Tuesday, June 16, 2015

கலாபன் கதை:2-4
பம்பாய் துறைமுகத்தில் கொடியேறிய கனவு
-தேவகாந்தன்-

ஓராண்டின் பின் கப்பலிலிருந்து விலகி வந்த கலாபன், ஒன்றரை மாதங்களை ஊரில் கழித்திருப்பான். மேலே மறுபடி கப்பலெடுக்க குறையாக நின்றிருந்த அவனது வீடு அவனைக் கலைத்துக்கொண்டிருந்தது. கலாபன் புறப்பட்டான். கொழும்பில் நின்று முன்புபோல் காலத்தை விரயமாக்க அவன் எண்;ணியிருக்கவில்லை. இந்தியாவில் பம்பாய் அல்லது கல்கத்தா  செல்வதே அவனுடைய திட்டமாக இருந்தது. இந்திய விசா கிடைப்பதற்கு ஏற்பட்டது சிறு தாமதமெனினும், ஒரு கப்பல்காரனாய் சில பல ஆசைகள் தவிர்க்க முடியாதபடி அந்தத் தனிமையைப் பற்றிப்பிடித்துக்கொண்டு அவனில் சந்நதம் ஆடிவிடுகின்றன. அதைத் தவிர்க்க அவன் பெரும் சிரமமே படவேண்டியிருந்தது.

அன்று விசாவுக்கு கடவுச்சீட்டை கொடுத்துவிட்டு இந்திய தூதுவராலயத்தைவிட்டு வெளியே வர உள்ளே வா! என்பதுபோல அழைத்துக்கொண்டிருந்தது றெஸ்ரோறன்ற் நிப்பொன். தங்குமறைகளும் உள்ள இடமது. முன்பும் அங்கே அவன் போயிருக்கிறான் தனியாகவும், சிலவேளைகளில் நண்பர்களுடனும். பகலில் பாரில் போயிருந்து குடித்து, சாப்பிட்டதைவிட, இரவிலே சென்று குடித்து அறையெடுத்து தங்கிவந்த நாட்கள்தான் அவனுக்கு அதிகம்.

போகும்போது நிதானமாக இருந்தவன் திரும்பும்போது நிதானமாக இல்லை. ஆயினும் வீட்டிலிருக்கும்போது எடுத்திருந்த தீர்மானங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதென்று அவன் முடிவுகட்டியிருந்தான். அதனால் மனம்படி போகாமல் நேரே நடந்து ஒரு ராக்ஸியை அமர்த்திக்கொண்டு கொட்டாஞ்சேனையிலிருந்த தன் பருத்தித்துறை நண்பனின் அறைக்கு வந்து சேர்ந்தான்.

அடுத்த வாரம்வரை தன்னை ஒரு வேலிக்குள்போல் போட்டு அவனேதான் காவல் செய்தான்.

மறுநாள் அவனது விசா கிடைத்தது.

மேலும் இரண்டு நாட்களில் விமானமெடுத்து பம்பாயைச் சென்றடைந்தான்.
தன்னைக் காக்க அவனெடுத்த முயற்சிகளில் ஒன்று முதிர் காலைவரை தூங்கி, மதியத்தில் பார்சல் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, மாலையில் குளித்து கோவிலுக்குச் செல்வது. அஷ்டலட்சுமி கோவில் பம்பாயில் பிரபலமானது. அவன் இரண்டு வாரங்களை அந்த நேரசூசிகையின்படிதான் கழித்தான்.

ஆனாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. தன் சகல வலிமையையும் ஒரு வன்முறையோடு அது பிரயோகித்தது. கலாபன் தப்பியோடிக்கொண்டு இருந்தான்.

கப்பல் முகவர் எவரையும் அணுகுகின்ற திட்டமெதுவும் இல்லாதிருந்தது கலாபனுக்கு. அதனால் காலைகளில் பம்பாய் வரும் கப்பல்களை அறிந்து அவற்றின் கப்ரின்மாருடன் கதைத்து நேரில் வேலைகேட்க அவன் ஆரம்பித்தான். ஒரு வாரமாயிற்று. இரண்டு வரங்கள் ஆயின. ஒருபலனும் கிடைப்பதாயில்லை. சில கப்பல்களுள் செல்லவே க~;ரமாயிருந்தது.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போய்விட்டு துறைமுகம் சென்றான் கலாபன். கிரேக்க பதிவுக்கொடி பறந்துகொண்டிருந்த ஒரு பெரிய கப்பல் நின்றுகொண்டிருந்தது. மிக நல்ல கம்பெனிகளின் கப்பல்களில் கப்பல் ஊழியர்களையோ, அலுவலர்களையோ கம்பெனியின் முகவர்மூலம் தெரிந்தெடுப்பார்களே தவிர கப்பலிலேயே ஏறி  வேலை பெற வருபவர்களுக்குக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்தக் கம்பெனிக்கான ஒரு ஊழியர் குழு அவர்களிடம் எப்போதும் தயாராக இருப்பது அதன் காரணமாகவிருக்கலாம்.

செல்லத் தடையில்லாததால் உள்ளே சென்ற கலாபன், முதலில் விசாரிக்கலாமேயென கப்பலில் யாராவது வேலைசெய்யும் இலங்கையர் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டான். மேனிலை அதிகாரிகள் வேலைசெய்யும் தளத்தைவிட சாதாரண கடலோடிகள் தங்குமிடத்தில் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது கருதி கீழே செல்ல படியிறங்கினான்.
அப்போதுதான் பிற்காலத்தில் நீண்டகாலமாய் கடிதத்தொடர்பு வைத்திருந்த வல்வெட்டித்துறை ஸ்ரீதரனை அவன் கண்டது. தன்னுடைய அறையிலிருந்து தூ~ணைகளை உதிர்த்துக்கொண்டு வெளியே வந்தான் ஒருவன். வேலைசெய்யும் கொழுப்பு பிரண்ட உடுப்போடு இருந்தான். கலாபன் தன்னை அறிமுகப் படுத்தினான். இன்னோரு அறையில் அங்கே வேலைசெய்யும் இன்னும் சில தமிழ்ப் பெடியள் குடித்துக்கொண்டிருப்பதாகக் கூறி கலாபனை அங்கே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான் ஸ்ரீதரன்.

ஏற்கனவே அவன் கடலோடியாய் வேலைசெய்து அனுபவம் வாய்ந்தவனாய் இருந்தவகையில் அவனது நட்பை ஏற்க அவர்களுக்கும் தடையிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் இலங்கைத் தமிழனாக இருந்தான். ஆயினும் அங்கே கப்ரின் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லையென்றும், கம்பெனியே அதைச் செய்வதென்றும் கூறி கம்பெனி அலுவலக முகவரி கொடுத்தார்கள். பின் அவர்களின் குடிச் சமாவில் அவனும் கலந்துகொள்வது தவிர்க்கமுடியாதபடி நடந்தது.

மாலையில் ஸ்ரீதரன் வேலை முடித்து வந்தபின்னால் சமா இன்னும் மும்முரமடைந்தது. கலாபன் அங்கேயே சாப்பிட்டான். எட்டு மணிக்கு மேலே கடலோடிகள் உல்லாசத்துக்குப் புறப்பட கலாபனும் கலந்துகொள்ள நேர்ந்தது. அந்த நேரத்தில் அந்தத் தெரிவை கலாபன் மனமுவந்துதான் செய்தான்.
அவர்கள் அழைத்துச் சென்ற இடத்தை கலாபனுக்கும் தெரிந்திருந்தது.

ஆனால் அவர்களுக்கான தரகன் வேறொருவனாய் இருந்தான். வயது கூடிய ஒரு மலையாளி அவன். தமிழும் சரளமாகக் கதைத்தான். பம்பாய் புறநகரில் அன்றைக்கு அந்தக் கடலோடிகளால் தெருக்கள் விடிய விடிய அதிர்ந்துகொண்டிருந்தன. தெரிவுகளை முடித்து பணமும் கொடுத்த பின் தெருவில் நின்று பழைய கதைகளையெல்லாம் உருவியெடுத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள். கலாபன் அதில் கலந்துகொள்ளாவிட்டாலும், எதுவென்றாலும் செய்யுங்கள், நான் என் தெரிவைக் காணப்போகிறேன் என்றுவிட்டு போகமுடியாத நிலையில் இருந்தான்.

அப்போது குட்டி ராக்ஸியை நிறுத்திவிட்டு கலாபனைநோக்கி வந்தான்.
குட்டி இலங்கைத் தமிழ்ப் பெடியன்தான். கப்பலெடுக்க வந்து வரு~ங்களை அங்கே கழித்துவிட்டு ஏதேதோ வியாபாரங்களைச் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அதில் நல்ல வருமானமும் இருந்ததாய்த் தெரிந்தது. அவன் குடிப்பதில்லை. சிகரெட் புகைப்பதில்லை. மேலாக, பெண் வி~யங்களுக்குப் போகாதவனாகவும் இருந்தான். மாதுங்காவில் எங்கோ அறையெடுத்துத் தங்கியிருந்தான். ரயிலில் ஏற்பட்ட சிநேகிதம்தான் குட்டிக்கும் கலாபனுக்குமிடையில். அவனது நன்னடத்தை காரணமாகவும், நல்ல மனது காரணமாகவும் குட்டியில் மரியாதையுண்டு கலாபனுக்கு. அதுவே ஒருவர்மீதான ஒருவரின் நட்புக்கு நடைபாதையானது.
அதனால் குட்டி வந்த காரணத்தைச் சென்று விசாரிக்க, குட்டி அவனைத் தேடியே வந்ததாகக் கூறினான்.

‘ஏன்? என்ன விஷயம்?’

‘கப்பலொண்டு நாளைக்கு காலமை பம்பாய் ஹார்பரிலயிருந்து வெளிக்கிடுகிது. புஃல் குறூவும் புது ஆக்கள். புதிசாய் வாங்கி இப்பதான் என்ஜின் வேலையெல்லாம் முடிச்சிட்டு சிங்கப்பூர் வெளிக்கிடுகிது. தேர்ட் இன்ஜினியர் ஒராள் வேணுமெண்டு ஏஜன்ற் நாய்மாதிரி அலையிறான். நேற்று பின்னேரம் சந்திச்ச நேரத்தில உங்களைப்பற்றி சொன்னன், அண்ணை. காலமை வெள்ளன கூட்டிக்கொண்டு வாவெண்டான். வாருங்கோ போவம்.’
‘காலமைதான, குட்டி? சரியாய் எட்டு மணிக்கு நான் ஹார்பரில நிப்பன். நீங்கள் போங்கோ.’

‘விடிய இன்னும் ரண்டு மணத்தியாலம்தான் இருக்கு. ராராவாய் உங்களை எங்கயெல்லாமோ தேடியிட்டு இப்ப இஞ்சவந்து கண்டுபிடிச்சிருக்கிறன். இன்னும் ஒரு கண் நித்திரை கொள்ளேல்ல, அண்ணை. ராக்ஸியும் காத்துக்கொண்டு நிக்குது, சாட்டொண்டும் சொல்லாமல் வாருங்கோ. நீங்களாயில்லாட்டி மயிரைத்தான் இந்தமாதிரி இடங்களுக்கு நான் வந்திருப்பன்.’  கூறியபடி கலாபனை அழைப்பதுபோல் இழுத்துக்கொண்டு போய் ராக்ஸியில் ஏற்றிவிட்டான் குட்டி.

குட்டியிடமிருந்து திமிற முடியாதிருந்தது கலாபனால். அவனும் தள்ளாடுகிற நிலைமையில் இருந்ததால் எதிர்ப்பைவிட்டு, ‘இன்னும் ரண்டு மணி நேரத்தில எப்பிடியும் நான் ஹார்பருக்கு வந்திடுறன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். ‘என்னை நம்பமாட்டியோ, குட்டி?’ என்று கேட்டுக்கொண்டே கலாபன் வெளியே பார்த்தான், அப்போதுதான் தெரிந்தது ராக்ஸி ஏற்கனவே துறைமுகத்துள் வந்துவிட்டிருந்தமை.

அவர்கள் சைக்கிள் ரீவாலாவிடம் ரீ வாங்கிக் குடித்தனர். கலாபன் சிகரெட் புகைத்தான்.

வானம் பலபலவென விடிந்துகொண்டிருந்தது.

பம்பாய் தன் முழுவீச்சான இயக்கத்தைத் தொடங்குகிற நேரம் அதுதான்.
நினைத்துச் சென்ற காரியம் முடியாத வேட்கை இன்னும் கலாபனுள் தகித்துக்கொண்டிருந்தது.

அப்போது ஏஜன்ற் வந்தான்.

கலாபனின் நிலையைப் பார்த்ததுமே ஏஜன்ற் குட்டியிடம் குடித்திருக்கிறார் போலிருக்கிறதே! என்று கேட்டான். அதற்கு குட்டி, ‘கப்பல்காறன் குடிச்சிருக்கிறதில என்ன பிரச்சினை, ஏஜன்ற்? அவன் நம்பர் வண் வேலைகாறன். அவனை எப்பிடியும் ஏத்திவிடுற எண்ணத்தில சொல்லேல்லை. திரியாத இடமெல்லாம் திரிஞ்சு அவனை உனக்காகத்தான் இப்ப கூட்டிவந்திருக்கிறன். விருப்பமெண்டா எடு, இல்லாட்டிச் சொல்லு, இப்பவே கொண்டுபோய் அவனைக் கூட்டிவந்த இடத்தில விட்டிட்டு வந்திடுறன்’ என்றான்.

ஏஜன்றுக்கு ஒரு மூன்றாவது கப்பல் இன்ஜினியர் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்பட்ட நேரமது. கப்பல் வெளிக்கிடுவதற்கு முன் அதை அவன் செய்யாவிட்டால் கப்பல் கம்பெனிகூட நினைக்கலாம் அவன் தங்கள் தேவையை நிறைவேற்ற முடியாதவனென.

ஏஜன்ற் ஒரு ஓரமாக நின்றிருந்த கலாபனை அணுகினான்: ‘தயவுசெய்து சொல்லு, நீ முந்தி கப்பலில தேர்ட் என்ஜினியராய் வேலை செய்திருக்கிறாயா?’

‘அங்க நிண்டு என்ர சேர்டிபிகற்களை நீ புரட்டிப் புரட்டிப் பார்த்தாய்தானே?’ என்றான் கலாபன்.

‘உண்மைபோல தோன்றக்கூடிய இதுமாதிரி சேர்டிபிகேற்கள் உள்ள நூறு பேரை உனக்கு என்னால காட்ட ஏலும். ஆனா உண்;மையான அனுபவமுள்ள ஆள்தான் எனக்கு வேணும். எனக்கு சேர்டிபிகேற்கூட வேண்டாம். நீ வாயால சொல்லு, உனக்கு அனுபவம் இருக்கா?’

அவனது பரிதாப நிலையைக் கண்டே கலாபன் பொறுமையாகச் சொன்னான்: ‘ஒண்டுக்கும் யோசிக்காதே. எனக்கு மூன்று வரு~ அனுபவமிருக்கிறது. முதலில் எனது மாதச் சம்பளம் என்னவென்று சொல்லு? மேலதிக வேலைக்கு மணத்தியாலக் கூலி என்ன?’

‘இந்தக் கம்பெனியில் மேலதிக வேலை நேரமில்லை. எல்லா பிழைகளையும் செல்லுகிற துறைமுகங்களில் அவர்கள் செய்துகொள்வார்கள். உனது சம்பளம் தொளாயிரம் அமெரிக்க டொலர்கள்.’

‘உங்களுக்கு அனுபவமுள்ள ஊழியரும் தேவை, அதேநேரத்தில் சம்பளமும் குறைவாக ஆள் வேண்டுமென்றால் எப்படி? மேலதிக நேரமும் இல்லாத நிலையில் ஆயிரத்து இருநூறு இல்லாவிட்டால் எனக்கு க~;ரம்’ என கலாபன், அவனுள் இன்னுமிருந்த விஸ்கி, முரண்டுபிடிக்க நேர்ந்தமை தொடர்ந்து நிகழ்ந்தது.

எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் குட்டி. அவனுக்கு கலாபன் அவ்வாறு கதைத்தது விருப்பமாக இருந்ததுபோலவே தோன்றியது. வேலை தேடியலைந்து எந்தச் சம்பளத்துக்கும் வேலைசெய்ய துறைமுகத்தில் ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருந்த நிலையில், தனக்கான சம்பளத்துக்கு ஒருவன் இழுபறிப்படுவது அவனின் வேலைத்திறமையை ஒருவகையில் காட்டுகிறதுதான்.

‘இது இன்றைய சூழ்நிலையில் ஒரு மூன்றாவது இன்ஜினியருக்கான சரியான சம்பளம்தான். என்றாலும் நீ கேட்கிற படியால் ஆயிரமாக வாங்கிக்கொள்.’
‘ஆயிரத்து இருநூறு டொலர் ஒரு நல்ல கம்பெனிக்கு பணமே இல்லை, ஏஜன்ற். நீங்கள் தாராளமாய் அந்தச் சம்பளத்தை எனக்குத் தரலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டி இருக்காது என்றைக்கும்.’

கடைசியில் ஆயிரத்து நூறுக்கு ஒப்பந்தம் கைச்சாத்தானது துறைமுகத்தில் வைத்தே.

அடுத்த சிறிதுநேரத்தில் அவன் கப்பல் கப்ரினின் முன் நிறுத்தப்பட்டான். கப்பலைக் கிளப்பும் அவசரத்திலிருந்த கப்ரின் உடனேயே சரியென்றுவிட்டான்.

கலாபன் தனக்கு ஒதுக்கப்பட்ட கபினுக்குச் சென்றான். அப்போது பிரதம பொறியாளர் வழியில் வந்தார். ஏஜன்ற் புதிய மூன்றாவது பொறியாளர் என அறிமுகப்படுத்தி வைத்தான். கைகொடுத்துச் சென்ற பிரதம கப்பல் பொறியாளரின் முகம் திருப்தியாயிருக்கவில்லை என்பது கலாபனுக்குத் தெரிந்தது.

குட்டி சென்று அவனது சூட்கேஸை அறையிலிருந்து எடுத்துவந்து கொடுத்தான். ஏஜன்ற் கலாபனின் கடவுச் சீட்டை வாங்கிப்போய் குடியகல்வு அலுவலகத்தில் அவன் நாட்டைவிட்டு விலகலின் அடையாள முத்திரையை இட்டுவந்தான்.

பகல் பத்து மணியளவில் கப்பலை துறைமுகத்திலிருந்து எடுத்துவிடும் அலுவலர் வர எம்.வி.சவூதி மோர்னிங் ஸ்ரார் என்ற அந்த பனாமாப் பதிவுக் கப்பல் சிங்கப்பூருக்கான தன் கடற்பயணத்தைத் தொடக்கியது.
கப்பல் புறப்பட்ட நேரத்தில் அது தனது வேலைநேரமாக இல்லாதபோதும் கலாபன் கீழேதான் நின்றிருந்தான். பழகியவர்கள், குறிப்பாக இரண்டாவது பொறியாளர் செய்த ஆயத்தங்களை, முறைகளை கூடச்சென்று கவனித்தான். கப்பல் சீரான வேகம்பெற பிரதம பொறியாளரைத் தொடர்ந்து மேலே வந்த கலாபன் மெஸ்ஸ{க்குச் சென்று மதிய உணவை உண்டான். பெயருக்குத்தான். அவனது மண்டை இன்னும் முதல்நாளிரவின் போதையால் விண்விண்ணென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த பிரதம பொறியாளர் கலாபனைப் பார்த்த பார்வையில் முதன்முதலாக அவர் முகத்தில் முறுவல் கண்டான் கலாபன். அவன் கப்பல் புறப்படுகிற நேரத்தில் தான் அறியவேண்டிய வி~யங்கள் குறித்து காட்டிய அக்கறை அவரைத் திருப்திப்படுத்தியிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.
அவன் கீழே இறங்கியபோது அவனது வேலைநேரம் தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. தனக்கு ஒரு மின்கல விளக்கு வேண்டுமென்று சொன்னதோடு இரண்டாவது பொறியாளரின் விளக்கையே எடுத்துச் சென்று கப்பலின் எந்திர அறையில் மிகமுக்கியமான மோட்டார்களையும், சூடாக்கிகளையும் அதுபோல் சிலவற்றின் குளிராக்கிகளையும் பார்த்துவந்தான்.

கப்பல் பொறியியல் அறிவென்பது வெறும் கணிதங்களால்மட்டும் அடைந்துவிடுவதில்லை. அது முக்கியமாக மூன்று அம்சங்களில் தங்கியிருக்;கிறது. முதலாவது, கப்பலில் வேலைசெய்த அனுபவம். இரண்டாவதாக, கப்பலோடியின் சமயோசிதம். மூன்றாவதாக, கப்பல் பொறிமுறைபற்றிய அடிப்படை அறிவு. இந்த மூன்றுமுள்ள ஒரு கடலோடி ஒரு நல்ல ஊழியனாகமுடியும் என்பதை கலாபன் ஏற்கனவே அறிந்திருந்தான். அவற்றை அடையவும் அவன்   சளைக்காது முயன்றுகொண்டிருந்தான். ஒருவேளை அடுத்த ஆண்டு அவன் கப்பல்வேலைக்கே போகவேண்டாத ஒரு சூழ்நிலை ஏற்படுமென்றாலும், இந்த ஆண்டில் தன் அடைதல்களின் முயற்சியை அவன் கைவிட்டுவிடமாட்டான். எந்தத் துறையானாலும் அதனறிவைத் தேடுகின்ற தாகமொன்று ஏற்பட்டுவிடின், அதை வெகுசுலமாகத் தணித்துவிட முடியாதுதான்.
கடற் பயணத்தில் ஒருவாரம் கழிந்தது.

கப்ரின், முதலாவது அலுவலர், பிரதம கப்பற் பொறியாளர், இரண்டாவது பொறியாளர், மின் அலுவலர் என அந்தக் கப்பலில் ஐந்து முக்கியமான பொறுப்புகளிலும் உள்ளவர்கள் போலந்துக்காரராயிருந்தனர். கலாபன், ஐந்தாம் பொறியாளரான சிவநேசன் மற்றும் உணவுப்பகுதிப் பொறுப்பாளரும், அலுவலர் மெஸ்ஸின் பரிசாரகரும் இலங்கைத் தமிழர்கள். வானொலித் தகவல் தொடர்புப் பகுதி பொறுப்பாளரும், இரண்டாம் அலுவலரும் இந்தியர்கள். மீதி இருபத்தொரு கடலோடிகளும் பம்பாய்த் துறைமுகத்தில் புதிதாக எடுக்கப்பட்டவர்கள். அந்த முதல் வாரத்திலேயே பிரதம அலுவலருக்கு அவர்களின் வேலைத் திறமையில் நம்பிக்கையில்லாது போயிருந்ததை மெஸ்ஸில் நிகழ்ந்த பேச்சுக்களில் அவதானிக்க முடிந்திருந்தது கலாபனால்.

அது அவனுக்கு அக்கறையில்லாத விஷயம்.

போலந்துக்காரர்களுக்கு கடமை தவறுவது, கடமையின் உதாசீனங்கள் வெகுவாகப் பிடிப்பதில்லை என்பதை அவன் கண்டிருந்தான் அந்த ஒரு வாரத்தில். அதுபற்றியும்கூட அவனுக்கு அக்கறையில்லை. தன்னுடைய வேலைகளை ஆகக்கூடுதலான திருப்தியேற்படும்வரை செய்வது அவனது இயல்பாக ஆகியிருந்தது. பொறுப்பு வீடுபற்றிய வி~யத்தில் இருந்ததோ என்னவோ, ஆனால் வேலையில் அது அளவைவிடச் சற்று அதிகமாகவே அவனுக்கு இருந்தது.

வேலை நேரத்தில் அவன்  படிகளின் வழியில் இறங்குகிறபோது எந்திரத்தின் மூடியினூடாக அதைக் குளிர்வித்து அதன் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உள்ளே செல்வதினதும், சூட்டைக் கிரகித்துக்கொண்டு வெளியே வருவதினதும் நீர்க் குழாய்களை அவன் தடவியபடி வருவான். அதுபோலவே எந்திரத்தின் இயங்குதலை இலகுவாக்குவதோடு அவற்றின் சூட்டை உறிஞ்சவும் செலுத்தப்படும் எண்ணெய்க் குழாய்களையும் தடவியபடி வருவான். இதைக்கொண்டு அவன் அவற்றின் வெப்பநிலையைக் கவனிக்காமல் வருவதாக பிரதம பொறியியலாளர் எண்ணியிருப்பார்போல. ஒருநாள் அவனிடமே அவர் கேட்டார்: ‘நீ கேட்டபடி உனக்கு ஒரு லைற் தந்திருக்கிறதுதானே? ஆனால் நீ எப்போதும் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் நீரினதோ, எண்ணெயினதோ வெப்பத்தை அவற்றின் வெப்ப அளப்பிகள்மூலம் சரியாகப் பார்க்காமல் வருகிறாயே, ஏன்?’ என்று கேட்டார்.
‘என் கண்ணைவிட இந்தக் கைகள்தான் அவற்றோடு அதிகமாகப் பழகுகின்றன. என் காதுகள்தான் எந்த அறிகருவியைவிடவும் இந்த எந்திரங்களோடு கூடுதலான பரிச்சயமாயிருக்கின்றன. என் உடம்புபோல இந்த எந்திரம் எனக்கு. இதைத் தொட்டாலே இதன் இயல்புநிலையின் சிறிது மாற்றத்;தையும் என்னால் அறிந்துவிட முடியும். என் காது இதன் சத்தங்களோடு பரிச்சயமாயிருக்கிறது. இது இயங்குவது ஒரு தாளத்தில். இந்தத் தாளத்தில் ஒரு சிறிய மாற்றத்;தைக்கூட என் காதுகள் உடனேயே கிரகித்துவிடும். யோசிக்காதீர்கள், என் வேலைநேரத்தில் எந்த மாறுபாட்டையும் நான் மற்றவர்களுக்கு விட்டுப்போகமாட்டேன்’ என்றான்.
அந்தப் பதில் இரண்டாவது பொறியாளரை மிகவும் தொட்டிருக்கவேண்டும். ‘இதுபற்றி விஞ்ஞானபூர்வமாக எனக்குச் சொல்ல இருக்கிறதுதான். ஆனாலும் உன் கரிசனையையும், நீ இந்த எந்திரத்தோடு கொண்டுள்ள உறவையும் நான் மதிக்கிறேன்’ என்றார்.

சிங்கப்பூரை அடைகிறவரையில் அந்த ஆடிமாதக் காற்று தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. வெறுமையான கப்பலை தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தூக்கித் தூக்கி எறிந்தது. பழக்கமானவர்கள் தப்பினார்கள். கப்பலுக்கு புதிதானவர்கள்தான் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய பம்பாயில் எடுக்கப்பட்ட எல்லா பங்களாதே~pகளும் அந்தக் கொந்தளிப்பில் கடற்கிறுதியால் பாதிக்கப்பெற்று நடக்கவும் முடியாமல் விழுந்துவிழுந்து கிடந்தார்கள்.

வேலைநேரத்தில் கீழே நின்றிருக்கும் பொழுதுகளில் அவன் மனம் ஊர் தேடிப் பறந்தது. கட்டத் தொடங்கிய வீடு வேலைகள் முடியாமல் குறையாக இருந்த தோற்றத்தின் அவலத்தைக் கண்டது. இப்போது கிடைத்திரு;க்கிற இந்த வேலை அதை விரைவில் முடித்துவைக்குமென நம்பினான் அவன். ஒரு வரு~த்தின் பின் அது நிமிர்ந்து பூரணமாய்; நின்று தன்னை வரவேற்கப் போவதையும், மனைவியும், அம்மாவும், குழந்தைகளும், இன்னும் நெருங்கிய நண்பர்களும் அதனால் பெறப்போகிற மகிழ்ச்சியும் கண்ணில் தோன்றி அவனைப் பரவசப்படுத்திக்கொண்டிருந்தன
எப்படியோ மேலும் மூன்று நான்கு நாட்களில் கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தை அடைந்தது.

000
தாய்வீடு, ஏப் . 2015

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...