Thursday, March 17, 2016

நினைவேற்றம் (முன்மொழிவு)

 நினைவேற்றம்முன்மொழிவு:
கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும்  எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன.

மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது  சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன.

அச் சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், என் வாழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இவற்றில் அக்கறையுண்டு. ஆயினும், இவை என் யோசிப்பின் காலப் பரப்பு அடக்காத விஷயங்கள்.

இலங்கையிலோ, தமிழகத்திலோ என்னைத் தொலைத்துவிடுவதற்கான நிலைமைகள் முதிர்ந்தபோது மிக அநாயாசமாக அவற்றைச் செய்துவிட என்னால் முடிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறான நிலைமைகள் என் புதிய நாடான கனடாவில் விளைந்த சமயங்களில் காலநிலையும், தொடர்பூடகச் சாதனங்களும் காரணமாய் செயற்படுத்தவியலாத நிலை உருவாயிற்று. அண்மையில் அவ்வாறான ஒரு மனவழுத்தம் திரண்ட சமயத்தில் ஒரு விச்சிராந்திபோல் வானும், நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், மண்ணும், மரங்களும்கூட பார்வையில் படமுடியாத நிலக்கீழ் வீட்டிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகவளவிலான பனிப் பொழிவாலும், குளிர் அடர்த்தியாலும், உறைபனியாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பருவகால செறிநிலையில் என் அவத்தை குறையும்படியாக என் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அதீத முயற்சியில் ஈடுபட முயன்றிருந்தேன்.

யோசிக்க யோசிக்க எனக்கு விடைகளுக்குப் பதிலாக புதிர்களே கிளர்ந்தெழுந்ததாய்த் தோன்றியது. இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் மாறுகொள வாழ்ந்த வாழ்வு ஒரு வெறுமையாய் வந்து என்னைக் கவிந்தது.
திட்டமிடாவிட்டாலும்  வித்தியாசங்களூடாக இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாழ்க்கையில் இது தவிர்க்கப்பட முடியாதது என்றே ஆரம்பத்தில் கணித்தேன்.

ஆயினும் மேலோட்டங்களில் தென்பட்ட அர்த்தமின்மைகள், ஆழ்ந்த யோசிப்பில் ஒரோவழி அர்த்தமாயின.

என் சின்ன வயதில், ‘நான் பிள்ளையாரப்பாவைக் கண்டேன்’ என்று சொன்ன விபரம் தெரியாத காலத்திலிருந்து, நான் சேர்ந்து விளையாடிய  நண்பர்களும் விளையாட்டுக்களும், நான் கேட்ட கதைகள், நான் வாசிக்க ஆரம்பித்த நூல்கள், பள்ளியில் எனக்காயிருந்த பாடப் புத்தகங்கள், சின்ன வயதில் என் தந்தையைக் கண்முன்னாலேயே கொலைக்கு இழந்த கொடூரம், அதுவரை வாழ்ந்ததும் அதன் பின்னால் வாழ்ந்ததுமான நிலைமைகளும் ஊடாக, தந்தையற்ற தனயனாய் இருந்த என் பதின்ம வயதில் எனக்குள் தோன்றவாரம்பித்த இலக்குகளும் இலக்கின்மைகளும், இவற்றையடைவதற்கான எனது முயற்சிகளின் வெற்றிகளும் தோல்விகளும், இப் பருவத்தில் கிராமத்துக்கே இயல்பான முறையாக வெளிப்படையாய்த் தோன்றும் பாலியல் நாட்டமும், அவற்றினாலாகும் இடையூறுகளும், அதில் சந்திக்க நேர்ந்த அவமானங்களும் மன அவசங்களும், தோன்றிய சின்னச் சின்னக் காதல்கள், அவற்றுக்கு ஏதோவொரு வகையில் உடந்தையாகவிருந்த வானொலியிலும் கிராமபோனிலும் கிளர்ந்த ராக அர்த்தங்களோடான சினிமாப் பாடல்கள், பின் கவலையேயில்லாது காதல்களை எறிந்த விதங்களும் என்றும், எதிர்பாராதவிதமாகச் சித்தித்த என் முதல் தசையாடல், தசையாடல் இச்சைகளிலிருந்து மீண்டெழுந்த சுளுவுகள், இலக்கிய வாசிப்புக்களால் கனவிலேறிய இலட்சிய வாழ்க்கை, அது சுட்டியெழுந்த தார்மீகக் கோபங்களும், சத்திய வேட்கை காரணமாய் கண்ட இழப்புக்களும்வரை சுமார் முதல் இருபதாண்டுகளுக்கான என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மேலாக என் நினைவுகள் செய்த பயணத்தின் விளைவே கீழே வரப்போகின்ற எழுத்துக்கள்.

இவையே என் அரசியலை நிர்ணயித்தன. அதுவே என் வாசிப்பின் திசையைக் காட்டியது. என் எழுத்து ஊற்றுப் பெற்ற காதையின் தொடக்கப் புள்ளி இங்கிருக்கிறது.

இது ஒரு சுயசரிதையல்ல. மாறாக என் சுயத்தை நான் தரிசித்த பக்கங்கள். புனைவற்று என்னை நான் கண்டது கண்டபடிக்குக் காட்டுகிற எத்தனங்கள். இதற்காக நான் சொற்களை மட்டுமே தேடியிருக்கிறேன். அதுகூட புனைவுத் தோற்றம் பெற்றுவிடக்கூடாதென்ற உள்ளார்ந்த அவதானத்தோடும் இருந்திருக்கிறேன் என்பதை நிச்சயமானதாய்ச் சொல்லிக்கொள்ள முடியும்.
எந்தவொரு நிகழ்வும், அதில் சம்பந்தப்படும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜமானவையென்ற என் சத்தியத்தின் பலம்பெற்றவை. இப் பாத்திரங்களில் பல இன்றும் ஜீவியந்தர்களாக இருக்கிறார்கள். இறந்திருந்தாலுமேகூட அவரவரின் வாழ்க்கையென்ற எல்லைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் அநாகரிகம் கருதி  அவற்றின் பெயர்களை நான் மாற்றியிருக்கிறேன் என்பதை ஒப்புமூலமாய் இங்கே முன்வைத்துவிடுகிறேன்.

நல்லதுகளைக் காணும் கொடியேற்றப் பயணமல்ல நான் செய்தது. சில வேளைகளில் இந்நினைவு மீட்பு கழுவேற்றங்களாகவும் இருந்தது. அதனால் இந்த ‘நினைவேற்றம்’ என்ற தலைப்பு கழுவேற்றத்தின் ஒத்திசைவு பெற்றிருக்கிற வகையில் எனக்குப் பிடித்திருக்கிறது.
வலியும், வதையுமில்லாத வாழ்க்கை எங்கிருக்கிறது? ஆனாலும் வலியும், வதையும் மிகக் கூடுதலாகவுள்ள வாழ்க்கைகளும் இருக்கின்றன. இத்தனைக்குள்ளும் தீவிர இலக்கிய வாசகனாவதும், சமதர்ம சமுதாய விருப்பத்தின்மீதான அரசியல் அபிலாசைகள் கொள்வதும், பிறகு எழுத நேர்வதும், படைப்பாளியாவதும், அந்த எழுத்துக்கு விசுவாசமாக எப்போதும் இருப்பதென்பதும் காரிய சாத்தியங்களா? சுய கழுவேற்றங்கள் இருந்தபோதும் இந்த முயற்சியில் அவை சாத்தியமெனவே எனக்குத் தோற்றப்பட்டது. அதனால்தான் ‘நினைவேற்றம்’, என் தொலைப்பிலிருந்து இந்தமுறை என்னை மீட்டெடுத்திருக்கிறது. என் நினைவேற்றத்தின் முழுமைத் தரிசிப்புக்குப் பின்னால் இதை வாசிக்கிறவர்களும் அந்த முடிவுக்கே வரக்கூடும் என்பது என் நம்பிக்கை. இது உபதேசப் பக்கமல்ல, உதாரணப் பக்கம்.

(இனி தொடர்வது, முனை-1)

Wednesday, March 16, 2016

நினைவேற்றம் 1

நினைவேற்றம்

முனை 1

நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம்.
மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன.

யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம்.

கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.
வேலிகள் அச்சறுக்கையாய் இருந்த அளவுக்கு அங்கே வீடுகள் செழிப்பாய் இருந்தன என்பது என் கண்கண்ட நிஜம். வேலிகள் மனங்களைக் குறுக்கிக் கிடந்தன. அதேவேளை வீடுகளின் செல்வங்களைப் பெருக்கி வைத்தன. அடுத்தடுத்த வீடுகளின் ஆடு மாடுகள் மட்டுமில்லை, கோழிகள்கூட தம் வளவுக்குள் வந்துவிடாதபடி பொற்பற்றை அலம்பல் வாங்கி வேலி அடைத்துவைத்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த வீட்டுக் கோழி தன் வளவுக்குள் வந்ததால் ஏச்சும் பேச்சுமாய் பின்னர் சண்டைகளில் முடிந்த சம்பவங்களையும் நான் அறிவேன். வேலிக்கப்புறமாய் நின்றிருந்த அடுத்த வளவுப் பனைமரத்தோலை தன் வளவுக்குள் விழுந்ததால் வழக்குகளே நடந்ததை பெரியவர்களின் கதைகளில் என்னால் கவனமாக முடிந்திருக்கிறது.

இத்தனை இருந்தாலும், வேலிகள் மறுக்க முடியாத ஒரு நன்மையைச் செய்தன என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. அவை மண்ணரிப்பைத் தடுத்தன. அவ்வவ் வளவுகளின் பசளைகளும், மண்ணின் கனிம வளங்களும் மழையில் அடித்துச் செல்லப்பட்டு ஒழுங்கைகளில் ஓடி, வாய்க்கால்களில் இறங்கி, வயல்களில் பரந்து, சிறுகடலில் சேர்ந்துவிடாது தடுக்கப்பட்டதை ஒரு பெருநன்மையாய் நான் காண்கிறேன்.

மக்கித் தெருவின் கிழக்குப் புறத்தில் மானாவளை வயல். அதனை அணைத்து நெடுங்கிடையாய்க் கிடக்கிறது பருத்தித்துறையிலிருந்து சாவகச்சேரிக்கு பஸ் ஓடத் தொடங்கியிருந்த கல் தெரு. பஸ் ஓடினால் பனையளவு உயரத்துக்கு மக்கி அடித்தெழும்பும். அது அடங்க அரை மணி நேரமாவது ஆகும்.
கிழக்குப் புறத் தரைவையிலிருந்து வலிந்த சோளகம் புரண்டெழுந்து வந்தால் மானாவளை வயல் கடந்து வருகையில் அங்குள்ள புழுதியையும் உள்வாங்கிக்கொண்டு வயல்பாதையூடு வீச்சுடன் வெளிப்படுகையில் எதிர்ப்படுவது மக்கித் தெரு. அடுக்களையில் புகைபோக்கிபோல அது. இருந்தாலும் அங்கிருந்த இரண்டொரு கல்வீடுகளில்கூட புகைபோக்கி இருக்கவில்லை. அத்தனைக்கு அது பழமை. அத்தனைக்கு அது கிராமம்.
அந்த மக்கித் தெருவில் அது அடித்துவரும் அழகை எப்போதும் எங்கேயும் காணமுடிந்திராது. புழுதி மேகம் போல் அப்போது உருக்கொண்டிருக்கும். பஸ் சென்ற நேரமாக அது இருந்தால் தெரு முகப்பில் வரும் உருவம்கூட மறைந்துபோயிருக்கும்.

சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்கு காலை, மதியம், மாலையென மூன்று முறை பஸ் வந்துசெல்லும். பஸ் நின்று பின் இரைந்து சென்ற சத்தத்தில், யார் பஸ்ஸைவிட்டு இறங்கிவருவது என்பதை விடுப்புப் பார்ப்பது பலருக்கும் அங்கே ஒரு பொழுதுபோக்கு. அந்த விடுப்புப் பார்க்கும் ஆவல் உந்த வாசலுக்கு ஓடிவந்த நான் மக்கித் தெருவின் கிழக்கு முனையைப் பார்த்தபடி அந்த மதியமணுகும் வேளையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வலிந்த சோளகம் புழுதியை அடித்துக்கொண்டு மேற்கு நோக்கி ஓடிவருகிறது. புகார் கீழே கிடந்து அசைவதுபோல ஒரு திரை, அது என்னைக் கடந்துசென்றபின் நான் கண்களைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்வையைக் குவிக்கிறேன்.

யாரோ வருகிறார்கள்தான். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைச் சால்வையுடன் ஓர் உயரமான மனிதர்.

அவரை எனக்குத் தெரியும். நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து சாத்திராதி வி~யங்களைப் பேசிவிட்டு, அம்மாவின் ஜாதகக் குறிப்பை அல்லது கைரேகையைப் பார்த்து பலன் சொல்லிவிட்டு, இல்லாவிட்டால் ஒரு ஜொக்கு நிறைந்த ஆட்டுப்பால் கோப்பியைக் குடித்துவிட்டுச் செல்கிற சாத்திரிதான் அது.

நான் அம்மாவை அழைத்துச் சொல்கிறேன்: “அம்மா! சாத்திரியார் வாறார்.”

“வரட்டுக்கும், அதுக்கேன் நீ தந்தி குடுக்கிறாய்?”

அம்மாவின் அசட்டை என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
அம்மாவுக்கு சாத்திரிமேல் ஒரு காய்தல் ஏறியிருக்கிறது என நான் எண்ணி முடிக்கையில், “தங்கச்சி அருளுறாப்போல கிடக்கு, ஏணையை வந்து ஆட்டிவிடு” என்கிறாள் அம்மா.

நான் விறாந்தையில் குசினிப் பக்கமாய்த் தொங்கிய ஏணையை சென்று ஆட்டுகிறேன்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த தங்கச்சி ஏணைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். சில வாரங்களாகத்தான் அம்மா வீட்டு வேலைகளை முழுதாகச் செய்ய ஆரம்பித்ததும். அவளது நொய்த உடம்பு தேற அந்தப் பேற்றில் நீண்டகாலமாகிவிட்டதென்பதை, வயதுபோன பெண்கள் வந்து பேசிவிட்டுப் போகையில் உதிர்க்கும் அனுதாபப் பேச்சுக்களில் நான் கிரகித்திருந்தேன். அந்தக் களைப்புக்கூட அம்மாவிடத்தில் ஒரு எரிச்சல் சாத்திரிமேல் கிளம்ப காரணமாய் இருந்திருக்கலாம்.
“அம்மா!” வாசலில் சாத்திரியின் அழைப்புக் குரல் கேட்கிறது.
குசினிக்குப் பக்கத்தில் வாழை. அதற்குப் பக்கத்தில்தான் அட்டாளை. கழுவிய பாத்திரங்களைக் கவிழ்த்துக் காயவைக்கிற இடம்.

வாழைக்கு முன்னால் கிணற்றில் அள்ளிவந்திருந்த வாளித் தண்ணீரில் அம்மா சட்டி பானைகளைத் தேய்த்துக்கொண்டிருந்தபடியே வாசலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

அவளது முகத்திலிருந்த கோபம் அல்லது அசட்டை எதுவோ கொஞ்சம் மாறியிருக்கிறது. கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு குமிழ்ந்துகொண்டிருக்கிறது. “வாரும், சாத்திரியார்” என்கிறாள். “ராசா, பாயை எடுத்து திண்ணையில போட்டுவிடு.”

நான் அம்மாவைப் பார்க்கிறேன். எப்படி அவளது அசட்டை அந்தளவு சீக்கிரம் மாறியது என்ற ஆச்சரியம் எனக்கு. இருந்தும் எதுவும் விளங்காமலே விருந்தினர் வந்தால் அமர்வதற்கென வாங்கிவைத்திருந்த மட்டக்கிளப்புப் பன்பாயை எடுத்து வந்து நடுக்கொள்ள விரித்துவிடுகிறேன் விறாந்தையில்.
விறாந்தையில் ஏறிய சாத்திரி முதலில் ஏணையைத் திறந்து குழந்தையைப் பார்த்துவிட்டு, பாயை விறாந்தை ஒட்டுவரை நகர்த்திப்போட்டு அம்மாவைப் பார்த்தபடி அமர்கிறார்.
அம்மா தன் கை வேலையை அப்போது முடித்துக்கொண்டு அவருடன் வந்து பேசமாட்டாளென்பதை எப்படியோ அவர் புரிந்திருக்கிறார்.
சாத்திரி ஏணையை விரித்து குழந்தையைப் பார்த்த பின்னால் அம்மாவின் முகம் முன்னரைவிட பிரகாசமாக, ஒரு கேலியை உள்ளடக்கிக்கொண்டு, விகசித்திருக்கிறது.
சாத்திரிக்கு அந்தக் கேலி தெரிந்திருக்க முடியும். காரணமும் புரிந்திருக்கலாம். ஆயினும் அந்த மலர்ந்த முகத்தில் ஒரு கீற்றளவு மாற்றமில்லை.
எவரையும் வசியவைக்கும் பேச்சுண்டு சாத்திரிக்கு. தோற்றமும்தான். உயர்ந்த சிவந்த உருவம். நன்கு எண்ணெய் பூசி பின்னால் படிய வாரிவிடப்பட்ட தலைமயிர். ஏறு நெற்றியில் கீற்றுகளாக இழுத்த திருநீறு. நெற்றி மையத்தில் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் ஒரு குங்குமப் புள்ளி. எப்போதும் வெற்றிலை அதக்கிய வாய். அதனால் என்றும் சிவந்த சொண்டுகள். அகன்ற கரையுள்ள இந்திய வேட்டி. அதே நிறத்தில் முழுக்கைச் சட்டை. தோளில் சால்வை.
“கொழந்தை பொறந்து எத்தினை நாளாச்சும்மா?” சாத்திரி அம்மாவைக் கேட்கிறார்.

அம்மா தன் கவனம் மாறாமலே சட்டி, பானை, பேணி, கேத்தில்களை சாம்பல்போட்டு விளக்கிக்கொண்டிருக்கிறாள். பின் ஒரு கணத்தில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து சாத்திரியை நேருக்குநேர் பார்க்கிறாள். அவளது கண்களில் இன்னும் கேந்தி ஒளிர்கிறது. பிறகு சொல்கிறாள்: “பிள்ளை பிறந்து இப்ப ரண்டு மாசம் முடியுது. ஆனால் நீர் சொன்ன மாதிரி ஆம்பிளப்பிள்ளையில்லை, சாத்திரியார், பொம்பிளைப்பிள்ளைதான்.”
சாத்திரியிடமிருந்து பேச்சில்லை சிறிதுநேரம். ஒருவாறு பின்னர் சமாளித்துக்கொண்டு, “அதனால என்ன, அம்மா? பொண்ணாப் பொறந்தாலும் அது ஆண்மூச்சோடதான் பொறந்திருக்கும். இருந்து பாருங்க, புள்ள உங்களுக்கு இன்னொரு ஆம்பிளப் புள்ளயாத்தான் இருப்பா” என்கிறார்.
“எல்லா இடத்திலயும் சொல்லுறமாதிரி எனக்கும் கதை விடாதயும். இந்த வி~யத்தில நீர் சொன்ன சாத்திரம் பிழைச்சுப் போச்சு” என்று அம்மா திட்டவட்டமாய்ச் சொல்லிச் சிரிக்கிறாள்.

பக்கென்று மறைந்தது சாத்திரியின் முகத்தில் கழற்றாத கர்ண கவசமாய் இருந்த புன்னகை.

தன் வேலையில் கவனமான அம்மா, மறுபடி நிமிர்ந்து சாத்திரியைப் பார்த்துவிட்டு அந்த அவரது சிதைவில் சிறிது அதிர்கிறாள்.
அந்த வித்துவ கர்வத்தின் பங்கத்தை ஐந்தாம் வகுப்புவரையே படித்த அந்த மனிதியினால் எப்படி அந்தளவு சுளுவாகப் புரிந்திருக்க முடியுமோ? சிறிதுநேரத்தில், “எனக்குச் சந்தோ~ம்தான் பொம்பிளப்பிள்ளை பிறந்தது. பொம்பிளயாப் பிறக்கவேணுமெண்டுதான் நானும் கல்லெடுத்த கோயிலெல்லாம் கையெடுத்து நிண்டனான். வயித்து அசைவிலயே என்ன பிள்ளையெண்டு எனக்குத் தெரிஞ்சிட்டுது. எண்டாலும் உம்மையும் கேட்டு நிச்சயப்படுவமேயெண்டுதான் நீர் போன முறை வந்திருக்கேக்க என்ன பிள்ளை பிறக்குமெண்டு கேட்டன். நீரும் ஆம்பிளப் பிள்ளைதானெண்டு நிச்சயமாய்ச் சொல்லியிட்டீர். எனக்கு உள்ளுக்க கொஞ்சம் மனவருத்தமாய் இருந்துது. சரி, கன நாளில்லைத்தானே, பிறந்தாப் பிறகு பாப்பமெண்டிருந்தன். ஆஸ்பத்திரியிலதான் பிள்ளை பிறந்தது. உவர் கூடநிண்டவர். நான் கண் முழிச்சவுடனை என்ன பிள்ளை எண்டதைத்தான் முதல் கேட்டது. பொம்பிளப்பிள்ளையெண்டு  சொன்னார். உடனடியாய் உம்மைத்தான் நினைச்சன். சரி, விடும். இப்ப ஆர் வெண்டது, ஆர் தோற்றது எண்ட கதை என்னத்துக்கு? என்ரை ஆசை நிறைவேறியிட்டுது, அதுதான் எனக்கு முக்கியம். அது ஆண் மூச்சாயிருந்தாலும் சரி, பெண் மூச்சாயிருந்தாலும் சரி” என்று நிலைமையைச் சமாளித்தாள்.
சாத்திரி கொஞ்சம் தெளிந்தார்.
சாத்திரி வீட்டுக்கு வந்தால் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் பாதியில் விட்டுவிட்டு ஓடிவருகிறவள் அம்மா. அன்றைக்கு முடித்துவிட்டுத்தான் வந்தாள். அப்படியிருந்தும் அவள்தான் கோப்பி போட்டுக் கொடுத்தது. அதில் சாத்திரி கொஞ்சம் மனச் சமாதானம் அடைந்திருக்க முடியும்.

சிறிதுநேரத்தில் சாத்திரி கேட்கிறார்: “மகன் இன்னிக்கு பள்ளிக்கு போகலியோ?”

“எங்க, சாத்திரியார்? போன கிழமை முழுக்க படுத்த படுக்கை. நெருப்புக் காச்சல்மாதிரி சரியான காச்சல். அவரும் ரண்டுநாள் வேலைக்குப் போகாமல் பக்கத்திலயே நிண்டார். சின்னாஸ்பத்திரியில ஏலாதெண்டு பிறகு யாழ்ப்பாணத்துக்கு பியேசு டாக்குத்தரிட்ட கொண்டுபோய்க் காட்டித்தான் சுகமாச்சு. அதுவும் ஒரு மாயம்போலதான் நடந்துது. இதைப்பற்றி உம்மிட்டத்தான் கேக்கவேணுமிண்டு இருந்தனான். பாரும், பிள்ளை இன்னும் காச்சல் மாறாமல் உழத்திக்கொண்டு கிடக்கிது. போட்ட ஊசிக்கு கொஞ்சம்கூட சுகத்தைக் காணேல்ல. நான் பக்கத்தில படுத்திருக்கிறன். நடுச்சாமமிருக்கும். அப்பதான் கண்ணயந்திருக்கிறன்போல. அப்ப ஒரு கனவு. ராசா எங்கயோ நிண்டு விளையாடுறான். எதோ கனக்க மிருகங்கள் பிள்ளையை மிதிச்சு மோதியிடுறமெண்டு ஓடிவருகுதுகள். ‘ஐயோ, என்ர பிள்ளை!’யெண்டு  நான் கத்துறன். அப்ப திடுமன ஒரு ஆனை வந்து தும்பிக்கையிலை ஒரு கம்பை வைச்சு ஆட்டி ஆட்டி அந்த மிருகங்களைக் கலைக்குது. நான் டக்கெண்டு கண்முழிச்சுப் பாத்தா, பிள்ளை உழத்திறதெல்லாம் நிண்டு பேசாமல் கிடக்கு. மூச்சு சீராய் வந்துகொண்டிருக்கு. முகமெல்லாம் வேர்வை. நான் நிமிந்து சீலைத் தலைப்பாலை வேர்வையைத் துடைச்சுவிடவெண்டு நெத்தியைத் தொட்டா… நெத்தி பச்சைத் தண்ணிமாதிரிக் குளிராய்க் கிடக்கு. நான் நெஞ்சு, கமக்கட்டு, கழுத்து எண்டு எல்லா இடமும்; தொட்டுத் தொட்டுத் பாக்கிறன். காச்சல் இல்லை.”

சாத்திரி வாய் நிறைய அட்டகாசமாய்ச் சிரிக்கிறார். “நான் உங்களுக்கு சொல்லலியா, உங்களுக்கு வாலாயமான சாமி கணபதிதான்னு. அந்தச் சாமிதான் ஆனை உருவத்தில வந்து இப்ப உங்க மகனைக் காப்பாத்தியிருக்கு.”
“மெய்தான் இருக்கும், சாத்திரியார்” என்று அம்மா பரவசப்பட்டு கண்கலங்குகிறாள்.

முருகா…. முருகாவென்று வாய் நிறையச் சொல்லுகிறவள் அம்மா. எந்த இட்டல் இடைஞ்சலுக்கும் அவளுக்கு ‘அப்பனே முருகா!’ என்றுதான் வரும். அன்றைக்கு அவள் பிள்ளையாரப்பா என்றும் சொல்லத் தொடங்கினாள்.
அந்த உரையாடற் கணத்தில் நான் எங்கிருந்தேன் என்பது எனக்கு இப்போது ஞாபகத்திலில்லை. அங்கனதான் எங்ஙனயோ ஏதாவது செய்துகொண்டு நின்றிருப்பேன்.

ஆனால் அந்த உரையாடல் ஒரு சொற்சித்திரமாயும், அம்மா யானை கம்பை ஆட்டிய விதத்தைக் காட்டியமை ஒரு அழியாச் சித்திரமாயும் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன.

பிள்ளையாரையும் யானையையும் அன்று மிக அணுக்கமாக என் மனம் வரித்திருந்தது. புத்தகங்களில் யானையை மிகவும் விருப்போடு பார்க்க ஆரம்பித்தேன்.

யானையும், கடவுளும் என் மனத்தில் பின்னமற இணைந்திருந்தன.
அதனால்தான்போலும் சாத்திரி கடைசியாக எங்கள் வீடு வந்துசென்ற மூன்று நான்கு மாதங்களின் பின்னால் தோன்றிய என் கனவிலும் ஒரு யானை வந்திருந்தது. அந்த யானையும் தும்பிக்கையில் ஒரு தடியை வைத்துச் சுழற்றியபடி நின்றிருந்தது.

இது கனவுதானா அல்லது அம்மாவின் சொற்சித்திரத்தின் மீள் நினைப்பா என்று இப்போது எனக்கு ஐயமுண்டு.

இது கனவெனில் இதுவே என் முதல் கனவு.

இதையே நான் மறுநாள் காலை அம்மாவிடம் இவ்வண்ணம் சொல்லியிருந்தேன்: ‘ராத்திரிக் கனவில பிள்ளையாரப்பாவைக் கண்டனம்மா.’
‘என்னடா, பிள்ளையாரப்பாவைக் கண்டியோ?’ அம்மா வியந்தாள்.
‘ஓமம்மா. தும்பிக்கையில தடியை வைச்சு ஆட்டிக்கொண்டு நிண்டாரம்மா.’
நானுமே ஒரு கடவுள்க் கனவைக் கண்டதாய் அம்மா அப்போது பக்தி பரவசமாகியிருக்க முடியும். தான் சொன்னதே எனக்கு கனவாகியதென்பதை அவள் யோசித்திருக்க முடியாது.

அவள் அன்றிலிருந்து பிள்ளையார் சதுர்த்திபோன்ற விரதங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.

பற்றைகளைத் தவிர சிறுகாடுகூட கண்டிராதிருந்த எனக்கு யானையைக் காண்பதற்காகவே காடு பார்க்கிற ஆசை உருவாகியிருக்க வேண்டும். யானை ஒரு காட்டு மிருகம் என்பதைத் தவிர வேறு விபரம் தெரிந்திருக்க முடியாத வயதுதான் அப்போது எனக்கு.

முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முந்திய வரு~ம் அரிவரி படித்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பால் குடியை நிறுத்தியதும். ‘இதென்ன, வெக்கங்கெட்ட வேலை? இந்த இளந்தாரி வயசில போய்ப் பால் குடிச்சுக்கொண்டு’ என்று பார்த்தவர்கள் கேலி செய்யச்செய்ய பள்ளி முடிந்து மதியத்தில் ஓடி வந்து அம்மாவை இழுத்துப்போய் இருத்தி நான் தாய் முலை உண்டிருக்கிறேன்.

ஓளவையார் சினிமாவில்தான் நான் முதன்முதலாக அசையும் யானை பார்த்தது. அப்போதும் அந்தப் பெருமிருகம் எனக்கு ‘ஆனை’தான். நான் பெரியவனாக வளர்ந்து மிருகக் காட்சி சாலையில் பார்க்கும்வரை எனக்கு யானை அசையும் படமாகவே இருந்தது. அப்போது ‘ஆனை’ என்பது ‘யானை’ ஆகியிருந்தது.

மிகப் பின்னாலேதான் காட்டானையொன்றை நான் நேரில் கண்டேன்.
ஒருவகையில் சொல் ஒன்று என்னில் ஏறிநின்று செய்த மிகப்பெரும் விளையாட்டுகளில் ஒன்றாக, முதலாவதாக, இதைக் கொள்ள முடியும்.

(முனை 2 தொடரும்)‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ பதில்மறுப்பு…

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த  வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் வி~யங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.
ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது.
என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?
எமது நேரடிப் பேச்சில் பலமுறையும் ‘வாசிப்புக்குப் போதுமான நேரம் இப்போது கிடைக்குதில்லையே’ என்று நான் வெளிப்படையாகச் சொல்லிவந்த என் ஆதங்கத்தினைக்கொண்டு இந்த முடிவிற்கு வந்தீர்களோ என என்னால் இப்போது ஓர் அனுமானத்தைக் கொள்ள முடிகிறது.
இந்த இடத்தில் என் வாசிப்புப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். வாசிப்பு என்பது எனக்கு உணவுபோன்றதுதான், கிரிதரன். போன மாதம் முதலாம் திங்கள் கிழமை மதிய உணவாக என்ன கொண்டீர்கள் என யாராவது யாரையாவது கேட்டால், எப்படிப் பதிலிறுக்க முடியாது போகின்றதோ, அதுபோலத்தான் போன மாதம் நீங்கள் வாசித்த நாவலின், சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கத்தைக் கேட்டால் சிலவேளைகளில் - சிலவேளைகளில்தான் - என்னால் சொல்லமுடியாது போய்விடுகின்றது. ஏனெனில் அதன் இன்பமும் அதனால் விளையும் அனுபவமுமே என் குறிக்கோளகள்;;. வாசித்த நூல்கள் வி~யத்திலேயே எனக்கு இந்தவிதமான இடர்ப்பாடு உண்டு.
மேலும், என் வாசிப்புக்கு உட்படும் இலக்கியப் பிரதியானது என்னைத் தன்னோடு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வல்லபம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிரதியின் இன்பம் என்பதை அணுஅணுவாக ரசிப்பவன் நான். நல்லது என்கிற மதிப்புரைகளுக்கு மேலாக, நண்பர்கள்மூலமான சிபார்சுகளுக்கு மேலாக ஒரு பிரதியின் அட்டைப்படத்திலிருந்து, அதன் அச்சாக்க முறை, அது எதுபற்றியது என்ற பதிப்பக பின்னோ-முன்னோவான அடையாள வரிகளிலிருந்தும், அப் படைப்பாளியின் முந்திய படைப்பின் தரத்திலிருந்தும் ஒரு நூலை நான் தேர்வுசெய்கிறேன். அவ்வாறு வாசிக்க நான் புகும் பிரதி தன் கருத்துச் சொல்லும் பாங்கால், மொழியால், நடையால், கட்டமைப்பால் என்னை ஈர்த்துச் செல்லவேண்டும். அல்லாவிடில் என் வாசிப்புப் பயணம் இடைநிற்பதைத் தவிர்கவே முடிவதில்லை என்னால். அது பிறகொருகால் தொடரலாம் அல்லது நின்றுபோக நேரலாம். எதுவும் உத்தரவாதமில்லை.
இன்னும் சொல்லப்போனால் வெகுஜன வாசிப்புத் தன்மையைக் கொண்டிருப்பதாக நினைக்கும் எந்த ஒரு நூலையும் அதன் உள்வி~யங்கள் காத்திரமாக இருக்கலாமெனக் கருதினாலும் நான் சந்தேகத்தோடேயே அணுகுகிறேன். அது, நான் முன்னர் சொன்னதுபோல் என் கைப்பிடித்து நடத்திச் சென்றால், கூடச் செல்லவும் நான் என்றும் பிகு காட்டியது இல்லை. வி~ய காத்திரம்கொண்ட சில நூல்கள் கலைத்துவம் இல்லாத நிலையில் என்னால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இது என் இலக்கிய ரசனைசார் வி~யம்.
மற்றும்படி எனக்கு இன்னொரு வகையான வாசிப்பும் இருக்கிறது. அது என் மனத்துள் தீவிர இலக்கிய தாகத்தை விதைத்த சிறுசஞ்சிகை சார்ந்த வி~யங்கள். இவற்றையெல்;லாம் ஒரு தேடலோடுதான் நான் வாசிப்புக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறேன். இவ்வகையான தேடல் இருந்தும் சிலபல படைப்புக்கள், கருத்துக்கள் எனக்கு அகப்படாது போகின்றன என்பதும் நிஜம்தான்.
ஆனால் கிடைக்கும் எந்த ஒரு என் தேடலிற்குட்பட்ட எழுத்தையும் அதன் தன்மையை அறிவதற்காகவேனும் நான் வாசித்தே வந்திருக்கிறேன். அதுபோல சிறுகதை, நாவல் என்ற மகுடங்களோடு வரும் பல ஈழத்து, புலம்பெயர்ந்த எழுத்துக்களையும் ஒரு கடப்பாட்டோடு என் வாசிப்பின் விருப்புத் தன்மைகள் இல்லாதவேளைகளிலும் நான் என் வாசிப்புக்கு உட்படுத்தத் தவறியதே இல்லை. தமிழகத்தில் அறுபதுகளில் கலைமகள், அமுதசுரபி, சரஸ்வதி, கணையாழிபோன்ற சஞ்சிகைகளில் வெளியான ஈழத்தவரின் எழுத்துக்களைக்கூட அவ்வாறான ஒரு மூர்த்தண்யத்தோடுதான் நான் வாசித்து வந்திருந்தேன். என் தேடலினதும், வாசிப்பினதும் புலம் அங்கிருந்து தொடங்குகிறது, கிரிதரன்.
அந்தத் தீவிரத்தினால்தான் தன் பிரதித்தனத்தால் என்னைக் கவராத எந்த எழுத்தையும் தூக்கிவீச நான் என்றும் தவறாமல் இருக்கிறேன். அதுபோல் ஆயிரம் மதிப்புரைகள் மோசம் என்று சொன்ன எழுத்தையும் என் சங்கப்பலகைபோன்ற வாசிப்புமனம் இடங்கொடுக்கச் சம்மதிப்பின் தூக்கிப்பேசவும் நான் தவறியதில்லை. என் விமர்சன மனத்தின் தன்மை இதுதான். இதற்குக் கீழே மேலே இல்லை.
இவ்வளவு வாசிப்பும் இவ்வெழுத்துக்கள் ஊடாகப் பிறந்த எந்தவொரு இலக்கியப் போக்கினையும் புரிந்துகொள்ள எனக்குப்போலவே எவருக்கும்தான் இடம் கொடுக்கும் என்பதே என் நிலைப்பாடு. எமக்கும் தொழிலார்த்தமான மதிப்புரையாளர்களதும், பட்டப்படிப்புக்கான ஆய்வாளர்களதும் எழுத்துத் தன்மையில் நிறைய வித்தியாசமிருக்கிறது, கிரிதரன். வாசிப்புச் செயற்பாட்டிலும் அதைக் காணமுடியும். இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் இன்னுமொன்றை நான் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். அவர்களின் பட்டியலிடும் வேலையில் கால்பங்கினைக்கூட எம்மால் செய்துவிட முடியாது. மேலும் ஆய்வொழுங்கு விவகாரத்திலும் அவர்களது ஒழுங்கில் நம்மால் செயற்பட முடியாதேதான் இருக்கிறது. அது, அவர்களாலும் ஒரேமாதிரியில்போலன்றி இன்னொரு மாதிரியில் செய்யமுடியாதிருக்கிறது என்பதன் இன்னொரு முகம். உதாரணங்கள் தரட்டுமா? என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது. அது தேவையில்லையென நினைக்கிறேன்.
இங்கிருந்து தொடங்குகிறபோது ஓர் உரைக்கட்டில் சிலவேளைகளில் பட்டியலும், உபரியான தரவுகளும் தகவல்களும் தவறிப்போக நிறையவே வாய்ப்பிருக்கிறது. எனது உரைக்கட்டிலுள்ள விடுபடல்களையும், போதாமையினது தன்மைகளையும் நான் இவ்வாறுதான் விளங்கிக்கொண்டது. தாயக இலக்கியத்தில் யோ.கர்ணன், நிலாந்தன் ஆகியோர் தவறியிருக்கிறார்கள். அது திட்டமிட்ட ஒதுக்குதலல்ல. இன்று பரவலாக இணைய தளங்களில் அவர்கள் இருவரும் பேசப்படினும், யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’ யென்ற அவரது முதல் தொகுப்பின்மூலம் பெரிய நம்பிக்கைக்குரியவராக எனக்கு அவர் தோன்றாத வரையிலும், அவரது இரண்டாம் தொகுப்பான ‘சேகுவேரா இருந்த வீடு’ தொகுப்பினை இன்றுவரை வாசிக்காத நிலையிலும், அவரது அதிர்ச்சி மதிப்பீடுகளதும் கலைத்துவ அம்சங்களதும் சேர்மான விகிதங்களைத்  துல்லியமாக மதிப்பிட முடியாததனாலேயே எனக்கு அவ்வாறு செய்ய நேர்ந்தது. இந்த விடுபடல்களையும் நானேதான் வெளிப்படுத்தினேன். என் உரைக்கட்டின் அந்த என் நேர்மையினையும் நீங்கள் என் வாசிப்பின் போதாமையாக நினைத்திருக்கிறீர்கள். போகட்டும்.
புதுவகை எழுத்தாக அனுபவங்களைப் பதிவுசெய்யும் ஒருவகை இலக்கியம் நம்மிடையே வலுவாக வளர்ந்துவருகிறது. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற சி.பு~;பராசாவினதும்இ ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற கணேசன்(ஐயர்) நூலும்இ ‘அகாலம்’ என்ற பு~;பராணியின் நூலும் முக்கியமான பதிவுகள். தாம் சார்ந்த அரசியல் ஈடுபாடுகளையும்இ நிகழ்வுகளையும் அந்நூல்கள் விரிவாகப் பேசின. ஒருவகைப் பயணநூல் வகைதான் இவையும். என்றாலும் வி~யங்கள் வேறானவை. இவ்வாறு கட்டுரை இலக்கியமும்இ ஆய்வு இலக்கியமும்இ அதுபோல் விமர்சன இலக்கியமும் என் உரைக்கட்டில் விடுபட்டே இருக்கின்றன.உங்கள் எதிர்வினையில் நான் தவறவிட்டதாக நீங்கள் சொன்ன சில வி~யங்களில் குறிப்பாக மொழிபெயர்ப்பு இலக்கியம், இணையங்கள், பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவை தவறியதான தகவலினை நான் மறுக்கப்போவதில்லை. ஆனாலும் உரைக்கட்டின் விரிவஞ்சி பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற இரண்டாந்தர முக்கியத்துவமுடையனவற்றைத் தவிர்ப்பதாக என் உரைக்கட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேனே, கிரிதரன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?
அதையும் விட்டுவிடலாம். ஆனால் இங்கே நீங்கள் சொல்லாதுவிட்ட சில ஆகக்கூடிய முக்கியத்துவங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கனடாவைப் பொறுத்தவரை பத்திரிகைகளை நான் குறிப்பிட்டிருந்தால்  ‘வைகறை’யைத் தவிர்த்திருக்கவே முடியாது. அது அப்போது வெளிவந்துகொண்டிருந்த அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்தும் தன்மையால், போக்கால் வேறுபட்டிருந்தது. அது ஓர் எதிர்க்கதையாடலின் களமாக இருந்தது. ‘தாயக’த்தையும், ‘கால’த்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள். மறுப்பில்லை. அவை வரலாற்றுக்கு முக்கியமானவை. ஆனால் ‘தேட’லையும், ‘மற்ற’தையும், ‘அறிதுயி’லையும், ‘உரைவீச்’சையும், ‘அற்ற’த்தையும், ‘ழ’வையும் தவறவிட்டிருக்கிறீர்களே.
ஆம், நான் இப்படித்தான் கருதிக்கொள்கிறேன். உங்களுக்கு தகவல்கள் தேவையாயிருக்கின்றன. எனக்கு தகமைகள் தேவையாயிருக்கின்றன. நீங்கள் ‘சிரித்திரன்’ பதிவு பெறாது போய்விடுமோ என ஆதங்கப்படுகிறீர்கள், நானோ ‘அலை’யும், ‘சம’ரும், ‘மூன்றாம் மனிதஷனும், ‘சரிநிக’ரும் தவறிவிடக்கூடாதேயெனக் கவலைப்படுகிறேன். ‘சிரித்திர’னும், ‘அலை’யும் எனக்கு ஒன்றல்ல என்பது முக்கியம்.
இன்னுமொன்று. ‘பனியும் பனையும்’ தொகுப்பிற்கு ஏறக்குறைய நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற பிரான்ஸ் நாட்டு அமைப்பிலிருந்து மூன்று கதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இக் கதைத் தொகுப்புகள்பற்றிய தகவல் உங்களுக்கு முக்கியமென்பதற்காக இதைச் சொன்னேன். மேலும் மித்ர பதிப்பகத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆனால் காத்திரமான நூல்களைப் பதிப்பித்துவரும் வடலியை விட்டுவிட்டீர்களே.
தொகுப்புகள்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனக்கு மறுப்பில்லை. ஆனால் தமிழகப் படைப்பாளிகளதும், தாயகப் படைப்பாளிகளதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளதும் ஆக்கங்களோடு வெளிவந்த அவற்றை எந்தவகைமைக்குள் போட்டு கணிக்கமுடியும் எம்மால்? சொல்லுங்கள், கிரிதரன்.  தொகுப்பினை வெளிக்கொண்டுவந்தவர்கள்; வாழும் நாடு மேலைநாடுகளாக இருப்பதைக்கொண்டு அவற்றைப் புலம்பெயர்ந்தோர் தொகுப்புகள் எனலாமா? ஏன், அவை அச்சடிக்கப்பெற்ற இடத்தைக்கொண்டு தமிழகத் தொகுப்புகள் என்றால் என்ன? எனக்கு அவசரமாக விடை தெரியவேண்டுமென்பதில்லை.
அத்தோடு நவீன, மரபு சார்ந்த நாடகங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்களே, அவற்றை இந்த இலக்கிய விசாரணையில் எங்கே, எப்படிப் பொருத்திக் காண்பது என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். தமிழ் கற்பிப்பதை இலக்கிய வகைமைக்குட் சேர்க்கலாமா என்பதும் எனக்குத் தெரிந்தாகவேண்டும்.
‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என வள்ளலார் சொன்னதுபோல், ‘அச்சில் வந்ததெல்லாம் இலக்கியம் என்ற எண்ணங்கள் மண்மூடிப் போக’ எனவே என்னால் நினைக்க முடிகிறது. நீங்கள் தொகையினை வைத்து புலம்பெயர்ந்த இலக்கியம் வளர்ந்திருக்கிறது என்கிறீர்கள். நானோ அச்சில் வந்தவற்றின் தகைமைகளை வைத்து அது வளரவேயில்லை என்கிறேன்.
இறுதியாக இன்னுமொன்றுபற்றி உங்களுக்கு எழுதவேண்டும். புகலிட இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பன பற்றியது அது. யோசித்துப் பார்க்கையில் இவையிரண்டும் வௌ;வேறான கருதுபொருள்களைக் கொண்டிருக்கின்றனவென்பது தெரியவே செய்கிறது. ஆனாலும் இந்தவகைக் கருதுபொருள் வேறுபாடின்றி இரண்டும் ஒருபொருள் குறித்த வௌ;வேறான சொற்களாகவே இதுவரை காலமும் பாவனையில் இருந்து வருகின்றன. ஒருபொருள் குறித்தனவாகவே இதுவரையான என் எழுத்துக்களில் நானும் இவற்றைப் பாவித்து வருகிறேன்.
2010இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் புலம்பெயரியம் என்ற ஒரு சொல்லை இக் கருதுகோளினை விளக்க தமிழவன் உபயோகித்திருக்கிறார். ‘தாயகம் கடந்த தமிழிலக்கியம்’ என்பதே கருத்தரங்கின் தலைப்பாகவும் இருந்திருக்கிறது. புலம்பெயரியத்தின் ஒரு பகுதியாகவே தாயகம் கடந்த தமிழிலக்கியத்தையும் கருதுகிறார் அவர். இதற்கு ஆதாரமாக சிகாகோ பல்கலைக்கழகத்திலிருந்து சென்றிருந்த சாசா எபெலிங் என்பவர் வாசித்த உரைக்கட்டின் கருத்தமைவையும் சுட்டிக்காட்டுகிறார். சாசா எபெலிங்கின் உரைக்கட்டு இவ்வி~யத்தை சற்று விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிகிறது. புலம்பெயர் இலக்கியமென்பது எதுவென அதில் ஒரு கோட்பாட்டு விளக்கம் அளிக்கப்படுகிறதாய் தமிழவன் கருதுகிறார். குடியேறிய புலத்தினதும், குடிபெயர்ந்த புலத்தினதும் கலாசாரங்கள் இணையும் கணத்தினது உட்பொருளாகக் கூடியது இந்த புலம்பெயர் இலக்கியம் என்பது சாசாவினது கருத்து.
இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய கருத்தாக்கமே புலம்பெயர் வி~யமென்பது விளங்குகிறது. புகலிடத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியமென்ற சொல்லாக்கங்கள் இக்கருதுகோள்களினை விளக்கப் போதுமானவையென நாம் அறுதியாகச் சென்று அடையும்வரை காத்திருக்கவே வேண்டும். அதாவது சொற்களுக்கான காத்திருப்பே இது. மற்றும்படி கருதுகோள்கள் உருவாகிவிட்டன. அதனால்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் இரண்டு பகுதிகளாகக் கூடியதான அவதானிப்பை புலம்பெயர்ந்த ஆங்கில இலக்கியப் பகுப்புகளினையொட்டி நான் என் உரைக்கட்டில் எழுதியது.
இவ்வாறான தெளிவான சொல் வரையறை ஏற்படுகிறபட்சத்தில் ஈழத்தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாக புகலிடத் தமிழிலக்கியமே இருத்தல் முடியும், புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியம் அல்ல என்பதாக என் உரைக்கட்டின் அர்த்தமும் மாற்றம் பெற்றுவிடும்.
புகலிட  (உயிருக்கு அபயமாகக் கொண்ட இடத்தினது) வதிவு என்பதை அரசியல் தஞ்சம் கேட்டு வந்தவர்களினதாகக் கொண்டால், புலம்பெயர்ந்தோர் வதிவு என்பதை குடியேறிகளது வதிவாகக் கொள்ளமுடியும். இதை ஏறக்குறைய எக்ஸைல் (நுஒடைந) என்ற அந்தஸ்துக்கும், மிக்கிறன்ற் (ஆபைசயவெ) என்ற அந்தஸ்துக்கும் இணையானதாகக் கொள்வதில் தவறிருக்காது எனவே நினைக்கிறேன். இதனால் உங்கள் சொற்தேர்வில் என்னால் உடன்பட முடிகிறது.
முதலில் குறிப்பிடப்பட்டவர்கள் முந்தி வந்தவர்களாகவும் இருக்கிற வகையில், ஐரோப்பிய வடஅமெரிக்க வாழ் இலங்கைத் தமிழரிடையே எழுந்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியமாகக் கொள்ளலாம். பின்னால் வந்தவர்கள் விருப்பக் குடியேறிகளாவர். அவர்கள் காலத்தில் வரும் படைப்புகளே புலம்பெயர்ந்தோர் இலக்கியம்.
இன்னுமொன்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது தனியே இலங்கைத் தமிழருடைய படைப்புக்களை மட்டும் கொண்டிருந்துவிட முடியாது. மேலும் புகலிட, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு படைப்பாளியிடமிருந்துமே உருவாக முடியும். அப்படி உருவாகியிருக்கிறது. இந்தப் பகுப்புக்கூட சிரமங்களோடு காலவாரியாகப் பகுக்கப்பட வேண்டியதாகும்.
முழுமையின் தன்மை பகுதிக்கும் உண்டென்பது விஞ்ஞானமெனில், ஈழத்து தமிழ் இலக்கியத்தின் தன்மை புகலிடத் தமிழ்இலக்கியத்திலும் இருக்க முடியும்.
முதலில் நான் ஒரு பிரச்சினையைத் தெளிவுபடுத்தவேண்டும். அதாவது, தமிழகத்திலிருந்து எழுதிய (நான் உட்பட) செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் போன்றோரின் படைப்புக்களை புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அடக்கலாமா என்ற பிரச்சினைதான் அது. இதுவரை காலத்தில் இப்படியான வரைவுள் அவர்களது படைப்புக்கள் வந்திருக்கின்றனவா? இதற்கான பதில் கொஞ்சம் க~;டமானதுதான்.
ஆனால், எனக்குத் தெரியும், உண்மையான புகலிட எழுத்தாளர் (எக்ஸைல்) என்ற வகைமைக்கு இன்றைக்கும் அவர்களேதான் உதாரணமாய் இருக்கிறார்கள் என்பது. இந்த ஐந்து தசாப்த காலத்திலும் முதல் தசாப்த காலத்தில் தவிர வேறெப்போதுமே புகலிடகாரர் ஐரோப்பாவிலோ, வடஅமெரிக்காவிலோ இருந்திருக்கவேயில்லை.
இந்தக் கண்டங்களிலே இருப்பனவெல்லாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள்தாம். அதாவது விருப்பக் குடியேறிகளின் இலக்கியங்கள். அவை புகலிட இலக்கியங்களிலிருந்து தன்மையில் மாறுபட்டன. அப்படியான தன்மை மாற்றம் நிகழ்ந்திருப்பின் அது பாய்ச்சலாகவே இருந்திருக்கும். அப்படி ஒரு பாய்ச்சல் நிகழவேயில்லை. புறநடை எழுத்துக்கள் உண்டு. அவற்றினால் பொதுவிதியை நிர்ணயித்துவிட முடியாது.
சுமதி ரூபனும், வி.கந்தவனமும், மனுவல் யேசுதாசனும் அவர்களது எழுத்தின் களத் தன்மைகளுக்காகவே எனது உரைக்கட்டில் எடுத்துப் பேசப்பட்டிருந்தார்கள். ஆனாலும் கலைத்துவம் சிலரின் சில படைப்புக்களில் இருக்கவே செய்கிறதுதான். ஆனால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இவற்றினால் எல்லாம்கூட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்ந்திருப்பதாக என்னை எண்ணவைத்துவிட முடியாது. அந்தவகையான நம்பிக்கைக்குக்கூட இந்த நிமி~த்தில் என்னிடத்தில் ஆதாரமில்லாமலே இருக்கிறது.
என் உரைக்கட்டினது தீர்மானங்களின் தளம் இங்கேதான் ஆதாரம்கொண்டிருக்கிறது, கிரிதரன்.
நட்புடன்,
தேவகாந்தன்
'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...