இலக்கியச் சந்திப்பு:1

இலக்கியச் சந்திப்பு:

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
தமிழ்த் துறை,
யாழ். பல்கலைக் கழகம்

சந்திப்பு: தேவகாந்தன்

(இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் 1942இல் பிறந்த பேராசிரியர் நா.சுப்பிரமணியன் பல்கலைக் கழக கற்பித்தல் துறையில் சுமார் முப்பதாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். தற்பொழுது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருக்கிறார். ‘இந்தியச் சிந்தனை மரபு’ என்கிற புகழ்மிக்க தமிழ்நூலின் இணை ஆசிரியர்களில் ஒருவர். அண்மையில் சென்னை வந்திருந்த சமயத்தில் இவ்விலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது.)


தேவகாந்தன்: சுமார் இருபதாண்டுக் கால யுத்த நிகழ்களமான இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில், இலக்கிய வாசிப்பின் நிலைமை எவ்வாறு இருக்கிறது?

நா.சுப்பிரமணியன்:இந்தக் கேள்விக்கு, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை என்னால் துல்லியமான பதில் சொல்ல ஏலும். ஏனென்றால், யாழ்ப்பாணத்துச் சூழலோடு இக் காலகட்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இலக்கியமும், இலக்கியம் சம்பந்தப்பட்டதுமான வாசிப்பும் இக்காலத்தில் தக்க வளர்ச்சி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்கலைக் கழகமும், இன்னும் வெளியே இலக்கியக் களம் போன்றவையும் இத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளதாகச் சொல்லமுடியும்.

இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அங்கே வெளிவந்துகொண்டிருக்கிற பத்திரிகைகளாகும். உதாரணமாக உதயன் போன்ற பத்திரிகைகளைச் சொல்லலாம். உதயன் பத்திரிகை ஞாயிறு தோறும் சஞ்சீவி என்கிற இலக்கிய இணைப்பை வெளியிட்டு வருகிறது. இது கவிதைக்கான பகுதியைக் கொண்டிருப்பினும் சகல படைப்பாக்கங்களினதும் களனாய் அமைவதால் தீவிர வாசிப்பின் பரப்பும் இதனால் அகலித்திருக்கிறது என்றே கூறவேண்டும். தமிழகத்தில் வெளியாகும் இதழ்களும் நூல்களும்கூட அங்கே அவை வெளிவந்த உடனேயே விற்பனைக்குக் கிடைத்துவிடுகின்றன. அவையனைத்தும் விற்பனையாகிவிடுவதுதான் அங்கேயுள்ள விசே~ம். இவையெல்லாம் அங்குள்ள வாசிப்புத் தரத்தை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் வைத்துள்ளனவென்றே சொல்லவேண்டும்.


தேவகாந்தன்: படைப்பாக்க முயற்சிகள் தற்பொழுது அங்கே எவ்வாறான நிலைமையிலுள்ளன?

நா.சுப்பிரமணியன்: படைப்பாக்க முயற்சிகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே அங்கு படைப்பிலக்கித் துறையில் ஈடுபட்டிருந்தவர்களான செங்கைஆழியான், கோகிலா மகேந்திரன், சாந்தன், சட்டநாதன் போன்றவர்கள் இன்னும் அங்கே எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய படைப்புக்கள் வெளிவருவதற்கான பிரசுரக் களம் குறைவாக இருக்கிற காரணத்தினால், அவர்களின் படைப்புகள் அதிகமும் தாயகம், மற்றும் கொழும்புப் பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்றவற்றிலும் வெளிவருகின்றன.


தேவகாந்தன்: கவிதை, சிறுகதைத் துறையில் பெருமைப்படத் தக்க வளர்ச்சியை ஈழம் கொண்டிருந்ததென்று துணிந்து நாம் கூறமுடியும். ஏனைய துறைகளைப் பொறுத்தவரையில் அவ்வாறு கூறமுடியாதென்றே தோன்றுகிறது. இதற்கு தமிழகத்தைப்போல் அச்சாக்க வசதிகளை ஈழம் அடைந்திராததை ஒரு முக்கிய காரணியாகக் கொள்ளலாமா?

நா.சுப்பிரமணியன்: அப்படிக் கொள்ளமுடியுமென்று நான் கருதவில்லை. ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொhறுத்தவரையில் ஐம்பது, அறுபதுகளில் கணேசலிங்கன், டானியல் போன்றவர்கள் தமிழகத்தில் தமது ஆக்கங்களை அச்சேற்றியது உண்டுதான். ஆனாலும் ஈழத்திலும் அப்போது பதிப்பாக்க முயற்சிகள் குறிப்பிடத் தகுந்தளவு செழுமையாக இருந்தன என்பதே உண்மையாகும். எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் போன்ற நிறுவனமயப்பட்ட பதிப்பகங்க@டாக சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் போன்றவை அக்காலகட்டத்தில் வெளிவரவே செய்தன.

எழுபதாம் ஆண்டளவில் முக்கியமான நிகழ்வொன்று நடந்தது. ஈழத்து இலக்கிய விற்பனைக் களம் விரிந்தது.அந்த விற்பனைக் களம் விரிவதற்குக் காரணம் வீரகேசரி நிறுவனம். இது சுமார் எட்டு, பத்து ஆண்டுகளாக ஈழத்து இலக்கியத்தை வளர்க்குமொரு மய்யமாக இயங்கியது என்றுகூடச் சொல்லலாம். நூற்றுக்கணக்கான புதிய படைப்பாளிகள் இந் நிறுவனமூடாக வெளிவந்தனர். புதிய படைப்பாளிகள்போல் பிரபலமான படைப்பாளிகளின் படைப்புகளும் வீரகேசரிமூலம் வெளிவந்தன. பாலமனோகரனின் முதல் நாவலான ‘நிலக்கிளி’யை வெளியிட்டதும் இந்நிறுவனமேயாகும். செங்கைஆழியான், டானியல் போன்ற மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களும் இதன்மூலம் வெளிவந்திருக்கின்றன.

இப்படிப் பார்க்கிறபோது ஒரு பத்தாண்டுக் காலத்தில்- எழுபதாமாண்டு முதல் எண்பதாமாண்டுவரை- ஈழம் பிரசுர வசதிக்கு தமிழகத்தை நம்பியிருந்ததாகச் சொல்லமுடியாது. இக் காலகட்டத்தை ஈழத்து பிரசுரக் காலத்தின் உன்னத காலமென்றுகூட சொல்லலாம். யாழ்.இலக்கிய வட்டம், அரசு வெளியீடு போன்றனவும் இக்கால இலக்கியப் பரப்பை அகலிப்பித்தன. தமிழகத்துக்குச் சமமான, இலக்கியப் பதிப்புகள் இக்காலத்தில் ஈழத்தில் வெளிவந்தன என்று துணிந்து கூறலாம்.


தேவகாந்தன்: கடந்த பத்தாண்டுகளில் பிரசுர வசதிகள் அங்கே எவ்வாறு இருக்கின்றன? இதையொரு முக்கியமான அம்சமாக நாம் கருதலாம். ஏனெனில் பிரசுர வசதிகளுக்கும் படைப்பாக்க முயற்சிகளுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. அதனால்தான் 20ம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தின் இந்தக் காலகட்டத்தில் அங்கே பிரசுரத் துறை எவ்வாறு இயங்கிற்றென்று நான் மீண்டும் கேட்பது.

நா.சுப்பிரமணியன்:இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தமான இதன் முதல் பாதியில்கூட பிரசுர வசதிகள் ஓரளவு இருந்ததாகவே சொல்லவேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிக அற்புதமான நூல்கள் அப்போது அச்சாகின. ‘வெளிச்சம்’ என்ற இதழ் வெளிவந்தது அந்தக் காலத்தில்தான். அரசியல் நிலைமையிலேற்பட்ட மாற்றம், பிற்பாதி பிரசுர நிலைமையை மாற்றிப் போட்டுவிட்டது. 1996இல் யாழ்ப்பாணம் அரச படைகள்வசம் வீழ்ந்த பின்னால் பிரசுரத்துறை சீணித்துப் போனதாகவே சொல்லவேண்டும். என்றாலும் கவிதைத் தொகுப்புகளும், சிறு அளவிலான சிறுகதைத் தொகுப்புகளும் இக் காலத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. நாவல்போன்ற பெரிய பிரசுரங்களின் களமே பாதிக்கப்பட்டுள்ளதெனச் சொல்லக்கூடியதாயுள்ளது.


தேவகாந்தன்: நாவலிலக்கியத்தின் தோற்றம் இக் காலத்தில் அருகியிருப்பதன் காரணமாக இதைக் கொள்ளலாமா?

நா.சுப்பிரமணியன்: இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம். நாவலிலக்கியத்தின் தோற்றப்பாட்டிலுள்ள சில முக்கியமான அம்சங்களை நாம் கவனிக்கவேணும். நாவலென்பது கதை எழுதுவது அல்ல. ஒரு காலகட்டத்துச் சமுதாயத்தின் அடிப்படையான வரலாற்றோட்டத்தை இனங்கண்டு காட்டுவதே நாவலாகும். இந்தவகையில் பார்க்கப்போனால் தமிழகத்திலும் சரி,ஈழத்திலும் சரி நாவலிலக்கியத் துறை நன்கு வளர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லவே முடியாது. சில நல்ல நாவலாசிரியர்கள் இருக்கிறார்களெனினும், பூரணமான நாவலிலக்கியம் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இது குறித்து யாழ்ப்பாணத்தை மய்யப்படுத்திச் சொல்வதாயிருந்தால், நாவல் எழுதுவதற்கான பொறுமை எழுத்தாளர்களிடத்தில் இல்லாதிருப்பதைச் சொல்லவேண்டும். விஷ யங்களை அவதானித்து, மூன்று நான்கு மாதங்கள் கவனத்தைக் குவித்திருந்து நாவல் எழுதுவதற்கான சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது இல்லை.

உண்மையில் இலக்கிய ஆக்கமென்று வருகிறபோது தன்னை உடனடியாக வெளிப்படுத்தக்கூடிய துறை கவிதைத் துறையேயாகும். அடுத்து சிறுகதையைச் சொல்லலாம். இப்போதுள்ள யாழ்ப்பாணத்துப் படைப்பாளிகள் கவிதையாலும் சிறுகதையாலும் தம்மை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்களெனினும் இவர்களுக்கு மூத்த தலைமுறையில் உள்ளவர்கள் இன்னும் நாவலாக்கத்தில் ஈடுபட்டேயுள்ளனர். ஆனாலும் கனதியான நாவல் தோன்றிற்றென்று சொல்லமுடியாதுதான்.
அதற்கான அனுபவ விரிவு ஏற்படுகிறபொழுது ஈழத்தில் கனதியான நாவல் தோன்ற முடியும். இன்று, காலை ஏழு மணியிலிருந்து மாலை நான்கு ஐந்து மணியோடு யாழ்ப்பாணத்தின் நாளியக்கம் முடிந்துபோகிறது. இவ்வாறு மூடுண்ட ஒரு தளத்தில் படைப்புக் களத்தை விரிப்பதும் சிரமமே. இது மாறிய காலகட்டம் அவ்வனுபவ விரிவினோடு சேர நாவலிலக்கியம் உறுதியாக அங்கே வளருமென நம்பிக்கையோடு சொல்லலாம்.


தேவகாந்தன்: யாழ்ப்பாணத்தில் கடந்த பத்தாண்டுகளில் (1990-2000) இடம்பெற்ற இலக்கிய, கலைச் செயற்பாடுகள் குறித்து…?

நா.சுப்பிரமணியன்: கடந்த பத்தாண்டுகளாக, அதாவது நீங்கள் குறித்த அந்தப் பத்தாண்டுக் காலகட்டத்தில், நான் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கிறவகையில் இக் கேள்விக்கு விரிவாகவும் ஆழமாகவும் என்னால் பதில்சொல்ல முடியும். இக் காலகட்டத்தில் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்ட உணர்வு போராட்டம் சார்ந்ததாகவே இருந்தது. இது தவிர்க்கமுடியாதபடிக்கு அக் காலகட்டத்து இலக்கியவகைகளுள் வெளிப்படவே செய்தது. கட்டுரை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை போன்றவற்றினூடாக இவ்வுணர்வு தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. நாவலிலக்கியம் இக் காலகட்டத்தில் அதிகமாய்த் தோன்றியதாய்ச் சொல்லமுடியாது. தோன்றிய சிலவும் யாழ்ப்பாணத்துக்கு வெளியிலேயே தோன்றின என்று சொல்லவேண்டும்.

இக்காலப் பகுதியில் போராட்ட இயக்கம் சாராது வந்த கலை இலக்கியப் பேரவையின் ‘தாயகம்’ மற்றும் டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ போன்றவை போராட்டம் சாராத எழுத்துக்களுக்கான களங்களாய் அமைந்தன. போராட்ட இயக்கம் சார்ந்து வெளிவந்த படைப்புக்களுக்குக் களமாக ‘வெளிச்சம்’ என்ற இதழ் இருந்தது. பல கவிதை நூல்களும் வெளிவந்தன. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்து கைலாசபதி அரங்கு பல நூல்களின் வெளியீட்டு விமர்சன அரங்காக இருந்தது. இது குறித்து ஆரியகுளத்தடியில் ஏற்படுத்தப்பட்ட அரங்கையும் தவறாது சொல்லவேண்டும். அடிக்கடி கருத்தரங்குகள் இங்கே நடாத்தப்பெற்றன.

நவீன இலக்கியங்கள் மட்டுமில்லை, யாழ்ப்பாணத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிற பாரம்பரிய இலக்கியங்களான கம்பராமாயணம், கந்தபுராணம் போன்றவற்றுக்கு விளக்கவுரை நயவுரை கூறுதலும் இக் காலகட்டத்தில் நிகழ்ந்தது. கம்பன் விழாக்கள் நடந்தன. கோயில்களிலே புராணக் கதைகளின் உபந்யாசங்கள் நிகழ்த்தப்பட்டன.

இக்காலத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது, கிராமியக் கலையான கூத்து புனருத்தாரணம் செய்யப்பட்டு தெருமுனைகளிலிருந்து பல்கலைக் கழக அரங்குகள்வரை மேடையேற்றப்பட்டமையாகும். வன்னிப் பகுதியில் நிலவிய அரயாத்தை கதை மேடையேறியதை இதற்குதாரணமாகச் சொல்லலாம். வன்னிப் பகுதியில் யானையை அடக்கிய ஒரு பெண்ணின் கதை அது. அது‘மதயானையை அடக்கிய மாதரசி’ என்ற பெயரிலே யாழ்ப்பாணப் பகுதியில் அரங்கேறியது. சமகாலத் தேவைக்கேற்ப பழைய கதைகளை மேடையேற்றியமைக்கு வேறு பல உதாரணங்களும் உண்டு.
இது 1995 வரை நிலவிய போக்கு என்றுதான் கூறவேண்டும். 1995ல் நிகழ்ந்த புலப்பெயர்வின் பின் அவர்கள் 1996ல் மீளச் சென்று தம் பிரதேசங்களில் குடியமர்ந்துவிட்டிருந்தாலும், அழிவுகளின் இசைவாக்கம்பெற்று மறுபடி படைப்பாக்கத்தில் ஈடுபட மேலும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.


தேவகாந்தன்:‘ஈழத்து தமிழ்நாவல் இலக்கியம்’ என்கிற முக்கியமான நூலொன்றைத் தந்திருப்பவர் நீங்கள். ‘இலக்கு’ என்கிற சிற்றிதழை நான் சென்னையில் நடத்திய காலத்தில் வெளியிட்ட டானியல் சிறப்பு மலருக்கு அவரின் படைப்புகள் குறித்த கட்டிறுக்கமான கட்டுரையொன்றை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளீர்கள். அந்தவகையில், டானியலின் படைப்புக்களை அவ்வப்போது தலித் இலக்கியத்தோடு சம்பந்தப்படுத்தி பிரச்னைகள் தோன்றும் இக்காலத்தில் அவரின் படைப்புகள் குறித்தான உங்கள் அபிப்பிராயத்தை அதுபற்றிய தீவிர தேடலிலிருக்கும் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நா.சுப்பிரமணியன்:ஈழத்து இலக்கியமென்று சொன்னதும் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முதலில் ஞாபகம் வருகிற படைப்பாளிகளுள் முக்கியமானவர் டானியல்தான். அதற்குக் காரணம், டானியலின் எழுத்துக்கள் தமிழகத்தில் பிரசுரமாகியிருப்பது ஒன்று. மற்றது, டானியலின் எழுத்துக்கள் தலித் இலக்கித்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுவது. தலித் இலக்கியத்துக்கு டானியலின் நாவல்களையே பலர் ஆதாரமாகக் காட்டினர். இது இன்னொரு காரணம்.

டானியலின் எழுத்துக்களுக்கான முக்கியத்துவத்தை இரண்டாகப் பார்க்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்று தன்னுடைய உரிமைகளைநோக்கி முன்னேறுகிற காலகட்டத்தில் அதனுடைய அனுபவங்கள் எடுத்துத் திரட்டித் தரப்படும். அதாவது அச் சமூகத்தின் எழுச்சி, அனுபவங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. டானியலின் நாவல்கள், அவ்வாறு பதிவான அனுபவங்களின் திரட்சியே ஆகும்.

இரண்டாவது, படைப்பிலக்கியமென்ற வகையிலே பார்க்கும்பொழுது ஏற்படுகிற முக்கியத்துவம். இலக்கியமென்பது அனுபவத்தின் பதிவு, அல்லது பண்பாட்டம்சங்களின் பதிவு என்றால் ஈழத்து இலக்கியத்திலே பண்பாட்டு அம்சங்களை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்த படைப்புக்கள் டாலியலினுடையன.

யாழ்ப்பாணச் சமூகத்துக்கு பண்பாட்டு ரீதியாய் இரண்டு முகங்கள் இருப்பதாய்ச் சொல்லலாம். ஒரு முகம், சமயத் துறையில் ஈடுபாடுகொண்ட கந்தபுராணக் கலாசாரம். கோயில், கோயிலோடு ஒட்டிய விழாக்கள், புராணங்களுக்குப் பொருள் சொல்லல் என்று இப்படி வரும் பண்பாட்டை பண்டிதமணி கணபதிப்பிள்ளை தொடங்கி பலரும் சொல்வது கந்தபுராணக் கலாசாரமென்று. இது நாணயத்தின் ஒருபுறம் போன்றது. இதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. அது சமூகத்தின் ஆசாபாசத்தை அடக்கியிருக்கிற பக்கம். இது அதன் வாழ்க்கை வரலாறாகவே ஒருவகையில் இருக்கும். இந்த இரண்டாவது பக்கத்தை மேல்மட்டப் படைப்பாளிகளால் பெரும்பாலும் காட்டமுடியாமலே போய்விடுகிறது. அதைக் காட்டக்கூடிய ஆற்றல் கீழேயிருந்து வருகிற படைப்பாளியிடத்தில்தான் காணக்கூடியதாக இருக்கும். அந்தப் படைப்பாளியாக எங்களுக்குக் கிடைத்தது டானியல்.

அவ்வாறு கந்தபுராண கலாசார சமூகமென்று சொல்லப்படக்கூடியதாய் இருந்த மேல்சமூகத்தின் பல உள்விவகாரங்களையும் பல மட்டங்களில் நின்று டானியல் படம்பிடித்துக் காட்டுகிறார் எனலாம். இவரது நாவல்களிலுள்ள விரச அம்சம், அச் சமூகத்தின் காட்டப்படக்கூடாத விடயங்களும் காட்டப்படுவதாகும். இன்னொரு வகையில் இதையே டானியலின் நாவல்களது விசே~ அம்சமாகவும் சொல்லலாம். அதனால்தான், யாழ்ப்பாண சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றை டானியலின் நாவல்களை வைத்துக்கொண்டு மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாமென்று சொல்லப்படுகிறது. டானியலின் நாவல்கள் இவ்வாறு இருப்பதனால், கதாசிரியன் என்ற வட்டத்தைத் தாண்டி டானியலை ஒரு பண்பாட்டு ஆய்வாளன் என்பதாகவே முதலில் கொள்ளமுடிகிறது.

பஞ்சமர் பிரச்னைகளைப்பற்றி எழுதிய செ.கணேசலிங்கள் போன்றவர்கள் 50கள் 60களின் பிரச்னைகளையே நாவலாக்கினர். ஆனால் டானியல் 1890ம் ஆண்டளாவிய காலக் களங்களின் கதைகளைப் பதிவுசெய்தார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகள்கொண்ட நான்கு தலைமுறைகளின் வரலாறு ‘அடிமைகள்’ நாவலில் சொல்லப்படுகிறது.

எனக்கு இப்போது மலையாள எழுத்தாளர் கேசவதேவின்‘அண்டை வீட்டார்’ நாவல் ஞாபகம் வருகிறது. ‘அண்டை வீட்டார்’ நாவலும் நான்கு தலைமுறைகளைச் சொல்லும் நாவலாகும். சந்திர குடும்பம், சூரிய குடும்பம் என்ற இரண்டு குடும்பங்களின் பிரச்னையைச் சொல்லிப் படர்கிறது டானியலின் ‘அடிமைகள்’. இவ்வாறான நிலைமையில் டானியலை நாங்கள் ஒரு தலித் எழுத்தாளனாகப் பார்ப்பதில்லை. டானியல் ஒரு வரலாற்றுப் பதிவாளன் என்றே பார்க்கிறோம். தண்ணீர், கானல், அடிமைகள் ஆகிய மூன்று நாவல்களிலும் யாழ்ப்பாணத்தின் நூறாண்டு வரலாறு பதிவாகியிருக்கிறது. இது முக்கியமானது.

டானியலின் ஆளுமைகளிலும் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று, கோபம். இது உயர்சாதிமீது ஏற்படுவதாகும். ஆரம்ப கால நாவலான ‘பஞ்சமர்’ உண்மையில் நாவலே அல்ல. நாவலுக்குரிய கலாம்சங்களை ஒதுக்கிவிட்டு டானியல் தன் கோபத்தைப் பதிவாக்கியுள்ள நூலென்றே அதைச் சொல்லவேண்டும். கானல், அடிமைகள் ஆகிய நாவல்களின் வெற்றிக்கு நிதானத்துடன் கோபமடங்கியவராய் டானியல் நூலாக்கத்தில் இறங்கியமையை ஒரு காரணமாகச் சொல்லலாம். டானியலை மீறிய ஒரு படைப்பாளியை ஈழத்துநாவல் இலக்கியத்தில் இன்றுவரை சொல்ல முடியாதிருப்பதின் காரணம் இதுவேயாகும். பல எழுத்தாளர்களும் வியாபாரார்த்தமாய் எழுதிக்கொண்டிருந்த வேளையில், டானியல் வியாபாரார்த்தத்தை ஒதுக்கி எழுதியவர். அவரது எழுத்தாண்மையை இதுவும் வற்புறுத்தும்.


தேவகாந்தன்: தலித் இலக்கியத்துக்கும் பஞ்சமர் இலக்கியத்துக்கும் இடையே வேறுபாடேனும் இருக்கின்றதா? இருந்தால் அவை என்னென்ன?

நா.சுப்பிரமணியன்: தலித் இலக்கியத்துக்கும் பஞசமர் இலக்கியத்துக்கும் இடையே மிகத் தெளிவான வேறுபாடுகள் இருக்கின்றன. தலித் இலக்கியம் தமிழகத்திலே பேசப்படவும், வளரவும் தொடங்கிய காலம் சுமாராக தொண்ணூறுகளுக்குப் பிறகு என்று சொல்;லலாம். இக் காலகட்டத்தில் சுபமங்களா இதழ் கன்னட, மராட்டிய தலித் இலக்கியம்பற்றிய கட்டுரைகளை மொழிபெயர்த்துப் போட்டது. தலித் இலக்கியமென்ற சொல்லாடலே இக் காலப்பகுதியில் எழுந்ததுதான்.

ஆனால் டானியலின் எழுத்துக்கள் எழுபதுகளிலேயே ஆரம்பித்துவிட்டன. ‘பஞ்சமர்’ 1972இல் வெளிவந்தது. தாழ்த்தப்பட்டோர்பற்றிய நாவல்கள் கணேசலிங்கன் போன்றவர்களால் அறுபதுகளிலேயே முன்னெடுக்கப்பட்டு விட்டன. 1962ல் செ.க.வின் ‘நீண்ட பயண’மும், 65இல் ‘சடங்கு’வும், பிறகு 68இல் ‘போர்க்கோலம்’ நாவலும் வருகின்றன. இவை யாவும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் சம்பந்தப்பட்ட நாவல்களே. ஆனாலும் பஞ்சமர் நாவல்களென்று இவற்றை நாம் குறிப்பதில்லை. 72க்கும் 86க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் டானியலின் தொடர் நாவல்கள் வருகின்றன. முதலில் பஞ்சமரும், பின்னர் பஞ்சமரின் இரண்டாம் பாகமும், பிறகு ‘கோவிந்தன்’,‘அடிமைகள்’,‘கானல்’,‘தண்ணீர்’,‘பஞ்சகோணங்க’ளும் வெளிவந்தன.

ஆனால் தொண்ணூறுகளில் பரவலாகப் பேசப்பட்டு வந்த தலித் இலக்கியத்தின் முன்னோடியாக டானியலின் நாவல்களை சிலர் இங்கே குறிப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் டானியலுக்கும் முன்பே இங்கே தலித் இலக்கிய முயற்சிகள் இருந்திருக்கின்றன. செல்வராஜின் ‘மலரும் சருகும்’, சின்னப்ப பாரதியின் ‘தாகம்’ போன்ற நாவல்கள் இவ்வகையான நாவல்களே. இவை இங்கே ஏன் பேசப்படுவதில்லையென்று எனக்குத் தெரியவில்லை. இவை மார்க்சீயக் கண்ணோட்டத்திலான படைப்புகளென்ற வகைப்பாட்டுள் அடங்கியதால் அவ்வாறு ஒதுக்கப்பட்டனவாகவும் இருக்கலாம்.

இப்போது கேள்வி என்னவென்றால் தலித் இலக்கியத்துக்கும், பஞ்சமர் இலக்கியத்துக்கும் இடையிலான வேறுபாடு குறித்தது. இவை இரண்டுமே தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றியும், அவர்களது போராட்டங்கள்பற்றியுமே பேசினாலும் இவையிரண்டும் எங்களைப் பொறுத்தவரை வேறானவையே. பஞ்சமர் இலக்கியத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட சமூகமானது சகல உரிமைகளையும் பெற்று ஏனைய சமூகங்களைப்போல் முன்னேறுவதேயாகும். பஞ்சமர் இலக்கியம் மேல்சாதிக்காரரின் அனுதாபத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கூட முன்னேறுவதையே நோக்கமாகக் கொண்டது. உயர்சாதியான்கூட பஞ்சப்பட்டுவிட்டால் பஞ்சமன் என்றே பஞ்சமர் இலக்கியம் சொல்லும்.

 செ.க. போன்றவர்கள் சாதி வரையறைக்குள் இறுக்கமாகநிற்க, அதைத் தாண்டி பஞ்சப்பட்டவர் எல்லோருமே பஞ்சமர்கள்தான் என்ற விரிந்த வட்டத்துள் இலக்கியம் செய்தவர் டானியல். இதற்கு தத்துவார்த்தத் தளமொன்று ஒன்று இல்லை. ஆனால் தலித் இலக்கியத்துக்கு அது உண்டு. உயர்சாதியாரின் அறம், ஒழுக்கம், பண்பாடு சகலவற்றையும் தம்மைப் பிணைத்து வைத்திருந்த நுகத்தடியாய் ஒதுக்கும் தலித்தியம். தாங்கள் தாங்களாகவே, தங்களுக்கான தங்களின் வாழ்முறைகளோடும் நம்பிக்கைகளோடும் வாழவேண்டுமென்பது அதன் பிரதான கோசம்.


தேவகாந்தன்: இன்று பலராலும் பரவலாகப் பேசப்படும் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிய வரையறுப்புகள், அதன் எதிர்காலம்பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

நா.சுப்பிரமணியன்: புலம்பெயர்ந்தோர் இலக்கியமென்பது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றோரால் படைக்கப்பட்ட இலக்கியமென்று சுருக்கமாகச் சொல்லலாம். கடந்த பத்தாண்டுகளாகவே இவ்விலக்கியம்பற்றிய பிரஸ்தாபம் வலுத்திருப்பினும்,ஈழத் தமிழரின் புலப்பெயர்வு எண்பதுகளின் முதலாம் காலிலேயே தொடங்கிவிட்டது. இதையும் பல கூறுகளாகப் பகுத்துப் பார்க்க முடியும்.

தமிழகத்திலிருந்தும் காலத்துக்குக் காலம் பலர் வெளிநாடுகளில் சென்று குடியேறி வாழ்ந்துவந்தாலும் புலம்பெயர்ந்தோர் என்கிற இந்தக் கருத்தோட்டச் சொல் பாவிக்படவில்லை. இலங்கையிலிருந்தும் பலமுறை இக் குடிபெயர்வு வேறுவேறு காரணங்களால் நிகழ்ந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதன் முதல் அலை அடித்ததாகச் சொல்லலாம். மலேசியாவுக்கு கல்வி வசதி பெற்றிருந்த பல இலங்கைத் தமிழர் குடிபெயர்ந்து போயினர். எழுபதுகளில் மத்திய கிழக்கு செல்லும் இரண்டாவது வேட்கை அலை அடித்தது. இவற்றைப் புலப்பெயர்வோடு இணைத்துப்பார்க்க முடியாது. 1983க்குப் பின்னர் ஏற்பட்டதையே புலப்பெயர்வு என்ற சொல்மூலம் நாம் சுட்டுகின்றோம். அ.முத்துலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் இந்த அலைக்கு முன்னே சென்றவர்கள். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் இதன் ஆரம்ப காலத்தவர்கள். வேரோடு பிடுங்கப்பட்டு எறிந்ததுபோல் இப் புலப்பெயர்வுகள் இருந்தன. இதில் சென்றவர்கள் பலரும் சாதாரண மக்கள். போதுமான எழுத்தறிவோ, பிறமொழி அறிவோ இவர்கள் பெற்றிருக்கவில்லை. இவர்களிடையே இருந்து உருவான படைப்பாளிகளே புலம்பெயர் படைப்பாளிகள்.


தேவகாந்தன்: இப் புலம்பெயர் இலக்கியத்தின் தன்மைபற்றி…

நா.சுப்பிரமணியன்: புலம்;பெயர் இலக்கியம் பல்வேறு காலகட்டங்களாய் வரும். முதலாவது காலகட்டத்தில் அகதியாய் பல்வேறு நாடுகளுக்கும் செல்வோரின் மன அவலத்தின் பதிவுகள் நிகழ்ந்ததாய்ச் சொல்லலாம். இவை இனக்கொடுமைச் சூழலைப் பிரதானமாய் வர்ணித்தன. இரண்டாவது கட்ட இலக்கியம் புலம்பெயர் நாடுகளுக்குச் செல்வதில் ஏற்பட்ட கஷ்டங்களைக் கூறியது. பிரயாண அனுபவங்களைக் கூறிற்றென்று சுருக்கமாகக் கூறலாம். இவ்வகைக் கதைகள் பொ.கருணாகரமூர்த்தி போன்றோரால் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் உள்ளோரின் தாயகம்பற்றிய நினைவுகளை மூன்றாவது கட்ட இலக்கியமாகச் சொல்லலாம். அகதி அனுபவங்களையும் இது சொல்லும். அந்நிய சூழல்சார் குறித்தும் இக் காலகட்ட இலக்கியம் அழுத்தம் காட்டும்.

கவிஞர் கந்தவனத்தின் கதைகள் சில இவ்வகைக்குரிய சிறந்த எடுத்துக்காட்டாகும். தலைமுறை இடைவெளியிலுள்ள பண்பாட்டுச் சிக்கலையும் இவரின் சில சிறுகதைகள் தெளிவாகப் பேசுகின்றன. இவ்வனுபவங்கள் ஈழத் தமிழிலக்கியத்துக்கு முற்றிலுமாய்ப் புதியன. ஈழத்திலக்கியத்தின் நீட்சியே எனினும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு ஒரு புதிய கருத்துருவம் இதனாலேயே ஏற்பட்டது.

புதிதாகத் தோன்றியுள்ள ஒரு எழுத்துத் தலைமுறை தம்மை முந்திய தலைமுறையிலிருந்தும் விடுபட்டுள்ள சிந்தனை கொண்டதாய்ச் சொல்லுது. ஆனாலும் இதுபற்றி காலப்போக்கிலேதான் தெரிந்துகொள்ள முடியும். வரையறுப்புச் செய்யமுடியும்.


தேவகாந்தன்: ஈழத்திலக்கியத்தில்போல புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திலும் முக்கியமான  அல்லது வீச்சுப்பெற்ற துறை கவிதையேயென்று சொல்லலாமா?

நா.சுப்பிரமணியன்: கண்டிப்பாக. எந்த மொழி இலக்கியத்திலும் இதுதான் நிலைமை. இலக்கியமென்பது சமூகப் பிரக்ஞையின் உணர்வு வெளிப்பாடு எனக்கொண்டால் அதன் உடனடிப் பதிவு எப்போதும் கவிதையாகவே இருக்குமெனக் கொள்ளலாம். அதுவே உணர்வின் நேரடி வெளிப்பாட்டுச் சாதனம். அடுத்ததாகவே சிறுகதை வருகின்றது. பின்னர் நாடகம். நாவல் அதற்கும் அடுத்ததாகத்தான் வரும்.


தேவகாந்தன்: ஈழத்துச் சிற்றிதழ்களில் முக்கியமான இதழ்களும் போக்குகளும் என்ன?

நா.சுப்பிரமணியன்: ஈழத்து நவீன இலக்கியத் தோற்றப்பாட்டுடனேயே சிற்றிதழ்களின் வரலாறும் இணைந்திருக்கிறது எனச் சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால் ‘மறுமலர்ச்ச’p இதழுடன் இலங்கையின் சிற்றிதழ்ச் சரித்திரம் தொடங்குகிறது. நாற்பதுகளின் மத்தியில் இது நிகழ்ந்தது. ‘ஈழகேசரி’ வந்துகொண்டிருக்கும்போதே தீவிர இலக்கியத்துக்காக வரதர், பஞ்சாட்சர சர்மா, சொக்கன், முருகானந்தன் போன்றவர்களால் இது ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் மணிக்கொடியாக அது விளங்கியது என்று சொன்னாலும் தப்பில்லை. அதேயளவு ஆழமாகச் செய்யாவிட்டாலும் ஏறக்குறைய அதன் நோக்கங்களின் சமாந்தரத்தில் அது வெளிவந்தது.
மறுமலர்ச்சிக்கு அடுத்த கட்டத்தில் ஐம்பதுக்களின் இரண்டாம் பாதியில் வெளிவருகிறது சிற்பியின் ‘கலைச்செல்வி’. நவீன இலக்கியத்தோடு பாரம்பரிய இலக்கியங்களையும் அது முன்னெடுத்தது. அதற்குப் பிறகு திட்டவட்டமான தளத்தில் உருவான முக்கியமான இதழ் டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ இதழ். இன்றுவரையும், சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக, இதழ் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய முந்நூறு இதழ்கள் வெளிவந்ததாய்க் கொள்ளலாம். அதற்குள் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றையே காணமுடியும். விமர்சன யதார்த்தப் பண்பிலிருந்துகொண்டு அது நாட்டின் சகல முற்போக்கு, நவீன படைப்பாளிகளையும் ஒன்றிணைக்க முயன்றது. மல்லிகையின் இச் செல்வாக்கு இன்னொரு இடதுசாரி இதழின் தோற்றத்தக்கும் காலாகிறது. ‘தாயகம்’ என்ற பத்திரிகை தோன்றியது அப்போதுதான்.

இந்த இடதுசாரிப் பத்திரிகைகளின் எதிரணியின் குரலாக அ.யேசுராசாவின் ‘அலை’ தோன்றியது. கலாபூர்வமான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்று தோன்றிய இப் பத்திரிகையில் தமிழவன், சுந்தரராமசாமி போன்றோரும் கவனம் பெற்றனர். இந்த ‘அலை’யின் தொடர்ச்சியாக மகாஜனக் கல்லூரி மாணவர்களை மய்யப்படுத்தி வந்த ‘புதிசு’ என்ற இதழைச் சொல்லவேண்டும். சுமார் பத்து இதழ்கள் வெளிவந்தன. இதை ஒரு காலகட்டமாக, தொண்ணூறுக்கள் வரையான காலகட்டமாக, கொள்ளலாம்.

அடுத்த கட்டத்தில் ‘வெளிச்சம்’ என்ற இதழோடு ஈழத்தின் பிற பகுதிகள் சார்ந்த இதழ்களான ஒன்றிரண்டு இதழ்களையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். முக்கியமான இதழாக ‘மூன்றாவது மனித’னைச் சொல்லலம். ஆழமான தீவிர இலக்கியப் பிரக்ஞையோடு இது வெளிவருகிறது. முன்பு வெளிவந்த சமர், திசை, சிரித்திரன் போன்றவையும் ஈழத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியமான இதழ்களே.

இவை இலக்கியப் போக்குகளைப் பிரதிபலித்தன என்றும் சொல்லலாம். இவ்வகை இதழ்களால்தான் ஈழத்தின் காத்திரமான இலக்கியப் பயிற்சியும் வாசிப்பும் காபந்து செய்யப்பட்டு வந்துள்ளன என்று சொன்னாலும் தப்பில்லை.


தேவகாந்தன்: அண்மையில் கனடா போய் வந்திருக்கிறீர்கள். அங்குள்ள ஈழத் தமிழரின் வாழ்முறை எவ்வாறு இருக்கிறது?

நா.சுப்பிரமணியன்: அவர்களுக்குத் திறந்திருக்கிற உலகம் மிகப் பெரியது. அங்கே தங்கள் மத நம்பிக்கைகளோடும், பாரம்பரிய பழக்கவழக்கங்களோடும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குளிர் காலம்தான் அவர்களால் இன்னும் சகித்துப்போக முடியாத காலமாக இருக்கிறது. கவிஞர் ஜெயபாலன் சொன்னதுபோல் நகக் கண்களுள் ஊசியைச் சொருகியதுபோல அக் குளிர் அவர்களை இன்னும் வருத்துகிறது. மற்றும்படி வாழ்முறை, சிந்தனை, பழக்க வழக்கங்களில் பெரிய மாற்றமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். ஸ்கார்பரோ மய்ய இடமாக இருக்கிறது. கணையாழி இதழில் ஒருமுறை அ.முத்துலிங்கம் எழுதியதுபோல் ‘எல்லா ஊரிலும் தவளைகள் இருக்கத்தான் செய்யும். போகிற இடமெல்லாம் கிணறுவெட்டிக் குடியிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான்.’


தேவகாந்தன்: தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்ற நூலான ‘இந்திய சிந்தனை மரபு’ என்ற நூலினை கௌசல்யா சுப்பிரமணியனுடன் இணைந்து எழுதியிருக்கிறீர்கள். இவ்வாறான ஒரு பாரிய திட்டத்தின் விதை எப்படி உங்களிடத்தில் விழுந்தது?

நா.சுப்பிரமணியன்:‘இந்திய சிந்தனை மரபு’பற்றிய சிந்தனை எழுபதுகளில் விழுந்ததாகும். பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நான் பதவியேற்ற காலம்வரையில் நான் தத்துவத் துறையில் கைவைக்கவில்லை. அதன் பிறகு இந்து நாகரிகம் என்ற பாடத்தை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நான் படிப்பிக்க ஆரம்பித்தபொழுது, அதுபற்றி கூடுதலாக விளக்கம் கேட்கும் மாணவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக வேதாந்தம், சித்தாந்தம் போன்றவற்றை நான் கற்கத் தொடங்கினேன். அதில் எனக்கு முதல் கிடைத்த புத்தகம் கி.லட்சுமண ஐயருடைய ‘இந்திய தத்துவ ஞானம்’. அதில் அவர் ஒவ்வொரு தத்துவத்தையும் தெளிவாக வகைப்படுத்தி வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். சைவம், வைணவம், ஆசீவகம் போன்ற சிந்தனை மரபுகளை மாணவர்களுக்குக் கற்பித்தவேளையில் அச் சிந்தனைகளுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறதே, அதை யாரும் எமக்கு தொகுத்து அளிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் எழுந்தது. இந்த இடைவெளியை நானும், எனது மனைவி கௌசல்யா சுப்பிரமணியனும் அவதானித்ததின் விளைவே ‘இந்திய சிந்தனை மரபு’ தோற்றம் பெறுவதற்கான காரணம். அதை நாங்கள் தமிழகத்தில் இருந்தபோது ஊக்கப்படுத்தி எழுத்துவடிவமாக்க உதவியவர் சவுத் விஷன் பாலாஜி ஆவார்.


தேவகாந்தன்: இறுதிக் கேள்விக்கு இப்போது வந்திருக்கிறோம். அண்மையில் நீங்கள் வாசித்த, உங்களில் பாதிப்பை ஏற்படுத்திய நூல் எது? அதன் விசே~ தன்மைகள் எவையாக இருந்தன?

நா.சுப்பிரமணியன்: கடந்த  நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருக்கிற எனக்கு சமகால இலக்கியத்தைப் பொறுத்தவரையில் காண்டேகரின் ‘கிரௌஞ்ச வதம்’ ஒருகாலத்தில் சிறந்த நூலாக இருந்துவந்தது. அது ஒரு மகத்தான படைப்புத்தான். அறுபதுகளில் அதை வாசித்திருந்தேன். எழுபதுகளில் பல்கலைக் கழகத்தில் தொழிலார்த்தமாய் நுழைந்த காலத்தில் நீலபத்மநாதனின் ‘பள்ளிகொண்டபுரம்’ சிறந்த நாவலாக இருந்தது. பலமுறை அந்நாவலை நான் வாசித்துள்ளேன். இந்த இரண்டுக்கும் பிறகு படித்தவற்றுள் அண்மைக்காலத்தில் பிடித்தது எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலான ‘இரண்டாம் இடம்’.

ஒரு இலக்கிய வாசகனென்ற வகையில் என் விருப்பம் எப்போதும் இதயங்களைத் தரிசிப்பதாகவே இருந்து வந்திருக்கிறது. எதுவிதமான கோட்பாடுகள், விருப்புவெறுப்புகளையும் கடந்து இத் தேடலே ஒரு வாசகனான என்னிடத்தில் இருந்திருக்கிறது. ஏற்கனவே ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’வையும் நான் வாசித்திருக்கிறேன். இவையிரண்டுமே மகாபாரதத்துக்கான மறுவாசிப்புகளே. இன்று மறுவாசிப்பு என்கிற சிந்தனை நவீன இலக்கியத்திலே மிகச் செறிவாக நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதியானது வாசிப்பவனின் சிந்தனை, அனுபவங்களுக்குத் தக்க அளவிலே புதுப்புது அர்த்தங்களைத் தந்துகொண்டிருக்கும் என்று சொல்வார்கள். வில்லிபுத்தூராரதும் வியாசரினதும் பார்வையைத் தாண்டி பாரதக் கதையானது ஒரு சமூகவியலாளனுக்கு எப்படித் தோன்றுகிறது என்பதுபோல, அல்லது மகாபாரதப் பாத்திரங்களே தங்கள் கதையைச் சொல்வதுபோல வருகிறபொழுது அதிலே ஒரு புதுச்சுவையும், புதுஅனுபவமும் ஏற்படுகின்றது.
கார்வேயின் ‘யுகாந்தா’வில் உள்ள விசே~ம் என்னவென்றால் மகாபாரதத்தின் உண்மைகளையும், தொன்மங்களையும் தெட்டத் தெளிவாகப் பிரித்து வைத்திருந்ததாகும். இவ்வளவும் பாரதத்திலே நடந்த கதை, ஏனையவை அதிலே தொன்மங்களாய் இணைக்கப்பட்ட கதைகள் என அது பிரித்துக் காட்;டியது.

இவ்வாறான கதைகளின் தொடர்ச்சியாகவே ‘இரண்டாம் இட’த்தை நான் பார்க்கிறேன். பீமனின் கண்ணோட்டத்தினூடாக, அவனுடைய அனுபவங்களினூடாக இக் கதை சொல்லப்படுகிறது. பீமனுடைய பார்வையினூடாக தருமரோ, குந்தியோ, திரௌபதியோ நமக்கு மகாபாரதக் கதையில் இதுவரை தோற்றம் பெற்றதுபோல் தோன்றமாட்டார்கள். சராசரி சமூக மாந்தராய், எல்லாவகையான பலஹீனங்களும் கொண்டவர்களாய் அவர்கள் நாவலிலே சித்திரிக்கப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் ஐவரைப் பெற்றெடுத்தவளாக…ஒரு ராஜமாதாவாக…இல்லாமல் தன் பிள்ளைகளின் சொத்துரிமையை மீட்டெடுக்கின்ற ராஜதந்திரியாகவே குந்திதேவி இதில் தோற்றம் பெறுகிறாள். ஒருவன் வென்றெடுத்த திரௌபதியை ஐவரும் மணம் புரியக் கூறுவதிலிருந்து, கடைசியில் தருமரை முடிசூட்ட வைப்பதுவரையில் கதையின் ஓட்டமும், கதைப் பின்னலும் அற்புதமாயிருக்கும். மறுவாசிப்புகளில் இருக்கும் முக்கிய தன்மைகளில் ஒன்று புனைவுகள் நீக்கப்படுதல். இரண்டாம் இடமும் சூதர்களின் புனைவு நீக்கி, கதையாக நிற்கவே முயற்சிக்கிறது.
இதைப் பார்க்கிறபோதுதான் தமிழிலே சிலப்பதிகாரத்தையோ, பெரியபுராணத்தையோ ஏன் நாம் இப்படி மறுவாசிப்புச் செய்யமுடியாது என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது. அதற்கான திடங்கள், சிந்தனைகள் கொண்ட தீவிர படைப்பாளிகள் ஈழப் படைப்புலகில் தோன்றவேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

(முற்றும்)

09.11.2001, 09.18.2001, 09.25.2001 ஆகிய தேதிகளில் குமுதம்.காமின் யாழ்மணம் பகுதியில் தொடராக வந்த நேர்காணல் இது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்