கலாபன் கதை (2-7)
கழற்ற முடிந்தால் வளையம்! இறுகி இருந்தால் விலங்கு! -தேவகாந்தன் கடலினும் பெரிதாக இருந்தது நீலவெளி. வானினும்கூட பெரிதாய். நீரையும் வானையும் இணைத்து எல்லையற்றதாய் நீலமே விரிந்திருந்தது. நீலாம்பரியென முனகியது அவனது வாய். கண்களில் ஒரு பரவசம். பிறக்கவிருந்த அவனது குழந்தைக்கு அது ஒரு அழகிய பெயராய் இருக்கமுடியும். பிறக்கப்போவது பெண் குழந்தையென சாஸ்திரி சொல்லியதாக மனைவி போன கடிதத்தில்கூட எழுதியிருந்தாள். கலாபன் பின்தளத்தில் நின்றுகொண்டிருந்தான். பாரமேற்றிய கப்பலானதால் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று தொடங்கவிருந்த அந்த ஆனி மாத பிற்பகுதியிலும், அலைகளின் அலைத்தலின்றி மணிக்கு பதினெட்டு கடல்மைல் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது கப்பல். ஆறு மணி ஆகிக்கொண்டிருந்தும், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வேலைக்கு வந்து நாலு மணி அதிகாலையில் முடித்தவனுக்கு, இன்னும் தூக்கத்தின் அணுக்கம்கூட இருக்கவில்லை. பல்வேறு விஷயங்களையும் சுற்றி நினைவு படர்ந்துகொண்டிருந்தது. பம்பாயிலிருந்து கப்பல் புறப்பட்டு அன்றோடு மூன்றாவது நாள். மறுநாள் மாலையில் கப்பல் துபாயை அடைந்துவிடும். கடந்த ஆறு மாதங்களாக அதே ஓட்டம்தா...