Posts

Showing posts from March, 2008

அதை அதுவாக 15

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 15 ‘திருக்குறளில் படிமத்தின் பயில்வுகள்.’ - தேவகாந்தன் - (38) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (பொருள், அரசு, ஊக்கமுடைமை 9) குறள் 599 பருத்த உடம்பும், கூரிய தந்தங்களும் உடையதாயினும் புலி தாக்க வந்தால் யானை அஞ்சுமென்பது இந்தக் குறளின் பொருள். வெளிப்படையான அர்த்தத்தில் பார்த்தால் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் பொருத்தம் பெறாது. அதனால் ‘ஊக்கமுடைய’ என்ற பெயரெச்சத்தை வருவித்து ஊக்கமுடைய புலி எனப் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு வருவித்துப் பொருள்கொள்ளும் மரபு தமிழ்ச் செய்யுளியலில் உண்டு. இந்தக் குறளுக்கு இரண்டு குறள்கள் முந்திப் பார்த்தால் அங்கேயும் ஒரு யானை வந்திருப்பது தெரியும். அந்த யானையின் பருத்த மேனியில் அம்புகள் புதையுண்டு நிற்கின்றன. இருந்தும் அது தன் கம்பீரம் குலையாமல் நிற்கின்றது. அப்படிப் பெருமை பார்க்கிற வகையின விலங்குதான் யானை. அப்படிப்பட்ட யானையே ஊக்கம் நிறைந்த புலி தாக்கினால் அஞ்சுமாம். ஊக்கமுடைமையின் சிறப்பை இது இங்கே அழுத்தி நிற்கிறது. உவமை, உருவகம் என்று இயைபு பெறாத இடத்தில

அதை அதுவாக 14

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 14 ‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’ - தேவகாந்தன் - (37) அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. (பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503 அரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும். அவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர். இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது. ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே. இன்மை எவரில் இல்லை? அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிடாத

அதை அதுவாக 13

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 13 ‘புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை.’ - தேவகாந்தன் - (36) எண்ணியார் எண்ண மிழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். (பொருள், அரசு, இடனறிதல் 4) குறள் 494 ஒருவனது செயற் திட்டத்தை வெல்வதற்கான கருத்தெண்ணம் உடையவர்கள், அவன் தக்க இடத்தைச் சார்ந்திருந்து விரைந்து கருமமாற்றும்போது அக் கருத்தெண்ணத்தையே கைவிட்டுவிட வேண்டும். ஒரு செயலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் காலத்தைப்போல், இன்னொரு முக்கியமான அம்சம் இடம். காலம் அல்லது பருவம் எனப்படுகிற அம்சம் அதிகமாகவும் காத்திருத்தலோடு தொடர்புடையதாக இருக்கிறது. இடம் அல்லது தளம் எனப்படுகிற இந்த அம்சமோ பெரும்பாலும் கற்றறிவு பட்டறிவுகள் சார்ந்த நிலைப்பாட்டில் வலிமையைப் பிரயோகித்தலின் தளமான கருத்தாகிறது. ஆனாலும் இந்த இடம் அரணில்லை. அரண் எங்கேயும் ஒரு புகல்தான். புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை. அது ஒரு கால அவகாசத்துக்குக் காத்திருப்பதற்கான இடம் மட்டுமே. தன் தகுதியுடனும் வலிமையுடனும் தன் வாழ்வுக்கான பிரதேசம்தான் தளம் என்ற வகையில் வரும். ‘துன்னி’ என்ற சொல் இங்கே முக்கியம். அது

அதை அதுவாக 12

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 12 ‘விழித்திருப்பது அறிவும்கூடத்தான்’ - தேவகாந்தன் - (34) எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. (பொருள், அரசு, அறிவுடைமை 6) குறள் 426 சமூகம் எவ்வாறு இயங்குகிறதோ அதற்கேற்றவாறு அமைந்து தானும் நடந்துகொள்வதே அறிவு. ‘ஊரோடு ஒத்தோடு’ என்று ஒற்றை வரியில் அவ்வை சொன்னது இதைத்தான். ஆனால் இதை அறிவென்கிறபோதுதான் புரியாமலிருக்கிறது. அறிவென்பது அறியாமைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடங்கிப் போக வேண்டுமா என்ற கேள்வி இங்கே விஸ்வரூபம் காட்டி எழுந்துவிடுகிறது. ஊரோடு ஒத்தோடினால் அறிவினால் என்ன பயன்? ‘நான் விழித்திருக்கிறேன்’ என்ற புத்தனின் வார்த்தையில் மிளிர்வது பேரறிவல்லவா? ஜாக்கிரதம் மட்டுமில்லை, விழித்திருப்பது அறிவம்கூடத்தான். அப்படியிருக்கையில், உலகத்தோடு ஒட்டிப் போய்விடு என்று வள்ளுவன் சொல்வது முரணல்லவா? அடங்கிப் போ என்று எப்படிச் சொல்ல முடியும்? தனிமனித நல்வாழ்வுக்கான போதம் சொல்வதே வள்ளுவனின் நோக்கம். அதுதான் அவன் சார்ந்திருந்த சமண மதத்தின் போக்கினுக்கும் உகந்ததாய் இருந்தது. ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய

அதை அதுவாக 11

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 11 ‘படைப்பின் வெளிப்பாட்டு ஊடகம் எதுவாயிருந்தாலும் அது அறிதலுக்கானது என்ற விவாதத்தை வள்ளுவன் கிளர்த்துகின்றானா?’ - தேவகாந்தன் - (32) கற்றில னாயினும் கேட்க அஃதொருவன் ஒற்கத்தின் ஊற்றாந் துணை ( பொருட்பால், அரசு இயல், கேள்வி 4 ) குறள் 414 ஒருவன் கல்லாதவனாயினும் கற்றார் பேச்சைக் கேட்கவேண்டும். அது தளர்ச்சி ஏற்படும் காலத்தில் ஊன்றுகோல்போல, பிரச்சினைகள் தோன்றும்போது அவற்றை நீக்குவதற்கான சிந்திப்பின் ஆதாரமாக நின்றிருக்கும். 0 ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்றது புறம். கற்பது நல்லதேயெனினும் எத்தனை பேரால் அது சாத்தியப்பட்டுவிடுகிறது? கற்காமல் விட்டுவிடுவதற்கு நிறையப் பேருக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாயது வறுமை. எக்காரணத்தை முன்னிட்டு ஒருவன் கற்காமல்விட்டாலும், வசதி கிடைக்கும்போதெல்லாம் அறிவோர் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் என்கிறான் வள்ளுவன். கதை சொல்லுதல், புராண உரைப்பு, உரை விளக்கம் கூறுதல் போன்ற மரபுகள் பொதுமன்றுகளிலே, கோவிற் சந்நிதிகளிலே அக் காலத்தில் நிறையவே

அதை அதுவாக 10-1

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 10-1 ‘குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா?’ - தேவகாந்தன் - 4 செல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகா ரசமான எள்ளலும். பணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஆனாலும் ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்கிறான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன். அதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் ச

அதை அதுவாக 10

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 10 ‘இந்த உலகம் இருவேறு தன்மைகளை உடையதாக இருக்கின்றது.’ - தேவகாந்தன் - (31) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். (அறம், ஊழியல், ஊழ் 10) குறள் 380 கெட்ட நிலைமைகளை விலக்குவதற்கான மார்க்கம் குதிர்ந்துவரும் வேளையில், அதை முந்திக்கொண்டும் ஆட்சிசெய்ய வருகிற விதியைவிட வலிமையானது ஏதுமில்லை. 1 பத்துக் குறள்களுமே ஏறக்குறையச் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக வரும் திருக்குறளின் ஒருசில அதிகாரங்களுள் ‘ஊ’ழும் ஒன்று. மேலே காட்டப்பட்டுள்ள குறளில் விதியின் அளப்பரிய மொய்ம்பு தெரியும். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவெல்லாம் கண்டுணர்ந்து அவற்றை விதிகளாகத் திரட்டித் தொகுத்த நூல்தான் திருக்குறள் எனப்படுகிறது. ஊழ்கூட முற்றுமுழுதாக அக் காலகட்டத்து சமூகச் சிந்தனைகள் அப்படியே தொகுக்கப்பட்ட அதிகாரமென்றுதான் சொல்லத் தோன்றும். ஆனாலும் கூர்ந்து கவனிக்கிறபோதுதான் பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், அர்த்தம் உள் வெடிக்கவெடிக்க நின்றிருக்கும் சொல்களும் வள்ளுவனின் கலக மனநிலையை வெளிக்காட்டும். ஊழ் என்பது ‘இயற்கையின் சுழற்சி’ என்ற

அதை அதுவாக 9

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 9 ‘அக்காலத்திய பெருநிலைத் துறவுகளை நெறிப்படுத்துவதே வள்ளுவனின் நோக்கமாக இருந்திருக்கிறது.’ - தேவகாந்தன் - (29) குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. (அறம், துறவு, நிலையாமை 8) குறள் 338 குஞ்சு வளர்ந்து பருவமடைந்ததும் கூட்டைவிட்டுப் பறந்துவிடும். இந்த உயிருக்கும் உடலுக்கும் இடையிலான உறவும் அத்தகையதே. மரணத்தை இயல்பு…இயல்பு… என்று இந்த அதிகாரத்திலே அடிக்கடி சொல்லுவான் வள்ளுவன். அக்காலையிலும் அவன் தொனிக்கப்பண்ணும் கேலி அர்த்தத்தை மேவி ரசிக்கத் தக்கதாயிருக்கிறது. எவ்வளவு பெரிய அலங்காரம் அகந்தையெல்லாம் கொண்டுவிடுகிறாய், ஒருநாள் இந்த உடம்பு வெறும் கூடாக விழுகிற காலமும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டாயா? ஏன்கிறது இந்தக் குறள். இதற்கு அடுத்த குறள் நையாண்டியின் உச்சம். ‘புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு’ என்பது அது. ஒரு நிலையான வீடு இந்த உயிருக்கில்லையே என்கிறது இந்தக் குறள். எனக்கிருக்கிற எண்ணமெல்லாம், சிந்தனையெல்லாம் ஒன்று பற்றித்தான். அறத்துப்பாலில் இல்லறவியலைத் தொடங்கிய வள்ளுவன்

அதை அதுவாக 8

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 8 ‘மனிதனின் மரணம் சிறிதுசிறிதாக ஒவ்வொரு நாளிலும் நேர்ந்துகொண்டிருக்கிறது’ - தேவகாந்தன் - (26) நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின். (அறம், துறவு, நிலையாமை 4) குறள் 334 உணர முடிந்தவர்களுக்குத்தான் நாள் என்பது உயிரை உடம்பிலிருந்து மேலும் வெட்டிப் பிரித்துவிடுகிற வாள் என்பது தெரியவரும். உடம்பையும் உயிரையும் செகுத்துவிடும் செயலையே காலம் செய்துகொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு நாள் போலத்தான் தெரியும். ஆனால் காலத்தின் தன்மையை உணரக் கூடியவர்களுக்குத்தான் அது உடலிலிருந்து உயிரை ஈர்ந்துவிடுகிற வாளென்பது தெரியமுடியும். ஒருநாளைக்கூட மனிதர் வீணாக்கிவிடக்கூடாது. ‘அன்றறிவாம் என்னாது அறம்செய்க’ என வலியுறுத்தியதன் காரணம் இது சுட்டியதே. மரணம் எப்போது வருமென்பதைத்தான் சொல்லமுடியாது. ஆனால் மரணம் நிச்சயம் வரும். இங்கே குறள் வெளிப்படுத்துகிற அம்சம் எதுவெனில், அந்த மரணம் சிறிதுசிறிதாக ஒருவருக்கு ஒவ்வொரு நாளிலும் நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான். 0 (27) நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய

அதை அதுவாக 7

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 7 ‘வள்ளுவன் வளையுமிடங்களெல்லாம் காலத்தை மீறமுடியாத தருணங்களின் விளைச்சலே’ -தேவகாந்தன்- (23) அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (அறம், துறவறம், அருளுடைமை 7) குறள் 247 பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலக நன்மைகள் இல்லைப்போல, அருளில்லாதவர்களுக்கு மோட்ச உலகத்துப் பயன்கள் இல்;;லை. இந்த உலகத்து வாழ்வுக்குப் பொருள் அவசியம். மறுமை உலகத்துக்கு அருள் அவசியம். ஆனாலும் இரண்டையும் ஒரே தரத்தினதாக வள்ளுவன் மதிப்பதில்லை. உலகவியல்பைச் சொன்ன குறள்இது. ஆனால் இவ்வதிகாரத்தின் ஏனைய குறள்கள் பொருளைவிட அருளே சிறந்ததென்கிற முடிவையெடுக்கவே வற்புறுத்தி நிற்கும். கெட்டவர்களிடத்திலும் பொருள் சேரக்கூடியது என்பான் திருவள்ளுவன். மேலும், பொருளற்றவர் ஒருகாலத்தில் பொருளுடையவராய் ஆதலும் கூடுமென்றும், அருளற்றவரோ அற்றவர்தான், அவர் எப்போதும் அருளாளர் ஆகவே முடியாதென்றும் அவன் கூறுவான். துறவறவியலைத் துவக்கிவைக்கும் இவ்வதிகாரம் அற்புதமான வைப்பு. குறள் தோன்றிய காலம் தமிழிலக்கிய வரலாற்றிலே அறநெறிக் காலமென்று சொல்லப்படுகிற காலமாகும். இது

அதை அதுவாக 6

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 6 ‘சமூக சமமின்மையின் பரிகாரமாக ஈதல் சொல்லப்பட்டது’ தேவகாந்தன் (20) நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (அறம், இல்லறம், ஈகை – 2) குறள் 222 நல்ல வழிமுறைகள் ஊடாகவெனினும் ஒருவரிடமிருந்து பெறுவது தீதானது. ஈதல் எப்போதும் நன்று. மேலுலகம் இல்லாவிட்டாலும்கூட நன்றுதான். ‘ஈயென இரத்தல் இழிந்தது’ என்னும் புறநானூறு. ‘ஏற்பது இகழ்ச்சி’ என்றவள் அவ்வை. வள்ளுவன் ஒருபடி மேலே இந்தக் குறளில். நல்ல வழியில்… தனக்குரியதாக… வருவதானாலும்… அதைக் கொள்ளுதல் தீது என்பது வள்ளுவ அறம். இதுதான் ஒருவரது…ஒரு சமூகத்தினது …மொத்த மானுட வர்க்கத்தினதும்கூட …கௌரவத்தை மேலெடுத்து நிறுத்துகிற உயர் பண்பாக விளங்கக் கூடியது. வாங்கிக் கொள்வது தன்னை இழத்தலுக்கான வழியைத் திறப்பது போன்றதென்று மிக நுட்பமாய்த் தெரிந்து சொல்கிற சமூக, உளவியல் ரீதிகளிலான கருத்து இது. இந்தக் குறள் ‘ஈகை’ என்கிற அதிகாரத்தில் வருகிறது. ஈகம் என்கிற நவீன சொல்லின் மூலமும் இது. இப்போது உதவ முடியாமலிருக்கிறேன் என்று தன் துன்பத்தைச் சொல்லுகிற தன்மைகூட நல்ல குடிப்பிறப்பாளனிடம் கிடையா

அதை அதுவாக 5

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 5 தேவகாந்தன் (15) சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (அறம், இல்லறம், பயனில சொல்லாமை 10) குறள் 200 சொல்ல நேர்கிற வேளையிலும் எக் காரணம்கொண்டும் பயனில்லாவற்றைப் பேசிவிடக் கூடாது. 000 பயனுடையவற்றையே பேசவேண்டுமென்கிற கருத்து முதலடியாலேயே பெறப்பட்டுவிடுகிறது. உனது பேச்சு அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும் என்கிறான் வள்ளுவன். இந் நிலையில் பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாமென்பதை அதன் எதிர்நிலையில் வைத்துச் சுலபமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறிருக்கையில் பயனில் சொல்பற்றிச் சொல்ல வந்த இடத்திலேயே வள்ளுவன் அக் குற்றத்தைச் செய்திருப்பானா என்பது யோசிக்கவேண்டியது. கருத்தின் அழுத்தத்துக்காய் அவ்வாறு வரலாம்தான். தமிழிலக்கணம் அதை அனுமதித்திருக்கிறது. சில குறள்களிலேயே அவ்வாறு வந்துமிருக்கின்றது. ஆனாலும் வேறிடங்களில் ஒத்துக்கொள்ளக்கூடிய இந்த இலக்கிய உத்தியை, சொல்பற்றிய இந்த அதிகாரத்திலேயே ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமானது. பட்சத்தில், ‘ சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்’ என்ற சொற்கள் வேறோர் அ

THE MANY SORROWS OF JOSEPHINE.B

பிரான்சின் சில வரலாற்றுப் பக்கங்களை  காவியமாக்கியிருக்கும் நாவல்   (1) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில நாவலிலக்கியம் வளர்ந்துவந்த பாதை மிக அழகானது. வரலாற்றுப் பின்புலங்களில் பல்வேறு நாவல்கள் தோன்றின. பயணங்கள், ஆய்வுகள், தேடல்கள்மூலம் கண்டடையப்பட்ட புதுமையான கருத்துக்கள் ஆங்கில இலக்கியத்தை உக்கிரத்துடன் நிறைத்தன. இவை ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்களுக்கு இணையாக ஆங்கில நாவலிலக்கியத்தை உயர்த்தி வைத்தன என்றாலும் மிகையில்லை. இதனடியாக சமகாலத்திலும் வரலாற்றின் இருண்ட பக்கங்களை புனைவின் துணைகொண்டு கண்டுகொள்ளும் முயற்சிகள் பல்வேறு படைப்பாளிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் சில அச்சுப் பிரதிகளாய், சில தகவல்கள் தொகுப்புக்களாய் மாறிப்போக, சிலவே காவியங்களாய் நிலைத்துநிற்கின்றன. அவ்வாறான நாவல்களில் வரலாற்றுக் களத்தை ஆதாரமாகக் கொண்டெழுந்து காவியப் பேறடைந்த நாவல்தான் ‘The Many Sorrows of Josephine B.’ (2) காதல் என்கிற மனமெய் உணர்வு எங்கேயும் எப்போதும்தான் அழகானது. சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே. ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ, தத்துவ ர

சிதைவும் கட்டமைப்பும்:9

-தேவகாந்தன் ‘மாத்ரு பூமி’ மலையாள இதழின் கோவை அலுவலகப் பொறுப்பாளர் திரு.விஜயகுமாரை ஒருமுறை ‘மாத்ரு பூமி’யின் கோவை அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. எழுத்துபற்றி, சிறுசஞ்சிகைகள்பற்றி, இலக்கியம் - குறிப்பாக ஈழத்து இலக்கியம் - பற்றி நிறையப் பேசினோம். ஏன் ‘கனவுச் சிறை’ நாவலைப்பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். அவர் எனது அடுத்த நூல்பற்றிக் கேட்டபோது ‘காலக் கனா’ சிறுதொகுப்பைச் சொன்னேன். ‘கனவு உங்கள் எழுத்தில் முக்கியமான அம்சமாகவிருக்குமோ?’ என்று தன் வியப்பைச் சொன்னார் விஜயகுமார். ‘அப்படி நினைத்து எழுதியதில்லை’ என்றேன் நான். ‘நினையாப்பிரகாரம் அவ்வாறு அமைய வாய்ப்பிருக்கிறது. நினையாமலே அவ்வாறு சிலருக்கு அமைய முடியும்’ என்று விஜயகுமார் பதில் சொன்னார். ஒருவகையில் அவர் சொன்னது சரிதானோவென்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. கனவுகளே இலக்கியம், கலை என எல்லாமுமாகின்றனவெனினும், இலக்கியத்தில் கனவு மய்யப்படும் எழுத்து ஒருவசீகரத்தையும், தனி அடையாளத்தையும் பெற்றுவிடுகிறதுதான். ‘வுpதி’ நாவல்பற்றி, அவருடனான இரண்டுமணி நேரப் பேச்சில் நான் ஒருமுறை குறிப்பிட நேர்ந்தது. ‘தலைப்பே நன்றாயிருக்கிறதே. மேலோட்டமாகக் கதைய

How dare you...?

தேவகாந்தன் பக்கம்: How dare you...? நடக்காது என்றில்லை. நடக்கும். அப்படி நடந்துவிட்டிருக்கிறது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில். ஓரு முகமூடி அணிந்த நபரொருவரின் திடீர்ப் பிரசன்னம்போலதான்; அது இருந்தது. அந்த நபரின் ஊசாட்டம்பற்றிய சிலபல செய்திகளைக்; கேள்விப்படத்தான் செய்திருந்தோம். இந்த முகமறைப்பு எப்போதுமே கொள்ளையின் அடையாளமில்லை. ஆசாரம், மத அடையாளம், கடுங்குளிரென்று எதுவும் காரணமாக முடியும். ஆனால் நேரில் வந்த பிறகுதான் சரியான காரணத்தைக் கண்டடைய எம்மால் முடிந்;தது. இம் மாதம் 13ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற ‘அச்சத்திற்குள் வாழ்தல்’ அறிக்கை வெளியீட்டினதும் கூட்ட நிகழ்வுகளின்போதும் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு தமிழ் மக்கள் முன் நேரில் வந்தது குறித்த உண்மையைத்தான் இங்கு சொல்ல வருகிறேன். ர்ரஅயn சுiபாவள என்று தொடங்கும்போதே ருnவைநன யேவழைn ர்ரஅயn சுiபாவள அமைப்பின் முகத்திரையை அது போர்த்திக் கொள்கிறது. அதற்குமேல் றுயவஉh என்ற பதம் கண்காணிக்கும் அமைப்பு என்பதைச் சார்ந்து அதன் அர்த்தத்தைக் கொள்வதில்லை. இந்தத் தனியார் (அது பொதுவானதாக இருக்கலாம்,அது வேறு விஷய

சிதைவும் கட்டமைப்பும்:7

தேவகாந்தன் 1996ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ‘இலக்கு’ சிறுசஞ்சிகையைக் கொண்டுவருவதென்று நான் தீர்மானித்திருந்த வேளையிலும் தமிழ்நாட்டில் எழுத்துக் கோர்த்து அச்சடிக்கும் மரபார்ந்த முறையே அச்சுத் தொழிலுலகில் அதிகமாக இருந்தது. என் அனுபவத்திலும் விசாரிப்பிலுமாய் காளிதாஸ் பிரஸ் என்ற அச்சகத்தைக் கண்டடைந்தேன். சிறுபத்திரிகையென்பதால், ஒரு கணிசமான குறைந்த தொகைக்கு இதழை அச்சடித்துத் தர இணங்கினார் அச்சக உரிமையாளர். வடக்குப் பகுதித் தமிழ்நாட்டிலிருந்து எப்பவோ ஒரு காலத்தில் அச்சு வேலையைக்கொண்டு வாழ்ந்துவிடலாமென்ற நம்பிக்கையோடு சென்னை வந்த ஒரு குடும்பம் அது. மிக வைதீகமானது. பிரித்தானியர் காலத்துப் பழைய அச்சு எந்திரமொன்றை வைத்துக்கொண்டு வாழப் போராடிக்கொண்டிருந்தது. குடும்பம் முழுவதும் அச்சகத்தில் வேலை செய்தது. அச்சடித்த தாளை மடித்தல், புத்தகம் கட்டுதல், அச்சடித்த பின் அச்சுப் பாரத்தைப் பிரித்தல் என்பனபோன்ற வேலைகளை வீட்டுப் பெண்களே செய்தார்கள். மீதியானதை பள்ளி முடிந்து வந்ததும் அந்த வீட்டுச் சிறுவர்கள் செய்தார்கள். அச்சுக் கோர்ப்பதற்கு மட்டும் ஓரிரு பெண் தொழிலாளிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர். பத்திரிக

சிதைவும் கட்டமைப்பும்: 6

தேவகாந்தன் நூல் வேறு; பிரதி வேறு. நூல் கையால் தாங்கப்படுவது; புpரதி மொழியால் தாங்கப்படுவது. -ரோலன்ட் பார்த் (From Text to Book) நவீனத்துவ இலக்கியக் கருத்துக்களை வளர்த்ததில் ‘கல் குதிரை’க்கு ஒரு கணிசமான இடம் ஒதுக்கப்படவேண்டுமென நினைக்கிறேன். கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்த இதழ் அதிகமாகவும் மலர்களையே வெளியிட்டது. மார்க்வெய்ஸ், தாஸ்தாவ்ஸ்கி என்று பலவாறான மலர்கள். அதில் ஓரிரு இதழ்கள் ஜென்னி ராம் அச்சகத்தில் அச்சானதாக ஞாபகம். இத் தருணத்தில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற இதழையும் குறிப்பிடவேண்டும். ய+மா வாசுகி இதற்கு ஆசிரியர். மாரிமுத்து என்ற பெயரில் வனைந்து வந்த ஓவியரும் இவர்தான். இவையெல்லாம் வசதியாக வாசிக்கக்கிடைத்தன. மட்டுமில்லை. இவர்களோடான நேரடி அறிமுகமும் தொடர்பும்கூட எனக்கிருந்தது. மேலைத் தேயத்தில் வீச்சாக வளர்ந்திருந்த பின்நவீனத்துவ முகாம் தமிழகத்தில் பெரிதாக அறியப்படாதிருந்த காலமாக இதைக் கொள்ளமுடியும். தமிழவன், அ.மார்க்ஸ், நாகார்ஜுனன், ரவிக்குமார் ஆதியோர் பலபேரின் வாசிப்பில் மாற்றத்தை உருவாக்கிய முக்கியமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியோராவர். முன்னைய இருவர

சிதைவும் கட்டமைப்பும்: 5

தேவகாந்தன் நா.பா.வின் எழுத்தை முதன்முதலாக என் பதினெட்டாவது வயதில் வாசித்ததாக ஞாபகம். விருப்பத்துக்கு வாசிக்கக் கிடைக்காத அக் காலத்தில், நூல் வைத்திருப்பவரின் கைவசத்துக்கே வாசிக்கும்படியான நிலைமை. ஒருநாள் புத்தகமேதும் இல்லையென்ற எனக்கு நூல் இரவல் தருபவர் ஒருவர், கல்கியிலிருந்து கட்டிய பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற தொடர்கதை இருக்கிறது, விருப்பமென்றால் கொண்டுபோய் வாசித்துவிட்டு அடுத்த கிழமையே தந்துவிடவேண்டும் என்றார். நைந்த அந்தப் புத்தகத்தை சற்றே விருப்பமின்மையுடன்தான் எடுத்துச்சென்றேன். வாசிக்க ஆரம்பித்த பிறகு புத்தகம் என்னை முற்றாகக் கவர்ந்து விட்டது. கவிதையின் போதையோடு வசனங்களில் வாசகனை இழுத்தாழ்த்தும் வலிமை நா.பா.வின் எழுத்துகளுக்கு இருந்தது. தனியார் பல்கலைக் கழகமொன்றில் தமிழ் விரிவுரையாளராகச் செல்லும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்துக்கு, பல்கலைக் கழகத்திலேயும், அங்கத்தைய புறச் சூழலிலும் நடக்கும் நிர்வாக, வாழ்வியல்முறைச் சீர்கேடுகளின் தரிசிப்பினையும், அக் கொடுமைகளை எதிர்த்து தார்மீகக் கோபத்தோடு அது நடத்தும் போராட்டங்களையும் நா.பா. அத்தனை அழகோடும் விறுவிறுப்போடும் அதில் சொ