பேரணங்கு (சிறுகதை)

பேரணங்கு
(சிறுகதை)


குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான்.

பெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை.

அதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது.

அவளுக்கருகே ஆறடி உயரத்தில் ஒரு நடுத் தூணோடு இருந்துகொண்டிருந்தது அந்த இரும்பு அலுமாரி. எந்திர உபகரணங்களும் சாவிகளும் வைக்கப்பட்டு அசைவறுத்திருந்தது. அந்த அலுமாரியை உள்ளங்கையைப் பொறுக்கக் கொடுத்து சாய்ந்துநின்று தள்ளுவதுபோல நின்றுகொண்டிருந்தாள் அவள். மூன்று நான்கு வலுவான ஆண்கள் சேர்ந்தாலும் அரக்கிவிட முடியாதிருந்த அந்த அலுமாரியை இந்த ஒல்லிப் பெண் தள்ள முயல்கிறாளேயென்று ஒரு கேந்தி பார்வையிலோட அவளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளது முகம் அந்த ஸ்திதியிலேயே அவனைநோக்கித் திரும்பியது.

தலையைச்சுற்றி அவள் கட்டியிருந்த துணி கூந்தலில் தூசி படிந்துவிடாதிருக்கப்போலும் என்பதுதான் அவனது எண்ணமாகவிருந்தது. நேர்நேராய்ப் பார்த்தபோது அந்தத் தோற்றம் அவனுக்கு அவளை ஒரு முஸ்லீம் பெண்ணாகக் காட்டியது. அவளை அவ்வாறாக ரமணீதரன் சதாசிவம் நினைத்ததற்கு தெளிவான காரணம் எதுவும் இருக்கவில்லை. யூதப் பெண்கள்கூட அவ்வாறு தலையில் துணி கட்டுவது வழக்கம். ஆனால் அந்த முகத்தின் அமைப்பு அவனை அவ்வாறுதான் எண்ணவைத்தது.

அவளது முகத்தில் இனங்காண முடியாத சோகமொன்று இழையோடிக் கிடப்பதாய் அவன் நினைத்தான். நெற்றியில், புருவ வெளியில், கன்னங்களில், நாடியில் நாள்பட்ட அச் சோகத்தின் மெல்லிய இருள் வரிகள்.

நாலரை மணிக்குள் அன்றைக்கான வேலையை முடிக்கவேண்டியிருந்த அவசரம் அவனை மேற்கொண்டு நினைவிலாழ்ந்து நிற்க அனுமதி மறுத்தது. அவன் வேலையில் கருமமானான். அந்தளவில் அவளது இரும்பு அலுமாரியைத் தள்ளுவதுபோன்ற ஸ்திதி, தன் நாரி உழைவை முறிப்பதற்கானது என்பது அவனுக்குப் புரிதலாகியிருந்தது.

அன்று மாலை பஸ்ஸில் வீடுநோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான் ரமணீதரன் சதாசிவம். என்றுமில்லாதவாறு தான் தனது வழக்கமான உற்சாகமெல்;லாம் இழந்து வாடிப்போய் அமர்ந்திருப்பதாய் உணர்கை ஆகிக்கொண்டிருந்தது அவனுக்கு. அவனுக்கென்று சோகமெதுவும் இல்லை. அப்படியானால் அந்த உடல் மன வாட்டங்கள் ஏன் அவனில் வந்து விழுந்தன?
அவனைக் கூர்ந்து பார்த்த சிறிதுநேரத்தில் தனது பார்வையை அவள் திருப்பிக்கொண்டிருந்தாலும், அந்தப் பார்வைதான் தன்னுள் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்த துக்கத்தை தனக்குள் படியவைத்துவிட்டுப் போயிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான். பார்வைகள் செய்திகளைக் கடத்துகின்றன என கேள்வியில் பட்டிருக்கிறான். அவை உணர்வுகளையும் கடத்துபவை, சிலரின் பார்வைகளாவது அவ்வாறு செய்பவை, என்பதை அன்றுதான் அனுபவத்தில் அவன் அறிந்தான்.

வீட்டில் அம்மாவும் அக்காவும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரித்தும், பரிதாபப்பட்டும், அழுகைகளில் அவலங்கொண்டும் உணர்வு வலயத்துள் அழுந்திக்கொண்டிருக்கையில், அவனுக்கு அன்று தொழிற்சாலையில் கண்ட அந்த ஒல்லியான உயர்ந்த பெண்ணும், அவளது முகத்தில் கண்ட இனம் சொல்ல முடியாத துக்கமும், அந் நீலக்கண்களில் வெளிவெளியாய்த் தெறித்துக்கொண்டிருந்த வெறுமையுமே ஞாபகமாகிக்கொண்டிருந்தன.
மறுநாள் வேலை முடிந்து வந்து வீட்டில் அமர்ந்திருந்தபோதும் அந்தப் பெண்ணின் ஞாபகமாகவே அவனுக்கு வந்துகொண்டிருந்தது.

அன்று தான் கூடவேலைசெய்துகொண்டிருந்தவரிடம் அவளைப்பற்றி விசாரித்து அறிந்துகொண்டிருந்தான் அவன். ஒரு இடைவேளையின்போது தூரத்தே தனியாக அமர்ந்திருந்து நூலொன்றை வாசித்தபடி ஏதோ அருந்திக்கொண்டிருந்தவளைச் சுட்டிக்காட்டி அவளது பெயரென்ன என அவன் வினவியபோது, அவர் திரும்பி அவனை ஒரு விஷமப் பார்வை பார்த்தார். ‘சும்மாதான்’ என்றான் அவன். அவர் அதற்கு, ‘எதுவாயுமிருக்கட்டும். அவள் ஒரு அஜர்பைஜான்காரி. ஐயூன் என்று பெயர். பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலையிலே வேலைசெய்கிறாள். ஏறக்குறைய அதேயளவு காலம் நானும் இங்கு வேலைசெய்கிறேன். ஒருநாளாவது அவள் சிரித்துப் பேசி நான் கண்டதில்லை. வந்த புதிதில் காணும் எவருக்கும் ஒரு வேகம் பிறக்கிறதுதான். அவளோ தன் பார்வையாலேயே அடங்கிப்போகச் செய்துகொண்டிருக்கிறாள். உன் ஆவலை அடக்கிக்கொள்’ என்றார்.

ஐயூன் என்ற பெயரே அவனது இதயத்தினுள் ஒட்டியிருந்து இனிமை செய்துகொண்டிருந்தது. அந்த ஒல்லித் தேகம் தன் வன்மையிழந்து ஒரு கொடியாய் அசைந்து நெளிந்து ஆதாரத்தில் சரியத் துடிக்கும் கற்பனைகள் அதைத் தொடர்ந்து அவனுள் பிறக்கவாரம்பித்தன.

மூன்றாம் நாள் அதே வெறிதான பார்வையால் அவனை அவள் நான்கைந்து முறை காரணமின்றி நோக்கிக்கொண்டிருந்ததைக் கண்டபோது, தன் பற்றிய நினைவுகள் இருக்கும் மனத்தைத் தெரிந்து அதைத் துளைத்தெடுக்கும் வித்தை அவளிடமிருப்பதை எண்ணி அவன் அதிர்ந்துபோனான். பார்வையைத் திருப்பி, தலையைக் குனிந்தென என்ன பின்வாங்குகை செய்தும் அவள் மீண்டும் மீண்டும் அவனை வறுகிக்கொண்டிருந்தாள்.

அவள் அவனைவிட சற்று வயது கூடியவளாகக்கூட இருக்கலாம். அவனதைவிட எவ்வளவோ மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியிலிருந்து அவள் வந்திருப்பதும் சாத்தியம். இருந்தும் தன்னை ஓர் ஆணாக அவளுள் நிறுவும் ஆசை மட்டும் அவனுள் விசைவிசையாய் எழுந்து அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. அவளது கூர்த்த பார்வையை எதிர்கொள்ளும் அச்சமிருந்தும்கூட களவுகளவாய் அவளது சிரிக்க மறுக்கும் முகத்தை, சோகம் உறைந்த விழிகளை, வன்மை நெரித்து செறிவுபடுத்திய வெண்ணுடலையெனக் கண்டுகண்டு அவன் களியெய்துவது நிற்கவில்லை.

நான்காவது நாள் இரவில், அதுவரை நினைப்பில் அவனைக் களியேற்றிக்கொண்டிருந்த அவளது உடல் ரமணீதரன் சதாசிவத்தின் கைகளுள் இருந்துகொண்டிருந்தது. சருமத் திசுக்களின் உராய்வின் சுகம் கிடைத்துக்கொண்டிருந்த அவ்வேளையில்கூட, அவன் அவளது முகத்தையே ஆவல் ததும்பக் கண்டுகொண்டிருந்தான். அவளது முழு உடலின் அழகும் அவளது முகமாயே இருந்ததோ? அவன் கண்களை ஊடுருவினான், அதனுள் உறைந்திருந்த சோகத்தின் இருப்பினைக் காணப்போல. அவ் நீல அலையடித்த கண்களுள் நட்சத்திரங்கள் மினுங்கக் கண்டு அவன் களியேறி அவளை இறுக அணைத்தான். அக்கணமே அந்த இறுக்கத்துள்ளிருந்தும் மெதுமெதுவாய் உருவிக் கழன்று மறைந்து போனாள் அவள்.

நெடுநேரமாய் படுக்கையில் விழித்தபடி கிடந்து அவள்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.

தனக்கு அவள் கிடைக்கமுடியாத சூசக முன்னறிவிப்பின் சோர்வு படிந்த முகத்தோடு அவன் காலையிலெழுந்து வேலை செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபொழுது, தேநீர் வைத்துக்கொடுத்த அம்மா, ‘ராத்திரியெல்லாம் நித்திரையில்லைப்போல கிடக்கு. எந்தப் பிசாசு பிடிச்சுதோ?’ என்றுவிட்டு அப்பால் சென்றாள்.

இரட்டுறு மொழியாடலில் வல்லவள் அம்மா. அவள் எதையோ கிரகித்திருக்கிறாள். தான் ஏதாவது இரவில் பிதற்றியிருக்கக் கூடும்தான்.

பேய்… பிசாசெல்லாம் வசீகரித்து வதை செய்பவை, அதற்காக அவை மயக்குறு எழில்கொண்டனவாய் இருக்குமெனவே அவன் அறிந்திருக்கிறான். வனப்பின் பிரக்ஞையே அற்றிருந்து ஒருவரை வயக்கியும், சதா தன் நினைப்பிலேயே அலையவும் வைப்பதை எப்படிச் சொல்வது? அணங்கு என்றா? அணங்குகள் உழல வைக்குமென்றால், அவையுமே உழன்றுகொண்டும் இருக்குமா? பேரணங்குகள் என்ன செய்யும்?

அவனுக்கு மேலே யோசிக்க அவகாசமற்றதாய் இருந்தது வேலை அவசரம்.

இரவிரவாகக் கொட்டிய பனியுள் கால் புதைய பஸ்ஸ_க்கு நடந்தான் ரமணீதரன் சதாசிவம்.

அன்று வெள்ளிக்கிழமை. மூன்று மணிக்கே வேலை முடிந்துவிடும் என்ற நினைப்பு அப்போது எழுந்தது. கூட அன்றுதான் அந்த அணங்கின் கடைசித் தரிசனமும் என்ற நினைப்பு. அடுத்த கிழமையிலிருந்து அவனுக்கு அவனது வழமையான தொழிற்சாலையில் வேலை தொடங்கிவிடும்.

தூவலாய்க் கொட்டும் பனி, நிலத்தில் நாட்பட நாட்படக் கிடந்து சறுக்குப் பனியாய் உறைந்துவிடும். தவறி அதன்மேல் காலடி வைப்பவர்கள் சறுக்கிவிழுந்துவிட நேரும். ரமணீதரன் சதாசிவத்தின் காலடியில் அப்போது அவை நொருங்கிச் சிதறிக்கொண்டிருந்தன. வலுவும், அழகும், கம்பீரமுமே ஓர் உருவெடுத்ததாய் அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான்.

அப்போது ஒரு சிவப்புநிறக் கார் அவனை ஊர்ந்து கடந்தது. கார் கடந்து செல்கையில் தலையைக் குனிந்து ஐயூன் அவனைப் பார்த்தாள்.

அன்று ஐயூன் சற்று யோசனையில் இருப்பதாய்த் தோன்றியது ரமணீதரன் சதாசிவத்துக்கு. அவளது எந்திரத்துக்கு முன்னால் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த பலகைகள் பெரிதானவையாக இருந்தன. அதையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கண்காணிப்பாளரிடம் சென்று ஏதோ பேசினாள். தனக்கு உதவியாள் தேவையென அவள் கேட்டிருப்பாள் என எண்ணிக்கொண்டான் அவன். எதிர்பாராத விதமாக அவனையே அவளோடு நின்று வேலைசெய்யும்படி கண்காணிப்பாளர் கூறிவிட்டுச் சென்றார்.

ஒவ்வொரு பலகையாக எந்திரத்தில் தூக்கிவைக்க உதவிசெய்வதும், துளைகள் போட்டு முடிய நகர்ந்து வரும் பலகையை சில்லுகள் பொருத்திய ஒரு மேசையில் இழுத்துவிடுவதும்தான் அவனுக்கு வேலை.

நேரம் விரைவுவிரைவாய்ப் போய்க்கொண்டிருந்தது. அன்று வெள்ளிக்கிழமையென்பதன் பூரிப்பு எல்லோர் செயலிலும், முகத்திலும் துலக்கமாய்த் தெரிந்தது. அன்று வேலை நேரத்தோடு முடிவது மட்டுமில்லை, தொடர்ந்துவரும் இரண்டு நாட்களும்கூட விடுதலை நாட்கள். கிழமையில் ஐந்து நாட்களை வேலைக்காகக் கொடுத்துவிட்டு, வாழ்க்கை தனக்காகக் கொண்டிருந்த மீதி இரண்டு நாட்களும் அவைதான்.

ஒரு மணிக்கே வேலைகளெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. எந்திரங்களைத் துடைத்தும், தொழிற்சாலையைக் கூட்டியும், திங்கள் காலை வந்ததும் வேலையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தும் தொழிற்கூடம் சுறுசுறுப்பாக இருந்தது.

இரண்டு ஐம்பதுக்கு எல்லோரும் வெளிச்செல்ல தயார்நிலையில். இரண்டு ஐம்பத்தைந்துக்கு மணியொலித்தது. தமது வெளியேறும் நேரத்தை எந்திரத்தில் பதிய எல்லோரும் வரிசையில். ரமணீதரன் சதாசிவம் தனது நேரப்பதிவை அங்கே செய்யவேண்டியிருக்கவில்லை. அத் தொழிற்சாலை அலுவலகத்தில் சொல்லிவிட்டு புறப்படலாம்.

அவ்வாறு சொல்லிவிட்டு வெளியேறச் சென்றுகொண்டிருக்கையில் சட்டென குறுக்காக வந்த ஐயூன், “உன்னோடு பேசவேண்டும். காஃபி ரைமில் இருக்கிறேன், வா” என்று மெதுவாகக் கூறிவிட்டு கார் நின்றிருக்கும் இடத்துக்கு நடந்துவிட்டாள்.

தனது பார்வையிலிருந்த ஆர்வங்களைக் கவனித்திருப்பவள் அதுபற்றிப் பேசத்தான் கூப்பிடுகிறாளோ என்றொரு அச்சமிருந்தாலும், அதையும் சென்றால்தானே அறியமுடியும் என கடைசியில் செல்லத் துணிந்தான்.

அவன் காஃபி ரைம் சென்றபோது ஐயூன் இல்லை. தொங்கலில் இரண்டு பேர் இருக்கக்கூடிய ஒரு மேசையில் சென்று அமர்ந்தான்.

சிறிதுநேரத்தில் ஒரு பூனைபோல் வந்து அவனுக்கருகே நின்று, “சதா” என்றழைத்தாள் ஐயூன். அந்த காஃபி ரைமில் இருந்த எந்த வாசல் வழியாக வந்திருப்பாள் என எண்ணிக்கொண்டிருக்கையில் ஓர் இருள்போல அவனெதிரே அமர்ந்தாள்.

“காஃபி குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன்.

“பிறகு.”

அவள் தான் சொல்ல அல்லது கேட்க வந்ததை மனத்துள் ஒழுங்குபடுத்துவதற்குப்போல் சிறிதுநேரம் பேசாமலிருந்தாள். பிறகு, “வந்த நாளிலிருந்து என்னையே கவனித்துக்கொண்டிருந்தாய். என்னோடு வேலைசெய்யும்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய். அதிகமாகவும் நான் குனிகிற வேளையில். என்ன பார்த்தாய்? என் கழுத்துச் சட்டைக்கூடாக என் மார்பகங்கள் தெரிந்தனவா?” என்று மெல்லக் கேட்டாள்.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். ஆ…அது சிரிப்பே இல்லை. ஆனால் அதற்கு வேறுபெயரும் இல்லை. கேலியாக அந்த உரையாடலைத் தொடங்க நினைத்து அவள் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என எண்ணினான் ரமணீதரன் சதாசிவம். அது மேலே பேசும் சக்தியை அவனுக்குக் கொடுத்தது. “இல்லை, நிச்சயமாக இல்லை. நான் அப்படியானவன் இல்லை.”

“சரி. அப்படியானால் என்னதான் பார்த்தாய்?”

“உன் முகத்தை.”

“எனது முகத்தில் பார்க்க என்ன இருக்கிறது? ஏன், நான் அழகாக இருக்கிறேனா?”

அவள் வெளிப்படையாக விஷயத்தைப் புட்டுப் புட்டுப் பேசத் தீர்மானித்துவிட்டாள் அல்லது அவ்வாறு பேசுவது அவளது சுபாவம் என்ற முடிவுக்கு அவனால் சுலபமாக வரமுடிந்தது. அவனும் இனி வெளிப்படையாகவே பேசவேண்டும். “நீ அழகானவள்தான். ஆனாலும் அங்கே உன்னைவிடவும் அழகான பெண்கள் இருக்கிறார்கள்.”

“மெய். அப்படியானால் என் முகத்தில் என்னதான் பார்த்தாயென்று சொல்லேன்.”

“உன் முகத்திலிருந்த… எப்படிச் சொல்லுறது…உன் முகத்திலிருந்த ஒருவகையான…

ஒருவகையான அழகின்மையை.”

“என்ன!”

அது கேள்வியல்ல. திகைப்பு. அவனின் கவனத்தில் எதுவுமில்லை. அவன் பேசியாகவேண்டும். தன் மனத்தைச் சொல்ல அவளே அழைத்துள்ள அந்தச் சந்தர்ப்பத்தைத் தவிர வேறு கிடைக்காமலும் போகலாம்.

“உன் முகத்தில் அழகின்மையாய் ஒரு சோகம் விரிந்திருக்கிறது, ஐயூன். குறிப்பாக உன் வெளிர்நீலக் கண்களுள் அது நிறைந்து கிடக்கிறது. அது விரிந்து விரிந்து தான் படரும் இடங்களிலும் தன் துக்கத்தைப் பதிந்துகொண்டு போகிறது. நீ அழகானவள்தான். அந்தத் துக்கம் மட்டும் இல்லாதிருந்தால் நீ பேரழகியாக இருப்பாய். நீ காதலித்து ஏமாறியவளாக, கல்யாணம் செய்து மணமுறிவு பெற்றவளாக யாராகவும் இருக்கட்டும். எந்த நிலையிலும், உன் அழகை மறைத்திருக்கும் அந்தத் துயர் ஓர் ஆணுக்கான அறைகூவல். உன் அழகு அந்த அறைகூவலை விடுத்துக்கொண்டிருப்பதாய் நான் உணர்ந்தேன். ‘என்னை அந்தத் துக்கத்திலிருந்து விடுவித்து என்னைச் சிரிக்கவைக்க மாட்டாயா?’ என்று அது நினைவிலும் கனவிலும் என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது.”

“அதனால் நீ அந்தத் துக்கத்தை நீக்க விரும்பினாய்?”

“ம்.”

“பயித்தியம்.” அவள் சொல்லிவிட்டு மெல்லக் கலகலத்தாள். சிறிதுநேரம் மௌனமாய் இருந்தவள் விறுவிறுவென எழுந்தாள். “நான் காஃபி வாங்கப்போகிறேன். உனக்கு எப்படி வேண்டும்?” என்றாள்.

அவன் தானும் எழுந்து கூடச்சென்றான்.

கோப்பியோடு மறுபடி வந்தமர்ந்தவர்கள் மெல்ல சுடுகோப்பியைச் சுவைத்தார்கள். ஐயூன் சொன்னாள்: “என்னைப்பற்றி இதுவரை நான் யாரோடும் பகிர்ந்துகொண்டதில்லை. விருப்பமில்லை. நான் பேசினால் எதை அவர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? ஏனோ உன்னோடு பேசவேண்டுமெனத் தோன்றிற்று. நீ ரணகளமாகியிருக்கும் ஒரு தேசத்திலிருந்து வந்தவன். அந்தத் தேசத்தில் சிறுபான்மைச் சமூகம் கொண்டிருக்கக்கூடிய ஆகக்கூடுதலான சோகங்களை அனுபவித்திருக்கக் கூடியவன். அதனால்தான் சந்திக்கக் கேட்டேன்.”
காஃபி ரைமில் கூட்டமில்லை. வருபவர்கள் அமர்பவர்களாயின்றி, வாங்கிக்கொண்டு செல்பவர்களாயே இருந்தனர்.

“அஜர்பைஜான் துயரம் மலிந்த பூமி. ஏறக்குறைய உனது நாட்டில் உனது இனத்தவர்க்கு இருக்கக்கூடிய பிரச்சினை மாதிரியானதுதான் அங்கேயும். ஆனால் அதற்கு வேறு பரிமாணங்களும் உண்டு.”

அவனுக்கு அஜர்பைஜான் வரலாறு ஓரளவு தெரியும். கஸ்பியன் கடலுக்கு மேற்குக் கரையோரமாய், கோகாஸியஸ் மலைத் தொடர்களுக்கு தென்புறத்தில் இருக்கிறது அந்தத் தேசம். சோவியத்தின் சிதறலுக்குப் பின் அதனுள் அடங்கிருந்த நாடுகளுள் முதலில் சுதந்திரப் பிரகடனம் செய்த நாடு அது. பின்னரும் அது ஒரு நிறைவான வாழ்நிலையை அடைந்துவிடாதேயிருந்தது. உள்நாட்டு மதப் பிரிவினைகளின் அரசியலால், இடம்பெற்றதும் இடம்பெறுவதுமான மனிதாயத அவலங்கள் அங்கே சொல்லமுடியாதவை. அவள் தனது நாட்டுநிலையையும் தனது சொந்த அவலங்களையும் தனதையொத்த ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் தன்னோடு பகிர வந்திருக்கிற நிலையில், தான் காதல் அழகு என்று தன் மனஅவசங்களை அவளிடம் பிரஸ்தாபித்திருந்தமையை எண்ண அவன் கூசினான்.
“ஒரு பிறப்பின் பின்னான முதற் செயற்பாடு எவருக்கும் அழுகையோடுதான் ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள். புறவுலகின் தன்மை அதை மாற்றியாகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான அமைவுடன் இருப்பதுதான் ஒரு நாட்டின் அறம். நான் பிறந்தபோது தொடங்கிய அழுகையை என் பத்தாவது வயதுவரை நிறுத்தவேயில்லை, சதா.”
அவளது வாசிப்பின் தீவிரத்தை அவன் ஏற்கனவே கண்டிருந்தவன். அது தீவிர வாசிப்புமுள்ளது என்பதை அப்போது அவளது வார்த்தைப் பிரயோகங்களில் அவனால் அறிய முடிந்தது.
“உள்நாட்டு யுத்த காலத்தில் எனக்கு பத்து வயதாயிருக்கும்போது என் அப்பாவும், அம்மாவும் என் கண் முன்னாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த ஸ்தம்பிதம் என் அழுகையை நிறுத்தியது. அதைத் தொடர்ந்த ஆறேழு ஆண்டுகள் அராஜகத்தினதும் வன்முறையினதும் ஆழப்பதிந்த சுவடுகள் என் வாழ்வில். வாழ்க்கை எவருக்குமே அவ்வண்ணம் அமைந்துவிடக்கூடாது, சதா. கடைசியில் அரசியல் தஞ்சம் காணப் புறப்பட்ட என் சித்தப்பா குடும்பத்தோடு நான் மட்டும் இங்கே வர வாய்ப்புக் கிடைத்தது. உயிர்;பிழைத்துவிட்டேன்தான்;. ஆனால்…வாழ்க்கை…? எனது வாழ்க்கையை நான் என் மண்ணிலல்லவா விட்டுவந்திருக்கிறேன். நான் இந்தக் கணம்வரை இந்த நாட்டில் எதுவித துன்பத்தையும், துயரத்தையும் அடைந்ததில்லை என்பது மெய்யே. ஆனாலும் என் மண்ணின் நினைவு, அங்கேயுள்ள என் எச்ச உறவுகளின் நினைவு என்னைவிட்டு என்றும் நீங்கியதில்லை. நான் தின்றும், குடித்தும், உறங்கியுமான ஒரு வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதுதான் எனது தீர்மானம். அப்படியிருக்கையில் நான் சிரித்துக்கொண்டே வாழ்ந்துவிடுதல் சாத்தியமா, சதா, சொல்லு.”

உறைந்து போய் உட்கார்ந்திருந்தான் ரமணீதரன் சதாசிவம். காதலென்றும் சொல்லமுடியாது, ஒரு பெருவிருப்புத்தான் அவள்மீது அந்தக் கணம்வரை அவனுள் விளைந்திருந்தது. அப்போது அது பவுத்திரமடைந்துகொண்டிருந்தது. சொந்த மண்ணோடு இயைந்ததே வாழ்க்கையென்ற தத்துவத்தின் குருவாக அப்போது அவள் அவனுள் தவிசு போட்டு வீற்றிருந்துகொண்டிருந்தாள்.

“ஐயூன் என்ற பெயருக்கு அஜர்பைஜான் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா, சதா? சூரியநிலவு. நிலா ஒழிந்து சூரியன் மட்டுமே இருக்கிற வானமாய் இருக்கிறது எனது. நானே தகித்துக்கொண்டு இருக்கிறபோது குளிர் கதிர்கள் என்னிலிருந்து எப்படி வீச முடியும்?”

மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் அவர்கள் புறப்பட எழுந்தனர். அவளது கார்வரை அவன் கூடவே நடந்துசென்றான்.

சற்றுத் தொலைவிலிருந்த பஸ் நிறுத்தத்துக்கு அவன் நடந்துகொண்டிருக்கையில் சிவப்புக் காரின் மூடிய கண்ணாடிக்குள் ‘பை…பை…’யென ஒரு பேரணங்கினதுபோல் ஐயூனின் கை நளினமாய் வீசியது.

இப்போது காலையின் கேள்விக்கு அவனுக்கு விடை வெளித்தது.
காலத்தின் துயரைச் சுமந்துகொண்டு பேரணங்குகள் அறமுரைத்துத் திரியும்.
எங்கோ எழுந்துகொண்டிருந்த அவலக் குரல்களின் சத்தம் அப்போது அவனுள் கேட்பதுபோலிருந்தது. அங்கே விழுந்துகொண்டிருந்த கொலைகளின் காட்சியும் மனக்கண்ணில் தெரிதலாயிற்று.

ரமணீதரன் சதாசிவத்தினது நெற்றியில், கன்னத்தில், நாடியில் மெல்லிய இருளொன்று அப்போது அப்பி வந்துகொண்டிருந்தது. சிரிப்பதற்கான சகல முகத் தசைநார்களும் மெல்லமெல்ல இறுகி வருவதாய் உணர்ந்துகொண்டிருந்தான் அவன்.

000000000000000000

விஷ்வசேது வெளியீட்டின் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ‘முகங்கள்’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்