Posts

Showing posts from November, 2014

தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்

மார்க்ஸியர், இடதுசாரிகள், தேசியவாதம்: தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம் எப்போதும் கேட்பதற்குப் புதிது புதிதாக கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. இது சுவாரஸ்யமானதும், அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய சிந்தனைகளின் தோற்றமும் இந்தக் கேள்விகளின் அவசியத்தை மனிதர்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதாக இதற்கான விடையை நாம் கண்டடைய முடியும். தேசியவாதம் அல்லது தமிழ்த் தேசியவாதம் குறித்து இன்றெழுந்திருக்கும் கேள்விகளும் புதிய சூழ்நிலைமைகளின் தாக்கத்தினால் விளைந்தவையே என்பது தெளிவு. தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஓரளவு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கம் அரசியலில் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் உருவானதென்றாலும், அது குறித்த சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேலேயே அரசியற் புலத்தில் காலூன்றிவிட்டது. சரியாகச் சொன்னால் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளில். இந்தச் சொல்லை ஒரு கருத்துருவத்தின் வெளிப்பாட்டுக்காக செதுக்கியெடுத்தவர் ஜோஹன் கொட்பிறைட் ஹெடர் என்பவர். எவ்வாறு  போஸ்ட் மாடனிஸம் என்ற சொல், வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் ரொயின்பீ என்பவ

இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனமும்

அமெரிக்கா தனது நலங்களுக்காக அன்றி வேறு காரணங்களுக்காக எந்த நாட்டின் கோர நிகழ்வுகளுக்குமெதிராக  இதுவரை குரல் கொடுத்ததில்லை யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப் போவதில்லை. திட்ட  இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள்

கலித்தொகைக் காட்சி: 4

‘பிரிவினால் துயருறும் கலித்தொகைத் தலைவி’ -தேவகாந்தன் ‘விறல் மலைவெம்பிய  போக்கரும் வெஞ்சுரம்’  மேவிவிட்டான் தலைவன். இந்தப் பிரிவால் துயருழப்பது இறைவன் வகுத்தவிதிமாதிரி, தமிழிலக்கியம் பாலைநிலத் தலைவிக்கு  வகுத்துவிட்ட  விதியாகும். தலைவர் பிரிவும், தலைவிவியர் துயரும்தான் அகத்திணைச் செய்யுள்களுள்ளே இன்சுவை ப யப்பன. அதனால்தான்போலும் நானூறு பாடல்களைக்கொண்ட அகநானூற்றிலே இருநூறு பாலைத் திணைச் செய்யுள்களாக இருக்கின்றன. ஆங்கில இலக்கியத்திலும்  இத்தகைய  பிரிவுத் துயரப்  பாடல்களே  அதிகம் என்கிறார் ஐ.எம்.முர்ரே. அந்தச் சுவை  பிரிவிலேதான் என்றால் நாமும் பாலையைவிட்டு  ஏன் விலகவேண்டும்? பாலையென்பது  பிரிவுத் துயரடைந்த  தலைவியரின் பொறுமை  நிலை. ‘பசப்புறுபருவரல் ’என இலக்கணம் இதனைக் கூறும். பசப்புஎன்பதும் பசலைஎன்பதும் ஒன்றே. ‘பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு களைப்போடி வளங்கிறை வளை ஊர..’ வாடுகின்றாள் தலைவி. தலைவியின் இந்த  நிலையில் அவள் முகத்தை  கலித்தொகை, ‘பாழ்பட்ட முகம்’ என்று கூறுகிறது. பாழ் என்ற  ஒரு  சொல் எழில் வாய்ந்த  தலைவியின் முகம் எப்படி  உருக்குலைந்து  அழிந்து  கிடக்க

கலித்தொகைக் காட்சி: 3

‘தலைவனுடன் செல்லுதலை ‘பிரிதலறம்’என இலக்கியம் போற்றுகிறது’ -தேவகாந்தன் பாலைநில வழி. நெடுவேல் நெடுந்தகையுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் தலைவி. கொஞ்சுமொழி பேசும் பைங்கிளி, பந்தாடிய ஆயம் அத்தனையும் மறந்து, பெற்றதாய், செவிலித்தாய், உயிர்த் தோழி ஆகியோரைப் பிரிந்து பாலைநில வழியிலே தலைவனைப் பின்பற்றிவிட்டாள். ‘தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’ என்று தேவாரம் கூறும். கடவுள் ஆன்மாத் தத்துவம்போல ‘சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்’ என்கிற பாலைக் கலியின் வரி தலைவனைப் பின்பற்றிய தலைவியின் நிலையைப் புலப்படுத்துகிறது. கங்குல் புலராத காலைநேரம் அது. பாலைநில வழியில் போய்க்கொண்டிருக்கிற தலைவனையும் தலைவியையும் அந்தணர் சிலர் கடந்துவருகின்றனர். தலைவியின் அச்சமும், தலைவனின் நிலைமையும் அவர்களுடைய மனத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மென்மையான முறுவலொன்று அவர்களுடைய இதழ்க் கோடியிலே ஜனித்து மடிகிறது. அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து நடந்துவிடுகின்றனர். மகள் தன்னைப் பிரிந்துவிட்டாள் என்று  தாய்க்குத் தெரியவருகிறது. தன்னுடைய மகளை பாவையரோடு பந்தாடும் சிறுமியாகவேஅவள் எண்ணியிருக்கிறாள். பெற்றதாயின் பெருஞ்சிறப்ப

கலித்தொகைக் காட்சி:2

‘உடன்போக்குப் பாலை  சங்க மகளிரின் அன்புநெறி’ ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’என்பதுபொய்யாமொழி. மன்னவன் நடுவுநிலைநீங்காமல் நாட்டைக் காக்கவேண்டும், அப்போது அமைதி தழைக்கும். இல்லறத்தார் இரப்பவர்க்கு ஈயவேண்டும், அப்போது அறம் பெருகும். நாட்டிலே நிறைந்தஅமைதியும், இல்லங்கள் வளர்க்கும் அறமும் செம்மையான வாழ்வின் அறிகுறிகளாகுமென கலித்தொகை போற்றுகின்றது. பொருள் இல்லறத்தார்க்கு அவசியம் என்பது வெளிப்படை. ஆனால் அந்தப் பொருள் மலைகள் தாண்டியோ, கடல் கடந்தோ எவ்வித இடரினிடையும் வருந்திச் சேர்க்கப்படவேண்டுமே தவிர, செம்மையிலிருந்து பிறழ்ந்து சேர்க்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அப்படிச் சேர்க்கப்படுகிற பொருள் இம்மைக்கு மாத்திரமல்ல, மறுமைக்கும் கேடு விளைக்கும் என்கிற நம்பிக்கை சங்ககால மக்களின் மனத்திடையே ஊறிக்கிடந்தது என்பது, ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள்  இம்மையும் மறுமையும் பகையாவதறியாயோ..’என்ற பாலைக் கலியின்  பதின்மூன்றாம் செய்யுளால் அறியப் படுகிறது. பொருளின் அவசியத்தையும், அது  எவ்வழியில் ஈட்டப்படவேண்டும் என்பதையும் அறிந்த  தலைவன் ஒருவன் பொருளீட்டப் புறப்படுகின்றான். தன்னுடையப

கலித்தொகைக் காட்சி - 1

‘இரந்தார்க்கு  ஈய முடியாமை  இழிவெனக் கொண்டனர் சங்ககால  மக்கள்’ சங்கத் தொகை நூல்களுள்ளே கற்றறிந்தார் போற்றும் தொகைநூல் கலித்தொகை. இந்நூலைப் பொதுவாக சங்ககாலத்ததெனக் கொண்டாலும் இதிலுள்ள சில பாடல்கள் சங்கமருவிய காலத்தவை என்பதை இலங்கைத் தமிழறிஞர் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒருசெய்யுள் எந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தது என்பதை அதன் சொற்றொடர், பொருள், மரபு, மக்கள் வாழ்க்கைமுறை முதலியவற்றிலிருந்து பகுத்துணரமுடியுமென்பது மொழிவல்லுநர் கருத்து. இந்தவகையில் சிலசெய்யுள்களைசங்ககாலத்தைவையெனக் கொண்டாலும் பொதுவாக கலித்தொகைப் பாக்கள் சங்ககாலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைஅறிந்துகொள்ளச் சாலவும் உதவுகின்றன. எனவேகலித்தொகைச் செய்யுள்களின்மூலம் மக்களின் பண்பாட்டையும்,கற்றறிந்தோர் ஏற்றக் காரணமானஅதன் இனிமை, எளிமை, செழுமைகளையும் காண்போம். பாலை என்பது‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்து பாலையென்பதோர் படிவம் கொள்ளும்’எனத் தொல்காப்பியம் உரைக்கின்றது. அகத்திணையுள் பாலைக்குரியஒழுக்கம் பிரிதல் ஆகும். இந்தப் பிரிவு பல திறத்ததாய் அமையும். ‘ஓரா தூது பகையிவை பிரிவ

இலக்கியச் சந்திப்பு: 2

      இலக்கியச் சந்திப்பு :       இலங்கை எழுத்தாளர் செங்கை ஆழியான்   (இலங்கையின் நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான செங்கை ஆழியான் (கந்தையா குணராசா) நாற்பது வரையான நூல்களின் ஆசிரியர். அவற்றில் முப்பத்தைந்து நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு ஆய்வு சம்பந்தமான சரித்திர நூல்கள். தேசிய அளவிலும் சாஹித்ய மண்டல பரிசினை எட்டு தடவைகள் பெற்றிருக்கிறார். இவரது‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாக வந்தது. ‘மரணங்கள் மலிந்த பூமி’ நாவலுக்குக் கிடைத்த பரிசினை ஏற்கும்பொருட்டு தமிழகம் வந்த இவரை சென்னையில் சந்திக்க முடிந்தது. யுத்தத்தை, மனிதாயத சிதைவை வெறுக்கும் இந்தப் படைப்பாளி ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடனான சந்திப்பிலிருந்து..) சந்திப்பு: தேவகாந்தன் தேவகாந்தன் :அண்மைக் காலத்தில் தீவிரமாக நடந்த யுத்தங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது? செங்கைஆழியான் : அழிவுதான். யாழ்ப்பாணம் மரங்களற்ற வெறுமையும், இடிந்த கட்டிட சிதிலங்களும், நிறைந்த மரணங்களுமாய் இருக்கிறது. முந்திய பதினேழு ஆண்டுக் காலத்தில் ஏற்படாத அழிவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பத

இலக்கியச் சந்திப்பு:1

இலக்கியச் சந்திப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தமிழ்த் துறை, யாழ். பல்கலைக் கழகம் சந்திப்பு: தேவகாந்தன் (இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் 1942இல் பிறந்த பேராசிரியர் நா.சுப்பிரமணியன் பல்கலைக் கழக கற்பித்தல் துறையில் சுமார் முப்பதாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். தற்பொழுது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருக்கிறார். ‘இந்தியச் சிந்தனை மரபு’ என்கிற புகழ்மிக்க தமிழ்நூலின் இணை ஆசிரியர்களில் ஒருவர். அண்மையில் சென்னை வந்திருந்த சமயத்தில் இவ்விலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது.) தேவகாந்தன்: சுமார் இருபதாண்டுக் கால யுத்த நிகழ்களமான இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில், இலக்கிய வாசிப்பின் நிலைமை எவ்வாறு இருக்கிறது? நா.சுப்பிரமணியன்: இந்தக் கேள்விக்கு, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை என்னால் துல்லியமான பதில் சொல்ல ஏலும். ஏனென்றால், யாழ்ப்பாணத்துச் சூழலோடு இக் காலகட்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இலக்கியமும், இலக்கியம் சம்பந்தப்பட்டதுமான வாசிப்பும் இக்காலத்தில் தக்க வளர்ச்சி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்கலைக் கழகமும், இன்னும்

புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

தமிழ்ப் புனைகதைப் பரப்பில் புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள் இரு கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து ஒரு மாறுகொள் சிந்தனை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிக்க எதிர்ப்பார்ப்போடும் நம்பிக்கையோடும் கவனிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற கருதுபொருள், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின்னரான இக் காலகட்டக் கணிப்பில் எந்தத் தளநிலையை அடைந்திருக்கிறது என்பதை ஒரு வரைகோட்டு விழுத்தலாக அமைத்துப் பார்க்கிறபோது, முன்பிருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் சறுக்கலடைந்து இருப்பதையே ஒருவரால் காணமுடியும். அதன் காரணங்களையும், காரணங்களின் பின்னணிகளையும் சுருக்கமாகவேனும் அலசுகின்ற தேவையிருக்கிறது. தொண்ணூறுகளில் ஒரு நூலைத் தயாரிப்பதற்கான செலவை இந்திய ரூபாயில் வெளிநாட்டுப் பண மாற்றாகக் கணித்த நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது மிகவும் குறைவாகத் தென்பட்டதாயே கொள்ளக்கிடக்கிறது.  ஒரு நூலை எவராவது எழுதிவிட்டிருந்தால் அதன் அச்சாக்கத்துக்கு பெரிய தடையேதும் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை. அச்சாக்கமல்ல, எழுதுவதுதான் தேவையானதாக இருந்தது அன்றைய நிலையில். அதன்படி சிலபல நூல்களும் வெளிவந்தன. அவை வந்த சுவடுமில்;லாமல் மறை

சிறுகதை: தாவோவின் கதை

சிறுகதை: தாவோவின் கதை பளீரென்ற வெண்பனி பார்வைக்கெட்டிய தூரம்வரை கொட்டிக்கிடந்தது. மரங்களும் பனி போர்த்திருந்தன. நீண்ட நெடுந்தார்ச் சாலைகளில் வெள்ளி மாலையின் கனதியோடு வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒலி பின்னே எழுந்துகொண்டிருந்தது. துண்டாக்கி தனிமைப் படுத்தப்பட்டதுபோல் சலனமும் சத்தமும் அற்றுக் கிடந்த முன்புற வெளியில் ஜோர்ஜி றெஸ்ரோறன்ரில் இருந்தபடி நான் பார்வை பதித்திருந்தேன். வெளியின் அசரங்களில் பரந்துகொண்டிருந்த என் பார்வையில் திடீரென சின்னதாய் ஓர் அசைவு. நான் பார்வையைக் கூர்ப்பித்தேன். பிரதான சாலையைத் தொட்ட சிறிய தொழிற்சாலை வீதியில் தாவோவின் சின்ன உருவம் வந்துகொண்டிருந்தது. நான் வேலைசெய்யும் அதே தொழிற்சாலையில்தான் தாவோவும் வேலைசெய்கிறான். ஒன்றாக வேலை செய்த அவனை கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் அதே தொழிற்சாலையின் வேறு பகுதிக்கு மாற்றிவிட்டிருந்தார்கள். எனினும் எனக்கு வேலை முடிந்தபோதிலேயே அவனுக்கும் முடிந்திருக்கவேண்டும். இருந்தும் நான் முதலாவது போத்தில் பியர் அருந்தி முடிகிற நேரத்தில்தான் தாவோ அங்கிருந்து வருகிறான். நான் ஆச்சரியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக த