Posts

Showing posts from May, 2015

சிறுகதை:: ‘மென்கொலை’

 ‘மென்கொலை’  ஒரு நுண்கிரகம்போல தன்னிலை கெடாச் சுழற்சியில் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த அந்த ஒற்றை உயிர் அவன் பார்வையிலிருந்தும், உணர்கையிலிருந்தும் நீண்டநேரமாக மறைந்திருந்தது. அதனுடைய இன்மையை நிச்சயமாக அவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் அது எப்படிச் சாத்தியமாயிற்று என்பது தெரியாத புதிர் அந்த நிஜத்தை முற்றாக அங்கீகரிக்க முடியாமல் அவனைச் செய்துகொண்டிருந்தது. கடந்த பல நாள்களின் இரவுகளை, பகல்களையும்தான், ஒரு பயங்கரத்தில் நிறைத்;திருந்த அந்த ஜீவராசி, எத்தனையோ அவன் கொலை முயற்சிகளிலும் தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, ‘எங்கு போனாலும் உன்னை விடமாட்டேன்’ என்பதுபோல் தேசம்விட்டு தேசம் வந்துகூட அவனைத் தொல்லைப் படுத்திக்கொண்டிருந்தது. கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால் இழுத்து மூடிக்கொண்டு பெரிய நிம்மதியோடு இப்போது அவன் தூங்கியபடி இருந்திருக்கலாம். கடந்த ஒரு மாதத்தக்கும் சற்று மேலாக அவனது தூக்கத்தில் விழுந்திருந்த விரிசல்களை நிரப்பக் கிடைத்திருக்கிற நல்ல தருணம் இது. ஆனால் நள்ளிரவு கடந்த அந்தநேரத்தில், அந்த மெல்லிய ஒளித்தெறிப்பு நீண்டநேரப் பரிச்சயத்தில் போதுமான வெளிச்சமாகி பு