கலாபன் கதை 2-6
தேவதைகளின் கூண்டும் பிசாசுகளின் வெளியும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் ஆரம்பம் அது. தைப்பொங்கல் முடிய வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தவனுக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியில் கப்பல் பொறியியலாளனாய்ப் பதிய சிரமமிருந்தாலும், முடிந்திருந்தது. முன்புபோல் இந்தியா சென்று கப்பலெடுக்கிற எண்ணத்தை, முந்திய கப்பலைவிட்டு விலகி வீடு வரும்போதே அவன் திரஸ்காரம் செய்திருந்தான். வத்தளையில் அவனூர் நண்பர்கள் சிலர் வீடொன்று எடுத்து தங்கியிருந்தார்கள். அவர்கள் அதிகமும் அரச நிறுவனங்களிலும், சிலர் பெயர்பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைசெய்தனர். அவர்களோடு பெரும்பாலும் தன்னால் ஒத்துப்போக முடியுமென்று நம்பியவன் அங்கேசென்று அவர்களோடு தங்கினான். வாடகை, சமையல் உட்பட்ட செலவுகளை ஏழாக பகிர்ந்துகொள்வது என்பது தீர்மானம். ஊர் நண்பர்கள் அதிமாய் இருந்தது ஒருவிதத்தில் கலாபனுக்கு அனுசரணையாக இருந்தது என்றே கூறவேண்டும். லேசாக குடிப்பதற்கு மட்டுமே அவனால் அங்கே முடிந்திருந்தது. வேறு தேடல்கள், ஒருமாதமாகிவிட்டிருந்த அளவில் முளைகொள்ளப் பார்த்தபோதும், நண்பர்களுக்காகவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அவன் காத்திருக்கவேண்டியத...