Posts

Showing posts from 2011

நேர்காணல்: தேவகாந்தன் 1

‘அகதிகளிலிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக-புற காரணிகள் வலிமையானவை’ (நேர்காணல்: தேவகாந்தன் இன்தாம்(வானவில் -2002) இணைய தளத்துக்காக நேர்கண்டவர்: சூரியசந்திரன்) ‘போர் எந்த நிலையில், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும் கொடுமையானதுதான்’ என்று கூறும் தேவகாந்தன், ஈழத்து எடுத்தாளர்களில் முக்கியமானவர். இப்போது சென்னையில் வசித்துவருகிறார். போர்ச்சூழலில் அவதியுறும் ஈழத்தமிழர்களின் துயரமும் சோகமும் நிறைந்த வாழ்வை இவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. அகிலமெங்கும் பரவியிருக்கும் தமிழ் அகதித் தன்மையை விவரித்து ஐந்து பாகங்களைக் கொண்ட மாபெரும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல், புலம்பெயர் இலக்கிய வகையில் முக்கியமான படைப்பாக உள்ளது. சில கவிதைகளையும் எழுதியுள்ளார். ‘இலக்கு’ எனும் இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார். அவருடன்… 0 தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை எந்த அளவுக்கு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? சே.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ நாவல், ‘அகதியின் முகம்’ குறுநாவல் போன்றவையும் , எனது ‘விதி’ நாவலும், ;மனுதர்மம்’ குறுநாவலும், இன்னும் சில சிறுகதைகளும்

தேவகாந்தன் பக்கம் 9

சிமோன் டி போவுவா’வின் The Blood of others இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of Others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Secnd Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை. ‘அடுத்தவர் குருதி’யின் வாசிப்பு தற்செயலானதுதான். வழக்கம்போல் டவுண்ரவுணில் எனக்குத் தெரிந்த ஒரு பழைய நூல் விற்பனைக் கடைக்குள் நேரத்தை மறந்திருந்த வேளையில் என் பார்வையில் அகப்பட்டது சிமோன் டி போவுவாவின் அந்த நூல். வாசிப்பை மெதுவாகவே செலுத்த முடிந்திருந்தது. அத்தனைக்கு நாவலின் வசீகரத்தையும் மீறி அதன் நடையும், அது தாங்கி வந்திருந்த சிந்தனைப் போக்குகளும் அடர்த்தியானவையாக இருந்தன. மடித்துவைத்து வாசிக்கையில் முதலில் அட்டைகளும், பின

எஸ்.பொ: தன்னேரில்லாத் தலைவன்

எஸ்.பொ: ஈழத்து இலக்கியத்தின் தன்னேரிலாத் தலைவன் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ. என்றழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரைக்கு 2010ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தன் வாணாள் தமிழ்ச் சேவைக்கான இயல் விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது கனடா இலக்கியத் தோட்டம். எந்த அமைப்பினது பரிசுகள் குறித்தும், வழக்கமாக எழும் சர்ச்சைகள்போல் இம்முறை வழங்கப்பட்ட இயல்விருது குறித்து வாதப்பிரதிவாதங்கள் தோன்றவில்லையென்பது இவ்விருது சரியான ஆளுமைக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதன் ஓர் அடையாளமாக எடுக்கப்பட முடியும். 1932இல் பிறந்த எஸ்.பொ.வுக்கு ஆறு தசாப்த கால எழுத்தின் வரலாறுண்டு. இதுவேதான் எஸ்.பொ.வுக்கு இயல்விருது கிடைத்ததை அனுக்கமின்றி தமிழ்ப் பரப்பு ஒப்புக்கொண்டதன் காரணமாக இருக்கமுடியுமா? இது ஒன்றேதான் வெகுஜன எழுத்தின் உபாசகர்களதும் தீவிர இலக்கிய வாசகர்களதும் சம்மதிப்புகளை சேர்ந்த நேரத்தில் பெற்றிருப்பது சாத்தியமா? எஸ்.பொ.வின் அறுபதாண்டு எழுத்துலக வாழ்வு இரண்டு கட்டங்களைக்கொண்டது. வேலை நிமித்தமான அவரது ஆபிரிக்கப் பயணத்தின் முன்னான ஒரு கட்டம். இதை இலங்கையில் அவர் முழுவதும் வதிந்த காலமாகக் கொள்ளலாம். இரண்டாவது,

யுத்தம் (சிறுகதை)

Image
யுத்தம் (சிறுகதை) கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏத

பேரணங்கு (சிறுகதை)

பேரணங்கு (சிறுகதை) குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான். பெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை. அதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது. அவளுக்கருகே ஆற

சபானா கதை

சபானா:  விண்ணில் வாழ்ந்துவிட்டு  மண்ணகம் வந்த பெண் அண்மையில் வெளிவரவிருக்கும் ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்ற தலைப்பிலான கூர் 2011 க்காக செங்குடி இன மக்களின் புராணிக, கிராமிய கதைகளில் ஒன்றை மாதிரிக்காக மொழிபெயர்ப்புச் செய்து பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அதற்காக நிறைய இத்தகு  கதைகளை வாசிக்க நேர்ந்தது. அவற்றுள் சபானாவின் கதை தனித்துவமானதாக விளங்கியது. கூரில் அக் கதையை மொழிபெயர்ப்புச் செய்து போடாது விட்டிருந்தாலும், அக் கதைபற்றி எங்காவது சொல்லுகின்ற எண்ணம் திண்ணமாகியிருந்தது என்னிடத்தில். ஆதற்கான களமாக இம்மாதத்துக்கான தாய்வீட்டின் இந்தப் பக்கம் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கதை மிக மாயத்தன்மை வாய்ந்ததில்லை. மாறாக, மாயத்தை நீக்கிக்கொண்டு வந்த கதையாக எனக்குப் பட்டது. உங்களுக்கு எப்படியோ? கதை இதுதான். பேரழகின் உறைவிடமான சபானா தன் இனக் குழுமத்தின் குடில்கள் நிறைந்த உறைவிடத்திலிருந்து ஒரு நாள் தோழியரோடு அன்றாடத் தேவைகளுக்கான விறகினைச் சேகரிக்க, அயலிலுள்ள காட்டினுக்குச் செல்கிறாள். வழி நடந்துகொண்டிருக்கும் சபானாவின் செவிகளில் திடீரென விழுகிறது அலைஅலையாக எழுந்துவந்த

காலமென்பது...

காலம் என்பது… காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்! நான் கருதுகிற காலம் அவையல்ல. இது நான்காவது பரிமாணம் எனப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் ஆய்வில் முக்கிய வரைவிலக்கணம் பெற்றது. ஐன்ஸ்டீன் வரையறை செய்த காலமென்ற கருப்பொருளின் அறிதல் பரவசம் செய்வது. அவர் கண்டுபிடித்த பல்வேறு பௌதீக விஷயங்கள் இன்றைய விஞ்ஞானத்தை பாய்ச்சல் நிலைக்குத் தள்ளியபோ

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள் டவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில் அண்;மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. VOICES IN THE DESERT - AN ANTHOLOGY OF ARABIC-CANADIAN WOMEN WRITERS என்ற நூல்தான் அது. அது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும். பெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேற

நிகழ்வுகளும் நீரோட்டங்களும்

நிகழ்வுகளும் நீரோட்டங்களும் எனது வலைப்பூவின் சுயவிபரக் குறிப்பில், வாழ்வின் சமச்சீர் குலையும் தருணங்களில் என்னைத் தொலைத்து மீளும் ஒரு தந்திரத்தை அல்லது எனக்கேயான ஒரு வழிமுறையை நான் பதிந்திருக்கிறேன். இந்தத் தொலைதலும் மீள்தலும் என் பதின்ம வயதுப் பிராயம் முதல் தொடர்ந்தே வந்திருக்கிறது. தன்னைத் தொலைத்தலென்பது வேகமாக இயங்கும் ஒரு பிரபஞ்சத்திலும், அதே கதிக்கு ஈடுகொடுத்துச் சுழலும் ஒரு சமூகத்திலும் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுவதில்லை. அதற்கு ஒரு துறவு மனப்பான்மையே வேண்டும். இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் நான் இந்தத் தொலைப்புகளில் அடைந்தது சர்வ உண்மை. இதை வேறொரு பத்தி எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். தேவதைகளின் சுகங்கள் மட்டுமில்லை, அக்கால அனுபவங்களும் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கப்பட முடியாதவை. அதை ஒரு ராசி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை விளக்கும் சமயமல்ல இது. இங்கே இது சார்ந்து வேறொரு விஷயத்தையே சொல்லப்போகிறேன். கடந்த சில காலமாக இந்தத் தொலைப்பு வாழ்க்கையையே நான் நிகழ்த்திக்கொண்டிருப்பினும், இது முன்னவைகள் போலன்றி இந்த மண்ணுக்கும் கால தேச வர்த்தமானங்களுக்க

எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்கள்

கழிந்துபோன ஆண்டும் எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்களும் நாட்குறிப்பு எழுதுவது ஒரு கலை என எப்போதோ எவரோ சொன்ன ஒரு வாசகம், கடந்த ஆண்டு (2010) எனது நாட்குறிப்பினைப் பார்த்தபோது ஓர் அதிர்வோடு என் ஞாபகத்தில் பட்டு எதிரொலிக்க நின்றது. முந்நூற்று அறுபத்தைந்து நாட்களைக்கொண்ட நாட்குறிப்பில் பதினெட்டுப் பக்கங்களைத் தவிர மீதி எழுதப்படவேயில்லை. இந்த பதினெட்டுப் பக்க நிகழ்வுகள் மட்டும்தானா கடந்துபோன ஆண்டில் நான் குறிப்பிடக்கூடியதாக என் வாழ்வில் சம்பவித்தவை? நினைத்துப் பார்க்கையில் ஒவ்வோராண்டும்கூட நாட்குறிப்பின் எஞ்சும் பக்கங்கள் என்னை அதிரவைத்தே சென்றிருப்பது ஞாபகமானது. பின் எதற்காகத்தான் ஒவ்வோராண்டின் முடிவிலும் ஏதோ தவறவிட்டுவிடக்கூடாத கைங்கரியம்போல் நாட்குறிப்பினை தேடி, ஓடி வாங்கி எழுத ஆரம்பிக்கின்றேன்? எப்போதும்போல் இந்த ஆண்டும் பக்கங்கள் எஞ்சுவதுபற்றிய விஷயத்தை விட்டுவிட முடியாது. இதுபற்றி தீர்க்கமாக நான் யோசித்தே ஆகவேண்டும். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மார்க் அரேலியஸ் எழுத ஆரம்பித்ததிலிருந்து இந்த நாட்குறிப்புப் பழக்கம் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கச் சொல்லின் மூலத்திலிருந்து இந