Thursday, August 20, 2015

மதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்

அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின் 
இன்னொரு முகாம்,
பின் - காலனித்துவ இலக்கியம்


காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாய் அண்மையில் வெளிவந்திருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே இதில் வெளியாகியுள்ள சில கட்டுரைகளை அவை சஞ்சிகைகளில் வெளியாகிய தருணங்களிலேயே நான் வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமான நூல் கொடுத்த பாதிப்பு அதிகம். முழுமையான மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ அன்றி, நூலின் ஒட்டுமொத்தமான செல்திசை நோக்கிய கருத்தினை அலசும் ஒரு கட்டுரையாகவும் இது அமைய நேர்வது நூல் விளைத்த பல்தளங்களிலான மனப்பாதிப்பின் தீவிரத்தினால்தான்.

இரண்டு விஷயங்களை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சமகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான நூல், ந.முருகேசபாண்டியனின் மொழியில் சொல்வதானால், தமிழ் அறிவுலகத்தின் அ-பிரக்ஞை குளத்தில் வீசப்பட்ட கல்லாக தடமழிந்து போவதற்குத் தோதான தலைப்போடு வெளியிடப்பட்டிருப்பதை முதலாவதாகச் சொல்லவேண்டும். ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்பது, ஏதோ மரபார்ந்த தமிழறிஞர்களது தமிழினத்தின் பண்பாடு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பான மயக்கத்தை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடுகிறது. அவ்வளவு முக்கியமான செய்தியொன்றை தமிழ்ப் புலத்தில் விதந்துரைக்க வந்த ஒரு நூலின் தலைப்பாக்கத்துக்கு நூலாசிரியர், பதிப்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த அலட்சிய மனப்போக்கின் பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.

இரண்டாவதாக, இதில் வெளிவந்துள்ள எழுத்துப் பிழைகள் கருத்து மயக்கங்களையும், பெயர் மாறுபாட்டினையும் ஏற்படுத்துகிற அளவுக்குச் சென்றிருக்கின்றன.  பட்டியலின் விரிவஞ்சி அதை விடுத்து, இடறு கட்டைகள்போல் இடையிடும் இச் சொற்பிழைகளைத் தாண்டிய என் வாசிப்புப் பயணத்தின் அவதானிப்புக்களை இனிச் சொல்வேன்.

ஆய்வுகள் அபிப்பிராயங்கள், பதிவுகள் பார்வைகள், பேசும் படங்கள் புத்தகங்கள், அனுபவங்கள் அவதானிப்புகள் என்ற நான்கு பகுப்புகளில் முப்பத்து நான்கு கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல் குறிவைத்திருக்கும் ஒரே இலக்கு ‘பின் காலனியம்’.
பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், பின் மார்க்சியம் வரிசையில் அண்மைக் காலமாக பிரஸ்தாபமாகியிருக்கும் இந்த நவீன கருதுகோள்பற்றி இதன் முதற் பகுப்பிலுள்ள முதற் கட்டுரை விளக்கமளிக்கிறது.
சிலபல காலமாக (சுமார் கால் நூற்றாண்டாக)  தமிழறிவுலகத்து தீவிர வாசகப்
 பரப்பிலும், மேலைத் தேய பல்கலைக் கழக மட்டங்களிலும் அவதானமாகியிருக்கும் இக் கருதுகோள், பொது வாசகப் புலத்தில் கவனம் பெறாமலேயிருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும். தீவிர வாசகர்களிடையேயும் மிகுந்த தெளிவினை இது கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. அதன் காரணமாக அதற்கான மூலநூல்களினதும், ஆதார நூல்களினதும் தமிழ்மொழியிலான தோற்றம் வெகுவாயிருக்கவில்லை என்பதைச் சொல்வது ஏற்பு. சில கட்டுரைகளோடு அந்த முயற்சிகள் நின்றுபோயிருக்கின்றன. ஆனால் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ ஒரு நூலாக, பின் காலனியம்பற்றிய விளக்கம், அக் கருதுகோள் அடிப்படையில் அரசியல் நிகழ்வுகள், நூல் தோற்றங்கள், சினிமாக்கள் குறித்த ஆய்வாக, விமர்சனமாக வெளிவந்திருக்கிறது.

கட்டுரை குறித்து பல்வேறு கேள்விகளும், மாறுபாடுகளும்  தோன்ற முடியுமாயினும், இத் துறையில் ஒட்டுமொத்தமாக வெளிவந்த ஒரு நூலாக இதுவே இதுவரை என் கவனத்தில் பட்டிருப்பதால், கட்டுரையின் தாக்கம் குறித்து முதன்மைக் கவனம் செலுத்துவது பொருத்தமானது.
மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் குறித்தும், அவ் எடுகோள்கள் மேலான சில முக்கிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் குறித்தும் திறனாய்வுரீதியிலான ஒரு நூல் வெளிவந்திருப்பின் எப்படி இருந்திருக்குமோ, அந்தளவுக்கு பின் காலனித்துவம் சார்ந்தளவில் பயனுள்ள ஒரு நூலாக இது அமைந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.

பின் நவீனத்துவ காலம் முற்றாய் ஒழிந்துவிட்டது, அது பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது என்று முடிவுகொள்கிறது நூல். அந்த அடிப்படையிலேயே Slumdog Millionair   சினிமாவுக்கான கருத்தினையும் அது முன்வைக்கிறது. பல்வேறு மாற்று, தலித்திய சார்பாளர்களதும் ஆதரவை சினிமா பெற்றிருந்த வேளையில், இந்து அடிப்படைவாதிகளான பாரதீய ஜனதா கட்சி சார்பானவர்களதும் மற்றும் இந்திய கலாச்சார வாதிகளதும் எதிர்ப்பினைப்போல தானும் ஒரு கோணத்தில் இந்திய வறுமையை, வறுமையின் அழகின்மையை, அழகின்மையின் ஒழுங்கின்மையைச் சுட்டிக்காட்டி நூல் தன் கருத்தைத் தெரிவிக்கிறது, ‘சேரிநாய் லட்சாதிபதி: ஏழ்மையின் பாலின்பம்’ என்ற கட்டுரையில்.

கீழ்த் திசையை, குறிப்பாக ஆசியா, மற்றும் மூன்றாம் உலக நாடுகளை மையப்படுத்தும் பின் காலனியக் கருதுகோள், தன் புலத்தின் அழுக்குகள் ஐரோப்பிய அறிவுதளத்தில் பகிரங்கப்படுத்தப்படுவதை ஒருவகையில் விரும்பாதேயிருக்கிறது எனக் கூறலாம். ஒரு நெரிப்பின், ஒடுக்குதலின் அடையாளமாக நகரக் குடிசை வாழ்க்கையை உள்வாங்கும் மனநிலையின்றி, தன்னை மாற்றாருக்கு அதை அதுவாகக் காட்டிக்கொள்ள விரும்பாத கருதுகோளின்மேல் வாசக சந்தேகம் தோன்றுவது இங்கே தவிர்க்கமுடியாததாகிறது.

சில காலத்துக்கு முன்னர் சல்மான் ருஷ்டியின் Immaginary Home lands  என்ற நூலை வாசிக்கக் கிடைத்திருந்தது. கென்ய இடதுசாரி எழுத்தாளர் நிகுஜி வா தியாங்கோ போன்றவர்களின் கருத்துநிலையில் நின்று, காமன்வெல்த் ஆங்கில இலக்கியமென ஒன்று இல்லையென அதில் வாதித்திருந்தார் ருஷ்டி. அவருடைய வாதம் விக்ரம் சேத், அனிதா தேசாய், அமிதாவ் கோஷ், சசி தாரூர் போன்ற இந்திய எழுத்தாளர்கள்போலவும், வி.எஸ்.நைபால், டொர்க் வொல்காட், பிரெட்த் வைற் ஆகிய மேற்கிந்தியத் தீவு எழுத்தாளர்கள் போலவும், மற்றும் நிகுஜி வா தியாங்கோ, வொல்லே சோயிங்கா, சினுவா ஆச்செபி போன்ற ஆபிரிக்க எழுத்தாளர்கள் போலவும் தோற்றமாகிக்கொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க இன எழுத்தாளர்களால் ஆங்கிலம் மேலைத் தேயத்தாருக்கு மட்டுமான மொழியாக தொடர்ந்தும் இல்லை, மட்டுமின்றி, அது மேலைத் தேயத்தாரினது கலாசார மொழியியற் தன்மைகளைக் கொண்டதாகவுமின்றி தேச வர்த்தமானங்களின் கூறுகளைக் வரித்ததாக ஆகியிருக்கிறது என்பதாகும். காமன்வெல்த் ஆங்கில இலக்கியமென ஒன்றே இல்லையென்றாகிறபோது, காலனியத் தன்மைகள் யாவற்றையும் அறுத்துக்கொண்டு ஏகாதிபத்திய அழுத்தங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் பின்காலனிய கருதுகோளின் சாத்தியம் யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே அமைகிறது. ஆனாலும் அது முன்மொழியும் ‘எதிர்ப்பிலக்கியம்’ என்ற கருதுகோள் அவதானிப்புக்குரியது.

பின் காலனியத்தின் முக்கிய தன்மை என்ன? நூல் விபரிக்கிறது, ‘பின் காலனித்துவம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணம்கொண்ட ஒரு அரசியல் பார்வை. ஒரு எதிர்த்த நிலையுணர்வு’ என்பதாக. மேலும் அதுபற்றிக் கூறுகையில், ‘ஐரோப்பிய கருத்துநிலையிலிருந்து அதன் செல்வாக்குப் பிடியிலிருந்து விடுவிக்கவே பின் காலனித்துவம் ஒரு சிந்தனைக் கருவியாகப் பயன்படுகிறது’ என்கிறது. பின் காலனித்துவத்தை மார்க்சிய நோக்குநிலையான ஒரு சிந்தனை முறையாகவும் இந் நூல் அடையாளம் காட்டும்.

அதுபோல் பல்லினக் கலாசாரத்தையும் கேள்விக்குரியதாக ஆக்குகிறது பின் காலனியம். பல்லினக் கலாசாரம் என்பது சில மத அனுட்டானங்களின் அனுமதிப்பாகச் சுருங்கியிருப்பதை நூல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பல்லின கலாசாரத்தை மேற்குலகின் மேலாண்மை இருத்தலை நிலைநிறுத்துவதற்கான ராஜதந்திரத்தின் சுலோக வெளிப்பாடாக சரியாகவே இனங்காட்டுகிறது நூல்.

பின் காலனித்துவம் ஏதோவகையில் சிற்சில முரண்களைக் கொண்டிருக்கிறதோ என எண்ணக்கூடிய வகையில் நூலில் சில இடங்கள் தோற்றம் கொடுக்கின்றன. ‘இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய திறனாய்வுகளில் - நவீனம், பெண்ணியம், அமைப்பியல் எல்லாமே மேற்கத்தைய சமூக அரசியல் கலாச்சாரக் கேள்விகளுக்கும் முரண்பாடுகளுக்கும் விடைதேடும் முயற்சியாக உருவாகின. இதற்கு மாறாக பின் காலனித்துவம் மூன்றாம் மண்டல பிரச்சினைகளுக்கு விமோசனம் தேட 60களில் அமெரிக்காவில் குடியேறிய முன்னை நாள் காலனியப் பிரஜைகளால் அறிமுகப்படுத்தப் பட்டது’ என்கிறது கட்டுரை.

மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் அமெரிக்காவில் குடியேறிய முன்னை நாள் காலனியப் பிரஜைகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற கேள்வியில் நிறைந்த நியாயம் இருக்க முடியும். இந்த முன்னை நாள் காலனியப் பிரஜைகள் இன்றைக்கு அமெரிக்காவில் இருந்துகொண்டு தத்தம் நாடுகளுக்கான சிந்தனைப் போக்கினை ஓர் அறிவுஜீவித் தளத்தில் அமர்ந்து நிர்ணயம் செய்யமுடியுமென்பது, ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்நெறியை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் நிர்ணயிப்பதற்குச் சமானமானது. பின் நவீனத்துவம் தன் தொடக்க காலத்தில் கொண்டிருந்த வீரியத்தினை இழப்பதற்கு, அது அறிவுத்தளம் சார்ந்த செயற்பாடாக மட்டும் இருந்ததான காரணம் ஒப்புக்கொள்ளப்படக் கூடுமாயின், பின் காலனித்துவம் அதே பாதையிலேயே தன் பயணத்தைத் தொடக்கியிருக்கிறது என்ற முடிபு, அதன் எதிர்காலம்பற்றிய அவநம்பிக்கையைக் கிளப்ப முடியும். இவ்வாறு வலுவிழந்த சித்தாந்தமாகத் தன்னைக் கட்டமைத்திருக்கின்ற பின் காலனித்துவம், பின் அமைப்பியலுக்கோ, பின் நவீனத்துவத்துக்கோ மாற்றாக நடைபோட முடியுமா என்பது தெளிவான வாசகக் கேள்வி.

இது நூலாசிரியரை நோக்கியதல்ல, பின் காலனித்துவம் என்ற சிந்தனைப் போக்கு அல்லது திறனாய்வுக் கோட்பாடு சார்ந்த கேள்விதான். அதுவும் விவாதத்துக்கானதாய் அன்றி, விளக்கம் கோரி எழுந்த கேள்வியாகத்தான் எழுந்திருக்கிறது. இவ்வாறான கேள்விகள் தோன்றக்கூடிய விதமாக விளக்க சாத்தியமற்ற கூறுகள் பின் காலனியத்தில் இருப்பதும் மெய்யே. நூலின் 17ம் பக்கத்திலுள்ள பின்வரும் வரிகளே இதற்குச் சான்று: ‘சென்ற நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாக்கக் கோட்பாடுகளில் இரண்டு மிக ஆவேசமாக அலசப்படாதவை. இரண்டுமே பரபரப்பையும் பலரை எரிச்சலடையவும் செய்தவை. இரண்டுமே காத்திரமான விமர்சிப்புக்குள்ளானவை. இரண்டுமே இலகுவில் புரிந்துகொள்வதில் சிக்கலானவை. ஒன்று பின் நவீனத்துவம். மற்றது பின் காலனித்துவம்.’

‘அண்மைக் காலத்தில் பின் காலனித்துவ இலக்கியத்தில், பின் காலனித்துவ திறனாய்வில், இந்தத் துறை சார்ந்த அணுகுமுறைகளில் ஏற்பட்ட சில சிக்கல்களில், சில கேள்விகளில் உருவான கட்டுரை இது’ என ‘பின் காலனித்துவ இலக்கியப் போக்குகள்’ என்ற கட்டுரையில் அக் கட்டுரையின் தோற்றத்துக்கான காரணமாக பேராசிரியர் செல்வா கனகநாயகம் கூறுவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எட்வேட் சேத்’தே பின் காலனிய கோட்பாட்டுருவாக்கத்தின் மூலவராகக் கருதப்படுகிறார். அவரது Orientalism  என்ற நூல் அதைச் செய்தது. எட்வேட் சேத் உயிரோடிருந்த காலத்திலேயே அதன் கருத்தமைவு மாதிரியில் உள்ள குறைகள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டன. பின் காலனித்துவம் ஓரளவு பலம் குறைந்த நிலையை அடைந்தபோது, பின் காலனித்துவ மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் ஹிமி பாவா, காயத்ரி ஸ்பிவக், அஜாஸ் அஹமத் போன்றவர்கள் பல புதிய கோணங்களில் பின் காலனியத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து விளக்கமளித்தார்கள்.

ஆயினும் இன்னும் விளக்கம் அளிக்கப்படவேண்டிய முனைகள் பின் காலனியத்தில் இருந்துகொண்டே இருக்கின்றன. பின் காலனியம் தோன்றி இற்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகள் எனக் கொண்டால், அது கவனிப்புப் பெறத் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றதாகக் கொள்ளமுடியும். இவ் இருபத்தைந்து வருட காலகட்டம் ஒரு சிந்தனைப் போக்கின் செயற்பாட்டினை முழுமையாக எடைபோடப் போதுமானதல்லவெனினும், அது செயற்களத்தில்  சாதித்தவை பிரமாதமாய்ச் சொல்லக்கூடிய அளவில் இல்லையென்றே தெரிகிறது.

இனி வரும் காலங்கள் அதை வீறார்ந்த சிந்தனைப் போக்காக மாற்ற முடியலாம். ‘பின் காலனித்துவத்தின் வீச்சும் பரப்பும் அது ஏற்படுத்தும் செய்கையிலும், பயனீட்டிலும்தான் எடைபோடப்படும்.  அறிவு மட்டத்திலிருந்து செயல்முறைக்கு இடம்பெயரத் தவறினால், தயங்கினால், மற்றைய திறனாய்வுகள்போல் பின் காலனித்துவமும் அதன் சக்தி வன்மையையும், விசையையும் இழந்துவிடும்’ என்று சச்சிதானந்தன் சுகிர்தராஜா சொல்லும் கருத்தோடு, பின் காலனித்துவ கருதுகோளின் விளக்கம்பற்றிய அலசலை முடித்துக்கொண்டு, விமர்சனம் சார்ந்து அது வியாபகமாகியிருக்கும் கோணத்தைச் சிறிது பார்க்கலாம்.

மொழிகளில் இதுவரை காலத்திலும் தோன்றிய புத்தாக்கக் கோட்பாடுகள் எதுவுமே சமூக மாற்றத்தின் விளைவுதான் என்கின்றன விஞ்ஞானபூர்வமான முடிபுகள். ஏகாதிபத்திய காலகட்டத்தின் புத்தாக்கக் கோட்பாடாக பின் காலனியத்தை எடுத்துக்கொள்வதில் பெரிய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் சமூக தளங்களில் இதன் தாக்கம் எவ்வாறாயினும், இலக்கியத் தளத்தில் இது முன்வைக்கும் அழகியல் மிக்க கவர்ச்சியானது. எதிர்ப்பினையே ஒரு இலக்கிய அழகியலாக முன்வைக்கும் பின் காலனித்துவத்தின் இத் துறை சார்ந்த ஆக்கங்கள் கணிசமாய், தமிழ் மொழி உட்பட, ஆங்கில மொழியில் ஏற்பட்டிருப்பதை நூல் சுட்டிக் காட்டுகிறது.
நூலின் எழுத்து, மொழிபற்றியும் சொல்லியே ஆகவேண்டும். தன் விமர்சன, ஆய்வு வெளிப்பாட்டினுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஒரு தனித்துவமான நடையையே கையாள்வதாகத் தெரிகிறது. வாக்கிய அமைப்புகள் இலக்கண மரபுமீறி உருவாக்கப்பட்டுள்ளன. அது எடுத்துக்கொண்ட எதிர்க் குரல்களின் அடையாளப்படுத்தலுக்கு ஏற்றதான ஒருநடைதான் நிச்சயமாக. பல கட்டுரைகள் ஒரு சம்மட்டி அடிபோன்ற அதிர்வோடு முடிவடைகின்றன. பல கவிதைகளில்கூட காணமுடியாத அழகு இது. வாசிப்பின் சுவாரஸ்யத்தை உறுதிசெய்பவை இக் கூறுகள்.

பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொல் உபயோகிப்புகளும் குறிப்பிடப்பட்டாகவேண்டும். cliché க்கு தேய்வழக்கு, metaphysical  க்கு இயல்கடந்த மெய்விளக்கவியல், paedophilia வுக்கு பாலகநேசம், departmental store க்கு பகுதிவாரிக் கடையென பொருத்தமான சொற்கள் தேடியெடுக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளன. மேலுமான விரிவு நூலுள் நுழைந்து செல்வதின்மூலமே வாசக சாத்தியமாகக் கூடியவை.

சில கட்டுரைகள் கட்டமைப்பாலும், கருத்துச் செறிவாலும் வன்மை செறிந்து நிற்கின்றன. உதாரணமாக ‘தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணிகளும்: சில எண்ணங்கள்’, ‘சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதான பிரதியான மஹாவம்சம் பற்றிய ஒரு மறுவிசாரணை’, ‘புத்தகங்கள் சாம்பலான கதை’, ‘ஹைத்தி: ஊடகங்கள் சொல்ல மறந்த தகவல்’ போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றுள் மஹாவம்சம் பற்றிய மறுவிசாரணை ஈழத் தமிழருக்கு உவப்பில்லாதபோதும் உள்ளுணர்வில் உறைக்கக்கூடியது. பின் காலனிய சித்தாந்தப்படியான தேடலில் இவ்வாறான முடிவுகள் கண்டடையப்பட முடியுமென்பது அதிரவைக்கிறது. மெய் தேடும் பயணத்தில் இந்தமாதிரியான சாத்தியம் நம்பிக்கையைத் துளிர்க்கவைக்கிறது.

விசாரணை, மறுவாசிப்பு, எதிர்ப்பு ஆகியன மூலங்களாகும் இந்த பின் காலனிய சிந்தனைப் போக்கின் வழியான மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரைகளே இதன் வீச்சுக்கு தக்க சான்றாகுவன.


000

 
தாய்வீடு, அக். 2011

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’  வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன.

சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன.
தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு.

ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன.

இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன்.

விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவர்கள் குறித்து நான் கௌரவமாக எழுதவில்லையென்று குறைப்பட்டார். விலைமாதர், குற்றவாளிகள், மனநிலை பிறழ்ந்தோர் ஆகியோர் மீதெல்லாம் எனக்கு மிகுந்த கரிசனம் உண்டு என்றும், அவர்களை அவ்வாறு ஆக்கிய சமூகத்தின் மீதுதான் என் கோபமென்றும் அவருக்கு விளக்க நான் அதிகமாகவே பிரயாசையெடுக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்ச்சியான தருணம். இதேபோல் பல்வேறு நேரடி, தொலைபேசிப் பாராட்டுதல்களுக்கும் காரணமாயமைந்த ‘தாய்வீடு’ பத்திரிகைக்கு என் நன்றிகளை இவ்வேளை நான் தெரிவித்தே ஆகவேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், வெகுஜனப் பரப்பை நோக்கி என் எழுத்துக்கள் நகர்கின்றனவா என்றொரு கேள்வியும் என்னுள் எழவே செய்தது. சுவாரஸ்யத்துக்காக எழுத்தை மலினப்படுத்தும் வகையில் என்றும் என் பேனா (இப்பொழுது கணினி) எழுதியதில்லை. அதற்கெதிரான சிறுபத்திரிகை இயக்கத்துள்ளிருந்து வளர்ந்தவன் நான். இன்றும் கூடுதலான தொடர்புகளோடு இருப்பவன். ஆயினும் வெகுவான ஜனப் பரப்பை ஈர்க்கின்ற படைப்பு மலினமானதாக இருக்கவேண்டியதில்லை, அது படைப்பின் வலிமையால் நேர்ந்ததாகக்கூட இருக்கலாம் என பின்னர் நான் தெளிவுகொண்டேன்.

ஆரம்பத்தில் ‘கலாபன் கதை’போன்ற ஒரு முழுக் கதையளவாகும்  படைப்பைத் தருவதே என் எண்ணமாகவிருந்தது. ஆனால் மனத்தில் முட்டிமோதும் கருத்துக்கள் உங்களை வந்தடைந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான பக்க எழுத்தை ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவு மாதங்கள் செல்லக்கூடுமோ? ஆனாலும் தகுந்த ஒரு சமயத்தில் தொடர் நாவலோடு உங்களைச் சந்திப்பேன்.

இதில் எடுத்துரைக்கப்பட இருப்பவை காரசாரமானவையாக இல்லாவிட்டாலும், சாரமான விஷயங்களாக இருக்குமென்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். நம் உயிர் பிடித்து உலுப்பும் எத்தனையோ பிரச்சினைகள் கண்ணெதிரில் உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் உண்மை முகம் தெரிந்தாகவேண்டும் எமக்கு.

000

அடுத்த ஆண்டு தை மாதத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கிறது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. ஒரு அலையாக எழுந்த அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஓரளவு இப்பொழுது அடங்கியிருப்பதாகச் சொல்லலாம். இதுபற்றிய எனது கருத்தினை வேறுநாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாள நண்பர் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். நானும் மறைக்காமல் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அதை அவர்கள் விரும்பவில்லையெனத் தெரிகிறது. அதற்கு நானென்ன செய்யட்டும்?

ஓரளவு அடங்கியுள்ள இப் பிரச்சினை மார்கழி அல்லது தை மாதமளவில், அதாவது மாநாடு தொடங்குகிற காலமளவில், இன்னும் கூடுதலான உக்கிரம் பெறவே வாய்ப்பிருக்கிறது. லும்பினி இணைய தளத்தில் ஷோபா சக்தியினால் செய்யப்பட்ட லெ.முருகபூபதியின் நேர்காணல், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதை எதிர்ப்போரின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்வளவு தெளிவுபூர்வமான நேர்காணல் அது.

ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா, போரினால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் பகுதிக்குச் சென்று பார்வையிட முடியுமா என்று உப்புச் சப்பற்ற கேள்விகள் மாநாட்டை எதிர்ப்போரினால் கேட்கப்பட்டிருந்தன. இனவெறி பிடித்த ராஜபக்ஷ அரசாங்கம், அதைத் தன் கடந்த கால போர்க் குற்றச் செயல்களினை மறக்கடித்து, விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் வெகுஜனங்களின்மீது தனக்கு எந்தவிதமான மாறுபாடுமில்லையென்பதை சர்வதேச சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடுமைகள் தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட பின்னரும் அதைத் தடுக்க ஒரு புல்லைக்கூடக் கிள்ளிப்போடாத தமிழக முதல்வர் கருணாநிதியை உலகத் தலைவர், செம்மொழியாம் தமிழை வளர்க்க அவதாரமெடுத்தவர் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டியதுபோன்று துதிபாட யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. செம்மொழி மாநாட்டில் புகழ்பாட முந்தி நின்றவர்களே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒதுங்கிக்கொண்டது துர்ப்பாக்கியமானது.

உலகத் தமிழர் மாநாடு முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்கான கண்டன மாநாடாகக் கூட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல விஷயங்கள் தாமாகப் புரிந்து போய்விடக் கூடியவை.
செல்பவர்கள் எழுத்தாளர்கள். தமது படைப்பையோ, கருத்துச் சார்ந்த படைப்பையோ, அது குறித்த வளர்ச்சி மாற்றம் பற்றிய கருத்துக்களையோ மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் ராஜபக்ஷ அரசுக்கெதிராக இதுவரை முன்மொழியாத எந்தக் கருத்தை மாநாட்டில் முன்வைத்துவிடப் போகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் என் சரீரமும், மனமும் சேர்ந்து பதறிய கொடுமையானது. எனினும் சரியாக முன்னெடுக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் ஒரு யுத்தத்தை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஆனாலும் இலங்கைத் தேசம் இன்னமும் எனது மண் என்ற மனோவுணர்வே இன்றும் என்னுள்ளிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்ற ஆரம்ப வகுப்புகளின் பாடம் என் மனத்தில் இன்னுமிருந்து அசைவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த யுத்த முடிவுக்குப் பின் இன்றுவரை இரண்டு லட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. அந்த இரண்டு லட்சம் பேரும், யுத்தம் நடந்த பூமி எவ்வாறு இருக்கிறது என்று விடுப்புப் பார்க்கப் போனார்களென யாராவது சொல்ல முடியுமா?

சொந்த மண்ணின் ஈர்ப்பு அது. மண்ணோடு மனிதர்களுக்கு உண்டாகும் பந்தத்தின் விசை. இதை விளங்கிக் கொண்டால் கொழும்பில் மாநாடு நடைபெறுவதையும் இந்தத் தளத்தில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு சர்வ தேச மாநாட்டினை கொழும்பில் நடத்துவதென்பது அந்த மண்ணில் எதை நடாத்துவதுக்கும் எமக்குள்ள உரிமையின் வெளிப்பாடு. இந்த உரிமையை எந்தச் சிங்கள பேரினவாத அரசுக்காகவும் எம்மால் விட்டுக்கொடுத்துவிட முடியாது.

எவ்வளவு கொடுமையான, சர்வாதிகாரமான ஆட்சி அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அது எனது மண். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண். நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடித் திரிந்த பூமி. எண்ணும் எழுத்தும்  கற்றுணர்ந்த நிலம்.

    ‘எங்கும் ஒலிக்கிறது காற்று ….எனது நிலம்….எனது நிலம்!’ இவை கவிஞர் சேரனின் கவிதை வரிகள். இந்த ஒலிப்பின் ஆவேசத்திலிருந்து பெரும்பாலும் எவரும்தான் தப்பிவிட முடியாது. என்னால் தப்ப முடியவில்லை. அப்படிப் பார்க்கையில், எனது கருத்துக்களும் அதற்கு இயையவே இருக்கமுடியும். மாநாடு குறித்தாயினும் சரி, எமது இருத்தல் சார்ந்த வேறு எந்த விஷயமானாலும் சரி.


000


தாய்வீடு, நவ. 2011

பேராசிரியர் கா.சிவத்தம்பி: அஞ்சலிபேராசிரியர் கா.சிவத்தம்பி: 
அஞ்சலியாய் ஓர் நினைவுப் பகிர்வுஐயா,

‘பேராசிரியர் கா.சிவத்தம்பி மாரடைப்பால் காலமானார்’ என என் நண்பரொருவர் கூறியபோது அதிர்ந்துதான் போனேன். அந்த அதிர்வு அடங்கி ஒரு மாய இருட் போர்வையாக செய்தி மட்டும் மனத்தின்  ஒரு மூலையிலிருந்து மெல்ல மெல்ல வியாபகமாகி வந்தது. எந்த மதுவுக்கும்கூட கட்டுப்படாத ஆக்ரோஷம் கொண்டிருந்தது அந்தச் சோகம்.

ஈழத்துக் கல்விப் புலத்தின் பெருமைசால் ஆல விருட்சம் அடியோடு சாய்ந்ததான அறிஞர் கூட்டத்தின் பிரலாபிப்புகள் இணைய இதழ்களில், வார இதழ்களில் வந்தபடி இருந்தன. மனம் சலசலத்தது. உங்கள் மறைவு உண்மையில் ஈடுசெய்ய முடியாததுதான். ஆனால் இந்த அறிஞர் குழாம் எழுப்பும் கூறுகளினூடாக அல்ல, மாறாக அவரைப் புரிந்துகொண்ட கோணங்களினூடாக அந்த இழப்பினை நான் உள்வாங்குகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி இளகிய மனமும், சகஜமான குணபாவமும், சமூக அக்கறையம், சீரிய அறிவுத் திறனும் மிக்கவர் என கனடா எழுத்தாளர் இணையம் நடாத்திய அஞ்சலிக் கூட்டத்தில்கூட பலர் எடுத்துரைத்திருந்தார்கள்.  இத்தகைய உங்கள் குணநலன்களில் யாருக்குத்தான், என்ன மாறுபாடு இருந்துவிட முடியும்? நான் இலக்கியகாரன். அதனால் அது குறித்த விஷயங்களிலேயே என் அக்கறை பற்றுக் கம்பியெறிந்து படரமுடியும். உங்கள் அறிவுப் புலம் விரிந்த மற்றைய துறைகள், குறிப்பாக நாடக, இசை, அரசியல் துறைகள்பற்றி நான் இங்கே சொல்;லப்போவதில்லை.

இலக்கிய விமர்சனத்தின் ஊடாக நீங்கள் கண்டடைந்த எழுத்துக்களில் நவீன இலக்கியத்தின்  ஒரு தீவிர வாசகனோ படைப்பாளியோ வேறு கண்டடைதல்களைச் செய்து முரண்நிலையடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. அவை குறித்தும் பேசும் தருணமில்லை இது.

நான் உங்களிடம் நேரடியாய்ப் பயின்றவனில்லை. உங்களது ஊரைச் சேர்ந்தவனுமில்லை. ஆனாலும் உங்களது எழுத்துக்களையே பாடங்களாகக்கொண்டு நீண்டகாலம் பயின்ற மதிப்பு மட்டுமே கொண்டவன்.
பயணத் திசை ஒன்றாய் இருப்பவர்கள் வேறுவேறு வழிகளில் பயணிப்பது நடக்கக்கூடியதுதான். இந்த ஒருதிசை வழிப் பயணங்களில் இலக்குகளும் வேறாக இருக்கக்கூடும். ஆனாலும் அதை விளக்குவதற்கான சந்தர்ப்பமல்ல இது. பின்னாளில் ஒரு விளக்கத்துக்கான தேவை கருதி இந்த விஷயங்களை மேலோட்டமாகச் சொல்லிக்கொண்டு மேலே செல்கிறேன்.

ஐயா, உங்களை உங்கள் எழுத்துக்களினூடாகவும், செய்திகளினூடாகவும் மட்டுமே அறிந்திருந்த நான், எப்போது எப்படி நேர் முகமாக அறிய நேர்ந்தேன் என்பதை என்னால் நினைவுகொள்ள முடியவில்லை. ஆனாலும் அது அநேகமாக தமிழ்நாட்டில் நான் வாழநேர்ந்த காலத்தில், நீங்கள் வருகைதரு பேராசிரியராக சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது நிகழ்ந்திருக்கலாம் என ஒரு ஞாபக முடிச்சு அவிழ்ந்து சுடர்விரிக்கிறது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தரமணி வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும்  தமிழாய்வு விழாவில்தான் அந்த முதல் சந்திப்பு நடந்ததாக இருக்கவேண்டும். காலை முதல் மாலைவரை இரண்டு மூன்று நாட்களுக்கு அவ்விழா நடைபெறும். என்னை நானே எப்போதும் எவருக்கும் அறிமுகப்படுத்தியதில்லையென்பது என்னளவில் இன்றுமிருக்கும் என் கர்வம். என் அடங்கிய சுபாவத்துக்கு இது ஒத்துப்போகும் குணாம்சமாக நிச்சயமாக இருக்கமுடியும். ஒரு விழா நாளில் மதியபோசனத்துக்கான இடைவேளையில் ஈரோடு தமிழன்பனோ, தமிழவனோ யாரோ என்னை உங்களுக்கு ஒருசமயம் அறிமுகமாக்கிய பொழுதில், என் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாகவும், எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லையென்றும் நீங்கள் கூறினீர்கள். அதற்கு என்னை அறிமுகம் செய்துவைத்தவர், ‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் நாட்டைச் சேர்ந்தவர், இங்கே நீண்ட காலமாய்த் தங்கியிருக்கிறார், இரண்டு மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன, இங்கிருந்தே ‘இலக்கு’ என்கிற சிறுபத்திரிகையைக் கொண்டுவருகிறார்’ என்று சொன்னார். அப்போதுதான் என்னை அருகே அமர வைத்து என்னைப்பற்றி விசாரித்தீர்கள். மதியபோசன இடைவேளை முடியும் நேரமாதலால், சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், வசதியானவேளையில் வந்தால் நிறையப் பேசலாம் என்றும் கூறி என்னை அனுப்பினீர்கள்.

அதன் பின்னர் மெரினா கடற்கரைப் பக்கம் வரநேர்ந்த ஓரிரு சமயங்களில் நான் உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். நாளாக ஆக, நீங்கள் விடுமுறையில் இலங்கை சென்றுவிட்டு, திரும்பிவந்த பின்னர் கி.பார்த்திபராஜா போன்ற அப்போதைய எம்.ஏ. வகுப்பு பயிலும் மாணவர்களிடம் உங்களை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்புவீர்கள். என் வீடு தெரிந்திராவிட்டாலும், நடைபெறும் ஏதாவது ஓர் இலக்கியக் கூட்டத்தில் என்னைச் சந்திக்கும்போது அவர்கள் தகவலைத் தெரிவிப்பார்கள். நானும் முடிந்த விரைவில் ஒரு மாலைப்பொழுதாக வந்து உங்களைச் சந்திப்பேன்.
மெரினா கடலோரத்திலுள்ள அந்த விருந்தினர் விடுதியில் உங்கள் அறையிலிருந்து கடலலைபோல் ஓய்ந்துவிடாமல் எத்தனை நாவல்களை, எத்தனை சிறுகதைத் தொகுப்புகளைப்பற்றி நாம் பேசியிருக்கிறோம். இலக்கியப் போக்குகள் குறித்து எவ்வளவு தீவிரமாய் கலந்துரையாடியிருக்கிறோம்.

அவ்வாறு பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் வந்து நான் உங்களைச் சந்தித்த ஒருநாளில்தான் என் வாசிப்பின் தீவிரத்தைப்பற்றி நீங்கள் மெச்சிக் கூறினீர்கள். ‘தேவகாந்தன், படைப்பு, படிப்பிப்பு எந்த ஒரு துறையிலென்றாலும் உழைப்பு முக்கியம். இல்லாவிட்டால் இருக்குமிடத்தைத் தக்கவைக்கவே முடியாது’ என்று அன்று நீங்கள் கூறிய வார்த்தைகளை என்னால் இன்றும்கூட மறக்க முடியாமல்தான் இருக்கிறது, ஐயா.

எறும்பும் தன் கையால் எண் சாண் என்பார்கள். எனக்கும் உங்களோடான சங்காத்தம் அதுபோல்தான் இருந்திருக்கிறது. பேராசிரியர்கள், கல்விமான்கள்போல நானும் உங்களை அவ்வப்போது சந்தித்தும், பேசியும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்தும் உள்ளேன் என்பது எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் பதவி, புகழ்பற்றி நன்கறிந்த பலபேர் அறிந்திருக்க முடியாத சிலகூறுகளை நான்  தொட்டுக்காட்டுவது அவசியமாகவே படுகிறது.

ஐயா, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, தொண்ணூற்றேழு அல்லது தொண்ணூற்றெட்டு என நினைக்கிறேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரிமுனையில் ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்திருக்கிறது ஒருநாள் மாலையில். நீங்கள் வரவிருப்பதான தகவலில் நானும் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கூட்டம் ஆறரை மணியாகியும் ஆரம்பிக்கவில்லை. பேராசிரியர் சிவத்தம்பி வந்ததும் ஆரம்பித்துவிடலாம் என்கிறார்கள் கூட்ட அமைப்பாள நண்பர்கள். நான் வெளியே வந்து வீதியில் பிராக்குப் பார்த்தபடி நேரத்தைப் போக்காட்டிக்கொண்டு நிற்கிறேன். அப்போது நீங்கள் ஒரு ஓட்டோவில் தனியே வந்து இறங்குகிறீர்கள். காலில் நீங்கள் சற்று சுகவீனமுற்றிருந்த காலம் அது. கூட்டம் நடைபெறவிருந்த முதலாம் மாடிக்கு நான் பின்தொடர நீங்கள் மேலே ஏறிச்செல்லுகிறீர்கள். அப்போதுதான் நீங்கள் வந்துவிட்டமை கூட்ட அமைப்பாளர்களுக்குத் தெரியவருகிறது. நீங்களோ உங்கள் பெரிய சரீரத்தை உடல்நலம் குறைந்திருந்த வேளையிலும் முதலாம் மாடிக்கு நகர்த்திய பிரயாசையில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறீர்கள். உங்கள் மேனியெங்கும் வியர்வை ஆறாக ஓடுகிறது. யாராவது சென்று அழைத்துவந்திருக்கலாம் அல்லது கார் வசதியேனும் செய்து கொடுத்திருக்கலாம் என நான் கூட்ட அமைப்பாளர்களைக் காய்ந்து வெடிக்கிறேன். அப்போது நீங்கள் மெல்ல என்னை அருகே அழைத்து, ‘தேவகாந்தன், நான்தான் ஓட்டோவில் வருவதாகச் சொன்னேன். காரைவிட ஓட்டோவில் இந்தக் காலோடு எனக்கு ஏறி இறங்குவது சுலபமாக இருக்கிறது’ எனக் கூறி சமாதானப் படுத்துகிறீர்கள்.

சிறிதுநேரத்தில் கூட்டம் ஆரம்பமாகிறது. முதன்மைப் பேச்சாளர் நீங்கள்தான். நீங்கள் அன்று பின்நவீனத்துவத்தைப்பற்றி  பேசுகிறீர்கள். ஐயா, பல்வேறு நூல்களினூடாகவும் புரியச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த பின்நவீனத்துவம்பற்றி நான் தெளிவான ஆரம்பத்தை அடைந்தது அன்றுதான். பின்னர்கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் பின்நவீனத்துவத்தைப்பற்றி எழுதவும், பேசவும் செய்திருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆதரவில் நடைபெற்ற அன்றைய கூட்டத்தில் நீங்கள் நிகழ்த்திய பேச்சுக்கு உறைபோடக் காணாது அவையெல்லாம்.
நீங்கள் எழுதிய நூல்களையெல்லாம் இன்று பட்டியலாகப் போட்டபடி இருக்கின்றன பத்;திரிகைகள். இவையெல்லாம் ஆண்டு மலர்களுக்கும், பல்கலைக் கழக சஞ்சிகைளுக்கும், பத்திரிகைகளின் தேவைகளுக்காகவும் நீங்கள் எழுதிய கட்டுரைகள்தானே என்று ஒருகாலத்தில் சிலர் ஏளனம் செய்தது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது, ஐயா. இவைகூட கனதியானவைதான். ஆனாலும் என்றும் என் ஞாபகத்தில் இருந்துவரும் நூல் ‘பாரதி: காலமும் கருத்தும்’ என்று நீங்கள் அ.மார்க்ஸ{டன் இணைந்து எழுதிய நூல்தான். பாரதியின் வரலாற்றை எழுதியதில் தொ.மு.சி.ரகுநாதனுக்கு இருக்கும் சாதனைச் சிறப்பு, ஆய்வுரீதியில் மார்க்ஸீய நோக்கில் நீங்கள் எழுதிய அந்த நூலுக்கு உள்ளது. பல தடவைகள்  அந்த நூலை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையிலும் அர்த்த வியாபகம் கூடி ஓர் படைப்பிலக்கியம்போல் என்னைக் கவர்ந்த ஆய்வுநூல் அது.
‘முகத்துக்கு அஞ்சி வேசையாடக் கூடாது’ என்று ஒரு சொலவடை எங்களூரில் இருக்கிறது. பல்வேறு நூல்களுக்கு நீங்கள் முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். எழுதியவரின் மனத்தைப் புண்படுத்திவிடாது, அவர்களைத் தட்டிக்கொடுக்கும் விதமாக அந்த முன்னுரைகள் அமைந்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அப்படிச் செய்துவிடக்கூடாது என்பதுதான் மேலேயுள்ள அந்தச் சொலவடையை நான் இங்கே குறிப்பிட்டதன் அர்த்தம்.

சில ஆண்டுகளின் முன்னால் நான் ‘ஆழியவளை’ என்ற ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. தமிழில் பண்பாட்டு நிலவியல் சார்ந்த முன்னோடி நூல்களில் ஒன்று அது. அதற்கு நீங்கள் முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். ஒருமுறை வாசித்தேன். மீண்டும் வாசித்தேன். அப்படியே எண்ணம் வரும்போதெல்லாம் அந்த நூலின் முன்னுரையை பல தடவைகள் வாசித்தேன். அத்தனைக்கு தன் சொல்லாட்சியாலும், கட்டுரை வன்மையாலும் தனக்கு நிகரில்லாத ஒரு முன்னுரையாக எனக்கு அது தென்பட்டது, ஐயா.

அப்படியொரு நூலின் வன்மை கூடிய பேச்சை, அப்படியொரு சிகரம்தொடக்கூடிய ஆய்வு நூலை, அப்படியொரு வளமான முன்னுரையை எழுதக்கூடிய ஒருவரை இனி நாம் எங்கே தேட முடியும்? வெறுமையென்பதற்கு இப்போதைக்குள்ள விளக்கம், நீங்கள் இல்லாத இலக்கிய உலகம் என்பதுதானோ?

பயணத் திசை ஒன்றெனினும் நாம் வெவ்வேறு பாதைகளில்
பயணித்தவர்களே. இந்தப் பாதையில்கூட நீங்கள் இல்லாத சூன்யத்தை நான் உணர்கிறேனே, ஐயா.

உங்கள் நினைவுகளுக்கு என் மனதார்ந்த அஞ்சலிகள்!


000


தாய்வீடு, பெப். 2012

பக்க எழுத்துக்களும்


பக்க எழுத்துக்களும் 
பக்க விளைவுகளும்எழுத்துக்களின் ஊற்றுக் கிணறுகளாக ‘பக்க எழுத்தாளர்க’ (columnists) ளைச் சொல்ல முடியும். ஆனாலும் தம் துறைசார்ந்த எழுத்துக்கான தேடலையும் பயணங்களையும் மேற்கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே நல்ல எழுத்துக்கள் பிறந்திருக்கின்றன.

பாலியல், அரசியல், சமூகம், இலக்கியம் என பல்வேறு தளங்களில் இந்த பக்க எழுத்துக்களை நாம் காணமுடியும். என்னால் எந்த விஷயத்தைப்பற்றியும் எழுத முடியுமென்று எழுதப் புகுந்தவர்கள், பிழைப்புவாரிகளாகத் தேங்கிப் போனதும், தம் துறையை அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய வௌ;வேறு துறைகளைத் தேர்ந்து எழுதத் தொடங்கியவர்கள் உலகப் புகழ் வாய்ந்த பக்க எழுத்தாளர்களாக விளங்கியதுமே கடந்த கால எழுத்தின் வரலாறு நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தி.

பாலியல் குறித்த பக்க எழுத்தில் பிரபலமான டான் சவேஜ், அரசியல் சமூகம் இலக்கியமென பல்வேறு தளங்களில் எழுதிப் பேர்பெற்ற சரஜிவோ நாட்டு பக்க எழுத்தாளர் அலெக்சாண்டர் ஹேமன், சமூக அக்கறையை வெளிப்படுத்த பல்வேறு கடத்தல் விவகாரங்களை எழுதிய மெக்ஸிக்கோ நாட்டு மிக்கேல் லொபேஸ் வெலங்கோ முதலியோர்போல் ஆழமான விஷயங்கள் குறித்து எழுதி சுய பாதிப்புக்களை அடைந்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். கடத்தல்காரரின் ஏவுதலால் ஒரு அதிகாலை ஐந்தரை மணியளவில் இனந்தெரியாதோரினால் லொபேஸ் வெலங்கோவின் மனைவி மற்றும் மகன் ஆதியோர் கொலை செய்யப்பட்ட செய்தி கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் நடந்திருக்கிறது.

பக்க எழுத்தின் தொடக்க காலமான இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பத்திரிகையில் வெளியான அல்லது அக் காலப் பகுதியில் பலரையும் கவர்ந்தவோ பாதித்தவோவான விஷயம் குறித்து ஆசிரியர் பகுதிக்கு கடித வடிவத்தில் எழுதப்பட்டவைகளாகவே பக்க எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பின்னால் சிறிது நகைச்சுவையான விஷயங்கள் குறித்து எழுதப்படுபவையாக அவை உருமாறின. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேல் ஊடகவியற் தொழில்போலவே பக்க எழுத்தின் அர்த்தங்களும் பல்கிப் பலமேறின.
செய்தி மற்றும் கட்டுரை வகையினத்தைவிட இன்று மிகவும் கடினமான பத்திரிகைத் துறை எழுத்தாகக் கருதப்படுவது பக்க எழுத்துத்தான்.
‘தேவகாந்தன் பக்க’மென்ற இந்தப் பக்கத்தில் நான் எழுதிய பன்னிரண்டு எழுத்துக்களும் வௌ;வேறு விஷயங்கள் குறித்தவையெனினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கலை, இலக்கியம், சமூகம் மட்டும் சார்ந்தவையாய் அமைந்து வட்டத்தை மிக விரிவாக இட்டுக்கொள்ளாதவை. ஆதனால் காத்திரமான சில விஷயங்களையேனும் சொல்லியிருக்கிறேன் என நான் நம்ப போதிய இடமிருக்கிறது.

அதனால் இந்த எனது பக்க எழுத்தின் முடிப்பாக எழுதப்படுகின்ற இந்த இடத்தில் பக்க எழுத்துப்பற்றிய கருத்தைச் சொல்லவேண்டுமென ஏனோ தோன்றிற்று, சொல்லுகிறேன்.

பக்க எழுத்து என்பது எப்போது சிறந்த எழுத்தாக அமைகிறது என யோசித்தால், அது பக்க விளைவுகளைச் சந்திக்கிறபோது என தயங்காமல் கூறிவிடலாம். வாசக மனத்தைப் பாதிக்கக்கூடியதாக மட்டுமில்லை, அந்த எழுத்து புறத்திலிருந்து வரும் எதிர்ப்புக்களினாலான பாதிப்பாகவும் இருக்கவேண்டும். அவ்வகை எழுத்தே வலிதான பக்க எழுத்தாக அமையமுடியும். வலிமையற்ற எழுத்துக்கு அகப் பாதிப்பும் இல்லை, புறப்பாதிப்பும் இல்லை.
இவ்வகையான எழுத்து வன்மையை நிறைவேற்ற எழுதப்படும் பத்திரிகையின் அரசியல், சமூக நிலைப்பாடு முக்கியமானதெனினும், பல பத்திரிகைகள் இது எழுதுபவரின் நிலைப்பாடு எனக் கூறித் தமது நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு பக்க எழுத்தாளனை ஊக்குவித்தும் இருக்கின்றன. அவ்வாறான பத்திரிகைகள் அமைவது பக்க எழுத்தாளனுக்கு ஒரு கொடை.

ஒரு கட்டுரையாளனும், ஒரு பத்தி எழுத்தாளனும் வேறுபடுகிற இடம் ஒரு மென்மையான பிரிகோட்டினால் உணர்த்தப்படுகிறது. ஒரு எட்டுப் பக்கக் கட்டுரையின் உயிரை, ஒரு பக்க எழுத்தாளன் தனது பக்க எழுத்தில் பெய்துவிட முடியும். ஆனால் ஒரு பக்க எழுத்தின் வீரியத்தை பதினாறு பக்க கட்டுரையினாலும் உண்டாக்கிவிட முடியாது. அந்த வகையில் பார்க்கிறபோது, ஏனைய சிறுகதை வடிவங்களுக்கும் கவிதைக்கும் உள்ள தாக்கத்தின் வீரிய அளவு வித்தியாசத்தைச் சொல்லலாம்போலத் தோன்றுகிறது.

எனது பல்வேறு பக்க எழுத்துக்கள்பற்றியும் அவ்வப்போது நேரிலும், தொலைபேசியிலுமாக என்னிடம் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சூழலில் இது நல்ல ஒரு சகுனம். இந்த தருணத்தில் அந்த வாசகர்களுக்கான நன்றியை நான் தெரிவிப்பது பொருத்தமானது.
ஒருபோது என் ஒரு பாலினர் குறித்த பக்க எழுத்துக்கு இணைய தளங்களில் மிக ஆக்ரோஷமான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றினுக்கு நான் தீவிரமான மறுப்புக்கூட எழுதியதில்லை. அந்த மறுப்புக்களை நான் மதித்திருந்தபோதும்தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பக்க எழுத்து ஒன்றின் ஆகக் கூடுதலான தளம், அது கிளர்த்திவிடுகிற பிரச்சினை மட்டும்தான். அல்லது விஷயம் மட்டும்தான். வாத பிரதிவாதங்கள் வேறுதளத்தில் நிகழ்த்தப்பட வேண்டியவை. இரண்டாவது, எதிர்த்திசைப் பயணங்களாகவன்றி ஒரே திசையில் வேறுவழிப் பயணங்களாக நம் கருத்துக்கள் இருந்ததில் பிரதிவாதமே அதில் அவசியமற்றதாகிவிட்டது.
அதில் நான் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருந்தது பக்க எழுத்து குறித்து. பக்க எழுத்தில் விஷய மயக்கம் ஏற்படாதிருக்கவேண்டும் என்பதே அது.
‘தாய்வீ’ட்டில் தை 2012இலிருந்து நான் தொடரவிருக்கிற நாவல் முடிந்த பின் இதே பத்திரிகையிலோ, அல்லது இணைய பத்திரிகையிலோ வேறோர் அச்சுப் பத்திரிகையிலோ கூட  நான் ஒரு ‘பக்க எழுத்து’த் தொடரொன்றை ஆரம்பிக்க முடியும். அப்போது இந்த அனுபவங்களுடான எழுத்து ஆழப் பதிக்கப்பெறும்.

000

தாய்வீடு, 2011

காலம் என்பது…
காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது.

‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின்  பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!

நான் கருதுகிற காலம் அவையல்ல. இது நான்காவது பரிமாணம் எனப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் ஆய்வில் முக்கிய வரைவிலக்கணம் பெற்றது.

ஐன்ஸ்டீன் வரையறை செய்த காலமென்ற கருப்பொருளின் அறிதல் பரவசம் செய்வது. அவர் கண்டுபிடித்த பல்வேறு பௌதீக விஷயங்கள் இன்றைய விஞ்ஞானத்தை பாய்ச்சல் நிலைக்குத் தள்ளியபோது மனிதனின் வாழ்வு, அவனது கற்பனைகள் சார்ந்த விஷயங்களை விளக்கிட முனைந்தது அவரது காலம்பற்றிய கருதுகோள்தான். நீளம், அகலம், உயரம் ஆகிய முப்பரிமாணங்களுடன் காலத்தையும் ஒரு பரிமாணமாகக் கொண்டு அதை நான்காவது பரிமாணமாக ஆதாரபூர்வமாய் நிறுவியவர் அவர்.
‘காலமென்பது நோக்குகிறவனின் இருப்பிடமும், அவனது இயக்க வேகமும் சார்ந்தது. மற்றப்படி அதற்கு சுயமான நிலையில்லை’ என்ற வரையறை அவரதுதான். இதிலிருந்து காலமும் வெளியும் சார்ந்த விஞ்ஞானக் கதை மரபு இலக்கியத்தில் உருவானது.

காலம்பற்றிய பிரக்ஞை ஒருவருக்கு தன் கடமைகளின் பாரம் அதிகமாகிற ஒரு தருணத்திலோ, தன் கடமைகளை நிறைவேற்ற முடியாது போய்விடலாம் என்ற அச்சநிலை ஏற்படும் வேளையிலோ தோன்றத்தான் செய்கிறது. எனது காலம்பற்றிய உசாவுகை கடமைகளின் பாரம், வாழ்நிலையின் எச்சம் சார்ந்ததல்ல. அது ஆசைகள்பற்றியது. வாசித்தலின் ஆசைகள்பற்றியது. இந்த இடத்தில்தான் எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பு தொடர்புபடுகிறது.

எனது வாசிப்புகள் பக்கத்து வீட்டு மலரக்கா வாசிக்கும் அம்புலிமாமா, கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு, பேசும்படம் போன்றவையாக இருந்தது இயல்பானது. பின்னால் எனது நண்பன் ஒருவனின் அண்ணா வாசிக்கும் பி.எஸ்.ஆர்., மேதாவி போன்றோரின் துப்பறியும் கதைகளின் வகையினமாக இருந்ததும் இயல்பானதுதான். அந்தவகையில் என் நினைவிலுள்ள முதல் நூல் பெயர் மறந்த ஓர் ஆசிரியரின் ‘வடிவாம்பாளின் உயில்’ என்பதாகும். எனது தந்தை மரணித்த காலப்பகுதியை வைத்துப் பார்க்கையில் எனக்கு அப்போது பத்து வயதிருக்கலாம். நாளுக்கு இரண்டு மூன்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் இருந்த நிலையில், என் பள்ளிக்கூட பாடங்களின் படித்தலுக்கும் காலம் அப்போது நிறையவே இருக்கச் செய்தது.

அங்கிருந்துதான் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும், அகிலனுக்கும், நா.பார்த்தசாரதிக்கும், சாண்டில்யனுக்கும், அரு.ராமநாதனுக்கும் என் வாசிப்பு நகர்ந்தது. ஏறக்குறைய இரவு இரண்டு மணி வரைக்கும் மண்ணெண்ணை விளக்கைத் தலைமாட்டில் கொளுத்தி வைத்துக்கொண்டு, மடித்து உயரமாக்கிய தலையணையின் உதவியுடன் வாசித்துக்கொண்டு கிடந்திருக்கிறேன். இந்தநேரத்தில் பள்ளிப் பாடங்களை நான் படிக்கவில்லையெனத் தெரிந்திருந்தும், என் வாசிப்புக்கு ஓர் இடையூறும் செய்யாது நான் வாசிப்பை முடித்து விளக்கை நூர்த்து தள்ளிவைத்துவிட்டு நித்திரை போகும்வரை, வாசித்துக்கொண்டு கிடக்கையில் அப்படியே நித்திரையாகி எரிந்துகொண்டிருக்கும் விளக்கைத் தட்டி நான் ஆபத்து எதையும் அடைந்துவிடக்கூடாதேயென்று தானும் விழித்திருந்த என் அம்மாவை நினைத்துக் கொள்கிறேன். அங்கிருந்து எஸ்.பொ.விற்கும், ஜெயகாந்தனுக்கும், பின்னால் நூலகங்களினூடாக புதுமைப்பித்தனுக்கும், கு.ப.ரா.விற்கும், அழகிரிசாமிக்கும் நான் வந்தேன். ஊர்சுற்று, விளையாட்டு, படிப்பு, பின்னர் இவ்வளவு வாசிப்புக்களுக்கும்கூட எனக்கு அப்போது காலம் இருந்ததை நினைக்க இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நான் வாசிக்க விரும்பியும் கிடைக்காமலிருந்த நூல்களையும், பார்க்க விரும்பி வாய்ப்பற்று இருந்த உலக, இந்திய சினிமாக்களையும் தமிழகத்தில் ஒரு நிர்ப்பந்த வாழுகை ஏற்பட்டு நான் தங்கியிருந்த சுமார் பதினைந்து ஆண்டுக் காலத்தில் வாசித்தும் பார்த்தும் முடித்தேன்.

வாசிப்பு என்பது இயல்பாகியிருந்தது. புதிய புதிய நூல்கள் தரும் செய்திகளையும், அவற்றின் உணர்வு எறிகைகளையும், கட்டுமானப் பரவசங்களையும் அனுபவிக்காமல் தூங்கமுடியாதென்ற ஒரு வியாதியாக அது இருந்தது. ஆனால் கனடா வந்த பிறகு, பாதிக்குப் பாதியாக என் வாசிப்பு குறைந்துபோயிற்று. தமிழ்நாட்டிலிருந்து மாதந்தோறும் எடுப்பிக்கும் நூல்கள், கால் பங்குக்கு மேல் இன்னும் வாசிக்காமலே கிடக்கின்றன.

நேரம் போதாமலிருக்கிறது என்று சொல்லி நான் சுலபமாகத் தப்பித்துவிட முடியாது. இதற்கான விடை எனக்குத் தெரிந்தாகவேண்டும். வாசிக்காத நூல்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதை இனிமேலும் அனுமதிப்பது சாத்தியமில்லை.

இந்தப் போதாமையை எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பின்போது நான் வன்மையாய் உணர்ந்தேன்.

பிரபஞ்சனை தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் நான் நன்கறிவேன். அவரது ‘மானுடம் வெல்லும்’ நாவல் தொடராக வந்த காலத்தில், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரரின் ஆட்சியை அக்காலப்பகுதியில் துவிபாஷியாக இருந்த ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பை முக்கிய ஆதாரமாகக்கொண்டு புனையப்பெற்ற அந்த நவீனத்தை வாசித்து நான் கொண்ட பரவசம், என்னை அவர்பால் ஈர்த்தது. பின்னர் இலக்கியக் கூட்டங்களில் சந்தித்து உரையாடிய அனுபவம். அவரது சென்னை இல்லம் புத்தகங்களால் நிறைந்தது. அது புத்தகங்கள் வாழும் இல்லம். வேறுபேர் வாழ்வதற்கு இடம் குறைந்தது. இருந்தும் அந்த நூல் தொகை என்னைப் பெரிதாக என்றுமே வியப்பிலாழ்த்தியதில்லை. ஆனால் கனடா ஸ்கார்பரோவில் நிகழ்ந்த சந்திப்பில் நான் அவரிடமில்லாதிருந்த, ஆனாலும் அவர் கொண்டிருந்த வாசிப்பின் பரப்பளவைக் கண்டபோது பிரமிப்படைந்தேன்.

ஜோ. டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ பற்றிச் சொன்னார். ஜெயமோகனின் ‘காடு’பற்றி, தாஸ்தாயெவ்ஸ்கிபற்றிச் சொன்னார். இவைகளை அதிர்ஷ்டவசமாக நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். ஆனால், நாவல்களில், சிறுகதைகளில், கவிதைகளில் புதியதலைமுறையின் படைப்புக்கள்பற்றிச் சொன்னபோது என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதுபோன்ற பிரமிப்பை முன்னர் ஜெயமோகனிடம்தான் நான் அடைந்திருந்தேன். ஊட்டியில் மு.தளையசிங்கம் படைப்புகள்பற்றிய கருத்தரங்குக்கு நானும் வெங்கட் சாமிநாதனும் சென்னையிலிருந்து ஒன்றாகச் சென்றிருந்தோம். அமர்வு தொடங்குவதற்கு முன்னாக நாம் சென்று சேர்ந்த முதல்நாள் இரவில், எங்கள் வசதிகளைக் கேட்கவந்த ஜெயமோகன் சுமார் நான்கு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். எல்லாம் சமகால நாவல்கள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள்பற்றியவை. மிகச்சிறந்த எழுத்தாளராக மட்டுமே அவரை அறிந்திருந்த நான், அன்றுதான் அவரை ஓர் இலக்கியத் தகவல் களஞ்சியமாகவும் கண்டேன். கனடா வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனின்மீதான வியப்பு அதற்குச் சமமாக இருந்தது. ஈழத்தில் இதுபோல் சொல்ல கனக-செந்திநாதன் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவரை வியந்த அளவுக்கு, அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
என் வாசிப்பின் குறைவுகளைச் சுட்டிக் காட்டிய இதுதான், காலத்தைப் பற்றிய என் விசாரிப்பை வலிதாக்கியது.

காலத்தை நாம் நடத்துகிறோமா அல்லது காலம் நம்மை நடத்திக்கொண்டிருக்கிறதா? வாழ்வின் விசை வெகுவேகம் பெற்றிருக்கும் ஒரு நாட்டில் வந்து உயிர்வாழ்வதற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமா? அல்லது வாழ்க்கை எங்கேயும்தான் விசைபெற இயங்கும் தளமாகிவிட்டதா பூமி? அப்படியாயின் இங்கே நமக்கான காலத்தை வகிர்ந்தெடுப்பது எவ்வாறு?

விடையைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

000

தாய்வீடு, சித்திரை 2011

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்டவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில்  அண்மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. Voices in the Desert –An  Anthology of Arabic - Canadian Women  Writers  என்ற நூல்தான் அது.

அது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும்.

பெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேறினார்கள். அதனால்தான் அதிகமான அராபிய-கனடியப் பெண் எழுத்தாளர்கள் தங்களது சொந்த மொழிகளுடன் ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரிந்து மும்மொழி வல்லுநர்களாக இருப்பது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு குடியேறியவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். சிலர் எகிப்தையும், சிலர் அல்ஜீரியாவையும், இன்னும் சிலர் சிரியாவையும், சிலர் லெபனானையும் சேர்ந்தவர்களாயிருந்தனர். இந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களிலிருந்து தோன்றிவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள். இவர்களையே  மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் எனப்படுகிறது.

தலைமுறை இடைவெளி அவர்களது இலக்கியத்தில் பெரிதாகவே பிரதிபலிக்கச் செய்கிறது. ஆயினும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்த தளநிலைமைகளின், கருத்தியல்களின் மயக்கமும் புதிர்மையும் எழுதத் தொடங்கியுள்ள இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இல்லையென்ற ஒரு சாதக அம்சம் கவனிக்கப்பட்டாக வேண்டும்.

இவர்களின் குரலில் தொனிக்கும் ஆவேசமும், ஆணித்தரமும் இலக்கியப் பண்புகளாயே விரிகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் குரலாக இவர்களதை அடையாளப்படுத்துவது அதிக சிரமமில்லாதது. மோனா லரிஃப் கட்டாஸ் என்ற எழுத்தாளரின் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ‘இரவினதும் பகலினதும் குரல்கள்’ என்ற நூல் இன்றைய கனடிய இலக்கியத்தின் பன்முக விகாசத்துக்கு சரியான எடுத்துக்காட்டு. எகிப்திய புராணிகக் கதைகளின் உள்வாங்கலாக, எகிப்தின் சரியான ஆன்மீகத்தைக் காட்டக் கூடிய நூலாக அதை இன்று விமர்சகர்கள் இனங்காணுகிறார்கள்.

யதார்த்த தளத்தில் அப்ளா பர்கூட், மற்றும் ரூபா நடா போன்றவர்களின் எழுத்துக்கள் விரிகின்றனவெனில், ஆன் மரி அலன்ஸோ, நடியா கலெம் போன்றவர்களது எழுத்துக்கள் பின்நவீனம் சார்ந்தவையாய் கொடிகட்டுகின்றன. இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தங்கள் கரங்களைப் படரவிடும் இவர்களின் இலக்கியப் போக்குகள் உள்வாங்கப்பட வேண்டியன.

மட்டுமில்லை. இதில் படைப்பாக்கங்களைத் தந்திருக்கும் ஒன்பது பேர்களது வாழ்வியல், தொழில் நிலைமைகளும் உயர்வதற்கு இந்தச் சமூகம் அனுமதித்துள்ள பெண்ணின் சராசரி எல்லைகளில்லை என்பதும் கவனிக்கப்பட்டாக வேண்டும். சிலபேர் தலைசிறந்த பத்திராதிபர்கள், சிலர் முக்கியமான பதிப்பாளர், சிலர் தொழிலதிபர்கள். மேலையுலகத்தின் அத்தனை அறைகூவல்களையும் எதிர்கொண்டபடியேதான் இவர்களது இலக்கிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பது அனைத்துச் சமூகப் பெண்களுக்கும் முன்னுதாரணமானது.

‘அற்றம்’ என்ற இதழை இப்போது நினைத்துக்கொள்ள முடிகிறது. கனடாத் தமிழ்ப் பரப்பில் பிரதீபா, தான்யா, கௌசலா என்ற மூன்று பெண்களினால் கொண்டுவரப்பட்ட சிற்றிதழ் அது. அதே பெண்களில் இருவரின் முயற்சியில் (தான்யா, பிரதீபா ) ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண் கவிஞர்களின்  கவிதைத் தொகுப்பும் சிறிதுகாலத்துக்கு முன்னர் வெளிவந்தது. இத்தகைய சில தொகுப்பு அடையாளங்களைத் தவிர, கனடாத் தமிழ்ப் பெண்களின் எழுத்துலகம் வெறுமை பூண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இதனுடைய மூலம் கண்டடையப்பட்டாக வேண்டும். இங்கு ஏதோ பிரச்சினை இருக்கிறதையே இது காட்டுகிறது. இருள்போல, இன்னும் இருளில் மறைந்திருப்பதாக பாட்டிக் கதைகள் கூறுவதுபோல ஒன்று அனைத்து ஆர்வங்களையும் அழித்தொழித்துவிடுகிறமாதிரி ஒரு மாயலீலையை  நிகழ்த்திக்கொண்டிருப்பதால் இல்லாமல் இவை நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.

இத்தகைய ஆதங்கத்திலேதான் ‘பாலை நிலத்துக் குரல்கள்’கூட எனக்கு மிகப் பிடித்தமானதாகத் தோன்றியிருக்குமோ? என் ஆதங்கம் நிஜமேயானாலும், நூலின் கனதிபற்றிய தீர்மானம் அதனாலே ஆனதில்லை. கட்டுரை, சிறுகதை, கவிதையென பல்வேறு இலக்கிய வகையினங்களினதும் கூட்டு நூலான அது உண்மையில் இலக்கியமொன்று மட்டுமே செய்யக்கூடிய அவசத்தை, சஞ்சலத்தை உருவாக்கவே செய்கிறது.

ஜாமினா மௌகூப்பின் ‘துக்கம்’ என்ற கவிதை இவற்றுள் ஒன்று. அல்ஜீரியா துயரம் சுமந்த பூமி. ஸ்பார்டகஸின் பௌராணிகம் பொலிந்த துயரக் கதை, நிகழ்ந்ததில்லையெனில், பின்புலத்திலிருந்த சோகமும் துயரமும் கொடுமைகளும் புனைவானவையில்லை. பின்னால் வெள்ளையரின்  ஆதிக்கப் போட்டிகளில் அது அடைந்த சோகம் வரலாறு. இந்த வலிகளோடு பெண்ணாகிய சோகங்களும் சேர்ந்து கொண்ட ஓர் உயிரின் வலியை சிறிய கவிதையொன்றில் அற்புதமாக விளக்கியுள்ளது ‘துக்கம்’ என்ற அந்தக் கவிதை. அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.
துக்கம்


துக்கம்
காரணங்களை
பற்றிக்கொள்கிறபோது…

 காரணம்
கேள்விகளுள்
அழுந்திக்கொள்கிறபோது…

கல்லாக மாறிவிடவே
விரும்புகிறேன்
காற்றுடன் உரையாடியபடி.

அப்போது
பாறையாக மாறிவிடவே
விரும்புகிறேன்
கடலின் சகோதரியாக,
இழந்த கல்லை மீண்டுவிட்ட
குழந்தையின் மனோநிலையோடு.

கவிதை விரித்துச்செல்லும் அர்த்தவெளி  விசாலமானது. அந்த மண்ணையும், மக்களது  வாழ்முறைகளையும் கொண்டு கவிதையை நெருங்கினால் அதன் பன்முகவெளி வாசக அனுபவமாகும்.
‘பாலைநிலத்துக் குரல்கள்’ கனதியானது மட்டுமில்லை, திசைகாட்டுவதுமாகும்.
000

தாய்வீடு, பங்குனி 2011

ஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...


ஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ... 

(திருத்தப்பட்ட  தாய்வீடு கட்டுரை )கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், ஒருபால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது.

சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், ஒருபால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே.

கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது.

நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவிடுமோ என ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தயக்கம். இது கருத்து மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கான கருத்துப் பலஹீனத்தின்பாற்பட்டதல்ல. மாறாக, கருத்தை வெளிப்படுத்துவதிலான சுயகட்டுப்பாடு, தார்மீகக் கடமைகளின்பாற்பட்டது மட்டுமே. ஆனால், கூட்டங்களுக்கே நான் செல்லாதிருந்ததால், அந்தத் தயக்கம் வெகுநேரம் நீடிக்கவில்லை. ஒன்றின் எதிர்வினையாக இது இல்லை. என் கருத்து சுயமானது. தற்செயலாக அங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிரானதாக இருப்பின் அது எதிர்பாராதவிதமானது.

இதுபற்றி, நான் எதையாவது எழுத ஆரம்பிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக எதுவும் வெடித்தெழுந்துவிடக்கூடாது என்பதால் நான் கொஞ்சம் இயல்பாகவே முன்யோசனைக்காரன். விளிம்புநிலை மக்களான இவர்கள்மீது என் சார்பும் அக்கறையும் நிச்சயமானது. தீவிரமானது. இவற்றை மீறி இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்நிலைமையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கிறது.
இந்த அதிர்வு என் இளமைக் காலம் முதல் என்னைத் தொடர்ந்து வந்திருப்பதாக வேறு எண்ணமெழுந்திருக்கிறது. ஜோன் லெனான் என்ற எனக்குப் பிடித்தமான ஒரு பொப் பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த கணத்தில் ஏற்பட்டதைவிட, அவர் ஓர் இருபாற் புணர்ச்சியாளர் என்பதை அறிந்தபோது நான் அதிகமாக அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் அவரது பாடல்கள்மீதான பிடித்தம் நாளடைவில் திரும்பவே என்னை வந்தடைந்திருக்கின்றன.

எனக்குப் பிடித்தமான பழைய ஆங்கிலப் பாடல்களில் ‘I love you more than I can say’ என்ற லியோ சேயரின் பாடலும் ஒன்று. லியோ சேயர், காதலின் நுண்மையின் ரகசியக் கூறுகளை அந்த ஒரு பாடலிலேயே வெளிப்படுத்திவிட்டதாக நான்  பரவசம் கொண்டிருந்தேன். அதனாலேயே லியோ சேயர் ஒரு கதாநாயகப் பாடகன் நிலைக்கும் உயர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு ஒருபாற் புணர்ச்சியாளர் என அறிந்த கணமே நான் சிதறிப்போனேன். ஆனால் இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஆங்கிலப் பாடல்களில் வெளிப்படுத்த முடியாத காதலின் வலியைச் சொல்லும் பாடலாக அதுவே நின்றுகொண்டிருக்கிறது. கெனி றோஜர்ஸுக்கு ஈடாக லியோ சேயரும்  என் மனத் தவிசில் இருந்துகொண்டிருக்கிறார்தான்.

இந்த அனுதாபங்களும் பிடித்தங்களும் என் கருத்துநிலை சார்ந்தவை என்றபோதிலும், இது தனிமனிதப் பிரச்சினை மட்டுமில்லை, சமூகப் பிரச்சினையும்தான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள்போல ஒருபாற் புணர்ச்சியாளர்களை எளிதில் ஒப்புக்கொள்ள முடியும் என்னால் அதன் சமூக கோசத்தை வரவேற்றுவிட முடியாதிருக்கிறது. அது ஒரு தனி மனித பிரச்சினை மட்டுமே.

தனிமனிதனா, சமூகமா என்ற ஒரு கேள்வி வருகிறபோது என்னால் சமூகத்தின் சார்பாகவே பேச முடியும்.

ஒவ்வொரு சமூக மாற்றமும் அதன் முந்திய சமூக அமைப்பைவிட முற்போக்கானதுதான். நிலப்பிரபுத்துவ சமூகத்தைவிட முதலாளித்துவ சமூகம் முற்போக்கானதென்பதில்  எள்ளளவும் ஐயமே இல்லை. ஆனாலும் முதலாளிய சமூகம் அதனளவில் தன் குறைகளையும் கொண்டேதான் இருக்கிறது. அதனுடைய மூச்சு தனிமனிதத்துவமாகும். அதிலிருந்தே தன் பிராணவாயுவை அது பெற்றுக்கொண்டிருக்கிறது. ரத்தம் சுத்திகரிப்பாகிறது. தீங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் அம்சமாக இருந்த கூட்டுக் குடும்ப வாழ்முறை முதலாளியத்தின் வருகையோடுதான் சிதறியது. அது நல்லது. முன்னேற்றமானதும்கூட. ஆனாலும் தனிக் குடும்ப வாழ்முறைக்கான அதி உச்சபட்ச விதிகளை வகுத்தது மேலைத் தேசம். இன்று ஒருபாற் புணர்ச்சியையும் அது தனிமனித சுதந்திரமென்கிற திரையின் பின்னணியாகவே முன்மொழிகிறது. ஆனால் இது விகற்பமடைகிற இடம் ஒருபால் திருமணங்கள்.

ஒருபாற் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவதானது கனடா. அது நல்லது. அந்தளவுதான் அந்த விவகாரத்தில். சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்லவேண்டியதில்லை. அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம்மட்டுமாக எடுத்துக்கொண்டு ஒதுக்கிவைப்பதுதான் விவேகம்.

 ஆனால் அதை ஒரு வாழ்முறையின் அம்சமாகப் பிரச்சாரப்படுத்துவதுபோன்ற எந்த முயற்சியையும்  எதிர்ப்பதைவிட  இதில் ஒரு ஜனநாயக முற்போக்குவாதிக்கு வேறு வழியில்லை.
அது விபச்சாரம்போல் மிகப் புராதனமானது. சுயவின்பத் திருப்திப்படுதல்போல் உயிரின இயல்பானது. ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக அநீதியின் கூறு ஒட்டிக்கொண்டிருக்கும். சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும். ஒருபாற் திருமணத்தில் அவை இல்லையென்பது முக்கியம்.

அடைக்கப்பட்ட, அடக்கப்பட்ட மனித இச்சையின் எறியத்தில் வளர்ந்து படர்வது சுயஇன்பமும், தன்பாற் புணர்ச்சியும். எனினும்தான் அதை அந்தளவில் வைத்து புரிதலை வளர்க்க மட்டுமே ஒரு சமூகவியலாளன் செய்ய முடியும். இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொதுஜனத்துக்கு எப்போதும் உரிமை உண்டு.
000
தாய்வீடு, 2010

Tuesday, August 11, 2015

நூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’


‘கடவுளின் மரணம்’
(சிறுகதைத் தொகுப்பு)இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரினது மூலம் மற்றும் இயங்குவிதங்களும் பற்றியவையான ஒரு விசாரணை

கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பு மிக்க கவனம்பெறவேண்டிய ஒரு படைப்பு என்று தோன்றுகிறது. அதன் வெளியீடும் கருத்தாடலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற உடனடிப் பின்னால் ஒருமுறையும், அதன் நினைவுத் தாக்கத்தில் அண்மையில் மேலும் ஒருமுறையுமாக வாசித்த பின்னர் முதல் வாசிப்பில் அதன் மேலெழுந்திருந்த உணர்வுரீதியான மதிப்புகள் அடங்கி, ஏற்பட்டுள்ள விமர்சனரீதியான மனநிலையில் அதுபற்றி எழுதுவது அவசியமென்று பட்டது.

பதினாறு கதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பின் முதலாவது கதையினதே மொத்தத் தொகுப்புக்குமான தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது, இதுவே இத்தொகுப்பின் சிறந்த கதையென்று அறுதியிட முடியாதபோதும்.
எந்த ஒரு தொகுப்பும்போலவே இதுவும் மிகச் சிறந்த, சிறந்த, மற்றும் சாதாரண கதைகளைக் கொண்டிருப்பினும், இதன் மிகச் சிறந்த கதைகள் கட்டவிழ்க்கும் அர்த்தங்கள் அலாதியானவை. இவற்றின் கட்டுடைப்பிலும் பல்வேறு அர்த்தங்கள் வெளியாகின்றன.

முதலாவது கதையான ‘கடவுளின் மரணம்’, இரண்டாவதான ‘பிரிகை’, மூன்றாவதான ‘கப்பல் எப்ப வரும்?’, நான்காவதான ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ஐந்தாவதான ‘புஸ்பனுக்கு இரண்டு பொடிக்காட்’, ஏழாவதான ‘நாய்வெளி’, எட்டாம் கதையான ‘சிங்களத்தி’, ஒன்பதாவதான ‘காணாமல் போனவர்கள்’, பன்னிரண்டாம் கதையான ‘பழி’ ஆகிய கதைகள் இத் தொகுப்பில் முக்கியமானவை.

இவற்றினுள்ளும் ‘கடவுளின் மரணம்’, ‘நாய்; வெளி’, ‘கப்பல் எப்ப வரும்?’, ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ‘பழி’ ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து கதைகளினதும் மீதான என் அபிப்பிராயங்களைப் பகிர்வதே இப்பகுதியில் எனது நோக்கம்.
ஆசிரியனின் மரணம் ரோலண்ட் பார்த்தினால்போல கடவுளின் மரணமும் இற்றைக்கு அறுபத்தைந்து எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்பியலின் தொடக்க காலத்திலேயே நீட்சேயினால் அறிவிக்கப்பட்டாயிற்று. ஆயினும் படைப்பாளி ‘கடவுளின் மரண’த்தில் இதை அறிவிக்கும் விதம் எதனையும்விட வித்தியாசமும், சிறப்புமானதுதான்.

இது எதிர்மறையாகவும் நேர்மறையாகவுமான இரண்டு உச்சங்களிலிருந்தும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் கதை. இக்கதை வெளிவந்த ஆண்டு, பத்திரிகையோ அல்லது சஞ்சிகையோவினது பெயர் ஆகிய விவரணங்கள் அற்றிருக்கிறது. இதையே படைப்பாளியின் ஆரம்பகாலக் கதையாகக் கொள்ளக்கூடிய அபாயம், அதன் நேர்த்தியற்ற நடையினாலும், நிறைந்த எழுத்துப் பிழைகளினாலும் சம்பவிக்கும் வாய்ப்புண்டு.

பெரும்பாலும் மனவோட்டங்களைவிட நிகழ்வுகளினால் கட்டப்படும் கதை இது. ஏனைய இத்தொகுப்பின் கதைகளினைவிட இக்கதை ஏராளமான நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. தன்மை நிலையில் கதைகூறல் தொடங்கும் இதிலுள்ள மொழியாளுமை எனக்கு மிகுந்த அலுப்பூட்டியது. ஒருபோது பேச்சுமொழியாகவும், இன்னொருபோது எழுத்து நடையாகவும் தொடரும் இக்கதைகூறலில் கதையை வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற அவசரத்தைத் தவிர வேறெதையும் அடைந்துவிட முடியவில்லை.

பின்நவீனத்துவ அலையொன்று தமிழ் இலக்கியப் பரப்பில் வீசிய காலத்தில் புரிந்தும் புரியாமலும் மொழிநடையிலேயே நம் படைப்பாளிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். அது ஒருவகையில் அதுவரை காலத்திய மரபார்ந்ததும், அலுப்பை ஏற்படுத்துவதுமான நடையிலிருந்து வாசகனுக்கு ஒரு விடுதலையை அளித்தது மெய்யே. ஆனாலும் மொழியை எவ்வாறேனும் பினைந்துபோட்டு கதையை உருவாக்கும் விஷயத்தில் பிரேம் மற்றும் ரமேஷ் போல வெற்றிகண்டவர்கள் மிகக் குறைவு. அவ்வகை மொழிநடையைக் கையாளுவதில் மிகுந்த அவதானம் தேவை. கருணை ரவியின் ஏனைய இத்தொகுப்பின் கதைகள் பலவும் நடைரீதியாக தேறியுள்ள வேளையில், ‘கடவுளின் மரணம்’ மட்டும் அவதான இழப்பின் அடையாளங்களை நிறையவே தன்னகத்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அக்கதையே மண்ணுள்ளிருந்து வெளியே வந்து நுணுந்திக்கொண்டு கிடக்கும் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல சிந்தனையை அலைக்கழிப்பதாயும் இருக்கிறது.

‘வேவு பார்ப்பது என்பது எவ்வளவு கடினமான விடயம். வேவுகள்பற்றிக் கதைப்பவர்களோடு நான் அந்நியமாகியிருந்ததை இப்பதான் பெருந்தவறென நினைக்கிறேன். வேவுகளின் சூட்சுமங்கள் தெரிந்தவர்களெல்லாம் தனியாகவும் குழுக்களாகவும் துப்பாக்கி ரவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துத் தப்பிவிட, நான்மட்டும் என்னை நம்பிவந்த வத்சலாவோடு தனித்திருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறது கதை.

ஆரம்பத்திலேயே விரிக்கப்பட்ட இந்த வேவுக்களம், கதையின் நடுவில் விரிவாக்கம் பெறுகிறது. செல்களிலிருந்து அந்த நானும் வத்சலாவும் தப்பியோடுகையில், எதிர்ப்படும் ஒரு பதுங்கு குழிக்குள்ளிருந்து யாரோ வத்சலாவை அக்காவென அழைக்கிறார்கள். அவ்வாறு போகுமிடத்திலேதான் ஒரு கிழவியும், அவளுடனுள்ள ஒரு பெண்ணும் கதையில் அறிமுகமாகின்றனர்.

அவள் கிழவிக்குச் சொந்தமில்லை, இயக்கத்திலிருந்து ஓடிவந்த பெண் என்றும், அவளொரு புலனாய்வுக்காரியென்றும்  படைப்பாளியால் அறிமுகமாக்கப்படுகிறாள். இந்த வேவு பார்க்கவந்த பெண், ஒருபோது களம் திரும்பாத போராளிகளைப் பிடிக்க வந்த இயக்கம் கிழவியின் தறப்பாளைச் சோதனை செய்யாமலே திரும்புவதிலிருந்தும், அது புதிராகவே சனங்களுக்கிருப்பதிலிருந்தும், இன்னும் இயக்கத் தொடர்பை அறுக்காதிருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவே செய்கிறாள்.
அந்தப்  பெண்தான், அந்த ‘நா’னின் ஒழித்துவைத்த நகைப் பையோடு காணாமல்போன விசுவரும் மனைவியும் இறந்த பின்னால் ஆபரண பூசிதையாக நிற்கிறாள். ‘பெரிய தாலி. பத்துப் பவுண் வரும். அம்மன் தாலி. அம்மன் தாலி குற்றத்தைப் பொறுக்குமாம். காப்புகளும் அடுக்கியிருந்தாள். மூன்று சோடி நெளிநெளிக் காப்பு. வெள்ளை முத்து வைத்த குண்டுச் சங்கிலி’யென அவள் நிற்பது, அவளை இன்னும் ஒரு வேவுகாரியாக இருப்பதன் சாத்தியத்தை வாசகனையும் கொள்ளவே வைக்கிறது. அவ்வளவு ஆபரணங்களை அணிந்திருக்கும் அவள் இராணுவத்திடம் போனதும் வெடிப்பதற்காக வேசம் புனைந்தவளாகக்கூட இருக்கலாம்தான் என வத்சலாபோலவே வாசகனும் நினைக்கிறான்.

முடிவுவரை இந்த வேவு என்பதை ஒரு பூடகத்துள் வைத்து நடத்த முடிந்த இந்தக் கதை, ‘அந்தப் பெண் நடந்து பத்து கவடு ஆகவில்லை. ரவையொன்று அவளின் கன்னத்தைத் துளைத்துச் சென்றது. அப்படியே முட்டுக்கால் குற்றி விழுந்தாள்’ என அவளது கதையையும் முடிக்கிறது.

எடுத்த கருவை போர் நடைபெறும் களத்தில் வைத்து அற்புதமாக நடத்த இந்தப் படைப்பாளியால் முடிந்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.
அப்படியான இந்தக் கதையில் கடவுளின் மரணம் எங்கே, எவ்வண்ணம் நிகழ்கிறது என்பதுதான் மர்மம். கடவுள் மரணித்த உலகில் யுத்தமொன்று நடைபெறுகிறது, அந்த யுத்தத்தில் மக்களதும், போராளிகள் இராணுவம் எதனதும் அறவிழுமியங்கள் தொலைந்திருக்கின்றன, அதனால்தான் கூடவிருந்த விசுவரே மறைத்துவைத்த நகைகளை எடுத்துக்கொண்டு காணாமல் போகிறார், அவரது இறப்பும் நகைகளின் மறைவும் இன்னொரு கடவுளற்ற உலகத்தில் நடைபெறும் நிகழ்வாகவே கொள்ளப்படவேண்டி உள்ளது.

ஜனங்கள் பசியில். எதையாவது விற்றால் தவிர சாப்பாட்டுப் பிரச்சினையைச் சமாளித்துவிட முடியாத நிலை. ‘நகைக் கடைகளில் வேலைசெய்த சின்னப் பொடியள், கிழடுகள் எல்லாம் சின்னத் தராசை சந்திக்குச் சந்தி வைத்திருந்து ஒரு பவுண் நகை பன்னிரண்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தார்கள். ஒண்டரைப் பவுணை ஒரு பவுண் என்றும் ஏமாற்றினார்கள்.’ இவையெல்லாம்கூட கடவுள் அற்ற ஓர் உலகத்திலேயே சம்பவிக்க முடியும்.

இவ்வாறு கடவுளின் மரணம் உள்ளடங்க விரிந்த கதை இது. அற்புதமான வார்ப்பு. இதன் மொழிநடை மற்றும் வசனம் மற்றும் எழுத்துப் பிழைகள் கவனிக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலான வாசகப் பாதிப்பினைச் செய்திருக்கும் என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.
மனிதரைக் கொல்லும் போரினிடையே, அறங்களைக் கொல்லும் மனிதர்கள்போல அறங்களைக் கைவிடும் மனித மனநிலையும் கட்டமைக்கப்படுகிறது. ‘பிரிகை’ சொல்வது அவ்வாறான கதையைத்தான். ‘கப்பல் எப்ப வரும்’ என்ற கதையிலும் எப்படியாவது தப்பிவிடுதல் என்ற மனநிலையில் பணம் கொடுத்து முன்னுரிமை பெறப்படுதலில்கூட இந்தக் கருத்து ஆதாரம் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமான கதைகளென நான் குறிப்பிட்டனவற்றுள் ‘நாய் வெளி’ மிக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ள கதை. உருவ நேர்த்தியில் இத்தொகுப்பிலுள்ள சிறந்த சிறுகதையென இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. தமிழ்ப் புலத்தில் வார்க்கப்பட்ட கதைகளுள் மிக வித்தியாசமான களத்தைக்கொண்ட கதை இது. ஒரு கிராமத்து நாய்கள் முழுவதுமே விசர் பிடித்து அடைந்திருக்கும் இந்த வெளியில்தான், ஒருபோது வலிய வந்த குட்டி நாயாய் அக்காளியிடம் தஞ்சம்பெறும் சுருட்டைகூட நிற்கிறது. அக்காளி சுருட்டையைத் தேடிப் போகிறாள், ஏற்கனவே அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் மறுபடி உயிரோடு திரும்பியிராத நிலையில். அக்காளிக்கு என்ன ஆகும்? மனத்தைப் பதைக்க வைக்கிற கதை.

ஓர் உண்மைக்கு எதிர்புறத்திலும் ஓர் உண்மைதான் இருக்கிறது. இவற்றுக்கெதிராக ஒரு பொய் இருக்கலாம். அதுபோல ஒரு நியாயத்தின் எதிரிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இவற்றினெதிரே ஓர் அநியாயம் இருக்கச் செய்யலாம். இதை ஓர் ஆபிரிக்கக் கதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.
கிராமத்துள் புகுந்த ஒரு நரி , திண்ணையில் கிடத்தப்பெற்றிருந்த ஒரு குழந்தையைக் கடித்திழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறது. கிராமத்தவர் நரி  கிராமத்துள் வந்து குழந்தையைக் கவ்விச் சென்றதையிட்டு கொதித்தெழுந்து நரியை  வேட்டையாடப் புறப்படுகிறார்கள். கிராமத்தவரைப் பொறுத்தவரை நரி  செய்தது பெருங்கொடுமை. ஆனால் இதிலே நரியின் நியாயமென்று ஒன்றிருக்கிறது. கிராமத்தவர்கள் வந்து காட்டினுள் வேட்டையாடி தமக்குப் பட்டினியை ஏற்படுத்துகிறார்கள், தாம் என்ன செய்யமுடியும்? எதையாவது அடித்துத் தின்றுதானே ஆகவேண்டும்? இது நரியின் வாதம். இரண்டு பக்கங்களிலும் இருக்கும் நியாயம் ஏறக்குறைய ஒன்றுதான்.

காலகாலமாக நடைபெற்று வரும் யுத்தங்களிலெல்லாம் ஆயுதங்கள்தான் மாறியிருக்கின்றன. நியாயங்களதும் அநியாயங்களதும் வரைவிலக்கணங்கள் மாறவில்லை.

மகனையிழந்த ஒரு தாய்.  தான் தனது மகனிறந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல அனுமதி பெறும்பொருட்டு முறைப்பாடுசெய்யச் செல்கிறாள். படாதபாடெல்லாம் பட்டு விண்ணப்பம் தயாராகிவிடுகிறது. அதைக் கையளிப்பதற்காக பொலிஸ்நிலையம் செல்கிறாள். அங்கு மீசை வழித்த ஒரு சின்னப் பொலிஸ் அவளை பக்கத்திலிருக்கும் கதிரையில் அமர்த்துகிறான்.
‘முறைப்பாட்டை வாங்கும்போது மூன்று தடவைகள் இமைகள் மூடும்வரை அவளையே பார்த்தான். அவள் கீழே பார்த்தாள். அவனின் முகத்தை அதிகநேரம் பார்க்க அவளுக்கு அந்தரமாக இருந்தது. அவன் முறைப்பாட்டை பிரித்துப் படிக்கவில்லை. பேனையை கைகளில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தான். அறுபத்தினான்காவது தடவை சுற்றியதும் மீண்டும் அவளைப் பார்த்தான்.’ இதுமாதிரியான ஒரு பொலிஸின் நடவடிக்கையை விகற்பமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அடுத்த கணமே அவன் சொல்கிறான், ‘எனக்கு உங்களைப்போல ஒரு அக்கா இருந்தவ…’ என. பிறகு தொடர்ந்து சொல்கிறான், ‘அக்கா கிளைமோரில செத்திட்டா’ என்று.
அவள் - அந்தச் சாதாரண சனம் - கேட்கிறது: ‘அக்கா வன்னிக்கு வந்தவாவோ?’
அந்தச் சாதாரண சனம் அறிந்திராத, அறிந்திருந்தாலும் உணர்ந்திராத மனநிலையிலிருந்து பிறந்ததுதான் அந்தக் கேள்வி. ஏனெனில் தனக்கெதிராகத் தவிர போர் எங்கும் நிகழ்த்தப் பெறவில்லையென்பதும், அது வன்னியில் தவிர வேறெங்கும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும்தான் சாதாரண சனத்தின் அறிதலாக இருக்கிறது. இது இன்னொரு பகுதியின் விரிவையும் கொண்டிருக்கிறது. போர் தனக்கெதிராக மட்டுமே செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது அது.

அந்தக் கேள்விக்கு எதிர்ப்புற உண்மையைக் கொண்டிருந்தவன் பதில் சொல்கிறான்: ‘அநுராதபுரம் பஸ்சில கிளைமோர் வெடிச்சது.’
இதுதான் இந்த யுத்தத்தில் வெளிப்பட்டிருப்பது. அநியாயங்கள் கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. உண்மை கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் இருக்கின்றன.
இந்த அற்புதமான உள்ளடக்கத்தினை படைப்பாளியே விரும்பி அமைக்காதிருந்தாலும், அதைக் கொண்டிருக்கும் இச்சிறுகதை போரின் மூலத்தையும், அதன் இயங்குவிதங்களையும் நுட்பமாகத் தெரிவித்திருக்கிறது.

தனது மகன் அடக்கம்செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்தும், இறுதிக் கடனாற்றுவதற்கும் செல்ல அனுமதி கேட்கும் ஒரு தாயின் வேண்டுகை நியாயமானது.

ஆனால், ‘போர் தின்ற என் கொள்ளிப் பிள்ளையின் குருதி சிந்திய முள்ளிவாய்க்காலில் சிலை வைக்கவேணும். ஒவரு ஆண்டு திதிக்கும் விரதம் இருந்து மாலையுடன் முள்ளிவாய்க்கால் செல்லவேணும்’ என்ற இரண்டாவது வேண்டுகை போர் நடந்த நிலத்தில் அதீதமானது. அநியாயம் இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. எதிரே நிற்பவன்கூட பாதிக்கப்பட்டவன் .

இது நியாயம் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன என்பதன் இன்னொரு வடிவம்தான்.

அந்த மண்ணிலிருந்துகொண்டே இந்த உண்மையைச் சொல்ல அசாதாரண துணிச்சல் வேண்டும். படைப்பாளியிடமிருந்து நினையாப்பிரகாரம் வெளிப்பட்டிருப்பினும், இந்த உள்ளுறை அடங்கும்படியாக எடுத்த சொல்லாக்க முயற்சிகள் முக்கியமானவை. ஒரு சிதைவாக்க முறையினாலன்றி இத்தகைய உள்ளுறைகளை சுலபமாக வெளிக்கொணர்ந்துவிட முடியாது.

‘சிங்களத்தி’ கதையில் ஒரு சிங்கள இளம் தாயின்மேல் இரக்கம்காட்டும் அங்கஹீனியான ஒரு முன்னாள் போராளியின் செயற்பாடு செயற்கையானது. ஆனால் முள்ளிவாய்க்கால் செல்ல அனுமதி கேட்டுவந்த தாயிடம் சிங்கள பொலிஸ் காட்டிய கோபம், அலட்சியம் இயல்பானது.

இந்த வகையில் அண்மையில் இலங்கைப் படைப்பாளியொருவரால் வெளிக்கொணரப்பட்ட இத் தொகுப்பு தமிழிலக்கிய உலகில் கூடிய கவனம் பெறவேண்டியதாகின்றது.

00000


தாய்வீடு, ஜன 2014

Monday, August 03, 2015

நினைவேற்றம் 6

நினைவேற்றம் 
-தேவகாந்தன்

அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லை. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது.

சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது  அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.

ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய்  விட்டிருக்கிறேன். எங்கே? வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

“எங்கயடா போறாய் இந்த நேரத்தில?” என்று அம்மா கத்தினாள். “இந்தா ஓடியந்திடுறன்” என்று பின்னால் திரும்பிக் கூவினேன்.

சாவகச்சேரி அப்போது பட்டணசபையாக இருந்தது. அதற்கான தனி மின்சார உற்பத்தி நிலையம் பஸ்நிலையத்துக்குப் பின்னால் இருந்தது. பெரிதான ஆனால் சின்னாஸ்பத்திரி என்று ஊரிலே சொல்லப்பட்ட ஆஸ்பத்திரியும், பெரிய சந்தைக் கட்டிடமும் கொண்டது சாவகச்சேரி பட்டணசபை. அங்கே தேவேந்திரா என்ற ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட அதே நேரத்திலேயே அங்கேயும் அவை காண்பிக்கப்பட்டன. கைதடி, நாவற்குழி, புத்தூர் சந்தி, கொடிகாமம், மிருசுவில், பளையிலிருந்துகூட புதுப்படங்களுக்கு அங்கே சனம் மொய்க்கும்.

1959 அல்லது 1960 அளவில்தான் யாழ்ப்பாணப் பகுதிக்கு பாட்டா சிலிப்பர் அறிமுகமாகியது என்று நினைக்கிறேன். சைஸ் ஐந்துக்கு மேலே 4 ரூபா 90 சதம் விலை போட்டிருந்தது. விலை குறித்து விற்ற முதல் பண்டமும் அதுவாகவே அப்போது இருந்ததாக ஞாபகம். சாவகச்சேரிக்கும் ஏறக்குறைய அதே காலப்பகுதியில்தான் அது விற்பனைக்கு வந்திருக்கலாம். மணலும், கல்லும், முள்ளும் தெரியாது நடந்த அப்பகுதி இளைஞர்கள் காலில் செருப்பு மாட்டத் தொடங்கிய காலம் அதுதான். கல்லுக்கும், முள்ளுக்குமாக அன்றி நாகரிகத்தின் அடையாளமாகவே முழுதாய் அது இருந்தது. முதல் முதல் பாட்டா செருப்பு போட்டுவந்த சத்தியநாதன் ரீச்சருக்கு ‘பாட்டா’ ரீச்சரென்று பட்டப்பெயர் வைக்கப்பட்டது  அக்காலத்தில்தான். புதிதாக செருப்புப்போடத் தொடங்கியதால் பெரும்பாலும் கழற்றிவிடுகிற இடங்களில் மறந்துபோய் விட்டுவிட்டு வெறுங்காலோடு வீடு திரும்புகிற நிலையே பலபேருக்கும் அப்போதிருந்தது. மறந்துபோய் விட்டுவருகிற செருப்புகள் பலவேளைகளிலும் திரும்ப கிடைக்காமலேதான் பலபேருக்கும் போயிருக்கின்றன. செருப்புகள், மென்களவில் மறைந்த மாயக் காலமும் அதுதான்.

நான் அவசரமாக வசந்தாக்கா வீடு ஓடியிருந்தும் நேரத்தோடு படலை கட்டப்பட்டுவிட்டிருந்தது. தாயாரின் பேச்சுக் குரல் உள்ளே கேட்டது. தாயாரின் சத்தமே பெரிதாகக் கேட்டது. பாதி காலம் மனிசிக்கு படுக்கையும் மருந்தும்தான். எப்போதும் தொணதொணத்தபடி கிடக்கும். நீண்டகால நோயாளிகளுக்கு அதிகமாகக் கோபம் வருமோ? அவள் கோபத்தோடுதான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததாகப் பட்டது. ஆனாலும் நான் செருப்பின் முடிவு தெரியாமல் போய்விட முடியாதே. வசந்தாக்கா படுத்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. நான், “வசந்தாக்கா”வெனக் கூப்பிட்டேன்.

ஆரது என்ற கேள்வியில்லாமலே வந்து படலையை அவிழ்த்தாள். நான் சைக்கிளை வெளியே வேலியோடு சாய்த்துவிட்டு உள்ளே அவசரமாகச் செல்ல முனைந்தேன். வசந்தாக்கா என் கையைப் பிடித்து நிறுத்தினாள். நான் படியை எட்டிஎட்டிப் பார்த்து பரபரத்தேன். மேலே வெள்;ளையும் கீழே நீலமும் நீல வார்களும் கொண்ட எனது சிலிப்பர் தென்படவேயில்லை. நான் இடிந்தேன்.

ஆனால் வசந்தாக்காவாகவே என் தேடலைத் தெரிந்துகொண்டு சொன்னாள்: “என்ன, உன்ர சிலிப்பரைத் தேடுறியோ? உன்ரயாயிருக்குமெண்டு எடுத்து உள்ள வைச்சிருக்கிறன், வா. வெளியில கிடக்க நாய்கீய் கடிச்சுப்போட்டா என்ன செய்யிறது?” அப்போதுதான் என் ‘நெஞ்சுக்குள் தண்ணீர் வந்தது’.
வசந்தாக்கா என் கையைப் பிடித்தபடியே உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். அப்போதுதான் உணர்ந்தேன் என்னில் அவள் எடுத்துக்கொண்டிருக்கும் கூடுதலான சுதந்திரத்தை. தாயார் படுத்திருக்கும் தைரியத்தில் இந்த அத்துமீறிய சுதந்திரமோ? எனக்கு உடம்பு ஜில்லிட ஆரம்பித்தது.

வசந்தாக்கா வீட்டுக்கும் வேலிக்குமிடையே பெரிய மணல் அடர்ந்த முற்றமிருந்தது. இடையில் இடதுபுறமாக ஒரு மாமரமும், வலது புறத்தில் ஒரு சடைத்த வேப்பமரமும் நின்றுகொண்டிருந்தன. வீட்டுத் திண்ணையில் வைத்த லாம்பிலிருந்து பாய்ந்து வந்துகொண்டிருந்த வெளிச்சம் போதுமானதாயிருக்கவில்லை. ஆனால் மேலே நிலா முக்கால் வட்டமாயிருந்து ஒளிவீசிக்கொண்டிருந்தது. வெண்மணல் முற்றமெங்கும் ஒளி விரிந்து கிடந்தது. மாமரத்து நிழலில் என்னைப் பின்னே இழுத்தாற்போல் ஓரடி தாமதித்தாளா வசந்தாக்கா?

“ஆர் வசந்தா வந்திருக்கிறது?” என்று தாய் கேட்டாள். “அது எங்கட ராசா, அம்மா” என்றாள் பதிலை.

கையில் கொழுவி என்னை அணைத்தாற்போல வசந்தாக்கா உள்ளே கூட்டிப்போய் சிலிப்பரை எடுத்துத் தந்தாள். “இரன், சாப்பிட்டிட்டுப் போகலாம்” என்றாள். “நாங்கள் இனித்தான் சாப்பிடப்போறம்.”

நான் பரவசத்தில் இருந்துகொண்டிருந்தேன். அவள் கைபட்ட சுகமொன்றாய், நடக்கையில் அவள் நெஞ்சுபட்ட சுகம் அதைவிடப் பெரிதாய் என் ஆசைகள் தளும்பிக்கொண்டிருந்தன.

பெரும்பாலும் பகலிலே ஒரு துண்டை உடுத்திக்கொண்டு வேலைசெய்வாள் வசந்தாக்கா. கிடுகு பின்ன, முற்றம் பெருக்க, முருங்கைக்கு தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர்விட என எந்த வேலைக்கும் அது வசதியாயிருக்கும்தான். மாலையில் குளித்துவிட்டு ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்துகொள்வாள். அல்லது சேலை அணிந்துகொள்வாள். அன்றைக்கு அவள் ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்திருந்தாள். மஞ்சள் நிற ட்றெஸ்ஸிங் கவுண். லாந்தரின் மெல்லிய வெளிச்சத்திலும், நிலவின் ஒளிப் பரவலிலும் அவள் முகம் மஞ்சளாய்ப் பொலிந்து தென்பட்டது. அவளைப் பார்ப்பதற்காகக்கூட நான் அவளது அழைப்பை ஏற்று சாப்பிடப் போயிருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சம் வந்து என்னைத் தடுத்துவிட்டது. நான், “சைக்கிள் வெளியில நிக்குது, வசந்தாக்கா” என்று ஒரு சாட்டை தயக்கமாய் வெளியிட்டேன். “உள்ள கொண்டுவந்து விடு” என்றாள்.

“வீட்டுவேலையள் இருக்கு” என்றேன் நான்.

மாணவனொருவனுக்கு அவனது வீட்டுவேலை என்பது பள்ளியில் கொடுத்துவிடும் வீட்டில் செய்வதற்கான அப்பியாசங்கள்தான். “சரி, நல்ல இருட்டாயிருக்கு, பாத்து ஓடிப்போ” என்று செருப்பை எடுத்துத் தந்து என்னை படலைவரை கூட்டிவந்தாள் வசந்தாக்கா.

அவளது குரலிலும் முகத்திலும் ஒரு துக்கமிருந்ததா? அப்படித்தான் எனக்குத் தோன்றிற்று.

வரும்போதும் அவளது மேனியின் உரசல்கள் தாராளமாகவே இருந்தன. ‘அவள் என்னோடுதான் சிரித்துப் பேசுகிறாள். என்னோடுதான் தொட்டுத் தொட்டும் பேசுகிறாள். என்னோடுதான் நெஞ்செல்லாம் உரச கூடிநடக்கிறாள். நாகரத்தினனோடு இப்படியெல்லாம் செய்திருப்பாளா? அவன் எவ்வளவு பெரிய ஆகிருதியாளனாய் இருந்தாலென்ன? வசந்தாக்காவுக்கு என்னில்தானே பிரியம் அதிகமிருக்கிறது! அவன் அவளது வெளித்த முலைகளைப் பார்த்திருக்கலாம். குழந்தை பிறந்த எந்தப் பெண்ணின் முலையையும்தான் சாதாரணமாக யாராலும் அந்தப் பகுதியில் பார்த்துவிட முடியுமே. ஆனால் உரசலின்பம் யாருக்குக் கிடைத்துவிடும்? அந்தவகையில் நாகரத்தினனைவிட நான்தானே அதிர்ஷ்டம் செய்தவன்?’

நான் எண்ணியபடியே வீடு திரும்பினேன்.

ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். அப்போது மாரிகாலம் தொடங்கியிருந்தது. ஒருநாள் மாலை நேரம். இருட்டடித்திருந்த வானத்தில் மேக இரைச்சல். மழைத் துமிகள் விழவாரம்பித்திருந்தன. ஈர மணல் ஒழுங்கையில் நான் சைக்கிள் மணியை அடித்தபடி பறந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். முன்னால், பக்கத்து வளவில் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்கிறாள் வசந்தாக்கா. எதிரே வருவது நானெனத் தெரிந்துகொண்டுபோல் படலையில் நின்று, “உள்ள வா, ராசா. இந்தா மழை வந்திட்டுது” என்று படலையைத் திறந்து பிடித்திருந்தாள்.

மழை வந்துவிட்டதுதான். நான் இறங்காமலே சைக்கிளைத் திருப்பி மாமரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடினேன்.

மழை ‘சோ’வெனப் பொழியத் தொடங்கியது. தெற்கு மூலையில் இடி இடித்தது. மேற்கிலிருந்து கிழக்குவரை மின்னல் வெட்டியடித்தது. ‘ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி- மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே- நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே- கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்ற ஓராண்டோ இரண்டாண்டுகளுக்கோ முன்னர் படித்திருந்த பாலபாடப் பாடல் அப்போது எனக்கு ஞாபகமாயிற்று.

வசந்தாக்கா ஆட்டை கொட்டிலில் கட்டிவிட்டு பாதி நனைந்தபடி திண்ணையில் வந்தேறினாள். “இரு, முதல்ல விளக்கைக் கொளுத்துறன்” என்றுவிட்டு   விளக்கையும் தீப்பெட்டியையும் தேடியெடுத்து கொளுத்தினாள். மேசையில் விளக்கை வைத்துவிட்டு முந்தானையை இழுத்து தனது தலையைத் துடைக்கவாரம்பித்தாள். துடைத்த பின் முன்தானையை என்னிடம் நீட்டி, “தலையைத் துடை. தலை ஈரமாயிருக்கு” என்றாள். நான் வாங்கி தலையைத் துவட்டினேன். என் பார்வையின் குறியை அவளுக்கு முந்தானை மறைத்திருக்கையில் என் கீழ் நோக்கில் தெரிந்தது வசந்தாக்காவின் நெஞ்சழகு. இருட்டில் மலரிடம் அன்றொருநாள் தொட்டுத் தெரிந்த  இன்பத்தின் இடம் என் அறிவை மயக்க மெல்ல அசைந்து நான் வசந்தாக்காவை நெருங்கினேன். என்னை மெய்யார்த்தமாய் உணர்ந்தவள் சட்டென ஓரடி வைத்து பின்வாங்கினாள். “இண்டைக்கு கடைசி வெள்ளிக்கிழமை, ராசா” என்றாள்.

முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆம், அவள் அவ்வப்போது சொல்லியிருக்கிற வார்த்தைதான் அது. அன்றைக்கு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவளது கணவன் வீட்டுக்கு வரவிருக்கிறான். வழக்கமாய் இந்தளவில் வந்திருக்கவேண்டியவன்தான். அன்றைக்கு மழையானதால் தாமதமாகிறான்போலும். என் அதிர்ச்சியைத் தெரிந்திருப்பாள். என்னில் எரிவது அவள் ஏற்றிய சுடர்தானே? அவளே என்னைச் சாந்தப்படுத்தினாள்: “சேட்டு பொக்கற்றக்க திறிறோஸ் இருக்குப்போல. நனைஞ்சிட்டுதெண்டு நினைக்கிறன். கெதியாய் எடுத்துப் பத்து.”

நான் உணர்ச்சி கறுத்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். முடிகிற அளவில் மழை வெளித்து வந்தது. சிறிதுநேரத்தில் மழைவிட சொல்லிக்கொண்டு சென்று சைக்கிளை எடுத்தேன்.

அன்றிரவு அவள் கணவன் வந்திருப்பானென்றுதான் நினைக்கிறேன். அடுத்தடுத்த நாள் றோட்டிலே அவனைக் கண்டேன். இனிமேல் ஊரோடுதான் என்றான். ஏனென்று கேட்டதற்கு வேலையிலிருந்து நிறுத்திவிட்டதாகச் சொன்னான். அன்றைய இரவின் க்ஷணப்பித்தம் இறங்கிய பின் நானும் இயல்பில் ஆகியிருந்தேன்.

அர்த்தமான வசந்தாக்காவின் ஒவ்வொரு அழைப்பையும் விலக்கிக்கொண்டே வந்திருந்த நான், கடைசியில் ஏமாறிப்போனேனென்பதை இப்போது யோசிக்கத் தோன்றுகிறதுதான். இனியும் ஒரு சந்தர்ப்பம் வர எனக்கு வாய்ப்பில்லை. அந்த ஏக்கம் என்னில் நீண்டகாலம் நின்றிருந்தது. தேடாமலே கிடைத்த மலரை நான் மறந்தேன். ஆனால் தேடியபோதில் கிடைக்காத வசந்தாக்காவின் ஞாபகம் தோல்வியாயன்றி ஒரு இழப்பாய் என்னில் இருந்துகொண்டிருந்தது.

முதலில் வசந்தாக்காவுடனான எனது அணுக்கமானது, நாகரத்தினன் அவளை நெருங்கவிடாது தடுப்பதற்கானதாகவே இருந்தது என்பது ஒரு நிஜமாக அங்கே நின்றுகொண்டிருந்தது. ஆனாலும் அந்த வெக்கை ஏறக்குறைய மூன்றாண்டுகளின் பின் இன்னொரு வசந்தாக்காவை நான் காணும்வரை என்னைத் தகித்திருந்தது.

சிவராணி தம்பிராசண்ணையைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கே வந்து ஓராண்டாகியிருந்தது. தம்பிராசண்ணைக்கு சந்தை யாவாரம்தான். வெற்றிலை, சீவல் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு விக்கிற கடை. ஆள் நோஞ்சான் மட்டுமில்லை, சயரோகக்காரன் மாதிரி எந்நேரமும் இடையறா இருமல்காரனும். அதற்கு காங்கேசன்துறை சயரோக வைத்தியசாலையில் மருந்தெடுத்ததாகத்தான் தெரிந்தது. பெரிய நன்மை அதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தம்பிராசண்ணை நடக்கும்போது விடும் களைப்பும் இழுப்பு மூச்சும் அதைத் தெரிவித்துக்கொண்டிருந்தன.

ஏற்கனவே தெரிந்திருந்தாலும் கூப்பன் கடையில் ஒருநாள் சந்தித்தபோதுதான் சிவராணியோடு கதைக்கவும், அவளைப்பற்றி சிறிது தெரியவும் என்னால் முடிந்தது. எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதியிருந்ததாகவும், சித்தியடையவில்லையென்றும் சொன்னாள். தம்பிராசண்ணை எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவரென்று ஊரிலே சொல்லக் கேட்டிருக்கிறேன். எட்டாம் பொருத்தமும் அற்றுப்போனது எனக்கு இன்னும் கூடிய சாகசத்துக்கான வழியாய்த் தெரிந்தது. என் கவனம் குவிந்ததன் காரணம் அச்சொட்டாக அவள் வசந்தாக்காமாதிரியே இருந்ததுதான். அதே உயரம், அதே நிறம், அதே மொத்தம், அதே சுருண்ட நீளமான கூந்தல். மட்டுமில்லை, அதே நெற்றி, அதே சொண்டு, அதேயளவான நெஞ்சப் பகுதியும் அவளுக்கு.

வீட்டிலிருந்து கூப்பன் கடைக்கு ஒன்றரை மைல் தூரம். தலைச் சுமையில்தான் சிவராணி அரிசி, மா போன்ற சாமான்களைவீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது. அன்று தாமதித்து நின்று அவள் சாமான் வாங்கியதும் நானே கொண்டுவந்து தருவதாகச் சொல்லி சாமானை வாங்கி சைக்கிளில் வைத்தேன். “கடகத்தை சைக்கிள்ள வைச்சுக்கொண்டு ஓடேலாது” என்று சிவராணி மறுக்கத்தான் செய்தாள். ‘ஓடாட்டி பறவாயில்லை, நடந்து வரலாம். தலைச்சுமையாய் இல்லாட்டிச் சரிதானே’யென்று சொல்லி ஒருவித வற்புறுத்தலோடுதான் கடகத்தை வாங்கி சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்தேன்.

அடுத்த கிழமை ஒரு சனி மாலை சிவராணியே கேட்டாள், ‘தம்பி, சங்கக்கடைக்கு எப்ப போறிர் சாமான் வாங்க? போகேக்க சொல்லும், நானும் உம்மோட வாறன்’ என்று.

இது, நாலைந்து மாதங்களில் வீட்டுக்குப் போகுமளவு நெருங்கியது.
ஒருநாள் மாலை, அன்று நிச்சயமாக ஒரு சந்தை நாள், சிவராணி வீட்டுக்குப் போனேன். தேநீர் குடிக்கக் கேட்டாள். நான் வேண்டாமென்று பீடி பற்றவைக்க நெருப்புக் கேட்டேன். மேசையில் விளக்குக்கு அருகே இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து கிலுக்கிப் பார்த்து அதனுள் குச்சிகளில்லை என்று தெரிந்துகொண்டு அடுப்படிக்கு போனாள். நான் பின்னாலயே போய் அடுப்படிக்குள்  நுழைந்தேன்.

எதுவும் செய்யவில்லை நான். தொடவில்லை, முட்டவில்லை, பின்னால் நின்றது மட்டும்தான். “சீ நாயே, உந்த எண்ணத்தோடயோ என்ர பின்னாலயும் முன்னாலயும் திரிஞ்சனி. படிக்கிற பிள்ளை, தம்பிமாதிரியெண்டு சிரிச்சுக் கதைச்சா, மனிசியாக்கலாமெண்டு நெச்சிட்டியோ. இனிமேப்பட்டு இந்த வாசல்ல காலடி வைக்கக்குடாது” என்மீது பாய்ந்துவிட்டாள்.

எனக்கு ‘அஞ்சும் கெட்டு அறிவும் கெட்ட’ நிலை. ஒரு வார்த்தை சொல்ல நா எழவில்லை. சிரமப்பட்டு, “நெருப்பு எடுக்கத்தான்… பின்னால வந்தனான்” என்று தடுமாறினேன்.

“போய் கொம்மாவிட்டக் கேள். நல்ல கொள்ளியாய் அவ எடுத்துத் தருவா.”
பின்னால் அவளைப் பார்த்ததுகூட இல்லை நான். இரண்டு மூன்று ஆண்டுகளின் பின் நான் ஏ.எல். படித்துக்கொண்டிருந்தபோது தம்பிராசண்ணை காலமானார். பிறகு கனகாலம் சிவராணி அந்த ஊரில் இருக்கவில்லை.
வசந்தாக்காவின் இழப்பில் எப்போதாவது நான் அடைய ஒரு திருப்தியிருந்தது. வசந்தாக்காவை இழந்தாலும், அக்காவை நான் கொல்லவில்லை என்பதுதான் அது. சிவராணி விஷயத்தில் என் நினைப்புக்குக் கிடைத்தது ஒரு கழுவேற்றம்.

அப்படியே என்னைத் தரதரவென இழுத்துப்போய் குதம் கிழித்து, நெஞ்சு துளைத்து, மண்டை பிளக்க அவள் என்னைக் கழுவேற்றினாள்.
அதை காலமறிந்து கொடுத்த தண்டனையென்று இப்போது நினைக்க முடிகிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று ஒரு சொலவடை இருக்கிறது ஊரில். நான் நல்லமாடுதான் என்று நம்புகிறேன்.
00000

பதிவுகள்.காம், ஆக. 2015

கலாபன் கதை: 2-8


 அலையும் கடல்
-தேவகாந்தன்-

தரையோடும் வாகனத்துக்குப்போல், கடலோடும் நாவாய்க்கும் காப்புறுதி அவசியம். அந்தக் காப்புறுதி அதன் கடலோடும் தகுதியின்மேலும், கப்பலிலிருப்போரின் பாதுபாப்புக்கான சகல உபகரணங்களினதும் கப்பல் பராமரிப்பினதும் பூரணப்படுகையின்மேலும் வழங்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு காப்புறுதி இல்லாத அல்லது காலாவதியாகும் கப்பல் கடலோடும் தகுதியை இழந்துவிடும். அக் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு ஏற்படும் சேதத்துக்கோ, கப்பலுக்கே சேதம் ஏற்படுமாயினும்கூட, காப்புறுதி ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்தவகையில் கப்பலின் காப்புறுதி மிகமுக்கியமான அம்சம். அவ்வாறான தகுதியான காப்புறுதி இல்லாதவகையில் தனது கடலெல்லைக்குள் அணுகிய கப்பலை தடுத்துவைக்கவும், துறைமுகத்தில் நிற்கும்போது காப்புறுதியின் காலம் முடிந்தது தெரியவந்தால் அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடு கண்டுகொள்ளப்பட்டால் அதை அங்கேயே நிறுத்திவைக்கவும் துறைமுக நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு.  இவ்வாறான கப்பல்கள் சவப்பெட்டிக் கப்பல்கள் (Coffin Ships) என்று வழக்கில் குறிக்கப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு சற்று வித்தியாசப்படினும், அவை பொதுவில் சர்வதேச கப்பல் சட்டத்துக்கு இயைய இருப்பவையே.

ஆண்டுக்கொரு முறை கப்பலின் அடிப்பாக துப்புரவாக்கத்துக்கும், இரும்பத் தகடுகள் பழுதுறாமல் இருக்கின்றனவா என பரிசோதிக்கவுமாக கப்பல் செப்பனிடும் துறைக்கேற்றுவது வழமையாக இருக்கும் ஒரு காரியம். அந்தாண்டு ஆடி மாதத்தில் கலாபனின் கப்பல் பம்பாயில் செப்பனிடும் துறையேறவிருந்தது.

துபாயிலிருந்து கப்பல் புறப்பட்டபோதே ஆடி தொடங்கிவிட்டதை அராபியக் கடலிலும் தெரியக்கூடியதாயிருந்தது. கோடை காலத்தில் அராபியக் கடலின் பயணம், வேறு எந்த பெருஞ் சமுத்திரங்களது பயணத்தைவிடவும் பயங்கரமானதாகவிருக்கும். அது பெரும்பெரும் அலைகளாலல்ல, பாலைவனத் திசையிலிருந்து கிளம்பிவரும் மாபெரும் புழுதிப்படலங்களால் விளைவது.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சுகமான வாசனையுண்டு. அந்தந்த மண்ணோடு வாழ்வை இரண்டறக் கலந்தவர்களுக்கு பெரும்பாலும் அந்த வாசதிறன் சாத்தியமாகிவரும். பாலைநில மண்ணுக்குள்ளதும் அதுபோன்ற ஒரு வாசமேயெனினும், அது கோடைகாலத்தில் வெப்பமேறி சுழன்று வரும்போது உயிர்கொல்லும் ராட்சததனம் கொண்டுவிடும். அப்புழுதிப் படலத்தில் மூச்சுத் திணறி நவீன கால கப்பல் பயணத்தில்கூட மரித்தவர்கள்பற்றிய செய்திகள் நிறைய உண்டு. கலாபன் அவற்றைக் கேட்டிருக்கிறான்.

பம்பாய் வழியில் ஒரு இரவு அலையடித்த கடலில் நாசிக்கொவ்வா வாசனை வீசிக்கொண்டிருந்ததை கலாபன் வேலைமுடிந்து மேலே வந்தபொழுதில் முகர்ந்திருந்தான். மூடிய பக்க கண்ணாடிக் கதவுகளில் குறுணிக் கற்களை அசுர கரம்கொண்டு யாரோ இடையறாது வீசிக்கொண்டிருப்பதுபோன்ற ஓசை நள்ளிரவில் எழ ஆரம்பித்திருந்ததையும் அவன் கேட்டான். வெளியே படுத்து தூங்காதவரை அந்தப் புழுதிப் புயலுக்கு அஞ்சவேண்டியதில்லை அவன். ஆனால் அது கப்பல் எந்திரத்துக்கு ஆபத்தை விளைக்கக்கூடியது. இயந்திரம் வேலைசெய்கையில் பிஸ்டனின் காற்றழுத்தத்தில் பீச்சப்படும் கொதி மசகெண்ணை வெடித்து உந்துசக்தியைப் பிறப்பிக்கும்போது கிளரும் புகை, வெளியேறுவது எவ்வளவு அவசியமோ, அதேயளவான காற்று எந்திரத்தில் நுழைவதும் அவசியமானதாகும். அப்போது புழுதிப் படலத்துடன் வரும் மணற்குறுணிகள் உள்ளே சென்றுவிட்டால் பிஸ்டன் வளையங்களின் உடைவு, சிலிண்டரின் உட்பக்கச் சேதமென பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதபடி நிகழும். அது சேதத்தை மட்டுமல்ல, கப்பலுக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம்.

சரக்கற்ற கப்பலானதால் அலைகளில் தாவித் தாவித்தான் பம்பாய்த் துறைமுகத்தை அது அடைந்தது. அது ஒரு ஆடி மாதத்து இருபத்துமூன்றாம் தேதியாகவிருந்தது. ஒரு மதியத்தில் துறைமுகத்தை அடைந்த கப்பல், அன்று மாலையே செப்பனிடும் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கலாபன் எதிர்பார்த்திருந்ததுபோல் நடராஜா அவனுக்காக அங்கே காத்திருக்கவில்லை அன்று. ‘என்ன நடந்தது, நடாவுக்கு? ஒருவேளை கப்பலேதேனும் அகப்பட்டு ஏறிக்கொண்டானோ?’ பலவாறும் நினைத்தபடி துறைமுகத்தின் வாசல்வழி வெளியேறி வி.ரி.ஸ்ரே~னைநோக்கி நடந்துகொண்டிருந்தான்.

வெய்யில் தாழ்ந்த அம்மாதிரி நேரத்தில் குறுக்கே கிடந்த அந்த நெடுவீதி நடைபாதையில் ஏகாந்தமாய் நடந்துவர கலாபனுக்குப் பிடிக்கும். நடப்பது அந்த நடைபாதையில் சிரமம். நடைபாதைக் குடிசைகளும், குடிசை மனிதர்களின் வாழ்வியக்கமும் அந்த இடைஞ்சலை எப்போதும் செய்துகொண்டேயிருக்கும். ஆனால் அவர்கள் தமிழர்களாயிருந்த வகையில் அவன் அதிகம் சிரமப்பட்டதில்லை அந்த இடத்தில் நடக்க.
அந்த இடத்திலிருந்து வி.ரி.சந்திப்புக்கு ஏறக்குறைய ஒன்றரை கிலோ மீற்றர். தூரம் முழுவதும் தமிழ்நாட்டுக்காரரின் வாசஸ்தலம்தான். தார்போலின் அல்லது வெட்டி நிமிர்த்திய தார் பீப்பாய்க் கூடுகளுள் ஒரு குடும்பமே வாழுமிசை கிளர்ந்துகொண்டிருக்கும். அது நள்ளிரவுவரை அந்த இடத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும். சனி, ஞாயிறெனில் அந்நெடுஞ்சாலையில் சரக்கேற்ற வந்தும், சரக்கேற்றிப் போயும் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான லொறிகளும், நூற்றுக்கணக்கான ராக்ஸிகளும், சைக்கிள்களும், குறுக்கே வெட்டிப் பாயும் பாதசாரிகளும் அடைந்துகொண்டு திணறும் வீதியில் அந்த தெருவோரக் குடிசைகளுக்குள்ளிருந்து கிளரும் வெஞ்சொற்பெருக்கு அலாதியான ரசனை தருவது. அவர்கள் அப்போது கோபப்பட ஆரம்பித்திருந்தார்கள் என்பதன் அர்த்தமது. அழும் குழந்தைகளின் கூச்சல் பெரும்பாலும் பசிக்காய் இருப்பதில்லை அந்த நேரத்தில். இனிப்புப் பண்டத்துக்காயோ, ஐஸ்பழத்துக்காகவோதான் பெரும்பாலும் இருக்கும். அது இன்னும் கூடுதலான ரசனை தரும் அம்சம் அங்கே.

கோபம், எரிச்சலாதிய உணர்வுகளெல்லாம் மெல்லமெல்ல ஆண்-பெண் போதையேற்றத்துடன் முதிர் இரவில் சரஸமாக மாறிவிடுகிறது.  நள்ளிரவுக்குமேல் போகாலாபனை ஒலிகளும், நெடுமூச்சுக்களும் அந்த இடத்தை ஆக்ரமித்திருக்கும். அதுவே அவர்களும் மனிதரென்பதினதும், அங்கே வாழ்க்கை இயங்குகிறதென்பதினதும் அடையாளம்.
ஒரு காலத்திய சிவப்புச் சிந்தனைகளின் ஈர்ப்புக் காரணமாய் அவர்கள் வாழ்நிலையை அனுதாபத்தோடு பார்க்க அவனால் முடிந்திருந்தது. அதுவும் தமிழர்களென்பதால் இன்னும் சற்றே கூடுதலாக அது இருந்தது அவனிடத்தில்.

இந்த வழக்கமான ஒரு மாலைநேரத்து நிலைமை அப்போது அந்த இருபக்க நடைபாதைகளிலும் தென்படவில்லையென்பது கலாபனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. கலகலப்பு அடங்கிமட்டுமல்ல, ஒரு சோகமும் கோபமும் கலந்த உணர்வுக் கலவையிலும் அந்தச் சூழல் விளங்கியது.
நடா வந்திராத ஆச்சரியமொன்றும், சூழ்நிலையின் மாற்றத்திலானது ஒன்றுமாக அவன் வி.ரி.சந்திப்பை வந்தடைந்தான். ஆங்காங்கே நின்றிருந்த இலங்கைத் தமிழிளைஞர் குழுக்களிடையே கலவரம்… கொழும்பு… சிங்களவன்… தமிழ்ச் சனம்… என்ற வார்த்தைகள் கிளர்ந்து அவனைப் பரபரபாக்கின. கலாபனால் யாரையேனும் விசாரித்திருக்கமுடியும். அவன் அத்தனை காலத்தில் அவர்களோடு நின்று கதையாடிதில்லை என்றுமே. அது தகராற்றின் வழியாக, பிரச்னைகளுக்கான கொலுவிடமாய் தோன்றியது அவனுக்கு. சிலவேளை பரிதாபங்களை எதிர்கொள்வதிலிருந்து விலகுவதற்கான உபாயமாகவும் அவனுக்கு அது இருந்தது. அந்த ஒதுங்குதல்களும், விலகுதல்களும் அவனுக்குத் தேவையாயிருந்தன.
கலாபன் விரைந்து பெரியன்ரியின் வீட்டை அடைந்தான்.
வழமைபோல் வாசலில் ஜெஸ்மின் குழந்தையோடு ஆவல் ததும்பும் முகத்தோடு அவனது எதிர்பார்ப்பில் நின்றிருக்கவில்லை.

அவன் உள்ளே சென்றான்.

அங்கே அசைவு கண்டு பதுங்கத் தயாரான நிலையில் ஜெஸ்மினின் அறை வாசலோரம் நின்றிருந்தான் நடா. அவளுடைய அறை வாசலில் அவன் பதுங்கிநிற்கக் காரணம் விளங்காத கலாபன் உள்ளே சென்று தனியாக ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்தான். அதன் கிரீச் சத்தத்தில்தான் ஜெஸ்மின் எட்டிப் பார்த்து அவன் வந்திருந்தது கண்டது. சமையலில் கவனமாகியிருந்த பெரியன்ரியும் அப்போதுதான் கண்டாள்போல. சிரித்து, “உன்னை இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றாள்.
ஜெஸ்மின் எதிர்பார்த்திருந்தாள் என்பதன் வேறுவடிவச் சொற்கள் அவை.

ஜெஸ்மின் வரும்போதே நடாவும் கூடவந்தான். எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பழைய மின்விசிறி கிளர்த்திய அற்பக் காற்றில் வியர்த்து வழிந்தான். அது கூடத்துள் குமைந்திருந்த வெம்மையினால் மட்டுமில்லையென்பதை ஏதோவொன்று கலாபனுக்குக் கூறியது. அதே உணர்வையே ஜெஸ்மினும் கொண்டிருந்ததையும் அவன் கண்டான்.
“கேள்விப்பட்டியளே, அண்ணை?” என்று தொடங்கியவன் கொழும்பு இனக்கலவர நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதை விரிவாகக் கூறிமுடித்தான்.
திகைப்பு, வேதனை, கோபம் என்ற உணர்ச்சிக் கலவையில் உறைந்திருந்தான் கலாபன்.

“செய்தி போய்க்கொண்டிருக்கு… இந்தியச் செய்திதான். இலங்கைச் செய்தியில ஒண்டும் தெளிவாய்ச் சொல்லுறானில்லை. இந்த நிமி~ம்வரைக்கும் ஊரங்குச் சட்டம்கூடப் போடேல்லையாம். ஆயிரம் பேருக்கு மேல செத்திட்டதாய்த் தெரியுது.”

“இந்தியா ஒண்டும் சொல்லேல்லையோ?”

“இந்தியா அங்க நடக்கிறதுக்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கு இந்தநேரம் வரைக்கும்.”

நேரம் நகர்ந்துகொண்டிருந்தது.

“பியர் கொண்டுவரவா, கலாபா?” என்று கேட்டாள் ஜெஸ்மின்.
சிறிதுநேரம் மௌனமாயிருந்த கலாபன், “இந்த நிலைமைக்கு பியர் தாங்காது. இந்தா நடா, ஒரு அரை எடுத்துக்கொண்டு வா” என்று பணமெடுத்துக் கொடுத்தான். “நான் இப்ப வெளியில போகேலாது. நேற்றையிலயிருந்து இஞ்சதான் கிடக்கிறன். வெளியில கொஞ்சம் பிரச்சினை…” என்றபடி கலாபனிடம் பணத்தை வாங்கி ஜெஸ்மினிடம் கொடுத்தான் நடா. அவள் வேறு யார்மூலமாகவாவது வாங்கிக்கொள்வாள். போகுமுன் ஜெஸ்மின் கலாபனைக் கேட்டாள்: “உன்னுடைய குடும்பமோ, நெருங்கிய சொந்தக்காரரோ யாரும் கொழும்பில் இல்லைத்தானே, கலாபா?”

“இல்லை. எண்டாலும் சாகிறதுகள் என்ர சனங்களெல்லே?”

“அதுமெய்தான்” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தாள் அவள்.

சமீபத்திலேயே மதுபானக் கடை இருந்ததில் விரைவில் டொக்ரேஸ் பிறண்டியோடு திரும்பிவந்துவிட்டாள் ஜெஸ்மின்.

குடித்துக்கொண்டிருக்கும்போது கலாபன் சொன்னான்: “கப்பலுக்கு நீ வரேல்லையெண்டோடனயே நினைச்சன், எதோ பிரச்சினையெண்டு. ஆனா அது இந்தமாதிரியான பிரச்சினையாயிருக்குமெண்டு நான் நினைச்சிருக்கேல்லை. துபாயில நிக்கேக்க சந்திச்ச வேற கப்பல் பெடியள் சொன்னாங்கள், ரைகரின்ர குண்டுவெடிப்பில பதின்மூண்டு ஆமிக்காறங்கள் செத்திட்டாங்களெண்டு… அப்பவே நான் யோசிச்சன், உது ஒரு விசர் வேலையெண்டு. நான் பயந்தமாதிரியே இப்ப நடந்திட்டுது.”

நடா பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் முகபாவம் திடீரென்று மாறத் தொடங்கியிருந்ததை ஜெஸ்மின் கண்டாள். ஏனென்று விளங்கியிருக்கவில்லை அவளுக்கு. அது ஏதோவொருவகையில் இனக்கலவரம் சம்பந்தமானதென்று மட்டும் அவளுக்குத் தெரிந்தது. ஆனால் கலாபன் நடாவின் முகமாற்றத்தைக் கண்டுகொள்ளாமலே தொடர்ந்துகொண்டிருந்தான்.

ஒருபோது நடா பேசாமலிருப்பதைக் கவனமாகியபோது, “நீயேன் கிளாஸை இன்னும் தொடாமல் வைச்சுப் பாத்துக்கொண்டிருக்கிறாய்? நான் சொல்லுறதொண்டும் உனக்குப் பிடிக்கேல்லையோ?” என்றான் கலாபன்.
“நாங்கள் வெளியில இருந்துகொண்டு எல்லாம் கதைக்கலாமண்ணை. அங்கத்த நிலைமை சரியாய் எங்களுக்கு என்ன தெரியும்? போராட்டமெண்டு தொடங்கினாப் பிறகு ஆமிக்காறன் சாகாமல் அடிச்சுக்கொண்டிருக்கிறதெண்டா எல்லாம் சரியாய் வருமே?”

அதற்கு கலாபன் ஒன்று சொன்னான்.

அவர்களது உரையாடலை விளங்கிக்கொள்ளாவிட்டாலும், அது எதுபற்றியதென்பதை உணரமுடிந்த ஜெஸ்மின் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினாள். “இதுக்காக நீங்கள் இரண்டுபேரும் உங்களுக்குள்ளேயே பிரச்னைப்படத் தேவையில்லை, கலாபா. கொழும்பில் நடக்கிற வி~யங்களைக் கேள்விப்பட்டு சம்பந்தப்படாத எனக்கே க~;டமாயிருக்கிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்ட உங்களுக்கு நிச்சயமாக இது பெரிய பாதிப்பாய்த்தான் இருக்கும். இங்கேயிருந்து நீங்கள் செய்யக்கூடியதும் ஏதுமில்லை. நடப்பதைக் காண்பதைத் தவிர வேறுவழியில்லை. இப்போதைக்கு மட்டுமாவது. எல்லாப் பிரச்னையும் விரைவில் முடிந்து மக்கள் பாதுகாப்பாய் இருக்கவேண்டுமென்று பிரார்த்தியுங்கள். நானும் உங்களோட சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.”

அப்போது சென்னை மாநிலச் செய்தியில், இலங்கையில் நடைபெறும் இனக்கலவரம் குறித்து உடனடியாக பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கையின் இந்தியத் தூதுவரை பிரதமர் இந்திரா காந்தி அவசரமாக அழைத்துச் சொன்னதான தகவல் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
தாங்கள் செய்வதற்கு ஏதுமில்லையென்பதும், அதுபோன்ற நல்லெண்ணத் தலையீடுகளே அப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிவாரணமென்பதும் இருவருக்கும் புரிந்தன.

சிறிதுநேரத்தில் கலாபன், “வா, நடா. எனக்கு எங்கனயெண்டான்ன தனிமையில போய் கொஞ்சநேரம் இருக்கவேணும்போலயிருக்கு” என்று எழுந்தான்.

“நீங்கள் போட்டுவாருங்கோ, அண்ணை. வெளியில நேற்று சிங்களப் பெடியளோட கொஞ்சம் பிரச்சினை எனக்கு. அதுதான் இஞ்ச நிக்கிறன் வெளிக்கிடாமல்.” நடா சொன்னான்.

கலாபன் ஒன்றும் சொல்லவில்லை. ஏற இறங்க நடாவை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே நடந்தான். “ஜெஸ்மின், நான் நரிமன்பொயின்ற்வரை போய்விட்டு வருகிறேன்.”

பம்பாயின் நுழைவாயில் கட்டிடத்தினோரம் நடந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தான் கலாபன்.

இருண்டுகொண்டிருந்த பூகோளத்தில் மின்குமிழ்கள் தம் அடையாளம் காட்டின. மனிதர்கள் உருவங்களாய் அமர்ந்தும், நின்றும், நகர்ந்துமாய். சூழ தனிமையற்ற வெளியில் தனியனாய் அமர்ந்தும், தனியனாய் உணர்ந்தும்கொண்டு கடலையே வெறித்தபடியிருந்தான் கலாபன். அதே அலைதான் அவன் நாட்டையும் சென்று தழுவிக்கொண்டிருப்பது. அவ்வாறான ஆனந்த வீச்சாகவா அக்கரையிலும் அதன் அலைகள் இருந்திருக்கும்? அவலத்தின் ஓலமாகத்தானே அது தரையறையும்? எத்தனை மனிதர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பர் அதுவரையில்? காற்றும், கடலும் நாடுகள் சகலமானவற்றையுமே தடவியும், அளைந்தும் செல்கின்றன. எங்கே சென்றாலும் ஒரே காற்றுத்தானே வீசுகிறது? எந்தக் மண்ணிலும் ஒரே கடல் அலைதானே அடிக்கிறது? அவனால் தன் நாட்டை எந்தக் கணத்தில்தான் நினைக்காமலிருத்தல்கூடும்?

அவனுக்குக் கண்கலங்கியது.

வெகுநேரத்தின் பின் ஜெஸ்மின் வீடு திரும்பியவன் அங்கேயும் அதிகநேரம் தாமதிக்காமல் கப்பலுக்குத் திரும்பிவிட்டான்.

நான்காம் நாள் கப்பல் செப்பனிடும் துறையிலிருந்து துறைமுகம் வந்தது. அடுத்த இரண்டாம் நாள் காலையில் கப்பல் சார்ஜாநோக்கிப் புறப்பட்டது. அதுவரை  கலாபனின் நடைமுறை முதல்நாள்போலவே இருந்தது.
ஜெஸ்மின் அவனது மனநிலையைத் தெரிந்திருந்தபடியால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறிவிட்டு அவ்வப்போது படுத்தெழும்பியபடியும், டொக்டரிடம் போய்வந்துகொண்டும் காலத்தைக் கழித்தாள். அவளது காத்திருப்பு அல்லது இல்லிருத்தல் அவ்வாறாகவே கடந்தது.

கலாபன் பம்பாய் வந்த இரண்டாம் நாள் தனது அறைக்குச் சென்ற நடா திரும்பவரவில்லை.

யாரின் மனங்களும் சிதறுண்டு கிடந்தன.

கப்பல் போனதடவை துபாயிலிருந்து புறப்பட்டபோது இன்னோரு பயணத்தோடு ஒரு மாத விடுப்பெடுத்துக்கொண்டு ஊர் போய்வருகிற எண்ணமிருந்தது கலாபனுக்கு. இலங்கை நிலைமை தெரியாமல் விடுப்புக்கான அறிவிப்பை கப்ரினிடம் அவன் சொல்ல அப்போது தயாராகவில்லை. ஊரில் குடும்பம் பிரச்னையேதுமின்றி இருப்பார்கள். கட்டி முடிந்திருக்கும் வீட்டை ஆறுதலாகக்கூட பார்த்துக்கொள்ளலாம். கிருகப்பிரவேசத்துக்கு அவசரமில்லை. அப்படியே இருந்தாலும் அவனில்லாத நிலையில்கூட அதைச் செய்துகொள்ளலாம்.

ஆனாலும் மனம் அடங்கிநிற்க மறுத்தது. எங்கேயும் நீலம் தெரிந்தது. நீலம் கடலாக இருந்தது. அலையெறியும் கடலும் அவனுக்கு நெருப்புச் சுமந்ததாய், பிணம் மிதந்ததாய், இரத்தம் கலந்ததாய் எப்போதும் தோன்றிக்கொண்டிருந்தது.

கடல் ஒரேயிடத்தில் தங்கியிருப்பதில்லையென்று மனத்திலொரு எண்ணம் ஓடியது கலாபனுக்கு. ஐம்பெரும் சமுத்திரங்களல்ல, ஒற்றைச் சமுத்திரமே புவியில் இருப்பது. அந்த ஒற்றைக் கடல்தான் வௌ;வேறு பெயர்களில் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டமாக, ஒவ்வொரு நாடாக. இலங்கையைப்போலவே இரத்தம் சொட்டும் எந்த நாட்டுக் கதையையும் அது அறிந்திருக்கிறது. கடல் படாத மண்களாக உலகில் ஐம்பதுக்குமேல் நாடுகளில்லை. அவனதோ நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு. அந்தவகையில் நான்குபுறக் கதையும் தெரிந்த கடலது. கடலில் எங்கேயிருந்தாலும் அவனுக்கு அவன் நாடு ஞாபகமாகும். நாடு ஞாபகமாகும்போதெல்லாம் தன் இனத்தின் வல்விதி ஞாபகமாகும்.

கப்பல் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் விசையில் குலுங்கத் தொடங்கியது. அலைகள் வேகவேகமாக எழுந்தடித்தன. அவன் வேலைசெய்த கப்பல்களிலியே அதுதான் சிறிய கப்பல். ஆனாலும் அலைகளைத் தாங்கி முன்னேறவும், பனிப் பாளங்களைக் கிழித்து பயணம் தொடரவும் அது வலு பெற்றிருந்தது. மேலும் அத்தனை காலத்தில் ஒரு கடல் கொந்தளிப்பை பெரும்பாலும் பிரக்ஞையாகாமலே பயணிக்கும் அனுபவம் அவனுக்கும் கைகூடியிருந்தது.

அவன் இனி தன் வீட்டையில்லை, தன் குடும்பத்தையில்லை, கடல் சொல்லக்கூடிய கதைகளைக் கேட்கலாம். இனத்துக்கு இனம் செய்த மோசங்களின் சோகங்களும், கொடூரங்களும் நிறைந்த கதைகளை.
காலம் பெருவெளியில் ஊழையிட்டு நகர்ந்துகொண்டிருந்தது.

00000

தாய்வீடு, ஆக. 2015

உண்மையைத் தேடுதல் 3

உண்மையைத் தேடுதல்


மனத்தில் அசரீரியாய் ஒலிக்கின்றது
காலத்தின் சுருதிபேதம்
(வதிரி இ.ராஜேஸ்கண்ணனின் இரு சிறுகதைத்
தொகுப்புகளை முன்வைத்து…)
-தேவகாந்தன்-

‘முதுசொமாய் ’ (2002), ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (2009) ஆகிய இரண்டு தொகுப்புகளும் ஏறக்குறைய இவ்வாண்டு மாசியிலேயே கிடைத்துவிட்டிருந்தபோதும், அவற்றினுள் பிரவேசிப்பதற்கான காலத்துக்காக சிறிது நான் காத்திருக்கவேண்டி நேர்ந்தது. பரிசுகளை அவ்வப்போது பெற்றிருக்கும் சில கதைகளை உள்ளடக்கியிருப்பினும் பரவலாகப் பேசப்படாதவை இத்தொகுப்புகள். கல்விப்புலம் சார்ந்த ஒருவரிடமிருந்து வந்த தொகுப்புகள் சாதாரண ஒரு வாசகனாய் என்னில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஆவலில் என் வாசிப்பு துவங்கியது.

இரண்டு தொகுப்புகளிலும் இருபது சிறுகதைகள். அளவிலும் சிறிதான இந்தக் கதைகளினூடாக நான் அடைந்த தரிசனம் பிரமாண்டமானது. அவ்வாசிப்பின் அனுபவங்களையே இச்சாளரத்தினூடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
முதலாவது தொகுப்பான ‘முதுசொமாய்’ மிகச்சிறந்த கதைகளைக் கொண்டிருக்காதபோதிலும், அவற்றிலிருந்த உணர்வுவீச்சு இயல்பாய் அமைந்து கதைகளுக்கான வீர்யத்தை அளித்திருந்தது. 1993இலிருந்து 2002வரையான பத்து வருட காலப்பகுதியில் வெளிவந்திருந்த கதைகளின் அத் தொகுப்பு, வடமராட்சி யுத்தத்திற்கும், வலிகாமம் புலப்பெயர்வுக்கும் பின்னரான காலக்களத்தைக் கொண்டிருக்கிறது. யுத்தத்தின் வலி நிறைந்த கதைகள் அவை. ஆனாலும் யுத்தத்தின் வலிகளை மட்டுமன்றி, யுத்தத்தினால் சமூகத்தில் விளைந்த பாதிப்புக்களை ஓரளவு சமூகவியல்ரீதியான பார்வையில் ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களைச் சுமந்தவையாயுமிருந்தன.

இரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொங்கிஷங்கள்’ இறுதியுத்தம் தொடங்குகிற காலத்தில் வெளிவந்திருந்தாலும், அதில் ஓரளவு சமாதான காலத்தில் நிலவிய சமூகநிலைமையிலிருந்து சமூகத்தில் அதுவரை விளைந்த இடப்பெயர்வு, புலப்பெயர்வு, மிகையான பணப்புழக்கம் ஆதியவற்றாலான பாதிப்புக்களை  கருப்பொருளாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாக எனக்குத் தோன்றுகிறது. இவ்விரண்டும் இவற்றின் கலாநேர்த்தியையும் மீறி எனக்கு முக்கியப்படுவது இதிலுள்ள சமூகவியல் நோக்கே எனக் கருதுகிறேன்.

‘கிராமிய வாழ்வில் நகரவாழ்வுக் கூறுகளின் அபரிமிதமான ஊடுருவலும், குடியகல்வுகளின் வழியான அனுபவ விரிவாக்கமும் வாழ்வின் தரங்குறித்த பதற்றங்களை கிராமிய மனிதர்களிடையே ஏற்படுத்தியுள்ளது’ என படைப்பாளி தனது ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ நூலில் கூறியதை அளந்து பார்க்கிற கதைகள் இவை. கதைகளின் மூலமாக கருத்தையும், கருத்தின் மூலமாக கதைகளையும் எடைபோடுகிற இந்த வசதி வெகுஅபூர்வமானது. விமர்சகனே படைப்பாளியாகவும், படைப்பாளியே விமர்சகனாகவும் இருக்கிறமாதரியான இந்த நிலைமை வெகு சிலாக்கியமானது. இரண்டு தளங்களுமே ஒன்று ஒன்றினால் பயன்பாடடைகிற வாய்ப்பு இதிலே அதிகம்.

முன்னே குறிப்பிட்டதுபோல, ஒரு இயல்பான வீச்சு முதலாவது தொகுதியில் காணப்பட்டது உண்மையே. அந்த பத்துக் கதைகளில் இரண்டு அதுவரை வெளியாகாதிருந்தவை. மீதியில் ஐந்து கதைகள் ‘சஞ்சீவி’ சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று வானொலிக் கதை. அடுத்தது ‘தூண்டி’யிலும், மற்றது ‘தினக்குர’லிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றிலிருந்த துடிப்பும், பன்முனை நோக்கும் படைப்பாளியின் தனித்துவத்தை நிலைநாட்டியிருந்தன.
இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வருகையோடுதான் ஈழத் தமிழிலக்கியம் தனக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியதென்பதை விடவும், அது அடையாளம் காணப்பட்டதே அதன் பின்னர்தான் என்கிற அறிகை, இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடியதே. ஆனாலும் தனக்கான ஒரு இலக்கிய முறைமையை, தனித்துவத்தை உருவாக்கிக்கொண்ட பின்னரும், வளர்ந்தும் கைவண்டியில் நடக்கிற பிள்ளைபோல அது தொடர்ந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே நின்றுவிடுவது வளர்ச்சிக்கான எடுகோளல்ல என்பதைச் சொல்லவே வேண்டியிருக்கிறது.

ராஜேஸ்கண்ணனின் கதைகள் யதார்த்தமானவை. அவையும் மிக எளிய பதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றின் பாதை புதியதடத்தில் செல்லவில்லையென்பதை கசப்பாகவிருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. மிகவும் சிலாகிக்கிற விஷயம் இதில் என்னவெனில், இக்கதைகளில் எங்கேயும் பிரச்சார தொனி இருக்கவில்லை என்பதுதான்.
முதலாவது தொகுப்பிலுள்ள முக்கியமான கதையாக ‘மனிதம் மட்டுமல்ல’ என்ற கதையைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. வளர்ப்பு மிருகமான ஒரு நாயின் அச்சம் போர்க்கால சூழலில் எவ்வாறிருந்தது என்பதை மிகநேர்த்தியாக எடுத்துரைத்த கதை அது. கதையில் வரும் நாயான நிக்ஸன் ஒரு குழந்தைபோலவே நடந்துகொண்டது. மிருகமென்ன, மனிதனென்ன மரண அச்சமென்பது ஒன்றாகவே இருக்கிறதென்பதை தெளிவாக உணர்த்தியது அக்கதை. அதுவே யுத்தத்தின் கொடுமுகத்தையும் மிக அச்சொட்டாகக் காட்டியிருக்கிறது.

‘மாரீசம்’ நல்ல கதை. ஜனனி அக்காவின் துயரங்கள் சொல்லி மாளாதவை. குடும்பத்தையே சுமக்கும் நிர்ப்பந்தம்  இருக்கிறது அவளுக்கு. தங்கை, தம்பிமீதான அக்கறையால் திருமணத்தையே மறுக்கிறாள் அவள். குறைந்தபட்சம் வெளிநாட்டு சம்பந்தம் அவளுக்கு ஒப்பாகவே இருக்கவில்லை. அதுதான் அவளைத் தற்கொலை முயற்சியளவுக்கு உந்தித்தள்ளுகிறது. இது நஞ்சுண்ட காட்டின் அக்காவுக்கும் மூத்தவளாக என்னை உணரவைத்த பாத்திரமும்கூட. ‘லீவு போம்’, ‘அகதி அந்தஸ்து’ ஆகிய கதைகள் கவனம்பெறக் கூடியவை.

இரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொக்கி~ங்க’ளிலுள்ள கதைகள் முதிர்ச்சிபெற்றவை, நடையாலும், அர்த்த வெளிப்பாட்டாலும். இதிலுள்ள முக்;கியமான கதை ‘குதறப்படும் இரவுகள்’ என்று எனக்குப் படுகிறது.
ஒரு படைப்பின் நோக்கம் செய்திப் பரிமாற்றமில்லையெனில், தன் உணர்வை தேர்ந்த மொழிகொண்டு வெளிப்படுத்துவதின்மூலம் அதன் கலைப்பண்பு அடையப்படுகிறதெனில், இத் தொகுப்பில் அதற்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய கதை ‘குதறப்படும் இரவுக’ளே. ‘இரவு என்பது ஒரு அற்பதமான உற்பவிப்பின் ரகசியம்’ என்று தொடங்குகிறது அந்தக் கதை. ‘என் செல்லத்தை அணைத்தபடி அவள். தலைமாட்டிலே அதிகாலை நான்கரைக்காக அலாரம் வைத்த மணிக்கூடு இயந்திர இயக்கத்துடன். அந்தகார இருள்மட்டும் அப்படியே’ என முடிகிறவரை நீண்ட அதன் மொழியாட்சி கதையைச் செறிவடைய வைத்திருக்கிறது. இருள் பிரத்தியட்சமாய்க் காட்டப்பட்ட உலகமாயிருக்கிறது அது.

மொத்தத்தில் இரண்டு தொகுப்புகளுமே வாசித்த பின்பும் நீண்டநேரமாய் வாசகன் மனத்துள் கிடந்து அசரீரியின் குரலாய் காலத்தின் சுருதிபேதத்தை ஒலிக்கச்செய்கிற கதைகளைக் கொண்டிருக்கிறதாய்ச் சொல்லமுடியும்.
ராஜேஸ்கண்ணனின் நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகளோடு, ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ என்ற ஆய்வுத்துறை சார்ந்த நூலொன்றும், ‘போர்வைக்குள் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுப்பொன்றும் இவற்றுள் அடங்கும். சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளராய் யாழ். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராஜேஸ்கண்ணனிடம் நிறைய எதிர்பார்க்க இவ்விரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்  இலக்கிய வாசகனைத் தூண்டச் செய்யுமென நிச்சயமாக நம்புகிறேன்.
00000
இ-குருவி, ஆக. 2015

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...