கலாபன் கதை: 14


காணாமல் போன கடலோடி


கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் இல்லாததுபோல கலாபன் வேலையற்றிருந்த காலம் அந்தமுறைதான் அதிகமாகவிருந்தது. கடைசிக் கப்பலை விட்டுவந்து ஏழெட்டு மாதங்களாகியிருந்தன. அந்தக் கால இடையில் கொழும்புசெல்லும் வழியில் இரண்டு தடவைகள் திருமலை வந்து ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கிச் சென்றிருந்தான்.

அவனது தங்குகைகள் முன்னர்போல் அட்டகாசமாக இருக்கவில்லையென்பதில் அதிசயப்பட ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் மனச்சோர்வுகளும், மன வேக்காடுகளும் அற்று தன்னிலைமையை உள்வாங்கிக்கொண்ட நிறைவோடுதான் அவன் இருந்திருந்தான். வெளித்தோற்றம் இன்னும் போன கிழமை கப்பலைவிட்டு வந்தவன்போல்தான் இருந்தது. அதேயளவு நீளமாக இல்லையெனினும் தலைமயிரை நீளமாகவே விட்டிருந்தான். உடை வி~யங்களிலும் குறைசொல்ல முடியாதேயிருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்பானால் ஒரு கடலோடியைப் பார்வையிலேயே இனங்கண்டுகொண்டுவிட முடியும். நீளமான தலைமயிர், வெளிநாட்டு உடை, குறிப்பாக லிவைஸ் அல்லது றாங்க்ளர் பான்ட், அடிடாஸ் சப்பாத்துக்களிலிருந்து அதைச் சுலபமாகக் காணமுடிந்தது. ஆனால் நிலைமை பின்னர் அந்தமாதிரி இல்லை. இலங்கையே சுதந்திர வர்த்தக வலயமாகியிருந்தமையும், மக்களின் அயல்நாட்டு பயணங்களும் நிறைய வெளிநாட்டு உடைகளையும், வாசனைத் திரவியங்ளையும் உள்நாட்டில் தாராளமாகவே உள்ளோட விட்டிருந்தன. குடிப்பது கூழ், கொப்புளிப்பது பன்னீர் என்ற கணக்கில்தான் கலாபனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.

பதின்னான்கு ஆண்டுகள் என்பது இதிகாசரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. இராமாயண காவியத்தில் இராமன் பதின்னான்கு ஆண்டுகள் காடு செல்லவேண்டும் என்றுதான் கைகேயி தசரதனிடம் வரம் கேட்கிறாள். அது ஏன் பத்தாண்டுகளாக இல்லை, ஏன் பதினைந்து ஆண்டுகளாக இல்லையென அது பதின்னான்காக இருந்தது குறித்து எனக்குள் கேள்வியிருந்தது. அதற்கான விடையை ஓர் இலக்கியக் கூட்டத்தில்தான் நான் அடைந்திருந்தேன்.

ஏழாண்டுகள் என்பது ஒரு வட்டம். கால எல்லை. இரண்டு வட்டங்கள் ராமன் காடேகுதல் வேண்டும் என்னும்போது, அந்த இரண்டு வட்ட காலமான பதின்னான்கு ஆண்டுகளில் தனது மூலம், தன் பழைய வாழ்க்கை ஞாபகங்களையெல்லாம் இழந்து, ஒருவன் தன் புதிய சூழ்நிலைமைக்குள் அடங்கிவிடக்கூடியதாக இருக்கும் மனித மனப்பாடு காரணமாக ராமன் பதின்னான்காண்டுகள் வனவாசம் செய்யவேண்டுமென கைகேயி வரம் கேட்டாள் என அந்த இலக்கிய உரைகாரர் சொன்னது இன்றும் எனக்கு ஞாபகத்தில் உண்டு.

எனது அப்பப்பா தன் இளமைக் காலத்தில் மேற்குக் கரைவழிப் பாதை வழியே சிலாபம்வரை நடந்து சென்றுதான் தொழில் புரிந்திருக்கிறார். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முத்துக் குளிப்பு அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாய் இருந்தது. மிகுந்த உழைப்புத் திறனைக் காட்டினாரெனவும், தொழிலின் நுட்பம் தெரிந்திருந்தாரெனவும் அவருக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது முத்துச் சலாபங்களில். முத்து களவெடுத்து முதன்முறை பிரம்படி தண்டனையாகப் பெற்ற ஒரு வேலையாள், மறுமுறை முத்து களவெடுத்ததுமல்லாமல், அதைத் தடுக்கச்சென்ற காவலாளியையும் தாக்கிக் காயப்படுத்தினானென அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததாம் அரசு. தண்டனை விதிக்கப்பட்டவுடன், ‘பூ இவ்வளவுதானா, இந்தா பதின்னாலு வருசத்தில திரும்பி வருவன், வந்து உன்னை ஒருகை பாக்காமல் விடமாட்டன்’ என்று தன் மீசையில் கைபோட்டு தன்னைக் காட்டிக்கொடுத்தவனைப் பார்த்து வெஞ்சினம் கூறியதை, நிலா விழும் மணல் முற்றத்தில் கள் போதையேறி பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்கையில் அப்பப்பா அபிநயித்ததுகூட இன்னும் எனக்கு மறக்காமலே இருக்கிறது.

ஆயுள் தண்டனைக் காலம் அப்போதும் இருபது ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. அதில் கழிவுகள் போக அனுபவிக்கவேண்டிய தண்டனைக் காலம் பதின்னான்காக இருந்தது. இந்தக் கணக்கான பதின்னான்கா, அல்லது இலக்கியவுரைகாரர் சொன்ன இரண்டு வட்டக் கணக்கான பதின்னான்கா என எனக்குள் அப்போதும் ஓடியதுதான் ஓர் ஐயம்.

எப்படியோ பதின்னான்கு வருடங்கள் என்பது இயல்புநிலை திரிபடைவதற்கான அல்லது மாறுவதற்கான ஓர் ஆகக்குறைந்த எல்லையென்பது ஏற்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்தப் பதின்னான்குதான் கலாபனுக்கும் வந்தது. 1974 தொடங்கி அன்றைய 1988வரையில் அவனது கப்பல்தொழில் காலம் பதின்னான்கு ஆண்டுகளைப் பூர்த்தியாக்கியிருந்தது. இருந்தும் கலாபனது வாழ்நிலையில் ஓர் இம்மியளவு மாற்றத்தை அம் மாபெரும் காலம் ஏற்படுத்தவேயில்லை. ஒரு பெரிய வீட்டைக் கட்டி வைத்துக்கொண்டும், ஓர் ஆணும் இரண்டு பெண்களுமாக மூன்று குழந்தைகளுடன், அவ்வப்போது எது காரணத்தாலோ மனைவியுடனான சண்டையில் அவளாக ஓடிப்போகவுமோ அல்லது அடித்துக் துரத்தவுமோ செய்துகொண்டும், இருந்தால் கூத்து, இல்லாவிட்டால் முடக்கமெனக் காலத்தைக் கடத்திக்கொண்டும் இருந்தான்.

கப்பல் வழக்கு கைவிடப்பட்டமை பெரிய பாதிப்பை அவனில் செய்திருக்கவேண்டுமென்றே கருதவேண்டியிருந்தது. என்னுடன் தங்கிய நாட்களில் அதுபற்றி அவன் அதிகமாகவும் கதைத்திருந்தான். ‘விடு, உழைத்த காசே மிஞ்சேல்லை, இனி உதே வந்து நான் நல்லாயிருக்கப் போறன்’ என்று அந்தப் பேச்சினை முடிக்கும் ஒவ்வொரு தடவையும் அவன் சொல்லியிருந்தபோதும், அப்படியேதாவது நடந்து கையிலே கொஞ்சம் பணம் வந்துவிடக்கூடாதா என அவன் நப்பாசைப் பட்டிருப்பான்தான். எப்போதும் இருந்திருக்காவிட்டாலும், போதையற்ற தருணங்களிலாவது அவ்வாறு அவன் இருந்திருக்க முடியும்.

நண்பனானதாலேயே அவனது வாழ்வில் நேர்ந்த பரிதாபங்கள் எனது சொந்த வாழ்க்கைக்கு நேர்ந்தவையான வருத்தத்தை நான் அடைவது தவிர்க்க முடியாததாகப் போனது. இருவரும் உள்ளுள்ளாயே வேகிக்கொண்டிருந்தோம். காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

000

கலாபன் எம்.வி.கதரினா என்ற அந்தக் கப்பலின் எந்திர அறைக்குள் பாய்ச்சப்பட்ட மின்கல விளக்கின் ஒளியில் தன் முதல் பார்வையை வீசிய தருணத்திலேயே கப்பல் இனி கடலோட்டத்துக்கு தகுதியற்றது என்பதை உணர்ந்துகொண்டான். மின்சார விநியோகத்துக்கான இயந்திரங்கள்கூட நிறுத்தப்பட்டு இருள்வெள்ளத்தில் மூழ்கியிருந்தது கப்பல். நிறைந்து விழுந்துகிடந்த நிசப்தத்துள் நீரொழுக்குகளின் சட்…சள…ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. பராமரிப்பற்றிருந்ததின், அல்லது திட்டமான செயல்கள் மூலம் அது சீரழிக்கட்டிருந்ததின் அடையாளம் அது.

ஆனாலும் அவனது வேலை கப்பலை ஓடவைப்பது இல்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கப்பலில் லண்டன் கொம்பனிக்கான சரக்குகளை வேறொரு கப்பலுக்கு மாற்றி ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதே. சரக்கை எடுத்து மற்றைய கப்பலில் ஏற்றுவதற்கு பாரந் தூக்கிகளும், அவைக்கான மின்சாரத்துக்காக மின்விநியோக இயந்திரங்களும் சில வாரங்களுக்கு செயல்படக்கூடிய நிலைமையிலிருந்தால் அவனுக்குப் போதுமானது. அதையே அவன் கவனிக்கவேண்டியவனாயிருந்தான்.

கொழும்பு சிலிங்கோ கோபுரத்திலுள்ள ஞானக்கோன் சிப்பிங் ஏஜன்சியில் அன்று காலை நேர்முகப் பரீட்சைக்காக அமர்ந்திருந்தபோதிலேயே எம்.வி.கதரினாவின் முழுக் கதையும் கலாபனுக்குத் தெரிந்துவிட்டது. அந்த ஏஜன்சியில் கப்பல் பொறியாளனாக வேலைசெய்த ஒரு நண்பனின் அழைப்பிலேயே அன்றைய காலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்தான் அவன். அது இரண்டு மூன்று மாதங்களுக்கு நாளாந்த சம்பளத்தில் கப்பலிலேயே இருந்து செய்கிறவேலைதானென்று அவனது நண்பன் சொல்லியே அவனை அவசரமாக அழைத்திருந்தான். ஆனாலும் கப்பல் எதற்காக கட்டப்பட்டிருக்கிறது, கப்பலில் அவனுக்கான வேலை என்ன என்பனவொன்றும் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
கப்பலின் கடலோட்டத் தகுதிச் சான்றிதழின் காலாவதி, சில இயந்திரப் பழுதுகள் காரணங்களாக சில கப்பல்கள் துறைமுகங்களில் தடுத்துவைக்கப்படுவதை அறிந்திருந்த வகையில் அவன் அதிகமாக அதுபற்றி சிந்திக்காமலேதான் வந்திருந்தான். எப்படியும் இருபத்தையாயிரம் ரூபாவாவது கிடைக்கும். அது அப்போதைக்கு அவனுக்குப் போதும். துறைமுகத்தில் நிற்கையிலேயே வேறு சந்தர்ப்பங்களுக்காகவும் முயன்று கொள்ளலாம்.
ஏஜன்சி அலுவலகம் வந்த பின்னர்தான் அக் கப்பலில் வேறுவேறு வேலைகளுக்காகவும் நேர்காணலுக்கு வந்திருந்த மற்றக் கடலோடிகள் மூலமாக அவனுக்கு முழு விபரமும் தெரியவந்தது.

கப்பல் மாலைதீவிலிருந்து இந்தோனிசியாவுக்குச் செல்கையிலேயே கடலோடிகளிடையே அதிருப்தி நிலவியிருந்திருக்கிறது. உணவு சரியில்லை, கட்டுப்பாடான நீர்விநியோகம், மற்றும் சம்பள நிலுவையென்று மாலுமிகள் ஒரு பொங்குநிலையில் இருந்திருக்கிறார்கள். அவனறிந்தவரையில் மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படாமலிருந்திருக்கிறது. அவர்களின் முறைப்பாடு இந்தோனிசிய துறைமுக அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்தோனிசியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் கராச்சிக்குச் செல்லும் வழியில் கொழும்பு வந்திருக்கிறது. கடலோடிகளின் முறையீடு கப்பலை உள்துறைமுகத்துள் கட்டும்படி ஆக்கியிருக்கிறது. கடலோடிகளுக்கும் கப்பல் கொம்பனிக்குமிடையிலான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடப்பிலிருந்தது. அதனால் சாமானேற்றி அனுப்பிய லண்டன் கொம்பனி தனது சாமான்களை விடுவிக்க நீதிமன்ற ஆணை பெற்று அதற்கான வேலைகளுக்காக ஞானக்கோன் ஏஜன்சியை அணுகியிருக்கிறது. அந்தத் திகதியிலிருந்து லண்டன் கொம்பனி ஏற்பாடுசெய்யும் கப்பல் கொழும்பு வந்து அதில் எம்.வி.கதரினாவிலுள்ள சாமான்கள் மாற்றி ஏற்றப்படும்வரையான பொறுப்பு ஞானக்கோன் ஏஜன்சிக்கானது.

ஏஜன்சியில் அவனது வேலைத் திறமைக்கு உத்தரவாதம் வேண்டியிருக்கவில்லை. ஆனால் நேர்காணலை நடத்தியவர் அவனிடம் எதிர்பார்த்தது, அந்த வேலை முடியும்வரை அவன் வேறு வேலைகளை ஏற்கக்கூடாதென்பதைத்தான். அதிலுள்ள நியாயத்திலேயே தன் வாக்குறுதியை தயக்கமின்றி அளித்தான் கலாபன்.

அந்தக் கப்பலின் மேல்தள வேலைகளுக்காக நான்கு பேரும், இயந்திர அறை
வேலைகளுக்காக நான்கு பேரும் கலாபனின் பொறுப்பில் அன்றைக்கு வேலைக்கு வந்திருந்தனர். கூட ஏஜன்சியிலிருந்து நான்கு பேர். அதில் அவனது கப்பற் பொறியாள நண்பனும் ஒருவன்.

கலாபன் முதலில் மின்விநியோக இயந்திரத்தினை பரீட்சித்த பின்னர் காற்றழுத்த தாங்கியைச் சென்று பார்த்தான். அதன் ஆகக்கூடிய அழுத்தம் அடி சதுரத்துக்கு முப்பது றாத்தலாக இருந்தும், அப்போது பதினைந்து பதினாறாகவே இருந்துகொண்டிருந்தது. அது அந்த சிறிய மின்னுற்பத்தி இயந்திரத்தை இயங்கவைக்க போதுமானதுதான்.
மின்னொளி பரவவைக்கப்பட்டது. அதன் பின் பாரந் தூக்கிகளையும் சென்று பார்த்து வந்தான். அந்த நிலபரமே தொடருமானால் சாமான்களை இறக்கிக்கொடுத்துவிட சுலபமாக அவனால் முடிந்துவிடும்.

ஒரு மாத முடிவில்தான் எம்.வி.கதரினாவிலிருந்து சாமான்களை எடுக்கவிருந்த கப்பல் கொழும்பு வந்து சேர்ந்தது. அதன் பின்னரும் வேலை தொடங்க மூன்று கிழமைகளுக்கு மேலாயிற்று. அப்போது துறைமுகத் தொழிலாளரின் உற்சாகமற்ற வேலையில் மெதுமெதுவாக வேலை தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு கிழமையும் திங்களில் சென்று ஏஜன்சியின் அலுவலகத்தில் தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டான் கலாபன். நாளொன்றுக்கு சம்பளமாக முந்நூறு ரூபாவும், சாப்பாட்டுக்காக நூறு ரூபாவும் கிடைத்தது. கப்பலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கப்பலுக்கும் எந்நேரத்திலும் சென்றுவருவதற்கான கூலியை ஏஜன்சியே செலுத்தியது.
அந்த நேரத்தில்தான் கப்ரன் என்ற சாராயம் அறிமுகத்துக்கு வந்திருந்தது. எண்பது ரூபா ஒரு போத்தல். றொக்லாண்ட், மென்டிஸ் ஸ்பெ~ல் சாராயங்களைவிட அது அவனுக்குப் பிடித்திருந்தது. கப்பலுக்கே பொறுப்பாக இருந்ததனால் மிதமாகவே குடித்துக்கொண்டான். வேலைக்குச் சேர்ந்த மறு மாதத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து மனைவி பிள்ளைகளை அழைப்பித்து கப்பலுக்கு கூட்டிச்சென்று காட்டினான். அவர்களும் நியூ கொலனியல் ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கிநின்று சந்தோ~மாகத் திரும்பினர்.
சாமான்களை இறக்கும் வேலை இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது. எம்.வி.கதரினாவுக்கு பக்கத்தில் அடிக்கப்பெற்றிருந்த கப்பலின் மூன்றாம் நிலைப்பொறியாளன் நன்கு பழக்கமாகியிருந்தான் கலாபனுக்கு. ஒரு மாலையில் இயந்திர அறையில் வேலையாயிருந்த கடலோடியிடம் தான் அடுத்த கப்பலின் மூன்றாம் நிலைப் பொறியாளனது அறைக்குச் செல்வதாகவும், ஏதேனும் பிரச்சினையெனில் யாரையாவது அனுப்பி தன்னை அழைப்பிக்குமாறும் சொல்லிவிட்டு அடுத்த கப்பலுக்குப் போய்விட்டான் கலாபன்.
சிறிய ஒரு நட்பார்ந்த அளவளாவுகையை எண்ணியே கலாபன் சென்றிருந்தும் அறையில் சிறிய கொண்டாட்டமே தொடங்கிவிட்டது. நாலாம் நிலை, ஐந்தாம் நிலைப் பொறியாளர்களும் நேரமாக ஆக வந்து சேர்ந்துகொண்டனர். கொண்டாட்டம் அவர்களை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது.

கலாபன் தனது கப்பலுக்குத் திரும்பியபோது பத்து மணியிருக்கும்.
அறைக்குச் சென்றவனுக்கு, இரவுணவாக கொத்து ரொட்டி கட்டிவைக்கப்பட்டிருந்தும், வெளியே சென்று சாப்பிட்டு வந்தாலென்ன எனத் தோன்ற, கரையைநோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓர் இழுவைப் படகைக் கூவியழைத்து ஏறிச்சென்றான். கொலனியல் ஹோட்டல் பூட்ட இன்னும் நேரமிருந்தது. அதுவரை கொலனியல் பாரிலே குடிக்கவும் முடியும்.

மணி பன்னிரண்டானது. மனத்தில் என்ன தோன்றியதோ, அப்போதுதான் கொழும்பில் புழக்கத்துக்கு வந்திருந்த ஒரு ஆட்டோவில் ஏறி மருதானை, கொச்சிக்கடை, வெள்ளவத்தையென அலைந்தான். மறுபடி அவன் கோட்டை புகையிரத நிலையத்தடிக்கு வந்தபோது ஒன்றரை மணி.

அந்தளவில் நியூ கொலனியல் பாரும், றெஸ்ரோறன்ரும் பூட்டப்பட்டிருந்தன. புகையிரத நிலையத்துக்கு எதிர்த் தெருவில் இரண்டு ராக்சிகள் நின்றிருந்தன. என்ன கேட்டானோ, ‘இப்ப மிச்சம் நேரமாயிட்டுது, மாத்தையா’ என்ற பதில் வந்தது ராக்சி ட்ரைவரிடமிருந்து.
இன்னும் சிறிதுநேரத்தில் அடக்கத்தில் கிடக்கும் பெருநகர் அசைவுறத் தொடங்கிவிடும். துறைமுகத்துக்கு முன்னாலிருந்த கோபுர மணிக்கூடு இரண்டைக் காட்டிக்கொண்டிருந்தது. கலாபனோ உடம்பே சன்னதம் கண்டதுபோல் கோப வெறியும், சாராய வெறியுமாக நடுங்கியபடி நின்று, “ போன எந்த நாட்டிலையும், எந்த நேரத்திலையும் தேவையெண்டு நினைச்சா எடுத்துத்தான் இருக்கிறன். இது என்ரை நாடு. இஞ்சை நேரம்போட்டுது, எடுக்கேலாது எண்டு போய்ப் படுக்கிறதோ? கொழும்பிலை வேசையளுக்கும் பஞ்சம் வந்திட்டுதோ?” என்று உறுமினான்.

அவனை ஒரு கடலோடியாக இனங்காணக்கூடியதாய் இருந்தவகையில் எதுவித பிரச்சினையுமின்றி படகுத் துறையை அடைந்துவிட்டான் கலாபன். ஆனாலும் அதிகாலையில் முதல் படகிலேயே அவனால் கப்பலுக்குச் செல்ல முடிந்திருந்தது.

படுக்கையில் விழுந்தவன் மதியச் சாப்பாட்டு நேரத்துக்குத்தான் மறுபடி விழித்தான்.
அன்றிரவு போதையற்ற நிலையிலிருந்து தன் நண்பனுக்கு கடிதமெழுதினான் கலாபன். விரைவில் சரக்குகளை மாற்றி ஏற்றுகிற வேலை முடிந்துவிடுமென்றும், அப்படியே யாழ்ப்பாணம் போவதுதான் எண்ணமெனவும், அவன் ஊருக்கு வரும்போதோ அல்லது தான் திருமலை வரும்போதோ அவனிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தைத் தந்துவிடுவதாகவும் தெரிவித்தான். முதல்நாள் ஓர் இரவில்மட்டுமே தான் ஆயிரம் ரூபா செலவழித்ததை எழுதி மேலே பல்வேறு அனுபவங்களின் மொழியைச் சொல்லி முடித்தான்.

மறுநாள் கரைக்குச் சென்ற தெரிந்த ஒருவர் மூலம் தபாலையும் கட்டில் சேர்ப்பிக்க கொடுத்துவிடவும் அவன் மறக்கவில்லை.

000

கலாபன் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற கப்பலில் வேலையிலிருந்தபோது எழுதிய கடிதம் வருவதற்கு முந்திய கிழமை, கலாபனின் மனைவி மனோகரியிடமிருந்து எனக்கொரு தபால் வந்தது. ஊரிலே பரவலாக அதுமாதிரியான செய்திகள் அறியப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. எனக்கு அதிர்ச்சி இல்லையெனினும் அச்சமேற்பட்டது.

செய்தி உண்மையாக இருக்கிறபட்சத்தில் கலாபன் நிறைய இன்னல்களை எதிர்பார்க்க சாத்தியங்கள் இருந்ததாய்ப் பட்டது. இயக்கம் எதுவுமோ, அல்லது இயக்கமெதுவும் சாராத ஆயுதக் குழு ஒன்றோ ஒருநாள் மாலை அவர்கள் வீடுசென்று, கலாபன் கப்பலில் என்ஜினியராக வேலைசெய்கிறார்தானே, மாதம் மாதம் அவளுக்கு பணம் அனுப்புகிறார்தானே, ஏன் அவள் தங்கள் போராட்டத்துக்கு உதவியாக பண உதவி செய்யக்கூடாதாவெனக் கேட்டிருக்கிறது. அவளிடம் ஐம்பதாயிரம் ரூபா அடுத்த முறை வரும்போது தருவதற்குத் தயாராக இருக்கவேண்டுமெனவும், இல்லையேல் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருக்குமென எச்சரித்துச் சென்றதாகவும் வேறு எழுதியிருந்தாள்.

கமலி என்கூடவே திருமலையில் இருந்தபடியால் நேரே சென்று ஆறுதல் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்திருந்த சமயம் அது. அதனால் கடிதம் எழுதவே முடிவுசெய்தேன். தாங்கள் போராட்டத்துக்கு எதிரானவர்கள் இல்லையெனவும், கலாபன் நிறைகுடிகாரனாய்த் திரிவதால் தங்களிடம் சேமிப்பு எதுவும் இல்லையென்றும், எதற்கும் கப்பலிலிருந்து அவன் வரும்வரை அவர்களைப் பொறுத்துக்கொள்ளும்படியும் கேட்கச்சொல்லித்தான் எழுதினேன். அதைத்தவிர வேறு எதுவும் எனக்கும் அந்த நேரத்தில் மனதுக்கு வரவில்லை.

கலாபன் கப்பலிலிருந்து வீடு சென்ற பிறகு, என் அம்மாவிடமிருந்து வந்த கடிதத்தில் அவன் முன்னரைப்போலத்தான் குடியும் புறாசலுமாக அலைவதாக எழுதியிருந்தா.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. திடீரென கலாபன் அங்கே வந்தானா என மனோ விசாரிக்கச் சொன்னதாய் அம்மாவின் தொலைபேசி அலுவலகம் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். ஒருநாள் மாலை யாழ்ப்பாணம் போய் வருவதாகச் சொல்லிக்கொண்டு போன கலாபன் கடந்த நான்கைந்து நாட்களிலும்கூட வீடு திரும்பவில்லையென அம்மாவின் செய்தி தெரிவித்தது.
நானும் தெரிந்தவரையெல்லாம் விசாரிக்கத்தான் செய்தேன். ஊரிலுள்ள நண்பர்களும் எங்கெங்கோ சென்று தேடியிருக்கிறார்கள். கலாபன் அகப்படவில்லை. அவனைக் கண்டதாகக்கூட தகவல் கிடைக்கவில்லை.

அதற்கடுத்த மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சென்றேன். மனோ வீடு சென்றபோது குழந்தைகள் மூன்றும் வாடிப்போய்த் திரிந்துகொண்டிருந்தன. மனோ வாடி மெலிந்து உருக்குலைந்துபோய் நின்றிருந்தாள்.

சுடப்பட்டோ வெட்டப்பட்டோ இறந்து போன பின் சடலம் கிடைத்து அதை அடக்கம் செய்யும் வாய்ப்பிருந்தால்கூட இறப்பின் சோகம் அவ்வளவு ஆழமாய் எவரையும் வருத்தியிருக்காதென்று நினைக்கிறேன். சடலத்தைக்கூட தொலைத்துவிடுதல்தான் சோகங்களிலெல்லாம் பெரிய சோகமாய் ஆகிவிடுகிறது.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெட்டில் காணாமல் போனவன் கலாபன். தொண்ணூற்றெட்டிலும் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இரண்டாயிரத்தெட்டிலும் உறவுக் கண்கள் அவனைத் தேடவே செய்தன.

ஏதோவொரு கூட்டத்தில் ஆறடி உயரமும் அதேயளவு பருமனுமான ஓர் உருவத்தை மனோவின் கண்கள் கலாபனா அதுவென வெடித்து நோக்காமலா இருக்கும்? அது அவனில்லையெனத் திண்ணமாகிறபோது அவள் கொள்ளும் வலியை வார்த்தைகளால் விளக்கிவிட முடியுமா? பச்சை உடம்போடு அவன் பரலோகம் போய்விட்டிருந்தால்கூட கொண்டவளால் அதுமாதிரியான இழப்பை சகித்துக்கொண்டுவிட முடிவதில்லை.

கலாபன் காணாமல்போய் இன்றோடு இருபத்தோராண்டுகள் முடிவடைந்துவிட்டன. இன்றும் என் கண்களே சில கடித உறையின் எழுத்துக்களை கலாபனதாய் இனங்கண்டு ஏமாறிக்கொண்டிருக்கின்றன.

மனோ தேடிக்கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களோடு நானும். நம்பிக்கை இழந்த பின்னரும்கூட தொடர்ந்தும் தேடிக்கொண்டிருப்பதுதான் மெய்யன்பின் விதிப்பாடா?

(முற்றும்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்