ஒரு நாடகத்தின் உயிர்ப்பு
பா.அ.ஜயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடக அளிக்கை குறித்து -தேவகாந்தன்- ஆனி மாதத்தின் 3ஆம் 4ஆம் தேதிகளில் யோர்க் வுட் நூலக தியேட்டரில் காட்சியாக்கப்பட்டது நாளை நாடக அரங்கப் பட்டறையின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’. சுமதி ரூபனின் உயிர்ப்பு நாடகப் பட்டறையினதும், மனவெளி நாடக அரங்கத்தினரதும் அளிக்கைகளில் குறிப்பிடக்கூடிய ஓரிரு நாடகங்களுக்குப் பிறகு மேடையேறியுள்ள ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ முக்கியமான நிகழ்வெனவே தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த பிரக்ஞையும், அதன் காரணமாய் மேடை அளிக்கைகளைத் தவற விட்டுவிடாத அனுபவங்களின் பின்னணியிலும்கூட இந் நாடகம் குறித்துச் சொல்ல நிறையவே உண்டு. ஒரு நாடகத்தின் ஆதார சுருதியாயிருந்து அதன் வலிமை, வலிமையின்மைகளைத் தீர்மானிப்பது அதன் பிரதியாக்கமாகும். ப.அ.ஜயகரனின் முதல் வலிமை அதன் பிரதியாக்கத்தினூடாக வந்து சேர்கிறது. நாடகத்தைப் பார்த்த பிறகு அதன் பிரதியையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததன் மூலம் இந்த முடிவுக்கு என்னால் சுலபமாக வர முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் சிக்கனமாகப் பிரயோகிக்கப்பட்டு இப் பிரதி ஆக்கம் க...