Posts

Showing posts from November, 2020

சொல்லில் மறைந்தவள் - சிறுகதை

  யாழ் பல்கலைக் கழக கலைப் பீடத்திலிருந்து 2000இல் வெளியேறி, அப்போது வெளிநாடுகளில் அகதிகளாகவும் குடியுரிமை பெற்றவர்களாகவும் வசித்தவர்களில் பன்னிரண்டு குடும்பங்கள் தமது   ஐந்தாவது ஒன்றுகூடலுக்காக   அந்த 2018 ஓகஸ்ற் 11 சனிக்கிழமை மாலை   டென்மார்க்கிலுள்ள சிவநேசன் வீட்டில்   கூடியிருந்தன. அதன் உறுபயன் அவர்களால் உணரப்பட்டதோ இல்லையோ, அந்த இடம் மட்டும் வெகு கலகலப்பிலும், மகிழ்ச்சியிலும் இருந்துகொண்டிருந்தது. வெடிச் சிரிப்பு, கிணுகிணுச் சிரிப்பென பலவகைச் சிரிப்புகளும் அங்கே பொங்கிக்கொண்டிருந்தன. இறுதி யுத்தத்தின் உடனடிப் பின்னாக இலங்கை சென்ற சர்வேஸ்வரன், பல்கலைக் கழகத்தில்   தன்னுடன் படித்தவனும், அப்போது ஜேர்மனியில் குடியிருந்தவனுமான மூனா. கனகசபையை கொழும்பு செட்டித் தெருவில் எதிர்பாராதவிதமாகச் சந்தித்தபோது நிகழ்த்திய உரையாடலில்தான் அந்த ஒன்றுகூடலுக்கான திட்டம் விழுந்தது. மூனா.கனகசபையும் அதை ஆதரிக்க, செட்டித்தெரு தேநீர்ச்சாலையொன்றில் அதற்கான நடைமுறைத் திட்டங்கள் உடனடியாக இருவரிடத்திலும் விரிவுபெற்றன. சர்வேஸ்வரன் பிரான்சுக்கும், மூனா.கனகசபை ஜேர்மனிக்கும் திரும்பிய பின்னரும் ஆறு மாதங்களாய