ஏ.எச்.எம்.நவாஷின் நூல் குறித்த ஒரு கண்ணோட்டம் -தேவகாந்தன்-


 ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’


சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி)  ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு.

ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும்.

இதை வாசிக்க நேர்ந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. அண்மைக் காலமாக ‘வாசிப்பு’ பற்றிய மீளாய்வுகளும் தேடல்களும் ஓர் அவசியத் தேவையாய் என் மனத்தில் ஊன்றியிருந்த வேளையில், இந்நூல் ஓரெல்லையை நோக்கி நகர்வதற்கான வழியினைத் திறந்துவிட்டதாய்ப் பட்டது. அது வாசிப்பு, குறிப்பாக வாசக மைய விமர்சனம், சார்ந்தது.

பரவசத்தின் எல்லையில் நிற்க வாசகனைக் கூவி அழைத்துக்கொண்டிருந்த வாசிப்புச் செயற்பாங்கு, தன்னுள் எத்தனைதான் வாசிப்புச் சுதந்திரத்திற்கும் அர்த்த பரிமாணத்திற்குமான வெளியினைக் கொண்டிருந்தபோதும், வாசகனின் சர்வாதிகாரமாக அது உருவெளிப்பாடடையக்கூடிய சாத்தியம் தெரிய தொடர் வாசிப்பு ஒரு தேக்கத்தை எனக்குள் அடைந்துவிட்டது. கொவிட் -19 உலகைச் சூழ்ந்தபொழுதில் சகல காரியங்களும் கைவிடப்பட்டன. இப்போது இடத்திலிருந்து தொடர என்னை ஊக்கியிருக்கிறது ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூலின் வாசிப்பு.

இனி இந்த வாசக விமர்சனம்பற்றி சிறிது நான் சொல்லவேண்டும். அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து முக்கியத்துவம் பெற்றெழும் வாசக மைய விமர்சனமானது உண்மையில் இன்று வழக்கிழந்துபோன புதிய விமர்சன முறையிலிருந்து உருவானதுதான். ஆயினும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த வொல்ஃப்காங் ஈஸர்போன்ற சில ஜேர்மன் பேராசிரியர்களினால் தாய்ச் சிந்தனைப் போக்கினைப்போல் வலுவிழந்து போகாமல் இது மேலும் ஊட்டமளித்து முன்னெடுக்கப்பட்டது. இதில் வாசக உலகத்தை இரு கூறாக்கியது முக்கியமான விஷயம். பிரதியின் அர்த்தம் கோடல் அதிகாரம் வாசகரிடம் இன்னுமே இருந்த பொழுதில், அது வாசக சர்வாதிகாரமாக உருவாகாமல் காக்கின்ற கவசமாக அது இருக்குமென்று பலராலும் நம்பப்பட்டது.

இன்று இதனால் இரண்டு விளைவுகள் வாசிப்புக் களத்தில் நிகழ்ந்திருக்கின்றன.  

(1) அர்த்தமானது பிரதியிலோ அல்லது அதற்கு வெளியிலோ இல்லையென்றும், அது வாசகனின் புரிந்துகொள்ளலில் இன்னுமே இருக்கிறதென்றும்  ஈஸரது கூற்றின்படி உறுதியானது.

(2) அதன்மேல் வாசகரையே உத்தேச வாசகரென்றும் ஆதர்ஸ வாசகரென்றும் இரண்டாகப் பிரித்து, வாசக இன்பத்தைத் தேடும் ஆதர்ஸ வாசகரை ஈஸர் முன்னிலைப்படுத்தினார்.  அதன்மூலம் வாசக அதிகாரத்தின் விசை தணிக்கப்பட்டது.

இப்போது வாசக மைய விமர்சனமானது ஆய்வடிப்படையிலோ கோட்பாடுகளின் அடிப்படையிலோ செய்யப்படும் விமர்சனங்களுக்கு நிகரான பெறுபேறுகளைத் தந்தபடி நிகழ் களத்தில் திகழ்ந்துகொண்டு இருக்கிறது.

இவைபற்றியெல்லாம் சொல்வதற்கு ஓர் அவசியமிருக்கிறது. பெரும்பாலும் பிரதிகள் குறித்த உண்மையான விமர்சனங்கள் பூரணமாய் இன்று அற்றுப்போயிருக்கின்றன என்பதைச் சொல்வதில் தயக்கம் காட்டவேண்டியதில்லை. அபிப்பிராயங்கள் இருக்குமளவு விமர்சனமில்லை. அபிப்பிராயம் வாசகனோடானதாயும், முடிவு விமர்சகனுடையதாயும் இருந்த நிலை மாறியதிலிருந்து வெறும் அபிப்பிராயங்களே விமர்சனங்களாய் விழுந்துகொண்டிருந்தன. ஆனால் வாசக மைய விமர்சனத்தின்மீதான வாசக அதிகாரம்பற்றிய அய்யம் உணரப்பட்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறை கண்டடையப்பட்ட பின்னால் அது மூச்சாக இன்று பயில்வரங்கில் நிற்கிறது. நல்ல விமர்சனம் பிறக்குமென்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.

‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூல் வாசக விமர்சனத்தின் வழியில் ரசனை முறைத் திறனாய்வு, ஆய்வுத் திறனாய்வு, கோட்பாட்டுத் திறனாய்வென பல தளங்களிலும் செயற்பட்டிருப்பது இம்முறை சார்ந்த விமர்சனத்தின் முதல் வெளிப்பாடாய் எனக்குத் தெரிகிறது. வாசக மைய விமர்சனமானது நிகழ்வு வாதத்துடனும் உரைவிளக்கக் கோட்பாட்டுடனும் தொடர்புகொண்டுள்ள வகையில் இந் நூலில் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) செய்துள்ள முனைப்புக்கள் ஆகக்கூடுதலான ரசனையையும் விளக்கத்தையும் கொண்டிருக்கின்றன.

இது உண்மையிலேயே சிரமமான காரியம். ஏனெனில் வாசக மைய விமர்சனமானது நிறைந்த கருதுகோள்களைக் கொண்டது. அதனை ஒரு சிந்தனைப் போக்கில் அடக்குவது இயலாத காரியமாயும் இருக்கிறது. ஆனால் புரட்சிகரமான, புதுமையான விமர்சன முறையாக இருந்ததில் எழுபதுகளின் ஆரம்பத்தில் இது பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பின் இது வாசக சர்வாதிகாரமாக மாறக்கூடிய சாத்தியத்துடன், ஏற்கனவே குறிப்பிட்டபடி புதிய விமர்சனத்தின் சீணத்துடன், இதுவும் மதிப்பிறங்கியது. இன்று இது மறுபடி மேனிலை அடைந்திருப்பதால் பயில்வு செய்வதில் தவறில்லையென நம்பமுடிகிறது.

மேலும், ஆறு படைப்பாளிகளினது படைப்புக்களிலிருந்துமான தேர்வுகளைவிட எனது தேர்வுகள் வேறானவை என்பதையும் இங்கே நான் சொல்லிவிடவேண்டும். அவை சரியல்லவென்று சொல்ல நான் யார்? அது ஈழக்கவியின் தேர்வுரிமை சார்ந்தது. எனினும் அவ்வேறுபடுதல் ஒவ்வொரு வாசகர்களுக்கிடையேயும் மிக இயல்பாக எழக்கூடியதும். அது இரவின் வானத்து நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அவரவரும் வெவ்வேறு வடிவங்கள் தோன்ற அல்லது வெவ்வேறு வடிவங்களைத் தோற்றி காண்பதுபோன்ற இயல்புகொண்டது.

2
ஏ.எச்.எம்.நவாஷ் பகுப்பாய்வுக்குத் தேர்ந்துகொண்டவற்றுள் இறுதியான கதை ‘ஒளி’. மருதூர்க் கொத்தனின் இக்கதை 1985இல் வெளிவந்த ‘மருதூர்க் கொத்தன் கதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெறாது அதே பெயரில் 2007இல் வெளிவந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 1964இல் ‘முஸ்லிம் கதை மல’ரில் வெளிவந்த இச் சிறுகதை 1985இல் வெளிவந்த தொகுப்பில் ஏன் இடம்பெறவில்லை என்பது புரியவில்லை. ஆயினும் அது இங்கே முக்கியமில்லை.

            மருதூர்க் கொத்தனின் தொகுப்பிலிருந்து எனது தேர்வு இதுவாக இருக்காதென்றபோதும், ஈழக்கவியின் தேர்வோடு இணங்கிப் போக ஒரு சங்கதியுண்டு.

            1951இல் ஏர்னெஸ்ற் ஹெமிங்வேயினால் எழுதப்பெற்று 1952இல் வெளியாகிய ‘கிழவனும் கடலும்’ என்ற ஒரு குறுநாவல் இருக்கிறது. அது இலக்கிய உலகத்தை அசைத்ததோ இல்லையோ, வாசக உலகத்தை அசைத்தது. வெளிவந்த அடுத்த ஆண்டிலேயே அதற்கு புலிற்சர் பரிசும் கிடைத்தது. 1954இல் ஹெமிங்வேக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதுபற்றி விதந்துரைக்கப்பட்டது.

            எண்பத்து நான்கு நாட்களின் தொடர்ந்த துரதிர்ஷ்டத்திற்குப் பின்னரும் அடுத்த நாளில் தன் உதவியாளனான சிறுவன் மகோலினுடன் மீன் பிடிக்க புறப்படுகிறான் சந்தியாகோ. அன்றைக்கு அவனுக்கு பெருத்த இரையொன்று கிடைக்கிறது. அம் மாபெரும் ராட்சத மீனை கரைக்கு கொண்டுவர மூன்று நாட்களாக கடலில் போராடும் சந்தியாகோவின் தழும்புகளை ‘ஒளி’யில் வரும் கரீமின் தோள்களில் நான் கண்டேன்.

            தன் குடிசையினுள்ளிருந்து குப்பி விளக்கில் ஊசலரிசிப் பழஞ்சோறும்  மட்டிப் பழங்கறியும் நிசிக் குளிரில் கரும்பாகச் சுவைத்துண்ணும் வாழ்க்கையேயானாலும், உழைத்துண்ணும் செம்மையான வாழ்வு கண்டிருந்தவன் அகமத் கரீம். அதுவரை சட்டவிரோதமென விலக்கியிருந்த டைனமைட் மீன் பிடிக்கு மனம் கொள்கிறான் அவன். அதுவும் தன் மகளின் வரதட்சணயான 401 ரூபாவுக்காக. ஒருநாள் கடற்காற்றின் குளிரில் மகனோடு புறப்படுகிறான். டைனமைட்டை கொழுத்தி வீசவிருந்த தருணத்தில் அது கையிலே வெடித்துவிடுகிறது. விரல்கள் சிதறிய நிலையிலும் ‘ஒரு கை போனா மத்தக் கையிருக்கு. அவன் நாடினத்த, நம்ம தேடினாத்தான் தாத்தாவின் கழுத்தில் தாலி கட்டிப் பாக்கலாம்’ என்று திடம்கொள்கிறான் கரீம். மருதூர்க் கொத்தனுக்கு வெற்றிகிடைக்கிறது. உன்னதமான ஒரு கலைப் படைப்பினைத் தர அவரெடுத்த முயற்சி ஆயிரம் பெறும்.

            மருதூர்க் கொத்தனின் காலம் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் கருதுகோள்களில், சிந்தனைப் போக்கில் ஒரு நிலைமாறும் காலமாக இருந்தது. இந்த அலையடிப்பில் இடதுசாரி சிந்தனையாளருடன் இணங்கி நின்றவர் அவர். ஆயினும் அவரது எழுத்துக்கள் கலைத்துவத்தையும் முக்கியத்துவம் படுத்தியதில் அவரின் எழுத்துக்கள் மொழி சார்ந்தும், நடை சார்ந்தும், தன் நிலம் சார்ந்த கூறுகளையும் வாழ்வியலையும் முக்கியப்படுத்துவதிலுமாக பிரதானம் பெற்றுவிட்டதாய்க் கூறமுடியும்.
            இதற்கு முன்னதாய் இடம்பெற்றிருப்பது செ.கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ சிறுகதை.

            இது ஏற்கனவே நவாஷின் பகுப்பாய்வுக்குட்பட்ட சிறுகதைகளைப்போல ஆய்வுக்குட்படாது, ஏற்கனவே இருந்த அபிப்பிராயங்களை அல்லது அபிமானங்களை நிறுவும்படியாக தன் கருத்துக்களை விரித்துரைத்ததாய்ப் பட்டது எனக்கு. படைப்பாளிபற்றிய விவரணங்கள், அவர் எழுத்துக்கள்பற்றிய விமர்சகர்களின் அபிப்பிராயங்கள், அவரது காலத்தின் இலக்கியப் போக்குகள் போன்றவை முன்வைக்கப்பட்ட அளவுக்கு செ.கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ கதை ஆய்வுசெய்யப்படவில்லை. சமூகமும் அரசியலும் சார்ந்த விவகாரங்களை அளக்கும் கருதுகோள் கலை விஷயத்தில் அதிகாரம் பெற்றமை முரணாகப் பட்டது. அல்லது அது கதையின் தரத்தை முழுதுமாக நாம்  ஐயப்படவேண்டியிருக்கும்.

            ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ சுமாரான ஒரு கதை. அதில் கோஷம் இல்லையென்கிறார் ஈழக்கவி. நல்லது. நம்மை ஒரு முடிவுநோக்கி நகர்த்த படைப்பாளி எடுக்கிற பிரயத்தனங்கள் இடறுகல்போல இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறதே.

            கிளிநொச்சி பிரதேசத்தில் ஆறு பிள்ளைகளுக்கு அக்காவாக இருக்கும் வறுமைப்பட்ட குடும்பத்து வள்ளிக்கு கொழும்பிலே ஒரு பணக்கார வீட்டிலே வேலை கிடைக்கிறது. இறைச்சி, மீன், முட்டை என்கிற சாப்பாட்டுக் சகனவுகளோடு வரும் வள்ளிக்கு காலப்போக்கிலேதான் தெரிகிறது, தான் அங்கே ஒருவிதமான ஓரங்கட்டலில் அகப்பட்டுக்கொண்டிருப்பது. பகல் முழுக்க தனித்திருக்கும் நிலைமைகூட, ஊரில் அவளது விளையாட்டுக்களையும் விளையாட்டுத் தோழர்களையும் பறித்துவிட்ட சோகத்தைத் தருகிறது. மேலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஊரிலே சமூகத் தளத்தில் தாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையெனத் தெரிந்திருக்கும் வள்ளிக்கு, தான் அந்த வீட்டில் ஏன் ஒதுக்கப்பட்டிருக்கிறோமென்பது புரியவில்லை. ஆனால் காரணம் புரியாவிட்டாலென்ன, அந்த ஒதுக்கத்தில் அவளது மனது கிளர்ச்சி செய்கிறது. பத்து அல்லது பதினொரு வயதான ஒரு சிறுபெண்ணின் மனத்துக் கிளர்ச்சியென்பது எவ்வாறிருக்கும்? தன் தந்தை ஒருமுறை வந்தபோது தானும் வீட்டுக்கு வரப்போகிறேனென பிடிவாதம் பிடிப்பதுதானே? அதையே வள்ளி செய்கிறாள்.

            இந்த சிறு பெண்ணின் செயற்பாடுகள் மூலமாக சமூகத்தின் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் காரணத்தை விளங்கப்படுத்த முயன்றதில் படைப்பாளிக்கு வெற்றியென நிச்சயமாக நான் சொல்லமாட்டேன்.

            நான்காவது கதையாக இடம்பெற்றிருப்பது, என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ கதை. வடிவம், மொழி, நடை, பொருள் யாவும் அற்புதமாய் வந்து வாய்த்திருக்கிற கதையிது.

            காலத்துக்குக் காலம், மனத்தில் முதன்மையிடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் ஒருவரிடத்தில் இடம்பெயருகின்றன.  மிகச் சிறந்ததென மனத்தில் இருக்கை போட்டிருந்த ஒரு சிறுகதை காலப்போக்கில் தன்னிடமிழந்து இரண்டாம் மூன்றாம் வரிசைகளுக்கு பின்தள்ளிப் போய்விடுவதுபோல், பிந்தி நிற்கும் ஒரு கதையோ புதிதாக வரும் ஒரு கதையோ அந்த இடத்தைச் சுவீகரித்துக்கொள்கிறது. இவ்வாறு எனக்கு அடிக்கடி நடக்கும். என் வாசிப்பு அவ்வளவு விரைவானதும் பரந்ததுமாக இல்லாதபோதிலும், அது நடக்கிறது. பிற அபிப்பிராயங்களிலிருந்து ஒரு முடிவை நான் அடையாததில் இது மந்த கதியிலாயினும் நடக்கிறது. மிகச் சிறந்த சிறுகதைகளென நான் எண்ணியிருந்த பல சிறுகதைகள் தம்மிடமிழந்து பின்னேயுமோ, சுமாரான கதைகளென எண்ணியிருந்தவை முன்னேயுமோ இடம் மாறியமை இவ்வண்ணமே எனக்கு நிகழ்ந்தது.

            புதுமைப்பித்தனின் ‘அகல்யை’யும், ‘சாபவிமோசன’மும், ‘பொன்னகர’மும் முன்னணி வரிசையில் நின்ற காலம் போய், பிரபலமில்லாத சிலரின் கதைகள் முன்னிலைப்பட்டது எனக்கு தொண்ணூறுகளில் நடந்தது. மலேசிய சிறுகதைகளை நண்பர் சை. பீர் முகம்மது இரண்டு தொகுப்புகளாக்கிய பொழுது அதை ஒரு தேவை கருதி முற்றுமாய் வாசிக்க எனக்கு நேர்ந்தது. மிகச் சிறந்த சில சிறுகதைகளினை அப்போதுதான் என்னால் கண்டடைய முடிந்திருந்தது. ‘பாக்கி’ சிறுகதை அவ்வாறான கதை. அதை எழுதிய இளஞ்செழியனையோ அவரது கதைகளையோ நான் முன்பு அறிந்திருக்கவில்லை. ஆனால் ‘பாக்கி’ சிறுகதையை வாசித்த மறுகணத்தில் அது வந்து என்னுள் முதல் வரிசை பிடித்துக்கொண்டது. இன்னும் அந்த இடத்தைச் சுவீகரிக்கும் வேறு சிறுகதையை நான் வாசித்திருக்கவில்லை. எவ்வளவு, ஒரு முப்பது ஆண்டுகள் இருக்குமா? இருக்கும்.

           இதுதான் எனது வாசிப்பு. இவ்வண்ணம்தான் என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதையும் என்னுள் வந்து முதன்மையிடம்  பிடித்தது. அந்தக் கதையை அது வெளிவந்த அறுபதுகளிலும், செ.யோகநாதனின்  இலங்கைச் சிறுகதைத் தொகுப்புகளுள் ஒன்றான ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற பெயரில் வந்த தொகுப்பிலும், அதுபற்றிய குறிப்புகள் விமர்சனங்கள் வந்த வேளைகளிலுமாக பல தடவைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஈழக்கவியின் அதுபற்றிய பகுப்பாய்வுக் கட்டுரையை நூலில் வாசித்த பின் அச் சிறுகதையைத் தேடிவாசித்தபோது அது தன்னை இடம் பெயர்த்தியது. அது இன்று முதன்மைச் சிறுகதைகளின் வரிசையில் இருந்துகொண்டு இருக்கிறது.

            என்.எஸ்.எம்.ராமையாபற்றியும், அவர் மலையக இலக்கியம் மற்றும்  சிறுகதைகள்பற்றிக் கொண்டிருந்த கருதுகோள்களைப்பற்றியும்  ஈழக்கவி எழுதியிருந்தவற்றை வாசித்த பின்னால் இது நடந்திருக்க முடியும். அது ஆரம்பத்திலும் எனக்கு நல்லவொரு கதையாக இருந்ததுதான். ஆனால் இன்று அதனிடம் வேறு. அதை ஏற்படுத்திய ஈழக்கவிக்கு என் நன்றியும், தன் பகுப்பாய்வை மிகச் சிறந்த வாசக மைய வாசிப்புச் சார்ந்து விரித்துச் சென்ற முறைக்கு என் பாராட்டும் உரித்து.

            ஒரு படைப்பை வாசிக்கவேண்டுமென்ற ஆர்வத்தை வாசகனிடத்தில் உருவாக்குவது ஒன்று. அதை எவ்வாறு வாசிப்பதென்ற முறைமையை விரித்துக்காட்டுவது இன்னொன்று. ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ எழுந்த புறநிலைச் சூழ்நிலையோடும் உணர்வோடும் பொருத்தி வாசிக்கும் வித்தையை வாசகனுக்குக் கற்பிப்பதுதான் அக் கட்டுரையின் விசேஷம்.

            மலேசிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள இளஞ்செழியனின் ‘பாக்கி’ சிறுகதையின் முடிவில் வாசகனின் உடம்பே ஆடும்படியானபடி ஓர் அதிர்வெழும். அவ்வாறு ‘ஒரு கூடைக்கொழுந்’தில் நேர்வதில்லை. ஆனால் உழைப்பின் நேர்மையும், அந்த நேர்மைக்கு வரும் சவாலில் பெறும் வெற்றியும் ஆணி அடித்ததுபோல் வாசித்து முடிக்கும் மனத்தில் தவறாது பதிவதை உணரமுடியும்.

            கணவன்போலவே காலையிலெழுந்து தேயிலைத் தோட்டத்திலே வேலைசெய்து, அப்போதும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருக்கக்கூடிய மகளின் நினைவாயிருந்து பதைத்துவிட்டு வீடு திரும்புகிறாள் மனைவி. வீடு வந்ததும் வழக்கம்போல் கணவன் குளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்கிறாள். அவன் வெளியே செல்ல, அவசர அவசரமாக சமையலைக் கவனிக்கிறாள். பின் பிள்ளைகளுக்குச் சாப்பாடு, மது அருந்திவிட்டு வரும் கணவனுக்குச் சாப்பாடென கொடுத்துவிட்டு தானும் உண்ட பின் கணவனருகே ‘அப்பாடா, ஒருநாள் கழிந்தது’ போன்ற ஆயாசத்துடன் சரிகிறாள். தூக்கம் அவளது கண்களைச் சுழற்றுகிற அளவில் கணவனது கை வந்து மார்மேல் விழுந்து ‘பாக்கி வேலை ஒன்றிருக்கிறது’ என்ற பிரக்ஞையைக் கொடுக்கிறது. எளிமையான யதார்த்தத்தில், எளிமையான சொற்களில் அந்தக் ‘கடமை’க்கு முக்காமல் முனகாமல் தன்னை ஆட்படுத்துகின்ற பெண்களின் வாழ்வில் உற்றுள்ள கொடுமையை ‘பாக்கி’ சிறுகதை எடுத்து விளக்கும் தருணம் அற்புதமானது. கதையொன்று சகல தன் ஆகிருதியிலும் சிறுகதைப் பண்பை அக்கணத்திலேற்றி விட்டிருக்கும். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை அது.

            ஈழக்கவி தன் பகுப்பாய்வுக்காய் எடுத்திருக்கும் மூன்றாவது கதை ஜெயகாந்தனின் ‘யுக சந்தி’. யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த மாற்றம் ஒரு புள்ளியில் உருவாவதில்லை. ஒரு படிநிலைச் சமூகத்திலிருந்துதான் இன்னொரு படிநிலைச் சமூகம் தோற்றமெடுக்கிறது. ‘உள்ளது மறையாது; இல்லாதது பிறவாது’ என்பதுதான் இதன் விஞ்ஞான விதி. அவ்வாறு தோன்றும் புதுயுகத்தின் பிரசவம் அந்த யுக மக்களுக்கு மிக இலகுவாக இருந்துவிடுவதில்லை. மாற்றத்திற்கானதும் மாற்றத்தைத் தவிர்ப்பதற்கானதுமான போராட்டங்களும், இழப்புகளும், அதன் வலிகளும், அவ்வவ் யுக மனிதர்களின் வாழ்வை பெரும் அலைக்கழிப்புக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கக் கூடியவை. அவை பெரும்பாலாராலும் உணரப்படுவதில்லை. கலைஞன் அதை மிகத் துல்லியமாகக் கவனமாகிறான். ஜெயகாந்தனின் இத் தரிசனம்தான் ‘யுகசந்தி’ சிறுகதையாக வெளிவந்திருக்கிறது. ஆயினும் அது கலாபூர்வமான விஷயங்களில் வெற்றிபெறுவதில்லை. அதை நேர்த்தியாக எடுத்துக்காட்டுகிறது ஈழக்கவியின் இக் கட்டுரை.

            படைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும், பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும் இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும் இந் நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும், வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.

            ஈழக்கவி இரண்டாவதாக தன் பகுப்பாய்வுக்கு எடுத்திருக்கும் சிறுகதை வ.அ.இராசரத்தினத்தின் ‘தாய்’.  முதலில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த இச்சிறுகதை பின்னால் ‘கொடியாரக் கதைகள்’ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு தாயின் தியாகமும் பாசமும் கண்ட ஏமாற்றத்தின் எதிரொலியாக எழுந்ததாக இக் கதையைச் சொல்லமுடியும். வ.அ.இராசரத்தினத்தின் அருமையான சிறுகதைகள் ‘தோணி’யிலும் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ தொகுப்பிலும் இருக்கின்றன. ‘தோணி’யே ஒரு அற்புதமான கதைதான். எந்தத் தொகுப்பிலும் இடம் பெற்றிராத ‘இலக்கு’வில் வெளிவந்த ‘வலை’ சிறுகதை இருக்கிறது. ஆயினும் ஈழக்கவியின் தேர்வைச் சந்தேகிக்க வேண்டியதில்லை. அவரது பார்வையில் தரமான ஒரு சிறுகதையே தேர்வாகியிருக்க முடியும்.

            தொண்ணூறுகளின் நடுப் பகுதியில் சில காலம் அவர் சென்னையிலே தங்கியிருந்தபோதுதான் வ.அ.இராசரத்தினத்தை எனக்கு நேரில் அறிமுகமானது. ‘தோணி’யிலும் ‘கிரௌஞ்சப் பறவை’யிலும் அவரைத் தெரிந்திருந்த நான் அவரோடு நெருக்கமாகிப் போனேன். கிழக்கிலங்கையின் இலக்கியச் செழுமையை, இலக்கியவாதிகளை, அதன் பல்வேறு இலக்கிய முயற்சிகளை, அவற்றின் வெற்றிகளை அவர் வாயாலேயே கேட்டறியும் பாக்கியம் எனக்கு அப்போதுதான் கிடைத்தது. ‘ஒரு காவியம் நிறைவுபெறுகிறது’ குறுநாவலை அவர் அங்கிருந்துதான் எழுதினார். மித்ர பதிப்பகத்தில் அப்போதுதான் அது அச்சுமாகியது. ‘இலக்கு’வுக்காக நான் கதை கேட்டபோது ‘வலை’ சிறுகதையையும் அங்கேயிருந்துதான் எழுதித் தந்தார். அவரது எழுத்தில் எனக்கு பெரிய கௌரவமுண்டு. சிறந்த வாசகராய் இருந்ததை அவரது இன்னொரு தகைமையாய் நான் காண்கிறேன்.

            ‘தாய்’ கதையானது, ஒருவகை மொழியில் சொல்லப்போனால், வழமையானது. கணவனை இழந்த ஒரு தாயின் வாழ்தற் கடினங்களை அழகாக அது எடுத்துச்சொல்லியிருக்கிறது. அதில் அதிரவைக்கும் முடிவுகளில்லை; ஆனால் மனத்தை இறுக்கும் சோகம் இருக்கிறது. பரவசமெழுப்பும் சம்பவங்களில்லை; ஆனால் மனத்தைக் கவரும் மொழியும், நடையும் இருக்கிறது. காலத்தைக்கொண்டு கணித்தால் இது வௌிவந்த காலத்தின் கிழக்கிலங்கை இலக்கியப் போக்கினை நாம் துல்லியமாக இனங்காணவும் முடியும்.

            இலங்கையின் இலக்கிய வரலாற்றில் நாவல்கள் தோன்றுவதற்கு முதற்களமாயிருந்த திருகோணமலை வ.அ.இராசரத்தினத்தின் ‘கொழுகொம்’போடுதான் மறுவரவு காண்கிறதென கலாநிதி நா.சுப்பிரமணியன் மிக்க கணிப்போடு கூறுவார். அறுபதுகளில் திருகோணமலையின் மண்வளம் இலக்கியமேறியதெனில், மூதூர் வ.அ.இராசரத்தினத்தால் இலக்கியமேறியது என்கிறார் ஈழக்கவி. அது முற்றிலும் உண்மையே. வ.அ.இராசரத்தினம் மூதூரின் இலக்கிய அடையாளம்.

            கணவனையிழந்த தாயொருத்தி தன் மக்களை படிப்பித்து வளர்த்தெடுக்கப் படும் பிரயத்தனங்களுக்குப் பின் அம் மக்கள் ஆளாகி வந்து உத்தியோகமும் பார்க்கிற நிலையில் அடையும் புறக்கணிப்பிலான அவமானங்களைக் காண்கிறபோது வாசக மனம் அடையும் சோகம் அளப்பரியது. ஒரு தாயின் தியாகமும் பாசமும் அழகாகச் சொல்லப்பட்டுள்ள வேளையில், அவை சொல்லப்பட்ட விதமும் பாவிக்கப்பட்ட மொழியும் அதன் கலைத்துவத்தை மிகுப்பித்திருக்கின்றன. மண் வாசனை சார்ந்த எழுத்துக்கள் முக்கியமாய் மிளிரத் தொடங்கிய காலத்தில் கிழக்கிலங்கையின் இலக்கியச் செல்நெறி எவ்வாறிருந்ததென்பதைக் காண வ.அ.இராசரத்தினம்போன்ற அக்கால எழுத்தாளர்கள் ஆதாரமாயிருக்கிறார்களென்பதை ஆதாரபூர்வமாய்  மிகச் சரியாகவே எடுத்துரைத்துரைத்திருக்கிறது கட்டுரை.

            அவரது தொடர்பாடல்களும் வாசிப்புகளும் மிகச் சரியான முடிவுகளை அவர் அடைய நிச்சயம் கைகொடுத்திருக்கிறதென்பது தெளிவாகவே புரிகிறது கட்டுரையில்.

            இந் நூலில் ஈழக்கவி முதலாவதாக தன் பகுப்பாய்வுக்கு எடுத்திருக்கும் கதை புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ ஆகும். எடுத்துக்கொண்ட கதையும், அதை ஆய்வுசெய்ய எடுத்துக்கொண்ட முறையும் விமர்சனத்தையே ஒரு படைப்பாக இக் கட்டுரை நம் முன்னால் நிறுத்துகின்றது.

            ‘பொன்னகர’த்தைப்போல் ‘சாப விமோசன’த்தில் கற்பு விசாரணைப்படுத்தப் படவில்லை. ஆனால் இராமாயணத்தில் வரும் அகலிகை கதையை மறுவிசாரணை செய்கிறது ‘சாப விமோசனம்’. மறுபடி அகலிகை மீண்டெழுவதுதான் இக்கதையின் உச்சமான கட்டம்.

            புதுமைப்பித்தனுக்கு முன்னேயும் சமகாலத்திலும் பின்னாலும் அகலிகை கதை அதிகமான எழுத்தாளர்களின் மறுவாசிப்புக்கு உட்பட்டிருக்கிறது.  புதுமைப்பித்தனே அகலிகை தொன்மத்தை இரண்டு சிறுகதைகளாய் படைத்திருக்கிறார். ஒன்று ‘அகல்யை’. மற்றது ‘சாப விமோசனம்’. அகல்யையில் ‘சாபத்திற்குத்தான் விமோசனம், பாவத்திற்கல்ல’வென மறுபடி கல்லாகும் அகலிகையைப் படைத்த புதுமைப்பித்தன், சாப விமோசனம் பெற்று கௌதமருடன் வாழும் அகலிகையை ‘சாப விமோசனம்’ சிறுகதையில் காட்டுகிறார். ‘அகல்யை’ கதையை புதுமைப்பித்தனின் நம்பிக்கை வரட்சியினது அடையாளமாக இடதுசாரி விமர்சகர்கள் விமர்சித்ததும் உண்டு. ஆனால் ‘சாப விமோசனம்’ உளவியலின் பகுப்பாய்வாகக் காணப்பட்டு மெச்சப்பட்டது அவர்களால்.

            பாரதிக்கு ஒரு பாஞ்சாலி சபதம்’போல் புதுமைப்பித்தனுக்கு ‘அகல்யை’யும் ‘சாப விமோசன’மும் அமைந்தனவென்பதே மெய். பிரச்னைக்கு தீர்வு சொல்லவில்லையென ‘சாப விமோசனம்’மீதும் ‘அகல்யை’மீதும் விமர்சகர்களுக்கு குறையுண்டு. ‘அகல்யை’யை ஏற்றுக்கொண்ட அளவுக்குக்கூட ‘சாப விமோசன’த்தை பல விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அசோகமித்திரன்கூட ‘சாப விமோசன’த்தை எதிரநிலையில் விமர்சித்திருக்கிறார். ‘காஞ்சனை’ அளவுக்கு ‘சாப விமோசனம்’ எதிர்ப்புக் கண்டதென புதுமைப்பித்தனே ‘காஞ்சனை’ தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து கலாநிதி க.கைலாசபதி நீண்ட ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவை ‘ஒப்பிலக்கிய’ நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

            உண்மையில் ‘சாப விமோசனம்’ தமிழின் சிறந்த சிறுகதைப் படைப்பாக ஒரு காலகட்டம்வரை இருந்ததென்பதில் பலருக்கும் உடன்பாடே.  ஆரம்பத்தில் கருத்தளவில் அதற்கு எதிர்வினை ஆற்றியவர்களும் இந்த முடிவை மனந்திறந்து பின்னால் ஒப்புக்கொண்டனர்.

            இந்நூல் மாணவர்களின் கல்வித் தேவைக்காக எழுதப்பட்டதென்கிறார்  ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி). ஆனால் இது படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும்கூட உகந்தது என்பது என் அபிப்பிராயம். ஏற்கனவே முதலாம் பகுதியில் வாசக மைய விமர்சனம்பற்றி எழுதியது இதற்காகவேதான். அது ஒரு புதிய வாசிப்பையும், தானே ஒரு முடிவைக் கண்டடையும் வெளியையும் வாசகனுக்கு அளித்திருக்கிறது. அதன்படி சில ஆண்டுகளின் முன்பாக தமக்குப் பிடித்த சிறுகதைகளையும், அவை ஏன் தமக்குப் பிடித்தனவென்ற விபரிப்பையும் செய்த தொகுப்பொன்று ‘சாளரம்’ என்ற பெயரில் வந்திருந்தது ஞாபகம். கால இடைவெளி நீண்டிருந்தும் அதன் நீட்சியாக இந்நூலைக் காணலாம்.

வாசிப்பினை ஆழமாகச் செய்யாமல் அபிப்பிராயங்கள் இல்லை. ஆழமான வாசிப்பிலும் தன் அரசியல் கலவாமல் அபிப்பிராயம் பிறவாது. சுவையை அடிப்படைத் தேவையாக்கும்போதுதான் அவற்றினை ஓரளவு கடந்த நல்ல வாசிப்பு உண்டாகிறது. எனில் அதை முன்நிபந்தனையாக விதிக்கும் புதிய அம்சம் சேர்ந்ததாய் இருக்கிறது ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி) பகுப்பாய்வு.

0

தாய்வீடு, ஜுன் 2020
             

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்