முற்றுத் தரிப்பு
காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப் பொட்டு இருந்திருந்தது. சுரிதாரின் துப்பட்டா மறைத்திருந்த கழுத்தில் கொடியும் இருந்திருக்கலாம். அதற்கு மேல் அவளது இடது கை விரலின் மோதிரம் குறித்து என் கவனம் படரவில்லை. வெள்ளவத்தை மார்க்கட்டுக்கு நேர் எதிர்ப்புறத்தில், திரும்பித் திரும்பிச் சென்று கடற்கரையை அடைந்த தெரு அது. அதன் மூலையிலிருந்த செருப்புக்கடையை நான் தாண்டிச் சென்ற வேளையில், ‘கேக்கேல்லப்போல’ என்றபடி விரைந்து பின்...