Posts

Showing posts from November, 2022

நாகமணி (சிறுகதை)

  திண்ணையில் கிடந்திருந்த நல்லதம்பி கண்விழித்தான். கிழக்கு மூலையில் இருட்டு மங்கத் துவங்கியிருந்தது, மறைப்புத் தட்டி மேலாகத் தெரிந்தது. வீட்டுக்குள் சென்று பயணத்தில் கொண்டுசெல்லும் மருந்துப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். சங்கமத்தில் கலைந்த கோலத்துடன், இன்னும் உடம்பலுப்புத் தீராதவளாய் திண்ணையிலே சாரல் கிடந்திருந்தாள். அவளை அருட்டி தான் புறப்படுவதைச் சொல்லிக்கொண்டு முற்றத்தில் இறங்கினான். பின்னால் சாரலின் குரல் எழுந்தது. ‘இனி எப்ப? ரண்டு மாசம் கழிச்சா, நாலு மாசம் கழிச்சா?’ அவன் திரும்பி இருட்டில் அவள் வெளிர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ‘இடைத்தூரம் பெரிசில்லை; நடைத்தூரந்தான். அங்க மினக்கெடுறது ரண்டாளுக்கு வைத்தியம் பாத்தா நாலு காசு கிடைக்குமெண்டுதான.’ ‘வேறயொண்டுக்குமில்லையே?’ அவளுக்கு அவனது முதல் சம்சாரம்பற்றித் தெரியும். அவன் அவளது காதோரம் வளைந்து இன்னும் லேசாய்க் கூந்தலில் இழைந்த பயறு வெந்தயம் எலுமிச்சைகளின் வாசத்தை முகர்ந்தபடி, ‘கெதியில வருவ’னென்றுவிட்டு   நடக்கத் துவங்கினான். அந்த நேரத்துக்கு அங்கிருந்து புறப்பட்டால்தான் தொட்டம் தொட்டமாய் இருக்கும் கிராமங்களை

சாம்பரில் திரண்ட சொற்கள் 7

Image
  7 பாட்டியின் கடந்துபோன காலத்தோடு பொருத்திப்பார்க்கையில் அவளை அதிகமும் அணுக மறுத்திருந்த முதுமை, அவள் சந்தை வியாபாரம் தொடங்கிய பின்னால் அவளில் ஆண்டுக்கு இரண்டிரண்டு வயதாக ஏறிக்கொண்டதுபோல் தென்பட்டது. அதனால் செம்பவளமாக இருந்தவள் விரைவிலேயே எவருக்கும் பவளமக்கா ஆகிப்போனாள். குழந்தை பிறக்காத உடம்பில் இளமை வலிமையாய்த் திரண்டதே தவிர மதர்ப்பாய் வீறுகொள்ளவில்லை. அது விரும்பத் தகுந்த ஓர் அற்புதத்தை அந்த உடம்பில் நிகழ்த்தியிருந்தது. நடனசுந்தரம் அப்போது பிறந்தேயிருக்கவில்லை. அக் கதையெல்லாம் உறவினர் பேச்சுக்களில் அவனுக்கு அவதானமாகியிருந்தன. கொடிகாமம் சந்தையில் வியாபாரம் அவளைக் கைவிடாவிட்டாலும், வடமராட்சிக் காய்கறிகள் சாவகச்சேரிச் சந்தையில்தான் கியாதியாக விலைபோகின. பருத்தித்துறை - சாவகச்சேரி முதல் பஸ்ஸில் சந்தைக்கு வந்து ஐந்தரை மணி கடைசி பஸ்ஸில் வீடு செல்வதை மூன்று சந்தைககளில் செய்தால்போதும், அவளுக்கென்று நாலு காசு கையிலேயிருக்க பலனுண்டாகிவிடும். பவளமக்காவாக வியாபாரத்தைத் தொடர்ந்தவள், பவளமாச்சியாகிய காலத்தில் அதையும் நிறுத்திக்கொண்டாள். யாருக்காக அவள் அதற்குமேல் பிரயாசைப்பட? அவளுக்கிருந்த