அதை அதுவாக 6

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்)
6
‘சமூக சமமின்மையின் பரிகாரமாக
ஈதல் சொல்லப்பட்டது’


தேவகாந்தன்




(20)


நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
(அறம், இல்லறம், ஈகை – 2) குறள் 222

நல்ல வழிமுறைகள் ஊடாகவெனினும் ஒருவரிடமிருந்து பெறுவது தீதானது. ஈதல் எப்போதும் நன்று. மேலுலகம் இல்லாவிட்டாலும்கூட நன்றுதான்.



‘ஈயென இரத்தல் இழிந்தது’ என்னும் புறநானூறு. ‘ஏற்பது இகழ்ச்சி’ என்றவள் அவ்வை. வள்ளுவன் ஒருபடி மேலே இந்தக் குறளில். நல்ல வழியில்… தனக்குரியதாக… வருவதானாலும்… அதைக் கொள்ளுதல் தீது என்பது வள்ளுவ அறம். இதுதான் ஒருவரது…ஒரு சமூகத்தினது …மொத்த மானுட வர்க்கத்தினதும்கூட …கௌரவத்தை மேலெடுத்து நிறுத்துகிற உயர் பண்பாக விளங்கக் கூடியது.

வாங்கிக் கொள்வது தன்னை இழத்தலுக்கான வழியைத் திறப்பது போன்றதென்று மிக நுட்பமாய்த் தெரிந்து சொல்கிற சமூக, உளவியல் ரீதிகளிலான கருத்து இது. இந்தக் குறள் ‘ஈகை’ என்கிற அதிகாரத்தில் வருகிறது. ஈகம் என்கிற நவீன சொல்லின் மூலமும் இது.

இப்போது உதவ முடியாமலிருக்கிறேன் என்று தன் துன்பத்தைச் சொல்லுகிற தன்மைகூட நல்ல குடிப்பிறப்பாளனிடம் கிடையாது என்கும் குறள். மட்டுமில்லை. ஏற்பவரின் இன்முகம் காணுமளவுக்கும் கழியும் பொழுதுகள் ஈவார்க்கு மிக்க கொடுமையானவை.

உலகத்தின் மிகக் கொடிய நிகழ்வு மரணம். அதுகூட ஈய முடியாத நிலைமையில் இருப்பதைவிட நல்லதாகும் என்றே அது கூறும்.




(21)


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு
(அறம், இல்லறம், புகழ் -1) குறள் - 231


ஈதலும் புகழோடு வாழ்தலுமே வாழ்க்கையின் இரு பெறுபேறுகளாகும்.



ஈதலை ஒரு தேசம் என்றென்றும் வற்புறுத்திக்கொண்டிருந்தது.
அற இலக்கியங்களினூடாக மட்டுமின்றி, மற இலக்கியங்களினூடாகவும்.
உடையார் சிலர், இல்லார் பலராக இருந்த சமூக சமமின்மையின் பரிகாரமாய் அது சொல்லப்பட்டதென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஈதல் அந்நோக்கம் காரணமாக மட்டும் வற்புறுத்தப்பட்டதில்லை.
ஈதலும் புகழோடு வாழ்தலுமே வாழ்வின் சிகர அடையாளங்கள்.
ஈதல்கூட புகழ் தருவதுதான். எனினும் அது ஓர் அடைவுமாகும்.
அது ஒரு தனி மனநிலை. அதற்கான சாட்சியம்தான் இந்தத் திருக்குறள்.

‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே’ என்று கூறும் புறத்தின் 165 ஆம் குறள். அதனால்தான் சங்கத் தமிழர், ‘புகழெனின் உயிரும் கொடுக்குவ’ராய் வாழ்ந்தனராக வேண்டும்.

தமிழர் வாழ்வின் மற்றுமோர் பரிமாணம் இது. ஒரு இனம் எதையெதைப் புகழுக்குரியதாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறது என எண்ணுகிறபோது அற்புதம் பிறக்கிறது. கூட பெருமிதமும்.




(22)


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
(அறம், இல்லறம், பகழ் - 5) குறள் - 235

கெட்டாலும் சங்கினைப்போல நிலை திரியாதிருக்கவேண்டும்@ சாவதானாலும் நிலைத்திருப்பற்கான புகழை வைத்துவிட்டுச் சாகவேண்டும். இந்த இரண்டும் உலக அறிவுள்ளவர்க்கே இயலக்கூடியதாகும்.


சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மனங்குன்றாது ஒளிவிட வாழவேண்டும். அறிவுள்ளவர்கள் கேட்டினால் மனங்குன்றி அழிந்துபோவதில்லை.

மனிதனுக்கு உயிரும் அழியும், உடம்பும் அழியும். அவன் புகழ்தான் அழியாதிருப்பது. அதை வைத்துவிட்டுச் சாவது ஒரு வித்தகம்.
‘உளதாகும் சாக்காடு’ இவ்வாறுதான் நிகழ்கிறது.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்