ஏகலைவன் (நாடகப் பிரதி)

 ஏகலைவன் (நாடகப் பிரதி)
இளையபத்மநாதன்

இளையபத்மநாதனின் நான்கு நூல்களைப்பற்றியகலந்துரையாடல் அண்மையில் சென்னையில் நடந்தது. இவற்றில் மூன்று  தமிழில் எழுதப்பெற்ற  நாடகப் பிரதிகள். இன்னொன்று, ‘ஒருபயணத்தின் கதை’ என்கிற  பெர்தோல் பிரெக்டின் ஆட்டப் பிரகார  மொழிபெயர்ப்பு. இதை, ‘அடியொற்றிய  தழுவல்’ என்கிறார் ஆசிரியர்.

பொதுவில் நாடக நூல்களின் வரவு அருகியிருக்கிற தமிழ்ச் சூழலில், இந் நூல்களின் வரவு துல்லியமாய்க் கண்ணில்பட்டது. ‘கிப்டு’ வாசகர்களுக்காக வேண்டி ‘ஏகலைவனை’ப்பற்றிய  சுருக்கமான  மதிப்புரையை இக் கட்டுரைத் தொடர் அடக்குகிறது.

முதலில் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற நூல் ‘ஏகலைவன்’. அதன் அரங்காக்க வரலாறு இது: 1972ல் பிரதியாக்கம்பெற்ற புகழ்பெற்ற நாடகமான ‘கந்தன் கருணை’க்குப் பிறகு, மூலத்தில் எழுதப்பட்டு பிரதியாக்கம் பெறுகிற முதலாவது இளைய பத்மநாதனின் நூல் இது. 1978ல் இலங்கையில் அம்பலத்தாடிகள் குழு மூலமாய் முதன்முதலில் அரங்கேறிற்று. இரண்டாம் ஏற்றம் 1982லும், மூன்றாவது 1993லும் நிகழ்ந்தன. திறந்தவெளி நாடகக் கூத்தாகவே இது அப்போது  அரங்கேறியது. இதன் மிதிகளும் நடைகளும்கூட முந்திய பல கூத்தாட்டங்களிலிருந்தும் பெறப்பட்டவையே. இது 1993இல் அரங்காக்கம் பெற்றபோது நாடகக் கூத்து  படிநிலையிலிருந்து, கூத்துநாடகமாகப் பரிமாணம் பெற்றிருந்தது என்று சொல்லப்பட்டது. இது பிரதியில் நாடகவாசிரியர் காட்டிய மகாகவனத்தை எடுத்துக் காட்டுகிறது.
மூன்று அங்கங்களையுடைய இந்த நாடகம் இப்போது பிரதியாக வெளிவந்திருக்கிறது.

எந்தவொரு நாடகமும் நாடகப் பாடமொழி, நாடக அரங்கமொழி என்ற இரு கூறுகளுள் அடங்கும். நாடகப் பாடமொழி பெரும்பாலும் வாசிப்புப் பிரதிக்குரியது. நாடக அரங்கமொழிதான் அரங்காட்டத்தில் முதன்மை பெறுவது. இதன்படி பார்த்தால் ‘ஏகலைவன்’ வாசிப்புக்கான பிரதியே. ஒருநாடகப் பிரதி தன் வாசல்களைத் திறந்து பல ஆட்டப் பிரகாரங்களுக்கும் இடம்கொடுக்கும். அவ்வாறு அது கொடுக்கவேண்டும். அதனாலேயே ஆட்டப் பிரகாரமும் இணைந்த நாடகப் பிரதிகள் உருவாவதில்லை.

அது தொழில்துறை சார்ந்தவோ, ஆய்வுநெறி சார்ந்தவோவான தேவைக்குமட்டுமே உரியது எனச் சொல்லப்படுகிறது. அதனாலேயே அவ்வகைப் பிரதியாக்கமும்,  அப்பிரதிகளின் அச்சாக்கமும் நாடக உலகில்போல் தமிழ் நாடக உலகிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. ஒரு நாடகப் பாடமொழிப் பிரதிதான் வாசிப்புச் சாத்தியத்தை அதிகப்படுத்தும். இசை செறிந்த இதன் மொழிநடையும் சேர வாசிப்போன் அபார ஈடுபாடும், இன்பமும் பெறுகிறான் இதில்.

ஏகலைவன் கதை அண்மைக் காலமாய் மிகுந்த வாசிப்புக்குள்ளாகியிருக்கிறது. பல்வேறு விதமாக இது பதிவும் பெற்றிருக்கிறது. பிரளயனின் ‘உபகதை’ சென்ற மாசி மாதத்தில் சென்னையில் மேடையேறியது. 42 பேரின் அரிய உழைப்பில் அற்புதமாய் வந்திருந்தது நாடகம். அதன் முதல் கதை ஏகலைவனதுதான். ஏகலைவனின் அபார திறமையை அறிந்து கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்கிறார் துரோணர். ஏகலைவன் மறுக்கிறான். ‘நான் ஏன் துரோணரிடம் வில்வித்தை கற்கப் போகிறேன்? வில்லும் அம்பும் எங்களின் விரல்களின் நீட்சி’ என்கிறான். யுத்தத்தில் வெற்றிகொள்ளப்பட்டு அவன் கட்டைவிரல் கட்டாயமாகவே வெட்டப்படுகிறது நாடகத்தில்.

 ‘உபபாண்டவ’த்தில் இறுதிநேரத்தில் விருப்பமற்றுப் போகிறதானாலும் ஏகலைவன் தானாகவேதான் கட்டைவிரலைத் துண்டித்துக் காணிக்கையாகத் தருகிறான். கட்டைவிரல் பறக்கிறது. அதைஅம்புவிட்டு அடிக்கிறான் அர்ச்சுனன் மகிழ்ச்சியில். கட்டைவிரல் காணாமல் போகிறது. பாழில் மறைகிறது.

‘இரண்டாம் இடம்’என்ற எம்.டி.வாசுதேவன் நாயரின் உன்னதமான நாவலில் காட்டில் சம்பவிக்கும் ஒரு கலவரத்தில் ஏகலைவனின் கட்டைவிரல் சேதமாகிப் போகிறது. இப்படிகட்டைவிரல்பற்றி நவீன கதை பலவிதமாய்ப் பேசும்.

இந்தநாடகப் பிரதியில் ஏகலைவன் துரோணரின் காலடியில் தன் வலதுகையை வைத்து கோடரியால் கட்டைவிரலை தானே வெட்டுவதாக வரும். காணிக்கையாகவே கட்டைவிரல் போகிறது. புலம்புவது ஏகலைவனின் தந்தையாக இருக்கிறது. அவனது நண்பர்களும் துடிக்கின்றனர். ஆனால் ஏகலைவன்,  ஏற்கனவே கண்டமுரண்பாடுபோல் எதையும் காட்டுவதில்லை. இழந்ததுகூட எவ்வளவு அவசியமான அங்கம் என்பதே தெரியாதிருக்கிறான். அம்பெய்ய முயல்கிறபோது அவனால் முடியாதுபோகிறது. அப்போதுதான் ஓர் அதிர்ச்சியோடு அவன் துரோணரைப் பார்க்கிறான். அவர் தலை கவிழ்கிறார்.

‘தந்தையும் நண்பர்களும் ஆத்திரத்தோடு  எழுகிறார்கள். அரசர்கள் அனைவரும் பின்வாங்குகிறார்கள்.’ அப்படியே முடிகிறது பிரதி.

நாடகப் பிரதிமுழுக்க செறிந்திருக்கும் சமூகப் பிரக்ஞை பிரச்சாரமளவு விரியாமல், கலாநேர்த்தியைக் குலைக்காமல் வந்திருப்பது நாடகாசிரியரின் வெற்றியென்று சொல்லலாம். நாடகத்தில் வரும் உரைஞர்பற்றியும் குறிப்பிடவேண்டும். முன்பின்னாய் நிகழும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு உரைஞர்மூலம் நிறைவேற்றப்படுகிறது. மனத்து அகத் தோற்றங்களை விளக்கவரும் இடங்களின் மொழியாளுமை சிறப்பு.

‘ஏகலைவன் ’நாடகப் பிரதி தமிழ் நாடகவுலகுக்கு ஒரு நல்வரவு. இதன் அரங்காக்கம் நிச்சயம் அம்பலத்தாடிகளின் விசேட அம்சமாய் வீதி நாடகப் பாணியில் அமைந்து அதன் வகை நாடகங்களின் வளர்ச்சிக்கு பெறுமானமான பங்களிப்பைச் செய்திருக்கிறதென்று துணிந்து கூறலாம்.

000

வெகுமதி (பிரான்ஸ் ), ஆடி-ஆவணி 2001

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்