நாகமணி (சிறுகதை)


 

திண்ணையில் கிடந்திருந்த நல்லதம்பி கண்விழித்தான். கிழக்கு மூலையில் இருட்டு மங்கத் துவங்கியிருந்தது, மறைப்புத் தட்டி மேலாகத் தெரிந்தது. வீட்டுக்குள் சென்று பயணத்தில் கொண்டுசெல்லும் மருந்துப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். சங்கமத்தில் கலைந்த கோலத்துடன், இன்னும் உடம்பலுப்புத் தீராதவளாய் திண்ணையிலே சாரல் கிடந்திருந்தாள். அவளை அருட்டி தான் புறப்படுவதைச் சொல்லிக்கொண்டு முற்றத்தில் இறங்கினான்.

பின்னால் சாரலின் குரல் எழுந்தது. ‘இனி எப்ப? ரண்டு மாசம் கழிச்சா, நாலு மாசம் கழிச்சா?’

அவன் திரும்பி இருட்டில் அவள் வெளிர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ‘இடைத்தூரம் பெரிசில்லை; நடைத்தூரந்தான். அங்க மினக்கெடுறது ரண்டாளுக்கு வைத்தியம் பாத்தா நாலு காசு கிடைக்குமெண்டுதான.’

‘வேறயொண்டுக்குமில்லையே?’

அவளுக்கு அவனது முதல் சம்சாரம்பற்றித் தெரியும்.

அவன் அவளது காதோரம் வளைந்து இன்னும் லேசாய்க் கூந்தலில் இழைந்த பயறு வெந்தயம் எலுமிச்சைகளின் வாசத்தை முகர்ந்தபடி, ‘கெதியில வருவ’னென்றுவிட்டு  நடக்கத் துவங்கினான்.

அந்த நேரத்துக்கு அங்கிருந்து புறப்பட்டால்தான் தொட்டம் தொட்டமாய் இருக்கும் கிராமங்களை ஊடறுத்துச் சென்று, இருள் விழும் நேரத்தில் அவனூர் சென்றுசேர முடியும். வெயில் கொளுத்தும் பகலாயிருந்தும் நிழல்வழி தேர்ந்து அந்த முப்பது கட்டை தூரத்தையும் பயணிப்பது அவனுக்குச் சிரமமில்லை.  அந்த வனவழிப் பயணத்தை தன் பத்தாவது வயதிலிருந்து அவன் செய்துகொண்டிருக்கிறான்.

சிறுவயதிலே  தந்தையை இழந்த நல்லதம்பிக்கு தாய்வழிப் பாட்டனான சரவணைதான் ஆதாரமாகயிருந்தார். ஊர் அடியுண்ட மனிதர். விஷ கடி வைத்தியத்திற்கும், பார்வை பார்த்தலுக்கும் யாரும் நிகரில்லையென்று அவரது கொப்பாட்டன், கோந்துறு, மாந்துறுகளின் தலைமுறையிலிருந்தே ராஜ காரிய வட்டாரத்திலேயே அந்தப் பரம்பரைக்கு பெரிய பேரிருந்தது. அதை சரவணை தன் காலத்தில் தக்கவைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். கரைச்சி, கிராஞ்சியென வன்னிப் பெருநிலம் முழுக்கவலைந்து தொழில் செய்தவர். தொழிலென்பது, அதிலிருந்தே அவருக்கான ஜீவனோபாயம் கிடைத்தது என்பதினாலேயாகும். அதை தன் முன்னோர்கள்போல் சேவையாகவே கருதி வாழ்ந்தவர் அவர். பாம்பு, திருநீலகண்டன், மட்டத் தேள், புலுமைச்சிலந்தி என்று மட்டுமில்லை, நாய் கடிக்கும் வைத்தியம் செய்ததோடு உளுக்கு சுளுக்குகளுக்கு ‘பார்வை பார்த்து’ குணமளிக்கவும் அவர் தெரிந்திருந்தார்.

ஆண்டில் ஆறேழு தடவைகளாவது வீட்டிலிருந்து வன்னி சென்று நாட்கணக்கில் தங்கி மீள்வார். மன்னாரில் தொழில் நிமித்தம் நின்றிருந்தபோது ஏற்பட்ட வாந்திபேதியில் மகளின் கணவன் ‘மோசம்’ போய்விட, கிறித்தவ குருமாரின் பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நல்லதம்பியை, படிப்பு போதுமென்று நிறுத்திவிட்டு தனக்குத் துணையாக வைத்துக்கொண்டார்.

நல்லதம்பி பெரும் புளுகத்துடன் விஷகடி வைத்தியம் பயிலத் தொடங்கினான். பெரும்பாலான பாட்டனின் வன்னிப் பயணங்களில் நல்லதம்பியும் உடனிருந்திருக்கிறான். பயண வழியெங்கும் கதை கதையாய்ச் சொல்வார் பாட்டன். அவற்றில் பாம்புக் கதைகளே அதிகமாயிருந்தன. நாகம், பறநாகம், வெங்கிணாந்தி, கண்டங்கருவிடலை, புடையன், கொம்பேறி மூர்க்கன், மலைப்பாம்பு, நீர்ப் பாம்பு, சாரை, கோடாலி, பச்சிலைப் பாம்பென பல வகைப் பாம்புகளுக்கும் வகைவகையான குணமும், அவற்றின் விஷங்களுக்கு வகைவகையான மருந்துகளும் இருந்ததை ஆச்சரியத்தோடு அவன் அவரிடம் கேட்டறிந்தான்.

அவன் பேரதிசயப்பட்டது நாகமணிபற்றி அவர் சொன்ன அபூர்வமான கதைகளில்தான். நாகமணியைக் கண்டவர்களுண்டு, அடைந்தவர்கள்தான் யாருமில்லையென்றும், அதை அடைகிறவன் உலகத்திலேயே மிகப்பெரும் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிடுவானென்றும் கண்களில் ஒரு மின்னல் அலையடிக்கச் சொன்னபோது, நல்லதம்பியின் மண்டைக்குள் நாகமணி ஏறிவிட்டது. கதையாய், நினைவாய் பல வடிவங்களில் அது அவனுள் ஜொலிக்கவாரம்பித்தது.

‘ஆராலயும் ஏன் எடுக்கேலாமப் போச்சுது, அப்பு?’ அவன் பாட்டனிடம் கேட்டிருக்கிறான்.

‘நாகமணியைக் கண்ணால காணுறதே அருமை. கண்டாலும் எடுக்கிறது அதைவிட அருமை. அதை எடுக்கிறதுக்கெண்டு சில வழிமுறையளிருக்கு. அதோட… பலனும்  இருக்கவேணும்.  இல்லாட்டி கையில கிடைச்சாலும் கரியாய்ப் போயிடும். காலம் நல்லமில்லையெண்டா… கிணத்துத் தண்ணியும் உப்புத் தண்ணியாய்ப் போறத ஊரில பாக்கிறமெல்லோ?’ என்றவர் அந்த வழியையும் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தார்.

ஒருமுறை நல்லூரின் பெரும் பணக்காரர் ஒருவருக்கு பெறுமதியான ஓர் இரத்தினம் வேண்டியிருந்தபொழுது தனது தேப்பன் நாகமணி தேடியலைந்ததையும் தன் கதையில் பேரனுக்கு சரவணை கூறியிருக்கிறார்.

அவர் நாகமணியை எடுத்தாரா இல்லையா என்ற விபரம், கதை எது காரணத்தாலோ இடையறுந்துபோனதில், நல்லதம்பிக்குத் தெரிந்திருக்கவில்லை. நாகமணிபற்றிய எண்ணமும் பாட்டன் இல்லாமல் போனதோடு நினைவின் புழுதியில் மூடுண்டு போயிற்று.

இளமை மீண்ட சரவணையாக நல்லதம்பியும் பேரோடு ஊரிலும், அயலூர்களிலும் விஷகடி வைத்தியம் பார்க்கத் துவங்கினான்.

ஊரின் பற்றைகளுள்ளும், புற்றுகளுள்ளும், மூங்கில் காடுகளுள்ளும் குடியிருந்த விஷ ஜந்துகள், குடிமனைகள் பெருகிவர பெருங்கானகங்களை நோக்கி புலம்பெயருமொரு காலமாகயிருந்தது அது. உளுக்கு சுளுக்கு பார்ப்பதில்மட்டும் அடங்கியிருக்க நேர்ந்த நல்லதம்பிக்கு, இரண்டு குழந்தைகளோடிருந்த தன் குடும்பத்தை பராபரிக்க இயலாத நிலை ஏற்பட்டபோது, வன்னி நினைவு எழுந்தது. புதிய புதிய குடியேற்றங்களால் அவ் வனப் பகுதியின் சனப் புழக்கம் வெகுத்துக்கொண்டு இருப்பதில், அதுவொரு சரியான முடிவெனத் தீர்மானித்து ஒருநாள் மருந்துகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு வன்னி புறப்பட்டான்.

கிராஞ்சிக்கு அவன் வந்தபோது அங்குள்ள ஒரு வீட்டில் பாம்பு கடித்த ஒரு பெண்ணை மரணித்தாளெனக் கணித்து, பாடையிலேற்றி சுடலைக்கு எடுத்துச்செல்ல உறவினர் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். நெருங்கிச் சென்று சடலத்தின் முகத்தைப் பார்த்த நல்லதம்பி திடுக்கிட்டுப்போனான். முகத்தில் இன்னும் ஜீவத் துடிப்பு இருந்திருந்தது. ‘ஆள் சாகேல்லை இன்னும்’ என்று கத்தினான். பின் உயிர் அடக்கத்திலிருக்கிறதென்றும், அதற்கான ஔஷதம் தன்னிடமுண்டுவென்றும் சொல்ல, அதுவரை வைத்தியம் பார்த்து அவளின் மரணத்தை அறிவித்த ஊர் விஷகடி வைத்தியன் போதையில் அவனோடு சண்டைக்கு வந்தான்.

நல்லதம்பியை விஷகடி வைத்தியர் சரவணையின் பேரனென்று அடையாளம் கண்டதும், அவனது பேச்சுக்குச் செவிசாய்க்க சில உறவினர் முன்வந்தனர். அவன் வைத்தியம் தொடங்கினான்.

முதலிலேயே அவனுக்குத் தெரிந்திருந்தது, மந்திரத்தில் அந்த விஷத்தை இறக்கமுடியாதென்று. பாம்பு கொத்தியதாயிருந்தால் ‘பார்வை’ ஒருவேளை பயன் தரலாம். ஆனால் அவளையோ அது வெட்டியிருந்தது. பெண்ணின் காலிலிருந்த கடிதடத்தால் அதை இலகுவில் கண்டுணர்ந்தான் அவன்.

வெட்டுவதென்பது மரத்தைத் தறிப்பதற்கு ஓங்கி கோடரியை இறக்குவதற்கு ஒத்ததாகும். ஒரு சினத்தோடு பாம்பு செய்யும் அச்செயலில் நச்சுப் பையிலுள்ள அதன் விஷம் முழுக்க இறக்கப்படுகிறது. பாட்டன்தான் அந்த வித்தியாசங்களை அவனுக்கு விபரித்தவரும்.

அவ்வாறான உயிரடக்க நிலையில் செய்வதற்கு ஒரேயொரு முறைதான் இருந்தது. ஆனால் பெண்ணுடலில் அதை என்றுமவன் பிரயோகித்ததில்லை. அதனால் தயங்கினான். பாதிக்கு மேல் நிர்வாணமாக்கும் அந்த விஷவிறக்க முறையை ஊரும் உறவும் சுலபத்தில் அனுமதித்துவிடாது. அதனால் முடிந்தவரை பெண்களை வைத்து அந்த சருமம்மூலமான விஷவிறக்கத்தைச் செய்ய அவன் முற்பட்டான்.

அதற்கு இணங்கிவந்த இரண்டு அயல் பெண்களுக்கு சிகிச்சை விபரத்தை விளக்கிவிட்டு, முதலில் அவளது நெற்றி கன்னங்களென கழுத்துவரை மருந்துப் பசையை சருமத்தில் பூசினான். மேல்நெஞ்சிலிருந்து வயிறு பெருந்தொடைவரை அப் பெண்களை பூசவைத்தான். எக் காரணம்கொண்டும்  மேல்நோக்கித் தடவிவிடக்கூடாதென்பதை அடிக்கடி வலியுறுத்தினான்.

ஒரு  மணத்தியாலமளவான முயற்சியிலும் எதுவித பயனும் காணக்கிடைக்கவில்லை. நல்லதம்பிக்கு பயம்வரத் துவங்கியது.

சூழவிருந்தவர்களின் முகத்தில் அதிருப்தி மெதுமெதுவாகப் படர்ந்து சிறிதுநேரத்தில் புறபுறுப்புகளாய் வெடித்தது. ஊர் வைத்தியன் இன்னும் போதையோடு நின்று அவர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தான். அதில் உந்துதலாகிய ஒருவன் தன்னைநோக்கி வருவதைக் கண்ட நல்லதம்பி  தளர்ந்தான். அந்த நெடுத்த மனிதன் தான் சொல்ல வந்ததைச் சொல்ல வாயைத் திறந்த கணத்தில் இறந்ததுபோல் கிடந்த பெண்ணின் இமைகளில் அசைவு தெரிந்தது. பெண்கள் கூச்சலிட்டனர். ‘இஞ்ச… இமை துடிக்கிது.’

சிறிதுநேரத்தில் கை காலென மற்ற அங்கங்களும் மெல்லசைவு காட்டின. மூச்சும் ஒழுங்கீனமாய்த் தொடங்கி சீர்படவாரம்பித்தது. ஆயினும் இன்னும் எழும்ப இயலாதவளாயே அந்தப் பெண் கிடந்திருந்தாள். நல்லதம்பி மேலே வைத்திய முறையை மாற்றி குடிமருந்தில் கவனம் செலுத்தினான். அவளும் அபாய கட்டம் நீங்கினாள்.

சிறிதுநேரத்தில் இறந்தவள் பிழைத்தாளென ஓர் அதிசயத்தை நேர்கண்ட குதூகலத்துடன் ஒவ்வொருவராய் வீடு திரும்பினர்.

அவளுக்கு மூன்று நாட்கள் அங்கேயே தங்கிநின்று வைத்தியம் பார்த்த நல்லதம்பி, மேலும் சில குடிநீர் மருந்துகளைத் தொடர்ந்து குடிக்க அறிவுறுத்திவிட்டு அவர்கள் பொத்திய கையில் கொண்டுவந்து கொடுத்த சில்லறைப் பணத்துடன் திரும்பினான்.

இரண்டு வாரங்களின் பின் அவளை மறுபடி பார்க்க வந்தபோது விஷ கடியில் தப்பிய அந்தப் பெண் ஓடிவந்து அவன் முன்னால் வீழ்ந்து, ‘என்னைக் காப்பாத்தின கடவுள் நீர். இந்த உசிர், உடம்பெல்லாம் உம்மட பிச்சை’ என்றழுதாள்.

சிவந்த, மெலிந்த, தந்தையற்ற இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணை வெகுவாஞ்சையோடு எழுந்திருக்க வைத்து, ‘பேரென்ன?’ என்றான் நல்லதம்பி.

‘சாரல்.’

பொருத்தமான பெயர்தான், கிட்ட வரவே சாரலடிக்கிது என்று நினைத்துக்கொண்டு, ‘வீட்டில ஆச்சி ஓராள் இருந்தாவே?' என்றான்.

‘அவ எங்க போறது? நடக்கமாட்டா. உள்ளதான் படுத்திருக்கிறா.’

‘எனக்கு இண்டை ராவைக்கு எங்ஙனயெண்டான்ன படுக்க இடம்வேணும்….’

‘வேற எங்ஙனயுமேன்? இஞ்சயே படுக்கலாம்’ என்றாள். அப்போது அவள் எதையோ எண்ணி வெட்கப்பட்டாள். அதுவே அவளை அவனும், அவனை அவளுமாய்ப் புரிந்துகொள்ள ஏலுமாக்கிற்று.

மறுநாள் விடிந்தபோது நல்லதம்பி சொன்னான், தனக்கு கல்யாணமாகி இரண்டு பிள்ளைகளும் இருப்பதாக. ‘கட்டினது.’

கொஞ்சம் அதை எதிர்பார்த்ததுபோல் அவள் விரைவில் தன்னைச் சுதாரித்தாள். ‘அப்பிடியெண்டாலும்… இஞ்சயும் வருவிரோ  இனிமேல?’

‘தொட்டிட்டன், இனி விடமாட்டன்’ என்றான் அவன்.

விடிந்ததும், சூரியன் மேலே ஏறியதும் எல்லாம் கரிசனையற்றவனாய் நினைவுள் ஆழ்ந்தபடி சென்றுகொண்டிருந்தான் நல்லதம்பி.

இரண்டாண்டுகளாய்த் தொடரும் அந்த உறவுக் காலத்தில் அவளுக்காக எதுவும் தான் செய்திருக்கவில்லை, சூரியக் கதிரொழுகும் அந்த மண்வீட்டின் கூரையைக்கூட வேய்ந்து கொடுக்கவில்லையென அந்த வீட்டை அணுகும் ஒவ்வொரு தருணத்திலும் எண்ணங்கள்  அவனைக் கலங்கச் செய்திருக்கின்றன.

தனது வருமானத்தில் கட்டிய மனைவி பிள்ளைகளுக்கு சோறு போடவே திணறுகிற நிலைதான் அவனுக்கு என்றும் இருந்துகொண்டு இருக்கிறது. கொடுத்ததை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவருகிற வைத்தியனின் நிலை வேறேதாகவும் இருக்கமுடியாது.

ஆறு பரப்பு காணி,  அதில் குடியிருக்க வீடு, காதுத் தோடும் மூக்குமின்னியும் கழுத்துச் சங்கிலியுமென தான் கொண்டுவந்ததுபோல், கிராஞ்சியாளுக்கு என்ன சீதனம் தந்தினமென அவனது சம்சாரம் கேலி செய்கிறாள். அவனுக்குத் தெரியும் அது கேலிமட்டுமேயல்லவென. அவளது நெஞ்சின் ஆழத்தில் கிடக்கும் நெருப்பு. அது பிள்ளைகளின் பசி முகம் காணும்போதெல்லாம் அவ்வாறு கேலியாய் எகிறவே செய்கிறது. அவளுக்குக்கூட அந்த ஏழெட்டு வருஷ கால குடும்ப வாழ்க்கையில் ஒரு பொட்டு தங்க நகை அவன் செய்து போட்டதில்லை. அதற்காகவும் அவன் இரக்கமே படுகிறான்.

காலம் வழியடைத்திருக்கையில் எதைத்தான், யாருக்குத்தான் அவனால் செய்துவிட முடியும்? உப்பு புளி அரிசி வாங்கக்கூட அவனிடத்தில் காசு கேட்காததாலேயே சாரலிடத்தில் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இல்லையெனக் கருதிவிட முடியுமா? எல்லார் எதிர்பார்ப்பையும், தன்னதையும்கூட, தனக்கு புதையல் கிடைத்தால்தான் நிறைவேற்றச் சாத்தியப்படுமென ஒரு சோர்வோடு எண்ணினான் நல்லதம்பி.

அப்போது, எப்போதோ புதையுண்டுபோன நாகமணியின் பிரபை நினைவுகளின் கால இருட்டிலிருந்து பளீரிட்டது.

ஆனால் ஏதொரு நாகமணியையும் எவரும் அதுவரை அடைந்ததில்லையென்ற பாட்டனின் வாசகம் கூடவெழுந்து அதை ஒதுக்கித் தள்ளப் பார்த்தது.  ‘நாகதம்பிரானே, எதாவது வழிகாட்டும்’ என்று கிளர்ந்த கனவைத் தக்கவைத்தான்.

வயல்கள், வெளிகள், பறுகுப் பற்றை நிலங்களைக் கடந்து பெருவனத்தின் எல்லையை அணுகினான் நல்லதம்பி.

அந்த வனவோரத்தில் ஒரு ஐதான கிராமம் இருந்தது. அதன் வடதிசை எல்லையில் குடாநாடு செல்லும் ஒற்றையடிப் பாதையொன்று வனத்தை ஊடறுத்து ஓடுகிறது. ஒரு காலத்தில் பெருவழியாக அது இருந்திருக்கலாம். வர்த்தக, ராஜரீதியான போக்குவரத்துக்கள் இருந்திருப்பதற்கு, அதன் ஓரத்தில்  பயணிகள் தங்குவதற்காய்க் கட்டப்பட்டு அப்போது அழிநிலையிலிருந்த ஒரு கல்மண்டபம் சாட்சியமாய் இருந்தது.

அப்போது கிராமத்திலிருந்து பாதசாரிகளாய் வந்த இருவர் எதிர்ப்பட்டனர். ஒரு நல்ல விஷகடி வைத்தியர் இப்ப இருந்தாலும் பாம்பு கடித்த சிறுவனைக் காப்பாற்றியிடலாமென்ற அவர்களது உரையாடலை நல்லதம்பி கேட்க நேர்கிறான். விஷயமென்னவென்று விசாரிக்க, கமக்காரன் ஒருவனது மகனை பாம்பு கடித்துவிட்டதென்று கூறுகிறார்கள். தானொரு விஷகடிப் பரிகாரியென்று கூற, சிறுவனின் வீட்டுக்கு அவனைக் கூட்டிச்செல்கிறார்கள்.

சிறுவன் மோசமான நிலைமையில் இல்லை. யாரோ விஷயம் தெரிந்தவர்கள் கடித்த இடத்தின்மேல் கட்டுப்போட்டிருந்தார்கள். வாய் வழி மருந்தின்மூலமாகவே சிகிச்சையைத் தொடங்கினான் அவன். பலனும் விரைவிலேயே கிடைத்தது.

அவன் புறப்பட்ட நேரத்தில் பொழுது சாய்ந்திருந்தது. அங்கே தங்கி மறுநாள் காலையில் பயணம் தொடங்க அந்த கமக்காரன் வற்புறுத்தவே செய்தான். இரவிலே நடைச் சுகமிருக்கிறதென்றும், விஷகடி வைத்தியனான தானே விஷ ஜந்துகளுக்கு பயந்துவிட முடியாதென்றும் கூறி புறப்பாட்டை நல்லதம்பி தொடங்கினான். சில ரூபா நாணயங்களுடன் ஒரு நல்ல பாளைச் சூளையும் கொளுத்தி அக் கமக்காரன் கொடுத்தனுப்பினான்.

ஒரு மனக் கிளர்ச்சியில் பயணத்தைத் தொடக்கியிருந்தாலும் இரவின் தனி வழிப் பயணம் அவனைச் சிறிது சஞ்சலப்படவே செய்தது. அவசியமாய் இருந்தால், கல்மண்டபத்தில் தங்குகிற திட்டத்தை அவன் யோசித்தான்.

சாமத்துக்கு மேலாகியிருந்த ஒருபொழுதில் கல்மண்டபம் எதிர்ப்பட, அத் தனி மண்டபத்தை சூளின் உதவியுடன் கவனித்துப் பார்த்தான். காட்டெருமையின் வாசஸ்தலம்போல் பச்சைச் சாணாகங்கள் அதன் முன்னால் நிறைய இருந்திருந்தன. எனினும் கொஞ்சம் வெளிப்பான இடமாய் நீர்நிலையோடு அண்டியிருந்ததில் அங்கே தங்க அவன் முடிவுசெய்தான்.

தூணோடு சாய்ந்திருந்தபடியே நித்திரையாகிப் போன நல்லதம்பிக்கு ஒருபோது திடீரென விழிப்பு வந்தது. அப்போது எதிர்ப் பக்கப் புதரிலிருந்து அவன் வரும்போது இருந்திருக்காத வெளிர்நீலப் பிரகாசமொன்று கிளர்வதை அவனால் காணமுடிந்தது. என்ன அது? நாகமணியோ? ஆரம்பத்தில் அவன் திகைத்தாலும், பின்னர், ஆம், நாகமணியேதானென நிச்சயப்பட்டான்.

நீண்ட காலத்துக்குப் பின் அன்றுதான் அவனும் நாகமணிபற்றி எண்ணியிருந்தான். நாகமணிக்காக நாகதம்பிரானை வேண்டிய நாளும் அதுவாகவே இருந்தது. அவனது வேண்டுதலுக்கு தெய்வம் அந்தளவு சுறுக்காகவா அருள் செய்துவிட்டதென அவனுள் புளகிதம் பொங்கியது.

அக் கணத்தில் அவனிடத்தே இரண்டு உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. ஒன்று, தன் பஞ்சமெல்லாம் பஞ்சாய்ப் பறந்திடப்போகும் பரவசம். மற்றது, நாகமணியைக் கக்கிவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப்போன நாகம் அந்த வெளிச்ச எல்லையிலேயே  அரைந்துகொண்டிருக்கக் கூடியதான பயம்.

பாளைச் சூளை மெல்லவெடுத்து கங்குகள் தூரமாய்ப் பறந்துவிடாத அவதானத்துடன் தீயெழுப்ப அதை விசிறினான். சூளும் மெல்லத் தீப்பிடித்து தன் செம்மஞ்சள் ஒளிக் கதிரைச் சூழ வீசியது.

நீலவொளி பாய்ந்து வரும் இடத்துக்குச் சமீபத்தில் நாகத்தின் பிரசன்னம் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, கல்மண்டபத்தின் முன்னால் இருந்த பசுஞ்சாணத்தை ஒரு பெரிய திரணையாகத் திரட்டியெடுத்தான். நீலவொளி சிந்தியபடியிருந்த நாகமணி அதனுள் பொதியும்படி அச் சாணித் திரணையை அதன்மேல் எறிந்தான்.

பூரணை நிலா மேகத்தால் கவிபடும்பொழுதில் உடன் விரியும் இருள்போல் சூழவெங்கும் இருட்டானது.

இனி அந்தப் பகுதியிலேயே அவன் நின்றுவிடக்கூடாது. அவ்விடத்தை எதிர்ப்படும் மனிதர்க்கும் அது பேரபாயம் விளைக்கும் இடமாகிப்போனது. அது, நாகம் நாகமணியை இழந்த அவலத்தில் தன்னையே வருத்தி அழிந்துபோகும்வரை தீராததாயிருக்கும்.

பையை எடுத்த நல்லதம்பி விரைவாக நடக்கத் தொடங்கினான். நாகமணியை இழந்த நாகம் தன்னைத் துரத்துவதான பிரமையில் ஓட உந்தும் மனத்தை, எவ்வளவு தூரத்தைத்தான் ஓடுவதென்ற நினைப்பில் அடக்கிக்கொண்டு, மேலும் விரைவாய் நடந்து விடிகிற நேரத்தில் வீட்டை அடைந்தான்.

ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயின. நல்லதம்பிக்கு  வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அவன்படும் அந்தரத்தைப் பார்த்த அவனது மனைவிக்குப் பெரிய அதிசயமாகயிருந்தது. கேட்டபோதும் தக்க பதில் அவன் சொல்லவில்லை. நாகமணி விவகாரம், அதைக் கையிலே எடுக்கும்வரை இரண்டாம்பேருக்குத் தெரியக்கூடாதென பாட்டன் எச்சரித்திருந்தார்.

நாகம்பற்றியும் அவர் சொல்லியிருந்தார். நாகமணியை இழந்த இடத்திலிருந்து வெகுதூரம் நாகம் போய்விடாது. இரவு பகலாக, சாப்பாடு தூக்கமின்றி அது தன் மணியைத் தேடிக்கொண்டேயிருக்கும். நாகமணியை இழக்கும் நாகத்தின் சோகமானது தாங்கமுடியாதது. சில நாகங்கள் தாங்களாகவே தங்கள் தலையைக் கல்லிலே மோதி மோதிச் செத்துப்போகுங்கள்; சில பசி தூக்கமின்றி அலைந்து அலைந்தே இறந்துபோகுங்கள்.

மூன்றாம் நான்காம் நாட்களில் அவனது அந்தரம் பெருமளவு குறைந்திருந்தது. ஐந்தாம் நாள் மேலும் தெளிவடைந்த நல்லதம்பிக்கு, மேலே நாகமணியினால் அடையப்போகும் பெருஞ்செல்வக் கனவுகள் பிறக்கத் துவங்கின.

இரண்டு மனைவியரும், நான்கு பிள்ளைகளும் வாழ்ந்துகொள்ள ஒரு பெரிய வீடு. வேண்டிய அணி மணிகள். மீதியில் கொஞ்சத்தை சொந்தங்களுக்கு உதவலாம். இன்னும் கொஞ்சத்தை ஊருக்கும் உதவமுடியும். ஆம், எவ்வளவோ பேருக்கு அவன் உதவலாம்!

அவன் யோசனையோடிருந்தாலும் முந்திய நாட்களைவிடத் தெளிவாயிருப்பதில் நிம்மதியடைந்து மனைவி ஒதுங்கினாள். ஆனால், ஏதோவொரு பொழுதில் யோசனையொன்று வர, ‘புதிசாய்த்தான் ஒருதரும் வைத்தியத்துக்கு வரேல்ல, பழைய ஆக்களையாச்சும் ஒருக்காப் போய் பாத்திருக்கலாமே’ எனக் கேட்டாள்.

என்ன நினைவிலிருந்தானோ, ‘இன்னும் கொஞ்ச நாளில அதுவொண்டுக்கும் தேவையிராது’ என்றான் நல்லதம்பி.

‘விளங்கேல்லை.’

அவன் சமாளித்தான். ‘ஆர் பாம்பு கடிச்சு சாகக் கிடக்கினமெண்டு காத்துக்கொண்டிருக்கிறதும் ஒரு பிழைப்போ எண்டதைச் சொன்னன்.’

‘பிழைப்புக்கு எதாச்சும் வழி பண்ணவேணுமே அப்ப. எனக்கொரு யோசனையிருக்கு…’

‘அப்பிடியே இருக்கட்டும். ஒருக்கா வன்னி போட்டுவந்தாப்பிறகு எல்லாம் விளக்கமாய்ச் சொல்லு.’

சரியாக ஒரு வாரத்தின் பின் நாகமணியெடுக்கும் பெருங்கனவோடு ஊரிலிருந்து வெளிக்கிட்டான் நல்லதம்பி.

நாகமணியைக் கொண்டுவந்து, அதை தனக்குத் தெரிந்த பத்தரின் மூலம் விலைபேசிக் காசாக்கும்வரை எங்கே, எவ்வாறு மறைத்து வைப்பதென்று அவன் யோசிக்கத் துவங்கினான். நிலமாகவும் பவுணாகவும் அந்தத் தொகையை மாற்றிவிடும் எண்ணம் அவன் கொண்டான். அவ்வளவு பெரிய தொகையை, எவ்வளவு பெரிய இரும்புப் பெட்டிக்குள்ளும் வைத்துவிட முடியாதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. கொஞ்சத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதானாலும், தான் முதன்மையான பணக்காரனாக இருக்குமளவை வைத்துக்கொள்ள வேண்டுமெனவே திட்டமிட்டான்.

தன் சகோதரங்களிலும் பார்க்க குஞ்சாச்சியின் மகள் அழகிக்கு கூடுதலான சலுகை செய்யவேண்டுமென அவன் விரும்பினான். அது குஞ்சாச்சி வாழ்ந்த காலத்தில் தன் தந்தையும் பிற உறவுகளும் செய்த கொடுமைகளுக்கான ஒரு சரியான பரிகாரமாயிருக்கமுடியுமென்பது அவனது நம்பிக்கை. குஞ்சாச்சியின் ஆவிவிட்ட சாபமே தன் குடும்பத்தின்மீதான தீராத இடும்பையாய் விழுந்திருக்கிறதென அவன் பலகாலும் கருதிவந்திருக்கிறான்.

சாணித் திரணையுள் நாகமணியை விட்டுவந்த கல்மண்டப பிரதேசத்தை  அடையாளம் கண்டுகொண்டு, நாகத்தின் தேடலை நல்லதம்பி தொடக்கினான். ஈச்சம் புதர், கருங்கல்பாறைகளென அது செத்திருக்கக்கூடிய எந்த இடத்தையும் அவன் தவறவிட்டுவிடவில்லை. நல்லதம்பி வெகுநேரமாகத் தேடினான். நாகம் காணக்கிடைக்கவில்லை. இனி அங்கே தான் நிற்கக்கூடாதெனத் தோன்றியது அவனுக்கு.

அவன் அவசரமானான்.

தான் என்ன செய்வதென்பது குறித்து அவன் உடனடியான முடிவுக்கு வந்தாகவேண்டிய தருணமது.

பாம்பு அந்த ஒரு வார காலவெளியில் எங்காவது செத்திருக்கும், அல்லது சாந் தறுவாயில் எங்காவது கிடந்திருக்கும் என்ற திண்ணத்தில் சாணித் திரணையுள் பொதிந்து வைத்த நாகமணியிருந்த இடத்தை ஆவலோடு அணுகினான்.

சாணித் திரணையுள்ளிருந்து நாகமணியின் நீலச் சுடர் அந்தப் பகல் வெளிச்சத்திலும் மின்னிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அவன் சாணித் திரணையை மனமும் உடம்பும் சிலிர்க்க எடுத்தான். காய்ந்திருந்த சாணியை கைகளுள் நொருக்கி நீலச் சுடர் தெறிக்கிறதாவென பார்த்தான்.

இல்லை. நீலச் சுடர் மட்டுமில்லை, எச் சுடரும் தெறிக்கவில்லை.

காய்ந்த சாணியுருண்டையை கைகளுக்குள் பொடியாக்கி நோக்கினான். அங்கே புன்னைக் கொட்டை அளவில் முருகுக் கல்போன்ற ஒன்றுதான் கிடந்திருந்தது.

நல்லதம்பியின் நெஞ்சுக்குள் முறுக்கியது. தலை கிர்…ரென  சூறையாய்ச் சுழற்றியது. அவன் தன் பிரக்ஞையைத் தக்கவைக்க பெரிதும் போராடினான்.

தெளிவு சற்றுத் தெரிந்தது. அப்போது பாட்டனின் வைர வரிகள் பொருத்தமாய்  ஞாபகமாயின. ‘எதுக்கும் பலனிருக்கவேணும். காலம் நல்லாயில்லையெண்டா… கிணத்துத் தண்ணியும் உப்புத் தண்ணியாய்ப் போகும்!’

ஒரு நீண்ட பொழுதின் உறைவிலிருந்து தன்னைத் தேற்றிக்கொண்டு உள்ளங்கையிலிருந்த அந்த முருகுக் கல்போன்ற பொருளை எடுத்துப் பார்த்தான். அவனது கண்களின் திரண்ட ஏமாற்றத்தின் நீர்த் திரையினூடாகவும் அவ்வுருண்டையிலிருந்த சிறு சிறு துவாரங்கள் புலனாகின.

பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே அவ்வுருண்டையைப் பிடித்து நெரித்தான். அது மாவுருண்டைபோல் தூளாயுதிர்ந்தது.  கடவுளே, கடைசியில் உறுதியான திண்மமாய்க்கூட அவனது நாகமணி எஞ்சவில்லையே!

கையிலிருந்த பொடியை காற்றில் விசிறிவிட்டு அருகிலிருந்த நீர்நிலையில் கையைக் கழுவினான். நாகத்தின் அச்சமற்றவனாய் ஒற்றையடிப் பாதையில் ஏறி கிராஞ்சித் திசையை நோக்கி நின்றான். உயிர்மூச்சாய் ஒரு மூச்சை நீள உள்ளிழுத்தான். விஷகடி வைத்தியன் நல்லதம்பியாய் சுயம் உருவாகிற்று.

அவன் நடக்கத் துவங்கினான். இடைவழி சென்றுகொண்டிருக்கையில் சாரலின் பிய்ந்து கிடக்கும் கூரையைக்கூட தன்னால் வேய்ந்துகொடுக்க முடியவில்லையே என்ற துயர் வழக்கம்போல் அவனுள் எழுந்தது.

***

 இலக்கியவெளி,

இதழ்: 3

ஜுலை - டிசம்பர் 2022


இதழ்:

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்