அதை அதுவாக 9

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 9

‘அக்காலத்திய பெருநிலைத் துறவுகளை
நெறிப்படுத்துவதே வள்ளுவனின் நோக்கமாக இருந்திருக்கிறது.’

- தேவகாந்தன் -




(29)

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
(அறம், துறவு, நிலையாமை 8) குறள் 338

குஞ்சு வளர்ந்து பருவமடைந்ததும் கூட்டைவிட்டுப் பறந்துவிடும். இந்த உயிருக்கும் உடலுக்கும் இடையிலான உறவும் அத்தகையதே.


மரணத்தை இயல்பு…இயல்பு… என்று இந்த அதிகாரத்திலே அடிக்கடி சொல்லுவான் வள்ளுவன். அக்காலையிலும் அவன் தொனிக்கப்பண்ணும் கேலி அர்த்தத்தை மேவி ரசிக்கத் தக்கதாயிருக்கிறது.

எவ்வளவு பெரிய அலங்காரம் அகந்தையெல்லாம் கொண்டுவிடுகிறாய், ஒருநாள் இந்த உடம்பு வெறும் கூடாக விழுகிற காலமும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டாயா? ஏன்கிறது இந்தக் குறள்.

இதற்கு அடுத்த குறள் நையாண்டியின் உச்சம். ‘புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு’ என்பது அது. ஒரு நிலையான வீடு இந்த உயிருக்கில்லையே என்கிறது இந்தக் குறள்.

எனக்கிருக்கிற எண்ணமெல்லாம், சிந்தனையெல்லாம் ஒன்று பற்றித்தான். அறத்துப்பாலில் இல்லறவியலைத் தொடங்கிய வள்ளுவன் வாழ்வைச் சிறப்பாகத்தான் சொல்லியிருக்கிறான். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற குறள் இல்லறவியலில்தான் வருகிறது. இருந்தும் அதேயளவு சிறப்புடன் துறவறவியலையும் ஏன் செய்தான் என்பது நியாயமான சிந்தனை.

வாழ்தலும் அதைத் துறத்தலும் சமூகத்தில் சம அளவில் அல்லது குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வித்தியாசமுள்ள அளவில் இருந்திருக்கிறதாகச் சொல்லமுடியும். அவ்வாறு ஏன் இருந்தது? வாழ்வைத் துறத்தலுக்கு ஒரு நிர்ப்பந்தம் இருந்திருக்கிறதா? அடிக்கடி நிகழும் போர் பஞ்சங்களாலும், வகையறியாததும் மருந்தறியாததுமான நோய்களின் தாக்கங்களாலும் இல்லறத்தைத் துறக்கும்நிலை சமூகத்தில் காற்றுவள நெருப்புப்போல் ஆண்கள் மத்தியில் பரவியிருக்க வாய்ப்பிருந்திருக்கிறதோ? அந்தப் பெருநிலைத் துறவுகளை நெறிப்படுத்துவதே வள்ளுவனின் நோக்கமாக இருந்ததாய்க் கொண்டால் தப்பில்லையென நினைக்கிறேன்.

யுத்ததத்திலும், பெருநோயிலும் முதலில் வருவது மரண பயம்தான். அந்த மரண பயத்தை வெல்லும் வழியைத்தான் நிலையாமையில் வள்ளுவன் அழுத்தமாய்ச் சொல்லுவது.

மனித தோற்ற காலம் முதலே யுத்தம் இருந்திருக்கிறது. காயீனுக்கும் ஆபெல்லுக்கும் இடையிலான பூசல் ஒரு பருக்கை. ஆபெலை காயீன் கொலைசெய்வது சரித்திரத்தில் பதிவான முதற்கொலையெனலாம். மூவேந்தர்கள் பாரியை யுத்தத்தில் கொன்றதை புறநானூறு பேசுகிறது. பலாத்காரம் அல்லது வன்முறை எவ்வளவுதான் கடிந்துரைக்கப்படினும், அவை மனித இயல்பு. யுத்தமும் ஒரு பலாத்காரமே. அதிலுள்ள அழிவுகள் வாழ்தலைச் சாத்தியமாக்கியிருக்காதென்பது திண்ணம். அதேவேளை அவை மரண பயங்களையும் விளைவித்தன. மனிதனுக்கான மார்க்கம் வாழ்தலைத் துறத்தலாகவே விளைந்திருக்கிறது. அவன் மனைவி, குழந்தைகள் எப்படி வாழ்ந்திருப்பர் என்பது இன்னொரு புறத்திலேயெழும் கேள்வி. சமூகத்தில் பெண்ணின் நிலை அப்போதும் பாரப்படுத்தப்பட்டதாகவே இருந்திருக்கிறது. பாராதீனப்படுத்தப்பட்டதாகவே இருந்திருக்கிறது. பெண் துறவு மேற்கொண்டதாய் அக் கால வரலாற்றில் சம்பவங்கள் தெரியப்படுத்தப்படவில்லை. ஓடாதே, மரணத்தைக் கண்டு அஞ்சாதே என்று வள்ளுவன் சொன்னதாக நான் சொன்னால் அது என் கருத்தாகிவிடும். என் கருத்தை வள்ளுவன்மேல் ஏற்;றியதாகிவிடும். ஆனால், வள்ளுவன் மரணத்தை அஞ்சாதே என்றதற்கு தீர்க்கமான காரணம் இருந்திருக்க வேண்டும். அது ‘வாழ்’ என்று அவன் கூறுவதற்கான அர்த்தச் சாத்தியப்பாட்டினைக் கொண்டிருக்கிறது என்பது ஓரளவு சரியான கருத்தின் அடைதலாக இருக்கும். ஆதலால்தான் போலும், மரணத்தை இன்னும் இயல்பானதாய் இலகுவானதாய் அடுத்த குறளிலே அவன் கூறுகிறான்.

‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ (குறள் 339). மரணமென்பது மிக்க இயல்பான நிகழ்ச்சிதான். நாம் தூங்குவதில்லையா, அதுபோல.
அதுபோன்ற மிக்க இயல்புத் தன்மை வாய்ந்ததுதான் பிறப்பும். மரணத்துக்கஞ்சி எங்கே ஓட ஏலும்? அதனால் எதன்மூலமாகவும் வரும் மரண பயத்தை வென்று வாழ்…! வள்ளுவ உபதேசம் இதுதான்.



(30)

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(அறம், துறவு, அவா அறுத்தல் 10) குறள் 370

அவா என்பது ஒருபோதும் நிறையாத் தன்மை. அந்த அவாவை நீக்கினால் ஒருபோதும் அழியாத இன்ப நிலையை அடையலாம்.


துறவறவியலின் கடைசி அத்தியாயம் ‘அவா அறுத்தல்’. பிறப்பு, பிறவாமை, பிறப்பின் மூலமென்று பல வி~யங்களையும் இந்த அதிகாரம் பேசுகிறது.

இதற்கு முந்திய அதிகாரத்தின் கடைசிக் குறள் ‘காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்’ என்பதாகும். நோயென்று இதில் வருவது பிறவித் துன்பத்தையே சுட்டும். அதை ‘கழிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும்’ என்று விரித்துரைப்பார் பரிமேலழகர்.

ஆசையே துன்பத்துக்குக் காரணமென்றவன் புத்தன். அதன் இன்னொரு மொழி வடிவம்தான் ‘அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்’ என்ற 368 ஆம் குறளில் வரும் சீர்களின் அர்த்தம். மேலேயுள்ள பத்தாம் குறள் இதன் விரிவுடன் பயனும் சொல்கிறது. முந்திய ஒன்பது குறள்களின் சாரமும் இந்த ஒற்றைக் குறளுள் அடக்கம்.
இதுபோன்ற சில குறள்கள்தான் அவ்வையைக்கூட ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குற’ளென்று வியக்க வைத்திருக்கவேண்டும்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்