Tuesday, March 31, 2015

கலாபன் கதை (பாகம்2) 3

கலாபன் கதை (பாகம்2) 3
-தேவகாந்தன்

கிழக்கும் மேற்கும்

பண்பு என்ற சொல்லடியாகப் பிறந்த பண்பாடு என்பது அந்தந்த  மண்ணுக்கேற்ப ஒரு சமூகத்தில் காலகாலமாக தானாய் வளர்ந்து வந்திருப்பதுதான். அதை யாரும் திட்டமிட்டு வளர்த்திராததைப்போலவே, யாராலும் திட்டமிட்டு வளர்க்கவும் முடியாதது. அதைக் காப்பாற்றுவதென்பதுகூட போலியான சங்கற்பம்தான். ஆயினும் அது வாழ்நிலைமைக்கும், பூகோளத்தின் தன்மைக்குமேற்ப ஓரளவிலேனும் மாறிக்கொண்டேதான் வந்திருக்கிறது.

 மட்டுமில்லை, எல்லா பண்பாடுகளுள்ளும் உள்ளோடிய ஒரு ஒற்றுமையும் இருக்கிறது. கள்ளும், களவும், காமமும், பொய்யும் எந்தச் சமூகத்தில் மதிக்கப்பட்டிருக்கின்றன? மது, வீடுகளின் விருந்துபசாரமாக இருக்கும் நாடுகளில்கூட வெறி கொண்டாடப்படுவதில்லை. காமம் இறுக்கமாக அடைபட்டிராத நாடுகளில்கூட அதீத புணர்ச்சி போற்றப்படுவதில்லை. பொருத்தமற்றற உறவுகள் எங்குமே விதந்தோதப்படுவதில்லை. அந்தந்த மீறல்கள் அங்கீகரிக்கப்படுவது ஒவ்வொரு சமூகத்திலும் கூடியோ குறைந்தோ இருந்தேதான் வருகின்றன. கிழக்கினதும் மேற்கினதும் பண்பாடுகூட இப்படியானதுதான். வளைதிறன் உள்ளது.

கலாபன் இவ்வாறெல்லாம் தெளிவாகச் சிந்தித்தானென்று சொல்லமுடியாவிட்டாலும், அவனுக்கு அந்த விஷயத்தை உள்வாங்க முடிந்திருந்தது. அந்தந்த மக்களுக்கு அந்தந்தக் கலாசாரங்கள் உயர்வானவை என்பதை அவன் ஒருபோது தன் கடலோடி நண்பனொருவனை எதிர்பாராதவிதமாக ருமேனியாவின் மிகப் பெரிய நகரான கொன்ஸ்ரன்ராவின் துறைமுகம் போர்ட் கொன்ஸ்ரன்ராவில் சந்தித்தமைபற்றி ஊர் நண்பனுக்கு எழுதிய வேளையில் விளக்க நேர்ந்தது.
கலாபனின் சீ பேர்ட் கப்பலுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது அவனது நண்பன் சண்முகத்தின் கப்பல். எதிர்பாராதவிதமாக ஏற்பட்டதுதான் அந்தச் சந்திப்பும்.

ஒரு பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியில் கப்பல்களின் அமைப்பிலும், சரக்கேற்றும் முறையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்த எழுபதுகளின் பிற்காலப் பகுதி அது. ஒருகாலத்தில் துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் சிப்பப் பொதிகளிலிருந்து துணிச் சிப்பங்கள்  காணப்பட்டு துறைமுகத் தொழிலாளராலும், கடலோடிகளாலும் களவாக துணிச் சுருள்கள் உருவியெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. துபாய் துறைமுகத்தில் அவனே தன் கண்கொண்டு அதைக் கண்டிருக்கிறான். அவனது கப்பலில் வேலைசெய்தவர்களும் தாங்கள் உருவிய துணிச் சுருள்களைக் காட்டி இலவசமாகக் கிடைத்ததென்று விபரம் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அது சாத்தியமில்லை. பெரிய பெரிய கென்ரெயினர்களில் அம்மாதிரி சரக்கெல்லாம் அடைக்கப்பட்டு வந்துகொண்டிருந்தன. சிறிய சிறிய கப்பல்களுக்குப்; பதிலாக 45,000, 54,000 தொன் சரக்கேற்றும் பெரும்பெரும் கென்ரெயினர் கப்பல்கள் இப்போது ஐந்து சமுத்திரங்களையும் கிழித்தபடி திரிந்துகொண்டிருந்தன.

திமிங்கிலம் கப்பலைக் கவிழ்த்த நிகழ்வுகள் நூற்றாண்டுக்கும் மேலான பழமைபற்றிப் போயின. திமிங்கிலங்களை துண்டுதுண்டாகக் கீறி எறியும் இராட்சத நாவாய்களின் காலம் பிறந்திருந்தது. நாற்பது பேர் வேலை செய்த ஒரு கப்பலுக்கு இப்போதெல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இருபது பேர் போதுமானதாக இருந்தது. அளவற்ற உடல்பலம் தேவையென்றிருந்த நிலை மாறி, தொழில்நுட்ப அறிவின் பலம்பட்டும் போதுமானதாகியிருந்தது.

அதனால் பழைய கப்பல்களைப் பெரும்பாலும் கொண்டிருந்த கப்பல் கம்பெனிகள் தொழிலற்று மூடப்படும் அபாய நிலைக்கு வந்துகொண்டிருந்தன.
சமுத்திரங்களில் ஆதிபத்தியம் செலுத்திய கிரேக்க கப்பல் கம்பெனிகள் சரித்திரமாய்ச் சுருங்க ஆரம்பித்திருந்த வேளையும் அதுதான். Pரூழு இ ஆயநசளம கம்பனிகள் மேலேமேலே சென்றுகொண்டிருந்தன. ஒனாஸிஸ் என்ற பெயர் கப்பல் துறை உலகத்தில் மந்திரமாயிருந்த நிலை மாயமாக மறைந்தது. பல கிரேக்க கம்பெனிக்     கப்பல்கள் இரும்பு விலைக்கு விற்கப்பட்டன.

அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் கலாபன் வேலை செய்த கப்பல் கம்பெனி மிகக் குறைந்த ஊதியத்தில் கம்யூனிச நாடுகளுக்கிடையிலான சரக்கேற்றுவதற்கு சம்மதித்து தொழில் நடத்திக்கொண்டிருந்தது. அதனால்தான் அவன் வேலைசெய்த கப்பல் பெரும்பாலும் சீனாவென்றும், ருமேனியாவென்றும் கம்யூனிச நாடுகளாக அலைந்துகொண்டிருந்தது.
சென்ற தடவை சீனாவுக்குச் சென்ற கப்பல், அங்கிருந்து ருமேனியாவுக்கு வந்திருந்தது. ருமேனியாவும் கம்யூனிச நாடென்பதால் சீனாவிலிருந்து பெரிதான மாற்றத்தை கலாபன் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அது ஐரோப்பிய நாடென்பதால் ஒருவித நப்பாசையும் உடனிருந்தது.

எதிர்பாராதவிதமாகச் சந்தித்த நண்பனின் அறைக்கு அன்று அவன் சென்றபோது, அவன் செய்துவைத்திருந்த அறை அலங்காரத்தில் கலாபனுக்கே ஆச்சரியமாகிப்போனது. 3இன்1 என்ன, 100வாட்ஸ் வலுவள்ள இசையை நுண்மையாய் ரசிப்பதற்கான ஸ்பீக்கர்கள் என்ன, நிறவிளக்குகள் என்ன, இசைக்கேற்ப அவற்றின் ஏற்ற இறக்கங்கள்  என்ன, நிறைந்த சுவர்ப் படங்களென்ன…அற்புதமான காட்சியாகவிருந்தது அது.

மெல்ல மதுபானம் வேலைசெய்யத் தொடங்கத்தான் சுவர்ப் படங்கள் கலாபனின் கவனத்தில் பட்டன. அவ்வளவும் பெரிய பெரிய தனங்களும், வாளிப்பான கால்களும் கொண்ட அழகிய பெண்களின் நிர்வாணப் படங்கள். மதுவும், படங்களும் மனத்தை அருட்டின. சீனத்தில் அடங்கச் சம்மதித்த சபலம் கிளர்ந்துநின்று தார்மீகங்களைப் பலிகேட்டுக்கொண்டிருந்தது.
‘கபினுக்குள்ளயே ஒரு டிஸ்கோ பார் நடத்திக்கொண்டிருக்கிறாய்போல’ என்று வியந்த கலாபன், தன் நகைப்பிற்குரிய சந்தேகத்தை நண்பனிடமே கேட்டான்: ‘அதுசரி, இந்தமாதிரி லைஃப் சைஸ் படங்களை வைச்சுக்கொண்டு எப்பிடி உன்னால நித்திரைகொள்ள ஏலுது? உடம்பு மெலிஞ்சுகொண்டு போகாதோ?’

நண்பன் சிரித்தான். போதையோடு திரும்பிப் பார்த்தான் ஒருபடத்தை. பிறகு, ‘கலாபன், அந்தப் படத்தைப் பார். வாவெண்டு கூப்பிடுறமாதிரியே இருக்கெல்லே? நான் வைச்சிருக்கிற எந்தப் படத்தைப் பாத்தாலும் உயிரோடிருக்கிற மாதிரியே இருக்கும். தினம்தினம் பாத்துப் பாத்து…இப்ப நான் மரத்துப்போனன், மச்சான். நான் இதுகளை இந்தமாதிரி யோசினையள மறக்கிறதுக்காகத்தான் வைச்சிருக்கிறனெண்டும் வையன்’ என்றான்.
அதற்கு ஏதோ சொல்ல கலாபன் உன்னுகிறவேளை, வெளியே கதவு தட்டிக்கேட்டது. நண்பன் எழுந்து கதவைத் திறந்தான்.

ஒரு ருமேனியன் நின்றுகொண்டிருந்தான். சிரித்தான் அளவுக்கு அதிகமாக. பின் அழகான ஆங்கிலத்தில் சொன்னான்: ‘ இங்கே துறைமுகத்தில்தான் வேலை செய்கிறேன். சரக்கேற்றும் தொழிலாளிகளின் சூப்பர்வைஸர்.’
‘உன்னை நான் வெளியே கண்டிருக்கிறேன்.’ நண்பன் நட்புடன் சொன்னான்.

‘நீ எங்கேயும் வெளியே போகாமல் துறைமுகத்திலேயே பார்வையைப் பதித்துக்கொண்டு டெக்கில் நிற்பதை நானும் கவனித்திருக்கிறேன். இப்படி எல்லோருடைய அறைக் கதவையும் போய் தட்டிவிட முடியாது. எல்லாரிடமும் இவ்வாறு பேசிவிடவும் முடியாது. நட்பான பார்வை, அதற்கான இளகிய முகம் காணாவிட்டால் நானாகச் சென்றும் ஒருவருடன் கதைத்துவிட மாட்டேன். ஒரு வெளிநாட்டு குடிக்காக ஒரு மாதமாக வதங்கிக்கொண்டிருக்கிறேன். பதிலாக உனக்கு எங்களது ருமேனியா விஸ்கி வேண்டுமானால் தருகிறேன்.’

நண்பன் பதில்சொல்ல யோசித்ததுபோலிருந்தது.
‘அவனை உள்ள கூப்பிடு, மச்சான். தண்ணி காணாதெண்டா நான் என்ர கபினிலயிருந்து கொண்டாறன்’ என்றான் கலாபன்.
‘இல்லை, என்னிட்டயே இருக்கு’ என்ற நண்பன் உள்ளே அழைத்தான் அந்த ருமேனியனை.

அமர்வதற்கு முன் சுவரைப் பார்த்துவிட்டு, ‘வாவ்’ என்று குரலெழுப்பிச் சிரித்தான் அவன்.

அது ஒன்றும் வெட்கப்படவேண்டிய காரியமில்லை ஒரு கடலோடியைப் பொறுத்தவரை.

ருமேனியன் தன்னை டிமித்ரியென்று அறிமுகப்படுத்திக்கொண்டான். இலங்கை நண்பர்களும் தம்மை கலாவென்றும், சண் என்றும் அறிமுகப்படுத்தினார்கள்.

மூவரும் குடிக்கவாரம்பித்தனர்.

கப்பல் எப்போது திரும்பும், குளிர் இரவில் அங்கே எவ்வளவு கடுமையாக இருக்கும் போன்ற பொதுவான வி~யங்களாக பேச்சின் ஆரம்பம் இருந்தது. பேச்சைத் திசைதிருப்பி கலாபன் ஒருபோது கேட்டான்: ‘நீ இந்த நாட்டு அரசியலை விரும்புகிறாயா?’

டிமித்ரி அதிர்ந்து போனான். அவனிடமிருந்து ஒரு முழு நிமிட நேரத்துக்கு பதிலே வரவில்லை. ‘தண்ணி’ தருகிறவர்கள் என்பதற்காக மனத்தில்பட்டதை அப்படியே சொல்லாமல் விட்டுவிட டிமித்ரி தயாராக இருக்கவில்லையென்பதை அவனது பதில் நிரூபித்தது.

‘என்ன கேள்வி இது? முட்டாள்தனமாய் இருக்கிறதே! நான் என் நாட்டை, எவரும் தன் நாட்டை விரும்புவதுபோல்தான் விரும்புகிறேன். இதன் அரசியலை மேற்கு நாடுகள் விரும்பவில்லையென்பது எனக்குத் தெரியும். மேற்கு நாடுகளின் கருத்துகளைக் கேட்டவர்களுக்கும் விருப்பமில்லாது போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் இங்கே பிறந்து, இங்கே கல்வி கற்று, வளர்ந்தவன். இங்கே இருந்த கடந்த இரண்டு உலகப் போர்களினாலும் விளைந்த வறுமையையும், பசியையும் இந்த அரசியலால்தான் தீர்த்துவைக்க முடிந்தது. ர~;ய மேலாண்மை பலருக்கும் இஷ்டமில்லாதிருக்கிறது என்றபோதிலும், மேற்கின் செல்வாக்கு இங்கே மேலோங்குவதைவிட அந்த மேலாண்மையே மேலென்பதுதான் பலரின் அபிப்பிராயமும். பல எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்த நாட்டைவிட்டு ஓடிவிட்டார்கள். ஓடிப்போய் எழுத்தாளர்களாயும், கவிஞர்களாயும் ஆனாவர்கள்தான் அவர்களில் அதிகம் என்பதே உண்மை. ஆனால் அவர்கள் சொன்ன காரணங்கள் பொய்யானவை. ஒப்புக்கொள்ள முடியாதவை. இங்கிருந்து ஓடியவர்களில் பெரும்பான்மையினர் ஐக்கிய அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், இங்கிலாந்துக்கும்தான் ஓடியிருக்கிறார்கள். அண்டை நாடுகளான டென்மார்க்கிலோ, நோர்வேயிலோ, சுவீடனிலோ சென்று தஞ்சமடையவில்லை என்பதைக்கொண்டு ஒருவரால் என்ன முடிவுக்கு வரமுடிகிறது? இங்கே அவர்களுக்கான ஜனநாயகமில்லையாம். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். அப்போது அவர்களுக்கான தார்மீகக் கடமை என்னவாகிறது? இங்கேயிருந்து அதற்காகப் போராடுவதல்லவா? சரி, அதையும் செய்ய முடியாதபடி அரசின் கெடுபிடி இருப்பதாகக் கொண்டாலும், அவர்கள் அயல்நாடுகளுக்கு ஓடி அங்கேயிருந்து போராட்டத்துக்கான முன்முயற்சிகளைச் செய்வதல்லவா சரியான செயற்பாடு? ஓடியவர்கள் ஜனநாயக விரும்பிகளாயல்ல, பணநாயக விரும்பிகளாயிருந்ததுதான் இதன் மூலகாரணம்.’

வாயடைத்திருந்த நண்பர்களில் கலாபன் ஒருவாறு தெளிந்து நிலைமையைச் சமாளிக்க முயன்றான். ‘மன்னிக்கவேண்டும், நண்பரே. நான் அரசியல் பேசியிருக்கக்கூடாது.’

‘நீங்கள் பேசியிருக்கலாம். ஆனால் உண்மையைத் தெரிந்துகொண்டு பேசியிருக்கவேண்டும்’ என்றான் டிமித்ரி.

அவனது கோபம் மாறியிருந்தும், அவன் சிரிக்க நெடுநேரமானது.
இயல்புநிலை திரும்பிய ஒருபோதில் கலாபன் சொன்னான்: ‘உங்கள் கருத்துக்கள் மேற்கின் கருத்துக்களுக்கு மாறானவைதான். ஆனாலும் இத்தகைய ஒரு அரசாங்கத்தை நீங்களே விரும்புகிறபோது அவர்கள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லாதே போகிறது. எங்கள் நாட்டைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன ஒடுக்குமுறைக்கான ஆயுதப் போராட்டம் அங்கே ஆரம்பித்திருக்கிறது. எவ்வாறு இது முடியுமென்றெல்லாம் இப்போதே எங்களால் சொல்லமுடியாது. ஆனாலும் நாளுக்கு நாள் போராட்டம் வளர்கிற போதிலேயே மேற்குலகுக்கான ஓட்டமும் அங்கே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக மேற்குலகைநோக்கி ஓடுவதைப்பற்றி, நீங்கள் உங்கள் நாட்டு எழுத்தாளர்களையும் கவிஞர்களையும்பற்றிச் சொன்ன பிறகு, நாங்களும் யோசிக்கவேண்டுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது.’

‘அதுதான் செய்யவேண்டியது. வாருங்கள் ஒருநாளைக்கு வெளியே கூட்டிச்செல்கிறேன். நீங்களே பாருங்கள் எங்கள் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், இயல்பாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென்பதை’ என்று கூறிய டிமித்ரி, ‘நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன். நான் அவ்வளவு காட்டமாக உங்களுடன் பேசியிருக்கக்கூடாதுதான்’ என்றான்.
பேச்சு பல விஷயங்களில் மேலே பற்றிப்படர்ந்தது.

சண் ஒருபோது கேட்டான், ‘இங்கே நகரத்து உணவு விடுதிகள், நடன விடுதிகள் எப்படி? சனி அல்லது ஞாயிறுகளில் அவற்றின் விசேஷம் என்ன?’ என்று.
டிமித்ரி சிரித்தான். ‘உங்கள் விருப்பங்கள் எனக்குப் புரிகிறது, நண்பர்களே! உங்களை அழைத்துச் சென்று காட்டமுடியாத நிலையிலிருக்கிறேன் நான். அவை இங்குள்ள கலாச்சாரத்துக்கு இயைந்தவைதான். கேளிக்கைகளுக்கு பெருமளவு இடமில்லை அங்கே. நாங்கள் மேற்கோடு மாறுபடுகிற இடங்களில் இதுவும் ஒன்று. அதற்காக இங்கே யாரும் காதலிப்பதே இல்லையென்றோ, திருமண உறவைமீறிய தொடர்புகள் கொள்வதில்லையென்றோ அர்த்தமாகிவிடாது. உலகின் எல்லா இடங்களும், எல்லா மனிதர்களும் ஒரேமாதிரித்தான். ஒரு கிராமத்தில் செய்ய முடியாததை ஒரு நகரத்தில் சுலமாகச் செய்யமுடியுமல்லவா? அதுபோலத்தான் இது. ஒரு நாட்டில் சுலபமாக, சட்டபூர்வமாகச் செய்யமுடிவதை, இன்னொரு நாட்டில் சட்டபூர்வமில்லாவிட்டாலும் சிறிது முயற்சியில் செய்யமுடியும்.’

மேலே பேச்சில் சுவாரஸ்யம் ஏறியது.

ஆனாலும் அவர்கள் பாலியல் தொழிலாளர்பற்றி, நடன கூடங்களில், மது விடுதிகளில் ஏற்படக்கூடிய விருப்பார்வ பாலியல் உறவுகள்பற்றி பேச முனைப்பெடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அநாயாசமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தான் டிமித்ரி.

தன் நாட்டை தானே காட்டிக்கொடுக்க அவன் தயாராகவில்லை என்பதை அவர்கள் புரிந்தனர்.

பன்னிரண்டு மணியளவில் அவர்கள் பிரிந்தபோது, கலாபன் மனத்தில் எஞ்சியிருந்த உடல் தவனம் ஒரு சுமையாக அழுத்திக்கொண்டிருக்கவில்லை.
ஆயினும் தானே சென்று நகரத்தை, மக்களது இயக்கத்தை மறுநாள் கண்டுகொள்ளவேண்டுமென தீர்மானித்துக்கொண்டான்.

மறுநாள் மாலை நான்கு மணியளவில் தனியாகவே புறப்பட்டான். ஒரு வாசல் பகுதியைநோக்கி நடந்து சென்றவன் தொழிலாளர் கூடியிருந்த ஒரு இடத்தில் தங்கிநின்று ராக்ஸி ஏதாவது வருகிறதாவென பார்த்தான். பஸ்தான் வந்தது. அது துறைமுகத் தொழிலாளருக்கான பஸ் என்பது புரிந்தது. அவனால் துறைமுகவாசல்வரை நடந்தே போய்விடமுடியாது, அது ஏறக்குறைய முப்பது மைல் பரப்பளவுகொண்ட பெரிய துறைமுகம், அவனும் அந்த பஸ்ஸிலேயே துறைமுக எல்லைவரை செல்லலாம் என ஒரு பெண் அவனது அந்நியத் தன்மையிலிருந்து நிலைமையை ஊகித்துக்கொண்டு சொன்னாள். கையிலே புத்தகமொன்றை வைத்திருந்தாள். அது பலபேரிடம் அவன் அங்கே கண்டது, தன் நாட்டைவிட தொழிலாளர்களிடையேயுள்ள வாசிப்புப் பழக்கத்தை அவன் புரிந்தான்.

கலாபன் ஏறினான். பணமே கொடுக்கவேண்டியிருக்கவில்லை அவன். தொழிலாளருக்காகவும், கப்பலில் வருபவர்களுக்காகவும் இலவசமாக இயங்கும் அரசுப் பேருந்து அது.

ஒரு தரிப்பிடத்தில் இன்னும்; சில தொழிலாளர் ஏறினர். அவனருகே இடமின்றி நின்றிருந்த ஒரு முதியவரைக் கண்டு எழுந்து தன்னிடத்தைக் கொடுக்க முன்வந்தான் கலாபன். அவர் சிரித்துக்கொண்டே, தான் இன்னுமே ஒரு வேலைசெய்யும் தொழிலாளியென்றும், அவனைக் கவலைப்பட வேண்டாமென்றும் கூறினார். சிலர் அவரின் வார்த்தையைக் கேட்டு சிரித்த மெல்லொலி கலாபனை சிறிது வெட்க வைத்தது.

இருக்கையில் மறுபடி அமர்ந்தவன், அதைச் சொல்லும்போது அந்த முதியவர் முகத்தில் தென்பட்ட கர்வத்தை நினைத்தான்.

அவ்வாறான ஒரு கர்வத்தை கொண்டிருக்கக்கூடிய ஒரு வாழ்முறை எதுதான் இல்லாத போதும் செழிப்பான வாழ்க்கையே என்பதை அவனுக்கு ஒத்துக்கொள்ளவேண்டியே இருந்தது. ஒருவேளை மேற்குலகில் இல்லாத செல்வம் அதுதானென்றும் நினைத்தான்.

000

அன்றிரவு தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கதை எழுதினான் கலாபன்.

‘ஒரு இந்தியன் வேலைசெய்த ஒரு கப்பலிலே கூட வேலைசெய்யும் ஒரு கிரேக்க மாலுமி அவனிடம் இவ்வாறு சொல்லி ஒருமுறை கேலிபண்ணினான்: ‘நீ இந்தியனா? ஓ…நான் பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு எல்லாம் போயிருக்கிறேன். அந்த இடங்களிலெல்லாம் நாத்தம் மூக்கைத் துளைத்துவிடும். மாடுகள் மனிதர்கள்போல் மனிதர்களோடு அசைந்து திரிந்துகொண்டிருக்கும். வீதிகளில் அவதானமாக காலடி வைக்காவிட்டால் சாணியில் மிதித்து நாத்தத்தையும் நரகலையும்தான் சுமந்து திரியவேண்டிவரும்.’

அதற்கு அந்த இந்தியன், ‘நீ பம்பாயிலே எந்தெந்த இடங்களுக்குப் போயிருக்கிறாய்? கடைத் தெருவுக்கா? என்ன சாமான் வாங்க?’ என்று நிதானமாகக் கேட்டான்.

கிரேக்கன் சிரித்துக்கொண்டே, ‘எல்லாம் இந்திய பெண்களுக்காகத்தான்’ என்றான் இளக்காரமாக.

அதற்கு அந்த இந்தியன், ‘நீ போன இடமே நாத்தம் பிடித்த இடம். அந்த இடத்துக்கு நல்ல மனிதன் போகமாட்டான். நீ கேவலத்தைத் தேடி போயிருக்கிறாய். போய்விட்டு மாடு திரிகிறது, மாடு சாணி போட்டிருக்கிறது என்று புலம்புகிறாயே. நீ நல்லதைத் தேடிப் போயிருந்தால் நல்ல இடங்களைக் கண்டிருப்பாய்’ என்றிருந்தான்.

கிரேக்கனின் மூஞ்சை கோணிப்போனது.

டிமித்ரி என்ன காரணத்தாலோ எங்களை நாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துப் போக மறுத்ததை எண்ணியபோது அந்தச் சம்பவம் எனக்கு ஏனோ ஞாபகமாயிற்று.

மேற்கென்றாலும், கிழக்கென்றாலும் ஒரே அழுக்கு இல்லாவிட்டாலும் அழுக்கென்று ஒன்று இருக்கவே செய்யும்தான். போதையும் தசைத் தினவும் அவற்றை மறக்கச் செய்கின்றன. கள்ளும், காமமும் சொர்க்கத்திலும் இருக்கின்றன அல்லவா? ஒன்றில்லாவிட்டால் ஒன்றில்லை. ஒன்றுக்கொன்று ஆதாரம். ஒன்றிருந்தால் மற்றதுமிருக்கும். நான் இப்போதும் சித்தனைப்போல் எழுதுகிறேனா?’


000

தாய்வீடு, மார்ச் 2015

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...