பொறியில் அகப்பட்ட தேசம்’

‘பொறியில் அகப்பட்ட தேசம்’
மு.பொ.வின் கவிதை நூல் மூலம்
சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க் கவிதைப் பரப்பு



2002 இல் வெளிவந்த மு.பொ.வின் நீண்ட கவிதை நூலான ‘பொறியிலகப்பட்ட தேசம்’, அது வெளிவந்த காலத்திலேயே பலத்த எதிரும்   சார்புமான  விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவின் வர்த்தக வலயமான இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் உடனடிப் பின்னாக வெளிவந்த நூல் என்ற வகையில் இதன் வரவும், இது முன்வைத்த கருத்துக்களும் மிகமுக்கியமானவையாக இருந்தன. அந்த இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் பின் கடந்தோடிய இத்தனை ஆண்டுகளில் தகர்ப்பு விளைத்த அரசியலின் பயங்கரவாதங்களையே உலகத்தின் மய்ய அரசியல் நிகழ்வுகளாக இந்த உலகம் கண்டுவந்துகொண்டிருந்தது.

2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை இந்தக் கலம்பகங்களின் ஒட்டுமொத்தமான விளைச்சல் எனலாம். இதன் சார்புநிலை நாடுகள்கூட இந்தப் பொருளாதாரச் சிக்கலில் ஆழமாகச் சிக்குண்டுபோயுள்ளதை நிதர்சனம் தெரிவிக்கிறது. இப்போது ‘பொறியிலகப்பட்ட தேசம்’ காலகாலத்துக்கும் தமிழ்க் கவிதையுலகில் நினைக்கப்பெறும் தகவுடையதாகியிருக்கிறது.

நியூயோர்க் உலக வர்த்தக மய்யமான இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட நிகழ்வு குறித்து ழீன் போத்ரியா பின்வருமாறு எழுதினார்: ‘நிகழ்வுகள் தொழிற்படத் தொடங்கிவிட்டன. நம்முன் இருப்பது முழுமுதலான ஒரு நிகழ்வு. அனைத்து நிகழ்வுகளுக்கும் ஊற்றாக அமையும் ஒரு நிகழ்வு. இதுவரை நடைபெற்றிராத அனைத்து நிகழ்வுகளையும் தன்னுள் கொண்டிருக்கும் தூய்மையான ஒரு நிகழ்வு.’ மேலும் அவர் தொடர்ந்து, ‘வரலாற்றின், அதிகாரத்தின் விளையாட்டு முழுவதும் இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டது’ என எழுதினார்.

அந்தப் பாதிப்பின் ஒருமுகத் தோற்றம்தான் இன்றைய உலக பொருளாதார நெருக்கடி. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, ஒரு தேசம் தன் செய்கையினாலேயே ஒரு பொறியில் அகப்பட்டுவிட்ட தன்மை தெளிவாய்ப் புரியும். இதை முன்னறிவிக்கும் தமிழ்க் கவிதைப் பிரமாண்டம்தான் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ கவிதை.

கவிதைப் படைப்பொன்று அறிவார்த்தமாக அணுகப்படக்கூடாதது என்பார்கள். அதுபோல அப்படைப்பு முயற்சியும் அவ்வண்ணம் அமையக்கூடாது. ஆனால் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ அறிவார்த்தமாய் அணுகப்படாவிட்டால் கவிதையாய்த் தெரியாது என்பது இங்கே முக்கியம்.

இக் கவிதையை எப்போதும் நினைவுகொள்ள முடியுமாயினும், இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்மையில் லண்டனில் நூலாக வெளிவந்திருப்பதனை ஒட்டி ஆழமாக நினைக்க நேர்ந்தது. A Country Entapped என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் நூலில் இரண்டு நீள்கவிதைகள் இருக்கின்றன. ஒன்று தமிழில் வெளியாகிய ‘பொறியிலகப்பட்ட தேச’த்தின் ஆங்கில மொழியாக்கம். மற்றது, A Song of Liberated   Zone என்ற கவிஞராலேயே ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற கவிதை.
கனடா இலக்கியமாக, புலம்பெயர் இலக்கியமாக, ஈழ இலக்கியமாகக் கிளைவிடும் எதுவும் தமிழிலக்கியமாகவே பொதுமை பெறுகின்றது. நதிகளெல்லாம் இறுதியில் சமுத்திரத்தில் சங்கமமாவது போல இது. எனினும் இந்தப் பொதுத் தமிழிலக்கியத்தில், கிளைகளில் உதிர்ந்து விழுந்துவிடாத
 கனித் திரட்சியே இறுதியில் கலந்துகொள்கிறது என்பதும் கவனிக்கப்பெற வேண்டும். தமிழிலக்கியமே உலக இலக்கியமாகின்ற தளமும் இங்கிருந்தே தொடங்குகிறது என்பதுதான் இந்த வரிசைப்பாட்டின் விசேஷம்.

பரந்துபட்ட பார்வையென்பது மானுடத்தை நோக்கிய முன்னகர்வுதான், அதன் தேடல்தான். இதுபோன்ற உலகளாவிய பார்வைகள்கொண்ட தமிழ்க் கவிதைகள் சிலவேனும் நம்மிடம் உண்டு. பாலஸ்தீனத்தையும், கறுப்பின எழுச்சிகொண்ட தென்னாப்பிரிக்காவையும் தமிழ்க் கவிஞன் பாடியே இருக்கின்றான். சோஷலிசப் புரட்சி வென்ற தருணத்தில் அதை வரவேற்றுப் பாடிய பாரதியிலிருந்துதான் இந்த உலகளாவிய தமிழ்க் கவிதைப் பார்வை தொடங்குவதாகக் கொள்ளமுடியும்.

‘பொறியிலகப்பட்ட தேசம்’ இவற்றின் உச்சம். அது இன்றைய அரசியலின் அறத்தைப் பேசியிருக்கின்றது. ஒரு பிரிட்டிஷ்  அறிஞர் கூறியிருந்தார், ‘பயங்கரவாதமென்பது வறியவரின் போர். போர் என்பது செல்வந்தரின் பயங்கரவாதம்’ என்பதாக. இந்த உண்மையை மறுத்தே அனைத்து ஊடகங்களினதும் கருத்து உள்ளோடிய பிரச்சாரம் இருப்பினும், ஓர் உலக அமைதி எவ்வகையிலும் மானிடத் தேவையாகவே இருக்கிறது. சில புரிதல்களைக்கூட இந்த அதிகார அமைப்புகள் ஒப்புக்கொள்வதில்லை என்பது மோசமான நிலைமைகளையே ஏற்படுத்துகிறது.

L’esprit du terrorism  என்ற கட்டுரையில் ழீன் போத்திரியா பின்வருமாறு கூறுவார்: ‘பயங்கரவாதம் நடத்திய இந்தத் தாக்குதலின் பிரமாண்டமான வெற்றி, நம் முன் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் நம் மேற்கத்திய மனஅமைப்பைக் களைந்து விடவேண்டும்.’

ஆம், ஒரு மாற்றத்தை இந்த அமைப்பு கொண்டாகவேண்டும். இல்லையேல், அது முழு உலகத்துக்குமேதான் தீங்கானதாக அமையும். இதையே மு.பொ.வின் கவிதை நூல் தன் ஒட்டுமொத்தமான கருத்தாக உள்ளடக்கியிருக்கிறது.

தமிழ்க் கவிதை நூல் 2002 இல் வெளிவந்தபோது அதற்கான ஒரு விமர்சனம் என்னால் எழுதப்பெற்றது. அது தினக்குரல் பத்திரிகையின் வார வெளியீட்டில் அதன் இலக்கியப் பக்கமான ‘பனுவ’லில் தை 25, 2004 இல் வெளிவந்தது. அக் கவிதை நூலின் பொருள், கவிநுட்பம், நடைபற்றி இன்று நினைவுகொள்ள வாய்ப்பான வகையில் ‘தாய்வீடு’ வாசகர்களுக்காக அதை இங்கே தருகின்றேன்:

வரலாற்றை உந்தியதும், வரலாற்று உந்துதலில் விளைந்ததுமான சில நிகழ்வுகளின் மூலசக்திகளினூடாகப் படிமங்கள் கண்டடையப்பட்டு, வெகு பொருத்தமான கவிமொழியில் வெளிவந்திருக்கின்ற நெடுங்கவிதை நூல் மு.பொ.வின் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’. புதுகவிதையாயிருந்தாலும், புதிய எடுப்பாய் இந் நூல் சொல்லும் பொருள், சொல்ல வேண்டிய விதம் குறித்தான கரிசனையோடு நடை கண்டு தெளிந்து இந் நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த மு.பொ.வின் கவிதைத் தொகுப்பான ‘காலிலீலை’யின் சில கவிதைகள் இந் நடைக்கான ஆரம்ப முயற்சியாக இருந்தன என்பதை ஞாபகம்கொள்ள முடிகிறது.

ஓர் ஓசையினூடான பயணத்தையும், ஒரு கவியரங்காய் வெளிப்பரப்பை உருவகித்துக் கொண்டு விரிக்கப்படும் கவிதை, சொற்களில், சொல்லிணைவுகளில் புதுக்கவிதையின் பாய்ச்சலையும் தொடர்வது இக் கவிதையின் கட்டமைப்பு விசேஷம் எனச் சொல்லமுடியும். சிலவேளைகளில் அடுக்குமொழியின் --- திரும்பும் சொற்களின் உத்தி, வலிமைபோலவே பலஹீனத்தையும் நிறுவுகின்றது.

‘இடிபாடுக்களுக்கிடையேயிருந்து \ செல்பொன்கள் அனுங்கின\  ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற வரிகளில் மீளவரும் சொற்களின் வலிது, ‘எங்கிருந்திவைகள்? எங்கிருந்திவைகள்? எங்கிருந்திவைகள் எழுந்தன, எழுந்தன?’ என வருமிடங்ளில் இல்லை. இவை உணர்வுரீதியாய்க் குறைவுபட்டும் போகின்றன.

கவிதை முழுவதும் தன் கட்டிறுக்கத்தாலும், கட்டுமானத்தாலும் நிமிர்ந்து நிற்கிறது. ‘சமகாலத்திலுள்ள எத்தனை தமிழ்க் கவிஞர்களுக்கு இந்தக் கவிதையில் வரும் உருவ—உருவகப் பரிச்சயத்துக்கான புலமைப் பின்புலம் கிட்டுகின்றது’ என முன்னுரையில் பேராசிரியர் சிவத்தம்பி எழுப்பும் அய்யம் நியாயமானதே. புலமைப் பின்புலமும், கட்டிறுக்கமும் இக்கவிதையின் வேறுமுள விசேஷ அம்சங்கள். தமிழ் நெடுங்கவிதை வரலாற்றில் ஓர் எல்லையின் அடைதலையே இவை செய்திருக்கின்றன என்பது மிகையான கூற்றல்ல.

சிலுவை யுத்தம் தொடங்கி வியட்நாம், காஷ்மீர், ஈழப் போர்கள் யாவும் கவிதையில் பேசப்படுகின்றன. ஆக்கிரமிப்பும், சந்தைக்கான களம் தேடுவதும் இவற்றின் அடியோடிய காரணங்களாய் இருந்ததைக் கவிதை சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்காவின் ஆதிவாசிகளான செவ்விந்தியரதும், வியட்நாம் காடுகளின் பூர்வீகக் குடிகளதும், ஈழத்து வடக்கு, கிழக்கு மண்ணின் மக்களதும், இன்னும் ஏகாதிபத்திய வெறியில் அழிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுப் பிரஜைகளதும் குரல்கள் உக்கிரமமாய் எழுந்து மோதுகின்றன வாசகன் மனத்தில். ஏகாதிபத்தியத்தின் சூது புரிதலை, அதன் கொடுவிஷ  நகக் கிழியலின் வலிகளை வாசகன் உணர்கிறான். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற அவலக்குரல் மானுடத்தின் நம்பிக்கையின் கோஷமாய்  எழுந்துகொண்டிருக்கிறது.

இக் குரல் கடைசியாய் எழுந்த பூமி அமெரிக்கா. நியூ யோர்க் பெருநகரின் இரட்டை வர்த்தக மையங்களின் தகர்ப்பிலும், பென்ரகனின் எரியூட்டலிலும் அமெரிக்கா எடுத்தது பெரும் அபயக்குரல். அதில் பெரிய அவலமும் இருந்தது. அதுவும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்தான்.

இந்த இரண்டு அபயக் குரல்களுக்குமிடையேயான வித்தியாசத்தை வாசகன் புரியச் செய்வதில் வெற்றிபெறுகிறது கவிதை. இரண்டும் நிகரில்லை. ஆனாலும் சோகங்களே. இது வினை விதைத்ததின் வினையறுப்பு. இதில் வாசகன் பெரிதாய்ச் சோகப்பட்டு விடுவதில்லை.

சோவியத்தின் தகர்வில் அதற்குள்ளிருந்த சோகங்கள் காரணமாவதையும் இது சொல்லாமலில்லை. இது முன்னிறுத்துவது மானிடம். அதனால்தான் ஒருபோதில் கவிதை குரல்கொடுத்தது, ‘நான் உன்னையும்நோக்கி ஓடிவருகிறேன்.. எங்கள் இணைவு இப்பூதத்தை வேர்கல்லி எறியாதா’ என்று.

தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த வெறி, கனவு, விழிப்பு, பழி, வழி, சூறை, விசாரம் ஆகிய ஏழு பகுதிகளிலேயே திருப்திகரமான முழுமையை உருவாக்கியிருக்கவேண்டும். எட்டாம் பகுதியாய் நூலின்கண் வந்த சில வரிகளை மட்டும் சேர்த்திருந்தால் கவிதையின் முடிவு அற்புதம். ஹெலன் கதை மறுவாசிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் கவிதைக்கு அது அதிகம். மொத்தத்தில் புதுஎடுப்புகள் மூலம் தனக்கான ஓர் உன்னத இடத்தைப் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ ஸ்தாபித்திருத்துள்ளது எனத் தயங்காமல் சொல்லலாம்.

00000

தாய்வீடு 2008

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்