அதை அதுவாக 12

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 12

‘விழித்திருப்பது அறிவும்கூடத்தான்’


- தேவகாந்தன் -



(34)


எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
(பொருள், அரசு, அறிவுடைமை 6) குறள் 426


சமூகம் எவ்வாறு இயங்குகிறதோ அதற்கேற்றவாறு அமைந்து தானும் நடந்துகொள்வதே அறிவு.


‘ஊரோடு ஒத்தோடு’ என்று ஒற்றை வரியில் அவ்வை சொன்னது இதைத்தான்.

ஆனால் இதை அறிவென்கிறபோதுதான் புரியாமலிருக்கிறது. அறிவென்பது அறியாமைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடங்கிப் போக வேண்டுமா என்ற கேள்வி இங்கே விஸ்வரூபம் காட்டி எழுந்துவிடுகிறது. ஊரோடு ஒத்தோடினால் அறிவினால் என்ன பயன்? ‘நான் விழித்திருக்கிறேன்’ என்ற புத்தனின் வார்த்தையில் மிளிர்வது பேரறிவல்லவா? ஜாக்கிரதம் மட்டுமில்லை, விழித்திருப்பது அறிவம்கூடத்தான். அப்படியிருக்கையில், உலகத்தோடு ஒட்டிப் போய்விடு என்று வள்ளுவன் சொல்வது முரணல்லவா? அடங்கிப் போ என்று எப்படிச் சொல்ல முடியும்?

தனிமனித நல்வாழ்வுக்கான போதம் சொல்வதே வள்ளுவனின் நோக்கம். அதுதான் அவன் சார்ந்திருந்த சமண மதத்தின் போக்கினுக்கும் உகந்ததாய் இருந்தது.

‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றொரு குறள் இந்த அதிகாரத்தில் வருகிறது. யார் சொன்னாரென்றில்லை, என்ன சொன்னாரென்று அதன் மெய்மையைப் பகுத்தறிவதே அறிவென்கிறது அக் குறள்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ (குறள் 355) என்று எழுபத்தொரு குறள்களுக்கு முந்தி, அறத்துப்பால் துறவறவியலில் ஒரு குறள் வரும்.

இரண்டு குறள்களிலும் ஏறக்குறைய ஒரே வி~யமே சொல்லப்பட்டதுபோல் தெரிந்தாலும், உண்மையில் அவை நுண்மையான வித்தியாசமுடையவை. 355 ஆம் குறள் பொருள்களின் மெய்மையைக் காணச்சொல்லுகிறது. 423ஆம் குறள் சொல்லில் மெய்மையைக் காணச்சொல்லுகிறது. அதாவது அது கடந்த மெய்மையை.

கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய நான்கு அதிகாரங்கள் அறிவுபற்றிப் பேசுபவை. அறிவை ஒரே அதிகாரத்திலும், ஒரே அம்சத்திலும் அடக்க முடியாமற்போனது ஆச் சரியமிலலையல்லவா?



(35)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
(பொருள், அரசு, குற்றங்கடிதல் 10) குறள் 440


தான் விரும்புவனவற்றையும், அவற்றின்மீதான தன் விருப்பத்தின் அளவையும் ஒருவன் பிறனறியாமல் வைத்திருக்க வல்லவனானால், அவனை வஞ்சிக்கப் பகைவர் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் பலனில்லாமல் போகும் என்பது இக் குறளின் கருத்து.

இங்கே நூல் என்பது சூழ்ச்சி.

ஒளிவுமறைவில்லாமல் இருக்கிற பேர்வழியென்று ஒருவன் எதையும் ஒளிவு மறைவில்லாமல் செய்துவிடக் கூடாது. அது தன் பலஹீனத்தை பறையறைந்து சொல்வதற்குச் சமானமாகும். அவனை அழிக்க வருகிற பகைவர்கள் அந்தப் பலஹீனத்தைப் பயன்படுத்தியே அவனை அழித்துவிடுவர்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்