அதை அதுவாக 15

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 15

‘திருக்குறளில் படிமத்தின் பயில்வுகள்.’


- தேவகாந்தன் -


(38)

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
(பொருள், அரசு, ஊக்கமுடைமை 9) குறள் 599


பருத்த உடம்பும், கூரிய தந்தங்களும் உடையதாயினும் புலி தாக்க வந்தால் யானை அஞ்சுமென்பது இந்தக் குறளின் பொருள்.


வெளிப்படையான அர்த்தத்தில் பார்த்தால் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் பொருத்தம் பெறாது. அதனால் ‘ஊக்கமுடைய’ என்ற பெயரெச்சத்தை வருவித்து ஊக்கமுடைய புலி எனப் பொருள் கொள்ளவேண்டும்.

இவ்வாறு வருவித்துப் பொருள்கொள்ளும் மரபு தமிழ்ச் செய்யுளியலில் உண்டு.

இந்தக் குறளுக்கு இரண்டு குறள்கள் முந்திப் பார்த்தால் அங்கேயும் ஒரு யானை வந்திருப்பது தெரியும்.

அந்த யானையின் பருத்த மேனியில் அம்புகள் புதையுண்டு நிற்கின்றன. இருந்தும் அது தன் கம்பீரம் குலையாமல் நிற்கின்றது. அப்படிப் பெருமை பார்க்கிற வகையின விலங்குதான் யானை. அப்படிப்பட்ட யானையே ஊக்கம் நிறைந்த புலி தாக்கினால் அஞ்சுமாம். ஊக்கமுடைமையின் சிறப்பை இது இங்கே அழுத்தி நிற்கிறது.

உவமை, உருவகம் என்று இயைபு பெறாத இடத்தில் அதற்குப் பெயர் படிமம்.

படிமம் வௌ;வேறு வகையிலும், வௌ;வேறு அளவிலும் நவீன கவிதையில்தான் சுவீகரிப்பாகியிருக்கிறது. அதை ஒருவகையில் வள்ளுவன் இங்கே பயில்வு செய்து பார்த்திருக்கிறான் எனக் கொள்ளலாமா?


(39)

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.
(பொருள், அரசு, ஆள்வினையுடைமை 9) குறள் 619

ஒரு காரியம் கைகூடாது போயினும், மெய்வருந்தி முயற்சி செய்கிறவளவுக்குப் பலன் கிடைக்கும்.


இந்தக் குறளில், தெய்வ அனுக்கிரகத்தால் நடக்காத காரியமும் தன் முயற்சியினளவுக்கு ஈடேறும் என்கிறான் வள்ளுவன். முயற்சிகூட இல்லை, மெய்யை வருத்தவேண்டும் என்ற வற்புறுத்துகை இங்கே கவனிக்கப்படவேண்டும்.

இதற்கு இரண்டு அதிகாரங்குளுக்கு முன்னர் ஊக்கமுடைமை என்ற அதிகாரம். இந்த அதிகாரம் ஆள்வினையுடைமை. அதன் அர்த்தம் முயற்சியுடையவராய் இருத்தல் என்பது.

ஊக்கமும் முயற்சியும் ஒன்றுபோலத் தோன்றும். உண்மையில் அவை வேறுவேறானவையே. ஊக்கம் மனம் சார்ந்ததென்றும், முயற்சி உடல் சார்ந்ததென்றும் சுருக்கமாய்க் கொள்ளலாம்.

சிறந்த முயற்சியென்பது தன் மெய் வருத்துவதாகும். செய்ய அரிய செயலென்று சோர்வுறாமல் இருக்கவேண்டும் (அருமையுடைத்தென்று அசவாமை வேண்டும்), முயற்சி செய்கிறவளவுக்குப் பெருமை வரும் என்று இவ்வதிகாரத்தின் முதற் குறளிலேயே வருகிறது.

அதன் உச்சம் இந்த ஒன்பதாம் குறள்.

கடவுளால் முடியாதுபோனாற்கூட, முயற்சி அதனளவுக்குப் பயன் தருமென்பது நிஜமாகவே மீறல்தான்.

அடுத்த குறளில் அது இன்னும் தீவிரம்.

‘வகுத்தான் வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ என்று ஒருபொழுது பேசியவன், வலிதான ஊழைக்கூட முயற்சியால் புறங்காண முடியுமென்று பேசுவது வெறும் வாய்ப் பிரகடனமல்ல. அது ஒரு தீர்க்கம்…. திண்ணம்!

ஊழ் இருக்கிறது, ஆனாலும் வெல்ல முடியுமென்பது ஒருவகையில் சித்தர்வகைக் கலகக் குரல்தான்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்