Posts

Showing posts from December, 2021

பெருமாள் (கதை)

      பெருமாள்   உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது , அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது . மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த   சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள் . முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது , அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது . அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது. கொழும்புப் புதினங்கள் அறிய விழைந்த பெரியவர்களின் ஆர்வத்திற்கும் கதி அதேதான். ஓடும் புளியம்பழமும்போல பழகவேண்டுமெனச் சொல்லிக்கொடுத்ததுபோல் அந்தக் குடும்பத்தில் எல்லோரும் விலகி விலகி நடந்துகொண்டார்கள். அவருக்கு பையன் பெண்ணாக ஒன்றுவிட்டு ஒன்றாய் ஆறேழு பிள்ளை