Posts

Showing posts from July, 2022

சாம்பரில் திரண்ட சொற்கள் 3

Image
  5 மார்கழி பிறந்திருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கலண்டர்ப்படியான குளிர் காலம் தொடங்கிவிடும். குளிரிருந்தது. ஆனாலும் குளிர் காலத்துக்கான குளிராக வெளி இருக்கவில்லை. ஜாக்கெற்றைப் போட்டுக்கொண்டு சுந்தரம் யாழ்ரன் தமிழ்க் கடைவரை போய்வர நடையில் கிளம்பினார். பின்முற்றத்தின்   சாய்வுப் பாதைவழி மேலேறி அவர் முன்புற தெருவுக்கு வர, பள்ளி முடிந்து பள்ளிவேனில் வரும் மகனுக்காகக் காத்திருந்த சாந்தரூபிணியை வீட்டு வாசலில்   கண்டார். முன்பெல்லாம் அவளேதான் மகனை பள்ளியில் விட்டும், திரும்ப வீட்டுக்கு அழைத்தும் வந்துகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கென்றொரு கார் இருந்தது. குளிர்கோட்டும், தலையில் கம்பளித் தொப்பியுமாக நின்றவளை முதலில் இனங்காண அவருக்குச் சிரமமாக இருந்தது. அவள் புன்முறுவல் காட்டியபோது அடையாளம் கண்டுகொண்டார். அவ்வாறான சமயங்கள் அபூர்வமானவை. ஒரே வீட்டில் கீழும் மேலுமாக இருப்பவர்களானாலும் அவரவரையும் வாழ்வின் விசைகள் தத்தம் திசையில் இழுத்துச் சென்றவாறிருக்கையில், அவ்வாறான தருணங்களை தம் குறைநிறைகளைத் தெரிக்கவோ, குறைந்தபட்சம் ஓர் உசாவலைச் செய்துகொள்ளவோ வீட்டுக்காரரும் குடியிருப்பவரும் தவற விட

சாம்பரில் திரண்ட சொற்கள் 2

Image
    3 ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை’ப் பாடலை பள்ளிச் சிறுவர்கள் கூவித்திரிந்த விடுதலையின் நாள் அன்றாகயிருந்தது. கொழுக்கட்டை தின்று, பனங்கட்டிக் கூழும் குடித்து மக்களின் பொழுதுகழிய, தேவாலயத்தின் பின்னாலுள்ள வயல் தோட்டங்கள் கடந்து, தெருமடம் தாண்டி, அதற்குமப்பாலுள்ள கடலுக்குள் போய் இறங்குகையில், கிழக்கில் ஏற்கனவே வியாபிக்கத்   துவங்கியிருந்த இருளை சூரியன் கண்டது. வெண்மணல் விளைந்திருந்த முற்றத்தில் சாக்கு விரித்தமர்ந்து வெற்றிலைப் பெட்டி அருகிருக்க பாக்குரலில் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த பவளமாச்சியைச் சூழ்ந்து ஆவலோடு அவள் முகம் பார்த்திருந்த ஐந்தாறு பிள்ளைகள், ‘ஆச்சி, கதையைச் சொல்லுங்கோவன்’ என நைஞ்சுகொண்டிருந்தன. செந்தாமரை இதழ்களால் நெய்ததுபோன்ற நிறத்தில் சட்டையணிந்த மலர், கதை கேட்கவே அங்கே வந்திருந்தும் தன் ஆவலை வெளிப்படுத்தாத முகத்தோடு பவளமாச்சிக்கு நேரெதிரே மௌனமாய் அமர்ந்திருந்தாள். அவளுக்கருகில் மற்றைய பிள்ளைகளுக்கும் மலருக்குமான தொடுப்புப்போல புவனேஸ்வரி. எப்படியோ அம்மாதிரி விடுதலை நாட்களில் அவ்வீடு கதை வளாகமாக மாறிவிடுகிறது. குறைந்தது ஐந்தாறு பிள்ளைகளாவது அயல்வீடுகளிலி