சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து

சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள்
-தேவகாந்தன்-

இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தின் இறுதிக் கண்ணியில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் இலக்கியவிவகாரங்கள் குறித்துதெளிந்தசிந்தனையோடு இருபத்தோராம் நூற்றாண்டில் பிரவேசிப்பதுஅவசியமாகும்.

அக்டோபர் கணையாழி இதழில் நான் எழுதிய‘சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து…’என்றகட்டுரையில் எழுத்துமரபு,
வாய்மொழிமரபுபற்றி விசாரித்திருந்தேன். அக் கட்டுரையின் நீட்சியாகத் தொடரும் இக் கட்டுரையில் ஈழத்துப் பெண் கவிஞர்கள்பற்றி ஆழமாக கவனிக்கலாமென்றிருக்கிறேன். இது ஒட்டுமொத்தமானஈழத்துக் கவிதைகளின் போக்குக் குறித்தும் புரியவைக்கும்.

நாவல்,சிறுகதை,நாடகங்களைவிடவும் கவிதையேஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் வலுவீச்சுக்காட்டிவளர்ந்திருக்கிற இலக்கியவடிவம். இதில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு அதிகமானது என்று சொன்னாலும் பொருந்தும். ஒளவை,ஊர்வசி,சிவரமணி,சன்மார்க்கா,மைத்ரேயிமல்லிகா,கோசல்யா,கல்யாணி,கருணா,உமையாள்,ரஞ்சனி,சுல்பிகா,பாமினி,செல்வி,நிருபமா,பிரியதர்சினியென்று இப் பட்டியல் விரிகிறது. சமூகத்தின் சமகாலநிகழ்வுகள் குறித்து பேரக்கறைகொண்டுள்ள இக் கவிஞர்கள் தன்னெஞ்சறிவது பொய்க்காத நேர்மையுடன் இருந்தார்களென்பதை கவிதைகளை வாசிக்கையில் ஒருவரால் சுலபமாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.

யுத்தபூமியாகிவிட்டிருக்கிறது இலங்கை. எங்கும் வாழ்வுப் பிரச்னைகள்,கொடுமைகள் மலிந்துகிடக்கின்றன. இவற்றினால் கொதித்தெழுந்துஉணர்ச்சிகள் கவிதைகளாய் வெடித்திருக்கின்றன. விடுதலைப் போராளிகள், அரசு என்ற எதுவித பேதமுமின்றி அக்கிரமங்களுக்கும், அடக்குதல்களுக்கும் எதிராக மானுட இருத்தல்பற்றிய, சுதந்திரம்பற்றிய தளத்தில் நின்று இவர்கள் கொடுக்கும் குரல் வீறாண்மைவாய்ந்தது. இதுமானுடத்தின் அடங்கமறுக்கும் கோ~மாய் பூமியைஅதிரவைக்கிறது. மட்டுமில்லை. பெண் விடுதலைசார்ந்து பழையனகழிக்கும் வேட்கையும், சிறைகளைத் தகர்க்கும் உக்கிரமும் வாய்ந்தும் ஈழக் கவிதை வேள்வி பெருக்குகிறது.

குழம்பியஒருசமுதாயத்தில், இருப்பின் நிச்சயமற்றுப் போனதால் தாங்களும் மிகக் குழம்பி தொடர்ந்து எழுதாமல் போய்விட்டகவிஞர்களும் இருக்கிறார்கள். இந் நிலைமைகளைத் தாளாமல் தற்கொலைசெய்துகொண்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். தம் எழுத்தினதும் கருத்தினதும் வீர்யம் காரணமாய் கடத்தப்பட்டு பின் காணாமலேபோய்விட்ட (இவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது) கவிஞர்கள்கூட இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் மனஅழுத்தங்கள் காரணமாய் தற்கொலைசெய்துகொண்டார்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவேர்ஜினியா வுல்ஃப் என்ற எழுத்தாளரும், சில்வியாபிளாத் என்ற கவிஞரும் என்று அறிகிறோம். ஈழ யுத்தநிலைமை காரணமாய் சிவரமணி என்ற பெண் கவிஞர் தற்கொலைசெய்துகொண்டார் என்பது பெரிதாக வெளியே தெரியவரவில்லை. செல்வி என்ற பெண் கவிஞர் தம் எழுத்துநேர்மையும், அச்சமின்மையும் காரணமாய்க் காணாமல் போனவர். தற்கொலைசெய்தலைவிடவும் காணாதுபோதல் என்பதே கவிதைநெறியைத் துல்லியப்படுத்திக் காட்டுவதாக இருக்கிறது.

சமகாலஈழக் கவிதைகளின் செல்நெறி சமூகம் சார்ந்ததாயிருக்கிறது. அது யுத்தம் புரிவதாய் இருக்கிறது. அவற்றின் தன்மைகள் நயங்கள்பற்றி கீழே சிறிது காண்போம்.

‘உங்கள் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது’ என்று உரத்துக் குரல் கொடுத்தவர் சிவரமணி.

‘இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும் 
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?’என்றும் ஓங்கிக் கேட்டவர் இவர்.

பின்னால் இந்தஉள்ளுரம் தேய்ந்து,
‘கதவின் வழியாய்ப் புகுந்த
மேற்கின் சூரியக் கதிர் விரட்ட
நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல
மீண்டுமொரு இரவு நோக்கி’என்று எழுதும்படிஏன் ஒரு நம்பிக்கைவரட்சி? ‘நான்,எனதுநம்பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டிருக்கிறேன்’என்று கூற என்னகாரணம்? இதுவே இவரைத் தற்கொலைக்கு இழுத்ததா?

செல்வி சோகத்தைப் பாடினார். ஆவரின் கவித்துவ வீச்சு அச்சோகத்தை அச்சொட்டாய்ச் சிறைப்பிடித்தது. ‘தாய்மையின் அழுகையும், தங்கையின் விம்மலும்,பொழுது புலர்தலின் அவலமாய்க் கேட்டன’ என்று செல்வி எழுதுகையில் அவர் சோகத்தை மட்டுமே பேசவில்லை. தன் கோபத்தைக் காட்டியிருப்பதையும் வாசகனால் புரியமுடியும். இது சமூக அநீதிக்கான, அரசியல் கொடுமைக்கான கோபம். ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்ன ரகசியத்தை நம்மால் உணரமுடிகிறது.

இன்னொருபெண் கவிஞர் சுல்பிகா.‘விலங்கிடப்பட்டமானுடம்’என்றஅவரதுகவிதைத் தொகுப்பிலிருந்துஒருகவிதை.

‘அந்த
இரவின் தொடக்கம்
போர் யுகத்தின் ஆரம்பம்

இரும்புப் பறவைகள் வானில் பறக்க
பதுங்குகுழிகளில்
மனிதர்கள் தவிக்க
தொடர்கிறதுஅந்த இரவு

மானிடத்தின் மரணத்திற்கு
இரத்தம் தோய்ந்த இரவுகள் சாட்சி
தெருச் சடலங்கள்
கற்பிழந்தபெண்கள்
கருகிக் காய்ந்தகுழந்தைச்
சடலங்கள்
இடிந்தகட்டிடங்கள்

கழிவெடித்து
காய்ந்துகிடக்கும் வயல்வெளிகள்
புத்தகச் சாம்பல்கள்
வாயுநிரம்பும்
வயிற்றுமனிதர்கள்

இன்னும் இன்னும் எத்தனை…
இந்தப் பட்டியல்
இன்னும் நீளும்
இரவின் சாட்சிகள்.’

இக்கவிதைநிகழ்வுகளைச் சொல்லியிருப்பது மட்டுமின்றி ஒரு சமூகத்தின் ஏக்கம் எழுச்சிகளின் பதிவாகவும் ஆகிவிடுகிறது. நிலா, மேகம், நட்சத்திரங்கள், காதல், தவிப்பு, விந்துச் சுகங்கள், கலவிக் களிகள்பற்றிப் பாடியகாலம் முடிந்துபோனது. எங்கோ இவைபற்றியும் ஒருகவிதை வெடித்துவிழலாம். ஆனால் கவிதைப் பொருள் ஏற்கனவே சமூகமாகிவிட்டது.

கவிதையாவும் தனக்கெனக் கேட்கிறதுசமூகஅக்கறை. இதன் அடிபற்றிநிற்கிறதுஈழத்துக் கவிதைச் செல்நெறி.
000

(‘அமிழ்தம்’என்ற பெயரில் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழின் பொங்கல் மலரில் (1999)பிரசுரமான உரைக்கட்டு இது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்