நினைவேற்றம்: மூலைக் கல்


 

‘கடந்த காலப் பிரதேசங்களுக்குத் திரும்ப வரும்போது எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திக்கொள்ளவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என  ‘கடல்’ நாவல் நாயகனது எண்ணமாக வரும் ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் ஜோன் பான்வில் விவரித்திருப்பார். மனங்களும் ஞாபகங்களும் சார்ந்த சரியான கணிப்பாக, கடந்த 2018இல் நான் எனதூர் சென்று திரும்பிய பின் கிளர்ந்த ஞாபகங்களின் பொருந்திப்போதல் சம்பந்தமான இடர்ப்பாடுகளினால் உணர முடிந்திருந்தது.

நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் இருந்தது நடேசபிள்ளையின் வீடு. இடையிலே சில வீடுகளும், குடிமனையற்ற ஒரு பெரிய வெறுங்காணியும். அதை பாம்புக் காணியென்று யாரும் சொல்லாவிட்டாலும், பாம்புகள் பிணைந்து முறுகி ஊர்ந்து திரியும்  அயல் என்பதன் பயம்மட்டும் இருந்துகொண்டிருந்தது. அந்தக் காணிக்குள் ஒரு அழிநிலை எய்திய ஒரு கட்டுக் கிணறும், அலைந்து திரியும் கால்நடைகள் வெளியிலிருந்து நீரருந்துவதற்காக  கட்டப்பட்ட  உடைந்த தொட்டியும், அதற்கு கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்கான ஒரு செடிகள் முளைத்த, வெடிப்புகள் விழுந்ததுமான சுமார் நூற்றைம்பது அடி நீள வாய்க்காலும் இருந்திருந்தன. வேலியோரத்தில் சில பனை மரங்களையும், புல் பூண்டுகளையும் தவிர காணிகூட வெறுமைபற்றியிருந்தது.

 பல காணிகளுள் ஒன்றுக்கு மேலான குடிசைகள் அமைந்திருந்த நிலையில், அந்தக் காணிமட்டும் ஏன் யாரினதும் குடிமனையற்றதாய் வெறித்துக் கிடக்கிறதென்ற எண்ணம் என்றைக்கும் என் மனத்தில்  உறைத்ததில்லை. அவ்வாறு உறைக்கிற வயதும் இல்லை. எட்டு ஒன்பது வயதில் அது சாத்தியமில்லைத்தான். வெகு காலத்திற்கு முன்பாக அந்தக் காணியில் குடியிருந்த ஒரு குடும்பம்  வாடைக்காற்றுக் காலமொன்றில் பிடித்த தீயில் வீடு மொத்தமும் எரிந்தழிந்து போனதோடு ஊர்விட்டுச் சென்றதாக பேச்சுவாக்கில் யார் யாருக்கோ கூறியதைச் செவிமடுத்திருந்த ஞாபகம் இருந்தது. அதற்கடையாளமாக காணியின் நடுவில் மண் திட்டொன்று இருந்ததையும் கண்டிருந்தேன்.

அதற்குமேல் நினைப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்கவில்லை. அடிக்கடி நான் நடந்துசெல்லும் பாதையாக அது இல்லாதவரையில் அழுத்தமான நினைவுகளுள் அந்தக் காணியும்  பதிந்துகொள்ளவில்லை.

2018இல் நான் ஊர் சென்றிருந்தபோது அந்தக் காணியைக் கடந்துசெல்ல நேர்ந்தவேளையில் அதைக் கண்டு திகைத்துப்போனேன். அரை நூற்றாண்டு கழிந்திருந்த நிலையிலும் அந்தக் காணி அந்தப்படியே இருந்திருந்தது. அது  சாதாரணமில்லை.  கிராமமே மாறிப்போயிருந்தது. கிடுகு வேலிகள் மதில்களாகியிருந்தன. மண்வீடுகள் கல்வீடுகளாயிருந்தன. இன்னும் ஒரு மாடிவீடுகூட   அங்கே தோன்றியிருந்தது. ஆனால் பாழ்ங் கிணற்றுக் காணிமட்டும்  தன் பழைய ஸ்திதியில் எந்த மாற்றமுமின்றி, அதனாலான ஒரு சோகத்தோடும்போல், ஏன் இருந்துகொண்டிருந்தது?

இதற்கு என் ஞாபகங்களைக் கிளறிக்கொண்டும், எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திப்போகும்படி ஞாபக தகவமைப்பைச் செய்துகொண்டும் நடேசபிள்ளையிலிருந்து இந்தக் கதையை நான் துவங்கவேண்டும்.

நடேசபிள்ளையை ஊரிலே பெரியவர்கள் அழைப்பதுபோலவே நானும் நடேசு என்றுதான் குறிப்பிட்டு வந்தேன். அதை அவதானித்திருந்த ஐயாதான் ஒருநாள் நடேசு மாமாவென அழைக்கவேண்டுமென கண்டித்துவைத்தார். நடேசுவுக்கு என்னைவிட ஓரிரு வயது குறைந்த இந்திராணியென்ற சிவப்பான அழகிய ஒரு மகள் இருந்தவகையில், அவ்வாறு  அழைப்பதில் புதிதான சொந்தம் உண்டாகிவிட்டதுபோன்ற எண்ணத்துடன் இந்திராணியையும் வேறான ஒரு பார்வையில் பார்க்கத் துவவங்கிவிட்டேன். சிறுவயதின் அவ்வகையான ஆதர்ஷங்கள் பலவற்றை என் வயதுச் சிறுவர்கள் பலரிடத்தில் நான் பல முறையும் கண்டிருந்ததில் என் நினைப்பு புளகிதத்தையே என்னிடத்தில் செய்திருந்தது.

குடும்பத் தொடர்பு காரணமாய் எமது இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த நெருக்கத்தில் என்னைக் காணும்போது இந்திராணி சிந்தும் புன்சிரிப்பில் எனக்குள் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கின. நான் கனவுகளில் நடிக்க ஆரம்பித்தேன்.

இவ்வாறான இனிய சூழ்நிலையில் ஒருநாள் பாரிய வெடிப்பொன்று விழுந்துபோனது.

அதை விளக்குவதற்கு முன்பாக மூலைக் கல்பற்றி சிறிது சொல்லவேண்டும்.

அந்தக் கால கிராமத்தின் ஒழுங்கைகளோ மக்கி ரோடுகளோ வெட்டுவீதியாக இருந்ததில்லை. மனிதர் நடப்பதற்கான, மாடுகளை வயல்வெளிக்குச் சாய்த்துச் செல்வதற்கான தேவைகளை நிறைவேற்றுமளவான விஸ்திரணம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. அதனால் தோட்டங்களுக்கு எரு ஏற்றிக்கொண்டும், கிராமங்களில் பின்னப்பட்ட கிடுகுகளை ஏற்றிக்கொண்டும்  செல்ல நேரும் சமயங்களில் சின்ன வண்டில்களைவிட பெரிய வண்டில்கள் பெரும் சிரமப்பட்டன. மக்கி ரோடிலிருந்து ஒழுங்கைக்குத் திரும்பும் சமயங்களில் அவை பெரும்பாலும் மூலை வளவு வேலிகளைப் பிய்த்தெடுத்தன. அதனால் வண்டில்கள் வேலிகளை நெருங்கிவிடாதபடி மூலைகளிலே கனமான கல்லைப் போட்டுவைக்கிற வழக்கம் உருவாகியிருந்தது. அவ்வாறு போடப்பட்ட கல்லே ‘மூலைக் கல்’ எனப்பட்டது.

எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் மணல் ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டுவதற்குத் தேவைப்படும் சாமர்த்தியத்தை முற்று முழுதாக விளக்கிவிட முடியாது. அதில் செய்யப்படும் சாரதியம் மிகநுட்பமாகச் செய்யப்பட வேண்டியது. சாத்தியங்கள் அறவேயற்று சைக்கிள்களை உருட்டிக்கொண்டு செல்லவேண்டியதான சில இடங்களும் ஒழுங்கைகளில் அமைந்திருக்கும். அந்த சாத்தியமின்மைகளைச் சாத்தியமாக்கத் துணிந்து சைக்கிளை ஓட்டிச் செல்பவர்கள் மணலில் சில்லு சுழித்து விழுந்த சம்பவங்கள் ஊரிலே ஏராளம். மணலில் விழுவதால் காயமின்றித் தப்பிவிடுகிற வாய்ப்பைக்கொண்டு அம்மாதிரிச் சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிட்டாலும், கண்டிருந்தவர்களின் சாட்சியங்களால் தெரியவந்திருந்தது அவை அதிகமென்பது. எந்த இடத்திலும் தம் சாமர்த்தியத்தால் தப்பியவர்கள் மூலைகளில்  தம் சமநிலை இழந்து காலை ஊன்றிச் சமாளிக்காமல் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் அரிது.

சுருக்கமாக மணல் ஒழுங்கைகள் மற்றவர்களின் சாரதியத்தை  தம்மிஷ்டத்தில்  நடத்தின என்று சொன்னால் போதுமானது. அதுபோல அவை வண்டில்களையும் தாமே வழிநடத்துகின்றன. அதை மறந்த வண்டில்காரர் மூலைக் கல்லில் வண்டியையேற்றி பாரம் சாய்ந்து அல்லல்பட்டிருக்கிறார்கள். மணல் ஒழுங்கைகளின் தன்மை மறந்தவர்கள், அவற்றில் பாடம் படிக்காமல் தவறியதேயில்லை.

இவ்வாறானதுதான் நடேசுவின் கதை நிகழும் காலமாகும்.

ஊரிலே கள்ளுக் கொட்டில்கள் ஆங்காங்கே இருந்திருந்தன. உழைக்கும் மக்கள் அதிகமாகவிருந்த கிராமங்ககளில் அவை விற்பனையை மட்டுமன்றி சுகத்திற்கான தேவைகளையும் கொண்டிருந்தனதான். பனைகள் நிறைந்த என் கிராமத்தின் முக்கியமான கைத்தொழில் கள் இறக்குவது. அடுத்ததாய் பனைமரம் வெட்டுதல். அதற்கும்  பின்னாலேதான் பாய் பெட்டி கடகம் முதலியன இழைக்கும் குடிசைத் தொழில்.

ஐயாவுக்குப்போலவே நடேசு மாமாவிற்கும் இருளத் தொடங்குகிற நேரத்தில் கள்ளுக் கொட்டில் போகிற பழக்கமிருந்தது. அது வெறுமனே கள் குடிப்பதற்கான இடம்  மட்டுமில்லை, செய்திகள் ஊர்ப் புதினங்கள் பரிமாறும் இடமும்.

ஒரு அமாவாசை நாளில் கொட்டிலிலிருந்து சைக்கிள் ஓட்டிவந்த நடேசு மாமா ஒழுங்கையில் திரும்பும்போது எங்களது வளவு மூலைக் கல்லில் இடித்து வேலி முட்கிளவையில் விழுந்து  காயம்பட்டுப் போனார். பெரிய காயம்தான். கிளுவை முள் ஓரங்குல ஆழத்துக்கு மேல் தோள்பட்டையைக் கிழித்துப் போட்டிருந்தது. உடனடியாக  தம்பிராசா பரியாரி வீடு போய் மருந்து கட்டிக்கொண்டவர், விடிந்தும் விடியாத காலை நேரத்தில் எங்களது வீட்டுக்கு  மனைவியோடு வந்து படலையில் நின்று கூப்பிட்டார்.

‘குமாரு, உன்ர வளவு மூலையில கிடக்கிற மூலைக் கல்லை பிரட்டிப் போடெண்டு எத்தினையோ தரம் சொல்லியிட்டன். நீயும் கவனிக்கேல்லை ; நானும் அப்பிடியே விட்டிட்டன். இப்ப என்னடாண்டா… நேற்று ராத்திரி கல்லில இடறுப்பட்டு விழுந்து காயமும் சரியாய்ப் பட்டுப்போனன். சைக்கிளும் இனி ஓடேலாதமாதிரி முன் சில்லு றிம்மும் வோக்கும் நெளிஞ்சுபோச்சு’ என்றார் ஐயா எழுந்து வர.

அது கேட்ட அம்மா வந்து அக்கறையோடு அவரது காயம்பற்றி விசாரித்தாள். ஆனால் ஐயாவுக்கு அது சாதாரணமாய் இருந்திருக்கும், அத்தோடு அந்த விடிகாலைப்பொழுதில் வந்தது எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கும், அவர் அதுபற்றி வாய் திறக்கவில்லை. பின் நிதானமாய்ச் சொன்ன்னார்: ‘நடேசு, அந்தக் கல்லை நான் கொண்டுவந்து போடேல்லை. நான் இந்தக் காணியை வாங்கிக்கொண்டு வரேக்கயே அந்த மூலைக் கல்லு அதிலதான் கிடந்தது. அதுவும் பூதம் காவிவந்து போட்ட கல்லுமாதிரி அந்தளவு பெரிய பாறாங்கல்லு. வெளியில தெரியிறது சின்னதெண்டாலும், மண்ணுக்குள்ள தாண்டு கிடக்கிறது பெரிசு. என்னால அதை பிரட்டிப் போட ஏலுமெண்டு நான் நெக்கேல்ல. வேணுமெண்டா நீயே பிரட்டிப் போட்டிடு, நான் வேண்டாமெண்டு சொல்லமாட்டன்.’

‘அது உன்ர காணியின்ர மூலைக்கல்லு இல்லையோ பின்னை?’ கோபத்தோடு நடேசு மாமா கேட்டார்.

‘என்ர காணி மூலைக்கல்லுத்தான்.’

‘வேற ஆரும் வந்து அதைக் கிண்டி வெளியில போட்டா நீ சும்மா விட்டிடுவியோ?’

‘அதெப்பிடி, வேற ஆரும் வந்து கிண்டிப்போட ஏலும்?’

‘அப்ப, போற வாற சனத்துக்கு இடஞ்சல் வந்துதெண்டா நீதான் அதைக் கவனிக்கவேணும்.’

கூட நின்றிருந்த நடேசு மாமாவின் மனைவி பக்கமாய்த் திரும்பி, ‘என்ன உங்கட ஆள் இண்டைக்கு இப்பிடி ஏடகூடமாய்க் கதைக்கிறார்?’ என்றவர் மறுபடி திரும்பிக்கொண்டு, ‘ஒழுங்கையில வடிவாய் சைக்கிளோடத் தெரிஞ்சிருந்தா நீ மூலைக் கல்லில போய் இடிச்சுக்கொண்டு விழுந்திருக்கமாட்டாய். உன்னைப்போல வேற ஆரும் வந்து இந்தமாதிரி என்னிட்டை குறை சொல்லேல்லையே!’ என்றார்.

நடேசு மாமாவுக்கு ஏறிவிட்டது. ‘அப்ப… நீ அந்த மூலைக் கல்லை பிரட்டிப் போடமாட்டாய்…?’

நடேசு மாமாவின் காட்டம் ஐயாவுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிந்தது. அவரும் அதே தொனியில், ‘என்னாலதான் ஏலாதெண்டு சொல்லியிட்டனே. ஏலுமெண்டா நீ போய்ப் பண்ணு’ என்றார்.

சற்றுநேரம் மௌனமாக நின்ற நடேசு மாமா, ‘சரி, அப்ப நான் பண்ணிக் காட்டிறன்’ என்றுவிட்டு போய்விட்டார்.

மறுநாள் காலையே விதானை வீடு சென்று நடந்த சம்பவத்தை விளக்கி மூலைக் கல்லை அகற்றிவிடவேணுமென்று முறைப்பாடு கொடுத்துவிட்டார் நடேசு மாமா.

விதானையும் விதூஷகம் பிடித்த மனிசன். நடேசு மாமாவின் முறைப்பாட்டைக் கேட்டுவிட்டு, ‘அதுசரி நடேசு, உன்ர முறைப்பாடு மூலைக் கல்லிலயோ, குமாரசாமியிலயோ?’ என்று சிரித்திருக்கிறார். அதற்கு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும் நடேசு மாமாவினால்? பின்னர் விதானையே, தான் வந்து பார்த்து என்ன செய்வதென்று முடிவெடுப்பதாகக் கூறி அனுப்பிவிட்டார்.

அதற்குப் பின்னால் என்ன நடந்ததென்பது என் ஞாபகத்தில் பிடிபடவில்லை. ஆனால் அது தொடர்பில் முக்கியமான விஷயங்கள் ஏறக்குறைய ஒரு வருஷத்தின் பின்னாலே  நடந்தன.

அந்த ஒரு வருஷத்தில் இரண்டு குடும்பங்களுக்குமிடையிலான போக்கு வரத்து கதை பேச்சுகள் யாவும் அறுந்துபோயிருந்தன.

நடேசு மாமாவிடம் அப்போது சைக்கிள் இருந்திருக்கவில்லை. வேலைக்கும் நடையில்தான் போய்வந்துகொண்டிருந்தார். நடக்கிறபோதெல்லாம் அந்த மூலைக் கல்லும், ஐயாவின் காட்டமான உத்தரமும் அவருக்கு ஞாபகம் வராமல் இருந்திருக்காது. இரண்டு பகுதியாரின் பார்வைக் கடுமையைக்கூட  அந்தக் கால நீட்சி குறைந்துபோக வைக்கவில்லை.

அதுவொரு மாரி முன்னிராக் காலம். ஆயினும் ரோட்டில் சிறிது நடமாட்டம் இருந்தது. வெளியே போய்விட்டு வீடு வந்துகொண்டிருந்த நடேசு மாமாவை எங்கள் காணியின் மூலைக் கல் முகரியில் பாம்பு கொத்திவிட்டது. வளவு மூலையில் எழுந்த சந்தடியில் ஐயா லாந்தருடன் சென்று பார்த்தளவில் நடேசு மாமாவின் உயிரே பிரிந்திருந்தது. ஏற்கனவே அந்த இடத்துக்கு  நடேசு மாமாவின் அலறலில் வந்திருந்தவர்கள்தான் மூலைக் கல்லோடு சுற்றிக்கொண்டு கிடந்த பாம்பு கடித்துவிட்டதாய்ச் சொன்னார்கள்.

நடேசு மாமா வீட்டில் அந்தச் சம்பவத்தை எவ்வாறு உணர்ந்திருப்பார்களென்று வெறிச்சோடிப் பாய்ந்த இந்திராணியின் பார்வையிலிருந்தே நான் புரிந்துகொண்டேன். மெல்ல மெல்ல இந்திராணியின் மீதான என் சினிமாப் பாடல் கனவுகளும் மறைந்தன. நடேசு மாமாவின் மறைவு அம்மாவுக்குப் பெருந் துக்கம். ‘அந்தச் சவத்து மூலைக் கல்லைப் பிரட்டிப்போட்டிருந்தால் நடேசண்ணை செத்திருக்கமாட்டாரெல்லோ?’வென்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சொல்லி ஐயாவைச் சலித்தெடுத்துக்கொண்டு இருந்தாள். பின்னால் அவளுக்கும் அச் சம்பவம் மறந்துபோய்விட்டது.

போன தடவை நான் ஊர் சென்றபோது அந்த மூலைக் கல் இருந்தவிடம் கண்ணில்படவில்லை. தார் ரோடு போடுவதற்கு வீதியை விஸ்தரிக்க நேர்ந்ததில் எல்லைகள் விரிந்து அதன் தடத்தைக்கூட  காணமுடியாதிருந்தது. புரட்டிப் போட்டிருப்பார்களாவென்று தெரியவில்லை. ஏனெனில் ஐயாவின் வார்த்தையில் அது பூதம் சுமந்துவந்து போட்ட பாறாங் கல்.

நான் அங்கிருந்து திரும்பிய பிறகு கண்ட எல்லாவற்றையும் மறந்தேன். ஆனால் காணாதிருந்த மூலைக் கல்மட்டும் நினைவில் மறையாமல் இருந்திருந்தது. அத்தோடு, அந்தக் கல்லோடு பெரும் ரகசியத்தில்போல் சுற்றிக் கிடந்து நடேசு மாமாவின் உயிர் குடித்த பாம்பும். பாம்பு நினைவாக பாம்புக் கிணறும், அதிலிருந்தே பாம்புகள் ஊற்றெடுப்பதாக  மூத்தார் சடையன் சொன்ன கதையும் தொடர்ந்து நினைவுத் திரை கிழித்து வெளிவந்தன.

ஒரு பங்குனி மாதத்து பனி புகட்டியபடியிருந்த காலையில் அந்த இடத்தைக் கடந்துசெல்ல நேர்ந்த என் கண்களில் சாய்ந்திருந்த சூரியக் கதிரில் ஒழுங்கைத் தொட்டிக்கு நீரிறைக்கும் பாண் கிணற்று வாய்க்காலுக்குள்  ஒரு மினுமினுப்புத் தட்டியது. பாம்போ என்ற துணுக்கம் ஏற்பட்டு ஓடுவதற்கான உந்துதல் கிளர்ந்ததாயினும், சமீபத்தில் மூத்தார் சடையன் ஒழுங்கையோரத்தில் புல் செதுக்கிக்கொண்டிருந்த தெம்பில் துணிவை வரவழைத்து நின்று கூர்ந்து கவனித்தேன். அது பாம்பல்ல, வாய்க்கால் குழிக்குள் நீளக் கிடந்த பாம்புச் செட்டை. காற்றின் மெல்லிய அசைவுக்குத் தக நெளிந்துகொண்டு கிடந்தது.

எனது நீடிய நிலைப்பில் கவனமாகி, ‘என்ன தம்பி பாக்கிறிர், பாம்போ?’ திரும்பிப் பார்க்காமலே கேட்டார் மூத்தார் சடையன்.

சடையனை புல்லடைந்த சாக்கோடும் உழவாரத்தோடும்  வயல் கரைகளில், ஒழுங்கை ஓரங்களிலென்று மாலை நேரத்தில் எங்கெங்கும் காணமுடியம். அவரை யாரும் சடையனென்று குறிப்பிட்டதுகூட கிடையாது. சடையரென்றோ, இல்லையேல் இன்னும் குறிப்பாகச் சுட்டவேண்டின் மூத்தார் சடையரென்றோதான் அழைப்பார்கள். ஊரில் மிக வயதாளியென்ற மதிப்பும், வைரவ வாலயமுள்ளவரென்பதால்  ‘வாயைக் கட்டி’விடுவாரென்ற பயமும் அதற்குக் காரணங்களாயிருந்தன.அவ்வாறு சிலபேருக்கும், சில நாய்களுக்கும் செய்திருக்கிறாரென்பது ஊர்ப் பிரசித்தம். அதனால் நானும் மரியாதையாகவே பதிலளித்தேன்: ‘பாம்பில்லை, சடையர்; பாம்புச் செட்டை.’

‘அதிலயென்ன பாக்கக்கிடக்கு? உசிர்ப் பாம்பெண்டாலும் பறவாயில்லை. உந்த வளவுக்கதான் கனக்கக் கனக்கக் கிடக்கே.’

‘பாம்பெண்டா எனக்குப் பயம். நடேசு மாமா பாம்பு கடிச்சு செத்தாப் பிறகு நான் துண்டா இந்தப் பக்கம் வாறேல்ல. உதுக்குள்ள இருந்த பாம்புதான அவரையும் வந்து கடிச்சது!’

‘உதுக்குள்ளயிருந்து வந்ததாய்த்தான் இருக்கும்.’

‘உதுக்குள்ள புத்துக்கூட இல்லை. பின்னை… பாம்பு எங்கயிருந்து வந்திது?’

‘உதுக்குள்ள இருக்கிறதுகள் புத்துப் பாம்பில்லை, கிணத்துப் பாம்புகள்.’

‘கிணத்துக்குள்ளயும் இருக்குங்களோ? அதெல்லாம் எங்கயிருந்து வந்து கிணத்துக்குள்ள இறங்கும்?’

‘வெளியிலயிருந்து வராதுகள். அதுக்குள்ளயிருந்து ஊறும்கள். வேற கிணறுகளில தண்ணி ஊறும். இந்தக் கிணத்தில தண்ணியுமூறும், பாம்பும் ஊறும்.’

‘கனக்கப் பாம்பு ஊறியிருக்கோ?’

‘கொள்ளாயிரம் கொள்ளாயிரமாய் ஊறியிருக்கு.’

கொள்ளாயிரத்தின் அளவு எனக்குத் தெரியவில்லை. தொள்ளாயிரம் தெரியும், ஆயிரம் தெரியும், ஆனால் கொள்ளாயிரம்…? அதுதான் ஆகக் கூடிய எண்ணிக்கையோ? லட்சத்தைவிடவும் பெரிய எண்ணிக்கையாயிருக்குமோ?

என் நினைவைக் கலைத்துக்கொண்டு மூத்தார் சடையனின் குரல் எழுந்தது. ‘தம்பி, பாம்பு பாக்கிற ஆசையில உள்ள கிள்ள போய் கிணத்தை எட்டிப் பாத்திடாத.’

அந்தக் கிணற்றை நான் என்றும் எட்டிப் பார்த்ததில்லை. மூத்தார் சடையன் சொன்னபிறகு பார்க்கிற எண்ணமும் கொண்டதில்லை. பின்னால் பாம்புகள் கிணற்றில் விளைவதில்லையென்று தெரிய வந்தபோதும்கூட, மனத்துள் விழுந்து கிடந்திருந்த அந்தப் பயத்தை என்னுடைய அறிவின் எந்தக் கட்ட வளர்ச்சியிலும் புரட்டிப்போட முடிந்ததில்லை.

பாம்புகள் அந்தக் கிணற்றுக்குள் விளைகின்றன என்ற மூத்தாரின் அபிப்பிராயம் என்னைப்போலவே பலரிடத்திலும் நீங்காததில்தான் இன்னும் அந்தக் காணியில் யாரும் குடிவரவில்லையாய் இருக்கும். யாருக்குத் தெரியும்?

ஆனால் நினைவுப் புரட்டல்களில் ஒரு சிக்கலும் ஏற்படுகின்றது. பாம்புக் கிணற்றுக்கும் மூலைக் கல்லுக்கும் எவ்வகையில் தொடர்பு நிகழ்கிறது? பாம்பொன்று மூலைக் கல்லோடு கிடந்து நடேசு மாமாவை வெட்டியதுதான் அந்தத் தொடர்பா? அதுவும் தெரியவில்லை.

இவ்வாறு தெளிவின்மை ஏற்படும்போது , ‘கடந்த காலப் பிரதேசசங்களுக்குத் திரும்ப வரும்போது, எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திப் போகவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என்ற ‘கடல்’ வரிகளை நினைப்பதிலிருந்து என்னால் தவிர முடிவதில்லை. அது நினைவின் அறுபடும் தொடர்ச்சிக்கு ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது; நினைவின் பலஹீனங்களைப் புரிந்துகொள்ள ஒரு வழியைத் திறக்கிறது.

0

(தாய்வீடு, செப்.20) 

Comments

Popular posts from this blog

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...