கலித்தொகைக் காட்சி: 8
‘திங்களைத் தேன்கூடென எண்ணி ஏணிகட்டும் குறிஞ்சிநில மக்கள்’ இலக்கியத்தில் கற்பனை என்பதுபற்றி மேலைநாட்டு விமர்சகர்களிலிருந்து, அவர்களது சிந்தனை அடித்தளத்தில் நின்று இவவ்வகையில் சிந்திக்கின்ற தமிழ்நாட்டு விமர்சகர்கள்வரை ஒத்த அபிப்பிராயம் நிலவுவதாகத் தெரியவில்லை. இலக்கியத்தில் எந்தளவுக்குக் கற்பனையைப் புகுத்தலாம் என்பதுபற்றியும், இலக்கியத்தில் கற்பனையைப் புகுத்தலாமா கூடாதா என்பதுபற்றியும் பலமான விவாதங்கள் கிளம்பி ஓய்ந்திருக்கின்றன. யதார்த்தமான கற்பனையை இலக்கியத்தில் புகுத்துவது இலக்கியரசனைக்கு அவசியமானது என்ற கருத்தைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இலக்கிய விமர்சனம் பண்படுத்தப்பட்டு செழித்து வளர்ந்துள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டு முடிவு இது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலித்தொகைக் காலத்திலே கற்பனை ஒன்று வருகின்றது. அது யதார்த்தமானதா என்று கேட்டால் இல்லையென ஒரேயடியாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அது இனிமை பயக்கிறதாஎன்று கேட்டால் இனிமை பயக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிஞ்சிநிலத்திலே புணர்தல் நிகழ்தற்கும், அது பகற்குறி, இருவுக்குறிஎன்பதோடு ...