Saturday, February 07, 2015

கலாபன் கதை (பாகம் 2) 2‘காதல் வெறித்த நகர்’
--தேவகாந்தன்--

கொலம்பியாவின் புவனவெந்துரா துறைமுகத்தைவிட்டு கப்பல் புறப்படும்போது, ‘இங்குள்ள பார்களில் ஒரு பெண் காசினாலன்றி காதலினாலேயே கவரப்படுகிறாள்’ என்று அந்தத் துறைமுகத்தில் இறங்கிய முதல்நாளில் ஒரு உல்லாசியான முதியவர் சொன்ன வாசகம்  கலாபன் மனத்தில் மீண்டும் ஆழமாய்  நின்றிருந்தது.

மரியாவின் வீட்டினின்றும் திரும்பிய காலையிலிருந்து அன்று வெளியே செல்வதில்லையென்று பிடிவாதமாக நினைத்திருந்ததை அவனால் நிறைவேற்ற முடிந்திருந்தது. மறுநாளும் அந்த முடிவாகவே இருந்தும் மணி ஆறு ஆக, பின் ஏழு ஆக, நகர்சென்று ஒரு பியர் மட்டும் அருந்திவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணம் தலையெடுத்தது அவனுக்கு.

அவன் வெளிக்கிட்டு பார் சென்ற அளவில் பத்து மணி. பஸ்ஸிலே சென்றிருந்தான். அவன் உள்ளே சென்றபோது கண்படும் இடத்தில் உள்ள மேசையில் வாசலை நோக்கியபடி அமர்ந்திருந்தாள் மரியா.
அவனுக்காகவே காத்திருந்ததுபோல் கண்டதும் சிரித்தாள். அவளை மொத்தமாய் மறுதலிக்க இஷ்டமின்றி மேசையை அடைந்தான். அவளெதிரே உட்கார்ந்தான். ‘என்ன சொல்ல?’ எனக் கேட்டாள் மரியா. ஏற்கனவே தான் குடிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்லி பியர் போதுமென்றான் அவன்.

பன்னிரண்டு மணிவரை கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவனது ஊரைப்பற்றி, கப்பல் தொழில்பற்றி, கள்ள வழிகளிலேனும் ஐக்கிய அமெரிக்கா சென்றுசேரும் விருப்பம் தலையெடுத்துள்ள இளைய கொலம்பிய தலைமுறைபற்றியென பல்வேறு வி~யங்களை அவர்கள் பேசினார்கள். அன்று அந்த அற்புதமான கதைசொல்லியின் குரல் அடங்கியிருந்ததை அவன் கண்டான். அவனது கன்னத்தை அவ்வப்போது தடவியும், தலையைக் கோதியும், எழுந்தபோதுகளில் அவனை முத்தமிட்டும் கலகலப்பாய் இருந்தாளாயினும், போதையேறியிருந்த அந்த நிலையிலும்கூட அவனது உணர்ச்சிகளைக் கிளறும்விதமாக மரியா நடந்துகொள்ளாததைக் கவனித்தான் கலாபன். அவளாலன்றி ஒரு சந்தர்ப்பத்தாலேயே தான் ஏமாந்துபோனதாக அவன் எண்ணியிருந்தபோதும், அன்றைக்கு அவனிடத்திலேயே பாலுணர்வு கிளர்ந்தெழவில்லை.

‘புறப்படலாமா?’ என்று கேட்டு அவனே பில்லைக் கொடுத்துவிட்டு எழுந்தான். அவனோடேயே கூடிச் செல்லப்போவதுபோல அவளும் எழுந்து பின்தொடர்ந்தாள். ராக்ஸி நின்றவிடத்துக்கு நடந்தபோது, வெளிச்சம் குறைந்த இடத்தில் நின்று அவனைக் கட்டியணைத்து ஒரு நீண்ட முத்தமிட்ட மரியா சட்டென விலகி நின்று அவனை நிமிர்ந்து சில விநாடிகள் உற்றுநோக்கினாள். அந்த விழிகளின் அழைப்பினைத் துல்லியமாய்த் தெரிய முடிந்தது கலாபனால். அன்றைக்கு அவன் கப்பலுக்குத் திரும்புவதைத் தவிர வேறெதுவும் செய்யமாட்டானென்பதை புரிந்தவள்போல், ‘உனக்காகத்தான் இன்று வந்தேன். நேற்றும் வந்திருந்தேன்’ என்றுவிட்டு ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அந்தக் கணத்தில் அவளது கண்கள் பனித்திருந்த காட்சியில் தடுத்து நிறுத்தி கூடவே செல்லவேண்டும்போலிருந்தது கலாபனுக்கு. அவன் தன்னை அடக்கிக்கொண்டான். அவ்வளவு நிறைவை அவன் கூடிச்சென்றால்கூட அடைந்துவிட முடியாதென்று அவனுக்குப் பட்டது.

அவன் கப்பலுக்குச் சென்று அன்று நிம்மதியாக உறங்கினான் மரியாவின் முகத்தை மனத்தில் நிலையாக இருத்திக்கொண்டு.

கலாபனுக்கு முதல்நாளிலேயே தெரிந்திருந்தது, அங்கிருந்து கப்பல் சீனத் துறைமுகம் ஒன்றினுக்குச் செல்லவிருப்பதாக.

சீனத் துறைமுகங்களுக்குச் சென்றிருந்த கடலோடிகள் அங்கே இருந்திருந்தார்கள். காமம் காய்ந்த பெண்களாய் சீனத்துப் பெண்கள் இருப்பதுபற்றிய வர்ணிப்பு அங்கே கப்பல் முழுக்க வியாபகமாகிவிட்டது. கலாபனும் அதை அறிந்தானாயினும், மனம் வழி உடலை அடக்கும் கலையறியவருவதுபோல் உணர்ந்து அமைதியாயிருந்தான்.

கடல் கொந்தளிப்பு கூடிய காலமாயினும், வடமேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்ததுபோல் இந்து சமுத்திரம் மாதிரம் குலுங்க பொங்கிக்கொண்டிருக்கவில்லை அப்போது. ஒன்பதினாயிரம் தொன் சீனியை ஏற்றியிருந்த கப்பல் பெரிய பயணச் சிரமமின்றி இருபத்தியேழு நாட்களின் பின் சீனாவின் கீழ்ப்பகுதியில் மஞ்சள் கடல் குடாவிலிருந்த ஜிங்தாவோ துறைமுகத்தைச் சென்று சேர்ந்தது. 

ஏற்கனவே தெரிந்திருந்தபடியால் ஒரு எதிர்பார்ப்போ, ஒரு விசாரிப்போ இன்றி மாலை மூன்று மணியளவில் சும்மா நகரைப் பார்த்துவரலாமென கலாபன் தனியாகவே புறப்பட்டான். கூடிச்செல்ல யாரும் வெளிச்செல்லும் மனோநிலையோடும் இருக்கவில்லை.

துறைமுகத்துக்குத் திரும்ப சிரமமிருக்காது என்பதால் செல்லும் திசைகுறித்த கரிசனமேதும் அவனிடத்தில் இருக்கவில்லை. சீனப் பெருஞ்சுவர்பற்றி ஆரம்பத்தில் அறிந்திருந்த பாட விடயங்கள் தவிர, பின்னாளில் அழகிய தாளில், அழகிய அச்சில், அழகிய வர்ணப் படங்களுடன் சீன பெருநிலம்பற்றிய இலவச தமிழ் சஞ்சிகையை அவன் மாதம் மாதம் பெற்ற காலமொன்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நிலவியிருந்தது. வறுமையும், கொடிய நோய்களும் மலிந்த அந்த தேசத்தை கம்யூனிச ஆட்சி எவ்வாறு அடியோடு மாற்றிவைத்துள்ளது என கலாபன் பலமுறையும் வியந்திருக்கிறான். அந்த வியத்தகு நாட்டை தரிசிப்பது ஒன்றே அப்போதைய அவனது எண்ணத்தில் இருந்துகொண்டிருந்தது.

இருபத்துநான்கு, முப்பத்தாறு சில்லுகள் பொருத்திய பெரும்பெரும் பாரவண்டிகள் துறைமுகத்துக்கும், துறைமுகத்திலிருந்து நெடுஞ்சாலைக்குமாக பறந்துகொண்டிருந்தன. அதை லாவகமாக ஓட்டிச் சென்றவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதை அவர்களின் பின்னலிலிருந்து கண்டு பெரும் அதிசயம் பட்டான் அவன்.

அந்த நேரம்வரைக்கும் ஒரு கார் கண்ணில்படாத விந்தையும் அவன் கவனத்தில் பதிந்தது. மக்கள் பெரும்பாலும் நடந்தே வீதியில் திரிந்தனர். ஏதாவது அலுவலாகச் செல்வோர் குடுகுடுவென்ற ஓட்டநடையில் இருந்தார்கள். பஸ்கள் அவ்வப்போது கடந்து ஓடின. சைக்கிள்கள் கிணுகிணுத்தோடின. வீதிப் போக்குவரத்து ஜிங்தாவோவைப் பொறுத்தவரை அவ்வளவுதான்.

ஆங்காங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக, அன்றேல் சிறிய சிறிய குழுக்களாக அமர்ந்தும் உலவியும் கொண்டிருந்த ஒரு வெளியை அவன் அடைந்தபோதுதான் தெரிந்தது பெரிய அரங்கமாக ஒரு செங்கட்டிடம் இருந்தமை. யாரையும் கேட்காமலே அதுதான் அப்பகுதியின் செஞ்சதுக்கம் என்பதை கலாபன் ஊகித்துக்கொண்டான். சீனத்தின் மக்கள் கலாச்சாரத்தினது மையம் அது.

அங்கு சிறிதுநேரத்தைக் கழித்துவிட்டு வேறோரு திசையில் இன்னும் போக்குவரத்துக் குறைந்த தெருவழியே நடையைத் தொடர்ந்தான். வீதியின் இருமருங்குமிருந்த அகன்ற நடைபாதைகளிலே கயிற்றுக் கட்டிலைப் போட்டு தத்தம் சிறிய வீடுகளுக்கு முன்னால் வயதானவர்கள் விசிறியும் கையுமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் காணக்கூடிய சராசரி காட்சியாக இருந்தது அது. நோயில்லை, பசியில்லை, ஓய்வும் மகிழ்ச்சியுமாய் வாழ்வின் அந்தத்தை அனுபவிப்பதற்கான ஒரு வாழ்முறைதானே அனைத்து மனிதவுயிர்களினதும் காலகாலமான அபிலாசையாக இருந்துவருகிறது. அதை நிறைவாகக் கொடுத்திருந்தது மாவோவின் ஆட்சியென்பதை மானசீகமாக நம்பினான் கலாபன்.

விசித்திரம் என்பது நிறைவற்ற மனத்தில் எரிச்சலை உண்டாக்குகின்ற வேளையில், ஒரு திருப்திப்பட்ட மனத்தில் விளைக்கிறது ஆனந்தத்தை. அதைக் கண்கூடாய் சீனத்து மக்களின் கண்களில் தெறித்த உணர்வலைகளால் தெரிந்தான் கலாபன். ஆயிரம் மைல் நடந்து அறியவேண்டியதை தனியனாய்ப் புறப்பட்ட அந்தச் சிறுபயணத்தில் அடைந்திருந்த திருப்தி தன்னிடத்தில் இழையோட மாலை ஏழு மணியளவில் துறைமுகத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் ‘கடலோடிகளுக்கும் வெளிநாட்டவர்க்கும் மட்டு’மென ஆங்கிலத்திலும் சீனமொழியிலும் எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தை எதிர்ப்பட்டான் கலாபன்.

நீண்டதூர நடைக் களைப்பும், பசியும் உள்ளே நுழைய உந்தின அவனை.
பெரும்பாலும் உள்ளே மேசைகள் வெறுமையாகவே இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தது. மேசைமேல் பியர் போத்தல்கள் இருப்பதையும் கலாபன் கண்டான்.
சென்று ஒரு மேசையில் அமர்ந்த சிறிதுநேரத்துக்குள்ளேயே ஒரு பெண் வந்து அவனுக்கு என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டு மெனுக் கார்ட்டையும் கொடுத்தாள்.

முதலில் பியருக்கு சொன்னான். பியர் வந்ததும் மெனுவிலுள்ள ஒரு பிறைட் சிக்கனுக்கு ஓடர் கொடுத்தான்.

பியர் முடிகிற அளவில் உணவு வந்தது.

அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தயங்கித் தயங்கி அந்தப் பெண் அவனது மேசையை அணுகினாள். கலாபனின் மனம் துள்ளிவிழுந்தது. வெளிநாட்டவர்க்கும் கடலோடிகளுக்கும் ‘எதுவும்’ கிடைக்கிற இடமோ அதுவென எண்ணம் மேவியது.

அவள் வந்து மேசை முன்னால் நின்றதும் நிமிர்ந்த அவன் கண்களில் பட்டது அவளது நெஞ்சுதான். பின்னாலுள்ள பின்னலைப் பார்த்தால் தவிர சற்றுத் தூரத்தில்கூட அந்த உருவம் ஒரு பெண் என்பதை அடையாளம் கண்டுவிட முடியாதென்று தோன்றியது கலாபனுக்கு. ஆனாலும் என்ன, எறும்பும் தன் கையால் எண் சாண் என்பதுபோல, அந்தக் கட்டையான சிறிய உருவங்களுக்கும் அதனதன் அளவுக்கானது இருக்கும்தானே என எண்ணிக்கொண்டு அவளது முகத்தினைநோக்கி மலர்ச்சியோடு நிமிர்ந்தான்.

‘மன்னிக்கவேண்டும். நான் உங்களோடு சிறிதுநேரம் பேசமுடியுமா, ஐயா?’ என்று கேட்டாள் அவள்.

‘தாராளமாக’ என்றான் அவன்.

‘நான் ஷாங்காய் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கின்ற மாணவி. எனது முதன்மைப் பாடம் ஆங்கிலம். இப்போது எங்களுக்கு விடுமுறைக் காலமாதலால் ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சிக்காக இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். எங்கள் மாபெரும் தலைவர் மாசே துங்கின் தலைமையில் மாணவர்களுக்கு எதுவிதமான கஷ்டங்களும் இங்கேயில்லை. விடுமுறைகளில் வேலைசெய்துதான் பட்டப்படிப்பினை முடிக்கவேண்டுமென்ற நிலை இல்லாவிடினும், நாங்கள் இதுபோல வெளிநாட்டவர் வந்து செல்லும் இடங்களில் வேலைசெய்வது ஆங்கிலத்தைப் பேசிப் பழகுவதற்காகவே.’

இவ்வாறு அவள் கூறியதும் ஒரு விநாடியில் அவனுள் முளைவிட்ட தசைத் தினவு சரிந்து வீழ்ந்தது. உணர்வுகளை அடக்கி நெறிப்படுத்தும் கலையின் பயில்வாக அதையும்கொண்டு, ‘தாராளமாக. என்ன கேட்கப்போகிறீர்கள்?’ என்றான் கலாபன். ‘முதலில் நீங்கள் உட்கார்ந்துகொள்ளுங்கள் இப்படி. நீங்கள் பியர் அருந்துவீர்களா? ஒரு போத்தல் பியர் கொண்டுவாருங்கள் என் கணக்கில்.’

‘நன்றி, ஐயா. நான் குடிப்பதில்லை. மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களோடு உட்கார்ந்து பேசவும்கூடாது.’

‘சரி. என்ன கேட்கவேண்டுமோ, கேளுங்கள்.’

அவளது முதல் கேள்வியே அவனை ஆச்சரியப்படுத்தும்படி சிறுபிள்ளையினுடையதாய் இருந்தது. அவள் கேட்டாள்: ‘உங்களுடைய பெயர் என்ன?’

அவன் சொன்னான்.

‘உங்களுடைய அப்பா, அம்மாவினுடைய பெயரென்ன?’

அதையும் சொன்னான்.

‘நீங்கள் எத்தனை ஆண்டுகள் படித்திருக்கிறீர்கள்?’

‘ஜீசிஇ ஏஎல்வரை. பன்னிரண்டு ஆண்டுகள்.’

‘அந்த எழுத்துக்கள் சுட்டி நிற்கின்ற படிப்பு என்ன?’

விளங்கப்படுத்தினான்.

‘எதற்காக இப்போது செஞ்சீனம் வந்திருக்கிறீர்கள்?’

‘நான் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பல் இங்கே வந்ததால் வரநேர்ந்தது.’

அவன் மெதுவாகச் சாப்பிட்டு முடிகிறவரையில் மேலும் பத்து பன்னிரண்டு கேள்விகள் கேட்டு நிறுத்தினாள் பரிசாரகி.

பின், ‘நன்றி, ஐயா. மிகவும் நன்றி. நான் கேட்டது சொன்னது எல்லாவற்றினையும் உங்களால் சிரமமின்றிப் புரிந்துகொள்ள முடிந்ததா?’

‘புரிய முடிந்தது. ஆனாலும்…’

‘எனக்கு விளங்குகிறது, ஐயா. எங்கள் மொழியின் ஒலியமைப்புக்கு பயின்ற எங்கள் நாக்குகள், பிற மொழிகளை சிரமத்தோடேயே உச்சரிக்கின்றன. நான் N~க்ஸ்பியரும், மார்க் ட்வெயினும் பல்கலைக் கழகத்திலே படிக்கிறேன். அது சார்ந்த கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடை எழுதவும் என்னால் முடியும். ஆனாலும் பேச்சொலிதான் சிரமமாக இருக்கின்றது. மேலும் ஒவ்வோர் இனத்தினது ஆங்கில உச்சரிப்பும்கூட வித்தியாசமாக இருக்கின்றனதானே. அதற்காகவே இந்தப் பயிற்சி. சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நமது நோக்கத்தில் நாம் உறுதியாக இருந்து கற்கவேண்டுமென எமது மகத்தான தலைவர் மாசே துங் கூறுவார். மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, ஐயா. உங்களுக்கு வேறேதேனும் வேண்டுமா? அல்லது கணக்கை முடிக்கலாமா?’

‘கணக்கை முடிக்கலாம்.’

அவள் ஒரு சிட்டையைக் கொண்டுவந்து கொடுத்தாள். பார்துவிட்டு கணக்கு சரியாகத்தான் இருக்கிறதா என்று அவன் கேட்டதற்கு அவள் ஆமென்றதும் அவனுக்கு தலை சுற்றியது. ஒரு டொலருக்கும் குறைவான தொகை அது. ஒரு போத்தல் பியர், ஒரு பிறைட் றைஸ் ஒரு டொலரும் ஆகவில்லை.
அவன் பர்ஸில் தேடி ஒரு டொலர் நோட்டு ஒன்றே கிடக்கக்கண்டு எடுத்துக் கொடுத்தான்.

அவள் மீதியைக் கொண்டுவந்து வைத்துவிட்டு பணிவுடன் நன்றிகூறி அப்பால் நகர்ந்தான்.

மீதிக் காசை எடுப்பது நாகரிகமில்லையாமே. ஒருவகையில் அது சரியான நகர்வும்தான். சராசரி ஐந்து வீத உபசரிப்புச் சன்மானம் மேற்குலகில் சாதாரணம். கிண்ணத்திலுள்ள மீதி ஐந்து வீதமில்லாவிட்டாலும் மேலும் சிறு நோட்டாக வேறு இல்லாதலால்,  அவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.

அந்தக் கட்டிடத்தின் கடைசிப் படியை அவன் கடக்கவில்லை, ‘ஐயா…ஐயா’ என அழைத்தபடி யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு திரும்பினான்.
அவனுக்கு பரிசாரகம் செய்தவள்.

மூச்சு வாங்க ஓடிவந்தவள் அவனெதிரே நின்று, ‘உங்கள் மீதிப் பணத்தை நீங்கள் மறந்துபோனீர்கள்’ என்று சில்லறையை நீட்டீனாள்.

அவன் சிரித்துக்கொண்டு, ‘இது உங்களுக்கானதுதான்’ என்று தொடர்ந்து நடக்க முயன்றான்.

அவள் பாய்ந்து முன்னே வந்து, ‘இல்லை, ஐயா. ஊதியம் தவிர வேறெதையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, ஒப்புக்கொள்வதுமில்லை’ என்று மறுபடி ஏந்திய கையில் சில்லறையை நீட்டினாள்.

ஒரு சில விநாடிகளின் பின் தன்மானத்துக்கான பெரிய கவுரவத்தோடு அந்த சில்லறையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் விடைபெற்றான்.
கப்பலுக்கு வந்துசேர்ந்த வழியெங்கும் அவனிடத்தில் அமரிக்கையாய் எழுந்து நின்றது ஒரு எண்ணம். ‘நான் போதையில் இருக்கும்போது பெண்களைத் தேடுகிறேனா? அல்லது பெண்ணாசை தோன்றும்போது போதையைத் நாடுகின்றேனா? அத்தனை கால மண வாழ்க்கையில் என் மனைவியையும் போதை காரணமாகக் கிளர்ந்த காமத்துடன்தான் கூடவில்லையே! அவளுடன் சேர்கையில் தேவையில்லாதிருந்த போதை, இன்னொரு பெண்ணுடன் சேர்வதற்கு தேவையென்று ஆகின்றதன் சூட்சுமம் என்ன? பெண்ணுறவறுத்து கடலில் கழியும் நாட்கள் ஒரு தவனத்தை மிகைப்பித்தும், மரணம் எதிர் கலக மனநிலையொன்றை உண்டாக்கியும் இவ்விதமெல்லாம் ஆடவைக்கிறதா?’
அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அது சுலபத்தில் பதில் கிடைக்கக்கூடிய கேள்வியும் அல்லதான். பதில் கிடைக்காத நிலையில்கூட அக் கேள்வியின்; உதயம் ஒரு சிந்தனை மாறுபாட்டின் புள்ளியாகவே இருக்கும். புள்ளிகள்தானே கோடாக நீள்கின்றன. நீள் கோடேயெனினும் அது புள்ளிகளாலேயே அமைகின்றது.

கலாபன் இவ்வாறெல்லாம் எண்ணியிருப்பானோ என்னவோ, ஆனால் இந்த நிகழ்வை எழுதிய கடிதத்தை வாசித்த சிவபாலனுக்கு இவ்வாறே தோன்றியது.
அவன் தன் பதில் கடிதத்தில் இதைக் குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறாக வாசகங்கள் இருந்தன: ‘நீ ஒருபோது சித்தனாயும், மறுபோது பித்தனாயும் எழுதுகிறாய். உன்னை நன்கு அறிந்தவனென்ற வகையில் உன் சித்தப்போக்கே உன் சுயமென்று நினைக்கிறேன். நான் கம்பனைப் பிடித்திருக்கிறதென்றால், நீ ஒட்டக்கூத்தனைப் பிடிக்கிறதென்பாய். நான் புகழேந்தியைப் போற்றினால், நீ பட்டினத்தாரைப் போற்றுவாய். உன் சித்தம் நுண்மையானது. பித்தமென்பது என்ன? ஒன்றின் அதீத ஆழ்ச்சிதானே! காமப்பித்து. பணப்பித்து என எந்தப் பித்தும் உனக்கு நீ கடலோடியாய் ஆகின்றவரை இருக்கவில்லை. குடித்தாய். குடித்தோம். அதீத நிலை அடைந்ததில்லை. நீ சித்த மனநிலையோடேயே இருந்திருந்தாய். அந்த நிலையைத் தக்கவைத்து திரும்புவாய் என நம்புகிறேன்.’

00000

தாய்வீடு, பெப். 2015

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...