மதிப்புரை: ‘சூல்’
ஊரின் வறட்சிக்கான காரணத்தைத் தேடும்
பயணத்தின் கதை!
சோ.தர்மனின்
பரவலாக அறியப்பட்ட ‘கூகை’ நாவலுக்குப் பிறகு வெளிவந்த படைப்பு ‘சூல்’ (2016). எண்பதுகளில்
எழுத வந்தவரின் இரண்டாவது நாவல். 2019இல் இந்திய சாஹித்ய அகடமி விருதுட்பட நான்கு தமிழ்நாட்டு
இலக்கியப் பரிசுகளையும் இது பெற்றிருக்கிறது. ‘சூல்’ வெளிவந்ததின் பின்னாக ‘தூர்வை’
(2017) மற்றும் ‘பதிமூனாவது மையவாடி’ (2020) ஆகிய அவரின் இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளபோதும்
‘சூல்’ முக்கியமாவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக கரிசல்காட்டு
நிலத்தின் வறட்சியையும், வாழ்வின் அவலத்தையும் கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன், பொன்னீலன்,
மு.சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள்போல் பேசிய வேறு படைப்புகள் தமிழில் குறைவு.
ஆயினும் ‘கோபல்ல கிராமம்’, ‘அஞ்ஞாடி’, ‘கூகை’ ஆகியவைபோலன்றி ‘சூல்’ தன் கதையைச் சொல்ல
அமைத்திருப்பது வித்தியாசமான தளம். ஏனைய நாவல்கள் கரிசல்காட்டின் வறட்சியைக் காட்டின.
ஆனால் ‘சூல்’ அதனுடைய வளத்தையே சிறப்பாகப்
பேசியது. அதன்மூலமாகவே அதன் எதிர்நிலை அனுபவ உணர்வை வாசகன் அடைய வைத்தது. பன்முக நெருக்குதலில்
ஊரே அழிந்துபோவது நாவலின் இறுதியில் வெளிப்படையாகவே பேசப்பட்டிருந்தாலும், அவ்வளவு
பாதிப்போடு அவை வாசகனைத் தாக்குவதில்லை. ஆயினும் அதை ஓரளவு ஈடுகட்டிவிடுகின்றன, முன்பகுதியில்
வரும் இயற்கையின் நீர் நிலம்பற்றியதும், மனிதர்களின் மன விசேஷம்பற்றியதுமான வருணிப்புகள்.
பதத்திற்கு
ஒன்றாக, நாவலில் வரும் மகாலிங்கம்பிள்ளையின் கதையைக் கொள்ளலாம். மகாலிங்கம்பிள்ளையின்
கதையில் நெஞ்சு பதறவைக்கும் சோகம் மட்டுமில்லை, அறம் பிழைத்தார்க்கு அல்லவை உறும் என்ற
போதமும் இருக்கின்றது. பொய் புகன்று பெரிய நாடாரிடம் வெற்றிலைச் செய்கையின் நுட்பமறியும்
மகாலிங்கம்பிள்ளை அதன் பிரகாரம் புதுக்கிணறு வெட்டி நீர் பாய்ச்ச ஆரம்பிக்கும் முதல்
நாளிலேயே மிதிகல் உடைந்து கிணற்றுள் வீழ்ந்து மாண்டுபோகின்றார். மரணத்தை அவரது அறம்
பிழைத்தலின் கூலியென எண்ண முடிந்தாலும், அவர் தன் ஊரின் பேரெடுக்கவே அவ்வாறு செய்தாரென்பது
ஞாபகமாகிறபோது, வாசக நெஞ்சு பிள்ளைக்காக துக்கிக்கவே செய்கிறது.
இவ்வாறான இன்னொரு
கதைதான் தொத்தல் பகடையினதும். வீரசிங்கத் தேவருடனான போட்டியில் உருளைக்குடிக் கள்ளை
பல சோதனைகளிலும் பிறவூர்க் கள்களிலிருந்தும் இனங்கண்டு வெல்லும் தொத்தல் பகடையின் செயல்
நகைச்சுவையை விளைப்பதாயினும் அவனது ஊர் அபிமானம் மனதைச் சிலிர்க்கவைப்பது.
ஆயினும் ஒருகாலத்தில்
எல்லா வளங்களும் நலங்களும் அழிந்து அந்த ஊர் சிதைவுற்றுப்போவது அதிசயமாய் நிற்கிறது.
ஒருவகையில் தொடர்ந்திருந்த வளத்திலிருந்து
தற்போதைய வறட்சிக்கு ஊர் மாறிய காரணத்தைத் தேடும் பயணம்தான் ‘சூல்’ நாவல் எனவும் சொல்லலாம். விதைப்புக்கு வானம்கொள்ளும்
மேக சூலைக் காத்திருக்கும் பெருங்கூட்டத்தின் வாழ்வும் வளமின்மையும் மகிழ்ச்சியும்
துக்கமுமெல்லாம் அதிலேயே தங்கியிருப்பதாகக் கொள்ளலாமெனின், அதைக் ‘கண்மாய்’ என்றிருந்தால்கூட
தலைப்பு பொருத்தமாயே இருந்திருக்கும். அத்தனைக்கு
நாவலின் மய்யம் கண்மாயைச் சுற்றியே ஓடியிருக்கிறது. கண்மாய், ஊர், புறவூர்கள், அவற்றின்
ஐதீகங்கள், வரலாறுகளென ஆவியாய்ச் சுருண்டு சுருண்டு மேலே கிளம்பி விரியும் ஒரு மாயம்போல்
தோன்றுகிறது நாவலின் கட்டுமானம். அது திட்டமின்றி இயல்பிலே அமைந்துவிடுவதால் மிகச்
சுளுவாக, மிக இனிமையாக வாசிப்பையும் நகரச்
செய்துவிடுகிறது.
மேகம், மழை,
கண்மாய் இம்மூன்றில் முதலிரண்டும் கடவுள் தருவதென்றும், பின்னது மடைக்குடும்பன் நீர்ப்பாய்ச்சியும் அய்யனார் சாமியும்
காவலில் தருவதெனவும் நம்பியிருக்கிறார்கள் மக்கள். அதுவே அவர்களது வாழ்வின் ஆதாரமாய்
இருக்கிறவகையில் அவர்களது நம்பிக்கையும் தெய்வங்களோடேயே இணைந்துபோகிறது. அதனால்தான்
புரி இறுகிய கயிறுபோல் ஒரு கட்டிறுக்கமான வாழ்க்கையை சமூகத்தால் அனுசரிக்க முடிகிறது.
அதுதான் காலந்தோறுமான சமூக வளர்ச்சியின் அமைவுகளை பின்னோடிப் பார்க்க உந்திவிடுவதும்.
வேடுவ சமூக
அமைவில் காடோடியாயிருந்த மனித இனம், மந்தை வளர்ப்பில் ஈடுபட்டதில் மேய்ச்சல் நிலம்
தேடியலைந்து புலம்பெயர் வாழ்வு கண்டதன் இறுதியில், பயிர் விளைத்தலைக் கண்டுபிடித்தபோது
நதியோரங்களில் வாழ்வை நிலைநிறுத்திக்கொண்டதை மனிதவியல் வரலாறு எடுத்துரைக்கின்றது.
ஆம், நீர் கண்ட இடத்தில் ஊரும் வாழ்வும் நாகரிகமும் உருவாகின. உருளைக்குடிக் கண்மாய்
ஊரின் அமைவுக்கு ஆதாரமானது. மட்டுமில்லை, வரதம்பட்டியும் கட்டுராமன்பட்டியும் பீக்கிலிபட்டியும்
வள்ளிநாயகிபுரமும் ராவுத்தன்பட்டியும் நல்லமுத்தன்பட்டியும் வீரப்பட்டியும் சென்னையம்பட்டியும்
கூட சூழ அமைவதற்குக் காரணமாகின்றது. அவை உருளைக்குடிக் கண்மாயின் நீர்ப் பங்கு கொள்பவை.
ஆக, கண்மாய்தான்
நாவலின் மய்ய பாத்திரம் ஆகின்றது. நீர்ப்பாய்ச்சி, சங்கன் காளி, முத்துவீரன், வள்ளிப்
பாட்டி, கொப்புளாயி, குப்பாண்டி, கீழ்நாட்டுக்குறிச்சி ஐயர், மகாலிங்கம்பிள்ளை, பெரிய
நாடார், சித்தாண்டி, பிச்சை ஆசாரி, எலியனென நூறுநூறான கதாபாத்திரங்கள் நாவலில் வருகின்றன.
அவை யாவும் தத்தம் இயல்பில் இயங்குகின்றனவாயினும் இயக்குவது கண்மாயென்கிற முதன்மைக்
கதாபாத்திரமாகவே உள்ளது.
18ஆம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில் தொடங்குகிற நாவல் 20ஆம் நூற்றாண்டில் அண்ணளவாக சுதந்திரத்தின் பின் முடிகிறதாய்க்
கொள்ளலாம். சுமார் ஒன்றரை நூற்றாண்டின் உருளைக்குடியின் கதையே நாவலாய் எழுந்திருக்கிறது
என்றாலும் சரிதான். ஏனெனில் அது பேசத் துவங்குவது ஊரின் அறப்பண்பாக இருக்கிறது.
பண்டாரங்கள்
ஊர் வந்தால் அவர்களை ஊர் மத்தியில் அமர்த்திவிட்டு இளைஞர்கள் தாமே ஊராரிடம் சென்று
பிச்சையேற்று வந்து பண்டாரங்களுக்கு உணவளிக்கிறார்கள். ஊரிலே பண்டாரங்கள் பிச்சையேற்று
உண்பது ஊருக்கு அவமானமென எண்ணுவதை பசி உலகின்மீதான அவர்களின் பரோபகாரச் சிந்தையாகக்
கொள்ளலாம். அத்தகைய ஊர் என்னமாதிரியான ஊராய் இருக்கமுடியும்?
அயலில் உணவு
விற்கிற கடை தோன்றியதாய் அறிகிறபோது உணவையும் யாரும் பணத்துக்கு விற்பார்களாவென பேரதிசயம்
கொள்ளும் ஊர் எவ்வகையான ஊராக இருக்கும்? நாவல் இத் தருணத்தை பின்வருமாறு விபரிக்கிறது:
‘ஆமா, ஆமா, ஆமா. துட்டுக் குடுத்தா சோறு சாப்பிடலாம், இட்லி திங்கலாம், தோச திங்கலாம்,
என்ன வேணும்னாலும் வாங்கி சாப்பிடலாம்! காட்டுப் பூச்சியின் தீர்க்கமான இந்தப் பதில்
கொப்புளாயியை மௌனமாக்கிவிட்டது. அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத பதில். இதுவரை வியாபாரம்
என்றால் என்னவென்றே தெரியாத தூய ஆத்மா. சஞ்சலப்பட்டுப் போனாள். தங்கள் காடுகளில் விளையும்
தானியங்கள், பயறு பச்சைகள், காய்கறிகள், கிழங்குகள், வத்தல், மல்லியென்று அள்ளி அள்ளிக்
கொடுத்து வாழும் சம்சாரிகளில் ஒருத்திதானே கொப்புளாயி. பண்டமாற்று தவிர்த்து வியாபாரம்,
லாபம், நஷ்டம் என்ற வார்த்தைகளே கேள்விப்படாத ஜனங்களில் ஒருத்திதானே கொப்புளாயி!’
மேலும் அவ்வூரில்
தனக்கான கல்லறையைக் கட்டி வைத்துவிட்டு மரணம்வரை காத்திருக்கிறார்கள் சில மனிதர்கள்.
அது நிறைவாழ்வின் அடையாளமில்லாமல் வேறென்னவாயிருக்க முடியும்? ஆயினும் இருப்பதைக் கொடுத்து,
இல்லாததை வாங்கும் பண்டமாற்று முறைமை மெல்ல உடையத் துவங்குகிறது.
உருளைக்குடியின்
வாழ்வு முன்புறமோட, அதன் பின்னால் ஓடுகிறது கட்டபொம்மு வரலாறு.
வெள்ளையருக்கு
கப்பம் கட்ட மறுத்து, ஏற்பட்ட யுத்தத்தில் கட்டபொம்மு தப்பியோடிவிடுகிறான். பின்னொருநாள்
மாறுவேஷத்தில் வந்த கட்டபொம்முவின் குதிரையின் லாடம் உருளைக்குடியின் ஊடாக வழி கடக்கையில்
கழன்றுபோக அதைச் சரிசெய்து உதவுகிறார்கள் எலியனும் பிச்சை ஆசாரியும். அதிலிருந்து ஓரளவு
மய்ய இடம் எடுத்துவிடுகிறது வரலாற்று அரசியல். 1799இல் கட்டபொம்முவை தூக்கிலிடுதல்,
பின் ஊமைத்துரையின் மரணமென இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறும் இவ்வண்ணமே
தெரிவிக்கப்படுகிறது. பின்னணியில் வரும் அந்த அரசியல் படைப்பாளியினால் மிக நேர்த்தியாக
நாவலில் எடுத்துரைக்கப்படுகிறது.
நாவலில் கொப்புளாயி
தலைகாட்டத் துவங்கிய பிறகு சொல்லாமல் கொள்ளாமல் நாவல் பெருங்கதையாடலாய் விரிகின்றது.
நாவல்களாய் விரிந்தெழவே பலவற்றால் முடியாதிருந்தபோது நாவலெனச் சொல்லிவந்த ‘சூல்’ பெருங்கதையாடலாய்
தன்னை உருப்படுத்துவது விசேஷம்.
‘ஐயர் பண்டாரத்துக்குச்
சொன்ன பரிகாரப் படலம்’ மற்றும் ‘அய்யர் பண்டாரத்திற்குச் சொல்லி, பண்டாரம் கொப்புளாயிக்குச்
சொன்ன பாம்புக் குளம் உருவான பரிகாரப் படலம்’ ஆகிய கதைகள் மனத்தை உலுக்கும் விதமாய்
நாவலில் பதிவாகின்றன. முதலாவது கதையில்தான் நிறை பாசனக் குளத்தை வெறுங்குளமாய் ஆகிப்போகவைத்த
வஞ்சமனமொன்று தண்டனையடையும் கதை விரிவுபெறுகிறது. அது உருளைக்குடிக் குளமல்ல, சொக்கலிங்கபுரக்
குளம்தான். ஆயினும் ஒரு குளம் கொள்ளும் வறட்சி எப்படியான அவலத்தை விளைக்குமென்பதை நாவல்
முன்னாடியே பதிவாக்கி விடுகிறது.
ஊரே கண்மாயென்றும்,
கண்மாயே ஊரென்றும் ஆகிப்போயிருக்கிற அந்த அபேத நிலை நாவலின் பல்வேறு இடங்களில் காட்சிகளாயும்
வரிகளாயும் வற்புறுத்தப்படுகின்றன. ‘உருளைக்குடி ஆட்களின் அத்தனை பேர்களின் வயிறும்
ஒரே வயிறாய் மாறிப்போனதே கண்மாய்’ (பக்:
306) என்று தெரிவிக்கின்றது நாவல்.
பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்முவை யுத்தத்தில் வென்று, தப்பியோடியவனை புதுக்கோட்டை அரசர் துணையுடன் கண்டுபிடித்து
கயத்தாற்றில் தூக்கிலேற்றியதுவரையான ஒரு துயர வரலாறும் அதில் இருக்கிறது. அந்தப் பழியில்
எட்டயபுர சமஸ்தானத்திற்கும் ஒரு பங்குண்டு. ஆனால் மக்கள் மனங்களிலிருந்து எதிர்நிலை
அசைவேதும் கிளருவதில்லை. மாறாக பயமே எழுகிறது. அதுவொரு விவசாயக் கிராமமாக இருப்பதோடு,
அண்மையில்தான் வேதக் கோயிலும் கிறித்தவப் பள்ளிக்கூடங்களும் காணத் தொடங்கியுள்ளதாயும்
இருக்கிறது. அதன் வாழ்வனுபவம் அரசியலைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கவே முடியும். மேலும்
அரச விசுவாசம் வேறெதன்மீதும் அதன் அக்கறையைப் படரவிடுவதுமில்லை.
கட்டபொம்முவின்
மரணத்தின் பின் ஒருநாள் கொல்லார் பட்டியிலிருந்து வரும் ஜமீன் ஆள் எலியனையும் பிச்சை
ஆசாரியையும் சந்தித்து அவர்கள் ஒருபோது கட்டபொம்முவுக்குச் செய்த உதவிக்காக இரண்டு
பொட்டலங்களைக் கையளிக்கிறான். அது அந்த இரண்டு மனிதர்களதும் வாழ்வையே பயங்கர அனுபவமாக்கிவிடுகின்றது.
அதிலிருந்து முடிவுவரை ஒரு இடைஞ்சலைக் கட்டித் தொங்கவிட்டதுபோல் நாவலும் தளர்ந்துபோகிறது.
உண்மையில் அது வேண்டாத உடம்புக்கு வாலும்வைத்த கதையாகிவிடுகிறது.
ராமேஸ்வரம்
கடற்பகுதியில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த அனுமன் முனி வேம்பார் கடற்புறம் வருவதும்
அப் பகுதி மீனவர்கள் முனியை அடக்க மலையாள மாந்ரீகன் குஞ்ஞானை வரவழைப்பதுமாக நாவல் அதன்மேல்
வீறுகொள்ளத் துவங்குகிறது. அனுமன் முனியின் பூர்வீகம், அதை அடக்கி குடுவைக்குள் குஞ்ஞான் எடுத்துச் செல்லல், குடுவை காணாமல் போதல்,
எப்படியோ நீர் வழித் தொடர்பில் முனி எட்டயபுரம் அரண்மனையைச் சேர்ந்ததறிந்து முனியை
அடக்கிவர குஞ்ஞான் அங்கே செல்லலென கதை இதிகாசமாய் விரிவுகொள்கிறது. முனியை தன்னால்
அடக்க முடியுமென குஞ்ஞான் கூறலும், அதனால் அரசனோடு அவனுக்கு நிகழும் சம்வாதமும், பின்
ஒரு முரணில் அரசன்மேல் அவனிடும் சாபமுமென குஞ்ஞானின் நீள்கதை புனைவின் வழியில் ஐதீகமாகிறது.
‘அரண்மனைக்குள்ளே
ஏராளமான சமாதிகள் உருவாகும். உன் ஊரைச் சுற்றிலும் அரண்மனைக்கு வெளியே நிறைய சமாதிகள்
உருவாகும். அந்த சமாதிக்கு மத்தியில்தான் உன்னுடைய சமாதியும் இருக்கும். மத்த சமாதிகளில்
மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தினமும் வழிபட்டுக் கோவில்களைப்போல் பராமரிப்பர்.
உன் அரண்மனையும் உன் சமாதியும் மக்களின் கால்படாத இடமாகவே இருக்கும். எந்த மக்களும்
உன்னை வணங்கமாட்டார்கள். உன் அரண்மனைச் சுவரில் அணுவைப் போல் பறவைகள் எச்சமிடும். எச்சத்தின்
விதைகள் முளைத்து, சுவருக்குள் வேரோடி அணுகுண்டாய் மாறி சுவர்களைப் பிளளக்கும். அதிகாரம்
அற்றுப்போன நீ காணாமல் போயிருப்பாய்’ என மாந்ரீகன் எட்டயபுர அரசன்மேல் இட்ட சாபம் இறுதியில்
பலிப்பதையும் பதிவுசெய்ய நாவல் தவறவில்லை.
பின்னால் இந்திய
விடுதலைப் போராட்டம் தொடங்குகிறது. நகரங்களில் மட்டுமில்லை, கிராமங்களிலும் அதன் எழுச்சிகள்
இடம்பெறுகின்றன. அதற்கான ரகசியப் பிரச்சாரங்கள் தலையெடுக்கின்றன. கடலையூரில் முன்னெடுக்கப்படும்
அதுபோன்ற கூட்டங்களில் வெயிலுகந்த முதலியார், வேலு முதலியார் போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முத்துவும் சித்திரை ஆசாரியும் அவர்களது பேச்சுக்களைக் கேட்டு போதமடைகிறார்கள். அதில்
வேலு முதலியாரின் விடுதலை முழக்கம் முத்துவின் செவிகளில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.
‘கரிசல் காடுகளில்
மனிதர்கள் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாமலும் வெள்ளாமை செய்ய முடியாமலும் கூட்டங்
கூட்டமாய் புதர்களாய் மண்டிக்கிடக்கும் கள்ளிச்செடிகளைப் போல் வெள்ளைக்காரர்கள் நம்
மண்ணில் காலூன்றிவிட்டார்கள். நிலத்தில் இருக்கிற தண்ணீரையெல்லாம் கள்ளி எப்படி உறிஞ்சி
நாசப்படுத்துகிறதோ, அதேபோல் நம் நாட்டின் செல்வத்தை எல்லாம் கொள்ளையடித்து வெள்ளைக்காரன்
அவனுடைய தேசத்துக்குக் கொண்டுபோகிறான். கள்ளிச் செடியை தீ வச்சு பொசுக்கினாலும், வேரோடு
பிடுங்கி வெய்யிலில் வீசினாலும் அழிக்க முடியாது. வெய்யிலில் காய வைத்து சருகாக்கி
அதுக்குப் பெறகு தீவச்சுக் கொளுத்தி சாம்பலாக்கவேண்டும். அதேபோல் தான் வெள்ளைக்காரனை
நாம் சாம்பலாக்கி நம்முடைய நிலங்களில் தூவ வேண்டும்’ (பக்: 414). அது காந்தியின் பாதை
அல்லாதபோதும் விடுதலை வேட்கையில் திறபடும் பல வழிகளில் ஒரு வழியாக இருக்கிறது.
ஆனால் அவ்வளவு
தியாகம் இழப்பு வலிகளின் பின்னால் அடையப்பெறும் சுதந்திரத்தின் பலனை ஒரு சிலரே அனுபவிக்கிற
நிலைமை ஏற்படுகிறது. புறம்போக்கு நிலங்கள் பட்டாபோட்டு அவர்களுக்குள்ளேயே பங்குபோடப்படுகின்றன.
சுதேசிகளின் தலைவர்களான குமாரசாமி ரெட்டியார்
கிராம முன்சீபாகவும், கோமதி நாயகம்பிள்ளை கணக்குப்பிள்ளையாகவும், குருசாமித் தேவர்
தலையாரியாகவும் ஆகி அதிகாரம் செலுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சின்னாத்துரை
பஞ்சாயத்து தலைவராகியிருந்தான். மூக்காண்டி உதவியாளாக. இந்த இருவரும் சினிமா வில்லன்கள்போலவே
ஆகிவிடுகிறார்கள். பொதுச் சொத்துக்கள் சுருட்டப்பட வேறென்ன தடையிருக்கிறது? ஆயினும்
இந்த விஷயத்தை இன்னும் நுட்பமாகவும் தர்க்கரீதியிலும் நாவல் வெளிப்படுத்தியிருக்கலாமென்றே
படுகிறது.
எல்லாம் ஒரு
படிமுறை வளர்ச்சியில்போல் மாற்றம் காணுகின்றன. முதலில் ஊரிலே வேலி மரங்களாக சீமை மரங்கள்
நாட்டவைக்கப்படுகின்றன. பின் கண்மாய்களில் நீர் நிலைகளில் வெளிநாட்டு மீனினம் வளரவிடப்படுகிறது.
கள்ளி இனவகை மெல்ல மெல்ல அழிந்துபோகிறது. கூட கருவேல மரமும். இந்த வெளிநாட்டு இறக்குமதி
விதைகளினாலும் உயிரினங்களினாலும் உள்நாட்டு வளம் மெல்ல மெல்ல அழிகிறது. மரபார்ந்த விவசாயம்
மறக்கப்படுகிறது. எல்லாம் அழிவின் ஓர் எல்லையில் வந்து நிற்கின்றன.
அதற்கு முத்தாய்பாக
பஞ்சாயத்து தலைவனான சின்னாத்துரை, தனது நிலத்துக்கு நீர் பாய்ச்ச மறுக்கும் நீர்ப்பாய்ச்சியிடம்
அதுவரை அவனது பொறுப்பிலிருந்த கண்மாய்ச் சாவிகளை ஒப்படைக்கக் கேட்கிறான். நீர்ப்பாய்ச்சி
மறுப்பதில்லை. கண்மாயின் காவலனான அவன் அதிகாரத்துக்கு வளைந்துபோக முடியாத காரணத்தால்
அய்யனார் சிலை முன் சாவிகளை வைப்பதன்மூலம் புதிய பஞ்சாயத்து தலைவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான்.
நீர் கண்மாயிலிருந்து
காலமற்ற காலத்தில் பஞ்சாயத்து தலைவனின் நிலத்திற்கு அபரிமிதமாகப் பாய்ச்சப்படுகிறது.
அவ்வாறு ஒருபோது திறந்த கண்மாய்க் கதவு பின்னர் கவனிக்கப்படுவதில்லை. கண்மாய் வற்றிக்
கிடக்கிறது. அதுவும் எப்போதும் பின்னால் நிறைந்துபோவதில்லை. புதிதாக வளர்ந்த செடிகளும்,
கண்மாய்ப் பராமரிப்பின் கைமாறலும் நீர்ச் சேமிப்பை அரிதாக்கிவிடுகின்றன. கண்மாயே ஊரை
வளப்படுத்தியது; இப்போது அதன் அழிவே ஊரின் அழிவாகவும் ஆகின்றது.
சோ.தர்மன் தன் சொந்த ஊரான உருளைக்குடியின் கதையையே சொல்லியிருக்கிறார்
என்று தெரிகிறது. அதனால்தான் அவ்வளவு விபரணையோடும், தெளிவோடும் ஊரையும் கண்மாயையும்பற்றி
எழுத முடிந்திருக்கிறதுபோலும்! அதேவேளை கிராமார்த்தமான ஒரு மொழியும் அதற்கான நடையும்
நாவலின் வெற்றிக்கு மிகுந்த கைகொடுப்பினைச் செய்திருக்க முடியும். இங்கு பயன்பாடு கொள்ளப்பட்டுள்ள
மொழியின் வலிமையே நாவலை பெருமளவு இடங்களில் நிலைநிறுத்தியிருக்கிறது என்றாலும் சரிதான்.
உருளைக்குடி
தமிழகத்திலுள்ள ஆயிரமாயிரம் கிராமங்களில் ஒரு கிராமம்தான். கண்மாயும் ஆயிரக் கணக்கான
கண்மாய்களில் ஒன்றே. உருளைக்குடிக் கண்மாய் அழிந்தது. அதுபோல் பல கண்மாய்களும் அழியச்
செய்திருக்கின்றன. இப்போதும் அழிந்துகொண்டிருக்கின்றன. இனியும் அழியவுள்ளன. இதையே பெருஞ்சேதமாயும்,
பெருஞ்சோகமாயும் எடுத்துரைக்கிறது நாவல்.
0
தாய்வீடு, டிச.2020
Comments