Friday, September 16, 2016

சமகால தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனின் நாவல்களது வகிபாகம்
ஜெயகாந்தனின் எழுத்துக்களில் கட்டுரை, சிறுகதைகள் தவிர்ந்த நாவல்கள், குறுநாவல்கள் குறித்து தீர்க்கமான பகுப்பேதும் செய்துவிட முடியாதே இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வகுக்கப்பட்ட அவற்றுக்கான இலக்கணங்களே இன்றளவும் கல்விப்புலத்தில் அளவைகளாக இருக்கின்றன. நவீன இலக்கிய விமர்சனம் தன் அளவைகளை இப்போது சொல்லிக்கொண்டிருப்பினும், அவை கல்விப்புலத்தில் இன்னும் உள்வாங்கிக்கொள்ளப்படவில்;லை. இருந்தாலும் அது இங்கே முக்கியமில்லை. எப்போதும் ஒரு அளவை இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு மேலே செல்லலாம்.

அளவைகளென்பது அனைவருக்கும் ஒப்ப முடிந்திருப்பினும், அவரவரின் அளவைகளால் ஒன்றுபோல் முடிவுகள் ஆகிவிடவில்லை. ஒருவரது கையால் அளக்கப்பட்டது மற்றவரின் கையளவுக்கு சமமாக இருக்கவில்லையென்பது அளவின் பிழையல்ல, அளவுகோலின் பிழையே. இது பிழைகூட இல்லை. ஒரு வித்தியாசமென்றும் இதனைக் கூறலாம். இலக்கியம் கலை சார்ந்த விஷயத்தில் மட்டுமே அளவைகள் ஒன்றாக இருந்தாலும் அளப்பவர் வேறாக இருக்கிறவரையில் முடிவுகள் வேறாக வருகின்றன. ஒருவகையில் இந்தப் பிழையோடும் கூடியதுதான் இங்கே சாத்தியமாகவும் இருக்கிறது.

கம்பன் கவிச்சக்கரவர்த்தியென்பது எந்த பொதுவாக்கெடுப்பிலும் உருவானதில்லை. இலக்கியத்துக்கான ஒரு வட்டம் அந்தத் தேர்வைச் செய்தது. அதை இலக்கிய உள்வட்டம் என்பார் க.நா.சுப்பிரமணியம். அப்படியொரு உள்வட்டம் இப்போது, இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த இரண்டாம் தசாப்தத்தில் இருக்கிறதா என்றால், முன்பிருந்ததுபோல இல்லையென்ற பதிலே கிடைக்கிறது.

மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட பதிப்பில் ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ என்பதும், ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்பதும் குறுநாவல்களாகவே தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தனது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில், ‘ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்துவிட்டாள், சமூகம் என்பது நாலு பேர் முதலிய நாவல்களில்’ என இவற்றை நாவல்களாகச் சொல்வார் கலாநிதி க.கைலாசபதி. அதேநேரத்தில் நாம் நாவலாகக் கருதியிருந்த க.நா.சு.வின் ஒரு நாளை ‘பாரிஸுக்கு போ' என்ற நாவலை ஒப்பாய்விற்காக க.நா.சு.வின் குறுநாவலுடன் சேர்த்துப் படிப்பது பயனுள்ள அப்பியாசமாகவிருக்கும்’ என பேராசிரியர் கைலாசபதி சொல்லுகையில் ஒருநாள் குறுநாவலாக எடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆக குறுநாவல், நாவல் என்பன அவரவர்க்குமான அளவைகளில் முடிவொற்றுமைகளை அடையவில்லை. அது இந்த இலக்கிய உள்வட்டச் செயற்பாட்டின் பலஹீனமான நிலையையே காட்டுகிறது.
இன்றைக்கு இந்த நாவல், குறுநாவல் வகைமையினை படைப்பாளி, பதிப்பகம், விமர்சகன், வாசகன் ஆகிய நாற்தரப்பும் தீர்மானிப்பதே நடைமுறையிலிருப்பதைக் காணமுடிகிறது. எவ்வாறு பகுக்கப்பட்டாலும் காலப்போக்கில் நிலைக்கப்போகிற இந்த உள்வட்ட அபிப்பிராயமே அதை அறுதியாக்கப் போகிறது. என்றாலும் இந்த அபிப்பிராய விஷயத்தில் ஒரு நம்பகமற்ற தன்மை இன்று நிலவுவதை சுட்டிச் சொல்லவேண்டும்.

வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியானது அவரவர்க்குமான வலைப்பூக்கள், அவரவர்க்குமான இணையதளங்கள், அவரவர்க்குமான சஞ்சிகைகள் பத்திரிகைகளை சாத்தியமாக்கியமாக்கியிருக்கிற வகையில் அவரவர்க்குமான இந்த அபிப்பிராயம் சணப்பித்த விவகாரமாகிவிடுகின்ற அபாயத்தை ஏற்கனவே இலக்கிய உலகு சந்தித்தாயிற்று. ஆக வாசக அபிப்பிராயமென்பதும் ஒரு ஆர்வக்கோளாறினால் உருவான அபிப்பிராயங்களாக ஆவதற்கு அதிகமான வாய்ப்புண்டு.
இந்தநிலையில் ஜெயகாந்தனின் நாவல்கள் என்ற தலைப்பில் ஒரு மதிப்பீடு அந்த மதிப்பீட்டைச் செய்யும் விமர்சனில் மட்டுமே தங்குவது தவிர்க்க முடியாதது.


ஒரு பொதுக் குறிப்பு ஜெயகாந்தனது நாவல்கள் பன்னிரண்டு என தலைப்புகளைக் குறிப்பிடாமல் சொல்கிறது. மீனாட்சி புத்தகநிலையத்தின் பதிப்பு அவரது குறுநாவல்களின் தொகையை முப்பத்தைந்தாகக் காட்டுகிறது. இவற்றிலிருந்து நாவல்களை நாங்கள் வகைமைப்படுத்தியாகவேண்டும். அது உடனடிக் காரிய சாத்தியமான விஷயமில்லை. அதனால் இதுவரை பெரும்பான்மை விமர்சகர்களால் ஜெயகாந்தன்  நாவல்களென ஒப்புக் கொள்ளப்பட்டவற்றில் இருந்தும், குறுநாவலெனக் குறிப்பிடப்பட்டவற்றில் நாவலென நான் கணித்தவற்றினையும் சேர்த்து இங்கே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன்.

பேராசிரியர்கள் கைலாசபதியும் சரி, சிவத்தம்பியும் சரி ஜெயகாந்தன் நாவல்களைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர, தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் ஜெயகாந்தனது பங்கு எத்தகையது என்பதை வரையறையாகக் கூறவில்லை. சமூகப் பங்களிப்பு குறித்தவரை ஜெயகாந்தனின் நாவல்களை விமர்சித்த அளவுக்கு, நாவலின் வளர்ச்சிப் பாதையில் அவைகளுக்கான முக்கியத்துவமும், நாவலாக அவை கொண்டிருக்கிற தரமும் அணுகப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் ஜெயகாந்தனின் நாவல்கள் விந்தன், சிதம்பர ரகுநாதன், கே.டானியல், செ.கணேசலிங்கன் ஆகியோரது நாவல்களளவுக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. மார்க்சீய சார்புடைய இவ்விரு விமர்சகர்களையும் விட்டுப் பார்த்தாலும், மார்க்சீய எதிர்நிலையுடைய க.நா.சு.கூட ஜெயகாந்தனின் எழுத்துக்களை பெரிதாகக் கணிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது. ‘தமிழ்ச் சிறுகதையில் வெற்றி கண்டவர்கள்’ என்ற கட்டுரையில் க.நா.சு. எழுதுவார், ‘ஐம்பதுகளில் உருவாகத் தொடங்கி எழுத்தளவில் கருகிவிட்டவர் என்று ஜெயகாந்தனையும், அதிகமாக எழுதாதனால்  தப்பியவர் என்று சுந்தர ராமஸ்வாமியையும் சொல்லுவேன்’ என்று. ஆனாலும் பின்;னர் க.நா.சு.வே ஜெயகாந்தனின் சில முக்கியமான சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறாரென்பது வேறு விஷயம். இந்த மார்க்சீய  - மார்க்சீய எதிர்நிலை கொண்ட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பார்வையையே நான் மேற்கொண்டிருக்கிறேன். மார்க்சீயத்தை சமூக, அரசியல் நிலைமைகளின் பகுப்பாய்வுக்கான அலகுகளாகக் கொள்கையில், இலக்கியக் கணிப்பை மார்க்சீயம தாண்டிய, அதிலிருந்து மேன்மையடைந்த வேற அலகுகள்கொண்டு, அளவீடு செய்வதே சரியாக இருக்குமென நம்பினேன். அதை  அபிப்பிராயங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையென்றும் சொல்லலாம். இந்த அபிப்பிராயங்களும் எழுபதுகளுக்குப் பின்னால் உருவாகி இறுகிஇறுகி கோட்பாடுகளாக ஆனவைதாம்.

‘வாழ்க்கை அழைக்கிறது’ என்பது ஜெயகாந்தனின் முதல் நாவலாகக் கருதக்கிடக்கிறது. இது 1956-57ல் வெளிவந்திருக்கலாம். ராணி முத்து பதிப்பாக மீண்டும் இது வெகுஜன தளத்திலும் வெளிவந்திருக்கிறது. மாத நாவல்களை வெளியிடுவதற்காக இந்தப் பதிப்பகம் தோன்றியது.

ஜெயகாந்தனின் புனைவுப் படைப்பில் சிறுகதையைத் தொடர்ந்ததே அவரது நாவல், குறுநாவல் பிரவேசம். இது முதல் நாவலான ‘வாழ்க்கை அழைக்கிறது’ (1956-57) என்பதிலிருந்தும், குறுநாவலான கைவிலங்கில் (1962) இருந்தும் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த அறுபதுகளின் காலகட்டம் தமிழ் நாவல் பொறுத்தவரை, எழுத்து பொறுத்தவரை எப்படியிருந்தது? வெகுஜன பத்திரிகைகளில் வெகுஜனங்களுக்கான ஒரு எழுத்தும், அது சார்ந்த கதைசொல்லல் முறையுமே இருந்தது. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியன், லட்சுமி போன்றேரே பிரபலமாகவிருந்தனர். அவை வெகுஜன எழுத்துக்களென தீவிர படைப்பாளிகளால், குறிப்பாக புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களால் குறிக்கப்பட்டன.

இந்தக் காலத்திலேதான் ஜெயகாந்தனின் எழுத்துப் பிரவேசம் நிகழ்கிறது. சரியாக 1945இல். மேலும் இவரது படைப்புகள் ஹனுமான், சாந்தி, மனிதன் போன்ற சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன. இவரது எழுத்துப் பிரவேசக் காலம் இவரே மார்க்சீய ஈடுபாட்டாளராய் கம்யூனிஸ்டு கட்சியில் அங்கத்தவராயிருந்த காலம். விந்தனுக்கு போலன்றி ஜெயகாந்தனுக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. மிக்க ஜனரஞ்சகமான ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகளிலேயே அவர் அதிகமும் எழுதினார்.  அப்போதும் வறுமைகண்டு இரக்கம், அதன் தாழ்நிலை கண்டு வெகுட்சி, பாலியல் தொழிலாளர்மீதான பரிவு என்பதாகவே அவரது எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இதற்கு ஆதர்ஷமாக பாரதி இருந்திருக்க முடியும். அவர் கவிதையில் காட்டியதை ஜெயகாந்தன் உரைநடையில் காட்டினார். ஆக உணர்நிலையில் ஜெயகாந்தனது சிறுகதைகள் புதியதாக அமைந்திருக்கவில்லை. அது ஏற்கனவே பல படைப்பாளிகளாலும் கைக்கொள்ளப்பட்ட பொருளாகவே இருந்திருக்கிறது. இருந்தும் பரந்த வெகுஜனத்தால் போலவே, பரந்த தீவிர வாசகர் வட்டத்தாலும் அவர் படிக்கப்பட்டார்.

பாரதியிலிருந்து அவரது வேகத்தையும் கருத்துநிலையையும் உள்வாங்கிய ஜெயகாந்தன், அவரது இந்தியப் பண்பாடு என்ற கருத்தாக்கத்தை இப்போது கவனிக்கிறார். இந்துப் பண்பாடென்ற ஒரு ஒற்றைப்படையான தன்மை சாத்தியமாக இல்லாதிருந்தபோதும், அதை ஒற்றைப்படையாக எடுத்துக்கொண்டு மிகத்தீவிரமாக அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற காலம் வருகிறபோது அவர் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகுகிறார். பின்னால் அவரது தொடர்பு காங்கிரக் கட்சியாக இருக்கிறது. ஒற்றைப்படையான இந்த இந்திய பண்பாட்டு விஷயத்துக்கு அவருக்கு வசதியாக இருந்தது காங்கிரஸ்தான். இந்தத் தளத்தில் வைத்தே பாரதியையும் ஜெகாந்தனையும் நான் பார்க்கிறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்’ என இலங்கைத் தீவை சிங்களத் தீவாக்கியது பாரதியின் தற்செயல், அல்லது புரிவின்மை காரணமல்ல. இந்திய அரசியல் பண்பாட்டுக்கு மிக அண்மித்ததாக இருந்த மனநிலையின் வெளிப்பாடே அது. பரவலாக மேற்குலகிலும், கீழ்த்திசையிலும் அறியப்பட்டிருந்த பெயர் சிலோன். இலக்கியரீதியாகப் பார்த்தால் ஈழம். இலங்கைத்தீவினுக்கோர் பாலமமைப்போம் என்றிருந்தாலும் பெரும்பாலும் ஓசையும், கருத்தும் மாறியிருக்காது. இருந்தும் பாரதி இலங்கையை சிங்களத்தீவு என்றே குறிப்பிட்டான். ஆயினும் தன் மொழியை அவன் பாராட்டிய அளவு அதுவரையில் வேறு கவிஞர் பாராட்டவில்லை. சங்க இலக்கியங்களைப் பாராட்டிய அளவும் வேறு கவிஞர் பாராட்டவில்லை.

ஆனால் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் மிக உதாசீனமாகத்தான் ஜெயகாந்தன் நோக்கியிருந்தார். இது அவரது படைப்புகளில் எங்கும் துல்யமாக வெளிப்படவில்லையென்பது மெய்யே. ஆனால் இலக்கியச் செயற்பாட்டில் அது மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. இந்த இந்தியப் பண்பாடு என்ற தளத்திலிருந்துதான் அவரது நாவல்களதும், குறுநாவல்களதும் கரு உருவாகிறது. அது தனிமனிதரின் ஆசைகளிலிருந்தும், தனித்துவங்களிலிருந்தும், தனியுரிமைகளிலிருந்தும் வடிவம் கொள்கிறது. ‘சமூகமென்பது நாலு பே’ரும், ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’வும் வெளிவந்து அவரது நிலைப்பாட்டை துல்லியமாக அறிவிக்கின்றன. அவர் தொடர்ந்தும் பொதுமைநிலை காண அவாவிய அரசியல் கொள்கை உடையவரல்ல, தனிமனிதத்துவத்தின் பிரதிநிதியாக ஆகிவிட்டார் என்பது அறுதியாகிறது.

அவர் பெரும்பாலும் சிறுகதைகளிலிருந்து ஓரளவு விலகி நாவலும், குறுநாவலும் படைக்க ஆரம்பித்த சமயம் அவர் தன் முந்திய அரசியல் சித்தாந்தத்தை முற்றாகக் கைவிட்டாரெனச் சொல்லலாம். இது இந்தியப் பண்பாட்டை ஆதாரமாகக் கொள்ளவும், அதனால் திராவிட இயக்கங்கள்மீது காட்டமான எதிர்ப்பைச் செலுத்தவும் செய்கிறது. அவருக்கு காங்கிரஸிடத்தில் ஒரு தாச மனப்பான்மையே இருந்தது. அதனால்தான் 1976இல் ஏற்பட்ட அவசரகால நிலைப் பிரகடனத்துக்கெதிராக ஒரு வார்த்தை அவர் சொல்லவில்லை. அவர் காங்கிரஸினதும், இந்திராவினதும் தாசனாக இருந்தார்.

இவை அவரது அரசியல், சமூக நிலைப்பாடுகளே. ஆனாலும் இவையே அவரது இலக்கியங்களிலும் அடியோட்டமாய் இருந்தன. சரியான தத்துவார்த்தத் தளத்தை அவர் அடையாமல் சறுக்கச்செய்த சந்தர்ப்பங்கள் இங்கேயே புடைத்துநின்றன. ஜெயகாந்தனின் நாவல், குறுநாவல், சிறுகதையென எடுத்துக்கொண்டு பார்ப்பதானாலும் இந்தப் பகுப்பைத் தாண்டி ஒரு அடி நடந்துவிட முடியாது.

அவரது முக்கியமான நாவல்களாக ‘பாரிஸுக்கு போ’, ‘சிலநேரங்களில் சில மனிதர்கள’;, ‘கங்கை எங்கே போகிறாள்', ‘சுந்தர காண்டம்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜயஜய சங்கர’ ஆகியவற்றைச் சொல்லலாம். சிலநேரங்களில் சில மனிதர்கள் அது தொடராக வந்துபோதும், நூலாக வெளிவந்தபோதும் பரவலான வாசகர்களால் பேசப்பட்ட நாவல். சொல்லப்போனால் அந்தளவு வெகுஜன ஆர்வத்தைக் கிளப்பிய நாவல் இன்றுவரை வேறில்லை. அது காரணமாகவே அதன் தொடர்ச்சியாக கங்கை எங்கே போகிறாள் என்ற தொடரை எழுதியதாக படைப்பாளி அதன் முன்னுரையில் கூறுவார். இச்சைவாரியான பயணமாக தன் வாழ்க்கையை ஆக்கி ஒரு புதிய பயணத்தை நடத்தும் கங்காவுக்கு பிரெஞ்சு மொழியில் முன்னோடியுண்டு. ‘அடுத்தவர் ரத்தம்’ என்ற சிமொன் டி போவுவாவின் மிகக் காத்திரமான நாவலின் நாயகியான ஹெலனாகவே கங்கா எனக்குத் தெரிகிறாள். ழீன் புளொமார் தன் காதலை மறுதலிக்கும்போது தன்னிச்சையாக அலைந்து ஒருவனிடம் தன்னை இழக்கிறாள் ஹெலன். கர்ப்பமும் அடைகிறாள். ஏறக்குறைய அவளது நடத்தைகளினை ஒட்டியே கங்காவின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனாலும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்ததைத் தவிர ‘கங்கை எங்கே போகிறாள’; தமிழ் நாவல் இலக்கியத்துக்கு எதுவித பங்களிப்பைச் செய்ததாகவும் சொல்லமுடியாது.

‘பாரிஸுக்கு போ’ நாவலாக வளர்ந்ததுதான். சேஷையாவினது இந்திய மரபிசைக்கும் மகன் சாரங்கனின் மேற்கத்திய இசைக்குமான முரணினை முன்னிறுத்தி விவாதங்களுடன் எழுந்த நாவல். இதில் முன்வைக்கப்படும் இசைக்குப் பதிலாக எந்தக் கலைத்துறையையும்தான் வைத்திருக்க முடியும். ஏனெனில் இந்தியாவினை எப்படி முன்னேற்றுவது என்பதற்கான வழியின் ஒரு குறியீடுதான் அது. இவர்கள் அதிகம் நேரில் பேசிக்கொள்ளாவிட்டாலும் இந்திய மரபிசை மேற்கத்திய இசை என்ற தளத்தில் மிக விரிவான விவாதம் நடக்கிறது நாவலில். இதைவிட சாரங்கனுக்கும் அவனது மனைவி ராதாவுக்குமிடையே நிலவும் முரணும் முக்கியமானது. அவரது மகள் பாலம்மாவுக்கும் கணவன் நரசய்யாவுக்குமிடையேயான பிணக்கும்கூட தனிக் கதையாய் விரிவுறக்கூடியது. இவ்வாறு விரிவுபெறும் பாரிஸ{க்கு போவுடன் தமிழின் இசை குறித்து வந்த சிதம்பர ந.சுப்பிரமணியனின் ‘இதயநாதம்’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ இரண்டையும் ஒரு முயற்சிக்காக ஒப்பிடுகிறபோது ‘பாரிஸுக்கு போ’ அவ்வளவு சாதனை செய்த நாவலாக ஒரு தீவிர வாசகனுக்குத் தென்படுவதில்லை.

அடுத்து பலராலும் சிறந்த நாவலாகப் பேசப்பட்ட ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்பற்றி பலவிதமான அபிப்பிராயங்களுண்டு. ஜெயகாந்தனின் ஏனைய நாவல்கள் குறுநாவல்களைப்போலன்றி, வித்தியாசமான போக்கும் நடையும் ஆக்ரோ~மான விவாதங்களை முன்வைத்து ஒரு முடிவைநோக்கி வாசகனை நடத்திச் செல்லவும் முனையாத நாவல் அது. அது அதனளவிலான குறைகளையும் கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தின் முழு இருப்பும் அதில் காட்டப்படுவதில்லையென்பதுடன், சமூகத்தின் கீழ் நிலையிலிருக்கும் தலித்துகள்பற்றி அது கொஞ்சங்கூட கவனமெடுக்காமல் விட்டிருக்கும். கிருஷ்ணராஜபுரம் ஒரு இந்திய மாதிரிக் கிராமமாக வர்ணிக்கப்படுகிறது. ‘இந்த நாவலின் கதை இடம்பெறுகிற கிராமம் இன்ன இடத்தில்தான் என்று என்னால் சொல்லமுடியாது’ என முன்னுரையில் ஜெயகாந்தனே கூறுவார். பல்வேறு பிரச்னைகளும் செயற்பாடுகளும் மேன்மையான மனநிலையில் ஒரு புரிந்துணர்வுடன் அங்கே தீர்க்கப்படுவதும், மிகப் பினதங்கிய கிராமமான அது ஓரளவு மின்சார வசதியும் நல்ல சாலைகளும் பெறும்படியான நிலைமைகள் உருவாக்கப்படவிருக்கும் நிலையில் அதில் வரும் பிரதான பாத்திரங்களில் ஒன்றான ஹென்றி ஒரு பழைய மாதிரிக் கிராமமாக அதை எடுத்துக்கொண்டு அங்கே வாழ நினைப்பதும் எல்லாம் இந்திய பண்பாட்டு அசைவியக்கத்தின் அடையாளங்களாக நாவலில் தென்படும். முதலியார், கவுண்டர், நாயக்கர், கிராமணி, தேசிகர், பிள்ளை ஆகிய உயர் வகுப்பு ஜாதிகளெல்லாம் வருகின்றன. ஆனால் தலித்தும் சேர்ந்த கிராமமாக அது இருப்பதில்லை. தலித்துகள் வரும்போது அந்த அமைதியான கிராமத்தில் ஏற்ற இறக்கமும், சண்டை சச்சரவுகளும், நீதி அநீதிகளும், போராட்டங்களும் தோன்றுவது தவிர்க்கமுடியாமலே இருந்திருக்கும். தன் இந்திய மாதிரிக் கிராமத்தில் ஜெயகாந்தனின் கனவு அப்போது சிதறிப்போகவே நேர்ந்திருக்கும். அவருக்கே அது நாவலா என்ற பிரச்னை இருந்திருக்கிறது. அதை ஒரு தொடர்கதையென்றே முன்னுரையின் பல இடங்களிலும் குறிப்பிடுவார் ஜெயகாந்தன். இருந்தும் அது அந்தக் காலகட்டத்தில் ஒரு நல்ல நாவலாகவே இருந்தது.

‘சுந்தர காண்டம்’ இன்னொரு முக்கியமான நாவல். சுகுமாரன் மனைவி சீதா. உறவுகள் கசந்துவிட்ட நிலையில் கணவனிடமிருந்து மணவிலக்கு கேட்கிறாள். அந்தப் பத்திரிகையின் உரிமையாளர் சர்மா ஒரு எழுத்தாளரும். பல கதைகளை அந்தப் பத்திரிகையிலேயே எழுதியிருக்கிறார். அத்தனையும் கிளுகிளுப்புக் கதைகளாகவே இருக்கும். அவரது மகளே சீதா. அவளையும் பத்திரிகை நிறுவனத்தையும் சுகுமாரனுக்கு கொடுத்தார் அவர். அவளுக்கு  கிரிதரனோடுள்ள தொடர்பு காரணமாகவும், தமக்கிடையிலான மணமுறிவு தன் அந்தஸ்தை பாதிக்கும் என்பதாலும் அதை மறுக்கிறான் சுகுமாரன். கிரிதரனுக்காகவும் சீதாவுக்காகவும் சுகுமாரனுக்காகவும்கூட ஜெயகாந்தனே வாதாடுகிறார். அவனது விருப்பத்தை அறமாக ஸ்தாபிக்கும் ஜெயகாந்தன் சீதாவுக்கும் நியாயம் செய்யவில்லை. கடைசியில் பத்திரிகை நிறுவனத்தை சீதாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளிக்கிடுகிறான் சுகுமாரன். பல இடங்களில் அறம்போல் தெரியும் வி~யங்களுக்காகவே படைப்பாளி கச்சை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டுவிடுவது படைப்பின் பலஹீனமாகிவிடுகிறது. ‘சுந்தரகாண்டம்’ அந்த பலஹீனத்திலிருந்து தவறவில்லை.

‘ஜய ஜய சங்கர’ தற்கால காஞ்சி சங்கரரை ஓரளவு மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்ட பாத்திரம். பல்வேறு எதிரிணைகள் ஒன்றுபடுவதுதான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது. அநியாயத்துக்கு எல்லோருமே நல்லவர்களாயிருக்கிறார்கள். சமயத்தையும் அரசியலையும், காந்தியவாதியையும் புரட்சிக்காரனையும், ஹரிஜனனையும் பிராமணனையும், விஞ்ஞானப் பார்வையையும் சமயப் பார்வையையும் இணைப்பதில் இது சுமுகமான வெற்றியை அடைகிறது. 1980களின் ஆரம்பத்தில் வெளிவந்த கதை இது. மூன்று பாகங்களாய் தனித்தனிப் பிரசுரங்களாயும் இது உடனடிப் பின்னால் வெளிவந்தது. இது ஜெயகாந்தனின் இறுதிப் படைப்பாக இருக்கலாம்.

ஆக மொத்தம் 1945 தொடங்கி 1985 வரை ஒரு நாற்பதாண்டுக் காலம் தமிழிலக்கிய எழுத்துலகில் இருந்த ஜெயகாந்தன், அவரது மரணத்தின் பின் பேசப்படும் அளவிற்கு உன்னதமான படைப்பாளியாக இருந்தாராவென்று மீண்டும் அலசவேண்டிய தேவையொன்று இன்று ஏற்பட்டிருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தமிழின் முக்கியமான நூறு நாவல்களைப் பட்டியலிட்டபோது ஜெயகாந்தனின் நாவல்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன. இன்று அவ்வாறாக தமிழின் முக்கியமான நூறு நாவல்களின் பட்டியலொன்று எவராலாவது தயாராகுமானால் ஜெயகாந்தனின் நாவல்கள் ஒன்று இரண்டு தவிர தேறுவது அரிதாகிவிடும். இந்த நிலை ஜெயகாந்தனது நாவல்களுக்கு மட்டுமல்ல, புதிதாகத் தோன்றியுள்ள பல நல்ல நாவல்கள் காரணமாய் பட்டியலிலிருக்கும் பல நாவல்களுக்கும் ஏற்பட நேரலாம்.

‘ஜெயகாந்தனின் படைப்புகள் உரத்தகுரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை, நேரடியாக விரித்துப்போடும் தன்மை கொண்டவை. ஆகவே கலைத்தன்மை குன்றியவையென்பது வலுவாக உள்ள கருத்து’ என ஜெயமோகன் கூறினும் அதை மறுத்து அவை மட்டுமே நாவலை உருவாக்குவதில்லை என்பார் அவர். இவையெல்லாம்தான் முற்போக்கு எழுத்தாளர்களின் நாவல்களைப் புறந்தள்ளுவதற்கு தமிழகத்து நவீன விமர்சகர்கள் சொல்லிய காரணங்கள். ஆனாலும் அதற்காகவே அன்றி எனது நிராகரிப்பு அவை காலத்தில் நின்று நிலைக்கக்கூடிய அறம் சார்ந்தவையாக இருக்கவில்லை என்பதுதான்.

ஆனாலும் இன்றும் அதே முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் இருக்கும் ‘ரி~pமூல’த்தை மூலமான ஒரு பாலியல் விஷயத்தைப் பேசிய நாவலென்ற வகையில் முக்கிமானதென்று துணிந்து சொல்லமுடியும்.
ராஜாராமனின் பிறப்பும் வளர்ப்பும் அவனது நடத்தைகளின் மாற்றமும் அந்நாவலில் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும். தன் தாயினதும் தந்தையினதும் தாம்பத்திய வாழ்வு சலனமெதனையும் அவனிடத்தில் ஏற்படுத்திவிடுவதில்லை. தாயின் அந்தரங்க அறையாகவும் பெற்றோரின் சயன அறையாகவும் இருக்கும் அந்த இடத்தில் என்ன அவ்வளவு மர்மமான வி~யம் இருக்கிறது என்பதை அறியும் ஆவலே சின்ன ராஜாராமனிடம் இருக்கிறது. இது பதின்ம வயதடையாத ஒரு சிறுவனின் சாதாரண ஆவல்தான். அவன் தன் ஆவலைப் பூர்த்தி செய்யவே தாய் குளிக்கச் சென்றிருந்த சமயத்தில் அந்த அறைக்குள் இருக்கும் வாசனைத் திரவியங்களையும் அழகான திரைச்சேலைகளையும் அழகானதும் மெதுமையானதுமான கட்டிலையும் பார்க்க உள்ளே நுழைகிறான். கட்டிலின் மெதுமையால் கூடுதலான நேரம் அங்கே தங்கநேர்ந்துவிடும் ராஜாராமன் தாய் குளித்துவிட்டு வரும் அரவத்தில் கட்டிலுக்கடியில் ஒளித்துக்கொள்கிறான். அங்கேதான் உள்ளே வந்த தாய் நிர்வாணமாகுவதை அவனுக்குப் பார்க்க நேர்கிறது. இது அவனில் குற்றவுணர்ச்சியைத் தூண்டுகிறது. பூஜைகளால் விரதங்களால் தன்னை ஒடுக்குகிறான்.
இது ஒரு சந்தர்ப்பம். இன்னொரு சந்தர்ப்பம் ராஜாராமன் மேற்படிப்பு படிக்க தந்தையின் கும்பகோணத்துச் சிநேகிதர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருந்தபோது நிகழ்கிறது. மகனாக நினைத்து வளர்க்கும் மாமியில் ராஜாராமன் பேரன்பு வைத்திருக்கிறான். அவளுடன் அவனுக்கு சரீரத் தொடர்பே ஏற்பட்டுவிடுகிறது. அவன் குழந்தை, ஒன்றுமறியாதவன் என்றே மாமி நினைக்கிறாள். அது ஒரு உயர்ந்த பக்குவம். வளர்ந்த பிள்ளை தாயில் பால் குடித்ததுபோல பெரிய அதிர்வை அது அவளிடத்தில் உண்டாக்குவதில்லை. ஆனால் ராஜாராமன் சிதைந்து போகிறான். தந்தை இறந்ததுகூடத் தெரியாதவனாக ரிஷியாக அலைகிறான்.
கதை இவ்வளவோடு முடிந்துவிடாது. ஆனாலும் பரவலான ஒரு குறை இதன்மீது சொல்லப்பட்டதுண்டு. அது, நாவல் பரவலான சமூகத்தைக் காட்டவில்லையென்பது. என்னைப் பொறுத்தவரை இது இரண்டு பிராமண குடும்பங்களையும் சில உதிரிப் பாத்திரங்களையும் கொண்ட நாவல்தான். ஆனாலும் சமூகமென்கிற நீரோட்டத்தில்தான் பிரக்ஞையோடோ பிரக்ஞையின்றியோ அந்தக் கதை மிதந்தபடி நகர்ந்திருக்க முடியும். அது கிரு~;ணராஜபுரத்து கதைபோல இலலாவிட்;டாலும், அது சமூகமும் பங்குகொண்ட கதைதான் என்றே எனக்குத் தெரிகிறது. இல்லாவிட்டால் டானியல் டீபோவின் ரொபின்சன் குருசோவின் கதையாக இது இருக்க நேர்ந்திருக்கும்.

இவ்வளவும் ஜெயகாந்தனின் நாவல்களைப்பற்றி சொன்னாலும் ஜெயகாந்தனது எழுத்து இவ்வளவு இல்லையென்பதையும் நான் சொல்லியாகவேண்டும்.

ஜெயகாந்தன் காலத்தில் அதே ஜனரஞ்சக எழுத்தாளராய் இருந்த நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் கருத்திலெடுப்பது ஒரு நல்ல ஒப்பீடாக இருக்கமுடியும். காவியத்துக்கான ஒரு உரைநடையை நா.பா. உபயோகித்தாரெனில், நாவலுக்கான ஒரு உரைநடையை உபயோகித்தது ஜெயகாந்தன்தான். அவரது முன்னிருபது ஆண்டுக்கால படைப்பில் இந்த எழுத்து நடை வன்மையாக இருந்தது என்பதும் எனது அபிப்பிராயம். எழுபதுக்களில் மிக கட்டுப்பெட்;டி நடையாக இருந்த தமிழ் உரைநடையை அதன் கண்ணிகள் கழரும்படி புதிய தளத்துக்கு இழுத்து உயர்த்தியது ஜெயகாந்தன்தான். இதுவே பின்வந்த பூமணி, பிரபஞ்சன், ராஜேந்திரசோழன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் பாதையை சரியானபடி வகுக்க முன்னோடியாகவும் இருந்திருக்கிறது. பின்வந்த இருபதாண்டுகளில் அவரது படைப்பின் ஆளுமை கர்ஜனையாக இருந்திருப்பினும் அது நாவலுக்கான மொழிநடையை வளப்படுத்தியது. நாவல் வளமாகாவிட்டாலும் நாவலுக்கான தமிழின் உரைநடை வளம்பெற்றது.

‘பாரிஸுக்கு போ’ 1966இல் வெளிவந்தது. ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம’ 1967இல் வெளிவந்தது. காலம் ஆக ஆக ஜெயகாந்தனின் படைப்புத்திறன் வாதமாகவும் தர்க்கமாகவும் சிதைந்துபோனது என்பதே மெய். இதற்கான காரணத்தை அவரது குறுநாவல்களை எடுத்து நோக்கினால் புரியும். அவரது ஏறக்குறைய முப்பத்தைந்து குறுநாவல்களுமே நாற்பத்தைந்து ஐம்பது பக்கங்களுக்கு உட்பட்டவை. ஒரு வார சஞ்சிகையில் நான்கு வாரங்களுக்கு வரும்படியான நீளமே அவை கொண்டிருந்தன. இருபத்தைந்து வாரங்களுக்கான ஒரு தொடர்கதையாகவே ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம’; ஆரம்பிக்கப்பட்டது. பின்னால்தான் அதன் வளர்ச்சி கருதி மேலும் பதினைந்து வாரங்களுக்கு நீட்ட ஆனந்தவிகடனின் அனுமதிபெற்றார் ஜெயகாந்தன். அதனாலேயே அது மற்றவைகளைவிட நாவல்தரம் கூடியிருப்பதற்கான காரணமாகவும் இருக்கலாம். அடக்கியிருந்தால் நாவலும் சிதைந்திருக்க வாய்ப்பாகியிருக்கும்.

ஆக தன் காலத்தில் மிக்க ஆளுமையான படைப்பாளியாக இருந்த ஜெயகாந்தனின் நாவல்கள் அறுபது எழுபதுகளுக்கிடையில் மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகித்ததென்றும், அவரது எழுத்துநடை ஒரு மாறுங்காலத்தின் தேவையாக இருந்து எழுபதுகளுக்குப் பின் வந்த நாவல்கள் சிறுகதைகளுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததென்றும்  அவர்பற்றிய ஒட்டுமொத்தமான கருத்தை முன்வைக்க முடியும்.

(முற்றும்)

(ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தில் 2015இல் நடைபெற்ற ஜெயகாந்தன் நினைவரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)


Wednesday, August 24, 2016

இறங்கி வந்த கடவுள்


(சிறுகதை)
இறங்கி வந்த கடவுள்


அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள். கனலை உடைய அவர் தன்னைக் கடவுளென்றார்.

கையில் கனலும், தலையில் சடாமுடியுமாய் இருந்த அவரது ரூபம் பலபேரை ஆகர்ஷம் கொண்டது. பக்தர்கள் பெருகிவந்தவேளையில் ஜனசமூகமும் தனக்கான தீயை கடைகோல்களில் கடைந்தெடுக்க கற்றுக்கொண்டிருந்தது. ஆனாலும் காலகாலமாய் தன் கையில் மூலக்கனலேந்தி வாழ்வாதாரம் தந்தவரை நன்றியோடும், அவரது வல்லமையில் பெரும் நம்பிக்கையோடும் பாடிப் பரவசப்பட்டு நின்றது அது.

ஒருநாள் உலகத்தின் மிகவுயரமான மலைச்சிகரத்தில் ஏறிய அந்தக் கடவுள் சூழவும் நோக்கினார். வேறு கடவுளெவரையும் அவரால் கண்டிருக்க முடியவில்லை. உடனே தானே முழுமுதற் கடவுளென பிரசித்தம் செய்தார்.

அவருக்கு நிறைய பக்த கோடிகள் இருந்தார்கள். வேண்டுபவர் வேண்டியதை ஈபவராக இருந்தாலும், பெரும்பாலும் அனைவரும் அவரையே வேண்டுபவர்களாக இருந்தார்கள். அது அந்தக் கடவுளுக்கு பேருவகையாக இருந்தது. அப்பேருவகையில் கனல்கொண்ட கையோடு அவர் நிருத்தம் செய்தார்.

அவரது தோற்றமே பரவசம் செய்ததில் காட்சியை யாசித்த பக்தர்கள் மிகவதிகமாக இருந்தார்கள்.  தரிசன இன்பத்தில் திளைக்க, வரக்கூடிய சிரமங்களையெல்லாம் தாங்கத் தயாராகி, மலைகளுக்கும், வனங்களுக்கும் சென்று சித்தமொடுங்கி தவமியற்ற பலபேர் முயன்றார்கள். கடவுள் அவர்களுக்கு அவரவர் தவத்தின் உறுதிப்பாட்டுக்கேற்ப தர்ஷன வரமளித்தார். அவர்கள் முனிவர்களெனப் பெயர் பெற்றார்கள்.
காலம் தன் கதியிலிருந்து உலகின்  இயக்கத்தை மாற்றியது.

தபசிகள் அருகினார்கள்.

அக்காலத்தில் சிலர் வனங்களுக்கும், மலை முழைஞ்சில்களுக்கும் சென்று உலக இயக்கத்தின் மூலம் தெரிந்து சித்தம் தெளிந்தனர். அவர்களைச் சித்தர்கள் என்றார்கள்.

காலப்போக்கில் சித்தர்களும் அருகினர்.

அப்போது காலம் உலகத்தின் இயக்க வேகத்தை இன்னுமின்னுமாய் வெகுப்பித்திருந்தது.

கடவுள் அப்போது பக்தர்களும் அருகியிருப்பதைக் கண்டார்.
கடவுளுக்காக பக்தர்களே தவிர, பக்தர்களுக்காக கடவுள் இல்லையே! கடவுள் ஏதும் நினையாமலிருந்தார்.

உலகம் இன்னும் பேரியக்கம் பெற்றது.

இப்போது கடவுள் ஐயமுறலானார், வேறு கடவுளரும் உளரோவென. அவர்கள் பக்தரை நாடிச்சென்று வரமளிப்பவர்களாய் இருந்தார்களென்பதை பக்தர்கள் சொல்ல அறிந்தார். ஜனசமூகம் கடவுளிடம் யாசித்துப் பெற்ற காலம்போய், காணிக்கை கொடுத்து சௌக்கியங்ளும், சௌபாக்கியங்களும் பெறும் நவீன உலகம் தோன்றியிருப்பதையும் அவர்கள் அவருக்குச் சொன்னார்கள்.

கடவுள் மலையிலிருந்து இவை காண இறங்கி வந்தார்.

சிலர் காணிக்கைகளின்மூலம் நோய்களிலிருந்து தவிர்ந்துகொண்டிருப்பதைக் கடவுள் கண்டார். அவர்களெல்லாம் பல வர்ணங்களில் கையிலும், கழுத்திலும் அவர்போல் பாம்புகளைக் கட்டியிருந்தார்கள். பாம்புகளின் நிறங்கள் அவர்களின் கடவுளர் யாரென்று அடையாளப்படுத்துவனவாய் இருந்தன.

கடவுளுக்கு அது புதுமையாகவிருந்தது.

எந்தப் பக்தனும் அந்தளவு வலிமையுள்ள வரத்தினை தன்னிடமிருந்து பெற்றிருக்காத நிலையில், எவ்வாறு செல்வ வளம் பெருகவும்,  பிணியற்று வாழவுமான ஆசீர்வாதத்தை அளிக்க  அவர்களால் முடிகிறதென்று முழுமுதல் கடவுள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டார்.
அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தன்னைவிட மிகுந்த காட்சிப் பரவசத்தை தம் பக்தர்களுக்கு அளிக்கக்கூடியவர்களாய் இருந்தார்களென்று. அவர் கோலம் அப்போது அவருக்கே பிடித்திருக்கவில்லை.

நிறைந்த பக்தர்கள் சூழ்ந்து நிற்க, அதியற்புதங்கள் நிகழ்த்தும் ஒருவரை நெருங்கி மறைந்துநின்று முழுமுதல் கடவுள் பார்த்தார். அவர்கள் வரங்களை தம்முள் ஊற்றுக்கொண்டு கடவுளர்களாயே இருப்பது தெரிந்தார் முழுமுதல் கடவுள்.

அப்படியானால் தன்போல் வேறு கடவுளர் உண்டென்பதை அவர் நிச்சயப்பட்டார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரியவந்தது, தான் தன்னை முழுமுதல் கடவுளென அறிவித்ததுபோல், அவர்கள் தம்மை கடவுளராகவும் அறிவிக்கவில்லையென்பதை.

கடவுளுக்குக் குழப்பமாகவிருந்தது.

இனி கேட்காமல் ஒன்றுமாகாதென எண்ணி, தம் கடவுளுரு மறைத்து வேறுருத் தாங்கி, அங்கே பணிசெய்யும்  ஊழியர் ஒருவரை அணுகி, அவ்வாறு அருள்பாலிக்கும் அந்தக் கடவுள் யாரெனக் கேட்டார்.
ஊழியர் அக்கம்பக்கம் பார்த்தார். வேறுருத் தாங்கிய கடவுளின் காதோடு நெருங்கிச் சொன்னார், ‘யாருக்கும் சொல்லிவிடாதீர். அவர் கடவுளல்ல, சாத்தான்’ என்று.

கடவுள் சாத்தானை அதுவரை அறியாதிருந்தார். ஊழியர் சாத்தானென்று சொன்னதை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
‘பேயா?’ என்று கேட்டார்.

‘பேயையும் சொல்லலாம்.’

‘பூதத்தை?’

‘அதையும் சொல்லலாம்.’

‘ஆயினும் உண்மையான சாத்தான்தான் யார்?’

‘சாத்தான் கடவுளைப்போலவே.’

‘என்ன சொல்கிறீர்?’

‘அவரும் அநாதியானவர். எங்குமுள்ளவர். எல்லாம் அறிபவர். எல்லாம் வல்லவர்.’

‘கடவுளுக்கு நிகரானவரோ?’

‘சந்தேகமில்லாமல்.’

‘கடவுளும் சாத்தானும் ஒரே தன்மைத்தவர் என்கிறீரா?’

‘இல்லை. கடவுள் நல்லவர்க்கு அருள்பாலிக்கிறார். சாத்தான் அல்லாதவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.’

‘ஏன் அவ்வாறு?’

‘ஏனெனில், கடவுளின் இன்னொரு புறமே சாத்தான். ஆனாலும் அவர் கடவுளோடு மாறுபட்டிருக்கிறார். கடவுள் யாரை விரும்புகிறாரோ, கடவுளை யார் விரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் சாத்தான் திரஸ்காரம் பண்ணுகிறார். கடவுளுக்கெதிரான யுத்தத்தையே சாத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறார். கடவுளின் கட்டளைக்குப் புறம்பாக நடப்பவர்கள்  செல்வர்களாகவும், வல்லவர்களாகவும் ஆவது ஏனென்று நினைக்கிறீர்? அதனால்தான்.’

‘இது எப்போது மாறும்?’

‘காலம் மாறும்போது. அதோ புரியமுடியாத வேகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே காலக்குரல், அது அவசரமறும்போது புரிவதாய் அதனொலி இழையும். அப்போது எல்லாம் மாறும்.’

‘இந்த லோகத்தின் அவசரமே எல்லாவற்றிற்கும் காரணமென்கிறீர்?’

‘ஆம்.’

‘மாயையல்ல?’

‘மாயையிலிருந்து தோன்றியதே அவசரம்.’

‘அதுசரி, இந்த விஷயம் முழுமுதல் கடவுளுக்குத் தெரியாதா?’

‘தெரியாது. ஏனெனில்  அவர் பெரும்பாலும் மலையைவிட்டு இறங்கி வருவதேயில்லை.’

‘எல்லாம் தெரிந்திருந்திருக்கிறீர். பூலோகத்தில் பல கடவுள்கள்?’ 

‘அப்படித்தான். மேற்கே தேவன் இருக்கிறார்…’

‘இங்கே மகாதேவன்.’

‘இடையிலே அல்லாஹ் இருக்கிறார்.’

‘எல்லோரும் ஒன்றையே சொல்கிறார்கள்?’

‘ஆம். அன்பையே சொல்கிறார்கள். ஒரு கடவுள் பல்வேறு நாமாவளிகளிலிருந்து அந்த அன்பைச் சொல்லவில்லை. பல்வேறு கடவுள்களும் அன்பு என்ற அந்த ஒற்றை நாமாவளியையே உச்சரிக்கிறார்கள்.’

‘ம்…’ என்று முனகிய கடவுள், தான் அவர்கள்போல் அந்த அன்பை அழுத்தினோனா என்று ஒருமுறை யோசித்தார். பின், ‘நீர் யார்?’ என்றார்.
‘போம்… போம்…!’

‘சும்மா சொல்லும். சொல்வதில் என்ன இருக்கிறது?’

‘சஞ்சாரி. லோக சஞ்சாரி. நாளை நான் இங்கே இருக்கமாட்டேன்’ என்றுவிட்டு ஊழியர் அப்புறமாய் நகர்ந்து மறைந்தார்.

கடவுளுக்கு அது வித்தியாசமான உரைப்பாக இருந்தது. ஆனாலும் அதை சரியென்று புரிந்தார்.

தன்னைவிடவும் சரிகள் பல தெரிந்தவர்களின் தளத்திலிருந்துகொண்டு முழுமுதல் கடவுள் நிமிர்ந்து மலையைப் பார்த்தார்.

அவர் மறுபடி மலைமேல் ஏறவில்லை.
000


 மலைகள்.காம், ஆனி 2016 

Tuesday, July 12, 2016

காற்றின் தீராத பக்கங்கள்:


கருமையத்தின் அழகிய நிகழ்வு கருமையத்தின் நான்காவது அரங்காடல் நிகழ்வு இம்மாதம் ( மே, 2008 ) 24 ஆம் மற்றும் 25 ஆம் தேதிகளில் யோர்க் வுட் தியேட்டரில் நடந்தேறியிருக்கிறது. ஒரு சூறைத்தனம் நிறைந்ததாய் குளிர் கொட்டி முடிந்த பனிக்காலத்தின் பின் வழக்கமாய் அரங்கேறும் நாடக அளிக்கைகளில் இவ்வாண்டு முதலாவதாக பார்வையாளர்களை ஒன்றுகூட வைத்தது இது.

‘வானவில்லின் விளிம்பில்’, ‘காற்றின் தீராத பக்கங்கள்’, ‘நத்தையும் ஆமையும்’ ஆகிய மூன்று நிகழ்வுகள் இதே அளிக்கை முறையில் வழங்கப்பட்டன. முந்தைய மூன்று ஆண்டுகளில் மிகவும் வலுக் குறைந்த பிரதிகளுடனும், பேசக்கூடிய விதமாக அமையாத தொழில்சார் திறமைகளுடனும் அரங்கம் வந்த பெண்கள் பட்டறையினர், இவ்வாண்டு ஒரு நல்ல பிரதியுடனும் கூடுதலான அரங்க திறமைகளுடனும் தம்மை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அமெரிக்க கறுப்பினப் பெண்களின் வாழ்வியல் நிலைமையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்ததாகவும், எழுச்சி கொண்டதாகவும் அமைந்த நாடகம்தான் ‘For  Cloured  Girls Who have Considered Suicide\ When the Rainbow is Enuf. 1974 இல் இது அமெரிக்கா பிராட்வேயில் மேடையேற்றப்பட்டபொழுதே மிகவும் பேசப்பட்ட அரங்காடலாக இருந்தது. வாழ்வின் கொடூரங்களுக்கும், பாலியல் வன்செயல்களுக்கும் ஆளான கறுப்பினப் பெண்களின் உள உடல் வலிகளைப் பகிரங்கமாகக் பேசிக்கொண்டு வந்திருந்தது  Ntozake Shange இன் பா நாடகப் பிரதிவகை சார்ந்த இந்நாடகம்.

முடிந்தவரை பிரதியை உணர்ந்து, மேடையில் பெண்கள் பட்டறையினர் கதாபாத்திரங்களாகவே அவதாரம் எடுத்திருந்தனர் என்பது மிகையான கூற்றல்ல. துளசி மனோகரன், புஸ்பா திலீபன், கீர்த்தனா, தனா பாபு, சத்தியா, நந்தினி ஆகியோர் கச்சிதம் என்கிற எல்லைவரை வந்திருந்தனர். இருமொழி சார்ந்த வெளிப்பாட்டு உத்தி, தமிழ்ச் சமூகத்தை உணர்ந்து அவர்கள் எடுத்த சரியான பயணம். தற்கொலைகள் மலிந்திருக்கும் தமிழ்ப் பெண் சமூகத்தில் சமூக அக்கறையான இவ்வளிக்கை அவர்களுக்காகவே சமர்ப்பணமானது கூடுதல் பொருத்தம். கருத்தின் இரு மொழி வெளிப்பாட்டினால் காலவிரயம் என்ற அம்சத்தினை இந்த விஷயத்தில் கணக்கிலெடுக்காது விடுதல் விவேகம்.

‘காற்றின் தீராத பக்கங்க’ளே அடுத்த நிகழ்வாக அளிக்கப்பட்டதெனினும், மொழிபெயர்ப்புச் சார்ந்த பிரதியென்ற வகையில் ‘நத்தையும் ஆமையும்’ என்ற முழுநீள நாடகத்தைச் சொல்லவேண்டும். Eugene ionesco வின் ‘Frenzy For Two or More’ என்ற நாடகம் இதற்காக எடுக்கப்பட்டிருந்தது. இப் படைப்பு உண்மையில் மகா பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இப் பிரதியின் முழுமுற்றுமான தெளிவும், அரங்க வரலாறும், பிரான்சிய அல்லது ருமேனிய நாடகவாக்க முயற்சிகளும், நவீனத்துவ நாடக உலகின் போக்குகளும், அவற்றின் விளைவுகளும் அறியாமல் இப் பிரதியைத் தயாரிப்புக்காக எடுப்பது சறுக்கல்களை விளைவிக்கக் கூடியது. அதேவேளை இதன் நெறியாள்கை அதேயளவுக்கு கைபறிந்துவிடக்கூடிய சிக்கல்தன்மை கொண்டதாகவுமிருக்கும். அபத்த நாடக வகை சார்ந்த நாடகவாக்கத்துக்கு பிரெக்டுடனும், சாமுவெல் பெக்கெற்றுடனும் ஒப்பவைத்து நோக்கப்படுபவர் யூஜின் அயனெஸ்கோ. அவ்வாறான ஒரு நாடகப் பிரதியாக்ககாரரின் பிரதியை எழுந்தமானத்தில் மேடையேற்றத் துணிவது அறிவார்ந்த அம்சம் சேர்ந்ததாகாது.

ஜோர்ஜ் சந்திரசேகரனின் மொழியாக்கத்தில் 1993 இல் கொழும்பில் நடைபெற்ற நாடக விழாவில் இந்த நாடகம் ஏற்கனவே நடிக்கப்பெற்றுள்ளது. ஆணும் பெண்ணுமான மூன்று ஜோடிகளின் கதையாடலாக மூலப்பிரதியில் விரியும் கதையமைப்பு, தமிழ் நாடகப் பிரதியில் இரு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளியிடப்பெற்ற கதையாடலாக முடிவடைந்தது.
இந்த மூன்று ஜோடிகளின் அளிக்கையை ஒற்றை ஜோடியின் அளிக்கையாக மாற்றுவதிலுள்ள சிக்கல், கொழும்பில் மேடையேறிய தமிழ் நாடகத்தில் நேரக் கட்டுப்பாட்டு உத்தியால் சரிசெய்யப்பட்டிருந்தது. நாற்பத்தைந்து நிமிட நேரமே எடுத்திருந்தது. யோர்க் வுட் தியேட்டரில் பார்வையாளரின் சோதனையாக அமைந்துவிட்டது நேரக் கட்டுப்பாடின்மை. அளவுக்கு மீறிய மந்தகதியில் நகர்ந்து திரும்பத் திரும்ப ஒரே காட்சிகளும் வார்த்தையாடல்களும் வருவதான மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நாடகம்.
ஆயினும் ஒரு கனதியான பிரதியைத் தயாரிப்புக்காக எடுத்துக்கொண்டமைக்காக கருமையத்தைப் பாராட்டலாம். நெறியாள்கையின்போது நேர இழுவையைக் குறைக்கும் முகமாக நடனதும் நடிகையினதும் உணர்வுப் புலப்பாட்டு மய்யத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் ரசனை கிட்டியிருக்க முடியும்.
மேடையில் பாத்திரங்கள் இரண்டும் இருபக்க தூர எல்லைகளுக்கும் சென்றுவிட்டிருந்தன. உரையாடல்களைப் பார்வையாளன் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும் அவஸ்தை இருந்தது. இவையெல்லாம் ஒரு மேடையளிக்கையின்போது தீவிர கவனமெடுத்து அமைவாக்கப்படவேண்டிய விஷயங்கள். மேலும் ஒரே சீரான நாடகப் போக்கினை ஒளியமைப்பினால் மாற்றியமைக்கக் கூடிய உபாயம் இருக்கிறது. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.

நகைச்சுவை புலப்பட்ட அளவுக்கு அபத்த நாடகவகையான இதில், காட்டப்பட்டிருக்கவேண்டிய உருவகம் காணாமல் போயிருந்தது. போரின் வெறியும், மனித இனத்தின் அசமந்தத்தனமும் தூக்கலாக இன்னும் தெரிந்திருக்கவேண்டும்.

இங்கே சுட்டப்பெற்றவை ஒரு உன்னதமான அளிக்கையாக இது ஆகாமற்போனமைக்கான காரணங்கள்தான். எனது கரிசனையும் அதுதான்.
மேலே இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளுமே மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் சார்ந்தவை. தமிழில் நிலவும் பிரதி வறுமையை இவை இன்னும் இன்னுமாய்ச் சுட்டிநிற்கின்றன.

முழுநேரக் கலையாக கனடாத் தமிழ்நாடக உலகம் இன்னும் விரியவில்லை. அது இனிமேல் எப்போதாவது விரியுமென்ற எந்த எதிர்பார்ப்புக்கும்கூட எந்தச் சூசகமும் இல்லை. ஒரு சுழியில் அகப்பட்டு கலைஞர்களும், இன்னும் பல கலா திறமையுள்ளவர்களும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவரை தீவிர நாடக உலகம், பிரதி வறுமைபோலவே திறமை வறுமையடைந்தும்தான் கிடக்கப்போகிறது. அப்படி ஆகக்கூடாதென்ற விருப்பம் இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இங்கில்லை. ஊர்ந்து செல்லும் உயிரினமான கறையான், இறக்கை முளைத்துப் பறந்து செல்வதை மழைக்கால இரவுகளில் கண்டதுபோல் அபூர்வமாய் எதுவும் நடக்கக்கூடாதா என்று மனம் அவாவுகிறது.

கனதியாகவும் அதே நேரத்தில் ரசனையோடும் சிந்திப்புக்குரிய விஷயங்களோடும் அளிக்கையானது ‘காற்றின் தீராத பக்கங்க’ளென்ற கவிதை நிகழ்வு. கவிதைகளின் தேர்வும், கவிதைப் புலப்பாட்டுக்கான காட்சியமைப்பும், பாத்திரங்கள் கவிதையின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்பட்டதும் இந்நிகழ்வை முதன்மை நிகழ்வாக ஆக்கியிருந்தன. குழந்தைகளின் உலகமும், அது சூறையாடப்படும் தருணங்களில் எழும் அவலமும் மனத்தைப் பாதிக்கும்படி பதிவாக்கியிருந்தமை குறிப்பிடப்படவேண்டும். ஆரண்யா பாபு இதில் பிரகாசித்தார் எனச் சொல்லுமளவுக்கு அவரது புலப்பாட்டுப் புரிகை இருந்தது.
கவிதைகளை உச்சபட்ச உணர்வுகளின் வெளிப்பாட்டுத் திறமையுடன் காட்சிப்படுத்த செழியனால் முடிந்தமை வியப்புக்குரியதல்ல. அவரது கவிதைகளே ஆளுமை மிக்கவை. அறங்களின் சரிவில் துயரத்தின் இசைப்பு இவரது கவிதா பொருள். பெரும்பாலான கவிதைகளிலும்.
மொத்தத்தில் கருமையம் அதிகமாக ஏமாற்றிவிடவில்லை இம்முறையும்.

 ( வைகாசி 30, 2008)

000


Wednesday, June 15, 2016

தேவகாந்தன்நேர்காணல்- மூன்றாம் பகுதி


தேவகாந்தன்நேர்காணல்
நேர்கண்டவர்: பதிவுகள் இணைய தளத்துக்காக வ.ந.கிரிதரன்
  மூன்றாம் பகுதி


1.பதிவுகள்:
அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்'.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான்ஒரு கூர்வாளின் நிழலில்நூல் வெளியீட்டுவிழா  (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.

ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்ததுநீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.

இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.

இந்நூல்பற்றி சொல்லப்பட்ட பல்வேறு குறைபாடுகளும் இந்த விதிக்குள் அடங்கியிருக்கவில்லை என்றே தெரிகிறது.  எழுந்தமானத்தில் குறைகள் சொல்லப்பட்டிருந்தன.
என்னளவில் அந்த நூல் உண்மையைக் கூறியுள்ளதா என்பதே முதன்மையான அக்கறையாக இருக்கிறது. கூறியுள்ள முறையிலும் அதே அவதானம் எனக்கு உண்டு. இந்த இரண்டு விஷயங்களிலும் தேறியதாகவே தமிழினியின் இந்த நூலை நான் கொள்கிறேன்.
சென்ற ஆண்டு இறுதியில்  வன்னிப் பகுதியில் ஏறக்குறைய ஒரு அநாமனாகவே நான் அலைந்த ஒரு மாதத்துக்கும் மேலான காலப் பகுதியில் நான் கேட்டு, விசாரித்து அறிந்த உண்மைகளை, ‘ஒரு கூர்வாளின் நிழலில்’  ஒரு தடாலடியாக வெளியிட்டிருந்தது என்பதே அதை வாசித்து முடித்த மறுகணத்தில் என்னில் தோன்றிய அபிப்பிராயமாக இருந்தது

நூலின் உணர்வோட்டத்திலிருந்த மாறுபாடு இடைச் செருகலால் ஏற்பட்டதென்று கூறப்பட்டதை நிச்சயமாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்தமிழினி எழுதிய கவிதைகள், சிறுகதைகள் சிலவற்றை வாசித்து அவை வெளிவந்த காலத்தில் நான் வியந்திருக்கிறேன். தமிழினியின் கவிதையொன்று முகநூல் பக்கத்தில் வெளியானபோது அதன் சிறப்புக் குறித்து பின்னூட்டமிட்டேன். ‘போருக்குப் புதல்வரைத் தந்த...’ என்று அந்தக் கவிதை தொடங்கியிருக்கும். ‘அம்பகாமம் காட்டில்...’ என்று தலைப்பிட்டு பதிவுகள் இணையதளத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன். அப்பின்னூடடத்திற்கான  மறுமொழியைப் பெற்றபோதுகூட அந்தத் தமிழினிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த தமிழினியென நான் அறிந்திருக்கவில்லை. தமிழினியின் இலக்கிய நடையை அறிந்திருந்த எனக்கு நூலின் இடைச்செருகல் தவறியிருக்கவே முடியாதுமேலும் உணர்வுப் பிரிநிலையின் காரணம்கூட, தமிழினத்தின் பாதுகாப்பென்று நம்பியிருந்த ஓரிடம் அவ்வாறில்லாமலாகிய ஒரு தார்மீகக் கோபத்திலும் ஏற்படமுடியும்.

மேலும் நூலின் முக்கியத்துவம் எங்கே இருக்கிறதென்றால்புலம்பெயர் களத்திலிருந்து அண்மையில் வெளிவந்த நாவல்கள் பலவும்ஏன் எங்களுக்கு இவ்வாறு ஒரு தோல்வி ஏற்பட்டதென்ற அதிர்வையும், ‘எப்படி ஏற்பட்டதென்ற  மலைப்பையும் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில், அதன் காரணங்களை முழுமையுமாக இல்லாவிட்டாலும் மிகத் தெளிவாக தமிழினியின் நூல் வெளியிட்டு இருந்ததிலேயே ஆகும். இது பெரிய அதிர்வுகளை என்னில் நிச்சயமாக ஏற்படுத்தவில்லை. காரணம், இந்த உண்மைகளை கள ஆய்வில் நான் கண்டடைந்திருந்தேன் என்பதோடு, வேறுபிற நூல்களிலும் புலிகளின் தோல்விக்கான காரணங்கள் இவ்வாறே விளக்கப்பட்டிருந்தன என்பதை முக்கியமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

புனைவு நூல்களினால்கூட காட்டியிருக்க முடியாத யதார்த்தத்தை தமிழினியின் நூல் காட்டியிருக்கிறதுஉணர்வுரீதியான கால்விலங்குகள் இன்னுமிருந்து அவ்வாறு செய்யவிடாது புனைவுப் படைப்பாளிகளைத் தடுத்திருக்க முடியும்.
ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம்என்ற சி.புஸ்பராசாவினதோ, ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்என்ற கணேசன் ஐயரினதோ, ‘மழையைத் தராத வானம்என்ற பால நடராச ஐயரினதோ,  ‘நான் நடந்து வந்த பாதைஎன்ற பொன்னுத்துரையினதோ நூல்கள் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால நடைமுறைத் தவறுகளை தெளிவாகவே வெளியிட்டிருக்கின்றன. சம்பவங்களின் உண்மை-பொய் பற்றி இங்கே நான் அலச வரவில்லை. அவைபோன்றதே தமிழினியினுடைய வெளிப்படுத்துகையும் இருந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். இதிலுள்ள முக்கியத்துவம் என்னவெனில் ஈழப் போராட்டத்தின் இறுதிவரை யுத்த களத்தில் நின்றிருந்தவரின் நூலாக இது இருக்கின்றதென்பதே ஆகும்.

இதுபோல இயக்கத்தில் நேரடியாகத் தொடர்பற்று தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றிய .மாலதி  எழுதியஎனது நாட்டில் ஒரு துளி நேரம்என்ற நூலும் இறுதி யுத்தத்தையும், அதன் பின் சிறிது காலத்துக்குமான நிகழ்வுகளையும் விளக்குகின்றதுஅது சில உண்மைகளை பூடகமாக வெளியிட்டிருந்த நேரத்தில், தமிழினியின் நூல் அவற்றை வெளிவெளியாகச் சொல்லியிருந்தது என்பதைத்தான் இவற்றிற்கிடையேயான பெரிய வித்தியாசமாக நான் பார்க்கிறேன். .மாலதியிடத்தில் நிகழ்வுகளை ஒரு ஆய்வு நிலைப்பட்டு வெளியிட்ட தன்மை காணப்பட்டதெனில், தமிழினியிடத்தில் போராட்ட காலத்தின் மொத்த நிகழ்வுகளிலிருந்தும் தன்னை விலக்கி நின்றுகொண்டு புலிகளின் பிழைகளிலும் தவறுகளிலும் காட்டிய கோபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்னுமொன்று. இந்த இடத்தில் தமிழ்க்கவியின்ஊழிக் காலம்நாவலையும் என்னால் நினைத்துக்கொள்ள முடிகிறது. அது இறுதி யுத்த காலத்தின் இறுதிநாள் சம்பவங்கள்வரை மக்கள் பட்ட அவலங்களைத் தொகுத்துத்தந்த நூல் மட்டும்தான். அதை ஒரு அனுபவப் பகிர்வு நூலாக அடையாளப்படுத்தியிருந்தாலோ, வடிவமைத்திருந்தாலோ தமிழினியின்ஒரு கூர்வாளின் நிழலில்வெளிவந்தபோது இவ்வளவு உக்கிரமாய்த் தெரிந்திராது என்றே நினைக்கிறேன்.  மட்டுமல்ல, ‘ஊழிக் கால’மே ஒரு முக்கியமான நூலாகவும் பேசப்பட்டிருக்கும். இவைபோல இன்னும் பல அனுபவப் பகிர்வுகள் வெளிவர வேண்டும். பல பார்வைகளினூடாக வெளிவர வேண்டும். உண்மையை அவ்வளவு சுலபத்தில் யாரும் அடக்கி வைத்துவிடமுடியாது. தேடலில் உள்ளவர்களுக்கு அப்போது அந்த உண்மை அகப்படப் போகிறது. அது வரலாறெழுதியலுக்கும்  மிக அவசியமான பங்களிப்பாக இருக்கும்.


2. பதிவுகள்: விம்பம் அமைப்பினரின் சார்பில் 2015 அக்டோபர் 10ம் தேதி லண்டனில் நிகழ்ந்த மூன்று நாவல்களின் அறிமுகம்-வெளியீடு-கருத்தாடல் நிகழ்வில்கனவுச் சிறையோடு  ‘விடமேறிய கனவு’  மற்றும்லண்டன்காரர்’  நூல்களும் இடம்பெற்றன. ‘லண்டன்காரர்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ‘விடமேறிய கனவுநாவலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தேவகாந்தன்: ‘லண்டன்காரர்ஒருவகையில் மரபார்ந்த தமிழ் நாவல்களின் போக்குகளையெல்லாம் உடைத்துக்கொண்டு தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்திய நூல். அதன் கட்டமைப்பும், நடையும் எனக்குப் பிடித்தே இருந்தன. ‘விடமேறிய கனவுஇறுதி யுத்தத்தின் பின்னாக கைதுசெய்யப்பட்டவர்களின் தடுப்பு முகாம் வாழ்க்கை நிலைமைகளையும், சிலர் அங்கிருந்து எவ்வாறு வெளியேறித் தப்பினார்கள் என்பதையும் தெரிவிக்கின்ற நூலாக இருந்தது. ‘நஞ்சுண்ட காட்டினளவுகூட   இந்நாவலில் கலையம்சம் காணப்படவில்லை. அதில் வரும் அக்கா பாத்திரம் முக்கியமானவொரு படைப்பு. ஆனால் ‘விடமேறிய கனவு’ வெறும் விபரங்களின் தொகுப்பாக  சுருங்கிக் கிடந்தது. மிகவும் தெளிவான நடையும், நிகழ்வுகளின் மேலாக விரிந்த பார்வையும் குணா கவியழகனுக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஒரு நிகழ்வின் முன்-பின் கண்ணிகளை நாவலோடு இணைக்க அவரால் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுகிறது. முகாம் கட்டிடத்துக்கு வெளியிலான ரஹீமின் பாலுறவு சார்ந்த நடத்தைகள், நாவலில் இயல்பாக இணையும் விதமாய் குணா கவியழகனால் புனைவுபெற்றிருப்பதை இங்கே சொல்லலாம்.

3.பதிவுகள்: நீங்கள் தொடர்ச்சியாக பல்வகையான இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். கனடாவில் வெளியாகும் ஊடகங்களில் தொடர்கள் எழுதி வருகின்றீர்கள். தொடர்ச்சியாக நாவல்களை எழுதி வருகின்றீர்கள். இவை தவிரகூர்’ கலை இலக்கிய மலரை ஆண்டுதோறும் வெளியிட்டு வந்திருக்கின்றீர்கள்.  அண்மையில் தமிழகத்தில் உங்கள் புதிய நாவலும் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியாகியுள்ளது. ஓரளவு இடையீடற்ற எழுத்து முயற்சிகள் உங்களிடம் இருப்பதாகச் சொல்லலாம். இந்த நிலையில் உங்கள் வாசிப்பு எவ்வாறு தொடர்ந்து செல்கிறது?

தேவகாந்தன்: எப்போதும் எழுத்து முயற்சியின்போது வாசிப்பை நான் மேற்கொள்வதில்லை. படைப்புக் கணமும், வாசிப்பு நிலைமையும் வேறுவேறானவை. இந்த இரண்டு நிலைமைகளுக்குள்ளும் மாறிமாறிக் கூடுபாயும் திறமை எனக்கில்லை. என் தேர்வுகளும் வாசிப்புகளும் வித்தியாசமானவை. காத்திரமான நாவல்களை ஒரு தடவைக்கு மேலேயும் நான் வாசித்திருக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரத்தை மூன்று தடவைகள் வாசித்தேன். அதுபோல் ரசனைக்காக வாசித்தவைகளும் உண்டு. யூமா வாசுகியின்ரத்த உறவுஅந்தவகையானது. மொழிபெயர்ப்பு நூல்களை எடுத்துக்கொண்டால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வந்த ஓரன் பாமுக்கின்இஸ்தான்புல்’, யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் வந்த .வி.விஜயனின்கசாக்கின் கதைஇரண்டும் அண்மையில் வாசித்தனவற்றுள் மிக முக்கியமானவை. இந்த நூல்களின் வாசிப்புப் பரவசம் தணிந்து தவிர வேறு எந்த நூலுக்குள்ளும் புகுந்துவிட முடியாதளவு தீவிரம் கொண்டவை அவை. அவ்வாறான நூல்களை வாசிக்கும்போது புனைவெழுத்தில் கவனம் செலுத்தமுடியாது. புனைவெழுத்தில் கவனம் குவித்திருக்கும்போது அவ்வாறான நூல்களை வாசித்துவிட முடியாது. வாசிப்பு படைப்பு இரண்டுமே எனக்கு முக்கியமானவை. ஒன்றை விட்டுத்தான் ஒன்றினுள் நான் நுழைகிறேனென்றாலும், ஒன்றின் அவசம் தீர்ந்தவுடன் மற்றதனுள் ஓடிவந்து மறுபடி நுழைந்துவிடுகிறேன் என்பது பெரிய சங்கதியல்லாவா?

4.பதிவுகள்: நல்லது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் நிறைய ஆக்கங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக உலக இலக்கியங்கள் பலவற்றின் தரமான மொழிபெயர்ப்புகளும் வெளியாவதைப்பார்க்கின்றோம். இவ்விதமானதொரு சூழலில் எவ்விதம் படைப்புகளை உங்கள் வாசிப்புக்காகத்தேர்வு செய்கின்றீர்கள்? அவ்விதம் தேர்வு செய்யப்படும் படைப்புகளை எவ்விதம் வாசிப்பீர்கள்? சிலர் மேலோட்டமாக வாசிப்பார்கள். இன்னும் சிலரோ ஆறுதலாக வரிகளைத் தவிர்த்து விடாமல் வாசிப்பார்கள். நீங்கள் எவ்விதம்  வாசிப்பீர்கள்? உங்கள் வாசிப்பின் பழக்கம் எப்படி? தேர்வு எப்படி? மிக விரைவாக வாசிப்பீர்களா?

தேவகாந்தன்: நான் எவ்வாறு வாசிக்கவேண்டுமென்பதை அந்தந்த நூல்களே தீர்மானிக்கின்றன. அட்டைப் படத்தையும், பின்னட்டையின் குறிப்புகளையும், அந்நூலின் மதிப்புரையையும் பார்த்துவிட்டு நூலை விமர்சனம் செய்கிற அல்லது அபிப்பிராயம் சொல்கிறவர்கள் தமிழ்ப் பரப்பில் அதிகம். ஆனால் என் இயல்பின் வேகத்தில் வாசிக்காத எதுபற்றியும் நான் கருத்துச் சொன்னதில்லை. சொல்லாமல் விட்டவையெல்லாம் வாசிக்கப்படாதவை என்றும் அர்த்தமில்லை. படித்தேன், பிடிக்கவில்லை, விட்டுவிட்டேன். அவ்வளவுதான்.

என் தேர்வில் வரும் நூல்களை ரமணிசந்திரன் அல்லது பட்டுக்கோட்டை பிரபாகர் அல்லது ராஜேஸ்குமார் வகையறாக்களின்  கணக்கில் வாசித்துவிட முடியாது. அவை தம்முள் நுழைவதற்கே சில அடிப்படைத் தகைமைகளை வாசகனிடமிருந்து கோரிநிற்பவை. ஆழ்ந்த வாசிப்பனுபவம் இல்லாவிட்டால் அதன் முன்படிகளைக் கடப்பதுகூட அரிதாகவே இருக்கும். கற்களில் இடறிவிடாது நடப்பதுபோல சொற்களில் இடறிவிடாத அவதானம் அங்கே அவசியம். அவதானமாக வாசிப்புள் புகுகின்றபோதுதான் அதன் சுகத்தையே அனுபவிக்க வாசகனால் முடியும். வெகுஜன எழுத்தில் வரும் நல்ல நாவல்களின், உதாரணமாக ஜெகசிற்பியன், பாலகுமாரன் போன்றோரது நூல்களின் வாசிப்பை, ஒரு குதிரையிலேறி ஒரு வட்டம் சுற்றிவந்து சூழலைப் பார்ப்பதுபோன்ற பயண அனுபவத்தைக் கொடுப்பவையெனக் கொள்ளலாம். ஏறிவிட்டால் ஓட்டம்தான். கிர்ரென்று இருக்கும். முடிவு வந்துவிடும். வெறுமை எஞ்சிநிற்கும். காலம் விரயமாகிநின்று கதறும்.

இலக்கிய நூல்களின் வாசிப்பென்பது யானையிலேறி பயணம் செய்வது போன்றது. கோணங்கியின் பிரதி யானையெனில் அது பயணி ஏறுவதற்கு எந்த வகையிலும்கூட பணிந்துகொடுத்துவிடாமலே நிற்கும். ஏற முடிந்த பயணி ஏறிக்கொள்ள வேண்டியதுதான். முயன்றுதான் ஏறவேண்டும். ஏறினால்தான் பயணம் சுகம் செய்யும். ஒரு யானையின் பிரமாண்டத்திலேறி சூழல் பார்த்த இன்பமாயிருக்கும் அது. பாழி, போன்ற கோணங்கியின் நாவல்கள் அத்தகையவை.

ஜெயமோகனுடைய எழுத்துக்கள் அப்படியானவையல்ல. அவையும் யானைத்தனம் கொண்டவைதான். ஆனாலும்  பயணியை இனங்கண்ட யானைபோல, வாசகன் ஏற  அவரது படைப்புக்கள் இடங்கொடுக்கும். அவரின் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர் எல்லாம் அப்படியானவை. அவற்றின் மேலான பயணங்கள் வித்தியாசமானவை. சுகமானவை.
ஆக, என் வாசிப்புகள் அவசரத்தில் முடித்துவிட முடியாதவை. எந்தப் பிரதியும் என் வாசிப்புக்குச் சவாலாக நிற்கவில்லையாயினும், என் குவிந்த கவனத்தை நிர்ப்பந்தித்த எழுத்துக்கள் தமிழில் இருக்கவே செய்கின்றன. அவற்றையே தேடுகிறேன். அவற்றையே வாசிக்கிறேன்.

5.பதிவுகள்: தாய்த்தமிழகம் என்போம். உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களைப்பொறுத்தவரையில் அவர்களை வாசிப்பு மற்றும் எழுத்தனுபவத்தைப்பொறுத்தவரையில் தமிழத்தில் வெளியாகும் ஊடகங்கள், நூல்கள் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உங்களைக் கவர்ந்த , நீங்கள் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் எனக்கருதுகின்ற தமிழகத்துப்படைப்பாளிகள் பற்றிச்சிறிது கூறுங்களேன். அறிய ஆவலாயுள்ளோம்.

தேவகாந்தன்: இப்போதெல்லாம் அப்படி இவரிவர் சிறந்த நாவலாசிரியர் என்று அறுதியாக எதையும் சொல்லிவிட முடிவதில்லை. இவரிவர் சில நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லமுடிகிறது. நல்ல நாவல்கள் எனும்போது, என்றைக்குமான நல்ல நாவல்கள் என்றும், காலகட்டங்களுக்கான நல்ல நாவல்களென்றும் வகுத்துக்கொள்ளவேண்டும். என்றென்றைக்குமான நல்ல நாவல்களின்  பட்டியலும் காலப்போக்கில் மாறக்கூடுமெனினும் அவ்வாறு ஒரு பகுப்பு இருக்கவே செய்கிறது.

உதாரணமாக தி.ஜானகிராமனின்மோகமுள்சிறந்த நாவலாக இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரும்ப தி.ஜா.வின் நாவல்களை வாசித்தபோதுமரப்பசுசிறந்ததாகத் தென்பட்டது. சுந்தர ராமசாமியின்புளியமரத்தின் கதைசிறந்ததாக இருந்தது ஒரு காலத்தில். பின்னால்ஜேஜே சில குறிப்புகள்அந்த இடத்தைப் பிடித்தது. கடைசியாக ஒரு வாசிப்பை முடித்தபோதுகுழந்தைகள் பெண்கள் ஆண்கள்சிறந்ததாக வந்து முன்னிற்கிறது. அந்தப் பட்டியலில் எஸ்.ராமகிருஷ்ணனின்உபபாண்டவம்’, யூமா வாசுகியின்ரத்த உறவு’, பிரபஞ்சனின்மானுடம் வெல்லும்’, எம்.கோபாலகிருஷ்ணனின்மணல்கடிகைஆகிய நாவல்கள் இருக்கின்றன. டானியலின்கோவிந்தனும்கானலும் நாவல்கள் சிறந்தனவாக ஒரு காலத்தில் இருந்தன. பின்னால்போராளிகள் காத்திருக்கிறார்கள்நாவல் அவரது சிறந்த நாவலாக ஆனது. அதுபோல் செங்கை ஆழியானின்வாடைக்காற்றுஒருபோது பிடித்திருந்தது. பின்னால்ஜன்மபூமிபிடித்துக்கொண்டது. இவ்வாறு வாசிப்பின் வளர்ச்சியினால் தேர்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இளந்தலைமுறை எழுத்தாளர்களில் பலரின் நாவல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எஸ்.செந்தில்குமார், மணிகண்டன், லட்சுமி சரவணகுமார், விநாயகமுருகன், எஸ்.உதயன் என பலபேர் அப்பட்டியலில். எவ்வளவோ உச்சங்களை அடைந்து கடைசியில் ஏமாற்றங்களையே அவை எனக்குத் தந்திருக்கின்றன. ‘லோமியாநாவல் எடுத்த களமும், புனைவு தொடங்கிய விதமும் அற்புதமானது. ஆனால் கடைசியில் பாரதிராஜா பாணி சினிமாபோல சரிந்து விழுந்துபோனது. அதனாலேயே சிலவேளைகளில் இளம்தலைமுறை எழுத்தாளர்களது நாவல்கள் அவ்வளவு செறிவானவையாக எனக்குத் தோன்றாதிருக்கின்றன.

நல்ல எழுத்துக்கான தேடல் என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. படைப்பாளி நிறைய வாசிக்கவேண்டும் எனப்படுகிறது. அது என்னவோ எனக்குத் தெரியாது. தேர்ந்த வாசிப்பிலிருந்து இல்லாமல் சிறந்த படைப்பாளி தோன்றமுடியாது என்பது மட்டும் உண்மை. வாசிப்பு ஒரு உபதொழில் அல்ல. தொழில் என்பதை பாரதி சொன்னநமக்குத் தொழில் கவிதைஎன்ற அடியிலுள்ள சொல்லின் அர்த்தத்தில் சொல்லுகிறேன். அதுவே ஒரு தனித் தொழில். வாசிப்பு புணர்ச்சியின் பரவசம் தருவது. அவ்வாறான சிறந்த நூல்கள் தமிழில் ஆண்டுக்கு மூன்று நான்கும் தோன்றுவதில்லை என்ற நிஜம் கசப்பானது.

ஏறக்குறைய அய்ம்பது நூல்களுக்கு மேல் இதுவரை மதிப்புரை, விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றுள் தேர்வுசெய்து நாற்பது நூல்களின் மதிப்புரை, விமர்சனங்ளைஎன் பார்வை: நூல் மதிப்பீட்டுரைகள்என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளேன். சென்ற ஆண்டு மின்னூலாக பிரதிலி அதை வெளியிட்டுள்ளது. அவை மட்டுமே நான் வாசித்த நூல்களல்ல. அவைகளைப்பற்றி மட்டுமே எழுத எனக்கு உந்துதல் ஏற்பட்டது. ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தால் மட்டுமே நான் எழுதினேன். அந்தந்த காலகட்டத்தில் பிடித்திருந்த நூல்கள் இன்றைக்கும் எனக்குப் பிடித்திருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். ஆனாலும் அவற்றின் முக்கியத்துவம் ஏதோவொரு வகையில் இன்றும் இருந்துகொண்டிருக்கவே செய்கிறது.

6.பதிவுகள்உங்கள் அனுபவத்தின்படி, இலங்கையைப்பொறுத்தவரையில் தமிழர்களின் வாசிப்பு எந்த நிலையிலிருப்பதாகக் கருதுகின்றீர்கள். பெருமைப்படத்தக்கதாக உள்ளதெனக் கருதுகின்றீர்களா?

தேவகாந்தன்: சிறப்புற அமைந்துவருவதாகவே தோன்றுகிறது. உணர்ச்சிப் பரவசம் கொடுக்கும் நூல்களை ஒதுக்கி சாஸ்வத இலக்கிய நயமுள்ள எழுத்துக்களைத் தேர இப்போது அங்கே செய்துவருகிறார்கள். பின் அமைப்பியல், பின்நவீனத்துவ எழுத்துக்கள், விமர்சனங்கள்பற்றி இப்போது பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியிலே பிரஸ்தாபம் அதிகமிருப்பதைக் கண்டேன். நான் இதுபற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. நீண்ட கொடிய போரின் பின்னால் எழுந்து வந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள். நிதானமாகத் தொடங்குகிறார்களென நினைக்கிறேன். மேற்குலகிலே அந்த இயங்கள் ஓய்ந்து போயிருக்கிற காலம் இதுவாக இருப்பதால் என்னவாகிவிடப் போகிறது?

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடங்கும் காலத்துக்கு முன்னிருந்த வாசிப்பு நிலைமைகளைவிட யுத்தம் முடிவுற்றுள்ள இக் காலத்தில் அது தலைகீழ் மாற்றம் அடைந்துள்ளதாக நினைக்கிறேன். அதை எலத்திரனியல் வளர்ச்சி பெரும்பாலும் சாத்தியமாக்கியிருக்கிறது. பல்வேறு நூல்களையும் இன்று நூலக இணையதளங்களில் மிகச் சுலபமாக வாசித்துவிட முடிகிறது. இவற்றைப் பாவிக்கின்ற, வாசிக்கின்ற வாசகன் அங்கே நிறையத் தோன்றிக்கொண்டிருக்கிறான். புலம்பெயர் நாடுகளைவிட அங்கே வாசிப்பு தரமாக வந்துகொண்டிருக்கிறது.

வாசகன் வளர்கிற அளவுக்கு படைப்பாளி அங்கே வளரவில்லையென்பதுதான் இப்போது அங்கேயுள்ள குறையாக நான் காண்கிறேன். உதாரணமாக செங்கை ஆழியானின் நூல்களை எடுத்துப் பாருங்கள். முதல் நாவலைவிட அண்மையில் வந்த அவரது நாவல் நடை, கட்டுமானம் ஆகியவற்றில் மாற்றமே அற்றிருப்பது தெரியவரும். கே.டானியலின்  நூலுக்கும்கூட இந்த நிலைமைதான். இதுவெல்லாம் படைப்பாளியும் சிறந்த வாசகனாய் இருக்கவேண்டிய அவசியத்தையே சொல்லிக்கொண்டு இருக்கின்றன. வாசக வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து படைப்பாளியும் வளர்ந்துதானாகவேண்டும்.


7.பதிவுகள்: நீங்கள் 'ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் வேலை பார்த்ததாகக்கேள்விப்பட்டிருக்கின்றோம். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஈழநாடு பத்திரிகை முக்கியமான பத்திரிகைகளிலொன்று. அங்கு நீங்கள் 'பத்திரிகையாளராக' வேலை பார்த்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அது பற்றிச்சிறிது கூறுங்களேன். அக்காலகட்டத்தில் உங்களுடன் வேலை பார்த்த சக படைப்பாளிகள் பற்றியும் பல தகவல்கள் உங்களிடமிருக்கும். அவற்றையும் சிறிது பகிர்ந்துகொள்ளுங்களேன்.


தேவகாந்தன்: எனது முதல் வேலையென்ற முக்கியத்துவமும் உடையது அது. பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்ததும்ஈழநாட்டில்தான் சேர்ந்தேன். அந்த வருஷத்தில்தான் ஈழநாட்டின் பத்தாமாண்டு விழா நடந்தது. சிறுகதை, நாவல், கவிதை, காவியம் என போட்டிகள் நடந்தன. ஈழநாடே கலகலப்பில் மிதந்துகொண்டிருந்தது. யாழ் குடாநாட்டின் பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்களை நான் விரைவில் சந்தித்து அறிமுகமாக அந்த விழாதான் முதல் காரணம்.

மற்றும்படி அக்காலத்தில்தான் நான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன் என்ற வகையிலும் இன்னொரு முக்கியத்துவம் அதற்குண்டு. இருந்தும் என் முதல் சிறுகதையை  ஈழநாடு வாரமலருக்கு நான் கொடுக்கவில்லை. அது அனுசரணை காரணமாக வெளிவந்ததாக நண்பர்கள் நினைத்துவிடக்கூடாதென்ற மிக்க தெளிவோடு இருந்தேன் நான். அப்போது கதையெழுத முயன்றுகொண்டிருந்த சிலர் எங்கள் நண்பர்கள் வட்டத்திலே  இருந்தார்கள். அவர்களுக்காக ஏற்பட்டதுதான் எனது அந்த விருப்பமின்மை. ஆனால் கதையைக் வாசித்த நண்பர்பாமாராஜகோபால் கதை நன்றாகவிருக்கிறது, ஈழநாட்டுக்கு கொடுக்க விருப்பமில்லையென்றால் வேறு பத்திரிகைக்கு அனுப்பலாமே என்றார். அதனால் கண்டியிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்தசெய்திவாரப் பத்திரிகைக்கு அனுப்பினேன். கதை சிறிதுநாளில் பிரசுரமானது. அதுதான் எனது முதல் கதைகுருடர்கள்’.

ஆசிரியர் குழுவில் வேலைசெய்வதென்பது பெரும்பாலும், ஆசிரியர் மற்றும் செய்திஆசிரியரைத் தவிர்த்து, நிருபர்களிடமிருந்து வரும் செய்திகளிலுள்ள உபரிகளை ஒதுக்கி செம்மையாக்கம் செய்து கொடுப்பதுதான். நிருபர்களிடமிருந்து கடிதங்களிலும் செய்தி வரும். தொலைபேசியிலும் அவசர செய்திகளைச் சொல்வார்கள். வெளிநாட்டுச் செய்திகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருக்கும் பல்வேறு தூதரகங்களிலிருந்தும் வரும் செய்தி வெளியீடுகளும், வொய்ஸ் ஒவ் அமெரிக்காவும், பிபிசியும், இந்திய வானொலியுமே தந்துகொண்டிருந்தன. இது ஈழநாடு பத்திரிகைக்கு மட்டுமல்ல, இலங்கையின் எல்லா செய்திப் பத்திரிகைகளுக்குமான ஒட்டுமொத்த நிலைமைதான். இதை வைத்துப் பார்க்கும்போது எனக்கு ஈழநாடுதான் ஒரு செய்தியைத் தணிக்கைசெய்யும் அல்லது செம்மையாக்கம் செய்யும் கலையை முதன் முதலில் எனக்குக் கற்றுத் தந்தது என்று சொல்லலாம். இதற்காக  செய்தி ஆசிரியர் எஸ்.எம்.கோபாலரத்தினம், மூத்த ஆசிரிய குழு உறுப்பினர்களான எஸ்.பெருமாள்,  கே.கணேசலிங்கமென சிலருக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டவனாகவே இருக்கிறேன்.
நான் ‘ஈழநா’ட்டில் இணைவதற்கு முன்பாக அங்கே ‘ஊர்க்குருவி’ என்ற பெயரில் எழுதிய திரு.வி.என்.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் தொடர்ந்தும் வாரமலரில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஈழநாடு அலுவலகம் வந்திருந்து எழுதிக்கொடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். மேலும் அ.செ.முருகானந்தம், கவிஞர்கள் அம்பி, எஸ்.என். நாகராஜன், சிலவேளை கனக.செந்திநாதன் போன்றோர் அலுவலகம் வந்து அளவளாவிக்கொண்டிருப்பர். அவர்களுடனான அந்நியோன்யத்தை வளர்க்க பத்திரிகை அலுவலகம் எனக்குப் பேருதவி செய்தது. இன்னும் அச்சாக்கப் பகுதி, மெய்ப்புநோக்குநர் பகுதி, விநியோகப் பகுதிகளிலும் நிறைய நண்பர்கள். இப்போது நினைக்கிறபோதும் இனிக்கக்கூடிய நட்பைக் கொண்டவர்களாயிருந்தார்கள் அவர்கள். 


8. பதிவுகள்: உங்கள் முதல் கதை அனுபவத்தைச்சிறிது கூற முடியுமா? உங்களை அக்கதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமா? அதற்கான பின்புலம் ஏதாவது இருந்ததா?


தேவகாந்தன்: தோன்றிற்று எழுதினேன் என்பதுதான்சரியானதாக இல்லாதபோதும், இதற்கான பதிலாக இருக்கமுடியும்.
பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுமே பாட்டியிடம், அம்மாவிடம் கதை கேட்டதாகவும் அதிலிருந்து எழுத உந்துதல் பெற்றதாகவும்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையை மறைக்கக் கூடாதென்றால் என் வரையிலும் அப்படித்தான்  நடந்ததென்றே சொல்லவேண்டியிருக்கிறது.
கதைகள் சிறகுகள் உடையவை. அதனால்தான் அராபியக் கதையும், வடவிந்தியக் கதைகளும் நமது மண்ணையும் மொழிகளையும் வந்தடைந்தன. அவ்வாறே பல கதைகள் நமது நிலங்களிலிருந்தும் அங்கு சென்றடைந்தன. சிறகடித்துப் பறக்கும் பறவைக்கு எங்கோ எப்பவோ ஒரு தங்குமிடம் தேவைப்படுகிறது. கதைகளின் தங்குமிடம் கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். கதைகள் பறந்துபோன பின் கதைகள் இருந்த இடத்தின் அழுத்தங்கள், அடையாளங்கள், வடுக்களிலிருந்து அவர்கள் அந்தக் கதைகளையும், வேறுவேறு கதைகளையும் உண்டாக்குகிறார்கள்.
இந்தமாதிரி நான் சொல்வது சரியாக இருக்குமென்றே தோன்றுகிறது.
என் அம்மா மட்டுமே எனக்குக் கதை சொல்பவராக இருந்தார் என் சிறுவயதுக் காலத்தில். இரண்டு பாட்டிகள் இருந்தார்கள். ஒரு தாத்தா உயிரோடிருந்தார். யாருக்கும் கதை சொல்ல வரவில்லை. ஊரிலிருந்து வரும்போது கடலைக்கொட்டை மறக்காமல் வாங்கிவரும் பாட்டிகளிடம் நான் ஆசையோடு எதிர்பார்த்த கதை கிடைக்கவில்லை. கேட்டபோதும் அந்த விஷயத்தை ஒதுக்கும் சாதுர்யம்தான் அவர்களிடம் இருந்தது. ஆனால் அம்மா கதைவளம் கொண்டவராயிருந்தார். கூப்பிட்டு கதைசொல்ல அவாவிக்கொண்டிருந்தார். அதை இப்போது என்னால் புரியமுடிகிறது.
ஆயிரத்து தொளாயிரத்து முப்பதுக்களில் அம்மா அய்ந்தாம் வகுப்புவரை படித்திருந்தார். மட்டுமில்லை, பின்னாளிலும் பாரதம், ராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், மதனமகாராசன், அல்லிராணி, பவளக்கொடி, நல்லதங்காள் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகளெல்லாம் படித்திருந்தார். ஒரு கதைசொல்லியால் கதை சொல்லாமல் இருக்கமுடியாது. அவ்வாறுள்ளவரே ஒரு சிறந்த கதைசொல்லியாகவும் இருக்க முடியும். அம்மா நூறு நூறாகக் கதை சொன்னார்.

அவரது குடும்ப அடியில் செய்யுளியற்றிய புலவர்கள் இருந்திருந்தார்கள். ஆனால் அது கல்விக்கான பகைப்புலமாக இருக்கலாமே தவிர, கதைசொல்லியாக ஆவதற்கான பின்புலமாக இருக்கவேண்டியதில்லை.

கதை சொல்ல வாழ்வுச் சூழல் முக்கியமானது. வாழ்வின் பிரச்னைகளுக்குள்ளும், வறுமைக்குள்ளும் அழுந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலை கதை பிறப்பதற்கு ஏற்றதேயில்லை. அவை தீர்ந்த பின்னால் அந்த அநுபவங்கள் கதைகளாக மாறலாம். ஆனால் கதை சொல்வதற்கு, கேட்பதற்கும்தான், வாழ்வு வசதிகளில்லாவிட்டாலும் அமைதி நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் கதை பிறக்கும். அம்மாவினதும், எங்களினதும் வாழ்வு அமைதியுடையதாய் இருந்தது அப்போது. அதனால்தான் அம்மா கதை சொன்னார், நாங்கள் கதை கேட்டோம்.
அதுதான் எனக்கு வாசிப்பைத் தந்தது. வாசிப்பே என்னை எழுதவைத்தது.

ஆரம்ப கால கதைசொல்லிகள் தங்கள் வார்த்தைகளை வாயிலிருந்து பிறப்பித்தார்கள். பின்னால் வந்த கதைசொல்லிகள் வார்த்தைகளை தங்கள் எழுதுகோலிலிருந்து பிறப்பித்தார்கள். நானும் ஒரு கதைசொல்லியாக என் வார்த்தைகளை எழுதுகோலிலிருந்தே பிறப்பித்தேன்.

எழுத ஆரம்பித்த காலத்தில் ஏன் எழுதினேன் என்பதற்குப்போல், எப்படி எழுதினேன் என்பதற்கும் என்னிடத்தில் விடையிருக்கவில்லை. ‘எப்படி எழுதினேன்?’ என பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலையும் வாசித்திருக்கவில்லை. ஆனாலும் எழுதினேன். எழுதி ஒரு படைப்பாளியாக அறிமுகமான பின்தான் என் பாதை அறியப்பட்டது என நினைக்கிறேன்.

பாதை எப்போதும் முக்கியமானதாக இருந்ததில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் இப்போதும். ஆனால் ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்கவேண்டுமென்று இப்போது தெரிகிறது. அப்போதில்லை. அது குறையுமில்லை.

எனது முதல் கதை ‘குருடர்கள்’. அப்போது கண்டியிலிருந்து வந்துகொண்டிருந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்தது. இதுபற்றி ஓரளவு நான் குறிப்பிட்டிருக்கிறேன் இந்த நேர்காணலிலேயே.
வயலின் வாசித்து பிழைத்துவந்து ஒரு பார்வையற்றவரை அக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருக்க முடியும். அவரது இருப்பிடம் கைதடிப் பகுதியில் இருந்ததென்று நினைக்கிறேன். தினசரி காலையில் பஸ்ஸேறி யாழ்ப்பாணம் வந்து, பெரும்பாலும் ஏழு எட்டு மணியளவில் வீடு திரும்புவார். அதிகமான நாட்களிலும் அவருக்கு தனிப்பயணம்தான். சிலவேளை அவரை கூடவொரு பெண்மணியுடன் கண்டிருக்கிறேன். இனிமையாக வாசிக்கக் கூடியவர். பலரை மெய்ம்மறந்திருந்து ரசிக்க வைத்த இசை அவரது. நானும் நேர அவகாசத்தைப் பொறுத்து நின்று பலமுறைகள் ரசித்திருக்கிறேன்.

ஒருநாள் காலையில் நான் ஈழநாடு அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது யாழ். மணிக்கூட்டு கோபுரத்தின் சங்கிலி வளைய எல்லையில் சந்தடியும், ஆட்கள் சிலர் கூடிநின்று விலகிக்கொண்டிருப்பதும் பஸ்ஸிலிருந்தபடியே கண்டேன். மாலையில் வேலை முடிந்து நூல்நிலையம்நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த வேளையிலும் அவ்வாறான நிலைமை தொடர்ந்திருக்கவே நின்று விசாரித்தேன். வயலின் வாசிக்கும் பார்வையற்றவர் அங்கே இறந்து கிடப்பதாகச் சொன்னார்கள். நான் நொருங்கிப்போனேன். காலையிலிருந்து மாலைவரை அவரது சடலம் அந்த இடத்திலே கிடந்திருந்கிறது. அது முதல்நாள் அவர் வீடு புறப்படுவதற்கு முன்னர் சம்பவித்த மரணமாகவும் இருக்கலாம். அவரது இசையை ரசித்த எத்தனைபேர் அதனைக் கண்டுகொண்டு போயிருக்கமுடியும்? இருந்தும் அவர்களாக வேண்டாம், யாழ். மாநகர சபைக்காவது அறிவித்து அதை அப்புறப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே என மனது குமைந்தது.

அப்போது யாழ். மாநகர சபைக் கட்டிடத்து பெரிய மண்டபத்தின் உச்சியில் ஒரு யாழ் அலங்கார விளக்கு எரியும்படி இருந்தது. நான் திரும்பிப் பார்க்கிறேன். அலங்கார விளக்கு அப்போதுதான் மின்னிணைப்பு ஏற்பட்டு ஒளிவிடத் தொடங்குகிறது. எனக்குள் எண்ணம் ஓடியது, ‘அந்த இசைவாணருக்கு யாழ் பாடி பரிசிலாய்ப் பெற்ற அந்த மண்ணில் அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. அவர் அல்ல, அங்கே நின்றுகொண்டிருக்கிற மனிதர்களே குருடர்கள்’ என்பதாக. சிறிதுநேரத்தில் அவரது சடலத்தை மாநகர சபை வந்து அப்புறப்படுத்தியது.
இதற்காக நான் யாரையாவது ஏசிவிட முடியுமா? யாரையாவது தடியெடுத்து அடித்துவிட முடியுமா? முடியாது. எனவே எழுதினேன் என் மனக் கோபத்தை. அது சிறுகதையாக வந்தது.

ஏதோவொரு உணர்வின் உந்துதலே படைப்புக்கான உந்துவிசையாக இருக்கிறது. அது எதுவானபோதும்தான்.

9. .பதிவுகள்: உங்கள் எழுத்தைச் சமுதாய அக்கறை, அரசியல் பிரக்ஞை பாதித்ததில்லை என்று கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் உங்கள் அக்கறைகள் தாம் எவை?


தேவகாந்தன்: வாழ்க்கை! சீவியம்! இந்த உலகத்தில் தென்படும் மனித வாழ்க்கை அனைத்தும் ஒரு மேலோட்டமான பார்வையில் ஒன்றுபோலவேதான் தென்படுகின்றது. சமூகமே மனித வாழ்க்கையைப் பாதித்திருந்தாலும், அது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகவும், வெவ்வேறு அளவிலும்தான் பாதிக்கிறது. அந்தவகையில் அவரவர் வாழ்க்கை வித்தியாசமாகவே இருக்க முடியும்.

சமூக நியதிகளுள் மனிதனை அறிவு அடங்கிநிற்கச் சொல்கிற வேளையில், அதனை மீறும்படி கலவரப்படுத்துகிறது மனம். மனித வாழ்க்கையைப்  புரிந்துகொள்ள முடிந்த தத்துவங்களால் மனித மனிதத்தை புரிந்து வரையறைப்படுத்த முடியவில்லை. சொல்லப்பட்டவை உத்தேசங்களாகவே இருந்தன. அதனால்தான் உயிரும், மனமும், கடவுளும் காலகாலமாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மனித கண்ணில் படுவனவெல்லாம் பெரும்பாலும் சந்தேகத்திற்கிடமின்றி விடைகாணப்பட்டுவிட்டன. கண்ணில் படாதனவான மனமும், ஆத்மாவும், கடவுளும் இன்றும் சந்தேகங்களையும், புதிய வினாக்களையும் கிளர்த்தியபடி பதிலை எதிர்பார்த்து நிற்கின்றன.

அதன் புதிர்களே புனைவிலக்கியங்களின் மூலப்பொருளாகின்றன. கவிதையும், நாவலும், சிறுகதைகளும் வளம் கொள்ளுமிடம் இதுதான்.
ஆரம்பத்தில் ஒருபோது, வாழ்க்கை எனக்குத் தந்தவைகளை, துக்கமோ சுகமோ, நான் ஆழ்ந்து அனுபவித்து வாழப் பழகியிருப்பதாகச் சொல்லியிருந்தேன். சமூகத்தின் பசியும் காமமும் வாழ்க்கையை அமைக்கின்றன. பசியின் அவதியை அரசியல் தீர்க்கிறதெனில், காமத்தை இலக்கியமே ஒழுங்கில் ஓடவைக்கிறது. இரண்டுமே மனிதனுக்கு முக்கியமானவை.
இந்த அறிதலைத் தந்தது அழுந்தி வாழ்ந்த அந்த என் வாழ்க்கைதான். அப்போதும் புதிர்கள் என்னில் இருந்தன. அதை எழுத்து தீர்த்துவைத்தது. அதுதான் ஒருவன் அடையக்கூடிய ஞானமென நான் நம்புகிறேன். என் எழுத்துயாரின் எழுத்தும்தான்... இந்த மய்யத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கிறது. கண்டடையும் ஞானத்தின் அளவுக்கு இலக்கியம் மேன்மை பெறுகிறது.


10. பதிவுகள்: அமைதித்தன்மை வாய்ந்தது உங்கள் தோற்றம். ஆனால் உங்களது பல எழுத்துகள் உங்கள் தோற்றத்தைப்போன்வையல்ல.. உதாரணமாகதாய்வீடு’   பத்திரிகையில் தொடராக வந்த கலாபன் கதை, பதிவுகள் இணையதளத்தில் வந்தநினைவேற்றம்’ போன்றவை. சென்ற ஆண்டு இறுதியில் நீங்கள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செய்த உரையின் தலைப்பும்எழுத்து-கலகம்-இலக்கியம்என்பதாகவே இருந்தது. இந்த முரணுக்கு என்ன காரணம்?

தேவகாந்தன்: நல்ல கேள்வி. இவ்வாறான ஒரு கேள்வியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் அம்மாதிரிக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். நன்றி.
வாழ்க்கையை எவ்வாறு நாம் வாழவேண்டுமென்று நமது குடும்ப அமைப்புகளும், அறநூல்களும் சொல்லிக்கொண்டே காலகாலமாகவும் இருந்து வருகின்றன. இந்த அற விழுமியங்களுள் வளர்ந்துவரும் ஒருவரும் இதே அற விழுமியங்களில் ஊறி அல்லது அவற்றை உள்வாங்கி இருத்தல் தவிர்க்கமுடியாதபடி நிகழவே செய்யும். இது ஒரு சாதாரண வாழ்க்கைக்குப் போதுமானதுதான். ஆனால் உணர்வெழுச்சி கூடிய கலை இலக்கிய வாழ்க்கைக்கு இவை போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் சமூக மாற்றத்தை உந்தக்கூடிய புறக் காரணிகள் வீச்சுப் பெறும்போது, அந்தச் சக்திகளை மிக இலகுவாக அடக்கிவிட சமூக சக்திகளால் முடிந்துவிடுகிறது. இன்றைக்கு ஒரு சமூக அமைப்பு இருக்கிறதெனில், இதற்கான அற விழுமியங்களே சமூகத்தில் அதிகாரம் பெற்றவையாய் இருக்குமென்றும் கொண்டுவிட முடியாது. கடந்த சமூகத்தின் எஞ்சிய அம்சங்கள் இன்னும் விடாமல் தொங்கியிருந்து இந்தச் சமூகத்தின் தன்மையையே மாற்றிக்கொண்டிருக்கவும் கூடும். பணபலமும், அதிகார பலமும் கொண்ட சமூக சக்திகளுக்கு முன்னால் தனிமனிதனான கலைஞன் கலகலத்துப் போகிறான். வெறுப்படைந்து வாழ்வின் விரக்திக்கே தள்ளப்பட்டு விடுகிறான். அப்போதுதான் கலைஞன் கலகக்காரனாக மாறுகிறான். மாறவேண்டும்.

கலகமே நியாயம் என்பதில்லை. கலகம் நியாயத்துக்கான ஒரு அழைப்பு மட்டுமே. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது இதுதான். இந்த கலகப் பார்வையைக் கொண்டிருக்கும் படைப்பாளி அந்தச் சமூகத்திற்கும், அடுத்து வரப்போகும் சமூகத்திற்குமான விழுமியங்களுக்காக எழுத முயல்கிறான். விழுமியங்களையே எழுதுகிறான் என்றும் கூறமுடியாது. அது பரவுவதற்கான தளத்தை அமைக்கிறான். மொழியைப் பதப்படுத்துகிறான்.

ஒருகால் இந்தச் சமூகமே இந்த கலகக் குரல் காட்டும் படைப்பாளியை உண்டு இல்லையென்று பண்ணிவிடுகிறேன் எனக் கிளம்பும். அந்த யுத்தத்தில் படைப்பாளி தோற்பதற்கான சாத்தியங்களே நிறைய உண்டு. ஏனெனில் சட்டமென்பதும் இந்த விழுமியங்களைச் சார்ந்து அல்லது இந்த விழுமியங்களைக் கொண்டாடுபவர்களால் இயக்கவும் படுவதுதான். சமூகத்துடனான பல போர்களிலும் பெரும்பாலும் நான் தோற்கவே செய்திருக்கிறேன். சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும், நிலமற்ற கொடுமையால் காடுவெட்ட திரிந்த முயற்சிகளிலெல்லாம் நான் தோற்கவே செய்தேன். அப்போதெல்லாம் இந்தச் சமூகத்தைவிட்டு ஓடவே மனம் தூண்டியிருக்கிறது. என்னைத் தொலைக்கவே மனம் ஏவியிருக்கிறது. ஓடியிருந்த வேளைகளில் ஒரு வாழ்க்கை, அதுவும் இந்தச் சமூகம் ஒத்துக்கொள்ளாத ஒரு வாழ்க்கை, எனக்குச் சித்திப்பாகியிருக்கிறது. இதையே இல்லறத்தில் துறவறத்தையும், வானப்பிரஸ்தத்தில் இல்லறத்தையும் கொண்டாடிய ஒரு தலைகீழ் வாழ்க்கை ஒருகாலத்தில் எனக்கு சித்தியாகியிருந்ததென்று சில இடங்களிலே  நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலோட்டமாகச் சொன்னால் இது ஒரு தறுதலையான வாழ்க்கைதான். இதுவுமே சமூகத்துக்கெதிரான ஒரு கலகம்தான். ஆனாலும் அதைச் செய்வதில் எவ்வளவு சுகமிருக்கிறது.

கலகமில்லையேல் இலக்கியமுமில்லை என்பது அதுதான்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்என்றது தேவாரம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தேஎன்றதும் தேவாரம்தான்.
சொர்க்கம் தேடும் இறையவர் மத்தியில் இந்தப் பிறப்பையும், இந்த உலகத்தையும் உயர்ந்தேத்தியது கலகமல்லவா?

ஒரு ஊரையல்ல, ஒரு நகரத்தையே தீமூட்டி அழித்தாள் கண்ணகி. குழந்தைகள், பெண்டிர், முதியோர், அறவோர் என  புறநிலைப்படுத்தப்பட்டிருந்தாலும், தன் கணவனைக் கொன்றதற்காய் அரசனும் அரசியும் இறந்த பின்னும்கூட மதுரையை எரித்தழித்தல் எவ்வகையில் நியாயம்? ஆனால் கண்ணகி சொல்கிறாள் அது நியாயம்தானென்று. ‘யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்என்கிறாள். ஆம், இது மக்கள் நகரல்ல, அரசன் நகர், அதனால்தான் எரித்தேன் என்பது கலகம். இளங்கோ இலக்கியத்தில் செய்த கலகம். அதனாலேயே நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாக அது இன்றளவும் நின்று நிலைத்திருக்கிறது. மக்கள் கதையைச் சொன்னபோதும்கூட அத்தகைய உன்னதத்தை அடைந்தது.
இவ்வாறு கலகக் குணம் கொள்ளுதல் பெரும்பாலான இலக்கியங்களின் பண்பாக இருக்கிறது.

கருத்தில் கலகத்தை வைத்தால் அது இலக்கியமாக இருக்கும். கலகத்தில் கருத்தை வைத்தால் இது இலக்கியமின்றிக் கெடும்.
இந்தப் புரிதலேகலாபன் கதையை எழுதத் தூண்டியது. ‘நினைவேற்றத்தை எழுத இயக்கியது. இந்த ஆக்கங்களில் மொழியின்  தளைகளை முடிந்தளவு கழற்றிப்போடும்படி என் எழுத்துக்களைக் கையாண்டேன்.
அது கலகம், நியாயம் எதுவாயினும் அதைச் சரியாகச் செய்தேன் என்பதே  என் எண்ணம்.

என் அமைதித்தன்மையை என் குடும்பம் தந்ததென்றும்,  என் கலகத் தன்மையை என் சமூகம் தந்தது என்றும்  சொன்னால் சரியாக இருக்குமா? கலகம் சமூகத்துக்கெதிராக இருந்தும், அதையும் சமூகத்திலிருந்தே  நான் உறிஞ்சியெடுத்தேன். அந்த வகையில் குரலற்றவர்களின் குரலாகவும், சிந்தனை ஒழுங்கவற்றவரின் சிந்தனையாகவும் என் எழுத்து இருக்கிறதென்றுதானே பொருள்? சமூகத்தில் அடக்கப்பட்டவர்களும், மிதிக்கப்பட்டவர்களும் பெரும்பான்மையாக இருக்கிறவரையில், சமூகத்துக்கெதிரான கலகமும் நியாயமே ஆகும். அல்லாமல் அடக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினராக இருந்தால்கூட என் போராட்டம் அவர்களுக்கானதாகவே இருக்கும்.

11.பதிவுகள்அண்மைக்காலமாகவே எழுத்தாளர்கள் ஷோபாசக்தி, குணா கவியழகன் மற்றும் சயந்தன் ஆகியோரின் படைப்புகள் பற்றி அதிகமாகப்பேசப்படுவதைக் காண முடிகிறது. இவர்களது படைப்புகளைத்தாங்களும் வாசித்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம்நீங்கள் அவர்களைபற்றி அதிகம் கூறியுள்ளதாகத்தெரியவில்லையே. ஏன்?

தேவகாந்தன்: ஷோபாசக்தியின் ‘ம்’ நாவலுக்கு மதிப்புரை அது வெளிவந்த காலத்திலேயே எழுதியிருக்கிறேன். சயந்தனின் ‘ஆறாவடு’வுக்கும் அவ்வாறே. குணா கவியழகனின் நாவல்களுக்கு எழுத அமையவில்லை. மேலும்  கொரில்லாவுக்குப் பின்னால் பேசப்பட ஷோபாசக்தி நூல் தரவில்லை. அதாவது கொரில்லாவை விஞ்சுகிற நாவலாக அது இருக்கவேண்டும். அதுபோல்நஞ்சுண்ட காடுபோலும்கூட ஒரு நூலை குணா கவியழகன் தரவில்லை. சயந்தனும்ஆறாவடுஅளவுக்கு ஆதிரையைத் தரமுடியாமல் நின்றுகொண்டிருக்கிறார். நான் எதைப் பேச? தமிழ்நதியின்பார்த்தீனியம்சமீபத்தில் வந்திருக்கிறது. அதை இன்னும் நான் வாசிக்கவில்லை. அவரதுகானல் வரிஎனக்குப் பிடித்த நாவல்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லைஎன்று நினைப்பவன் நான். உயர்வானஇன்னும் உயர்வானநூலென்றே தேடிக்கொண்டு இருக்கின்றேன். ஆங்காங்கேயான சில கண்டடைவுகள் மட்டுமே இப்போதுதேடலில் தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்.  பார்க்கலாம்12.பதிவுகள்: நல்லது தேவகாந்தன். இதுவரையில் பதிவுகளின் கேள்விகளுக்குப் பொறுமையாகப்பதிலளித்து வந்தீர்கள். அதற்காக எமது நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். இறுதியாக ஒரு கேள்வி. இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள்தாம் என்ன?

தேவகாந்தன்: அறிவுரையென்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். இளைய தலைமுறையாக இருந்தாலும், இன்றைக்கு எழுதுபவர்கள் பலரும் தக்க தகவல்களோடுதான் வருகிறார்கள். அனுபவம் பெரும்பாலும் ஒருவரை மாற்றவே செய்கிறதெனில் அவர்களும் காலப்போக்கில் மாறவே செய்வார்கள். மாற்றம் என்பதை வளர்ச்சியாகவும் நீங்கள் கொள்ளலாம். இன்று சரியென்றிருப்பது நாளை சரியல்ல என்றோ, இந்தளவு சரியல்லவென்றோ ஆகக்கூடும். இன்று சரியல்ல என்பதும் நாளை அவ்வாறே சரியென ஆகக்கூடும். கீழது மேலாய், மேலது கீழாய் மாறுகின்ற தன்மைத்து இந்த ஞாலம். தீ சுடும் என்பது அறிவெனில், தீ சுட்ட அனுபவமே ஞானமாகிறது. அனுபவம் ஒருவரை மாற்றுகிறது. அதை மறக்காமலிருக்க வேண்டும். மேலும் யாராலும், ஒரு கடிதமெழுத முடிந்தவரால்கூட, ஒரு கதையை எழுதிவிட முடியும். ஆனால் வாழ்க்கையை இறுக்கிவைத்திருக்கும் மரபுகள்மீது, கலாச்சாரங்கள்மீது செய்யும் கலக எழுத்தே மெய்யியலின் தேடலாக விரிகிறபோது  சிறந்த இலக்கியமாகிறது. இவற்றையும் கவனத்தில் அவர்கள் கொள்ளவேண்டுமென்பதுதான் நான் இந்த இடத்திலே சொல்லக்கூடியது.

பதிவுகள்: இந்த நீண்ட நேர்காணலுக்காக என் சார்பிலும், பதிவுகள் வாசகர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, தேவகாந்தன்.

தேவகாந்தன்: பதிவுகள் வாசகர்களை அணுக ஒரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லிய  மட்டுமல்ல, என்னை நானே உரைத்துப் பார்த்த நேர்காணலும்தான் இது. அதற்காக எனது நன்றி உங்களுக்கும், பதிவுகள் இணையதள  வாசகர்களுக்கும். நன்றி. வணக்கம்.


(முற்றும்)

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...