Posts

Showing posts from 2020

மதிப்புரை: ‘சூல்’

Image
                      ஊரின் வறட்சிக்கான காரணத்தைத் தேடும்          பயணத்தின் கதை!   சோ.தர்மனின் பரவலாக அறியப்பட்ட ‘கூகை’ நாவலுக்குப் பிறகு வெளிவந்த படைப்பு ‘சூல்’ (2016). எண்பதுகளில் எழுத வந்தவரின் இரண்டாவது நாவல். 2019இல் இந்திய சாஹித்ய அகடமி விருதுட்பட நான்கு தமிழ்நாட்டு இலக்கியப் பரிசுகளையும் இது பெற்றிருக்கிறது. ‘சூல்’ வெளிவந்ததின் பின்னாக ‘தூர்வை’ (2017) மற்றும் ‘பதிமூனாவது மையவாடி’ (2020) ஆகிய அவரின் இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளபோதும் ‘சூல்’ முக்கியமாவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிசல்காட்டு நிலத்தின் வறட்சியையும், வாழ்வின் அவலத்தையும் கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன், பொன்னீலன், மு.சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள்போல் பேசிய வேறு படைப்புகள் தமிழில் குறைவு. ஆயினும் ‘கோபல்ல கிராமம்’, ‘அஞ்ஞாடி’, ‘கூகை’ ஆகியவைபோலன்றி ‘சூல்’ தன் கதையைச் சொல்ல அமைத்திருப்பது வித்தியாசமான தளம். ஏனைய நாவல்கள் கரிசல்காட்டின் வறட்சியைக் காட்டின. ஆனால் ‘சூல்’   அதனுடைய வளத்தையே சிறப்பாகப் பேசியது. அதன்மூலமாகவே அதன் எதிர்நிலை அனுபவ உணர்வை வாசகன் அடைய வைத்தது. பன்முக நெருக்குதலி

சொல்லில் மறைந்தவள் - சிறுகதை

  யாழ் பல்கலைக் கழக கலைப் பீடத்திலிருந்து 2000இல் வெளியேறி, அப்போது வெளிநாடுகளில் அகதிகளாகவும் குடியுரிமை பெற்றவர்களாகவும் வசித்தவர்களில் பன்னிரண்டு குடும்பங்கள் தமது   ஐந்தாவது ஒன்றுகூடலுக்காக   அந்த 2018 ஓகஸ்ற் 11 சனிக்கிழமை மாலை   டென்மார்க்கிலுள்ள சிவநேசன் வீட்டில்   கூடியிருந்தன. அதன் உறுபயன் அவர்களால் உணரப்பட்டதோ இல்லையோ, அந்த இடம் மட்டும் வெகு கலகலப்பிலும், மகிழ்ச்சியிலும் இருந்துகொண்டிருந்தது. வெடிச் சிரிப்பு, கிணுகிணுச் சிரிப்பென பலவகைச் சிரிப்புகளும் அங்கே பொங்கிக்கொண்டிருந்தன. இறுதி யுத்தத்தின் உடனடிப் பின்னாக இலங்கை சென்ற சர்வேஸ்வரன், பல்கலைக் கழகத்தில்   தன்னுடன் படித்தவனும், அப்போது ஜேர்மனியில் குடியிருந்தவனுமான மூனா. கனகசபையை கொழும்பு செட்டித் தெருவில் எதிர்பாராதவிதமாகச் சந்தித்தபோது நிகழ்த்திய உரையாடலில்தான் அந்த ஒன்றுகூடலுக்கான திட்டம் விழுந்தது. மூனா.கனகசபையும் அதை ஆதரிக்க, செட்டித்தெரு தேநீர்ச்சாலையொன்றில் அதற்கான நடைமுறைத் திட்டங்கள் உடனடியாக இருவரிடத்திலும் விரிவுபெற்றன. சர்வேஸ்வரன் பிரான்சுக்கும், மூனா.கனகசபை ஜேர்மனிக்கும் திரும்பிய பின்னரும் ஆறு மாதங்களாய

நினைவேற்றம்: பிள்ளை பிடிக்கும் குரங்கு

  நிலைபேறற்ற மனத்தின் இயக்கத்தை குரங்கின் செயலுக்கு ஒப்பிடும் மரபு கீழ்த்திசையில் உண்டு. என் விஷயத்தில் இது சிறிது மாற்றமாகி, குரங்குகளே என் மனத்தில் சிறிதுகாலம் தாவிக்கொண்டிருக்கும் அபூர்வம் நிகழ்ந்து போயிற்று.   காலப் பெருவெளியில் நினைவின் அடுக்குகள் என்றோ ஒருநாள், ஏதோவொரு காரணத்தில் குலையவே செய்கின்றன. அதனால் ஒரு ஞாபகத் துணுக்கு கால ஒழுங்கில் பதிவாகிவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் மனித மன அமைப்பு தந்துவிடவில்லை. சுமார் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட   என் நினைவின் பதிவு இது. எனினும் அந்த நிகழ்வையன்றி அந்தக் காலத்தின் பதிவையே முதன்மையாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிவிடல் தக்கது. நான் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கு அப்போது ‘கந்தர் மடம்’ என்ற பெயர் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கான இடைத்தூரம் சுமார் அரை மைலுக்கு மேலேயும் ஒரு மைலுக்கு உள்ளாகவும் இருக்கலாம். நான் பள்ளி செல்வதற்கு எனக்கு இரண்டு பாதைகள் இருந்திருந்தன. வீட்டிலிருந்து மக்கி ரோட்டில் இறங்கி தார் வீதியில் ஏறிச் செல்கிற நேர்வழி ஒன்று. மற்றது ஒழுங்கையால் நடந்து வயலுக்குள் இறங்கி வாய்க்கால் கடந்து பள்ளி சேர்கிற க

நினைவேற்றம்: மூலைக் கல்

  ‘கடந்த காலப் பிரதேசங்களுக்குத் திரும்ப வரும்போது எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திக்கொள்ளவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என   ‘கடல்’ நாவல் நாயகனது எண்ணமாக வரும் ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் ஜோன் பான்வில் விவரித்திருப்பார். மனங்களும் ஞாபகங்களும் சார்ந்த சரியான கணிப்பாக, கடந்த 2018இல் நான் எனதூர் சென்று திரும்பிய பின் கிளர்ந்த ஞாபகங்களின் பொருந்திப்போதல் சம்பந்தமான இடர்ப்பாடுகளினால் உணர முடிந்திருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் இருந்தது நடேசபிள்ளையின் வீடு. இடையிலே சில வீடுகளும், குடிமனையற்ற ஒரு பெரிய வெறுங்காணியும். அதை பாம்புக் காணியென்று யாரும் சொல்லாவிட்டாலும், பாம்புகள் பிணைந்து முறுகி ஊர்ந்து திரியும்   அயல் என்பதன் பயம்மட்டும் இருந்துகொண்டிருந்தது. அந்தக் காணிக்குள் ஒரு அழிநிலை எய்திய ஒரு கட்டுக் கிணறும், அலைந்து திரியும் கால்நடைகள் வெளியிலிருந்து நீரருந்துவதற்காக   கட்டப்பட்ட   உடைந்த தொட்டியும், அதற்கு கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்கான ஒரு செடிகள் முளைத்த, வெடிப்புகள் விழுந்ததுமான சுமார் நூற்றைம்பது அடி நீள வாய்க்காலும் இருந்திருந்தன. வேலி

மலர் அன்ரி (சிறுகதை)

    மலர் அன்ரி எனக்கு நேரடியான சொந்தமில்லை. ஆனாலும் மலர் அன்ரியென்றே அழைத்தேன். அவளது அக்காளை மேரி மாமி என்று அழைத்து வருகையில், அவளேதான் தன்னை மலர் அன்ரியென அழைக்கச் சொன்னாள். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அந்தப் புதிய சொல் மாமியென அர்த்தம் கொண்டதென. அவள் என்னோடு வெகு அன்பாயிருந்தவள். என்னை அரவணைத்து எந்நேரமும் அருகில் வைத்துக்கொண்டவள். இப்போது அவளையேயல்ல, என்னையே எழுதப்போகிறேனாயினும், இதில் அவளின் உள்ளும் வெளியும் தெரியவரவேதான் போகின்றன. எனினும் இது வேறொரு அர்த்தமும் நோக்கமும் கொண்டது. இக் கதை நிகழ் காலத்தில் அவளுக்கு சுமார் இருபது வயதிருக்கலாம். எனக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட ஒரு வயது. அவள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த வயதில் என்னில் எவ்வாறு புரிதலாகினவென்பதை, இவ்வளவு காலத்துக்குப் பின்னான அறிவு அனுபவங்களின் விளக்கப் பின்புலத்தில் நான் எழுதுவதென்பது சிரமமான விஷயம். ஆனாலும் அவள்மீதான பிரியமுடனும், சிறுபிள்ளைத்தனத்தின்   சிந்தனை செயற்பாங்குகள் வெளிப்பாடு அடையும்படியுமே இதைச் செய்ய நான் முனைவேன். மலர் அன்ரி மாநிறம். கல்யாணமாகி வாழப்போய் கணவனை இழந்த பின் அங்கே தனியனா