சாம்பரில் திரண்ட சொற்கள் 2

 

 

3

‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை’ப் பாடலை பள்ளிச் சிறுவர்கள் கூவித்திரிந்த விடுதலையின் நாள் அன்றாகயிருந்தது. கொழுக்கட்டை தின்று, பனங்கட்டிக் கூழும் குடித்து மக்களின் பொழுதுகழிய, தேவாலயத்தின் பின்னாலுள்ள வயல் தோட்டங்கள் கடந்து, தெருமடம் தாண்டி, அதற்குமப்பாலுள்ள கடலுக்குள் போய் இறங்குகையில், கிழக்கில் ஏற்கனவே வியாபிக்கத்  துவங்கியிருந்த இருளை சூரியன் கண்டது.

வெண்மணல் விளைந்திருந்த முற்றத்தில் சாக்கு விரித்தமர்ந்து வெற்றிலைப் பெட்டி அருகிருக்க பாக்குரலில் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த பவளமாச்சியைச் சூழ்ந்து ஆவலோடு அவள் முகம் பார்த்திருந்த ஐந்தாறு பிள்ளைகள், ‘ஆச்சி, கதையைச் சொல்லுங்கோவன்’ என நைஞ்சுகொண்டிருந்தன.

செந்தாமரை இதழ்களால் நெய்ததுபோன்ற நிறத்தில் சட்டையணிந்த மலர், கதை கேட்கவே அங்கே வந்திருந்தும் தன் ஆவலை வெளிப்படுத்தாத முகத்தோடு பவளமாச்சிக்கு நேரெதிரே மௌனமாய் அமர்ந்திருந்தாள். அவளுக்கருகில் மற்றைய பிள்ளைகளுக்கும் மலருக்குமான தொடுப்புப்போல புவனேஸ்வரி.

எப்படியோ அம்மாதிரி விடுதலை நாட்களில் அவ்வீடு கதை வளாகமாக மாறிவிடுகிறது. குறைந்தது ஐந்தாறு பிள்ளைகளாவது அயல்வீடுகளிலிருந்து வருகிறார்கள். குழந்தைகளைக் கூட்டிச்செல்ல வரும் சாட்டில் சில பெரியவர்களும்.

மற்றக் குழந்தைகளைவிட தான் வேறென்பதான எழுப்பத்தின் துருவேறி மலர் இருந்திருந்ததை, அவள் அமர்ந்திருந்த தோரணையும், அவளது முகபாவமும் தெளிவுறக் காட்டின. அதுபோல் அம்மா படலையில் வந்துநின்று குரல் கொடுப்பதன் முன் பவளமாச்சி கதையைச் சொல்லி முடிக்கவேண்டுமே என்ற ஆதங்கமும் அவளது இறுகிய முகத்தில் வெளிப்பாய்த் தெரிந்தது.

அவளை நடனத்துக்கு சின்ன வயதிலிருந்தே தெரிந்திருந்தது. குடிசைகளும், கூரை வீடுகளுமாயிருந்த சூழலில், அவனது வீட்டுக்கு எதிர்ப்புறமாய் சற்றுத் தள்ளியுள்ள வித்துவான் கந்தப்பு வீரகத்தியின் வீடுமட்டும்தான் ஓடுபோட்ட கல்வீடாயிருந்தது. அவ்வாறு பெரும் கல்வீட்டுக்காரியாயிருந்த மலரை, அவள் வெறுங்குண்டியாய்த் திரிந்த சின்ன வயதுக்காலத்திலிருந்தே அவன் கண்டிருக்கிறான். ஒரு வார்த்தை பேசாத, கூடி விளையாடாத அயல் சிறுமி அவள். அவனை மட்டுமில்லை, அயலில் அவர்களது சமூகத்துக் குடிசைவீட்டுப் பிள்ளைகளைக்கூட உள்ளே போய் விளையாட அந்த வீட்டின் இரும்புக் கேற் அனுமதித்ததில்லை. அதுபோல் அவளையும் வெளியே சென்று அவர்களுடன் விளையாடுவதை அது தடுத்திருந்தது. அவளைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் நடனத்துக்கு அதுபற்றி ஒருவாறான புரிதல் இருந்ததில் அந்த எல்லையை மீற அவனும் என்றும் பிரயத்தனம் செய்ததில்லை.

அவளது அரைஞாணில் முன்புறம் தொங்கிய அரைமூடி சலங்கையைக் காண ஏழு எட்டு வயதாயிருந்த காலத்தில்கூட அவனுள் ஆசை துளிர்விட்டிருந்திருக்கிறது. திறந்த படலையைப் பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று அதைக் கள்ளமாய்ப் பார்க்க முறுகிக்கொண்டிருப்பான்.

ஆண்டுகள் கழிந்த பின்னாலும் அவள் அவனை கண்ட அறிமுகங்கூடக் காட்டுவதில்லை. குடிசை வீட்டு நடனத்துக்கும் ஓட்டுக் கல்வீட்டு மலருக்குமிடையிலான அந்யோன்யமின்மை, அவர்களது அந்தஸ்தினால் ஏற்பட்டதென்பதை அவன் உணர்ந்திருந்தானென்றே தெரிந்தது. அவனைவிட அவள் அதை நன்கு அறிந்திருந்தாள்.

இலங்கையிலேற்பட்ட 1958 இனக் கலவரத்தின் மனப் பாதிப்புகளுமடங்கி வடக்கு வெகு சுளுவில் இயல்புக்கு மீண்டுகொண்டது. கடைச் சிப்பந்திகளும், தேநீர்ப் பட்டறைக்காரரும், சமையல்காரரும், எடுபிடிகளும், சப்ளையர்களும், வெள்ளவத்தை  கொச்சிக்கடை சந்தைகளில் வாழைப்பழம் கொய்யாப்பழம் மாம்பழம் விற்போரும், சுருட்டு புகையிலைக் கடைக்காரரும் மெல்ல மெல்ல ரயில் போக்குவரத்து ஆரம்பிப்பதோடு கொழும்பு கிளம்பினர். சூழ்நிலை மெதுவாய் இயல்புக்கு மீண்டது. 

1959இல் நடந்த ஸ்கொலர்ஷிப் பரீட்சையில் சித்தியடைந்து 1960 தையிலிருந்து யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் விடுதியில் தங்கிநின்று படிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்தான் நடனம். தமிழ் ஆடிப் பிறப்பு விடுமுறைக்கு  வீட்டுக்கு வந்திருந்த அவனும் கதை கேட்க தள்ளி அமர்ந்திருந்தான்.

அம்மா லாம்பைக் கொளுத்திவந்து திண்ணையில் வைத்துப்போக, அதன் மஞ்சளொளி குடிசையுள் மட்டுமன்றி வெண்மணல் முற்றத்திலும் தன் வியாபிப்பைச் செய்தது.

ஒரு பிடிவாதத்தில்போல் தன் பக்கம் திரும்ப  மறுத்து பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்த மலரை அவ்வப்போது பார்த்தாலும், அவள் சார்ந்த மென்மையான மனவுணர்வேதும் நடனத்தின் வசம் இருந்திருக்கவில்லை.

அவனது அவ்வப்போதான பார்வையைத் தாங்க முடியாதவள்போல், ‘நேரம் போகுதாச்சி, கதையைச் சொல்லுங்கோ’ என்றாள் மலர் அதுவரையிருந்த தன் மௌனமுடைத்து.

வெற்றிலை இடித்து முடித்த பவளமாச்சி வெற்றிலையை உரலிலிருந்து உள்ளங்கையில் கொட்டியெடுத்தாள். ‘சொல்லத்தான போறன்; அதுக்கு ஆச்சி முதல்ல வெத்திலை போடவேணும்; அப்பதான கதையும் சிறக்கும். அதுவும் இண்டைக்கு விளக்கில்லாத ஊர்க் கதை சொல்லப்போறன், வெத்திலை கட்டாயமெல்லோ?’ என்றுவிட்டு திறந்த வாயை உள்ளங்கையால் சடுதியில் பொத்துவதுபோல் கையில் கொட்டியிருந்த இடித்த வெற்றிலையை பக்கென எற்றினாள். பின் சிறிதுநேரம் வாய்க்குள் வைத்து அதைக் குதப்பினாள்.

அப்போது நடனம் கண்டான், துன்னாலை தாண்டி கீழ்ப்புற வெளியிலிருந்து வயல்வெளியூடாக உதித்த ஒரு பெரும் வட்டநிலா. திண்ணையில் எரிந்த கைவிளக்கின் மஞ்சளொளியை அது மேவியிருந்தது. பவளமாச்சியும் அதை அவதானமாகினாள். பின் இருந்தபடியே எட்டி வேலியோரம் விழ வெற்றிலை எச்சியைத் துப்பினாள். கதை விரிந்தது:

‘மாயக்கா கதை தெரியுமெல்லோ… மாயக்கா கதை…? இந்தக் கதை நான் முந்தி உங்களுக்குச் சொல்லியிருக்கிறன்….’

‘ஓம்… தெரியும்…. தெரியும்….’ குழந்தைகள், மலர் தவிர்த்து, கூட்டொலி எழுப்பின.

‘ம்… அந்த மாயக்காவுக்கு மாய யக்கனெண்டு ஒரு அண்ணன்காறன் இருந்தான். மாயக்கா குகையிலயிருந்து தன்னிட்ட பொறுப்புக் குடுத்த நவரத்தினங்களைக்  காவல் பண்ண, அண்ணன்காறன் அப்பப்ப வெளிய போய் தங்கள் ரண்டுபேருக்கும் சாப்பாடு தேடிக்கொண்டு வருவான். அவன் கொண்டுவாற சாப்பாட்டில, அண்டைக்கு தங்களுக்குத் தேவையானதை எடுத்துவைச்சுக்கொண்டு, மிச்சத்தை பத்திரப்படுத்தி வைப்பாளாம் மாயக்கா.

‘ஒருநாள் காலமை வெள்ளண உணவு தேடிப்போன மாய யக்கனுக்கு ஒண்டுமே ஆப்பிடேல்ல. அவன் காடுகீடெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு பாத்தான். கண்ணில ஒரு மிருகம்கூட தட்டுப்படேல்ல. மானோ மரையோ வேண்டாம், ஒரு காட்டுப் பண்டியைக்கூட அவனால காணேலாமப் போச்சு. மாய யக்கனுக்கும் பசி கிளம்பியிட்டுது. அவனும் அங்கங்க கண்ட இடங்களில நிண்டு தண்ணியைக் குடிச்சுக்கொண்டு எல்லா இடமும் தேடி அலையிறான். ஒண்டுமே கிடைக்காமப் போக, அண்டைக்குத் தன்ர அதிர்ஷ்டம் அவ்வளவுதானெண்டு நெச்சுக்கொண்டு திரும்பிறநேரத்தில, சோடியாயிருந்த ரண்டு முசல் கண்ணில பட்டுது. அதுகளைப் பிடிச்சுக்கொண்டு, கூட கொஞ்சப் பழங்களையும் புடுங்கிக்கொண்டு பாத்தா, காடு இருண்டுபோய்க் கிடக்கு. அவசர அவசரமாய் காட்டுக்கு வெளியில வந்து ஆகாயத்தில தாவி பறக்கத் துவங்கினான்.

‘அண்டைக்கு நிலாவும் இல்லாததால சரியான கஷ்ரப்பட்டுத்தான் பறக்கிறான்.

‘அப்ப, கீழ பாக்கேக்குள்ள கிராமங்களில அங்க அங்க வெளிச்சங்கள் தெரியுது. வீடுகளுக்குள்ளயிருந்தும் வெளிச்சம் வாறதப் பாக்கிறான். இது நல்ல வடிவாயிருக்கெண்டு நெச்சுக்கொண்டு வர, ஒரு ஊரைப்போல கீழ ஒரு இடம் தெரியுது. ஆனா அந்த ஊர் இருண்டுபோய்க் கிடக்கு. வெளியிலயும் வெளிச்சமில்லை; வீடுகளுக்குள்ளயிருந்தும் வெளிச்சம் வரேல்ல. இது என்ன புதினாணயமான ஊராயிருக்கேயெண்டு நெச்ச மாய யக்கன், அது ஏனெண்டு அறியிறதுக்காண்டி ஒரு பத்தைக்குள்ள இறங்கினான்; முசல்களை ஒரு மரத்தோட கட்டிப்போட்டுட்டு, பழங்களையும் பக்கத்தில வைச்சிட்டு ஊருக்குள்ள புகுந்தான்.

‘ஊராக்கள் பயந்திடக்குடாதெண்டு மனிச வடிவத்தில மாய யக்கன் போய், ‘ஏன் இந்த ஊரில ஒரு வீட்டிலயும் இண்டைக்கு விளக்கெரியேல்ல?’ எண்டு கேட்டான்.

‘அது ஆரப்பா?’ எண்டு கிட்ட வந்த ஒராள், ‘உனக்கு விஷயமே தெரியாதுபோல கிடக்கு? இந்த ஊரில விளக்கெரிஞ்சு கனநாளாச்சுதப்பா. அதால பொழுதுபட்டா நாங்கள் ஒண்டுஞ்செய்ய வழியில்லாம நித்திரை வாறமட்டும் இப்பிடியிருந்து கதைக்கிறத வழக்கமாய் வைச்சிருக்கிறம். துவக்கத்தில, விறகை எரிச்சு அந்த வெளிச்சத்தில வீட்டில அதை இதையெண்டு செய்திட்டு சாப்பிட்டுப் படுத்தம். இப்ப வேலியில பட்ட கதியாலுகளும் இல்லை; காட்டில விறகுகளும் முடிந்சுபோச்சு. நாங்கள் என்ன செய்யேலும், சொல்லு?’ என்றான்.

‘உங்கட விளக்குகளுக்கு என்ன வந்திது?’ எண்டு, பிறகு யக்கன் கேட்டான். ‘ஏன், அதுகள் எரிய மாட்டனென்னுதுகளோ? இல்லாட்டி, உங்களிட்ட விளக்கே இல்லையோ?’

‘விளக்கில்லாமலென்ன? விளக்கிருக்கு. ஆனா எண்ணைதான் கிடைக்கமாட்டனெண்ணுது. இஞ்ச வண்டில்ல எண்ணை கொண்டுவந்து விக்கிற எண்ணைக்காறன் ஊரோட கோவிச்சுக்கொண்டான்’ எண்டான் கிராமத்து மனிசன்.

‘யக்கனுக்கு பெரிய மனவருத்தமாய்ப் போச்சு. பகல்ல சூரிய வெளிச்சத்தில சில வேலையளச் செய்தாலும், விளக்கு வெளிச்சத்தில செய்யிறதுக்கெண்டும் சில வேலையள் இருக்குத்தான? எங்க… அப்பிடி நீங்கள் செய்யிற வேலையளில ஒண்டைச் சொல்லுங்கோ பாப்பம்…’ என வினவிவிட்டு நெகிழ்ந்த குறுக்குக் கட்டைப் பிரித்து பவளமாச்சி மறுபடி சொருகினாள்.

வீட்டிலிருக்கும்போது பவளமாச்சியின் உடையலங்காரம் குறுக்குக் கட்டு மட்டும்தான். அயலில் எங்காவது போவதானால் சேலையை மாறாடியாகப் போட்டுக்கொள்வாள். கோயில், திருவிழாக்களுக்கு போவதானால் அவளது அலங்காரமே வேறாகயிருக்கும். சட்டையணிந்து, பதினாறு முழச் சேலையில் பின்னால் கொய்யகம் வைத்து, செந்நிலாப் பொட்டிட்டு, கொண்டையில் பூச்சரமும் சுற்றிப் புறப்பட்டாளென்றால் தேரொன்று போனமாதிரியே இருக்கும். அதுவொரு காலம். அப்போது அவளுடைய கணவன் உயிரோடு இருந்தான்.

பவளமாச்சியின் கேள்விக்கு பிள்ளைகள் ஒருதருக்கும் உடனடியாய்ப் பதில் கிடைக்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மலர் புவனாவின் முகத்தைப் பார்த்தாள்.

அப்போது திண்ணையிலிருந்த நடனம் அதற்கான பதிலைச் சொன்னான். ‘படிக்கிறது, ஆச்சி.’

‘சரியாய்ச் சொன்னாய். நீ நல்லாய்ப் படிக்கிற பிள்ளையெல்லே, அதுதான். பிள்ளையள், நீங்களும் நல்லாய்ப் படிச்சு நடனம்மாதிரி கெட்டிக்காறனாய் வரவேணும், என்ன?’ என்று பிள்ளைகளுக்கு இரண்டு வார்த்தை அறிவுரையும் கூறிவிட்டு பவளமாச்சி கதையைத் தொடர்ந்தாள்:

‘எண்ணைக்காறனை அவனுக்குத் தெரியமாட்டுது. இனி தேடியும் புடிக்கேலா. நல்லதெண்டான்ன கெட்டதெண்டான்ன ஊர் விஷயங்களில தலையிடக்குடாதெண்டு மாயக்கா சொல்லியிருந்தும் ஊராக்களின்ர நிலைமையைப் பாத்தளவில அது அவனுக்கு மறந்துபோச்சு. அவள் அண்ணையெண்டும் பாக்காமல் அவனைத் திட்டுவாள். சிலவேளை தலையில டொக்கு டொக்கெண்டு குட்டவும் செய்வாள். எண்டாலும் அந்த ஊருக்கு தன்னால முடிஞ்ச நல்லதைச்  செய்ய நெச்ச மாய யக்கன், ஒரு உபாயம்செய்ய எண்ணினான். அந்த ஊரைத் தூக்கிக்கொண்டு போய் நிலவுக்குக் கிட்ட வைச்சா, விளக்கில்லாமலே அவைக்கு ராத் தேவைக்கான வெளிச்சம் கிடைக்குமெண்டது அவன்ர யோசினை.

‘ஊர் சரியான பெரிசாய் இருந்ததில, தூக்கிறது கொஞ்சம் கஷ்ரமாய்த்தான் இருந்திது. எண்டாலும் தன்ர பெலனையெல்லாம் ஒண்டுசேத்து பூமியிலயிருந்து அந்த ஊரைப் பேர்த்தெடுத்துகொண்டு போய் நிலவுக்குக் கிட்ட வைச்சுவிட்டான்.

‘பூலோகத்தில அண்டைக்கு இருட்டாயிருந்தாலும் நிலவுக்குக் கிட்ட இருந்ததில ஊருக்கு கனக்க வெளிச்சம் வந்திது. தங்கட ஊர் செகசோதியாய் மினுங்கிறதக் கண்ட அந்த ஊர்ச் சனங்களெல்லாம் மாய யக்கனை பெரிசாய்க் கொண்டாடிச்சினம். ‘இது நீர் செய்த வேலையெண்டா, நீர் ஆர்? உமக்கு இந்தக் கெட்டித்தனம் எப்பிடி வந்திது?’ எண்டெல்லாம் விசாரிச்சின. ‘உங்களுக்கு ராவில வெளிச்சம் வர வழி கிடைச்சிட்டுதெல்லோ? அவ்வளவுதான். கேள்வியொண்டும் கேக்கக்குடா’தெண்டு அவன் சொல்ல, அவன்ர வேலைக்கு உபகாரமாய் ரண்டு குட்டியாடுகளைக் கொண்டு வந்து குடுத்திச்சினம். மாய யக்கன் ஆடுகளை வாங்கிக்கொண்டு, பத்தைக்கு வந்து, கட்டிவைச்ச தன்ர முசலையும் பழத்தையும் எடுத்துக்கொண்டு பாத்தா…. சரியாய் நேரம்போயிருந்திது. நடுச்சாமம் கடந்துதெண்டா, மற்ற நாளில சூரியன் காலிக்கிறமட்டும் தனக்கு பறக்கிற சக்தி இருக்காதெண்டது ஞாபகம் வர, அவசரமாய் வானத்தில எழும்பி அவன் பறந்துபோயிட்டான்.

‘இப்பதான் பிரச்சினை துவங்கிது…’

‘இப்ப அவைக்கு வெளிச்சம் கிடைச்சிட்டுதுதான. இனியென்ன பிரச்சினை?’ பிள்ளைகள், மலர் தவிர்த்து, கேட்டன.

‘பெரிய பிரச்சினை…. முந்தி இருந்ததைவிட பெரிய பிரச்சினைதான் இப்ப வந்தது. நிலவுக்குக் கிட்ட இருந்ததில  மாசம் முப்பது நாளும் ராத்திரியளில வெளிச்சம் இருந்திது. பகல்ல சூரிய வெளிச்சம் மறைய, ராவில நிலா வெளிச்சம் வந்து ஊரில கொட்டோகொட்டெண்டு கொட்டிச்சிது. கதவை மூடினாலும் கதவிடைக்குள்ளால வெளிச்சம் உள்ள பூந்து அறையை பகல்போல வெளிச்சமாக்கிச்சிது. கூரைக்குள்ளாலயும் பூந்து உள்ள போச்சிது.

‘கொஞ்சநாள் எல்லாருக்கும் அது நல்ல சோக்காய்தான் இருந்திது. பிறகுதான் கஷ்ரம் துவங்கிச்சிது. வயசாளியளான கனபேருக்கு அந்த வெளிச்சத்தில நித்திரை வரேல்ல. நித்திரையே கொள்ள ஏலாமப்போனா வருத்தம் வருமெல்லோ? அப்பிடி கனபேருக்கு வருத்தமும் வந்திட்டுது.

‘வழியில தெருவில சந்தையில காணுகிற பொம்பிளயளும் ரகசியமாய் என்னென்னமோ பேசிச்சினம். தங்கட புருஷன்மார் இப்ப கூடக்கூடவாய்த் தங்களை ஏன் கோபிக்கினமெண்டது அதில முக்கியமான விஷயமாய் இருந்திது. பிறகு அதுக்கொரு வழி காணவேணுமெண்டு எல்லாருமாய்த் தெண்டிச்சின.

‘ஆனா அவையால ஒருவழியும் கண்டுபிடிக்க ஏலாமப்போச்சு. தங்கட புருஷமாற்றை கோபத்தை அடக்கிற வழி என்னவெண்டு திரும்பத் திரும்ப யோசிச்சு மண்டையைப்போட்டு உடைச்சின. கொஞ்சத்தாலை, ராவில தங்களுக்கு வெக்கம் வாறதே  காரணமெண்டதை அவை கண்டுபிடிச்சின.

‘ஆனா வெக்கம் வாறதை வெளிச்சமிருக்குமட்டும் தங்களால  தடுக்கேலாதெண்டு எல்லாரும் ஒருமனதாய்ச் சொல்லியிட்டின.’

'வெளிச்சமிருந்தா ஏனாச்சி வெக்கம் வருது?’ குழந்தைகள் கேட்டன. மலர் அப்போதும் தன் கேள்வியை கண்களிலேயே வைத்துக்கொண்டாள்.

‘ஹா… ஹா… ஹா’வென்று அட்டகாசமாய்ச் சிரித்த பவளமாச்சி சொன்னாள்: ‘பொம்பிளயெண்டா வெக்கம் வரத்தான செய்யும்? அதுவொண்டும் பெரிய விஷயமில்லை. கதையில இனி வாறதுதான் முக்கியம். அதைக் கவனமாக் கேளுங்கோ….

‘இப்ப பொம்பிளயள் சேந்து கதைச்சினமே, அதுமாதிரி ஆம்பிளயளும் வீட்டில ஏன் இப்ப முந்தினமாதிரிச் சந்தோஷமில்லையெண்டு பெரிய துக்கத்தோட கூடிக் கூடிக் கதைச்சின. அவைக்கும் காரணம் கடைசியில பிடிபட்டுது. அதைத் தீர்க்கிறதுக்கும் கனநேரத்துக்குப் பிறகு ஒரு வழி கண்டுபிடிச்சின.

‘ஒருநாள் மாய யக்கனை தேடிக் கண்டு, தங்களுக்கு அந்த இடம் வேண்டாம், பகல்லயும் ராவிலயும் வெளிச்சமாயிருந்தா வாழ்க்கை விளங்காது, அதால பழைய இடத்திலயே தங்கட ஊரைக் கொண்டுபோய் வைக்கவேணுமெண்டும், எப்பிடியாண்டென்ன தெண்டிச்சு தாங்கள் எண்ணைக்கு வழி செய்யிறமெண்டும் சொல்லிச்சின.

‘மாய யக்கனும் அவைக்கு அதுதான் விருப்பமெண்டா தனக்கு மறுப்பில்லையெண்டு அந்த ஊரை திரும்பக் கொண்டுவந்து பழைய இடத்தில வைச்சுவிட்டான். அதுக்குப் பிறகு ராவில விளக்கில்லாட்டியும் சந்தோஷமாய் இருந்திச்சினம்.’

பிள்ளைகள் கதையில் மகிழ்வும் திருப்தியும் பட்டன. ஆனால் மலரிடத்திலிருந்து ஒரு கேள்வி அவளது மௌனமுடைத்து விழுந்தது: ‘அந்த ஊர் இப்ப எங்க இருக்குது, ஆச்சி?’

பவளமாச்சி நிமிர்ந்து அவளையே வைத்தகண் வாங்காமல் சிறிதுநேரம் பார்த்தாள். பிறகு ஆரவாரமாய்ச் சிரித்துச் சொன்னாள், ‘அந்த ஊர்… இதுதான், பிள்ளை’ என.

அவள் சொல்லி முடிக்கிறவேளை, அவளுமே படலையில் நின்று கதையைக் கேட்டாளா அல்லது அப்போதுதான் வந்தாளாவென்று தெரியாதபடிக்கு உள்நுழைந்த மலரின் தாய் அன்னபூரணம், ‘மலர்…!’ எனக் ஓங்கிக் குரலெடுத்தாள்.

அவசரமாய் குண்டி மண்ணைத் தட்டியபடி எழுந்த மலர், ‘நான் வாறனாச்சி’ என்றுவிட்டு புவனா பின்தொடர தாயிடம் விரைந்தாள்.

படலையடியில் சிறிது சுணங்கியவேளை அவள் முகம் தள்ளியிருந்த நடனத்தின்பக்கம் திரும்பியது. அந்தக் கண்களில் ஏன் அத்தனை கடூரம்? அவை என்ன சொல்ல முயன்றன? அல்லது எதையாவது சொல்ல முயன்றனதானா? நடனத்துக்கு எதுவும் விளங்கவில்லை.

குழந்தைகள் சென்ற பின்னால் தனியாகிப்போன பவளமாச்சியின் பார்வை, பின்வேலி கடந்து, வயலின் அடுத்த கரையின் பலூன்போல் தொங்கிய நிலாவின் ஏதோவொரு புள்ளியில்,  இருளைத் துளைத்துச் சென்று நிலைத்தது.

அவள் தன் கதையை தனக்கே சொல்கிற நேரம் அதுவென்பது தெரிந்தது நடனத்துக்கு. நிலாக் கதை, சூரியன் கதை, மேகக் கதை, நாய்க் கதை, நரிக் கதை, பூனைக் கதை, குதிரைக் கதையெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிற பவளமாச்சியின் கதை பெருந்துன்பமானதுதான். அவள் சொல்லி அவன் அறிந்திருக்கிறான். ஒருவேளை அப்போது அவள் எண்ணிக்கொண்டிருக்கும் கதைகூட அவள் அவனுக்குச் சொன்னதாயும் இருக்கமுடியும்.

செம்பவளமென்ற மூதன்னை, தான் நடமாடிய எல்லைகள் அடங்கிலும் பவளமாச்சியென அறியப்பட்டிருந்தவள். அவளது அடையாளமே கதைசொல்லி என்பதாகவே இருந்தது. ‘கதை சொல்லுறதில பெரிய விண்ணி’யென ஊரே மதித்திருந்தது.

சிறியவர்களுக்குப்போலவே பெரியவர்களுக்கும் அவள் ஆச்சியாக இருந்தாள். நடனத்தின் தாய்க்கு பெரியதாயான பவளமாச்சியை, நடனம்போல ஆச்சியென்றே அவளும் அழைத்தாள். அவளின் வயது எவரின் ஆச்சியென்ற உறவின் அழைப்பையும் தாங்கக்கூடியதாகவே இருந்தது. அவளுக்கு வயது எண்பதென்று அவளது தோற்றம், நடமாட்ட வேகங்களைப் பார்த்து ஊர் கணித்தபோது, அவளது பரவணியைத் தெரிந்தவர்கள், பெரியதாய் சிறியதாயர் பிள்ளைகளை அறிந்தவர்கள்  ‘அவவுக்கு தொண்ணூறுக்கு மேல’யென துணிந்து கூறினார்கள். அவள் வாழ்வு, பேரெல்லைகள் அளாவியது. அடர்த்தி கொண்டது. அவள் ஒரு காலத்தின் வரலாறென்பது மிகையான கூற்றாகாது.

 

ருஷங்கள் சிலவற்றுக்கு முன் நடனம் கல்லூரி விடுதியில் தங்கிநின்று படிக்கச் செல்லுமுன்பான ஒருநாள்…

பூரணையின் மஞ்சள் கதிர்ப் பிரகாசம் முற்றத்தை பொன்மணற் பரப்பாக்கியிருந்தது. நடனத்தின் அம்மா அடுப்படியில் வேலையாயிருந்தாள். நடனம் அப்போதுதான் முகம் கை கால் கழுவிவந்து சாமிபடத்துக்கு விளக்கேற்றிவிட்டு நெற்றியில் பளிச்சென திருநீறு பூசிக்கொண்டு படிக்க தயாராகிக்கொண்டு இருந்தான். அம்மா விளக்கைக் கொளுத்திவந்து திண்ணையில் வைக்க அவன் புத்தகப் பையை எடுப்பான்.

அப்போது ஆச்சியின் குரல் எழுந்தது: ‘நடனம், அம்மா இன்னும் விளக்குக் கொண்டுவந்து வைக்கேல்லையோ படிக்க? வா, நேரமிருக்குத்தான அதுக்கு. இஞ்ச வந்து இந்த நிலாவைப் பாரன், என்ன வடிவாய் இருக்கெண்டு! எந்தளவு பெரிசாய் வானத்தில கிடந்து தொங்கிது!’

ஆச்சி கதை சொல்லப்போறாள் எனத் தெரிந்து நடனம் ஓடிவந்தான். ‘நிலாவைக் கண்டா ஆச்சிக்குப் பெரிய புளுகம்தான்’ என்றான் நடனம். ‘ஏன், உனக்கு விருப்பமில்லையோ?’ என ஆச்சி வினாவெழுப்ப, ‘எல்லாருக்கும் விருப்பம்தான். எண்டாலும் ஆச்சிக்கு கொள்ளை விருப்பம். அது என்னெண்டு, ஆச்சி, அந்தளவு விருப்பம் உங்களுக்கு வந்திது?’ என விடையையும், அதிலிருந்தொரு சரடெடுத்து வினாவாக்கியும் விடுத்தான் நடனம்.

அவனை முன்னால் இருத்தி நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு முதலில் நிலாவைக் காட்டினாள். நடனம் நிலாவைக் கண்டபடி காதில் இறங்கப்போகும் கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘நிலாக்காலம்தான் கதைக் காலம். பகல்ல ஆருமிருந்து கதை சொன்னதை... கதை கேட்டதை நீ எப்பவாச்சும் கண்டிருக்கிறியோ? இல்லைத்தான?’

நடனம் தலையை ஆட்டினான்.

‘ங்ஆ…! நான் கதை கேட்டதும் ராவில; கதை சொல்றதும் ராவில. அது என்னமோ, இந்தப் பெரிய வட்டத்தைக் கண்டோடன கதை கதையாய் ஊறியிடுது எனக்கு.

‘ம்… கொஞ்சம் பொறு… ஆச்சி கொஞ்சம் வெத்திலை போட்டுக்கொண்டு வந்திடுறன். இந்தக் கதை சொல்ல  எல்லுப்போல மண்டைக்குள்ள கிறுகிறுப்பு ஏறவேணும்.’

கொட்டப்பெட்டியிலிருந்து பவளமாச்சி இரண்டு தரம் எதையோ திருகித் திருகி பாக்குரலில் போட்டாள். பொயிலையாயிருக்கும். சுண்ணாம்பு பூசி வெற்றிலை போட்டாள். பாக்கு, நாறல் பாக்கு, பிஞ்சுப் பாக்குகளும் போட்டுவிட்டு இடிக்கத் துவங்கினாள். இடித்த வெற்றிலையை வாயிலே போட்ட பின்னால் அவள் அவளாகயில்லை.

கதை களமிறங்கியது.

 

 

 

 

 

 

 

4

சற்றொப்ப 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு சற்று முன்பின்னான காலமாகயிருந்தது அது. அந்தப் பகுதியில்  குடிசன நெருக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. வல்லை வெளியில் பதுங்கியிருந்த கள்வர் காமுகர் கொலைகாரர்களின் பயம் குடிமனைப் பகுதிகளில் நீங்காதிருந்தமை அதன் காரணமாய் இருக்கமுடியும். வெள்ளைக்கார பாதிரிகளின் கிறித்துவ மத போதகத்துக்கு எதிராக சைவம் தன் சகல முனைகளையும் தீட்சண்யப்படுத்தி ஓர் எதிர்வலுவை உண்டாக்கிக்கொண்டு இருந்தது. அது அதனளவில் ஒரு சாத்வீக யுத்தமாகக் கருதப்பட்டது.

செம்பவளம் அப்போது சிறுமியாய் இருந்தாள். தாய் தந்தையருடன் நாகர்கோவில் தொண்டமானாறு நல்லூர் வல்லிபுரமென கோயிலூர்களுக்கு சென்ற காலங்களில், அவள் வாழ்ந்த கிராமத்தின் ஓரத்தில் இரண்டு பெரிய சீமெந்துக் கட்டிடங்களை கண்களில் ஆச்சரியம் மின்ன மின்ன கண்டிருக்கிறாள். ஒன்று, ஒடுங்கி உயர்ந்திருந்தது; மற்றது, அதற்குச் சற்றுத் தொலைவாக பதிந்து பெரும் பரப்பில் விரிந்திருந்தது. முதலாவது வெண்ணிறத்தில் பொலிந்திருக்க, இரண்டாவது அறைகளாயன்றி பெரும்பாலும் கூடங்களாய் மஞ்சள் வர்ணத்தில் விளங்கியது.

ஓராளின் அரையளவுக்குக் கீழே மஞ்சளும், அதற்கு மேலே சுண்ணாம்பு நிறமும் பூசியிருந்த அவளது அயலிலுள்ள புலவர் கந்தப்புவின் வீடுபோலன்றி, புதிதாகத் தோன்றிய கட்டிடங்கள் தம் பண்பு நலன்களைக் கூறுவனபோல் வேறுவேறு வர்ணங்களைக் கொண்டிருந்தமை அவளது கவனத்தில் தவறியிருக்கவில்லை. அதையெண்ணி அவள் ஆச்சரியப்பட்டாள்.

அதை மிகுப்பித்தது, வெண்ணிற உயர் கட்டிடத்திலிருந்து ஞாயிறுகளின் காலை மாலைகளில் கிளர்ந்ததும், அவள் அதுவரை கேட்டிராததுமான தொழுகைப் பாடல்கள். அவை அவளறிந்த தேவாரம் திருப்புகழ் திருவாசகம் திருப்பல்லாண்டென சைவக் கோயில்களில் பாடப்படுவனவற்றை நிகர்த்திருக்கவில்லை. அங்கு அவ்வப்போது வெண்ணுடை தரித்து, அரையில் கறுப்புப் பட்டியும், கழுத்தில் வெள்ளிக் குருசுமணிந்த சிலரையும் கண்டிருக்கிறாள். வாழ்வின் முதல்தரமாக அவ்வாறான வெள்ளையுடை அணிந்தோரில் சிலர் பொன்நிற முடியும், வெண்ணிறத் தோலும்கொண்ட மனிதர்களாய் இருக்கக் கண்டு ஒரு பயங்கலந்த வியப்பினை அவள் பட்டாள்.

மஞ்சள் கட்டிடத்தை ஊரவர் ஆஸ்பத்திரி என்றார்கள். அங்கு நோயாளிக்கு மருந்தும், சிலவேளை பராமரிப்பும் அளிப்பது அறிந்தபோது அவளுக்கு மிகவும் புதினமாயிருந்தது. ‘பரியாரி’ பரமரின் வைத்தியக் கொட்டிலையன்றி, அவ்வப்போது ஊருக்கு நடையிலோ திருக்கல் வண்டியிலோ வந்துபோகும்  நாட்டு வைத்தியம் பார்த்த சில பள்ளிக்கூடச் சட்டம்பிகளையன்றி வேறு அவள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் அப் பரந்த கட்டிடத்தின் ஒரு மூலையிலிருந்து இரவுகளில் கேட்கும் கத்தல்களும், கதறல்களும், கூச்சல்களும் அவளுக்கு மிகுந்த அச்சம் விளைவிப்பனவாய் இருந்தன. தாய் தகப்பனிடம் விடுத்த நடுக்குறுத்தும் அச் சத்தங்கள்பற்றிய கேள்விகளுக்கு அவள் என்றும் பதிலை அடைந்ததில்லை. அவர்களே அதுபற்றி யாதும் அறியாதவர்களாய், அவ்வாறான கேள்வி தமக்குள் கிளர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

இவ்வளவற்றையும் அவள் அறிந்திருந்தபொழுதில் அவளுக்கு பத்து வயதாகயிருந்தது. அந்த வயதுக்குக் கூடிய விஷயங்களை பிறரிடம் கேள்விகளாய்க் கேட்டே அவள் கிரகித்துக்கொண்டு இருந்தாள். பன்னிரண்டு வயதில் அவள் சாம(ர்)த்தியப்பட்டபோது மன்னாரிலிருந்த ஒரு தூரத்து உறவுக்காரக் குடும்பத்து பதினேழு வயதுப் பையனை அவளுக்கு மணம்முடிக்க பேச்சு நடந்தது. பின்னர் அதுபற்றி எதுவித பிரஸ்தாபமும் அவளறிய வீட்டில் நடக்கவில்லை. ஆவலிருந்தும், எது ஏனென்று அவள் அறியாதிருந்து அந்தரப்பட்டாள்.

அவளுக்கு அயலிலிருந்த தோழிகள் வட்டம் மிகப் பெரிது. தன் வயதுக்குக் குறைந்தவர்கள்போலவே வயது கூடியவர்களும், தங்கமணிபோல் கல்யாணமாகி ஒரு பிள்ளையோடு புருஷன் கைவிட்டுப் போனவளும்கூட, அந்த வட்டத்தில் செம்பவளத்துக்கு  இருந்தார்கள். அதில் வயதுகூடிய ஓர் உறவுக்காரத் தோழி மூலமாக, மன்னாரில் நிலவிய வாந்திபேதிப் பெருந்தொற்றில் கன சனங்கள் இறந்துபோனதுபற்றி அவள் அறிந்தாள். அந்த இளைஞனையும் அது காவுகொண்டிருக்கக்கூடிய வாய்ப்பை அவள் ஊகித்துக்கொண்டாள். அந்த அறிகை அவளை மிகவும் துயர்ப்படுத்தியது.

இயல்பில் காணக்கிடக்கும் அணில்களின், ஆடுகளின், மாடுகள் மற்றும் நாய்களின் சேர்க்கை விதங்களில் அவளின் உள்ளுள்ளாய்க் கிளர்ந்திருந்தது சின்ன வயது முதலே ஓர் ஆர்வம். அது பருவ மாற்றத்தின் பின்னால் மனித தேக சுகங்கொள்ளும் அவாவாய் மாறிப்போனது. தங்கமணி அக்கா தானும் வெட்கப்பட்டு, அவளையும் வெட்கப்படும்படியாக, போக விபரம் இரகசியத்தில் சொல்பவளாய் இருந்தாள். தனிமை கிடைத்த ஒருநாளில் கனகாலம் தன் மனத்திலிருந்த ஒரு கேள்வியை தங்கமணியிடம் செம்பவளம் கேட்டதும் அவ்வாறான ஆர்வத்தில்தான்.

‘தங்கமணியக்கா, உங்கட புரிஷன் ஏன் உங்களைவிட்டுப் போச்சுது?’

அதற்கு தங்கமணி, ‘அந்தாளுக்கு சந்தேகம் வந்திது என்னில. அதால விட்டிட்டுப் போச்சுது’ என்றாள்.

‘ஏன் சந்தேகம் வந்திது?’

‘எங்களுக்கு கலியாணமாகி எட்டாம் மாசத்தில சரவணை பிறந்தான். அதுதான் சந்தேகம்.’

‘எட்டாம் மாசத்தில சரவணை பிறந்தா ஏன் சந்தேகம் வரவேணும்?’

‘கலியாணமாகி பத்து மாசத்துக்குப் பிறகுதான் பிள்ளையள் பிறக்கும். எனக்கு எட்டாம் மாசத்தில பிறந்துதெல்லோ, அதால நான் கலியாணத்துக்கு முன்னால ஆரோடயோ படுத்திட்டனெண்டு அந்தாள் நெச்சிட்டுது.’

‘அப்பிடி நடந்திதோ, அக்கா?’

‘பல்லை உடைச்சிடுவன்… சரவணை குறைப் பிரசவப் பிள்ளை. அதுகின்ர கதை பேச்சுகளைப் பாத்தியே? அது நல்லாய்ப் பேசத் துவங்கவே இன்னும் ரண்டு வரியம் செல்லுமாம்.’

‘அப்பிடியெண்டா உண்மையில உங்கட ஆளுக்கு புத்தியில்லத்தான், அக்கா.’

அறிதலால் கூருணர்ச்சி கொள்வதற்கு எந்த விஷயமென்று அவளுக்கு எல்லைகள் இருந்திருக்கவில்லை. அவள் ஆர்வத்தோடேயே எல்லாம் அறிந்தாள்.

அதை அவளது தந்தையின் மரணமும், தாயுடன் தோட்டக் கூலியாகச் செல்லநேர்ந்த நிர்ப்பந்தமும் நாளடைவில் மறக்கவைத்தன.

வேலைக்குப் போய்வரும் வேளையில்தான் உயரமாய் வளர்ந்து, தசை நார்களை வேண்டிய இடங்களில் கட்டிக்கட்டி வைத்ததுபோல் உடம்பமைந்த ஓர் இளைஞனை அவள் காண நேர்ந்தாள். கண்ட கணத்தில், வல்லைக் காட்டில் மறைந்திருந்து வழிப்போக்கர்களைத் தாக்கியும் கொன்றும் பொருள் கவரும் கொடுமறவர்களில் ஒருவனென்ற துணுக்கமே அவளிடத்தில் பிறந்தது. ஆனால் அந்தக் கண்களில் மின்னிய மென்மையும் கனிவும் அவ்வாறானவனல்லவென அவளைத் தெளிய வைத்தன.

சிலநாட்களில் அவன் அவளது குடிசைக்கு அண்மையிலும் காணப்பட்டான். அப்போது அவன் சிரித்தான். அவள் குடிசைக்குள் ஓடி தன்னை மறைத்துக்கொண்டாள். அவன் குடிசையைப் பார்த்தபடி நெடுகவே நடந்து மந்திகை – கொடிகாமம் தெருவிலேறி மறைந்துபோனான். தான் பதிலுக்குச் சிரிக்காதது பெரிய துக்கமாகிப் போய்விட்டது அவளுக்கு.

மறுபடி அவனைக் காண காத்திருந்த ஒருநாளில் அவனைக் கண்டவள், அவன் சிரிக்க முன்புபோலவே ஓடியொழிந்தாள். ஆனால் அவ்வாறு செய்வதன் முன் மறக்காமல் சிரிக்கச்செய்தாள். அவள் அதிலடைந்த புளுகம் பெரிய பெரிய ஆசைக் கனவுகளை அவளுள் கிளர்த்திவிட்டது. சிரிப்பின் தொடர்ந்துமான பரிமாற்றங்களில் அவனுள்ளும் தன்போல் ஆசைகள் துடித்திருப்பதை அவளால் உணரமுடிந்தது.

மாரி போய் கோடை வந்தது. அவனது பிரசன்னம் அடிக்கடி சம்பவித்துவந்த ஒருநாள், குடிசையில் செம்பவளம் தனியே இருக்கநேர்ந்த பொழுதில் திடும்மென அவ்விளைஞன் குடிசையுள் நுழைந்து அவளை நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டான். திடுக்கிட்டாலும் கூச்சலிடாதிருந்து அவ்விறுக்கத்தை அவள் சுகிக்கச் செய்தாள்.

அது பலரும் அயல் குடிசைகளில் வேலைக்குச் சென்றிருந்த நேரமாய் இருந்தது. அவன் நிலைமையைச் சாதகமாக்காமல் பிரிகிறபோது தான் கூப்பிடும்வேளை தன்னுடன் அவள் வரச் சம்மதமாய் இருக்கிறாளாவெனக் கேட்டான்.

அவள் சுணங்காமலே சொன்னாள்: ‘சம்மதம். எப்ப வரவேணும்?’

அவன் சிரித்துக்கொண்டே, ‘சூடடிப்பெல்லாம் முடிய கையில கொஞ்சம் காசு சேரும், அப்ப’ என்றான்.

கையிலே அவனுக்கு எப்போது காசு சேருமென அவள் காத்திருக்க, ஆனியில் சந்நிதி கோயில் கொடியேற தான் அவளைக் கூட்டிச் செல்வதாக ஒருநாள் வந்து அவன் சொல்லிப்போனான்.

ஆனி பிறந்தது. சன்னதி கொடியேறியது. தங்கமணி அக்காவுக்குமட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டு  அவனுடம்போகினாள் செம்பவளம்.

வன்னியில் தாங்கள் தங்கியிருக்க அந்த இளைஞன் – கதிரமலை - ஏற்பாடு செய்திருந்த கமக் குடிசைக்கு ஒரு மாலை நேரம் அவர்கள் வந்துசேர்ந்தார்கள்.

அவனது நண்பன் கமக் குடிசையைக் கூட்டிப்போய்க் காட்டியபோது, அது ஏறக்குறைய பாதிக் கூரை காற்றினால் பிய்த்தெடுக்கப்பட்டதாக இருந்தது. பாம்பு மற்றும் விஷ ஜந்துகள் இல்லாவிட்டால் அப்போதைக்கு அதுபோதுமெனவும், அதுவே பேருதவியெனவும் கதிரமலை தன் நண்பனுக்கு மகிழ்வோடு சொன்னான். சில நாட்களில் புதிய கிடுகுகள் வாங்கி வேய்ந்துகொள்ளலாமென நண்பனும் நெகிழ்ச்சியோடு உறுதிகொடுத்தான்.

இரவுச் சாப்பாடு முடிந்து ஒரு மண்பானை தண்ணீரோடும், ஒரு பனையோலைப் பாயுடனும், கைவிளக்கோடும் நண்பன் வீட்டிலிருந்து குடிசைக்கு வந்த செம்பவளத்துக்கும் கதிரமலைக்கும் வாழ்வின் முதலும் முக்கியமானதுமான படலம் அங்கேதான் தொடங்கியது.

பாயில் நிமிர்ந்து முகடு பார்த்துக் கிடந்திருந்தாள் செம்பவளம். பிய்ந்த கூரையினூடாக வெளி தெரிந்தது. நிலாக் காலமாயினும் மழைச் சிணுக்கம் காட்டி மேகங்கள் அதை மூடிமறைத்திருந்தன.

அவன் அவளை ஆதூரத்துடன் நெருங்கி அணைத்தான். அவள் வெளிச்சத்தில் வெட்கப்பட்டு உடம்பைக் குறுகியபடி எரியும் கைவிளக்கை தன் விரலால் சுட்டிக்காட்டினாள்.

அவன் புரண்டுசென்று விளக்கை அணைத்தான்.

பாதியளவு பிய்ந்த கூரைவழி நட்சத்திரங்கள் முகிலினூடாக மின்னின. வெண்மையான கருமையான மேகங்களின் அசைவும் அவள் கண்டாள். இன்பமேறும் அக் கணத்தில்,  மூடியிருந்த மேகங்கள் விலகியோட வெளித்த நிலாவிலிருந்து பிரகாசம் பீரிட்டு குடிசைக்குள் கொட்டியது. வௌிச்சத்தில் அவளுக்கு  மறுபடி வெட்கம்வரப் பார்த்தது. தேவையில்லையென அவள் அதை விலக்கினாள். ஏனெனில் அவளது நிர்வாணத்தை முழுவதும் மறைத்த உடையாய் அவன் அப்போது இருந்திருந்தான்.

அவன் தோள்கள் மேலாய் நிலாக் கண்டபடி அன்று அவள் அனுபவித்தது பெரிய சுகமாய் இருந்தது. தங்கமணிகூட அச் சுகம்பற்றிச் சொல்லியிருக்கவில்லை. அச் சுகம், ஒரு தரமில்லை, இரண்டு மூன்று நான்கு ஐந்தென பல தரங்களில் அசுர எல்லையடைந்தது.

இவ்வாறாக மாதமொன்று ஆன நிலையில், தாயாரும் தங்கமணியும் நவசி மாமாவும் ஒரு மதிய நேரத்தில் செம்பவளம் குடியிருந்த குடிசை வாசலில் வந்து நின்றார்கள்.

தூர நின்ற கதிரமலை கண்டுவிட்டு விரைந்து வந்தான்.

தகராறு, பிடுங்குப்பாடென எதுவுமில்லை. தாயார் மட்டும் மௌனமாயிருந்து அழுதாள். அழுது முடிய சொன்னாள்: ‘நான் சாகுமட்டும் நீ அநாதையாயிருக்கத் தேவையில்லை. இஞ்சயிருந்தது போதும், ரண்டுபேரும் வீட்டை வாருங்கோ.’

அன்றிலிருந்து செம்பவளத்தின் மணவாழ்வு சொந்தவூரில் மந்திகை – கொடிகாமம் பெருந்தெருவுக்குச் சமீபமாயுள்ள வீட்டிலென ஆகிப்போயிற்று. ஆயினும் தன் முதலிரவின்போது வன்னியில் கண்ட அந்த நிலாவை அவள் எங்கு சென்றபோதும்  மறந்துபோகவில்லை. மறக்க நிலாவும் அவளை விடவில்லை. அவள் சென்றவிடமெல்லாம் அதுவும் சென்றுகொண்டே இருந்தது.

(தொடரும்)

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்