யதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்- வ.க.நாவல்களை முன்வைத்து…
யதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்: வ.க.நாவல்களை முன்வைத்து… கடந்த நூற்றாண்டின் கடைசி இரு தசாப்தங்களிலும் வீச்சான நாவல்கள் பலவற்றை நாம் சாதனையாக அடைந்திருக்கிறோம். ஆனாலும் அவற்றின் சிருஷ்டிபர முயற்சிகளுக்கு உரமாகக்கூடிய பலவகை எழுத்துக்களை தமிழ்ப் படைப்புலகம் ஏற்கனவே தரித்திருந்திருக்கிறது. அவற்றுள் வல்லிக்கண்ணனின் நாவல்கள் அடங்காமல் போய்விடா. அவரது நாவல்கள் மீதான ஒரு பொதுப்பார்வையையும், அவற்றுள் சிறந்தவெனக் கருதத் தக்க இரண்டு நாவல்கள்மேல் விமர்சனபூர்வமான அணுகுமுறையையும் செலுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம். ஒரு நாவலிலக்கிய ஆசிரியராகப் பேசப்படாதிருந்தபோதும் ஆழ்ந்த ஒரு வாசிப்பில் தமிழ் நாவல் இலக்கியத்தில் யதார்த்த வகைப் போக்கினாலும், வட்டார வழக்குகளின் வீச்சினாலும் தெளிவான சில அடையாளங்களை வல்லிக்கண்ணன் பதியவைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 1951 தொடங்கி 1980 முடிய சுமார் முப்பதாண்டுக் காலத்தில் பத்து நாவல்களை அவர் படைத்திருக்கிறார். 1)செவ்வானம் 2)சகுந்தலா 3)விடிவெள்ளி 4)அன்னக்கிளி 5)வசந்தம் 6)வீடும் வெளியும் 7)ஒரு வீட்டின் கதை 8)இருட்டு ராஜா 9)நினைவுச் சரம் 10)...