மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு

மலேசியச் சிறுகதைகளின்
வளர்ச்சிப்போக்கு - தேக்கம் - நிவாரணம்


‘தமிழில் சிறுகதை வரலாற்றையும் வளர்;ச்சியையும்பற்றி ஆராயும்போது தமிழ்மொழி பயிலும் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்வது தவறு என்பதும், மொழி உணர்ச்சியும் இலக்கிய ரசனையும் தீவிரமாக வளர்ந்துள்ள மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் சேர்த்து ஆராயவேண்டியது இப்போது அவசியமென்பதும் தெளிவாகத் தெரிகிறது.’

இது சிட்டியும், சிவபாதசுந்தரமும் எழுதிய ‘தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் உள்ள வரிகள். நூல் 1989ல் வெளிவந்தது. இது சுட்டும் குறிப்பின் விவரத்தை உன்னித்தால் ஏறக்குறைய அதுகாலம் வரைக்கும் மலேசியத் தமிழிலக்கியம் கவனிக்கப்படவில்லையென்பது தெரியவரும்.

இதன் முதற் காரணியாக இலக்கியப் பரிமாற்றம் போதியளவு இன்மையைச் சொல்லமுடியும்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் சுமார் நூறினை அண்மையில் வாசிக்க நேர்ந்தபோது வெகு பிரமிப்பு ஏற்பட்டது. அதன் வித்தியாசமான களத்தில், வித்தியாசமான கரு விவரிப்புகள் சூழமைவுகளில் அற்புதமான சில சிறுகதைகளைக் கண்டேன். இவ்வளவு காலம் அவை மறைந்து கிடந்தமை ஆச்சரியமாகவும்கூட இருந்தது. தமிழுலகுக்கு அது நட்டம்.
மலேசிய தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் வளர்ச்சிகளை புள்ளி விபரங்களுடன் இங்கே தரவுகளாய்த் தருவது எனது நோக்கமல்ல. இங்கே அந்தளவான ஆய்வு வளர்ச்சியும் போதுமான அளவுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும்.

1964ல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அங்கு நடந்தவேளையில், படைப்பிலக்கியம் அங்கே தீவிரம் பெற்றிருந்தது எனச் சொல்ல முடியும். எனினும் மாநாடு, இனக் கிளர்ச்சி போன்றவற்றின் பின்னாலுள்ள பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் யதார்த்தவகை எழுத்தின் உச்சமான சில சிறுகதைகள் படைக்கப்பட்டன.

அக்கதைகள் அதுவரை தமிழ்ச் சூழல் காணாத களத்தினையும் கருவினையும் கொண்டிருந்தன. அக்கதைகளில் பெரும்பாலானவற்றை எழுதியவர்கள் மாணவர் மணிமன்றத்தில் உருவானவர்கள். புதிய தாயகத்தின்மீதான கவுரவமும், தமிழ் அபிமானமும் சுரக்கச் சுரக்க தேசியத்; தன்மை அவர் கதைகளில் ஏறலாயிற்று. அது, அதுவரை தொடர்ந்த இலக்கியப் போக்கினில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திராவிட இயக்க பாணிக் கதையாக்கத்தின், மொழி நடையின் வீழ்ச்சியையும் அது குறித்தது.

‘முத்துசாமிக் கிழவன்’ என்கிற சி.வடிவேலின் சிறுகதை, தேசிய இலக்கியப் பின்னணியில் மிகுந்த துலக்கமாய்த் தெரிவதன் காரணம் இதுதான். மரண பாலம் என்று மலேசிய சரித்திரம் சொல்லும் சியாம் ரயில் பால கட்டுமானத்திற்காக ஆயிரமாயிரம் தமிழர்கள் மலேசியாவிலிருந்து கூலிகளாக ஏற்றிச் செல்லப்பட்டனர். இக்கொடுமை இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நிகழ்ந்தது. மரணபாலப் பின்னணியில் மிக்க கலா நேர்த்தியுடன் புனைவு செய்யப்பெற்ற கதை இது. மண்ணினதும் வாழ்வினதும்மீதான இதன் கண்ணோட்டம் ஐயமில்லாமல் மலேசிய தேசியம் சார்ந்தது.

எம்.குமரனின் ‘சஞ்சிக் கூலி’ இவ்வகையில் குறிப்பிடத் தக்க இன்னொரு கதை. வறுமை காரணமாய்; மகளை ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு விற்றுவிடுகிறான் சீனக் கிழவனான லிம். நாளடைவில் மனைவியும் ஓடிப்போய்விட தனியனாகிவிடும் லிம், தன் விற்ற மகளைத் தேடுவதும், கண்டடைதலும், சேரமுடியாமலும் பேசமுடியாமலும் தவித்து அவளைப் பார்ப்பதில்மட்டும் திருப்திப்பட்டுக்கொண்டு வாழ்வதும், கடைசியில் அநாதையாய் செத்து வீழ்வதும்தான் கதை. லிம் சீனக் கிழவனின் மகள் தமிழர் வீட்டில் லட்சுமியாய் வளர்ந்து நொண்டியான கணபதியைத் திருமணம்செய்துகொண்டு நடப்பியல்பில்சுழன்று வாழ்வதும் கதையில் வியத்தகுவகையில் கலாபூர்வம் பெற்றிருக்கிறது.

பால்மரக் காடுகளிடையே தமிழ்ச் சகோதரிகளும் தாய்மாரும் பட்ட உடல் உளத் துயரங்கள் சொல்லிமாளாது. பாரதி சொன்ன ‘கண்ணற்ற தீவுக’ளாகவே அவை இருந்தன. அதைச் சிறப்புறச் சொல்லுகிறது சா.ஆ. அன்பானந்தனின் ‘ஏணிக் கோடு’ கதை. தொழிலாளர் நிலை மட்டுமின்றி பெண்களின் சமூக நிலைமையையும் தெளிவாகக் காட்டுகின்றது இந்தக் கதை. கதை கட்டுதலுக்கு ஆளாகி, மணமுடிக்கச் சம்மதித்திருந்தவன் மறுத்துவிடும் சோகத்தில் வீழும் ஒரு முடப்பெண் பற்றிய கதை இது. கதை இவ்வாறு முடிகின்றது: ‘சில நாட்கள் கழிந்தன. பதினோராம் நம்பர் வெட்டுக் கிழ மரங்களை அழிக்கப் பாசாணம் தெளிக்கப்பட்டது. அவற்றோடு வெட்டப்படாத அந்தத் தனி மரமும் பாசாணத்தை ஏற்றுக்கொண்டது.’

இவ்வாறு ஒன்றைச் சொல்லி சொல்லாத ஒன்றை விவரிக்கும் போக்கு ‘ஏணிக் கோ’ட்டில் மட்டுமில்லை, மலேசிய தமிழிலக்கித்தில் அக்காலகட்டத்தின் ஒரு ஒருமித்த போக்காக இருந்ததென்று கூறினாலும் தப்பில்லை.
அருகம்மாளுக்கும், மண்ணாங்கட்டிக்கும்இடையே உள்ள உறவின் உன்னதத்தை அற்புதமாய் விளக்குகிற கதை ‘செஞ்சேற்றில் ஒரு ஞானப்பூ’. தலைப்புப்போல் சினிமாத் தன்மை வாய்ந்ததாய் இல்லை கதை. அருகம்மாளுக்குக்கூட தன்மேலுள்ள ஆசையினால்தான் தான் ஏவும் வேலைகளையெல்லாம் மண்ணாங்கட்டி செய்வதாக எண்ணம். ஆனால் சப்பாணியான மண்ணாங்கட்டியோ,‘நான் உன்னைத் தூக்கி வளர்த்தேன், உனக்கு விளையாட்டுக் காட்டினேன், நீ எனக்கு மகள்மாதிரி’ என்று கூறிவிடுகிறான். பொறிகலங்கிப் போகிறாள் அருகம்மாள்.
மைதீ சுல்தானின் ‘நூறு மீட்டரி9ல்…’ சிறுகதை உருவநேர்த்திக்கும், சொற் சிக்கனத்துக்கும் சொல்லக்கூடிய சிறந்த சிறுகதையாகும். மலேசிய ஓட்டப் பந்தய வீரரையல்ல, மலேசிய தமிழிலக்கியத்தையே அந்த இடத்தில் பொருத்த முடியும்.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயம். கனேடிய பென் ஜான்சன், இங்கிலாந்தின் கார்ல் லூயிஸ் ஆகியோர் உட்பட சர்வதேச புகழ் வீரர்கள் பங்குபெறுகிறார்கள். மலேசிய வீரர் மூன்றாவதாய்… இரண்டாவதாய்…முதலாவதாய் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பத்து மீட்டரிலும் உணர்வு ஏறிக்கொண்டிருக்கிறது. உலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அங்கே மர்மமாய் ஒலிக்கிறது மலேசிய வீரருக்கான குரல்: ‘எஸ்…யு கேன் மேக் இட்!’ ஓட்ட முடிவிடத்துக்கு இன்னும் ஒரு பத்து மீட்டரே இருக்கிறது. கதை முடிகிறது, ஓட்டம் முடியாமலேயே. வார்த்தை ஜாலங்களின்றி ஒரு கதையை இவ்வளவு உணர்ச்சி உச்சத்துக்கு எடுத்துச் செல்ல முடியுமென்பதை இக்கதையைப் படித்திராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன்.
வே.இராஜேஸ்வரியின் ‘ஆறாவது காப்பியம்’ தாய்-மகள் உறவுபற்றிய கதை. அவ்வுறவை முரண்களுடனும் ஒருவகை கொடூர நடைமுறைகளுடனும் கூடியதாய்ச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். எவ்வளவுதான் வெறுத்திருந்தாலும் தாய் சிறை செல்ல தன் தாயின் கரிசனையையும், காபாந்தினையும், அன்பினையும் நினைந்து வருந்துகிறாள் மகள். ஒரு உயர்ந்த கட்டிடத்தின் கட்டுமானத்திலுள்ள அத்தனை அவதானத்தையும் அத்தனை சிரத்தைதையையும் போல் இக் கதையிலும் கட்டுமானச் சிறப்பு பெருவெற்றியுடன் விளங்குகிறது.

சை.பீர் முகம்மதுவின் ‘சிவப்பு விளக்கு’ என்கிற சிறுகதை குறியீட்டுப் படிமங்கள் மூலமாய் சிறுகதைக்கு வலுவூட்டுவது. மலேசியாவின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுள் ஒன்றாக அதைக்கொள்ள முடியும். மா.சண்முகசிவாவின் ‘வீடும் விழுதுக’ளும் பிரச்சாரக் கருத்தொன்றினை அதன் நெடிகூட இல்லாமல் கதையாக்குவதில் பெற்ற காலவெற்றியைப் பிரசித்தம் செய்கிறது. செல்லம்மாளுக்கு வீடு இல்லாதுபோகும் அவலம், தமிழருக்கு வீடற்ற மண்ணற்ற நிலையை உள்ளோட்டமாய்க் கொண்டிருக்கிறது. ராமையா, ரெ.கார்த்திகேசு போன்றோரின் கதைகளும் மலேசியத் தமிழிலக்கியத்துக்கு உரம் சேர்ப்பவை. மட்டுமில்;லை. அதன் தனித் தன்மையையும் போக்கினையும் சுட்டிநிற்பவைகூட.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் யதார்த்த தளத்தில் அமைந்தவை. தக்க முறையில் ஒரு தொகுப்பைத் தயாரித்தால் அது தமிழுலகில் நிச்சயம் பேசப்படும் ஒன்றாக அமையும். எந்தத் தொகுப்புக்கும் சளைக்காத சங்கையோடு அது விளங்கும். இத்தனை இருந்தும் கடந்த இருபது ஆண்டுகளில் மலேசிய தமிழிலக்கியம்- குறிப்பாக, சிறுகதைகள்- ஏன் மேற்கொண்டு வளர்ச்சி காணவில்லை என்பது முக்கியமானதொரு கேள்வி. அதற்கு பதிலளிப்பதற்குள் ‘பாக்கி’ சிறுகதைபற்றி பார்க்கவேண்டும். எம்.ஏ.இளஞ்செழியனின் இச்சிறுகதை மலேசியாவின் மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுள் ஒன்று என்று சொல்லவும் தயங்கமாட்டேன்.

முதலில் மிகச் சுருக்கமாக அதன் கதையைப் பார்க்கலாம்.

கோய்ந்தனுக்கும் (கோவிந்தன்) அவன் மனைவி தேவானயுக்கும் ரப்பர்த் தோட்டத்திலே வேலை. அவர்கள் இரண்டு பேரின் சம்பாத்தியத்தில்தான் நான்கு பேர் கொண்ட அவர்கள் குடும்பம் வாழ்கிறது. காலையிலெழுந்து கோய்ந்தனோடு செக்ரோல்போட்டு வேலைசெய்து, மாலை வீடு வந்து சமைத்து வீட்டு வேலைகளெல்லாம் செய்வாள் தேவான. கோய்ந்தனின் வேலைக்கு எந்தவகையிலும் குறைந்ததில்லை அவள் தோட்டத்தில் செய்யும் வேலை. இத்தனைக்கும்மேலே வீட்டுவேலைகள் அவள்தலைமேல்தான். பிள்ளைகள் பராமரிப்பும் அக்கறையும்கூட அவளுக்கே. வளர்ந்த பெண்ணான பெரிய பாப்பா மீது தேவான காட்டும் அக்கறை மிக்க இயல்பானது. சிறிய குழந்தையை குளிக்கவைப்பது, உடைமாற்றுவது,தூங்க வைப்பது எல்லாமும்கூட தேவானதான்.

ஒருநாள்-

நேரத்தோடு எழுப்பிவிடவில்லையே என்று தேவானமீதான ஒரு சிடுசிடுப்போடு அதிகாலை எழுந்து கொத்தாலியைத் தூக்கிக்கொண்டு செக்ரோல் போட விரைகிறான் கோய்ந்தன். பின்னால் தேவான. வேலை முடிய வீட்டுக்கு வந்து சமையல் தொடங்குகிறாள் அவள். அவளே நிரப்பியிருந்த பெரிய அண்டாவிலிருந்து ‘தண்ணிய வாரி வாரித் தலையில ஊத்திக்கிட்டித் தொவுட்டிக்கிட்டிருக்கான்’ கோய்ந்தன். பிறகு சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே போகிறான். விறகு பிளந்து போட்டுவிட்டும்படியாக கேட்கிறாள் தேவான. உதாசீனத்தோடு பதில் சொல்லிவிட்டு நடக்கிறான் அவன். அவன் போகிற இடம் அவளுக்குத் தெரியும். சாராயம் குடிப்பான் அல்லது சம்சு குடிப்பான். நண்பர்களோடு பேசிப் பொழுதைப் போக்குவான்.

அவளே விறகு பிளந்து, அண்டாவில் தண்ணீர் இறைத்துவைத்து, அவளே சமைத்து, அவளே பிள்ளைகளைக் கவனித்து…
‘தண்ணி’ போட்டுவிட்டு கோய்ந்தன் வருகிறான். சாப்பாடு பரிமாறுகிறாள். சுhப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுகிறான்.

அவள் வேலைகளையெல்லாம் ஒழித்துக்கொண்டு, பிள்ளைகளைப்; படுக்கவைத்து. சாப்பிட்டு முடிக்கிறாள். ‘அப்பாடா…ஒரு அஞ்சாறு மணிநேரம் நிம்மதியாய்த் தூங்கலாம்னு நெனைச்சிக்கிட்டு களைப்போட சாய்ஞ்சா தேவான’.

எல்லா வேலையும்- ஆம், எல்லா வேலையும் முடிந்தது என்ற நினைப்பில் விளைகிற ஆயாசம் அது. ஆனால் அந்த நேரமும் இல்லையென்கின்றான் அவன்.

பக்கத்தில் அசைப்புத் தெரிகிறது. கோய்ந்தன் மெல்ல அணுக்கமாய் வந்து கையைத் தூக்கி அவள் நெஞ்சுமேல் போடுகிறான்.

அவளுக்குப் பட்டெனப் புரிகிறது.

‘ம்…இன்னும் இது பாக்கி இருக்குதுல்ல!’

கதை முடிகிறது.

இது அலுப்பா? ஒப்புக்கொடுக்கப்பட்ட பொறுதியா? என்ன இது?
தமிழில் இதற்கிணையான சிறுகதையாக கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை’யை மட்டுமே சொல்லமுடியும்.

உணர்வுகளை படிப்படியாகக்கூட இது உயர்த்திச் செல்லாது. ஒருநாளின் சில நிகழ்வுகளின் காட்சிகளை மட்டுமே இச் சிறுகதை படம் பிடித்துக்காட்டும். பேச்சு மொழியில் கதை நடந்து, அது முடிகிற இடத்தில் வந்துவிழும் மொழியின் வீர்யம்…அட, அற்புதமான வார்ப்பு. உணர்வின் உச்சப் புள்ளியில் அடிவிழுகிறது வாசகனுக்கு.

யதார்த்த வகைக்கான சிறந்த கதையாக மட்டுமின்றி, பெண்ணிலைவாதக் கதையாகவும் இதைக் கொள்ளமுடியும். விசேடமென்னவெனில் கோசமற்று, குரலை மட்டும்; மென்மையாய் இழையவிடுவது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை அவலத்தை வெளிப்படுத்துகிற கதைதான் இது, மேலெழுந்தவாரியான பார்வைக்கு. ஆனால், கோய்ந்தனின் முன்னுரிமைகளை,ஆண் அதிகாரத்தின் அம்சங்களை ஏனென்று கேள்வி கேட்கவைக்கிறது கதை. இந்த பல்பரிமாணம் ‘கன்னிமை’யில்கூட இல்லை. மலேசியத் தமிழிலக்கியத்தில் எழுபதுகளிலேயே இந்த உச்சம் சாத்தியமாகியிருக்கிறது. கதை 1977-78ஆம் ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் அகலிப்பு வெகுவாய் இல்லைத்தான். அவர்கள் மத்தியில் 1980-1999தை பெரிய சாதனைகளைச் செய்த அல்லது போதுமான நல்ல கதைகளை அல்லது படைப்பாளிகளைத் தந்த காலப் பகுதியாகவும் சொல்லமுடிவதில்லை. இது அவர்களின் கல்வி மொழியிலிருந்து தொழில் முறைக்கான பயிற்சியும் வாழ்முறையும் என்ற மாற்றத்தினூடாக புதிய தலைமுறையொன்றின் தோற்றத்தோடு பின்னிப்பிணைந்த காரணிகளின் சேர்க்கையது ஒட்டுமொத்தமான விளைவு எனக் கொள்ளமுடியும். அவர்களது அரசியல் சமூக அமைப்பின் பக்கப் பாதிப்புகளையும் இது கொண்டிருக்கிறதுகூட. ஆனாலும் இதுவே போதுமான பதிலல்ல என்றும் தோன்றுகிறது.

வாழ்க்கையின் நிகழ்வுக் களங்களின் வார்ப்புக்கு யதார்த்த வகையானது போதுமானதாய் இல்லாதிருக்கிறது என்கிற ஒரு பதிலை நாம் சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.

மேற்கிலிருந்து மேலெழும் இலக்கிய இயக்கங்களின் கருத்தாக்கங்களது பாதிப்பின் விளைவாய்ப் பிறக்கும் இலக்கியத்தின் மூலம் மட்டுமேமலேசிய தமிழிலக்கியம் பிரக்ஞை அடைகிற சூழ்நிலைமைதான் சரித்திர காலம் முதல் தொடர்வதாய்ச் சொல்வதில் தப்பில்லை. மலேசிய தமிழிலக்கியம் தன்; பலத்தில் உந்தியெழும்பவேண்டும். யதார்த்தவகையில் அது தன்னியல்புக்கேற்ற நவீனத்துவப் பண்புகளை ஏற்கவேண்டும். பின்அமைப்பியல், பின்நவீனத்துவ தளங்களில் பயிலவேண்டும். தமிழகத்திலோ அல்லது பிற இடங்களிலோ கிளரும் விவாதங்களினால் மருட்சியடைந்து நின்றுவிடக்கூடாது.

யதார்த்தத்தில் நவீனத்துவத்தை– அதாவது நவீன யதார்த்தத்தை-ஏற்பதின்மூலமே புதிய சொல்லாடல்களை உருவாக்க முடியும். அவை புதிய புதியதானவும், பல்பரிமாணம் உடையனவுமான அடைவுகளைச் சாத்தியமாக்குமென்ற என் நம்பிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
வாழ்முறையிலும் சிந்தனைத் தளத்திலும் ஆதார சுருதியான மாற்றங்களின்றி வலிந்து புகுத்தப்படும் மாற்றங்களினால் பெரும்தாக்கத்தை உருவாக்கிவிட முடியாதுதான். ஓன்று சொல்ல முடியும். தகவல் தொழில்நுட்ப புரட்சி நம் வாழ்வை நாம் அறியாமலே கீழ்மேலாகப் புரட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறது. புறவெளி மாற்றங்களில் அதிகப் பிரக்ஞை அடையாமலே நம் அகம் பலத்த மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கிறது. நாம் அவற்றை உள்வாங்குவதற்கே புதிய மொழி தேவைப்படுகிறது. இந்நிலையில் மண்ணின்- கலாச்சாரத்தின்- இயல்புக்கேற்றதாய் நாம் இலக்கியப் புதுமைகளை மேற்கொண்டேயாகவேண்டும்.

ரெ.கார்த்திகேசுவின் 1995இல் வெளிவந்த ‘மனசுக்குள்’ சிறுகதைத் தொகுப்பு, இத்திசையில் தக்கவொரு வெளியீடு எனக் கருதுகிறேன். இந்நூல் பரவலாய் அறியப்படவும் இல்லை. தக்க விமர்சனத்தை எதிர்nhள்ளவுமில்லை. நமது இலக்கியப் பரிமாற்றத்தின் ஒருவழிப் பாதையை இது மறுபடி சுட்டுவதாகக் கொள்ளலாம். அதிலுள்ள ‘அம்மாவும் சாமியாரும்’ போன்ற சில நல்ல கதைகள், பரீட்சார்த்தத்தின் முதல் கண்ணியில் வெடித்துப் பிறந்தவை என்று கொள்ளலாம். இதுபோல் இன்னும் நம் பார்வைக்குப்படாத பல நல்ல படைப்புகள், தொகுப்புகள், முயற்சிகள் இருக்கவும் கூடும். இதற்காக நாம் யாரை. எதை நோக? இக்கோணல்கள் எவ்வாறு நிமிர்வு செய்யப்படப்போகின்றன? 2000 புதிய கதவுகளைத் திறக்கவேண்டும்.

000
(இவ்வுரைக்கட்டு பிப்ரவரி 2000 கணையாழி இதழில் வெளிவந்தது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்