சாம்பரில் திரண்ட சொற்கள் 3

 


5

மார்கழி பிறந்திருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கலண்டர்ப்படியான குளிர் காலம் தொடங்கிவிடும். குளிரிருந்தது. ஆனாலும் குளிர் காலத்துக்கான குளிராக வெளி இருக்கவில்லை. ஜாக்கெற்றைப் போட்டுக்கொண்டு சுந்தரம் யாழ்ரன் தமிழ்க் கடைவரை போய்வர நடையில் கிளம்பினார்.

பின்முற்றத்தின்  சாய்வுப் பாதைவழி மேலேறி அவர் முன்புற தெருவுக்கு வர, பள்ளி முடிந்து பள்ளிவேனில் வரும் மகனுக்காகக் காத்திருந்த சாந்தரூபிணியை வீட்டு வாசலில்  கண்டார். முன்பெல்லாம் அவளேதான் மகனை பள்ளியில் விட்டும், திரும்ப வீட்டுக்கு அழைத்தும் வந்துகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கென்றொரு கார் இருந்தது.

குளிர்கோட்டும், தலையில் கம்பளித் தொப்பியுமாக நின்றவளை முதலில் இனங்காண அவருக்குச் சிரமமாக இருந்தது. அவள் புன்முறுவல் காட்டியபோது அடையாளம் கண்டுகொண்டார்.

அவ்வாறான சமயங்கள் அபூர்வமானவை. ஒரே வீட்டில் கீழும் மேலுமாக இருப்பவர்களானாலும் அவரவரையும் வாழ்வின் விசைகள் தத்தம் திசையில் இழுத்துச் சென்றவாறிருக்கையில், அவ்வாறான தருணங்களை தம் குறைநிறைகளைத் தெரிக்கவோ, குறைந்தபட்சம் ஓர் உசாவலைச் செய்துகொள்ளவோ வீட்டுக்காரரும் குடியிருப்பவரும் தவற விட்டுவிடுவதில்லை.

அவரும் நின்று நலம் விசாரித்ததோடு, பேச்சு வாக்கில்போல பத்து பதினொரு மணிக்கு மேலேயும் மேலே நடந்துதிரியும் தொம்… தொம் நிலவதிர்வெழுவதைச் சொல்லி, ‘எனக்கொண்டுமில்லை, அன்ரிதான் பாவம், நித்திரை குழம்பினா விடிய விடிய நித்திரை வராமல் கிடந்து கஸ்ரப்படுவா’ என குறைவிளக்கமும் செய்தார்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னால் இரவு எட்டு மணிக்கு மேலே நிலமதிர்ந்த நடையும் பேச்சுத் தொனியும்  வழக்கத்தைவிட கூடுதலாகக் கேட்டன. சினத்தின் வரிகள் அதிலேயே எழுதியிருந்தன. சுந்தரம் செவிப்புலன் தீட்டினார்.

‘ராவில நடைச் சத்தம் பெரிசாய்த்தான் கேக்கும்; அதை அட்ஜஸ்ற் பண்ணிப் போகவேணும்; என்ன தேவையோ, அவசரமோவெண்டு யோசிக்கவேணும். அதை விட்டிட்டு… அன்ரிக்கேலாது, அதால எல்லாரும் பதனமாய் நடவுங்கோவெண்டா… எப்பிடி? விருப்பமில்லாட்டி வேறவீடு பாக்கச் சொல்லு.’

ரவீந்திரநாதனின் குரல்தான். கீழே கேட்கவேண்டுமென்று பேசியதுபோல பலமாக இருந்தது.

அப்போதுதான் சாந்தரூபிணி தன் முறைப்பாட்டை கணவனுக்குத் தெரிவித்திருக்கிறாளென்பதை சுந்தரம் ஊகித்துக்கொண்டார். தான் சாந்தத்தைச் சுமந்துகொண்டு ரவீந்திரனைக் கொதிக்க வைத்துவிட்டாளேயென்று பெரிய கவலையாகிப்போனது அவருக்கு. அவர், தானே வாழ்வுப் பிரச்னைகளில் சிக்குண்டும், சிவயோகமலர் சார்ந்த கடந்த கால எண்ணங்களால் வதைப்புண்டும் இருந்ததில், எந்தளவு சிறிய முரணையும் வீட்டு உரிமையாளரோடு எதிர்கொண்டுவிட முடியாதளவு களைத்துப் போயிருந்தார்.

ரவீந்திரனுக்கான மறுநாளின் எதிர்வினைபற்றி அவர் யோசித்தே ஆகவேண்டும்.

குளிர் விரவியிருந்த இரவையும் பொருள்செய்யாது அவர் பின்விறாந்தைக் கதிரையில் போய் அமர்ந்தார்.

வெளியே பூப்போல் வெண்நீலப் பனி தூறிக்கொண்டிருந்தது. வரப்போகும் குளிர் காலத்தின் முதல் பனியாக இருக்கவேண்டும். பனித் தூறலில் வெளியெங்கும் வழக்கத்தைவிட கூடிய ஒளிச் சிதறல்.

அவர் மனம் நிலைமையை நன்கு சீர்தூக்கும் நிதானமடைந்தது.

எவ்வளவோ பிரயத்தனத்தில் யார் யாரையோ தொடர்புகொண்டு, வாடகை உத்தரவாதம் அளித்து அந்த வீட்டை வாடகைக்குப் பெற, தான் பட்ட அவஸ்தைகளை அவர் மறந்துவிட முடியாது.

அதற்கு முன்னாலும், ஒரு வருஷம்கூட ஒரு வீட்டில் நிலையாய்த் தங்கமுடியாமல் நான்கு வருஷங்களாய் பல சீரழிவுகளைப் பட்டவர் அவர். வீடு மாறுதலென்பது ஒரு குடும்பத்தின் பெயர்ச்சி. சாமான்களை ஏற்றி இறக்கி உடைத்து நொருக்குவதோடு அந்தச் சிரமம் முடிந்துவிடுவதில்லை. தள்ளுவதைத் தள்ளி, கொள்ளுவதைக் கொண்டு புதுவீடு வருவதென்பது பெரும் பிரயத்தனத்தை வேண்டிநிற்பதாகும். பின்னால் அவற்றை அடுக்கி ஒழுங்குபடுத்துவதென்பது இன்னும் கூடிய அலுப்பைக் கொண்டது.

அத்தனை சிரமங்களுக்குள்ளும் இருக்கும் ஒரேயொரு ஆசுவாசம், வாடகை வீடெடுப்பவர்கள் வீடெடுத்துக் கொடுக்கும் ஏஜன்ஸிக்கு பணம் கொடுக்கவேண்டி இருப்பதில்லை என்பதுதான். அது வீட்டுச் சொந்தக்காரர் தலையில் ஏறிவிடுகிறது. 

வீட்டை, வாழ்தலின் மகா அவசியமான அம்சமாக எல்லா மக்களுமே கொள்வரெனினும், அதை வாழ்க்கையினதும் பண்பாட்டினதும் முக்கியமான புள்ளியாகக் கொண்டவர்கள் கிழக்காசிய மக்கள், குறிப்பாக தமிழர்கள், என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. அந்த நிருமாணத்தின்மீது விழும் ஒவ்வோர் அடியும், ஒவ்வோர் அதிர்வுமே அதனதன் வேகத்துக்கும் உறுதிக்கும் தக பாதிப்பை ஒரு குடும்பத்தின்மேல் சுமத்திவிடுகிறது. அவர் உணர்ந்தேயிருக்கிறார்.

தமது நாட்டிலுள்ள வீட்டைத் துறந்து உயிரபயம் காண மேற்குநோக்கி ஓடிவந்தவர்களுக்கு, உடனடி அவதி தீர்ந்த கணத்தில் வீடு தேவையாக மாறியது. ஏற்கனவே வாடகை வீட்டில் குடியிருந்தவர்களுக்கும் சொந்தவீடு கனவாக வெகுகாலம் செல்லவில்லை. அதற்காக அவர்கள் தமக்குத் தெரிந்த, தெரியாத வேலைகள் அனைத்திலும் நுழைந்து ‘இரண்டடி’, ‘மூன்றடி’யென மாய்ந்தார்கள்.

நண்பர்களுடனான உரையாடலில், குறிப்பாக அவருடன் ஒரே கல்லூரியில் பணியாற்றி 83 ஆடிக் கலவரத்துடன் கனடா வந்து சேர்ந்த பூகோள பாட ஆசிரியர் சோமசுந்தரத்தின் மகன் ஶ்ரீரஞ்சனின் தொடர்பில், கனடாவில் வீடு வாங்குதல் விற்றல் வாடகைக்கு எடுத்தல், தொடர்ந்து தளவமைப்பு வர்ணம் பூசுதல் புதிதாக்கல் மற்றும் பின் முன் புற்றரை அமைத்தல், நடைவழிக் கல் பதித்தலுடன் அவற்றின் பராமரிப்புபோன்ற பல விஷயங்களை சுந்தரமும் அறிந்திருந்தார்.

அவருக்கே ஒருபோது வீடு விற்பனை முகவராகும் ஆசை தோன்றி ஓரிரு மாதங்கள் அதற்கான பரீட்சையெடுக்க வார விடுமுறை இலவசப் பயிற்சி வகுப்பு ஒன்றுக்கும் போய்வந்துகொண்டு இருந்தார். லட்சங்களைக் குவிக்கும் தொழிலாக பலபேரை ஈர்த்த அந்தத்துறை தன்னையும் வாரியெடுத்து அலைக்கழித்த விதத்தை எண்ண அவருக்கு  கொடுப்புக்குள்ளாய் இப்போதும் சிரிப்பு வந்துகொள்கிறது.

அக் காலப் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடு விற்பனை முகவர்கள், உபமுகவர்கள் தமிழரிடையே தோன்றினார்கள். பஞ்சாபி, உருது, இந்தி, தெலுங்கு, சிங்கள, தமிழ் முகவர்களின் அலுவலகங்கள் ஸ்கார்பரோ, ரொறன்ரோ, மார்க்கம், மிஸிஸாகாபோன்ற நகர்களின் மய்யக் கட்டிடங்களில் தோற்றம் பெற்றன. அவற்றில் பணியாற்ற பன்னூறு பல்லின அலுவலக நிர்வாகம் தெரிந்த பெண்கள் உருவாகினார்கள். முகவர்களின் பெயர்களை தமிழ்ப் பத்திரிகைகளில் அவர்கள் செய்யும் விளம்பரங்கள் நாடளாவி சமூகத்தவர் வீட்டு வாசல் கடந்து உள்நுழைந்தன. தமிழ்ப் பத்திரிகைகளின் இருத்தலே அவர்களின் விளம்பர பலத்தாலென்றும் ஆகிப்போனது. தன் சமூகத்தில்  வாய்வல்லபமும் விஷய விளக்கமும் உள்ளதாகப் பேர்பெற்ற முகவன் லட்சம் லட்சம் டொலர்களை அனாயாசமாகச் சம்பாதித்தான். மெக்ஸிக்கோ கியூபாவென்று குடும்பங்களுடன் உல்லாசப் பயணங்கள் மேற்கொண்டான். இன்னும் வெகுசிலர் தத்தம் அலுவலகப் பெண்களுடன் அல்லது அறிமுகமாகிய வேறு பெண்களுடன் தாய்லாந்தென்றும் தென்கொரியாவென்றும் ரகசிய விடுமுறைகளை அனுபவித்தார்கள். அது குடும்ப அமைப்புக்களில் விரிசலை விழுத்தியதில் குடும்பமுமின்றி கடைசியில் குட்டிகளுமின்றி பலபேர் வாழ்வு சிதிலமாகிப்போனதற்கு அவரிடத்தில் நிறைந்த சாட்சியங்கள் உண்டு. மேற்குலகின் புலம்பெயர் சமூகங்களிடையே அதுவொரு புரட்சியின் எழுச்சிகொண்டிருந்ததென சரியாகவோ தவறாகவோ சுந்தரம் எண்ணினார்.

அவரது வீட்டுச் சொந்தக்காரனான ரவீந்திரன்கூட வீடு விற்பனை முகவனாகயிருந்தான். வீட்டுப் பெறுமதி சடுதியில் சரிந்திருந்த காலமாக அது இருந்ததில், வீடு விற்பனை மட்டுமன்றி, அது சார்ந்த அனைத்துத் தொழில்களிலும் மந்தநிலை நிலவியது. அதனால் பாதிக்கப்படாத வீடு விற்பனை முகவன் எவனுமிருக்கவில்லை. அந்த வருமானக் குறைவின் வாழ்நிலை அந்தரம், தன் குறைவிளக்கத்தை மனைவி சொல்லக் கேட்ட ரவீந்திரனை சினப்பித்தம் கொள்ள வைத்திருக்குமென எண்ண சுந்தரத்தின் மனம் மேலும் தணிந்தது.

அவர் அவ்வாறான முரண்கள் எழாது தவிர்த்தேயாகவேண்டும். அவர் நிறைய சூடுபட்டவர். சூடுகண்ட பூனை அடுப்படிக்குச் செல்லாது! தானே பலபேருக்குச் சொன்ன உதாரணமாக அவரே ஆகியிடமுடியாது.

2010இல் அவர் ஒரு சொந்த செமி ரவுண் ஹவு (Semi Town House)ஸில் குடியிருந்தார். வங்கியில் ஈட்டுக் கடனெடுத்து வாங்கியது.  கடனுக்கான மாத வட்டியும், கடனில் மாதத் தவணைக்கான தொகையும்  மாதம் மாதம் செலுத்தவேண்டியிருந்தது. வீட்டுக் கடன் வட்டி விகிதம் மிகக் குறைவாயிருந்த காலத்தில் வங்கிக்கு ஈடு சென்றதில் செலுத்தவிருந்தது சிறிய தொகையாகயிருந்தது. தன் சிறிய ஊதியத்திலேயே அதைச் சிரமமின்றிச் செலுத்த அவராலும் முடிந்திருந்தது.

அடுக்கு மாடி வீடு (Condominium), ரவுண் ஹவுஸ் (Town house), செமி ரவுண் ஹவுஸ் (Semi – Town house), பங்களா ஹவுஸ் (Bangalow House ) என அவ்வவ்விடங்களில் பெயர்பெற்றிருந்த வீட்டு வகைப்பாடுகள் யாவும் கட்டுமானமும் முன் பின் நிலவுரிமையும் சார்ந்தவை. அவற்றிற்கான விதிகளும், குறிப்பாக நிலவரி நீர்வரி சொத்துவரிபோன்றவை, வித்தியாசமானவை.

ஒருநாள் அவரது மகள் அபிநயவல்லி இங்கிலாந்திலிருந்து திடீரென ஸ்கார்பரோ வந்தாள். தனக்கு லட்சம் ஸ்ரேர்லிங் பவுண் தேவையென நின்றுகொண்டாள். கனடா வந்த புதிதிலேயே ஒரு பயிற்சிபெற்ற ஆசிரியருக்குரிய வேலை தேவையென மினப்கெடாமல், கிடைத்த தொழிற்சாலை வேலையொன்றில் நுழைந்துகொண்டு அன்றாடச் செலவீனங்களை ஒப்பேற்றி வந்தவருக்கு எந்த உபாயமும் தென்படவில்லை. அவள் கேட்ட அந்தத் தொகை அவருடைய கனவின் எல்லைக்கும் அப்பாற்பட்டதாய் இருந்தது.

ஆனால் அபிநயவல்லி தன் அண்ணனோடு முன்னரேயிட்ட திட்டத்தோடுதான் வந்திருந்தாளென்பது நடராஜசிவம் தலையிட்டபோதுதான் தெரியவந்தது.

‘லட்சம் லட்சமாய்ச் சிலவழிச்சு, நகை செய்துபோட்டு, காணி வீடெண்டு சீதனம் குடுத்து அவளுக்கு நாங்கள் கலியாணம் கட்டிவைக்கேல்ல. தானாய்க் கலியாணம் செய்தாளெண்டாலும் நல்லாயிருந்தாள். இப்ப ஒரு அந்தரம் அவளுக்கு வந்திட்டுது. நாங்கள்தான் எதாவது செய்யவேணும். எங்களைவிட்டால் அவளுக்கும் வேற ஆர் இருக்கினம்? அந்த வீடும் உங்களுக்குப் பெரிசுதான, ஐயா? அதால வீட்டை வித்திடுங்கோ. இப்ப வீடு கனடாவில நல்ல விலைக்குப் போகுதாம், அவளின்ர காசைக் குடுத்தாலும் மிச்சக் காசை வைச்சு சின்னனாய் கொண்டோவிலயாச்சும் ஒரு வீடு வாங்கலாம்’ என்றான்.

அதனால் அபிநயவல்லியின் தேவையென்னவோ நிறைவேறியதென்றாலும், சுற்றிவர பூந்தோட்டம், அழகிய பின்புற புல்வெளி, மாபிள் பதித்த நடைபாதையாக இருந்த தன் கனவு வீட்டை அவர் இழந்துதான்போனார்.

ஒரு வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டு ஸ்கார்பரோ நகர விளிம்பில்  வசதிகள் பெரிதாயற்ற ஒரு பழைய வீட்டை அவர் வாங்கினார். அதற்கும் அங்கே இங்கே வேலைசெய்வதாக பொய்ப் பத்திரங்கள் சமர்ப்பித்து ஒருவன் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். இந்தச் சுத்துமாத்து வேலைகளைக்கூட தொழிலாக வைத்துக்கொண்டு, அலுவலகமும் விளம்பர மகிமைகளும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்களேயென்பது சுந்தரத்துக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

அங்கேகூட அயல் வீடுகளோடு முரணேதும் கொண்டுவிடாமல் மிகுந்த அவதானமாய்தான் அவர் குடியிருந்தார். தளர்ந்தும் நோயாளியும் ஆகிப்போன மனைவியின் பராமரிப்பைச் செய்துகொண்டு அவரது காலம் அங்கே நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் அக் காலப் பகுதியில் கனடாவின், பொதுவாக வடஅமெரிக்காவின், பொருளாதாரத்தைக் குறிப்பாகத் தாக்கிய அச் சீணத்தில் அவரும் தவறிப் போகவில்லை. வாரத்திற்கு ஐந்து வேலை நாட்களில் மூன்று நான்கு நாட்களே வேலை கிடைத்தது. வங்கிக்குக் கட்ட வேண்டிய தவணைத் தொகையை ஒழுங்காகச் செலுத்த அவ்வப்போதாயினும் அவரால் முடியாது போனது. வீட்டை வாங்க பிள்ளைகளூடாய் அவரை அவசரப்படுத்திய மனைவியால் ஒரு கனடிய டிம்முக்குப் பிரயோசனமிருக்கவில்லை. தொலைபேசி, தொலைக்காட்சி பில்களிலும் நிலுவை விழத் தொடங்கியது.  உரிய காலத்தில் கட்டப்படாத வங்கித் தொகைக்கும் பில்களுக்குமான தண்டத் தொகை மாதத்திற்கு நாற்பது, அறுபது டொலர்களென எகிறியது. அவரால் முடியவேயில்லை.

பில்கள் நிலுவையாக, அவை கடன் வசூலிக்கும் கொம்பனிகளிடம் பொறுப்பளிக்கப்பட்டதில், நாளுக்கு பத்து தொலைபேசி அழைப்புகளாவது மிரட்டும் தொனியில் வரத் தொடங்கின. அவர் உண்மையில் மிரண்டே போனார்.

சிவயோகமலரின் உடல்நிலையும் வரவர மோசமாகிக்கொண்டு வந்தது. வாகனமற்ற நிலையில் குடும்ப வைத்தியரிடமென்றும், ஆஸ்பத்திரியென்றும், சிறுநீரக சிறப்புக் கிளினிக்குகளென்றும் அவளைக் கொண்டுசெல்வதற்கான நேரத்திற்காய் அவர் பட்ட சிரமங்கள்…! அவர் திணறினார்.

மனைவியைப் பராமரிப்பதா அல்லது ‘இரண்டடி’ அடித்தாவது  தவணை முறையிலேனும் கடனை அடைப்பதாவென அவருக்குத் தெரியவில்லை. கடைசியில் எஞ்சியிருந்த ஒரேவழியில் நுழைய அவர் தீர்மானித்தார். 

மகனைத் தொடர்புகொண்டு தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். மகனிடமிருந்து மறுப்பாக ஒரு வார்த்தை பிறக்கவில்லை. நிலைமையை அவனும் உணர்ந்திருப்பான்போலும். சிறிதுநேரத்தில் ‘சரி, அய்யா. வேற வழி இப்போதைக்கு உங்களுக்கும் இல்லைத்தான். வீட்டை வித்திடுங்கோ’ என்றான். அவரும் வீட்டை விற்று கடன்களை அடைத்துவிட்டு வாடகை வீடொன்றுக்கு குடிபோனார்.

இது நடந்தது 2014இல். அன்று பிடித்த சனியன்தான். மூன்று வீடுகள் மாறிவிட்டார். அப்போது வேலையுமில்லாத நிலையில் முதியோர் ஒய்வூதியப் பணத்தை வைத்துக்கொண்டு ஸ்கார்பரோவில் அல்லது மார்க்கத்தில் வீடெடுக்கிறது எவ்வளவு சிரமமென்று கேள்வியில் பட்டிருந்ததை தானே அனுபவித்தார். இரண்டாவது வீட்டிலிருந்து, மலரின் இரவு நேர தொண தொணப்புகளால் தமது நித்திரை குழப்ப முறைப்பாட்டில் மலருக்கும் வீட்டுக்காரருக்குமிடையே வாக்குவாதம் மூண்டதும், கடைசியில் பொலிஸ் வந்து அவரை விரைவில் வெளியேறப் பணித்ததும் அவருக்கு கனவில் நடந்தவையல்ல. 

எல்லாம் சமாளித்து இந்த வீட்டுக்கு குடிவந்ததுவரை ஒரு பெருங்கதையே அவரிடத்திலுண்டு.

நரை திரை மூப்புகள் தந்த அனுபவத்தின் மேலாக தன் இயல்பான பொறுதிக் குணமும் சேர்ந்து பூரண சமாதானம் மனத்தில் நிலைபெற்றவராக சுந்தரம் எழுந்தார்.

அப்போது நீல வெண்பனித் தூறல் நின்றிருந்தது. சடங்களில், கீழே புற்றரையில் இறங்கியிருந்த ஓரங்குலத்திற்கும் மேலான  பனிப் பஞ்சு நிலச் சூட்டிலும் காற்றின் உரசலிலும் மறையத் துவங்கியிருந்தது.

அன்றிரவு ரவீந்திரன் விளைத்த சூறாவளிபோல் எதுவும் சம்பவித்துவிடவில்லை என்பதுமாதிரியே நாளை அவர் நடந்துகொள்வார்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

6

அன்று மாலை வீடு திரும்ப வழக்கத்துக்கு முன்னதாக ரவீந்திரனுக்கு முடிந்திருந்தது. மூன்று மணியளவில் கதவைத் திறந்துகொண்டு வந்தவனைக் கண்ட சாந்தியை, அவர்களுக்கு இடையிலிருந்த உறவின் முறுகலை மீறியும், அது சிறிது திகைப்படையச் செய்தது.

இருட்டுவதற்கு முன்னால் அவன் வீடு திரும்பிய வெள்ளிக்கிழமை கடந்த நான்கு வருஷங்களில் அபூர்வம். கடந்த இரண்டாண்டு வெளியில், வெள்ளிகளிலேயே அதிகமும் போதையுடன் வருகின்றவன், அன்றைக்கு போதையின்றித் திரும்பியது இன்னும் அபூர்வம்.

உள்ளே வந்தவன் ஏதாவது கேட்பானாவென அவனையே பார்த்தபடியிருந்த சாந்தியிடம் தேநீர் கேட்டான். ‘சீனி குறைச்சு.'

வெள்ளிக்கிழமைகளில் அவன் தேநீரும் அருந்துவானாவென்ற அதிசயத்தின் மெல்லிய படபடப்பு அவளது கண்களிலடித்தது. தாமதமின்றி போட்டுவந்து கொடுத்தாள்.

ஒளி மறைப்பு பிளாஸ்ரிக் சட்டரை மேலே சுருக்கிவிட்டு பெரிய கண்ணாடி ஜன்னலின் ஓரம் ஒரு கதிரையை இழுத்துவந்து போட்டு தெருவைப்  பார்த்தபடி கூடத்துள் அமர்ந்துகொண்டு அவன் தேநீர் அருந்த ஆரம்பித்தான்.

ஒவ்வொரு வீட்டின் முன்னாகவும் அம்பாரமாய்க் குவிக்கப்பட்டிருந்தது, கடந்த இரண்டு நாட்களாக பகலிரவாய்க் கொட்டிய நீலவெண் பனி. வீடுகளின் கூரைகளிலும், இன்னும் இலையுதிர்த்தாது நின்றிருந்த குளிர்கால மரங்களிலும் அது அப்பியிருந்தது. எங்கும் பனியாகயிருந்தது வெளி.

காற்று வீசாததில் பனித் தூவல் இறுகாது இன்னமும் மெதுமைகொண்டிருந்தது. அந்த மெதுமை தனக்குள் ஒரு கணகணப்பை இன்னும் கொண்டிருந்ததை, காற்றுவெளியில் வியாபித்திருந்த கதகதப்பு உணர்வித்தது.

சிறுவர்கள் பனிப் பந்து உருட்டி ஒருவர்மீது ஒருவர் எறிந்தும், பனிக் குன்றில் சறுக்கி விழுந்தும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பள்ளி விடுமுறைக் காலத்தில் நத்தாருக்கு முன்பாகவே சிறுவர்களை மகிழ்விக்க வந்த நீலவெண் பனிப் பொழிவு, வெளியில் வீசிவிட்டிருந்த மனோகரத்தில் பெரியவர்களும் குதூகலமடைந்தார்கள். சிறுவர்களைப் பராமரிக்கும் சாக்கில் அவர்களும் பனி விளையாடினார்கள். அவர்களின் வெட்கத்தின் சிரிப்பலைகள் நாலாபுறமும் ஒலித்தன. அத்தனை ரம்மியங்களிலும் ரவீந்திரனின் மனம் அசைய மறுத்து, நினைவின் புதைகுழியில் ஆழ்ந்துகிடந்தது.

அப்போதைய அவனது கவலைகள் உடனடித்தனம் வாய்ந்தவை. ஆயினும் அவை பழையவற்றுடன் தொடர்பும் பூண்டவை. அவற்றினால் அவன் வதைபட்டிருக்கிறான் கடந்த சில நாட்களாக.

அந்த வாரம் முழுக்க அவனை அலைவித்துக்கொண்டிருந்த நினைவு சுந்தரத்தினதாக இருந்தது. சுந்தரம் சொன்னதாக சாந்தி தெரிவித்த தகவலில், தான் அன்று மிகைக் கோபம் காட்டிவிட்டதற்காய் தன்னுள்ளேயே அடக்கமுடியா வெகுட்சியின் அலைகள் கொண்டவனாய் அவன் இருந்தான். அன்றைய நாள் வெள்ளிக் கிழமையாய் அமைந்து, அந்த உணர்வை மேலும் இரண்டு மடங்காய்ப் பெருக வைத்ததோடு, விரும்பாத வேறு நினைவுகளையும் உடனிழுத்து வந்துவிட்டது.

ஒரு மாயத்தின் கதவு அகலத் திறந்ததுபோல் வெள்ளிகள்தான் அவனை அவனில்லையாய் ஒழுகவைத்தன. அவையே சுடு சாம்பராய் சாந்திமீதும் படிந்து அவளை அவனுடன் பின்னமுற்றுப்போக வைத்தன. அந்த நாளின் நினைவுதான் சுந்தரத்தின்மீது காட்டமான சொற்களை வீசவும் அவனைச் செய்திருந்தது.

நியூ சென்சரி ஹோம்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பணியாற்றத் துவங்கிய ஆரம்ப காலத்தை அவன் நினைத்துப் பார்த்தான். நிறைந்த வருமானமும், பெரிய கியாதியுமாக ஒரு பொற்காலத்தை அவன் தொழில் அவனுக்கு நல்கியிருந்தது. அந்தக் காலத்திலிருந்து யாரினுடைய பலப் பிரயோகமுமற்று அவன் தானேயாகத்தான் வழுகி கீழே விழுந்தான்.

அந்தக் காலத்தின் சீணம் மெல்லமெல்லத்தான் உருப்பட்டது. முதலில் ஒரு வீட்டைக்கூட விற்கமுடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதாரரீதியாக மிகவும் நொடிந்த நிலைக்கு ரவீந்திரன் தள்ளப்பட்டான். நிறைந்த உல்லாசங்களை குடும்பத்துக்கு வெளியில் அனுபவிக்கக்கூடியதாயிருந்த வசதிகள் மாறி,  வீட்டுச் செலவீனங்களைக்கூட நிறைவேற்றத் திணறும் நிலை உருவாகிற்று. அது இன்பத்தின் ஊற்றெனக் கொண்டாடிய களிப்பிடத்தையும் துன்பத்தின் விளைநிலமாக்கிற்று.

வசதிகள் அவனைத் திசைமாற்றி இழுத்துச்சென்ற வழியில் அவன் எதிர்கொண்ட அனுபவங்கள் கடூரமானவை. வாழ்க்கையில் வசதிகளோடு வாழ்வதிலும் வெகுத்த அவதானம் தேவையென்பதை அவனுக்குணர்த்திய ஞானபாடங்கள் அவை.

தன் புது லெக்ஸஸ் காருக்கு பூஜைபோட ரவீந்திரன் ஒரு வெள்ளியில் கோயிலுக்குப்  போயிருந்தான். அங்கேதான் முதன்முறையாக சிவானியைக் கண்டான். மழை பெய்துகொண்டிருந்ததில் அவளையும் அவளது  தாயையும் வீட்டில் இறக்கிவிட தானேயாக முன்வந்தமை இரக்கத்தின் நிமித்தமாகவே விளைந்தது. ஆனால் அது மெல்ல மெல்ல களவுறவாய் முகிழ்த்து, இன்னொரு குடும்பமாய் அந்த இளவேனில் பருவ காலம் கோடையாய் மாறுவதின் முன்னமே திரண்டுபோனது.

வெள்ளிகளில் சிவானியை, தாயையும்தான், கோவிலுக்குக் கூட்டிச்சென்றான்; புதிய தமிழ்ச் சினிமாக்கள் பார்க்க தியேட்டர்களுக்கு ஏற்றிப்போனான்; நடன இசை நிகழ்ச்சிகள், கலைவிழாக்கள், களியாட்ட விழாக்கள், ஊர் ஒன்றுகூடல்கள் எதையும் அவன் அவர்களுடன் தவறவிடவில்லை. விளம்பரத்திற்காக ஆயிரக் கணக்கில் செலவிட்ட அவ் விழாக்களிலேயே தனது சிறப்பான தொழிலதிப பிம்பம் நொறுங்கிக்கொண்டிருந்ததை அவன் காண முடியாதவனாகயிருந்தான்.

அயலை, தன் சமூகத்தை, தன் மனைவி பிள்ளைகளைக்கூட, அவன் எண்ணவேயில்லை. மாநகர சபையில் ஒரு கவுன்சிலராகும் தன் அடிமனத்தே கிடந்துறங்கிய கனவைக்கூட பொருள்செய்யவில்லையே!

அவ்வாறான ஒழுகலாறு காரணமான கியாதியின் சீணத்திற்கு படிமுறை வளர்ச்சி இருந்தது. அது இறுகிவருவதான புரிதலேற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த வலையிலிருந்து அவன் மீள நினைத்தான்தான். முடியவில்லை. வலையும் கோணல்மாணலாய்ச் சுற்றி அவனை விலகிப்போக  விட்டுவிடாததாகயிருந்தது.

அந்த உறவு அறுபடவிருந்த தருணம் அவனுக்கு மிக மிக இக்கட்டானது.

இருந்தபோதையவிட கழரும்போது மிக்க வலி கொடுக்கும் கழலையாய்ப் போனாள் சிவானி. வீட்டை எழுதிவை, கார் வாங்கித் தா, இல்லாட்டி பேப்பரில போடுவன், பொலிசுக்குப் போவன், வழக்குப் போடுவனென தாயின் அறிவுரைப்படியான  அவனுக்குள்ள தேர்வினை தன் மொழியில் அவள் முன்வைத்தபோது ரவீந்திரன் கலங்கிப்போனான்.

அவர்களை இழப்பில்லாமல் அவனால் கழற்றமுடியவில்லை. கடைசியில் ரவீந்திரன் வீட்டைக் கொடுத்தான்; காரைக் கொடுத்தான்; கேட்ட அனைத்தையுமே கொடுத்தான். அது பொருணிலை யாவற்றையும் இழந்துபெற்ற விடுதலை.

ஆனால் அந்த விடுதலையின் அனுகூலத்தை இரண்டு [BK1] [BK2] வருஷங்களாகிக்கூட கண்ணிலும் காணாதவனாய் அவனிருந்தான். இன்னும் விடுபடாச் சோகத்தின் வரைபடத்தில் அந்தத் துயரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டது.

ஆரம்பத்திலேயே நண்பன் ஈஸ்வரன் அந்தத் தொடுப்பில் எழக்கூடிய  அபவாதங்களை அவமானங்களை ஏமாற்றங்களை சம்பந்தப்பட்டவளின் முன்கதைகள் சில தெரிந்திருந்தவகையில் சுட்டி எச்சரிக்கவே செய்தான். அவன்தான் அதைப் பொருள்செய்யாது முற்றிலுமாய் அந்தச் சேற்றில் அமிழ்ந்துகொண்டான். ரவீந்திரனுக்கு என்றும் தீராத நினைவின் உறைப்பு அது.

நேரம் கழித்த வீடு திரும்புகைகளும், அளவுமீறிய குடியும், மனைவியுடனான அந்நியோன்யத்தில் விழுந்த வெடிப்பும் தன் மீட்சியைக்கூட அனுபவிக்க முடியாதவனாய் அவனை ஆக்கியிருந்தன.

ஒரு வெள்ளிக் கிழமையில் விழுந்த நாசகாரத் தொடுப்பு, மீண்ட காலத்தின் வெள்ளிகளையுமே வெறுக்கும்படி அவனைச் செய்தது.

அவனளவில் அவளே வெள்ளியாக இருந்தாள். எரிந்து விழுந்து அவன் வானத்திலிருந்து மறைந்ததிலும், அவன் பசுமைகளைக் கருக்கியதிலும் அந்த நிகர்ப்பு.

அந்த இருள் அவனை சமூகத்திலிருந்து ஒதுங்கப்பண்ணியது; ஒழிந்துகொள்ளச் செய்தது; அச்சப்படவைத்தது. எதனையும் எவரையும் அவன் அஞ்சினான். எவரின் உரத்த குரலும், எந்த நிர்ப்பந்தமும் தன் பலஹீனம் தெரிந்ததிலான மிரட்டலாகவும் அதட்டலாகவும் அவனுக்குத் தோன்றச் செய்தன. சுந்தரம்மீதான அவனது வெகுட்சியின் மூலமது.

அது அவனை பெருவலி செய்தது.

வித்துவான் வீரகத்தியின் மருமகன் சுந்தரமும் மகளும் வீடு தேடி கஷ்ரப்படுகிறார்களென்று கேள்விப்பட்டபோதே வெறுமனே கிடந்த தனது இரண்டு அறை வோக் அவுட் பேஸ்மென்ரின் நினைவு உடனடியாக அவனுக்கு வந்தது. உதவி செய்கிறபோதே, அப்போதிருந்த பணக் கஷ்டத்தில் ஆயிரம் டொலர் வாடகையாக வருமென்பதையும் அவன் யோசிக்கவே செய்தான். ஆனால் அதை ஊரவர்க்கு வாடகைக்குக் கொடுப்பதில், தனது கடந்த கால அபகீர்த்தி கனடா கடந்து வடமராட்சிவரை சென்றுசேரக்கூடிய சாத்தியத்தால் தயங்கினான்.

அந்தத் தயக்கத்தையும் ஒரு கட்டத்தில் கடக்கவிருந்தபோது, ஏற்கனவே முரண்கொண்ட சமூகத்தவரானாலும், பகைகொண்ட குடும்பத்தவராய் நிலைத்துப் போன தன் மனிதர்கள் என்ன எண்ணுவார்களோவென அவனுக்குக் குழப்பம் வந்தது.

அதை அவனது பெரியப்பா பலவும் சொல்லி நிவர்த்தித்தார்.

‘ஆர்ட் மாஸ்ரரென்று ஏன் சொல்லுறாய்? பேர் சுந்தரம்… யாழ்ப்பாணப் பக்கம்…. இல்லாட்டி தீவுப் பக்கமெண்டு சொல்லியிடு, ஒருத்தருக்கும் தெரியப்போறேல்ல. அவை கீழ இருக்கப்போகின; நீ மேல இருக்கப்போறாய்; அவ்வளவுதான்’ என அவர் உபாயம் சொன்னார்.  ‘எங்கள, தங்கட வீட்டு முத்தத்தில மட்டுமில்லை, றோட்டுக் கேற்றடியிலகூட கால்வைக்க விடாத அந்த ஆக்களிட்டயிருந்து, இப்ப ஒராள் உதவிகேட்டு வருகுதெண்டா, அது எங்களுக்கொரு வெற்றியெல்லோ, ரவி! அதை முதல்ல நீ யோசிக்கவேணும்’ என மேலும் காரணங்களை இறக்கினார்.

அவரது வலிதான காரணங்களைக் கேட்ட பின்னரும், ‘வேலையில்லாத ஆள்; பென்சன்மட்டும்தான் வருமானம்; அதையும் யோசிக்கவேணும், பெரியையா’ என்று மறுபடி ரவீந்திரன் நழுவப்பார்த்தான்.

பெரியப்பா விடவில்லை. ‘பென்சனெண்டாப்போல...? அது நிரந்தர வருமானமெல்லோ? அதோட, அவையின்ர பிள்ளையள் மூண்டும் வெளியில. இஞ்சயும் ஒரு பெடியன் ஒட்டோவாவில இருக்கிறான். அவையை நல்லாய்த் தெரிஞ்ச ஆள் விநாயமூர்த்தி சொல்லித்தான் நான் உன்ர பேஸ்மென்ரை கேட்டது. விநாயமூர்த்தியைத் தெரியும்தான? இஞ்ச… மூர்த்தி அங்கிளெண்டு சொல்லுவின. வேணுமெண்டா சொல்லு, அவரை வந்து கதைக்கச் சொல்லுறன். அவற்ர கறன்ரி போதுமெல்லோ உனக்கு?’ என விடாப்பிடியாய் நின்று அவனைச் சம்மதிக்கவைத்தார்.

பழைய குடும்பப் பிரச்னைகளில் நேரடிச் சம்பந்தமுள்ள அவன் மனைவி சாந்தரூபிணியும் எல்லாம் கேட்டு உம்மென்று முகத்தை வைத்திருந்தாலும் மறுப்பாயேதும் சொல்லாததில், மேலே சுணக்கமின்றி ரவீந்திரன் சம்மதித்துவிட்டான்.

அவ்வாறு பெரியப்பா சொன்ன அத்தனை நியாயங்களையும் அந்த ஒற்றை இரவில் தான் மறந்திருக்கக்கூடாதென அவனுக்குத் தோன்றியது. ‘விருப்பமில்லாட்டி வீட்டைவிட்டு வெளிக்கிடலா’மென்றும் சொன்னானே. நல்லவேளை, அந்த மனிதர் அதுபற்றி அன்றுவரை வாய் திறக்கவில்லை. கண்டார்தான். வழக்கம்போல தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அடுத்தமுறை நேர்ப்படும்போது அவரின் மனம் சமாதானமாகும்படி ரண்டு வார்த்தைகள் சொல்லவேண்டுமென தீர்மானித்துக்கொண்டான்.

 

 

ல்லாம், தன் மகனை எதிர்வீட்டுப் பிள்ளைகளுடன் பனி விளையாடவிட்டு பார்த்துக்கொண்டிருந்த சாந்தி கண்டுகொண்டுதான் இருந்தாள். அவனது இருப்பின் நிலைத்த ஸ்திதியில், அவன் மனத்திலோடிய எண்ணங்களை பெரிதும் பிழையற யூகிக்க முடிந்திருந்தது அவளால்.

சுந்தரத்தின்மீதோ, வித்துவான் வீரகத்தியின் மகள்மீதோ அவளுக்கு எந்தக் கோபமும் கிடையாது. இருவேறு சமூகங்களின் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதும், முப்பது வருஷங்களுக்கு முந்தியதுமான அந்தப் பிரச்னையில்  அவளது குடும்பமே நேரடியாகப் பாதிப்படைந்ததானாலும், அவளுக்கு மூத்த  தலைமுறை மனிதர்களால் விளைக்கப்பட்ட கெடுதியின் பழியை, அதே சமூகத்திலுள்ள வேறு தலைமுறை மனிதர்கள்மீது சுமத்திவிட அவளால் முடியாது. அதனாலேயே சுந்தரம் யாரென்ற விபரம் தெரிந்திருந்தும், பெரியமாமன் பேஸ்மென்ரை அவர்களுக்காகக் கேட்டபோது, ஒரு வார்த்தை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டு மௌனமாயிருந்தாள். அது கருணையின் வகைப்படுமென்ற ஓர் எண்ணமுமிருந்தது அவளுக்கு.

ரவீந்திரன்தான் தடுமாறினான். தலைமுறை முந்திய அச் சம்பவத்தை யோசித்து அவன் தயங்குகிறானென்பதை அவன் தன்னைப் பார்த்த விதத்திலே அவளால் புரிய முடிந்திருந்தது. அவர்களுக்குள் இருந்த உள்வெடிப்பு அவளை நேரடியாக எதையும் சொல்வதைத் தடுத்ததாயினும், சுந்தரத்துக்கு பேஸ்மென்ரைக் கொடுப்பதில் அவளுக்கு ஆட்சேபம் இருந்திருக்கவில்லை. மேலும், போன வெள்ளி இரவின் ரவீந்திரனது கத்தலைக்கூட, தடுக்காதபோதும், அவள் விரும்பாதேயிருந்தாள்.

இரண்டு குடும்பங்களின் காதல்-கல்யாணப் பிரச்னை அது. தெளிவாகச் சொன்னால் ‘காதலியை உடன்கொண்டோடுதல்’ வகைப்பட்ட அறத்திணை அது. சமூகத்தின் தள பேதங்களில்விட, சாதி பேதங்களில்தான் அது முதன்மைப் பட்டிருந்தது. அது 1960களில் பெரும் சாதிக் கலவரமாய் அனல்வெடித்திருந்த வடமாகாணத்தின் வடகரையில், 1980களில்கூட பாரிய விளைவுகளை ஏற்படுத்தவே செய்தது.

1981இல் தாழ்ந்த சாதிப் பையனொருவன் உயர்சாதிப் பெண்ணொருத்தியை இரவுக் கூட்டங்களின் விளைவாக எழுந்த விளைவின் பின்னால், நண்பர்களுடன் ஆலோசித்து வேறு மார்க்கம் இல்லையெனக் கண்ட பின், அவளை ஓர் அந்திப்பொழுதில் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு கொண்டுபோய்விட்டான்.  

அடிபாடுகள், சிலரின் விசாரணைக் கைதுகளின் பின்னாக, எம்.பி. மற்றும் அரசியல் சமூக அமைப்புக்களின் சில தலைவர்களது தலையீட்டில் பிரச்னை சிறிதுகாலத்துள் கட்டுக்குள் அடங்கியது.

ஆனால் ஒரு முன்னிரவில் உயர்சாதிச் சமூகத்தின் குடிமனைப் பகுதியை சைக்கிளில் கடந்துவந்தபோது சாந்தரூபிணியின் தந்தை வல்லிபுரம் கத்தியால் தோளிலே வெட்டப்பட்டார். கழுத்துக்கு வைத்த குறி, தோளிலே பாய்ந்திருந்ததால் ரத்தம் ஒழுக ஒழுக ஆள் நடமாட்டமற்ற வீதியில் சைக்கிளை ஓடியே வீடுவரை அவரால் வர முடிந்திருந்தது.

அவரது வேட்டியின் மேல்பாதி முழுவதும் ரத்தச் சிவப்பில் தோய்ந்திருந்ததை அவளே கண்டாள். வீட்டிலிருந்த எல்லோருமே குழறிக்கொண்டு ஓடிப்போய் அவரைத் தூக்கி வீட்டுத் திண்ணையில் கிடத்தினார்கள்.

அயல் கூடியது. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலையில் மூன்று நாட்களாக ஆஸ்பத்திரி வாசலில் காத்திருந்தது. அந்த பத்து பதினைந்து பேரடங்கிய கூட்டத்தில், அய்யாவைப் பாக்காமப் போமாட்டனென்று அடம்பிடித்துக்கொண்டு ஆறேழு வயதான சாந்தியும் இருந்திருந்தாள்.

அம்மா அவளுக்கு அவள் பிறந்திருக்காத காலத்தின் சாதிக் கலவரக் கதைகளெல்லாம், அப்போதைய பிரச்னையின் மூலக்கதைகளெல்லாம் சொன்னாள். இன்னும் சுபத்திரன் கவிதைகளும், பசுபதி கவிதைகளும், மகாகவி கவிதைகளும்கூட புரியும்படியான விளக்கங்களுடன் அவள் சொன்னாள்.

‘போன வருஷம் நடந்த ஆறுமுகம் மாமாவின்ர கலியாணத்துக்காண்டியோ, இப்ப அவை அய்யாவை வெட்டினவை?’ எனவொரு நியாயம் பிசகாத வினாவை, அந்த வயதிலேயே அம்மா ஆச்சரியம் படும்படியாக அவள் கேட்டாள்.

அம்மாவுக்கே இப்போது அந்தக் கோப தாபங்கள் மனத்திலில்லை. ஐயாகூட தன்னை வெட்டியவரை இறுதிவரை காட்டிக்கொடுக்கவில்லையே. அவள் ஒரு குரோதத்தைக் கொள்வது எங்ஙனம்?

முன்புபோல் சீவல், மரம்வெட்டவென்று சுழன்று சுழன்று தொழில்செய்ய முடியாதவராய்ப் போனாலும், தன்னுழைப்பில் நிலம் கல்வீடென்று கட்டி வாழ்ந்து அனுபவித்துத்தான் வல்லிபுரமும் காலமாகியிருந்தார்.

அந்தச் சமூகத்துள், அந்த அயலுக்குள், அந்த உறவுக்குள் அவள் இருந்திருந்தாள். ரவீந்திரன்தான் வேற்றூர்க்காரன்; மந்துவிலான். அவனைவிடவுமே வீரகத்தியின் குடும்பத்தையும், அவர்களது சமூகத்தையும், நடந்த சம்பவங்களையும் அவளுக்குத் தெரியும். அவளால் சம்பவ விடுபடுதல்களின்றி ஒரு குறுகிய வட்டத்துள் வெடித்தடங்கிய 1981இன் அச் சாதிப் பிரச்னையது மூலக் கதையை வார்க்கமுடியும்.

வித்துவான் வீரகத்தியின், அவரது தம்பியின், தங்கையின் குடும்பக் கதைகளைக்கூட.

(தொடரும்)

 

 


 [BK1]

 [BK2]

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்