம் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை நிதர்சனத்தில் வைக்கிறது.00000


புதியநம்பிக்கை,  53வது இதழ், ஜுன் 1998 

Saturday, February 07, 2015

கலாபன் கதை (பாகம் 2) 2‘காதல் வெறித்த நகர்’
--தேவகாந்தன்--

கொலம்பியாவின் புவனவெந்துரா துறைமுகத்தைவிட்டு கப்பல் புறப்படும்போது, ‘இங்குள்ள பார்களில் ஒரு பெண் காசினாலன்றி காதலினாலேயே கவரப்படுகிறாள்’ என்று அந்தத் துறைமுகத்தில் இறங்கிய முதல்நாளில் ஒரு உல்லாசியான முதியவர் சொன்ன வாசகம்  கலாபன் மனத்தில் மீண்டும் ஆழமாய்  நின்றிருந்தது.

மரியாவின் வீட்டினின்றும் திரும்பிய காலையிலிருந்து அன்று வெளியே செல்வதில்லையென்று பிடிவாதமாக நினைத்திருந்ததை அவனால் நிறைவேற்ற முடிந்திருந்தது. மறுநாளும் அந்த முடிவாகவே இருந்தும் மணி ஆறு ஆக, பின் ஏழு ஆக, நகர்சென்று ஒரு பியர் மட்டும் அருந்திவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணம் தலையெடுத்தது அவனுக்கு.

அவன் வெளிக்கிட்டு பார் சென்ற அளவில் பத்து மணி. பஸ்ஸிலே சென்றிருந்தான். அவன் உள்ளே சென்றபோது கண்படும் இடத்தில் உள்ள மேசையில் வாசலை நோக்கியபடி அமர்ந்திருந்தாள் மரியா.
அவனுக்காகவே காத்திருந்ததுபோல் கண்டதும் சிரித்தாள். அவளை மொத்தமாய் மறுதலிக்க இஷ்டமின்றி மேசையை அடைந்தான். அவளெதிரே உட்கார்ந்தான். ‘என்ன சொல்ல?’ எனக் கேட்டாள் மரியா. ஏற்கனவே தான் குடிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்லி பியர் போதுமென்றான் அவன்.

பன்னிரண்டு மணிவரை கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவனது ஊரைப்பற்றி, கப்பல் தொழில்பற்றி, கள்ள வழிகளிலேனும் ஐக்கிய அமெரிக்கா சென்றுசேரும் விருப்பம் தலையெடுத்துள்ள இளைய கொலம்பிய தலைமுறைபற்றியென பல்வேறு வி~யங்களை அவர்கள் பேசினார்கள். அன்று அந்த அற்புதமான கதைசொல்லியின் குரல் அடங்கியிருந்ததை அவன் கண்டான். அவனது கன்னத்தை அவ்வப்போது தடவியும், தலையைக் கோதியும், எழுந்தபோதுகளில் அவனை முத்தமிட்டும் கலகலப்பாய் இருந்தாளாயினும், போதையேறியிருந்த அந்த நிலையிலும்கூட அவனது உணர்ச்சிகளைக் கிளறும்விதமாக மரியா நடந்துகொள்ளாததைக் கவனித்தான் கலாபன். அவளாலன்றி ஒரு சந்தர்ப்பத்தாலேயே தான் ஏமாந்துபோனதாக அவன் எண்ணியிருந்தபோதும், அன்றைக்கு அவனிடத்திலேயே பாலுணர்வு கிளர்ந்தெழவில்லை.

‘புறப்படலாமா?’ என்று கேட்டு அவனே பில்லைக் கொடுத்துவிட்டு எழுந்தான். அவனோடேயே கூடிச் செல்லப்போவதுபோல அவளும் எழுந்து பின்தொடர்ந்தாள். ராக்ஸி நின்றவிடத்துக்கு நடந்தபோது, வெளிச்சம் குறைந்த இடத்தில் நின்று அவனைக் கட்டியணைத்து ஒரு நீண்ட முத்தமிட்ட மரியா சட்டென விலகி நின்று அவனை நிமிர்ந்து சில விநாடிகள் உற்றுநோக்கினாள். அந்த விழிகளின் அழைப்பினைத் துல்லியமாய்த் தெரிய முடிந்தது கலாபனால். அன்றைக்கு அவன் கப்பலுக்குத் திரும்புவதைத் தவிர வேறெதுவும் செய்யமாட்டானென்பதை புரிந்தவள்போல், ‘உனக்காகத்தான் இன்று வந்தேன். நேற்றும் வந்திருந்தேன்’ என்றுவிட்டு ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அந்தக் கணத்தில் அவளது கண்கள் பனித்திருந்த காட்சியில் தடுத்து நிறுத்தி கூடவே செல்லவேண்டும்போலிருந்தது கலாபனுக்கு. அவன் தன்னை அடக்கிக்கொண்டான். அவ்வளவு நிறைவை அவன் கூடிச்சென்றால்கூட அடைந்துவிட முடியாதென்று அவனுக்குப் பட்டது.

அவன் கப்பலுக்குச் சென்று அன்று நிம்மதியாக உறங்கினான் மரியாவின் முகத்தை மனத்தில் நிலையாக இருத்திக்கொண்டு.

கலாபனுக்கு முதல்நாளிலேயே தெரிந்திருந்தது, அங்கிருந்து கப்பல் சீனத் துறைமுகம் ஒன்றினுக்குச் செல்லவிருப்பதாக.

சீனத் துறைமுகங்களுக்குச் சென்றிருந்த கடலோடிகள் அங்கே இருந்திருந்தார்கள். காமம் காய்ந்த பெண்களாய் சீனத்துப் பெண்கள் இருப்பதுபற்றிய வர்ணிப்பு அங்கே கப்பல் முழுக்க வியாபகமாகிவிட்டது. கலாபனும் அதை அறிந்தானாயினும், மனம் வழி உடலை அடக்கும் கலையறியவருவதுபோல் உணர்ந்து அமைதியாயிருந்தான்.

கடல் கொந்தளிப்பு கூடிய காலமாயினும், வடமேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்ததுபோல் இந்து சமுத்திரம் மாதிரம் குலுங்க பொங்கிக்கொண்டிருக்கவில்லை அப்போது. ஒன்பதினாயிரம் தொன் சீனியை ஏற்றியிருந்த கப்பல் பெரிய பயணச் சிரமமின்றி இருபத்தியேழு நாட்களின் பின் சீனாவின் கீழ்ப்பகுதியில் மஞ்சள் கடல் குடாவிலிருந்த ஜிங்தாவோ துறைமுகத்தைச் சென்று சேர்ந்தது. 

ஏற்கனவே தெரிந்திருந்தபடியால் ஒரு எதிர்பார்ப்போ, ஒரு விசாரிப்போ இன்றி மாலை மூன்று மணியளவில் சும்மா நகரைப் பார்த்துவரலாமென கலாபன் தனியாகவே புறப்பட்டான். கூடிச்செல்ல யாரும் வெளிச்செல்லும் மனோநிலையோடும் இருக்கவில்லை.

துறைமுகத்துக்குத் திரும்ப சிரமமிருக்காது என்பதால் செல்லும் திசைகுறித்த கரிசனமேதும் அவனிடத்தில் இருக்கவில்லை. சீனப் பெருஞ்சுவர்பற்றி ஆரம்பத்தில் அறிந்திருந்த பாட விடயங்கள் தவிர, பின்னாளில் அழகிய தாளில், அழகிய அச்சில், அழகிய வர்ணப் படங்களுடன் சீன பெருநிலம்பற்றிய இலவச தமிழ் சஞ்சிகையை அவன் மாதம் மாதம் பெற்ற காலமொன்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நிலவியிருந்தது. வறுமையும், கொடிய நோய்களும் மலிந்த அந்த தேசத்தை கம்யூனிச ஆட்சி எவ்வாறு அடியோடு மாற்றிவைத்துள்ளது என கலாபன் பலமுறையும் வியந்திருக்கிறான். அந்த வியத்தகு நாட்டை தரிசிப்பது ஒன்றே அப்போதைய அவனது எண்ணத்தில் இருந்துகொண்டிருந்தது.

இருபத்துநான்கு, முப்பத்தாறு சில்லுகள் பொருத்திய பெரும்பெரும் பாரவண்டிகள் துறைமுகத்துக்கும், துறைமுகத்திலிருந்து நெடுஞ்சாலைக்குமாக பறந்துகொண்டிருந்தன. அதை லாவகமாக ஓட்டிச் சென்றவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதை அவர்களின் பின்னலிலிருந்து கண்டு பெரும் அதிசயம் பட்டான் அவன்.

அந்த நேரம்வரைக்கும் ஒரு கார் கண்ணில்படாத விந்தையும் அவன் கவனத்தில் பதிந்தது. மக்கள் பெரும்பாலும் நடந்தே வீதியில் திரிந்தனர். ஏதாவது அலுவலாகச் செல்வோர் குடுகுடுவென்ற ஓட்டநடையில் இருந்தார்கள். பஸ்கள் அவ்வப்போது கடந்து ஓடின. சைக்கிள்கள் கிணுகிணுத்தோடின. வீதிப் போக்குவரத்து ஜிங்தாவோவைப் பொறுத்தவரை அவ்வளவுதான்.

ஆங்காங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக, அன்றேல் சிறிய சிறிய குழுக்களாக அமர்ந்தும் உலவியும் கொண்டிருந்த ஒரு வெளியை அவன் அடைந்தபோதுதான் தெரிந்தது பெரிய அரங்கமாக ஒரு செங்கட்டிடம் இருந்தமை. யாரையும் கேட்காமலே அதுதான் அப்பகுதியின் செஞ்சதுக்கம் என்பதை கலாபன் ஊகித்துக்கொண்டான். சீனத்தின் மக்கள் கலாச்சாரத்தினது மையம் அது.

அங்கு சிறிதுநேரத்தைக் கழித்துவிட்டு வேறோரு திசையில் இன்னும் போக்குவரத்துக் குறைந்த தெருவழியே நடையைத் தொடர்ந்தான். வீதியின் இருமருங்குமிருந்த அகன்ற நடைபாதைகளிலே கயிற்றுக் கட்டிலைப் போட்டு தத்தம் சிறிய வீடுகளுக்கு முன்னால் வயதானவர்கள் விசிறியும் கையுமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் காணக்கூடிய சராசரி காட்சியாக இருந்தது அது. நோயில்லை, பசியில்லை, ஓய்வும் மகிழ்ச்சியுமாய் வாழ்வின் அந்தத்தை அனுபவிப்பதற்கான ஒரு வாழ்முறைதானே அனைத்து மனிதவுயிர்களினதும் காலகாலமான அபிலாசையாக இருந்துவருகிறது. அதை நிறைவாகக் கொடுத்திருந்தது மாவோவின் ஆட்சியென்பதை மானசீகமாக நம்பினான் கலாபன்.

விசித்திரம் என்பது நிறைவற்ற மனத்தில் எரிச்சலை உண்டாக்குகின்ற வேளையில், ஒரு திருப்திப்பட்ட மனத்தில் விளைக்கிறது ஆனந்தத்தை. அதைக் கண்கூடாய் சீனத்து மக்களின் கண்களில் தெறித்த உணர்வலைகளால் தெரிந்தான் கலாபன். ஆயிரம் மைல் நடந்து அறியவேண்டியதை தனியனாய்ப் புறப்பட்ட அந்தச் சிறுபயணத்தில் அடைந்திருந்த திருப்தி தன்னிடத்தில் இழையோட மாலை ஏழு மணியளவில் துறைமுகத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் ‘கடலோடிகளுக்கும் வெளிநாட்டவர்க்கும் மட்டு’மென ஆங்கிலத்திலும் சீனமொழியிலும் எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தை எதிர்ப்பட்டான் கலாபன்.

நீண்டதூர நடைக் களைப்பும், பசியும் உள்ளே நுழைய உந்தின அவனை.
பெரும்பாலும் உள்ளே மேசைகள் வெறுமையாகவே இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தது. மேசைமேல் பியர் போத்தல்கள் இருப்பதையும் கலாபன் கண்டான்.
சென்று ஒரு மேசையில் அமர்ந்த சிறிதுநேரத்துக்குள்ளேயே ஒரு பெண் வந்து அவனுக்கு என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டு மெனுக் கார்ட்டையும் கொடுத்தாள்.

முதலில் பியருக்கு சொன்னான். பியர் வந்ததும் மெனுவிலுள்ள ஒரு பிறைட் சிக்கனுக்கு ஓடர் கொடுத்தான்.

பியர் முடிகிற அளவில் உணவு வந்தது.

அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தயங்கித் தயங்கி அந்தப் பெண் அவனது மேசையை அணுகினாள். கலாபனின் மனம் துள்ளிவிழுந்தது. வெளிநாட்டவர்க்கும் கடலோடிகளுக்கும் ‘எதுவும்’ கிடைக்கிற இடமோ அதுவென எண்ணம் மேவியது.

அவள் வந்து மேசை முன்னால் நின்றதும் நிமிர்ந்த அவன் கண்களில் பட்டது அவளது நெஞ்சுதான். பின்னாலுள்ள பின்னலைப் பார்த்தால் தவிர சற்றுத் தூரத்தில்கூட அந்த உருவம் ஒரு பெண் என்பதை அடையாளம் கண்டுவிட முடியாதென்று தோன்றியது கலாபனுக்கு. ஆனாலும் என்ன, எறும்பும் தன் கையால் எண் சாண் என்பதுபோல, அந்தக் கட்டையான சிறிய உருவங்களுக்கும் அதனதன் அளவுக்கானது இருக்கும்தானே என எண்ணிக்கொண்டு அவளது முகத்தினைநோக்கி மலர்ச்சியோடு நிமிர்ந்தான்.

‘மன்னிக்கவேண்டும். நான் உங்களோடு சிறிதுநேரம் பேசமுடியுமா, ஐயா?’ என்று கேட்டாள் அவள்.

‘தாராளமாக’ என்றான் அவன்.

‘நான் ஷாங்காய் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கின்ற மாணவி. எனது முதன்மைப் பாடம் ஆங்கிலம். இப்போது எங்களுக்கு விடுமுறைக் காலமாதலால் ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சிக்காக இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். எங்கள் மாபெரும் தலைவர் மாசே துங்கின் தலைமையில் மாணவர்களுக்கு எதுவிதமான கஷ்டங்களும் இங்கேயில்லை. விடுமுறைகளில் வேலைசெய்துதான் பட்டப்படிப்பினை முடிக்கவேண்டுமென்ற நிலை இல்லாவிடினும், நாங்கள் இதுபோல வெளிநாட்டவர் வந்து செல்லும் இடங்களில் வேலைசெய்வது ஆங்கிலத்தைப் பேசிப் பழகுவதற்காகவே.’

இவ்வாறு அவள் கூறியதும் ஒரு விநாடியில் அவனுள் முளைவிட்ட தசைத் தினவு சரிந்து வீழ்ந்தது. உணர்வுகளை அடக்கி நெறிப்படுத்தும் கலையின் பயில்வாக அதையும்கொண்டு, ‘தாராளமாக. என்ன கேட்கப்போகிறீர்கள்?’ என்றான் கலாபன். ‘முதலில் நீங்கள் உட்கார்ந்துகொள்ளுங்கள் இப்படி. நீங்கள் பியர் அருந்துவீர்களா? ஒரு போத்தல் பியர் கொண்டுவாருங்கள் என் கணக்கில்.’

‘நன்றி, ஐயா. நான் குடிப்பதில்லை. மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களோடு உட்கார்ந்து பேசவும்கூடாது.’

‘சரி. என்ன கேட்கவேண்டுமோ, கேளுங்கள்.’

அவளது முதல் கேள்வியே அவனை ஆச்சரியப்படுத்தும்படி சிறுபிள்ளையினுடையதாய் இருந்தது. அவள் கேட்டாள்: ‘உங்களுடைய பெயர் என்ன?’

அவன் சொன்னான்.

‘உங்களுடைய அப்பா, அம்மாவினுடைய பெயரென்ன?’

அதையும் சொன்னான்.

‘நீங்கள் எத்தனை ஆண்டுகள் படித்திருக்கிறீர்கள்?’

‘ஜீசிஇ ஏஎல்வரை. பன்னிரண்டு ஆண்டுகள்.’

‘அந்த எழுத்துக்கள் சுட்டி நிற்கின்ற படிப்பு என்ன?’

விளங்கப்படுத்தினான்.

‘எதற்காக இப்போது செஞ்சீனம் வந்திருக்கிறீர்கள்?’

‘நான் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பல் இங்கே வந்ததால் வரநேர்ந்தது.’

அவன் மெதுவாகச் சாப்பிட்டு முடிகிறவரையில் மேலும் பத்து பன்னிரண்டு கேள்விகள் கேட்டு நிறுத்தினாள் பரிசாரகி.

பின், ‘நன்றி, ஐயா. மிகவும் நன்றி. நான் கேட்டது சொன்னது எல்லாவற்றினையும் உங்களால் சிரமமின்றிப் புரிந்துகொள்ள முடிந்ததா?’

‘புரிய முடிந்தது. ஆனாலும்…’

‘எனக்கு விளங்குகிறது, ஐயா. எங்கள் மொழியின் ஒலியமைப்புக்கு பயின்ற எங்கள் நாக்குகள், பிற மொழிகளை சிரமத்தோடேயே உச்சரிக்கின்றன. நான் N~க்ஸ்பியரும், மார்க் ட்வெயினும் பல்கலைக் கழகத்திலே படிக்கிறேன். அது சார்ந்த கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடை எழுதவும் என்னால் முடியும். ஆனாலும் பேச்சொலிதான் சிரமமாக இருக்கின்றது. மேலும் ஒவ்வோர் இனத்தினது ஆங்கில உச்சரிப்பும்கூட வித்தியாசமாக இருக்கின்றனதானே. அதற்காகவே இந்தப் பயிற்சி. சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நமது நோக்கத்தில் நாம் உறுதியாக இருந்து கற்கவேண்டுமென எமது மகத்தான தலைவர் மாசே துங் கூறுவார். மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, ஐயா. உங்களுக்கு வேறேதேனும் வேண்டுமா? அல்லது கணக்கை முடிக்கலாமா?’

‘கணக்கை முடிக்கலாம்.’

அவள் ஒரு சிட்டையைக் கொண்டுவந்து கொடுத்தாள். பார்துவிட்டு கணக்கு சரியாகத்தான் இருக்கிறதா என்று அவன் கேட்டதற்கு அவள் ஆமென்றதும் அவனுக்கு தலை சுற்றியது. ஒரு டொலருக்கும் குறைவான தொகை அது. ஒரு போத்தல் பியர், ஒரு பிறைட் றைஸ் ஒரு டொலரும் ஆகவில்லை.
அவன் பர்ஸில் தேடி ஒரு டொலர் நோட்டு ஒன்றே கிடக்கக்கண்டு எடுத்துக் கொடுத்தான்.

அவள் மீதியைக் கொண்டுவந்து வைத்துவிட்டு பணிவுடன் நன்றிகூறி அப்பால் நகர்ந்தான்.

மீதிக் காசை எடுப்பது நாகரிகமில்லையாமே. ஒருவகையில் அது சரியான நகர்வும்தான். சராசரி ஐந்து வீத உபசரிப்புச் சன்மானம் மேற்குலகில் சாதாரணம். கிண்ணத்திலுள்ள மீதி ஐந்து வீதமில்லாவிட்டாலும் மேலும் சிறு நோட்டாக வேறு இல்லாதலால்,  அவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.

அந்தக் கட்டிடத்தின் கடைசிப் படியை அவன் கடக்கவில்லை, ‘ஐயா…ஐயா’ என அழைத்தபடி யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு திரும்பினான்.
அவனுக்கு பரிசாரகம் செய்தவள்.

மூச்சு வாங்க ஓடிவந்தவள் அவனெதிரே நின்று, ‘உங்கள் மீதிப் பணத்தை நீங்கள் மறந்துபோனீர்கள்’ என்று சில்லறையை நீட்டீனாள்.

அவன் சிரித்துக்கொண்டு, ‘இது உங்களுக்கானதுதான்’ என்று தொடர்ந்து நடக்க முயன்றான்.

அவள் பாய்ந்து முன்னே வந்து, ‘இல்லை, ஐயா. ஊதியம் தவிர வேறெதையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, ஒப்புக்கொள்வதுமில்லை’ என்று மறுபடி ஏந்திய கையில் சில்லறையை நீட்டினாள்.

ஒரு சில விநாடிகளின் பின் தன்மானத்துக்கான பெரிய கவுரவத்தோடு அந்த சில்லறையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் விடைபெற்றான்.
கப்பலுக்கு வந்துசேர்ந்த வழியெங்கும் அவனிடத்தில் அமரிக்கையாய் எழுந்து நின்றது ஒரு எண்ணம். ‘நான் போதையில் இருக்கும்போது பெண்களைத் தேடுகிறேனா? அல்லது பெண்ணாசை தோன்றும்போது போதையைத் நாடுகின்றேனா? அத்தனை கால மண வாழ்க்கையில் என் மனைவியையும் போதை காரணமாகக் கிளர்ந்த காமத்துடன்தான் கூடவில்லையே! அவளுடன் சேர்கையில் தேவையில்லாதிருந்த போதை, இன்னொரு பெண்ணுடன் சேர்வதற்கு தேவையென்று ஆகின்றதன் சூட்சுமம் என்ன? பெண்ணுறவறுத்து கடலில் கழியும் நாட்கள் ஒரு தவனத்தை மிகைப்பித்தும், மரணம் எதிர் கலக மனநிலையொன்றை உண்டாக்கியும் இவ்விதமெல்லாம் ஆடவைக்கிறதா?’
அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அது சுலபத்தில் பதில் கிடைக்கக்கூடிய கேள்வியும் அல்லதான். பதில் கிடைக்காத நிலையில்கூட அக் கேள்வியின்; உதயம் ஒரு சிந்தனை மாறுபாட்டின் புள்ளியாகவே இருக்கும். புள்ளிகள்தானே கோடாக நீள்கின்றன. நீள் கோடேயெனினும் அது புள்ளிகளாலேயே அமைகின்றது.

கலாபன் இவ்வாறெல்லாம் எண்ணியிருப்பானோ என்னவோ, ஆனால் இந்த நிகழ்வை எழுதிய கடிதத்தை வாசித்த சிவபாலனுக்கு இவ்வாறே தோன்றியது.
அவன் தன் பதில் கடிதத்தில் இதைக் குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறாக வாசகங்கள் இருந்தன: ‘நீ ஒருபோது சித்தனாயும், மறுபோது பித்தனாயும் எழுதுகிறாய். உன்னை நன்கு அறிந்தவனென்ற வகையில் உன் சித்தப்போக்கே உன் சுயமென்று நினைக்கிறேன். நான் கம்பனைப் பிடித்திருக்கிறதென்றால், நீ ஒட்டக்கூத்தனைப் பிடிக்கிறதென்பாய். நான் புகழேந்தியைப் போற்றினால், நீ பட்டினத்தாரைப் போற்றுவாய். உன் சித்தம் நுண்மையானது. பித்தமென்பது என்ன? ஒன்றின் அதீத ஆழ்ச்சிதானே! காமப்பித்து. பணப்பித்து என எந்தப் பித்தும் உனக்கு நீ கடலோடியாய் ஆகின்றவரை இருக்கவில்லை. குடித்தாய். குடித்தோம். அதீத நிலை அடைந்ததில்லை. நீ சித்த மனநிலையோடேயே இருந்திருந்தாய். அந்த நிலையைத் தக்கவைத்து திரும்புவாய் என நம்புகிறேன்.’

00000

தாய்வீடு, பெப். 2015

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...