அகம் தோய்தல் 6

                                                                                 

கனவுகளும்

 மாறிய நிஜங்களும்


கிராமச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, பள்ளிக்கூட வசதிகள் ஏற்பட்டு அவர்களது குழந்தைகள் படிக்க நேரிட்ட காலத்திலும், அவர்கள் டொக்டராகவோ என்ஜினியராகவோ எக்கவுண்டனாகவோ வரவேண்டுமென்ற ஆசைகள் பெற்றோரிடம் பிறப்பதில்லை. குறைந்தபட்சம் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞர் வேலையோ, பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் ஒரு உபாத்தியார் வேலையோதான் கனவாக வரும். பெண்கள் மேலாக அதுகூட ஏற்படுவதில்லையென்றுதான் நினைக்கிறேன். எழுதவும், கூட்டிக் கழித்துப் பார்க்க ஏதோ கொஞ்சம் கணக்கும் படித்திருந்தால் போதுமென்பதுதான் கிராமத்தில் கல்வியால் எதிர்பார்க்கப்பட்டதின் உச்சபட்ச எல்லை.

அந்த எல்லைகள் அபூர்வமாக மீறப்படலாம். படிக்கிற பிள்ளைகளிடத்தில் பெற்றோரினது மாதிரியாவது கனவு வருமாவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் எட்டாம் வகுப்பில் நுழைவதன் முன்பாக எனக்கு ஒரு கனவு வந்தது. அது ஒரு சனிற்றறி இன்ஸ்பெக்டராக ஆகவேண்டுமென்ற கனவு.

தமாஷாக இல்லையா? இருக்கட்டும்! விளக்கமாக விஷயத்துக்கு வருகிறேன்.

முந்திய நூற்றாண்டில், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டில், தொடர்ந்து வாந்திபேதி நோயினாலும், பின்னால் மலேரியா எனப்படும் காட்டுக் காய்ச்சலாலும் ஏற்பட்ட மனித அழிவு  சுகாதார விஷயங்களில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. அதிகமான சுகதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தொற்றுத் தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. சில செல்வந்தர்களும் தமது சொந்தப் பணத்தில் இவ்வாறான உயிர்காக்கும் செயற்பாங்கில் இருந்திருந்தார்கள்.

மலேரியா தடுப்புப் பகுதியென ஒன்று தனியாக அமைக்கப்பட்டு குடியிருப்புப் பக்கங்களில் நுளம்பெண்ணை அடிக்கப்பட்ட காலம் அது. அப்போது குடிசைப் பகுதிகளிலும் நுளம்பு பரவாமலிருக்க கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

 

அனோவிலிஸ் நுளம்பு பற்றியும் அதனால்  மலேரியா நோய் பரவுவதுபற்றியும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. வீடுகளில் மலசலகூடம் அமைக்கப்படவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

அக்காலப் பகுதியில் முழங்காலளவு காக்கிக் கழிசானும் காக்கி அரைக் கைச் சேர்ட்டும் முழங்கால்வரையான காக்கி மேசுகளும் போட்ட நல்ல சிவலையான ஒர மனிதர் சுகாதார நிலைமைகளைக்  கண்காணிக்க அதிகமாகவும் சைக்கிளில் வருவதைக் கண்டிருக்கிறேன்.  சிலவேளைகளில் பொலிஸ் வருவதுபோன்ற திறந்த ஜீப்பினிலும் அவர் வருவார். எப்போதும் அவர் பின்னால் மூன்று நான்கு வேலைகாரர் ஓட்டமும் நடையுமாக நுளம்பெண்ணை அடிக்கும் பம்புகளைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். அல்லது வேறு சாமான்களைக் காவிக்கொண்டு விரைவார்கள்.

அவரைக் கண்டு கிராமத்தவர்கள் பொலிஸ்காரருக்குப்போல் பயம் கொள்வதில்லை. மதிப்பாகவும் மிக்க ஆதர்ஷத்தோடும் பார்ப்பார்கள்; அணுகுவார்கள். மிகச் சிறுவயதில் டாண்… டாண்… கணவதிக்கு எவ்வளவு பயந்தேனோ, அவரைக் கண்டபோதும் எனக்கு அந்தளவு பயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் போகப் போக அது வேறொரு வகையினமாக  மாறிவிட்டது. மடிப்புக் கலையாத அந்த உடுப்பும் அந்த அதிகார மிடுக்குள்ள நடையும் பார்வையுமுள்ள அந்த சனிற்றறி இன்ஸ்பெக்டர் பதவியை நான் விரும்பினேன். மக்களுக்கு நலம் செய்யவேண்டுமென்ற அக்கறையாலல்ல, அந்த எழுப்பமான தோற்றத்துக்காகவே விரும்பினேன்.

ஆனால் அந்த ஆசை க.பொ.த. சாதாரண தர வகுப்பிற்கு முன்பாக ஆசிரியத் தொழில்மீதானதாக ஆகிவிட்டது. காரணம் சொல்ல முடியவில்லை. ஒருவேளை கிராமப் புறங்களில் சுகாதார நிலைமைகளின் கண்காணிப்பின் அவசியம் குறைந்து சனிற்றறி இன்ஸ்பெக்டரின் வரவு படிப்படியாய் அற்றுப்போனதில் அது ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால் நிச்சயமாக எங்கள் பாடசாலையில் படிப்பிக்க எப்போதும் நீலச் சேலைமட்டுமே கட்டி, எங்கள் சிலருக்குமட்டும் பானுமதியாகத் தோன்றிய ராசம் ரீசசருடன் கதைக்கலாம், வகுப்பினை நடாத்திக்கொண்டே தூரத்திலிருந்தும் பார்த்துப் பார்த்துப்  ரசிக்கலாம், சிலவேளை ஓய்வறையில் பக்கமமர்ந்து முட்டுப்பட்டுக்கொள்ளலாம் என்பதற்காக அல்ல. அதற்கு வேறு காரணங்கள் இருந்தன.

அநேகமாக அயலிலுள்ள ஆசிரியர்கள் தூர ஊர்களுக்கு நியமனமாகிச் சென்றுவருவதை நான் கண்டிருக்கவில்லை. அவரவரும் அவரவர் வீடுகளில், அவரவர் மனைவி பிள்ளைகள் தாய் தகப்பன் உறவினர் சூழவிருக்கவே அயல்ப் பள்ளிக்கூடங்களிலேயே வேலை பார்த்தார்கள் என்பதொரு காரணமாகயிருக்கலாம். மேலும், வாரத்தில் ஐந்து நாள் வேலையானாலும் அது எட்டரை மணிக்குத் தொடங்கி மூன்றரை மணிக்கு முடிந்துவிடுவதோடு, மூன்று தவணைகளைக்கொண்ட பள்ளிக்கூட  கல்வியாண்டில், ஒவ்வொரு தவணை இறுதியிலும் நடக்கும் பரீட்சைக்குப் பின்னால் ஒரு மாத நீண்ட விடுதலை வருகிறது. இத்தியாதி கூடுதலான விடுதலை நாட்களும் அத்தகைய கனவை என்னில் உந்திக் கிளப்பிவிட்டிருக்கலாம். இன்னுமொரு ரகசியக் காரணமிருக்கிறது. கொண்டல் காயை சூடாக்கி தலைமயிரில் அழுந்தவைத்து எவ்வளவுதான் நெளிகளை விட்டுக்கொண்டும், இரண்டோரு தலைமயிர்க் கற்றைகளை நெற்றியில் கிடந்து புரளும்படி இழுத்து விட்டுக்கொண்டு வந்தாலுமோ சக வாத்தியார்கள் இன்னொரு வாத்தியாருக்கு அப்படியெல்லாம் செய்யக்கூடாது, பொலிஸ் குறோப்தான் அடித்துவரவேண்டுமென்று கண்டிப்புச் செய்துவிட மாட்டார்கள். இவ்வாறான பல அனுகூலங்கள் அந்த வாத்தியார்த் தொழிலில் இருக்கின்றன.

ஆனால் க.பொ.த. உயர்தரம் வந்ததும் அந்த ஆசை பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவோ, பேராசிரியராகவோ வரவேண்டுமென்ற கனவாக வளர்ந்துவிட்டது. சாதாரண தரத்தில் பண்டிதர்கள், வித்துவான்களிடம் பாடம் கேட்டுவந்த நிலைமை, உயர்தரத்தில் பட்டதாரி ஆசிரியர்களிடம் பாடம்கேட்பதாக ஆரம்பித்ததும் அந்த ஆசையின் விருத்தி அவ்வாறானதாக ஆகியிருக்கலாம்.

இந்த நிலையில் உயர்தர வகுப்பில் தமிழுக்கு பாடநூலாக இருந்த  மறைமலையடிகளின் ‘குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி’ என்ற நாவல் மூலம் தனித்தமிழார்வமும் வந்துவிட்டது. சூழ அரசியலிலிருந்த தமிழின எழுச்சி அதற்குத் தூபமிட்டது. அது, டிறிபேர்க் கல்லூரியிலேயே சனி ஞாயிறுகளில் நடாத்தப்பெற்ற ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து பாலபண்டிதராவதற்கான படிப்பையும் மேற்கொள்ள வைத்தது. வரலாறு, அரசியலென இருந்த எனது விருப்ப பாடங்கள் தமிழாக மாறின.

ஆனால் சமூக அரசியல் குடும்ப நிலைமைகளால்  என் தொடர் கல்வி கேள்விக்குள்ளானபோது, என் பல்கலைக் கழகக் கனவு முடிவுக்கு வந்தது. ஆனால் அது என் வாசிப்பின் தீவிரம் பத்திரிகைத் துறையிலான ஆர்வமாக  மாறி ஒரு பத்திரிகையாளனாக வரும் கனவைப் பிறப்பித்தது.

உயர்தர பரீட்சை முடிந்ததும் பத்திரிகையாளன் தேவையென வரும் பத்திரிகை விளம்பரங்களை நான் தேடத் தொடங்கினேன்.

ஒன்பது வயதில் தந்தையை இழந்து, மூன்று குழந்தைகளுடன் அநாதரவாய் நிற்கும் ஒரு தாயின் வாழ்க்கைக் கடினங்களின் அழுத்தம்பற்றிய பிரக்ஞை கிஞ்சித்துமின்றி, எந்த வேலையாவது செய்து அந்தத் தாய்க்கு துணையாக நிற்கவேண்டுமென்ற தார்மீகப் பொறுப்பை உணராமல், நான் பத்திரிகையாளனாகச் சேர்வதற்காய்  அதுபற்றி பத்திரிகைகளில் வரும் தேவை விளம்பரங்களைக் காத்துக்கொண்டிருந்தேன். எனக்குள்ள பொறுப்பை உணர அந்த வயது போதும்தான். எந்த வேலையைச் செய்வதற்கும் அந்த உடம்புக்கு ஏலும்தான். ஆனால் நான்…?

இப்போது நினைக்கிறபோது நெஞ்சை முறுக்கிக்கொண்டு அழுகை வருகிறது. ஆனால் அன்று அந்த நினைப்புக்கூட இல்லாமல் நானிருந்தது நிஜம்.

என் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. காலம் ஆகிக்கொண்டிருந்தது. அபூர்வமென்னுளவிற்கே அம்மாதிரியான தேவைகள் விளம்பரப்படுத்துப் படுகின்றன. தற்செயலாக பத்திரிகை உதவியாசிரியர் தேவை என்கிற ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. கண்டியிலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும்  ஒரு வாரப் பத்திரிகையில் வேலை செய்வதற்கு படித்த, அத் துறையில் ஆர்வமுள்ளவர் விண்ணப்பிக்கவுமென இருந்தது.

என் மனத்தில் ஒரே புளுகம். 120 ரூபா சம்பளமெனத் தெரிவித்திருந்தார்கள். நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். தங்குதற்கான அறை வாடகைக்கும், மாதச் சாப்பாட்டிற்கும் அது போதுமாயிருக்கும்தான். ஆனால் மற்றச் செலவுகளை, குறிப்பாக போக்குவரத்து மற்றும் சிகரெட் ரீ செலவுகளை, எப்படிச் சமாளிப்பது? ஆனால் பத்திரிகைத் துறையிலுள்ள சிரமங்கள் எவ்வாறு பத்திரிகையாளர்களால் கடக்கப்பட்டனவென்பதை கதைகளினூடாக அறிந்திருந்த வகையில், அவற்றைச் சமாளிக்க முடிவுசெய்தேன். அது மலை நாடானதால் குளிராக இருக்கும்தான். லட்சியமொன்றை நோக்கி நகரும் புளுகம், அதையும் சமாளிக்கத்தான் வேண்டுமென என்னைத் தீர்மானிக்க வைத்தது.

ஆனால் அதிலிருந்த ஒரு விஷயம் கொஞ்சம் கடுமையாக யோசிக்க வைத்தது. அந்த உதவி ஆசிரியர் வேலைக்கு 300 ரூபா வைப்புப் பணம் செலுத்தவேண்டியிருந்தது. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பாக அதுவொரு கணிசமான தொகைதானே. அம்மா என்ன சொல்வாரோ என யோசனையாகவிருந்தது.

எனினும் தயங்கித் தயங்கி விஷயத்த தாயாரிடம் தெரிவித்தேன். அந்தளவு தொகையை தன்னால் ஒழுங்குசெய்ய முடியாதென அம்மா உடனடியாகவே தெரிவித்துவிட்டார்.

நான் சோகதாரியாகவானேன். ஒரு வாரம் கழிந்தது. அடுத்த ஞாயிற்றுக் கிழமையிலும் அந்தப் பத்திரிகையில் அந்தத் தேவை விளம்பரம் வந்தது. எனது ஆசை மறுபடி துளிர்த்தது. நான் அம்மாவை மீண்டும் கரைச்சல் கொடுக்கத் தொடங்கினேன்.

எனது வற்புறுத்தலில் அம்மாவும் கொஞ்சம் இளகினார்போலத் தோன்றிற்று. ஆனாலும் அயலிலுள்ள தெரிந்த ஒருவரிடம்  விஷயத்தைக் கூறி அவரது அபிப்பிராயத்தைக் கேட்டார்.

அவரோ, அம்மாதிரி விளம்பரங்கள் வைப்புப் பணத்தை அபகரிப்பதற்காக அப்போதெல்லாம் அதிகமாக வருவதாகவும், பலர் அவ்வாறு ஏமாறியுள்ளதாகவும் சொன்னார். தனக்குத் தெரிந்த அவ்வாறான சில கதைகளையும் அவர் கூறியபோது நானுமே அந்த எண்ணத்தினைக் கைவிடவேண்டியவனானேன்.

ஆனால் திரும்ப இன்னுமொரு விளம்பரம், குற்றுயிராய்க் கிடந்த என் ஆசையினை உயிர்த்தெழ வைக்கும்படியாக யாழ்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. அதன் ஆசிரிய குழுவில் சேர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. நான் தவற விட்டுவிடவில்லை. 

இரண்டு வாரங்களில் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வந்தது. அப்போது பிரதம ஆசிரியராகவிருந்த திரு. கே.பி.ஹரன் நேர்முகப் பரீட்சையை நடாத்தினார். உலக அரசியல் சார்ந்த விவகாரங்கள், இலங்கை இலக்கியம் சார்ந்த  விபரங்கள் எவ்வளவு, எத்தகைய புரிதலில் என்னிடத்திலுள்ளன என்பதை அறிவதற்கான ஒரு உரையாடலாக அது அமைந்திருந்தது.

நேர்முகப் பரீட்சை முடிந்ததுமே நான் தேர்வு செய்யப்பட்டுள்ள விபரத்தையும் கூறி, அடுத்த திங்கட் கிழமையிலிருந்து வேலைக்கு வர அலுவலகத்தில் தெரிவித்தார்கள்.

அது 1968ஆம் ஆண்டு பங்குனி மாதமென ஞாபகம். அன்று, ஒரு பத்திரிகையாளனாக, தெற்கு சிவன்கோயில் தெருவிலுள்ள  ஈழநாடு அலுவலகத்தின் மாடிக் கட்டிடத்தினுள் நுழைந்தேன்.

 

000

நினைவுக் குளியல் என்ற தலைப்பில் பதிவுகள்.கொம்'மில் வெளிவரும் இப் பதிவுகள் இங்கே 'அகம் தோய்தல்' என்று மாற்றப்பட்டுள்ளன.

நன்றி: பதிவுகள்.கொம்

Comments

Popular posts from this blog

இலக்கியச் சந்திப்பு 3 ‘காலம்’ செல்வம் அருளானந்தம்

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

இமையத்தின் படைப்புகள் குறித்து...